பின்பற்றுபவர்கள்

1 டிசம்பர், 2008

சிங்கையில் வெளுத்துக்கட்டிய தமிழ் மழை !

தமிழன் பேசாமல் இருந்திருந்தால் என்றோ பண்பாட்டை தொலைத்திருப்பானோ என்று நினைக்க வைக்கும் நிகழ்வுகள் தான் தமிழ் இலக்கிய சொற்பொழிவுகள். உலகில் மக்கள் (ஆர்வமுடன்?) கேட்கும் பேச்சுக்கள் பெரும்பாலும் அரசியல்வாதிகளின் பேச்சுக்கள், மதவாதிகளின் பேச்சுக்கள் மற்றும் சமயம் தொடர்பான பேச்சுக்கள் மட்டும் தான். மற்றவகையில் அதாவது இலக்கியம், பண்பாடு பற்றிப் பேசினால் உலகில் எந்த ஒரு இனமும் காது கொடுத்துக் கேட்குமா என்பது ஐயமே, காரணம் இலக்கியம், மொழி பற்றி மட்டுமே பேசும் நிகழ்ச்சிகளை தமிழன் தவிர்த்து வேறு எவரும் நடத்துபவர்களாக தெரியவில்லை. ஆயிரக்கணக்கானோர் அமர்ந்திருக்கும் அவையில் ஒரு இலக்கியவாதியின் மூன்று - நான்கு மணி நேர தொடர் சொற்பொழிவை ரசித்து கேட்கும் பழக்கம் நம்மிடையே இருப்பதும், தமிழனுக்கென்றே தனி அடையாளம் என்பவை. அதில் ஆன்மிக சொற்பொழிவுகளைவிட முதன்மையானவை பட்டிமன்றங்களும், கவிமாலைகளும், இலக்கிய கூட்டங்களும் தான் என்றால் அவை மிகையல்ல.

அங்கே பேசுபவர்கள் அனைவரும் இறந்த காலத்தை நிகழ்காலமாக்குபவர்கள், அதாவது என்றோ மறைந்த திருவள்ளுவனையும், இளங்கோவையும், கம்பனையும் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் மந்திரவாதிகள். 2000 ஆண்டுக்கும் முன் வாழ்ந்த திருவள்ளுவனை எழுப்பி நிறுத்தும் இந்த தமிழ் மந்திரவாதிகள் தம் மந்திரப் பேச்சால் நம்மையும் கட்டிவைத்து விடுவார்கள்.

அப்படி ஒரு அருமையான தமிழ் நிகழ்ச்சி ஒன்றிற்கு கடந்த சனிக்கிழமை மாலைவேலையில் நம் வெளிச்சப் பதிவர் அழைத்துச் சென்றார். கவிதாஞ்சலி, கவிமாலை மற்றும் முத்தாய்பாக வழக்காடு மன்றம் என சுமார் நான்கு மணி நேரம் தமிழ் மழையில் நினையும் ஒரு நல்வாய்ப்பு கிட்டியது.

சிங்கையில் இருக்கும் உயர்ந்த கட்டிடங்களைப் போலவே தமிழையும் வளர்ச்சி பெற வைத்து உயர்வு படுத்தி அதற்கு ஒரு அடித்தளமாக நின்ற மறைந்த திரு வை.திருநாவுக்கரசு அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் கவிதாஞ்சலி நிகழ்ச்சியாக தொடங்கிய நிகழ்வில் கவிஞர் - தமிழாளர் திரு முருகன் அடியான் ஐயா அவர்களின் சிறப்புரையுடன் நிறைவு பெற்றது,

அடுத்து கவிமாலையாக தொடர்ந்து, பத்துக்கும் மேற்பட்ட இளம் கவிஞர்கள் 'கை' பற்றி(ய) கவிதைகளை வாசித்தனர். சிங்கைத் தமிழ் பதிவர்களில் ஒருவரும் வலைப்பதிவாளர்களில் அறியப்பட்டவரான திரு பாலு.மணிமாறன் அவர்களும் கவிதை வாசித்தார். நேரமின்மையால் வழக்கமாக இருமுறையாக வாசிக்கப்படும் கவிதைகள் ஒருமுறையாக குறைந்தது, ஈழம் மற்றும் மும்பை நிகழ்வுகளையும் கவிதை(யின் இடையாக) அமைத்திருந்தனர், அதில் சிறந்த கவிதைகள் மூன்றுக்கு பரிசும் வழங்கினார்கள். கவிதை வாசிப்பின் நீளம் 2 நிமிடம் முதல் 10 வினாடி அளவுக்கு என அவரவர் எழுதி வந்த கவிதைகளின் வரி எண்ணிக்கைக்கு தகுந்தார் போல் அமைந்திருந்தது.(திரு.பாலு மணிமாறன்)

கவிதாஞ்சலி, கவிமாலை போன்றவற்றில் முன்பே கலந்துகொண்டு இருக்கிறேன். இன்று முதன்முதலில் பார்வையாளராக கலந்து கொண்ட வழக்காடு மன்றம் முற்றிலும் மாறுபட்ட நிறைவான மகிழ்வான நிகழ்ச்சியாகவே அமைந்தது. சுமார் இரண்டு மணிநேரம் சுவையான கருத்துக்கள் நகைச்சுவையுடன் எடுத்துரைக்கப்பட்டன.

"இன்றைய இளைய தலைமுறையினருக்கு பெற்றோர் உட்பட்ட மூத்தோர் பண்பாட்டு கூறுகளை எடுத்துச் செல்வதில்லை" என்கிற முதன்மையான குற்றச்சாட்டு வழக்காக பதியப்பட்டு, நடுவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வாதி மற்றும் எதிர்வாதியால் மிக அருமையாக
எடுத்துச் செல்லப்பட்டது. வழக்கு தொடுப்பவராக திரு ஸ்டாலின் போஸ் அவர்கள் இன்றைய இளைய தலைமுறைகளின் வழிதவறிய செய்யும் செயல்களுக்கு பெற்றோர்களின், மூத்தோர்களின் பொறுப்பின்மையே காரணம் என்று மிக அழகாக வாதிட்டார். எதிர்வாதியான பெரி.சிவக்குமார் அவர்களும் பல சான்றுகளை முன்வைத்து அவற்றையெல்லாம் மறுத்தார். விருந்தோம்பலும், பண்பாட்டுக் கூறுகளும் இளைஞர்கள் பக்குவம் அடையும் போது செய்கிறார்கள், இளமையின் துள்ளல்களை அவர்கள் துய்ப்பதால் அவர்கள் பொறுப்பற்றவர்கள் போல் தெரிவது காட்சிப்பிழையே யன்றி வேறொன்றும் இல்லை என்பதாக அவர் தரப்பு வாதத்தை திருக்குறள் சாட்சியாக பதிவைத்தார், அவற்றை அவர் தி.கு.சா என்று எளிமை படுத்தி பேசியது நல்ல நகைச்சுவையாக இருந்தது. இவ்விருவரும் அசத்தினர்.

நிகழ்ச்சியின் நீதியரசராக (நீதிபதி) முனைவர் திரு ரெத்தின வெங்கடேசன் அவர்களின் பேச்சு என்னை பெரும் வியப்பில் ஆழ்த்தியது. பதினைந்து நிமிடங்கள் சொற்பொழிவு போலவே அவர் வழக்காடு மன்ற தீர்ப்பாக பேசிவை அனைத்தும் தமிழ் பெருமழையில் என்னை நனைய வைத்தது போன்ற உணர்வைத் தந்தது. சிங்கையில் தமிழ் பேச்சு என்றால் தமிழகத்தில் இருந்து வரும் வைரமுத்து, சுகிசிவம், சாலமன் பாப்பையா, லியோனி போன்றவர்கள் வந்தால் தான் கேட்க முடியும் என்று நினைப்பவர்கள் இவரது பேச்சைக் கேட்டால் கண்டிப்பாக நினைப்பை மாற்றிக் கொள்ளவும், இவரைப் போன்றோர்கள் ஏன் தமிழர்களுக்கு நன்கு அறிமுகமாகவில்லை என்ற ஆதங்க உணர்வும் ஏற்படும். ஆம்...! தமிழ்த்தாயின் தனிச்சிறப்பு பெற்ற புதல்வர்கள் பலர் போதிய ஊடக வெளிச்சமின்மையால் பலரால் அறியப்படாமலேயே இருக்கிறார்கள், இது தமிழுக்குமான இழப்புதான். அறியப்பட்ட (பிரபல) பேச்சாளர்களை அழைக்கும் போது இவரைப் போன்றவர்களையும் அதே நிகழ்ச்சியில் ஒருவராக அழைத்து பேசவைத்தால் இவர்களுக்கு இருக்கும் தமிழுணர்வும், பேச்சாற்றலும் பலருக்கும் தெரியவாய்ப்பாக அமையும்.

(திரு.ஸ்டாலின் போஸ், முனைவர் ரெத்ன வெங்கடேஷ் ஐயா, மற்றும் திரு பெரி.சிவக்குமார்...புகைப்படக் கருவி திடிரென்று சொதப்பியதால் செல்பேசியில் எடுத்தப்படம்)

ரெத்தின வெங்கடேசன் ஐயா அவர்களின் பேச்சில் இன்றைய தலைமுறைகளுக்கு மூத்த தலைமுறையினர் எல்லாம் செய்து காட்டுகிறார்கள், ஆனால் அவை ஏன் செய்யப்படுகிறது என்பதை விளக்கவில்லை என்பதைக் குறையாக காண்கிறேன் என்றார். தனது தந்தைகாலத்தில் ஐந்துமணிக்கு தேவாரம் படிக்க எழுப்பினால் எதற்கு என்று கேட்காமல் செய்திருக்கிறேன். அதனால் எனக்கு நிறைய தேவாரப்பாட்டுக்கள் மனப்பாடமாகத் தெரியும் என்றார். ஆனால் எனது வாரிசுகளை அவ்வாறு அழைத்தால் எதற்கு இவை செய்யவேண்டும் என்கிற காரணத்தை விளக்கினால் தான் ஏற்றுக் கொள்வார்கள், விளக்குவதற்கு பெற்றோர்கள் முன்வரவேண்டும் இன்றைய இளைஞர்கள் கேள்வி இன்றி எதையுமே ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். சிறுவனாக இருந்த போது பருவ விளையாட்டுகளெல்லாம் உண்டு, அதாவது ஒரு மூன்று மாதங்களுக்கு கோலி விளையாட்டு, அடுத்து கிட்டிபுல், பிறகு கபடி என்பதாக ஆண்டு முழுவதும் பருவத்திற்கு ஏற்றவாறு விளையாட்டுக்களும் அதில் மனப்பாட பயிற்சியைத் தரும் பாட்டுக்களும் இருக்கும், ஆனால் இப்பொழுதெல்லாம் சிறுவர்கள் அதையெல்லாம் மறந்துவிட்டு கிரிக்கெட்டில் மூழ்கிவிட்டார்கள் என்று சரியாக எடுத்துச் சொன்னார் முத்தாய்ப்பாக இளைய சமூகம் மூத்தவர்களை மதிக்க வேண்டும் என்பதை உணர்த்த ஒரு நீதிக் கதையைச் சொல்லி, மூத்தோர்கள் பொறுப்புடன் நடந்து கொள்கிறார்கள் என்று சுட்டி வழக்கை தள்ளுபடி செய்து உரையை முடித்தார்.

பட்டிமன்றம் போலவே வழக்காடு மன்றம் இருந்தாலும் அதற்கு எந்தவகையிலும் சுவை குன்றாமல் இருந்தது, பட்டிமன்றத்தில் இரு குழுக்களாக பேசுவர், வழக்காடு மன்றத்தில் வாதி, எதிர்வாதி மற்றும் நீதியரசர்(நீதிபதி) என மூவர் பேசுகின்றனர், நீதிமன்ற வழக்கு போன்று வாதம் எதிர்வாதம் இருக்கும்.

******

(திரு விஜய.பாரதி)

நிகழ்ச்சியின் தொகுப்பாளராக சிறப்பாக அதனை தொகுத்து வழங்கினார் கவிஞர் விஜய.பாரதி. கவிமாலை நிகழ்ச்சி சிங்கையில் திங்கள்(மாதம்) தோறும் கடைசி சனிக்கிழமை மாலை வேளைகளில் நடைபெறுகிறது. பதிவர் அகரம்.அமுதா (இந்த முறை செல்லவில்லை), பாலு.மணிமாறன், மற்றொமொரு புதிய பதிவராக எழுத இருக்கும் பாண்டித்துரை போன்றோர் கலந்து கொள்கின்றனர்.

இந்த தமிழ் மழைக்கு இழுத்துச் சென்று நனைய வைத்த நண்பர், வெளிச்ச பதிவர் ஜோதி.பாரதிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

25 கருத்துகள்:

சி தயாளன் சொன்னது…

நன்று..:)

பாண்டித்துரை சொன்னது…

பதிவு நன்றாக இருக்கிறது கண்ணன்.
மழையில் நனைந்தவர்கள்தான் குறைவு

கோவி.கண்ணன் சொன்னது…

//பாண்டித்துரை said...
பதிவு நன்றாக இருக்கிறது கண்ணன்.
மழையில் நனைந்தவர்கள்தான் குறைவு
//

பாண்டித்துரை, பின்னூட்டத்திற்கு நன்றி.

போதிய விளம்பரம் இன்மையும் ஒரு காரணமாக இருக்கலாம். இதுபோன்று வழக்காடு மன்ற நிகழ்ச்சிகளை கோவில்கள் போன்றவற்றில் வைத்தால் இன்னும் பலர் வருவார்கள். இலக்கிய கூட்டம் என்றால் இலக்கியவாதிகள் கலந்து கொள்ளும் ஒன்று என்றே பொதுமக்கள் நினைத்துவிடுவர்.

கோவி.கண்ணன் சொன்னது…

//'டொன்' லீ said...
நன்று..:)
//

'டொன்' லீ, நன்றி !

RAHAWAJ சொன்னது…

நல்ல பதிவு வரும் சனிக்கிழமை இது போல் நிகழ்ச்சி இருக்கா?

கோவி.கண்ணன் சொன்னது…

//RAHAWAJ said...
நல்ல பதிவு வரும் சனிக்கிழமை இது போல் நிகழ்ச்சி இருக்கா?
//

ஜவகர் அண்ணா,
பாராட்டுக்கு நன்றி, நிகழ்ச்சி பற்றி எதுவும் அறிய வந்தால் அறிய தருகிறேன்.

தமிழ் சொன்னது…

சிங்கையில் இருந்துக்கொண்டு
அதுவும் தமிழ் மழையில் நனையாமல்/
அறியாமல் இருந்தற்கு வருந்துகிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//திகழ்மிளிர் said...
சிங்கையில் இருந்துக்கொண்டு
அதுவும் தமிழ் மழையில் நனையாமல்/
அறியாமல் இருந்தற்கு வருந்துகிறேன்
//

திகழ்மிளிர்,
சிங்கையில் இருந்து கொண்டு பதிவர் சந்திப்புகளில் கூட நீங்கள் கலந்து கொள்வதில்லையே.

வெட்கப்படாமல் கலந்து கொள்ளுங்கள்.

முகவை மைந்தன் சொன்னது…

தவற விட்டது வருத்தமாகத் தான் இருந்தது.

//இதுபோன்று வழக்காடு மன்ற நிகழ்ச்சிகளை கோவில்கள் போன்றவற்றில் வைத்தால் இன்னும் பலர் வருவார்கள்.//

புத்த மடாலயங்களில் கூட்டம் நடத்தினால் என்னால் கலந்து கொள்ள இயலாது என்பதை இன்னும் ஒரு வருத்தத்துடன் பதிகிறேன். :-(

கோவி.கண்ணன் சொன்னது…

//முகவை மைந்தன் said...
தவற விட்டது வருத்தமாகத் தான் இருந்தது.

//இதுபோன்று வழக்காடு மன்ற நிகழ்ச்சிகளை கோவில்கள் போன்றவற்றில் வைத்தால் இன்னும் பலர் வருவார்கள்.//

புத்த மடாலயங்களில் கூட்டம் நடத்தினால் என்னால் கலந்து கொள்ள இயலாது என்பதை இன்னும் ஒரு வருத்தத்துடன் பதிகிறேன். :-(
//

ஐயா பெரியவர் எங்கு இருப்பீர்கள் என்று தெரிந்தால் அங்கு கூட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யலாம்.
:)

வான்கோழி பிரியாணிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்று சொன்னால் கலந்து கொள்வீர் என்று நினைக்கிறேன். :)

முகவை மைந்தன் சொன்னது…

வான் கோழி பிரியாணி ஒண்ணும் அவ்வளவா நல்லா இல்லை. கவிச்சி வாடை வேற தூக்கலா இருக்கும். ரொம்ப நேரம் வேக வைக்கணுமோ, என்னவோ தெரியலை!

அன்றும், இன்றும், என்றும் சிறந்தது இசுலாமியர், கிறித்துவர் திருமண விருந்தில் படைக்கப்படும் வெள்ளாட்டு பிரியாணி. சோறே அப்படி ஒரு மணம் மணக்கும். தெரியாதவிங்க கூட (தெரிஞ்சவிங்க கூட)வந்து உங்காந்து ஒரு பிடி பிடிப்பாய்ங்க.

முன்பு முகவை ராசவீதியில் தாச்மகால் ஓட்டல்னு ஒரு கடையில நல்ல பிரியாணி(யே) கிடைக்கும். அதையும் இப்ப மூடிட்டாங்க.

இப்ப நகரத்து கடைகளில் கிடைக்கும் பிரியாணியை பிரியாணி என்று அழைப்பதே பிரியாணிக்கு இழுக்குத்தான்.

மற்றவர்களும் அவரவருக்குப் பிடித்த பிரியாணி பற்றி சிறு குறிப்புத் தரலாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

// முகவை மைந்தன் said...
வான் கோழி பிரியாணி ஒண்ணும் அவ்வளவா நல்லா இல்லை. கவிச்சி வாடை வேற தூக்கலா இருக்கும். ரொம்ப நேரம் வேக வைக்கணுமோ, என்னவோ தெரியலை!

அன்றும், இன்றும், என்றும் சிறந்தது இசுலாமியர், கிறித்துவர் திருமண விருந்தில் படைக்கப்படும் வெள்ளாட்டு பிரியாணி. சோறே அப்படி ஒரு மணம் மணக்கும். தெரியாதவிங்க கூட (தெரிஞ்சவிங்க கூட)வந்து உங்காந்து ஒரு பிடி பிடிப்பாய்ங்க.

முன்பு முகவை ராசவீதியில் தாச்மகால் ஓட்டல்னு ஒரு கடையில நல்ல பிரியாணி(யே) கிடைக்கும். அதையும் இப்ப மூடிட்டாங்க.

இப்ப நகரத்து கடைகளில் கிடைக்கும் பிரியாணியை பிரியாணி என்று அழைப்பதே பிரியாணிக்கு இழுக்குத்தான்.

மற்றவர்களும் அவரவருக்குப் பிடித்த பிரியாணி பற்றி சிறு குறிப்புத் தரலாம்.

1:54 PM, December 01, 2008
//

யப்பா...பிரியாணியில் ஆடு கோழி கால் தவிர இம்புட்டு விசயம் இருக்கா ?

பிரியாணி கொண்டான் முகவை இராம் வாழ்க !

மான் கறி பிரியாணி பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே ? வெட்கமா ?

முகவை மைந்தன் சொன்னது…

மாறுபட்ட(!?) தலைப்பில் விவாதத்தை துவக்கிய அண்ணன் கோவியாருக்கு நன்றி.

மான்கறி சுவையானது தான். ஆனால் பிரியாணி வைப்பதில் சில சிக்கல்கள் உள்ளன. தங்கமணி மான்கறி உண்பதில்லை என்பதால் நான் மட்டும் உண்பதற்கு மான்கறி பிரியாணி செய்யச் சொல்ல தயக்கம்.

முன்பு மான்கறி வேண்டும் அளவுகளில் (1/4,1/2 கிலோ கூட) மட்டும் வாங்கலாம். இப்போது மான்கறி ஒருகிலோ பைகளில் மட்டுமே கிடைப்பதால் பங்கிட ஆளின்றி மான்கறி வாங்குவதில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//முகவை மைந்தன் said...
மாறுபட்ட(!?) தலைப்பில் விவாதத்தை துவக்கிய அண்ணன் கோவியாருக்கு நன்றி.

மான்கறி சுவையானது தான். ஆனால் பிரியாணி வைப்பதில் சில சிக்கல்கள் உள்ளன. தங்கமணி மான்கறி உண்பதில்லை என்பதால் நான் மட்டும் உண்பதற்கு மான்கறி பிரியாணி செய்யச் சொல்ல தயக்கம்.
//

சீனானாக பிறந்திருக்க வேண்டிய ஆளுய்யா நீய்யி. ஊர்வன பறப்பான, நடப்பன எல்லாவற்றையும் ரசித்து சுவைத்து, உறிஞ்சி. யப்ப்பா. நல்லா இரு சாமி. மான் கறி சாப்பிட்டேன் என்று மும்பை பக்கம் போய் சொல்லிடாதே.

முபாரக் சொன்னது…

வணக்கம் கோவியாரே

நீங்கள் உரையாற்றியிருந்தால் தமிழ்ப்புயலடித்ததுபோல் இருந்திருக்கும்

கோவி.கண்ணன் சொன்னது…

//முபாரக் said...
வணக்கம் கோவியாரே

நீங்கள் உரையாற்றியிருந்தால் தமிழ்ப்புயலடித்ததுபோல் இருந்திருக்கும்
//

எனக்கு அது சிக்கலாக போய் இருக்கும், பலர் முன்னிலையில் தடுமாறாமல் பேசும் பயிற்ச்சி பெற்றது இல்லை.

நாலு பக்கம் தடையின்று எழுத முடியும், கூட்டத்தின் இடையே நாலுவரி கூட திணறாமல் பேச வராது.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

அழகாகத் தொகுத்து இருக்கிறீர்கள்!
அருமை!

நசரேயன் சொன்னது…

தகவலுக்கு நன்றி

நசரேயன் சொன்னது…

/*வான் கோழி பிரியாணி ஒண்ணும் அவ்வளவா நல்லா இல்லை. கவிச்சி வாடை வேற தூக்கலா இருக்கும். ரொம்ப நேரம் வேக வைக்கணுமோ, என்னவோ தெரியலை!
*/
அந்த காலத்திலே இருந்து இன்னும் நீ சாப்பாட்டை மறக்கலையா?:):)

Jeeva சொன்னது…

சிங்கைனா எந்த ஊர் ஸார். அறியாமைக்கு மண்ணிக்கவும்.

Kala சொன்னது…

தமிழ் நிகழ்வை
அழகாகத் தொகுத்து உங்கள் வலையத்தில் சரமாகத்
தொடுத்து விட்டீர்கள் மக்கள் மனங்களில் தமிழ் மாலையாக
விழட்டும். உங்களை இழுத்து வந்து தமிழ் மழையில் நனைய
வைத்த உங்கள் நண்பருக்கு மிக்க நன்றி .உங்களுக்கும் மிக,மிக நன்றி.


பீஷான் கலா
2.12.2008

பாலு மணிமாறன் சொன்னது…

நல்ல பதிவு.

சிங்கை வலைப்பதிவர்கள் இது போன்ற நிகழ்வுகளில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் கலந்து கொண்டால், நம் உலகம் பெரிதாகும். கலந்து கொள்ளும்போது என்னைப் போன்றவர்களைக் காண நேர்ந்தால், தயங்காமல் பேசுங்கள். நாங்கள் நடத்திய "அந்தக் கால" சிங்கை வலைப்பதிவர் கூட்டங்களைப் பற்றி பகிர்ந்து கொள்ள அது ஒரு வாய்ப்பாக இருக்கும் - என்னைப் போன்றவர்களுக்கு! :-)

கோவி.கண்ணன் சொன்னது…

//Kala said...
தமிழ் நிகழ்வை
அழகாகத் தொகுத்து உங்கள் வலையத்தில் சரமாகத்
தொடுத்து விட்டீர்கள் மக்கள் மனங்களில் தமிழ் மாலையாக
விழட்டும். உங்களை இழுத்து வந்து தமிழ் மழையில் நனைய
வைத்த உங்கள் நண்பருக்கு மிக்க நன்றி .உங்களுக்கும் மிக,மிக நன்றி.


பீஷான் கலா
2.12.2008
//

கலா அவர்களே,

பாராட்டுக்கு நன்றி. கவிமாலையின் போது முடிந்த அளவுக்கு கலந்து கொள்கிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//பாலு மணிமாறன் said...
நல்ல பதிவு.

சிங்கை வலைப்பதிவர்கள் இது போன்ற நிகழ்வுகளில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் கலந்து கொண்டால், நம் உலகம் பெரிதாகும். கலந்து கொள்ளும்போது என்னைப் போன்றவர்களைக் காண நேர்ந்தால், தயங்காமல் பேசுங்கள். நாங்கள் நடத்திய "அந்தக் கால" சிங்கை வலைப்பதிவர் கூட்டங்களைப் பற்றி பகிர்ந்து கொள்ள அது ஒரு வாய்ப்பாக இருக்கும் - என்னைப் போன்றவர்களுக்கு! :-)
//

திரு பாலு மணிமாறன்,
உங்களிடம் பேச ஆவல் கொண்டிருந்தாலும்
அன்று நாங்கள் நிகழ்ச்சியின் இடையே வந்ததால் உங்களிடம் பேசுவதற்கு வாய்ப்பு அமையவில்லை. நிகழ்ச்சியும் 10 மணிக்கு மேல் முடிந்ததால் அனைவருக்குமே நேரமில்லாமல் போயிற்று. இதுபோன்ற நிகழ்வுகள் கலந்து கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது. குறிப்பாக ரெத்ன வெங்கடேஷ் ஐயாவின் இலக்கிய பேச்சு மெய்மறக்க வைத்தது. வியந்தேன்.

iNbAh சொன்னது…

கவிதையை மட்டும் தாங்கி வந்த கவிமாலை இன்று தமிழ் இலக்கிய நிகழ்வுகளையும் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. மாதாமாதம் மழை பெய்தாலும் இம்மாதம் இடி மின்னலோடு புயலும் வீசியிருக்கிறது என்பதை தொகுப்பு
சுட்டுகிறது, இந்த நல்ல முயற்சியால் இனி தமிழ் மழையில் நனைய குடை கொண்டு வருவர் என்னைப் போன்றோர்.இம்மாதக் கவிமாலையை படம் பிடித்து வலைப்பூவில் வலம் வர வைத்ததற்கு நன்றி.

இன்பா

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்