பின்பற்றுபவர்கள்

21 ஏப்ரல், 2008

கடுகடு மேலாளர்கள் !

எல்லோருடைய மேலாளர்களும் (BOSS) கடுகடு வென்று இருப்பார்களா ? நான் முன்பு வேலை பார்த்த 10 அலுவலகத்திலும் எனக்கு கிடைத்த மேலாளர்களில் 8 பேர் எப்போதும் கடுகடு சிடுமுகம் தான். பொதுவாக உயர் பொறுப்பில் உள்ளவர்கள் பொறுப்புணர்வின் காரணமாக தனக்கு கீழே வேலைப்பார்பவர்களிடம் கடுகடுவென்று நடந்து கொள்பவர்களாக இருக்கிறார்கள். பதவியின் பொறுப்புணர்வு என்பதில் ஏவலையும் (அதிகாரத்தை) பயன்படுத்திக் வேலை வாங்குபவர்களை பலருக்கும் பிடிக்காது, வேலை இடத்தில் மேலாளர்கள் அவ்வாறு நடந்து கொள்ளும் போது அவருக்கு கீழே வேலைப்பார்பவர்கள், அவர் கடந்து செல்லும் போதெல்லாம் பேயை பார்த்து அரண்டு போவது போலத்தான் அச்சமுடன் இருப்பார்கள், அறைக்கு அழைத்தால் விசாரனைக் குழு (விசாரனை கமிஷன்) முன்பு நிற்கப்போவது போலவே பயந்து நடுங்குவார்கள்.

கடுகடு மேலாளர்களிடம் விடுப்பு கேட்டு கிடைப்பதைவிட அந்த மேலாளர் விடுப்பில் செல்லும் போது கிடைக்கும் மகிழ்ச்சி ... அவருக்கு கீழே வேலைபார்பவர்களுக்கு கொண்டாட்டம் தான், 'அப்பாடா இன்னிக்கு ஆள் இல்லை' என்ற மகிழ்வில் மிகுந்த சுதந்திரத்துடன் வேலை நேரத்தில் அரட்டை கச்சேரி, புகைப்பிடிக்கச் செல்வது, அக்கம் பக்க காஃபி கடைக்கு சென்று ஒரு கால் மணிநேரமாவது நேரத்தை செலவிட்டு, மேலாளரின் விடுப்பை மகிழ்வுடன் கொண்டாடுவார்கள். ஹூம் என்ற பெருமூச்சுடன் அடுத்த நாள் வழக்கமான அச்சம் வந்துவிடும்.

கடுகடு மேலாளர்கள் இருக்கும் அலுவலகத்தில்... அலுவலகம் என்ற சூழல் பள்ளிக் கூடம் போல் தனிமனித கட்டுப்பாடுகள் மிக்கவையாகி வேலை நேரத்தில் ஒருவித பயத்துடனே எல்லா வேலைகளும் நடக்கும். கடுகடு மேலாளர்கள் உண்மையில் எப்போதும் கடுகடுவெனவே இருப்பார்களா ? ஒரு சிலர் அப்படி இருப்பார்கள், கொஞ்சம் தொய்வு விட்டால் சொல்வதை சட்டை செய்யாமல் இருந்துவிடுவார்கள், பிறகு கட்டுப்படுத்த முடியாது என்று நினைத்தே மேலாளர்கள் அந்த கடுமையையும் முகத்தையும் எப்போதும் வைத்திருப்பார்கள்.

எனக்கு மேலாளர்களாக இருந்தவர்கள் அனைவருமே கடுகடு கடுப்பர்கள் தான். ஆனால் அவர்களுக்கும் எல்லோரைப் போல் கலகலப்பாக கீழே வேலைப்பார்பவர்களிடம் முடிந்த அளவு நட்புடன் பழகவேண்டும் என்ற எண்ணம் இருக்கும், கீழே வேலைப்பார்பவர்கள் நெருங்கிச் சென்று பேசுவதற்கு தயங்குவதாலேயே அவர்களைப் புரிந்து கொள்ள முடியாமல் எப்போதும் விலகியே இருப்பார்கள். காரணம் கல்லூரியில் செய்முறை பயிற்சிக்கான மதிப்பெண் குறைக்கப்படும் அச்சம் இருப்பது போலவே, ஆண்டு இறுதியில் ஊதிய உயர்வு பரிந்துரையில் (அப்ரைசல்) கைவைத்துவிடுவாரோ என்ற அச்சம் தான். என்னுடைய மேலாளர்களிடம் வேலை நேரம் தவிர்த்து பழகிய போது அவர்களும் நகைச்சுவை உணர்வு உடையவர்கள் தான் என்று தெரிந்தது, அவர்களிடம் நெருங்கிப் பழகத் தொடங்கியதும், அவர்கள் எவரும் எனக்கு பேயைப் போல் தெரியவில்லை.

மற்றவர்களிடம் சிரிக்கிறார்களோ இல்லையோ, என்னைக் கடந்து செல்லும் போது சிரிப்பை உதிர்த்துவிட்டுதான் சென்றிருக்கிறார்கள், அதே போல் முன்பு அவர்கள் கடுமை காட்டி சொல்லியதையெல்லாம், சிறிது கடுமையுடன், பொறுப்பு உணர்வை வளர்க்கும் விதமாக அறிவுரையாக மாற்றிச் சொல்வார்கள். அதைக் கேட்பதற்கும் நமக்கு பொறுமை இருக்கும். மேலாளர்கள் தன்னிடம் வேலைப்பார்பவர்களிடம் எதிர்ப்பார்பதும், அது சரிவரச் செய்யவில்லை என்றால் அதற்கு கடிந்து கொள்வதும் இயல்புதான், ஆனால் அவர்களை புரிந்து கொண்டவர்களிடம் காட்டும் அனுகுமுறையும், அவர்களைப் பார்த்து பயந்து நடுங்குபவர்களிடமும் / பொறுப்பற்றவர்களிடமும் நடந்து கொள்ளும் அனுகுமுறை வெவ்வேறானது.

சிலர் மேலாளருக்கு சோப்புப் போட்டு அவரை குளிர்விப்பார்கள், அது தனி. அவர்களை உடன்(சக) அலுவலர்களே நன்றாக தெரிந்துவைத்திருப்பார்கள், 'இவனிடமும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும், போட்டுக் கொடுத்தாலும் கொடுத்துவிடுவான்' என்று சோப்பு ஆட்களிடம் கூடவே வேலைப்பார்பவர்கள் மேலாளரைப் பார்த்து அச்சமுறுவதைவிட கூடுதலாகவே அச்சமுறுவார்கள்.

என்னுடன் வேலைப்பார்பவர்கள் எப்போதும் கேட்பதுண்டு, 'உன்கிட்ட மட்டும் ஏன் அவர் கடுப்படிப்பதே இல்லை?', 'அவரைப்பார்த்து நடுங்காமல் நம் வேலையைப் சரியாக பார்த்தால் அவருக்கு ஏன் பயப்படவேண்டும், அவரும் மனிதர் தானே, அவரிடம் சிரித்த முகத்தோடு அலுவலகம் தவிர்த்த நேரங்களில் பேசிப்பாருங்கள், உங்களுக்கு அவரையும், அவருக்கு உங்களையும் பிடித்து போகும்' என்று சொல்லி இருக்கிறேன். இந்திய மேலாளார்கள் மட்டுமல்ல, சீன மேலாளர்களும் ஆரம்பத்தில் கடுகடு என்று இருந்தவர்கள், பின்பு நன்றாகவே பழகினார்கள், என்னிடம் இனவேற்றுமை காட்டியதே இல்லை. அவர்கள் பதவி விலகி வேறு அலுவலகம் செல்லும் போது என்னையும் அங்கே வந்துவிடச் சொல்லி பலர் அழைத்திருக்கின்றனர். நான் மாறிச் சென்ற பல வேலைகள் என்னுடைய முன்னாள் மேலாளர்களின் அழைப்பினால் கிடைத்ததுதான்.அலுவலகம் நேரம் தவிர்த்து, அலுவல் தொடர்பில்லாதவற்றைப் பற்றி மேலாளர்களிடம் நட்பு முறையில் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்காததாலும், வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளாததாலும், தயக்கத்தாலுமே பல கடுகடு மேலாளர்கள் புரிந்து கொள்ளப்படமாலேயே இருக்கின்றனர்.

தெரியாத பேயைவிட, தெரிந்த பேயே பரவாயில்லை. இந்த சிறுகதை படித்துப் பாருங்கள்.

7 கருத்துகள்:

ILA (a) இளா சொன்னது…

//அவரிடம் சிரித்த முகத்தோடு அலுவலகம் தவிர்த்த நேரங்களில் பேசிப்பாருங்கள், உங்களுக்கு அவரையும், அவருக்கு உங்களையும் பிடித்து போகும்' //
இதுக்கு பேரு என்னாங்க?

கோவி.கண்ணன் சொன்னது…

//ILA(a)இளா said...
//அவரிடம் சிரித்த முகத்தோடு அலுவலகம் தவிர்த்த நேரங்களில் பேசிப்பாருங்கள், உங்களுக்கு அவரையும், அவருக்கு உங்களையும் பிடித்து போகும்' //
இதுக்கு பேரு என்னாங்க?
//

இளா,

சொல்ல மறந்துட்டேன், எனக்கு Boss ஆக இருந்தவர்களில் பாதிபேர் பெண்கள்.

cheena (சீனா) சொன்னது…

ஆகா ஆகா - கோவி - பெண் மேலாளர்களா - அப்புறம் எதுக்குய்யா கடுகடு மேலாளர்களப் பத்தி பதிவு

உதைக்குதே - 10 அலுவலகம் - 8 சிடுசிடு கடுகடு மேலாளர்கள்

பாதிக்கு மேல் பெண்கள் - புரியலியே

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//இளா,

சொல்ல மறந்துட்டேன், எனக்கு Boss ஆக இருந்தவர்களில் பாதிபேர் பெண்கள்.//

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு புள்ளிவிவரம் சிங்கப்பூரில் எடுத்திருக்கிறார்கள், அதில் அதிகமாக வேலையை விட்டுச் செல்பவர்கள்(ராஜினாமா) பெண்களின் தலைமைத்துவத்தின் கீழ் பணியாற்றியவர்கள்தான் என்பது தெரியவருகிறது. உங்கள் அனுபவத்தை விருப்பப்பட்டால் பகிரலாம். ஏனென்றால் நானெல்லாம் ஆண் மேலாளரின் கீழ் தான் இதுவரை பணியில் இருந்திருக்கிறேன்.

அன்புடன்,
ஜோதிபாரதி.

கோவி.கண்ணன் சொன்னது…

சீனா ஐயா மற்றும் ஜோதிபாரதி, இருவருக்கும் ஒரே மறுமொழியாகாச் சொல்லிவிடுகிறேன்,

பெண் BOSS ஆண் BOSS களுக்கு கண்டிப்பில் குறைந்தவர்கள் அல்ல. எனது பெண் BOSS ஐ பார்த்து மற்றவர்கள் நடுங்குவார்கள், என்னிடம் அன்பாகத்தான் நடந்து கொண்டார், நான் அங்கிருந்து செல்லும் போது farewell பார்டிக்கெல்லாம் ஏற்பாடு செய்தார். "பொதுவாக வேலையை விட்டுச் செல்பவர்களை நான் பாராட்டுவதில்லை, ஆனால் உனக்கு நல்ல எதிர்காலம் அமையவேண்டும் என்று வாழ்த்துகிறேன்" என்றார். அதன் பிறகு ஒராண்டு ஆகியும் அவரது எண் தெரிந்தும் தொலைபேசியது கூட இல்லை. அந்த அத்யாயம் அந்த அலுவலகத்தோடு முடிந்தது. அவரும் தற்போது அங்கு இல்லை.

மங்களூர் சிவா சொன்னது…

/
தெரியாத பேயைவிட, தெரிந்த பேயே பரவாயில்லை.
/

:))

கோவி.கண்ணன் சொன்னது…

//மங்களூர் சிவா said...

:))
//
சிவா,
நீங்களும் பேய்க்கு பயப்படாதவர் தானா ?
:)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்