பின்பற்றுபவர்கள்

5 ஏப்ரல், 2008

நெருக்கமானவர்களிடம் சண்டையா ?

மாமனார் மாமியாரிடம் உங்களை நோக்கிய விசாரிப்பு எப்பவுமே, "என்ன(ங்க) மாப்பிள்ளை இப்படி எளச்சி போய்டிங்க" என்று இருக்கவே இருக்காது, காரணம், அப்படி கேட்டுவிட்டல், தன் மகள் மாப்பிள்ளையை சரியாக கவனிக்கவில்லை என்று தானே சொல்வதாக நினைத்து தவிர்த்துவிடுவார்கள், அதற்காக இளைச்சு போன மாப்பிள்ளையை விசாரிக்க மாட்டார்கள் என்றெல்லாம் கிடையாது, "வேலை அலைச்சல் அதிகமா ?, கொஞ்சம் சோர்வாக இருக்கிங்க" என்று மாற்றி சொல்லுவாங்க. பையனின் பெற்றோர் என்றால், "உன் பொண்டாடிக்கு உன்னை கவனிப்பதைத் தவிர வேறு என்ன வேலை ?" அவளின் எதிரிலேயே சொல்லிவிடுவார்கள்.

மாப்பிள்ளைகளுக்கு கொடுக்கும் மரியாதையே தனிதான், மருமகள்களுக்கு சாபக் கேடுதான், அதுக்கு காரணத்தில் மூக்கால் பங்கு பெண்களையே சேரும், தான் மாமியார் ஆனதும் பெண்களும் அப்படியே நடந்து கொள்கிறார்கள். பெண்களின் படிப்படியான வாழ்க்கை இப்படித்தான் தொடங்கி, முடியும் என்பது போல் இந்திய இல்லங்களில் இருக்கிறது :( உளவியல் காரணமும் உண்டு, அடக்கி வைத்திருப்பதாக நினைத்திருக்கும் பெண் மனம் ஒரு பெண்ணுக்கு மாமியார் என்ற தகுதியை அடையும் போது தானும் ஒரு அதிகார சக்தியாக மாறவேண்டும் என்ற உள்மன எண்ணம் கூட காரணம், முழு இல்லத்தின் பிடியும் (முன்பெல்லாம்) வயதில் மூத்த தாய்மார்களிடம் வந்துவிடும். மன ஆளுமையும் அடக்கி ஆள யாராவது இருந்தால் முடிந்த அளவுக்கு தன்னைப் பற்றிய தன்னம்பிக்கையை உயர்த்திக் கொள்ளவும், நான் செல்லாக் காசு அல்ல என்று காட்ட அதிகாரம் செலுத்த முனைவதும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான குணம் தான்.

அது போல் தம்மீது அன்புள்ளவர்கள் செய்யும் சிறிய தவற்றைக் கூட பெரிதாக்கி கோபம் அடைவதை பலரும் செய்வதுண்டு, சில மாப்பிள்ளைகள் அவ்வாறு தான் நடந்து கொள்வார்கள் 'மாப்பிள்ளை முறுக்கு' என்று சொல்லப்படுவது இதுதான். 'மாப்பிள்ளை மாப்பிள்ளை' என்று தாங்கும் போது கேட்க மகிழ்வாக இருக்கும், அதே போன்று மாமனார் மாமியார் ஒருசொல் குறைத்துச் சொல்வது போல் தெரிந்தால் கூட 'உங்க அப்பாவுக்கு எம்மேல எளக்காரமா?' என்று முறுக்கிக் கொள்வார்கள். நமக்கு நெறுக்கமானவர்கள் எப்போதும் தம்மை தாங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பதே இதற்கு காரணம். மிகுந்த அன்புள்ளவர்களிடம் தான் சிறிய விசயத்துக் கூட பெரிதாக கோவித்துக் கொள்வோம், வேறு சிலரிடம் பழக்கத்தின் காரணமாக புரிந்துணர்வு குறையும் போது அவர்களையெல்லாம் சமாதானம் செய்ய காலில் கூட விழத்தயாராக இருப்போம். நெருங்கியவர்களிடம் உடனே ஈகோவை விட்டுவிட்டு மன்னிப்பு கேட்க மனதே வராது, காரணம், 'நீ(ங்கள்), என்னைப் போய் எப்படி சொல்லலாம் ?' 'இவரெல்லாம் இப்படி சொல்லி இருக்கக் கூடாது' என்று நினைத்துப் பார்த்து பார்த்து கோபம் வரும். இதில் இரண்டு பக்கமும் பிடிவாதம் இருந்தால் விரிசல் வர வாய்ப்பு இருக்கு, 'சொன்னது தவறு' அதற்கு இப்படி கோபப்பட்டது தவறு' என்று இருபக்க தன் ஞாயங்களை பேசிக் கொண்டே இருப்பார்கள், பிரச்சனை முடிவுக்கு வரவேண்டுமென்றால் உடனே ஒருவர் மன்னிப்பு கேட்டுவிட்டால் எல்லாம் சரியாகிடும், அதன் பிறகு புரிந்துணர்வும், அன்பும் பெருகிவிடும்,

நெருக்கத்துக்குள் சண்டை சச்சரவுகள் வருவது எப்போதும் அன்பின் ஆழத்தை கூடுதல் ஆக்குவதற்குத்தான். இது முழுக்க முழுக்க உளவியல் பிரச்சனைதான், சமயத்தில் தான் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறோம் என்றே நினைத்துப் பார்க்காமல் போவதற்கு தான் உத்தமன் / நல்லவன் என்ற உள்மன நினைப்பும் காரணம். தாம் உத்தமன் / நல்லவன் என்று தன்னைப் பற்றி தனக்கு தாமே நினைத்துக் கொள்ளத் தேவை இல்லை என்பது கூட பலருக்கும் புரிவதில்லை. மன்னிப்பதும் / ஏற்றுக் கொள்ளுவதும் கூட பெரும்தன்மைதான், மற்றவர்களிடையே மதிப்பையும், புரிந்துணர்வையும் நெருக்கமானவர்களிடம் அன்பையும் கூடுதலாக்கும்.

நமக்கு நெருக்கமானவர்கள் நம்மிடம் மன்னிப்பு கேட்கிறார் என்றால் அது அவர் தவறை உணர்ந்ததற்கான அல்லது ஒப்புக் கொண்டதற்கான அளவுகோல் அல்ல. நம்மீது மதிப்பு வைத்திருக்கிறார், உறவு கெட்டுவிடக் கூடாது என்று நம்மைவிட அக்கரையுடனும், அன்புடன் இருக்கிறார் என்பதை சொல்லாமல் புரியவைப்பது அது. இதை சரியாக புரிந்து கொண்டால் அந்த இருவருக்கிடையே அன்பு ஏன் பெருகாது ?

7 கருத்துகள்:

ஜெகதீசன் சொன்னது…

?

TBCD சொன்னது…

இப்ப என்ன ஆகிப் போச்சு...?????? :P

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
?
//

என்ன புரியல்ல ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
இப்ப என்ன ஆகிப் போச்சு...?????? :P
//


உனக்கே புரியல்லையா ? அபத்தம் !
:)

RATHNESH சொன்னது…

இந்தப் பதிவின் பின்கதை, யாரைக் கூறித்தது என்பது போன்ற அக விஷயங்களில் தலையிட விரும்பவில்லை. ஆனால்,

//நமக்கு நெருக்கமானவர்கள் நம்மிடம் மன்னிப்பு கேட்கிறார் என்றால் அது அவர் தவறை உணர்ந்ததற்கான அல்லது ஒப்புக் கொண்டதற்கான அளவுகோல் அல்ல. நம்மீது மதிப்பு வைத்திருக்கிறார், உறவு கெட்டுவிடக் கூடாது என்று நம்மைவிட அக்கரையுடனும், அன்புடன் இருக்கிறார் என்பதை சொல்லாமல் புரியவைப்பது அது. இதை சரியாக புரிந்து கொண்டால் அந்த இருவருக்கிடையே அன்பு ஏன் பெருகாது ?//

மன்னிப்பு என்பதைக் குறித்த உங்கள் புரிதல் இவ்வளவு தான் என்றால் உங்களுக்காக கொஞ்சம் இரக்கப்படத் தான் வேண்டி இருக்கிறது. (ஏனென்றால் இப்படிப்பட்ட மன்னிப்புக்கு ஆயுள் மிகவும் குறைவு)

உங்களுக்கு நான் பரிந்துரை செய்யும் புத்தகம்: "ONE MINUTE APOLOGY"

கோவி.கண்ணன் சொன்னது…

//மன்னிப்பு என்பதைக் குறித்த உங்கள் புரிதல் இவ்வளவு தான் என்றால் உங்களுக்காக கொஞ்சம் இரக்கப்படத் தான் வேண்டி இருக்கிறது. (ஏனென்றால் இப்படிப்பட்ட மன்னிப்புக்கு ஆயுள் மிகவும் குறைவு)

உங்களுக்கு நான் பரிந்துரை செய்யும் புத்தகம்: "ONE MINUTE APOLOGY" //

ரத்னேஷ் அண்ணா,

உங்கள் கருத்தை மறுப்பதற்கு 'மன்னிக்கவும்'. மனித உறவுகள் உணர்வுகளால் பின்னப்பட்டது, அது தொடர்புடைய சிக்கல்களை எந்த ஒருநூலும் விளக்கி தீர்ப்பு சொல்லிவிடாது. அது பற்றி ஒரு தனி இடுகையே எழுத முடியும். இன்றைய தேதியில் கூட சைக்காலஜி, உளவியல் குறித்து சிறந்த நூல்கள் இருக்கலாம் அவற்றில் ஒன்று கூட முழுமையானவை அல்ல, அப்படி ஒரு நூல் இருந்தால் பிரச்சனையா இதைப் படி என்று சொல்லிவிட ஒவ்வொரு பிரச்சனைக்கும் எதாவது ஒன்றை காட்ட முடியும். உணர்வுளில் பிணக்கு ஏற்படுவது சூழலையும் அதில் புரிந்துணர்வு என்பது நெருக்கத்தையும் பொறுத்தது, சர்வ ரோக நிவாரனியாக நூல்களால் எல்லாமே சொல்லப்பட்டு இருக்கும் என்பதை இலகுவாக சொல்லிவிட முடியாது. நூல்கள் தீர்வுக்கான வழிமுறைகளையும் காரணத்தையும் விளக்கலாம். அது எந்த ஒரு தனிமனித மனம் ஏற்றுக் கொள்ளுமா கொள்ளாதா என்பதெல்லாம் அதன் தொடர்புடையவர்களின் மனதைப் பொருத்தே, இது மனிதனுக்கு மனிதன் வேறுபடும். சில பிரச்சனைகளுக்கு பல தீர்வுகள் உண்டு. நான் சொல்லி இருப்பது அதில் ஒருவகை மட்டுமே. அந்த நூலில் வெறொன்று இருக்கலாம் அவ்வளவுதான்.

பிரச்சனைகளுக்கு பல தீர்வுகள் இருந்தாலும் முன்முடிவுடன் இருக்கும் பிடிவாதக்காரர்களிடம் எந்த தீர்வும் எடுபடாது.

RATHNESH சொன்னது…

கோவி.கண்ணன்,

//பிரச்சனைகளுக்கு பல தீர்வுகள் இருந்தாலும் முன்முடிவுடன் இருக்கும் பிடிவாதக்காரர்களிடம் எந்த தீர்வும் எடுபடாது.//

மிகச் சரி.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்