பின்பற்றுபவர்கள்

7 ஏப்ரல், 2008

திரு ராஜா சொக்கலிங்கம் அவர்களுக்கு ... (மட்டுமல்ல)

இந்த இடுகை, திரு ராஜா சொக்கலிங்கம் அவர்கள் எழுதிய பதிவில், எனக்கு இட்டிருந்த் கேள்விக்கான எனது விளக்கம்.

//அன்புள்ள கோவி.கண்ணன் அவர்களுக்கு......

நீங்கள் இட்ட பின்னூட்டதிற்கு நான் அங்கேயே மறுமொழி கொடுத்திருக்க முடியும். நீங்கள் கொடுத்த சுட்டிகளை பொறுமையாக படித்தபோது, நிறைய சொல்லவேண்டும் என்று தோன்றியது, அதன் விளைவே இந்த பதிவு. நீங்கள் சுட்டிய உங்கள் பதிவுகள் அனைத்திலும் ஹிந்தியை எதிர்த்து உரக்க குரல் கொடுத்து இருக்கிறீர்கள். நன்றாக என்னுடைய இடுக்கையை இன்னொருமுறை படித்துப்பாருங்கள், நான் எந்த இடத்துலேயும் தமிழை வெறுக்கவும் இல்லை ஹிந்தி உட்பட எந்த மொழியையும் எதிர்க்கவுமில்லை. ஏன் அன்றாட வாழ்கையில் பின்பற்ற முடியாத போது எல்லா வார்த்தைகளையும் தமிழ் படுத்துகிறீர்கள் என்கிற ஒரு சிறு ஆதங்கத்தின் வெளிப்பாடுதான் அந்த இடுக்கை. //

திரு சொக்கலிங்கம் ஐயா,

முதலில் நான் மாற்று மொழி வெறுப்பாளன் என்று சொல்வது தவறு, தமிழைத் தற்காக்க வேண்டும் என்பதை ஒட்டி நான் சொல்லிய கருத்துக்கள், உங்களுக்கு நான் இந்தியை எதிர்ப்பது போன்ற தோற்றம் தந்தது என்பிழையல்ல, என்வீட்டைச் தூய்மையாக வைத்திருக்க வேண்டுமென்றால் பக்கத்து வீட்டு குப்பை என்வீட்டில் விழுவதை தடுப்பது அதில் ஒன்று, தேவை இன்றி என்வீட்டில் உங்களது குப்பைகளைப் போடாதீர்கள் என்று சொல்லுவது எப்படி பக்கத்து வீட்டுக்காரரை எதிர்ப்பதாக நினைக்க முடியும் ? எளிதாக எல்லா 'சொற்களையும்' என்று சொல்வதைக் கூட சொல்ல முடியாமல் 'வார்த்தைகளை' என்ற அளவுக்கு வடமொழிச் சொற்களைப் போல் இந்தி உட்பட பிறமொழிச் சொற்களும் தலையை நுழைத்து தமிழின் செம்மை கெட்டுவிடக் கூடாதே என்கிற ஆற்றாமையே (ஆதங்கம் - வடசொல்) எனது அத்தகைய இடுகைகள். நீங்கள் தமிழை வெறுக்கிறீர்கள் என்று நான் எந்த இடத்திலும் சொல்லவில்லை. அதற்கும் மாற்றாக மாற்றுச் சிந்தனை இருப்பதை குறிப்பிட்டேன். தவறாக எண்ணாதீர்கள்

//எறும்பு ஊர கல்லும் தேயும் என்பதைப்போல் இப்படி மொழிபெயர்ப்பத்தின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக அனைவரும் ஆங்கிலத்துக்கு மாற்றான அறிமுகப்படுத்தும் வார்த்தைகளை அறிந்துகொள்வார்கள் என்று சொல்லுகிறீர்கள். அன்றாட வாழ்கையில் நாம் பயன்படுத்தும் இரண்டு ஆங்கில வார்த்தைகளையும் அதற்கு நிகராக கண்டுபிடிக்கப்பட்டுள்ள தமிழ் வார்த்தைகளையும் எடுத்துகொள்வோம்.

ATM -- தா.ப.வ (தானியங்கி பணம் வழங்கி),
A/C Chair Car (Train) -- குளிர்சாதன நாற்காலி வகுப்பு.
நெஞ்சை தொட்டு சொல்லுங்கள், முதலில் நீங்கள் இந்த வார்த்தைகளைத்தான் உபயோகப்படுதுகிறீர்களா? அல்லது இந்த தமிழ் வார்த்தையை தமிழ்நாடு முழுவதும் அறிமுகப்படுத்தி வழக்கத்தில் கொண்டுவரமுடியும் என்று நம்புகிறீர்களா? சில வார்த்தைகளை அப்புடியே ஏற்றுக்கொள்ளுங்கள் அதனால் தமிழ் எந்த அளவும் பாதிக்கப்படாது என்று தான் சொன்னேன். //எறும்பு ஊர மலையும் கூட தேயும் என்று கூட சொல்லலாம். மொழி என்பது ஒரு மக்களின் வாழ்வியல் பகுதி (அம்சம்), வேற்றுமொழிக் கலப்பு அந்த மொழியின் தனித்தன்மையை அழித்துவிடும் என்பதற்காக எறும்பு ஊற கல்லும் தேயும் என்று குறிப்பிட்டேன். தமிழ்மொழி என்னும் சந்தனமலை தேய்ந்துவிடாமல் எப்போதும் மணம் கொடுக்க, வேற்றுமொழிச் சொற்களுக்கு மாற்றாக தமிழ்மொழியில் உள்ள சொற்களையே புழக்கத்தில் கொண்டுவரவேண்டும், காட்டாக பஸ்ஸுக்கு மாற்றாக பேருந்து என்ற போது உங்களைப் போலவே இது சரிவருமா என்று கருத்து கொண்டிருந்தார்கள் தற்பொழுது சரளமாக புழக்கத்தில் இருக்கிறது. இது போன்று பல சொற்கள், அலுவலகம், கணனி, செயலாளர் (காரியதரிசி) என்னும் நூற்றுக்கணக்கான சொற்கள் ஆங்கிலத்துக்கு மாற்றாக புழங்கிவருகிறோம், பேச்சுத்தமிழில் இல்லை என்றாலும் எழுத்தில் பெரும்பாலோனோர் சரியான சொற்கள் தெரிந்திருந்தால் அதனையே பயன்படுத்துவருகிறார்கள், தற்பொழுது பின்னூட்டம், மறுமொழி, இடுகை, வலைப்பூ ஆகிய வலைபதிவு தொடர்புடைய அண்மைய (சமீபத்திய) கலைச்சொற்கள், தொடக்கத்தில் சிலருக்கு பயன்படுத்த தயக்கம் இருந்தாலும் பலர் வெகு எளிதாக பயன்படுத்துகிறார்கள். புதிய ஆங்கிலச் சொற்களுக்கு மாற்றுச் சொல் தமிழில் உருவாக்குவது தமிழுக்கு வளர்ச்சியே, பிறமொழிகளிலும் நடைமுறையில் உள்ள ஒன்றுதான், குறிப்பாக சீன மொழியில் வேற்றுமொழிக் சொற்களை சீன மொழிக்கு மாற்றியே பயன்படுத்தி வருகிறார்கள், தமிழர்கள் போல் சீனர்கள் அதை ஏளனம் செய்தது போல் தெரியவில்லை. மாறாக வலிந்து பயன்படுத்தி போற்றிவளர்க்கிறார்கள். காசோலை ( cheque), கடவு சீட்டு (பாஸ்போர்ட்), வங்கி, கடன் அட்டை ( கிரிடிட் கார்டு) எல்லாம் ஏற்கனவே தமிழில் கலைச்சொற்களாக புழக்கத்தில் வந்திருக்கிறது. இதற்கு மேல் நெஞ்சைத்தொட்டு எழுத ஒன்றும் இல்லை.

//சரி நீங்கள் சுட்டிக்காட்டிய உங்களுடைய இடுக்கைகளுக்கு வருகிறேன்.
தமிழ்நாட்டில் ஹிந்தி நுழைந்திருந்தால் என்ன நடக்கும் என்று நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள்
"சாருக்கான்களும், சல்மான்கான்களும் சென்னை வீதிகளில் போஸ்டர்களில் சிரிப்பார்கள், காங்கிரஸ் தலைவரோ, வாஜ்பாயோ வணக்கம் என்று தமிழில் தடுமாறிச் சொல்லி
புழகாங்கிதம்
அடைய வேண்டி இருக்காது."

ஒரு மொழியை அனுமதித்தால் இதுதான் நடக்கும் என்று நீங்கள் சொல்லியிருப்பது எனக்கு விசித்தரமாக இருக்கிறது. ஒரு மொழியை கறப்பது என்பது அவர்களுடைய கலாச்சாரத்தை நாகரீகத்தை கற்பதற்கு சமம். ஒரு மொழியை வெறுத்து ஒதுக்குவது அம்மொழி பேசும் மக்களை மறைமுகமாக வெறுக்கிறோம் என்று அர்த்தம். அதைத்தான் இன்று கர்நாடகாவில் செய்துகொண்டு இருக்கிறார்கள்.
"இந்தி அறிந்தால் இந்தி சீரியல் / சினிமா பார்க்கலாம் என்ற பலனைத்தவிர மொழிவாரி மாநிலத்தவர் கண்ட பலன் வேறு எதுமில்லை" என்று சொல்கீறீர்கள்.
ஆங்கிலத்தில் Dan Brown எழுதிய Angels & Demons என்ற Novelஐ படித்த போது, அந்த கதையில் எது கற்பனை எது நிஜ சம்பவம் என்று பிரித்து பார்க்க முடியாத அளவுக்கு அற்புதமாக இருக்கும். கிட்டத்தட்ட கல்கியின் பார்த்திபன் கனவு, பொன்னியின் செல்வன் படிக்கும் போது கிடைக்கும் உணர்வு இதை படிக்கும் போதும் எனக்கு கிடைத்தது. ஹிந்தியும் மலையாளமும் படித்திருந்தால் இன்னும் எவ்வளவு இலக்கியங்களையும் நல்ல புத்தகங்களையும் படித்திருக்க முடியும் என்று எனக்கு அடிக்கடி தோன்றும். பலன் என்பது அவரவர் பார்க்கும் விதத்தை பொருத்தது. உங்களுக்கு வேண்டுமானால் மொழி அறிவு என்பது சினிமா பார்க்க மட்டுமே உதவுவதாக இருக்கலாம் ஆனால் பலருக்கு அப்படியல்ல.
//


சாருக்கானும் சல்மான் கானும் ஏனைய கான்களும் தான் தமிழகம் தவிர பிற மாநிலங்களில் கோலச்சி வருகிறார்கள் என்பதில் உங்களுக்கு என்ன ஐயம் (சந்தேகம்) ? கர்நாடகாவில் தமிழருக்கு எதிரான வன்முறைக்குக் காரணம் கன்னட திரைப்படங்களால் வெற்றிபெற முடியாமல் போனதால் தான், அதையும் அவர்கள் தவறுதலாகவே முடிவு செய்து கொண்டுள்ளனர், தமிழ் படங்களை ஒருசிறிய அளவு கன்னடர்கள் தவிர்த்து, தமிழர்கள் தான் பார்க்கிறார்கள். உண்மையில் கன்னட திரையுலகை ஆழத்துக்கு (பாதாளம்) தள்ளியது இந்தி திரைப்படங்களே, கன்னடர்களுக்கு இந்தி தெரிவதால், கன்னட திரைப்படங்களைவிட தொழில் நூட்ப அளவிலும், பொருட் செலவு போன்ற வியத்தகு(பிரமாண்டம்) அளவில் ஓங்கி நிற்பது இந்தி படங்களே என்பதால், கன்னடப்படங்களை பார்பதை கன்னடர்களே ஒதுக்க முனைந்ததால், கன்னடத்திரைத்துறைக்கு பெரும் இழப்பு, தற்பொழுதுதான் புரிந்து கொண்டு இந்திபடங்களை எதிர்க்க தொடங்கி இருக்கிறார்கள் ( அதுபற்றிய சுட்டி பின்னூட்டத்தில் இணைக்கிறேன்)

ஒரு மொழியை அனுமதித்தால் (தமிழ்) 'வியப்புக்கு' பதில் வடமொழி 'விசித்திரம்' போன்றே வரும் :). இயல்பாக உள்ளதைக்கூட தொலைத்துவிட்டு நாமே சென்று தமிழில் இந்த சொற்களெல்லாம் இல்லை என்று சொல்லுவோம். ஒரு மொழியை தவிர்பது (வெறுப்பு அல்ல) அந்த மக்களை வெறுப்பதாக நினைக்கும் உங்களால், ஒரு மொழி நன்கு வழங்கும் இடங்களில் மற்றொரு மொழியை திணிப்பதை ஏன் மொழி அழிப்பு முயற்சி என்று சொல்ல முடியவில்லை ? தேவையற்ற மொழி நுழைவை தடுக்க நினைப்பது அந்த மக்களை வெறுப்பதாகாது, இந்தி பேசும் பலமாநில மக்களில், எந்த எந்த மாநில மக்கள் இந்தி பேசுவதால் அவர்களை வெறுக்கிறோம் என்று எந்த தமிழன் சொல்கிறான் ? இந்தியை விட அண்டை மாநில மொழிகளைக் கற்றுக் கொள்வதாவது ஏதாவது பலன் தரும், என்றோ ஒரு நாள் டெல்லி செல்லப் போகிறோம் என்பதற்காகவும், டெல்லிக்கு வேலை இடம் மாற்றல் வந்துவிட்டக் காரணத்தாலும் எனக்கு இந்தி தெரியாமல் போனது தமிழகத்தில் அது தடைசெய்யப்பட்டதே காரணம் என்று சொல்வது ஏற்கமுடியாத வாதம், சென்னைக்கு வரும் சேட்டுகளில் எத்தனை பேர் முறைப்படி தமிழ் படித்துக் கொண்டு வருகிறார்கள், தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு நாள் ஊதியத்திற்கு (தின கூலி) செல்லும் எத்தனை பேர் இந்தி தெரிந்து கொண்டு செல்கிறார்கள் ? அப்படி தெரியாமல் செல்வதால் அவர்களின் எத்தனை பேர் இந்தி மொழி தெரியவில்லை என்ற ஒரே காரணத்திற்காக தமிழகத்துக்கு சென்ற விரைவில் திரும்புகிறார்கள் ? அல்லது அப்படி இந்தி தெரியாமல் சென்றவர்கள் இந்தி அறியாமலேயே திரும்புகிறார்களா ? இந்திய மொழிகள் அனைத்துமே ஈடுபாடு இருந்தால் மூன்று மாதத்தில் அதைப் பற்றி முன்பு அறியாமல் இருந்தால் கூட அந்த மக்களிடம் புழங்குவதன் / பழகுவதன் மூலம் கற்றுக் கொள்ள முடியும்.

ஒரு மொழியில் எழுதப்பட்ட இலக்கியத்தை அம்மொழி அறிந்தவர்களே சரியாக புரிந்து கொள்ள முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை, அது சரி என்பதால் தான் நம் திருக்குறள் எத்தனையோ மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருந்தாலும் அதன் சிறப்பை, பயனை உலகத்தார் இன்னும் அறியாமல் இருப்பதற்குகான முதன்மைக் காரணம். இந்தி மட்டும் அல்ல விருப்பப்படுபவர்கள் எந்த மொழியை வேண்டுமானாலும் படிக்கலாம், ஒருவருக்கு விருப்பம் என்பதற்க்காக எல்லோரையும் படிக்கச் சொல்வது தேவையற்ற பாடச்சுமைதான், அதன் பயன் என்றால் இந்தி தொடர், இந்திப்படம் பார்த்து தாய்மொழியின் தரத்தைக் கெடுக்கும் வண்ணம் அதை பேச்சுவழக்கில் நுழைப்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. ஆங்கிலம் கலந்து 'பண்ணி' தமிழ் பேசுவதை ஒப்புக் கொள்வீர்கள் என்றே நினைக்கிறேன். பண்ணித் தமிழில் எனக்கு உடன்பாடு இல்லை. எனக்கு மட்டுமல்ல மொழியறிவு பலருக்கும் பயனளிக்கும், கற்றுக் கொள்பவர்களை யாரும் தடுத்ததாகத் தெரியவில்லை. எனக்கு கன்னடம் தெரியும் பெங்களூர் சென்றதால் ஈடுபாட்டுடன் கற்றுக் கொண்டேன், அருகில் இருக்கிறது என்பதற்காக தமிழர்கள் எப்போது வேண்டுமானாலும் பெங்களூர் செல்வீர்கள், அப்படி சென்றால் கன்னடம் பேசுவது உங்களுக்கு இன்றியமையததாகிவிடும் எனவே அனைவரும் அண்டை மாநில கன்னடம் அறிந்து கொள்ளுங்கள் என்று வலியுறுத்தி அதை நம் பாடத்திட்டத்தில் மற்றோரு சுமையாக சுமத்தினால் அதை அறிவார்ந்த செயலாக சொல்ல முடியாது. நீங்கள் இந்தி அல்லது பிறமொழி குறித்து சொல்லும் அனைத்து பயன்களும் பிறமாநில குறிப்பாக அண்டை மாநில மொழியை நம்மீது திணித்தால், அதை நாம் ஏற்றுக் கொண்டால் கிடைகும் பலன்கள் தான்.


//
நீங்கள் முக்கியத்துவம் கொடுப்பதை வைத்துதான் ஒரு மொழி ஒரு இடத்தில் வளரும். 10 மொழிகள் தெரிந்திருந்தால் கூட நீங்கள் உங்கள் தாய்மொழிக்குதான் முக்கியத்துவம் கொடுப்பீர்கள், அப்புடியிருக்கும் போது ஹிந்தியை அனுமதித்தால் அது தமிழை விழுங்கி ஏப்பம் விடும் என்பதெல்லாம் நடக்காத காரியம்.//


இதுவும் தவறான வாதம், மொரீசியஸ் நாட்டில் தமிழர்கள் வசிக்கிறார்கள், அங்கு பலமொழிகளும் பேசப்படுகிறது, அவர்கள் தமிழைமறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது, பலமொழிகள் அறிந்துள்ள நாட்டில் / மாநிலத்தில் அந்த மாநில / நாட்டின் தாய்மொழி பெரும்பாண்மை எதைப் பேசுகிறதோ அதையே சார்ந்துவிடும், வெறும் தாய்மொழி என்ற அளவில் சுருங்கிவிடும், பின்னாளில் இந்தியா என்ற பரந்த நோக்கில் இந்தி பேசும் போது பின்னாளில் அதுவும் மறைந்து போகிறதோ இல்லையோ அதன் வளர்ச்சி முடங்கிப் போய்விடும், வளர்க்க வேண்டும் போற்ற வேண்டும் என்ற தேவையும் / நினைவும் இருக்காது, நீங்கள் தற்பொழுது எழுதும் எழுத்து நடை 60 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போல் கொடுந்தமிழோ, மணிபவள தமிழோ இல்லை, அதில் இருந்த களைகள் பெரும அளவில் எடுக்கப்பட்டதால் இன்று ஓரளவுக்காவது தமிழில் பிற மொழி கலக்காமல் எழுதுகிறோம், இல்லை என்றால் எனக்கு பலமொழிகள் தெரியும் உங்களுக்கும் தெரியும், பின் எதற்க்காக தமிழில் எழுதவேண்டும், இந்தியா முழுவதும் படிப்பார்கள் இந்தியிலேயே எழுதுவோம் என்று துனிவீர்கள், தமிழ்தவிர்த்து, இந்தி தவிர்த்து இணையபக்கங்கள் பிறமொழிகளில் எழுதப்பட்டு இருப்பது விழுக்காட்டு அளவில் இவ்விரு மொழிகளைவிட மிகக் குறைவு. அதற்கு காரணம் பிறமாநிலத்தினர் இந்திக்கு கொடுக்கும் முதன்மை தத்தம் தாய்மொழிக்கு தருவதில்லை. முதன்மைத்துவம் கொடுத்து மொழியை வளரவைப்பது தனிப்பட்ட ஒருவரின் செயல்குறித்ததே இல்லை, அது எல்லோரும் சேர்ந்து செய்ய வேண்டிய கடமை. தனிப்பட்ட ஒருவரின் செயல் என்றால் அது அவரின் ஈடுபாட்டைப் மட்டும் பொருத்தே. அது ஒரு சிறிய பங்கு மட்டுமே, அந்த எண்ணம் எல்லோருக்கும் வரவேண்டுமென்றால் சில பரிந்துரைகள் தேவை (அவசியம்) நான் தனிப்பட்ட முறையில் தங்குதடையின்றி எழுதுகிறேன் என்பதற்காக மற்றோர்களும் அப்படித்தான் எழுதுவார்கள் என்ற பொதுக்கட்டமைப்பை செய்ய முடியாது. நீங்கள் சொல்லும் வழிமுறைகள் அதாவது தாய்மொழியை மறக்காமல் ஈடுபாட்டுடன் பேசினால் மட்டும் போதுமே என்ற வாதம் தமிழகத்தினுள்ளேயும் வெறும் வீட்டளவில் நின்றுவிடும்.


// படித்தால்தானே அது வேண்டுமா வேண்டாமா என்கின்ற முடிவுக்கே வரமுடியும். படிக்காமலேயே வேண்டாம் என்பது சுவைக்காமலேயே கசக்கிறது என்று சொல்வது போல் இருக்கிறது. இந்தியாவில் அனைத்து மாநிலத்தில் உள்ளவர்களும் உங்களை போல் தன் தாய்மொழியை தவிர வேறு மொழியை வேண்டாம் என்று சொன்னால் என்னவாகும்? மொழியை வேண்டாம் என்று சொல்லுவதுதான் பிரிவினைக்கான முதல் படி. நீங்கள் ஹிந்தியை எதிர்ப்பது போல் இன்று கர்நாடகாவில் அவர்கள் தமிழை எதிர்கிறார்கள். பிரச்சனைக்கு மூல காரணமே இதுதான்.//

படித்தால் தானே தெரியும் என்று சொல்கிறீர்கள், தமிழர்கள் ஏற்கனவே தேவையற்ற ஒன்றை வரவேற்றுவிட்டு, வழிபடும் இடங்களில், 'இங்கு தமிழிலும் வழிபாடு செய்யப்படும்' என்ற இரண்டாம் இடத்தைக் கூட போராடி தான் பெற்று இருக்கிறார்கள், இதற்கு மேல் தமிழனுக்கு கசப்பு தேவையா ? வேறு மாநிலங்களில் இந்தியை வரவேற்றவர்கள் இந்திக்காரர்களையோ, பிறமொழிபேசுபவர்களையோ அரவணைக்கவில்லை என்பதற்க்கு கர்நாடகமும், மகாராஷ்டிராவும் சாட்சியாக நிற்கிறது. மொழித்திணிப்பு வேண்டாம் என்று தான் சொல்கிறார்களேயன்றி, அந்த மொழியைப் பற்றி தவறான கருத்தை எவரும் விதைக்கவில்லை. உங்களைப் போன்றே தவறாகவே பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கர்நாடகாவில் தமிழர்களை எதிர்ப்பதற்கு காரணம் தமிழர்கள் யாரும்... 'கன்னடர்களே தமிழை படியுங்கள் அதுவே தென்மாநில ஒற்றுமைக்கு வழி' என்ற தென் தேசிய வாதம் பேசவில்லை. அதற்கு காரணம் வேறு அதை ஏற்கனவே ஒரு பதிவில் எழுதி இருக்கிறேன்.

//நீதிமன்றத்திலே தீர்ப்புகள் தமிழில்தான் எழுதவேண்டும் என்று போராட்டம் நடந்த போது, கண்ணதாசன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டார்

"எந்த மொழிக்கும் இல்லாத ஒரு சுவை தமிழ்மொழிக்கு உண்டு, ஒரு வார்த்தையை பிரித்தால் ஒரு பொருள் தரும் சேர்த்தால் இன்னொரு பொருள் தரும். அப்படி இருக்கும் போது தீர்ப்பை எப்படி தமிழில் எழுத முடியும்? ஒரு நீதிபதி எழுதிய தீர்ப்பை என்னிடம் தாருங்கள், அதை மாற்றாமல் அதற்கு நேர் எதிர்மறையான பொருள் தரும்படி என்னால் வாசித்து காட்ட முடியும். ஆங்கிலேயர்களே சில முக்கியமான தீர்ப்புகளை french மொழியில் எழுதினார்களாம் காரணம் ஆங்கிலத்தை விட அந்த மொழியில்தான் ஒரு சொல் ஒரே பொருள்
தரும்." என்று அந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். ஆக கண்மூடித்தனமாக வேறு மொழிகளை எதிர்ப்பதை விட்டு, வரட்டு பிடிவாதத்தை தளர்த்தி வேற்று மொழிகளை சில இடங்களில் ஏற்றுக்கொள்வதில் தவறு இல்லை என்பது என்னுடைய எண்ணம். //

இதுவும் தவறான வாதம், ஒரு சொல்லுக்கு 10க்கும் மேற்பட்ட பொருள் சீன மொழியில் கூட உள்ளது, அதற்காக சீன அரசாங்கம் தீர்ப்புகளை ஆங்கிலத்தில் எழுதுவதில்லை. கண்ணதாசன் சிறந்த கவிஞர், அவர் தேவநேயபாவாணர், மறைமலையடிகளார் போன்று தமிழ் ஆய்வு நடத்தியவர் அல்ல.

மேலும்,

தனிபப்ட்ட கருத்தாக ஒருவர், தமிழ் அல்லது (தாய்)மொழி என்பது வெறும் தகவல் தொடர்பு சாதனம் என்று நம்புவது அவரவர் கருத்தே, அது உண்மை அல்ல. மொழி குறித்த புரிதல் இல்லாததால் அவரால் அதை எளிதாக சொல்ல முடியும். வாழ்க்கை, பணம் அதன் தேவை போதும், மற்றவைகள், அதாவது தாய்மொழி போன்றவைகளுக்குக் கூட தேவைக்கேற்ப முதன்மைத்துவம் கொடுக்கலாம் அல்லது கொடுக்காமலும் விடலாம் என்று நினைப்பவர்கள், அதுபற்றி விருப்பமில்லாதவர்கள், மொழிக்குறித்தான கருத்தாக்கத்தை, கட்டமைக்கவே செல்லக்கூடாது. அவர்களது எல்லை வாழ்வியல் /பொருளியல் மட்டுமே. எனது பேரப்பிள்ளைகள் தமிழ் பேசமாட்டார்கள், தமிழ் அழிந்து போவதை யாரும் தடுக்க முடியாது என்று சொல்லத் துணிவது கூட எனது வாரிசுகளுக்கு தாய்மொழி குறித்த அக்கறையை, நாட்டத்தை நான் ஏற்படுத்திவிடமாட்டேன் என்ற ஒப்புதல் வாக்குமூலம் தான். பேரப்பிள்ளைகள் தாய்மொழி பேசுவார்களா இல்லையா என்பது ஒருவர் தன் மகனுக்கு அதை எவ்வளவு பற்றுதலுடன் சொல்லுக் கொடுத்து போற்றினார் என்பதைப் பொருத்ததே. அப்படி இல்லாமல் வருங்காலத்தினர் பொறுப்பில்லாமல் அழிய விட்டுவிடுவார்கள் என்று நாமே வளரும் பயிருக்கு சுடுநீர் ஊற்றிவிட்டு, இது பட்டுப் போகக்க்கூடியது பேரனுக்கு பயன்பாடாது என்று கூட சொல்ல முடியாது, முதலில் மகனுக்கே பயன்படாத ஒன்று பேரனுக்கு பயன்படாது என்று நினைப்பது தனது பொருப்பின்மையின் காரணமாக காலம் தாண்டிய கற்பனை நீட்சியே.

அளவில் மிக்கவையாக பிறமொழிச் சொற்களை தேவைக்கேற்ப ஏற்றுக் கொண்ட மொழி வளருமா ? யார் சொன்னது இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளின் சொற்களை தன்னிடத்தில் ஏற்றுக் கொண்டுள்ளது நரிகுறவர் பேசும் மொழி, அதன் வளர்ச்சி பற்றி எதாவது தகவல் உண்டா ? அந்த குழுவைத் தாண்டி யார் அந்த மொழியை புரிந்து கொள்கிறார்கள். இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்று தவறாக கட்டமைத்து காட்டப்பட்டுள்ளது போலவே ( இந்தியா தேசிய மொழி இல்லை) ஆங்கிலம் உலக மொழி என்றெல்லாம் தவறாகக் கூறுகிறார்கள், எங்கெல்லாம் வெள்ளைக்காரர்களின் காலனியின் கீழ் (ஆதிக்கம்) வந்ததோ அங்கு மட்டுமே ஆங்கிலம் பேசப்படுகிறது. ஜெர்மனி, பிரான்ஸ், தென் அமெரிக்க நாடுகள் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் கூட ஆங்கிலத்துக்கு மதிப்பு கிடையாது. ஆங்கிலம் உலக மொழி என்றால் பிறகு ஏன் பில்கேட்ஸ் மைக்ரோசாப்ட் மென்பொருளை 30க்கும் மேற்பட்ட மொழிகளில் வடிவமைத்து தருகிறார் ?

மொழிகள் அழிவை நோக்கி செல்வதற்கு முதற்காரணம், பிறமொழி சொற்கள், பிற மொழியின் ஊன்றுதல் அந்த மொழி பேசும் மக்களிடம் புழக்கத்துக்கு வருவதே. மற்றொரு காரணம், அந்ததந்த மொழி பேசுபவர்களின் பொறுப்பின்மை. அதாவது தாய்மொழியாக தனக்கு ஊட்டபட்ட ஒன்று தனது மகனுக்கும் ஊட்ட வேண்டும் என்ற ஆர்வமின்மையே. உண்மையான பரம்பரை சொத்து என்பது ஒருவருக்கு அவர் பேசும் தாய்மொழியே, என்னிடம் இருப்பதை நாளை என்மகனிடம் குறைவின்றி வளர்த்தே சேர்பேன் என்ற எண்ணம் இருக்க வேண்டும். இலக்கியமற்ற, எழுத்தற்ற மொழி பேசும் நரிக்குறவர்கள் தம்மொழி தனது பேரனுக்கு தெரியாமல் போய்விடும், என தனது மொழிபற்றிய தாழ்வான கருத்தைக் கொண்டிருக்க மாட்டார்கள்.

மீண்டும் இந்த பதிவின் மூலம் சில எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள வாய்பளித்த உங்களுக்கு நன்றி. நான் இங்கே மீண்டும் சொல்லிக் கொள்ள விளைவது, இவை எனது கருத்து மட்டுமே, தமிழ்மேல் எனக்கிருக்கும் உரிமையை விட்டுக் கொடுக்காமல் இவற்றை பரிந்துரை என்ற அளவில் வேண்டுமானால் சொல்லிக் கொள்கிறேன். தமிழர் தவிர பிறமொழிக்கலப்பை தெரிந்தே கொண்டாடும் பிறமொழிக்காரர்கள் எவரும் இல்லை, தமிழருக்குள்ளேயே தமிழ் மீது ஏன் இந்த வெறுப்பு என்று புரியவும் இல்லை. தமிழ் தரம் கெட்டது, நீசபாசை என்று பிறர் சொல்லக் கேட்டு வந்ததன் விளைவோ ? ஒருவேளை அதுதான் உண்மை என்று தமிழர்களுக்குள்ளும் நம்புகிறார்களோ !

அன்புடன்
கோவி.கண்ணன்

21 கருத்துகள்:

ஜெகதீசன் சொன்னது…

//
ATM -- தா.ப.வ (தானியங்கி பணம் வழங்கி),
A/C Chair Car (Train) -- குளிர்சாதன நாற்காலி வகுப்பு.
நெஞ்சை தொட்டு சொல்லுங்கள், முதலில் நீங்கள் இந்த வார்த்தைகளைத்தான் உபயோகப்படுதுகிறீர்களா? அல்லது இந்த தமிழ் வார்த்தையை தமிழ்நாடு முழுவதும் அறிமுகப்படுத்தி வழக்கத்தில் கொண்டுவரமுடியும் என்று நம்புகிறீர்களா?
//

சிங்கை தமிழ் நாளிதழ்களிலும், தொலைக்காட்சி செய்திகளிலும் தானியங்கி பணம் வழங்கி என்றே பயன்படுத்தப் படுகிறது.

"தொலைக்காட்சி", "கணிப்பொறி" போன்ற சொற்களும் கூட தொடக்கத்தில் கிண்டலுக்கு உள்ளானது. அவையெல்லாம் இப்போது பழகிவிடவில்லையா?

MURUGAN S சொன்னது…

அருமை!!!

கோவை சிபி சொன்னது…

நன்றாக விளங்கும்படி எழுதி உள்ளீர்கள்.தூங்குபவர்களை எழுப்பிவிடலாம்,தூங்குபவர் மாதிரி நடிப்பவர்களை எழுப்பிவிட முடியுமா!

கோவி.கண்ணன் சொன்னது…

//கோவை சிபி said...
நன்றாக விளங்கும்படி எழுதி உள்ளீர்கள்.தூங்குபவர்களை எழுப்பிவிடலாம்,தூங்குபவர் மாதிரி நடிப்பவர்களை எழுப்பிவிட முடியுமா!
//

கோவையாரே,

தான் தமிழன் என்ற தன்னினைவின்றி கோமாவில் இருப்பவர்களையும் எழுப்பவே முடியாது.

கோவி.கண்ணன் சொன்னது…

//தமிழ் குழந்தை said...
அருமை!!!
//

பாராட்டுக்கு மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

ஜெகதீசனாரே,

கருத்துக்கு மிக்க நன்றி !

Indian சொன்னது…

அருமையான கட்டுரை.

கோவி.கண்ணன் சொன்னது…

//Indian said...
அருமையான கட்டுரை.
//

இந்தியரே மிக்க நன்றி !

Thekkikattan|தெகா சொன்னது…

எத்தனை மாநிலங்களில் தமிழ் விரும்பி பள்ளிப் பாடங்களில் ஒரு (விருப்ப) மொழியாக ஏற்று நடத்தப் படுகிறது?

இங்கு யாரும் விரும்பிப் படிப்பவர்களை படிக்கக் கூடாது என்று வீடு புகுந்து தாக்கியதாக நிலமை இல்லையே. பிற மொழிகளின் செழுமை அறிய விரும்பிப் படிப்பவர்கள் கண்டிப்பாக காலம் தேறும் தேன்றியே வருவார்கள்.

மொழி பேணல் என்பது என்னுடைய பார்வையில் ஒரு உயிரின பன் முகத் தன்மை பேணலுக்கு (conservation of bio-diversity) நிகரே என்பேன்.

கோவி, மிக நேர்த்தியாக அதனை விளக்க முற்பட்டுள்ளீர்கள்.

ஆமா, தெரியாமத்தான் கேக்கிறேன், உத்ரபிரதேசத்தில் யாராவது ஒருவர் தமிழில் இவ்வளவு செழுமை உள்ளது, நமது மாணக்கர்கள் தமிழை அறிந்து கொள்ள வேண்டுமென்று அங்கு கொடி பிடித்திருக்கிறார்களா, வரலாற்றில் அல்லது அண்மைய கால கட்டத்தில்?

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

அதிக சிரத்தை எடுத்து பதிவு செய்திருக்கிறீர்கள். நல்ல பதிவு! வாழ்த்துக்கள்!!

அன்புடன்,
ஜோதிபாரதி.

நாகை சங்கர் சொன்னது…

சொல்ல வந்த கருத்தை மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.


அன்புடன்,
நாகை சங்கர்.

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) சொன்னது…

கோவி. கண்ணன்,
உங்கள் கட்டுரை என் எண்ணத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது என்று சொன்னால் மிகையாகாது. நன்றாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.


இருந்தாலும் சில ஐயங்கள் (கூடவே பிறந்தது) மனதில் தங்கி விடுகின்றன.


1. மொழி கருத்துப் பரிமாற்றத்தை தாண்டிய விஷயம் என்று ஏன் கருதுகிறீர்கள்? இதனால் கலையின் வளர்ச்சி ஏதேனும் தடைபட்டு விடும் என்கிறீர்களா?

2. ஆங்கிலமும் கட்டயாமாக திணிக்கப்பட்ட மொழி தான். இதனால் தமிழ் அழிந்து விட்டதா? உலகம் முழுவதும் தொடர்பு கொள்ள பல துறைகளில் ஆங்கிலம் தான் பயன்படுகிறது. பல நாடுகளில் இது இரண்டாம் மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அது போல நம் நாட்டு மக்கள் அனைவரும் ஒரு மொழியை பேசுவது தேசிய ஒருமைபாட்டை வளர்க்கும் என்று நினைக்கிறேன். சரி, அவ்வாறு தேசிய மொழியாக ஒன்றை பேசுவது நம் தாய் மொழியின் பயன்பாட்டை சுருக்கி விடும் என்று நீங்கள் சொல்வது உண்மை என்றே வைத்துக் கொள்வோம். அப்படி இருந்தாலும் நாட்டுப் பற்றை விட மொழிப் பற்று சிறந்ததா? ( திட்டாதீர்கள் - இது அறி வினா அல்ல, அறியா வினா தான்!). மொழியின் அடிப்படையில் இனம் கண்டு சண்டை இடுவது நடக்காதல்லவா?

3. உலகின் பல மொழிகளில் இருந்து சொற்கள் எடுத்துக் கொண்ட ஆங்கிலம் வளரத்தானே செய்கிறது ? நம் தமிழில் இருந்து கூட மாங்காய்(Mango), கட்டுமரம்(catamaran) எல்லாம் எடுத்துக் கொண்டுள்ளது. அது போல விசித்திரம், ஆதங்கம் போன்ற வடமொழி மூலம் வந்த சொற்களை நாம் என் தவிர்க்க வேண்டும் ? (மீண்டும் அறியா வினா தான்!) ஒரு பொருளுக்கு பல சொற்கள் இருப்பது அந்த மொழியின் வளமையை குறிப்பதாக ஏன் கொள்ளக் கூடாது? தமிழில் சொல்லே இல்லாத ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழ் சொல் கண்டு பிடிக்க வேண்டும் என்பதில் நான் உடன்படுகிறேன்.

தருமி சொன்னது…

சிரத்தைக்கும், கருத்துகளுக்கும் பாராட்டுக்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Thekkikattan|தெகா said...
எத்தனை மாநிலங்களில் தமிழ் விரும்பி பள்ளிப் பாடங்களில் ஒரு (விருப்ப) மொழியாக ஏற்று நடத்தப் படுகிறது?
//

தமிழ்நாட்டுப்பள்ளிகளில் கூட தமிழ் பேசினால் அபராதம் செலுத்தும் நிலை இருக்கு !
:(

//இங்கு யாரும் விரும்பிப் படிப்பவர்களை படிக்கக் கூடாது என்று வீடு புகுந்து தாக்கியதாக நிலமை இல்லையே. பிற மொழிகளின் செழுமை அறிய விரும்பிப் படிப்பவர்கள் கண்டிப்பாக காலம் தேறும் தேன்றியே வருவார்கள்.//

மிகச் சரி, விரும்பி படிப்பவர்களை யார் தடுக்க முடியும். தடுப்பதற்கும் எவருக்கும் உரிமை இல்லை

//மொழி பேணல் என்பது என்னுடைய பார்வையில் ஒரு உயிரின பன் முகத் தன்மை பேணலுக்கு (conservation of bio-diversity) நிகரே என்பேன்.//

சரிதான்.

//கோவி, மிக நேர்த்தியாக அதனை விளக்க முற்பட்டுள்ளீர்கள்./

நன்றி !

//ஆமா, தெரியாமத்தான் கேக்கிறேன், உத்ரபிரதேசத்தில் யாராவது ஒருவர் தமிழில் இவ்வளவு செழுமை உள்ளது, நமது மாணக்கர்கள் தமிழை அறிந்து கொள்ள வேண்டுமென்று அங்கு கொடி பிடித்திருக்கிறார்களா, வரலாற்றில் அல்லது அண்மைய கால கட்டத்தில்?
//

மாயாவதி அம்மையாரிடம் வேண்டுகோள் வைப்போமா ?
:)

RATHNESH சொன்னது…

கோவி.கண்ணன் அவர்களின் பதிவுகளின் ஜொலிப்புக்கு அவருடைய 24 காரட் தனித் தமிழ் ஒரு காரணம் என்பதில் மறுகருத்து இருக்காது என்று நம்புகிறேன்.

சிலருக்கு கொஞ்சம் "செம்பு" கலந்த 22 காரட்டில் நகை நல்லபடியாக செய்ய வருமோ என்னவோ!

14 காரட் அளவுக்கும் கீழே "செம்பு" கலக்கும் போது பல்லிளித்து விடத் தானே செய்யும்?

ஆனால், கோவி.கண்ணன், ஒன்று புரியவில்லை.

//அளவில் மிக்கவையாக பிறமொழிச் சொற்களை தேவைக்கேற்ப ஏற்றுக் கொண்ட மொழி வளருமா ? யார் சொன்னது இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளின் சொற்களை தன்னிடத்தில் ஏற்றுக் கொண்டுள்ளது நரிகுறவர் பேசும் மொழி, அதன் வளர்ச்சி பற்றி எதாவது தகவல் உண்டா ? அந்த குழுவைத் தாண்டி யார் அந்த மொழியை புரிந்து கொள்கிறார்கள்.//

இதனை என்ன வாதம் என்று வைக்கிறீர்கள், என்னவோ தூய தமிழ் பேசினால் தமிழ் வளர்ந்து மற்ற மாநில எல்லா குழுக்களுக்கும் புரிந்து விடுவது மாதிரி?

இன்னும் ஒரு வேண்டுகோள்: தமிழ் வார்த்தைகளில் பிற மொழிக் கலப்பினைக் கூடிய வரை தவிர்க்க இவ்வளவு மெனக்கிடும் உங்களைப் போன்றோர், தட்டச்சு தமிழில் ஏற்படும் பிழைகளை மீண்டும் படித்துப் பார்த்துத் திருத்தி பிழை இல்லாமல் மட்டுமே வெளியிடுவது என்று ஏன் பிரயத்தனப்படுவதில்லை?

அவசரம்? அதேதான் பிறமொழிக் கலப்பினருக்குமான சமாதானம், பல சமயங்களில். பொதுக் காரணம் அலட்சியம் மட்டுமே, ஆளுக்கு ஒரு கோணத்தில்.

உங்களுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை, முரசொலி பத்திரிகையில் பலஆண்டுகாலம் பணியாற்றிய என் உறவினர் ஒருவர் சொல்லக் கேட்டிருக்கிறேன், முரசொலியில் ஒரு சந்திப்பிழை கூட அச்சில் வருவதைக் கருணாநிதி ஏற்றுக் கொண்டது கிடையாதாம் 1989 வரை. அச்சான முதல் பிரதி அவரிடம் போய், அவர் படித்துப் பார்த்து இரண்டு மணி இரவில் கூடப் பிழை திருத்த வைத்திருக்கிறாராம். இன்று பிழை விஷயத்தில் கொஞ்சம் தரம் இறங்கி இருந்தாலும் மற்ற பத்திரிகைகளின் ஒப்பீட்டில் முரசொலி தனிச் சிறப்புடன் நிற்பதற்கு அதுவும் ஒரு காரணம்.

பூங்குழலி சொன்னது…

கட்டுரை அருமை....

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வாழ்த்துக்கள் கோவி!

வந்தியதேவன் அவர்களுக்கு,
//
1. மொழி கருத்துப் பரிமாற்றத்தை தாண்டிய விஷயம் என்று ஏன் கருதுகிறீர்கள்? இதனால் கலையின் வளர்ச்சி ஏதேனும் தடைபட்டு விடும் என்கிறீர்களா?
//

நிச்சயமாக மொழி என்பது வெறும் கருத்து பரிமாற்ற ஊடகமல்ல, அது அந்தந்த சமூகத்தின் பரிணாம வளர்ச்சி, அறிவு சுற்றுபாதை இன்னும்பிற காரணிகளை பிரதிபலிக்கும்...
இது தொடர்பாக நான் எழுத தொடங்கிய பதிவுகள்...

http://pktpariarasu.blogspot.com/2007/12/blog-post_18.html

http://pktpariarasu.blogspot.com/2007/12/2_18.html

//
2. ஆங்கிலமும் கட்டயாமாக திணிக்கப்பட்ட மொழி தான். இதனால் தமிழ் அழிந்து விட்டதா? உலகம் முழுவதும் தொடர்பு கொள்ள பல துறைகளில் ஆங்கிலம் தான் பயன்படுகிறது. பல நாடுகளில் இது இரண்டாம் மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அது போல நம் நாட்டு மக்கள் அனைவரும் ஒரு மொழியை பேசுவது தேசிய ஒருமைபாட்டை வளர்க்கும் என்று நினைக்கிறேன். சரி, அவ்வாறு தேசிய மொழியாக ஒன்றை பேசுவது நம் தாய் மொழியின் பயன்பாட்டை சுருக்கி விடும் என்று நீங்கள் சொல்வது உண்மை என்றே வைத்துக் கொள்வோம். அப்படி இருந்தாலும் நாட்டுப் பற்றை விட மொழிப் பற்று சிறந்ததா? ( திட்டாதீர்கள் - இது அறி வினா அல்ல, அறியா வினா தான்!). மொழியின் அடிப்படையில் இனம் கண்டு சண்டை இடுவது நடக்காதல்லவா?
//

தமிழும் பிற மொழி சொற்களை உள்வாங்கியே வளர்கிறது. சிலசமயங்களில் சரியான தமிழ்ச்சொற்கள் இருக்கும் போது வலிந்து வடமொழிச்சொற்களை பயன்படுத்தும் அரசியலை எதிர்க்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது!.

தேசியம் (நாடு) என்பது நிலையான அமைப்பல்ல, அது மாறிக்கொண்டேயிருக்கும்... சமூகம் தனக்கான தேவைகளை தேடி ஓடிக்கொண்டிருக்கிறது... அதை நிறைவு செய்யாத தேசியத்தை உடைத்து நொறுக்கி விட்டு புதிய தேசியம்(நாடு) என்கிற பாதையில் பயணிக்கும்... (எ.கா ருஷ்யா, கொசோவா, ஜெர்மன்..) அரசியல் காரணங்களுக்காக ஏற்ப்படுத்தப்படும் தேசியங்களுக்காக ஒவ்வொரு சமூகமும் தனது சுயதன்மையை இழப்பது தேவையற்றது.

மெல்ல,மெல்ல மனித இனம் வளர்ச்சியை காண்கிற போது நாடுகள்(தேசியங்கள்) சிதைந்து, எல்லைக்கோடுகள், இராணுவம் போன்றவை இல்லாதொழியும் (தற்பொழுது 30க்கு மேற்ப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் இராணுவம் என்கிற அமைப்பு கிடையாது, அந்த மக்களுக்கு எல்லைகோடுகள் தடையாக இருப்பதில்லை...)

ஆனால் அதே நேரத்தில் மொழி என்பது புதிய பரிணாமம் அடைந்திருக்கும், மாற்றாக ஆளுமையை அனுமதிக்கும் மொழிகள் இல்லாதொழிக்கப்படும்.

1947க்கு முன்பு இந்தியாவில் அதிக மக்களால் பேசப்பட்ட மொழி பெங்காலி, அது எப்படி இந்தி அதிக மக்களால் பேசப்படும் மொழியாக மாறியது என்பதை... தயவு செய்து அறிந்துக்கொள்ளுங்கள்...

கோவி.கண்ணன் சொன்னது…

//
RATHNESH said...
கோவி.கண்ணன் அவர்களின் பதிவுகளின் ஜொலிப்புக்கு அவருடைய 24 காரட் தனித் தமிழ் ஒரு காரணம்

என்பதில் மறுகருத்து இருக்காது என்று நம்புகிறேன்.

சிலருக்கு கொஞ்சம் "செம்பு" கலந்த 22 காரட்டில் நகை நல்லபடியாக செய்ய வருமோ என்னவோ!//

ரத்னேஷ் அண்ணா,

பராட்டுக்கு நன்றி, எனது தொடக்கால பதிவுகளில் நான் இவ்வளவு எளிதாக கையாளவில்லை. செந்தமிழும் நா பழக்கம் :)

ஆங்கிலம் தெரிந்தவர்கள் எல்லோருமே இலக்கண தூய்மையாக, சரியான சொல்லைப் பயன்படுத்தி எழுதுவார்கள் என்று சொல்ல முடியாது. எந்த மொழி பேசுபவர்களுக்கும் இது பொருந்தும்தான். பயன்பாட்டிலேயே இருவேறு மொழிச்சொற்களை ஒரே கட்டுரையில் ஒரே பொருள்குறித்தெழுத பயன்படுத்துவதைத் தவிர்கலாம். 'உபயோகத்தை' பயன்படுத்துவது சரியா ? போன்றவை சரிசெய்யலாம். இவையும் பழக்கத்தினாலேயே சரிசெய்ய முடியும், ஒரே நாளில் மாற்றிவிட முடியாது. எனது இடுகைகளை வாசிப்பவர்களுக்கு பயன் தரும் என்ற எண்ணத்தில், எனது இடுகைகளில் மிக்கவையாக புழக்கத்தில் இருக்கும் வடசொல்லுக்கு மாற்றாக அதே பொருளிலான புழக்கத்தில் இருக்கும் தமிழ்சொல்லையே பயன்படுத்துகிறேன். இவை இரண்டும் ஒன்றே என்று காட்டுவதற்காக வடசொல்லை அடைப்புக்குறிக்குள் போட்டு எழுதுகிறேன்.


//14 காரட் அளவுக்கும் கீழே "செம்பு" கலக்கும் போது பல்லிளித்து விடத் தானே செய்யும்?//

14 காரட் செம்புகள் பல்லிளிக்குமா ? ஒரு தனி மொழியாகவே மாறிவிடும். திராவிட மொழிகள் தமிழ் வடமொழி கலப்பு மற்றும் அந்த வட்டார வழக்கு ஆகியவற்றின் விழுக்காடு அளவு வேறுபட்டே தனித்தனி மொழியாக மாறி இருக்கின்றன. தற்காலத்தில் புதிய மொழியாக்கம் அவ்வளவு இயற்கையாக அமைந்துவிடாது. அதற்குமாறாக மொழியில் தூய்மையையே கெடுத்துவிடும், என்பதால் மொழிக்கலப்பை தவிர்ப்பதும், களைவதும் தேவைமிக்கது

//ஆனால், கோவி.கண்ணன், ஒன்று புரியவில்லை.

இதனை என்ன வாதம் என்று வைக்கிறீர்கள், என்னவோ தூய தமிழ் பேசினால் தமிழ் வளர்ந்து மற்ற மாநில

எல்லா குழுக்களுக்கும் புரிந்து விடுவது மாதிரி?//

பிறமாநில மக்களிடம் தமிழை எடுத்துச் செல்லவேண்டும் என்று நான் எங்கும் சொல்லவில்லை, நமக்குறியவற்றை காப்பாற்றுவதற்கு அக்கறை கொண்டாலே போதும். தூய்மையாக பேசுவதில் என்ன தவறு இருக்க வேண்டும், ஏன் தூய்மை கெட்டாலும் அதன் போக்கில் விடுவதே சரி என்கிறீர்கள் புரியவில்லை. தாம் தமிழன் என்பதை விட 'இந்தி'யன் என்பதில் பெருமை கொள்வதால் ? தமிழ் வளர்ச்சி என்ற சொல் குறித்து அடுத்த இடுகையில் முடிந்த அளவுக்கு உங்களுக்கான மறுமொழியில் சொல்லி இருக்கிறேன்.

//இன்னும் ஒரு வேண்டுகோள்: தமிழ் வார்த்தைகளில் பிற மொழிக் கலப்பினைக் கூடிய வரை தவிர்க்க இவ்வளவு

மெனக்கிடும் உங்களைப் போன்றோர், தட்டச்சு தமிழில் ஏற்படும் பிழைகளை மீண்டும் படித்துப் பார்த்துத் திருத்தி

பிழை இல்லாமல் மட்டுமே வெளியிடுவது என்று ஏன் பிரயத்தனப்படுவதில்லை?

அவசரம்? அதேதான் பிறமொழிக் கலப்பினருக்குமான சமாதானம், பல சமயங்களில். பொதுக் காரணம்

அலட்சியம் மட்டுமே, ஆளுக்கு ஒரு கோணத்தில்.
//

தட்டச்சு பிழை கவனக்குறைவினால் வருவதுதான், இது போன்ற பிழைகள் பிறர் கண்ணுக்கு உடனடியாக தெரிந்துவிடும் ஒப்புக்கொள்கிறேன். முன்பு எனக்கு பிழை திருத்தி தருபவர், இதுபோன்ற இடுபொருள்களில் விருப்பம் கொள்ளாதவர் என்பதால் அவரை தொல்லைபடுத்த விரும்பவில்லை. முடிந்த அளவில் திருத்தி இருக்கிறேன். எழுத்துப்பிழைக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். எழுத்துப்பிழை இடு பொருளின் செய்தியின் தன்மையை மாற்றாது என்றும் நம்புகிறேன். என்னுடைய கவனக்குறைவு தமிழ் மென்பொருளில் பிழைத்திருத்தி இருந்தால் சரி செய்துவிடலாம். ஆங்கிலம் நன்கு தெரிந்தவர்களுக்கும் எழுதும் போது எழுத்துபிழை சருக்கல் உண்டு. அது பொதுவானது. நீங்கள் சொல்லும் பிறமொழிக்கலப்பை சரி செய்ய சொல் அகராதி வேண்டும், அதையும் ஆர்வத்துடன் பயன்படுத்தி மாற்றிக் கொண்டால் தான் சரிசெய்யவே முடியும்

//உங்களுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை, முரசொலி பத்திரிகையில் பலஆண்டுகாலம் பணியாற்றிய என்

உறவினர் ஒருவர் சொல்லக் கேட்டிருக்கிறேன், முரசொலியில் ஒரு சந்திப்பிழை கூட அச்சில் வருவதைக்

கருணாநிதி ஏற்றுக் கொண்டது கிடையாதாம் 1989 வரை. அச்சான முதல் பிரதி அவரிடம் போய், அவர் படித்துப்

பார்த்து இரண்டு மணி இரவில் கூடப் பிழை திருத்த வைத்திருக்கிறாராம். இன்று பிழை விஷயத்தில் கொஞ்சம்

தரம் இறங்கி இருந்தாலும் மற்ற பத்திரிகைகளின் ஒப்பீட்டில் முரசொலி தனிச் சிறப்புடன் நிற்பதற்கு அதுவும் ஒரு

காரணம்.//

தகவலுக்கு முதலில் நன்றி, முரசொலி செய்தி இதழ் அதன் தமிழ்தரத்துக்காக மட்டுமே வாசிப்பவர்கள் எவரும் இருக்கிறார்களா என்று எனக்கு தெரியவில்லை. எழுத்துப்பிழை கவனக்குறைவால் வரும் தவறுதான் ஒப்புக் கொள்கிறேன். நான் தமிழறிஞன் இல்லை. தாய்மொழி என்பதால் அதன் மேம்பாடு குறித்த ஆர்வலன் மட்டுமே.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
அதிக சிரத்தை எடுத்து பதிவு செய்திருக்கிறீர்கள். நல்ல பதிவு! வாழ்த்துக்கள்!!

அன்புடன்,
ஜோதிபாரதி.
//

ஜோதிபாரதி பாராட்டுக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//பூங்குழலி said...
கட்டுரை அருமை....

1:34 AM, April 09, 2008
//

பூங்குழலி நன்றி !

தமிழ் சொன்னது…

அருமையான கட்டுரை

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்