பின்பற்றுபவர்கள்

29 ஏப்ரல், 2008

விவேகாநந்தரின் (சிதைந்த) நம்பிக்கை !

சிக்காகோ சொற்பொழிவின் போது சுவாமி விவேகாநந்தர் ஆற்றிய சொற்பொழிவுகளில் முதன்மையாக கருத்தப்படுவது, இந்து மதத்தில் உள்ள உருவ வழிபாட்டை தற்காத்து பேசியதுதான், அந்த குறிப்பிட்ட பேச்சின் பிறகு இந்து மதத்தின் மீது சொல்லப்பட்ட பலதெய்வ வணக்கம் கீழானது என்று சொல்லும் கிறித்துவர்களின் பார்வை ஓரளவுக்கு மாறியது என்றே சொல்லலாம். கிறித்துவத்தின் பெந்தகொஸ்தே பிரிவைவிட கத்தோலிக்கம் இந்தியாவில் பரவியதற்கு பலதெய்வ வழிபாடு இந்தியாவில் இருந்ததும் ஒரு காரணம், ஆரோக்கிய மாதா, அந்தோனியார்..... இன்னும் எத்தனையோ பெயர்களில் கிறித்துவ மத பைபிளில் உள்ள ஏசு தூதர்களெல்லாம், செயின் தாமாஸ் வரை இந்தியாவில் கடவுளாக மாற்றி வழிபட்டதெற்கெல்லாம் இந்து மதத்தில் இருந்த பலதெய்வ வழிபாடும் காரணம்.

ஒற்றை தெய்வ வணக்கம் (ஓரிறைக் கொள்கை) என்று சொல்லப்படும் இஸ்லாம் மதத்திலும் வாகபி பிரிவைவிட தர்காக்கள் அமைத்து வழிபடும் சூஃபி பிரிவே வேகமாக பரவியது. தர்காக்கள் இருக்கும் இடமெல்லாம் சூஃபி ஞானிகளின் நினைவிடம் தான். இன்று இந்திய இஸ்லாமியர்களிடம் உள்ள பெரும் பிரச்சனையே, வகாபி இசமா ? சூஃபி இசமா எதிர்காலத்தில் எதில் செல்வது என்பதுதான், இதற்கான கீழறுப்பு வேலைகள் இஸ்லாம் மதத்துக்குள்ளும் நடைபெறுகிறது. 'தான் இந்தமதத்தைச் சார்ந்தவன்' என்று மட்டுமே தெரிந்து, அந்த மதத்தைப் பற்றி அறியாதவர் எவரும் தனது மதத்தில் வணக்கத்துக்கு உரியது எது என்றோ ? வணங்கத்தக்கது எவை இல்லை ? என்றோ பெரிதாக அலட்டிக் கொள்வது இல்லை. மத வியாபரத்தில் மக்கள் தொகை கணக்கு காட்ட ஒரு எண்ணிக்கையாகத்தான் அறியாதவர்கள் இருப்பார்கள்.

சொல்ல வந்தது அதுவல்ல,

சரியாக 115 ஆண்டுகளுக்கு முன் சுவாமிஜி சிகாகோவில் பேசியதில் இந்து மதத்தைத் தற்காத்துப் பேசியதில் ஒருபகுதியில் இருந்த ஒருவரி என்னை மிகவும் வியப்படைய வைத்தது, "ஒன்று நான் சொல்லவேண்டும். இந்தியாவில் உருவ வழிபாடு என்பது பயங்கரமான ஒன்றல்ல. விலை மகளிரை உருவாக்கும் இடமும் அல்ல. உயர்ந்த ஆன்மீக உண்மைகளைப் புரிந்து கொள்வதற்கு, பக்குவப் படாதவர்களின் முயற்சி தான் உருவ வழிபாடு. இந்துக்களிடம் தவறுகள் உண்டு, சில வேளைகளில் விதி விலக்குகளும் உண்டு. ஆனால் ஒன்றைக் கவனியுங்கள். அவர்கள் தங்கள் உடல்களை வருத்திக் கொள்வார்களே தவிர, அடுத்தவனின் கழுத்தை அறுக்க மாட்டார்கள், இந்து மதவெறியன் தன்னை தீயில் கொளுத்திக் கொள்வானேயன்றி பிறரையல்ல. சூனியக்காரிகள் கொளுத்தப்பட்டதற்கு எப்படிக் கிறிஸ்தவ மதம் பொறுப்பில்லையோ, அதே போன்று இதற்கு இந்து மதம் பொறுப்பல்ல. "

விவேகாநந்தர் வாழ்ந்த காலத்தில் இந்துமதம் என்ற பெயர் இருந்தது, அது இந்துத்துவ வாதிகளின் ஒருங்கிணைப்பாக இருக்க வில்லை. அப்படி இருந்திருந்தால் பார்பனர்களின் தலைமையில் "ஆரிய சமாஜ்" என்று தனிப்பிரிவு ஏன் தனியாக இயங்கி இருக்க வேண்டும் ? இந்திய தத்துவங்கள் வெறும் ஏட்டுப் பொருள் அல்ல, என்று சொல்வதற்காக விவேகாநந்தர் இந்துமதம் பற்றி பல்வேறு வகையில் தற்காப்பு நோக்கில் விளக்கிப் பேசினார். அதில் ஒன்று தான் மேலே சொல்லி இருக்கும் "இந்து மதவெறியன் தன்னை தீயில் கொளுத்திக் கொள்வானேயன்றி பிறரையல்ல" என்பது மேலும் படிக்க...

"ஒரிசாவில் பாதிரியார் அவரது இருமகன்களோடு எரிக்கப்பட்டதும், கோத்ரா ரயில் எரிப்பின் மூலம் ஆயிரக்கணக்கில் முஸ்லிம்களைக் இந்து மதவெறியன்களால் கொல்லப்படுவதும்" அவர் மறைந்த 80 ஆண்டுகளுக்கு பிறகு அரங்கேற்றப்படும் என்று சுவாமிஜி அறிந்திருக்க வாய்ப்பில்லை.

இந்துமதத்தின் மீது நம்பிக்கை வைத்து தற்காத்து பேசிய சுவாமிஜியின் சமாதியில் கரியைப் பூசிய இந்துத்துவாக்கள் வெட்கமில்லாமல், இளைஞர்களை கவருவதற்காக அவரது படத்தைப் போட்டு பிழைப்பு நடத்துகிறார்கள்.

விவேகாநந்தர் என்றாலே இஸ்லாமியர்கள் முகம் சுழிப்பதற்கு காரணமே அவரை தங்களது முன்னோடியாக (ஐடல்) இந்துத்துவ வெறியர்கள் பயன்படுத்துவதால் தான். விவேகாநந்தரே ஆர்எஸ்எஸ் இயக்கத்தை ஆரம்பித்து வைத்து போன்ற ஒரு தவறான தோற்றம் உருவாக்கப்பட்டுவிட்டது. இதனை தடுக்காவிட்டால் சுவாமிஜி மற்றும் இராமகிருஷ்ணர் ஆகியோரின் சிந்தனைகளெல்லாம் தேவையானவர்களுக்கு சேராமல் பாழ்பட்டுவிடும். இராமகிருஷ்ண மடத்தில் பொறுப்பில் உள்ளவர்கள், சுவாமி விவேகாநந்தரை இந்துவெறியர்கள் முன்னிலைப்படுத்துவதை தடுத்தால் மட்டுமே எதிர்கால இளைஞர்களுக்கு விவேகாநந்தரின் போதனைகள் சென்று சேரும். இல்லை என்றால் சுவாமி விவேகாநந்தர் காவிக் கூட்டத்தின் தலைவன் என்றே மற்ற இந்துக்களும் நினைக்க ஆரம்பித்துவிடுவார்கள். புத்தர் பெயரை சிங்கள வெறியர்கள் கெடுப்பது போன்றே, விவேகாநத்தரின் பெயரை இந்துத்துவா வெறியர்கள் கெடுத்துவருகிறார்கள்.

விவேகாநந்தர் இந்துவெறியர்கள் மீது வைத்த நம்பிக்கை எப்போதோ தகர்ந்துவிட்டது, விவேகாந்தரின் மற்ற சிந்தனைகளை இளைஞர்களிடம் சேர்க்க வேண்டியது உண்மையான இந்துமத நம்பிக்கையாளர்களின் கையில் தான் உள்ளது. இல்லை என்றால் விவேகாநந்தரின் 'விழுமின் எழுமின்' என்பதற்கு பதிலாக 'காவிக் கூட்டத்தின் முன் மண்டியிட்டு தொழுமின்' என்ற நிலையை இந்துக்கள் அடைந்து, வருணாசிரம கோட்பாடுகள் நிறைந்த கற்காலத்திற்குச் அப்பாவி இந்துக்கள் சென்றுவிடுவார்கள்

20 கருத்துகள்:

ஜோ/Joe சொன்னது…

//ஆரோக்கிய மாதா, அந்தோனியார்..... இன்னும் எத்தனையோ பெயர்களில் கிறித்துவ மத பைபிளில் உள்ள ஏசு தூதர்களெல்லாம், செயின் தாமாஸ் வரை இந்தியாவில் கடவுளாக மாற்றி வழிபட்டதெற்கெல்லாம் //
முதலில் அந்தோணியாரெல்லாம் பைபிளில் கிடையாது .மாதா ஏசுவின் அன்னை ,புனித தாமஸ் ஏசுவின் சீடர்களில் ஒருவர் என்பதால் பைபிளில் இருக்கிறது ..அன்னை மரியாள் ,இயேசுவின் 11 சீடர்கள் ,புனித பவுல் தவிர வேறு எந்த புனிதர்களும் பைபிளில் கிடையாது .அவர்கள் பின்னர் வாழ்ந்து திருச்சபையால் புனிதராக அறிவிக்கப்பட்டவர்கள் .இந்த ஆண்டு கூட கேரளாவை சேர்ந்த ஒருவர் புனிதராக அறிவிக்கப்பட்டுள்ளார் .அன்னை தெரசா இன்னும் முழுமையாக அறிவிக்கப்படுவதில்லை.

புனிதர்களை கடவுளாக மாற்றி வழிபடுவது அறியாமையால் ..அது கத்தோலிக்க திருச்சபையின் கோட்பாட்டுக்கு எதிரானது . எனினும் அது இந்தியாவில் மட்டும் நடந்ததாக கொள்ள முடியாது.

கோவி.கண்ணன் சொன்னது…

ஜோ,

உடனடி தகவல்களுக்கு நன்றி,

கத்தோலிக்க பிரிவில் முக்கியமாக வழிபடுவது யாரை ?

அதிலும் ஓரிறைக் கோட்பாடுதானா ?

ஏசுவை ஒப்புக் கொள்ளும் போது மரியாளை பெந்தகொஸ்தேகாரர்கள் ஏன் வழிபடுவது இல்லை ?

ஜோ/Joe சொன்னது…

//அதிலும் ஓரிறைக் கோட்பாடுதானா ?//

கத்தோலிக்கப்பிரிவும் ஓரிறை கோட்பாடு கொண்டது தான் .ஆனால் கடவுள் மூன்று மூலங்களில் இருக்கிறார் என்ற (trinity) தமதிரித்துவம் கோட்பாடாக உள்ளது . பிதா ,சுதன் ,பரிசுத்த ஆவி .. பரிசுத்த ஆவியின் பெயரால் தால் பெந்தகோஸ்தே பிரிவு இருக்கிறது. பிதா என்பது ஓரிறையைக் குறிக்கும் (யூதர்களின் கடவுளும் ,இஸ்லாமியர்கள் குறிப்பிடும் அல்லாவும் இது தான்) .சுதன் யேசுவைக் குறிக்கும் .பரிசுத்த ஆவி இறைவனின் இன்னொரு வடிவம்.

//ஏசுவை ஒப்புக் கொள்ளும் போது மரியாளை பெந்தகொஸ்தேகாரர்கள் ஏன் வழிபடுவது இல்லை //
மரியாளை யாரும் ஒப்புக்கொள்ளாமல் இல்லை .ஆனால் கத்தோலிக்கம் போல மற்ற சபைகளில் புனிதர்கள் என்ற வகையறா இல்லை . மற்றவர்கள் மரியாளை இயேசுவை பெற்ற ஒரு சாதாரண மனுஷி என்கிறார்கள் .அதற்கு மேல் மிக்கியத்துவம் இல்லை .கத்தோலிக்கத்தில் அதை தாண்டி மரியாள் ஒரு புனிதை .ஆக புனிதர்களுக்கு உள்ள முக்கியத்துவம் ,அதுவும் இயேசுவை பெற்றவள் என்பதால் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படும் .

ஆனால் கத்தோலிக்கத்திலும் வழிபாடு மூவொரு கடவுளுக்கு மட்டும் தான் .. மகிமையும் ஆராதனையும் இறைவன் ஒருவருக்கு தான் ,புனிதர்களுக்கு அல்ல என்று தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது.

மதா கோவிலாக இருந்தாலும் ,அந்தோணியார் கோவிலாக இருந்தாலும் அது இறைவனின் கோவில் தான் ..மாதா பெயரில் கட்டப்பட்ட இறைவனின் கோவில் என வைத்துக்கொள்ளலாம் ..மாதாக் கோவிலிலும் தினமும் நடக்கும் திருப்பலி இறைவனுக்கு தானே தவிர மாதாவுக்கு அல்ல ..மாதாவிடம் "மாதாவே ! எங்களுக்காக இறைவனிடம் மன்றாடும்" என்று தான் ஜெபிக்க முடியும் .

சிலர் அறியாமையால் மாதாவை கடவுளாக வழிபட்டால் அது அவர் தவறு .கத்தோலிக்கம் அப்படி சொல்லவில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

ஜோ,

மீண்டும் வந்து விரிவாக விளக்கியதற்கு மிக்க நன்றி. டிரினிட்டி கேள்விப்பட்டு இருக்கிறேன். "மாதாவிடம் சொல்லி இறைவனிடம் எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்" என்று இங்கு நீங்கள் எழுதி இருப்பது புதிய தகவல், இது எனக்கு தெரியாமல் இருந்தது.

மாதாவிடம் ஜெபம் செய்யும் போது, "அருள் நிறைந்த மரியே வாழ்க ! கர்தரால் முன்னே,
பெண்களில் ஆசிர்வதிக்கப்பட்டவளே, உன் திருவயிற்றில் பிறந்த ஏசுவும் ஆசிர்வதிக்கப்பட்டவரே" என்றும் சொல்லுவார்கள்

அந்தோனியார் பள்ளியில் +1, +2 படிக்கும் போது நாகையில் இருந்து வேளாங்கன்னிக்கு, பாதிரியார் நடைபயணமாக மாணவர்களை அழைத்துச் செல்வார், அப்போது வழிநெடுக மேற்கண்ட ஜபத்தைச் சொல்லிக் கொண்டு செல்வோம்.

ஜோ/Joe சொன்னது…

//"அருள் நிறைந்த மரியே வாழ்க ! கர்தரால் முன்னே,
பெண்களில் ஆசிர்வதிக்கப்பட்டவளே, உன் திருவயிற்றில் பிறந்த ஏசுவும் ஆசிர்வதிக்கப்பட்டவரே" //

இதற்கு பதிலுரையாக " அர்சீஷ்ட மரியாளே! சர்வேசுரனுடைய மாதாவே ..பாவிகளாயிருக்கிற எங்களுக்காக எப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும் ..ஆமென்" என்று சொல்லுவார்கள் ..அதை வைத்தே நீங்கள் புரிந்து கொள்ளலாம் ..மரியாள் இறைவனின் அன்புக்கு பார்த்திரமானவள் என்பதால் ,நமக்காக இறைவனிடம் மன்றாட நான் அவளை வேண்டுகிறோம் .அவ்வளவு தான் .

Thamizhan சொன்னது…

விவேகானந்தர் உண்மையிலேயே இந்தியா,இந்தியர் முன்னேற வேண்டும்,சாதிச் சனியன்கள் மூடப் பழக்கங்கள் ஒழிய வேண்டும்,
அனைவரையும் விழித்தெழுங்கள்,மேலோங்குங்கள்,
பெண்களே
படியுங்கள் என்று சொன்னார்.
அவர் உண்டாக்கிய ராமகிருஷ்ண மடங்களும் சேவைகள் புரிய வேண்டும் என்று உழைத்தார்.

இன்று அவரை ஒரு அடையாளமாக வைத்துக் கொண்டு பார்ப்பனீயமும்,இந்துத்வாவும் அவர் சொன்ன தீண்டாமை ஒழிப்பு,சாதி ஒழிப்பு,மூடப் பழக்கங்கள் ஒழிப்பு இவற்றையெல்லாம்
மறைத்து வருகின்றனர்.
இந்து மதம் பார்ப்பனர்களின் தனிச் சொத்தல்ல,அனைவரும் சண்டாளர்களும் எல்லோரும் படிக்க வேண்டும் என்றாரே!

இதையெல்லாம் சொன்னால் மேல்தாவிகள் நம்க்கு ஒன்றும் தெரியாமல் உளறுகிறோம் என்று சொல்கிறார்கள்.அப்பா ,எல்லாம் தெரிந்ததாகக் கூறிக் கொண்டு நீங்கள் உளறிய காலமெல்லாம் மலையேறி
விட்டது.ஒன்று உண்மையைச் சொல்லுங்கள் அல்லது விவேகானந்தரை உங்கள் பார்ப்பனீய இந்துத்துவாவின் சினிமா நடிகர் ஆக்காதீர்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோ / Joe said...


இதற்கு பதிலுரையாக " அர்சீஷ்ட மரியாளே! சர்வேசுரனுடைய மாதாவே ..பாவிகளாயிருக்கிற எங்களுக்காக எப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும் ..ஆமென்"
//

ஜோ,

நீங்கள் சொல்வது நினைவுக்கு வந்துவிட்டது. நினைவு படுத்திவிட்டீர்கள். மிக்க நன்றி!

Me சொன்னது…

நானறிந்தவரையில் சூஃபியிஸத்தில் மனிதர்களை தொழும் பழக்கம் இல்லை. கடவுளை அடைய ஒரு குருவைப் நாடுகிறார்கள். பீர் எனப்படும் குரு மரித்தப் பிறகு அவரது முரீத் எனப்படும் சீடர்கள், தங்கள் குரு இறந்தப் பிறகும் தங்களது குருமார்கள் தங்களை வழி நடத்துகிறார்கள் என்று நம்பிக்கைக் கொண்டு ஜியாரத் ஃபாத்தியா எல்லாம் நடத்தி அவருக்கு சந்தனக் கூடு விழா எடுக்கிறார்கள். இதைத்தான் மனிதர்களை (பீர்) இறைவனுக்கு இணை வைக்கிறார்கள் என்று வகாபிய‌ மதவாதிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.

இது பள்ளிவாசல்களில் இமாமை பின்பற்றித் தொழுவதுப் போன்றதுதான். குர் ஆனை ஒருவரை மனப்பாடம் செய்திருந்தாலும் பள்ளிவாசல் என்று வந்துவிட்டால் இமாமை பின்பற்றியே ஆகவேண்டும். இதையேதான் சூஃபிகள் தங்களை குருமார்களை இமாமாக கருதி அவரது தர்காகளில் அவரை இமாமாகக் கொண்டு இறைவனைத் தொழுகிறார்கள். இது மனிதர்களைத் தொழுகிறார்கள் என திரித்துக் கூறப்படுகிறது.இந்துத்துவாவை வெறித்தனமாக பின்பற்றும் வேதாந்திகளைப் போன்றவர்கள்தான் வகாபிகள்.

வகாபிகளிடம் மத நல்லிணக்கத்தை எதிர்ப்பார்க்க முடியாது. அதற்கு சான்று காஜா மொய்னுதீன் என்கிற சூஃபி ஞானியைப் குருவாக பின்பற்றிய முகலாய மன்னர் அக்பர் மதநல்லிணக்கத்தை பேணினார். ஆனால் வகாபியான அவரது பேரன் அவுரங்கசீப் மதவாதியாக இருந்தார்.

TBCD சொன்னது…

இயேசுவே கடவுள் கிடையாது என்றும் சொல்லுவார்கள். அவரும் கடவுளின் அன்பிற்கு பாத்திரமானவர் என்றும், தேவனின் குமாரன் என்பதாலே தான் அவருக்கு முக்கியத்துவம். ஆனால், இன்று இயேசு கிறிஸ்து கடவுளாகத் தானே பார்க்கப்படுகிறார்.

புதசெவி :)

கோவி.கண்ணன் சொன்னது…

//Thamizhan said...
விவேகானந்தர் உண்மையிலேயே இந்தியா,இந்தியர் முன்னேற வேண்டும்,சாதிச் சனியன்கள்
...........நீங்கள் உளறிய காலமெல்லாம் மலையேறி
விட்டது.ஒன்று உண்மையைச் சொல்லுங்கள் அல்லது விவேகானந்தரை உங்கள் பார்ப்பனீய இந்துத்துவாவின் சினிமா நடிகர் ஆக்காதீர்கள்.

11:51 AM, April 29, 2008
//

தமிழன் ஐயா,

சரியான 'சுத்தி'யடி பின்னூட்டம்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
இயேசுவே கடவுள் கிடையாது என்றும் சொல்லுவார்கள். அவரும் கடவுளின் அன்பிற்கு பாத்திரமானவர் என்றும், தேவனின் குமாரன் என்பதாலே தான் அவருக்கு முக்கியத்துவம். ஆனால், இன்று இயேசு கிறிஸ்து கடவுளாகத் தானே பார்க்கப்படுகிறார்.

புதசெவி :)
//

டிபிசிடி அய்யர்,

பிதாவின் மகன் (சுதன்) என்பதால் ஏசுவும் கடவுள் ஆகிறார், இதைதான் திரித்துவம் (Trinity) என்று சொல்வார்கள். மேலே நண்பர் ஜோ விளக்கி உள்ளார் பாருங்கள், மரியாள் ஏசுவைப் பெற்று எடுத்த ஒரு கருவி மட்டுமே என்பதால் அவள் புனிதர் என்ற நிலையில் இருக்கிறார்.

கோவி.கண்ணன் சொன்னது…

//உறையூர்காரன் said...
நானறிந்தவரையில் சூஃபியிஸத்தில் மனிதர்களை தொழும் பழக்கம் இல்லை. கடவுளை அடைய ஒரு குருவைப் நாடுகிறார்கள். பீர் எனப்படும் குரு மரித்தப் பிறகு அவரது முரீத் எனப்படும் ...
//

உறையூரார் அவர்களே,

வகாபியிசம், சூஃபி இசம் பற்றி நல்ல சான்றுகளுடன் தகவல்கள் தந்துள்ளீர்கள்.

மிக்க நன்றி.

nagoreismail சொன்னது…

"..தர்காக்கள் அமைத்து வழிபடும் சூஃபி பிரிவே வேகமாக பரவியது.."

தர்காக்கள் என்பது வழிபாட்டு தளங்கள் அல்ல - தர்கா என்பது ஒரு அடக்கஸ்தலம் - எந்த முஸ்லீமும் அடக்கஸ்தலத்திற்கு முன்னால் நின்று தொழுகை நடத்துவதை யாரும் பார்த்திருக்க முடியாது. நான் தர்காவிற்கு செல்பவன் தான். நான் இணைவைக்கவில்லை என்று அல்லாஹ்வே வந்து சொன்னாலும் குரானில் ஆதாரம் காட்டுவார்கள் வகாபிகள் எனப்படும் ஆதார புருஷர்கள். அவர்களை பற்றிய பேச்சு வேண்டாம். சூஃபியிசம் எந்த காலத்திலும் பல தெய்வ வழிபாட்டை ஒத்துக் கொள்ளாது. அதே சமயத்தில் இறைவனை பற்றிய கொள்கை இஸ்லாத்திற்கு ஏற்புடையதாக இருக்குமானால் எந்த மனிதரையும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வழிகாட்டுதலே சூஃபியிசத்தில் உள்ளது.

சுவாமிஜி மட்டுமல்ல வேறு எவருமே பல தெய்வ வழிபாட்டையோ உருவ வழிபாட்டையோ ஆதரித்து பேசுவதிலோ எழுதுவதிலோ எந்த ஒரு முஸ்லீமுக்கும் பாதகம் இல்லை. எப்படியும் வழிபட்டுக் கொள்ளுங்கள். அதற்காக ஏன் வெறுப்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது தான் எங்கள் கவலை. ஏன் அடித்துக் கொள்ள வேண்டும்?, ஏன் ஒருவருக்கொருவர் சாடிக் கொள்ள வேண்டும்?, சாகடித்துக் கொள்ள வேண்டும்?

கோவி.கண்ணன் சொன்னது…

//nagoreismail said...
"..தர்காக்கள் அமைத்து வழிபடும் சூஃபி பிரிவே வேகமாக பரவியது.."

தர்காக்கள் என்பது வழிபாட்டு தளங்கள் அல்ல - தர்கா என்பது ஒரு அடக்கஸ்தலம் - எந்த முஸ்லீமும்
...........//

இஸ்மாயில் ஐயா,

மிக நல்லக் கருத்துகள். மிக்க நன்றி !

கையேடு சொன்னது…

விவேகானந்தர், தமது வாழ்க்கைப் பயணத்தை ஆன்மீக வழியில் துவங்கியிருந்தாலும், அவர் ஒரு வேளை மூப்பெய்யும் பருவம் வரை வாழ்ந்திருந்தால், அவர் ஒரு சமுதாயச் சீர்திருத்தவாதியாகவே அறியப்பட்டிருப்பார் என்றும் கருத்துக்கள் உண்டு. மேலும், தமது இறுதிக் காலங்களில் அவருக்கும் இராமகிருட்டிணருக்கும் இடையேகூட கருத்து வேறுபாடுகள் நிரம்பக் காணப்பட்டதாகவும் குறிப்பிடுகின்றனர். (இதற்கான, தரவுகள் தற்போது கைவசம் இல்லை மன்னிக்கவும்)

Shahul Hameed Adanoorar சொன்னது…

வணக்கம்,
நாகூர் இஸ்மாயில் அய்யா சொன்னதை நானும் ஆமோதிக்கிறேன். மேலும் சூபிக்களின் வழிமுறைகள் வேறு ஆனாலும், அவர்களும் ஓரிறை கொள்கை கொண்டவர்களே. பொதுவாக முஸ்லிம்கள் எல்லோரும் ஓரிறையை வணங்குபவர்களே. பிரிவினைகள் எல்லாம் யாரை இறை துதராக ஏற்றுக்கொள்வது, வணக்க முறைகள் போன்றவைகளால் ஏற்படுவதே. சியாவாக இருந்தாலும் ஓரிறை கொள்கை கொண்டவர்களே. எங்கள் வேதத்தில் "அவரவர்கள் மார்க்கம், அவரவர்களுக்கு" (அதாவது எங்கள் மார்க்கம் எங்களுக்கு, உங்கள் மார்க்கம் உங்களுக்கு), என்று தெளிவாக உள்ளது. இதைக் கடைப்பிடித்தாலே ஒற்றுமை ஓங்கும்.

ஜமாலன் சொன்னது…

பதிவும் விவாதமும் அருமை.

ஆரோக்கியமான விவாதம்.

Shahul Hameed Adanoorar சொன்னது…

வணக்கம்,
உரையுறார் சொன்னதில் எனக்கு தெரிந்த சிலவற்றை சொல்ல நினைக்கிறேன். சூபிய் பற்றி சொன்னது ஏறக்குறைய சரி. ஆனால் மசூதியில் இமாம் பின்னால் நின்று தொழுதல், இரண்டும் ஒன்றல்ல. வேதத்தில் உள்ள சில அத்தியாயங்களை மனனம் செய்திருந்தாலே போதும் இமாமாக தொழ வைக்க. குரானை அனைவரும் முழுதாக மனனம் செய்வதில்லை. இதை முழுதாக மனப்பாடம் செய்து கல்லுரியில் விதிமுறைகளை பயின்றவரை முழு நேர இமாமாக வைக்கிறார்கள். அதனால் அவர் ஓத, அவர் பின்னால் நின்று தொழுவார்கள். நாட்டின் மன்னரே ஆனாலும், இமாமின் அல்லது தொழ வைப்பவரின் பின் நின்றுத்தான் தொழுவார்கள். இது இணையல்ல. அப்படிப்பார்த்தால், சில பள்ளிகளில் ஒவ்வொரு வேலைத் தொழுகையிலும் இமாம் அல்லது தொழ வைப்பவர் மாறுவார். எத்தனை பேரை இணைவைப்பது. ஒருவர் தனியாக தொழும்போது யாரை இணைவைக்கிறார் (தன்னையேவா?).

K.R.அதியமான் சொன்னது…

விவேகானந்தர், பார்பனீயத்தை கடுமையாக சாடினார். வைதீக பார்பனர்களை எதிர்த்தார். கேராளவின் ஜாதி கொடுமைகளை கண்டு மிக ஆத்திரம் அடைந்து, மலபாரில் சொற்பொழிவு நடத்த மறுத்து வெளியேரினார். பல வைதீக பார்பனர்களிடம், அவர்களின் உயர்வு மனப்பான்மையயை தாக்கி சரியான பதிலடி கொடுத்துள்ளார்...

தன்னம்பிக்கை, இறைநம்பிக்கையைவிட முக்கியமானது என்றார்.

By quoting selectively from his works, an anti-brahimist has been portaryed as an anti-muslim by Hindthuthva forces.

மலைநாடான் சொன்னது…

கோவி. கண்ணன்!

பல விடயங்கள் அறி்ந்து கொள்ள முடிந்தது. ஆரோக்கியமான உரையாடலுக்குப் பாராட்டுக்கள். நன்றி.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்