பின்பற்றுபவர்கள்

8 ஏப்ரல், 2008

திரு வந்தியத்தேவன் அவர்களுக்கு... (மட்டுமல்ல)

திரு வந்தியத்தேவன் அவர்கள், பின்னூட்டத்தில் அவரது கருத்தாக்கம் குறித்து மூன்று கேள்விகள் எழுப்பி இருந்தார், எனக்கு தெரிந்தவரையில் பதில் சொல்லி இருக்கிறேன். மறுமொழியாக போட்டால் நீளமாக இருக்கும் என்பதைத் தவிர்த்து இங்கு இடுகையாக்கி இருக்கிறேன்.

//1. மொழி கருத்துப் பரிமாற்றத்தை தாண்டிய விஷயம் என்று ஏன் கருதுகிறீர்கள்? இதனால் கலையின் வளர்ச்சி ஏதேனும் தடைபட்டு விடும் என்கிறீர்களா?
//

வந்தியத்தேவன் ஐயா,

இது கொஞ்சம் ஆழமான கேள்வி, மொழிவாரி மாநிலங்கள் இந்தியாவில் இருக்கிறது, எழுத்தையும் மொழியையும் தவிர என்ன வேறுபாடுகள் பெரிதாக இருக்க முடியும் என்று நினைப்பீர்கள் ? அநதந்த மாநிலத்திற்கென்றே அரிய கலைகள், மொழியுடன் கூடிய விழாக்கள் இருக்கின்றன, தமிழகத்தில் வில்லுப்பாட்டு, கிராமிய நடனங்கள், பொங்கல் விழா, பட்டிமன்றம் என்னும் ஏனையவை, கேரளாவிற்கு திருவோனம், குச்சிபுடி, கதக்களி என்னும் ஏனையவை, ஆந்திராவுக்கு தெலுங்கு கீர்த்தனைகள், தெலுங்கில் எழுதப்பட்ட இராமாயன மகாபாரத கதையாடல்கள், இது போன்று ஓவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி கலைகள் இருக்கின்றன, அதை உணர்வுடன் வெளிப்படுத்த அந்த மொழிகளில் மட்டுமே முடியும்.
தமிழில் 100க் கணக்கான கதாநாயகர்கள் இருந்தாலும் வட்டார வழக்கும் பேசும் வடிவேலு, கவுண்டமணி ஆகியோர் திரையில் தோன்றும் போதே மகிழவைக்கிறதே. எனென்றால் மண்ணின் மணத்தை அவர்களின் நடிப்பிலும், பேசும் வசனங்களிலும் பார்க்கிறோம்.

மிகச் சிறந்த பிறமொழி கலைப்படங்களை, கலைகளை பார்த்து மகிழ்கிறோம் ஆனால் நம்மொழியில் நம்மவர்கள் நமக்காக செய்யும், நம்மைச் சார்ந்த கலைச்செல்வங்களே நம் உணர்வுகளுக்குள் கலந்து நிற்கும், வேற்றுமொழியைச் சேர்ந்த ரஜினிகாந்த் தமிழ் பேசி நடிப்பதாலே அவரை நம்மவராக ஏற்றுக்கொண்டு போற்றுகிறார்கள். அவர் கன்னட மாநிலத்தில் நடித்துக் கொண்டிருந்தால் அவர் யார் என்றே நமக்குத் தெரியாமல் போய் இருக்கும். (அவர் போற்றப்படுவதற்கு அவருக்கு இருக்கும் தனித்திறமையும் மற்றொரு காரணம் தான்) மொழி வெறும் தொடர்பு சாதனமன்று நமது கலாச்சார பொக்கிசங்களை சேர்த்துவைத்துக் கொண்டு அதை தேவையானப்போது கொடுக்கும் கலைக் கருவூலம். நீங்கள் வெளிநாட்டில் 50 வருடங்கள் தொடர்ந்து வாழ்ந்தாலும் உங்கள் தாய்மொழியில் உள்ள ஒரு குப்பைத் திரைப்படம் என்றோ ஒருநாள் வந்தால் தேடிப்போய் பார்ப்பீர்கள்.

மூன்றுமணி நேரம் தொடர்ச்சியாக பேசிக் கொண்டே இருக்கிறார்கள் இதை மக்கள் எப்படித்தான் ரசிக்கிறார்களோ என்று சிங்கையில் நிகழ்ச்சி பாதுகாப்பில் இருந்த ஒரு சீனர் கேட்டார், அவருக்கு தெரியுமா ? அங்கு நடந்தது சாலமன் பாப்பையா தலைமையிலான சொற்பொழிவு அதில் பேசியவர்கள் சுகிசுவம், அப்துல்ஹமீது, வைரமுத்து மற்றும் கோ.சுவாமினாதன் போன்றவர்களும் அவர்களது பேச்சும் என்று. மூன்று மணிநேரம் சொற்பொழிவை, கவிதை வாசிப்பை, பட்டிமன்றத்தைக் கேட்கும் மக்கள் உலகில் இருக்கிறார்கள் என்றால் அது நம் தமிழர்கள் மட்டுமே. மற்றவர்களெல்லாம் இசைநிகழ்சி(ஆர்கெஸ்ட்ரா), பாப்பிசை போன்ற புதிய (நவீன) நிகழ்ச்சிகளுக்குத்தான் கூடுகிறார்கள். வடஇந்தியர்கள் உபன்யாசம் கேட்பார்கள். நமக்கும் அதுபோன்ற பிறவற்றில் நாட்டமிருந்தாலும் திரும்பவும் கூட்டிவருவது தாய்மொழியில் நடைபெறும் நிகழ்ச்சிகளே. மொழி அழிந்து போகும் போது நம்முன்னோர்கள் வாழ்ந்த அடையாளமும் மறைந்து போகும். பரவாயில்லை உலக நோக்கில் மனத இனம் எல்லாம் ஒன்று தான் என்று (யாதும் ஊரே யாவரும் கேளிர்) பெரும்தன்மையாகச் சொல்லிக் கொள்ளலாம், ஆனால் அதை ஏற்றுக் கொள்ளும் உலக இனக்குழுக்கள் எதுவும் இல்லை என்பது தான் உண்மை. யாதும் ஊரே யாவரும் கேளிர் - உலகம் தழுவிய பாசாங்கு எதுவும் இல்லை. ஏனென்றால்,

உலகில் இருக்கும் மனித இனங்கள் ஏற்கனவே ஐந்துவகை நிலப்பரப்பிற்கு ஏற்றவாறு முக அமைப்பும் நிறங்களும் கொண்டிருக்கிறது, நாம் மனதிற்குள் எல்லோரும் ஒன்றே என்று நினைத்தாலும் வெளியில் தெரியும் உருவமே எப்போதும் கன்ணுக்குத் தெரிபவை. இதன் காரணமாக இனவேற்றுமைகள் இருந்து கொண்டே தான் இருக்கும். ஒரே மதத்தைப் பின்பற்றும் இருநாடுகள் அடித்துக் கொள்வதற்கு காரணம் அவை வேறு வேறு இனங்கள் என்பதால் தான். ஒன்று அழிந்துவிட்டால் அதனுடன் அதன் மொழியும் சேர்ந்தே அழிந்துவிடும். உலகம் ஒரே இல்லம் என்பதெல்லாம் வெறும் செய்யுள் (சுலோகம்) என்ற அளவில் தான். அவரவர் பண்பாடு கலாச்சாரம், மொழி ஆகியவைகள் மட்டுமே அம்மக்களுக்குச் உடையது. ஆங்கில் மதத்தைத் ஏற்றுக் கொண்ட தமிழக கிறித்துவர்கள் ஏன் தமிழில் பைபிள் வைத்திருக்கிறார்கள் ? ஏசு வரலாறும் போதனைகளும் புரிய வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவா ? தன்மொழியில் வேண்டிக் கொண்டால் தான் கடவுளுக்கே புரியும் என்பது தான் எல்லோருடைய நம்பிக்கையும். மொழியை இழந்துவிட்டால் தாய் தாலாட்டு முதல் ஒப்பாறி பாட்டு வரை அத்தனையும் போய்விடும். பரவாயில்லை, தேவை இல்லை என்பவர்கள் இதுபற்றி கவலைக் கொள்ள வேண்டிய தேவையும் இல்லை. மொழிக்குறித்தான புரிதல்களை தமிழறிஞர்கள் எடுத்துச் சொல்வதும் அவர்களுக்காக அன்று. அவர்கள் சொல்லிவருபவை தாய் மொழியின் மீது உண்மையான பற்றுதல் மற்றும் ஆர்வம் உள்ளவர்களுக்கே. ஆர்வமில்லாதவர்களின் பரிந்துரையும் பயனற்றவையாகவே கருதப்படுகிறது.

//2. ஆங்கிலமும் கட்டயாமாக திணிக்கப்பட்ட மொழி தான். இதனால் தமிழ் அழிந்து விட்டதா? உலகம் முழுவதும் தொடர்பு கொள்ள பல துறைகளில் ஆங்கிலம் தான் பயன்படுகிறது. பல நாடுகளில் இது இரண்டாம் மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அது போல நம் நாட்டு மக்கள் அனைவரும் ஒரு மொழியை பேசுவது தேசிய ஒருமைபாட்டை வளர்க்கும் என்று நினைக்கிறேன். சரி, அவ்வாறு தேசிய மொழியாக ஒன்றை பேசுவது நம் தாய் மொழியின் பயன்பாட்டை சுருக்கி விடும் என்று நீங்கள் சொல்வது உண்மை என்றே வைத்துக் கொள்வோம். அப்படி இருந்தாலும் நாட்டுப் பற்றை விட மொழிப் பற்று சிறந்ததா? ( திட்டாதீர்கள் - இது அறி வினா அல்ல, அறியா வினா தான்!). மொழியின் //

ஆங்கிலம் திணிக்கப்பட்ட மொழி என்று சொல்லும் உங்களால் ஏன் இந்தி திணிக்கப்பட்ட மொழி என்று சொல்ல முடியவில்லை ? மொழி வாரி மாநிலங்களின் அமைப்பே அந்த பகுதியில் அந்த மொழியைப் பேசுபவர்கள் இருக்கிறார்கள் என்பது தானே, இவர்களிடம் இல்லாத ஒன்றை கொண்டுவந்து தேசியவாதம் பேசுப் படி என்று சொல்லும் மொழி எப்படி திணிக்கப்பட்ட மொழியாகாது ? இந்தியாவை ஆங்கிலேயன் ஒரு குடையின் கீழ் ஆண்டான், அவன் இந்தியாவில் கால் வைக்காத இடமே இல்லை. அங்குள்ள மக்களிடம் பேசுவதற்கு ஆங்கிலத்தை அவன் பயிற்றுவிக்க வேண்டிய தேவை இருந்தது, அது போல் இந்தி பேசும் மன்னர் ஆட்சி என்றாவது முழு இந்தியாவில் ஒரு குடையின் கீழ் இருந்ததா ? ஆங்கிலேயன் மாநில அளவில் அமர்ந்து ஆட்சி நடத்தியது போல் எந்த இந்திக்காரன் ஒவ்வொரு மாநிலத்திலும் உட்கார்ந்து கொண்டு ஆட்சி நடத்துகிறான் ? அந்தந்த மாநிலங்களில் சட்டமன்றமும் மொத்தமாக ஒரு பாராளுமன்றமும் தானே நடக்கிறது. அத்வானி தமிழ்நாட்டில் போட்டிப் போடப் போகிறாரா ?
இல்லை கனிமொழி தான் உத்திரபிரதேச தேர்த்தலில் நிற்கப்போகிறாரா ?

வெள்ளையன் ஆங்கிலத்த்தை திணித்தற்கு அவனுக்கு பொதுத் தொடர்பு என்ற காரணம் இருந்தது. அவன் இந்தியா முழுவதும் தொடர்பு வைத்திருந்தான். தேர்தலுக்கு தேர்தல் மட்டுமே வந்து மேடைப்பேச்சு பேசும் வடநாட்டு அரசியல் வாதிகள் தமிழ்நாட்டிற்கு வந்து பேசுவது நம்மக்களுக்கு புரிய வேண்டும் என்பதற்கு தேசிய மொழி அவசியம் என்கிறீர்களா ?
தமிழ்நாட்டில் இருக்கும் 6 கோடி பேரும் இந்தி தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறார்கள் ? ஜீடிவி புரிந்து கொண்டு பார்கலாம். இப்போதும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். தாய்மொழி பற்றிய விழிப்புணர்வு இல்லாதவர்களிடம் இன்னொரு மொழித் திணிப்பு தேவையற்றதும் கூட. ஒருசிலர் விருப்பத்திற்காக அனைவரும் படிக்க வேண்டும் என்பது வரட்டு வாதம் தன்நலம் சார்ந்த வலியுறுத்தல். அவர்கள் இந்திபிரச்சார சபா சென்றால் மாதம் வெறும் 25 ரூபாய் கட்டணத்தில் படிக்கலாம், நான் கூட 2 மாதம் போய்வந்திருக்கிறேன். மொழிபற்று தாய்நாட்டுப்பற்று என்ற சென்டிமெண்ட் தேவையற்றது. என்னிடம் எவறேனும் இந்தி தெரிந்தால் தான் நீ இந்தியன் என்றால், தேவை இல்லை நான் தமிழன் என்றே சொல்லிக் கொள்வேன். இந்தி திணிப்பின் மூலம் மொழிவாரி மாநிலங்களின் தகுதிதையையும், அந்த மொழியையும் தாழ்த்துகிறீர்கள் என்று கூட பொருள் கொள்ளலாம். பங்களாதேசிக்களுக்கும், பாக்கிஸ்தானிகளுக்கும் கூட இந்தி தெரியும், அவர்களை இந்திய குடிமகன் என்பீர்களா ? இந்திய குடிமகன் என்பதற்கு இந்தியை அளவு கோலாக வைப்பது உங்கள் எண்ணப்படியே சரியா ?

நீங்கள் முதலில் ஆங்கிலம் இந்தி இரண்டையும் ஒப்பிடுவதே தவறு, ஆங்கிலம் படிப்பது அறிவு வளர்ச்சிக்கு, தன்முன்றேற்றத்திற்கு, வேலைக்குச் செல்வதற்கு, இதே பயன் இந்திப் படிப்பதால் உங்களுக்கு கிடைக்குமா ? அது ஒரு மொழிமட்டுமே. இந்திய மொழிகளில் இருக்கும் இலக்கிய வளம் அதிலும் இருக்கிறது அவ்வளவுதான். ஆங்கிலம் எல்லாதுறைகளிலும் வளர்ந்து இருக்கிறது. தமிழும் ஆங்கிலத்துடன் போட்டிப்பட்டு பரவ நினைக்கவில்லை. தன்னிறைவில் வளர்ச்சியடையவே முனைகிறது. ஆங்கிலத்திற்கு இருக்கும் தகுதிகள் எதுவும் இல்லாத பிற மொழிகளைப் படிப்பதன் பயன் பேசுவது, தொடர்பு கொள்வது தவிர்த்து எதுவும் இல்லை.

நமது தனிப்பட்ட வளர்ச்சிக்கு ஆங்கிலம் இன்றியமையாதது, தாய்மொழி நம் உணர்வுக்கு இன்றியமையாதது

//3. உலகின் பல மொழிகளில் இருந்து சொற்கள் எடுத்துக் கொண்ட ஆங்கிலம் வளரத்தானே செய்கிறது ? நம் தமிழில் இருந்து கூட மாங்காய்(Mango), கட்டுமரம்(catamaran) எல்லாம் எடுத்துக் கொண்டுள்ளது. அது போல விசித்திரம், ஆதங்கம் போன்ற வடமொழி மூலம் வந்த சொற்களை நாம் என் தவிர்க்க வேண்டும் ? (மீண்டும் அறியா வினா தான்!) ஒரு பொருளுக்கு பல சொற்கள் இருப்பது அந்த மொழியின் வளமையை குறிப்பதாக ஏன் கொள்ளக் கூடாது? தமிழில் சொல்லே இல்லாத ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழ் சொல் கண்டு பிடிக்க வேண்டும் என்பதில் நான் உடன்படுகிறேன்.//

ஆங்கிலம் கலவை மொழி, அது பிறமொழிச் சொற்களை ஏற்றுக் கொண்டால் தான் அது வளரவே முடியும், புதிய சொற்களை உருவாக்க வேண்டுமென்றால் ஆங்கிலம் நாடுவது கிரேக்கம் மற்றும் லத்தின் அவற்றில் இல்லாத சொற்களை பிறமொழிகளில் இருக்கும் போது அதை அப்படியே வைத்துக் கொள்கிறது. ஆங்கிலத்துக்கு Root எனப்படும் வேர்சொற்கள் அனைத்துமே லத்தீன் மற்றும் கிரேக்க மொழியைச் சேர்ந்தவை. தமிழில் ஆயிரக்கணக்கான வேர்சொற்கள் இருக்கின்றன. அதிலிருந்தே அமைத்துக் கொள்ள முடியும். விசித்திரம், ஆதங்கம் ஆகியவற்றிக்கு மாற்றுத் தமிழ் சொல் இல்லாமல் இல்லை அதை மறந்துவிட்டு அல்லது கவனக்குறைவின் காரணமாக நாம் அவற்றை பயன்படுத்துகிறோம், விசித்திரம் என்பதை புரிவதற்கு அரிய / முற்றிலும் மாறுபட்ட / வெறொன்றாக (உங்கள் செயல் விசித்திரமானது, உங்கள் செயல் முற்றிலும் வேறொன்றாக ஒருக்கிறது என்று சொல்வதும் ஒன்றுதான்) என்றும், ஆதங்கம் என்பதை ஆற்றாமை என்றும் சொல்லலாம், இவை புரியாத சொற்களும் இல்லை.

'பயன்பாடு' என்ற மிகச் சிறந்த பயன் உள்ளச் சொல்லையே நாம் கவனக்குறைவினால் பயன்படுத்தாமல் அங்கெல்லாம் 'உபயோகம்' என்கிறோம். (10 முறைக்கு மேல் சொல்லி இருக்கிறேன்) ஆங்கிலம் தமிழில் கலப்பதை, அடையாளம் கண்டு எப்பொழுது வேண்டுமானாலும் எளிதில் களைந்துவிட முடியும், இந்தி அல்லது வடமொழி தமிழில் கலக்கும் போது அவற்றை பிரித்தறிவது எளிதல்ல. ஆங்கிலமும் தமிழும் கலப்பதில் பாதிப்பு குறைவு என்றாலும் அவை தவிர்க்கப்பட வேண்டியவையே. ஆங்கிலம் பேசும் போது ஆங்கிலம் பேசலாம், தமிழ்பேசும் போது தமிழ்மட்டுமே பேசலாம்.

கலைச்சொற்களில் எல்லாமும் வினைச்சொல் வகைதான். பெயர்சொற்களை அப்படியே பயன்படுத்தலாம் எடுத்துக்காட்டு ஊர் பெயர், இடத்தின் பெயர். வினைச் சொற்களுக்கு தமிழில் தட்டுப்பாடு (பஞ்சம்) இல்லை. computer என்ற ஆங்கில கலைச்சொல் compute என்ற வினைச்சொல்லில் இருந்து உருவானது, அதே பொருளில் தமிழில் வினைச்சொல் 'கணக்கிடு' என்று இருப்பதால் அதைச் செய்வதை 'கணனி' என்று சொல்வது அழகிய கலைச்சொல் மொழியாக்கம் தான். வழங்கிவரும் மற்ற புதிய சொற்களையும் ஆராய்ந்தீர்கள் என்றால் இவை சரி என்று புரியும், அதாவது feedback - பின்னூட்டம், blog post - இடுகை, webblog - வலைப்பதிவு, வலைப்பூ , வேர்சொற்கள் பற்றி அறிய ஆவல் இருந்தால் இராமகி ஐயாவின் வளவு பதிவில் எண்ணற்றவை இருக்கிறது அறிந்து கொள்ளுங்கள்

தமிழ் மொழியிலும் 'வேர் சொல்' 'Root of the Word or Root' என்ற ஒன்று இருப்பது பற்றி தெரியாதவர்கள், அறிந்து கொள்ள முற்படாதவற்கள் தங்கள் அறியாமையின் காரணமாகவே ஆங்கிலம் போலவே தமிழும் கடன்பெற்று / ஏற்றுக் கொண்டு வளரலாமே என்று உளறிக் கொட்டி (மன்னிக்கவும்) வருகிறார்கள். மொழிக்குறித்த தவறான புரிதலும் இதற்கு காரணம்.

//கோவி. கண்ணன்,
உங்கள் கட்டுரை என் எண்ணத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது என்று சொன்னால் மிகையாகாது. நன்றாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள். //

பாராட்டுக்கு மிக்க மகிழ்ச்சி, நான் தமிழ் அறிஞன் அல்ல, உங்களையும் பிறரையும் போல் தமிழ்குறித்த எண்ணம் கொண்டிருந்தேன். எதையுமே ஏன் எதற்கு என்று அறிய முற்படும் போது நமக்கு தேவையான தகவல்கள் கிடைக்கும். அந்தவகையில் நான் அறிந்தவற்றை அவ்வப்போது பகிர்ந்துவருகிறேன்.

தமிழ் சோறுபோடுமா ? சோறுபோடுவது ஆங்கிலம் தான். தாலாட்டுப் பாடுவதும், சோறு ஊட்டுவதும், கலைகள் மூலம் மகிழவைப்பதும், தூங்க வைப்பதும், தற்போது பதிவர்களிடம் உரையாடுவதும் தத்தமது தாய்மொழிகளே. அதை அழியவிடாமல் பாதுகாப்பது அம்மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்களின் கடமை.

8 கருத்துகள்:

அ. இரவிசங்கர் | A. Ravishankar சொன்னது…

உங்கள் அண்மைய இரு இடுகைகளும் நன்று.

ஒரே ஒரு கருத்து:

பலரும் "தமிழ் சோறு போடாது", "சோற்றுக்கு ஆங்கிலம், தனி மனித உணர்வுகளுக்கு, பண்பாட்டுக்குத் தாய் மொழி" என்ற மயக்கம் தரும் கருத்தை கேள்வி இன்றி பலரும் சொல்லவும் ஏற்றும் வருகிறார்கள். இதனால் தான் தமிழ் உதவாக்கரை மொழி என்றும், "தமிழ் படித்து என்ன பயன்" என்றும் கேள்விகள் வருகின்றன.

உண்மையில், ஆங்கில அறிவால் மட்டுமே தமிழ்நாட்டில் சோறு உண்பவர் எத்தனை பேர்? அரசு, தனியார் பணிகளில் வெள்ளைச் சட்டை வேலை பார்ப்போர் ஒரு பகுதியினருக்கும் பிற மாநிலங்கள், நாடுகள் போவோருக்கும் ஆங்கிலம் தேவைப்படும்.

ஆனால், தமிழ்நாட்டில் ஆங்கிலமே தெரியாமல் எத்தனையோ உழவர்கள், சிறு தொழில்க்காரர்கள், தொழிலாளர்கள், பெரு வணிகர்கள் வாழவில்லையா? ஆங்கில மொழியறிவு கூடுதலாக சில பலன்களைப் பெற்று தரலாம். ஆனால், பொருள் ஈட்டுவதற்கும் வாழ்வில் வெற்றி பெறுவதற்கும் அதையும் தாண்டி எத்தனையோ வழிகள் உள்ளன. அதற்கு தமிழே / தாய்மொழியே போதும்.

நன்றி.

Thekkikattan|தெகா சொன்னது…

இந்தப் பதிவு, தங்களின் முதல் பதிவின் முடிவுரை. நன்றாக வந்திருக்கிறது.

சரி, ஆங்கிலம் இன்னிக்கு எப்படி உலக பொது மொழி என்றழைக்கப் படுகிறது? முதன் முதலில் அங்கிலம் எங்கே தோன்றியது? அது எப்படி இன்னிக்கு எல்லோராலும் பரவலாக ஏற்றுக் கொண்டு பேசப் படுகிறது?

நல்ல மார்க்கெட்டிங் இருக்குமே இதற்கு பின்னணியில்? ஒரு மதமாகினும், மொழியாகினும் வளர வேண்டுமெனில் ஒரு சிறப்பு கவனம் அதன்பால் செலுத்தி சந்தைப் படுத்தல் ரொம்ப முக்கியமோ? அப்படி அழுத்தி விற்றால் சிறு குழுக்கள் காணாம போயிடுமோ?

அப்படி எஞ்சி நிற்கும் மதமும், மொழியும் அப்ப எங்கெல்லாம் விரவி தப்பி நிற்கிறோதோ அது அந் நாட்டின் பூர்வீக மொழியாகவும், மதமாகவும் பின்னாலில் கருதப்படணுமோ?

இப்படி கேள்விகள் போயிட்டே இருக்கு...

-L-L-D-a-s-u சொன்னது…

அருமையான பதிவு ..தொடருங்கள் ..

கோவி.கண்ணன் சொன்னது…

///ரவிசங்கர் said...
உங்கள் அண்மைய இரு இடுகைகளும் நன்று.

ஒரே ஒரு கருத்து:

பலரும் "தமிழ் சோறு போடாது", "சோற்றுக்கு ஆங்கிலம், தனி மனித உணர்வுகளுக்கு, பண்பாட்டுக்குத் தாய் மொழி" என்ற மயக்கம் தரும் கருத்தை கேள்வி இன்றி பலரும் சொல்லவும் ஏற்றும் வருகிறார்கள். இதனால் தான் தமிழ் உதவாக்கரை மொழி என்றும், "தமிழ் படித்து என்ன பயன்" என்றும் கேள்விகள் வருகின்றன.

உண்மையில், ஆங்கில அறிவால் மட்டுமே தமிழ்நாட்டில் சோறு உண்பவர் எத்தனை பேர்? அரசு, தனியார் பணிகளில் வெள்ளைச் சட்டை வேலை பார்ப்போர் ஒரு பகுதியினருக்கும் பிற மாநிலங்கள், நாடுகள் போவோருக்கும் ஆங்கிலம் தேவைப்படும்.

ஆனால், தமிழ்நாட்டில் ஆங்கிலமே தெரியாமல் எத்தனையோ உழவர்கள், சிறு தொழில்க்காரர்கள், தொழிலாளர்கள், பெரு வணிகர்கள் வாழவில்லையா? ஆங்கில மொழியறிவு கூடுதலாக சில பலன்களைப் பெற்று தரலாம். ஆனால், பொருள் ஈட்டுவதற்கும் வாழ்வில் வெற்றி பெறுவதற்கும் அதையும் தாண்டி எத்தனையோ வழிகள் உள்ளன. அதற்கு தமிழே / தாய்மொழியே போதும்.

நன்றி.
//

ரவிசங்கர் அவர்களே,

இடுகையை ஒட்டிய, இடுகைக்கு வலு சேர்க்கும் மிக நல்ல கருத்து. உங்கள் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//Thekkikattan|தெகா said...
இந்தப் பதிவு, தங்களின் முதல் பதிவின் முடிவுரை. நன்றாக வந்திருக்கிறது.

சரி, ஆங்கிலம் இன்னிக்கு எப்படி உலக பொது மொழி என்றழைக்கப் படுகிறது? முதன் முதலில் அங்கிலம் எங்கே தோன்றியது? அது எப்படி இன்னிக்கு எல்லோராலும் பரவலாக ஏற்றுக் கொண்டு பேசப் படுகிறது?

நல்ல மார்க்கெட்டிங் இருக்குமே இதற்கு பின்னணியில்? ஒரு மதமாகினும், மொழியாகினும் வளர வேண்டுமெனில் ஒரு சிறப்பு கவனம் அதன்பால் செலுத்தி சந்தைப் படுத்தல் ரொம்ப முக்கியமோ? அப்படி அழுத்தி விற்றால் சிறு குழுக்கள் காணாம போயிடுமோ?

அப்படி எஞ்சி நிற்கும் மதமும், மொழியும் அப்ப எங்கெல்லாம் விரவி தப்பி நிற்கிறோதோ அது அந் நாட்டின் பூர்வீக மொழியாகவும், மதமாகவும் பின்னாலில் கருதப்படணுமோ?

இப்படி கேள்விகள் போயிட்டே இருக்கு...
//

தெகா,

நீங்கள் ஆங்கிலம் பற்றி கேட்டு இருக்கிறீர்கள், நான் இந்தியைப் பற்றி அடுத்த இடுகை எழுதி இருக்கிறேன். அதைப் படித்தால் ஓரளவு விடை கிடைக்கும். அல்லது ஆங்கிலம் குறித்த கேள்வி தேவையற்றது என்று கூட நினைப்பீர்கள் !

பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//-L-L-D-a-s-u said...
அருமையான பதிவு ..தொடருங்கள் ..
//

தாஸ்,

பாரட்டுக்கு மிக்க நன்றி !

அடுத்த பதிவை தொடர்ந்து முடிச்சாச்சு !

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) சொன்னது…

என் கேள்விகளுக்கு தனி பதிவு போட்டமைக்கு நன்றி! நீங்கள் கூறியவற்றை ஏற்போ, மறுப்போ செய்வதற்கு முன்னர் கொஞ்சம் 'வீட்டுப் பாடம்'
செய்ய வேண்டி இருக்கிறது. இருந்தாலும் உங்கள் பதிவினை படித்த பின்னர் எழுந்த சில எண்ணங்கள் எழுகிறது.

கலை என்பது வாழ்க்கையின் பிரதிபலிப்பு. அதை சொல்லக் கூடிய வாகனம் மட்டுமே மொழி என்பது என் நிலைப்பாடு. இதில் கலையின் முக்கியத்துவம் எத்தனை மொழியை சார்ந்து உள்ளது என்பது கேள்வி. மொழியின் தன்மைக்கேற்ப கலையின் வடிவங்கள் மாறு பெறலாம். மாற்றங்களில் இழப்பும் உண்டு; பலன்களும் உண்டு. மரபுக் கவிதைகள் மறைந்து புதுக் கவிதைகள் வருவது போல வில்லுப்பாட்டு மறைந்து நாளை புது சொல்லுப்பாட்டு வரலாம். அந்த சொல்லுப்பாட்டு வடமொழியும், தமிழும், மலையாளமும், தெலுங்கும், ஆங்கிலமும் கலந்த மொழியில் இருக்கலாம். அவ்வாறே மக்கள் பேசியும் வரலாம். அந்த சொல்லுப்பாட்டு புதிய கலைவடிவமாக கருதப்படலாம். வில்லுப்பாட்டின் இழப்பு; சொல்லுப்பாட்டின் பிறப்பாக இருக்கலாம்.

நான் வளர்ந்த மண்ணில் வாழ்ந்த மக்கள் பேசும் விதம், பயன்படுத்தும் சொற்கள் போன்றவற்றை உள்வாங்கிக் கொள்வதால் என் கருத்தையும் உணர்வையும் வெளிப்படுத்தவும் அந்த மொழி சட்டென்று வருகிறது. அது எந்த மொழியாக இருந்தாலும் சரி. எல்லாம் கலந்த கலவையாக
இருந்தாலும் சரி.

சமஸ்க்ரிதம் வழக்கிழந்து போனது. அதற்காக மேகதூதமும் சாகுந்தலமும் படிக்க முடியவில்லை என்று யாரும் கண்ணீர் சிந்துகிறார்களா? வழக்கில்
உள்ள மொழியில் இருக்கும் இலக்கியங்களை படித்துக் கொண்டிருக்கிறோம். வழக்கில் உள்ளவையே வாழ்க்கையை பிரதிபலிக்க முடியும்.

என் உணர்வையும் கருத்தையும் பரிமாற எத்தனிக்கும் நேரத்தில் ஒரு தனிப்பட்ட முயற்சி எடுத்து .மொழியில் கவனம் செலுத்தினால் என் 'spontaneity' போய்விடாதா என்ற கேள்வி வேறு எழுகிறது.

ஆக ஒரு மொழிக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் குறித்தும் அதன் மேல் ஏற்படும் எந்த மாற்றத்தையும் (பிற மொழி வார்த்தை கலப்பு, மணிப்ரவாள நடை) ஒரு தனிப்பட்ட முயற்சி எடுத்து எதிர்ப்பது குறித்தும் அதற்கும் கலைக்கும் உள்ள உறவு குறித்தும் மூன்று நிமிடத்தில் முடிவுக்கு வந்து விட முடியாது. ஆக 'வீட்டுப் பாடத்தை' முடித்து விட்டு மீண்டும் வருகிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//வந்தியத்தேவன் said...
என் கேள்விகளுக்கு தனி பதிவு போட்டமைக்கு நன்றி! நீங்கள் கூறியவற்றை ஏற்போ, மறுப்போ செய்வதற்கு முன்னர் கொஞ்சம் 'வீட்டுப் பாடம்'
செய்ய வேண்டி இருக்கிறது. இருந்தாலும் உங்கள் பதிவினை படித்த பின்னர் எழுந்த சில எண்ணங்கள் எழுகிறது.
//

வந்தியத்தேவன் அவர்களே,

நான் தமிழறிஞன் அல்ல, ஒரு ஆர்வலன் மட்டுமே, எனக்கு தெரியும் மொழிகளைவைத்தும், அறிந்த தகவல்களை வைத்தும், ஓரளவு மொழிகள் பற்றிய புரிதல்களை வைத்து எழுதினேன்.

வாய்ப்பு கொடுத்த உங்களுக்கும் நன்றி !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்