பின்பற்றுபவர்கள்

31 ஜூலை, 2006

உங்கள் வீட்டு புதையல்

உங்கள் வீட்டு புதையல்

புத்தகங்களை புதையல் என்று சொல்லலாம்... நிறைய பேருக்கு பக்கத்தில் புதையல் இருந்தாலும் கண்டுகொண்டு பயனடைவர் சிலரே. எல்லாருடைய வீட்டிலும் புத்தகப் புதையல் இருக்கும். அதை ஏதோ ஒரு பூதம் காப்பது போல் எல்லோரும் காத்து வருவதும் உண்மைதான்.

ஒரு மனிதனைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டுமானால் அவருடைய நண்பர்கள் பற்றி தெரிந்தால் தெரிந்து கொள்ளலாம் என்பார்கள். அதில் 100 % உடன்பாடு இல்லை. மாறுபட்ட கருத்துள்ளவர்களும் நல்ல நண்பர்களாக இருக்கலாம். அது போல் ஒருவரைப் பற்றி தெரிய வேண்டுமானால் அவர் சேர்த்து வைத்திருக்கும் புத்தகங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதுவும் 100% சரியில்லை. ஓரளவுக்குத்தான் மாறுபட்ட கருத்துக்களை தர்கம் செய்வதற்காக விரும்பி படிப்பவர்களும் இருக்கிறார்கள் (என்னிய மாதிரி கோஷ்டிகள்).

எப்படியோ புத்தங்கள் தான் நமக்கு முதன்மையான நண்பன் அதன் பிறகு தான் மத்தவர்கள் எல்லோரும். விசய ஞானமோ, விச ஞானமோ புத்தகங்களே போதித்து நமக்கு ஆசானாகவும் இருக்கிறது. புத்தகங்கள் நம் சுய சிந்தனைகளை, நம் சொந்தக் கருத்துக்களையும் மாற்றி நல்வழிப்படுத்துகிறது.

உங்கள் வீட்டு புத்தங்கள், புத்தகப் புழுக்கள் போல் அதன் பெருமையை அதுவும் அறியாமலே இருந்து இருக்கும். எனவே அன்பு வலை நண்பர்கள் எல்லோரும் தங்கள் வீடுகளில் இருக்கும் புத்தகங்களை தூசி தட்டி எடுத்து அதன் பட்டியலை தனிப்பதிவாக வெளியிட்டு, சிபா என்கிற 'அருமை' நண்பர் திரு சிவபாலன் வேண்டுகோளின் படி சுட்டியை அவர்பதிவிலோ, அல்லது என்பதிவிலோ இட்டீர்கள் என்றால் அவர் தொகுப்பதற்கு வசதியாக இருக்கும்.

போங்கப்பா போரடிக்காதீர்கள் இதனால் என்ன நன்மை ஆகி விடப்போகிறது ? சரஸ்வதி பூஜைக்குத் தான் நாள் இருக்கிறதே என்று கேட்டால்.

1. உடனடி நன்மை ஒரு புதிய பதிவு
2. உங்கள் புத்தகங்களை நீங்கள் படித்திருக்காவிட்டால் அதைப் படித்தவர்கள் அதன் சிறப்புகளை சுட்டிக்காட்டி உங்கள் புத்தகத்திற்கு ஒரு நல்ல விமோசனம் கிடைக்கும்
3. நீங்கள் விரும்பும் புத்தகங்கள் ஒரு வேளை மற்றவர்களிடம் இருந்தால் அவரிடம் பதிப்பகம் மற்ற இதர விபரங்களை கேட்டு அறியலாம்.
4. நமக்குத் தெரியாத புத்தகங்களின் அறிமுகம் கிடைக்கும்
5. புத்தகங்களை எழுதி வெளியிட பலருக்கும் விருப்பம் இருக்கும், குறைந்த பட்சம் புத்தக பட்டியலையாவது வெளியிட்டு முதல் முயற்ச்சி எடுக்கலாம்.

சரி எந்த மாதிரி புத்தகங்களின் பட்டியலை வெளியிடுவது ?
'அந்த' மாதிரி புத்தகங்களின் பட்டியல், டிக்ஸ்னரி, எல்கேஜ் மற்றும் கல்வி சம்பந்த பட்ட புத்தகங்களின் பட்டியல் வெளியிடத் தேவையில்லை. நல்ல கருத்துச் செரிவுள்ள புத்தகங்கள், கதையோ, கவிதையோ, கட்டுரைகளோ, வரலாறோ இன்னும் பிறவோ பற்றிய புத்தகங்களின் பட்டியலை தனிப்பதிவாக வெளியிடவும்.

ஒரு மனிதனுக்கு அசையா சொத்து என்றால் அது அவரவர்வீட்டு புத்தகங்கள் தான். யாரும் கடனும் கேட்க மாட்டார்கள், நாமும் விற்க மாட்டோம். உங்கள் வீட்டு அசையா சொத்துக்கள் எவை எவை என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள ஆவல். இதை சங்கிலிப் பதிவு போல் வேண்டுகோளாக, நீங்கள் வெளியிட்டு உங்கள் பதிவில் நீங்கள் விரும்பும் வலைப்பதிவாளர்களை ஒன்றோ, சிலரோ அழைத்து வெளியிடச் சொல்லலாம்.

நான் ஏற்கனவே புத்தக பட்டியலை வெளியிட்டு விட்டேன். எனவே நான் தங்கள் புத்தகங்களை வெளியிட அழைக்கும் நண்பர் மற்றும் நண்பிகள்

1. திரு எஸ்கே
2. திருமதி துளசிகோபால்
3. திருசெந்தழல் ரவி
4. திரு குமரன் (எண்ணம்)

பி.கு: தமிழ்மண முகப்பில் பதிவர் வட்டம் மற்றும் 'புத்தகம்' என்ற பிரிவில் வகைப்படுத்துதல் நலம் !

29 ஜூலை, 2006

புத்தம் புதிய புத்தகமே !

நண்பர் சிபா (சிவபாலன்) அன்போடு கேட்டுக் கொண்டதற்கு இணங்கி இந்த பதிவு !

என் வீட்டு அலமாரிகளில் புத்தக குவியல் இல்லை. வெளி நாட்டில் இருப்பதால் புத்தகங்களை வாங்கி அடுக்குவதற்கு அதிகம் யோசனை செய்ய வேண்டியிருக்கிறது. வலைப் பதிவுகள் எழுத ஆரம்பித்த பிறகு பித்தமாகி புதிய நூல்கள் எதுவும் வாங்கவில்லை. சமீபத்தில் திருவாடுதுரை சூரிய நாராயணன் கோவிலுக்கு குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். அப்பொழுது கோவிலில் விற்ற புத்தகங்கள் சிலவற்றை கோவிலுக்கு சென்று வந்த ஞாபகமாக இருக்கட்டமே என்று வாங்கினேன். நம்ம குமரன் போன்றோர்கள் தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தால் ஸ்கேன் பண்ணி போடுவேன். அதை மனதில் வைத்தும் வாங்கியது தான் இந்த புத்தகங்கள்.

வாங்கிய புத்தகத்தை தவறுதலாக சென்னை பெரியப்பா வீட்டில் எடுத்துச் சென்றுவிட்டார்கள். அதன் பிறகு சென்னைக்கு விமானம் ஏற வந்த பொழுது துறத்திப் போய் திரும்ப வாங்கி வந்தேன். இதுதான் மிக மிக சமீபமாக இரண்டு மாதத்திற்கு முன்பு வாங்கியது. இன்னும் புரட்டிக்கூட பார்க்க வில்லை. மேலூம் சில சித்தர் பாடல் புத்தகங்களை அக்கா வீட்டிலிருந்து எடுத்து வந்தேன்.
பட்டியல் இதோ:


1 . சூரியனார் கோவில் தல வரலாற்றுச் சுருக்கம்
2. நவக்கிரக ஸ்தலங்களின் திருமுறைத் திரட்டு (வரை படத்துடன்)
3. விதியை வெல்வது எப்படி - திருவாடுதுறை ஆதினம்
4. சித்தர் பாடல்கள் - டாக்டர் ச.மெய்யப்பன்
5. வெற்றி நிச்சயம் - திரு சுகி சிவம்
6. சைவ சித்தாந்த உண்மை விளக்கம் - திரு பா.கமலக்கண்ணன் (இவரை பார்க்க வேண்டும் என்று ஆவல் உள்ளது, இவர் என் நண்பருக்கு நண்பர் 65 வயது ஆகிறது, தற்போது சைவ சமய சித்தாந்த மடம் வைத்து ஏழைகளுக்கு இலவசக் கல்வியும், இடமும் அளித்துவருகிறார் - அவரைப் பார்க்கும் வாய்ப்பு சிங்கையிலேயே கிடைத்தது, 2007 வந்து சென்றார்)
7. Art of happines (Hand Book for living) - HH Dalai Lama
8. Be a Lamp upon yourself (Buddist Book) -
9. The Teaching of Buddha
(7,8,9 புத்தகங்கள் இருப்பது இன்று தான் தெரியும் ! இலவசமாகக் கிடைத்தது என்று நினைக்கிறேன்)
10. Bhagavat - Gita as it is - Swami Prabupada
11. நாலே கால் டாலர் - ஜெயந்தி சங்கர்(சிங்கை)
12. ஏழாம் சுவை ஜெயந்தி சங்கர்(சிங்கை) - நூல் வெளியீட்டு விழாவுக்கு சென்ற போது வாங்கியது
13. Long Man Dictionary
14. IT Books Related to Windows Serer and Networking
15. இந்த நாள் இனிய நாள் - திரு வலம்புரி ஜான்
இது தவிர நக்கீரன், ஜூவி வாரம் இருமுறை வாங்குவதுண்டு, படித்ததும் தூக்கிப் போட்டுவிடுவதுதான் வழக்கம். பதிவுகள் படிக்க ஆரம்பித்த பிறகு அதில் படிக்கும் தகவல்கள் ஆறிய தகவல்களாக இருப்பதால் அதிகம் வாங்குவதில்லை.

மற்ற எல்லா புத்தகங்களுமே தூங்குகின்றன.

"புத்தம் புதிய புத்தகமே உன்னை புரட்டிப் பார்க்காத புலையன் நான் !"

28 ஜூலை, 2006

கஜினி .... :)

மரணத்தை வென்றவர்கள் சகோதரிகள் நிலா, லிவிங் ஸ்மைல் வித்யா, மற்றும் பொன்ஸ் ஆகிய மகளிர் அணிக்கு வாழ்த்துக்கள். 50% இடஒதுக்கீடு கேட்பவர்கள் 100% சதவிகிதம் பறித்துக் கொண்டதை போட்டி என்பதால் பொறுத்துக் கொள்ளலாம் :)

மரணத்துடன் நேருக்கு நேர் - எனது பதிவுக்கு வாக்கு அளித்த அனைத்து நல்ல உள்ள அன்பர்களுக்கு நன்றிகள். போட்டிகளில் கலந்துகொள்வது மகிழ்சியை தருவதால் கஜினியை தாண்டி படையெடுப்புகள் தொடரும்.


27 ஜூலை, 2006

இம்சை அரசன் அடித்த மணி !

அனைவரும் அர்சகராகலாம் என்ற திட்டத்தை கேள்விப்பட்ட நம்ம கைப்புள்ள, அண்ணன் பார்த்திக்கு பயந்து ஓடி ஒளிந்து கொள்ள சரியான இடம் கோவில்தான் என்று எப்படியோ அர்சகர் ஆகிவிட்டார். அறனிலைய துறை அதிகாரியான பார்த்தி ஒரு நாள் சாமி கும்பிட வருகிறார். உடம்பு முழுவதும் பட்டை அடித்துக் கொண்டு பக்திப் பழமாக இருக்கும் கைப்புள்ள அவரைப் பார்த்துவிடுகிறார்

தனக்குள்
கைப்பு : 'அடி ஆத்தி... இவனுக்கு பயந்துக்கிட்டுதான் இங்கிட்டு வந்தோம் ... இங்கிட்டும் வந்துப்புட்டானே ....
என்று தலையில் துண்டைப் போட்டு மறைத்துக் கொண்டார்
பார்த்தி : சாமி ... இங்க பாருங்கோ ... இத எடுத்துட்டுப் போய் அர்சனைப் பண்ணி எடுத்துட்டுவாங்கோ
கைப்பு : ஆகட்டும் பா ... ஆகட்டும் ... வொடனே செஞ்சுடுவோம் ... அதுக்குத் தானே இருக்கோம்
பார்த்தி : இந்த குரல எங்கேயே கேட்ட மாதிரி இருக்கே ... சாமி கொஞ்சம் பாருங்க ...
கைப்பு : சாமி இன்னெக்கு மவுன விரதம்... பேசக் படாது ...
பார்த்தி : மவுன விரதம் ... வாயத்தானே மூடனும் ... நீங்க தலைய மூடியிருக்கிங்க ... சரி சாமி ... நீங்க பேச வேனாம் ... முகத்தையாவது இப்படி காட்டுங்க ...
கைப்பு : மண்ணிக்கனும் சாமி மண்ணிக்கனும் ... தலையில வவ்வா உச்சா போயிடுச்சி ...
பார்த்தி :ஹூம் ... அதான் இந்த நாத்தம் நாறுதா ? ... பராவியில்ல விடுங்க சாமி ... பால் வடியும் மொகத்தை கொஞ்சம் காட்டுவிங்கன்னு பார்த்தேன், சரி வவ்வா வடிச்ச தலையை யாவது காட்டுங்கள்
கைப்பு மனதுக்குள் ... விடமாட்டான் போலப்பு .... ஆகா மாட்டிக்கிட்டேனே என்று தலையில் மறைத்த துண்டை விலக்குகிறார்
கைப்பு : அப்பு அப்பு வேணாப்பு ... உனக்கு பயந்துக்கிட்டுதான் இங்க வந்து சேந்திருக்கேன் கெடுத்துடாதே ... ஒனக்கு என்ன வேணும் எடுத்துக்க ... தேங்கா ... பழம் ... பூ என்று உளர ஆரம்பிக்கிறார்
அவரை ஏற இறங்க பார்த்த பார்த்தி ...
பார்த்தி : ஓ ... எலி அம்மனமா இங்க வந்து ஒளிஞ்சிக்கிச்சா
கைப்பு : எலின்னாலும் ஞ்சொல்லு கிலின்னாலும் ஞ்சொல்லு விட்டுடுப்பா ... கையெடுத்து கும்புடுகிறார்
பார்த்தி : சரி விடுரேன் ... ஆனா இங்க என்ன பண்ணுற தெரிஞ்சாகனும் ?
கைப்பு : ம் .. பாத்தா தெரியலப்பா ... மணியடிச்சு பூஜை செய்றேன் ... பூஜை
பார்த்தி : பூஜை செய்யுறியா ... உனக்கு தேவாரம் எல்லாம் தெரியுமா ?
கைப்பு : அது தெரியாமல இங்க வந்துருக்கேன் ... இன்ட்ர்வுயூ பண்ணாங்கப்பு
பார்த்தி : ஒன்ன அவுங்க இன்டர்வுயூ பண்ணினாங்களா ?
கைப்பு : அட ஆமாப்பு, சாமிக்கு மணியடிக்கிற சோலி பண்ண ... எல்லாரும் போறாங்களே, என்னான்னு கேட்டா, தேவராம் தெரியனும் சொன்னாகப்பு ... ஆக நமக்கு தெரியாத தேவாரமான்னு கேட்டுபுட்டு ... போனேன்... எல்லாரையும் கேட்டுட்டு ... கோட்டவா உட்டுக்கிட்டே எங்கிட்டயும் கேட்டகப்பு ... நல்ல தெரியும்னு சொன்னதால தானப்பு இங்க அனுப்பிச்சாங்கெ
பார்த்தி கையெடுத்து கும்பிட்டு ...
பார்த்தி : கைப்புள்ள நீ அவ்வளவு பெரிய ஆளா, ஒனக்கு தேவாரம் தெரியுமா ?
கைப்பு : என்ன அப்புடி கேட்டுப்புட்ட ... சின்ன பசங்களுக்கு தெரிஞ்ச சின்ன விசயம் எனக்கு தெரியாதா... ஐஜியா இருந்தவர தெரியாம இருக்குமா ... வீரப்பன புடிச்சாருல்ல ... அவுர தெரியாதுன்ன எப்படிப்பு .... சின்னப்புள்ள தனமால்ல இருக்கு
பார்த்தி அதிர்ச்சி அடைந்து விடுகிறார்.
பார்த்தி : வேண்டாம்னு பார்த்தேன் ... இல்ல நீ மாட்டிக்கிட்ட
கோபமாகிய கைப்பு,
கைப்பு : சாமிய கும்புட்டமா, துன்னூற பூசிக்கிட்டமான்னு போவனும், இப்டி நோண்டப் படாது ...
பார்த்தி : நான் நோண்டாமல் வேர ஒங்கப்பனா வந்து ...
கைப்பு : ஏன்பா ... நீ யாரு ... நீ எதுக்கு நோண்டனும் ... கைப்புத் தேன் ... பைப்பு இல்லப்பா ... வேணாம் விட்டுடு
பார்த்தி : அறநிலைய அதிகாரி நான் கேட்காம வேற எந்த கேனயன் வந்து கேட்பான்
கைப்பு பயந்து மென்று முழுங்குகிறார்.
கைப்பு : அப்பா அப்பா தெரியாம சொல்லிட்டன்ப்பு ... தேவரம் சரியாத் தானப்பு சொன்னேனப்பு பார்த்தி : அடே மடயா ... தேவரங்கிறது ... பக்திப் பாட்டு ...
கைப்பு தெம்பாகிறார்
கைப்பு : பூ ... இவ்வளவு தானா .... பாடுறேன் கேட்டுக்க ..... 'கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை'
பார்த்தி : நிறுத்து ... இது தேவாரம்னு ஒனக்கு எந்த மடையன் சொன்னான்
கைப்பு : யாரு சொன்னா என்னப்பு ... சாமிபாட்டு ... நான்ந்தே பாடினேன் ...
பார்த்தி : சீர்காழி பாட்ட உம் பாட்டுன்னு சொல்றியா
கைப்பு : சீர்காழியோ ... டிம் எஸ்சோ இருந்தா என்னப்பா ... தேவர் படத்துல தானப்பா வந்துச்சி ... அப்ப தேவரம் இல்லையா ?
தலையில் அடித்துக் கொண்டே,

பார்த்தி : மடையா மடையான்னு திட்டியே ... நான் மடையான் ஆயிடுவன் போல இருக்கே... தேவரங்கிறது அப்பர் சாமி பாடினது.
பயந்தபடி ...
கைப்பு : அப்பு எனக்கு அப்பர் சாமியும் தெரியாது ... அப்பா சாமியையும் தெரியாது ... வயுத்துப் பொழப்புக்காக வந்துட்டேன் ... பொழப்புல மண்ணப் போட்டுடாதப்பு ... பொண்டாட்டி புள்ளெங்களெல்லாம் பட்டினியா கெடக்கும் ... பாவம் அப்பு விட்டுடு ... அவ்வ்வ்வ்
பார்த்தி : அடச்சீ நிறுத்து ... ஒன்ன மாதிரி மாங்க மடையனை அர்சகரா வெச்சிருந்தா, என் பொழப்பு தான் நாறிப் போய்டும்
கைப்பு : வேணாப்பு ... ஒன் சோளிய கெடுத்த பாவம் எனக்கு வேணாம் ... நீயே பாத்து ... நம்ம கைப்புள்ள கஸ்டப் படப்படாதுன்னு ...இங்கேயே ஓரமா ஏதோ ஒரு சோளி போட்டுக் குடு
பார்த்தி மனம் இறங்குகிறார்
பார்த்தி : ம் .... ஒனக்கு என்ன வேலை கொடுக்கிறது ... ஆங் ... அங்க யானை நிக்குது பார்
கைப்பு : யானைக்கு சோறு வடிச்சி போடனும் சொல்ற ... ம் விதியாரா வுட்டுச்சி ... செய்யிறேன் அப்பு செய்றேன்
பார்த்தி : யானைக்கு சோறு போட ஆளு இருக்கு ... நீ என்ன பண்ணுற இந்த லத்தி இருக்கு பாரு லத்தி அதை அள்ளிக் கொட்டுற ? என்னது ? லத்தி அதாவது யானை சாணி
கைப்பு : வேணாப்பு ... வேண்டாம் யானைக்கு சாணியள்ளிக் கொட்டுற சோலியெல்லாம் சரிப்பட்டு வராது ... கைப்புவ பாத்தா பாவமா இல்லையா ?
பார்த்தி : ஏற்கனவே வவ்வா உச்சாப் போயி ... கிட்ட வந்த நாத்தம் தாங்க முடியலை ... இந்த வேலைக்கு அனுப்பிச்ச ... யானையே ஒடினாலு ஓடிடும் ... வேற என்ன செய்யலாம் ...
யோசனை செய்து கொண்டிருக்கும் போது கோவில் மணி அடித்து ...
பார்த்தி : நினைச்சேன் ... மணி அடிக்குது ...
கைப்பு : பாத்திய பாத்தியா அந்த சாமிக்கே கைப்பு சாணி அள்ளுறது புடிக்கல
பார்த்தி : ஆமா ஆமா எனக்கும் புடிக்கல ... அதுனால கோவில் மணிய இனிமே நீ தான் அடிக்கிற ... புரிஞ்சுதா ?
கைப்பு : அடிக்கிறம்பா அடிக்கிறேன் ... நங்கு நங்குன்னு நச்சின்னு அடிக்க மாட்டேனா ?
பார்த்தி : அடிக்கலைன்னா ... அப்புறம் உன் மணியை கட் பண்ணிவிடுவேன்

கைப்பு அவசரமாக கையை எங்கோ வைத்து பொத்துகிறார்.
பார்த்தி : அடச்சே யாருக்கு வேணும் அது ... நான் சொன்னது M O N E Y உன் சம்பளத்தை
கைப்பு : உசிரு போயி ... உசிரு வந்துச்சி ஓ.. அந்த மணிய செல்லுறியாப்பு நீயீ
பார்த்தி சென்றவுடன் கைப்பு புலம்புகிறார்
கைப்பு : ஆகா ஆட்ட வெச்சுட்டான்டா... ஆட்ட வெச்சுட்டான் ... சின்ன மணியா அடிச்சு, அங்கனுக்குள்ளேயே நின்னு நாளு பொம்பள புள்ளெங்கள பாத்தோமா இருந்தோமன்னு இருந்த என்ன இப்படி பெரிய மணியா அடிக்க வெச்சுட்டானே ... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

25 ஜூலை, 2006

ஆறு வார்த்தைகளில் ஆறு கதை !

பாஸ்டன் பாலா பிள்ளையார் சுழிபோட, இனிதே தொடங்கிய ஆறு வரிக் கதைகள் எல்லோருடைய கவனதையும் ஈர்த்தது. நான் எழுதிய ஆறு கதைகள் இங்கே !

6

1. கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று நடக்குது - இங்கே வலைப்போர் !


2. திரு காசி செய்த கைமா(ற்)று - தமிழ்மணம் விற்பனைக்கு !

3. அம்பலத்தான் இங்கு ஆடுகிறான் - நமசிவாய வாழ்க - சிதம்பரம் !

4. சிவாஜி வாயிலே ஜிலேபி - சர்சையில் இருந்த இடம் !

5. தென்னை மரத்தில் கொட்டிய தேள் - ப்ளாக்ஸ்பாட் முடக்கம் !

6. ஊர் சிறிதா? பங்களா சிறிதா? - சிறுதாவூர் வெவகாரம் !


இந்த கதைகள் பிடிக்கவில்லை என்றால் இங்கே ஒரு சைவ, ஒரு அசைவ கதையும் உண்டு

24 ஜூலை, 2006

கடவுள் நம்பிக்கை (சிறு கதை) !

சேகரை சென்று பார்க்க வேண்டும். பார்த்து இரண்டு நாளாகிறது. அவன் இரண்டு நாட்களுக்கு முன் எதிர்பாராத விதமாக மோட்டர் பைக் விபத்தில் சிக்க, தற்செயலாக வேறொரு வேலையாக அதே வழியில் சென்ற நான் இரத்த வெள்ளத்தில் துடித்து, சுயநினைவற்றுக் கிடந்த அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு வந்து இரண்டு நாட்கள் ஆகிறது.

சேகரின் நட்பைப் பற்றி நினைத்துக் கொண்டே ஆஸ்பத்திரி நோக்கி பைக்கை செலுத்தினேன்.

சேகர் என்னுடைய நண்பன், +2 படிக்கும் போது அருகருகே உட்கார்ந்திருந்ததில் நெருக்கமானோம். பாடங்களை ஒன்றாகப் படிப்பது, ஒரே வாத்தியாரிடம் ஸ்டூசன், பக்கத்துத் தெருவில் வீடு என நெருக்கமான விசயங்கள் எங்கள் நட்பை ஆழப்படுத்தியது.

+2 முடித்ததும் இஞ்சினியரிங் சேர்ந்தோம், அவன் எலக்டிரிகலும், நான் எலக்டரானிக்ஸ் பாடமும் எடுத்துப் படிக்க, இருவரும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புக் குறைந்திருந்தது. ஆனாலும் இருவரும் விசேச நாட்களில் கோவிலுக்கு சேர்ந்து செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தோம். +2 படித்து முடித்ததும், கண்ட கண்ட புத்தகங்களைப் படித்து நெற்றி பட்டைக்கு, நான் பட்டை போட்டுவிட்டேன். அதன் பிறகு கோவில் விசயங்களில் ஆர்வம் ஏற்படவில்லை. சேகருடன் பேசிக் கொண்டு செல்வதற்கு ஒரு வாய்ப்பாகவும், பெரிய சிவன் கோவிலில் உள் பிரகாரத்தில் உள்ள குளிர்ச்சியையும், அங்கு நிலவும் அமைதியை ரசிக்கவும் அவனுடன் செல்வதுண்டு. சேகர் என்னைப் போல இல்லை, ஆழ்ந்த பக்தி உள்ளவன் பாசுரங்களை மனப்பாடம் செய்து நன்றாக பாடுவான், அர்சகர் கொடுக்கும் விபூதியை பயபக்தியுடன் பூசிக் கொள்வான்.

நான் சாமி விசயத்தில் ஈடுபாடு காட்டாததை எதிர்த்து வாதிடுவான். நானும் பதிலுக்கு

'சாமியே நேரில் வந்து சொன்னால் கோவிலுக்கு வருகிறேன்' என்று சமாளிப்பேன். சில சமயங்களில் என்னுடைய பகுத்தறிவு பேச்சு அவனுக்கு பிடிக்காவிட்டாலும்,

'நீ சொல்வதும் சரிதான், ஆனால் கடவுள் நம்பிகை இல்லை என்றால், யாரும் பாவ புண்ணியங்களுக்கு பயப்பட மாட்டார்கள், எனக்கு .. இதில் திருப்தி கிடைத்திருக்கு நண்பா' என்று சொல்வான்.

'அப்பறம் ?'

'அப்பறம் என்ன அப்பறம், கடவுள் நம்பிக்கை இல்லை என்று சிலைகளை உடைப்பவர்களின், செய்கைகளையும் நான் கண்டிக்கிறேன்'

'தாராளமாக, அடுத்தவர் நம்பிக்கையை பாழ்படுத்துபவர்களும் அயோக்கியர்கள் தான், நீ ஒன்றை மறந்தும் பேசுகிறாய்?'

'நீ என்ன சொல்ற புரியல?'

'கடவுள் நம்பிக்கையற்றோர், சாமி சிலைகளை உடைத்திருக்கிறார்கள் அது கண்டிக்கத் தக்கது உடன்படுகிறேன், ஆனால் மசூதிகள், கோவில்கள், சர்ச் இவற்றையெல்லாம் உடைத்துவிட்டு, வெட்டிக் கொண்டு சாகிறவர்கள் யார் ? கடவுள் நம்பிக்கை அற்றவர்களா ?' என்றேன் தொடர்ந்து

'நம்பிக்கை என்பது நம்மீது திணிக்கப்பட்டதாக இருக்கக் கூடாது, நாம் ஏற்றுக் கொண்டதாக மட்டுமே இருக்கவேண்டும், அந்த விதத்தில் என்னால் உணர முடியாத ஒன்றை ஏற்றுக் கொள்வதும் என்னால் முடியாது' என்று சொன்னேன்.

'நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறது, அதுதான் கடவுள்' என்றான்

'நீ சொல்வது சரி என்றாலும், அது எந்த கடவுள் ? அல்லாவா, ஜீசஸ் அல்லது நம்ம சிவன், விஷ்ணு?'

'உன் அளவுக்கெல்லாம் ஆராய முடியாது, எனக்கு நம்பிக்கை இருக்கிறது'

'அப்படி என்னதான் உன் நம்பிக்கை ?'

'கந்தன் என்னும் மந்திரத்தை - என்ற பித்துகுளி முருகதாஸின் பாடலைக் கேட்டுப்பார், அதில் உள்ள உருக்கம், என்னை உருக்குவது, நிஜம். இந்த மாதிரி பக்திப் பாடல்கள் என்னை ஒருவாறு கடவுளை உணர வைக்கிறது. உனக்கு நம்பிக்கையில்லை என்றால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை' என்றான் சேகர்

'சேகர், நானும் பல பாடல்களைக் கேட்டிருக்கிறேன்... நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா, கடலலை தாலாட்டும் வேளாங்கண்ணிப் பாடல்கள் கூட உருக்கமான பாடல்கள் தான், அவை ஏன் உன்னை உருக்கவில்லை?' என்றேன்.

'பித்துக்குளியார் பாடலில் உள்ள நெருக்கம் இந்த பாடல்களில் எனக்கு இல்லை என்பது உண்மைதான்'

இப்படியாக எங்கள் விவாதங்கள் சென்றாலும், நட்பில் நெருக்கம் குறையவில்லை. சேகரின் பெற்றோர்களுக்கு என் பேச்சின் சாமி நம்பிக்கை குறித்த மாற்றம் பிடிக்காமல் போனதும் உண்மை. என் பெற்றோரிடம் பகுத்தறிவு பற்றி நான் பேசுவதில்லை, எங்கு கோவிலுக்கு கூப்பிட்டாலும் முன்பு போல் ஈடுபாடு காட்டாததால், வயசில் இப்படித்தான் இருப்பான் என்று விட்டுவிட்டார்கள்.

சேகரும், நானும் கல்லூரியை முடித்துவிட்டோம், வேலைத் தேடவும் தொடங்கினோம். இனிமேல் சைக்கிள் உனக்கு சரிப்பட்டு வராது என்று யமகா பைக் ஒன்றை வாங்கிக் கொடுத்தனர் என் பெற்றோர்.

நல்லதாகப் போயிற்று என்று நானும் சேகரும் வெளியூர்களில் சென்று புதுப்படங்களைப் பார்பதற்கும், ஊர்சுற்றுவதற்கும், அது நல்ல வசதியாகப் போயிற்று.

அன்று ஒரு நாள் புதுப் படம் பார்க்க செல்லும் போது

'என்ன சேகர், பக்திப் பழமாகவும் இருக்க, கவர்ச்சி நடிகைகளையும் ரசிக்கிற... எனக்கு புரியல நண்பா'

'டேய், அது வேற! அது வேற உணர்வு, இது ஒரு உணர்வு, ரெண்டையும் போட்டுக் குழப்பிக்கொள்ளாதே' என்பான்

'அதாவது சாப்பிடும் போது வேற எதாவதையும் நினைக்கக் கூடாது, வேறு எதாவது செய்யும் போது சாப்பிடுவதை நினைக்கக் கூடாது, அதானே' ?

'எப்படி வேண்டுமானலும் வெச்சிக்க'

'சேகர், எனக்கு வேலைக் கிடச்சிடுச்சிடா அடுத்த மாதம் முதல் செல்ல இருக்கிறேன், அனேகமாக நம்ம ஊர் சுற்றுவதற்கு இதோட முற்றுப் புள்ளி வச்சிடலாம்'

'சரிடா, நண்பா எங்க வீட்டில் சொல்லி நானும் புது பைக் வாங்கிக் கொள்கிறேன், இப்பல்லாம், சைக்கிளிலோ, பஸ்ஸில் செல்வதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை, எல்லாம் உன் பைக்கை ஓட்டி ஓட்டி நானும் அடிக்ட் ஆயிட்டேன்' என்றான்

அடுத்த ஒரு வாரத்தில் ஒரு வெள்ளிக் கிழமை என்னுடைய வண்டி போலவே ஒரு வண்டியை வாங்கப் போவதாக சொன்னான்.

வாங்கியிருக்கிறான். அவன் சொன்ன வெள்ளிக் கிழமை இரவு 8 மணிக்குத் தான் அந்த விபத்தும் நடந்து இருக்கிறது. தற்செயலாக அந்த வழியாக சென்ற நான் அவனை விபத்திலிருந்து மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தேன்.

அவனைத் தான் இன்று மீண்டும் பார்க்கச் செல்கிறேன். பைக் ஆஸ்பத்திரியில் நுழைந்ததும், நிறுத்திவிட்டு உள்ளே சென்றேன்.

சேகர் கை,கால்கள் மற்றும் தலையில் பலமாக கட்டு போடப்பட்டிருந்தது. அவனுடைய அம்மா வரவேற்றார்கள்.

'வாப்பா, உன்னைத் தான் நூறுதடவைக்கு மேல் கேட்டுக் கொண்டிருந்தான், நீ அலுவலக வேலையில் புதிதாக சேர்ந்திருக்கிறாய், உன்னை தொந்தரவு செய்யக் கூடாது என்று சொல்வில்லை' என்றார் சேகரின் அம்மா

'ஆமாம், அம்மா புதிதாக ஒரு அசைன்மன்ட் கொடுத்துவிட்டார்கள், அதுதான் சனி ஞாயிறில் ஊரில் இருக்க முடியாமல் போயிற்று'

'பராவாயில்லப்பா, நீ மட்டும் அன்னிக்கு சரியான நேரத்துக் கொண்டு வந்து சேகரை சேர்த்து, ப்ளட் கொடுக்காமல் இருந்திருந்தால், நாங்கள் இன்நேரம் சேகரை இழந்திருப்போம்' நெகிழ்ந்தார் சேகரின் அம்மா.

'அம்மா, அது என்னோட கடமை, நண்பனுக்கு இது மாதிரி வேளைகளில் உதவவில்லை என்றால், உடலில் இரத்தம் ஓடியும் என்ன பயன்?' என்றேன்.

'உன்ன மாதிரி, நல்ல ப்ரென்ட் கிடைச்சதுக்கு சேகர் கொடுத்து வச்சிருக்கான்னு நினைக்கிறேன், சரி நீ பேசிக்கிட்டு இரு, நான் போயி வீட்டிற்கு சென்று சாப்பாடு எடுத்துக் கொண்டு வருகிறேன்' என்று விடைபெற்றார்.

அவர் சென்றதும் சேகரைப் பார்த்தேன். அவன் நன்றிப் பெருக்குடன் என்னைப் பார்த்து நா தழுதழுக்க நன்றி சொல்ல வந்தான். அவன் கைகளை பிடித்துக் கொண்டேன்.

'அதான் எல்லாம் சரியாகிடுச்சில்ல, நாங்கள்லாம் எதுக்கு இருக்கோம், நண்பா' என்றேன்

'டேய், எனக்கு சாமின்னாலே, இப்ப வெறுப்பு வந்துடுச்சிடா, உனக்குத் தான் தெரியுமே, நான் எவ்வளவு கடவுள் நம்பிக்கை உடையவன் என்று' என்றான்

'சரி, அதெல்லாம் இப்ப பேசவேணாம்'

'இல்லடா, புது பைக் வாங்கி ஆசை ஆசையா கோவிலுக்கு எடுத்துச் சென்று பூஜைப் போட்டுவிட்டுதான், பைக்கையே ஓட்டினேன். நான் இவ்வளவு பக்தியாக இருந்தும் இதெல்லாம் நடந்திருக்குன்னா, சாமி இல்லேன்னுதானே அர்த்தம்?'

'சேகர், உணர்ச்சி வசப்படாதே'

'இல்லடா, எனக்கு ஏண்டா இதெல்லாம் நடக்கனும் ?, கும்புடுறவங்கள கைவிடுறதெல்லாம் சாமியா ?'

'சேகர், நான் ஒன்னு சொல்றேன், தப்பா நெனச்சிக்காதே', விபத்துக்கள் யாரா இருந்தாலும் கவனக்குறைவாக இருந்தால், அது நிச்சயம் நடக்கத்தான் செய்யும், அதையும் நம்பிக்கையையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது'

'நீ எனக்கு, சமாதானம் சொல்றேன்னு நினைக்கிறேன்'

'சமாதானமெல்லாம், இல்ல சேகர், இது உண்மைதான், ஒரு விபத்தை வைத்து நம் நம்பிக்கையை எடை போடக் கூடாது, உன்னை மாதிரி நானும் கவனக் குறைவாக இருந்து, விபத்து எனக்கு ஏற்பட்டு இருந்தால், நான் சாமி கும்பிடாததால் தான் என்னைக் சாமி தண்டிச்சிடுச்சின்னு நான் நினைக்க முடியுமா ?' அப்படி நினைத்தால் என் நம்பிக்கை வெறும் வெளி வேசம் தானே?'

'இல்லடா, சாமியும் இல்லை, ஒரு மண்ணும் இல்லை' என்று எங்கேயோ வெறித்துப் பார்த்தான்

'சேகர், உனக்கு இருக்கிற உடம்பு வலியில் இப்படி பேசுகிறாய் என்று நினைக்கிறேன், ஒன்று ஏன் உனக்கு தோன்றவே இல்லை?'

'நீ என்ன சொல்ற'

'சேகர், கடவுள் நம்பிக்கை உள்ள நீ ஏன் இப்படி நினைத்துப் பார்க்கக் கூடாது ?'

'எப்படி நினைத்துப் பார்ப்பது, அதான் எனக்கு அதெல்லாம் பொய்யின்னு புரியுதே'

'நினைத்துப்பார், விபத்து நடந்தது எதிர்பாராதது என்றாலும், நான் அந்த நேரத்தில் அங்கு இருந்தது'

'நீ என்ன சொல்ல வருகிறாய் ?'

'உனக்கு விபத்து நடந்த நேரம், சரியாக நான் அங்கு வந்தது ஒரு தற்செயலாக இருக்க முடியாது, என்னை ஒரு வேளை சாமி தான் அந்த வழியாக அனுப்பி உன்னை காப்பாற்ற வைத்தது என்று ஏன் உன்னால் நினைக்க முடியவில்லை ?'

சேகர் என்னை வினோதமாக பார்தான், கண்கள் பனித்தன, மெய்சிலிர்ப்பு அவன் தேகத்தில் தெரிந்தது.

உடனே அவன் என் கைகளை இருக்கமாக பற்றிக் கொண்டான்.

'நான் அவசரப்பட்டு, சாமி மேல் சந்தேகப் பட்டுவிட்டேன், அதே போல் நாத்திகம் பேசுகிறவர்கள் இறை நம்பிக்கையை கேலி மட்டுமே பேசுவார்கள், அதன் உணர்வுகள் அவர்களுக்குத் தெரியாது என்றும் தப்பாக நினைத்துக் கொண்டிருந்தேன்'

'நம் நம்பிக்கைகள் எதுவாக இருந்தாலும், அந்த நம்பிக்கைகளை கடைபிடிப்பதன் மூலம், அவைகள் அடுத்தவர்களிடம் நம்மை உயர்த்திக் காட்டுவதாக இருக்கவேண்டும், மாறாக அவைகள் அடுத்தவர் நம்பிக்கையை கெடுப்பதாக இருக்கக் கூடாது' மேலும் தொடர்ந்து,

'அடுத்தவர்களின் நம்பிக்கையை கேலி செய்யும் நம்பிக்கைகள் எல்லாமுமே அவநம்பிக்கைகள் தான்' என்றேன்

'உன்னிடம் பலநாள் பழகியும், எனக்கு புரியாத விசயம் உன் நாத்திக நிலைப்பாடுதான், அது இப்ப தெளிவாகிவிட்டது' என்றான்

'சரி சரி, ரொம்ப உணர்ச்சி வசப்படாதே, அம்மா கொண்டுவந்த சிவன் கோவில், திரு நீறு அங்கே இருக்கிறது, அதை எடுத்துத் தருகிறேன், நம்பிக்கையுடன் பூசிக் கொள், சீக்கிரமே குணமாகிவிடுவாய்' என்றேன்

நான் எடுத்துக் கொடுக்கவும், அதை பயபக்தியுடன் எடுத்துப் பூசிக்கொண்டான்.

'சேகர், டாக்டரிடம் விசாரித்தேன் மூன்று வாரத்தில் டிஸ்ஜார்ஜ் பண்ணிடுவாங்களாம், உனக்கு பிடிச்ச நடிகையோட புதுப் படம் வருது, மூன்று வாரம் கழித்து போகலாம் தானே' என்று கண் அடித்தேன்.

காலால் எட்டி உதைக்க முயன்று வலி பொருக்க முடியாமல் 'அம்மா' என்றான்.

22 ஜூலை, 2006

சார்பு நிலை - வலை அரசியல் !

தனித்தன்மை என்ற சிறப்பை அழிப்பது சார்பு நிலை என்னும் தன்மையே ஆகும். சார்பு நிலை என்றால் ஒன்றைச் சார்ந்து இருப்பது என்று எல்லோருக்கும் தெரியும். ஏன் ஒன்றைச் சார்ந்தே இருக்கவேண்டும் ? என்பதை எத்தனைப் பேர் தங்களுக்குள் கேட்டுக்கொள்கிறார்கள் என்பதுதான் தெரியவில்லை.

நமக்கு சில விசயங்கள் பிடித்திருக்கும், அதன் மூலம் ஒத்த கருத்துக்களை உடைய ஒருவரை நமக்கு பிடிக்க ஆரம்பித்துவிடுகிறது. ஒத்தக் கருத்துடயவருக்கும் நமக்கும் சில விசயங்களில் கருத்து வேற்றுமை இருக்கலாம். ஆனால் அந்த கருத்து வேற்றுமைகளை நாளடைவில் நம்மைச் சார்ந்தவர் வைத்திருப்பது என்பதால் நாமும் நாளடைவில் அந்த வேற்றுக் கருத்துக்களை முதலில் சகித்தாலும், பிறகு ஊள்வாங்கிக் கொள்வதால் நாளடைவில் மாற்றம் ஏற்பட்டு, அந்த கருத்துக்களை வைத்திருப்பவரைக் காட்டிலும் அதிகம் விரும்ப ஆரம்பித்துவிடுவோம்.

ஆக நம் தனித்தன்மையாக எதிர்த்துவந்த சில மாற்றுக் கருத்துக்களை, விரும்பி ஏற்றுக் கொண்ட ஒரு வேண்டாத பழக்கம் போல் புதிதாக ஏற்றுக் கொண்ட சார்பு நிலை மூலம் நாமே நம் தனித்தன்மை அழிக்க துணிந்தும் விடுகிறோம்.

இதுமட்டுமல்ல, முன்பு தன் சொந்தக் கருத்துக்களை, தான் விரும்பிய விசயங்களை முன்னைக் காட்டிலும் முனைப்புடன் தானே அழிப்பதில் தீவிரம் காட்ட ஆரம்பித்து விடுவோம். இதில் யாருக்கு வெற்றி ? கண்டிப்பாக சார்பு நிலைக்குள் (தெரியாமல்) சிக்கவைத்தவருக்குத் தான் வெற்றி. அவர் எதிர்க்கும் விசயங்களை அவர் தனி ஒருவராக எதிர்க்கவேண்டியதில்லை. மேலும் அவரை நேரிடையாக எதிர்க்கும் விசயங்களையும் அவரே எதிர்க்கவேண்டும் என்ற நிலை இல்லாது, அந்த வேளையை சார்பு நிலையில் பீடிக்கப்பட்டவர்கள் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் சார்பு நிலையில் பீடிக்கப்பட்டவருக்கு மூளை மழுங்கியதுதான் மிச்சம், சுய சிந்தனைகளை தொலைத்தது தான் மிச்சம்.

ஒரு விசயம் அல்லது ஒரு கருத்து நமக்கு மற்றவர்களிடம் ஒத்துப் போகிறதா ? அதைப் பாராட்டுவதுடன்,நிறுத்திக் கொள்ளலாம். அவருடைய எல்லாக் கருத்துக்களுக்கும் முட்டுக் கொடுப்பது தேவையற்றது. அவ்வாறின்றி நமக்கோ, நமக்கு பிடித்த மற்றவருக்கோ சில விசயங்களில் மாற்றுக் கருத்து இருக்கிறது என்று கவலைப்படுகிறீர்களா ? அது தவறான கருத்து எனும் போது தெளியவைக்க முயலலாம். இல்லையெனில் விட்டுவிடலாம். மாற்றுக் கருத்து இருக்கிறது என்பதற்காக முற்றிலும் நிராகரிக்கத் தேவையில்லை. அப்படி நிராகரித்தால் சார்ப்பு நிலை உங்களுக்குள் வந்துவிட்டதாக நினைத்துக் கொண்டு தெளிவடைவது நலம்.
நமக்கு தெரியாமல் வளரும் சார்பு நிலையை நாமே கண்டு கொள்ளாமல் விட்டால், தனித்தீவு, குழுமங்கள் இவற்றில் ஏதோ ஒன்றில் சிக்கிக் கொள்வோம். கிணற்றுத் தவளைக்கும் நமக்கும் பிறகு வேறுபாடு இல்லாமல் போய்விடும்.

அவரவர் கருத்து அவரவர்கே, நாம் சார்ந்துள்ளவர்களின் கருத்தாக்கங்கள் எல்லா வற்றையும் தாங்கிப் பிடிக்க வேண்டும் என்பது தேவையற்ற செயல்தானே. ஒரு பூந்தோட்டத்தில், ஒரே இனத்தில் ஒரே தோற்றத்தில் இருக்கும் வெவ்வேறு (ரோஜா)செடிகளில், பூக்கள் வேறு நிறங்களில் பூக்களாம். இந்த வண்ணம் எனக்கு பிடிக்க வில்லை என்று அந்த வண்ணம் சார்ந்த செடிகளை வெட்டி வீசினால், மீதம் இருக்கும் செடிகளில் பூக்கள் பூத்தாலும் பூந்தோட்டம் வண்ணமயமாய் இருக்காது !


புதிய வலைப்பாதிவாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய வலை அரசியலில் இதுவும் ஒன்று. அவர்கள் ஏதாவது ஒரு குழுவில் சிக்கிக்கொண்டு தங்கள் சுய சிந்தனைகளைத் தொலைத்துவிடக் கூடதென்ற சின்ன அக்கறை.

இந்த பதிவுக்கு என்ன அவசியம் ? அது ஒரு சிதம்பர ரகசியம்.

இந்த கட்டுரையின் கருத்தையும் சார்பு நிலையற்றுப் படித்துத் தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டால் நல்லது. அந்த விதத்தில் இந்கு பின்னூட்டமிட்ட திரு சிவபாலனின் கருத்துக்களை நான் மதிக்கிறேன்.

பிகு : இந்த பதிவு ... முந்தைய
இந்த பதிவின் தொடர்ச்சி என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

21 ஜூலை, 2006

கேள்வி ஞானம் !

அறிவு என்ற சொல்லை ஆழப்படுத்துவது பின்னால் நிற்கும் கேள்வி. கேள்விகள் இல்லையென்றால் இன்றைய உலகம் அறிவியலில் முன்னேறியிருக்குமா என்பது சந்தேகம். நாம் பேசத்தொடங்கும் முன் முதலில் நம் கண்கள் கேள்வியை எழுப்பி விடை தெரியாவிட்டால் மருண்டு அழத்தொடங்கியது. ஆக முதல் கேள்வி என்பது நம் முதல் அழுகையிலிருந்து தொடங்கியதுதான்.

மூன்றுவயதில் கேள்வி கேட்க ஆரம்பிக்கும் குழந்தைகள் ஆறுவயது வரை கேள்வி கேட்பதை நிறுத்துவது இல்லை. ஒரு நாளைக்கு 4 வயது குழந்தை 400 கேள்விகள் கேட்டு பெற்றவர்களை திணற அடிப்பதாக தெரிகிறது. கேள்வி கேட்கும் மாணாக்கர்களையே பதில் தெரிந்த ஆசிரியர்கள் விரும்புவார்கள். பதிலுக்கு பாடத்திலிருந்து கேள்வி கேட்டு தேர்வு நேரத்தில் திணற அடிப்பார்கள். பதில் தெரியாத கேள்விகள் பல உண்டு. ஆனால் பதிலுக்கான கேள்விகள் சில மட்டுமே என்பதும் நமக்கு தெரிந்ததுதான்.


அண்மையில் 'உலக ரெட்சகர் யார் ?'என்ற கேள்வியை மாணக்கர்களுக்கு வைத்துவிட்டு, அதைத் தொடர்ந்த பல கேள்விக்கனைகளை தாக்குப்பிடிக்க முடியாமல் தமிழக அரசின் கல்வித்துறை திணறியதை பலரும் அறிந்தது.

கேள்விகள் தான் ஒரு நாட்டை வழி நடத்துகிறது. சட்டசபை கூச்சல், பாராளுமன்ற பாய்ச்சல் எதுவாக இருந்தாலும் அவை எல்லாம் கேள்வி என்ற ஒரு சொல் மூலம் தான் இயங்குகின்றன. கேள்வி கேட்கும் உரிமை மறுக்கப்படும் போது அங்கு ஜனநாயகம் செத்துவிட்டதாக சொல்கிறார்கள். கேள்வி கேட்க எப்பொழுது ஒரு சமூகம் துணிகிறதோ அப்போது அந்த சமூகம் நிமிர ஆரம்பிப்பதாக சொல்கிறார்கள். கேள்வி கேட்பதை தடை செய்யும் அரசுகள் விழுந்துவிட்டதாகவும் சொல்கிறார்கள். ஆகவே, ஒரு சமுகத்தின் வீழ்ச்சியே எழுச்சியோ அவை கிடைக்கப்படும் பதிலைக்காட்டிலும் கேட்கப்படும் கேள்விகள் மூலமே தீர்மானிக்கின்றன.


மிக மிக எளிமையான விசயமும், மிகமிக கடுமையானதும் கேள்வி கேட்கப்படுவது என்பதுதான். பதில் தெரிந்தே கேட்கப்படும் கேள்விகள் பெரும்பாலும் கேள்விக்குறியாகவே பார்க்கப்படுகிறது என்பதும் நாம் உணர்ந்ததுதான்.

சிந்தனைகள் என்பது மனதில் எழும் கேள்விகளின் தொகுப்பு என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன். அத்தகைய தொடர் கேள்விகள் பல்வேறு தேடலாக வெளிப்படுகிறது. இப்படிப்பட்ட சிந்தனையை வளர்க்கும் கேள்விகளே, விஞ்ஞானமாகவும், ஆன்மிகமாகவும், பகுத்தறிவாகவும் வெளிப்படுகிறது.

முழு பிரபஞ்சமும் எண்ணிலடங்கா கேள்விகளை வைத்துக் கொண்டுதான் இயங்குகிறது. முதலில் அந்த கேள்விகளை ஒவ்வொன்றாக கண்டுகொண்ட நாம், அதற்கான பதிலில் அடுத்த கேள்வியை கண்டுபிடிக்கிறோம். இப்படியாக அறிவு நிலையின் வளர்ச்சி என்பது கேள்விஎன்னும் ஊட்டச்சத்தாலேயே வளர்கிறது.

இன்று எதைப்பற்றி நினைக்கலாம் என்ற கேள்வியை நமக்குள் நாம் கேட்கும் பொழுது, அதைத் தொடர்ந்து ஒரு தேடல் வெளிப்பட்டு ஆக்கங்களாக சிறகடிக்கிறது. தொடர்ந்த கேள்விகளின் தாக்குதல் உங்களுக்குள் இருந்தால் உங்கள் ஆற்றலும், அறிவும் வளர்சியில் இருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம் . இந்திய சமயங்களின் தோற்றமும் வளர்ச்சியும் தருக்க சாஸ்திரம் என்ற கேள்விகளின் அடிப்படையில் தோன்றியதுதான்.

ஞானமோ, மெய்ஞானமோ, விஞ்ஞானமோ அவைகள் யாவும் கேள்விகள் தேடித்தந்த விடைகளே!

20 ஜூலை, 2006

pk - தொடரும் இந்திய ஊடுறுவல் !

பாக்கிஸ்தானிலிருந்து செயல்படும் பல்வேறு ஊடுருவல்கள் தடைசெய்யப்பட்டும், ஒரு புதிய ஊடுறுவல் வெற்றிகரமாக தடைகளை தாண்டி வருகிறது என்பது அதிர்ச்சி அளிக்கிறது. குண்டு வெடிப்பிற்கு முன்பு இப்படி ஒரு ஊடுறுவல் பாக்கிஸ்தானில் இருப்பதே இந்தியாவுக்கும், ஊடக பாதுகாப்பு அமைப்புகளுக்கும் தெரியவில்லை.

தடைகளை நாங்கள் வெற்றிகரமாக தாண்டுவோம் என்று சவால்விட்டு வெற்றிகரமாக செயல்பட்டும் வருகிறது. நம் இந்தியர்களும் அது விரித்த வலையில் விழுந்துவிட்டார்கள் என்று சொல்லத்தான் வேண்டும்.
இதை நம் இந்தியர்களும் தங்கள் சுயநாலனுக்காக பயன்படுத்திக் கொள்வதாகவும் தெரிகிறது.

இந்திய அரசு பல்வேறு அடித்தளங்களை தடைசெய்தாலும், இந்த அடித்தளம் எல்லாவற்றையும் விஞ்சும் அளவிலும், தடைசெய்யப்பட தளங்களை தன்னுள் இணைத்து இந்தியாவுக்குள் அனுப்புவதில் வெற்றி கண்டுருப்பதைப் பார்க்கும் போது. இந்திய அரசு கண்மூடிக்கிடக்கிறதா என்று தெரியவில்லை.

பொது இடத்தில் இந்த தள அமைப்பை நம்போன்ற இளைஞர்கள் பயன்படுத்திக்கொண்டு கொக்கறிக்கிறார்கள். நாங்கள் நினைத்ததை சாதிப்போம் தடா, பொடா எதுவோண்டுமானலும் போட்டுக்கொள் எங்கள் குரல்வளையை நெறிக்கமுடியாது என்று முழங்குகிறார்கள்.
ஆனாலும் இதன் ஆட்டமெல்லாம் இன்னும் இரண்டொரு நாளைக்குத்தான் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்திருக்கிறது.


நமக்கு நெருக்கமாக தமிழ்மணத்திலேயே இந்த ஊடுறுவலைப் பார்த்தும், கண்டும் காணமல் எல்லோரும் இருக்கிறோம்.


ரொம்ப குழப்பமாக இருக்கிறதா ? அது pk ...pk என்று தமிழ்மண இடுகைகளின் முகப்பிலும் மறுமொழி இடுகைகளின் முகப்பிலும் தெரியும் 'pk' ..... என்ற pkblog தான் :)))

pkblog பாகிஸ்தானிலிருந்து இயங்கி blogspot சேவைகளை இணைத்துத் தருகிறது. இது தான் நியூஸ். இது ஜோக்குக்காக எழுதின பதிவு யாரும் சீரியஸ் ஆக எடுத்துக்காதீர்கள். ஆனால் செய்தி உண்மை :))))

pk என்றாலே இந்தியாவிற்கு தலைவலிதான் போலும்.

pk ஐ உபயோகப்படுத்தி இன்றைக்கு அதிகம் குழப்பத்துக்கு ஆளானவர்கள் நானும் திரு டிபிஆர் ஜோசப் ஐயாவும் தான். :)))))


அவர் pkவைப் புகழ்ந்து அவர் எழுதிய பதிவே காணமல் போய்விட்டது, அதற்கு போட்ட பின்னூடமெல்லாம்
திரும்பிப் பார்கிறேன் 175 போய் சேர்ந்து இருவரும் குழம்பி... ஒரே தமாஸ் ஆகிவிட்டது :)))

பி.கு : இந்த பதிவுக்கு பின்னூட்டம் போடுபவர்களுக்கு நான் தடைசெய்துள்ள சொற்கள்... மதம் ... தேசபக்தி ... மற்றும் உகு, வெகு



துன்பம் வரும் நேரத்திலே... :) ங்க...

அப்படி என்ன துன்பம் வந்துவிட்டது ? அந்நியன் இருக்கிறார், பிகே ப்ளாக் இருக்கிறது, நமக்கு தெரியாத குறுக்கு வழியா ? அல்லது கிறுக்கு வழியா ? ... ஆயிரம் கைகள் மறைத்தாலும் வலைப்பூக்கள் மலர்வதையும் மணம்வீசுவதையும் எவர் தடுக்கமுடியும். டிஸ்கி போதும்னு நினைக்கிறேன். எழுதிய விசயம் முகப்பில் வருவதைத் தவிர்க்கத் தான் நீட்டி முழங்குவது.


மனைவி : என்னங்க, நான் இங்க கழுதையா கத்திக்கிட்டு இருக்கேன், நீங்க என்னன்னா காதுல வாங்காம எதையோ தேடிகிட்டு இருக்கிங்க
கணவன் : ஓ... அதுதான் இங்க இருந்த நீயூஸ் பேப்பரை காணுமா !

ஒருவர்: நீங்க சொன்ன ஜோக்குக்கு சிரிப்பு வரவில்லையே ?
மற்றொருவர்: நான் சொன்னது டியூப்லைட் ஜோக் லேட்டா தான் சிரிப்பு வரும்.

நண்பர்1 : உங்களை 'டியூப் லைட்டு' சொல்லியும், சிரிக்கிறீர்களே !
நண்பர்2 : இதை கண்டுபிடிக்க உங்களுக்கு இவ்வளவு நாள் ஆனதே என்று நினைத்தேன் அதுதான் சிரித்தேன்

நர்ஸ் : டாக்டர் நீங்க கொடுத்த தூக்க மாத்திரையை சாப்பிட்டும் அந்த பேசன்ட் எழுந்து நடந்து போரார் பாருங்க
டாக்டர் : சீக்கரம் வேகமாக போய் அவரை புடிங்க, அவருக்கு இன்னும் தூக்கத்தில் நடக்கும் வியாதிக்கு மருந்து கொடுக்கவில்லை.

பக்கத்து வீட்டுக்காரார் 1: அவன் ரொம்ப கெட்டப் பையன் சார்
பக்கத்து வீட்டுக்காரார் 2: என்ன பொண்ணுங்க கூட சுத்துரானா, இதெல்லாம் இந்த வயசில் சகஜம் விடுங்க
பக்கத்து வீட்டுக்காரார் 1 : அதுதான் இல்லை, சாமியார் ஆகப்போறானாம்

18 ஜூலை, 2006

கருடா சவுக்கியமா ?


நல்ல பாம்புகள் என்றாலும்
நாக்கில் இருப்பது விசமல்லவா ?
நடராஜனின் கழுத்தை சுற்றிக் கொண்டு
நடமாடும் இந்த பாம்புகள்,
நஞ்சு மட்டுமா கக்குகின்றன கூடவே
நஞ்சை விடக் கொடும் விசமத்தையும் தான் !
நச்சுப் பாம்பை அடிக்கலாமா ? கூடாது !
நடராஜனிடம் இருக்கும் போது
நாடவேண்டாம் தெய்வ நிந்தனை !
நம்மைப் போலவே நடராஜனைத்தான் இந்த
நல்ல பாம்புகளும் நம்பியிருக்கின்றன !
நம்பினார் கெடுவதில்லை ! என்ற
நான்கு மறை தீர்ப்பு பொய்துவிடும் !
நஞ்சு தீண்டப்பட்ட நான் என்ன செய்யட்டும் ?
நல்லப் பாம்பை நமஸ்காரம் பண்ணட்டுமா ?
நஞ்சுண்ட நாதனை நாமும் பின்பற்றி
நல்லப் பாம்பிற்கும் நல்லதையே நினைப்போம், ஆனால்
நாளை நம்மை மீண்டும் கடித்தாலும் கடிக்கும், எனவே
நச்சுப் பல்லைப் பிடிங்கினால் போதும், மற்றதை
நடராஜன் பார்த்துக் கொல்வான் !

பிகு: பாம்புகள் எல்லாமே விசம் உள்ளது பாம்புகளை கொல்லவேண்டும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை, புற்றில் 'சிவனே' என்று படுத்துறங்கும் பாம்புகளும் உண்டு, விஷ(ம)ம் அற்ற பாம்புகளும் உண்டு. அவைகளை நாம் போற்றலாம், கோவில் பாதுகாப்பில், கோவிலில் நாம் ஊற்றும் பாலை குடித்துவிட்டு, முட்டையும் கேட்கும் பாம்புகள், நாம் தெய்வத்தை கும்பிட வருவதை தெரிந்தும் சீறி கடித்தால் மட்டுமே இந்த உபாயம்.

blogger quick resoluttion (உடனடி தற்காலிக தீர்வு :)

இந்த http://www.blogger.com/comment.g?blogID=10267267&postID=115319907938327120 உரலை வெட்டி ஒட்டுங்கள், இது போல் உங்கள் ஐடியை, முகப்பில் நீங்கள் எழுதும் பதுவில் முதலில் சேர்த்துவிட்டால் பின்னூட்டமிடவும், மறுமொழியிடவும், பயன் படும்.

உங்களுக்கு தேவையான பதிவுகளை படிப்பதற்கும் பின்னூட்டற்கும் post ஐடியுடன் அவர்களை உங்கள் பதிவில் பின்னூட்ட மிட உங்கள் பதிவில் வேண்டுகோள் விடுங்கள். பிளாக்கர் அக்வண்ட் மூலம் நீங்கள் பின்னுட்டத்தை பார்க்க முடியும், அதன் மூலம் மூலம் பின்னூட்டமிடவும், பதிவுகளை படிக்கவும் முடியும். show original post என்ற லிங்கை அழுத்தினால் பதிவு முழுவது ப்ளாகர் வழியாகவே தெரியும். இது ப்ளாக் ஸ்பாட் மூலம் செல்லாததால் உங்களால் முழுப்பதிவையும் பின்னூட்டதையும் படிக்க முடியும்

போஸ்ட் ஐடியை கண்டுபிடிப்பது எப்படி? post command மவுசை மேய்த்தால் முழு உரலும் தெரியும்

உங்கள் பதிவின் போஸ்ட் ஐடியை, கண்டுபிடிக்க உங்கள் ப்ளாக்கர் எடிட் போஸ்ட் மீது மவுசை ஓடவிட்டீர்கள் என்றால் தெரியும், உங்களுக்கு தேவை ப்ளாக்கர் எண் மற்றும் போஸ்ட் ஐடி. இது உங்கள் பதிவிற்கு பின்னூட்டததை படிக்கவும், மறுமொழியிடவும் பயன்படும். இரண்டையும் சேர்த்து அட்ரஸ் பாரில் http://www.blogger.com/comment.g?blogID=10267267&postID=115319907938327120 ரீப்ளேஸ் செய்தால் உங்கள் எல்லா பதிவுகளும் படிப்பதற்கு தயார்.

17 ஜூலை, 2006

சகுனம் !!!













எனக்கு பின்னால் வலப்பக்கமாக சென்ற
பூனை அடுத்த நொடியில்
அடிப்பட்டது ஆம்னி பஸ் சக்கரத்தில் !

நட்சத்திரம் ஆகும் ஆசை இருக்கிறதா ?

விவாத களங்கள் சூடாகும் போது என்ன நடக்கிறது, ஆதாயம் பெற்றவர்கள் யார் ? பாதிக்கப்பட்டவர்கள் யார் ? என்று பார்த்தோமேயானால். ஆதாயம் பெற்றவர்கள் ? பெருசா ஒன்றும்மில்லை 100களை தாண்டிய பின்னூட்டங்கள் மட்டுமே. இதில் பாதிக்கப்படுவது தமிழ்மணத்தால் தேர்ந்தெடுக்கப் பட்ட *நட்சத்திரம்*.
ஆம் நட்சத்திர வாய்ப்பென்பது பதிவர்களின் கனவு. எத்தனையோ பதிவர்களின் எழுத்துத் திறமையை வெளிப்படுத்த கிடைக்கும் ஒரு பொன்னான வாய்ப்புத்தான் தமிழ்மண நட்சத்திரம் என்ற ஒரு வார அங்கீகாரம். இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி, தனது எழுத்துத் திறமையை வெளிப்படுத்தி 'நல்ல பதிவாளர்கள், சிந்தனையாளர்கள் ' என்று தம்மை அடையாளம் காட்டியுள்ளனர் பலர். ஒரு வாரத்தில் எழுதப்படும் நட்சத்திரப் பதிவுகள் எல்லாமும் சுவையாக இல்லாவிட்டாலும் சில பதிவுகள் கண்டிப்பாக கவனம் ஈர்க்கும் விதமாக அமைந்துவிடும், அதைப்பற்றிய விவாதங்கள் பின்னூட்டங்கள் வழியாக தெரியவருவதும் நடைமுறை.

ஆனால் கடந்த இருவாரங்கள் ஏற்பட்ட திடீர் சர்சைகளால் நட்சத்திரங்கள் என்ன எழுதினார்கள் என்பதே தெரியவில்லை. நட்சதிர எழுத்துக்கள் புறக்கணிக்கப்பட்டது போன்ற தோற்றம் உருவாகி, நான் சொன்னது சரி, நீ சொல்வது தவறு, புரிந்துணர்வு இல்லை, அதற்கு இது பொருளல்ல, போன்ற பதிவுகள் மாறி மாறி எழுதப்பட்டு விவாதக்களங்கள் முன் எப்பொழுதும் இல்லாதவாறு சூடாகவே காணப்பட்டது. நீண்ட விவாதங்களை மட்டும் படித்துவிட்டு, நட்சத்திரங்களின் பதிவுகளை மறந்து போனதில் நானும் ஒருவன்.

ஆரோக்கியமான விவாதங்கள் அவசியம், ஆனால் நடந்த விவாதங்கள் மூலம் ஆதங்கங்களை மட்டுமே சம்பந்தப்பட்டவர் விளக்கினர், ஆனால் பின்னூட்டமிட்ட சக பதிவாளர்களில் எவ்வளவு பேர் அதனை ஏற்றுக் கொண்டார்களா என்பது தனித்தனியே அதுபற்றிய பதிவுகள் போட்டதன் மூலம் தெரியவருகிறது. எது எப்படியோ, சக பதிவாளர் ஒருவர் நட்சத்திரமாக வலம் வரும் போது அவர்களுடைய எழுத்துக்களை சர்சைகள் மூலம் தெரியாமலோ, உணராமலோ புறக்கணிக்கப்பட்டதாக நினைக்க முடிகிறது. நட்சத்திரம் ஆகும் ஆசை உள்ளவர்கள் யாரும் இருந்தால் இது போன்ற நிகழ்வுகளை கவனத்தில் கொண்டால், ஒருவேளை தேர்ந்தெடுக்கப்பட்டு பதிவுகள் எழுதும் போது பின்னூட்டம் வரவில்லையென்றால் ஆறுதல் தேடிக்கொள்ளலாம். நட்சத்திர பதிவுகளை படிக்காமல் போனதற்கு நான் வெட்கப்படுகிறேன்.




15 ஜூலை, 2006

மிருகமும் மனிதனாகலாம் (படம்)

அடிக்குது குளிரு...

சூடு சொரணை நிறையவே இருக்கு என்று வலைகள் வெப்பம் தாங்காது அறுந்துவிடுமோ என்ற அச்சம் காரணமாக ... என்ன ஒட்டு வேலை செய்யலாம் என்று யோசித்த போது ... இந்த ஒட்டு வேலை கண்ணில் பட


இந்த பூனை பாலும் குடிக்கும் பீரும் குடிக்கும் !


நாய் பட்டப்பாடு இப்பத்தான் நல்லா புரியுது !

ஒன்னும் ஒன்னும் = ஏழு

//தமிழ்மணம் கடந்த சிறு நாட்களாக சற்றே சூடாக உள்ளது. கொஞ்சம் கவனம் திருப்ப இந்த பதிவு. மிக, மிக, அவசரமாக எழுத பட்டது. பிடித்த தமிழ் வரிகளை இங்கே தந்துள்ளேன்.// என்று எமெர்ஜென்சி பதிவை தட்டிவிட்டு நமது 1+1 =2 திருவாளர் பாலசந்தர் கணேசன். என்னையும் அன்போடு அழைத்திருக்கிறார். அவர் எதற்காக என்னை தேர்ந்தெடுத்தார் என்று குழப்பமாக இருக்கிறது ! பிடித்த தமிழ்வரிகளைப் போடவேண்டும் என்று கேட்டிருக்கிறார்



சரி ...... படியுங்கள்

1. ஒரு தாய் மக்கள் நாமென்போம் ஒன்றே நமது குலமென்போம் ( ஒரு சென்டிமென்ட் வேண்டாமா ?) :(
2. போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே... கண்ணனே ... படைக்கிறான்...கண்ணனே காக்கிறான் ... கண்ணனே கொலைசெய்கிறான் ...
3. வீடுவரை உறவு வீதிவரை மனைவி காடுவரை பிள்ளை (பெண்ணைப் பெற்றவர்களுக்கு அதுவும் கிடையாது )
4.உன்னைச் சொல்லி குற்றமில்லை ... என்னைச் சொல்லிக் குற்றமில்லை ...
5. ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே ஓடம் போல வாழ்ந்திடுவோமோ வாழ்நாளிலே
6. அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆனவ சிரிப்பு ...
7. ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி...


(தேவனே என்னைப் பாருங்கள்... என் பாவங்கள் தன்னை வாங்கிக்கொள்ளுங்கள் ...ஆயிரம் இருந்தும்....தும் ... தும் .... அவசரத்துக்கு எதுவும் வராததால் இப்போதைக்கு ஏழு போதும் என்று நினைக்கிறேன். )

கத்தி குத்தைவிட காயம் விளைவைப்பது உள்குத்து ஆகவே



மனம் வேண்டும்
புன்பட்ட மனதுகள் நல்பன் எடுத்துப்பாடி,
தன்பட்ட துன்பமதை இனிஎவர்பட வேண்டவென
பண்பட்ட உள்ளமதை பெற்றுவிட்டால், எவர்
கண்பட்ட தீமையும் கனபொழுதில் மறைந்துவிடும்

எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் என்றும் மகிழ்ச்சி பெருகவே வேண்டும்.
அன்புடன் நட்புடன்
கோவி.கண்ணன்

13 ஜூலை, 2006

வலைப்பதிவில் ஒரு தமிழாசிரியர் !

நம் எல்லோரும் பள்ளிக்கூடத்தைவிட்டு வெளியில்வந்து வெகுநாட்கள் ஆகிவிட்டது. அதனால் ஆசிரியர் என்றால் எல்லோருக்கும் இளப்பமாகவே இருக்கும். அதுவும் தமிழ் ஆசிரியர் என்றால் சொல்லவே வேண்டியதில்லை. ஆசிரியர் - பிரம்பு இந்த எந்த பயமும் இன்றி இஷ்டம் போல் எழுதித் தள்ளுகிறோம். நமது எழுத்துப் பிழைப்பில் மண்ணைப் போடும்படி ஒருவர் இப்பொழுது பரவலாக எல்லோருடைய பதிவிலும் தென்படுகிறார்.

அவர்தான் 'எழுத்துப் பிழை' என்ற பெயரில் பின்னூட்டமிடும் ஒரு தமிழாசிரியர்(?)

முன்பு செந்தழல் ரவி அவருடைய பதிவில் 'அனானியாக' வந்தார், பின்பு என்ன நினைத்தாரோ எம்போன்ற அனானி பின்னூட்ட வசதி இல்லாதவர்களுக்காக வலைப்பதிவும் ஆரம்பித்திருக்கிறார். ஆனால் அந்தபதிவில் 'புரொபைல்' இல்லை. தேவை இல்லை என்று கூட நினைத்திருக்கலாம்.

எழுத்துப் பிழை அவர்கள் இப்பொழுது அன்பாக சுட்டிக் காட்டுகிறார். போகப் போகத்தான் தெரியும் சுட்டி மட்டும் காட்டுவாரா அல்லது தலையில் குட்டியும் காட்டுவாரா என்பது. எது எப்படியோ அன்பரது தமிழ்ச்சேவை மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. சண்டைகள், சச்சரவுகளுக்கு இடையில் பதிவுகளைப் படித்து பிழைகளை சுட்டிக்காட்டும் அன்பரது சேவை எம்போன்றவர்களுக்குத் தேவை.

ஆகவே அன்பர்களே, நண்பர்களே ! நீங்கள் தமிழில் தடுமாறினால் தாங்கிப்பிடிக்க ஒருவர் இருக்கிறார் என்று நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அன்பரது சேவை உங்கள் பதிவுக்கு தேவை என்றால், அவருக்கு இந்த பதிவின் மூலம் அழைப்புவிடுக்கலாம். திரு குமரன் (எண்ணம்) ஏற்கனவே முதல் ஆளாக அவருக்கு அழைப்புவிடுத்திருக்கிறார். இந்த பதிவின் நோக்கம் அவருக்கு பாராட்டுத் தெரிவிப்பது மற்றும் அவரது சேவை வேண்டுவோர் அவருக்கு அழைப்புவிடுப்பதே.

எழுத்துப் பிழை அவர்களே.. ! கருத்தினைத் தவிர்த்துப் பிழைகளை திருத்துவதோடு மட்டும் நில்லாமல், கூடவே மதிப்பெண் வழங்கினால் மிகவும் சந்தோசமாக இருக்கும். தமிழில் முதல் மதிப்பெண் பெறவேண்டும் என்பதுதான் என் போன்றவரின் ஆசை. அதாவது மொத்தவரிகளில் எத்தனை வரிகளில் பிழை இருக்கிறதோ அந்த சதவிகித அடிப்படையில் மதிப்பெண் வழங்கினால் நன்று. கூடவே பிழையின்றி எழுதுவோருக்கும் பாராட்டாக 'நன்று', 'மிக நன்று' போன்ற குறிப்புகளும் இருந்தால் நல்லது.

எழுதிப் பிழைப்பவர்கள் மத்தியில் பதிவர் திருவாளர் 'எழுத்துப் பிழை' வித்தியாசமானவரே என்று கருதுகிறேன். 'எழுத்துப் பிழை' அவர்களே பாராட்டுக்கள்

முறிந்துப்போன காதல் ...! க(வி)தை


தாயைத் தவிர வேறொரு
பெண்முகம் பார்த்தது இல்லை.
வளர்ந்தும் நான்,
வீட்டையே சுற்றி வந்தாலும்,
வெளியே அழைத்துச் சென்று வந்தாலும்,
நான் உண்டு,
என் வேலை உண்டு என
தினம் திகட்டி போன
வாழ்கை வாழ்ந்து வந்தேன் !

வேளா வேளைக்கு
உணவும், பாலும் கொடுத்து
ஊட்டி ஊட்டி வளர்த்தாலும்,
ஏதோ ஒன்றுக்காக,
ஏங்கி ஏங்கி பகலில் கூட
தூக்கம் வருவதில்லை,
என் உணர்வை யாரும்
புரிந்து கொள்வதாக தெரியவில்லை !

அது என்ன உணர்வு என்று அறிந்து,
அது முடிந்துவிட்டதாகவே
நினைத்து போது,
ஒரு மருத்துவமனையில்
தற்செயலாக அவளை சந்தித்தேன்,
கிட்டத்தட்ட என்னைப்போல்
ஏங்குபவளாக காணப்பட்டாள் !

ஒருமுறை பார்த்ததும் இருவருக்கும் காதல்.
ஆசையாய் ஒருவருக்கு ஒருவர் நோக்க,
அருகில் சென்றேன்,
அவள் பெயர், விலாசம்
அறிவதற்குள்,
"சார் ! உங்க நாய், என்
நாய்கிட்ட வருது" என்று
அவள் எசமானர் சொல்ல
இழுத்து வந்துவிட்டார்
என் எசமானர் !

12 ஜூலை, 2006

குண்டு வெடிப்பு

குண்டு வெடிப்பு - தீவிரவாதம் என்ற சொல்லிற்கு பின்னால் நின்ற இந்த சொல்லை... தூரதிர்ஷ்டவசமாக மதங்களுக்கு பின்னால் நம் சாதுர்யத்தால் நுழைத்துவிட்டோம்... குண்டுவெடிப்பினால் உயிரிழக்கும் அப்பாவிகளைக் காட்டிலும் பின்பு ஏற்படும் கலவரங்களில் எந்த காரணமும் இன்றி உயிரிழக்கும் அப்பாவிகள் அதிகம். இதற்கு நம் பொறுப்பின்மையும் அரசியல்வாதிகளுமே பொறுப்பு.

நக்ஸலைட்டுகள் குண்டு வைத்தால் அவன் இன்ன சாதி இன்ன மதம் என்று நம் ஆராய்வதில்லை. ஆனால் தீவிரவாதிகள் தங்களுக்கு சாதகாமான போர்வையில் ஒளிந்து கொண்டு இந்த கேடுகெட்ட செயலை செய்யும் போது நாமும் அவர்களைப் போல் கீழ்த்தரமாக இறங்கி மதங்களின் மீது சாணி அடிக்கிறோம் இது முறையா ?

இத்தகைய நம்முடைய தகாத செயல் மூலம் பாதிக்கப்பட்ட நபர் அந்த அமைப்பில் சேர்ந்து கொண்டு தீவிரவாதிகளின் கரங்களாக மாறுகிறார்கள். அதுமட்டுமல்ல அந்த மதத்தின் மீது பற்று உள்ளவர்களை சுட்டிக்காட்டி இவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லுகிறார்கள் என்று அவர்களை வம்புக்கு இழுத்து தூண்டுகிறோம். அவர்கள் வேறுவழியின்றி உங்கள் மதத்தில் உள்ளவர்களெல்லாம் யோக்கியர்களா என்ற கேள்வியை நம் சூழ்ச்சி அறியாது கேட்டுவைக்க. எவனோ வைத்தக் குண்டுக்கு நம் எனர்ஜி மடிகிறது, குரோதம் வளர்கிறது. இனப்போர்களை மதப்போர்களாக தீவிரவாதிகள் சித்தரித்து அப்பாவிகளை ஒரு பக்கம் கொல்லும் போது. நாமும் கத்தியின்றி ரத்தமின்றி அப்பாவிகள் மீதும் மதங்களின் மீதும் அதே பலியை சுமத்தி ... தீவிரவாதிகளுக்கு நாம் சலைத்தவர்கள் இல்லை என்று அழிவுகளை விதைக்கிறோம். அதன் அறுவடையை தீவிரவாதிகள் அனுபவிக்கின்றனர்.

தீவிரவாதிகள் - கெட்டவர்கள் ... சமூகவிரோதிகள் தான் இதில் எள்லளவும் சந்தேகம் இல்லை. இவர்களின் பின்புலனை அரசாங்கம் அடையாளப் படுத்துகிறோதோ இல்லையோ, நாம் உடனடியாக இவன் இந்த மதத்தில் இருப்பதால் தான் இவன் இவ்வாறு செய்கிறான் என்று கொளுத்திப் போடுகிறோம். எவனோ செய்யும் குற்றத்திற்காக ஒரு மதம் சார்ந்திருக்கிறான், மதத்தில் பிறந்திருக்கிறான், மதத்தில் பற்றுவைத்திருக்கிறான் என்பதற்காக சக இந்தியன் ஏன் தலைகுனிய வேண்டும் என்று எதிர்பார்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒன்றும் அறியாமல் உன் தாய் ஒழுக்கமற்றவள் என்பதை தன்மானம் உள்ள எந்த மகன் ஏற்றுக்கொள்வான் (நாம் தீவிரவாதம் பற்றி பேசுவோம்... மதம் மாற்றம் பற்றியெல்லாம் இங்கு வேண்டாம்)

புழுவை கொட்டி கொட்டி குளவியாக மாற்றுமாமே குளவி ... அந்த வேலையைத்தான் நாம் செய்து கொண்டிருக்கிறோம். பெருச்சாளிகளை வீட்டில் வைத்துக்கொண்டு ... ஒரு பாம்பு எவரையோ கடித்ததற்காக ... பாம்பு இனமே விசம் அதனால் பாம்புகளை முற்றிலும் அழித்து ஒழிக்க வேண்டு மென்றால் பெரிச்சாளிகளை என்ன செய்வது.

ஒற்றுமையை வளர்காமல் விரோதத்தைப் பற்றி பேசுவது தற்காலிக ஆறுதலாக இருக்கலாம். இதனால் நல்ல தீர்வு எதுவும் ஏற்படாது.
மதங்கள் ஒன்றிணைந்து தீவிரவாதிகளின் மதத்தைப் பார்காமல் அவர்களின் செயலைப் பார்த்து முற்றிலும் அழித்து ஒழிக்கவேண்டியது என்பதே நம் விருப்பம்.

எனக்கும் மாற்றுமத நண்பர்கள் எத்தனையோபேர் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் தாடி வைத்திருப்பதால், திருநீறு பூசியிருக்கிறார்கள் என்பதற்காக அவர்கள் தீவிரவாதிகள் அல்ல ... நம்பிக்கையின் காரணமாக வெறும் மதப்பற்றாளர்களே !

11 ஜூலை, 2006

காதலி vs மனைவி (கவிதை)!


உன்,
ஒற்றை பின்னல் சடையின்
ஒற்றை ரோஜாவின்
ஓற்றை இதழ் விழுமா என்று ஏங்கி
ஒற்றை காலில் தவம் செய்து, விழுந்தவுடன்
ஒற்றிக் கொண்டேன் என் கண்களில் !

உன்னை,
ஒப்புவித்து பாட ஒரு
ஒப்பு தேட,
ஒப்புகள் யாவும் அஃறிணைதான் என்று
ஒப்புக்கொள்ள, உயர்திணை நீ
ஒப்பில்லாதாவள் என உணர்ந்து கொண்டேன்!

நான்,
ஒவ்வொரு நிமிடமும்,
ஒவ்வொரு நாளும், விழித்திருந்தால் என்
ஒவ்வொரு எண்ணங்களிலும் நீ
ஒருவேளை நான் தூங்கிபோனால் கனவுகளில் நீ, என்
ஒவ்வொரு நொடியும்,
ஒரே பெயராக உன் பெயர் சொல்லியது !

என்றெல்லாம் எழுதிய உன் பேனா,
பதிவு திருமணத்தில் கணவன் என்ற இடத்தில்
பதிந்து கையெழுத்திட்டு காணாமல் போனதா ! அல்லது
மறைந்து போனதன் மாயம் நீ மறந்து போனாயா!

10 ஜூலை, 2006

அழுக்கு அரசன் 13ன்றாம் பன்றிவாயன் (காமடி)

(கவுண்டர் / செந்தில்)


அருமை அண்ணன் வைகை புயல் கைப்புள்ள அவர்களின் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி வெற்றி நடைப் போடுவதைத் தொடர்ந்து அவரை வாழ்துவதற்காக இந்த காமடி பதிவு. பங்கு பெறுபவர்கள் கவுண்டர் அன்ட் செந்தில்

செந்தில் பதட்டத்துடன் கவுண்டரைப் பார்க்க ஓடிவருகிறார்
செந்தில் : அண்ணே அண்ணே.... !


கவுண்டர் : என்னாடா எருமை தலையா ? ரொம்ப நாளா ஆளையே காணும் !

செந்தில் : மோசம் போய்டோம்னே !

கவுண்டர் : வழக்கமா ... ஒங்கிட்ட மாட்டுன அப்பாவிங்களும் ... நானும் தான் மோசம் போவோம் ...!

செந்தில் : போங்கண்ணே ... நீங்களும் நானும் சேர்ந்து தான்னே மோசம் போய்டோம்

கவுண்டர் : காலங்காத்தால கழுத்தை அறுக்காத ... சொல்லித் தொலை

செந்தில் : அண்ணே அண்ணே....

கவுண்டர் : சொல்லித் தொலைடா ... வெண்ணை

செந்தில் : கோபப் படாதிங்கண்னே ... அது வந்து புலி அடிச்சிடுச்சுன்னே

கவுண்டர் : என்னது புலியா ? ... எங்க எங்க யாரை அடுச்சிச்சி ... காட்டுப்பன்னி உன்னை புலி அடிச்சிச்சா ?

செந்தில் : அண்ணே என்னை மட்டுமில்லன்னே ... நம்ம எல்லாரையும் புலி அடிச்சிடுச்சின்னே

கவுண்டர் : புரியிற மாதிரி சொல்லுடா புளி மூட்ட தலையா

செந்தில் : புயல் அடிச்சிடுச்சிண்னே ...

கவுண்டர் கடுப்பாகிறார்
கவுண்டர் : டேய் என்னை கேனப்பயன்னு நெனெச்சியா ? ...மொதல்ல புலின்னு சொன்னே ... இப்ப புயல்னு செல்ற...வயசான காலத்தில
நிம்மதியா இருக்கவிடுங்கடா

செந்தில் : புலி, புயல் எல்லாமே சேர்ந்து அடிச்சி .... நாம மோசம் போய்டோம்னே

மறுபடியும் கவுண்டர் கடுப்பாகிறார்
கவுண்டர் : ஏன்டா... நாயே ... எத்தினி தடவடா சொல்றது ... பெடிவெச்சு பேசாதேன்னு ...இம்சை பண்ணாம விசயத்த சொல்லு

செந்தில் : ஆமாம்னே நானும் அதைத் தான் சொல்றேன் ... இம்சை

கவுண்டர் : எழவு இம்சையா இருக்கு ... இந்த நாயி என்ன சொல்லுதேன்னு புரியல ... டேய் உன்ன உதச்சாதான் சரிப்படுவ

செந்தில் : அண்ணே ... நீங்க என்னை அடிங்க திட்டுங்க ... ஆனா நான் சொல்ற மட்டும் புரியலேன்னு சொல்லாதிங்க

கவுண்டர் : ஏன்டா ... நான் என்ன சாமியாரா ... மைப் போட்டு பாத்து உன் மனசில என்ன இருக்குன்னு செல்றத்துக்கு ... ஒன்னு சொல்லு இல்லாட்டி எழுந்திரிச்சி ஓடி போயிடு

செந்தில் : ம்.. ஹ¥ம் ... அண்ணே நீங்க அறிவாளின்னு நான் நெனச்சது தப்பா போச்சி

கவுண்டர் : டேய் திருவோட்டு தலையா ... நீ எல்லாம் என்னை அறிவாளின்னு ஒத்துக்க வைக்கிற அளவுக்கு என் அறிவு ஒன்னும் சீப்பா போகல ... விசயத்தை சொல்லிட்டு ஓடிபோய்டு மவனே ... இல்லாட்டி சுடத்தண்ணிய புடிச்சு மூஞ்சில ஊத்திடுவேன் ... போய் ஊருக்குள்ள உன்னையும் புலி அடிசிடுச்சின்னு சொல்லு.

செந்தில் : அப்படியெல்லாம் வேணாம்னே... நானே சொல்லிடுறேன்

கவுண்டர் : மவனே ... அப்படிவா வழிக்கு

செந்தில் : வடிவேலு இருக்கான்ல ... வடிவேலு

கவுண்டர் : வடிவேலு இருக்காண்டா ... நீ அவனை சாகடிச்சிட்டியா

செந்தில் : இல்லண்ணே... அவன் தான் நம்மலெயெல்லாம் சாகடிச்சிட்டான்

கவுண்டர் : என்னடா சொல்ற நாயே... அதான் குத்துக்கல்லு மாதிரி குத்தவெச்சி ஒக்காந்திருக்கோம்ல

செந்தில் : ஆமாம்னே... இனிமே அப்படியே தான் ஒக்கார்ந்திருக்கனும் போல இருக்குன்னே

கவுண்டர் : டேய்... டேய் ... மறுபடியும் பொடி தூவ ஆரம்பிச்சிட்டியா... டேய் சுடத்தண்ணி ... மூஞ்சி

செந்தில் : போங்கண்ணே ... நீங்க படம் பாத்திங்களா ?

கவுண்டர் : டேய் கக்கூஸ் வாயா ... நம்பள மாதிரி சினிமாகாரங்க என்னெக்கிடா தியேட்டர்ல போயி படம் பாத்திருக்கோம்... அதெல்லாம் ஜெனங்க பாத்து அனுபவிக்கிறத்துக்குட மவனே... நாம நடிக்கிற கருமாந்தரத்த ... நாமளே தியேட்டர்ல போயி கூட பாக்கனுமா ?

செந்தில் : ம் ... அதாண்ணே உங்களுக்கு ஒலக நடப்பே தெரிய மாட்டங்குது...

கவுண்டர் : க் ..கும்... இவரு பெரிய பிபிசி ரிப்போட்டரு ... ஒலக விசயம் தெரியனுமாமாம்... என் நேரம்டா... டிக்கட்டு கெடக்காட்டியும். ஒன்னுக்கு அடிக்கிற எடுத்துல நின்னு ஓசி படம் பாக்குற நாயி என்னப்பாத்து ஒலக நடப்ப்ப பத்தி சொல்லுது ... எனக்கு ஒலக நடப்பு தெரியலையாமா ?

செந்தில் : கோவிச்சிக்காதிங்கண்ணே ... ஒரு பேச்சுக்கு சொன்னே ...

கவுண்டர் : மவனே பேச்சு மூச்சி ஆகறதுக்குள்ள ஓடிபோயிடு...

செந்தில் : அண்ணே நீங்க என்னை என்ன வேணும்னாலும் வையுங்க ... ஒதைங்க

கவுண்டர் : எனக்கு வயிசு ஆயிடுச்சிங்கிறதால காலத்தூக்கி ஒதெக்க மாட்டேன்னு ஒனக்கு நக்கல் வேறயா ... என்னால முடியிலடா சாமி

செந்தில் : சரி சொல்லிடுறேண்னே ... நம்ப வடிவேலு பய இல்லை வடிவேலு பய

கவுண்டர் : ஆமான்டா ... ஒன்னெயும் என்னெயும் அமுக்கனும்னு ... நம்பள வெச்சு சம்பாதிச்சவனெல்லாம் தூக்கிவிட்டனுங்களே ... லாரியில ஏறி மெட்ராசுக்கு ஓடிவந்தானே ...
அந்த கருப்பு காக்காவைத்தானே சொல்லுற

செந்தில் : ஆமாம்னே .... அவன் நடிச்ச 23ம் புலிகேசி தான்ணே இப்ப பிச்சிக்கிட்டு ஓடுது ... வைகை புயலின் புலிக்கேசுன்னு டைட்டில் போடுறாங்க

கவுண்டர் : ம் .. அதுக்கென்ன ... நீ வேணும்னா ... 'அழுக்கு அரசன் 13ஆம் பன்றிவாயன்' ஒரு படம் எடுத்து அதில 13ன்றாம் பன்னியா நடிச்சிட்டு போயேன்டா

செந்தில் : என்னன்ணே ஒங்களுக்கு கோபமே வரலையா ... ச்சே மிஸ் ஆயிடுச்சே ... புயலின் புலி ஒங்களுக்கு நெசமாவே வயித்த கலக்கல ?

கவுண்டர் : ஏன்டா வயித்தெரிச்ச படுற ?

செந்தில் : என்னண்னே சொல்றிங்க ... அவனால நம்ப பொழப்பு போச்சி இல்ல

கவுண்டர் : டேய் ... இந்த கவுண்டன பத்தி ஒனக்கு தெரிஞ்சது அவ்வளவு தான் ... எவ்வளவு நாளைக்குடா ... நானும் நீயும் ஒடி புடிச்சி வெளயாடுறத ஜெனங்க பாத்துக்கிட்டு இருப்பாங்க ... பாவம்டா ஜெனங்க ... வடிவேலு யாரு ... நம்ம ஆளு ... அவன் மேல வர்ரது நல்ல விசயம் தானேடா

செந்தில் : அண்ணே ... எனக்குதாண்னே ... புத்திக் கெட்டுப் போச்சி ... நீங்க நல்லவரு வல்லவரு

கவுண்டர் : டேய் ... ஒன்னு நாம அனுபவிக்கனும் ... இல்லேன்னா ... பொத்திக்கிட்டு ஓரமா ஒக்காந்து வாழ்த்திட்டு போவனும் ... புரிஞ்சிக்க

செந்தில் : அப்ப வர்ரேண்ன ... அண்ணே ... இன்னொரு விசயம்னே

கவுண்டர் : ஒரு எழவும் சொல்ல வேண்டாம் எழுந்திரிச்சு ஓடிபோயிடு... மவனே.. ஒன் திட்டம் எதுவும் வேகாது

கதை ஒன்றும் செல்லுபடி ஆகவில்லை என்று செந்தில் வெளியேறுகிறார்

உதிரம் ...

(பெண்ணிய குமுறல்)
உதிரப் போக்காய்
உதிர்ந்து இருக்கவேண்டிய நீ, என்
உதிரம் பெற்றுகொண்டு,
உதிரப் போக்குடையவள் என்பதால்,
உதிர்க்கிறாய் நான் தூய்மையற்றவள் என்று !
உதிரும் வெறும் வார்த்தைகள் அல்ல அவை,
உதிரத்தை நான்
உதிராமல் பொத்தியதால், என்
உதிரத்தில் ஊரினாலும்,
உதிராத அழுக்குகளை, உன்
உதிரத்தில் வைத்துக்கொண்டு,
உதிர்க்கும் எனக்கு எதிரான கெட்ட
உதிர வார்த்தைகள் அவை !

கண்டதே(வி) காட்சி !


அன்று
ஊர் கூடுவதற்காக
இழுபட்ட தேர்கள்
இன்று
தேர்கள் கூடுவதால்
ஊர்கள் இழுபடுகின்றன
வீன்
வம்புக்காகவும்,
வீம்புக்காகவும் !

9 ஜூலை, 2006

ஒரு தொடர் தேடல் ...!


கர்ணனுடன் பிறந்த
கவச குண்டலம் போல்
பிறப்புடன் எனக்கு கிடைத்த வரம்
ஏதோ ஒன்றை தொலைத்துவிட்டு
தேடிக் கொண்டிருக்கிறேன்.

என்ன தொலைத்தோம் ?
என்ற தொடர்ச்சியான
கேள்விகளில்
தூக்கத்தை தொலைத்தேன் !

தேடலின் சோர்வில்
சிறிது தூங்கினாலும்
கனவிலும் தொலைத்தின்
ஏக்கம் துறத்துயது !

தொலைந்தது எது என்றே
தெரியாமல் தொலைத்ததை
நினைத்து கவலைப்படுவதில்
ஞாயம் இல்லை என்று
உள்மனது சொல்வதை
பொருட்படுத்தாத,
ஆழ்ந்த சிந்தனையை,
ஒருநாள் பேருந்து பயணத்தின் போது
ஒரு தாயின் கையில் உள்ள
சின்ன குழந்தையின் முகத்தில்

என்னைப் பார்த்து பூத்த
'கள்ளமும்', 'கபடமும்' அற்ற
உள்ளச்
சிரிப்பு கலைத்தது !

ஒரு வேளை அந்த குழந்தைக்கு
தெரிந்திருக்குமோ ?
நான் தொலைத்ததும்,
தேடுவதும் எது என்பது !

பொய் சொல்லும் கவிதை!


உண்மையானவன் என்று
உனக்கு என்
உள்ளத்தில் இடம் கொடுத்தேன் !

நீயோ பொய்யை மெய்யாக்கி
கவிதை புனைபவன்
என்று தெரிந்தது !

உன் பொய்யான கவிதைபோல
நீயும் பொய்யனோ என்ற
அட்சம் எழுகிறது !

உன்னிடம் கேட்பது இதுதான்,
நீ காதலிப்பதற்காக கவிதை கற்றுக்கொண்டாயா ?
கவிதை எழுதுவதற்காக காதலில் விழுந்தாயா ?

காதல் தான் என்றால்
கவிதையை புறக்கணித்துவிட்டுவா !
பொய் சொல்லும் கவிதை வேண்டாம்
மெய் உணரும் காதலே போதும் !

8 ஜூலை, 2006

ஆயுள் ரேகை !


ஜோதிடம் உண்மையென்று
அன்று தான்
அறிந்து கொண்டேன் !
அன்று நடந்த
விபத்தில் ஒருவரின்
தலை நசுங்கி,
மூளை சிதறி கிடந்தாலும்,
கையில் இருந்த ஆயுள் ரேகைக்கு
எந்த பாதிப்பும் இல்லை !

7 ஜூலை, 2006

மாறாத இயல்புகள் ...


இன்றும்,
இலக்கு நோக்கி சரியான
இடத்திற்கு செல்கிறது
மேகப் பஞ்சினுள் தண்ணீர் !

அச்சு பிசகாமல்
அதன் சுற்றுப்பாதையில்
உருண்டு செல்கிறது பூமி !

ஒப்பற்ற ஒளிக் கதிர்களை தந்து
ஒளிர்ந்து கொண்டிருக்கிறது
கதிரவன் !

மூலை முடுக்கு எங்கும்
மூச்சின் சுவாசத்தை
சீர் செய்கிறது காற்று !

ஓசோன் படலத்தை தாண்டி
ஓம்கார நிசப்தத்தில் தூய்மையாக
இருக்கிறது வானம் !

இயன்றவரை நானும் என்
இயல்பு மகிழ்ச்சியில்
திளைத்து மலர்வேன்
இன்றும் !

படம் உதவி : நன்றி திரு சிறில் அலெக்ஸ்

6 ஜூலை, 2006

பாண்டிபஜார் கடை(சிறுகதை)

பொம்பளைங்க சமாச்சார மெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது என்று நன்கு தெரிந்தும் மனைவியின் நச்சரிப்பு தாங்க முடியவில்லை. பொறந்தாலும் ஆம்பளையாக பொறக்க கூடாது ... அப்படி பொறந்து விட்டால் கல்யாணம் கட்டிக்க கூடாது ... என்று இந்த மாதிரி சந்தர்பங்களில் நினைப்பேன் ... இந்த பொருளை யெல்லாம் ஒரு மனைவி கனவனிடம் கேட்டு வாங்கி வரச் சொல்வது சரியா ?

காப்பியை நீட்டிக் கொண்டே ...

"என்னங்க ... போனதடவை வாங்கிட்டு வந்திங்களே ... இங்க பாருங்க ... ஒரு அதுக்குள்ள தையல் விட்டு போச்சி"

கையில் எடுத்துக் கொண்டு வந்து காட்டினாள்

"ஏன்டி ... காப்பி குடிக்கும் போது .... காலையில் ... இது முகத்தில் தான் நான் விழிச்சிட்டு போகனுமா ?"

"காலையில் தானே வெளியில் செல்கிறீர்கள்... இப்ப காட்டாமல் வேற எப்ப காட்டுவது"

"உனக்கு நான் ... என்ன தான் பாத்து பாத்து வாங்கிட்டு வந்தாலும் ... சரியா இருக்காது"

"இவ்வளவு நாளா நீங்களும் பாத்துகிட்டு தானே இருக்கிங்க ... சைஸ் கரக்டா பாத்து வாங்கி வரக்கூடாதா ?"

"இதெல்லாம் ... பாத்துதான் வாங்கி வர முடியும் ... போட்டுப் பாத்து வாங்கிட்டு வர்ர சமாச்சாரமா ? ... கடைக்காரன் சிரிக்க மாட்டானா ?"

"நீங்கள் சொவதும் சரிதான்"

"தெரியுதுல்ல ... நான் என்ன செய்யமுடியும் ?"

"இது தான் எடுப்பா இருக்கு... அழுத்தி பார்த்து இது தான் மென்மையா இருக்குன்னு ... போடுகிறபோது பக்கத்தில் நின்னுகிட்டு சொல்றிங்க ..."

"போடுகிற போது தானே சொல்ல முடியும்... அதுக்குன்னு டைம் ஒதுக்கி தொட்டுப் பார்த்தா சொல்ல முடியும் ?"

"நீங்க சொல்றதும் சரிதான் ... நானே போய் வாங்கிட்டு வருவது தான் எனக்கு எப்பவும் சரியாக இருக்கு ..."

"ஆமாம் நீ ... பாத்து வாங்கிட்டு வருவதெல்லாம் சரியாதான் இருக்கு, அதுனால இந்த விசயத்துல ... "

"கண்ணாலேயே அளவெடுக்க தெரியும்னு மட்டும் பீற்றிக் கொள்வீர்கள்.. போன தடவை வாங்கி வந்து ரொம்ப லூசாக ... போங்க ... அத போட்டுக்கிட்டு ... எல்லோரும் திரும்பி பார்த்து அசிங்கமாக ஆகிவிட்டது ... அதுக்கு முன்னால வாங்கிட்டு வந்தது ... ரொம்ப இறுக்கம் ... புண்ணாக்கிடுச்சி ... நான் காமிச்சேன் ... நீங்க பார்த்திங்கல்ல ..."

"அதுக்கு தான் மருந்து போட்டு நல்லா தடவி விட்டேனே ... இன்னுமா ... சரியாகலே கொஞ்சம் காட்டு பாப்போம்"

"ஒரு ஆம்பளைக்கிட்ட ... எப்பப்ப பாத்தாலும் ... காட்ரதுன்னா ... போங்க எனக்கு கூச்சமாக இருக்கு"

"என்கிட்ட என்ன கூச்சம் வேண்டி கிடக்கு ... புண்ணு இன்னும் இருக்க இல்லையான்னு பாத்தா தானே தெரியும் ... நான் பார்க்காததா ... இல்லை நீ காட்டாததா ? "

"நான் சீரியசா சொல்றேன் ....நாளைக்கு ஒரு பங்சனுக்கு போகவேண்டி இருக்கு ... இருக்கிறது எல்லாமே ... சரியில்லைங்க ... வேற வழியில்லாமல் தான் உங்ககிட்ட சொல்கிறேன் ... புரிஞ்சிக்குங்க"

"இப்ப என்ன தான் நான் செய்யனும் ... ?"

"எங்கிட்ட கல்யாணம் ஆன புதுசில் வாங்கினதுல ஒன்னு பத்திரமா இருக்கு ... பழசாக இருந்தாலும் அது ஒன்னு தான் எனக்கு சரியான அளவா இருக்கு ... அதை எடுத்துட்டு போங்க"
"கர்மம் கர்மம் ... பழசை தூக்கிட்டுப் போய் ... எப்படி கடைக்காரனிடம் கேட்பது... ?"

"எத்தனையோ பேர் வாங்குறத நான் பாத்திருக்கேன் ... இரண்டும் அளவு சரியாக இருக்கனும் ... சரியா பாத்து வாங்குங்க ...பாக்குறப்ப ஒரே மாதிரி தான் இருக்கும் ... போடுகிற போதுதான் சரியா இருக்கா இல்லையான்னு தெரியும் ... கோட்டை விட்டுடாதிங்க "

"அவசியமா... நானே தான் வாங்கிட்டு வரனுமா ?"

"என்னங்க பண்ணுறது ... எனக்கு அவசியம் நாளைக்கு வேண்டும்"

"சரி அதை எடுத்து பையில போட்டுக் கொடு ... எப்போதும் வாங்குற கடையிலேயே வாங்கிட்டு வந்துடவா?"

"வேண்டாங்க ... அது சரியில்லை ... பாண்டி பஜாரில் ... பக்கத்தில் நாயுடுகால்"

"போதும் இதுக்கு மேல சொல்லாதே ... இடம் நல்லா தெரியும் ... நிறைய தடவை பாத்திருக்கேன் ..."


என்று மனைவியின் அன்புக் கட்டளையை ஏற்றுக் கொண்டு ... அலுவலகம் சென்ற நான் ... அலுவலகம் முடிந்ததும் கிளம்பி பாண்டிபஜாருக்கு சென்று நாயுடுகால் பக்கத்தில் உள்ள பாட்டா கடைக்குள் நுழைந்தேன்.

உடன்கட்டை !!!



அந்த அவலம்,
இன்றும் உடன்கட்டை தொடர்கிறதே ....
ஏன் இந்த நின்தனை ?

இராஜா ராம்மோகன்ராய்
தற்போது இல்லையென்று
துணிச்சலுடன் அந்த செயல்
இன்றும் தொடர்கிறதே !

புளு கிராஸ் மெம்பர்களே !
விழித்துக் கொள்ளுங்கள் ...

சனிப் பொணம் தனியாகப்
போகது என்று ...
தலை கீழாக கட்டப்பட்டு,
ஒரு கோழிக் குஞ்சு ...
விருப்பின்றி உடன் கட்டை
ஏறுகிறப் போகிறதாம் !

எதற்கு இந்த தண்டனை ?
என்ன அநியாயம் இது !

பள்ளிக்கட்டு சபரிமலைக்கு ...

இது கார்த்திகை மாதம் கூட இல்லை. ஆஸ்தான சோதிடர் உன்னிக் கிருஷ்ணப் பணிக்கரின் உபயமாக ... அவர் திடீரென்று ஹாஸ்யமாக ... பிரசன்னம் ஜோஸ்யம் பார்த்து ... சாஸ்தா கோபமாக இருக்கிறார் என்று சொன்னதும் .. கோவிலுக்கு பெண்கள் செல்வது சரியா? தவறா? என்று இருமுடி எடுத்தவர்களும், ஒரு முடி கூட எடுக்காதவர்களும் (எந்த கோவிலுக்கும் சென்று மொட்டைப் போடாதவர்கள்) ... இருபக்கமும் முடியை பிய்த்து கொள்கிறார்.



நானும் சின்ன வயதில் அதாவது ஐய்யபனின் நிரந்தர வயதில் சபரிமலை சென்றிருக்கிறேன். அப்பா வழக்கமாக அண்ணனைத் தான் கூட்டிச் செல்வார். இது என்ன அடவாடியா இருக்கு ... நான் மட்டும் இளிச்ச வாயா ... என்று அடம்பிடிக்கவும் ... கழுத கழுத்தை நீட்டு என்று மாலையை மாட்டி அழைத்துச் சென்றார்கள். ஐந்து வயது முதல் நானே விரும்பி சைவமாக மாறியதால் ... விருதம் இருப்பது சிரமமான காரியமாக இருந்ததில்லை.

இந்த வயசுல இவனுக்கெல்லாம் என்ன பக்தி வேண்டி கிடக்கிறது என்று சொன்ன பெரியவர்களையெல்லாம் அப்பா அம்மா கண்டுகொள்ளவில்லை. இருமுடி கட்டி பெரிய வழியில் முதல் முறையாக சென்றேன். போகும் வழியிலேயே கால் வலிக்கிறது என்று அடம்பிடிக்க ... இருமுடியுடன் என்னையும் சேர்த்து அப்பாவும் ... அவருடைய நன்பர்களும் தூக்கி சுமந்தனர். போகும் வழியெல்லாம் ... யானை வரும் .. புலி வரும் என்று பயம் காட்டியபடியே அழைத்துச் சென்றனர்.

பம்பை நதிக் கரை வந்தது .... ஏண்டா இங்கே வந்தோம் என்பது போல அசிங்கம் ... சாமிகளின் கழிவுகள் ... திட திரவ வடிவங்களில் அந்த நதியெங்கும் ஊர்ந்து செல்ல ... அதைப் பற்றி கவலைப் படாமல் அதே குளிர் நீரில் எல்லோரும் குளிக்க ... வேறு வழியில்லாமல் நானும் குளித்தேன். இப்பொழுது பம்பை அந்த அளவு மோசமாக இல்லை என்று கேள்வி படுகிறேன். ஒரு வழியாக காந்தமலை ஜோதி தரிசனம் பார்க்கலாம் என்று கூட்டிக் கொண்டு சென்று ஒரு இடத்தில் அமர வைத்தார்கள். அந்த வருடம் காந்த மலையில் இரண்டு மூன்று இடங்களில் ஜோதி எரிந்தது ... தெரிந்தது. மலை அதிரும் படி சாமியே சரணம் ஐயப்பா கோசம் போட்டுவிட்டு மேலே ஏறினோம் ... கூட்டம் ஒரே கூட்டம் ... நான் எங்கே தொலைந்து விடுவோனோ என்று அப்பாவுக்கு பயம். ஒரு வழியாக பதினெட்டாம் படியை அடைந்தோம். திருப்பதியை விட பல மடங்கு 'ஜருகண்டி' போல படியில் கால் வைத்ததுமே தன்னிச்சையாக தள்ள தள்ள மேலே சென்று தரிசனம் செய்தோம்.

வீடு திரும்பியதும் பம்பை காட்சிகளை நான் அதிகம் விளக்கியதால் ... அந்த ஆண்டு முதல் அப்பா என்னையும் அண்ணனையும் வெட்டி விட்டு தனியாக செல்ல ஆரம்பித்தார். முதல் முறை மாலை போட்டது முதல் ... குடும்பத்தினர் அனைவரும் அம்மா வரை எல்லோருமே அப்பாவை அப்பா என்று கூப்பிடுவதே மாற்றி 'சாமி', 'சாமி' என்று கூப்பிட ஆரம்பித்து சாமி ஆகும் வரை அவரை 'சாமி சாமி' என்றே கூப்பிட்டோம். அப்பாவும் எங்கள் எல்லோரையும் மற்றும் ... ஐந்து வயது சிறுவன் முதல் முதியவர் வரை சாமி சாமி என்றே எல்லோரையும் மற்ற நாட்களிலும் கூப்பிடுவார். அப்பாவின் பெயர் தெரிந்தும் எல்லோருமே சாமி சாமி என்றே மற்ற நாட்களிலும் கூப்பிட்டு 'சாமி' என்ற பெயரே அப்பாவுக்கு கடைசி வரை நிலைத்திருந்தது.

^அது சொந்த கதை.

இது நடக்கும் கதை ....

ராமரிடம் சாபவிமோசனம் பெற்ற சபரி என்ற பெண் பெயரில் தானே சபரிமலை இருக்கிறது. மகிஷி என்ற பெண் அரக்கியை ஐயப்பன் அடக்கியதாக அருகிலேயே அவளுக்கான கோவிலும் இருக்கிறது. முதல் முறை கோவிலுக்கு செல்லும் கன்னி சாமிகள் அங்கு சென்று 'சரம் குத்தி' என்ற குச்சி ஒன்றை குத்திவிட்டு வருவார்கள். இப்படி ஏற்கனவே இரண்டு பெண்கள் இருக்கிறார்கள். மேலும் அய்யப்பன் மத நம்பிக்கைப் படி பாலகன் தானே . அய்யப்பன் என்றும் 12 வயது ... பனிரென்டு வயது பாலகனுக்கு அதுவும் தெய்வத்திற்கு பெண்கள் சகோதரிகளாகவும், அன்னையாகவும் தானே தெரிவார்கள். ஏன் பெண்கள் கோவிலுக்கு செல்லக் கூடாது ? அதற்காக கூறப்படும் காரணங்கள் நேரிடையாக போக்கு வரத்து உள்ள இன்றைய காலத்தில் ஏற்கத்தக்கதா ?

Pictures : thanks to http://www.hindu.dk

5 ஜூலை, 2006

கிளிப் பேச்சு (கவிதை) ... !

வீட்டு விலங்குகள் பூனை, நாய் மற்றும் பிற தவிற சுதந்திரமாக சுற்றித் திரியும் விலங்கினங்களையோ, பறவை இனங்களையோ அடைப்பட்டு கிடக்கும் போது, பிடிபடும் போது பார்க்கையில் நெஞ்சம் பதைக்கிறது. கூண்டில் அடைப்பட்ட கிளியைப் பார்க்கும் போதெல்லாம் என் எண்ணங்கள் அங்கே சிறைபடுகின்றது.



கிளிப் பேச்சு... !
பச்சை மாநிற மேனி பவளச் செவ்வாயென, ஒரு
பச்சை மரப்பொந்தில் பதுங்கியெதுங்கி வாழ்ந்த நான்,
இச்சை கைகளில் வீழ்ந்ததால், அவையெம் வாழ்வை
துச்சம் ஆக்கி வைக்க, துடித்துதான் போனேன் !

பாடிப்பறந்த பசும் கிளிநான், கொடும்பாவிகள் கண்பட
ஓடி ஒழிந்தாலும், தேடிதேடிப் பிடித்து, எந்தன்
நாடி சிறகறுத்து, சிறுகூண்டில் அடைத்துவைக்க, நிதம்
தேடித்திரியும் என்சோடிக்கு, எவரிடம் தூது சொல்வேன் ?

வீட்டிற் கென விலங்குகள் பூனைநாயிருக்க போதாதென்று
காட்டில் பறந்தயென்னை, கண்ணி வைத்து களவாடியவர்,
கூட்டி லடைத்து ஆசையாய் பேசச்சொல்ல, அவர்களைத்
திட்டிப் பழித்து நான் சொல்வது 'திருடன் திருடன்' !

பஞ்சம் பிழைக்கும் ஏழைகளின் நாடி கிளிசோதிடனின்
நெஞ்சம் நிறைக்க, ஏக்கமுடன் ஏங்கிவரும் ஏழையை
வாஞ்சையுடன் பார்த்து, தேடிதேடிச் சீட்டெடுத்தால் தரும்
கொஞ்சம் நெற்மணியில் நித்தமென் சிறுவயிற்றுப் பிழைப்பு !

ஏழை சோதிடனின் பட்டினி போக்கும் பலசீட்டுப்
பேழையில் எனக்கு மொரு பலன்சீட்டு இருந்தாலும்,
கோழை செய்த கொலையாய் வெட்டபட்ட சிறகுடன்
பிழைபிற் கொருவழி தேடிவேறெங்கு போவேன் நான் ?

பெற்றவள் நான்பதைக்க, என்பிள்ளைகள் இரைக்கு வாய்பிளக்க,
பற்றற்று இருக்க நான் எத்தவமும் அறிந்ததில்லை, அம்பிகை
கொற்றவள் மீனாட்சி யானாலும், தனித்திங்கு அவள்கையில்
ஒற்றை கிளியாய் உட்கார்ந்து இருப்பதில் எனக்கேது பலன்?



4 ஜூலை, 2006

மவுன மொழி (கவிதை)!

சவ ஊர்வலம் போல் தேன்கூடு போட்டிக்காக மரணம் பற்றிய ஆக்கங்கள் அமைதியாக சென்று கொண்டிருக்கின்றன. சோகமாக எட்டிப் பார்த்த மற்றொரு துளிப்பா... இது போட்டிக்கு அல்ல.

மவுன மொழி !
தோற்றம் மறைவு தேதிகளை காட்டிய
கல்லறையின் மவுனம் சொன்னது
ஒரு மறைவே எனது தோற்றம் !

'அந்த' சந்தேகம் (சிறுகதை) !

தன்மகள் கல்யாணியுடன் தோழிபோல் பழகும் அலமேலு அம்மாள் அன்று ஆடிப்போனார். மாத மாதம் உபயோகிக்கும் அந்த பொருள் இரண்டு மாதமாக அப்படியே இருந்தது, இரண்டு மாதமாக உபயோகிக்கவில்லை என்று தெரிந்ததும் உடல் நடுங்கியது. தன் மகள் இதைப்பற்றி ஏன் கேட்கவோ சொல்லவோ இல்லாமல் என்னிடம் மறைத்தாள்... இந்த மனுசனுக்கு தெரிந்து போய் என்ன ? எப்படி ? என்று கேட்டால் எப்படி சொல்வது ? ... இது வெளியிலும் சுற்றி யுள்ளவர்களுக்கும் தெரிந்தால் பெருத்த அவமானமாகி விடுமோ? தன் மகளின் தோழிகள், இதை பெரிய விசயமாக்கி, தன் மகளை கின்டல் செய்தால் அவளால் பொருத்துக் கொள்ள முடியுமா ?. சொந்தகாரங்களை பற்றி கேட்கவே வேண்டாம், வெறும் வாயையே மெல்லும் அவர்களால், இந்த விசயம் கேள்வி பட்டுவிட்டால் பெருத்த அவமானமாகிவிடுமோ?



வயசுப் பொண்ணு வீட்ல இருக்கான்னு நினைப்பே இல்லையா ? மகளைப் பற்றி பொறுப்பில்லாமல் இருவரும் இருந்துவிட்டீர்கள் என்று எல்லோரும் அவமானப் படுத்துவார்கள். வெளியில தலை காட்ட முடியாது, மகளும் பயந்து கொண்டே 'அம்மா எதுக்கும் டாக்டரை பார்த்துவிட்டு வருவோம்' என்று சொன்னாள். வேறு வழியில்லை நிலைமை மோசமாவதற்கு முன் மகளைக் கூட்டிக் கொண்டு போய் ... காதும் காதும் வைத்தது மாதிரி முடிச்சிட வேண்டியது தான்' என்ற முடிவோடு அலமேலு அம்மாள் தன்னுடைய வயது வந்த மகள் கல்யாணியுடன் அந்த கிளினிக் வாசலில் நின்று, சுற்றும் முற்றும் பார்த்தபடி உள்ளே சென்றார்.

வயதுக்கு வந்த பெண்ணை வீட்டில் வைத்துக் கொண்டு இருக்கிறோமே கவனமாக இருக்க வேண்டும், கால காலத்தில அவளுக்கு ஒரு கல்யாணம் பண்ணிப் பார்கனுமேன்னு தோனாமல் தன்னோட வேலையில் மட்டும் கவனம் செலுத்தியதால், இன்னைக்கு அவளோட இங்க வந்து நிக்க வேண்டியதாகி விட்டது, எனக்கு மட்டும்தான் பொறுப்பு இருக்கா? எல்லாம் விதி என்று தன் புருஷனை நினைத்து, தன்னை நொந்து கொண்டு, இது மகளின் எதிர்காலத்தை எந்த விதத்தில் பாதிக்கும் என்று குழம்பியபடி ... கிளினிக்கின் வரவேற்பு அறைக்கு வந்துவிட்டார் ... மகளை கொஞ்சம் தள்ளி நிற்கவைத்துவிட்டு ... விசயத்தை சொல்லி முன்பதிவு பெற்று, டாக்டரின் அழைப்புக்காக அறைக்கு முன்பு தன் மகளுடன் காத்திருந்தார்.

அலமேலு அம்மாவிற்கு ஒரு மாதிரியாக இருந்தது, அவர் மகள் குழம்பிய படி, அம்மாவை வெறுமையாக பார்த்துக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் இருவரும் உள்ளே அழைக்கப் பட்டார்கள். ப்ளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட் எல்லாம் எடுத்தாகி விட்டது. 'அம்மா, உங்க மகளை கூட்டிக்கிட்டு, நீங்க போயி வெளியில் வெய்ட் பன்ணுங்க' என்று நர்ஸ் சொல்ல, ரிசல்டுக்காக வெளியில் அலமேலு அம்மாவும், அவர் மகள் கல்யாணியும் உட்கார்ந்திருந்தார்கள்.

அலமேலு அம்மாவுக்கு தன் மகளை முகம்பார்க்க கூட கூசியது, வெறுமையாகவும், பட படப்பாகவும் இருந்தது. ரிசல்ட் எப்படி இருக்குமோ, ஒரு வேளை பாதகமாகி டாக்டர் கை விரித்துவிட்டால் என்று நினைத்தபடி வரும் அழுகையை அடக்கி கொண்டு, நிமிடங்கள் கரைய, நெருப்பில் அமர்ந்த மாதிரி ஒட்கார்ந்திருந்தார்.

அந்த நிமிடம் நெருங்கியதும், நர்ஸ் வெளியில் வந்து, கல்யாணியிடம் ... 'இங்க வாம்மா, உன்னிடம் சில விசயங்களை டாக்டர் கேட்கனும்னு விரும்புகிறார், தெளிவா எல்லாத்தையும் மறைக்காமல் சொல்லு' என்று சொல்ல. அலமேலு அம்மா முகத்தில் ஈயாடவில்லை, தன் மகளை உள்ளே போகச் சொன்னார்.

டாக்டர் கல்யாணியைப் பார்த்து,

"உங்க கூட வந்திருக்காங்களே, அவுங்க யாரு?",

"என் பெயர் கல்யாணி ... அவுங்க என் அம்மா அலமேலு ... டாக்டர்" என்றாள் கல்யாணி.

"கடைசியா மாதவிலக்கு எப்போ நின்னுதுன்னு உங்களுக்கு தெரியுமா?"

"அம்மாதான் சரியாக ஞாபகம் வைத்திருப்பார்கள், இருந்தாலும் இரண்டு மாசத்திற்கு மேல் இருக்கும்னு நினைக்கிறேன்"

"கல்யாணி கவனமாக கேட்டுக்குங்கள், நீங்கள் சொல்வதை வைத்தும், இந்த ப்ளட், யூரின் டெஸ்ட் எல்லாம் பார்த்த பிறகு, ஒரு முடிவுக்கு வருகிறேன், உங்க அம்மாவுக்கு மெனோபாஸ் ஆரம்பிச்சிடுச்சி, இனிமே கொஞ்ச நாளைக்கு கோபப்படுவாங்க, சம்பந்தமில்லாமல் எரிந்து விழுவாங்க, நீங்கதான் உங்க அம்மாவிடம் அனுசரணையாகவும், ஆதரவாகவும் நடந்து கொள்ள வேண்டும், இதுல பயப்பட ஒன்றுமில்லை, இது இந்த சமயத்தில சிலருக்கு வரும் நார்மலான உணர்வுகள் தான்" என்று சொல்லி முடித்தார்.

"நானும், அதைதான் நினைச்சேன், டாக்டர் ... கன்பார்ம் பண்ணாமல் நேரிடையாக சொல்ல முடியவில்லை"

"இரண்டு மாசமாவே அம்மா குழப்பமாகவும், சோர்வாகவும் இருந்தாங்க, நான் தான் வற்புறுத்தி, எதுக்கும் ஒரு மெடிக்கல் டெஸ்ட் எடுத்து பார்த்திடலாம்னு சொன்னேன், அம்மா பலத்த யேசனைக்கு பிறகு ஒத்துக்கிட்டாங்க... டாக்டர்"

"கல்யாணி, உங்க அம்மாவை நல்லா புரிஞ்சி வைச்சிருக்கிங்க, வெரிகுட்"

"தாங்கியூ டாக்டர், நான் பொண்ணா இருக்கிறதால, இது எனக்கு நல்லா புரியுது"

"கல்யாணி, நீங்க போய் வெளியில் இருக்கும் உங்கள் அம்மாவை அனுப்பி வையுங்கள்"

என்று சொல்ல கல்யாணி விடைபெற்றுக்கொண்டு வெளியே சென்றார்.

வெளியில் வந்த மகளின் சிரித்த முகத்தை பார்த்ததும் அலமேலு அம்மாவிற்கு 'இவள் கேலியாக சிரிக்கிறாளோ ?' என்று நினைத்தாலும் சற்று தெம்பு வந்தது. கதைவை திறந்து கொண்டு டாக்டரை பார்க்க உள்ளே சென்றார்.

"அலமேலு அம்மா, பயப்படாதீர்கள், உங்களுக்கு ஒன்னுமில்லை, இது நார்மல் தான், நாற்பது வயது தாண்டி, என்றாவது ஒருநாள் மாதவிலக்கு நிற்கும், அது தான் உங்களுக்கு நடந்திருக்கு" என்று சொல்ல, அலமேலு அம்மாள் நிம்மதி பெருமூச்சு விட்டார்.

அலமேலு அம்மா வயிற்றைத் தடவிக் கொண்டு ... சங்கடமாக

"நன்றி, டாக்டர், நான் தான் ஏதேதோ, நெனெச்சிகிட்டு ரொம்ப பயந்து போயிட்டேன்"

"ம் ... எதாவது இருந்தால் சொல்லுங்கள்" என்றார் டாக்டர்

"அதெல்லாம் ஒன்னுமில்லை டாக்டர்" என்று அவசரமாக மறுத்துவிட்டாலும் அலமேலு அம்மாள் முகத்தில் வெட்கம் தெரிந்தது

டாக்டருக்கு நன்றி சொல்லி விடைபெற்றுக்கு கொண்டு வெளியில் வர, மகள் கல்யாணி தன் அம்மாவை பரிவுடன் பார்த்தாள்.

என்று இந்த கதையை கூறிய வேதாளம், இந்த கதையை படிப்பவர்கள் 'ஏன் அலமேலு அம்மாள் தன் வயிற்றை தடவிப்பார்த்துக் கொண்டார் ? ஏன் கணவரை பொறுப்பற்றவர் என்று மனதுக்குள் திட்டினார் ?' என்ற கேள்விகளுக்கு விடை தெரிந்தும் கூறாதிருந்தால் அவர்களின் பதிவுகள் மாயமாக மறையும் என்று சொல்லிவிட்டு சற்றும் தாமதிக்காமல் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது

பி.கு : பின்னூட்டத்தில் கலாய்க்க மட்டும் தான் தெரியுமா ? தமிழ் பதிவர் உலக சான்றோர் வியக்கும் வண்ணம் ஒரு கதை எழுத உன்னால் முடியுமா என்று பலரும் நகைப்பது எப்படியோ எனக்கு தெரிந்துவிட்டது... விடுவேனா ? குப்புசாமி செல்லமுத்துவின் 'அந்த' கதையை படித்தவுடன் ஏற்கனவே எழுதி தூங்கிய 'இந்த' கதை நினைவில் வந்தது.... அப்படியே எடுத்து ஒட்டிவிட்டேன். பாராட்டுபவர்கள் தட்டலாம் ... மற்றவர்கள் குட்டலாம். எழுத்துப் பிழைகள் இருக்கும் அடியேன் இன்னும் பாலர் பள்ளிதான்.

முன்னாள் காதலை எண்ணி...

கவிதை எழுதுபவர்கள் எல்லோரும் காதலிக்கிறார்களா ? காதலிப்பவர்கள் எல்லோரும் கவிதை எழுதுகிறார்களா?... என்னைப் போல் கவிதைகளை காதலிப்பவர்கள் உண்டு. கழுதைக்கு கூட காதல் பிடிக்கும் அது காகிதத்தில் எழுதப்பட்டிருந்தால். எல்லா காதலும் கல்யாணத்தில் முடிவதில்லை. யாரோ ஒருவர் சந்தர்ப வசத்தில் பிரியும் போது ... சில வேளைகளில் இப்படியும் நடந்துவிடுகிறது.


முன்னாள் காதலை எண்ணி...



என் காதலனாக
என்னை நீ காதலித்த போது,
எனக்கு அனுப்பிய கடிதங்கள் அனைத்தும்
ஏற்றுக்கொண்டு படித்தவுடன், பெண் என்ற
எச்சரிக்கை உணர்வுடன்,
எவருக்கும் தெரியாமல்,
எல்லா கடிதங்களையும், பெண்
என்பதால் எரித்துவிட்டேன் !

ஏதோ எதிர்பாரதவிதமாக, இது
எதுவும் தெரியாததால்,
என் சம்மதம் கேட்காமல்,
என் பெற்றோர் வேறொருவருடன்
எனக்கு திருமணம் செய்தார்கள்!
என் முதல்காதலை , நீ அனுப்பும்
என் பழைய கடிதங்கள் மூலம்
என் கணவர் தெரிந்துகொண்டும்,
எதற்கும் எதிர்க்காமல்,
என்னை ஏற்றுக் கொண்டு
என்னை தேற்றும்,
என் கணவன் கயவனல்ல !

என் பழைய காதலை எண்ணித் துணிந்தே,
என் எண்ணங்களை உனக்கு எழுதுகிறேன் !
என்னை காட்டிக் கொடுப்பதாக,
என் பழைய கடிதங்களை,
என் கணவருக்கு அனுப்பும் உன்னை,
என் நெஞ்சில் சுமந்த அசுத்தம்
எனத் துடைத்துவிட்டேன் !
என் முன்னாள் கடிதங்கள் எல்லாம்
என் கணவருக்கு நீ அனுப்பிமுடிந்ததும்,
என் கடைசி கடிதம் இதையும்
என் கணவருக்கு அனுப்பிவிடு !

3 ஜூலை, 2006

மரணத்துடன் ஒரு நேருக்கு நேர் ... !

இம்மாத தேன்கூடு போட்டித் தலைப்பைப் பார்த்ததும் கொஞ்சம் பயம். கதையா, கவிதையா, கட்டுரையா ? எதை எழுதுவது ? ... கூடவே நிறைய கேள்விகள். யாரிடம் கேட்பது ? தத்துவங்களா, மதநூல்களா ? என்று நினைத்த நான்... வேண்டாம் அவற்றுள் எது சரி என்பது தெரியவில்லை ... ஒரே குழப்பமாக இருக்கிறது... மதங்கள் பிறவிகளைப் பற்றி ... சொர்க்கம் ... நரகம் என்பது பற்றியெல்லாம் சொல்லுகின்றன, அவற்றைப் பற்றி தெரிந்து கொள்ளவும் ஆர்வம் இல்லை. மதங்கள் மரணம் பற்றி நேரிடியாக சொல்லாமால் மறைமுகமாக சொல்லுகின்றன. நமக்கு தேவை பதில்கள் அது வெட்டு ஒன்று நிறைய துண்டுகள் என்பதைப் போல் இருக்க வேண்டும் என்று நினைத்து மத நூல்களை ஆராய்வதை கைவிட்டேன். இறந்த அன்பு சொந்தங்கள் நினைவில் வந்துபோனார்கள். தூக்கம் வந்தது அப்படியே தூங்கிவிட்டேன்.




ஆழமற்ற தூக்கதில் எண்ணங்கள் ... தூக்கத்தில் மீண்டும் துறத்தியது கேள்விகள் ... கேள்விகள் குடைந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மிருகம் தூங்குவதாக சொல்கிறார்களே... கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு கடையில் நெய் வாங்கச் செல்வதா ? பிறகு எனக்குள்ளும் அது தூங்கிக் கொண்டே குடியிருக்கிறது என்பதை ஒருவாறு தெறிந்து கொண்டேன். அதையே எழுப்பி கேள்வி கேட்டால் என்ன ? என்ற துணிவுடன், பயத்தை கொஞ்ச நேரம் மூட்டைக் கட்டி ஓராமாக வைத்து ...அமைதியாக யோசித்து... யோசித்து மெல்ல நெருங்கிச் சென்று அதனை எழுப்பினேன்.

எழுப்புவதே பெரும் சிரமாக இருந்தது. மெதுவாக எழுந்து கண் விழிக்காமல் சோம்பல் முறித்த மரணத்துடன் உறையாடத் தொடங்கினேன்.

கோவி : மிஸ்டர் மரணம், கொஞ்சம் கண்விழித்துப் பாருங்கள் நான் யாரென்று தெரிகிறாதா ?

மரணம் : தெரிகிறது... என்னை கண்விழிக்க வற்புறுத்தாதே, நான் கண்விழித்தால் பார்பதற்கு நீ இருக்க மாட்டாய், கால நண்பனான உன்மீது எனக்கு அக்கரை உண்டு. கண் திறக்காமல் விளிப்பு நிலையில் இருந்து கேட்டுக் கொள்கிறேன். உனக்கு என்ன தெரிய வேண்டும் என்பதை ஒன்று ஒன்றாகக் கேள் என்றது மரணம்

பயம் தனிந்தது, நொகிழ்ந்து போய் கும்பிட்டேன்,

'தவறு செய்யப் பார்த்தேன், நல்ல வேளை அது கண்ணை திறக்க முயற்சிக்கவில்லை' என்று நிம்மதி பெருமூச்சி விட்டு விட்டு,

கோவி : அன்பு மரணமே, என் மீதான அக்கரைக்கு நன்றி. இதை நான் வாழ்நாள் முழுதும் மறக்க மாட்டேன்.

மரணம் : சரி, விசயத்துக்கு வா !

கோவி : மிஸ்டர் மரணம், உங்களைப் பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா ?

ஆழ்ந்த மவுனத்திற்கு பிறகு மரணம் பேசியது

மரணம் : நான் ஒரு நிகழ்வு, காலத்தின் ஊடாகவே நானும் இருக்கிறேன். உயிர்கள் என்னை தனித்தனியாக உணருகின்றன.

கோவி : புரியவில்லை ! கொஞ்சம் விளக்குங்களேன் ?

மரணம் : கருப்பையில் உயிர் துடிக்க ஆரம்பித்த அதே வேளையில், நானும் கூடவே பிறக்கின்றேன். அப்படியில்லை என்றால் அந்த உயிர்துடிப்பதற்கு முன்பே பிறக்கின்றேன். அதாவது அந்த உயிர் அப்போதே பிறந்து இறந்துவிட்டது என்று கூட சொல்லலாம்.

கோவி : இன்னும் குழப்பமாகவே இருக்கிறது !

மரணம் : அதாவது பிறக்காத ஒன்றுடன் நான் இணைவதில்லை. பிறந்த ஒன்றை நான் விடுவதும் இல்லை !

கோவி : பிறப்புடன் இணைந்து பிறப்பதாக சொல்லுகிறீர்கள். தனி உயிர்களை தற்போதைக்கு சற்று மறப்போம். ஒரு முக்கிய கேள்வி, உங்களின் கருப்பு வண்ணத்தில் மறைந்து, இறந்து போன சாம்ராஜியங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

மரணம் : நான் பார்க்காத சாம்ராஜ்ஜியங்களா ? சாம்ராஜ்ஜியங்களின் பெரிய பெரிய மகுடங்களின் தலைகளை, அதாவது மன்னர்களை மாற்றி அழகு பார்த்தியிருக்கிறேன். அதன் எழுச்சி, வீழ்ச்சிகளை நானே முடிவும் செய்தும் இருக்கிறேன். பல சாம்ராஜ்யங்கள் சிறப்புற்றதும், சீர்கெட்ட சாம்ராஜ்யங்கள் அழிவுற்றதும் என்னால் தான்.

கோவி : அது சரி... சிறியோர், பெரியோர் என்ற வயதுகளை நீங்கள் எப்படி கையாளுகிறீர்கள் ?

ஒரு குழந்தையின் கூதுகுல சிரிப்புடன் சொல்லத் தொடங்கியது மரணம்
மரணம் : குழந்தை மணம் வேண்டும், வேண்டும் என்று எல்லோரும் சொல்கிறார்களே, அதே மன நிலையில்தான் அவர்களை அணைக்கும் பொழுது எனக்கும் ஏற்படுகிறது. கால(டைம்) தேவன் எனக்கு கொடுக்கும் ஒரு விளையாட்டு பொம்மையாகத் தான் அவர்களை நினைக்கிறேன். விளையாட்டு குணம் என்னிடம் அப்பொழுது வந்துவிடுகிறது. வயது வேறுபாடின்றி தொட்டு விளையாடுகின்றேன்.

கோவி : சந்தித்த கோர அனுபவங்கள் ?

மரணம் :என்று நான் காலத்துடன் இணைந்தோனோ அன்று முதல் இன்று வரை எத்தனையோ கோர நிகழ்வுகள், அழிவுகள் அவை என் விருப்பமில்லாமல், ஒரு தூக்கு தண்டனை நிறைவேற்றும் காவல் அலுவலர் என்ற மனநிலையில், கடைமையை செய் என்பது போல் நிகழ்ந்துவிடுகிறது. ஒன்றை நினைத்து... மற்றொன்றிக்கு ஆறுதல் தேடிக் கொள்கிறேன். இடைப்பட்ட காலத்தில் காலதேவனின் கால அவகாசம் தான் என்னை ஆற்றிக் கொள்ள வைக்கிறது.

கோவி : ஏழை, பணக்காரன் என்ற பாகுபாட்டை நீ எவ்வாறு அணுகுகின்றாய் ?

மெல்லச் சிரித்ததுச் சொன்னது ....
மரணம் : எனக்கேது பாகுபாடு ? நான் அவர்களை பார்க்கும் போது என்பார்வையில் எந்த வேறுபாடும் இருப்பதில்லை, இவர்கள் எல்லோருமே சமமாகவே என்னுள் அடக்கமாகிறார்கள்

மரணத்துடன் கொஞ்சம் நட்பு ஆகிவிட்டது என்று தெரிந்தது ... ஒருமைக்கு மாறி,
கோவி : உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பேதம் பார்ப்பாயா ?

கேலியாக சிரித்தது மரணம் ...
மரணம் : சாவு மணியை கையில் வைத்துக் கொண்டு அடிக்காமல் விடுவேனா ? ஏற்றத் தாழ்வு என்னிடம் இல்லை என்று உறக்க கேட்கும் படி மணியடித்திருக்கிறேன். தூங்குவது போல் நடிப்பவர்களே, கேட்காதது போலவும் நடிக்கின்றனர். எங்கே சென்று விடுவார்கள் ? நான் பார்க்காமல் விடுவேனா ? இதைப் புரிந்து கொள்பவர் மிகச் சிலரே என்பது என் ஆதங்கம். பலரும் புரிந்து கொள்ளும் போது காலம் கடந்து போயிருக்கிறது.
என்று வருத்தத்துடன் சொன்னது மரணம்.

கோவி : நீ சொல்வது சரியா தவறா என்பது தெரியவில்லை, அன்பு உறவுகளுக்குள் நுழைந்து திடீரென்று தட்டிப் பறிப்பது சரியா ?

மரணம் : முன்பே சொல்லிவிட்டேன், சரி தவறு என்ற கேள்விகளுக்கு எனக்கு பதில் யாரும் சொல்வதில்லை ... எனக்கு தெரிவதும் இல்லை. காலதேவனின் கட்டளை எதுவோ, அது கடமை என்ற அளவில் அதைச் செய்கிறேன். உறவுகள் ஒன்றுக் ஒன்று சேர்வதினாலோ, தற்காலிகமாக பிரிவதாலோ, தங்களுக்குள் தாங்களே புரிந்து கொள்வதைக் காட்டிலும் நிரந்தரமாக பிரியும் போது தான் உறவுகளின் உன்னதங்களை புரிந்து கொள்கிறார்கள். இவற்றைப் பார்க்கும் போது அது எனக்கு ஆறுதலாக அமைந்து விடுகிறது. எல்லாவித காயங்களுக்கும் தான் காலன் களிம்பு மருந்து போடுகிறானே !

கோவி : வருத்தமான விசயம் அது. மண்ணிக்கவும்... ஒரு ஆர்வக்கோளாறு கேள்வி இது, நீ வருவதை முன் கூட்டியே சொன்னால் குறைந்தா போய்விடுவாய் ?

மறுபடியும் நகைத்தது,
மரணம் : ம்... சொல்லாம் .... நான் செய்யும் வேலையை அவர்களே செய்து மற்றோரை வாழவிடாமல் செய்துவிடுவார்கள். நாளைக்கு சாகப் போகிறோம் என்று இன்றைக்கே வேண்டாதவர்களை எல்லாம் வீழ்த்த முயற்சிப்பார்கள். தனக்கு கிடைத்தது (மரண தேதி) எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்ற தாரள நிலையை எல்லோரும் எடுத்துவிட்டால் கால தேவனிடம் யார் பதில் சொல்வது?. தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும். அது எனக்கு மாற்றான வாழுதல் என்ற நிலைக்கு நான் செய்யும் துரோகம்.

கோவி : மதம் பற்றிய உன் மீதன மரண கருத்துக்கள் பற்றி என்ன நினைக்கிறாய் ?

மெல்லச் சிரித்தது மரணம் ...
மரணம் : என் மீது பயம் காரணமாகவே மனிதன் தேடிக் அலைந்து உருவாக்கிக் கொண்டது மதங்கள் ஆகும். என் வாழ்வில் எத்தனையோ மதங்களையும், என்னைப் பற்றிய தத்துவங்களையும் பார்த்திருக்கிறேன், மதங்கள், தத்துவங்கள் அவை நீர்த்துப் போகும் போது அவற்றை என் சவ குழியில் புதைத்திருக்கிறேன். பிறப்புகள் போலவே மதங்களும் என்மீதான புதிய கருத்துக்களுடன் மீண்டும் பிறந்து கொண்டே இருக்கின்றன.

கோவி : சபாஷ், எனக்கு வருத்தமாக இருப்பது ஒன்று. உன்னை தானாகவே தேடி வருபவர்கள் பற்றி என்ன நினைக்கிறாய் ?

மரணம் : நீ கேட்பது தற்கொலையை என்று புரிகிறது, இருந்தாலும் கொலையைப் பற்றியும் சொல்லிவிடுகிறேன். இதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்வது இல்லை. விரும்புவர்களையும், விருப்பின்றி தள்ளப் படுபவர்களையும் நினைத்து நான் கண்ணீர்விடுவதும் உண்டு. மீழத் துயரில் என்னை நோக்கி கை நீட்டுபவர்களை அணைத்துக் கொள்கிறேன். கொலைக் கரங்களுக்கு இடையில் சூழ்நிலை கைதியாகிறேன். அப்போது அவர்களின் ஆத்ம சாந்திக்காக பிராத்தனை செய்வதைத் தவிர வேறொன்றும் நான் செய்வதில்லை. என்னைப் பற்றி புரிந்துணர்வு, விழிப்புணர்வு இல்லாததாலேயே இத்தகைய கொடுமைகள் நடந்து முடிந்துவிடுகின்றன. இதற்கு குற்றம் சொல்வது என்றால் கால தேவனையும் (டைம்), பொறுப்பற்றவர்களையும், அடுத்தவர் நலன் கெடுப்பவர்களையுமே குற்றம் சொல்ல வேண்டும்.

கோவி : ஏதோ சொல்கிறாய்... எனக்கு முழுவதும் உடன்பாடு இல்லை. நீ சொல்வது தேற்றிக் கொள்வதற்காக என்ற ரீதியில் எடுத்துக் கொள்கிறேன்... கடைசி கேள்வி, மரணமே உனக்கு மரணம் உண்டா ?

வெகுண்டு கோபப்படுவது போல் தோன்றியது. கண்ணை திறக்க முயற்சிப்பது போல் தெரிந்தது.

கோவி : அமைதி! அமைதி!... அடுத்தவர் மரணம் பற்றிச் சொல்லும் போது அமைதியாக இருந்த நீ ... உன்னைப் பற்றிகேட்கும் போது கோபம் வருகிறதே மரணம் என்றால் உனக்கும் பயமா ?

சிறிது நேர மவுனத்திற்கு பின் மெதுவாக,

மரணம் : உன்னுடைய கேள்வி எனக்கு எதிராக இருப்பது போல் தோன்றியதும், சற்று கலவரப்பட்டது உண்மை. நீ கேட்பது சரியான கேள்வி என்பதால் ஆழ்ந்து யோசித்து அமைதியானேன். மரணத்திற்கு மரணமா ? மரணம் இறந்துவிட்டது என்றால் அது மீண்டும் பிறந்துவிட்டது என்று தானே அர்த்தம். அப்படி பிறந்துவிட்டால் எனக்கு மரணமில்லை எனக் கொள்ளலாம்... அதாவது மரணத்திற்கு மரணமே இல்லை... மரணம் என்றுமே வாழ்கிறது. கால தேவனின் கடைசி மூச்சி இருக்கும் வரை வாழ்கிறது. போதும் மேலும் நோண்டாதே ... என்றோ ஒரு நாள் மீண்டும் சந்திப்போம். அன்று நீ என்னுடன் இருப்பாய்.
என்று அப்படியே தூங்கிவிட்டது.

ஏதோ ஏதோ உணர்வுகள். சிலிர்ப்புகள் எழுந்து அடங்கியது. மெல்ல கண்விழித்துப் பார்த்தும், எல்லாம் கனவு என்று தெளிந்தேன். மரணத்தின் மீதான என்பயம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது ... அதன்பிறகு தூக்கம் வரவில்லை. நடந்தவற்றை எழுதினேன்.

எல்லாவித சாவுகளுக்கும் கேள்வி எழுப்பிய நான் ஒன்றுக்கு மட்டும் வாய்த்திறக்கவில்லை. அதற்கு மரணமே மரண ஓலம் எழுப்புமோ என்ற பயம் தான் காரணம். ஆம்...! மரணமும் கலங்கி ஓலமிடும் என்றால் அது பட்டினிச் சாவுதான். இதற்கான காரணம் மரணத்திற்குத் தெரியாது ... மனிதர்களிடம் மட்டுமே இதற்கான காரணம் இருக்கிறது.


ரணம் மட்டுமே வாழ்கிறது ...

கருப்பையில் உயிரின் முதல் துடிப்பில்
பிறப்புடன் சேர்ந்தே பிறப்பெடுக்கிறது மரணம் !

சாம்ராஜிய மா மகுடங்களின் தலைகளை
மாற்றி அழகு பார்க்கிறது மரணம் !

சிறுவயதோ, முதுமையோ எதற்கும் அஞ்சாமல்
தொட்டு விளையாடும் கள்ளமற்றது மரணம் !

ஏழை, பணக்காரன் என்ற பாகுபாட்டை
உடைத்து சமநீதி வழங்குகிறது மரணம் !

உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வேறுபாடின்றி
ஒரே மரணக்குழியில் புதைக்கிறது மரணம் !

உறவுகளை உணர்த்தி, உள்ளங்களை திருத்தும்
ஒப்பற்ற நிலைத்த தத்துவம் மரணம் !

இரவுபகலென்று இயற்க்கையின் இரட்டை நிலையில்
அமைதி இரவாக எண்ணப்படுவது மரணம் !

உயிர் என்பது ஊசலாட்டம் என்று
ஒயிலாடி சுட்டு உணர்த்துவது மரணம் !

மட்டில்லா துன்பங்கள் எத்தனை வந்தாலும்
எட்டி ஓடாமல் கட்டியணைப்பது மரணம் !

மரண தத்துவங்களும் மறித்துப் போனாலும்,
அன்றும், இனிஎன்றும் மறிக்காதது மரணம் !

நொடி பிசகாமல், காலம் தாழ்தாது
நாட்களை எண்ணிச்செயல் ஆற்றவது மரணம் !

காலதேவன் காலமாகிப் போகும்வரை இவ்வுலகில்
கடைசிவரை வாழ்வது மரணம் ... மரணம் மட்டுமே !



பின் குறிப்பு : இந்த பதிவில் வந்தது யாவும் என் கற்பனையே ... எந்த நம்பிக்கையும் பொய் என்று சொல்லுவதற்காக எழுதப்படவில்லை. உள் உணர்வுகளையும், சொந்தக் கருத்துக்களை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன். உங்களுக்கு மாறுபட்ட கருத்து இருந்தால் அதையும் மதிக்கிறேன்.

வளர்ச்சிதை மாற்றம் - என்னுடைய கவிதைக்கு வாக்களித்தவர்களும், பின்னூட்டமிட்ட பதிவாளர் நண்பர்கள், நண்பிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

அன்புடன் கோவி.கண்ணன்

2 ஜூலை, 2006

படகில் பயணம் ...



படகுகளைப் பார்க்கும் போதெல்லாம்
என்னுள் எழும் எண்ணம்,
படகுகள் பலவிதம் !
ஒவ்வொன்றும் ஒருவிதம் !


அலை கடலில் அலைக்கழிக்கப்படும் படகுகள்,
அமைதி நடுக்கடலுக்குள் துணிந்து செல்லும் படகுகள்,
ஆற்றில் இலக்கு தெரிந்து சீராக செல்லும் படகுகள்,
அக்கரையும், இக்கரையும் மட்டுமே தெரிந்த பரிசல் படகுகள்,
அனைத்துக் கரைகளையும் அறிந்த பெரும் படகு என கப்பல்கள் !
ஆழமூழ்கி எழுந்து நிற்கும் நீர்மூழ்கிக் படகு கப்பல்கள் !

ஆனால் எந்த படகானாலும், அவை
உடைந்து உருக்குலைந்து போகும் போது,
ஒரு நாள் கரைக்குத் திரும்பியதும்,
வெம்தணலில் எறிந்து போகும் கட்டைகளே !

படகுகளைப் பார்க்கும் போதெல்லாம்
நெடுந்தூரப் பயணத்தின் ஊடாக

எதாவது படகின் வழி என் பயணம்
தொடர்கிறது என்றும் எண்ணிக் கொள்வேன் !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்