வட்டார வழக்குகள் தனிமொழி என்று அறியப்படும் போது அவற்றின் தொடர்புடைய அல்லது அவை இவற்றின் மூலம் வந்திருக்கக் கூடும் என்னும் குறிப்பிட்ட மொழியில் உரையாடுபவர்களுக்கும் அவ்வட்டார வழக்கில் உரையாடுபவர்களும் உரையாடினால் புரிந்து கொள்வது கடினம், அதாவது வேர் மொழியில் இருந்து தனித்துவிட்டது என்ற நிலையில் வட்டார வழக்குகள் தனி மொழி என்னும் சிறப்பை பெருகின்றன அல்லது அடையாளப்படுத்தப்படுகிறது. திராவிட மொழிகள் அனைத்தும் பழந்திராவிட மொழிகள் இருந்து கிளைத்தன, பழந்திராவிட (Proto Dravidan) மொழி அமைப்பு பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது, ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழின் மாற்றம் மிகப் பெரிய அளவில் இல்லை என்பதால் திராவிட மொழிகளின் ஊற்று தமிழாக இருக்கக் கூடும் என்கின்றனர், தமிழை திராவிட மொழிகளின் தாய் என்று முன்னிருத்துவதில் தற்போதைய சிக்கல் கன்னடம், தெலுங்கும் உள்ளிட்ட மொழிகளைப் பேசும் மக்களுக்கு ஏற்புடையதாக இல்லை, தம்மொழியே சிறந்தது என்கிற உயர்வு மனப்பான்மையில் தமிழை திராவிடத் தாய் என்று ஒப்புக் கொள்வதற்கு அவர்களுக்கு இருக்கும் மனத்தடையை நாம் புரிந்து கொள்ள வேண்டும், பழந்திராவிட மொழி என்கிற பொதுமையை முன்னிருத்தினால் அதன் வழி திராவிட மொழிகள் கூட்டாக தத்தம் வளர்ச்சிக்கு பயனடைய முடியும். இது என் தனிப்பட்ட கருத்து.
*****
திராவிட மொழிகள் இவை என்று அடையாளப்படுத்தப்பட்டவை ஏறத்தாள 45, அவற்றில் வரிகள் அமைப்பு மற்றும் பொதுவான வினைச் சொற்கள் மற்றும் பெயர் சொற்கள் உண்டு, அவற்றிற்கிடையேயான தொடர்புகளைப் பொருத்து அவை திரிந்தோ, திரியமலோ இருக்கும், பொதுவான இலக்கண அமைப்பும் சேர்ந்து தான் குறிப்பிட்ட மொழிகள் ஒரு தொகுப்பில் வரும், திராவிட மொழிகள் இந்தியாவின் தென்மாநிலங்களிலும், வட இந்தியாவின் மைய பகுதிவரையும், பாகிசுதானில் ஒரு பகுதியிலும் கூட (Brahui) பேசப்பட்டுவருகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் தவிர்த்து ஏறத்தாழ 4 லட்சம் மக்கள் பேசும் மொழியாக கர்நாடகாவின் மங்களூர் பகுதியில் துளுவும், தமிழ்நாடு நீலகிரி மாவட்ட மலைப்பகுதியில் படகர் மொழியும் பேசப்படுகிறது, துளுவுக்கு தனி எழுத்துகள் (Tigalari script) இருந்தாலும் தற்பொழுது கன்னட எழுத்துகளைத் தான் பயன்படுத்துகின்றனர். கர்நாடக மாநிலத்திற்குள் அமைந்துள்ளதால் துளு பேசுவர்களுக்கு அது தான் சரியாக இருக்கும் என்று கருதுகிறார்கள்.
நீலகிரி தமிழகத்தில் அமைந்துள்ளது, படகர்கள் / வடகர் / படுகு / வடுகு என்று குறிக்கப்படும் ஒரே வடுகு மொழியை பேசுபவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அவர்களின் மொழி பெரும்பகுதி கன்னடத்தை ஒத்திருந்தாலும் கன்னட எழுத்தில் அவர்களின் மொழியை வளர்ப்பதில் தமிழக அரசின் உதவியையோ, கர்நாடக அரசின் உதவியையோ அவர்களால் பெற முடியாது. படகர் மொழி கன்னடம் தமிழ் ஆகியவற்றின் திரிந்த கலவைதான், ஆனால் படகர் மொழிக்கென்றே தனிச் சொற்களும் நிரம்ப உண்டு, தமிழும் கன்னடமும் அறிந்தவர்கள் படகர் உரையாடலை புரிந்து கொள்ள முடியும். படகர்களின் பள்ளிக் கல்விக்கு கொடுக்கப்படும் இருவாய்ப்புகள் முதல் மொழியாக கன்னடமும் தமிழும் மட்டுமே, அவர்களுடைய மொழியை வீட்டில் பேசினாலும் அவர்களுக்கு படகர் மொழிக்கல்விக்காக எந்த ஒரு பள்ளிக் கூடங்களோ, தனியார் அமைப்போ கிடையாது, நம்முடைய தாய் மொழி ஒன்றாக இருந்து பெரும்பான்மையினர் பேசும் மொழி என்று தமிழை மட்டுமே கற்றுக்கொள்வது மன அளவில் அவர்களுக்கு இருக்கும் தடைகளை தமிழகத்தின் ஆட்சியாளர்கள் புரிந்து கொள்வது போல் தெரியவில்லை, தமிழ்நாட்டில் தமிழ் படித்தால் நல்லது என்பது தமிழை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம், அவர்களுக்கும் ஏன் கட்டாயமாக திணிக்க வேண்டும், இந்தி திணிப்புக்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் தமிழகம் (எனக்கு அதில் உடன்பாடு உண்டு) படகர்களுக்கான கல்வி வாய்ப்பில் தமிழை காட்டுவது எந்தவிதத்தில் ஞாயம் என்று எனக்கு தெரியவில்லை, அவர்களுக்கு ஆரம்ப பள்ளிகளாவது படகர் மொழியை கற்றுக் கொள்ளும் வாய்ப்பை கொடுக்கலாம்,
வீட்டில் தான் பேசுகிறார்களே, பின்னர் ஏன் பள்ளியில் கற்றுக் கொள்ள வேண்டும் ? பள்ளிக் கல்வி என்பது எழுத்தை படிக்கக் கற்றுக் கொள்வது அல்ல, மாறாக அவர்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, மொழி வரலாறு, இலக்கணம் இலக்கியம் உள்ளடக்கியவையே, படகர் மொழிக்கென்றே தமிழ் எழுத்துகளை பின்பற்றி தனி எழுத்துகளை அம்மக்களில் ஒருவர் உருவாக்கி இருக்கிறார், அது ஒரு நல்ல முயற்சி, எழுத்தில்லாத மொழிகள் இலக்கிய இலக்கணங்களையும், மொழி சார்ந்த படைப்புகளையும் அடுத்த சந்ததியினருக்கு அளிக்க முடியாது, அவர்கள் மொழியை தமிழ் எழுத்துகளிலேயே எழுதலாமே ? மொழிக்கான தனிச் சிறப்பு என்பது அது தனக்கான தனி எழுத்து வடிவத்தை கொண்டிருப்பது தான், இந்தியாவில் உள்ள மலையாளம், தமிழ் தவிர்த்து ('ழ்') ஏனைய மொழிகளை இந்தி மற்றும் வடமொழியை எழுதப்பயன்படும் தேவநகரியில் எழுதிவிட முடியும், ஆனால் அதில் தனித்துவம், தனிச்சிறப்பு ஏதுவும் இல்லை, அதனால் தான் படகர் மொழிக்கென தனி எழுத்துகளை உருவாக்கி, கணிணி ஒருங்குறியில் (Unicode) படகர் மொழி எழுத்துகளையும் ஏற்ற) முயற்சிக்கின்றனர், இதற்கு தமிழக அரசு எந்திரம் ஒத்துழைத்தால் படகர் மொழி இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு மேலும் வாழும்.
The Badaga Script developed by Anandhan Raju
வெறும் 15,000 பேர் மட்டுமே பேசும் வடமொழியை அழிவில் இருந்து காப்பாற்ற கோடிக்கணக்கில் செலவிடப்படுகிறது, பல்கலைகழகங்கள், 100க் கணக்கான சபாக்கள் இயங்குன்றனர். வடமொழி விழிப்புணர்வுக்காக ஏழுநாள் கொண்டாடப்படுகிறது, சங்காலத்தில் (புறநானூற்று குறிப்புகள்) வடகர் என அறியப்பட்டு 4 லட்சம் பேர் பேசும் ஒரு மொழியை வளர்த்தெடுக்க மைய அரசோ, மாநில அரசோ முன்வரவில்லை, தமிழ் திணிப்பால் அழிந்த மொழி என்னும் நிலை படகர் மொழிக்கு வரவேண்டாம், படகர் இனமக்கள் ஒன்று திரண்டு தமிழக அரசிடம் தங்கள் மொழி வளர்ச்சிக்கு பல்வேறு கோரிக்கையை வைத்து பேராடி மொழி உரிமையைப் பெறுவது தான் தற்போதைய வழி, அம்மக்களை தமிழகத்தின் எல்லைக்குள் அடைத்துவிட்டு, அம்மக்களின் மொழியை கண்டுகொள்ளாமல் இருந்தால் படகர் மொழி அழிவுக்கு, தமிழ் திணிப்பும் தமிழக அரசுமே காரணமாக அமைந்துவிடும்.
கும்கி படத்தில் அம்மக்களின் வாழ்வியலை பதிய வைத்திருப்பார்கள், ஆனால் அவர்கள் பேசும் மொழி பற்றி ஒருகாட்சி அமைப்பு கூட கிடையாது. படகர் மொழியில் இலக்கியம் படைக்க படகர்களில் பலருக்கு ஆர்வம் உண்டு, அவர்கள் பள்ளிகளுக்கு தேவையான பாடத்திட்டங்களை தமிழ் பாடத்திட்டங்களை ஒட்டி அமைத்து தருவதற்கும் ஆவலாகவே உள்ளனர், நீலகிரி படகர் இனமக்கள் திராவிட மக்கள், தமிழகத்தை சார்ந்தவர்கள், வெள்ளைக்காரன் அவர்களது மலைவாழ் இடங்களை பறிக்க, பின்னர் திரைப்படம் எடுக்கவும், சுற்றுலாவிற்காகவும் அவற்றையெல்லாம் நாம் பறித்து கொண்டோம், அவர்களின் மொழியை காப்பாற்றிக் கொடுப்பது ஒவ்வொரு தமிழனுக்குமே கடமையாகும், ஏனெனில் விரைவில் அழியும் மொழிகளின் பட்டியலில் படகர் மொடியும் உண்டு.
இணைப்புகள் :
6 கருத்துகள்:
>> வெறும் 15,000 பேர் பேசும் வட மொழி<<
அன்றாடம் பேசுவதனை மட்டும் கணக்கில் கொள்ள வேண்டும் எனறு அவசியம் இல்லை. வேதங்கள் ஓதப்படும்போதும், மந்திரங்கள் ஓதப்படும்போதும், கீதங்கள் இசைக்கப்படும் போதும், காவியங்களைப் படிக்கும்போதும் அவற்றின் வாக்கியங்களை மேற்கோள் காட்டும்போதும் சமஸ்கிருதம் இன்றைக்கும் தேவைப்படுகிறது. இது 15,000 மக்களுக்கு மட்டுமல்ல, பெரும்பாலான இந்திய மக்களுக்கு. வட மொழி எனறு பொதுவாக அதனையே நாம் சொல்லுவதே அதன் தொன்மைக்கும் எப்படி இந்திய மக்களின் வாழ்வியலில் வேறூன்றி இருக்கிறது என்பதற்கும் சான்றாகும்.
அதற்காக சிறுபான்மை மொழிகளை ஒதுக்க வெண்டும் என்றில்லை. மேற்கூறிய கருத்தினை முன்நிறுத்தவே இம்மறுமொழி.
பலவருடங்களுக்குப்பின் தங்கள் பதிவில் மறுமொழி இடும் பெறு கிட்டியது மகிழ்ச்சி கோவியாரே, நலமா தாங்கள்?
வடகர் மொழி என்பது தமிழகத்தில் மட்டுமே பேசப்படும் தமிழக மொழிகளில் ஒன்றாகும். இந்த மொழிக் குறித்து பல தகவல்களை வாசித்துள்ளேன். தென்னிந்தியாவில் மொழிகளின் சொர்க்கம் என அழைக்கப்படும் தமிழகம், கேரளம், கருநாடகம் ஆகிய மூன்று மாநிலங்கள் சந்திக்கும் நீலகிரி, குடகு, கோவை, ஈரோடு, சாமராசநகரம், வயல்நாடு, துளுநாடு, காசர்கோடு ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த பகுதிகளில் மட்டும் ஏறத்தாழ நூற்றுக்கணக்கான மொழிகளும், வழக்குகளும் இருக்கின்றது. மொழி ஆராய்ச்சியாளர்களின் அதிக கவனத்தைப் பெற்ற இப் பகுதியின் தமிழக எல்லைக்கு உட்பட்ட நீலகிரி மாவட்டத்தில் மட்டும் எங்குமே காணப்படாத கோதர், தோடர், இருளர், பணியர், காட்டுநாயக்கர், சோளகர், வடகர் என எண்ணற்ற பழங்குடி இனங்களும் அவர்களின் மொழிகளும் பேசப்பட்டு வருகின்றது. ஆன போதும் இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் கொள்கைச் சீரழிவு காரணமாக எண்ணற்ற மொழிகள் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஒரு மொழி அழியும் போது அந்த மொழிக்குள் புதைந்துள்ள எண்ணற்ற வரலாற்றுத் தகவல்கள், அறிவுச் சொத்துக்கள், கலாச்சாரங்கள் என அனைத்தும் அழிந்துவிடுகின்றது என்பதே உண்மை.
பழங்கன்னட மொழியில் இருந்து பிரிந்த வடகர் மொழி பேசுவோர் மட்டும் 300, 000 பேர் வாழ்கின்றனர். பேச்சு மொழியாக மட்டுமே இயங்கி வந்த படகர் மொழிக்கு எழுத்துச் சிக்கல் வெகுகாலமாகவே இருந்து வருகின்றது. செயற்கையாக பல எழுத்து முறைகளை பலர் உருவாக்கிய போதும் அது மக்களைச் சென்றடையவில்லை.
இதற்கு பல காரணிகள் உண்டு, ஒன்று வடகர் மொழி அதிகம் கன்னட மொழியை ஒத்தது என்ற போதும் அவர்கள் வாழ்வது தமிழகத்தில் என்பதால் அனைவரின் கல்வி மற்றும் சமூக மொழியாக தமிழ் இருக்கின்றது. அதனால் அவர்கள் தமிழ் எழுத்துக்களிலேயே வடகர் மொழியை எழுதி வருகின்றனர். ஆனால் வடகர் மொழியின் ஒலிகளை தமிழ் எழுத்துக்களில் எழுதுவது சிக்கலானது. தமிழின் எழுத்து வடிவம் தமிழ் மொழியை மட்டுமே எழுதவல்ல சிறப்பான எழுத்து என்பதால் ஏற்படும் சிக்கல் இது.
இதனால் வடகர் மொழியை ஆரம்ப கல்வி மொழியாக மாற்ற இயலவில்லை. அதே சமயம் புதிய எழுத்து முறைகளையே கன்னடம் போன்ற பிற எழுத்து முறைகளோ மாணவர்களிடமும், மக்களிடம் ஆதரவை பெறவில்லை. புதிதாக பல எழுத்து முறைகளை கற்பதை எந்தவொரு சமூகமும் விரும்புவதில்லை.
வடகர் மொழியை காக்கவும், அதில் இலக்கியங்களை படைக்கவும் எவ்விதமான காத்திரமான முயற்சிகளையும் தமிழக அரசு இதுவரை செய்தும் தரவில்லை என்பதும் வருத்தமான உண்மை. சில ஆண்டுகளுக்கு முன்பு தான் பணியர் மொழியில் ஆரம்ப கல்வியை தமிழக அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. பணியர் மொழி தமிழ் எழுத்துக்களிலேயே துணைக்குறிகளோடு எழுதப்படுகின்றது.
வடகர் மொழியும் அவ்வாறான ஒரு வழிமுறையை பயன்படுத்தி வடகர் மக்கள் வாழும் கிராமங்களில் ஆரம்பக் கல்வியை அவர்கள் மொழியில் புகட்ட வழி செய்வதோடு, தனி இலக்கியங்களையும் படைக்க முன்வரல் அவசியம்.
இந்தியாவின் பெரும் சிக்கலே, ஒழுங்கற்ற மொழிக் கொள்கையே ஆகும். எந்தவொரு பிராந்தியத்தில் அவர்களின் தாய்மொழி கல்வி மறுக்கப்பட்டுள்ளதோ, அந்தந்த இடங்களில் கல்வி அறிவும் குறைவாக உள்ளதோடு பொருளாதார வளர்ச்சியும் குன்றியுள்ளது. இன்னும் பல இடங்களில் ஆதிக்க மொழிகள் ஆதிக்கம் செய்ய முனைகின்ற போது அரசியல் சிக்கல்கள், பயங்கரவாதங்கள் கூட தோன்றி உள்ளன.
வடக்கில் அவாதி, போஜ்புரி, பாகேலி, பந்தேளி மொழிகள் பேசும் இடங்களில் இந்தி திணிக்கப்பட்டதால் இன்றளவும் அப்பகுதிகள் வளர்ச்சியடையவில்லை.
அதே போல திராவிட கோண்டி மொழி பேசும் பகுதிகளில் இந்தி திணிக்கப்பட்டதால் அங்கு கல்வி முற்றாக தடைபட்டு நக்சல்வாதம் முளைத்து தமது மொழி, கலாச்சார, வாழ்விடங்களை காக்க மக்கள் போராடி வருகின்றனர்.
கருநாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் ஓரளவு சிறுபான்மை பழங்குடி மொழிகளை காக்க அந்தந்த அரசு உதவிகளைச் செய்து வருகின்றது.
அதே வகையில் தமிழகமும் கோதர், தோடர், பணியர், இருளர், வடகர், காட்டுநாயக்கர், சோளகர், காணிக்காரர் உட்பட மொழிச் சிறுபான்மையினர் தமது தாய்மொழிகளை குறைந்தது தொடக்கப் பள்ளிகளிலாவது கற்க ஏற்பாடு செய்து தருவதே நல்லது.
மாநகரன் உங்களின் நெடிய பின்னூட்டம் மேலும் இவ்விடுகைக்கு மெருகைக் கூட்டுகிறது. லட்சங்களின் எண்ணிக்கையில் பேசப்படும் மொழிகளாவது காக்கப்பட வேண்டும், அந்த வகையில் படகர் மொழி காக்கப்பட வேண்டும், தமிழக அரசு மொழிகளில் ஒன்றாக சேர்க்கப்பட்டு சிறப்பு செய்யப்பட வேண்டும்
//காவியங்களைப் படிக்கும்போதும் அவற்றின் வாக்கியங்களை மேற்கோள் காட்டும்போதும் சமஸ்கிருதம் இன்றைக்கும் தேவைப்படுகிறது//
நாட்டின் நாட்டுப்பண்ணின் பொருள் தெரிந்து தான் பலரால் பாடப்படுகிறதா ? கோயில் அருச்சகருக்கு வடமொழி தெரிந்தால் போதும் மற்றவர்களுக்கு தெரிந்து என்ன ஆகப்போகிறது, வடமொழியை காப்பாற்ற வேண்டிய பார்பனர்களே அதை புறக்கணித்துவிட்டு மென்பொருள் வேலைக்குப் போய்விட்டார்கள், தொடர்பே இல்லாதவர்கள் தலையில் அவற்றை ஏற்றி மொளாக அரைக்கப்பட வேண்டு ம் என்பது ஞாயமாகப்படவில்லை.
கோவி,
சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட வடுகர்/வடகர் தான் படகர் என்பதற்கு சான்று என்ன?
சும்மா அம்போக்கா "வ" ப ஆச்சுனு சொல்லுவது வடமொழி தான் தமிழுக்கே தாய்னு சொல்லுவது போன்ற காமடியே அவ்வ்.
# தமிழ் நாட்டில் இன்னமும் "வடுகர்" இனக்குழுவின் எச்சமாக மக்கள் இருக்காங்க,அவங்க பேசுவது தெலுங்கு.
உதாரணமாக சாதி அடிப்படையில் "வடுக செட்டியார்கள்" என தெலுங்கு பேசும் செட்டியார்களை தான் சொல்கிறார்கள், எனஏ மலைவாழ் படுகர் தான் சங்ககால வடுகர் என்பதற்கு உத்திரவாதம் இல்லை.
பழங்காலத் தமிழகத்தில் தமிழகத்தின் வடக்கே இருந்த அனைவரும் வடகர் என்றே அழைக்கப்பட்டனர். வடகர், வடுகர் என்பதே கன்னடத்தில் படகர் என்றாகியது.
தெலுங்கர், கன்னடர், துளுவர் என அனைவரும் பொதுவாக வடகர் என்றே அழைக்கப்பட்டு வந்தனர். பிற்காலங்கில் கன்னடம், துளு ஆகிய சொற்கள் ஏற்கப்பட்ட பின்னர் வடுகர் என்ற சொல் தெலுங்கர்களையும், படகர் என்ற சொல் படகா மக்களையும் குறிக்கத் தொடங்கியது.
The famous commentator Nachchinarku-Iniyar and the author of the old commentatory on the Nannul state that of the lands surrounding the Tamil country those in which Kanarese, Vadugu and Telugu were current were distinct entities.18 The Telugu country being treated as distinct from the Vadugu country, we have justification for holding , that they had the Badaga country in mind in drawing the distinction. Otherwise we should have to suppose that they treated the northern part of Andhra as the Telugu land and the southern part as the Vadugu land, and seek support for this view in the fact that the Tamil country itself was divided into the Sen-Tamil and the Kodum-Tamil lands. However this may be, the later Tamils ignored what distinction there might have been and applied the terms Vadugar and Vadugu to the Andhras and theAndhra language. ( PANDIT M. RAGHAVA AIYANGAR )
வடுகர் என்பது வடக்கில் இருந்த அனைவருக்குமாய் குறித்து பின்னர், கன்னடர், தெலுங்கர் என்ற பெயர்கள் குறித்த போது, வடகர் என்பது படகரைக் குறித்தது. ஆனால் பின்னாட்களில் மீண்டும் தெலுங்கர்களை தமிழர்கள் வடுகர் என அழைக்கத் தொடங்கினார்கள். அக்காலக் கட்டத்தில் வடுகரை வடகரிடம் இருந்து வேறுபடுத்த தெலுங்கர் வடுகர் எனவும், நீலகிரி படகர்களை படகர் எனவும் அழைக்கத் தொடங்கினார்கள்.
நச்சினியார்க்கினியர் காலத்தில் படகர் மொழியை தனி மொழியாக தமிழர்கள் ஏற்றிருக்கின்றனர் என்பது தெளிவு.
கருத்துரையிடுக