பின்பற்றுபவர்கள்

26 ஏப்ரல், 2012

கஞ்சி (Congee) !


நேற்று இரவு எங்கள் வீட்டு அருகே இருக்கும் பெருங்கடை வளாகத்திற்கு இரவு உணவிற்காகச் சென்றோம், சிங்கப்பூர் கோமளாஸ் அங்கே புதிதாகக் கிளைத் (திறந்)திருந்தார்கள். சிங்கப்பூரில் Food Court எனப்படும் உணவு கடைத் தொகுதிகள் மிகுதி. நாம் தேடும் உணவு இல்லா விட்டாலும், இருப்பதை உண்ணலாம் என்ற அளவில் உணவுக் கடைகளுக்கு சிங்கையில் பஞ்சம் என்பதே இல்லை, இரவு பகல் என்னேரமும் திறந்திருக்கும் உணவுக் கடைகள் ஏராளம் இங்கு உண்டு, சென்னைப் போன்ற பெரிய நகரங்களில் இரவு 11 மணிக்கு மேல் கையேந்தி தள்ளுவண்டிக் கடைகள் தவிர்த்து அனைத்தும் அடைக்கப்பட்டிருக்கும் சென்ற முறை சென்னை சென்ற போது நான் உணர்ந்தது அது. சிங்கப்பூரார்கள் வெளி நாட்டிற்குச் சென்றால் அவர்கள் நினைத்துப் பார்த்து ஏங்குவதென்பது சிங்கப்பூர் உணவு வகைகள் குறித்துதான், அந்த அளவுக்கு ஏராளமான உணவுக்கடைகளும் அவற்றில் உணவு வகைகளும் அடக்கம். ஒரு உணவுக் கடைத் தொகுதியில் 10க்கும் மேற்பட்ட உணவு கடைகள் இருக்கும், அவற்றின் ஒவ்வொன்றிலும் ஏராளமான வகைகள் இருக்கும், நாள் தோறும் இதையே சாப்பிட வேண்டுமா ? என்கிற கேள்வியே இல்லாமல் விருப்பம் போல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உணவு வகையை ரசித்து சாப்பிடுவர், இந்தியர்கள் ஒரு நாள் பேசமால் இருந்தால் செத்துப் போய்விடுவார்கள், சீனர்கள் ஒரு நாள் சாப்பிடாமல் இருந்தால் செத்துப் போய்விடுவார்கள், எனவே சீனர்கள் நிறைந்த சிங்கப்பூரில் ஆசியாவின் அனைத்து வகையான உணவுகளும் கிடைக்கும், சைவமோ, அசைவமோ விருப்பம் போல் உண்ணலாம். 

*********

நேற்று சென்ற கோமளாஸ் கடை அருகே ஒரு சீன உணவுக் கடைகளில் 'Congee' என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட உணவு அறிப்புப் பலகையில் வகை வகையான Congee களின் படங்கள் போடப்பட்டு இருந்தது, பார்க்க நமது வீடுகளில் செய்யப்படும் கஞ்சிக்கும் அதற்கும் வேறுபாடுகள் என்பது அதனோடு அவர்கள் கலந்து தரும் பொருள்கள் (வேக வைத்தக் கோழித் துண்டு, பன்றி இறைச்சி, நெத்திலி கருவாரு, திருக்கை மீன் சதைத் துண்டுகள், வேக வைத்த வேர்கடலை, வேக வைத்த சர்கரைவள்ளிக் கிழங்கு மற்றும் பிஞ்சு சோளம்) போன்றவை தான். நமது தமிழ் நாட்டுக் கஞ்சி நொய் அல்லது குருணை (பொடித்த பச்சை அரிசி) உடன் சேர்த்த உடைத்தப் பச்சைப் பயிறு சேர்த்து கூழுக்கு முன்பான பதத்தில் உப்பு சிறிதளவு இருக்கும். அத்துடன் தேங்காய் துருவல் கலந்து உண்ண தனிச் சுவை. விரைவிலேயே செரிமானம் ஆகிவிடும். காலை உணவுக்கு ஏற்ற எளிமையான உணவாக இருந்தது. இன்றைக்கு அரசியலுக்காக கஞ்சி காய்ச்சு ஊத்துவதாகவும், கஞ்சித் தொட்டித் திறப்பதாகவும் சொல்லி கஞ்சி என்பதே எதோ பஞ்சம் பட்டினியில் இருக்கும் ஏழைகளின் உணவு என்பதாக நினைக்க வைத்துள்ளனர்.

ஆனால் கஞ்சி ஆசியாவின் அனைத்து நாடுகளிலும் காலை உணவில் முதன்மையாகவே இருந்துவருகிறது, அதை ஆங்கிலத்தில் Porridge என்றும் சொல்லுகிறார்கள், பொதுவாக Congee என்று சொன்னாலும் இங்குள்ளவர்களுக்கு விளங்கும், எனவே தான் அறிவிப்பு பலகை மற்றும் உணவுப் பட்டியலில் அவ்வாறே குறிப்பிட்டும் உள்ளனர். இந்த சொல் எப்படி இங்கு பரவியது, நேற்று நான் பெயர் பலகையில் Congee என்று படித்ததும், 'கஞ்சி' என்ற உணவுச் சொல் ஒரு வேளை தமிழ் தவிர்த்த பிற மொழிச் சொல்லோ என்று நினைக்க வைத்தது.


பிறகு இணையத்தில் தேடிப் பார்க்க கஞ்சி பற்றிய ஏகப் பட்டத் தகவல்கள் கிடைத்தன. 

சங்க இலக்கியங்களில் ஒன்றான பத்துப் பாட்டு தொகுப்பு, அதில் இடம் பெற்றிருக்கும் பட்டினப் பாலைத் தலைப்பில் காவேரியின் சிறப்புச் சொல்லி பின்னர் சோழ நாட்டின் சிறப்பு கீழ் கண்ட பாடலில் இடம் பெற்றுள்ளது

பட்டினப்பாலை
புலிப் பொறி போர் கதவின்
திருத் துஞ்சும் திண்காப்பின்
புகழ் நிலைஇய மொழி வளர
அறம் நிலைஇய அகன் அட்டில்
சோறு வாக்கிய கொழுங் கஞ்சி
யாறு போலப் பரந்து  ஒழுகி
ஏறு பொரச் சேறு ஆகி
தேர் ஓடத் துகள் கெழுமி
நீறு ஆடிய களிறு போல
வேறு பட்ட வினை ஓவத்து
வெண்கோயில் மாசு ஊட்டும். (40-50)


காவிரிப்பூம்பட்டினத்தின் புகழ் நிலைப்பதற்கும், சோழ நாட்டினைப் பற்றிய புகழ் மொழி எங்கும் பரவி வளர்வதற்கும், புலிச்சின்னம் பொறிக்கப்பட்டு, செல்வம் தங்குகின்ற இரட்டைக் கதவுகளைக் கொண்டதாக வலிமையான பாதுகாவலோடு அகன்ற அட்டிற் சாலைகள் அமைந்திருந்தன. இவ்வுணவுச் சாலைகளில் சோற்றினைச் சமைத்து வடித்த கஞ்சியானது, ஆறு போலப் பரந்து காவிரிப்பூம்பட்டனத்துத் தெருக்களில் ஓட, அங்கே காளைகள் ஒன்றொடொன்று சண்டையிட சோற்றுக் கஞ்சி சேறானது- அச்சேற்றின் மீது தேர்கள் ஓட , சேறு புழுதியாகி எங்கும் பரவியது. அப்புழுதி படிந்ததால், பல்வேறு வண்ணங்களால் வேலைப்பாடமைய ஓவியம் தீட்டப்பட்டு வெண்ணிறமாக இருந்த அரண்மனை,  புழுதியினைத் தன் மேல் வாரி இறைத்துக் கொண்ட யானையைப் போல் மாசு படிந்து காட்சியளித்தது.

திருஞானசம்பந்தர் எழுதிய திருமுதுகுன்றம் தேவாரத் திருப்பதிகம் (இரண்டாம் திருமுறை 64வது திருப்பதிகம்) 696 ஆம் பாடலில்

கருகு முடலார் கஞ்சி யுண்டு கடுவேதின்
றுருகு சிந்தை யில்லார்க்கயலா னுறைகோயில்
திருகல் வேய்கள் சிறிதே வளையச் சிறுமந்தி
முருகின் பணைமே லிருந்து நடஞ்செய் முதுகுன்றே.

கரிய உடலினராய், கஞ்சி உண்டு கடுக்காய் தின்று இரக்கமற்ற மனமுடையவராய்த் திரியும் சமண புத்தர்கட்கு அயலானாய் விளங்கும் சிவபிரான் உறையும் கோயில், கோணலை உடைய மூங்கில்கள் சிறிதே வளைந்திருக்கச் சிறிய மந்திகள் அகில் மரங்களின் கிளைகளின் மேல் நின்று நடனம்புரியும் முதுகுன்றமாகும்.

- இதில் ஞானசம்பந்தனின் சமணர்கள் மீதான எள்ளலை / வெறுப்பைப் புறந்தள்ளிவிட்டுப் பார்த்தால் சமணர்களின் முதன்மையான உணவாக கஞ்சி இருந்திருக்கிறது என்று அறிய முடிகிறது.

கஞ்சி என்ற சொல் பழந்தமிழ் காலம் தொட்டே வருவதால் அது தமிழ் சொல் தான். இந்த சொல் இந்திய மொழிகளில் பரவலாக சற்று திரிந்தும் ஆசிய மொழிகளில் 'கஞ்சி' என்ற ஒலிக்கப்படுகிறது.

கஞ்சி பற்றிய தகவல்கள் ஆங்கிலத்தில் விக்கிப் பீடியாவில் தொகுக்கப் பட்டுள்ளது. ஆனால் கஞ்சி என்ற சொல் எந்த மொழிச் சொல் என்று அவர்கள் குறிப்பிடவில்லை, 

Congee is a type of rice porridge popular in many Asian countries. It can be eaten alone or served with a side dish. Names for congee are as varied as the style of its preparation. Despite its many variations, it is always a thick porridge or soup of rice which has usually disintegrated after prolonged cooking in copious water.
To prepare the dish, rice is boiled in large amounts of water until it softens significantly. Congee can be made in a pot or in a rice cooker. Some rice cookers have a "congee" setting, allowing it to be cooked overnight. The type of rice used can be either short or long grain, depending on what is available and regional cultural influences. Culture also often dictates the way congee is cooked and eaten.
In other Asian cultures, it is also called kanji (Tamil/Malayalam/Tulu), pakhal bhat (Oriya), ganji (Kannada/Telugu), juk (CantoneseKorean), cháo(Vietnamese), deythuk (Tibetan), chok (Thai), kayu (Japanese), lúgaw (Filipino), "Bubur" (Malay) or jaou (Bengali) which is derived directly from the Chinese character zhou (粥, which means gruel in Mandarin). Zhou is also called xifan in some Chinese provinces.

காய்ச்சு என்று வினைச் சொல்லின் பயன்பாட்டுத் தொடரின் பெயர் சொல் திரிபாக (பஞ்சாக - மென்மையாக, கூழாக காய்ச்சுதல்) கஞ்சி என்று சொல் வந்திருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன்.

மேலே உள்ள அறிவிப்புகள் போல் தமிழகத்தின் உணவு விடுதிகளில் இங்கு கஞ்சி கிடைக்கும் என்று எழுதுவார்களா ? மாட்டார்கள், கஞ்சி என்பது பிச்சைக்காரர் மற்றும் ஏழைகளுக்கான உணவு என்கிற தவறான எண்ணம், கஞ்சி மிகவும் எளிமையான உணவு, விரைவில் செரிக்கக் கூடிய உணவு என்பதே மெய்.

நாம் கைவிட்ட காலைக் கஞ்சி உணவை ஆசியாவின் பெரும்பாலன பகுதிகளில் காலை உணவாகக் கொள்கிறார்கள். நமக்குத்தான் கஞ்சி என்பது ஏழைகளின் உணவு என்று ஒதுக்கி வைக்கிறோம், உடல் நிலையைப் பொறுத்து 60 வயதுக்கு மேல் அது தான் நமது அன்றாட உணவாகும் என்று தெரியாமலேயே.

இணைப்புகள் :


12 கருத்துகள்:

நம்பள்கி சொன்னது…

excellent analysis..

இவ்வளவு ஏன் நான் சென்னையில் உள்ள ஹோட்டலில் சாப்பிடும் போது "கொஞ்சம் சோறு போடுங்க" என்று அந்த waiter-ஐ பார்த்து சொன்ன போது, அங்கு சாப்பிட்ட பெரிய நட்சத்திர ஹோட்டல்-ல் என்னை எல்லோரும் ஒரு அதிசிய ஜந்துவாகப் பார்த்தார்கள்.

கஞ்சி என்று சொன்னால்...செருப்படி தான்...சூத்தமுது...சாரி மன்னிகணும், சாத்தமுது என்று சொன்னால், OK...

தருமி சொன்னது…

நல்லா ’கஞ்சி’ காச்சீட்டீங்களே!

துளசி கோபால் சொன்னது…

கஞ்சிக்காக ரொம்ப ஆராய்ஞ்சுட்டீங்க போல!!!!!

நல்ல பதிவு.

அந்த நம்பள்கி கிட்டே சொல்லுங்க..... சாத்தமுதுன்னு சொன்னா அது ரசம். கஞ்சி இல்லையாக்கும்!

Unknown சொன்னது…

நல்ல ஆய்வு நண்பரே!மிகச்
சிறப்பாக செய்துள்ளீர்!பொருத்தமாகவும் உள்ளது
பாராட்டுக்கள்!

புலவர் சா இராமாநுசம்

கோவி.கண்ணன் சொன்னது…

//excellent analysis..

இவ்வளவு ஏன் நான் சென்னையில் உள்ள ஹோட்டலில் சாப்பிடும் போது "கொஞ்சம் சோறு போடுங்க" என்று அந்த waiter-ஐ பார்த்து சொன்ன போது, அங்கு சாப்பிட்ட பெரிய நட்சத்திர ஹோட்டல்-ல் என்னை எல்லோரும் ஒரு அதிசிய ஜந்துவாகப் பார்த்தார்கள்.//

அதென்னவோ சோறு என்று சொன்னால் தின்னிப் பண்டாரம் என்று நினைப்பார்களோ என்கிற தாழ்வு மனப்பான்மையால் ரைஸ் அல்லது சாதம் என்கிறார்கள் நம்மவர்கள். என்னப் பேரைச் சொல்லிக் கேட்டாலும் அதையே தான் கொடுப்பார்கள் என்று தெரியாதது போல். :)


//கஞ்சி என்று சொன்னால்...செருப்படி தான்...சூத்தமுது...சாரி மன்னிகணும், சாத்தமுது என்று சொன்னால், OK...//

சாற்று அமுது என்பதை பேச்சு வழக்கில் சாத்தமுது என்கிறார்கள், வற்றல் - வத்தல், முற்றம் - முத்தம், வெற்றிலை - வெத்தலை என்பது போல் 'ற' த்திற்கு 'த'கரம் போட்டுச் சொல்லுவார்கள்.

சாற்று அமுது என்பது சாறு அமுது, சாற்றமிழ்து என்பதெல்லாம் ஒன்று தான், அதை தற்போது ரசம் என்கிறோம், சிலர் ரஸம் என்றும் சொல்லுவார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//தருமி கூறியது...
நல்லா ’கஞ்சி’ காச்சீட்டீங்களே!//

என் பதிவைப் வெளி இட்டுவிட்டு உங்க இடுகையை எட்டிப் பார்த்தேன், அங்கும் சமணர்கள் இருந்தனர்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் கூறியது...
கஞ்சிக்காக ரொம்ப ஆராய்ஞ்சுட்டீங்க போல!!!!!

நல்ல பதிவு.//

'Congee' என்று உணவுப் பெயரைக் கடையில் பார்த்த பிறகு நாளைக்கு ஒரு பதிவுக்கு தகவல் சிக்கிவிட்டது என்று நினைத்தேன்.
:)

//அந்த நம்பள்கி கிட்டே சொல்லுங்க..... சாத்தமுதுன்னு சொன்னா அது ரசம். கஞ்சி இல்லையாக்கும்!//

நானும் விளக்கிச் சொல்லி இருக்கிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//புலவர் சா இராமாநுசம் கூறியது...
நல்ல ஆய்வு நண்பரே!மிகச்
சிறப்பாக செய்துள்ளீர்!பொருத்தமாகவும் உள்ளது
பாராட்டுக்கள்!

புலவர் சா இராமாநுசம்//

மிக்க நன்றி ஐயா. தங்களின் பாராட்டுகள் ஊக்கப்படுத்துகிறது

குடுகுடுப்பை சொன்னது…

பெய்ஜிங் சைனாவில கஞ்சி அதே பெயரில் நம்மூர் சுடுகஞ்சி அதே சுவையில் சாப்பிட்டேன்.

வவ்வால் சொன்னது…

கோவி,

கஞ்சி என்பது தமிழில் இருந்து தான் அங்கு போய் இருக்க வேண்டும், காரணம் 2000 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்புண்டு.

இங்கே வணிக ரீதியாக எளிய பொருட்களை விற்க யாரும் தயாரில்லை, மேலும் கஞ்சியை மட்டமான உணவாக மேட்டுக்குடியினர் தான் கருதுகிறார்கள், எனக்கு காய்ச்சல் வரும் போதெல்லாம் கஞ்சி தான் டயட், ஒரு வேளை உடம்பு சரியில்லாத போது சாப்பிடும் உணவு என மக்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள் போல.

மேலும் வெளி நாட்டு சாக்லெட்டுகளில் எல்லாம் அரிசி வறுத்துப்போட்டு செய்கிறார்கள்(chocolate with crisp rice).நம்ம ஊரிலும் அரிசி சாக்லேட்டு செய்றாங்களா தெரியவில்லை ஆனால் அப்படியே செய்தாலும் பேரை போடாமல் மறைத்து விடுவார்கள் :-))

வவ்வால் சொன்னது…

கோவி,

காய்ச்சுறது என்றால் நன்றாக கொதிக்க வைப்பது உ.ம்: சாராயம் காய்ச்சுதல்.

கஞ்சு என்றால் எளிய ,சிக்கனமாக எனலாம், கஞ்சன் என்றால் கருமி என்கிறோம்(வட மொழியில் கஞ்சன்= தங்கம்), ஆனால் எதையும் வீணாக்காமல் சிக்கனமாக, எளிமையாக இருப்பது தான் கஞ்சம்.

நொய்யரிசி என்பது விலைக்குறைவான உபபொருள் அதனை வீணாக்காமல் காய்ச்சுகிறோம், நீரைக்கூட வடிப்பதில்லை எனவே எனவே எளிய சிக்கனமான உணவுக்கு கஞ்சு ,கஞ்சி என்றுப்பெயர் வந்திருக்கலாம்.

மேலும் ஜப்பானிஸ், சைனீஸ் எழூத்து முறைக்கு கஞ்சி (kanji,hanzi) என்ரப்பெயர் இருப்பதால் சோற்றுக்கஞ்சிக்கு "conjee " என்று சிங்கையில் எழுத ஆரம்பித்திருக்கலாம்.

ஹி..ஹி எல்லாம் நானா தெரிந்ததை வைத்து யூகமாக சொல்வது தான் , எனவே இப்படிலாம் எங்கே யார் சொன்னானு கேட்கப்படாது :-))

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

கோவி கண்ணன்!
அங்கு கஞ்சியை உணவு விடுதிவரை அங்கீகரித்துள்ளார்களா? மகிழ்ச்சி
இந்த ஏழைக்குப் பிடித்த உணவில் ஒன்று. இப்போதும், இங்கும் மாதம் 2 வார இறுதியாவது காலைச்சாப்பாடு கஞ்சியே!
ஊரில் தேங்காய்ப்பாலிலேயே கஞ்சி, இங்கு பசுப்பாலில் காச்சுகிறோம்.
ஊரில் பாற்கஞ்சி,உப்புக்கஞ்சி, குறிஞ்சாக் கஞ்சி, முருங்கைக் கஞ்சி என என் தாய் வழிப் பேத்தி செய்து சாப்பிட்டுள்ளேன்.
பாற்கஞ்சிக்கு.. மிளகு சீரகம் குத்திப்போட்டும் தருவார்கள். இங்கே புதினா போட்டுக் காச்சிக் குடிக்கிறேன். அருமை
காச்சல் வந்த வாய்க்கு உப்புக் கஞ்சியை விடச் சிறந்த சாப்பாடில்லை. அது கைக்குத்தரிசியில் காச்சவேண்டும்.தொட்டுக் கொள்ள செத்தல் மிளகாய், வெங்காயம் உப்பிட்டரைச் பச்சடி - குடித்ததும் வியர்த்துக் கொட்டும் காச்சலும் பறந்துவிடும்.
மார்கழி மழைக்காலங்களில் குறிஞ்சா, முள்முருக்கிலைக் கஞ்சி நெஞ்சுச் சளி போன்ற உபாதைகளுக்கு
சிறந்தது.
60 களில் என் வீட்டில், தவறாமல் கிடைக்கும் உணவு.
கிழக்காசியர்கள் மத்தியில் இதே பெயருடன் இவ்வுணவு உலாவருவதைப் பார்க்கும் போது, எங்கிருந்து எங்கு போனதோ தெரியவில்லை.
ஆனால் நான் பார்த்த ஒரு விபரணச்சித்திரத்தைப் பற்றி இங்கு குறிப்பிட வேண்டும்.
அமேசன் ஆதிக்குடி மக்கள் செய்யும் உணவு. அதைப் பிட்டு எனக் குறிப்பிடுகிறார்கள். செய்முறை, செய்கருவியே என்னை ஆச்சரியப்படுத்தியது.
மரவள்ளிக்கிழங்கைத் துருவி மாவாக்கி, தட்டில் போட்டு வறுத்து , அதைக் குழைத்து , பச்சை மூங்கில் குழல்களில் இட்டு , நெருப்புத் தணலில் வேகவைத்து , அவிந்ததும் மூங்கிலைப் பிளந்து வாழையிலையில் நீளம் நீளமாகக் கொட்டி வைத்தபோது, நம் பிட்டுப்போல் இருந்ததது; அதைச் சுட்ட இறைச்சியுடன் உண்டார்கள்.
பிட்டென்றார்கள். எங்கிருந்து எங்கே சென்றது.
ஈழத்தில் சின்னமணி எனும் வில்லுப்பாட்டுக் கலைஞர் தன் கண்ணகி கதை வில்லுப்பாட்டில், காவிரிப் பூம்பட்டணத்தில் செழுமை பற்றியும், இன்றைய வறுமை பற்றியும் குறிப்பிட "அங்க வடிச்ச கஞ்சியெல்லாம் வாய்காலிலை ஓடுமாம் , ஆனா இங்க ...வாயுக்கயல்லோ ஓடுது" என சிரிமா பண்டாரநாயக்கா கால பஞ்சச் சூழலில் மக்கள் சோறு வடிச்ச கஞ்சியை குடித்தது பற்றிக் சற்றுக் கேலியாகக் குறிப்பிடுவார்.
இதை நீங்கள் குறிப்பிட்ட பாடலை வைத்தெ அவர் கூறியுள்ளார் போலுள்ளது.
ஈழத்தில் சித்திரை மாதப் பௌர்ணமி அன்று- சித்திரைக் கஞ்சி எனும் விழா கோவில்கள் தோறும் நடைபெறும். அன்று கஞ்சியே படைக்கப்படும். எந்தக் கோவிலானாலும் உண்டு.
இப்படி ஒன்று கத்தோலிக்கக் தேவாலயங்களிலும், பள்ளிவாசல்களிலும் உண்டு.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்