பின்பற்றுபவர்கள்

12 ஆகஸ்ட், 2014

வடமொழி கிழமை கொண்டாட்டம் !

நான் தனிப்பட்டு எந்த ஒரு மொழிக்கும் எதிரானவன் இல்லை, ஆனால் மொழித் திணித்தலும் பண்பாட்டு அழித்தலும் ஒன்றில் ஒன்று தொடர்புடையது என்கிற புரிதல் உள்ளவன், ஒருவர் விருப்பப்பட்டு எந்த மொழியையும் எத்தனை மொழியையும் கற்கலாம், அவை வரவேற்கத்தக்கது, ஆனால் எந்த ஒரு பலனும் முன்னே இல்லாத ஒரு மொழியை பெரும்பான்மையினர் பேசுகின்றனர் என்று சிறுபான்மையினரிடம் திணிப்பது வன்மையாக கண்டிக்கத் தக்கதே.

சிங்கப்பூரில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டாயமாக மலாய் கற்றுக் கொடுக்கப்பட்டது, பின்னர் பன்னாட்டு நிறுவனங்களால் தான் உள்நாட்டு பொருளியல் வளரும் எனவே அனைவரும் ஆங்கிலம் கற்று தொடர்பு மொழியாக அதனைப்பயன்படுத்தலாம் என்று முன்னெடுக்கப்பட்டு ஆங்கிலம் கற்றுக் கொடுக்கப்பட்டு, பாமரர்களும் பேச எளிமையான வடிவில் சிங்கப்பூர் ஆங்கிலம் உருவாகி, அனைவரும் ஆங்கிலமே தொடர்பு மொழியாக பயன்படுத்துவதால் பெரும்பான்மை மக்களின் சீன மொழியோ, வட்டார மொழியான மலாய் மொழியோ அம்மொழி பேசாதவர்கள் தவிர்த்து வேறு யாருக்கும் திணிக்கப்படுவதில்லை, மாறாக அவரவர் தாய்மொழி கல்வி இரண்டாம் மொழியாக அனைவருக்குமே பயிற்றுவிக்கப்படுகிறது, சிங்கப்பூரின் முன்னேற்றத்திற்கு அதன் நில அமைப்பு, மக்களின் உழைக்கும் திறன் தவிர்த்து தொடர்பு மொழி ஆங்கிலம் என்பதால் ஆசியாவில் அமைந்த ஐரோப்பிய நாடு என்கிற எண்ணத்துடன் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் முதலீடு செய்து சிங்கப்பூரை வளமாக்கினார்கள்.

இது போல் அல்லாமல் எந்த ஒரு வகையிலும் பயனிளிக்காத இந்தியையும், வடமொழியையும் அனைத்து மாநிலங்களிலும் திணித்தே தீருவோம் என்று பொறுப்பேற்றுள்ள மோடி அரசு முதலில் இந்தியை அரசு சமூக ஊடகத் தொடர்பு மொழியாக அறிவித்து, பின்னர் எதிர்ப்பு கிளம்பவே வடமொழியை முன்னிருத்துகிறார்கள், வடமொழியில் இராமயண ம(ஹா)பாராத கதைகள், மற்றும் வேத உபநிசத்து, காம சாத்திரம், பிற இந்து சமயம் சார்ந்த நூல்களே உள்ளன, அது தவிர்த்து வடமொழி கற்றுக் கொள்வதால் வேறெதையும் புதிதாக அறியமுடியாது, வடமொழியில் அன்றாட செய்தி இதழ்களோ, கிழமை இதழ்களோ, திங்கள் இதழ்களோ வெளி வருவது கிடையாது, இந்தியை வடமாநிலங்கள் முன்னெடுத்த போதே வடமொழி வளர்ச்சி என்பது முற்றிலும் நின்று விட்ட ஒன்றாகும், ஆனால் வடமொழி காணாமல் போனதற்கு அல்லது புழக்கமற்று போனதற்கு கருணாநிதியை குறை சொல்கின்றனர், கருணாநிதி காரணமென்றால் இந்தியா என்பது தமிழ்நாடு அல்லது கருணாநிதியின் செல்வாக்கு இந்திய துணைகண்டத்தில் ஆளுமை மிக்கதாக இருக்க வேண்டும், இவற்றில் எதுவுமே உண்மை கிடையாது. வடமொழி வழக்கொழிந்து போனதற்கு இந்தியை வட மாநிலங்கள் தாங்கிப் பிடித்ததே ஆகும்,

ஏற்கனவே வடமொழி சார்ந்த நூல்களில் காமசூத்திரம் உள்ளிட்டவை ஆங்கிலத்தில் மொழி பெயர்கப்பட்டுவிட்டன, மாபாரதம் உள்ளிட்டவை ஆங்கில அசைபடங்களாக வெளிவந்துவிட்டன, ஆங்கிலம் அறிந்தவர்களும் அவையே போதுமானதாக உள்ளது, நான் பார்த்த லிட்டில் கிருஷ்ணா அருமையாக ஆங்கிலத்தில் ஆக்கி இருக்கிறார்கள், எனவே வடமொழி அறிந்து வடமொழியை அறிந்தால் மட்டுமே வடமொழியில் உள்ளவற்றை கற்றுக் கொள்ளலாம் என்பதில் யாதொரு உண்மையும் கிடையாது. தவிர வடமொழியை அறிவதால் அந்த நூல்களை படிக்க முடியும் என்பது தவிர்த்து பெரும் பயன் எதுவும் இல்லை. ஏற்கனவே வேதம் படிக்கிறவர்கள் பார்பனர் அல்லாதவர்கள் என்றால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊத்தவேண்டும் என்று சொல்லி இருப்பதை வடமொழி அறிந்து படிப்பதால் அம்மொழி மீது மேலும் வெறுப்பே மிஞ்சும். மற்றபடி பாரம்பரியம், நமது இந்திய மொழி போன்ற கூற்றுகள் அடிப்பட்டுப் போய்விட்டன.

விக்கிப்பீடியாவில் வடமொழி இந்தோ - ஐரோப்பிய பிரிவை சார்ந்தது என்று தெளிவான சான்றுகளுடன் சொல்லி இருக்கிறார்கள், எந்த ஒரு வடமொழி ஆர்வளரும், மொழியாளரும் அதை இதுவரை மறுக்க முடியவில்லை, ஆங்கிலம் உள்ளிட்ட ஐரோப்பிய மொழிகளில் வடமொழிச் சொற்கள் கனிசமான அளவில் இருப்பதற்கு வாய்ப்பும் அம்மொழியின் தாயகம் இந்தியாவாக இருக்கமுடியாது என்பதால் தான் என்றே சொல்லுகிறார்கள்,

இன்றைக்கு இந்திய மொழிகளில் ஆங்கிலம் நீக்கமற கலந்து தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளை திரிப்பது போன்று தான், வடமொழி பல்வேறு மொழிகளில் கலந்து அவற்றை சிதைத்தது, மற்றபடி வடமொழி இந்திய மொழிகளுக்கும் தாய் என்பது தவறான மற்றும் புறந்தள்ளக் கூடிய கூற்றுமாகும், அதற்கு எந்த ஒரு சான்றும் இல்லை, மொழியைப் பற்றி பெருமை பேசுபவர்கள் மொழி ஆராய்ச்சியாளர்களாக மட்டுமே இருந்தால் இது போன்ற தவறான கூற்றுகள் ஏற்பட்டிருகாது, மொழிப்பற்றாளார்கள், தம்மொழி மீது பெருமை கொண்டவர்கள் இட்டுக்கட்டிக் கூறித் திரித்தவையே இவையாகும். 

வடமொழி தென்னிந்திய மொழிகளில் கலந்ததற்கு எனக்கு தெரிந்து இருவாய்ப்புகள் தான், தென்னிந்தியாவில் பார்பனர்களின் பரவல், மற்றும் இராமயண மாபாரத இதிகாசங்களின் சொற்பொழிவுகள். கோவிலை பிழைப்பிடமாகக் கொண்ட வடமொழி கற்ற பார்பனர்கள் பிறருடன் உரையாடும் போது கலந்தவை, இராமயண, மாபாரத சொற்பொழிவுளில் அதன் செய்யுளை வடமொழியில் சொல்லி பின்னர் வட்டார மொழியில் கதைவிளக்கம் கொடுப்பார்கள், இராமயணக் கதை ஊடுருவல் என் டி ஆரை கிருஷ்ணராகவே பார்க்க வைத்துள்ளது என்றால் அந்த கதையின் தாக்கம் தெலுங்கில் எந்த அளவில் இருந்திருக்க வேண்டும் என்று நினைத்துப்பாருங்கள். தமிழ்நாட்டில் வடமொழி கலப்பு குறைந்ததற்கு வில்லிபாரதம் தமிழில் எழுதப்பட்டதும், கம்ப இராமயணம் தமிழில் மொழிமாற்றப்பட்டதும் ஆகும், இல்லை என்றால் மலையாள, கன்னட மற்றும் தெலுங்கு மொழிகளைப் போல் 50க்கு 50 என்ற கணக்கில் தமிழ் சிதைந்திருக்கக் கூடும், உரைநடைகள் வளர்ந்த 100 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் வடமொழி கலப்பு மிகுந்திருந்தது, ஏனெனில் தமிழ் உள்ளிட்ட மொழிகளை கற்றுக் கொடுக்கும் வேலையில் குருகுலம் அமைத்த்து பார்பனர்கள் தான் அதனையும் செய்துவந்தனர், அவர்களிடம் தமிழ் கற்றவர்களின் பேச்சு வழக்கில் இயல்பாகவே வடமொழி கலப்பு ஏற்பட பெரியார் உள்ளிட்டவர்களின்  மேடைப்பேச்சில் நீங்கள் வடமொழிக்கலப்பு மிகுந்திருப்பதைப் பார்க்கலாம், பின்னர் தனித்தமிழ் இயக்கம் தோன்றிய பிறகே அவை முற்றிலுமாக களையப்பட்டு, செந்தமிழ் இல்லாவிட்டாலும் நல்ல தமிழில் எழுத முடிந்தது.

இந்தி போன்ற பெரும்பான்மையினர் பேசும் ஒரு மொழியை திணிப்பது அல்லது படிக்கச் சொல்லி அறிவுறுத்துவது தவறா ? இந்தியர்களுக்கு பொதுவான இந்திய மொழி ஒன்று இருந்துவிட்டு போகட்டுமே ? கொஞ்சம் சிந்தித்துப்பாருஙகள், எந்த ஒரு மொழியும் தகவல் தொடர்பு என்ற அளவில் இருந்தால் கெடுதல் இல்லை, ஆனால் தற்கால தொலைகாட்சி மற்றும் திரை ஊடகங்களின் தாக்கம் உடனடி விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது, நன்கு திறமையானவர்கள், நாம் ஏன் 6 கோடி தமிழர்கள் மட்டும் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியை படைக்க வேண்டும் ? என்ற கேள்வியில் பெரும்பான்மையினர் பாராட்டுகளே முதன்மையானது என்று மாற்றிக் கொள்வார்கள். கலைஞர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட திறமையானவர்கள் அனைவருமே இந்தி பேசும் பெரும்பான்மையினருக்காக உழைக்க முடிவெடுத்தால், தமிழை பாமரனும் தாய்மொழியாக வீட்டில் பேசுபவன் மட்டுமே வாழ வைக்க முடியுமா ?

தமிழ் மற்றும் தென்னிந்திய இயக்குனர்களுக்கு இந்திபடம் இயக்க வேண்டும் என்பதே கனவு. அதை நான் தவறு என்று சொல்லமாட்டேன். ஆனால் அவர்கள் எல்லோரும் அங்கு சென்றுவிட்டால் நமக்காக படம் எடுப்பவர் யார் ? ரஜினியோ கமலோ இந்தியில் தொடர்ந்து வென்றிருந்தால் அவர்கள் தமிழ் சூப்பர் ஸ்டார்களாக நம் முன் நிற்கமாட்டார்கள், அவர்களுக்கு இந்தி பேசத் தெரிந்தாலும் பெரிதாக வரவேற்பு இருக்க வில்லை, ஆனால் தென்னிந்திய இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள் இந்தியில் வெற்றிக்கொடிகட்டுகின்றனர், முதல் போடுபவர் இந்திகாரராக இருக்கும் பொழுது படமும் வெற்றி என்னும் பொழுது இயக்குனரின், இசை அமைப்பாளரரின் திறமையை நமக்கு ஒரு அடிமை சிக்கிவிட்டான் என்பது போல் தான் அவர்கள் வரவேற்கின்றனர்.  வட இந்தியர்கள் தென்னிந்தியரின் முகத்தை திரையில் பார்க்க விரும்பமாட்டார்கள், ஆனால் திரைக்கு பின்னால் இருக்கும் உழைப்பை பயன்படுத்திக் கொள்வார்கள்

இந்தியா முழுவதும் இந்தி மயமாகிவிட்டால், தமிழ் படம் என்று வரவே வராது, தமிழ் சார்ந்த செய்திதாள்களின் எண்ணிக்கை குறைந்து போகும், தமிழ் சார்ந்த கலைகளோ தொண்மங்களோ வளராது. தமிழின் வளர்ச்சி முற்றிலுமாக நின்று போய்விடும், அண்டை மாநிலங்களில் அவ்வாறு நடைபெற வில்லையே ?

கன்னடப் படங்கள் நன்றாக ஓடுவது குறைவு, அதனால் தான் கன்னட திரையுலகம் பல்வேறு கட்டுப்பாடுகளை பிற மொழி படங்களின் மீது விதிக்கிறது. தெலுங்குக்கு அந்த நிலமை வர சற்று காலம் எடுக்கலாம் ஆனால் நடக்காது என்று சொல்ல ஒன்றும் இல்லை. கேரளத்தினர் தம்படைப்புகள் மீது ஆழ்ந்த மதிப்பு வைத்திருப்பவர்கள் என்பதால் அவர்களும் தப்பி வருகின்றனர், அதுவும் எவ்வளவு நாள் என்று சொல்ல முடியாது.

ஒரே சமயத்தில் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ், பிரபு தேவா, ஏஆர் ரஹ்மான் ஆகியோருக்கு இந்திபட வாய்ப்பும் தமிழ் பட வாய்ப்பும் கிடைத்தால் எதை தேர்ந்தெடுப்பார்கள் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். நான் அவர்களை மொழி பற்று இல்லாதவர்கள் இல்லை என்று சொல்லவரவில்லை, ஆனால் தமிழனாக இல்லாமல் 'இந்தியானாக' வெற்றி பெருவதையே அவர்கள் விரும்புவார்கள், ஊடகங்களில் பிற மொழி நுழைந்தால் தாய் மொழியின் வளர்ச்சி குறைந்து கொண்டே நாளடைவில் நின்று போகும், இது தான் இந்தி மொழி வளர வளர வடமொழி வளர்ச்சி தடைபட்டு நின்று போனதற்கும் காரணம்.

தமிழகத்தில் பிறமொழி தாக்கம் ஏற்பட ஏற்பட அவற்றை அறிந்தவர்களின் ஊடகத் தேர்வும் அம்மொழியை நோக்கியும் திரும்பும். நாளடைவில் தமிழ் வெளிநாடுகளில் மட்டுமே வாழும் மொழியாகிவிடும். வடமொழி வளர்ச்சி நின்று போனது ஏன் என்று விடை அறிந்துவிட்டு பின்னர் வடமொழி கிழமை (வாரம்) கொண்டாடுங்கள்.

9 கருத்துகள்:

suvanappiriyan சொன்னது…

http://www.tamilhindu.com/2014/07/sanskritcartoon/

இது பற்றி மிக விரிவாக இந்த தளத்தில் பேசப்பட்டுள்ளது. நேரமிருப்பின் படிக்கவும்.

வவ்வால் சொன்னது…

//சிங்கப்பூரில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டாயமாக மலாய் கற்றுக் கொடுக்கப்பட்டது, பின்னர் பன்னாட்டு நிறுவனங்களால் தான் உள்நாட்டு பொருளியல் வளரும் எனவே அனைவரும் ஆங்கிலம் கற்று தொடர்பு மொழியாக அதனைப்பயன்படுத்தலாம் என்று முன்னெடுக்கப்பட்டு ஆங்கிலம் கற்றுக் கொடுக்கப்பட்ட, பாமரர்களும் பேச எளிமையான வடிவனால் சிங்கப்பூர் ஆங்கிலம் உருவாகி, அனைவரும் ஆங்கிலமே தொடர்பு மொழியாக பயன்படுத்துவதால் பெரும்பான்மை மக்களின் சீன மொழியோ, வட்டார மொழியான மலாய் மொழியோ அம்மொழி பேசாதவர்கள் தவிர்த்து வேறு யாருக்கும் திணிக்கப்படுவதில்லை, //

இந்தக்கதைய நம்பி ஏமாறனுமா அவ்வ்வ்!

சிங்கப்பூர் மலெசியாவில் முழுக்க ஆங்கில அடிமைகள் ஆகிட்டாங்க, இந்தியாவில் ஆங்கிலமா , வட்டார மொழியா, இல்லை , இந்தி ஆ என இழுப்பறி எனவே சிங்கப்பூர் ,மலேசியாவை எல்லாம் மொழிக்கு உதாரணம் காட்டுவது கேலிக்கூத்து.

? சொன்னது…

@சுபி

இந்த பாருங்க... வடமொழி முற்றிலும் சாக விடுவமாங்கறாங்க.. பார்பனர்களா, மற்ற சாதி காபிர்களா இல்லை முமின்கள்...

http://www.hindustantimes.com/india-news/muslim-girls-in-jharkhand-shatter-stereotypes-on-sanskrit/article1-1250978.aspx

தமிழ் குரானுக்கு முன்னாடியே சம்ஸ்கிருத குரான் வந்துவிட்டது என சகோ வியாசன் பதிவில் நான் எழுதியதை படித்தீர்களா?

priyamudanprabu சொன்னது…

Follow

பெயரில்லா சொன்னது…

யாரும் பேசாத சமஸ்கிருத மொழிக்கு ஏன் இந்திய அரசு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றது என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். அட்டவணை மொழிகளில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளில் சமஸ்கிருத மொழி மட்டுமே வெறும் 10, 000 பேர் பேசுவதாக உள்ளது. மற்ற மொழிகள் அனைத்தும் லட்சக் கணக்கான மக்களால் பேசப்படுபவை. இந்த 10, 000 கூட எந்தளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை. கருநாடகத்தில் மத்தூரில் சமஸ்கிருத பேச்சு மொழி இயக்கம் தோல்வி கண்டதாக செய்தி தாள்களில் வாசித்தறிந்தேன்.

இந்தியாவின் பாரம்பரிய பெருமை மிக்க மொழி என்பதால் இந்த முக்கியத்துவம் எனக் கூற வருபவர்களிடம் ஒரு கேள்வி, ஏன் இந்தியாவின் பிற பாரம்பரிய மொழிகளுக்கு இந்திய அரசு முக்கியத்துவம் தருவதில்லை.

பிராகிருதம், பாளி, மகதி, செந்தமிழ் ஆகிய மொழிகளையும் மத்திய அரசு ஆதரிக்கலாமே. இவற்றில் தமிழை தவிர மற்ற மொழிகள் பேச்சு வழக்கில் இல்லாமல் போய்விட்டது என்ற போதும் சமஸ்கிருதத்துக்கு வழங்கப்படும் சிறப்புக்களை பிராகிருதம், பாளி ஆகிய மொழிக்கும் வழங்கி இருக்க வேண்டாமா? அட்டவணையில் சேர்த்து கொண்டு, அவற்றுக்கும் வாரா வாரம் ஆரவாரித்திருக்க வேண்டாமா?

ஏனெனில் அவை யாவும் பௌத்த, சமண மொழிகள் இவற்றை இந்த இந்து மத பார்ப்பன மத்திய அரசு கொண்டாட முன்வராது என்பதே.

இன்றைய நிலையில் சமஸ்கிருதத்தையும் இந்தியையும் வட நாட்டில் உள்ள கிராமபுற மக்களிடம் திணித்து வாழ வைக்க வேண்டிய துர்பாக்கிய நிலையில் உள்ளது மத்திய அரசு, அதன் ஓரங்கமாகவே இந்த கொண்டாட்டங்கள், பிரச்சாரங்கள் எல்லாமுமே.

கல்வி கற்ற, வசதியான பார்ப்பனர் முதற்கொண்டு நகர் புரத்து மக்கள் எல்லோரும் வடக்கில் ஆங்கிலமும், இந்தியும், வங்காளமும், பஞ்சாபியும் , உருதும் கலப்படைந்த HINGLISH மொழியையே பேசி வருகின்றார்கள். பாலிவுட் தொடக்கம் ஊடகங்கள், பணியிடங்கள், கல்விச் சாலைகள் என நகர் புறத்து மக்களிடம் HINGLISH தான் தவழ்கின்றது.

இந்த HINGLISH என்பதே நாளைய வட இந்தியாவின் பிரதான பேச்சு மொழியாகவும், ஏன் இலக்கிய மொழியாகவும் வளரும் வாய்ப்புள்ளது. இதனால் தான் ஆங்கிலத்தை வெளியேற்றவும், சமஸ்கிருத மயமான இந்தியை பிரச்சாரம் செய்யவும் இந்த புதிய அரசு இறங்கியுள்ளது.

ஆனால் சடுதியில் பொருளாதார வளர்ச்சியும், வேலை வாய்ப்புகளும் ஆங்கிலத்துக்கு சாதகமாக இருப்பதால், நாளைய இந்தியாவின் பிரதான மொழியாக ஆங்கிலமே திகழப் போகின்றது. அடுதடுத்த தலைமுறையினருக்கு வசதி வாய்ப்பு பெருகும் போது அவர்களும் ஆங்கிலத்துக்கு செல்கின்றனர்.

செம்மொழிகளாக இல்லாமல் இருக்கும் பிரதேசங்களில், குறிப்பாக மொழி ஆழமற்ற இந்தி மொழி மாநிலங்களில் வெகு விரைவில் கல்வி மொழியாக ஆங்கிலமும், பேச்சு மொழியாக Hinglish-ம் திகழப் போகின்றது.

பெயரில்லா சொன்னது…ஏனைய பகுதிகளில் கூட ஆங்கிலத்தின் தாக்கம் நிறைந்த வருகின்றது. தமிழகம் உட்பட அனைத்து பகுதிகளிலும் ஆங்கில மொழி தாக்கு நிறைந்திருக்கின்றது. இதன் விளைவாக ஒரு காலத்தில் வேத ஆரிய மொழி எவ்வாறு திராவிட மொழிகளை தாக்கி மொழிகள் பலவற்றை உருவாக்கினவோ.

பின்னர் பிராகிருத மொழி அனைத்து மொழிகள் மீது ஆளுமை செலுத்தி மொழிகளை திரித்தனவோ.

அதே போல இன்று ஆங்கிலமும் மொழிகள் மீது தாக்குதல் செய்து மொழிகளை திரிக்கும்.

இந்த தாக்கத்தை ஒவ்வொரு மொழியும் அதன் அரசியல், பொருளாதார, ஊடக மற்றும் மொழியின் பலத்தினை பொருத்து எதிர்கொண்டு வெவ்வேறு சதவீதத்தில் மொழிகளை தக்க வைக்கவோ, இழக்கவோ போகின்றது.

பலமற்ற இலகுத் தன்மை மிகுந்த மொழியான இந்தி இந்த மொழிப் போரில் முதல் பலியாகி Hinglish ஆகி வருவதை பல மொழியியலாளர்கள் கவனித்து எழுதி உள்ளனர்.

ஆகையால் இன்று இந்தியை கற்றாலும் ஒரு பத்தாண்டுகளில் அந்த இந்தி எந்தளவுக்கு பயன் தரும் என சொல்ல முடியாது.

ஏனெனில் கணனிகளில் உள்ள Java, C# மொழிகளைப் போலவே இந்தி உட்பட பல மொழிகள் விரைவாக மாறும் தன்மையது. அவ்வாறு எனில் அவற்றை தினமும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும், அல்லது பயன்படுத்திக் கொண்டே நம்மை update செய்ய வேண்டும். இது தமிழகத்தில் உட்கார்ந்து கொண்டு நம்மால் செய்வது இயலாது காரியம். ஏனெனில் தமிழக பேச்சு வழக்கிலோ, சமூக தளத்திலோ இந்தி அறவே கிடையாது.

நம்மை பொறுத்தவரை தமிழை தனித் தன்மையோடு எவ்வாறு வைத்துக் கொள்ளலாம் என்பதோடு, நவீன ஆங்கிலத்தை எவ்வாறு அனைத்து கல்விக் கூடங்களிலும் புதிய தலைமுறையினருக்கு கற்பிக்கலாம் என்பதையும் சிந்திக்க வேண்டும்.

நவீன ஆங்கிலம் பொருளாதார மொழியாகவும், நவீன தமிழ் என்பது கலாச்சார மொழியாகவும் திகழச் செய்வதோடு, இரண்டையும் சரி சம அளவில் balance செய்வதில் தான் தமிழகத்தின் வெற்றி அடங்கி உள்ளது. மேலதிக மொழிகளை அவசியம் ஏற்படுமாயின் தனிப்பட்ட வகையில் கற்கலாம், ஆனால் அனைவருக்கும் மூன்றாவதாய் ஒரு மொழி தேவையில்லை என்பதே எனது கருத்து.

முக்கியமாக Hinglish போல தமிழையும் Tanglish ஆக்காமல் தடுப்பது எப்படி என்பதை பற்றி நாம் யோசிக்க வேண்டும். இந்தியோ, சமஸ்கிருதமோ எக்கேடு கெட்டால் நமக்கு என்ன, அதனால் நமக்கு லாபமோ, நட்டமோ ஏதுமில்லை.

Culinary wonder சொன்னது…

தமிழர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய இணையத்தளம்
http://omtamil.tv/patriyam/

Yarlpavanan சொன்னது…

பயனுள்ள மொழி பற்றிய பகிர்வு
தொடருங்கள்

அ. வேல்முருகன் சொன்னது…

http://velvetri.blogspot.in/2014/08/blog-post_12.html

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்