பின்பற்றுபவர்கள்

29 ஏப்ரல், 2009

சுத்தம், சுகாதாரம், சுகம், சிந்தனை !

'சுத்த' தமிழில் பேசிப் பழகுவோம், அது தான் தமிழுக்கு சிறப்பு சேர்க்கும் என்று சிலர் சொல்லுவார்கள், எழுதுவார்கள். அவர்களின் தமிழ் பற்று பற்றி பாராட்டினாலும் அடிப்படையே கோணலாக இருக்கிறதே என்று உடனே எண்ணுவேன். ஏனெனில் சுத்தம் என்பது தமிழ் சொல்லே அல்ல, புழக்கத்தினால் மிகுதியாக புழங்கும் 'சுத்த' என்கிற வடமொழிச் சொல்லின் தமிழ்வடிவம் அது. 'சுத்த சங்கல்பம்' என்று வடமொழியில் இருக்கும் சொல் வழக்கிற்குப் பொருள் 'தூய எண்ணங்கள்' என்று பொருள். தூய என்ற தமிழ்ச் சொல்லை மறந்துவிட்டு அங்கெல்லாம் சுத்தம் என்று எழுதி வருகிறோம். சுத்தம் ! :)

ஆரம்ப சுகாதர நிலையம் - என்று அரசாங்கத்தில் மருத்துவம் சார்ந்த ஒரு அலுவலகத்தின் பெயர் உண்டு. தமிழ் படுத்துகிறேன் என்கிற பேரில் பிற மொழிச் சொற்களுக்கு தமிழ்ச் சொல் வழக்கில் இருக்கிறதா என்று பார்க்காமலும், சோம்பலினாலும் பிற மொழிச் சொற்கள் பலவற்றை அப்படியே தமிழ் எழுத்தில் எழுதி தமிழ் சொல்லாக வழங்கினர். ஆரம்பம் என்பது தமிழ் சொல் அல்ல. தொடக்கம் என்பதே மிகச் சரியான தமிழ்ச் சொல், ஆரம்ப கல்வி என்பதை தொடக்கக் கல்வி எனலாம், அதே போல் சுகாதாரம் என்பதற்கு உடல் நலம் அல்லது எளிமையாக நலம் என்று சொல்வதால் யாதொரு குறையும் இல்லை. ஆரம்ப சுகாதார நிலையம் என்பதை தொடக்க நல வாரியம் அல்லது தொடக்க/முதல்நிலை நல நிலையம் என்று சொல்லலாம்.

சுகம் - சுஹ் என்கிற வடச் சொல்லின் தமிழ்வடிவம், சுகமாக இருக்கிறீர்களா ? என்று நலம் கேட்பது நம் வழக்கம், சிலர் நலம் விசாரிப்பது, விஜாரிப்பது என்றும் சொல்லுவார்கள், விசாரணை, விசாரி, விஜாரி ஆகியவை வட சொற்கள் தான், விசாரணை என்றால் அது பற்றிக் கேட்பது அல்லது கேட்பது என்று சொல்லலாம். 'வழக்கு விசாராணை நடைபெறுகிறது' என்பதை வழக்கு கேட்டல்/ கேட்பது நடைபெருகிறது என்று சொல்லலாம். சுகம் இருக்கும் இடத்தில் நலம் இருப்பதே நலம். சில இடங்களில் சுகம் என்கிற சொல்லை இனிமைக்காகவும் பயன்படுவது வழக்கம், சிலர் சுகமான தூக்கம், சுகமான குளியல், சுகமான பாட்டு என்பார்கள், இனிமை / நல் / நல்ல வரும் இடத்தில் சுகத்தைப் பயன்படுத்தி வருகிறோம். நல்தூக்கம், நல்லகுளியல், நல்ல பாட்டு என்று சொல்வதில் பொருளேதும் மாறாது

மொழிக் கலப்பில் பெயர் சொற்கள் சேருவதும் குறைதான் என்றாலும் அதை எளிதில் களையலாம், ஏனெனில் பெயர்ச் சொற்கள் எங்கிருந்து வந்தது என்பதை ஓரளவேனும் அறிந்து களைய முடியும், ஆனால் வினைச் சொற்களில் பிறமொழி கலந்தால் அது பேச்சு வழக்காகிவிடும், 'என்ன ஒரே சிந்தனையாக இருக்கிறீர்கள் ?', 'சிந்தித்து பதில் சொல்லுங்க', அப்படி 'என்ன தான் யோசனையோ ?' பார்பதற்கு தூய தமிழ் போல் இருந்தாலும், எண்ணங்களில் பிற மொழிச் சொற்கள் கலந்தால் அவை தமிழ் போலவே தோன்று மென்பதற்கான காட்டு அவைகள். 'என்ன எதையோ எண்ணிக் கொண்டே இருக்கிறீர்கள் ?', 'நன்றாக எண்ணி பதில் சொல்லுங்கள்', 'அப்படி என்ன தான் எண்ணங்களோ ?' என்று 'எண்ணங்கள் இருக்க வேண்டிய இடத்தில் 'சிந்தனையைப்' புதைத்துவிட்டோம். சிந்தை, சிந்தனை ஆகிவை வட சொற்கள், அவை நம் எண்ணத்திலும் கலந்ததால் எண்ணி இருக்க வேண்டிய இடத்தில் 'சிந்தனை' இருக்கிறது.

அப்படி 'எண்ணி'யிருக்காமல் வள்ளுவரும் 'சிந்தனை' செய்திருந்தால்

சிந்தித்து துணிக கருமம், சிந்தித்தபின்
சிந்திப்போம் என்பது இழுக்கு - என்றிருப்பார்.

:)

30 கருத்துகள்:

ராஜ நடராஜன் சொன்னது…

எனக்கு தமிழே மூச்சு வாங்குது!சுத்தமா,தூய தமிழ் முடியலீங்க.

பீர் | Peer சொன்னது…

சிந்திக்க வேண்டிய விசயம்... :)

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

நண்பர் திரு,ஜவஹர் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த சமயம் தயார் எனும் சொல் தமிழ் அல்ல. அதற்கு தகுந்த தமிழ் வார்த்தை என்ன என்று கேட்டார். சட்டியில் இருந்தா தானே வரும். எனக்கும் தெரியவில்லை என்றேன்.

தயார் நிலையில் இருங்கள் என்கிறார்கள். அதை தமிழ் படுத்தினால் எப்படி சொல்வது?

பீர் | Peer சொன்னது…

//தயார் நிலையில் இருங்கள் என்கிறார்கள். அதை தமிழ் படுத்தினால் எப்படி சொல்வது?//

'ஆயத்த' என்று சொல்லலாமோ? தயார் நிலை=ஆயத்த நிலை..

கோவி.கண்ணன் சொன்னது…

//ராஜ நடராஜன் said...
எனக்கு தமிழே மூச்சு வாங்குது!சுத்தமா,தூய தமிழ் முடியலீங்க.
//

க்ரானைட் கற்கள் அனைத்தும் மலையை உடைத்து பெறப்படுபவையே. முடியக் கூடியதை முயன்றால் முடிக்கலாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Chill-Peer said...
சிந்திக்க வேண்டிய விசயம்... :)
//

நல்லாச் சொன்னிங்க போங்க. விடிய விடிய வீடியோ பார்த்துட்டு திருட்டு விசிடின்னா என்னன்னு கேட்பது போல் இருக்கு !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//VIKNESHWARAN said...
நண்பர் திரு,ஜவஹர் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த சமயம் தயார் எனும் சொல் தமிழ் அல்ல. அதற்கு தகுந்த தமிழ் வார்த்தை என்ன என்று கேட்டார். சட்டியில் இருந்தா தானே வரும். எனக்கும் தெரியவில்லை என்றேன்.

தயார் நிலையில் இருங்கள் என்கிறார்கள். அதை தமிழ் படுத்தினால் எப்படி சொல்வது?
//

நம்ம பீர் முந்திட்டார் பாரு விக்கி,

ஆயத்தம், முன்னேற்பாடு, ஏற்பாடு செய்யப்பட்ட என சொற்கள் இருக்கின்றன. இடத்திற்கேற்றார் போல் பயன்படுத்தலாம்.

ரெடிமேட் ஆடையை ஆயத்த ஆடை என்று சொல்லக் கேள்விப்பட்டு இருப்பீர்கள்.

சீக்கிரம் ரெடியாகுங்க, தயாராகுங்க என்பதை 'விரைவில் ஆயத்தமாக இருங்க' என்று சொல்லிப் பாருங்க, சரியாக வரும்.

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

நன்றிங்க பீர்.

ஆய்த்த... இந்த வார்த்தையெல்லாம் எப்பவாது தான் கேட்குறோம். திடுதிடுப்புனு இந்த வார்த்தையச் சொன்னா கெட்ட வார்த்தை ஏதும் சொல்றோம்னு நினைச்சுக்க போறாங்க :)

தாமிரபரணி சொன்னது…

நிங்கள் சொல்வதை என்னால் முழுமையாக எற்றுகொள்ளமுடியாது, சமற்கிருதம் தமிழ் இரண்டும் 5000 ஆண்டுகளுக்கு பழமையானது
அப்படியிருக்கையில் எந்த அடிப்படையில் சமற்கிருதத்திலிருந்து தமிழ் வார்தைகள் வந்ததாக கூறுகிறிர்கள், ஏன் எத்தனையோ தமிழ் வார்த்தைகள் சமற்கிருதத்திற்கு போயிருக்கலாம் அதை அவர்கள் திரித்து சமற்கிருதத்தில் இருந்துதான் தமிழுக்கு வந்தது என்று சொல்லலாம் அதை நாமும் ஆமாம் என்று சொல்வதும் வழக்கமாகிவிட்டது. ஆரிய மொழிகள் பல சமற்கிருததில் இருந்து வந்தது, திராவிட மொழிகள் தமிழ் மொழியில் இருந்து வந்தது என்று அனைவரும் அறிந்தது, ஆனால் திராவிட மொழிகளாள மலையாளம், கன்னடம், தெலுங்கு பேசும் மக்களிடம் கேட்டால் நாங்கள் சமற்கிருததில்யிருந்துதான் வந்தோம் என்று அடித்து கூறுவார்கள்.அவர்கள் அப்படி சொல்வதன் காரணம் தமிழில்யிருந்து தாங்கள் வந்ததாக சொல்வதை தாழ்வாக நினைக்கிறார்கள், நம்மில் பலரும் தமிழை தாழ்வாகவும் சமற்கிருதத்தை உயர்வாகவும் நினைக்கிறார்கள் இதன் விளைவாகத்தான் நாம் ஆமாம் போடுகிறோம்
ஒரு மொழியில் ஒரு செயலுக்கு ஒரு வார்தைதான் இருக்கவேண்டும் என்று எதும் சட்டம் இல்லை(E.G : Excellent. marvellous, fantastic, great, superb, fabulous,wonderful,extraordinary, awesome, amazing etc) மீறி இருந்தால் அது இன்னொரு மொழியில் இருந்துதான் வந்திருக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை எ-டு ஆங்கிலத்தில் ஒன்(ONE) தமிழில் ஒன்னு/ஒன்று என்று சொல்வது உண்டு அதற்காக ஒன்று என்னும் எண் ஆங்கிலத்தில் இருந்துதான் வந்தது என்றாகுமா
இப்படி பல வார்தைகள் வெவ்வெறு மொழியில் சொல்லலாம்

பீர் | Peer சொன்னது…

தமிழில் மட்டுமே உரையாடல் என்பது முழுவதும் சாத்தியமில்லை என்றே எண்ணுகிறேன்...

கோவி.கண்ணன் சொன்னது…

// தாமிரபரணி said...

நிங்கள் சொல்வதை என்னால் முழுமையாக எற்றுகொள்ளமுடியாது, // மொழியியல் பற்றி தொடர்ந்து படித்து வந்தால் நீங்கள் ஏற்கலாம். ஒரு காலத்தில் விவாஹ சுபமூகூர்த்த பத்திரிக்கை' என்று எழுதப்பாட்டது தற்பொழுது எளிமையாக 'திருமண அழைப்பிதழ்' என்று சொல்லப்படுகிறது. கருமாதி பத்திரிக்கையை 'நீத்தார் இறுதி சடங்கு அழைப்பு' என்று மாற்றி வழக்கில் வந்துவிட்டது//சமற்கிருதம் தமிழ் இரண்டும் 5000 ஆண்டுகளுக்கு பழமையானது//சமஸ்கிரதம் பழமையானது இல்லை, அதற்கு எழுத்து அமைந்தது தமிழுக்கும் பிறகு தான், அதற்கு முன்னால் பிராகிரதம் வழங்கப்பட்டது செய்யுள்கள் அனைத்தையும் மனப்பாடம் செய்தே குருகுலம் வழியாக பயிற்சி கொடுத்தார்கள். அதனால் தான் புராண செய்யுள்களுக்கு ஸ்மிருதி என்ற பெயரே இருந்தது, ஸ்மிருதி என்றால் நினைவில் வைத்திருத்தல். பலமொழிகளின் கலவைதான் சமஸ்கிரதம் அதில் பிராகிரத ஆளுமைச் சொற்கள் மிகுதி.
//அப்படியிருக்கையில் எந்த அடிப்படையில் சமற்கிருதத்திலிருந்து தமிழ் வார்தைகள் வந்ததாக கூறுகிறிர்கள், ஏன் எத்தனையோ தமிழ் வார்த்தைகள் சமற்கிருதத்திற்கு போயிருக்கலாம் அதை அவர்கள் திரித்து சமற்கிருதத்தில் இருந்துதான் தமிழுக்கு வந்தது என்று சொல்லலாம் அதை நாமும் ஆமாம் என்று சொல்வதும் வழக்கமாகிவிட்டது. //முதன் முதலில் பலர் இதுபோல் எழுதும் போது நானும் உங்களைப் போல் தான் கேட்டேன். பிறகு தொடர்ந்து வாசிக்கும் போது தான் எவை எவை தமிழ் எவை எவை வடமொழி என்ற அறிதல் கிடைத்தது. அதுமட்டுமின்றி திராவிட மொழிகள் பற்றிய ஓரளவு அறிமுகம் இருக்கிறது. எழுதுபவர்கள் அனைவருமே பொத்தாம் பொதுவாக ஒன்றை எழுதமாட்டார்கள். திருக்குறள், கம்பராமயணம், சிலப்பதிகாரம் வாசித்தால் சொற்கள் நுழைவு, ஏற்பு பற்றி ஓரளவு தெரியவரும், திருக்குறளில் வடமொழி கலப்பு உண்டு ஆனால் அளவில் மிகக்குறைவு, சிலப்பதிகாரத்தில் மிகுதி. ஒப்பிட்டுப் பார்த்தால் இரண்டிற்கும் இடையே சில நூற்றாண்டு வேறுபாடுகள் உண்டு, சிலப்பதிகாரம் திருக்குறளுக்கு காலத்தில் பிந்தியது.//ஆரிய மொழிகள் பல சமற்கிருததில் இருந்து வந்தது, திராவிட மொழிகள் தமிழ் மொழியில் இருந்து வந்தது என்று அனைவரும் அறிந்தது, ஆனால் திராவிட மொழிகளாள மலையாளம், கன்னடம், தெலுங்கு பேசும் மக்களிடம் கேட்டால் நாங்கள் சமற்கிருததில்யிருந்துதான் வந்தோம் என்று அடித்து கூறுவார்கள். அவர்கள் அப்படி சொல்வதன் காரணம் தமிழில்யிருந்து தாங்கள் வந்ததாக சொல்வதை தாழ்வாக நினைக்கிறார்கள், நம்மில் பலரும் தமிழை தாழ்வாகவும் சமற்கிருதத்தை உயர்வாகவும் நினைக்கிறார்கள் இதன் விளைவாகத்தான் நாம் ஆமாம் போடுகிறோம்//

இதுவும் தவறான கூற்றே. எந்த மொழியும் எதிலிருந்தும் வரவில்லை. அவற்றின் கலப்புகளில் வேறுபாடுகள் உண்டு. வடக்கே பேசப்படும் மொழிகளில் வடமொழி கலப்பு விகிதம் மிகுதி என்று சொல்லலாம், ஆனால் அவை அவற்றில் இருந்து உருவானது என்று சொல்ல முடியாது, இந்தியிலும் வடமொழி மிகுதியாக இருக்கிறது என்பதற்காக அது வடமொழியில் இருந்து தோன்றியது என்று சொல்ல முடியாது, இந்தி வடமொழி, உருது, இந்துஸ்தானி, ஈரான் மொழிகளின் கலவை. அது போல் தான் திராவிட மொழிகளில் தமிழ் கலப்பு இருக்கிறது என்பதற்காக தமிழில் இருந்து தோன்றியது என்று சொல்வதும் தவறான கூற்று. அப்படி சொல்வதால் தான் அவர்கள் எதிர்க்கிறார்கள்

//ஒரு மொழியில் ஒரு செயலுக்கு ஒரு வார்தைதான் இருக்கவேண்டும் என்று எதும் சட்டம் இல்லை(E.G : Excellent. marvellous, fantastic, great, superb, fabulous,wonderful,extraordinary, awesome, amazing etc) மீறி இருந்தால் அது இன்னொரு மொழியில் இருந்துதான் வந்திருக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை எ-டு ஆங்கிலத்தில் ஒன்(ONE) தமிழில் ஒன்னு/ஒன்று என்று சொல்வது உண்டு அதற்காக ஒன்று என்னும் எண் ஆங்கிலத்தில் இருந்துதான் வந்தது என்றாகுமா
இப்படி பல வார்தைகள் வெவ்வெறு மொழியில் சொல்லலாம்//

மொழிகளைப் பற்றி ஆழமாகப் படிக்கும் போது தான் அதைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முடியும், ஆங்கிலத்தில் ஒரு லட்சம் சொற்கள் இருப்பது எண்ணிக்கை அளவில் தெரிந்தவருக்கு ஆங்கிலம் முழுமையாக தெரிந்திருக்கிறது என்று சொல்ல முடியுமா ? எந்த மொழியும் மிகுதியாக கடன் வாங்கி சொற்களைப் பயன்படுத்தினால் அதன் உருவமே மாறிவிடும், பண்டைய கிரேக்க, லத்தீன் மொழிகளின் கலவையே ஆங்கிலம். ஆங்கிலம் மேலும் மேலும் கடன் வாங்கும் போது அதைப் படிப்பது மிகவும் கடினமாகிவிடும், அப்போது பேச்சு வழக்குக்கென்றே எளிமையான ஆங்கிலம் தேவைப்படும் பிறகு எங்கே நீங்கள் சொல்லிய Excellent. marvellous, fantastic, great, superb, fabulous,wonderful,extraordinary, awesome, amazing etc ஆகியவற்றிற்கான பொருளை அறிவது. அனைத்தையும் அறிய ஆங்கிலவழிக் கல்வியினால் முடியும் அப்படியே அறிந்தாலும் பயிற்சி இருந்தால் மட்டுமே அந்த சொற்களைப் பயன்படுத்த முடியும். எனவே சொற்களைக் கடன் வாங்கிப் பயன்படுத்துவது மொழிக்கு பெருமை, வளர்ச்சி என்பது தவறான வாதம் தான். தேவைக்கு அதிகமான வளர்ச்சியை வீக்கம் என்பார்கள், இன்றைக்கு அகராதி இல்லாமல் அனைத்து ஆங்கிலச் சொற்களுக்கும் பொருள் தெரிந்தவர் எத்தனை பேர் ? ஆனால் எந்த ஒரு அகராதியும் இல்லாமல் மிகப் பெரிய இன்றைய தமிழ் நூல்களை, நாவல்களை, கட்டுரைகளை நாம் வாசித்துவிட முடியும்.

Unknown சொன்னது…

சுத்தமே தமிழை அசுத்தப்படுத்துகிறதா?

சுத்தமே தமிழின் தூய்மையைக் கெடுக்கிறதா?

NO சொன்னது…

Anbana Thiru Govi Kannan Avargale,

Will you not stop????????????
Don’t your hands and fingers complain at all??
How in the earth Sir do you manage to keep on writing such atrocity ever day and probably every night without respite???
Your obsessive compulsion to keep on spitting on web is truly astounding!

Whereas Alan Turing and Alfred Von Neumann will be stirring in their graves on knowing that their invention and methodology has been put to such use by you, Timothy Berners would certainly regret that he ever came out with the concept of world wide web that will enable half brained pseudo intellectuals like you to write such crap!!

In the past three days or so you have written 6 postings, all nonsense and dripping with mindless inanity but the jewel in the crown is that you have written again and again atleast 30 times in the comments sections, purporting to reply to the great comments given by a handful of equally moronic web browsers!

Just an inventory of how human time wasting technique has mutated is stated below!

6 Postings of yours have elicited a total of something like 55 commentators (discounting the repeat commentators per posting) and it averages to around 9 commentators each per posting. If looked properly and discounting the usual jalras like Vikneswaran, Peer, Jyothi Bharathi etc, there are not more 15 people that read your stale stuff. All these guys do is write some appreciate stuff or post idiotically contradictive prose to an idiotically contrived trash that you have laid open and wait for your honor to give a response. You dear Thiru Govi, as if waiting for this to happen pour buckets mind numbing idiocy again and this continues till somebody runs away.

Having done this, what you do is visit the postings of those contributors and write your great comments thereby repaying the dept to those few jobless jokers. I checked your comments in the postings of those various imbeciles that populate your comments sections and also studied what you have commented! Its all the same and you guys repay yourselves back each time by pouring such intellectual filth on each others blog in the guise of either appreciating or condemning each other over absolutely useless, idiotic, pointless and unwanted writings!

Especially you dear Thiru Govi are an extraordinary creature in the blog world. You are an excellent test and analysis case, if done, will reveal how narcissism, bigotory, idiocy, shallowness, evidence less discussions, pointless wanderings and other such inane behaviors keep evolving, reproducing thrive in this web world!

Keep it up dear Govi Kannan as I am in the process of preparing a detailed paper called Symbiotic evolution of senselessness in web and meme mutation in ungoverned medium” which now depend entirely on your writings and the comments that come to your posting!

So please don’t let me down!

Thanks

கோவி.கண்ணன் சொன்னது…

//No said...
Anbana Thiru Govi Kannan Avargale,
//

நல்லா இருக்கியளா ?

தமிழில் இருந்தால் படிக்கலாம். உங்களிடம் சொல்ல என்ன கொஞ்சம் தயக்கமாக இருந்தாலும் சொல்கிறேன்.

உங்கள் பின்னூட்டங்களில் முதல் ஐந்தைத் தவிர எதையும் படிக்கவே இல்லை. உங்க பொன்னான நேரத்தில் ஆங்கிலத்தில் தட்டச்சு அனுப்பி இருக்கிங்க, என்றாவது மற்றவற்றில் சற்று அலுப்பாக இருந்தால் உங்கள் பின்னூட்டங்களைப் படித்து புரிந்து கொள்ள முயல்கிறேன்.

தாமிரபரணி சொன்னது…

//***இதுவும் தவறான கூற்றே. எந்த மொழியும் எதிலிருந்தும் வரவில்லை. அவற்றின் கலப்புகளில் வேறுபாடுகள் உண்டு. வடக்கே பேசப்படும் மொழிகளில் வடமொழி கலப்பு விகிதம் மிகுதி என்று சொல்லலாம், ஆனால் அவை அவற்றில் இருந்து உருவானது என்று சொல்ல முடியாது, இந்தியிலும் வடமொழி மிகுதியாக இருக்கிறது என்பதற்காக அது வடமொழியில் இருந்து தோன்றியது என்று சொல்ல முடியாது, இந்தி வடமொழி, உருது, இந்துஸ்தானி, ஈரான் மொழிகளின் கலவை. அது போல் தான் திராவிட மொழிகளில் தமிழ் கலப்பு இருக்கிறது என்பதற்காக தமிழில் இருந்து தோன்றியது என்று சொல்வதும் தவறான கூற்று. அப்படி சொல்வதால் தான் அவர்கள் எதிர்க்கிறார்கள் ***//

எந்த மொழியும் எதிலிருந்தும் வரவில்லை என்றால் நம் அன்டை திராவிட மொழிகள் என்ன வானத்தில் இருந்தா குதித்தது
முதலில் நிங்கள் 'எந்த மொழியும் எதிலிருந்தும் வரவில்லை' என்றிர்கள் பின்பு தாங்களே 'இந்தி வடமொழி, உருது, இந்துஸ்தானி, ஈரான் மொழிகளின் கலவை', 'பண்டைய கிரேக்க, லத்தீன் மொழிகளின் கலவையே ஆங்கிலம்'
இதையே ஆங்கிலம் லத்தின், கிரேக்க மொழிகளில் இருந்து வந்தது என்றும் சொல்லலாம், திராவிட மொழிகளிளான மலையாளம், கன்னடம், தெலுங்கு தமிழின் கலவை அல்லது தமிழில் இருந்து திரிந்து/பிரிந்து வந்தது என்று சொல்வதில் தவறு என்ன. சமற்கிருதம் செத்து விட்டது ஆதலால் அதிலிருந்துதான் நாங்கள் வந்தோம் என்று சொல்வதில் அவருக்கு பயம்/தயக்கம் இல்லை ஆனால் தமிழ் இன்னும் இருக்கிறது ஆதலால் சொல்ல தயக்கம்(இது என்னுடைய கருத்து), திராவிட மொழிகளின் ஒலிவடிவம் தமிழ் மொழியை சார்ந்தே இருக்கிறது. இவ்வுளவு ஏன் ஒன்று, இரண்டு போன்ற எண்கள் கூட தமிழை அடிப்படையாக வைத்துதான் அவர்கள் மொழியில் அமைந்துள்ளது

கோவி.கண்ணன் சொன்னது…

//எந்த மொழியும் எதிலிருந்தும் வரவில்லை என்றால் நம் அன்டை திராவிட மொழிகள் என்ன வானத்தில் இருந்தா குதித்தது//

வானத்தில் இருந்து குதித்தது இல்லை, எஸ்கிமோக்கள் பேசும் Inuit எந்த மொழியில் இருந்து வந்தது என்று சொல்வது கடினம், அது போல் காட்டுவாசிகள் ஒவ்வொரு பகுதியிலும் அவர்களுக்கே புரியும் மொழியைப் பேசிகிறார்கள். பேச்சு / மொழி என்பது முதலில் சைகை ஆகி, அதன் பிறகு சுட்டொழியாகி, அதன் பிறகே மொழி என்னும் வடிவம் பெருகிறது, இயற்கையான மொழிகள் அனைத்தும் இவ்வாறே வந்தன, கிளை மொழிகள் அந்த பகுதியில் எந்த மொழி மிக்க ஆளுமை செலுத்துகிறதோ, அத்துடன் கலந்து புதிய வடிவம் பெருகின்றன, அனைத்து கிளை மொழிகளுக்கும் அவர்களுக்கே அவர்களுக்கான மொழி பழங்காலத்தில் புழங்கிய உண்டு. அதை வைத்து தான் பிற மொழிகளில் இருந்து அவை எந்த அளவுக்கு வேறுபடுகிறதோ அதனால் தனி மொழியாக அடையாளம் காணப்படுகின்றன. மொழியில் தொண்டை, உள்நாக்கு, நுனிநாக்கு, மூக்கு, நடுநாக்கு ஆகியவை முக்கிய பங்குவகிக்கின்றன. முக்கு சிறியதாக இருப்பவர்கள் மூக்கால் பேசுவது போன்ற ஒலியை உடைய எழுத்துக்களை வைத்திருப்பார்கள், என்னதான் அனைத்து ஒலிகளையும் உடைய ஆங்கிலம் என்றாலும் ஜப்பானியர்களோ, மலையாளிகளோ மூக்கால் பேசுவது போல் பேச இதுவே காரணம். மலையாளிகளின் பேச்சு ஏன் மூக்கொலி மிகுந்தாக இருக்கிறது என்பதற்கு காரணம் தெரியவில்லை. மலையகம் ஒருகாலத்தில் ஊட்டி போல மிகவும் குளிர் சூழலில் இருந்திருக்கலாம், அதனால் அவர்களின் மூக்கு துளை சுறுங்கி பேச்சு ஒலி மாறி, அந்த ஒலியே மொழியிலும் எழுத்தாகப்பட்டு சரி என பயன்படுத்தப்பட்டு இருக்கலாம். ஒரு கன்னடர் கன்னடத்தில் இருந்து தமிழ் தோன்றியது என்று சொன்னால் நாம் ஒப்புக் கொள்வோமா ? அது போல் தான் அவர்களும் ஒப்புக் கொள்ளமாட்டார்கள், இரண்டிற்கும் பொதுவான சொற்கள் இருக்கிறது, ஒன்றில் பழைய இலக்கியங்கள் இருக்கிறது, மற்றவற்றில் இல்லை என்றால் எதை முதல் மொழியாகக் கொள்வது என்கிற ஆராய்ச்சியில் தமிழைச் சொல்லிவிடுகிறோம். மற்றபடி தமிழா ? கன்னடமா ? எது முதலில் வந்ததென்றெல்லாம் அறுதி இட்டுச் சொல்லி விட முடியாது. இரண்டுமே வேறு வேறு பகுதியில் பேசப்பட்ட ஒரே மொழியின் இரு கிளைகளாகவோ / வட்டார வழக்குகளாகவோ இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. சங்கத் தமிழில் புழங்கும் பல சொற்கள் இன்று தமிழ் நாட்டில் புழக்கத்தில் இல்லை, ஆனால் அவை கன்னடத்தில் அப்படியே வழங்கிவருகிறது. இது இதிலிருந்து தோன்றியது தவறான வாதம். 500 ஆண்டுகளுக்கும் மேலான மொழிகள் அனைத்தும் மாற்றங்களை அல்லது நிறைய சொற்களை கடன்வாங்கி அல்லது உருவாக்கிக் கொண்டு புதிய வடிவம் பெற்றிருக்கிறது என்பதே சரியான கூற்று

கோவி.கண்ணன் சொன்னது…

//சுல்தான் said...
சுத்தமே தமிழை அசுத்தப்படுத்துகிறதா? //

//சுத்தமே தமிழின் தூய்மையைக் கெடுக்கிறதா?

6:31 PM, April 29, 2009
//


பயன்படுத்துவர்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்கிறார்கள் !

குமரன் (Kumaran) சொன்னது…

கோவி.கண்ணன்.

நீங்கள் எதற்கும் ஒரு முறை இராம.கி. ஐயாவிடம் இச்சொற்கள் - சிந்தனை, சுத்தம் - போன்றவை வடசொல் தானா என்று சரி பார்த்துக் கொள்ளுங்கள். சிந்தனை என்ற சொல்லை பழந்தமிழ் நூற்களில் படித்ததாக நினைவு.

சிந்தா (chinthaa) என்ற வடசொல்லில் இருந்து சிந்தனை என்ற சொல் வந்தது என்று எண்ணியிருந்தீர்கள் என்றால் அது தவறு. சிந்தா என்பதற்கு கவலை என்ற பொருள் வடமொழியில். நாம் சிந்தனை என்ற சொல்லைக் கவலை என்ற பொருளில் தமிழில் புழங்குவதில்லை. அதனால் அவை இரண்டும் ஒன்று போல் ஒலிக்கும் ஆனால் சொற்பிறப்பில் வெவ்வேறு விதமாகக் கிளைத்தவை என்று நினைக்கிறேன்.

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

//6 Postings of yours have elicited a total of something like 55 commentators (discounting the repeat commentators per posting) and it averages to around 9 commentators each per posting. If looked properly and discounting the usual jalras like Vikneswaran, Peer, Jyothi Bharathi etc, there are not more 15 people that read your stale stuff.//

உயர் திரு NO அண்ணே உங்கள் பொன்னான கருத்தைப் படித்து தலை கால் புரியாமல் உள மகிழ்ந்தேன். சரி அத வுடுங்க...

கடைசியா ஏதோ ஆராய்ச்சி பண்றதா சொல்லி இருக்கிங்களே அதலாம் மக்கள்ஸ் பேசி தீர்த்துட்டாங்க. நீங்க சொல்லி தான் புதுசா தெரிஞ்சிக்க போறாங்களா இல்ல அத வச்சி உங்களுக்கு நோபல் பரிசு கொடுக்க போறாங்களா. பேசாம ஒரு பீர உட்டுகிட்டு படுத்து தூங்குங்க.

அளவில்லா ஜிங்குச்சாவோடு,
விக்கி. :)

கோவி.கண்ணன் சொன்னது…

//குமரன் (Kumaran) said...
கோவி.கண்ணன்.

நீங்கள் எதற்கும் ஒரு முறை இராம.கி. ஐயாவிடம் இச்சொற்கள் - சிந்தனை, சுத்தம் - போன்றவை வடசொல் தானா என்று சரி பார்த்துக் கொள்ளுங்கள். சிந்தனை என்ற சொல்லை பழந்தமிழ் நூற்களில் படித்ததாக நினைவு.

சிந்தா (chinthaa) என்ற வடசொல்லில் இருந்து சிந்தனை என்ற சொல் வந்தது என்று எண்ணியிருந்தீர்கள் என்றால் அது தவறு. சிந்தா என்பதற்கு கவலை என்ற பொருள் வடமொழியில். நாம் சிந்தனை என்ற சொல்லைக் கவலை என்ற பொருளில் தமிழில் புழங்குவதில்லை. அதனால் அவை இரண்டும் ஒன்று போல் ஒலிக்கும் ஆனால் சொற்பிறப்பில் வெவ்வேறு விதமாகக் கிளைத்தவை என்று நினைக்கிறேன்.
//

நண்பர் குமரன், இராமகி ஐயா 'சிந்தனை' என்ற சொல்லைப் பல இடுகைகளில் பயன்படுத்தி இருக்கிறார். சொற்பிறப்பு பற்றித் தேடிப்பார்த்தேன், பகுப்பாய்வு கிடைக்கவில்லை. அவரிடம் கேட்டுப் பார்க்க வேண்டும்.

இந்தியில் 'சிந்தன்' என்ற சொல்வழக்கு உண்டு, சிந்தன் கரோ என்பது சிந்தனை செய் என்ற பொருளில் வரும் என்றே நினைக்கிறேன். அப்படி நினைத்து தான் அதனை வடசொல்லாகக் கருதினேன். தவறாக இருக்கலாம், இந்தி / வடமொழி புலமை பெற்றவர்களிடம் கேட்ட அறிந்து மாற்றுகிறேன்.

பின்னூட்டக் கருத்துக்கு மிக்க நன்றி !

நிகழ்காலத்தில்... சொன்னது…

சுத்தமா இதைப் பத்தி எனக்கும் ஒன்னுமே தெரியாது!

சுத்தமாக என்பது இங்கே முழுமையாக என்ற பொருளில் பேச்சுவழக்காக வருகிறது

இது எப்படின்னு கொஞ்சம் சொல்லுங்க..

கோவி.கண்ணன் சொன்னது…

//அறிவே தெய்வம் said...
சுத்தமா இதைப் பத்தி எனக்கும் ஒன்னுமே தெரியாது!

சுத்தமாக என்பது இங்கே முழுமையாக என்ற பொருளில் பேச்சுவழக்காக வருகிறது

இது எப்படின்னு கொஞ்சம் சொல்லுங்க..
//

நல்லவேளை,
சுத்தமா ? இதைப் பத்தி எனக்கும் ஒன்னுமே தெரியாது! - என்று இல்லை ! :)

அரைகுறை அல்லது எதுவுமே தெரியாது என்பதைச் சொல்லும் போது தான் அவ்வாறு சொல்கிறார்கள். 'தெளிவாக இதைப் பற்றித் தெரியாது' என்று சொல்வதும் உண்டு, 'தெளிவு','தூய்மை' இரண்டும் அடிப்படையில் ஒரே பொருள் தான். நன்கு தெரிந்த / அல்லது தெரியாததைப் பற்றிச் சொல்லும் போது தெளிவு / தெளிவின்மை என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். தெளிவாக இதைப் பற்றி எனக்கு தெரியாது, என்று சொல்வதைத் தான் அங்கே 'சுத்தமாக' அதைப் பற்றித் தெரியாது என்கிற வழக்காக மாறி இருக்கிறது. தெளிவு என்றாலும் அங்கே அது தூய்மையின் தன்மை குறித்த சொல்தான், என்பதால் 'சுத்தம்' சேர்ந்துவிட்டதாக நினைக்கிறேன்.

இந்த இடத்தில் 'சுத்தம்' என்பது வினைச் சொல் அல்ல, உரிச் சொல். அதற்கு மாற்றாக 'தெளிவு' என்று சொல்லி இருக்கலாம். பேச்சு வழக்கில் மாறி இருக்கிறது

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் சொன்னது…

நல்ல தமிழ் ஆர்வலர் கோ.வி.அண்ணாவுக்கு,பள்ளிகளிலும்,திரைப்படங்களிலும்,தூய தமிழில் பேசினால் நக்கல் அடிகிறார்கள்,இது மாற வேண்டும்,நண்பர் லக்கி லுக் ஒரு பதிவில் usp க்கு தமிழில் என்ன தெரியவில்லை என கேட்டிருந்தார் உங்களுக்கு தெரிந்தால் கொஞ்சம் சொல்லூங்களேன்...!

கோவி.கண்ணன் சொன்னது…

//தமிழ் வெங்கட் said...
நல்ல தமிழ் ஆர்வலர் கோ.வி.அண்ணாவுக்கு,பள்ளிகளிலும்,திரைப்படங்களிலும்,தூய தமிழில் பேசினால் நக்கல் அடிகிறார்கள்,இது மாற வேண்டும்,நண்பர் லக்கி லுக் ஒரு பதிவில் usp க்கு தமிழில் என்ன தெரியவில்லை என கேட்டிருந்தார் உங்களுக்கு தெரிந்தால் கொஞ்சம் சொல்லூங்களேன்...!
//

பாராட்டுக்கு நன்றி !

USB ?
Universal Serial BUS ?

அனைத்துவகை தொடர் மின்னனு இணைப்பு கருவி அல்லது இணைப்பான்.

திமுக மாதிரி

அதொமிஇ இன்னு சொல்லலாம் !
:)))))))

தாமிரபரணி சொன்னது…

//*** ஒரு கன்னடர் கன்னடத்தில் இருந்து தமிழ் தோன்றியது என்று சொன்னால் நாம் ஒப்புக் கொள்வோமா ? அது போல் தான் அவர்களும் ஒப்புக் கொள்ளமாட்டார்கள், இரண்டிற்கும் பொதுவான சொற்கள் இருக்கிறது, ஒன்றில் பழைய இலக்கியங்கள் இருக்கிறது, மற்றவற்றில் இல்லை என்றால் எதை முதல் மொழியாகக் கொள்வது என்கிற ஆராய்ச்சியில் தமிழைச் சொல்லிவிடுகிறோம். மற்றபடி தமிழா ? கன்னடமா ? எது முதலில் வந்ததென்றெல்லாம் அறுதி இட்டுச் சொல்லி விட முடியாது. இரண்டுமே வேறு வேறு பகுதியில் பேசப்பட்ட ஒரே மொழியின் இரு கிளைகளாகவோ / வட்டார வழக்குகளாகவோ இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறது ***//
அனைத்து திராவிட மொழிகளும் தமிழ்யிருந்துதான் வந்துள்ளது
என்பதற்கு பல சான்றுகள் சொல்லலாம் , எற்றுகொள்ளவதும் எற்றுகொள்ளாதிருப்பதும் அவர் அவரின் மனதை பொருத்து
கடவுள் இருக்கிறார் என்று பலபேர் சொன்னாலும் இல்லை என்றும் சில பலரால் வாதிட முடியும், அதுபோலதான் தமிழ்யிருந்து திராவிட மொழிகள் வந்ததும். தமிழ் மொழி எழுத்து வடிவம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பெற்றுவிட்டது
அந்த எழுத்துவகையைத்தான் நாம் இன்றும் பயன்படுத்துகிறோம்
கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகியவை நெல்லை தமிழ், மதுரை தமிழ், கோவை தமிழ் போலத்தான் என்ன ஒரு வித்தியாசம் என்றால் எழுத்து வடிவம், அதுவும் தமிழ் எழுத்தாக இருந்தால் இன்று திராவிட மொழிகளுக்குள் வேறுபாடு வந்திருக்காது, அவர்கள் ஒப்புக் கொள்ளமாட்டார்கள் எனபதற்காக
வரலாற்றை அவர்களுக்கு சாதகமாக எழுதி கொள்ள முடியாது
நான் ஆந்திரா, கர்நாடகம், கேரளம் என அனைத்து மாநிலங்களிலும் பணி ஆற்றியுள்ளேன், அவர்கள் பேசும் வார்தைகள் ஒன்று தமிழாக இருக்கும், இல்லை தமிழ்யிருந்து திரிந்ததாக இருக்கம் இல்லை வடமொழியாக இருக்கும், அவர்கள் பேசும் வார்தைகளில் தூய்மையான ஒரு கன்னடம் வார்தையோ, மலையாளம் வார்தையோ, தெலுங்கு வார்தையோ சொல்ல சொல்லுங்கள். எழுத்து வடிவம் நிக்கலாக/தவிர கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிகள் தமிழ் மொழியே
அமெரிக்காவின் மொழியியல் ஆய்வாளர் பேராசிரியர் நாம்சோம்ஸ்கி, "இன்று உலகத்தில் அனைத்து மக்களாலும் வழங்கப்படுகின்ற மொழிகளெல்லாம் இரண்டு தொல்மொழியிலிருந்துதான் உருவாகின. தென்னாப்பிரிக்கப் பழங்குடி மக்களால் வழங்கப்படுகின்ற சுவாகிலியும், இன்றும் வழக்கிலிருந்து காலத்திற்கேற்றாற்போல் தன்னை தகவமைத்துக் கொண்டிருக்கும் தமிழும்தான் அவ்விரு மொழிகள்
விடை பெருகிறேன்
நன்றி நன்றி நன்றி!!!!

Ginger சொன்னது…

சுத்தத்தமிழ், தூயதமிழ், அது தமிழ் இல்லை, இதுதான் தமிழ் - இதெல்லாம் என்ன obsessive-compulsive பித்துக்கள். சிலர் அடைக்கடி கையை சோப்பு போட்டு அலம்பி அலம்பி வாழ்க்கையை வீணப்படிப்பது போல உள்ளது “தூய தமிழ்” பைத்திய காரத்தனம். தமிழில் சிறந்த எழுத்தாளர்களான எஸ்.ராமகிருஷ்னன், ஜெயகாந்தன், புதுமைபித்தன் போன்றவர்கள் இப்பித்துகளை முழதுமாக நிராகரித்தவர்கள். அவர்களுக்கு இல்லாத தமிழ், சாஃப்வேர் இஞ்சினியர்களுக்கு வரப்போவதில்லை. ‘தூய தமிழ்’ பித்து அந்த சவப் பெட்டியில் இன்னொரு ஆணி.

Ginger சொன்னது…

’தூய தமிழ்’ கையாலாகாதவர்களின் போர் கொடி

தமிழ் சொன்னது…

இப்பொழுது தங்களின் இடுகையைப் படித்தேன்.

ஒசை ஒத்த சொற்கள் உண்டாக்கும் குழப்பம் தான் இவை எல்லாம் என்று எண்ண தோன்றுகிறது.

இந்த இடுகைகளைப் படித்தால்

1.shampoo -சீம்பூ ( ஓசை ஒத்த சொற்கள் )2.Alarm - அலாரம் ( ஓசை ஒத்த சொற்கள் )3.சீம்பூ , சென்னை மற்றும் சில சிந்தனைகள்தெரியும்.

இந்த இடுகையை எழுதி பிறகு தான் ஒரு நடுக்கம் ஏற்பட்டது.நாளைய தலைமுறைக்கு முறையான வரலாறும், குறிப்பும் இல்லை என்றால் cell phone,Parliament போன்ற சொற்களைக் கொண்டு
செல்பேசியும்,பாராளுமன்றத்தையும் வேற்று மொழிச்சொல் என்று வரையறுத்து விடுவார்கள் அச்சம் உண்டாகிறது.

முத்து வேண்டும் என்றால் கடலில் முழுக வேண்டும் ,அப்படித்தான் தமிழ் அமுதத்தைப் பருக வேண்டும், தமிழ்ச்சொல் தான் என்று இயம்ப வேண்டும் எனில் முத்து குளிக்க வேண்டும்

மேலோட்டமாக எதையும் எடுத்து சொல்ல முடியாது என்று நினைக்கின்றேன். தவறாக எண்ண வேண்டாம்.

அதைப் பற்றி ஒரு கட்டுரை தான் வயதின் வேதனை என்னும் தலைப்பில் ஒரு சில நாட்களில் ஒரு இடுகை இட உள்ளேன்.

மீண்டும் ஒரு முறை தங்களின் இடுகைக்கு நன்றி.

அன்புடன்
திகழ்
சிங்கை

technicalganesh சொன்னது…

//
தொடக்க/முதல்நிலை நல நிலையம் என்று சொல்லலாம்.
//

நிலையம் என்ற சொல்லே தமிழ் இல்லையென்று தோன்றுகிறது. நடுவம் என்பதுதான் சரியான தமிழ்ச்சொல்.
என்னைக்கேட்டால் திடுமென்று முழுவதும் மாறச்சொன்னால் மாறிக்கொள்வது கடினம். எனவே முதலில் தெரிந்த தமிழ்ச்சொற்கள் இருக்கையில் வடமொழிச் சொல்லைத் தவிர்க்கச் சொல்லலாம். என்ன செய்வது முள்மேல் விழுந்த ஆடையை ஆற அமரத்தான் களையவேண்டி வருகிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

/// technicalganesh said...

//
தொடக்க/முதல்நிலை நல நிலையம் என்று சொல்லலாம்.
//

நிலையம் என்ற சொல்லே தமிழ் இல்லையென்று தோன்றுகிறது. நடுவம் என்பதுதான் சரியான தமிழ்ச்சொல்.
என்னைக்கேட்டால் திடுமென்று முழுவதும் மாறச்சொன்னால் மாறிக்கொள்வது கடினம். எனவே முதலில் தெரிந்த தமிழ்ச்சொற்கள் இருக்கையில் வடமொழிச் சொல்லைத் தவிர்க்கச் சொல்லலாம். என்ன செய்வது முள்மேல் விழுந்த ஆடையை ஆற அமரத்தான் களையவேண்டி வருகிறது.//

நிலையம் என்பது எப்படி வடசொல் என்று சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. நிலை, நிலைத்தல் என்றால் அமைந்த அமையப்பெற்ற என்ற பொருளை ஒட்டிவரும் தமிழ் சொல். நிலை அதனுடன் யம் விகுதி சேர்த்து நிலையம் ஆனது. அண்மையில் சென்னையில் அடுக்கு மாடி குடி இருப்பு ஒன்றின் பெயரில் அடுக்ககம் என்ற சொல் அப்பார்மெண்ட் என்பதைக் குறிப்பதாக இருந்தது. டைரக்ட்ரேட் என்பதை இயக்ககம் என்று எழுதுகிறார்கள்.

நிலையம் தமிழ் சொல் இல்லை என்றால் அதை வடமொழியில் எங்காவது பயன்படுத்துகிறார்களா என்று பார்க்க வேண்டும், எனக்கு தெரிந்து வடமொழி சொற்களில் நிலையம் என்கிற ஒற்றை சொல் கேள்விப்பட்டதே இல்லை.

நிலையம் தமிழ் சொல்லே.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்