பின்பற்றுபவர்கள்

28 ஏப்ரல், 2009

தேசிய பாது'காப்பு' சட்டமும், ஆட்சியாளர்களின் குறுமதியும் !

இறையாண்மையைக் காக்கிறோம் என்கிற பெயரில் கடுமையான சட்டங்களை இயற்றுகிறார்கள். ஆனால் அந்த சட்டங்களை பயன்படுத்தும் தேர்தெடுக்கப்படும் அரசியில் கட்சிகளின் அரசு, அதைத் தங்களின் அரசியல் நோக்கிலேயே தன்னலத்திற்காக பயன்படுத்துகின்றன.

பொடா சட்டம், தடா சட்டம் போன்றவை இந்த வகைதான். தடா சட்டம் என்ற ஒரு சட்டம் முன்பு இருந்தது, அதைக் கொச்சைப் படுத்தியவர் ஜெ. முன்பு சு.சாமிக்கும் ஜெ-வுக்கும் இடையிலான கடுமையான முட்டல் மோதல்கள் இருந்த நேரம் தடா சட்டம் என்கிற ஒரு சட்டம் இருந்தது, அதில் தீவிரவாதிகள் என்று ஐயப்படுபவர்களை விசாரணையின்றி எவ்வளவு காலம் வேண்டுமானாலும் வைக்கலாம். அதில் சிக்கிய கைதி ஒருவரின் புகைப்படத்தை சு.சுவாமியுடன் இணைத்து, 'இதோ பாருங்கள், சு.ஸ்வாமி தடா இராவியுடன் போஸ் கொடுக்கிறார், எனவே சு.ஸ்வாமியை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்கள். தடா இரவி - சு.ஸ்வாமி புகைப்பட இணைப்புக்கு தி.க ஐயாவே அறிவுறுத்தல் கொடுத்தார் என்று அப்போது பரவாலாகப் பேசப்பட்டது. பிறகு தடா புகைப்படம் தடவியல் ஆய்வாளர்களால் போலியானது என்று சொல்லப் பட்ட பிறகு அடங்கியது. இணையப் பக்கங்களில் தேடிப்பார்த்தால் தடா ரவி - சு.ஸ்வாமி இணைந்த போலி புகைப்படம் கிடைக்கலாம். சு.ஸ்வாமி நல்லவர் வல்லவர் என்பதற்காக இதைச் சொல்லவில்லை. தடா சட்டத்தை எப்படி பயன்படுத்த முயன்றார்கள் என்பதற்காகச் சுட்டினேன்.

அடுத்து பொடா சட்டம் அதில் வைகோ விடுதலைப் புலிகளை ஆதரித்தார் என்ற குற்றச் சாட்டில் ஓராண்டுக்கும் மேலாக வைக்கப்பட்டார், பிறகு வழக்கு போதிய ஆதராமின்றியும், தீவிரவாதத்திற்கு இந்தியாவில் இடம் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் பேசவில்லை என்பதால் பிசுபிசுத்தது, வைகோவும் வெளியே வந்தார். அதே காலகட்டத்தில் வைகோ மட்டுமல்ல நக்கீரன் கோபால் போன்றவர்கள் மீதும், 17 வயது சிறுவன் மீதும் கூட பொடா சட்டம் பாய்ச்சப்பட்டது. சிறுவன் மீது பாய்ச்சப்பட்ட பொடாவிற்கு நீதிமன்றத்தால் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு சாதாரண சிறுவர் குற்ற வழக்காக மாற்றப்பட்டது. நக்கீரன் கோபால் செய்த குற்றம் ? வீரப்பனைப் பேட்டியெடுத்ததும், அதில் ஜெ பற்றிய கடுமையான விமர்சனங்கள் இருந்ததும், தொடர்ந்து அதிமுக, ஜெ, சசிகலா பற்றி நக்கீரனில் எழுதி வந்ததும் தான் காரணம். மற்றபடி நக்கீரனை பொடாவில் போட எந்த ஒரு முகாந்திரமும் இல்லை. நக்கீரன் கோபால் தனது வாதங்களை வைத்துவிட்டு எளிதாக வெளியே வந்தார்.

தற்பொழுது சீமான், கொளத்தூர் மணி போன்றவர்கள் விடுதலைப் புலிகளை ஆதரித்தார்கள் என்ற அதே குற்றச் சாட்டில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள். சீமான் வெற்றிகரமாக வைகோ பாணியில் வெளியே வந்துவிட்டார். கொளத்தூர் மணியும் வெளியே வருவார்.

ஆட்சியாளர்களுக்கு இது நிற்கும் வழக்கு இல்லை என்று தெரியாதா ? தெரியும். ஆனால் இந்த வழக்கில் சிக்க வைப்பதன் மூலம் ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு தொடர்புடையவர்கள் என்று குற்றம் சுமத்தப்படுபவர்களை உள்ளே வைத்து காழ்புணர்வை தீர்த்துக் கொள்கிறார்கள். சீமான் போன்றோரை உள்ளே வைப்பதன் மூலம் அவர் மூலம் எடுத்துச் சொல்லப்படும் விழிப்புணர்வை குறுகிய காலத்திற்கு தடுக்க முடியும் என்று நம்புகிறார்கள், அதன் படியே நடக்கிறார்கள். மற்றபடி இது செல்லாத வழக்கு என்பது அவர்களுக்கும் தெரியும். ஆனால் இதில் பாதிக்கப்படுபவர்களுக்கு எந்த வித இழப்பீடும் கிடைக்கவில்லை என்பதையும் சட்ட இயற்றுபவர்கள் பார்ப்பது இல்லை. இது போன்ற சட்டங்களினால் ஒருவர் பாதிக்கப்பட்டு அது அரசியல் காழ்புணர்வினால் எடுத்த பழிவாங்கள் நடவடிக்கை என்று குற்றவாளி உறுதிப்படுத்தும் (நிரூபணம்) போது அந்த சட்டத்தில் முகாந்திரமின்றி அரசியல் நோக்கிற்காக கைது செய்யப்பட்டதற்கு தக்கதொரு இழப்பீடு கொடுக்கப் படவேண்டும், பாதிக்கப்பட்டவர்கள் சட்ட அவமதிப்பு வழக்கு தொடரலாம் என்ற ஒரு பிரிவுகளும் இருந்தால், இது போன்று பழிவாங்கும் கைது நடவெடிக்கைகள் குறையும்.

ஒரு சில சட்டங்களை இயற்றும் போது பலர் அதற்கு எதிராக திரும்பப் பெறும் படி போராடுவது எதற்கென்றே தற்பொழுது தான் புரிகிறது. நேர்மையற்ற அரசியல் ஆட்சியாளர்களின் கையில் சட்டம் அவர்களது எதிரிகளைப் பழிவாங்கும் இன்னொரு ஆயுதமாகவே செயல்படுகிறது. தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை கூட்டணி வெற்றிப் பாதுகாப்புக்காக முறைகேடாக பயன்படுத்துவது அரசியலில் மாபெரும் அசிங்கம், அதை மக்கள் ஆட்சி (ஜெனநாயக) படுகொலை என்றும் வகைப்படுத்தலாம்.

6 கருத்துகள்:

மணிகண்டன் சொன்னது…

நல்ல கருத்துக்கள் கோவி. சட்டத்தை தவறாக பயன்படுத்துவதே இவர்களின் மெயின் பொழுதுபோக்கு.

அப்பாவி முரு சொன்னது…

இந்த வகையான ஜனநாயகத்தை நினைத்தாலே பயமாக உள்ளது.

அத்திரி சொன்னது…

நல்ல தெளிவான அலசல் கோவியாரே

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் said...
நல்ல கருத்துக்கள் கோவி. சட்டத்தை தவறாக பயன்படுத்துவதே இவர்களின் மெயின் பொழுதுபோக்கு.
//

மணி,

பாராட்டுக்கு நன்றி ! பொழுது போக்கு இல்லை, பயம் தான் அப்படி செய்ய வைக்கிறது. வயிற்றுப் போக்கு :)

கோவி.கண்ணன் சொன்னது…

//அப்பாவி முரு said...
இந்த வகையான ஜனநாயகத்தை நினைத்தாலே பயமாக உள்ளது.
//

முரு,
பணமும், பலமும் இருந்தால் செல்வாக்குடன் அரசியல்வாதி ஆகலாம், ஆகுகிறார்கள், அவர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும் ?

கோவி.கண்ணன் சொன்னது…

//அத்திரி said...
நல்ல தெளிவான அலசல் கோவியாரே
//

அத்திரி நன்றி !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்