பின்பற்றுபவர்கள்

19 மார்ச், 2009

நவீன நாட்டாமைகள் எப்போது தங்களுக்கான தீர்ப்பை எழுதுவார்கள் ?

வழக்கறிஞர்கள் நீதிபதிகளை இனி 'யுவர் ஹானர்' என்று சொல்லமாட்டோம் என்று முடிவெடுத்து இருக்கிறார்கள். என்னைக் கேட்டால் இது வரவேற்கத்தக்க ஒன்றே என்று சொல்லுவேன். படித்தவர்களுக்கு இடையேயும் ஆண்டை / அடிமைத்தனத்தை போற்றி வளர்ப்பது தான் ஒருவரின் பதவியை வைத்து அவரை கட்டாயமாக மதிப்பு (மரியாதை) மிகுதியுடன் அழைக்கும் முறை. காவல் துறைகளில் நடக்கும் இப்படிப் பட்ட கூழைக் கும்பிடுகளை அனைவருமே பார்த்திருப்போம், காவலர்கள் ஏட்டுகளையும் (தலைமை காவலர் ?), அப்பா வயது உடைய ஒரு ஏட்டு 'ஐயாகள்', 25 வயது உதவி-ஆய்வாளரை 'ஐயா' என்றே கூழைக் கும்பிடுடன் அழைப்பார்கள், அதே போல் உதவி ஆய்வாளர் ஆய்வாளரை அழைபபர், இப்படியாக உயர்மட்டம் வரையில் செல்லும். படிப்பு என்பது வேலைக்கான தகுதியைக் கொடுப்பது மட்டும் தான், அது மரியாதையை தீர்மாணிக்கும் ஒன்று அல்ல. மரியாதைகள் அவர்கள் நடந்து கொள்வதைப் பொருத்து கிடைப்பவையே, அப்படி வெறும் வாய்ச் சொல் மரியாதை என்பதைவிட உண்மையான மரியாதையாகவே உணரப்படும். சிலர் கூச்சப்பட்டுக் கொண்டு அப்படி சொல்ல வேண்டாம் என்று பெரிய மனதுடன் சொல்வார்கள். பெயரைச் சொல்வது இழிவானதா ? அல்லது இழிவான பெயரைத்தான் யாரும் வைத்திருக்கிறார்களா ? 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் அரசு அலுவலகங்களில் கூட வயது குறைந்தவர்களை பதவியின் காரணமாக வயது மிக்கவர்கள் மிக மரியாதையுடன் அழைக்கும் நிலை இன்றும் இருக்கிறது. இதன் காரணமாகவே ஒரே அலுவலகத்தில் இருந்தாலும் ஒருவருகொருவர் இயல்பாக பழகவும் வாய்ப்பில்லாமல் இருக்கிறது

ஒரு நல்ல குணங்களும் இல்லாதவர்கள் வெறும் படிப்பின் தகுதியாலேயே, அதன் மூலம் பெற்ற பதவியினாலேயே தனக்கு கீழே வேலை பார்பவர்களை சார், ஐயா என்று முறை வைத்துக் கூப்பிடச் சொல்வது அடிமைத்தன ஏவலின் சொற்கள் தான். இவை களையப்பட வேண்டும். வெளிநாடுகளில் எந்த ஒரு உயர் அலுவலரையும் ஐயா, சார் போட்டு அழைக்கும் வழக்கம் இல்லை. வெளிநாடுகளில் இந்தியர்கள் நடத்தும் நிறுவனங்களில் அவர்கள் மேலாளராக இருக்கும் நிறுவனங்களில் சிலவற்றில் 'சார்' போட்டு அழைக்கும் பழக்கம் உண்டு. எல்லோரும் மனிதர்களே பெயர் வைத்திருப்பது பிறர் சுட்டி அழைப்பதற்குத்தான், பெயரைச் சொல்லி அழைப்பதற்கு ஒருவர் மீதான மதிப்பிற்கும் என்ன தொடர்பென்றே தெரியவில்லை. நம் இந்தியாவில் தான் பெயர் சொல்லிக் கூப்பிடுவது இழிவு என்பதாக கட்டமைத்து வைத்திருக்கிறார்கள். என்னுடன் முன்பு சிங்கையில் வேலை பார்த்த நண்பர் சிங்கப்பூர் வரும் போது 'சாரை'யும் எடுத்துக் கொண்டுவந்துவிட்டார். அதாவது எங்களுக்கு மேலாளரான சீனரை 'சார்' போட்டு தான் அழைப்பார். 'ஏன்யா...இந்தியாவில் வேறு வழியில்லாமல் கண்டவனுக்கும் சலாம் போடுறோம்...இங்கே சார் போடுவதை தவிர்த்து பழகலாமே' என்றேன். 'அப்படி கூப்பிட எனக்கு வாய்(ஸ்) வரமாட்டேன்கிறது என்றார். 'ம்...நீங்க சார்னு கூப்பிடுங்க...நான் பேரைச் சொல்லி கூப்பிடுறேன்...உங்களுக்கு மரியாதை தெரியுது...எனக்கு தெரியலைன்னு மேலாளர் நினைக்கும் படி செய்துவிடாதீர்கள்' என்றேன். ஆனாலும் அவர் மாற்றிக் கொள்ளவில்லை. சீனர்கள் இது போன்ற அற்பமான மரியாதைகளை எதிர்பார்க்கமாட்டார்கள். ஆனால் உதவிகளுக்கு நன்றிகள் சொல்வதை மறக்க மாட்டார்கள். நாம நன்றி சொல்லமல் விட்டுவிட்டால் மரியாதையின்று நடந்து கொள்வதாக நினைப்பார்கள்.

சரி... நீதிபதிகள் உயர்ந்தவர்களா ? படிப்படியாக பதவி உயர்வினால் கிடைத்த ஒரு பதவி, அதற்கும் நிறைவான ஊதியம், வேலையாட்கள், பெரிய வீடுகள் என அந்த பதிவிக்கென அரசு உதவிகள் / சலுகைகள் கிடைக்கிறது, மற்றபடி சக மனிதனைவிட நீதிபதிகள் எந்த விதத்தில் உயர்ந்தவர்கள் ? எதற்காக அவர்களை கடவுள் இடத்தில் வைத்துப் பார்க்க வேண்டும்.
என்னைக் கேட்டால் நல்ல மனம் படைத்த மருத்துவர்களை கடவுளாக பார்க்கலாம், ஏனெனில் (உயிர்)காக்கும் தொழிலை தன்னலமில்லாமல் செய்துவரும் மருத்துவர்களை (மட்டும்) கடவுளாக பார்க்கலாம். நீதிபதிகள் ? வழக்குரைஞரின் வாதங்களை ஒப்பிட்டு தீர்ப்பு சொல்பவர் மட்டுமே, வழக்குரைஞரின் வாதம் குற்றவாளியை குற்றமற்றவராகவும், மாற்றியும் காட்டினாலும் கூட, சாட்சி, ஆவண அடிப்படையில் அதை வைத்து நீதி சொல்லுபவர் நீதிபதி. அவருக்கு எந்த ஒரு (ஞானப்) பார்வையினாலும் கூண்டில் நிறுத்தப்பட்ட ஒருவரை குற்றவாளியா ? குற்றமற்றவரா ? அன்று அறியும் திறன் கிடையாது. உணர்ச்சி வேகத்தில், தனிப்பட்ட முடிவாக தான் சார்ந்திருக்கும் கொள்கை சார்பாக வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் தூக்குதண்டனை கொடுத்த மான்பு மிகுக்கள் இருக்கிறார்கள். (இராஜிவ் படுகொலையில் உயர்நீதிமன்ற தீர்ப்பு அப்படித்தான் இருந்தது) இவர்களையெல்லலம் இறைவனுக்கு சமமாக மதிக்க வழக்குறைஞர்கள் கடமைபட்டவர்களா ? 'நீதிபதி அவர்களே...' என்று எந்த 'கனமும்' இல்லாமல் அழைப்பது எந்த விதத்தில் தவறு ? 'மை லார்ட்' எல்லாம் தேவையா ?

Judge என்கிற ஆங்கில சொல்லின் பொருள் சீர்தூக்கிப் பார்த்தல் மட்டுமே, அதற்கு அடையாளமாக கண்களைக் கட்டிய பெண்ணின் கையில் துலாக்கோலைக் கொடுத்திருக்கிறார்கள், சீர்தூக்கிப் பார்பது என்பதன் பொருள் நீதி என்ற பொருளில் வராது. வாத எடை போடுபவர்களுக்கு 'நீதி' மான் என்ற பெயர் சொல் எந்த விதத்தில் பொருத்தம் என்றே தெரியவில்லை. எதுதான் நீதி ? மனசாட்சிப் படி நடப்பதே நீதி, ஆனால் வழக்குகள் மனசாட்சி இல்லாததால் அங்கே வருகிறது என்பதையும் நோக்க வேண்டும், கையூட்டு பெற்றவர்களும், அப்படி பெற்றுக் கொண்டு அப்துல் கலாமுக்கே கைது வாராண்டு ஓலை அனுப்பியவர்களையும் 'நீதி'மான் என்றே அழைக்கிறோம். இப்படி பொதுவான சொல் அந்த பணி செய்பவர்களுக்கு பொருத்தமானது தானா ? மக்கள் ஆட்சி தத்துவத்தில் யாரையும் தேவையற்று உயர்த்துவதோ, தாழ்த்துவதும் தவறுதான். உயர்சாதி ஆட்களே அந்த பதவியை பெரும்பாலும் வகித்ததால் தங்களை 'நீதி'மான்கள் என்று பிறர் அழைக்க வைக்க விரும்பி, ஏற்பாடு செய்து கொண்டது தான் 'நீதி'மான் என்ற அடைமொழி / தொழில் பெயர் சொல் என்று எண்ணத்தோன்றுகிறது. வேண்டுமென்றால் 'படித்த நாட்டாமைகள்' அல்லது 'நவீன நாட்டமைகள்' என்று வேண்டுமானல் சொல்லலாம். ஏனெனில் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசுகளுக்கும், அவர்களின் செயல்பாட்டுக்கும் யாரும் 'பிராது' கொடுக்காமல் அவர்களுக்கு எதிராக உத்தரவு பிறப்பிப்பவர்கள் அன்றோ.

கல்வி சொல்லி கொடுக்கும் ஆசிரியர்களுக்குக் கூட 'மை லார்ட்' மரியாதையை நாம் வழங்குவதில்லை என்பதை நினைவில் கொள்ளவும். தேவையின்றி கூழைக்கும்பிடு போடுவது தன்னைத்தானே தாழ்த்திக் கொள்வதாகும், அப்படி செய்யச் சொல்லி வழியுறுத்துவது ஆண்டை மனப்பாண்மையாகும். வழக்கறிஞர்களின் முடிவு வரவேற்கத்தக்கதே. மதிப்புடன் நடந்து கொள்பவர்களுக்கு மரியாதை தானாகவே கிடைக்கும். அதை படிப்பை பதவியை வைத்து மரியாதை செய்ய வழியுறுத்துவதும் / செய்வதும் களையப்பட வேண்டும்.

இனி நீதிபதிகளை யுவர் ஆனர் என கூப்பிட மாட்டோம்: வக்கீல்கள் (செய்தி வழி: தட்ஸ்தமிழ்)

நீதிபதிகள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களா ?

20 கருத்துகள்:

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

அனைத்து மனிதர்கள் மட்டுமின்றி, விலங்குகள், பறவைகள் எல்லாம் விமர்சனத்திற்கு உட்பட்டவைதாம். ஏன் இறைவன் என்று சொல்லப்படுகின்ற பொருளும் விமர்சனத்திற்குட்பட்டதுதான்!

வழக்கறிஞர்கள் இதைச் சொல்வதால் அவர்கள் அனைவரும் உத்தமர்கள் என்கிற கருத்து உடன்பாட்டிற்கு அப்பாற்ப்பட்டது.

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

நல்ல பதிவு கோவியார்.

ஆனா நீங்க வயசுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கறீங்க (வயசானவரு, சின்ன வயசுடைய அதிகாரிங்க போன்ற வரிகள் வருகின்றன). ஏன்... வயசுக்கும் மரியாதைக்கும் என்ன தொடர்பு? இது தேவையில்லை என்பது என் எண்ணம்.

# * # சங்கப்பலகை அறிவன் # * # சொன்னது…

மை லார்ட் அல்லது யுவர் ஹானர் என்பது போன்ற பழக்கங்கள்,நீங்கள் இப்போது மீண்டும் அங்கெல்லாம்(வெளிநாடுகளில் இப்படி மரியாதை அளிப்பது,சார் என்று விளிப்பது வழக்கமில்லை) இப்படி இல்லை என்கிறீர்களே,அந்த வெளி நாடுகளில் இருந்த வந்த வழக்கம்தான் ! இது ஒரு சுவாரசியமான முரண்தான் !

:))

இன்னும் சொல்லப் போனால் நீதி தவறியவன் மன்னனேயாயினும்,ஆண்டே என்றெல்லாம் அழைக்காமல்,தேறாமன்னா என்று முட்டாளே என விளித்தவள்தான் தமிழ்மகள் !

எனவே இந்தப் பழக்கங்கள் எல்லாம் இரவல் பழக்கங்கள்.நம்முடையவை அல்ல!

மற்றபடி நீதிமன்றங்களில் அப்படி அழைப்பது மரியாதை என்பதை விட நீதியை சொல்ல அமர்ந்திருக்கும் அந்த அமைப்புக்கு அளிக்கும் மரியாதையே என்று நான் நினைக்கிறேன்...வழக்குரைஞர்கள் அப்படி சொல்ல மாட்டோம் என்று முடிவெடுப்பது அவர்களுக்குள்ளான விதயம்.இன்னும் இன்றைய இந்த மரபுகளை மறுக்கும்,எதிர்க்கும் வழக்குரைஞர் நாளை நீதிபதியாகும் போது என்ன எதிர்பார்ப்பார்?

மற்ற வழக்குரைஞர்கள் இந்த விளிப்புச் சொற்களை அவருக்கு அளிக்க வில்லையென்றால் சாதாரணமாக எடுத்துக் கொள்வரா என்பது கேள்விக்குரியது.

ஆனால் இதையும் ஐயா என்றழைப்பதையும் நீங்கள் பொருத்திப் பார்ப்பதுதான் யோசிக்க வைக்கிறது.

இன்றும் கிராமங்களில் போய்ப் பாருங்கள்,பார்த்த உடன் ஐயா,நல்லா இருக்கீங்களா என்பதுதான் முதலில் வரும்.அது நமக்குக் கொடுக்கும் மரியாதையா என்ன???? நிச்சயம் அல்ல.அது அவர்களிடமிருந்து வெளிப்படும் அழகிய பண்பு...
இன்னும் ஐயா என்ற விளிச்சொல் மகன் தந்தையையும்,தாத்தா அல்லது பாட்டி பேரனையும் கூட விளிக்கப் பயன்படுகிறது..அவர்கள் எல்லாம் மரியாதை அளிக்கவா அப்படி விளிக்கிறார்கள்?????

யோசியுங்கள்..

காவல் நிலையத்தில் புழங்கும் சொல்லாடல்கள் எல்லாம் இந்தக் கணக்கில் வரக் கூடாது;அது நீங்கள் சுட்டியது போன்ற அடிமை மனோபாவத்தை வளர்த்தெடுக்கும் முயற்சியின் வெளிப்பாடே..

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜ்யோவ்ராம் சுந்தர் 3:43 PM, March 19, 2009
நல்ல பதிவு கோவியார்.

ஆனா நீங்க வயசுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கறீங்க (வயசானவரு, சின்ன வயசுடைய அதிகாரிங்க போன்ற வரிகள் வருகின்றன). ஏன்... வயசுக்கும் மரியாதைக்கும் என்ன தொடர்பு? இது தேவையில்லை என்பது என் எண்ணம்.
//

முன் பின் அறியாதவர்களை (வயது) அனுபவம் காரணாமாக அப்படி அழைக்கலாம், அவர் அதற்கு பொருந்தவில்லை என்றால் நிறுத்திக் கொள்ளலாம். :)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
அனைத்து மனிதர்கள் மட்டுமின்றி, விலங்குகள், பறவைகள் எல்லாம் விமர்சனத்திற்கு உட்பட்டவைதாம். ஏன் இறைவன் என்று சொல்லப்படுகின்ற பொருளும் விமர்சனத்திற்குட்பட்டதுதான்!//

அது.....!

//வழக்கறிஞர்கள் இதைச் சொல்வதால் அவர்கள் அனைவரும் உத்தமர்கள் என்கிற கருத்து உடன்பாட்டிற்கு அப்பாற்ப்பட்டது.
//

வழக்கறிஞரின் செயல்பாடு குறித்து நான் இங்கே எதுவும் சொல்லவில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//அறிவன்#11802717200764379909 said...
மை லார்ட் அல்லது யுவர் ஹானர் என்பது போன்ற பழக்கங்கள்,நீங்கள் இப்போது மீண்டும் அங்கெல்லாம்(வெளிநாடுகளில் இப்படி மரியாதை அளிப்பது,சார் என்று விளிப்பது வழக்கமில்லை) இப்படி இல்லை என்கிறீர்களே,அந்த வெளி நாடுகளில் இருந்த வந்த வழக்கம்தான் ! இது ஒரு சுவாரசியமான முரண்தான் !

:))
//

அறிவன் சார், :)

வெளிநாட்டு வழக்கம் தான், ஆனால் அவர்களும் திருத்திக் கொண்டுள்ளார்கள், பெயர் சொற்களில் ஆண்/பெண் பால் வரக்கூடாது, பேதம் வளர்க்கக் கூடாது என்பதற்காக பிரிட்டனில் முன்மொழியப்பட்டதாக நேற்று எங்கோ படித்தேன்.

//இன்னும் சொல்லப் போனால் நீதி தவறியவன் மன்னனேயாயினும்,ஆண்டே என்றெல்லாம் அழைக்காமல்,தேறாமன்னா என்று முட்டாளே என விளித்தவள்தான் தமிழ்மகள் !//

சரியான எடுத்துக்காட்டு, நன்றி !

//எனவே இந்தப் பழக்கங்கள் எல்லாம் இரவல் பழக்கங்கள்.நம்முடையவை அல்ல!
//

இரவல் பழக்கம் நாகரீகம் என்ற பெயரில் ஏற்றுக் கொள்ளப்பட்டதால் விடுவதற்கு மிகவும் யோசிக்கிறார்களோ. சித்தப்பாவை 'அங்கிள்' என்று இன்னும் கூப்பிட ஆரம்பிக்கவில்லை அதற்கு மகிழ்வோம் :)

//மற்றபடி நீதிமன்றங்களில் அப்படி அழைப்பது மரியாதை என்பதை விட நீதியை சொல்ல அமர்ந்திருக்கும் அந்த அமைப்புக்கு அளிக்கும் மரியாதையே என்று நான் நினைக்கிறேன்...//

ஆசிரியர்களுக்கும், மருத்துவர்களுக்குமே கொடுக்காத இறைவனுக்கு ஒப்பான மரியாதையை நீதிபதிகள் அமைப்புக் கொடுத்தது ஒரு தவறான செயலாகவே எனக்கு படுகிறது


//வழக்குரைஞர்கள் அப்படி சொல்ல மாட்டோம் என்று முடிவெடுப்பது அவர்களுக்குள்ளான விதயம்.இன்னும் இன்றைய இந்த மரபுகளை மறுக்கும்,எதிர்க்கும் வழக்குரைஞர் நாளை நீதிபதியாகும் போது என்ன எதிர்பார்ப்பார்? மற்ற வழக்குரைஞர்கள் இந்த விளிப்புச் சொற்களை அவருக்கு அளிக்க வில்லையென்றால் சாதாரணமாக எடுத்துக் கொள்வரா என்பது கேள்விக்குரியது. //

அப்படி எதிர்பார்பவர்களுக்கு அவர்களின் முந்தைய செயல்பாட்டை நினைவு படுத்த வேண்டும்

//இன்றும் கிராமங்களில் போய்ப் பாருங்கள்,பார்த்த உடன் ஐயா,நல்லா இருக்கீங்களா என்பதுதான் முதலில் வரும்.அது நமக்குக் கொடுக்கும் மரியாதையா என்ன???? நிச்சயம் அல்ல.அது அவர்களிடமிருந்து வெளிப்படும் அழகிய பண்பு...
இன்னும் ஐயா என்ற விளிச்சொல் மகன் தந்தையையும்,தாத்தா அல்லது பாட்டி பேரனையும் கூட விளிக்கப் பயன்படுகிறது..அவர்கள் எல்லாம் மரியாதை அளிக்கவா அப்படி விளிக்கிறார்கள்?????//

ஆமாங்க சரிதான். மரியாதைகள் கேட்டு அல்லது கட்டாயத்தில் பெறப்படுவது அல்ல என்றே சொல்லி இருக்கிறேன். எதிரே ஐயான்னு கூப்பிட்டுவிட்டு, வெளியே 'அவன்' என்று சொல்வதும் தேவையற்றது தானே. கட்டாயத்தில் வருவது முகஸ்துதிக்கு மட்டுமே பயன்படும், தேவையற்றது என்ற பொருளில் தான் சொல்லி இருக்கிறேன்

//காவல் நிலையத்தில் புழங்கும் சொல்லாடல்கள் எல்லாம் இந்தக் கணக்கில் வரக் கூடாது;அது நீங்கள் சுட்டியது போன்ற அடிமை மனோபாவத்தை வளர்த்தெடுக்கும் முயற்சியின் வெளிப்பாடே..//

நன்றி !

Rajaraman சொன்னது…

\\காவல் நிலையத்தில் புழங்கும் சொல்லாடல்கள் எல்லாம் இந்தக் கணக்கில் வரக் கூடாது;அது நீங்கள் சுட்டியது போன்ற அடிமை மனோபாவத்தை வளர்த்தெடுக்கும் முயற்சியின் வெளிப்பாடே..//

இதை விடுங்க நம்ம மருத்துவர் ஐயா, சின்ன ஐயா இந்த விளிப்பு வெங்காயதைஎல்லாம் எங்கே பொய் சொல்லி முட்டிக்கொள்வது..

மாண்புமிகு பொதுஜனம் சொன்னது…

//...பெயரைச் சொல்வது இழிவானதா ? அல்லது இழிவான பெயரைத்தான் யாரும் வைத்திருக்கிறார்களா ?...//

மாண்புமிகு தமிழக முதல்வர் திரு கருணாநிதி என்று அழைக்காமல்,''முத்தமிழ் அறிஞர்,கலைத் தாயின் வித்தகர்,செம்மொழிச் செம்மல்,அஞ்சுகத்தாயின் அருந்தவப் புதல்வன்,அப்புறம் என்ன....ங்!ஞாபகம் வந்துருச்சு.டாக்டர்,கலைஞர் என்று மட்டுமே விளிக்கிறார்கள்.ஜெயலலிதாவையும் இப்படித்தான்,''(முதலமைச்சராக இல்லாவிட்டாலும் கூட)மாண்புமிகு புரட்சித்தலைவி,எங்கள் இதய தெய்வம்,அம்மா(வாம்) என்றே அழைக்கிறார்கள்.
ஒருமுறை சட்டமன்றத்தில் இவ்வாறு பெயர் சொல்லி விளித்ததால் திமுக,அதிமுக உறுப்பினர்களுக்கிடையே காரசாரமான விவாதம் அரங்கேறியது நினைவிருக்கலாம்.

பதி சொன்னது…

நல்ல கருத்துக்கள்....

//படித்தவர்களுக்கு இடையேயும் ஆண்டை / அடிமைத்தனத்தை போற்றி வளர்ப்பது தான் ஒருவரின் பதவியை வைத்து அவரை கட்டாயமாக மதிப்பு (மரியாதை) மிகுதியுடன் அழைக்கும் முறை//

மிகச் சரி....

//படிப்பு என்பது வேலைக்கான தகுதியைக் கொடுப்பது மட்டும் தான், அது மரியாதையை தீர்மாணிக்கும் ஒன்று அல்ல.//

படிப்பிற்கும் வேலைக்கும் கூட சம்பந்தம் இல்லாமல் போய்விட்டது இப்பொழுது...

//30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் அரசு அலுவலகங்களில் கூட வயது குறைந்தவர்களை பதவியின் காரணமாக வயது மிக்கவர்கள் மிக மரியாதையுடன் அழைக்கும் நிலை இன்றும் இருக்கிறது//

இந்த நிலையை சில தனியார் கம்பெனிகளிலும் நான் நேரடியாக கண்டுள்ளேன்..

ஆண்டை மனப்பான்மைகள் ஒவ்வொரு துறையிலும் மாறும் காலத்திற்கு முயற்சிப்போம்....

கோவி.கண்ணன் சொன்னது…

// Rajaraman said...
\\காவல் நிலையத்தில் புழங்கும் சொல்லாடல்கள் எல்லாம் இந்தக் கணக்கில் வரக் கூடாது;அது நீங்கள் சுட்டியது போன்ற அடிமை மனோபாவத்தை வளர்த்தெடுக்கும் முயற்சியின் வெளிப்பாடே..//

இதை விடுங்க நம்ம மருத்துவர் ஐயா, சின்ன ஐயா இந்த விளிப்பு வெங்காயதை எல்லாம் எங்கே பொய் சொல்லி முட்டிக்கொள்வது..
//

நான் அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை, அரசியல் தலைவன், தலைமை, தொண்டன் என்று அவர்களாகவே கட்டமைத்துக் கொண்ட ஒன்று, பிறக் கட்சிக்காரர்கள் ஐயா ன்னு சொல்லமாட்டாங்க. குறிப்பாக எதிர்கட்சிக்காரர்கள் சரியா ?
:))

அப்படிப் பார்த்தால் ஸ்ரீஸ்ரீஸ்ரீ பட்டம் லோக குரு இவையெல்லாம் பேசிக் கொண்டே செல்லலாம். நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//மாண்புமிகு பொதுஜனம் said...
//...பெயரைச் சொல்வது இழிவானதா ? அல்லது இழிவான பெயரைத்தான் யாரும் வைத்திருக்கிறார்களா ?...//

மாண்புமிகு தமிழக முதல்வர் திரு கருணாநிதி என்று அழைக்காமல்,''முத்தமிழ் அறிஞர்,கலைத் தாயின் வித்தகர்,செம்மொழிச் செம்மல்,அஞ்சுகத்தாயின் அருந்தவப் புதல்வன்,அப்புறம் என்ன....ங்!ஞாபகம் வந்துருச்சு.டாக்டர்,கலைஞர் என்று மட்டுமே விளிக்கிறார்கள்.ஜெயலலிதாவையும் இப்படித்தான்,''(முதலமைச்சராக இல்லாவிட்டாலும் கூட)மாண்புமிகு புரட்சித்தலைவி,எங்கள் இதய தெய்வம்,அம்மா(வாம்) என்றே அழைக்கிறார்கள்.
ஒருமுறை சட்டமன்றத்தில் இவ்வாறு பெயர் சொல்லி விளித்ததால் திமுக,அதிமுக உறுப்பினர்களுக்கிடையே காரசாரமான விவாதம் அரங்கேறியது நினைவிருக்கலாம்.
//

அரசியல் கட்சிகள் சார்பில் அல்லாது, பிற அமைப்பினர் சேவையைப் பாராட்டி வழங்கப்படும் பட்டம் போற்றத்தக்கது தான். அதுக்காக டாக்டர் விஜய் ன்னு போஸ்டரில் போடுவதை எல்லாம் என்ன சொல்வது. விருப்பமானவர்கள் தான் அந்த பட்டத்தைச் சொல்லி அழைக்கிறார்கள், 'அம்மா' என்றே ஜெ வை எழுதுவோர் அனைவருமே எழுதுவர். ஆனாலும் அந்த 'அம்மா' கிண்டலுக்காக எழுதும் 'சும்மா' தானே. கருணாநிதியை சோ வகையறா செய்தி இதழ்கள் 'கலைஞர்' என்று எழுதுவதில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

பதி,

ஒத்தக் கருத்துக்கு மிக்க நன்றி !

Rajaraman சொன்னது…

\\கருணாநிதியை சோ வகையறா செய்தி இதழ்கள் 'கலைஞர்' என்று எழுதுவதில்லை.//

அவர் பெயர் கருணாநிதிதானே. அதுவும், தனக்குத்தானே வைத்துக்கொண்டதுதானே. அப்புறம் கருணாநிதி என்று அழைத்தால் என்ன. அவரை சேர்ந்த கும்பலே அவரை அப்படி அழைப்பது ஏதோ கெட்ட வார்த்தையால் அழைப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கிவிட்டார்கள்.

இப்படி சொந்த பெயரை விட்டுவிட்டு பட்ட பெயரால் தன்னைத்தானே விளித்துக்கொள்வது, பிறரைவிட்டு அப்படி செய்வது திராவிட எச்சங்களின் மிச்சம்.

அடுத்து நீங்கள் குறிப்பிடும் சோ எப்போதுமே அவரை கலைஞர் என்றே குறிப்பிடுவதை கவனித்திருக்கிறேன்.

ஆ.ஞானசேகரன் சொன்னது…

சரியான கூற்று.... மாற்றங்கள் எதிர்பார்க்கபடுகின்றது...

அமர பாரதி சொன்னது…

நீதிபதி என்பது கூட பரவாயில்லை. இப்போதெல்லாம் நீதியரசர் என்றே விளிக்கிறார்கள். புகழ் பாடுவதற்கு என்னென்ன வழி உண்டோ அனைத்தும் செய்கிறார்கள்.

இதை விடுங்கள். சந்திரயான் விஞ்ஞானி ஊர் ஊராகப் போய் எல்லா பேப்பர்களிலும் போட்டோ போட்டுக்கொண்டிருக்கிறார். வாங்கிய சம்பளத்துக்கு வேலை செய்ததை இவ்வளவு பெருமையாக சொல்லுகிறார்கள்.

பதி சொன்னது…

//இதை விடுங்கள். சந்திரயான் விஞ்ஞானி ஊர் ஊராகப் போய் எல்லா பேப்பர்களிலும் போட்டோ போட்டுக்கொண்டிருக்கிறார். வாங்கிய சம்பளத்துக்கு வேலை செய்ததை இவ்வளவு பெருமையாக சொல்லுகிறார்கள்.//

இது போலி தேசியம் பரப்பும் ஊடகங்கள் (தினமலம் போன்றவை) கண்டுபிடித்துள்ள அடுத்த இம்சை... ரொம்ப நாளுக்கு பிறகு ஊர் பக்கம் போய், என்ன வேலை செய்யுறேன்னு கேட்கும் சொந்தங்களிடம் ஆராய்ச்சி செய்யுறேன்னு சொல்லவே பயமா இருக்கு.. :(

அது சரி சொன்னது…

நாட்டம, தீர்ப்ப மாத்தி சொல்லுன்னு இந்தியாவுல சாத்தியமா என்னன்னு தெரில...ஆனா தீர்ப்ப மாத்தி சொல்லுன்னு பாகிஸ்தான் கவர்மென்ட் அவங்க சுப்ரீம் கோர்ட்ட கேட்ருக்காம்..

அது சரி சொன்னது…

//
ஜோதிபாரதி said...

வழக்கறிஞர்கள் இதைச் சொல்வதால் அவர்கள் அனைவரும் உத்தமர்கள் என்கிற கருத்து உடன்பாட்டிற்கு அப்பாற்ப்பட்டது.

3:38 PM, March 19, 2009
//

இது முற்றிலும் சரியானது....திருடர்களில் நூறு சதவீதம் திருடர்கள் என்றால்...வழக்கு உரைப்பவர்களில் (அறிஞர் என்ற வார்த்தையை வழக்குரைப்பவர்களுக்கு பயன்படுத்த முடியாது) பலரும் அதே விதமே....

கட்டம் போட்ட சட்டை போட்டா ரவுடி...காக்கி சட்டை போட்டா போலீஸ்...கறுப்பு சட்டை போட்டா வக்கீல்....

சட்டை தவிர பெரிய வித்தியாசங்கள் இல்லை!!!

புருனோ Bruno சொன்னது…

//30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் அரசு அலுவலகங்களில் கூட வயது குறைந்தவர்களை பதவியின் காரணமாக வயது மிக்கவர்கள் மிக மரியாதையுடன் அழைக்கும் நிலை இன்றும் இருக்கிறது. இதன் காரணமாகவே ஒரே அலுவலகத்தில் இருந்தாலும் ஒருவருகொருவர் இயல்பாக பழகவும் வாய்ப்பில்லாமல் இருக்கிறது//

இது குறித்த என் கருத்து http://www.payanangal.in/2008/10/03.html

புருனோ Bruno சொன்னது…

//இதை விடுங்கள். சந்திரயான் விஞ்ஞானி ஊர் ஊராகப் போய் எல்லா பேப்பர்களிலும் போட்டோ போட்டுக்கொண்டிருக்கிறார். வாங்கிய சம்பளத்துக்கு வேலை செய்ததை இவ்வளவு பெருமையாக சொல்லுகிறார்கள்.//

மன்னிக்கவும்.

இதே வேலையை அவர் தனியார் துறையிலோ அல்லது வெளிநாட்டிலோ செய்திருந்தால் அவருக்கு எவ்வளவு சம்பளம் கிடைத்திருக்கும் என்று நினைத்து பாருங்கள்.

ஒரு வேளை சந்திராயன் தோல்வி அடைந்திருந்தால் அத்தனை ஊடகங்களும் எப்படி எழுதியிருப்பார்கள் (வரிப்பணத்தில் உல்லாசம் !!!) என்பதையும் நினைத்து பார்க்க வேண்டும்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்