பின்பற்றுபவர்கள்

22 மார்ச், 2009

படைப்புக் கொள்கை ...1

மனித அறிவு வளர்ச்சியே இறைவனின் சக்தியை முடிவு செய்யும் ஒன்றாக இருக்கிறது என்று சொன்னால் நம்புவதற்குக் கடினம் தானே ? ஆனால் அதுதான் உண்மை. எப்படி ? பழங்காலத்து இறைவனின் செயலாக பிள்ளைவரம் கொடுப்பது, பூமியை தோன்றவைத்தது, உயிரினங்களைப் படைத்தது என்பதாகத்தான் இருந்தது. ஏனென்றால் இவற்றிற்கான காரணம் தெரியாததால் இவை அனைத்தும் இறைவனின் செயல் என்று நம்பினார்கள். இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்றவாறு இறைவனின் சக்தியையும் மனித வளர்த்திருக்கிறான். அறிவியலின் வியப்புகளை அனைத்துமே இறைச் செயலாக பொருத்திப் பார்த்து மகிழ்ச்சியடைகிறார்கள். வேத புத்தகங்கள் எதுவாக இருந்தாலும் அவற்றிற்கு விளக்கம் அறிவியல் துணையுடன் மாற்றி எழுதப்படுகிறது. தசவதாரங்கள் அனைத்தும் பரிணாமக் கொள்கையை நிரூபனம் செய்வதாக அமைந்திருக்கிறது, மனிதன் விலங்கில் இருந்தே தோன்றினான் என்னும் பரிணாமத்தை தசவாதாரமும் சொல்கிறது. எனவே முன்னோர்கள் எதையும் மனம் போன போக்கில் சொல்லவில்லை, அதன் மறைபொருள் தற்பொழுதுதான் நமக்குத் தெரியவருகிறது என்றெல்லாம் சொல்கிறார்கள். ஏனென்றால் அறிவியலில் சொல்லப்படும் காரண செயல்பாடுகளைப் போன்று ஆன்மிகத்திற்கும் கட்டமைக்காவிடில் இறை நம்பிக்கையை குறிப்பாக மதங்களை மனிதன் துறந்துவிடுவான் என்கிற அடிப்படை பயமே காரணம்.

படைப்பு வியப்பு என்பதாக ஆன்மிகவாதிகளோ/ மதவாதிகளோ எழுதும் போது கேள்விகேட்காமல் இருக்க முடியவில்லை. இறைவன் மனிதனையும் ஏனைய உயிரனங்களையும் படைத்தான் என்றால் எந்த இனத்தைச் சேர்ந்த மனிதனைப் படைத்தான் என்றே கேட்கத் தோன்றுகிறது. ஆதாம் ஏவாள் ஒரு யூதன் என்பதாக கிறித்துவமதமும், அதன் பிறகு ஏற்பட்ட இஸ்லாம் மதமும் ஏற்றுக் கொள்ளும் ஏனெனில் இரண்டுமே ஒரே பகுதியில் இருந்து வந்தவையே. இதுபோல் ஏற்புக் கொள்கைகள் மதங்கள் தோன்றுமிடத்தில் அமையபெற்றிருக்கும் வட்டாரக் கதைகளை உள்ளடக்கியதாக இருக்கும், இந்திய சமயங்களிலும், பெளத்தம், சமணம் ஆகியவற்றி ஆகியவற்றிற்கான பொது நம்பிக்கையாக மறுபிறவிக் கொள்கைகள் உண்டு. மறுபிறப்பு ஏற்காத இந்திய மதங்கள் எதுவும் இல்லை. அதுபோன்று தான் உலகின் முதல் மகனாக ஆதாம் என்பதை கிறித்துவமும் இஸ்லாமும் பொது நம்பிக்கையாக வைத்திருக்கின்றன. ஆதாம் ஒரு யூதனாகவே வைத்துக் கொண்டாலும் உலகில் உள்ள மற்ற ஐந்து மனித இன மக்கள் (ஆப்ரிக்க, மங்கோலிய, இந்திய,மலாய் இனங்கள்) எங்கிருந்து உருவானார்கள் ? ஏனெனில் ஐரோப்பிய யூதர்களின் உடல் அமைப்பிற்கும் பிற இன உடலமைப்பிற்கும் அல்லது இவற்றின் ஒவ்வொன்றினிடையே, நிறம், மூக்கு, கண் மணியின் நிறம், தலை முடி, முக அமைப்பு ஆகியவற்றில் பெரிய வேறுபாடுகளே உண்டு. ஆதாமாக ஒரு ஆப்ரிக்கனை ஏன் படைக்கவில்லை என்றெல்லாம் நான் கேட்கவில்லை. ஐரோப்பியரிலிருந்து ஆப்பிரிக்க இன மக்கள் உருவாகி இருக்க முடியுமா என்பதே கேள்வி.

மனிதன் மட்டுமே அப்படி இல்லாமல், உயிரனங்களிலும் அதே போன்று ஒரே உருவ அமைப்புடன் பல்வேறு தோற்றங்களிலும் உயிரினங்கள் அனைத்துதிலுமே உண்டு ஆப்ரிக்க யானனகள், ஆசிய யானைகள், கரடிவகைகள், மாடுகள், ஆடுகள், மீன் வகைகளில் மட்டுமே 25,000 இருக்கிறதாம். இதில் எந்த ஒரு வகை மீனைப் படைக்கப்பட்டது ? கோழியைப் படைத்தானா ? முடையைப் படைத்தானா ? என்ற கேள்விக்கு விடை வராது, சேவல் கோழி இரண்டையும் அல்லது முட்டையும் அதன் மீது ஏறி அடைகாக்க கோழியும் படைத்தானா ? மதங்கள் காட்டும் படைப்புக் கொள்கைகள் எல்லாம் அறிவுக்கும், அறிவியலுக்கும் பொருந்தா ஒன்று. விளக்கம் என்று (எதையோ) சொல்லுவார்கள், அப்படியே ஏற்றுக் கொள்வது தான் அறிவுடைமை என்பார்கள். அறிவியல் வளர்ச்சியுடன் செல்லக் கூடிய கட்டாயத்தில் இருப்பதால் மதங்களில் அறிவியல் பேசப்படுவதாக மதவாதிகள் பரப்பி வருகின்றனர். ஆனால் அவ்வாரு செய்வது பரவலாக நிராகரிக்கப் பட்டுவருகிறது.

***

பிரபஞ்சமும் அதில் இருக்கும் அனைத்துமே ஒன்றில் ஒன்று பின்னப்பட்ட இயற்கைச் செயல்பாடுகளே நிறைந்துள்ளது, ஈர்ப்பு விசையால் தன்னைத் தானே சுற்றும் பூமி, சூரிய வட்டப்பாதையிலும் அதன் ஈர்ப்பில் இருப்பதால் சூரியனை சுற்றிவருகிறது, சூரியன் பால்வெளித் திரளின் ஈர்ப்பில் சுழலுகிறது, மொத்த பால்வெளித் திரளும் தன்னிச்சையாக சுழலுகிறது, இதைத் தவிர வேறெதும் புறத்தூண்டுதல் எதுவுமின்றி இவைகள் ஒழுங்கு அல்லது ஒழுங்கற்ற முறையில் இயங்குகின்றன. ஒழுங்கானது ஒழுங்கு என்பது நட்சத்திர மோதல், மோதலின்மை என்பதற்காகச் சொல்கிறேன். மற்றபடி ஒழுங்கோ, ஒழுங்கற்ற தன்மையோ அவற்றின் சுழற்சி காலத்தை வைத்து நாமே கற்பனை செய்வது தான். பூமியின் முந்தைய ஒரு ஆண்டு காலம் 367 நாட்கள் கூட இருந்திருக்கலாம், வரலாற்று காலத்துடன் பார்க்கும் போது 365.5 நாட்கள் என்பதாக அறியப்பட்டு இருக்கிறது. வரலாறு எழுதப்படாக் காலத்தில் என்ன நடந்தது என்று எவருக்குமே தெரியாது. மொத்த பிரபஞ்ச இயக்கமும் பின்னப்பட்ட சுழற்சியே. அவற்றில் பூமியில் இருக்கும் வெகு சில இயக்கங்களில் மட்டுமே காரண காரியங்களாக செயல்களை பிரித்து அறிந்திருக்கிறோம். அவையே அறிவியல் என்றும் 'கண்டுபிடிப்புகள்' என்றும் சொல்லப்படுகிறது.

கண்டுபிடிப்பு என்று மட்டுமே அறிவியலாலும் சொல்ல முடியும். உருவாக்கம் என்று சொல்லிவிட முடியாது. மூலப் பொருளின்றி எதையும் உருவாக்க முடியாது என்பதே தற்போதைய அறிவியலின் நிலை. நமது அறிவியல் வளர்ச்சியை வைத்து முழு பிரபஞ்ச இயக்கத்தையும், அதில் உள்ள உயிரினங்கள், திடப்பொருள்கள், அவற்றின் இயக்கம், ஏன் எதற்கு எப்படி என்றெல்லாம் முற்றிலுமே அறிந்து கொள்ளவே முடியாது. ஏனெனில் அறிவியல் என்பது புலன்களின் நீட்சி மட்டுமே. முழு பிரபஞ்ச இயக்கத்தின் காரண காரியங்கள் அனைத்துமே அறிவியல் துணை கொண்டு அறிய முடியும் என்று நினைப்பது மனிதனின் பேராசையாக மட்டுமே இருக்கும், இயக்கம் அனைத்தும் இறைச் செயலாக நினைத்து ஆன்மிகவாதிகள் மன நிறைவு அடைந்து கொள்கிறார்கள். அறிவியலோ ஆன்மிகமோ பிரபஞ்ச இயக்கம் பற்றிய முழு அறிவையும் ஒரு நாளும் பெற முடியாது, ஏனெனின் அறிவியலும், ஆன்மிகமும் முறையே மனித அறிவின், கற்பனையின் நீட்சி மட்டுமே. இவை இயற்கையில் பொதிந்துள்ள பேருண்மைகளை ஒப்பிடும் போது மனிதன் கண்டு கொண்டது மிக மிக சொற்பமே. பிரபஞ்சம் தோன்றுவதற்கு பெருவெடிப்பு காரணமென்று அறிவியல் சொன்னாலும், அந்த பெருவெடிப்பு நிகழ்வதற்கு என்ன காரணம், ஏன் அவ்வாறு நடக்கிறது என்பதை அறிவியல் முற்றிலுமாக தொட்டுவிடவே முடியாது, அதே போன்று படைப்புகள் அனைத்துமே இறைவன் காரணம் என்று ஆன்மிகவாதிகள் சொல்லுவர், ஏன் இறைவன் இவ்வாறு நடந்து கொள்கிறான் என்று கேட்டால், எல்லாம் அவன் விளையாட்டு என்றே முடித்துக் கொள்வர். ஆன்மிகத்திலும் அதற்கு மேல் காரணங்கள் கிடையாது.

மீண்டும் காலம் வாய்க்கும் போது தொடர்கிறேன்....

20 கருத்துகள்:

சம்பத் சொன்னது…

மிகவும் அருமையான அலசல்கள்...இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்கிறேன்...தொடர்க உங்கள் பணி..

SUREஷ்(பழனியிலிருந்து) சொன்னது…

//ஆதாம் ஏவாள் ஒரு யூதன் என்பதாக கிறித்துவமதமும், அதன் பிறகு ஏற்பட்ட இஸ்லாம் மதமும் ஏற்றுக் கொள்ளும் ஏனெனில் இரண்டுமே ஒரே பகுதியில் இருந்து வந்தவையே.//


அடக் கடவுளே

SUREஷ்(பழனியிலிருந்து) சொன்னது…

//ஐரோப்பியரிலிருந்து ஆப்பிரிக்க இன மக்கள் உருவாகி இருக்க முடியுமா என்பதே கேள்வி.//


வாங்க சார்.. வாங்க

Unknown சொன்னது…

//ஆதாம் ஏவாள் ஒரு யூதன் என்பதாக கிறித்துவமதமும், அதன் பிறகு ஏற்பட்ட இஸ்லாம் மதமும் ஏற்றுக் கொள்ளும் ஏனெனில் இரண்டுமே ஒரே பகுதியில் இருந்து வந்தவையே//
இதை யாராவது முஸ்லீம்களிடம் அல்லது இஸ்லாமிய புத்தகத்திலிருந்து பெற்றீர்களா?இதே தவறென்கிறபோது அதிலிருந்து பெறப்படுகின்றவைகளைப் பற்றி....

மாண்புமிகு பொதுஜனம் சொன்னது…

...//ஐரோப்பியரிலிருந்து ஆப்பிரிக்க இன மக்கள் உருவாகி இருக்க முடியுமா என்பதே கேள்வி....//

ஏன் உருவாகி இருக்க முடியாது?

1996இல் உசிலம்பட்டித் தேவர் கல்லூரியில் மரபணு மற்றும் காசநோய் ஆய்வை மேற்கொண்ட மதுரைக் காமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியர் மரமணுப் பிச்சையப்பன், உசிலம்பட்டி மாணவர் விருமாண்டியின் உடலில் தொன்மையான எம்.130 என்ற மரபணு இருப்பதை மதுரைப் பல்கலைக்கழக வலைப்புலத்தில் வெளியிட்டார். ஆப்பிரிக்காவிலும் ஆத்திரேலியாவிலும் மனித இனத்தின் மரபணு ஆராய்ச்சியில் தீவிர மாயிருந்த ஸ்பென்சர் வெல்சு இந்த வலைப்புல முடிவைப் பார்த்ததும் உற்சாகம் கொண்டார். முதல் மனிதன் ஆப்பரிக்காவில் தான் தோன்றினானன் அங்கிருந்து தான் மற்றப் பகுதிகளுக்கு. சுமார் 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இடம் பெயர்ந்தான் என்பது ஆராய்ச்சியாளர்கள் முடிவு.


ஆப்பிரிக்க மனித இனத்தின் மரபணு உசிலம்பட்டியில் ஒரு தமிழனுக்கு இருப்பதைக் கண்ட டாக்டர் ஸ்பென்சர் வெல்சு, உடனே புறப்பட்டுத் தமிழகம் வந்தார். "உசிலம்பட்டிப் பகுதியில் பல கிராமங்களிலும் எங்களோடு சேர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டார். சோதிமாணிக்கம் கிராமத்தில் 15 குடும்பங்களில் ஆய்வுசெய்தோம். எல்லாரும் விருமாண்டியின் சொந்தக்காரார்கள்தான். அவர்கள் உடம்பிலும் ஆப்பிரிக்க ஆதிமனிதனின் உடம்பிலுள்ள எம் 130 வகை மரபணு. விருமாண்டி உடம்பிலும் உறவினர்கள் உடம்பிலும் உள்ள மரபணுபின் மூலம் முதல் மனித இனம் இந்தியாவில், அதுவும் தமிழகத்தின் தென்பகுதியில் இன்னும் நிலைத்து வாழ்ந்து கொண்டிருப்பது உறுதியாகி விட்டது” என்கிறார் மரபணுப் பேராசிரியர் பிச்சையப்பன். பேராசிரியர் பிச்சையப்பன் தனது ஆராய்ச்சியை தொடர்வதற்காகச் சுமார் 6 கோடி ரூபாய் நிதியை டாக்டர் ஸ்பென்சர் வெல்சு அளித்திருக்கிறார்.

வரும் சூன் மாதம், இங்கிலாந்திலுள்ள ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் நடக்கவிருக்கும், உலக மரபணு ஆராய்ச்சியாளர்கள் மாநாட்டில், மனித இனத்தின் முதல் குடும்பங்களில் ஒன்று தமிழ்நாட்டில் சோதிமாணிக்கம் என்ற கிராமத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் செய்தியை அனைவருமறிய அறிவிக்க இருக்கிறார்கள்.


விரிவான தகவல்களுக்குப் பார்க்கவும்
http://groups.google.com/group/minTamil/msg/0c4453d38e3c524e;
http://www.thamizhkkaaval.net/0708/the_seithi.html
http://thamizhthottam.blogspot.com/2008/08/blog-post_14.html


நான் வலை உலகிற்குப் புதியவன்.உங்கள் அளவுக்கு என்னால் எழுத முடியவில்லை.அவ்வப்போது பார்த்த கேட்ட அறிந்த விபரங்களை வைத்துக் கேட்கிறேன்.
எனது ஐயங்களையும் போக்குங்கள்.

நிஜமா நல்லவன் சொன்னது…

/மீண்டும் காலம் வாய்க்கும் போது தொடர்கிறேன்..../


காலம் உங்களிடம் தானே இருக்கிறது....(உங்கள் வலைப்பூவை சொன்னேன்)

கோவி.கண்ணன் சொன்னது…

//சுல்தான் said...
//ஆதாம் ஏவாள் ஒரு யூதன் என்பதாக கிறித்துவமதமும், அதன் பிறகு ஏற்பட்ட இஸ்லாம் மதமும் ஏற்றுக் கொள்ளும் ஏனெனில் இரண்டுமே ஒரே பகுதியில் இருந்து வந்தவையே//

இதை யாராவது முஸ்லீம்களிடம் அல்லது இஸ்லாமிய புத்தகத்திலிருந்து பெற்றீர்களா?இதே தவறென்கிறபோது அதிலிருந்து பெறப்படுகின்றவைகளைப் பற்றி....
//

சுல்தான் ஐயா,

அடிப்படை தவறென்றால் என்ன ? ஏசு (ஈஸா நபி) இஸ்லாமைச் சேர்ந்தவர் என்பீர்கள் இஸ்லாமியர்கள், ஆனால் அதை ஒரு கிறித்துவன் ஏற்றுக் கொள்ளவேண்டுமே. இஸ்லாமியர்களைப் பொறுத்து கிறித்துவம் என்பது பழைய இஸ்லாமியக் கொள்கை. ஆனால் இவற்றையெல்லாம் இஸ்லாமைச் சாராதவர்கள் ஏற்றுக் கொள்ள எந்த தேவையும் இல்லை என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.

பொதுவாக தத்துவம் சார்ந்தவற்றை எழுதும் போது அதுபற்றிய இஸ்லாமியர்களின் கருத்துக்களை ஒரே மாதிரி தான் இருக்கும் என்பது அனைவருமே அறிந்தது.

கோவி.கண்ணன் சொன்னது…

// மாண்புமிகு பொதுஜனம் said...
...//ஐரோப்பியரிலிருந்து ஆப்பிரிக்க இன மக்கள் உருவாகி இருக்க முடியுமா என்பதே கேள்வி....//

ஏன் உருவாகி இருக்க முடியாது?

1996இல் உசிலம்பட்டித் தேவர் கல்லூரியில் மரபணு மற்றும் காசநோய் ஆய்வை மேற்கொண்ட மதுரைக் காமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியர் ...
//

எல்லாவற்றையும் வரலாறு முழுதாகவே நினைத்துக் கொண்டுள்ளோம், அது எந்த அளவுக்குச் சரி, ஆராய்ச்சியாளர்கள் அவர்களது ஆராய்ச்சியில் சொந்த கருத்தின்றி எதையும் சொல்வதில்லை. பொதுவாக வரலாறுகளில் 50 விழுக்காட்டிற்கும் மேல் ஊகங்கள் தான். கண்டங்கள் பிரிந்திடாத போது வணிக நிமித்தமாக பல்வேறு இனமக்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தங்கி வணிகம் செய்வது இன்றும் நடைமுறையில் இருக்கிறது, அப்படி செய்பவர்களில் அங்கேயே தங்கிவிடுபவர்களும் உண்டு. உலகில் கலப்பினங்கள் அவ்வாறுதான் உருவாயின. இதில் ஒரு குடும்பத்தை கண்டுபிடித்துவிட்டு, அந்த நாட்டு மக்கள் அனைவருமே அதே போன்றவர்கள் என்று ஊகமாகச் சொல்வது தான் ஆராய்ச்சிகள். அறிவியல் ஏற்றுக் கொள்ளூம் வகையில் எழுதப்படுவதால் அவை ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்பதே சரி, அவை உண்மை என்பதற்கு எவரும் உத்திரவாதம் கொடுப்பது இல்லை.

பரிணாமக் கொள்கையே உறுதியானது என்று எந்த ஒரு அறிவியல் முடிவும் சொல்லிவிட முடியாது. அவைகள் ஒரு தியரி மட்டுமே

Astro ganesan சொன்னது…

வணக்கம்
தங்கள் இரண்டையுமே சம அளவில் புரிந்து வைத்து அலசிஇருக்கிறீர்கள்.அறிவியல் அறிவை அடிப்படையாக கொண்டு ஆராய்கிறது ,அனால் ஆன்மீகமோ புலன் கடந்த நிலையில் உணர்பவற்றை கூடுமானவரையில் உணர வைக்க முயற்சிக்கிறது . 'அறிபவனை எதனால் அறிவது ? பரிணாம வளர்ச்சியில் இப்பொழுது நாம் பெற்றிருக்கும் அறிவு என்பது புலன்களால் பெற்ற அறிவு அனால் இவை உருவாவதற்கு முன்னர் இவை இருந்தது என்பதை அறிய வேண்டுமானால் இந்த புலன் உணர்ச்சிகளை தண்டி போனால் தன் முடியும்,என்பது அடிப்படை .
எனவே அறிவியல் என்னதான் முயன்றாலும் படைப்பின் ரகசியத்தை அறியமுடியாது . நீங்கள் விவேகனந்தரின் புத்தகங்களை படித்து பார்த்தல் புரியும்
i request you to visit www.srcm.org
to know better than what i explain
thanks
ganesan

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

கோவியாரே!
தகுதி சால், அலசல் செய்திருக்கிறீர்கள்!

sarul சொன்னது…

தெளிவான ஒரு பதிவு ,
இதற்கு ஆன்மீகவாதிகள் பதிலளிக்கமாட்டார்கள்.

மனிதக்கூட்டத்தை உளவியல்ரீதியாக அடிமைப்படுத்தி ஆட்சிசெய்வதற்கு ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பே சமயமாகும்.
உங்கள் பணி தொடரட்டும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//சம்பத் said...
மிகவும் அருமையான அலசல்கள்...இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்கிறேன்...தொடர்க உங்கள் பணி..
//

பாரட்டுக்கு நன்றி. இரண்டாம் பாகம் எப்போது எழுதுவேன் என்று தெரியவில்லை. இவற்றில் இருப்பது ஏற்கனவே பல இடுகைகளில் சொன்னவற்றின் மற்றுமொரு தொகுப்பு தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//SUREஷ் said...
//ஐரோப்பியரிலிருந்து ஆப்பிரிக்க இன மக்கள் உருவாகி இருக்க முடியுமா என்பதே கேள்வி.//


வாங்க சார்.. வாங்க
//

SUREஷ் மாற்றுக் கருத்து இருந்தால் சொல்லுங்க, ஒற்றை வரி பின்னூட்டம் ஒன்றும் விளங்கல்ல

கோவி.கண்ணன் சொன்னது…

//நிஜமா நல்லவன் said...
/மீண்டும் காலம் வாய்க்கும் போது தொடர்கிறேன்..../


காலம் உங்களிடம் தானே இருக்கிறது....(உங்கள் வலைப்பூவை சொன்னேன்)
//

காலம் என்னிடம் தான் இருக்கிறது, நான் என்ன புதுகை அப்துல்லாவா ? நண்பர்களிடம் கடவுச் சொல்லைக் கொடுத்துவிட்டு முழிக்க. :)

கோவி.கண்ணன் சொன்னது…

// choli ganesan said...
வணக்கம்
தங்கள் இரண்டையுமே சம அளவில் புரிந்து வைத்து அலசிஇருக்கிறீர்கள்.அறிவியல் அறிவை அடிப்படையாக கொண்டு ஆராய்கிறது ,அனால் ஆன்மீகமோ புலன் கடந்த நிலையில் உணர்பவற்றை கூடுமானவரையில் உணர வைக்க முயற்சிக்கிறது . 'அறிபவனை எதனால் அறிவது ? பரிணாம வளர்ச்சியில் இப்பொழுது நாம் பெற்றிருக்கும் அறிவு என்பது புலன்களால் பெற்ற அறிவு அனால் இவை உருவாவதற்கு முன்னர் இவை இருந்தது என்பதை அறிய வேண்டுமானால் இந்த புலன் உணர்ச்சிகளை தண்டி போனால் தன் முடியும்,என்பது அடிப்படை .
எனவே அறிவியல் என்னதான் முயன்றாலும் படைப்பின் ரகசியத்தை அறியமுடியாது . நீங்கள் விவேகனந்தரின் புத்தகங்களை படித்து பார்த்தல் புரியும்
i request you to visit www.srcm.org
to know better than what i explain
thanks
ganesan
//

choli ganesan கருத்துகளுக்கு நன்றி, அண்டவெளிகளைத் தாண்டிச் சென்று ஆராய்ந்தால் பிரபஞ்சம் பற்றி முழுதாக அறிந்து கொள்ள முடியுமோ, அப்படித்தானே சாட்டிலைட் வழியாக பூமியை சல்லடை போடுகிறார்கள், அண்டவெளியைக் கடப்பது என்பது மனித கண்டிபிடிப்பு கருவிகள் மூலம் இயலாத ஒன்று, ஒளியை விட வெகுவிரைவான கருவியை நம்மால் உருவாக்கவே முடியாது.

ஆன்மிகமும் அப்படியே எவர் சொல்வது சரி என்று ஒருவரும் அறிந்ததில்லை, பிறகெங்கே ஒரு முடிவை எட்டுவது. யானையைப் பார்த்த குருடர் கதையாகத்தான் ஆன்மிக நம்பிக்கைகள் ஒன்றுகொன்று முரணாக இருக்கிறது. தெய்வ குத்தம் என்றெல்லாம் இருப்பது போல் தெரியவில்லை ஆதலால் துணிந்து அதுபற்றி எழுதுகிறேன் :)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
கோவியாரே!
தகுதி சால், அலசல் செய்திருக்கிறீர்கள்!
//

ஜோதி.பாரதி ஐயா, 'தகுதி சால்' என்றால் என்னவென்று பொருள் விளங்கவில்லை. சால் தான் கேள்விப்பட்டு இருக்கிறேன். :)

கோவி.கண்ணன் சொன்னது…

//KS said...
தெளிவான ஒரு பதிவு ,
இதற்கு ஆன்மீகவாதிகள் பதிலளிக்கமாட்டார்கள்.//

புரொபைலில் சாமிப்படம் போட்டு வைத்துக் கொண்டு இப்படி ஒரு பின்னூட்டம் வியப்பாகத்தான் இருக்கிறது. நீங்கள் ஆன்மிகவாதி இல்லையா ? :)

//மனிதக்கூட்டத்தை உளவியல்ரீதியாக அடிமைப்படுத்தி ஆட்சிசெய்வதற்கு ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பே சமயமாகும்.
உங்கள் பணி தொடரட்டும்.
//

அரசியலும் மதமும் ஒன்றுக்கொன்று காத்துக் கொள்பவை, எனவே ஆட்சியாளர்கள் மதங்களுக்கு முட்டுக் கொடுப்பதில் வியப்பேதுமில்லை

விடுதலை சொன்னது…

மிகவும் அருமையான அலசல்கள்...இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்கிறேன்...தொடர்க உங்கள் பணி..

Radhakrishnan சொன்னது…

//மனித அறிவு வளர்ச்சியே இறைவனின் சக்தியை முடிவு செய்யும் ஒன்றாக இருக்கிறது என்று சொன்னால் நம்புவதற்குக் கடினம் தானே ? ஆனால் அதுதான் உண்மை.//

ஏற்றுக்கொள்ளக்கூடிய விசயம் தான்!

//இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்றவாறு இறைவனின் சக்தியையும் மனித வளர்த்திருக்கிறான். அறிவியலின் வியப்புகளை அனைத்துமே இறைச் செயலாக பொருத்திப் பார்த்து மகிழ்ச்சியடைகிறார்கள்.வேத புத்தகங்கள் எதுவாக இருந்தாலும் அவற்றிற்கு விளக்கம் அறிவியல் துணையுடன் மாற்றி எழுதப்படுகிறது.//

மாற்றி எழுதப்படும்படி அந்த எழுத்தெல்லாம் அமைந்து இருப்பது ஆச்சரியம் தரும் விசயமல்லவா! மீன் முதலில் தோன்றியிருக்கும் என யூகம் சொல்லும் அறிவியலும், மீன் அவதாரமும் ஒத்துப் போவது ஆச்சரியம் தான். அறிவியல் ஒருவேளை ஆன்மிகத்திலிருந்துத் திருடியிருக்குமோ?

//அறிவியலில் சொல்லப்படும் காரண செயல்பாடுகளைப் போன்று ஆன்மிகத்திற்கும் கட்டமைக்காவிடில் இறை நம்பிக்கையை குறிப்பாக மதங்களை மனிதன் துறந்துவிடுவான் என்கிற அடிப்படை பயமே காரணம்.//

அப்படியில்லை, பெரு வெடிப்புக்கொள்கை பற்றி திருக்குரான் விளக்குகிறது. அறிவியல் ஆய்வாளர்கள் திருக்குரானில் உள்ள பல விசயங்களைக் குறித்து ஆச்சரியப்படுகிறார்கள்.

//படைப்பு வியப்பு என்பதாக ஆன்மிகவாதிகளோ/ மதவாதிகளோ எழுதும் போது கேள்விகேட்காமல் இருக்க முடியவில்லை.//

என்ன நடந்திருக்கும் எனும் உண்மையானது அது அந்த அந்த காலத்தைப் பொருத்தே அமைகிறது. இன்று ஒன்று நடப்பது சாத்தியமில்லை என்பதால் அவை நடந்திருக்கவே முடியாது என மறுத்துவிடுவது எளிதுதான், ஆனால் உண்மை எவருக்கும் தெரியாது.


//மதங்கள் காட்டும் படைப்புக் கொள்கைகள் எல்லாம் அறிவுக்கும், அறிவியலுக்கும் பொருந்தா ஒன்று.//

இப்போது அறிவியலால் விளக்கம் சொல்ல முடியவில்லை! உலகம் எப்படி உருவாகியிருக்கும் என எவராலும் ஆராய்ச்சியில் சொல்ல முடிவதில்லை. பழைய நிலையை அப்படியே உருவாக்குவது என்பது சாத்தியமும் இல்லை. எனவே விளக்கம் எதையோத்தான் சொல்ல வேண்டி வருகிறது.

//மதங்களில் அறிவியல் பேசப்படுவதாக மதவாதிகள் பரப்பி வருகின்றனர். ஆனால் அவ்வாரு செய்வது பரவலாக நிராகரிக்கப் பட்டுவருகிறது.//

இருப்பதைத்தான் சொல்கிறார்கள், நிராகரிக்கப்படுவது இயற்கைதான்! ஒரு விசயத்துக்கு எப்படியும் விளக்கம் சொல்லலாம் எனும் சூழல் வருமெனில் அப்படியே நிகழும்.


//கண்டுபிடிப்பு என்று மட்டுமே அறிவியலாலும் சொல்ல முடியும். உருவாக்கம் என்று சொல்லிவிட முடியாது. மூலப் பொருளின்றி எதையும் உருவாக்க முடியாது என்பதே தற்போதைய அறிவியலின் நிலை.//

அழகிய சிந்தனை. கண்டு கொண்டேன்.

//முழு பிரபஞ்ச இயக்கத்தின் காரண காரியங்கள் அனைத்துமே அறிவியல் துணை கொண்டு அறிய முடியும் என்று நினைப்பது மனிதனின் பேராசையாக மட்டுமே இருக்கும்//

மிகச் சரியான தீர்வு.

//இயக்கம் அனைத்தும் இறைச் செயலாக நினைத்து ஆன்மிகவாதிகள் மன நிறைவு அடைந்து கொள்கிறார்கள். அறிவியலோ ஆன்மிகமோ பிரபஞ்ச இயக்கம் பற்றிய முழு அறிவையும் ஒரு நாளும் பெற முடியாது, ஏனெனின் அறிவியலும், ஆன்மிகமும் முறையே மனித அறிவின், கற்பனையின் நீட்சி மட்டுமே.//

அற்புதமான கட்டுரை. பல விசயங்களைத் தெளிவான பார்வையுடன் காலத்தின் சூழலில் ஒப்பிட்டுப் பார்த்து எழுதப்பட்டு இருக்கிறது. மிக்க நன்றி கோவியாரே.

கோவி.கண்ணன் சொன்னது…

//மாற்றி எழுதப்படும்படி அந்த எழுத்தெல்லாம் அமைந்து இருப்பது ஆச்சரியம் தரும் விசயமல்லவா! மீன் முதலில் தோன்றியிருக்கும் என யூகம் சொல்லும் அறிவியலும், மீன் அவதாரமும் ஒத்துப் போவது ஆச்சரியம் தான். அறிவியல் ஒருவேளை ஆன்மிகத்திலிருந்துத் திருடியிருக்குமோ?
//

ஐயா,

அறிவியலுக்கு ஏற்றவாறு எழுதுவது வியப்பே இல்லை ஏனெனில் தசவதாரம் அறிவியலுக்கு பொருந்தவில்லை என்றால் கருடபுராணம் பொருந்துகிறதா என்று பார்ப்பார்கள். அதில் சொல்லப்பட்டு இருப்பதாகச் சொல்லுவார்கள். மற்ற மதங்களிலும் இதுவே நடக்கிறது. இனப்பெருக்கத்திற்கு தேவையான உடல்கூறுகள் சரியாக இருக்கும் தம்பதிகளுக்கு குழந்தை இல்லாமல் போக வாய்ப்புகளே கிடையாது இல்லையா. ஆனால் நமக்கு முற்காலத்தில் சொல்லபப்ட்டதெல்லாம் குழந்தை பெறுவது கடவுள் வரம். அந்த வரத்தை எல்லாம் தற்போது ஆணுறைகளால் தடுத்துவிடுகிறார்கள். மதம் பேசும் அனைத்தும் உண்மையா என்பதைவிட அவை உண்மையின் பக்கம் சாய்ந்து கொள்கின்றன என்றே நான் சொல்லுவேன். நான் புராணங்கள் அனைத்தும் தவறு என்று சொல்ல முற்படவில்லை. ஆனால் அவை சொன்னதை மெய்பிக்க மனிதன் அறிவியலை வளர்த்துக் கொண்டால் தான் முடிந்தது என்பதெல்லாம் மதவாதிகளின் உளரலாகவே படுகிறது அதைத்தான் குறிப்பிடுகிறேன்.

//அப்படியில்லை, பெரு வெடிப்புக்கொள்கை பற்றி திருக்குரான் விளக்குகிறது. அறிவியல் ஆய்வாளர்கள் திருக்குரானில் உள்ள பல விசயங்களைக் குறித்து ஆச்சரியப்படுகிறார்கள்.//

இதைத் தான் குறிப்பிடுகிறேன். பெருவெடிப்பு என்பது ஒரு கொள்கை மட்டுமே இன்னும் நிருபனம் செய்யப்படாத ஒன்று, நாளைய அறிவியலில் பெருவெடிப்பு நடைபெறவில்லை என்று வேறொரு தியரியை முன் வைத்தால் அப்போதும் மத சொல்லி இருப்பதாக அறிவியலைப் பொருத்திப் பார்த்ததெல்லாம் என்ன ஆகும் ?

என்ன நடந்திருக்கும் எனும் உண்மையானது அது அந்த அந்த காலத்தைப் பொருத்தே அமைகிறது. இன்று ஒன்று நடப்பது சாத்தியமில்லை என்பதால் அவை நடந்திருக்கவே முடியாது என மறுத்துவிடுவது எளிதுதான், ஆனால் உண்மை எவருக்கும் தெரியாது.

//

அதற்கான கருவிகள் நம்மிடையே இல்லை என்பது ஒரு காரணம், அதனால் நம்பிக்கையாளர்கள் மதத்தின் பின்னாலும் நம்பிக்கையற்றவர்கள் அறிவியல் பின்னாலும் நிற்கிறார்கள். நான் இரண்டையுமே நம்புவதில்லை. மனிதன் முழுவதையும் தெரிந்து கொள்ள ஒரே ஒரு முற் பிறவியின் ரகசியம் தெரிந்தால் கூட போதும், ஆனால் அவை எல்லாம் சாத்தியமும் இல்லை. அப்படி தெரிந்தால் இயக்கத்தின் ஒழுங்கே கெட்டுவிடும் என்பதால் மதத்தாலோ, ஆன்மிகத்தாலோ என்றுமே அறிய முடியாத புதிராக இயக்கமும் நம் வாழ்க்கையும் இருக்கிறது என்று நான் உணர்ந்து கொள்கிறேன்.

//
அற்புதமான கட்டுரை. பல விசயங்களைத் தெளிவான பார்வையுடன் காலத்தின் சூழலில் ஒப்பிட்டுப் பார்த்து எழுதப்பட்டு இருக்கிறது. மிக்க நன்றி கோவியாரே.
//

பாராட்டுகளுக்கு நன்றிகள் !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்