பின்பற்றுபவர்கள்

11 பிப்ரவரி, 2009

மதுரை திருக்காட்சி நிறைவு பகுதி ! ரத்னேஷ் சந்திப்பு !

பதிவர் அண்ணன் ரத்னேஷுடன் மின் அஞ்சல் தொடர்பில் இருந்து கொண்டு இருந்தாலும் இதுவரை புகைப்படத்தில் கூட பார்க்காத ஒருவரை நேரில் பார்க்கப் போகிறோம் என்கிற ஒருவித உணர்வு இருந்தது. எனது புகைப்படங்களை அவர் பார்த்திருப்பதால் தொலைவில் இருந்தே என்னை தெரிந்து கொண்டு கையசைத்தார். 6 அடிக்கு சற்று குறைவான உயரம், வட இந்தியாவில் இருப்பதால் என்னவோ.....மீசை மிஸ்ஸிங், நெற்றியில் புருவத்திற்கு சற்று மேலாக குங்குமம். நம் வடுவூர் குமார் அண்ணனை லேசாக நினைவு படுத்தும் தோற்றம். உயரத்திற்கேற்ற எடை. நான் கற்பனை செய்திருந்த உருவத்தில் பொருந்தவில்லை. நெருங்கி வந்ததும் கைகுலுக்கல் மற்றும் லேசனான தழுவல் அறிமுகம் ஆகிக் கொண்டோம்... அவரது அப்பாவையும் மனைவியையும் அறிமுகப்படுத்தினார். பெட்டிகளை தூக்கிக் கொண்டு நடந்தோம். நான் குட்டி ரத்னேஷை தூக்கிக் கொண்டேன். அன்னியர் என்ற உணர்வில்லாது என்னிடம் முரண்டு பிடிக்காமல் இருந்தான். அதன் பிறகு மேலே ஏறி, கீழே இறங்கி..

(குட்டி ரத்னேசும், நானும்)

'இங்கேயே சாப்பிட்டுவிட்டு போகலாம்' என்றார் இரயில் நிலைய வளாகத்திலேயே சாப்பிட்டோம், ஏற்கனவே சீனா ஐயாவின் கவனிப்பில் வயிறு நிறைந்திருந்த்தால் ஒரு தோசையுடன் முடித்துக் கொண்டேன். அதன் பிறகு 'கிளம்புறேன்.....' என்றேன்

'வீட்டுக்கு வந்துட்டு போங்க...பக்கம் தான் பழங்காநத்தம்....' என்றார்

ஒரு ஆட்டோ போதவில்லை என்பதால் இரண்டு எடுத்து

ஒன்றில் அவரும்...அவர் மனைவியும் ஏறிக் கொள்ள

அடுத்ததில் நானும் அவரது அப்பாவும், குட்டி ரத்னேசும் ஏறிக் கொள்ள ஆட்டோ புறப்பட்டது......எங்கேயோ கடத்திக் கொண்டு போகிறார்கள் என்று நினைத்தானோ என்னவோ.....பொடியன்....'அப்பா அப்பா.....' என்று சினுங்க ஆரம்பித்தவன் வீடு போகும் வரை நிறுத்தவில்லை.



அவர்கள் வீட்டில் ஒரு 10 நிமிடம் இருந்தேன். புகைப்படங்கள் எடுத்தேன், அவரே எழுதிய புத்தகம் ஒன்றை பரிசளித்தார்.

'அண்ணா உங்கப் படம் பதிவில் போடலாமா ?'

'வேணாங்க.....என்னை பார்க்க வருபவர்கள், நான் சந்திக்கிறவர்கள் நேரில் பார்த்தால் போதும்...அலுவலகத்தில் கூட நான் எழுதுவது யாருக்கும் தெரியாது...(குட்டி) ரத்னேஷ் படத்தைப் போடுங்க...' என்றார்.


அதன் பிறகு வீட்டில் இருந்து விடை பெற்றேன். இருங்க வருகிறேன் என்று சொல்லி பேருந்து ஏற்றிவிட வந்தவர் சுமார் 30 நிமிடங்கள் தனிப்பட்ட தகவல்களை என்னிடம் பேசிக் கொண்டு இருந்தார். இரவு 10:30 ஐ நெருங்கவே....விடைபெற்றேன். ஆட்டோவுகான பணத்தை ஓட்டுனரிடம் கொடுத்து

'அங்க போய் மறுபடியும் இவரிடம் வாங்கிக்காதிங்க' என்று சொல்லி ஏற்றிவிட்டார். ஓட்டல் அறைக்கு வரும் போது இரவு 11 ஆகி இருந்தது. காலி செய்துவிட்டு பேருந்து நிலையம் சென்று புதுக்கோட்டை தஞ்சை வழியாக....நாகை வந்து சேர காலை 6 மணி ஆகிவிட்டது.

*********



இவ்வளவு சிரமப் பட்டு காத்திருந்து சந்திக்க அப்படி என்ன தான் நடந்தது ?

விருப்பட்டவர்கள் தொடர்ந்து படிக்கலாம்


பதிவர் ரத்னேஷ் என்னுடன் ஒன்றரை ஆண்டுகளாக தொடர்பில் இருப்பவர், அவ்வப்போது மின் அஞ்சல் அனுப்பினால் எப்போதாவது அதற்கு பதில் எழுதி அனுப்புவார். மற்றபடி எங்களுக்குள் தொலைபேசி தொடர்புகள் கூட இருந்தது இல்லை. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பல நூல்களையும், பல்வேறு கட்டுரைகளையும் வேறு ஒரு புனைப் பெயரில் எழுதியவர் என்பது எனக்கு பின்னரே தெரியும். நம்மைப் போல் பதிவர் என்ற எண்ணத்திலேயே அவருடன் தொடர்பு கொண்டிருந்தேன். வாசகர்கள் கடிதம் அவருக்கு புதியதல்ல எனவே, தொடக்கத்தில் எனது தனிப்பட்ட தொடர்புகளை அவர் விரும்பி இருக்கவில்லை என்று பின்னர் தெரிந்தது. 'எழுத்தாளனுக்கும் வாசகர்களுக்கும் நெருக்கம் வாசகர் கடிதம் தாண்டி இருக்க வேண்டியதில்லை' என்பதே அவரது சித்தாந்தம். மற்றவை போலித்தனமானது என்பார். முதல் மின் அஞ்சலுக்கும் பதில் அளிக்கும் விதமாக, எனது நட்சத்திரப் பதிவுகளைப் பாராட்டி எழுதியதுடன் வலையுலகம் வளர்ந்து கொண்டு இருப்பதையும், இப்படி ஒரு சார்பற்ற ஊடகம் இருப்பதையும் அறிந்து கொண்டதாக குறிப்பிட்டு, தனது இயற்பெயரையும் குறிப்பிட்டு இருந்தார்.

அவரது ஆரம்பகால இடுகைகளில் ஒன்றை முதன் முதலில் படிக்கும் பொழுதே நல்ல எழுத்தனுபவம், வாசிப்பு அனுபவம் இருப்பதாக உணர்ந்தேன். அதில் இருந்த சமூகம் குறித்த எண்ணங்களும், கடவுள் கொள்கை குறித்த கருத்துகளும் அவரைப் போல் நானும் எழுதி வந்ததால் அவரது எழுத்து படித்தவுடன் பிடித்து போய்விட்டது,

பின்னூட்டத்தில் எனது மின் அஞ்சல் முகவரி கொடுத்து அவரது மின் அஞ்சல் முகவரி கேட்டிருந்தேன், சில நாட்கள் கழித்தே எனக்கு மின் அஞ்சல் செய்தார். மின் அஞ்சல் பரிமாற்றத்திலேயே அவரை ஒருமுறையாவது சந்திக்க வேண்டும் என்று நினைத்து விருப்பத்தைக் கூறி இருந்தேன். கண்டிப்பாக நல்ல மனிதராகத் தான் இருப்பார் என்று அவரது எழுத்துக்கள் சொல்லியதால். அவரைப் பற்றி எதுவும் தெரியாமலேயே எழுத்தை வைத்து நான் மற்றும் எனது மனைவி மகள் படங்களை எனது இரண்டாவது மின் அஞ்சலில் அனுப்பி என்னைப் பற்றிய முழு அறிமுகம் கொடுத்து இருந்தேன். உங்களை நேரில் பார்க்கும் வரை உங்கள் புகைப்படம் அனுப்பாதீர்கள் என்று சொல்லி இருந்தேன். அதை ஏற்று மனைவி, மகன் படங்களை மட்டும் அனுப்பினார். அவர் எப்போதாவது தான் தமிழ்நாட்டு பக்கம் வருவார். மற்ற நாட்களில் வட இந்தியவில் அஸ்ஸாமில் வேலை. கடந்த ஜூனில் சென்னை சென்ற போது 'முடிந்தால் அஸ்ஸாம் வந்து சந்திக்கிறேன்' என்று மின் அஞ்சல் செய்திருந்தேன், 'அஸ்ஸாம் உல்பா பிரச்சனை எப்ப யாரை கடத்திக் கொண்டு போவார்கள் என்று தெரியாது...ரிஸ்க் எடுக்காதிங்க...இங்கே நண்பர்களை வரவழைப்பதை நானும் விரும்பவில்லை' என்றார். அதன் பிறகு சுமார் நான்கு மாதங்களுக்கும் மேலாக இருவருக்கும் தொடர்பில்லை.

ஒருமுறை முகவை இராம் டார்ஜிலிங் செல்ல ஆயத்தமான போது ரத்னேஷ் முகவரி கொடுங்க பார்த்து வருகிறேன் என்றார். முகவரியா ? என்னிடம் மின் அஞ்சல் தவிர்த்து எதுவும் இல்லை, அஸ்ஸாமுக்கு சென்று பார்பதை அவரும் விரும்பவில்லை என்றேன். அதன் பிறகு இராம் செல்வதைப் பற்றி மின் அஞ்சல் அனுப்பியதும், 'முகவை ராம் டார்ஜிலிங் என்னிக்கு போறார்னு கேட்டு சொல்லுங்க அங்கேயே சென்று பார்த்து வருகிறேன் என்று மின்னஞ்சல் செய்திருந்தார். அதற்குள் முகவை ராம் இந்தியா தொடர்பு எண்ணைக் கொடுக்காமல் சென்றதால் என்னால் தகவலை சொல்ல முடியாமல் போய்விட்டது. இருவரும் சந்திக்கவில்லை

அதனுடன் அவரும் பதிவு எழுதுவதை இணைய இணைப்பு காரணமாக தற்காலிகமாக நிறுத்திவிட்டார். நான் சென்னை கிளம்பும் மூன்று நாளைக்கு முன்பு முதன் முறையாக சிங்கையில் இருந்த என்னை அலைபேசியில் அழைத்து பேசினார். நான் சென்னை வருகிறேன். உங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்குமா ? என்று கேட்டேன். நான் அடுத்த மாதம் தான் சென்னை வருகிறேன். எதற்கும் முயற்சி செய்கிறேன் என்று சொன்னார். நான் சென்னையை விட்டு சொந்த ஊருக்கு கிளம்பிய மறுநாள் அவர் சென்னை வந்தார், அதனால் அங்கும் பார்க்க முடியவில்லை. 'சென்னை...காரைக்கால், நாகை... மதுரை இங்கே எங்காவது நாம எப்படியும் சந்திப்போம்' என்றார். எனக்கு நம்பிக்கை இல்லை 'எங்கே சந்திப்பது என்று எனக்கும் குழப்பம் ஆகிவிட்டது' ஏனெனில் மற்ற நண்பர்களுக்கு நான் இந்தந்த தேதிகளில் அவர்களைப் பார்க்க வருவதாக தகவல் சொல்லிவிட்டேன். அதன் படி பயணத்திலலிருந்தேன்.

ஒருவழியாக நான் மதுரையில் இருந்த அன்று (ஜென / 29 / 2009) காலை அலைபேசியில் தொடர்பு கொண்டு சென்னையில் இருந்து இரவு 8:30க்கு மதுரை வருவதை தெரிவித்ததும், அவருடைய ஊரிலேயே அவரைப் பார்ப்பது என்று முடிவு செய்து இரவு 8:30 வரை காத்திருந்து பார்த்து வந்தேன். எனக்காகவே முன்கூட்டி அஸ்ஸாமிலிருந்து கிளம்பி வந்தவரை அவருடைய ஊரிலேயே பார்த்தது எனக்கும் மகிழ்ச்சியையும், நிறைவையும் கொடுத்தது.





தற்பொழுது இணைய இணைப்பு சரியாக கிடைக்கவில்லை என்பதால் அதில் போராடுவதை கைவிட்டு, வரும் ஏப்ரலுக்கு மேல் பணி மாற்றம் கிடைக்கும் போது திரும்ப எழுதுவதாக சொன்னார்.

அவருடைய இயற்பெயர் என்ன, எந்த பதிப்பகத்தின் வழியாக, எந்த பெயரில் புத்தகங்களை வெளி இட்டு வருகிறார் ?

இதையெல்லாம் அவரே எப்போதாவது சொல்லுவார் என்று நினைக்கிறேன்.

அவரை சந்தித்தப் பிறகுதான் அவர் ஒரு எழுத்தாளர், பதிவர் வட்டத்திற்குள் வந்திருக்கிறார், எழுத்து அவருக்கு புதியதல்ல என்று தெரிந்தது, பதிவரை பதிவராக சந்திக்கச் சென்று எழுத்தாள பதிவரை சந்தித்து வந்தேன்.

30 கருத்துகள்:

ramachandranusha(உஷா) சொன்னது…

ஆஹா, ரத்தனேஷ் இம்முட்டு பெரிய ஆளா ? இது தெரியாம போச்சே !

கோவி.கண்ணன் சொன்னது…

// ramachandranusha(உஷா) said...
ஆஹா, ரத்தனேஷ் இம்முட்டு பெரிய ஆளா ? இது தெரியாம போச்சே !
//

உஷா மேடம், அதுக்குள்ளே படிச்சிட்டிங்களா, வெளி இட்டு 2 நிமிடம் கூட ஆகல :)

ramachandranusha(உஷா) சொன்னது…

நான் கோவையில் ஆரம்பித்து, திருப்பூர், மதுரை என்று தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தேன்.
நீங்க அந்த நேரம் கடைசி அத்தியாயம் போட்டிருக்கணும்.
ஹூம், பதிவாளர் ரத்னேஷ் அவர்களை ரொம்ப மிஸ் செய்கிறேன் :-)

கோவி.கண்ணன் சொன்னது…

//ramachandranusha(உஷா) said...
நான் கோவையில் ஆரம்பித்து, திருப்பூர், மதுரை என்று தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தேன்.
நீங்க அந்த நேரம் கடைசி அத்தியாயம் போட்டிருக்கணும்.
ஹூம், பதிவாளர் ரத்னேஷ் அவர்களை ரொம்ப மிஸ் செய்கிறேன் :-)
//

மிக்க நன்றி மேடம் !

மீண்டும் ஏப்ரலுக்கு பிறகு எழுதப்போவதாக உறுதி அளித்திருக்கிறார், அனேகமாக ஆந்திரமாநிலத்திற்கு மாற்றல் ஆகி வருவாராம்

வெண்பூ சொன்னது…

ஆச்சர்யமான ப்ளாஷ்பேக்.. நெகிழ்வான சந்திப்பு.. என்னை ரொம்ப ஆச்சர்யப்படுத்துறீங்க கோவி..

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

//ஆச்சர்யமான ப்ளாஷ்பேக்.. நெகிழ்வான சந்திப்பு.. என்னை ரொம்ப ஆச்சர்யப்படுத்துறீங்க கோவி.//

repeateyyyy.

புருனோ Bruno சொன்னது…

//மீண்டும் ஏப்ரலுக்கு பிறகு எழுதப்போவதாக உறுதி அளித்திருக்கிறார், அனேகமாக ஆந்திரமாநிலத்திற்கு மாற்றல் ஆகி வருவாராம்//

மீண்டும் சூடு பறக்கும் என்று சொல்லுங்கள்

தமிழன்-கறுப்பி... சொன்னது…

வரிசையா பதிவு எழுதிக்கிட்டிருந்தவர் அந்த ரஜனி பதிவுக்கப்புறம் எழுதலையேன்னு யோசிச்சுக்கிட்டிருந்தேன்..
இதுதான் அவர் எழுதாதற்கு காரணமா...

சொல்லரசன் சொன்னது…

"காலம்" பதிவு இனிமையான நினைவு.
காலத்திற்கும் அழியா பதிவு.

துளசி கோபால் சொன்னது…

நல்ல பண்பட்ட எழுத்து என்பது அவர் பதிவுகளில் தெரிஞ்சது.

ஆனாலும் இப்போ அவர் எழுதாமல் இருப்பது என்னவோபோலதான் இருக்கு.

சந்திப்பு அருமை. சந்திக்கவேண்டிய நபர்தான் சீனியர்.

விவரங்களுக்கு நன்றி கோவியாரே.

குமரன் (Kumaran) சொன்னது…

இதில் சில விவரங்கள் எனக்குத் தெரியும். மேலும் விவரங்களைத் தெரிந்து கொண்டேன். நன்றி கண்ணன். எப்ரலை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறேன். கீதை மட்டுமில்லாமல் அவரது இடுகைகள் அனைத்துமே மிக நன்றாக இருக்கும்.

பாண்டித்துரை சொன்னது…

உங்களுடைய மதுரை சந்திப்பு புகைப்படங்கள் ஊர் ஞாபகத்தை ஏற்படுத்துகிறது.
நாமளும் அந்த பக்கம்தான்னா

மதுரை சென்றால் எனக்கு அங்குள்ள மினாட்சி அம்மன் கோவில் அதனருகே உள்ள ரமணஸ்ரமம் அப்புறம் பாண்டிகோவில் சென்றுதான் வருவேன். (ஓரே கலவையா இருக்குள்ள)

கோவி.கண்ணன் சொன்னது…

//வெண்பூ said...
ஆச்சர்யமான ப்ளாஷ்பேக்.. நெகிழ்வான சந்திப்பு.. என்னை ரொம்ப ஆச்சர்யப்படுத்துறீங்க கோவி..
//

:) நன்றி !

சென்னை சந்திப்பு பற்றிய பதிவில் உங்களைப் பற்றி குறிப்பிட்டு இருந்தேன்

கோவி.கண்ணன் சொன்னது…

// T.V.Radhakrishnan said...
//ஆச்சர்யமான ப்ளாஷ்பேக்.. நெகிழ்வான சந்திப்பு.. என்னை ரொம்ப ஆச்சர்யப்படுத்துறீங்க கோவி.//

repeateyyyy.
//

நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//புருனோ Bruno said...
//மீண்டும் ஏப்ரலுக்கு பிறகு எழுதப்போவதாக உறுதி அளித்திருக்கிறார், அனேகமாக ஆந்திரமாநிலத்திற்கு மாற்றல் ஆகி வருவாராம்//

மீண்டும் சூடு பறக்கும் என்று சொல்லுங்கள்
//

புரோனோ சார்,
ஏப்ரல் கோடைகாலம் வேறு !

கோவி.கண்ணன் சொன்னது…

//தமிழன்-கறுப்பி... said...
வரிசையா பதிவு எழுதிக்கிட்டிருந்தவர் அந்த ரஜனி பதிவுக்கப்புறம் எழுதலையேன்னு யோசிச்சுக்கிட்டிருந்தேன்..
இதுதான் அவர் எழுதாதற்கு காரணமா...
//

தமிழன்-கறுப்பி,
முன்பு ஒரு பதிவில் கூட அவர் பதிவு நிற்பதன் காரணம் சொல்லி இருந்தேன்.

http://govikannan.blogspot.com/2008/11/blog-post_13.html

கோவி.கண்ணன் சொன்னது…

//சொல்லரசன் said...
"காலம்" பதிவு இனிமையான நினைவு.
காலத்திற்கும் அழியா பதிவு.
//

சொல்லரசன்,

பாராட்டுக்கு மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
நல்ல பண்பட்ட எழுத்து என்பது அவர் பதிவுகளில் தெரிஞ்சது.

ஆனாலும் இப்போ அவர் எழுதாமல் இருப்பது என்னவோபோலதான் இருக்கு.

சந்திப்பு அருமை. சந்திக்கவேண்டிய நபர்தான் சீனியர்.
//

வழிமொழிகிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//குமரன் (Kumaran) said...
இதில் சில விவரங்கள் எனக்குத் தெரியும். மேலும் விவரங்களைத் தெரிந்து கொண்டேன். நன்றி கண்ணன். எப்ரலை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறேன். கீதை மட்டுமில்லாமல் அவரது இடுகைகள் அனைத்துமே மிக நன்றாக இருக்கும்.
//

குமரன்,

பின்னூட்ட கருத்துக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//பாண்டித்துரை said...
உங்களுடைய மதுரை சந்திப்பு புகைப்படங்கள் ஊர் ஞாபகத்தை ஏற்படுத்துகிறது.
நாமளும் அந்த பக்கம்தான்னா//

அப்படியா.....பெயரே பாண்டித்துரை தானே .... இருக்கும் இருக்கும் !

//மதுரை சென்றால் எனக்கு அங்குள்ள மினாட்சி அம்மன் கோவில் அதனருகே உள்ள ரமணஸ்ரமம் அப்புறம் பாண்டிகோவில் சென்றுதான் வருவேன். (ஓரே கலவையா இருக்குள்ள)
//

கலவரமாக இருக்கு ! :)

வால்பையன் சொன்னது…

//எழுத்தாளனுக்கும் வாசகர்களுக்கும் நெருக்கம் வாசகர் கடிதம் தாண்டி இருக்க வேண்டியதில்லை' என்பதே அவரது சித்தாந்தம். மற்றவை போலித்தனமானது என்பார்.//

இது போலவே எல்லாரும் இருந்துவிட்டால் வலையில் சுவாரிசயமே இருக்காதே! ஆனால் இவரது பாலிஸி எனக்கு பிடித்திருக்கிறது! வாசகர்களிடம் பணம் பறிக்கும் எழுத்தாளர்கள் மத்தியில் உங்களுக்கு ஆட்டோக்கு பணம் கொடுத்து அனுப்பியிருக்கார்.

வால்பையன் சொன்னது…

நான் மதுரை வரும் போது ரத்னேஷ் அண்ணாச்சியை சந்திக்கவேண்டுமே
அலைபேசி எண் கிடைக்குமா?
என்னுடயது
9994500540

CA Venkatesh Krishnan சொன்னது…

இப்போதுதான் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. உங்கள் பயணக்குறிப்புகள் மிக அருமையான தொகுப்பு. தொடரட்டும் உங்கள் பணி.

வலையுலகம் மூலம் நல்ல தொடர்புகள் உண்டாவது வளர்வது மிக்க மகிழ்ச்சியே.

வடுவூர் குமார் சொன்னது…

என்னைப் போல் ஒருவர்!!இருக்கட்டும், எங்காவது சந்திக்க நேரிடலாம்.
செம டிரிப்பாக இருக்கே?

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//நம் வடுவூர் குமார் அண்ணனை லேசாக நினைவு படுத்தும் தோற்றம். உயரத்திற்கேற்ற எடை. நான் கற்பனை செய்திருந்த உருவத்தில் பொருந்தவில்லை. நெருங்கி வந்ததும் கைகுலுக்கல் மற்றும் லேசனான தழுவல் அறிமுகம் ஆகிக் கொண்டோம்... அவரது அப்பாவையும் மனைவியையும் அறிமுகப்படுத்தினார்.//

கவிஞர்களுக்கு கவிதையில் மட்டுமே கற்பனை வேலைக்கு ஆகும்.

இதுக்கெல்லாம் சான்சே இல்லை.

அருமையான பதிவர், எழுதவில்லை என்பது கவலை அளிக்கும் விடயம்.

ஜூனியர் இரத்தினேஷ் என்ன சொன்னார்? சீனியர் இரத்தினேஷ் அவர்களின் படத்தையும் போட்டிருக்கலாமே?

பதிவர்களை இணைத்து வலை பின்னும் வலைஞர், சிலந்தி மனிதர்(ஸ்பைடர் மேன்) கோவியார் அப்படின்னு சொல்லலாம்!

*அஞ்சா நெஞ்சனை சந்தித்து போர்நிறுத்தத்துக்கு ஏற்பாடு செய்வீர்கள் என்று எதிர் பார்த்தேன். ஆனா நீங்கள் செய்யவில்லை. அது எனக்கு எப்பவுமே வருத்தம் தான். :P|

Unknown சொன்னது…

ஒரு வாரத்துக்கு குறைந்தது இருபது பதிவு, ஓரு பயணத்தில் குறைந்தது இருபது பதிவர் சந்திப்பு. ஆச்சர்யமான சூப்பர் பதிவர்.

cheena (சீனா) சொன்னது…

கோவி, அருமையான சந்திப்புகள் - பதிவுகள் - நல்ல நினைவாற்றல் - துரு துரு என்று படம் பிடிக்கத் துடிக்கும் கைகள் - கட்டிப்பிடி வைத்தியம் அறிந்தவர் - எளிமை - எல்லாமே பிடிச்சிருக்கு கோவி

பாலராஜன்கீதா சொன்னது…

//வரும் ஏப்ரலுக்கு மேல் பணி மாற்றம் கிடைக்கும் போது திரும்ப எழுதுவதாக சொன்னார்.//
அவரின் இடுகைகளுக்காக (இயன்றால் நேரில் சந்திக்கவும்)ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்.

நையாண்டி நைனா சொன்னது…

அட... அட... அட...... இதை மிஸ் பண்ணிட்டேன்... இப்ப தான் பார்கிறேன். எனி ஹவ், மை பெஸ்டு விஷஸ் டு யு அண்ட் மிஸ்டர். ரத்னேஷ்.

பாச மலர் / Paasa Malar சொன்னது…

இன்றுதான் இப்பதிவு படித்தேன்...மீண்டும் ஏப்ரலில் எழுத ஆரம்பிப்பார் என்பதில் மிக்க சந்தோஷம்...

ஊரில் எங்கள் பகுதிக்கு மிக அருகில் இருக்கும் ஓர் எழுத்தாளரின் அடையாளம் சீக்கிரம் தெரிய வேண்டுமே என்ற ஆவல் அதிகமாக உள்ளது..

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்