பின்பற்றுபவர்கள்

18 நவம்பர், 2008

எனக்கு தெரிந்த திருநங்கைகள் (அரவாணிகள்) !

லிவிங்க் ஸ்மைல் வித்யாவை பதிவுகள் வழியாக அறிந்திருக்காவிடில் இந்த 'அரவாணி' என்ற சொல் பலருக்கும் அருவெறுப்பாகவே இருக்கும், தமிழ்மணத்தில் இணைவதற்கான முதல் முயற்சியில் புதிய பதிவர்கள் சேர்க்கைப் பட்டியலில் அவரது பதிவு பற்றிய குறிப்பும், எழுதும் தான் ஒரு அரவாணி என்றும் குறிப்பிட்டு இருந்தார், 'பரவாயில்லையே...இவர்களில் கூட பதிவு எழுதுபவர்கள் இருக்கிறார்களா ?' என்று நினைத்துக் கொண்டிருந்தேன், அடுத்த நாட்களில் அந்த பதிவு சேர்க்கைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருந்தது. அதற்கான காரணம் தெரியவில்லை. பிறகு இருவாரம் கழித்தே அவரது பதிவின் பெயர் சேர்க்கைப் பட்டியலில் மீண்டும் வந்து அதன் பிறகு தமிழ்மணத்தில் பதிவுகள் திரட்டப்பட்டு வந்தது, முதலில் சேர்த்து பிறகு ஏன் திரட்டாமல் விட்டார்கள் என்பதற்கான காரணமாக நான் நினைத்தது, 'போலிப் பெயர்களில்' வரும் வழக்கமான பதிவாக (சோதனை செய்து) இருக்கக் கூடும் என்று நினைத்து பட்டியலில் இருந்து நீக்கியிருக்கிறார்கள் போலும் என்று நினைத்துக் கொண்டேன். அதன் பிறகு நண்பர் பாலபாரதி போன்றோர் முயற்சியால் சேர்த்திருப்பார்கள் என்றே நினைத்தேன். நிகழ்வை வைத்து இது எனது ஊகம் தான். ஆனால் முதலில் பட்டியலில் வந்து பிறகு திரட்டாமல் போனக் காரணம் எனக்கு சரியாகத் தெரியவில்லை.

*******

அரவாணிகள் பற்றி முதன் முதலில் அறிந்து கொள்ளும் போது வயது 7 இருக்கும் என்று நினைக்கிறேன். எங்கூரிலிருந்து நாகூருக்குச் செல்லும் சந்தனக் கூடு பத்து நாள் திருவிழாவின் போது, நாகையில் இருந்து நாகூருக்கு நடைப் பயணமாக சாலையில் கப்பல்கள் இழுத்துச் செல்லும் மாலை நேர நிகழ்வில், மாறுபட்ட பெண் நிறைய பவுடர் மேக்கப் உடன் ஆடிக் கொண்டே செல்வார், வயசுப் பசங்கள் அவளைச் சீண்டுவார்கள், அதன்பிறகு அருகிலும் வீட்டிலும் பேசிக் கொண்டு இருந்ததை வைத்து அவர் ஆண்தான் பெண்ணாக உடை அணிந்திருக்கிறார், என்று தெரியவந்தது...அந்த பெண்ணை கோஷா என்று சொல்வார்கள். 10 - 15 ஆண்டுகளாக அந்த கோஷாவை ஆண்டு தோறும் முழு மேக்கப்படில் அதே நிகழ்வில் பார்த்து இருக்கிறேன். முதன் முதலில் இளமையாக இருந்தவர் 50 வயது மேல் கன்னங்கள் ஒட்டியபடி இருந்தாலும் முழு மேக்கப் உடன் உற்சாகம் குன்றாமல் ஆண்டு தோறும் பலரை மகிழ்வித்தப்படி ஊர்வலத்தில் செல்வார்.

அதன்பிறகு 7 ஆம் வகுப்பு படிக்கும் போது எங்கள் பள்ளியின் (நடராஜன் தமயந்தி மேல் நிலை பள்ளி) அருகே புளியமரம் என்ற இடத்தில் சைக்கிள் சுற்றுதல் என்ற நிகழ்ச்சி நடைபெறும், 10 நாள் ஒருவர் கீழே இறங்காமல் சுற்றிவர மாலை 7 முதல் இரவு 11:30 வரை கலை நிகழ்ச்சிகள், பெரும்பாலும் சினிமா பாடல்களுக்கு ஆடுவார்கள், ரெக்கார்ட் டான்ஸ் அளவுக்கு மோசமாக இருக்காது, அதில் பெண்களாக ஆடுபவர்கள் அனைவரும் அரவாணிகளாக இருந்தனர். நிகழ்ச்சியின் போது பெண்களைப் போல் மேக்கப் போட்டு இருப்பார்கள், காலையில் அந்த பகுதிவழியாகச் செல்லும் போது பார்த்தால் கைலி மற்றும் மேலே ஒரு சட்டைப் போட்டு, கொண்டையுடன் இருப்பார்கள், முகத்தில் முடி மழித்த அடையாளம் இருக்கும்.

எங்கள் ஊரில் அரவாணிகளை யாரும் கேலி செய்வது கிடையாது. முன்பெல்லாம் நாகூர் / நாகைப் பகுதியில் அரவாணிகள் வீட்டு வேலை செய்வார்கள். பொது இடங்களில் பார்ப்பது அரிதுதான். எனக்கு ஒரு 18 வயது இருக்கும் போது, வீட்டின் அருகே இருக்கும் டீ கடையில் ஒரு அரவாணி வேலை செய்தது அதற்கு ஒரு 16 வயது தான் இருக்கும் என்று நினைக்கிறேன், டீ கடைக்கு தேவையான தண்ணீரை எடுத்துச் செல்ல எங்கள் வீட்டு தண்ணீர் பம்புக்குத்தான் வரும், இடுப்பில் தண்ணீர் குடத்தை சுமந்து பெண்ணைப் போன்ற நளினத்தில் வரும், பெண்ணுடை எதையும் அணிந்திருக்காது, கைலியும் மேலே முண்டா பணியுனும் போட்டு இருக்கும், பேச்சுக் கொடுத்தால் பேசும். நாங்கள் யாரும் எதிரே கிண்டல் செய்வது கிடையாது, பின்னால் அதன் நடையைப் பார்த்து சிரிப்போம், அது அதை கவனித்துவிட்டால், கட்டைக் குரலில் 'என்னப் பார்க்கிறிங்க...நான் ஒம்போது அப்படித்தான் நடப்பேன்...எங்க கட்டை வேகுற வரைக்கும் இப்படித்தான்...' என்று சொன்னதும் அதுவே தன்னை இப்படிச் சொல்லிக் கொள்கிறதே என்ற திகைப்பும் பரிதாபமும் வந்தது. அதன் பெயர் நடராஜன், ஆனால் அதனை ஒருமுறை பார்ப்பவர்கள் மீண்டும் அடையாளம் கண்டு கொள்ளக் கூடிய தனிப்பட்ட கை கால் அமைப்பு இருந்தது, கை, கால்களில் ஆறு ஆறு விரல்கள், இரண்டு கையும் சேர்த்து 12 விரல்கள், அதே போல் கால்களில் மொத்தம் 12 விரல்கள். விரல் அமைப்புகளி பார்ப்பத்தற்கு வேறுபாடு தெரியாது, எண்ணிப் பார்த்தால் மட்டுமே கூடுதலாக இருப்பது தெரியும் அளவுக்கு 6 விரல்களும் வரிசைப்படி இருந்தது. 'பெண்ணாக நடந்து கொள்வதை திருத்துவதற்காக உடலில் சூடுபோட்டாங்க, கட்டி வச்சி உறிச்சாங்க அதான் ஓடிவந்துவிட்டேன்' என்று அதன் கதையைச் சொல்லியது,
('அது' என்று இங்கே குறிப்பிட்டு இருப்பது அஃறினை பொருளில் அல்ல, நான் அப்போதைய நினைவில் இருந்து எழுதி இருக்கிறேன்) கிட்டதட்ட ஒரு மூன்று மாத காலம் இருக்கும், அதன் பிறகு நடராஜனைக் காணவில்லை. அங்கே உள்ள பசங்களை விசாரித்தால், அதைப் பல இளவட்டங்கள் இரவில் வட்டமிடுவதால் கடைக்காரர் துறத்திவிட்டார் என்று சொன்னார்கள். அதுவும் சில சிலுமிஷங்களைச் செய்ததாக நெருங்கிய நண்பர்கள் சிலர் சொன்னார்கள்.

ஈராண்டுகள் கழித்து சென்னையில் வேலைக்குச் சென்ற பிறகு ஒரு ஞாயிறு மாலை தி.நகரில் நடந்து கொண்டு இருக்கும் போது, பேருந்து நிலையம் எதிரே அரவாணிகள் கூட்டம் ஒன்று கடைகடையாக ஏறி இறங்கினார்கள், ஒரு அரவாணியை எங்கோ பார்த்தது போல் இருக்கிறதே என்று பார்த்தேன்...அட நடராஜன்...கைகால்களில் 12 விரல்கள்...ஆனால் சேலையில் இருந்தது. '....நடராஜன் இங்கே எப்படி ...?' என்று நான் கேட்பதைத் திரும்பிப் பார்த்துவிட்டு .....வேகமாக அந்த இடத்தை விட்டு ஓடியது...'ஏன் ஓடுரே...நடராஜன் நில்லு ஓடாதே...'. நிற்காமல் வேகமாக ஓடி மற்ற அரவாணிகளையும் இழுத்துக் கொண்டு கடைக்குள் சென்றுவிட்டது, அதற்கும் மேல் செல்ல எனக்கும் தயக்கம், மூன்று அரவாணிகளும் தவறாக புரிந்து கொண்டு என்னை தாக்கிவிட்டால் அங்கிருந்து கடந்து சென்றேன். எனக்கு சிறுது ஏமற்றம் தான். சும்மா விசாரிக்கலாம் என்று நினைத்தால் 'அது சென்னையில் தான் இருக்கிறது என்று சொல்லிக் காட்டிக் கொடுத்துவிடும் அதனுடைய ஊர் காரன்' என்று நினைத்து ஓடி இருக்கும் என்றே நினைத்தேன்.

*******

1992 வாக்கில் பெங்களூரில் வேலை செய்தபோது சு.சமுத்திரம் அவர்களின் 'வாடாமல்லி' தொடர் ஆனந்தவிகடனின் வந்தது, அந்த வாரத்தில் அந்த கிழமை எப்போது வரும் என்று காத்திருந்து ஆவலுடன் படிக்கும் அளவுக்கு அந்த தொடர் அமைந்து இருந்தது, அப்பொழுதுதான் அரவாணியாக (சுயம்பு என்ற பாத்திரம்) மாறும் ஆண் உடலில் ஏற்படும் மாற்றம், அவர்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல், அடைக்கலம் தேடி ஓடுவது, அவர்களின் மும்பய், டெல்லி வாழ்க்கை, ஆண் உறுப்பை அகற்றிக் கொள்ளும் சடங்குகள், அவர்களைப் புரிந்து கொள்ளாத சமூக அவமானத்தில் இருந்து அவர்கள் மீண்டு வர நினைத்து துடிப்பது போன்றவற்றையெல்லாம் அந்த நாவல் வழியாகவே அறிந்து கொண்டேன். அந்த தொடர் கதையைப் படித்து முடித்த பிறகு நான் 'அதுவாக' நினைத்துக் கொண்டு இருந்த அரவாணிகளை 'அவளாக' நினைக்க ஆரம்பித்தேன்.

அரவாணி என்ற பெயருக்கு பதிலாக திருநங்கை என்ற சொல் பயன்படுத்துகிறார்கள், அரவாணி என்ற பெயரை விட திருநங்கை என்ற பெயரே பொருத்தமானது, மதச் சார்பற்றது. மூன்றாம் பாலினமாக அவர்கள் கேட்கும் அங்கீகாரம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். திருநங்கைகள் பற்றிய சமூகப் பார்வை மாறிக் கொண்டே வந்திருக்கிறது. ஆணும் பெண்ணும் சமம் என்று சித்தாந்தம் பேசுகிறோம், ஆனால் அப்படி சமமாக இருப்பவர்களை மதிக்கிறோமா என்ற கேள்வியாகவே அரவாணிகள் நிற்கிறார்கள். பிச்சைகாரர்கள் கூட இவர்களை ஏளனமாகப் பார்க்கும் இழிநிலை மாறிவருகிறது என்பது ஆறுதலான ஒன்று.


அரவாணிகள் - உடலியல், மொழியியல், வாழ்வியல் என்ற நூலை தற்பொழுது வாசித்துக் கொண்டு இருக்கிறேன். சகோதரி லிவிங் ஸ்மைலின் கட்டுரைகள் கூட அதில் இருக்கிறது. தொகுப்பாசிரியர் மகாராசன். அதுபற்றி பிறகு எழுதுகிறேன்.

36 கருத்துகள்:

கிருஷ்ணா சொன்னது…

நல்ல பதிவு.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

திருநங்கைகளுக்கு திலகமிட்ட திரு.கோவி கண்ணனுக்கு வாழ்த்துக்கள்.
நல்ல பகிர்வு!

நாமக்கல் சிபி சொன்னது…

நல்ல பதிவு கோவி!

துளசி கோபால் சொன்னது…

திருநங்கைகள் நிலை நம்மூரில்தான் பரிதாபமா இருக்கு. இங்கே நியூஸியில் இப்படிக் கேலி கிண்டல் எல்லாம் இல்லை.

பெண்களாகத் தங்களை மாற்றிக்கிட்டவங்க சிலர் எவ்வளோ அழகா இருக்காங்க தெரியுமா?

ஒரு முறை சிங்கையில் பார்த்த ஒருவரை என் வாழ்நாள் பூரா மறக்கவே முடியாதபடி அவர் முகம்.

அப்படியே நம்ம அலமேலுமங்கைத் தாயார்தான்.

நல்ல பதிவு கண்ணன்

நையாண்டி நைனா சொன்னது…

ஆரவாணிகள் இன்னும் சமுதாயத்தில் மதிக்கப் படவேண்டும்

வனம் சொன்னது…

வணக்கம் கோவி கண்ணன்

தேவையான பதிவு
தொடருங்கள் வாழ்த்துக்கள்

நன்றி

முத்துகுமரன் சொன்னது…

மிக நல்ல புத்தகம். பல ஆச்சர்யமான தகவல்கள் நிறைந்திருக்கும் புத்தகம் அது. திருநங்கைகள் பற்றீய செய்திகள், அவர்களின் படைப்புகள் குறித்த தகவல்கள், திருநங்கைகளை மையமாக வைத்த படைப்புகள் என ஒரு விரிவான அறிமுகத்திற்கு அந்த புத்தகம் துணையாக இருக்கும். அதே போல ரேவதி அவர்களின் உணர்வும் உருவமும் நூலும், பிரியா பாபுவின் அரவாணிகளின் சமுக வரைவியல் நூலும் முக்கியமானவை.

கோவி.கண்ணன் சொன்னது…

//கிருஷ்ணா said...
நல்ல பதிவு.

11:56 AM, November
//

கிருஷ்ணா நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
திருநங்கைகளுக்கு திலகமிட்ட திரு.கோவி கண்ணனுக்கு வாழ்த்துக்கள்.
நல்ல பகிர்வு!
//

ஜோதிபாரதி பாராட்டுக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//நாமக்கல் சிபி said...
நல்ல பதிவு கோவி!
//

நா.சி மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
திருநங்கைகள் நிலை நம்மூரில்தான் பரிதாபமா இருக்கு. இங்கே நியூஸியில் இப்படிக் கேலி கிண்டல் எல்லாம் இல்லை.

பெண்களாகத் தங்களை மாற்றிக்கிட்டவங்க சிலர் எவ்வளோ அழகா இருக்காங்க தெரியுமா?

ஒரு முறை சிங்கையில் பார்த்த ஒருவரை என் வாழ்நாள் பூரா மறக்கவே முடியாதபடி அவர் முகம்.

அப்படியே நம்ம அலமேலுமங்கைத் தாயார்தான்.

நல்ல பதிவு கண்ணன்
//

துளசி அம்மா,

எண்ணப் பகிர்வுக்கு பாராட்டுக்கும் மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//நையாண்டி நைனா said...
ஆரவாணிகள் இன்னும் சமுதாயத்தில் மதிக்கப் படவேண்டும்

1:19 PM, November 18, 2008
///

இப்படிக்கு ரோஸ் மற்றும் லிவிங் ஸ்மைல் போன்றவர்களால் அந்த நிலை விரைவில் ஏற்படும் என்றே நினைக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//இராஜராஜன் said...
வணக்கம் கோவி கண்ணன்

தேவையான பதிவு
தொடருங்கள் வாழ்த்துக்கள்

நன்றி
//

வணக்கம் இராஜராஜன், வாழ்த்துக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//முத்துகுமரன் said...
மிக நல்ல புத்தகம். பல ஆச்சர்யமான தகவல்கள் நிறைந்திருக்கும் புத்தகம் அது. திருநங்கைகள் பற்றீய செய்திகள், அவர்களின் படைப்புகள் குறித்த தகவல்கள், திருநங்கைகளை மையமாக வைத்த படைப்புகள் என ஒரு விரிவான அறிமுகத்திற்கு அந்த புத்தகம் துணையாக இருக்கும். அதே போல ரேவதி அவர்களின் உணர்வும் உருவமும் நூலும், பிரியா பாபுவின் அரவாணிகளின் சமுக வரைவியல் நூலும் முக்கியமானவை.

2:12 PM, November 18, 2008
//

நீங்களும் படித்து இருக்கிறீர்களா ? சென்ற ஞாயிறு இங்கே புதிதாக திறக்கப்பட்ட ஒரு நூலகத்திற்குச் சென்றேன், அங்குதான் அந்த புத்தகம் எனக்கு கிடைத்தது.

முத்துகுமரன் சொன்னது…

படித்திருக்கிறேன் கோவி. சென்ற முறை மதுரை சென்றிருந்த போது அந்த புத்தகங்கள் வாங்கி வந்திருந்தேன். ஆறு மாதம் முன்பே படித்துவிட்டேன். பதிவுதான் போடவில்லை :-)

புருனோ Bruno சொன்னது…

அருகே இருக்கும் டீ கடையில் ஒரு அரவாணி வேலை செய்தது

செய்தார்

அதற்கு

அவருக்கு

ஒரு 16 வயது தான் இருக்கும் என்று நினைக்கிறேன், டீ கடைக்கு தேவையான தண்ணீரை எடுத்துச் செல்ல எங்கள் வீட்டு தண்ணீர் பம்புக்குத்தான் வரும்,

வருவார்

இடுப்பில் தண்ணீர் குடத்தை சுமந்து பெண்ணைப் போன்ற நளினத்தில் வரும்,

வருவார்

பெண்ணுடை எதையும் அணிந்திருக்காது, கைலியும் மேலே முண்டா பணியுனும் போட்டு இருக்கும்,

இருப்பார்

பேச்சுக் கொடுத்தால் பேசும்

பேசுவார்

புருனோ Bruno சொன்னது…

நான் வாசிக்க வாசிக்க அப்படியே மறுமொழிகளை எழுதும் பழக்கம் உள்ளவன்.

அதனால் வந்த குழப்பம் அது

மன்னிக்கவும்

கோவி.கண்ணன் சொன்னது…

கோவி.கண்ணன் said...
புருனோ சார்,

அடைப்புக்குறிக்குள் டிஸ்கி போட்டு இருக்கிறேன். கவனிக்க வில்லையா ?

நான் பார்க்கும் போது அவருக்கு 16 வயதுதான் இருக்கும், அதனால் அப்படி சொன்னேன். எனக்கும் அப்போது 17 வயது தான்.

//என் பெயர் ”புருனோ” (மறுமொழியில் கூட அப்படிதானே வருகிறது)//

மன்னிக்கவும், தட்டச்சு பிழை. சரி செய்துவிட்டேன்.

Expatguru சொன்னது…

அரவாணிகளின் பரிதாப வாழ்க்கையை பற்றி கூறியுள்ளீர்கள். ஆனால் இவர்களை சமுதாயம் இப்படி பார்ப்பதற்கு ஒரு விதத்தில் இவர்கள் நடந்து கொள்ளும் விதமும் காரணமாக இருக்குமோ என்று நினைக்கிறேன். பம்பாய் மாதுங்காவில் தெருவில் நடந்து கொண்டிருக்கும் போது "ஒரு ரூபா குடு, இல்லேன்னா தூக்கி காமிப்பேன்" என்று இவர்கள் பாதசாரிகளை மிரட்டி பணம் பறிப்பதை நேரில் பார்த்திருக்கிறேன். இவர்களின் தொல்லை தாங்காமலேயே பலர் 'நமக்கேன் வம்பு' என்று காசை போட்டு விட்டு செல்வார்கள்.

பொது இடங்களில் தங்களுடைய செய்கைகளினாலேயே மற்றவர்களின் சீண்டலுக்கு ஆளாகிறார்கள் என்பது என்னுடைய கருத்து.

தமிழ் நாடன் சொன்னது…

லிவிங் சுமைல் மட்டுமல்ல கல்கி மற்றும் ரோஸ் போன்ற பல படித்த திருநங்கையரை வலைத்தளங்களில் கானலாம். நம்பிக்கையுடன் முன்னேறும் இவர்களை பார்த்து மற்ற திருநங்கைகள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். சமூகமும் இவர்களை உயர்த்தி மதிக்கவேண்டும். வாழ்க்கை வலிக்காக தன்னை மாற்றிக்கொள்ளாமல் தன் மனத்தின் வலிக்காக தன்னை மாற்றிக்கொண்டவர்கள். இவர்களின் மன உறுதியை இதற்க்காகவெ பாரட்டலாம். ஆதரிக்கலாம். இவர்கள் மீது நாம் இரக்கம் காட்ட தேவையில்லை. சக மனிதராக மதித்தாலெ போதும்.
நல்ல பதிவு வாழ்த்துக்கள்.

நையாண்டி நைனா சொன்னது…

/*அரவாணிகளின் பரிதாப வாழ்க்கையை பற்றி கூறியுள்ளீர்கள். ஆனால் இவர்களை சமுதாயம் இப்படி பார்ப்பதற்கு ஒரு விதத்தில் இவர்கள் நடந்து கொள்ளும் விதமும் காரணமாக இருக்குமோ என்று நினைக்கிறேன். பம்பாய் மாதுங்காவில் தெருவில் நடந்து கொண்டிருக்கும் போது "ஒரு ரூபா குடு, இல்லேன்னா தூக்கி காமிப்பேன்" என்று இவர்கள் பாதசாரிகளை மிரட்டி பணம் பறிப்பதை நேரில் பார்த்திருக்கிறேன். இவர்களின் தொல்லை தாங்காமலேயே பலர் 'நமக்கேன் வம்பு' என்று காசை போட்டு விட்டு செல்வார்கள்.

பொது இடங்களில் தங்களுடைய செய்கைகளினாலேயே மற்றவர்களின் சீண்டலுக்கு ஆளாகிறார்கள் என்பது என்னுடைய கருத்து.*/

ஒரு சிலரின் தவறுக்காக அனைவரையும் தப்பு சொல்வதும் தவறு.
நிற்க.
மேலும் அவர்கள் ரோட்டிலே கையெந்தும் நிலைக்கு காரணம் நாம் அவர்களை வெறுத்து ஒதுக்கி படுத்துவதும் ஒரு காரணம் தானே.

Udayam சொன்னது…

Recently (15 days) back I saw a documentary program in NDTV about these people. It was shot at Chennai and all the eunuch participated in that program are Tamil speaking people.

One eunuch by the name of Preetham described the worst experiences she faced when she was at 14 years. she went perform a dance program in a village. She was boozed heavily. Due to hangover she felt down and went asleep in a cot. The village goons took her along with cot and raped her. (You can understand where). 7 people raped continuously in spite of continuous bleeding from her ass. It was so horrible even to listen her story in the channel. Finally the village big man arranged a parade of all the goons along with others, who did this inhuman act. The worst part is everyone was allowed to escape for a fine 500/ each.

Poor people. If anyone has a chance to see this documentary, please watch.

Baskar

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

மிக அழகாக தங்கள் அனுபவம்; அது தந்த மாற்றங்களைப் பகிர்ந்துளீர்கள்; நிச்சயம் அவர்கள் நிலை உயர இப்படியான மனமாற்றங்கள் அவசியம்.
நம் மனமாற்றத்தால் அவர்களையும் அரவணைத்து வாழ விடும் போது
இவர்களில் மேலும் பலர் வாழ்வில் மாற்ற மேற்படும்.
அது மெல்ல மெல்ல வளர்கிறது போல உள்ளது. மேலும் ஊக்கப் படுத்துவோம்.

வால்பையன் சொன்னது…

//ஒரு அரவாணி வேலை செய்தது அதற்கு ஒரு 16 வயது தான் இருக்கும் என்று நினைக்கிறேன்,//

என்ன ”செய்தது”
”அதற்கு”
இவ்வாக்கியங்கள் எதற்கு பயன்படும் என்று தெரியாது. உயிருள்ள உணர்வுள்ள மனிதரை இப்படி தான் அழைப்பதா!
உடனே அதை ”செய்தார்”,
”அவருக்கு” என்று மாற்றும் படி அன்புடன் கண்டிக்கிறேன்.

வால்பையன் சொன்னது…

//('அது' என்று இங்கே குறிப்பிட்டு இருப்பது அஃறினை பொருளில் அல்ல, நான் அப்போதைய நினைவில் இருந்து எழுதி இருக்கிறேன்//

இது சமாதானத்துக்கா!

வால்பையன் சொன்னது…

பார்வை குறுகியதாக இருக்கிறது.
அவர்கலை பற்றீய உங்களது புரிதல்களை இன்னும் விவரித்திருக்கலாம்.

ஹேமா சொன்னது…

வணக்கம் கோவி கண்ணன்.உங்கள் பதிவுகள் அடிக்கடிபடிக்கிறேன்.
தேவையான யோசிக்கக் கூடிய பதிவுகள்.இந்த திருநங்கைகள் பதிவும் அப்படித்தான்.மனதுக்கே சங்கடமாய் இருக்கிறது.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

நல்ல தேவையான பதிவு

பாச மலர் / Paasa Malar சொன்னது…

'வாடாமல்லி' புத்தகம் சுமார் 3 வருடங்கள் முன்பு படித்தபோதுதான் அவர்களைப் பற்றிய முழுவிபரங்கள் தெரிய வந்தது..நல்ல பகிர்வு..

கோவி.கண்ணன் சொன்னது…

//வால்பையன் said...
//ஒரு அரவாணி வேலை செய்தது அதற்கு ஒரு 16 வயது தான் இருக்கும் என்று நினைக்கிறேன்,//

என்ன ”செய்தது”
”அதற்கு”
இவ்வாக்கியங்கள் எதற்கு பயன்படும் என்று தெரியாது. உயிருள்ள உணர்வுள்ள மனிதரை இப்படி தான் அழைப்பதா!
உடனே அதை ”செய்தார்”,
”அவருக்கு” என்று மாற்றும் படி அன்புடன் கண்டிக்கிறேன்.
//

நான் சொல்லி இருக்கும் நிகழ்வு சின்னப் பையனாக இருந்த போது நடந்தது குறித்து. குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவருக்கு இன்னொரு பெயர் இருக்கிறதா ? நல்லா வாலுங்க ! :)

கோவி.கண்ணன் சொன்னது…

//Expatguru said...
அரவாணிகளின் பரிதாப வாழ்க்கையை பற்றி கூறியுள்ளீர்கள். ஆனால் இவர்களை சமுதாயம் இப்படி பார்ப்பதற்கு ஒரு விதத்தில் இவர்கள் நடந்து கொள்ளும் விதமும் காரணமாக இருக்குமோ என்று நினைக்கிறேன். பம்பாய் மாதுங்காவில் தெருவில் நடந்து கொண்டிருக்கும் போது "ஒரு ரூபா குடு, இல்லேன்னா தூக்கி காமிப்பேன்" என்று இவர்கள் பாதசாரிகளை மிரட்டி பணம் பறிப்பதை நேரில் பார்த்திருக்கிறேன். இவர்களின் தொல்லை தாங்காமலேயே பலர் 'நமக்கேன் வம்பு' என்று காசை போட்டு விட்டு செல்வார்கள்.

பொது இடங்களில் தங்களுடைய செய்கைகளினாலேயே மற்றவர்களின் சீண்டலுக்கு ஆளாகிறார்கள் என்பது என்னுடைய கருத்து.
//

இது ஒரு அரைகுறை புரிதல், திருடனுக்கு பூனைக் கண் இருந்தால், வந்து திருடியவன் பூனைக் கண் உள்ளவன் என்று சட்டென்று அடையாளம் சொல்ல முடியும், மற்றவர்களை அவ்வாறு சொல்ல முடியாது, உடலில் மாறுபட்ட தோற்றம் கொண்டவர்களை எளிதாக அடையாளம் காணலாம்,

அரவாணிகள் தனித்து தெரிவதால் அவர்கள் செய்யும் செயலும் நமக்கு தனியாக தெரிகிறது. மற்றபடி குற்றவாளிகள் என்றால் எல்லோரும் தான் அதில் சில அரவாணிகள் இருக்க மாட்டார்களா ? அப்படியே இருந்தாலும் அவர்களை அந்த பிழைப்புக்கு தள்ளிய சமூகம் தான் அதற்கு வெட்கப்படவேண்டும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//தமிழ் நாடன் said...
இவர்கள் மீது நாம் இரக்கம் காட்ட தேவையில்லை. சக மனிதராக மதித்தாலெ போதும்.
நல்ல பதிவு வாழ்த்துக்கள்.
//

தமிழ்நாடன் மிக்க நன்றி, அவர்களும் இரக்கம் காட்டுங்கள் என்று கெஞ்சவில்லை, எதுவும் செய்யாவிட்டாலும் கிண்டல் அடிக்காதீர்கள் என்றே சொல்லுகிறார்கள்

ஜமாலன் சொன்னது…

வழக்கம்போல் எளிமையாகவும் சிறப்பாகவும் எழுதப்பட்டுள்ளது.

ஒரு சின்னதிருத்தம்.. “அது“ என்கிற அஃறிணைச் சுட்டை விட்டுவிட்டு அவர்கள் அவள் என்ற சொல்லால் குறிப்பதே சரி. காரணம் அவளாக மாறுவது அதாவது “பெண்ணாக இருத்தல்“ என்பதற்கே அவர்கள் இத்தனை துண்பப் படுகிறார்கள் என்பதால் அவர்களை நமது சக பெண் தோழியாராக ஏற்றுக்கொள்வதே முக்கியம். திருநங்கை என்பது shemale எனப்படும் ஒருவகைத் திணையை அடிப்படையாகக் கொண்டு மொழிபெயர்க்கப்பட்டிருக்கலாம். ஆனால் நங்கை என்ற சோல்லி்ல உள்ள அந்த மரபு முக்கியமானது அவர்களை மேன்மையாக நாம் மதிப்பதற்கு.

நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜமாலன் said...
வழக்கம்போல் எளிமையாகவும் சிறப்பாகவும் எழுதப்பட்டுள்ளது.

ஒரு சின்னதிருத்தம்.. “அது“ என்கிற அஃறிணைச் சுட்டை விட்டுவிட்டு அவர்கள் அவள் என்ற சொல்லால் குறிப்பதே சரி.
//

பதிவில் அடைப்புக் குறி குறிப்பு எழுதி இருக்கிறேன். அதற்கும் மேல் பத்தியில் நாகூர் சந்தனக்கூடு ஊர்வலத்தில் செல்லும் ஒருவர் குறித்து எழுதும் போது வயதையும் கருத்தில் கொண்டே எழுதி இருக்கிறேன். உடன்பிறந்தோரில் மூத்தோரை அவள் / அவன் என்று அழைக்காமல் எங்கள் நாகைப் பகுதியில் 'அது' என்றே சொல்லுவார்கள்' 'அண்ணன் சொல்லிச்சுன்னு சொல்லுவாங்க...அண்ணன் சொன்னான் என்று சொல்ல மாட்டாங்க'

:)

துளசி கோபால் சொன்னது…

ஆமாம் கோவியாரே.

நாங்ககூட அக்கா வந்துருக்குன்னு சொல்வோம்.

வந்துருக்காள்னு சொன்னா...அவ இவ ன்னு பேசறமாதிரி ஆயிருதுல்லே?

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

சிறப்பான பார்வை... இவர்களை பெண்ணாக பார்க்கும் பக்குவம் எனக்கு வரவில்லை என்றே கருதுகிறேன்...

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்