பின்பற்றுபவர்கள்

24 ஆகஸ்ட், 2007

*நட்சத்திரம்* : முக்கூடல் நகர் நாகை !

நாகை என்று சுருக்கிக் கூறப்படும் எனது ஊரான நாகப்பட்டினத்தைப் பற்றி பதிவுலக நண்பர்கள் நாகை சிவா மற்றும் வடுவூர் குமார் போன்றோர் எழுதி இருக்கின்றனர். இந்த இடுகையில் நாகையை பற்றி நான் அறிந்தவைகளை இங்கு தருகிறேன்.

நாகப்பட்டினம், நாகர்கோவில் என்ற பெயரை வைத்து அவை அருகருகே இருப்பது போல் எனது சென்னை நண்பர்கள் நினைத்துக் கொள்வார்கள். பலருக்கும் கூட அந்தக் குழப்பம் இருக்கும். எனக்கும் பல ஊர் பெயர்கள் தெரிந்தாலும் அங்கு சென்றதில்லை என்பதால் அந்த ஊர்களின் இருப்பிடம் குறித்த தெளிவு இருக்காது. சென்னையிலிருந்து கன்யாகுமரி வரை உள்ள கிழக்கு கடற்கரையில் நடுவில் அமைந்திருக்கிறது நாகை. சென்னையில் இருந்து சரியாக 300 கி.மீ. அதே தொலைவு தான் கன்யாகுமரிக்கும் நாகைக்கும் இடையில் இருக்கிறது. கூகுள் புவிப்படத்தில் (மேப்) தெளிவாக தெரியும்.

ஆங்கிலேயர்காலத்திலும் அதன் பிறகு சென்ற முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை கப்பல் வழி வணிகம் நாகையில் கொடிகட்டி பறந்தது. கப்பலில் சுமை தூக்கும் வேலைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த தேவர் வகுப்பு பாட்டாளிகள் பின்பு அங்கேயே தங்கி நகரின் மையப் பகுதிகளில் 1000 குடும்பங்களுக்கு மேல் வசிக்கின்றனர். அது போல் கப்பல் வழி வணிக போக்குவரத்திற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து அதில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர் சமுதாயமும் நாகையில் வாழமுடிவு செய்து நகரின் மற்றொரு பகுதியில் 1000 குடும்பங்களுக்கும் மேல் வசிக்கின்றனர். இதைத் தவிர மற்ற இந்து பிரிவினர் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை சாதி பெயர் தாங்கிய தெருக்களில் அந்தந்த சாதியினரே வசித்து வந்தனர். இப்பொழுது எல்லா சாதியினரும் அனைத்து தெருக்களிலும் வசிக்கிறார்கள், ஊர் பெரியதாகிவிட்டது என்றாலும் மாவட்ட தலைநகரம் என்ற தகுதியில் இருக்கும் மிக சிறிய நகரம் (நகராட்சி), எண்ணை வளம், இயற்கை சமையல் வாயு போன்ற தொழில் துறைகளும் அதன் நிறுவனங்களும் அருகிலேயே அமைந்திருக்கிறது. நாகை மாவட்டத்தின் முதன்மை தொழில் விவசாயம் அதில் நெல் சாகுபடி தான். யூனியன் பகுதியான காரைக்கால் நாகைக்கு வெகு அருகில் இருப்பதால் நாகை குடிமகன்களுக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டதே இல்லை. :) பேருந்து நிலையத்தில் விற்கப்படும் பொருட்கள் குளிர் பாணங்களுக்கு கூடுதலாக விலை வைக்க மாட்டார்கள்.

நாகையில் மும்மதத்தினர் தற்போது வசிக்கின்றனர், துறைமுகமாக சோழர்காலத்தில் இருந்த நாகையில் அவர்கள் அமைத்த புத்தவிகார் இருந்ததாக வரலாற்றுச் செய்திகள் சொல்லுகின்றன. நாகர் என்னும் பழங்குடியினர் வாழ்ந்ததால் நாகப்பட்டினம் என்ற பெயர் பெற்றதாக தெரிகிறது. நாகையில் வெள்ளையர்கள் பல மாளிகைகளைக் கட்டி தமிழக தென்பகுதில் ஒரு சிறிய நகரமாகவே வைத்து இருந்தனர். இன்றும் வெள்ளையர் ஆட்சியில் கட்டப்பட்ட தண்ணீர் தொட்டியிலிருந்தே நாகையின் நகராட்சி மூலம் வீடுகளுக்கு அனுப்பப்படுகிறது. அது போல் வெள்ளையர் கட்டிய பலமாளிகைகள் அரசு அலுவலகங்களாகவும், நீதிமன்றங்களாகவும், நீதியரசர்கள் தங்கும் மாளிகைகளாகவும், அரசு விருந்தினர் மாளிகைகளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெள்ளையர்கள் நாகப்பட்டினம் என்பதை பலுக்குவதில் திணறி NEGAPATAM (நேகபடம்) என்று சொல்லிவந்தாக தெரிகிறது.தீயணைப்பு நிலையத்தில் இந்த ஆங்கில பெயர் பெறிக்கப்படடு, 1853 என ஆண்டு குறிப்பும் இருக்கும். சுனாமி இழப்பீடுகளை (நிவாரணம்) பார்வையிட அமெரிக்க அதிபர் கிளின்டன் நாகைக்கு வந்து சென்றிருக்கிறார். நாகை அரசு மருத்துவ மனை மிகப்பெரியது.

மதவிகித மக்கட் தொகையில் மாவட்ட அளவில் இந்துக்கள் பெருமளவிலும், நகர அளவில் இஸ்லாமியர்களும் இந்துக்களும் சம அளவில் இருக்கின்றனர். குறிப்பிடும் அளவுக்கு கிறித்துவர்களும் இருக்கிறார்கள். நாகையின் நடுநாயகமாக இருப்பது திரு காயாரோகண சுவாமி - நீலாயதாட்சி திருக்கோவில் சைவ மும்மூர்த்திகளால் பாடல் பாடப்பட்ட மிகப்பெரிய தலம். அது போல் வைணவர்களால் பாடல் பெற்ற தலமான செளந்தராஜ பெருமாள் கோவில் ஆகியவை மிகப்பெரிய ஆலயங்களாக இருக்கிறது. இதைதவிர 50க்கும் மேற்பட்ட சிறிய கோவில்கள் நகரம் முழுவதும் இருக்கிறது. சைவ ஆலயங்கள் இருக்கும் ஊர்களுக்கு முன்னால் அதைக்குறிக்க 'திரு' என்று அடைமொழி பெயர் இருக்கும் (திருவாரூர் இன்னும் பல ) அது போல் நாகையை பற்றிய பக்தி பாடல்களில் திருநாகை என்றும் அந்த பெயர் வழக்கில் இருந்து மறைந்து நாகையாக சுருங்கிவிட்டது.


நாகையின் தனிச்சிறப்பு மும்மத்தினர் விழாக்களில் சேர்ந்து மகிழும் முக்கூடல் நகர் என்றால் அது மிகையல்ல. ஏனென்றால் கத்தோலிக்க கிறித்துவர் புண்ணிய நகரமான வேளாங்கன்னி ஆலயமும், தர்கா வழிபாடு செய்யும் முஸ்லிம்கள் (வாகபிகள் அல்லாதோர்) நாடும் நாகூர் ஆண்டவர் கோவிலும் நாகைக்கு இடம், வலமாக இருப்பதும், அவற்றிற்காக நடக்கும் சந்தனக்கூடு, மாதா பிறந்தநாள் போன்ற திருவிழாக்களும், ஊருக்குள் நடக்கும் கோவில் திருவிழக்களும் நாகையை எப்பொழும் விழா கோலம் பூண்ட ஊராகவே வைத்திருக்கும்.
மும்மத கோவில்களின் கண்ணுற (தரிசனம்) வேண்டுபவர், நாகையின் கலங்கரை விளக்கில் ஏறிநின்று பார்த்தால் சிக்கல் சிங்கார வேலர் கோவில், வேளாங்கன்னி சர்ச் மற்றும் நாகூர் மினோராக்களை ஒரே நேரத்தில் பார்க்க முடியும்.

இதைத்தவிர, மறை மலை அடிகளார் பிறந்த ஊர் என்ற சிறப்பு பெற்றது நாகை. கவி காளமேக புலவர் வாழ்ந்த ஊர் என்ற சிறப்பும் இருக்கிறது.

வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன?
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை? - மங்காத
சீரகத்தைத் தந்தீரேல், தேடேன் பெருங்காயம்!
ஏரகத்துச் செட்டியாரே!


கவி காளமேகம் எழுதிய இருபொருள் பாடல். பாடலைப் படிக்கும் போது செட்டியார் கடையில் மளிகை பொருள்களைக் கேட்பது போல் இருக்கும், ஆனால் பாடலின் பொருள் அதுவன்று. வெண்மையான உடலானது மூப்பு அடையக்கூடியது எனவே இதைவிடுத்து உனது திருவருளைப் தா, வேறு எதுவும் வேண்டாம் முருக பெருமானே என்பதுதான். முருகனுக்கு செட்டியார் என்ற பெயரும் உண்டு. (ஓசை செல்லாவின் பதிவில் ஒலியுடன் விளக்கம் இருகிறது)

காளமேகப் புலவர் சொல்வது பலிக்குமாம், அதற்கு பயந்து எல்லோரும் அவர் கேட்கும் முன்பே உணவளிப்பார்கள் ஒரு முறை கவி காளமேகத்தின் மீது சிறுவர்கள் பாக்குக் கொட்டைகளை வீசி அவரை தொல்லைப் படுத்தினராம். அவர் தாங்க மாட்டாது அவர்களுக்கு சாபம் கொடுப்பதற்காக கரியை எடுத்து சுவற்றில் ஒரு பாடலை எழுதினாராம், அதாவது,

பாக்கு தெறித்து ஆடும் பாலருக்கு
நாக்கு....


என்று எழுதிக் கொண்டிருக்கும் போது 'சாமி சாப்பிட வாங்க' என்று ஒரு அம்மையார் இவருக்கு உணவு தர அழைக்க அப்படியே விட்டு சென்றாராம்.
அவர் சென்றதும் அங்கு வந்த சிறுவர்கள் என்ன எழுதி இருக்கிறார் என்று அருகில் சென்று பார்த்த போது முற்றுபெறாமால் இருந்ததை கண்டு,

எஞ்சிய சொற்களைச் சேர்த்து

பாக்கு தெறித்து ஆடும் பாலருக்கு
நாக்கு தமிழ் மணக்கும் நன்நாகை


என்று முடித்து சிறுவர்கள் சென்றுவிட்டனர். திரும்பி வந்து பார்த்த காளமேகத்துக்கு வியப்பாகி விட்டதாம்.

எனென்றால் அவர்

பாக்கு தெறித்து ஆடும் பாலருக்கு
நாக்கு 'தெறிக்க' .....


என்று சாபமாக எழுத நினைத்திருந்தாராம். சரியான நேரத்தில் சிறுவர்கள் சாபம் பெறாமல் தப்பித்தனர். இது போல் பல செய்திகளை காளமேகப் புலவர்பற்றி எனது தந்தையார் என்னுடன் பகிர்ந்திருக்கிறார். நாகையைச் சேர்ந்தவர்களுக்கு ஓரளவு தெரியும்.

புயல் சின்னம், சுனாமி என்று மட்டும் நாகையை தெரிந்து வைத்திருப்பவர்களுக்கு இந்த சிறிய கட்டுரை மாற்றுச் செய்திகளை தந்திருக்கும் என்று நம்புகிறேன்.

--
அன்புடன்,

கோவி.கண்ணன்

18 கருத்துகள்:

ஜோ/Joe சொன்னது…

//நாகப்பட்டினம், நாகர்கோவில் என்ற பெயரை வைத்து அவை அருகருகே இருப்பது போல் எனது சென்னை நண்பர்கள் நினைத்துக் கொள்வார்கள். பலருக்கும் கூட அந்தக் குழப்பம் இருக்கும். //

உண்மை தான் .சிலர் நாகை என்பது நாகர்கோவிலின் சுருக்கம் என்று கூட நினைக்கிறார்கள் .பலருக்கு புவியியலே தெரிவதில்லை .நான் கன்னியாகுமரி என்றால் "ஓ! ராமேஸ்வரம் பக்கம் தானே" என்பார்கள் .இரண்டு ஊரிலும் கடல் இருந்தால் பக்கமாய் தான் இருக்கும் என நினைப்பார்கள் போலிருக்கிறது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

அருமையான தகவல்கள்! காளமேகப் புலவர் பாடல்கள் ரசித்தேன்.
இந்த நாகப்பட்டனத்துக்கு என் தந்தை தன் இளமையில், வியாபாரப் படகில் வந்ததாகக் கூறியுள்ளார்.

VSK சொன்னது…

திருநாகையைப் பற்றி பல அரிய தகவல்களை அளித்தமைக்கு நன்றி, கோவியாரே!

இதப் படிக்கையில், இது போலவே உண்மைத் தகவல்களை மட்டுமே அளித்து உங்கள் நட்சத்திர வாரத்தை அளித்திருக்கலாமே என்ற ஆதங்கம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

இன்னும் ஒருநாள் இருக்கு!

எரிநட்சத்திரமாகாமல், நல்லபடியாக முடியுங்கள்!
:))

வடுவூர் குமார் சொன்னது…

அப்படியே "வெளிநாட்டு" சாமான்கள் விற்கும் "அந்திக்கடை" வேகமாக ஓடினால் 10 நொடிக்குள் கடந்துவிடக்கூடிய நாகை கடைதெருவை கூட சொல்லியிருக்கலாம்.
சின்ன வயதில் அந்திக்கடைக்குப் போய் விலை கேட்காமல் கண்ணாடி பெட்டிக்குள் இருக்கும் பொருட்களை ஏக்கத்துடன் பார்த்திருக்கேன்.விலை கேட்டால் வாங்கியே ஆக வேண்டும் என்று எழுதப்படாத விதிமுறை அப்போது இருந்தது. :-)
இன்றும் கடைத்தெருவில் மும்மதத்தாரும் சேர்ந்து வாழும் அழகு நன்கு வெளிப்படும்.
என்னுடன் படித்தவன் ஒரு கடையும் இன்னொருவன் பூவும் கட்டிக்கொண்டிருக்கிறான்.எப்போது போனாலும் சில வார்த்தை பேசிவிட்டு வருவேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

// ஜோ / Joe said...
உண்மை தான் .சிலர் நாகை என்பது நாகர்கோவிலின் சுருக்கம் என்று கூட நினைக்கிறார்கள் .பலருக்கு புவியியலே தெரிவதில்லை .நான் கன்னியாகுமரி என்றால் "ஓ! ராமேஸ்வரம் பக்கம் தானே" என்பார்கள் .இரண்டு ஊரிலும் கடல் இருந்தால் பக்கமாய் தான் இருக்கும் என நினைப்பார்கள் போலிருக்கிறது.
//

ஜோ,

சுவையான தகவல். தென்மாவட்டங்கள் பற்றி எனக்கும் தெரியாது. கன்யாகுமரி சென்று வர நீண்ட நாள் ஆசை.

கோவி.கண்ணன் சொன்னது…

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
அருமையான தகவல்கள்! காளமேகப் புலவர் பாடல்கள் ரசித்தேன்.
இந்த நாகப்பட்டனத்துக்கு என் தந்தை தன் இளமையில், வியாபாரப் படகில் வந்ததாகக் கூறியுள்ளார்.
//

யோகன் ஐயா,

கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி,

நீங்களும் அனைத்து பதிவுகளைப் படித்து பாராட்டியிருக்கிறீர்கள். மிக்க நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
அப்படியே "வெளிநாட்டு" சாமான்கள் விற்கும் "அந்திக்கடை" வேகமாக ஓடினால் 10 நொடிக்குள் கடந்துவிடக்கூடிய நாகை கடைதெருவை கூட சொல்லியிருக்கலாம்.
சின்ன வயதில் அந்திக்கடைக்குப் போய் விலை கேட்காமல் கண்ணாடி பெட்டிக்குள் இருக்கும் பொருட்களை ஏக்கத்துடன் பார்த்திருக்கேன்.விலை கேட்டால் வாங்கியே ஆக வேண்டும் என்று எழுதப்படாத விதிமுறை அப்போது இருந்தது. :-)
இன்றும் கடைத்தெருவில் மும்மதத்தாரும் சேர்ந்து வாழும் அழகு நன்கு வெளிப்படும்.
என்னுடன் படித்தவன் ஒரு கடையும் இன்னொருவன் பூவும் கட்டிக்கொண்டிருக்கிறான்.எப்போது போனாலும் சில வார்த்தை பேசிவிட்டு வருவேன்.
//

1,2...9 என்பதை LUCKYSTAR என்ற எழுத்தை வைத்து அவர்களுக்குள் பேசிக் கொள்வது பின்பு ஒரு இஸ்லாமிய நண்பர் சொன்ன போது எனக்கு புரிந்தது 75 ரூபாய் என்பதை 'TY' என்பார்கள். சங்கேத எண்கள்.

சென்னை அளவுக்கு விலை கேட்டவர்களை மிரட்டும் அளவுக்கெல்லாம் நான் பார்த்து, கேள்விப்பட்டதில்லை. சென்னை பர்மாபஜார் கடைகளில் அடிவாங்காத குறையாக தப்பி வந்திருக்கிறேன். சென்னை கடைகளில் 'சரி ஒரு விலையை கேளூ' என்று கைகளில் திணிபார்கள், வாங்கிவிட்டால் போச்சு, அதன் பிறகு வாங்க விருப்பம் இல்லை என்றால் ஏன் கையில் வாங்கினாய் என்று நான்கு பேர்கள் கூடிக் கொள்வார்கள். பயப்படுகிறவர்கள் பணத்தை அழுதுவிட்டு திரும்ப வேண்டியது தான். நாகையில் இது போல் நடப்பதில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

கோவி.கண்ணன் said...
// VSK said...
திருநாகையைப் பற்றி பல அரிய தகவல்களை அளித்தமைக்கு நன்றி, கோவியாரே!
//

பாராட்டுக்கு நன்றி,

//இதப் படிக்கையில், இது போலவே உண்மைத் தகவல்களை மட்டுமே அளித்து உங்கள் நட்சத்திர வாரத்தை அளித்திருக்கலாமே என்ற ஆதங்கம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.//

அழுக்கிலிருந்து திரண்டதாக சொல்லப்படும் பிள்ளையார் ஆபாச புராண கதைகளையும், கந்தப் புராண புளுகுகளையும் சுவை குன்றாமல் தந்து 'உண்மை' பேச எனக்கும் ஆசைதான். பக்தியாளர்களையும் மனதில் கொள்ள வேண்டி இருக்கிறது. இருமனைவைகளை கொண்டும் திரா'விடக்' கடவுள் முருகன் பிள்ளைப் பெற்றுக் கொள்ள 'முடியவில்லை' என்றால் அவனுக்கு 'வயக்கராவை' பரிந்துரைக்கிறேன் என்று சொல்லிய ஒரு 'வைதிக' பதிவர் எழுதி பக்தியாளர்களின் 'பாராட்டுக்களைப்' பெற்றுக் கொண்ட அளவுக்கு ஆராய்ச்சி நடத்தி *உண்மைகளை* சொல்கிறேன் எனும் முற்போக்கு சிந்தனையாளன் நான் இல்லை

எனக்கு அந்த உண்மைகள் வேண்டாம். நான் பக்தியாளர்களின் உணர்வுகளை மதிப்பவன்.

//

இன்னும் ஒருநாள் இருக்கு!

எரிநட்சத்திரமாகாமல், நல்லபடியாக முடியுங்கள்!//

வாழ்த்துக்கு நன்றி.
:))

சிவபாலன் சொன்னது…

GK,

நாகைப் பற்றி நல்ல விளக்கம்..

நானும் சிறு வயதில் இந்த நாகப்பட்டிணத்திற்கும் நாகர்கோவிலுக்கும் வித்தியாசம் தெரியாமல் முளிப்பேன்..:-)

கோவி.கண்ணன் சொன்னது…

//சிவபாலன் said...
GK,

நாகைப் பற்றி நல்ல விளக்கம்..

நானும் சிறு வயதில் இந்த நாகப்பட்டிணத்திற்கும் நாகர்கோவிலுக்கும் வித்தியாசம் தெரியாமல் முளிப்பேன்..:-)
//

சிபா,

இப்பவும் கூட மு'ழி'க்கிறீர்கள், ஹிஹி எழுத்துபிழை. :)

பாராட்டுக்கு நன்றி !

வெற்றி சொன்னது…

அடடா,
கோ.க,
எனது அயலவரா நீங்கள்?!! நாகப்பட்டினத்தில் இருந்து கடல் கடந்தால்[ஈழத்தில்] என் ஊர்.:-)) எனது ஊரும் கரையோரக் கிராமம் தான்.

/* கிழக்கு கடற்கரையில் நடுவில் அமைந்திருக்கிறது நாகை. சென்னையில் இருந்து சரியாக 300 கி.மீ. */

சென்னைக்கு 300 கி.மீ தூரம். எனது ஊர் நாகப்பட்டிணத்திலிருந்து 50 கி.மீ க்குள் தானிருக்கும் என நினைக்கிறேன். :-))


நல்ல பதிவு. நாகப்பட்டினம் பற்றிய தகவல்கள் சுவாரசியமானவை.

/* நாகர் என்னும் பழங்குடியினர் வாழ்ந்ததால் நாகப்பட்டினம் */

மிகவும் சுவாரசியமான தகவல். இலங்கையின் வரலாற்றின் படி இலங்கையின் ஆதிகுடிகள் நாகர், இயக்கர் எனப்படுபவர்கள் என்பர் சில வரலாற்றாசிரியர்கள்.

யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு தீவு நாகதீபம்[நயினா தீவு]. இங்கு நாகர்கள் வாழ்ந்தார்களாம். நாக இனத்தைச் சேர்ந்த இரு மன்னர்களுக்குள் இருந்த பிரச்சனையைத் தீர்த்து வைக்க புத்த பிரான் இத் தீவுக்கு வந்து சென்றார் என சிங்களவர்கள் நம்புகின்றனர்.

இந்த நயினாதீவு நாகப்பட்டினத்திற்கு மிக அண்மையில் உள்ளதால் இவர்களுக்குள் முந்தியே தொடர்புகள் இருந்திருக்குமோ?!


/* நாகப்பட்டினம், நாகர்கோவில் என்ற பெயரை வைத்து அவை அருகருகே இருப்பது போல் எனது சென்னை நண்பர்கள் நினைத்துக் கொள்வார்கள். */

யாழ்ப்பாணத்திலும் நாகர் கோயில் எனும் இடம் உண்டு. :-))

எனக்கும் இப்படியான சில[இடங்களைப் பற்றி] குழப்பங்கள் உண்டு.

நாடோடி இலக்கியன் சொன்னது…

நாகையைப் பற்றி ஏற்கனவே தெரிந்திரிந்தாலும்,கோவியாரின் எழுத்தில் படிப்பது ஒரு சுகம்தான்!.நல்லப் பதிவு.

கோவி.கண்ணன் சொன்னது…

//நாடோடி இலக்கியன் said...
நாகையைப் பற்றி ஏற்கனவே தெரிந்திரிந்தாலும்,கோவியாரின் எழுத்தில் படிப்பது ஒரு சுகம்தான்!.நல்லப் பதிவு.
//

நாடோடி இலக்கியன் ஐயா,
மனம் திறந்த பாராட்டில் நெஞ்சம் நெகிழ்கிறது. மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//வெற்றி said...
அடடா,
கோ.க,
எனது அயலவரா நீங்கள்?!! நாகப்பட்டினத்தில் இருந்து கடல் கடந்தால்[ஈழத்தில்] என் ஊர்.:-)) எனது ஊரும் கரையோரக் கிராமம் தான்.

சென்னைக்கு 300 கி.மீ தூரம். எனது ஊர் நாகப்பட்டிணத்திலிருந்து 50 கி.மீ க்குள் தானிருக்கும் என நினைக்கிறேன். :-))


நல்ல பதிவு. நாகப்பட்டினம் பற்றிய தகவல்கள் சுவாரசியமானவை.

மிகவும் சுவாரசியமான தகவல். இலங்கையின் வரலாற்றின் படி இலங்கையின் ஆதிகுடிகள் நாகர், இயக்கர் எனப்படுபவர்கள் என்பர் சில வரலாற்றாசிரியர்கள்.

யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு தீவு நாகதீபம்[நயினா தீவு]. இங்கு நாகர்கள் வாழ்ந்தார்களாம். நாக இனத்தைச் சேர்ந்த இரு மன்னர்களுக்குள் இருந்த பிரச்சனையைத் தீர்த்து வைக்க புத்த பிரான் இத் தீவுக்கு வந்து சென்றார் என சிங்களவர்கள் நம்புகின்றனர்.

இந்த நயினாதீவு நாகப்பட்டினத்திற்கு மிக அண்மையில் உள்ளதால் இவர்களுக்குள் முந்தியே தொடர்புகள் இருந்திருக்குமோ?!


யாழ்ப்பாணத்திலும் நாகர் கோயில் எனும் இடம் உண்டு. :-))

எனக்கும் இப்படியான சில[இடங்களைப் பற்றி] குழப்பங்கள் உண்டு.
//

வெற்றி அவர்களே,
நாகர்கள் பற்றி மேலும் அரிய தந்திருக்கிறீர்கள், மிக்க நன்றி.

நாகை பகுதி மீனவர்கள் முன்பெல்லாம் கட்டுமரங்களின் வழியாக யாழ்பாணம் வரை சென்று வருவதாக சொல்லுவார்கள்.

Unknown சொன்னது…

//வெள்ளையர்கள் நாகப்பட்டினம் என்பதை பலுக்குவதில் திணறி NEGAPATAM (நேகபடம்) என்று சொல்லிவந்தாக தெரிகிறது.//
நல்ல தகவல்கள்.
நான் எட்டாவது படிக்கும்போது என் வரலாற்று ஆசிரியர்
"வெள்ளையர்களுக்கு வாயில் வராததால்
நாகப்பட்டினம் - நாக்பட்டேம் ஆனது
கள்ளிக்கோட்டை - காலிகட் ஆனது
திருவனந்தபுரம் - டியூட்டிகொரீன் ஆனது
திரிசிரபுரம் - திரிசினாபோலி (Trichy)ஆனது" என்றும் சொல்வார்.

ரூபஸ் சொன்னது…

நானும் நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவன் தான். சொந்தவூர் வேளாங்கண்ணி.
எங்கள் மாவட்டத்தைப்பற்றி நிறையவிஷயங்கள் தெரிந்துகொண்டேன்..
உண்மையிலேயே நாங்கள் பெருமைப்படும் விஷயம் என்னவேன்றால், சமைய ஒற்றுமைதான்..

Subbiah Veerappan சொன்னது…

////Blogger கோவி.கண்ணன் said...
// SP.VR. SUBBIAH said...
////Blogger krish said...
நாகப்பட்டிணத்தை பற்றி கவி காளமேகம் எழுதிய கவிதை தெரியுமா?
கோவியாரை கேளுங்கள்.////
காளமேகத்தின் பாடல் நாகபட்டிணத்தைப் பற்றியதல்ல!
அங்கே இருந்த காத்தான் என்பவருடைய தங்கும் விடுதியை (சத்திரத்தைப்) பற்றியது
//
ஓரளவு இங்கு சொல்லி இருக்கிறேன்//////

படித்தேன் சுவையாக உள்ளது! நன்றி
இது தொடர்பாக என்னிடமும் ஒரு செய்தி உள்ளது. அது வேறு ஒரு ஆசுகவியைப் பற்றியது.
அவர் பெயர் பாடுவார் முத்தப்ப செட்டியார். தனிப் பதிவாக அடுத்தவாரம் எழுதுகிறேன். படித்து மகிழுங்கள்!

Subbiah Veerappan சொன்னது…

////Blogger கோவி.கண்ணன் said...
// SP.VR. SUBBIAH said...
////Blogger krish said...
நாகப்பட்டிணத்தை பற்றி கவி காளமேகம் எழுதிய கவிதை தெரியுமா?
கோவியாரை கேளுங்கள்.////
காளமேகத்தின் பாடல் நாகபட்டிணத்தைப் பற்றியதல்ல!
அங்கே இருந்த காத்தான் என்பவருடைய தங்கும் விடுதியை (சத்திரத்தைப்) பற்றியது
//
ஓரளவு இங்கு சொல்லி இருக்கிறேன்//////

பின்னூட்டத்தில் சுட்டியைக் கொடுப்பதற்கான HTML Tagஐப் பற்றிச் சொல்லித்தாருங்கள் கோவியாரே!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்