பின்பற்றுபவர்கள்

10 ஜனவரி, 2011

துரோணாச்சாரியாரும் உச்ச நீதிமன்றமும் !

ஒரு சமூக நீதி தொடர்பான தீர்பின் ஊடாக தூரோனாச்சாரியாரின் செயலை பற்றி எதிர் கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம். அதாவது தன்னை குருவாக உருவகித்து ஏகலைவன் கற்றத் தேர்ந்து கூடவே வெல்ல முடியாதவன் என்ற தகுதியைப் பெற்றதற்கு காணிக்கையாக தூரோனாச்சாரியார் ஏகலைவன் கட்டைவிரலைக் கேட்பது பற்றிய கதை அனைவருக்கும் தெரிந்ததே, அதைத்தான் உச்ச நீதிமன்றம் கண்டனம் செய்திருக்கிறது. தன்னுடைய நேரடி மாணவன் ஆக இல்லாதவனிடம் காணிக்கை கேட்டதில் உள்நோக்கம் இருந்தது, அதன் படி ஏகலைவன் என்கிற ஒரு சிறந்த வேட்டுவ வீரனை தலையெடுக்கவிடாமல் செய்து அந்த புகழை அர்சுனனுக்கு கிடைக்குமாறு துரோணாச்சாரியார் செய்தது கடைந்தெடுத்த ஐயோக்கியத் தனம் கண்டனத்துக்குரியது, துரோணரின் செயல் அவமானமானது என்பதாக தீர்பில் சொல்லப்பட்டுள்ளது.

*****

எனக்கு இந்துமதம் என்கிற ஒருங்கிணைந்த இந்திய சமயங்களுக்கான பொதுப் பெயரில் எப்போதுமே ஒப்புதல் இல்லை. இந்துமதத்தினர் என்பவர் யார் யார் ஆப்ரகாமிய மதங்களைச் சாரதவரோ அவர்கள் அனைவரும் இந்துக்கள் என்பதாக வெள்ளைக்காரன் வழிகாட்டுதலின் பெயரில் நமது சமயம் எது என்பதன் பெயருக்கு உடைய இடத்தில் இந்துமதம் என்று போடப்பட்டுள்ளது என்பதைத் தவிர்த்து இந்துக்களில் பெரும்பான்மையினர் விரும்பி அதனைப் போட்டுக் கொண்டதில்லை. அல்லது இந்து மதம் என்பதன் பொருள் தெரியாதவர்கள் இந்து மதத்தினரின் பெரும்பான்மையாக இருக்கின்றனர் என்றும் சொல்லலாம். மதத்திற்கான கொள்கைகள் என்பதில் பார்பனர்கள் போற்றும் நான்கு வேதங்களை ஏற்றுக் கொள்பவர்கள் இந்துக்கள் என்பதாக இந்துமதத்தினருக்கு கொடுக்கப்படும் விளக்கம்.

இந்துகளில் எத்தனை பேருக்கும் அப்படியான நான்கு வேதங்கள் இருப்பது தெரியும் ? நான்கு வேதங்களும் அதை மேற்கோள் காட்டி பின்னர் வந்த பகவத் கீதை, மனு உள்ளிட்டதில் இருக்கும் நான்கு வருண கோட்பாட்டை பார்பனரில் பெரும்பான்மையினர் தவிர்த்து இந்துக்களின் பெரும்பான்மையினர் தற்காலத்தில் ஏற்றுக் கொள்வதில்லை. எனவே இந்து மதத்தினர் நான்கு வேதங்களை போற்றுபவர்கள் என்கிற அடிப்படையே ஆட்டம் கண்டவையே. பிறகு எது தான் இந்து மதம் ? இந்துமதம் என்பது ஒரு பொதுப் பெயர் தான். இந்தியர் என்பதில் இந்திய இஸ்லாமியர், கிறித்துவர்கள் மற்றும் ஆங்கிலோ இந்தியரும் அடக்கம் என்பது போல் தனித் தனியான பல் வேறு சமய நம்பிக்கைகளை உடைய இந்தியம் சாராத சமயத்தினர் தவிர்த்து அனைவரும் இந்துக்கள்.

இந்து சமயத்தின் மூட நம்பிக்கை என்பது பொதுவாக இந்துக்கள் அனைவரிடமும் இருக்கும் மூட நம்பிக்கை அல்ல. அதனுள் இருக்கும் குறிப்பிட்ட பிரிவில் இருக்கும் மூடநம்பிக்கை சார்ந்தது மட்டுமே. வைணவர்களிடம் இருக்கும் சில நம்பிக்கைகள் சைவர்களிடம் இருக்காது, அது போல் குலதெய்வ வழிபாட்டினர், சக்தி வழிபாட்டினர் இவர்களிடம் இருக்கும் நம்பிக்கை பிறரிடம் இருக்காது, எனவே இந்து சமய மூடநம்பிக்கை இந்துக்களுக்கு பொதுவானதோ, பொதுப்படுத்துதலில் அடக்குவதோ தவறு, அல்லது இந்திய சமயம் சார்ந்த தெளிவுகள் எதுவுமே இல்லாமல் பொதுப் படையாகச் சொல்லும் ஒரு மேலோட்டமான விமர்சனம் மட்டுமே. தலையில் தேங்காய் உடைப்பதோ, குழந்தைகளை குழிக்குள் போட்டு பிறகு எடுப்பதோ இந்துக்கள் அனைவரின் செயல் அல்ல, அது போல் பூணூல் அணிவதன் மூலம் தாம் உயர்ந்த பிராமணப் பிறவி (இருபிறப்பு) அடைவதாகக் கூறிச் செய்யும் பார்பனர்கள் மற்றும் ஆசாரி, செட்டியார் உள்ளிட்டோரின் மூட நம்பிக்கை இந்து மதத்தினர் அனைவருக்கும் பொதுவானதோ, வலியுறுத்தப்பட்டதோ அல்ல. இந்துமதத்தின் பொதுவான நம்பிக்கை இதுதான் என்று சொல்ல அறுதியிட்டு எதுவும் இல்லை. ஆப்ரகாமிய மதங்களின் தாக்கத்தில் பொதுவான புனித நூல் 'பகவத் கீதை' என்பது நீதிமன்றத்தில் பயன்படுத்தப்படுகிறது, தீவிர சைவர்களை அதில் சத்தியம் செய்யச் சொன்னால் வெறும் கடமைக்குத்தான் செய்வார்கள்.

*****

முதல் பத்திக்கும் மேற்கண்ட இந்து சமயம் சார்ந்த தகவல்களுக்கும் தொடர்பில்லை, இந்திய நிலப்பரப்பின் பழங்கதைகள் என்பதாக இராமயணம் மகாபாரதம் உள்ளிட்டவை, அவைகளும் பல்வேறு உள்ளடக்கத்துடன் (வெர்சன்) ஆயிரம் ஆண்டுகளாகச் சொல்லப்படுகின்றன, இன்றைக்கு அவற்றை படிக்கும் நாம் அறிவாளிகள் போலவும், அவற்றில் இருப்பது அபத்தங்கள், முறையற்றவை போன்றும் நமக்குத் தெரிவதற்கு இன்றைய வாழ்வியல் சூழல் என்பது தவிர்த்து வேறெதுவுமே இல்லை. மேற்கண்ட துரோணர் - ஏகலைவன் கதையையே எடுத்துக் கொண்டால், ஏகலைவன் என்கிற பாத்திரம் கதையில் வைத்திருக்க காரணம், தூரோணர் என்பவரின் ஆசிரியர் திறமையை சிறப்பிக்க வரும் ஒரு பாத்திரம், அதாவது அந்த ஆசிரியரை மனதினால் நினைத்தாலே அவர் கற்றுக் கொடுக்க வேண்டியவற்றை அவர் இல்லாமலேயே கற்றுக் கொள்ள முடியும், என்பது தான் அந்த ஏகலைவன் பாத்திரத்தின் மூலம் கதையில் சொல்ல வருவது, மகாபாரதத்தில் இது ஒரு கிளைக்கதைதான்.

ஏகலைவன் ஒரு வேடன், இயல்பாக வில் ஏற்றம் செய்யக் கூடியவன், மேலும் அவனுக்கு ஒரு ஆசிரியர் கிடைக்கும் போது அவன் அதில் சிறந்தவன் ஆகிறான், எது போன்ற ஆசிரியர் என்பதில் துரோணர் என்பதை பதிலாக வைத்திருக்கும் ஒரு கிளைக்கதை, அந்த ஏகலைவன் பாத்திரமே துரோணரின் ஆற்றலைக் குறிக்கப் பயன்படுத்தும் ஒரு குறியிடூ, அத்துடன் அந்தப் பாத்திரம் கதைக்குத் தேவை இல்லை என்பதாக கட்டைவிரலை வெட்டிக் காணிக்கைக் கேட்பதுடன் அந்தப் பாத்திரத்தை ஓரம் கட்டிவிட்டு மகாபாரதக் கதை அடுத்தப் பகுதிக்கு கதை நகர்ந்துவிடும். இதே போன்று இராமயணத்தில் சொல்லபடும் வாலியின் பாத்திரமும் அவன் அளவில் அவனுடைய பலம் எதிரே போருக்கு நிற்பவனைவிட இருமடங்கு என்பதாக சொல்வது அவன் எளிதில் நேருக்கு நேர் வெல்ல முடியாதவன் என்று சொல்வதற்கான ஒரு கதை சொல்லும் உத்திமட்டுமே, பிறகு எப்படி வெல்லப்பட்டான் ? என்று சொல்ல இராமன் மறைந்திருந்து வில் ஏற்றிக் கொன்றான் என்பதாக அந்த கிளைக்கதையை முடித்து அடுத்தப்பகுதிக்குச் செல்கிறார்கள்.

இந்த இருகதைகளை வைத்து தான், துரோணர் செய்தது சரியா ? இராமன் மறைந்திருந்து கொன்றது சரியா என்ற விவாதமெல்லாம் நடக்கின்றன, உச்சகட்டமாக உச்ச நீதிமன்றமே விமர்சனம் செய்திருக்கிறது. பல பாகங்களையும், பல நூறு கிளைக்கதைகளையும் வைத்துக் கதை எழுதியவர்கள் இந்த சின்ன கிளைக்கதையில் சறுக்கிவிட்டதை, கோட்டைவிட்டதை தற்போது நாம் கண்டுபிடித்த புதிய கண்டுபிடிப்பு என்று கூறி மேதாவித்தனத்தை காட்டும் போது, இந்துமதம் குறித்த பலவேறு எதிர்மறை விமர்சனம் செய்யும் என்னால் கூட நகைக்காமல் இருக்க முடியவில்லை. திரவுபதிக்கு ஐந்து கணவர்கள் இருக்கும் அதே மகாபாரத்கதையில் தான், தன் கணவனுக்கு (திருதராட்சதன்) கண் இல்லை என்பதால் தானும் கண்ணைக்கட்டிக் கட்டி வாழும் (காந்தாரியின்) கதையும் சொல்லப்பட்டு இருக்கிறது. விமர்சனம் செய்பவர்கள் திரவுபதி கதை மட்டுமே எடுத்துக் கொண்டு கதை எழுதியவன் முட்டாள் என்பது போல் பரப்புகிறார்கள்.

பலதார மணங்களுக்கு ஆதரவானவர்கள் கூட ஒரு பெண் அவ்வாறு பல கணவர்களை திருமணம் செய்வது சமூகக் கேடு என்பது போலவும், இந்தக் கதைகள் பண்பாடற்ற கலாச்சாரத்தின் கண்ணாடி என்பது போலவும் இந்தியபண்பாடுகள் கீழானவை என்பது போல் சொல்லுகிறார்கள். இந்தப் பழங்கதைகள் எந்தக் காலத்திற்கும் ஏற்றக் கருத்துகள் கொண்டவை என்று சொன்னால் அதை நான் ஒப்புக் கொள்ளமாட்டேன், ஆனால் அதே சமயத்தில் அனைத்தையும் ஒளிவு மறைவு இன்றி பதிவு செய்திருப்பதன் வெளிப்படையை நாம் போற்றவேண்டும் என்றோ எழுதிய கதைகளை விமர்சனம் செய்வது இன்றைய சூழலில் நாம் அறிவாளிகள் என்று காட்டிக் கொள்ளூம் ஒரு மேட்டிமைத் தனமேயன்றி வெறொன்றும் எனக்குச் சொல்லத் தெரியவில்லை. பலநூறு கிளைக்கதைகளை வைத்து எழுதப்பட்டவை சின்ன சின்ன நிகழ்வுகளை எழுதும் போது சறுக்கிவிட்டது என்று சொல்ல அவை 'சித்தி, அண்ணாமலை, செல்வி, அண்ணாமலை' வகை கதைகளும் அல்ல.

தீர்ப்பு சொல்லும் நீதிபதிகள் கடவுள்களும் அல்ல. முன்பெல்லாம் மிசனரிகள் தான் இந்திய புராணக் கதைகளின் பாத்திரங்களை இழிவு செய்வார்கள், இப்போது இந்திய நீதிபதிகளே செய்வது வருத்ததிற்குரியது. மற்றபடி இதை எழுதுவதன் மூலம் நான் இந்துமத இடிதாங்கி என்று நினைத்தால் தவறு, அந்த புரிதலைத் தவிர்க்கவே இரண்டாம் மூன்றாம் பத்திகளில் இந்துமதத்தின் வரையரைக் குறித்துக் குறிப்பிட்டுள்ளேன்

4 கருத்துகள்:

யாசவி சொன்னது…

எப்படி இருந்தாலும் இது மதமும் விமர்சனத்துக்கு உட்பட்டதே என்ற வகையில் நல்ல தொடக்கமே.

தொடரட்டும் நிதிமன்றங்களின் விமர்சனம். இதன் மூலம் எல்லோருக்கும் சொன்றடையும்.

சிரியல் நக்கல் உங்கள் டச். ஆனால் ஏன் ராதிகா சிரியல் மட்டும்? எல்லாமே ஒரே குப்பைதானே?

கோவி.கண்ணன் சொன்னது…

//சிரியல் நக்கல் உங்கள் டச். ஆனால் ஏன் ராதிகா சிரியல் மட்டும்? எல்லாமே ஒரே குப்பைதானே?

2:40 PM, January 10, 2011//

ராதிகா தொடர்களைப் போல் மற்றவர்களின் தொடர்கள், தொடர் தொடாராகச் சொல்ல வரிசைகள் எதுவும் இல்லையே :)

நன்றி யாசவி.

நீதிமன்றம் எல்லாவற்றையும் விமர்சனம் செய்வது போலவே நீதிமன்றங்களின் தீர்ப்புகள் கூட விமர்சனத்துக்கு குரியவைதான், போதும் முடிச்சிக்குவோம் என்ற வகையில் தான் ஒரு ஒப்புதலுடன் நீதிமன்றங்களின் தீர்ப்புகளை ஒப்புக் கொள்கிறோம், மற்றபடி நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகள் அனைத்தும் மகத்தானவை கிடையாது.

பொன் மாலை பொழுது சொன்னது…

பதிவுகளை விட உங்களின் பின்னூட்டத்தின் பதிகள் சுவாரஸ்யம்.
/// மற்றபடி நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகள் அனைத்தும் மகத்தானவை கிடையாது.///

Test சொன்னது…

தகவலுக்கு நன்றி

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்