பெரும்பாலும் நாட்டுப்புற கலைகளே ஒரு நாட்டின் கலை என்று முன்னிறுத்தப்படுகிறது, இதற்கு எந்த நாடும் விதிவிலக்கு இல்லை, இந்தியாவில் தேவதாசி பெண்கள் ஆடி வந்த சதிராட்டம் பின்னர் பரதக் கலை என்று பெயர் கொடுக்கப்பட்டு மாறுதல்கள் செய்து இந்தியக் கலையாக காட்டப்படுகிறது. நாடுகள் எவ்வளவு தான் பொருளாதார தன்னிறைவு பெற்றிருந்தாலும், ஒரு நாட்டின் அடையாளமாக காட்ட அந்நாட்டில் பின்பற்றப்படும் கலைகளே முன்னிறுத்தப்படுகிறது, ஆபாசம் அறுவெறுப்பு என்ற சொற்களை விழுங்கிவிட்டுப் பார்த்தால் அரைகுறை ஆடைகளுடன் தென் அமெரிக்க நாடுகளின் இடுப்பாட்டம் (பெல்லி டான்ஸ்) கூட ரசிக்கத் தக்கதே.
*****
பாரோங் நடனம் நடைபெறும் இடத்திற்குச் சென்றோம், சுமார் 250 பேர் அமர்ந்து பார்க்கத் தக்க அரங்கம் அமைக்கப்பட்டு இருந்தது, பார்ப்பதற்கு நம்ம ஊர் டுரிங்க் டாகிஸ் போன்று இருந்தது, மேடையின் வலது புறம் பாலி இசைக்கலைகளுக்கான இடமும், வலப்புறம் மற்றும் எதிரே பார்வையாளர்களுக்கான இடமும் அமைக்கப்பட்டு இருந்தது. நிகழ்ச்சித் துவக்கத்தின் அறிகுறியாக பாலி இசையை இசைக்கலைஞர்கள் இசைத்தனர். இசைக்கருவிகள் அனைத்தும் பழங்காலக் கருவிகள், மூங்கில், தோல் போன்றவற்றால் செய்யப்பட்டவை, கிட்டதட்ட 10 இசைக்கலைஞர்கள் கின் கினி போன்ற மணி யோசை போன்று இசைக்க பாராங்க் நடனம் துவங்கியது. பாரங்க் நடனம் என்பது வெறும் நடனமாக இல்லாமல் ஒரு சிறிய கதை அதில் வேடமிட்டவர்கள் வந்து நடித்துப் போவார்கள், பெரும்பாலும் இந்தச் சிறிய கதைகள் இராமயணம் மகாபாரதம் இவற்றில் உள்ள கிளைக்கதைகளாகவோ, இடைச் சொருகலாகவோ இருக்கும். இந்தக் கதைகளில் நல்ல சக்திக்கும் தீய சக்திக்கும் நடைபெறும் போட்டி போராட்டத்தில் முடிவில் நல்ல சக்தி வெற்றி பெற்றதாக காட்சிகள் முடியும்.
நாங்கள் பார்த்த பகுதியில் மகாபாரத குந்தி மற்றும் சில பாத்திரங்கள் வந்ததன, முக்கிய பாத்திரமாக பாரோங் என்கிற சிங்கம் போன்ற விலங்கு மற்றும் ரங்க்தா என்கிற தீய சக்தி (பேய்) வேடங்களில் மேடையில் ஆடுகிறார்கள். பாரோங் பார்க்க சிறுவர்கள் பயப்படும்படி தோற்றம் இருக்கிறது, பேய் நீள தாடி வைத்து முகமூடிப் போட்ட உருவம், கெட்ட சக்தி வீரர்களை தற்கொலை செய்யத் தூண்ட பாரோங்க் காப்பாற்றுவதாகக் கதை. இது போன்ற கிளைக்கதைகள் நான் கேள்விப்பட்டதே இல்லை, இது பாலி வர்சன் மகாபாரதம் என்றே நினைக்கிறேன்.
நாடகத்தின் கருத்து மற்றும் கதை ஆகியவற்றின் மொழிப் பெயர்ப்புத் தாளை வரவேற்பு நுழைவாயிலில் கொடுத்துவிடுகிறார்கள், இம்மொழிப் பெயர்ப்பு சீனம், தாய், மலாய், இந்தோனேசியா, ஜப்பான், ஆங்கில மொழிகளில் கிடைக்கிறது, இதன்படி இங்கு வரும் சுற்றுலாவினர் பெரும்பாலும் ஆஸ்திரேலியர், ஜப்பானியர், தைவான் காரர்கள் மற்றும் அருகே உள்ள ஜாவா, மலேசியா நாட்டினர் தான் என்பது தெளிவாகியது.
சுற்றுலாவழிகாட்டி தெரிவித்தப்படி பாலிக்கு சுற்றுலா வருபவர்களில் 40 விழுக்காட்டினர் ஆஸ்திரேலியர், 15 விழுக்காட்டினர் ஜப்பானியர்கள், 10 விழுக்காட்டினர் தைவான் நாட்டினராம் மீதம் 35 விழுக்காடே உலகின் பிறப் பகுதியினர் என்றார்.
பாரோங்க் நடன மேடைகள் தீவில் 3 - 4 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார், ஒரு நாளைக்கு இரு காட்சி என்ற அளவில் ஒரு மணி நேர நிகழ்ச்சியாக நடக்கிறது, மறுமுறை பார்க்க கண்டிப்பாக அலுப்பு ஏற்படும், பாரோங்க் சிங்கம் தவிர்த்து வேறொன்றும் நன்றாக இல்லை, துவக்கத்தில் இரு பெண்கள் பாலி நடனம் ஆடினர்கள், பெரும்பாலும் இது மெதுவாக ஆடப்படும் குச்சுபுடி நடனம் மற்றும் ஜப்பானிய நடனத்தின் கலவை போன்று இருந்தது. ஆனால் ஒன்றே ஒன்று இந்தியாவில் இந்துக்கள் இராமாயணம் மகாபாரத்தைத் முற்றிலும் மறந்துவிட்டாலும் பாலித் தீவினர் அவற்றை வாழவைத்துக் கொண்டு இருப்பர். முன்பெல்லாம் இவ்வகை இராமயணம் மகாபாரதம் வெள்ளைத் திரைக்குப் பின், விளக்கொளியில் அட்டை உருவங்களால் ஆட்டிக் காண்பிக்கப்பட்டன, இப்போது அவை மேடை நிகழ்ச்சியாக உருப்பெற்றிருக்கிறதாம்.
தமிழகத்தில் கூட 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை பொம்மலாட்டம் என்ற கலைநிகழ்ச்சியும் அதில் வள்ளித் திருமணம் போன்ற நாடகங்கள் நடித்துக் காண்பிக்கப்படும். இப்போது அவை இருந்தாலும் பார்க்க ஆளில்லை. பொம்மை ஒன்றை கையில் மாட்டிக் கொண்டு செய்யப்படும் 'பப்பட் ஷோ' என்ற நிகழ்சியை வெகுவாக ரசிக்கிறார்கள், இந்நிகழ்ச்சியின் நீளம் குறைவு, கொஞ்சம் நகைச்சுவையாக இருக்கும் கூடவே செய்து காட்டுபவரின் திறமை ஆகியவற்றினால் ரசிக்கப்படுகிறது, பழங்கலைகள் எதுவும் முற்றிலுமாக மறைந்து போவதில்லை மேடை நாடகம் சினிமா ஆனது போல் வேறொரு வடிவங்களில் அவை வளர்ந்தே வருகின்றன. பொழுது போக்கு மனித வாழ்க்கையில் இன்றியமையாதவை ஆனால் காலத்திற்கேற்ப ரசனைகள் மாறும் அவ்வளவு தான். இன்றைய திரைப்படங்கள், டிவி சீரியல்கள் எதிர்காலத்தில் அல்லது ஐம்பது ஆண்டுகளித்துப் பார்க்கும் போது அவை செல்லும் சேதி என்ன ? ஒன்றும் தேறாது. அன்றைய மக்களின் மனநிலை அவர்களின் எதிர்ப்பார்ப்பு என்னவாகி இருந்தது என்பது மட்டுமே அதிலிருந்து உருவப்படும் தகவலாக அல்லது ஆவணமாக அமையும் இல்லையா ? ஆனால் என்றைக்கோ எழுதிய காப்பியங்கள் இன்றைக்கும் பொழுது போக்கு நிகழ்ச்சிகாகவும் வாழ்வியல் மேம்பாட்டிற்காகவும் போற்றப்படுகிறது என்பதை நினைக்கையில் நம்முடைய தற்போதைய பண்பாடு மற்றும் தற்போதைய பொழுது போக்காகக் நினைத்துக் கொண்டிருப்பவைகளில் ஒன்றுமே இல்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது ஆனாலும் அது உண்மை தானே ? கொலைவெறிப் பாடலும், செல்லமே சீரியலும் எதிர்காலத்தில் எந்த விதத்தில் பயன்படும் ?
பாராங்க் நடனம் முடிந்த பிறகு அடுத்து கைவினைப் பொருள்கள் விற்பனை செய்யும் Batik கடை இருக்கும் இடத்திற்கு பேருந்தில் அழைத்துச் சென்றார்கள். பாலித் தீவு சுற்றுலா தொழில் முதன்மையானது என்றாலு, ஓவியம், சிலை மற்றும் மரச் சிற்பங்கள் செய்வது மற்றும் விவசாயம் வேறு சில முதன்மையான தொழில்கள். Batik Keris என்னும் பெருங்கடைக்கு அழைத்துச் சென்றார்கள், சுற்றுலாவாசிகளை முன்னிருத்தி இயங்கும் கடை, வாங்கச் சொல்லி வற்புறுத்தவில்லை, பொருள்கள் வெளி சந்தையை ஒப்பிட மிகுதி தான், எங்களுடன் வந்தவர்கள் யாரும் எதையும் வாங்கவில்லை, இதற்கு முன்பே பேருந்தில் குளிர்சாதனம் பழுதடைந்ததால் வேறொரு பேருந்தை வரவழைப்பதாகச் சொல்லி இருந்ததால் அந்த இடத்தில் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. இது ஒருவேளை காத்திருக்க வைக்கும் உத்தியா ? என்பது அடுத்த முறை அங்கு செல்லும் போது தெரிய வரலாம்.
பிறகு பேருந்தில் ஏறி எரிமலை பகுதி உள்ள வடக்கு பாலிப் பகுதியான கிண்டாமணி மலை பகுதிச் சென்றோம், அங்கு வெப்ப அளவு 20 டிகிரி வரை இருப்பதாக முன்கூட்டியே சொன்னார்கள்.
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
4 கருத்துகள்:
//தேவதாசி பெண்கள் ஆடி வந்த சதிராட்டம் பின்னர் பரதக் கலை என்று பெயர் கெடுக்கப்பட்டு மாறுதல்கள் செய்து//
பெயர் கெடுக்கப்பட்டு - எழுத்துப் பிழை இல்லை.... தானே!
//பெயர் கெடுக்கப்பட்டு - எழுத்துப் பிழை இல்லை.... தானே!//
:)
தோல் கருவிகளில் ஒன்றை மிருதங்கம் என்று சொல்வது போல் பெயர் கெடுக்கப்பட்டு....
இந்த இடத்தில் எழுத்துப்பிழை இயல்பாக வந்திருக்கு.
ஆஹா..... அப்ப ராமாயணம், மகாபாரதம் 'கதை'களில் என்னவோ சிறப்பு அம்சம் இருக்குன்னு ஒரு புரிதல் வந்துருக்கோ?
வரிக்கிடையில் வாசிக்கும் வழக்கம் இன்னும் போகலை:-)))))
//ஆஹா..... அப்ப ராமாயணம், மகாபாரதம் 'கதை'களில் என்னவோ சிறப்பு அம்சம் இருக்குன்னு ஒரு புரிதல் வந்துருக்கோ?//
எதுவும் அரசியல் ஆக்கப்படாத நிலையில் போற்றத் தக்கவை என்ற புரிதல் பன்னெடுங்காலமாக உண்டு.
:)
கருத்துரையிடுக