பின்பற்றுபவர்கள்

17 மார்ச், 2009

கம்பவாருதி திரு இ.ஜெயராஜ் !

செவிக்குள் விழும் தேனினிய தமிழோசை என்றால் நல்ல இலக்கிய சுவையுடன் கூடிய சொற்பொழிவே அது. பேச்சாற்றல் என்ற வகையில் வரும் சொற்பொழிவு நிகழ்த்துவது அவ்வளவு எளிதன்று. அதைக் கேட்கக் கூடியிருப்போரில் கற்றொரும் கல்லாதவரும் உண்டு, கற்றோர் எள்ளி நகைக்கா வண்ணமும், கல்லாதவர்க்கு திகட்டா வண்ணமும் சுவையார்வமாக பேசுவதென்பது மிகக் கடினம், அப்படி இருதரப்பையும் கவரும் வண்ணம் பேசுபவரே நல்ல சொற்பொழிவார். ஒரு எழுத்தாள்ர் எழுதி முடித்தவுடன் பலருக்கு அளிக்கும் முன்பு படித்துவிட்டு திருத்தலாம், ஆனால் சபைப் பேச்சென்பது அப்படியல்ல, சபையின் நடுநாயகர் பேசப் பேச செவிகளை அடைந்து கொண்டிருக்கும், சிறு(தகவல்) பிழை என்றாலும் கேட்பவர் முகம் சுளிப்பர். அப்படி எந்த தவறும் நேராவண்ணம் தொடர்ந்து பேசுவதென்பது மிகப் பெரிய கலை. அது சிலருக்கு மட்டுமே வாய்க்கும், சிறுவயது முதலே சரியான பயிற்சி மேற்கொண்டோர்க்கு அந்த கலை இயல்பாக அமைந்துவிடும். மற்ற மேடைப் பேச்சுக்கும், இலக்கிய சொற்பொழிவுக்கும் உள்ள பெரும் வேறுபாடே பேச்சின் தன்மைதான்.

மற்ற மேடைப் பேச்சுகளில் மக்களின் வாழ்வியல் நெறிபற்றி யாதொரு கவலையுமின்றி எடுத்துக் கொண்ட பொருளை சிறப்பாக பேசுவதாக அமையும், ஆனால் சொற்பொழிவுகள் மக்களின் உணர்வு, வாழ்வியல் நெறிகள் இதுபற்றி கருத்தில் கொண்டு அதற்கு மெருகூட்டும் வண்ணம், எடுத்துகாட்டுகளுடன் அமைத்துக் கொண்டும், நகைச்சுவயுடனும் அப்படி பேசுவது செயற்கையின்றி இயற்கையாகவும் அமைய வேண்டும், அப்படிப் பட்ட இலக்கிய சொற்பொழிவுகள் நிறைய பார்த்திருக்கிறேன். சாலமன் பாப்பையா, தென்கச்சி ஸ்வாமிநாதன் மற்றும் சுகிசிவம் ஆகியோர் தற்காலத்தில் சொற்பொழிவாற்றுவதில் சிறந்தவர்கள். இவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இலங்கையில் இருக்கும் ஒருவர் இதுபோன்று பேசுவார் என்பதை கம்பவாருதி இ.ஜெயராஜ் அவர்களின் பேச்சை கேட்கும் வரை சிந்தித்ததே இல்லை. ஏனெனில் இலங்கையின் கடந்த 20 ஆண்டுகால அரசியல் நிலையில் இலங்கையைப் பற்றி நினைக்கும் போது அங்கு தமிழ் இலக்கியம் பற்றியும், அதைப் பற்றிப் பேசும் சொற்பொழிவார்கள் இருப்பார்கள் என்று நினைப்பு சிந்தையில் கூட வந்திருக்கவில்லை.

நண்பரும் பதிவருமான முகவை மைந்தன் (இராம்) சிலோன் சாலை, சென்பக விநாயகர் கோவிலில் கம்பராமயணம் ஐந்து நாள் சொற்பொழிவு நடக்கிறது வருகிறீர்களா ? என்று கேட்டார். கம்பர்மீது இருக்கும் ஆர்வம் எனக்கு இராமன் மீது இல்லையாகையால் நான் உடனடியாக வருகிறேன் என்று சொல்லவில்லை. சென்ற ஞாயிறு பதிவர் சந்திப்பு முடிந்ததும் எல்லோரும் சென்ற பிறகு உடனடியாக வீட்டுக்கு கிளம்பும் எண்ணம் ஏற்படவில்லை, அதனால் கம்பராமயண சொற்பொழிவுக்கு நானும் வருகிறேன் என்று கூறி ஜெகதீசன் மற்றும் விஜய் ஆனந்துடன் இணைந்து இராமுடன் சென்பக விநாயகர் கோவிலுக்குச் சென்றேன். சென்றதும் தான் தெரியும் அந்த கோவில் இலங்கைத் தமிழர்களால் நடத்தப்படுகிறது என்கிற தகவல். 'இலங்கை தமிழ் சங்கம்' என்ற அறிவிப்பு பலகை வைத்திருந்தார்கள். நாமெல்லாம் ஈழம் ஈழம் என்று எழுதிவர இவர்கள் ஏன் இலங்கை தமிழர்கள் என்கிறார்கள், 'தமிழ் ஈழம்' என்று சொல்வது உறுதிப்படுத்தப்படாத ஒன்று என்றாலும் ஈழம் என்ற சொல் இலங்கையை குறிக்கும் தமிழ் சொல்தான்,

'ஈழத்தமிழர் சங்கம்' என்று அழகாக எழுதி இருக்கலாமே ஏன் 'இலங்கை தமிழர்கள் சங்கம்' என்று எழுதி இருக்கிறார்கள் என்கிற ஆதங்கம் வேறு இருந்தது. கோவிலுக்குச் சென்றபிறகு 'தற்போதைய போர் சூழலில் இந்த மக்களுக்கு கம்ப இராமயணம் கேட்பதற்கெல்லாம் மனது வருகிறதா, இதைக் காது கொடுத்து கேட்கும் இந்த நேரம் வன்னியில் எத்தனை உயிர் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறதோ தெரியவில்லை, இந்த சொற்பொழிவுக்கு செல்ல மனம் ஒப்பவில்லை இராம்' என்று கூறித் தயங்கினேன். பிறகு சென்றேன். சொற்பொழிவு தமிழ்சங்கத்தைச் சேர்ந்த ஒருவர் முன்மொழிய தொடங்கிவிட்டது.
சொற்பொழிவைக் கேட்க கேட்க, 'மனம் சிந்திக்க வேண்டுமென்றால் இது போன்ற சொற்பொழிவுகளில் சிறிது நேரம் செலவிட்டால், சோகம் தற்காலிகமாக விடைபெறும், வெறுப்பு, சினம், சோகம் என்று கூறிக் கொண்டு சோறு உண்ணாமல் இருக்கிறோமா ? நமக்குள் உணர்வுகள் செத்துப் போகாமல புத்துணர்வு கொடுக்க இது போன்ற நிகழ்ச்சிகள் இந்த நேரத்தில் மிக மிகத் தேவை என்று புரிந்தது. அதனால் மேற்சொன்ன எனது எண்ணங்களை திருத்திக் கொண்டு, சொற்பொழிவின் சுவைக்குள் மூழ்கினேன்.

கம்பவாருதி இ.ஜெயராஜ் - இப்படி ஒரு சொற்பொழிவாளரா என்று விழிகளும் மனமும் விரிய விரிய வியக்க வைத்தார். தமிழக சொற்பொழிவாளருக்கும் இவருக்கும் இருக்கும் முதன்மையான வேறுபாடு, இவர் உரையாற்றும் போது கொஞ்சி விளையாடும் ஈழத்தமிழ். அந்த ஈழ மண்ணுக்கே உரிய மண்வாசனை பேச்சு. கிட்டதட்ட 25 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை வானொலியில் கேட்ட ஈழத்தமிழ் சுவையை கம்பவாருதி அவர்களின் பேச்சில் கேட்டது மயக்கியது என்று சொன்னால் அதில் மிகை ஒன்றும் இல்லை.
இதுவரை மூன்று நாட்கள் நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் வீதம் கேட்டு வருகிறேன். நாளை நிறைவு நாள். முதல் நாள் கேட்ட சொற்பொழிவு மறுநாளும் செல்ல வேண்டும் என்ற உணர்வை தூண்டியது. சொற்பொழிவார்கள் ஒவ்வொருவருக்குமே அந்த திறன் உண்டு, அப்படிப் பட்ட திறன் உள்ளவர்கள் மட்டுமே அந்த மேடைகளுக்கு வருகிறார்கள். கம்பவாருதி நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று செய்யுள்கள் மட்டுமே படிக்கிறார். ஆனால் அதனுடன் நிறைய இலக்கிய தகவல்களையும் வாழ்வியல் நெறிகளையும் அள்ளித்தருகிறார்.

நான் பார்த்ததில் மிகவும் தன்னடக்கமான ஒரு சொற்பொழிவாளர் என்றால் கம்பவாருதி ஐயாவைத்தான் சொல்ல வேண்டும். மேடையில் இருப்பதால் நான் உயர்ந்தோன் அல்ல, எனக்கு முன்பே கற்றோர்களும் அமர்ந்திருக்கிறார்கள் என்கிற நடுக்கம் எனக்கு எப்போதும் உண்டு, என்றார். இப்படி மேடையில் தன்னைப் பற்றிய உண்மைகளை வெளிப்டையாக சொல்பவர்கள் அரிதே. கம்ப இராமயணம் சொற்பொழிவு என்றாலும் அதை மட்டுமே பேசவில்லை, அதற்கு தொடர்புடைய திருக்குறள், பெரிய புராணம், சைவ திருமுறைகள் ஆகியவற்றில் இருக்கும் செய்யுள்களையெல்லாம் தேவையான இடத்தில் எடுத்து நகைச்சுவையுடன் சொன்னார். அரசு பதவியில் இருப்பவர்கள், ஆண்கள் பெண்கள் என அனைத்து தரப்பையும் பேச்சின் நடுவே நாகரீகமாக கிண்டல் அடித்து நகைச்சுவையாக பேசினார். எப்பொழுது நேரம் முடியும் என்று ஒருவரும் நேரம் பார்க்கவில்லை. இத்தனைக்கும் ஞாயிறு தவிர மற்ற நாட்களிலும் இரவு 9:30 வரை சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது. நேரம் செல்கிறதே...முடிந்துவிடுமோ என்கிற கவலைதான் ஏற்பட்டது. நகைச்சுவையுடன், செய்யுள்களை ஏற்ற இறக்கத்துடன் நயம், ஓசை குன்றாமல் சொல்வதில் அவரது இலக்கியத் திறன் ! கேட்க கேட்க வியந்தேன்.இதுபோன்ற சொற்பொழிவாளர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது நாம் வாழும் காலமும், தமிழ்ச் சூழலும் இன்னும் முழுமையாக கெட்டுப் போக இல்லை என்கிற மகிழ்ச்சியையும், மன நிறைவையும் கொடுக்கிறது. நீங்கள் வாழும் நாடு, ஊர் எதுவாக இருந்தாலும் எங்காவது கமபவாருதி இ ஜெயராஜ் அவர்களின் சொற்பொழிவு என்று எழுதி இருந்தால் உடனேயே தகவல்களை கேட்டு அவரது சொற்பொழிவை கேட்டுவாருங்கள். நான் பெற்ற இலக்கிய இன்பம் பெருவீர்கள்.


மேற்கண்ட பதிவை முதல் 27 பின்னூட்டங்களுடன் நகல் அச்சை கம்பவாருதி ஐயாவிடம் கொடுத்து உரையாடிய போது எடுத்தப் படம்.ஜெகதீசன், விஜய் ஆனந்த் மற்றும் முகவை இராம் கம்பவாருதி ஐயாவிடம் உரையாடிய போது எடுத்தப் படம்.

38 கருத்துகள்:

நிகழ்காலத்தில்... சொன்னது…

நண்பர்களிடம் சொல்லி y-tube போன்ற
வீடியோவிற்கு ஏற்பாடு செய்ய சாத்தியம்
உள்ளதா..?
பொதிகையில் ஒருமுறை இவர் உரையை கேட்டதாக நினைவு..

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

திரு ஜெயராஜ் அவர்களின் சொற்பொழிவை 5 நாட்களும் கேட்டீர்களா? வயசு பையன் செய்யற செய்கையா இது?

நடை தளர்ந்து, பிள்ளைகள் உதாசீன படுத்திய பிறகு அல்லவா இங்கே செல்லவேண்டும் என்பது தமிழ் மரபு ?

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

//ஸ்வாமி ஓம்கார் said...

நடை தளர்ந்து, பிள்ளைகள் உதாசீன படுத்திய பிறகு அல்லவா இங்கே செல்லவேண்டும் என்பது தமிழ் மரபு ?
//

நான்ஸ்டாப்பா சிரிக்கிறேன் :)

# * # சங்கப்பலகை அறிவன் # * # சொன்னது…

கண்ணன்,இது கட்டணச் சொற்பொழிவா அல்லது இலவச அனுமதி உண்டா?

அழைப்பிதழில் கட்டண நிகழ்வாக வகைப்படுத்தப்பட்டிருக்கிறதே..

ஆ.ஞானசேகரன் சொன்னது…

நன்றாக சொல்லியுள்ளீர்கள் கண்ணன், ஸ்வாமி ஓம்கார் சொல்வதிலும் உண்மை என்றே தோன்றுகின்றது. நான் என் வயது நண்பர்கள் வெள்ளிக்கிழமை விரதம் என்று சொல்லும்பொழுது இதைதான் சொல்வேன்... வயதானதும் வாழ்க்கையில் ஒரு சுறுசுறுப்பு வர இது போன்ற காரியம் செய்யலாம்.. இந்த வயதில் இதையெல்லாம் செய்துவிட்டால்.... வயதானதும் மற்றவர்களுக்கு தொந்தரவாக இருக்கும் என்பேன்.. இந்த வயதில் அப்படியெல்லாம் இல்லை என்று சொன்னாலும் முதுமை வந்ததும் உணர்வீர்கள்......

மணிகண்டன் சொன்னது…

எங்க ஊருல, சின்ன வயசுல கல்யாணராமன், கீரன் மற்றும் வேறு சிலரோட சொற்பொழிவு கேட்டு இருக்கேன். அப்ப எல்லாம் ரொம்ப பிடிக்கும். ஆனா கடந்த 10 வருடமா இது எல்லாம் கேக்க வாய்ப்பு இல்ல. ரெகார்ட் பண்ணி போடலாமே கோவி ?

***
நான்ஸ்டாப்பா சிரிக்கிறேன் :)
***

ரிப்பீட்டிக்கரேன்.

சி தயாளன் சொன்னது…

//ஏனெனில் இலங்கையின் கடந்த 20 ஆண்டுகால அரசியல் நிலையில் இலங்கையைப் பற்றி நினைக்கும் போது அங்கு தமிழ் இலக்கியம் பற்றியும், அதைப் பற்றிப் பேசும் சொற்பொழிவார்கள் இருப்பார்கள் என்று நினைப்பு சிந்தையில் கூட வந்திருக்கவில்லை.//

ஜெயராஜ் அவர்களைப் போல் பலர் இருக்கிறார்கள்...யுத்த காலமோ..இல்லையோ நம் தமிழ் பண்பாடு, இலக்கியம் என்பவற்றுக்கு ஒரு நாளும் அழிவு வந்தது கிடையாது...

ஆறு திரு முருகன், சிவகுமார் என்போர் நான் அறிந்த சொற்பொழிவாளர்களில் சிலர்..

செண்பக விநாயகர் ஆண்டு திருவிழாக்களுக்கு இவர்கள் வருவதுண்டு.....

சி தயாளன் சொன்னது…

//இலங்கைத் தமிழர்களால் நடத்தப்படுகிறது என்கிற தகவல். 'இலங்கை தமிழ் சங்கம்' என்ற அறிவிப்பு பலகை வைத்திருந்தார்கள். நாமெல்லாம் ஈழம் ஈழம் என்று எழுதிவர இவர்கள் ஏன் இலங்கை தமிழர்கள் என்கிறார்கள், 'தமிழ் ஈழம்' என்று சொல்வது உறுதிப்படுத்தப்படாத ஒன்று என்றாலும் ஈழம் என்ற சொல் இலங்கையை குறிக்கும் தமிழ் சொல்தான்/


ஆனால்....இதில் இருக்கும் நடைமுறைச்சிக்கல்கள் நீங்கள் அறியவில்லையா...? இல்லை உணரவில்லையா....? சிங்கப்பூரில் எத்தனை வருடங்களாக இருந்தும் இது தெரியவில்லையா....?

Unknown சொன்னது…

13 வயசில 16நாள் தொடர்ந்து இரவு 8மணிக்கு தனிய சைக்கிள் ஓடி கோயில் வெளி வீதியில ஜெயராஜின் கம்பராமாயணம் கேட்டதுண்டு. அந்த கணங்கள் மீண்டும் வராது எண்டு தெரிந்தபடியால், உள்ள ஞாபகங்களை மீட்டி பார்த்தபடி இருக்க வேண்டிய கட்டாயம். நீங்க கொடுத்து வச்சவங்க. வாழ்த்துக்கள்

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

இவர் பிரபலமாகும் போது ஈழம் விட்டு வெளியேறி விட்டேன்.இதுவரை இவர் பாரிஸ் வரவில்லை. நேரே கேட்கக் கிடைக்கவில்லை. ஒலிப்பதிவு கேட்டுள்ளேன். இவர் கட்டுரைகள் படித்துள்ளேன்.
ஈழத்துக்குப் பெருமை சேர்ப்பவர்.

கோவி.கண்ணன் சொன்னது…

//அறிவன்#11802717200764379909 1:39 AM, March 18, 2009
கண்ணன்,இது கட்டணச் சொற்பொழிவா அல்லது இலவச அனுமதி உண்டா?

அழைப்பிதழில் கட்டண நிகழ்வாக வகைப்படுத்தப்பட்டிருக்கிறதே..
//

அறிவன் சார்,

இன்று நிறைவு நாள், 5 நாள் சொற்பொழிவுக்கும் சேர்த்த்து 10 வெள்ளி மட்டுமே கட்டணம். கோவிலில் இருந்து எம் ஆர் டி நிலையத்துக்கு அழைத்துச் செல்ல வாகனம் ஏற்பாடு செய்திருக்கிறார்கள் அந்த கட்டணம் அதற்குத்தான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். முடிந்தால் இன்று சென்றுவாருங்கள். மாலை 7:30க்கு தொடங்கு 9:30க்குள் முடிகிறது

கோவி.கண்ணன் சொன்னது…

///ஆனால்....இதில் இருக்கும் நடைமுறைச்சிக்கல்கள் நீங்கள் அறியவில்லையா...? இல்லை உணரவில்லையா....? சிங்கப்பூரில் எத்தனை வருடங்களாக இருந்தும் இது தெரியவில்லையா....?//

டொன்லீ, இதில் என்ன நடைமுறை சிக்கல் என்றே தெரியவில்லை, நான் 'தமிழ் ஈழ தமிழர் சங்கம்' என்று போட்டுக்கொள்ளச் சொல்லவில்லை, ஈழத்தமிழர் சங்கம் அல்லது ஈழவர் சங்கம் என்று போட்டுக் கொள்வதில் என்ன சிக்கல் என்று தான் கேட்கிறேன், ஈழம் என்றால் இலங்கை என்ற பொருளில் தானே சொல்லப்படுகிறது, 'தமிழ் ஈழம்' என்ற பொருளில் இல்லை என்று தான் நினைக்கிறேன். தெளிவு படுத்துங்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
இவர் பிரபலமாகும் போது ஈழம் விட்டு வெளியேறி விட்டேன்.இதுவரை இவர் பாரிஸ் வரவில்லை. நேரே கேட்கக் கிடைக்கவில்லை. ஒலிப்பதிவு கேட்டுள்ளேன். இவர் கட்டுரைகள் படித்துள்ளேன்.
ஈழத்துக்குப் பெருமை சேர்ப்பவர்.
//

யோகன் ஐயா,

விரைவில் உங்களுக்கு அந்த வாய்ப்புக் கிட்ட வேணும்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

நல்ல நேர்த்தியான வாசக வாசனை தரும் பதிவு கோவி!
எழுத்துக்களை படிப்பதற்கும், உரை கேட்பதற்கும் சில வேறுபாடுகள் உண்டு.
பெரும்பாலும் உரை நம்மை அந்நியப்படுத்தி விடாது!
ஈழத்தமிழர்கள் தாங்கள் வாழும் ஒவ்வொரு நாடுகளிலும் கோவில்களை உருவாக்குகிறார்கள். அந்தக் கோவில்களில் கட்டாயம் இது போன்ற நிகழ்வுகளுக்குப் பஞ்சம் இருக்காது.

கோவி.கண்ணன் சொன்னது…

//kichaa said...
13 வயசில 16நாள் தொடர்ந்து இரவு 8மணிக்கு தனிய சைக்கிள் ஓடி கோயில் வெளி வீதியில ஜெயராஜின் கம்பராமாயணம் கேட்டதுண்டு. அந்த கணங்கள் மீண்டும் வராது எண்டு தெரிந்தபடியால், உள்ள ஞாபகங்களை மீட்டி பார்த்தபடி இருக்க வேண்டிய கட்டாயம். நீங்க கொடுத்து வச்சவங்க. வாழ்த்துக்கள்

7:10 AM, March 18, 2009
//

நீங்கள் வெளிநாட்டில் இருந்தால் உங்களுக்கு வாய்ப்பு கிட்டுமே, அவர் அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்று நிகழ்ச்சிகளில் பங்குபெறுவதாக அறிகிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் said...
எங்க ஊருல, சின்ன வயசுல கல்யாணராமன், கீரன் மற்றும் வேறு சிலரோட சொற்பொழிவு கேட்டு இருக்கேன். அப்ப எல்லாம் ரொம்ப பிடிக்கும். ஆனா கடந்த 10 வருடமா இது எல்லாம் கேக்க வாய்ப்பு இல்ல. ரெகார்ட் பண்ணி போடலாமே கோவி ?
//

பதிவு செய்து போடும் அளவுக்கு தொழில் நுட்பம் தெரியாது, என்கிட்ட இருக்கும் டப்பா நிழல்படக் கருவியில் நிழல்படம் எடுப்பதே சரியாக வருவதில்லை. :) இருந்தாலும் அதை வைத்து ஒப்பேற்றி வருகிறேன்

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//ஜெயராஜ் அவர்களைப் போல் பலர் இருக்கிறார்கள்...யுத்த காலமோ..இல்லையோ நம் தமிழ் பண்பாடு, இலக்கியம் என்பவற்றுக்கு ஒரு நாளும் அழிவு வந்தது கிடையாது...

ஆறு திரு முருகன், சிவகுமார் என்போர் நான் அறிந்த சொற்பொழிவாளர்களில் சிலர்..//

டொன்லீ!
தாங்கள் சிவகுமார் என்று குறிப்பிட்டது தமிழருவி த. சிவகுமாரன் அவர்களா?

கோவி.கண்ணன் சொன்னது…

// ஆ.ஞானசேகரன் said...
நன்றாக சொல்லியுள்ளீர்கள் கண்ணன், ஸ்வாமி ஓம்கார் சொல்வதிலும் உண்மை என்றே தோன்றுகின்றது. நான் என் வயது நண்பர்கள் வெள்ளிக்கிழமை விரதம் என்று சொல்லும்பொழுது இதைதான் சொல்வேன்... வயதானதும் வாழ்க்கையில் ஒரு சுறுசுறுப்பு வர இது போன்ற காரியம் செய்யலாம்.. இந்த வயதில் இதையெல்லாம் செய்துவிட்டால்.... வயதானதும் மற்றவர்களுக்கு தொந்தரவாக இருக்கும் என்பேன்.. இந்த வயதில் அப்படியெல்லாம் இல்லை என்று சொன்னாலும் முதுமை வந்ததும் உணர்வீர்கள்......
//

கருத்துக்கு நன்றி ஞான சேகரன்,

சாகுற காலத்தில் தானே சங்கரா சங்கரான்னு சொல்லுவாங்க என்பதாக ஸ்வாமி ஓம்கார் பகடி செய்திருக்கிறார் என்பதாகத்தான் எனக்கு புரிந்தது :)

கோவி.கண்ணன் சொன்னது…

//எம்.எம்.அப்துல்லா said...
//ஸ்வாமி ஓம்கார் said...

நடை தளர்ந்து, பிள்ளைகள் உதாசீன படுத்திய பிறகு அல்லவா இங்கே செல்லவேண்டும் என்பது தமிழ் மரபு ?
//

நான்ஸ்டாப்பா சிரிக்கிறேன் :)

//

மோட்டல் அல்லது எரிபொருள் நிலையத்தில் நிறுத்து ஊட்டம் ஏற்றிக் கொண்டும் சிரியுங்கள். :)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஸ்வாமி ஓம்கார் said...
திரு ஜெயராஜ் அவர்களின் சொற்பொழிவை 5 நாட்களும் கேட்டீர்களா? வயசு பையன் செய்யற செய்கையா இது?//

2 ஆம் நாளில் இருந்து தான் கேட்கும் வாய்ப்பு கிட்டியது. சின்ன வயசா ? யாருக்கு.... ஏஆர்ரகுமானின் வயதைவிட ஒருவயது குறைவு என்றே நினைக்கிறேன்.

//நடை தளர்ந்து, பிள்ளைகள் உதாசீன படுத்திய பிறகு அல்லவா இங்கே செல்லவேண்டும் என்பது தமிழ் மரபு ?
//
:) 10 வயதில் சொற்பொழிவுகள் கேட்க ஆரம்பித்தது, தொடர்ந்து 30 நாட்கள் வில்லிபாரத சொற்பொழிவு கேட்ட போது வயது 15 தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//அறிவே தெய்வம் said...
நண்பர்களிடம் சொல்லி y-tube போன்ற
வீடியோவிற்கு ஏற்பாடு செய்ய சாத்தியம்
உள்ளதா..?
பொதிகையில் ஒருமுறை இவர் உரையை கேட்டதாக நினைவு..
//

யாராவது இணையத்தில் ஏற்றுகிறார்களா என்று கேட்டறிந்து அறியத்தருகிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//’டொன்’ லீ said...

ஜெயராஜ் அவர்களைப் போல் பலர் இருக்கிறார்கள்...யுத்த காலமோ..இல்லையோ நம் தமிழ் பண்பாடு, இலக்கியம் என்பவற்றுக்கு ஒரு நாளும் அழிவு வந்தது கிடையாது...//

டொன் லீ
கலை, பண்பாடு, இலக்கியம் இருப்பதால் தானே 'தமிழன்' என்கிற தனித்த உணர்வோடு இருக்கிறோம். அவையெல்லாம் இருக்கிறது என்பதற்கு அந்த உணர்வே சான்று என்பது உண்மைதான்.

//ஆறு திரு முருகன், சிவகுமார் என்போர் நான் அறிந்த சொற்பொழிவாளர்களில் சிலர்..

செண்பக விநாயகர் ஆண்டு திருவிழாக்களுக்கு இவர்கள் வருவதுண்டு.....//

அப்படி வந்தால் தகவல் சொல்லுங்கள். சென்றுவருவோம்.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

நல்ல நேர்த்தியான பதிவு

ரகுநந்தன் சொன்னது…

கோவி.கண்ணன்,

இவர் நான் கல்விகற்ற யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் கல்விகற்றவர். இவரே எமது கல்லூரி விவாதக் குழுவின் தலைவராகவும் இருந்தார். இளையோராகிய எமக்கு விவாத அரங்கினுள் அனுமதி இல்லாதிருந்த போதும் திருட்டுத்தனமாகவும் தனிப்பட்ட நட்பினாலும் உள்ளே சென்று இவரின் விவாதம் கேட்டிருக்கிறேன். பின்னர் இவர் கல்லூரியை முடித்துச் சென்றபின் இவர் விட்டுச்சென்ற இடத்தை யாராலும் முடியவில்லை. ஆனாலும் நண்பர் டொன் லீ குறிப்பிட்ட ஆறு திருமுருகன் எனது கல்லூரித்தோழன் அதில் எனக்குப் பெருமையே! கம்ப வரிதி ஜெயராஜ் அக்காலத்தில் (30 வருடங்களின் முன்னர்) யாழ் இந்துக்கல்லூரி கம்பன் கழகம் என ஒரு அமைப்பை கல்லூரியில் அமைத்து பின்னர் அது யாழ்ப்பாணம் கம்பன் கழகமாக மாறி அகில இலங்கை கம்பன் கழகமாக உருவெடுத்து நிற்கிறது. மட்டுமல்லாது காரைக்குடி கம்பன் கழகத்தினால் கெளரவிக்கப்பட்ட ஒரே ஒரு வெளி நாட்டு கம்பன் கழகம் என்ற பெருமையும் இவர்களுக்கு உண்டு என கேள்விப்பட்டேன். இவருடன் கம்பன் கழகத்தில் இருந்த திருநந்தகுமார் இப்போது அவுஸ்திரேலிய வானொலியில் இருக்கிறார். உருத்திரகுமார் எங்கே எனத்தெரியவில்லை!

வேந்தன் சொன்னது…

கோவி.கண்ணன் அருமையான பதிவு, யாழில் இருந்த போது இவர்களின் சொற்பொழிவு கேட்க தவறமல் கோயில் திருவிழா செல்வதுண்டு :)

பகீ சொன்னது…

கோவி கண்ணன் ஐயா,

அருமையான பதிவிற்கு நன்றி. நல்லூரில் இருக்கும் கம்பன் கழகத்தில் கம்பவாருதியின் பேச்சை கேட்க என 1995 இற்கு முன்னர் அலைகடலென திரளும் கூட்டத்தில் நானும் எட்டு ஒன்பது வயதில் இருந்திருக்கிறேன். பின்னர் கம்பவாருதி கொழும்பு சென்ற பின்னர் முடிந்த போதெல்லாம் அவரின் சொற்பொழிவுகளை கேட்க செல்வதுண்டு.

அவரிடம் குருகுலவாசம் செய்தவர்கள் எல்லாம் இப்போது பெரும் பெரும் சொற்பொழிவாளர்களாகி இருக்கின்றார்கள்.

யுத்தமும் அரசியலும் ஈழத்தமிழர்களின் இலக்கிய ஆற்றலை மழுங்கடிக்கவில்லை. உண்மையில் யுத்தகால இலக்கியங்களையும் படைக்க உதவியிருக்கின்றது.

கோவி.கண்ணன் சொன்னது…

ரகுநந்தன், வேந்தன் மற்றும் பகீ,

இன்று நிறைவு சொற்பொழிவு நடக்க இருக்கிறது, இன்று கம்பவாருதி ஐயாவிடம் பேசும் வாய்ப்புக் கிட்டினால் நீங்கள் தந்துள்ள தகவல்களை அவரிடம் காட்டுவேன்.

கருத்துகளுக்கு நன்றி !

# * # சங்கப்பலகை அறிவன் # * # சொன்னது…

கண்ணன்,தகவலுக்கு நன்றி.

சி தயாளன் சொன்னது…

//ரகுநந்தன் 12:04 PM, March 18, 2009

இவர் நான் கல்விகற்ற யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் கல்விகற்றவர். இவரே எமது கல்லூரி விவாதக் குழுவின் தலைவராகவும் இருந்தார். இளையோராகிய எமக்கு விவாத அரங்கினுள் அனுமதி இல்லாதிருந்த போதும் திருட்டுத்தனமாகவும் தனிப்பட்ட நட்பினாலும் உள்ளே சென்று இவரின் விவாதம் கேட்டிருக்கிறேன். பின்னர் இவர் கல்லூரியை முடித்துச் சென்றபின் இவர் விட்டுச்சென்ற இடத்தை யாராலும் முடியவில்லை. ஆனாலும் நண்பர் டொன் லீ குறிப்பிட்ட ஆறு திருமுருகன் எனது கல்லூரித்தோழன் அதில் எனக்குப் பெருமையே! கம்ப வரிதி ஜெயராஜ் அக்காலத்தில் (30 வருடங்களின் முன்னர்) யாழ் இந்துக்கல்லூரி கம்பன் கழகம் என ஒரு அமைப்பை கல்லூரியில் அமைத்து பின்னர் அது யாழ்ப்பாணம் கம்பன் கழகமாக மாறி அகில இலங்கை கம்பன் கழகமாக உருவெடுத்து நிற்கிறது. மட்டுமல்லாது காரைக்குடி கம்பன் கழகத்தினால் கெளரவிக்கப்பட்ட ஒரே ஒரு வெளி நாட்டு கம்பன் கழகம் என்ற பெருமையும் இவர்களுக்கு உண்டு என கேள்விப்பட்டேன். இவருடன் கம்பன் கழகத்தில் இருந்த திருநந்தகுமார் இப்போது அவுஸ்திரேலிய வானொலியில் இருக்கிறார். உருத்திரகுமார் எங்கே எனத்தெரியவில்லை!
//

ஆம் ரகுநந்தன்...மூவருமே யாழ் இந்துக்கல்லூரியைச் சேர்ந்தவர்கள். திருமுருகன், சிவகுமார் அங்கேயே ஆசிரியர்களாகவும் பணிபுரிந்தவர்கள்..

திருமுருகன் அவர்கள் எனக்கு உறவு முறையும் கூட....

சி தயாளன் சொன்னது…

// ஜோதிபாரதி said...

டொன்லீ!
தாங்கள் சிவகுமார் என்று குறிப்பிட்டது தமிழருவி த. சிவகுமாரன் அவர்களா?
//

நான் அறிந்த வரையில் அவர் யாழ் இந்துக்கல்லூரி ஆசிரியர் சிவகுமார். மேலதிக விபரம் விசாரித்து சொல்கிறேன்..

சி தயாளன் சொன்னது…

//அப்படி வந்தால் தகவல் சொல்லுங்கள். சென்றுவருவோம்.
//

கண்டிப்பாக..எனக்கு கோயிலுடன் பந்தம் இல்லை..என் நண்பர்களிடம் சொல்லி வைக்கிறேன்...

பொதுவாக ஆண்டு திருவிழாவிற்கு வருவார்கள்..

கோவி.கண்ணன் சொன்னது…

இராதா கிருஷ்ணன் ஐயா, பாராட்டுக்கு நன்றி,ஒரு தகவல்.... இடுகையில் இன்றைய படங்களையும் இணைத்துள்ளேன்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

ஐயாவிடம் கதைத்தீர்களா?
ஐயாவைப் பற்றித் தெரிந்துகொள்ள அரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததற்கு நன்றி!

கோவி.கண்ணன் சொன்னது…

// ஜோதிபாரதி said...
ஐயாவிடம் கதைத்தீர்களா?
ஐயாவைப் பற்றித் தெரிந்துகொள்ள அரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததற்கு நன்றி!
//

ஜோதி,
நேரம் இரவு 10க்கும் மேல் ஆகிவிட்ட படியால், அவர் சொற்பொழிவு முடித்ததும் பலர் கூடிவிட்டார்கள், எனவே அளவளாவ போதிய நேரம் கிடைக்கவில்லை.

பெயரில்லா சொன்னது…

உண்மைதான், எதிரில் அமர்ந்திருப்பவரை தன் பேச்சினால் கட்டி போதும் வித்தை எல்லோராலும் முடியாது! அது கலை! அது வரம்!

நல்லதொரு இலக்கிய பகிர்வு நண்பரே!

குமரன் (Kumaran) சொன்னது…

கம்ப வாரிதி ஐயா அவர்களின் சொற்பொழிவுகளைப் பற்றி சொன்னதற்கு நன்றி கண்ணன். அவருடைய சொற்பொழிவினை முன்பொரு முறை இணையத்தில் பார்த்திருக்கிறேன்/கேட்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். சரியாக நினைவில்லை. தேடிப் பார்க்க வேண்டும். (வாருதி கிடையாது. வாரிதி = கடல்).

உங்களுக்கு கிரந்த எழுத்துகளின் மீது பகை இல்லையா? ஜெயராஜ் என்று கிரந்தம் பெய்தே எழுதியிருக்கிறீர்களே?

கோவி.கண்ணன் சொன்னது…

//குமரன் (Kumaran) said...
கம்ப வாரிதி ஐயா அவர்களின் சொற்பொழிவுகளைப் பற்றி சொன்னதற்கு நன்றி கண்ணன். அவருடைய சொற்பொழிவினை முன்பொரு முறை இணையத்தில் பார்த்திருக்கிறேன்/கேட்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். சரியாக நினைவில்லை. தேடிப் பார்க்க வேண்டும். (வாருதி கிடையாது. வாரிதி = கடல்).
//

வாருதி, வாரிதி எனக்கும் குழப்பம் தான் குமரன். ஆனால் படத்தை அழுத்திப் பெரிதாக்கிப் பாருங்கள், அறிவிப்பில் வாருதி என்றே இருக்கிறது. அதனால் அதையே எழுதினேன்.

//உங்களுக்கு கிரந்த எழுத்துகளின் மீது பகை இல்லையா? ஜெயராஜ் என்று கிரந்தம் பெய்தே எழுதியிருக்கிறீர்களே?
//

கிருந்த எழுத்துக்களின் மீது பகை எனக்கில்லை. கம்பனுக்கு இருக்கிறது. லக்ஷ்மணன் இலக்குவன் ஆனான். ஒருவரின் பெயர்ச் சொல்லை நம் விருப்பத்துக்கு எழுதவேண்டுமென்றால் அவர் அதை விரும்பவாரா என்று தெரியாது, ஜெயபாரதன் ஐயா கூட செயபாரதன் என்று அவர் பெயரை சிலர் குறிப்பிட்டுள்ளதை கடிந்துள்ளார். தனக்கு பிடிக்கவில்லை என்று சொல்பவர்களின் பெயர்களை கிருந்தமில்லாமல் எழுதுவது அவர்களை அவமதிப்பு செய்வதாகும் என்பது என்கருத்து. நான் அவ்வாறு செய்வதில்லை, இருந்தாலும் ஊர் பெயர்களை, பொதுவான பெயர்ச் சொற்களை, நம் பதிவுலகம் சாராதவர்களை அப்படி எழுதுவதும் தவறில்லை என்பது என்கருத்து. ஜார்ஜ் புஷ்ஷை சார்ச் புச் என்று எழுதினால் அவருக்கு தெரியவாப் போகிறது ? :) இப்படி எழுதுவது பற்றி ஒரு தனிப்பதிவு இடவும் எண்ணியுள்ளேன்.

S.Manimaran சொன்னது…

கம்பவாருதி இலங்கை இ.ஜெயராஜ் அவர்களுடைய அற்புதமான கருத்துக்களை தொடர்ந்து வாசிக்கவும் அவரது வீடியோக்களை பார்வையிடவும் அவர் பத்தி எழுத்துக்கள் எழுதும் இந்த புதிய தளத்திற்கு செல்லுங்கள் -
http://www.jaffnatamil.info/archives/281


jaffnatamil.info

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்