பின்பற்றுபவர்கள்

30 மார்ச், 2008

கடந்து போன வாழ்க்கை மனநிறைவானதா ?

ஞாயிற்றுக்கிழமை வாரத்துக்கு தேவையான காய்கறிகளை வாங்க சிங்கை 'குட்டி இந்தியாவுக்கு'ச் செல்வது வழக்கம், ஞாயிற்றுக்கிழமையில் பச்சைமாறாக் காய்கறிகள் (fresh veg) அன்று வரும், மேலும் தமிழகத்திலிருந்து கட்டுமானத்துறைக்கு வேலைக்கு வந்திருக்கும் தொழிலாளர்கள் எல்லோரும் அன்று தான் அங்கு கூடுவார்கள். அவர்களைப் பார்க்கும் போது தமிழகமே அங்கிருப்பது / தமிழகத்தில் இருப்பது போன்ற மகிழ்ச்சி எனக்கு கிடைக்கும், கூட்ட நெரிசலில் செல்வது கடினம் என்றாலும் அது ஒருவித மகிழ்ச்சி தான்.வீட்டுக்கு வரும் போது காய்கறி பைகள் இருக்கும் எனவே பொது போக்குவரத்து வாகனங்களில் செல்லாமல் வாடகை வண்டியில் (டாக்சியில்) வருவேன். தற்போது மீட்டர் கட்டணம் (35 விழுக்காடு வரை) ஏறி இருப்பதால் டாக்சியில் ஏறும் போது மீட்டர் ஏற ஏற எனக்கும் டிக் டிக் அதிகமாகும். :) பொது போக்குவரத்து பேருந்து அல்லது ரயிலில் வீட்டுக்குச் செல்ல 1 மணி நேரமாகும், டாக்சி என்றால் 30 நிமிடத்தில் சென்றுவிடலாம். மறுநாள் திங்கள் வழக்கம் போல் வேலைக்குச் செல்ல வேண்டி இருப்பதால் சோர்வான பயணத்தை தவிர்க்க டாக்சியில் தான் செல்வேன்.

நான் டாக்சியில் ஏறினால் பகல் பொழுதாக இருந்தால் அங்கு வாங்கி வந்த நக்கீரன் புத்தகத்தைப் புறட்டுவேன். மாலை 7 மணிக்கு மேல் என்றால் போதிய வெளிச்சமின்மையால் டாக்சியுனுள் புத்தகம் படிக்க முடியாது. எந்த நேரமாக இருந்தாலும் டாக்சி ஓட்டுனர் பேச்சுக் கொடுத்தால் சுவையார்வமாக பேசிக் கொண்டு வருவேன். இன்று ஒரு 60 வயது சீன பெரியவரின் டாக்சி கிடைத்தது.

பொதுவாக் ஞாயிற்றுக்கிழமைகளில் குட்டி இந்தியாவழியாக செல்ல டாக்சி ஓட்டுனர் அல்லாத சீனர்கள் தவிர்பர். அதையும் மீறி அந்த பகுதிவழியாக செல்ல முகம் சுழிப்பர், காரணம் எண்ணமுடியாத தலைகள், சாலையில் திடிரென்று குறுக்கே ஓடுபவர்கள் என சாலை நெரிசலாக இருக்கும். வாகனம் ஓட்டுபவர்களுக்கு திறன் இல்லை என்றால் விபத்து ஏற்படும் அளவுக்கு குறுக்கே ஓடுவார்கள். அது தவிர அங்கு கூடியிருக்கும் தொழிலாளர்கள் பஞ்சம் பிழைக்க வந்ததாகவே நினைத்திருப்பதால் உயர்மனப்பாண்மையில் இருப்பவர்கள் அந்த வழியை புறக்கணிப்பர்.

டாக்சி ஓட்டுனரிடம் கேட்டேன்,'இந்த கூட்டத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.'

'அவர்களுக்கு ஞாயிற்றுக் கிழமை விட்டால் இங்கே வருவதற்கான வாய்ப்பு இல்லை, அன்றுதான் வங்கிகள் மூலம் பணம் அனுப்புவார்கள், நண்பர்களை சந்திப்பார்கள் இது தவிர்க்க முடியாது, ஆனால் சாலையை கடக்கும் முன் தங்கள் உயிருக்கும் மதிப்புக் கொடுக்கலாம்' என்றார்

அவர் சரியாகத்தான் புரிந்து வைத்திருக்கிறார். அங்குவருபவர்களுக்கு ஞாயிற்றுக் கிழமைதான் வெளியில் செல்லவே அனுமதி கிடைக்கும், அதனால் ஒருவாரத்துக்கு தேவையானதை வாங்கிச் செல்வார்கள், நண்பர்களுடன் மகிழ்வுடன் இருப்பார்கள். இதை பலர் புரிந்து கொள்ளாமல் ஏன் இங்கே இவ்வளவு கூட்டம் என்பது போல் முகம் சுழிப்பார்கள். அதைப் புரிந்து வைத்திருந்த அந்த பெரியவரிடம் மரியாதை வந்தது.

பிறகு, அவரது மகன்கள் பிஹெச்டி வரை படித்திருப்பதைப் பற்றி பெருமையாக சொன்னார்.

"நீங்கள் ஏன் டாக்சி ஓட்டி கஷ்டப்படுக்கிறீர்கள், உங்கள் மகன்கள் உங்களுக்கு உதவ வில்லையா ?"

"எனக்கு 60 வயது ஆகின்றது, என்னால் வேலை செய்யும் முடியும் வரை செய்வேன், இல்லையென்றால் முடியவில்லை உதவுங்கள் என்று கேட்பேன்" என்றார்

"சிங்கை கல்சர் படி, வாரிசுகள் வேலைக்குச் சென்றதும் பெற்றோர்களுக்கு உதவுகிறார்களா ?"

"நல்லது, நான் எனது பெற்றோர் இருக்கும் வரை உதவி இருக்கிறேன், அது போல் எனக்கு முடியவில்லை என்றால் என்மகன்கள் உதவுவார்கள், தற்போதைக்கு என்னால் வீட்டில் சும்மாவும் இருக்க முடியாது, கைகால்கள் நன்றாக இருக்கும் வரை யாரையும் எதிர்பார்காது உழைப்பில் சாப்பிடுவதுதான் எனக்கும் மகிழ்ச்சி" என்றார்

"உங்களுக்கு 60 வயது ஆகிறது என்கிறீர்கள், கடந்து வந்த வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்ததா ?"

"வெல், ஆடிட்டிங் கம்பெணி மற்றும் பேங்கில் 58 வரை வேலை செய்தேன், எனது மகன்களை நன்கு படிக்க வைத்தேன், எனது பெற்றோர்களுக்கு உதவி இருக்கிறேன், எனது கடமைகளை சரியாக செய்தேன், ஓரளவு சேமிப்பும் இருக்கிறது, எனது வாழ்க்கையில் பொருள் நிறைந்ததாகவே நினைக்கிறேன். எனது வாழ்க்கை மகிழ்ச்சியாகத்தான் இருந்தது, தற்போதும் இருக்கிறது" என்றார்.

பொதுவாக நம் இந்தியர்களுக்கு, தாங்கள் தான் உலகத்துக்கே பண்பாடு கலாச்சாரம் சொல்லிக் கொடுப்பவர்கள் என்ற நினைப்பு உண்டு, வெளிநாட்டுக்காரர்கள் எல்லோரும் பொறுப்பற்றவர்களாவும், சுயநலத்தில் வாழ்பவர்களாகவும் நினைத்துக் கொள்கிறார்கள். இல்லறம் என்ற அமைப்பின் மீது நம்பிக்கையுடன் அதை அமைத்துக் கொண்டவர்களில் 90 விழுக்காட்டினர் எந்த நாட்டினராக இருந்தாலும் பொறுப்பாகவும் மகிழ்வுடனும் வாழ்கிறார்கள்.

கடமைகளை சரியாக செய்துவிட்டால் ஆணோ பெண்னோ 60 வயதில் கூட மகிழ்வுடனும், மேலும் முழு மனநிறைவுடன் இருப்பார்கள். அதைச் செய்யத் தவறியவர்களும், வாரிசுகளால் கவனிக்கப்படாதவர்களும் முதுமையில் மனவருத்தமும், வாழ்ந்த / வாழும் வாழ்கையின் மீது வருத்தமும் இருக்கும்.

ஒருவர் தனது கடமைகளை சரிவர செய்திருந்தால், கண்டிப்பாக அவர் ஓய்வடையும் போது மகிழ்ச்சி இருக்கிறதோ இல்லையே மனநிம்மதியும், முழுமையான வாழ்க்கை வாழ்ந்ததற்கான மனநிறைவும் இருக்கும்.

தொடர்புடைய மற்றொரு சுட்டி மரணத்தை கொண்டாட முடியுமா ?

28 மார்ச், 2008

கூகுள் உதவியுடன் உங்கள் வலைப்பதிவிற்குள் தேடுவது எப்படி ?

நாம் எதாவது தரவுகளை தேடும் போது, எதாவது தேடு தளம் (Search Engine) பயன்படுத்துவோம், அப்படி தேடும் போது தொடர்பே இல்லாத பக்கங்களையெல்லாம் சேர்த்து ஒரு பெரிய பட்டியலை அது கொடுக்கும், அதிலிருந்து கண்டுபிடிக்க வேண்டுமென்றால், "டவுசரு கிழியுது, தாவு தீறுது" லக்கி பாணி அலுப்பே மிஞ்சும்.

வலைப்பதிவுகள் மாத அடிப்படையில் எழுதப்பட்ட பக்கங்கள் சேமிக்கப்பட்டு இருக்கும், அதில் குறிப்பிட்ட கட்டுரையை, கவிதையை எடுக்க வேண்டும், ஒரே ஒரு சொல்மட்டுமே நமக்கு நினைவில் இருக்கிறது அதைவைத்து தான் அந்த பக்கத்திற்கு சென்று அந்த பக்கத்தில் உள்ளவற்றை மீண்டும் படித்துக் கொள்ள, அல்லது தரவாக இணைப்பதற்கு பயன்படுத்த வேண்டும் என்ற சூழலில் எப்படி குறிப்பிட்ட பக்கத்தை அடைவது, ஒவ்வொரு இடுகையாக திறந்து பார்த்து தேடுவதற்குள் கண் பூத்துவிடும். அதற்கு எளிய வழி,

லக்கி பதிவை எடுத்துக் கொள்வோம், அவர் எந்தந்த பதிவுகளில் "டவுசர்" பயன்படுத்தி இருக்கிறார் என்று பார்க்க வேண்டுமென்றால்,

கூகுள் தேடுதல் தளத்திற்கு சென்று "டவுசர்" site:http://madippakkam.blogspot.com என்று தட்டச்சு செய்து தேடு பொத்தானை அழுத்தினால்,எத்தனை டவுசரை கிழித்திருக்கிறார் என்று தெரியும். நான் பார்த்த போது அவரது பதிவில் 36 முறை டவுசர் கிழிபட்டு இருக்கிறது.

எண்ணிக்கை மிகக் குறைவுதான், இன்னும் கூட கூடுதலாக கிழிபட்டு இருக்கும் என்று எதிர்பார்த்தேன்.

அடுத்து ரத்னேஷ் பதிவில் எத்தனை முறை பெண்ணியம் வருகிறது என்று பார்க்க
"பெண்ணியம்" site:http://rathnesh.blogspot.com



6 இடத்தில் தான் 'பெண்ணியம்' வந்திருக்கிறது.



வலைத்தளத்தில் தேடும் முறை இதுதான், தேடுதல் தளத்தில், தேடும் சொற்களை, ஒருங்குறி (யூனிக்கோட்) தமிழ் பயன்படுத்தலாம், சுட்டியை கண்டிப்பாக ஆங்கிலத்தில் தான் கொடுக்க வேண்டும்.

"Search text" site:blogurl

பொதுவாக புழக்கத்தில் இருக்கும் தேடு(தல்) தளங்கள் :

http://google.com
http://yahoo.com
http://www.msn.com
http://altavista.com
http://alltheweb.com (இது யாகூவைத்தான் பயன்படுத்துகிறது)

27 மார்ச், 2008

நடுத்தர வயது பிரச்சனைகள்

நடுத்தரவயதினர் குறித்து சமூகம் அக்கரை கொள்வதில்லை, அவர்களுக்கான செய்திகள் அவ்வளவாக இல்லை என்று ரத்னேஷ் அண்ணா ஒரு இடுகை எழுதி இருந்தார். உண்மைதான்.

நடுத்தரவயதினருக்கு தன்னைப் பற்றிய நினைவே இருக்காது. திருமணம் நடந்து 40 வயது கடந்த ஆண்கள் பெண்களுக்கு பொறுப்புகள் அதிகமாகி இருக்கும், ஆண் என்றால் 25லிருந்து 35 வயது வரை எதிர்காலம் என்பதைக் கருத்தில் கொண்டு பல்வேறு திறமைகளை தனக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனையில் இருப்பான். இவர்களை குறிவைத்து வேலை சந்தைகள், திருமணசந்தைகள் எல்லாம் இயங்கும். இலக்கியம், படைப்பாளிகள், சமூகம் பொதுவாக காதலையும், அதன் பிறகு கொஞ்சம் திருமண வாழ்கையையும் பற்றி பேசிவிட்டு குழந்தை பிறந்ததா இல்லையா என்று கவலைப்பட்டு நிறுத்திக் கொள்கிறது. அதற்குமேல் இலக்கியமும் இலக்கிய ஆர்வலர்களும், சமூகமும் பேசவேண்டுமென்றால் 50 வயது கடந்தவர்களுக்கும் வரும் நிகழ்வுகளையும், முதியோர் இல்லம், வாரிசுகளுக்கு வரன் தேடுவது, மருமகள் தொல்லை, மாமியார் தொல்லை ஆகியவற்றில் கவனம் செலுத்து கிறார்கள். 40 வயது ஆகிவிட்டால் ஓரளவு வாழ்வியல் அனுபவம் அடைந் திருப்பவர்கள் அவர்களுக்கு எதிர்கொள்ளவேண்டியவை எது என்று சொல்லத்தேவை இல்லை என்று சமூகம் கருதுகிறது.

என்னிடம் நெருங்கிய நண்பர் ஒருவர் "இந்தியாவுக்கு வந்தால் நல்ல எதிர்காலம் இருக்கு, யோசிக்கலாமே" என்றார். "ஐயா சாமி இன்னும் 15 அல்லது 16 ஆண்டுகள் தான் வேலை செய்யப் போகிறோம், பாதிவாழ்கை ஓடிவிட்டது, எதிர்காலம் என்று எதையும் இனி புதிதாக கற்பனை செய்யமுடியாது, இருக்கிற வேலையை பார்த்துக் கொண்டிருப்பதுதான் சரி என்று படுகிறது" என்றேன், என்வயதுகாரராக அவரும் இருப்பதால் "ம் சொல்வது சரிதான்" என்றார். நடுத்தரவயதில் புதிய முடிவெடுப்பது என்னைப் போன்றோர்களுக்கு கடினமே, சொந்த நிறுவனம் நடத்துபவர்களுக்கு வயது ஒரு பிரச்சனையே இல்லை அவர்கள் எண்ணிக்கையில் குறைவுதான். இங்கு சிங்கையில் 40 வயது கடந்தவர்களுக்கு
திறமை இல்லை என்றால் வேலை கிடைப்பது அரிது, டாக்சி ஓட்டச் சென்றுவிடுவார்கள்.

இல்லச் சூழலிகளில் கூட 30 வயதில் திருமணம் நடந்தால் அதன் பிறகு வயது மூப்பின் காரணமாக அடுத்த ஆண்டே குழந்தை பெற்றுக் கொள்ளும் கட்டாயத்தில் இருப்பான், 40 வயதை நெருங்கும் போது குழந்தைக்கு 8 வயது ஆகி இருக்கும், அந்த தம்பதிகளின் நினைவு முழுவதும், வாரிசுகளின் எதிர்காலத்தை எப்படி அமைத்துக் கொடுப்பது என்ற நினைவிலேயே இருக்கும். பாசமான குடும்பத்தில் பிறந்தவர்கள் என்றால் பெற்றோர்களை எப்படியெல்லாம் மகிழ்வுடன் வைத்திருப்பது என்றெல்லாம் சிந்திப்பார்கள், அதற்கு வாய்ப்பில்லாதவர்கள் வார இறுதி நாட்களில் குழந்தைகளுடன் கடற்கரைக்குச் சென்று வருவார்கள். நடுத்தரவயதினரின் வீட்டைப் பொருத்து அன்றாட நடவெடிக்கை ஒரே மாதிரிதான் இருக்கும்.

இதற்கு மேல் இவர்களுக்கு இடற்பாடுகளோ மகிழ்ச்சிகளோ இருப்பது இல்லை வெளிப்படையாக தெரியாவிட்டாலும் பலரது நடுத்தர வயது வாழ்கை இவ்வளவுதான். இவர்களுக்கு ஆலோசனைக் கூறுவதற்கு தேவை இருப்பதில்லை. திரைப்படங்களில் இதை தெளிவாக பார்கலாம், எல்லா கதைகளிலுமே நடுத்தரவயது பாத்திரம் ஒரு துணை பாத்திரம் மட்டுமே. ஒன்று இளைஞர்களைச் சுற்றி கதை பின்னப்பட்டு இருக்கும், இல்லையென்றால் வெகு அரிதாக மாதவ படையாட்சி கதைபோல் முதுமையையின் துன்பங்களை சொல்லி இருப்பார்கள்.

நடுத்தரவயதினரைப் பற்றி சமூகம் கவலைப்படாததற்கு காரணம், நடுத்தரவயது புதிய பிரச்சனைகளை சந்திக்கும் வயது அல்ல என்பதுதான். நடுத்தரவயதினருக்கு தன்னைப்பற்றி எவரும் கவலைப்படுவதில்லை என்ற உள்ளுக்குள் வருத்தம் இருக்கும், முதுமை உடலுக்கு எட்டும் தொலைவில் இருக்கும் என்ற கவலை வந்துவிடும். அதை அவர்களே புரிந்து கொள்ளாமல் பிறரிடம் எரிந்துவிழுவார்கள். '40 வயதில் நாய்குணம்' என்று அதைத்தான் சொல்கிறார்கள். அதே போல் எரிந்துவிழும் பெண்களின் கோபத்திற்கு மெனோபாஸ் என்ற மாதவிலக்கு நின்று போவதும் ஒருகாரணம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள், அதன் தம் கணவரை மிகவும் நேசிக்கும் பெண்கள் 'மாதவிலக்கு நின்ற பிறகும் கணவர் தம்மை முன்பு போலவே நேசிப்பாரா ?' என்று வெகு சிலர் கவலை கொள்ள ஆரம்பித்து விடுவார்கள். இது இனம் கடந்து எல்லா மனித இனத்திலும் இருக்கும் உணர்வுதான். எனது அலுவலகத்தில் இருக்கும் பேரிளம் பெண் 50 வயதை நெருங்குபவர், மாதவிலக்கு இன்னும் நிற்கவில்லை என்பதை மேற்கண்ட கனவர் காரணத்தை சொல்லி, அது இன்னும் நிற்காமல் இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாக பெருமையுடன் வெளியில் சொல்லிக் கொள்வார்.

நடுத்தரவயதில் திடீர் பிரச்சனை ஏற்பட்டாலும் அதை தீர்க்க முடியாத பருவம் என்பதால், பிரச்சனை என்றால் இந்த வயதினர் பின்வாங்குவார்கள். மணமுறிவு போன்ற சூழல்களில் நன்கு யோசித்தே முடிவெடுப்பார்கள், இந்த வயதுக்கு மேல் வெறொரு திருமணம் செய்து அந்த வாழ்கையிலும் நிம்மதி இல்லாமல் போய்விட்டால் அதன்பிறகு மேலும் துன்பம் தான், அதனால் பிரச்சனையை ஏற்றுக் கொண்டு, அல்லது பிரச்சனையுடனேயே அதன் போக்கில் விட்டு வாழ பழகிவிடுவார்கள். தனக்கு என்று ஒரு இல்லம் இருக்கிறது என்பதை உணர்ந்தாலும் தனிமனித நலனே முக்கியம் என்று நினைக்கும் ஒரு சில நடுத்தர வயதினர் மட்டுமே மணமுறிவு, மறுமணம் என்று முடிவெடுப்பார்கள்.

திருமணம் ஆன ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, நடுத்தரவயதில் பிரச்சனைகளை சந்திப்பவர் என்ற நிலையில் இருப்பவர்கள் அந்த வயதினரின் விழுக்காட்டு அளவில் மிகக் குறைவே. ஆணாக இருந்தால் நரைக்க ஆரம்பிக்கும் மீசைக்கு மை தடவுவதும், தாடியில் வெள்ளை முடி தெரியும் என்பதற்காக நாள்தோறும் மழுங்க மழித்துக் கொள்வதிலும் முனைப்பாக இருப்பார்கள்.

படைப்பாளிகள் மேற்கண்ட காரணங்களினால் தான் நடுத்தரவயதினரை கண்டு கொள்வதே இல்லை. பதிவர்களிலும் கூட நடுத்தரவயதினர், வயதில் மூத்த பதிவர்களை விட எண்ணிக்கை குறைவுதான். 40 வயது ஆகும் போது சென்ற பத்தாண்டுகள் 10 நாளில் முடிந்தது போல் இருக்கும், 30லிருந்து 40 வயதில் எதிர்கால திட்டங்கள் மற்றும், வாழ்வின் அடித்தளம் அமைப்பது என்ற ரீதியில் வாழ்கையின் வேகம் வெகு விரைவுதான்.

அழகு அழகு அழகு !

இன்று காலை சிங்கை வானொலியில் அழகு சிகிச்சை செய்து கொள்வது பற்றிய 'வெளிச்சம்' நிகழ்ச்சி பலதரவுகளுடன் வாசிக்கப்பட்டது. அதை ஒட்டிய சில எண்ணங்களை எழுதுகிறேன்.

"அழகு என்பது தோற்றம் குறித்ததென்றால் அன்னை தெரசா உலக அழகியும் இல்லை, மகாத்மா ஆணழகனும் இல்லை" என்று அழுத்தமான கருத்தை அறிவிப்பாளர் பொன்.மகாலிங்கம் அவர்களின் மென்மையான குரல் வழி கேட்க முடிந்தது.

100 விழுக்காடு உண்மைதான். அழகு தோற்றம் குறித்தது அல்ல, ஆனால் தோற்றத்தின் வழி அப்படி ஒன்றை பார்பவர்கள் மனதில் ஏற்படுத்திவிட முடியும் என்பதால் தானே அழகு சாதனபொருள்கள் சந்தையில் பரவிக்கிடக்கின்றன. தன்னைப் பற்றிய நல்லெண்ணம் வரவேண்டும் என்பதைவிட தான் மிடுக்கானவன்(ள்) என்று காட்டுவதையே பெரும அளவில் பெண்களும், அதற்கு கொஞ்சம் குறைவாக ஆண்களும் நினைக்கிறார்கள். நல்ல நேர்த்தியான உடை உடுத்துபவரைப் பார்க்கும் போது இவர் எல்லாவற்றையும் சரியாக செய்பவர் என்ற எண்ணம் வரும். அப்படி இல்லாதவர்கள் பொறுப்பற்றவர்கள் என்ற எண்ணமும் இயல்புதான். அதன் பிறகு ஆடம்பர உடை மற்றும் அணிகலன்களை வைத்து அவர் எவ்வளவு ஆடம்பர விரும்பி என்பதை அது காட்டும். ஆடம்பர உடை அணிவதில் ஒருசிலர் அவர்களுக்கு சமூகத்தில் இருக்கும் மதிப்பைப் பொருத்து அணிவார்கள். இந்த தகுதி உள்ளவர் இதை அணிவது தான் அவருடைய மதிப்பை அப்படியே வைத்திருக்கும் என்ற வெளிப்படையான காரணங்களினாலேயே அரசர், உயர்பதவியில் உள்ளவர்களுக்கென்றே தனிப்பட்ட (பிரத்தியோக) ஆடைகள் இருக்கும்.

தற்பொழுது அலுவலகங்களில் சாதாரண உடைகள் (கேசுவல் டிரஸ்) அணியும் பழக்கம் சாதாரணமாகிவிட்டது. எந்த உடையாக இருந்தாலும் அவை நேர்த்தியாக இருக்க வேண்டும். அப்படி அணிபவர்க்கள் தாம் பொறுப்பானவர் என்று சொல்லிக் கொள்ளத் தேவை இல்லை. அதற்காக தலையை கலைந்தது கூட கவனிக்காமல் இருப்பவர்களெல்லாம் பொறுப்பற்றவர் என்று சொல்லிவிட முடியாது. மற்றதில், வேலையில் அவர்கள் பொறுப்பானவர்கள் ஆனால் தன்னைப் பற்றி கூடுதல் கவனம் கொள்ளாதவர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். அணியும் உடைபற்றிய என் எண்ணம் இதுதான்.

உடல் தோற்றம் அழகா ? யாரும் தான் இப்படி தான் வடிவமைக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று வடிவமைத்துக் கொண்டு பிறப்பதில்லை, அதில் பெற்றோர்களின் பங்கு ஜீன்களை தம் தலையில் சுமத்தியது மட்டுமே, 'ஏம்மா, என்னை கருப்பா பெத்தே ?' என்ற வசனம் நகைச்சுவைக்கு என்றாலும் கருப்பாக இருக்கிறோம் என்ற தாழ்வுணர்வு எல்லோருக்கும் இருக்கிறது. கருப்பு நிறமாக இருப்பவர் உயர்வதற்கு கருப்பு நிறம் தடையாக இல்லை என்பதை ரஜினி போன்றவர்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். பின்பு ஏன் கருப்பு நிறம் குறித்து இவ்வளவு கவலைப்படுகிறார்கள் என்று தெரிவதே இல்லை.

நான் இந்தியன் என்பதால் எனது நிறத்தை கேலி செய்யும் சீனர்கள் இருக்கிறார்கள், ஆனால் 'ஜோக்கு' என்று சொல்லிவிட்டே கூடும் அறைகளில் (மீட்டிங் ரூம்) வெளிச்சம் குறைவாக இருக்கும் போது 'i cannot see your face' என்று சொல்ல பலரும் கலகலவென சிரிப்பார்கள். நான் அலட்டிக் கொள்வது இல்லை. பதிலுக்கு அவர்களின் சப்பை மூக்கைப் பற்றி கமெண்ட் அடிக்க தோன்றினாலும் அவர்களே எண்ணிக்கையில் கூடுதல் என்பதால் அங்கு சொல்லாமல் தனியாக அது போன்ற கமெண்ட் அவரும் போது பதிலுக்கு பதில் பேசிவிடுவது உண்டு. எப்படியாவது ஒருவரை குறைச் சொல்ல நிறம் அரசியலுக்கு மட்டுமே பயன்படுகிறது, அவர்களுக்கும் தெரியும் அதே சீனர்களையும், ஜப்பானியர்களையும் 'மஞ்சள்' பிசாசுகள் என்று தான் ஆங்கிலேயர்கள் அழைப்பார்கள்.

ஆக நிறம் என்பது பிறர் ஒருவரை கேலி செய்வதற்கு அரசியல் ரீதியாக பயன்படுகிறது என்பதைத்தவிர அந்த நிறத்தில் பிறந்தவர்களுக்கு எந்த கெடுதலையும் செய்வது இல்லை. வெள்ளைக்காரர்களைவிட ஆப்பிரிக்க இனமே எனக்கு அழகாக தெரிகிறது. பலரும் அதுபோலவே சொல்கிறார்கள். அழகு சிகிச்சை என்ற பெயரில் முகத்தை கூடுதல் சிகப்பாக்க பயன்படும் இராசாயண கலவைகள் தற்காலிக பலன் தரும், குறிப்பாக பயன்படுத்தும்
வரை தான் பலன் தரும், எங்கள் ஊரில் தெரிந்த கடைக்காரர் ஒருவர் பேர் அண்ட் லவ்லி போட்டு முகத்தை பளபளப்பாக வைத்திருந்தார். பின்பு கடையில் லாபம் இல்லை என்பதால் சென்னைக்கு வேறுவேலை செய்யச் சென்றுவிட்டார், குறைந்த வருமானம். அவரை சென்னையில் சந்தித்த போது அவரா இவர் என்று ஒருகனம் திகைத்தேன். அதன் பிறகுதான் தெரிந்தது, அழகு சாதனப் பொருள்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் வரைதான் பலன் தரும் என்ற உண்மை.

நண்பர் ஒருவர் உடலில் வெண்தோல் படர்ந்ததும் ஆடிப்போனார். சமூகம் நம்மை கேலியாக பார்க்குமோ என்று குறுகிப்போனார், அதுபோன்று நடந்துவிட்டால் அப்படித்தான் இருப்பார்கள் போல, தனக்கு என்று வந்தால் தெரியும் என்பது போல் தான் கொள்ள முடிகிறது. ஆனால் அவருடன் பழகிய நண்பர்கள் யாரும் அதை பெரிய விசயமாகவே எடுத்துக் கொள்ளவில்லை. உறவினர்களும் பெரியவிசயமாக கொள்ளவில்லை. பின்பு ஏன் இதுபோன்றவர்கள் மனம் குறுகிக் கொள்ளவேண்டும் ? தோற்றம் குறித்து சமூகம் கட்டிவைத்துள்ள தவறான கட்டுமானமே தான் இவற்றிற்க்கான காரணம். வெளிநாடுகளில் வெள்ளைத்தோல் படர்தவர்களையெல்ல்லாம் யாரும் அன்னியமாக் பார்பது இல்லை. ஒரே ஒரு இடத்தில் அதுபோன்ற ஒருவரைப் பார்த்தேன், அவர் உணவு தயாரிக்கும் சிற்றுண்டி கடையில் உணவு தயாரித்துக் கொண்டிருந்தார். நம் ஊரில் அதுபோன்றவர்களிடம் கைகுலுக்குவதைக் கூட அவரிடம் பழகாதவர்கள் தயக்கம் காட்டுவார்களோ என்று அவரையே எண்ணவைத்து தாழ்வு மனநிலைக்கு தள்ளப்பட்டு வைத்திருக்கிறது இந்திய சமூகம்.

தேவையற்ற கூடுதல் அழகுபடுத்திக் (அலங்காரம்) கொள்ளுவது நம் வெளிப்பகட்டிற்கு தான். இவையாவும் உறவினர்களையோ, நண்பர்களையோ கவராது. நாம் எப்படிப்பட்டவர் என்பது நம்மோடு இருப்பவர்களுக்கு தெரியும். தெரியாதவர்களுக்கு ஒன்றை நாம் வெளிப்பகட்டிற்காக செய்தால் அப்படி செய்து கொள்பவருக்கு அதனால் என்ன நன்மை ?

தானே தேடிக் கெடுத்துக் கொள்ளும் உடல் தோற்றக் கோளாறுகள் அதாவது உடல்நலத்தில் கவனம் கொள்ளாது உண்டுவிட்டு கொழுப்பைக் குறைக்க, ஊசி மூலம் உறிஞ்சும் சிகிச்சைகளில் பலருக்கு மாறாத வடுக்கள் தோன்றுகிறதாம். கொளுப்பைக் குறைக்கும் மாத்திரைகளால் கல்லீரல் பாதிப்படைந்து பலர் மரணமடைந்து பிறகு அம்மாத்திரைகள் தடை செய்யப்பட்டதும் நடந்திருக்கிறது.

அகஅழகைவிட முகஅழகு அல்லது ஒருவரின் தோற்றம் அவ்வளவு முதன்மையானது அல்ல. முகம் காட்டாத உள்ளங்களை நேசிக்க முடியுமா ? இன்றைய இண்டெர்னெட் உலகில் அவை கூறுகளே (சாத்தியம்) பதிவர்கள் பலருக்கும் அந்த அனுபவம் இருக்கலாம்.

26 மார்ச், 2008

கவுண்டமணி செந்தில் - காமடி டைம் !

கவுண்டர் தலையில் கைவைத்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கிறார்

செந்தில் : என்னண்ணே இப்படி சோகமாக ஒட்கார்ந்திருக்கிங்க ?

கவுண்டர் : ஆமாம், இவன் ஒரு கர்ண பிரபு, கஷ்டத்தைச் சொன்னா கடன் வாங்கியாவது கொடுத்துட போறான்

செந்தில் : பணம் என்னண்ண பணம், பணம் கொடுத்தாதான் உதவியா ? நாலு யோசனை சொன்னால் கேட்கமாட்டிங்களா ?

கவுண்டர் : வந்துட்டாருய்யா ஹோம் செகரட்டரி, எருமையையே ஒழுங்கா மேய்க்க தெரியாத நாயி நிய்யி, நீ யோசனை செல்லப் போறியா ?

செந்தில் : போங்கண்ணே, போனவாரம் என்கிட்ட யோசனை கேட்டு ஒருத்தன் லட்சாதிபதி ஆகி இருக்கான்.

கவுண்டர் : என்னடா பேங்குல கொள்ளையடிக்க சொல்லிக் கொடுத்தியா ?

செந்தில் : அதுல்லண்ண, எனக்கு தெரிஞ்ச சாமியார் இருக்கார், அவர்கிட்ட அழைச்சிட்டுப் போறேன், உங்க ரேகையப் பார்த்து பரிகாரம் செஞ்சா கஷ்டமெல்லாம் பறந்து போய்டும்ண்ண

கவுண்டர் : நான் இருக்கிற நெலமயில நாயி கூட யோசனை சொல்ல வந்துடும், நீ சொல்றதையும் கேட்கிறேன், வா போவோம்.

**************

செந்தில் : அண்ணே, சாமியாரை கும்புட்டுகுங்க,

சாமியாரைப் பார்த்த கவுண்டமணி யோசனை செய்கிறார், இவனை எங்கேயோ பார்த்திருக்கோமே,

சாமியாரைப் பார்த்து,

கவுண்டர் : டேய் நீ முனுசாமி தானே ?

சாமியார் அதிர்ச்சி அடைந்து செந்திலை பார்க்கிறார்

செந்தில் : என்னண்ணே இவர் வடநாட்டில் இருந்து வந்திருக்கிற மூன் சாமி, அதாவது சந்திர சாமியார்

கவுண்டர் : யாரு இவனா ? இந்த நாயி சினிமா கொட்டகை வாசலில் மூனு சீட்டுப் போடுற முனுசாமி, இவன் மூன் சாமியா ?

செந்தில் : அண்ணே நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்கிங்க

கவுண்டர் : டேய் இந்த நாய்க்கு சேவிங் பண்ணிப்பாரு, போலிஸ் காரன் பொளந்ததுல தாடை கிழிஞ்சி இருப்பது தெரியும்

செந்தில் பம்முகிறார்

கவுண்டர் : டேய் அவனை உதைக்கப் போறதில்ல, அவனை ஊரு ஜெனங்ககிட்ட புடிச்சு கொடுத்துடுவன், உன்னையத்தான் உதைக்கப் போறேன்

செந்தில் : அண்ணே, எவனும் வேலை கொடுக்க மாட்டேன்கிறா, இவன் தான் எனக்கு ஆள்புடிச்சு கொடுத்த கமிசன் கொடுப்பதாக சொன்னான், அதான்ண்ண பொழப்புக்காக செஞ்சிட்டேன், மன்னிச்சிடுங்க

கவுண்டர் : எலேய் உன்னைப் பத்தி தெரிஞ்ச என்னையே ஏமாத்த இவன்கிட்ட கூட்டியாந்திருக்க, மற்ற அப்பாவி ஜெனங்களை நீ எப்படியெல்லாம் ஏமாத்தி இருப்பே ?

செந்தில் ஓட்டமெடுக்கிறார்,

கவுண்டர் : அடே அடே நீ எந்த மூலையில் போய் ஒளிஞ்சாலும் விடமாட்டேன்.

துறத்திக் கொண்டு செல்கிறார்...

இறைவனை அறிந்தது யார் ?

இதைப்பற்றி என்னால் நினைக்காமல் இருக்கமுடிவதில்லை. தேடினோம் கிடைத்தது, உங்களுக்கும் கிடைக்கலாம் தேடுங்கள் என்கிறார்கள், கிறித்துவ மதத்தில் 'தட்டுங்கள் திறக்கப்படும்' கடவுள் கஜானா கூப்பாடு போடுவதால் தான் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இஸ்லாம் மதத்தில் எதையும் கேள்விக்கு உட்படுத்தக் கூடாது, கேள்விக்கு இடமில்லை, ஆனால் கேள்வி என்று கேட்காமல் சந்தேகமாக இது எனக்கு புரியவில்லை, விளக்க முடியுமா ? என்று ஐயமாக கேட்டுத் தெரிந்து கொண்டு இடமுண்டு, அதிலும் பதில் சொல்பவர் குரான், ஹதீஸ் என்ற வழிமுறைகளில் இல்லாத ஒன்றை சொல்லிவிட முடியாது. நான் ஏன் மதத்தையும் கடவுளையும் பற்றி பேசவேண்டும் ? நம் விருப்பமில்லாமல் நம்மீது திணிக்கப்பட்டதைப் பற்றி கொஞ்சம் கூட ஆர்வம் இல்லாமல் இருக்க முடியுமா ? இதுவரை வாழ்ந்து மறைந்தவர்கள், மகான்கள் அறிந்திருக்கிறார்களே அதற்கு ஆதாரமாக அவர்கள் எழுதிய நூல்கள் இருக்கிறதே அதெல்லாம் போதாதா ? கண்டிப்பாக போதாது. பசி தாகம் போன்ற உணர்வைப் போல் அவரவர் அனுபவத்தில் மட்டுமே இவற்றையெல்லாம் அறிந்து கொள்ள முயற்சி எடுக்க முடியும். வழிகாட்டல் என்ற வகையில் சிலவற்றைப் படிக்கலாம், அதுவும் அவர் பெற்ற அனுபவத்தை ஒத்த அனுபவத்தை வேறு எவரும் பெற்று இருக்க மாட்டார்கள்,

உதாரணத்திற்கு இராமகிருஷ்ணரும் விவேகாநந்தரையும் எடுத்துக் கொள்வோம். இராமகிருஷ்ணர் உருவ வழிபாடும் காளியை வழிபடுவது என பக்தி வழியில் சென்றார், அவருக்கு கிடைத்த அனுபவங்கள் பிறகாலத்தில் தண்ணுனர்வில் அனைத்தும் ஒன்றே என்று உணரும் அத்வைத அனுபவம் பெற்றார். விவேகநந்தரருக்கு முழுக்க முழுக்க தத்துவ நோக்கில் அவரது ஆன்மிக பயணம் அமைந்தது. இவர் அவரது சீடர் என்றாலும் படிப்பறிவு மிக்கவர் என்பதால் அனைத்து மதநூல்களையும் கற்று மதங்களில் சொல்லப்படுவது கடவுளில்லை, அதற்குமேல் என்று சொன்னார், அவரும் ஒரு அத்வைதிதான்.இருவரது அனுபவங்களும் வேறு. அதுபோல் இந்தியாவில் வாழ்ந்த சூஃபி ஞானிகள் மதங்களுக்கு அப்பாற்பட்டு வெவ்வேறு அனுபவம் உடையவர்களாகவே இருந்தார்கள்.

ஆன்மிகம் அறிந்து கொள்ள விரும்புவர்கள் இவர்களைப் பற்றி படிக்கலாம், ஆனால் ஆன்மிக அனுபவம் வேண்டும் என்பவர்களுக்கு ஆன்மிகவாதிகளின் அனுபவங்கள் எந்தவிததிலும் உதாவாது, உதாரணத்திற்கு இரஜனீஸ் சாமியாரை எடுத்துக் கொள்வோம், 'காமத்திலிருந்து
கடவுளுக்கு என்பது போன்று கட்டமைத்துச் சென்றுவிட்டார். நீ எதையும் துறக்கவேண்டாம், ஆனால் அவற்றின் கட்டுப்பாட்டில் இருக்காதே என்பது தான் அவரது சித்தாந்தம். சாமியார் என்றாலே காமத்துக்கு இடமில்லை என்ற புனிதம் கற்பிக்கப்பட்டதால் அவரை 'செக்ஸ் சாமியார் என்று அவரை அறியாதவர்கள் தூற்றினார்கள். அப்படி தூற்றியவர்களும் ஆன்மிக வாதிகள்தான். இதுபோல் ஆன்மிகம் என்பது புனித பூச்சில் ஒரு கனவு மாளிகையாக இருப்பதால் கனவு வருபவர்கள் வேண்டுமானால் அதை அடையலாம் போல் இருக்கிறது என்ற நினைப்பில் இறைநம்பிக்கை உடையவர்கள் கூட மதம், பக்தி என்ற ஒடுங்கி அதிலேயே திருப்திப்பட்டுக் கொள்கிறார்கள். அதற்கும் மேல் என்ன இருக்கிறது ? பிறப்பதே
வாழ்வதற்குத்தானே ? எதோ ஒரு நம்பிக்கை வைத்திருக்கிறேன், எனது வாழ்க்கையும் நன்றாகவே செல்கிறது, இதற்கு மேல் கடவுளைத் தேடி நான் என்ன செய்யப் போகிறேன். வெளியில் சொல்லாவிட்டாலும், சொல்லத் தெரியாவிட்டாலும் 90 விழுக்காட்டுநம்பிக்கையாளர்களிடம் இருப்பது இத்தகைய எண்ணம் தான். கூடவே கடவுள் என்பது தண்டனை வழங்கும் சக்தியாகவும் மதங்களால் சொல்லப்பட்டு இருப்பதால், கடவுளைக் குறித்து கேள்வி எழுப்பினால் தண்டனை பெற்றுவிடுவேனோ ? எனது இல்லத்தில் துக்கம் நடந்துவிடுமோ என்ற உள் பயத்தில் கேள்வியோ, கடவுள் பற்றிய தேடலோ எதுவுமின்றி அன்றாடம் சாமி கும்பிடுவது ஒரு சடங்கு, அப்பா செய்தார் நான் செய்கிறேன் என்றே இருந்துவிடுவார்கள்.

பக்தி என்பது முற்றிலும் தன்நலமே, தன்நலம் தவறு அல்ல, வாழப்பிறந்தவர் அனைவரும் தமக்கு எது ஏற்றதோ அதைத்தான் செய்வார்கள். பக்தி தன்னலம் என்று சொல்லாமல், பக்தி உயர்வு என்று சொல்வதெல்லாம் வெறும் பாசாங்குதான், இறை உணர்வு அல்லது வேட்கை என்று இருந்தால் எந்த ஒரு மனிதனும் தன்னலத்திற்காக எதையுமே வேண்டிக்கொள்ள மாட்டான். எல்லாம் வல்ல இறைவனுக்கு எனக்கு எது கொடுக்க வேண்டும்,
பிறருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதை நான் சொல்லியே ஆகவேண்டுமா ? முடியாத போது சக மனிதர்களிடம் போய் நின்றால் 'முடியாது' சொல்லிவிடுவார்கள், கிடைக்கிறதோ, இல்லையோ கடவுள் காதில் போடும் போது அது வாய்திறந்து பட்டென்று சொல்லிவிடாது, அப்படி வந்தால் எவரும் கோவிலுக்குச் செல்ல மாட்டார்கள். திடிரென்று சில கோவில்களில் கூட்டம் அலைமோதும் அது நாள்வரை சென்று வந்த கோவிலுக்கு அன்றிலிருந்து ஒரு அகல்விளக்கு கூட வாங்கி வைக்கமாட்டார்கள், அந்த புதிய கோவிலில் சக்தி அதிகம் இருப்பதாக சொல்வார்கள், இவ்வாறு திடீர் மவுசு பெரும் கோவிலகளில் கூடும் கூட்டம் தன்னல நோக்கில் தானே செல்கிறது ?

வெறும் தன்னல நோக்கில் பக்தியாளர்களாக இருந்து கொண்டு அவை புனிதம் போல் பேசுபவர்கள் ஆன்மிகம் பேசுவதாகவும், ஆன்மிகவாதிகளாகவும் சொல்லிக் கொள்வதை அவர்களே சீர்துக்கிப் பார்த்துக் கொள்ளவேண்டும். ஆன்மிகம் என்பதற்கு இன்னொரு பெயர் மெய் ஞானம், அதாவது உலகம் மற்றும் 'தன்னைப்' பற்றிய உண்மையை அறிதல், பெளத்த சமண தத்துவ சார்பில் சொல்லப்படுபவை எந்த ஒரு செயலுக்கும் காரணம் காரியம் என்று இருக்கும், முதலில் ஒரு காரணமும் அதன் பிறகு அதை செய்யத்தூண்டி செய்து முடிப்பதும். இந்த அடிப்படையில் எலலாவற்றையும் அதில் அடக்கலாம். நான் பவுத்தம் சமணம் தான் உயர்வான உண்மையான சமயம் என்று சொல்லவரவில்லை, அது போல் சைவ சித்தாந்தங்களும் இறைநம்பிக்கை தாண்டி உலகவாழ்வின் காரண காரியங்களைப் பற்றி பேசி, ஆன்மா கர்மா என்றெல்லாம் வகைப்படுத்துகிறது.ஒரு நாத்திகவாதியாக இருந்தால் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படமாட்டான், அவனைப் பொருத்து வாழும் வாழ்க்கை உண்மை.

நாத்திகன் கடவுளை மறுக்கிறானா ? ஏன் ? கற்பனையாக சொல்லப்படுவதை அவன் ஏற்பது இல்லை. கடவுள் இது என்று மதங்கள் சொல்வது தானே கடவுள், மதங்களின் புனிதத்தன்மை(?) அறிந்தவன் மதம் காட்டும் கடவுளை மறுக்காமல் என்ன செய்வான் ? அவன் இறைநிந்தனை செய்கிறானா ? நான் பல இடங்களில் சொல்லி வருகிறேன், எந்த மதத்தையும் உயர்வென பிடித்துக் கொண்டிருக்கும் இறை நம்பிக்கையாளர்கள்
மாற்றூமதத்தைப் பொறுத்து நாத்திகன் தான். இதில் ஒட்டுமொத்தமாக இவையாவும் உண்மையெல்ல என்று சொல்பவனை இறைநிந்தனை செய்பவன் என்று சொல்வதில் பொருள் இருக்கிறதா ? ஆத்திகம் இது என்று கட்டமைக்கும் போது அவை இல்லாததெல்லாம் நாத்திகம் தான். நாத்திகத்தை ஆத்திகமே உருவாக்கித்தருகிறது.

கடவுளை நம்பாதவன் நாத்திகனா ? அதைச் சொல்ல முதலில் இறைவனைப்பற்றிய உறுதியான கருத்தாக்கம் இருக்க வேண்டும். அப்படி எதுவுமில்லை. அப்படியே இல்லாவிட்டாலும் இறைவனுக்கு ஏது இவன் ஆத்திகன் .. இவன் நாத்திகன் - என்ற குறுகிய மனம் ? இறைவன் என்ன வெறும் ஆறே அறிவு கொண்ட மனிதனா ?

இறைநம்பிக்கை எனக்கு இருக்கிறதா இல்லையா என்பதைவிட எனக்கு பிடித்த ஒரே வாசகம், "இறைவன் ஒப்பற்றவன் / இணையற்றவன்" என்ற இஸ்லாமிய வாசகம்.
இறைவன் என்று ஒன்று இருந்தால் அவன் எந்த கட்டமைப்புக்குள்ளும் அவன் சிக்க மாட்டான்.

தானே அறிந்திராத இறைவனை 'நாத்திகன் தூற்றுகிறான்' என்று ஒரு ஆத்திகன் சொன்னால் அது நகைப்புக்கிடம் தானே?

இன்னும் தொடரும் ...

பின்குறிப்பு : இவை எனது கருத்துக்கள் விரும்புவர்கள் படிக்கலாம் கருத்துரைக்கலாம், எதையும் கட்டமைக்கும் முயற்சி அல்ல.

25 மார்ச், 2008

உங்கள் மனதில் வாழ்பவர்கள் யார் ?

மனசு இருக்கிறதா ? இல்லையா ? என்பதே ஆராய்ச்சிக்கு உரியது, செல்கள் சேர்த்து வைத்திருக்கும் எண்ணங்களின் ஒழுங்கான திரளே மனசு என்கிறது அறிவியல். மனது தனியாக அது எங்கே இருக்கிறது என்று எவருக்கும் தெரியாது. இதயம் மனது இல்லை என்று நன்கு தெரிந்தும், மனதைத் தொட்டு சொல்வதாக நெஞ்சில் கைவைத்து பேசுவோம். மனது இதயத்தில் இல்லாவிட்டாலும் மனக்கஷ்டம் மகிழ்ச்சி என்றால் உடனே செயலாற்றுவது இதயம் தான், சொல்லமுடியாத துன்பம் வரும் போது மன அழுத்தம் ஏற்பட்டுவிடும். அது போல் கோபம் கொள்ளும் போது இதயத்தில் இரத்த அழுத்தம் ஏற்படும், இந்த மருத்துவ காரணத்தினால் தான் இதய நோயாளிகளின் உணர்வை தூண்டாமல் மென்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லி, அவர்களையும் அவ்வாறு இருக்க முயற்சிக்க சொல்வார்கள். மனம் பாதிப்படையும் போது அதற்கேற்றவாறு இதயம் செயலாற்றுவதால் மனதும் இதயமும் ஒன்று என்று நினைப்பது சரிதான்.

உலகத்திலேயே மிகப் பெரியது மனித மனம் தான். அதில் எவருக்கும் இடம் கொடுக்க முடியும். அரசியல் தலைவர்களெல்லாம் இதயத்தில் இடம் இருப்பதாக சொல்வது அதை வைத்துதான். அது உறவு முறைகளின் அல்லது நெருக்கத்தின் அடிப்படையில் அதை வரிசைபடுத்தி வைத்துக் கொள்ளும். நம் மனது ஒன்றுதான். அதில் இடம் பெறுபவர்கள் இருவகையானவர்கள். ஒருசாரர் நம்மீது அன்பு வைத்திருப்பவர்கள், நம்மால் நேசிக்கப்படுபவர்கள், இன்னொருசாரர் நம்மை விரும்பாதவர்கள், நம்மால் விரும்பப்படாதவர்கள்.

ஒருவரை நாம் எந்த அளவு நேசிக்கிறோம் என்பதை எப்படி அறிவது ? அது மிகவும் சுலபம், அவர் எதிரில் இல்லாவிட்டாலும், அவரை நினைக்கும் போது உங்கள் மனதில் உவகை பூக்கிறதென்றால் நீங்கள் அவர் மீது உள்ளன்பு வைத்திருக்கிறீர்கள் என்று பொருள். இது போல் சிலரைப்பற்றி நம் நினைவில் வரும் போது நெஞ்சம் உவகை அடைந்தால் அவர்களெல்லாம் நமக்கு நெருக்கமானவர்களே. இவர்களெல்லாம் நம் இதயத்தை மெல்ல வருடிவிடும் பூக்கள் போன்றவர்கள்.

நம்மை எரிச்சல் அடையவைப்பவர் யார் ? இந்த கேள்விக்கு மேற்கண்ட கேள்வியை விட விடை வேகமாக வரும், இவனை நெனச்சாலே, என்று நினைக்கும் போதே அவர் எதிரில்
இல்லாத போதே நம் முகம் கருத்துவிடும், இவனுக்கு என்றாவது ஒருநாள் பாடம் கொடுத்தே ஆகவேண்டும் என்று நினைக்க வைப்பவரே நம்மை எரிச்சல் அடையவைப்பவர்,
யார் யாரெல்லாம் நம் இதய ஓட்டத்தை துரிதப்படுத்துகிறார்களோ அவர்களே நம்மை எரிச்சல் அடைய வைப்பவர்கள். சிலரைப்பற்றிய நினைவே நாம் பலவீனமானவராக இருந்தால் நம்மை சோர்வடைய வைத்துவிடும். யார் யாரெல்லாம் நம்மை காயப்படுத்துகிறார்களோ அவர்கள் நம் இதயத்தை கிழிக்கும் முட்கள் போன்றவர்கள். இவர்களால் நம் உடல் நலத்துக்கே சவால்.

இருசாரரும் நம் மனதில் இருக்கிறார்கள், நமக்கு பிடிக்கவில்லை என்றாலும் நம் முட்களையும் விரும்பியே சுமக்கிறோம். நம் மனது தான் ஆனால் முட்களை தூக்கியெறிய நாம் நினைப்பதே இல்லை. அவர்களையெல்லாம் நினைப்பதன் மூலம் நமது இதயத்தில் இடம் அளிக்கிறோம்.

இதயமே கோவில் என்கிறார்கள் அதில் யார் யரெல்லாம் இருக்கலாம் என்பதை நாம் தான் முடிவு செய்ய முடியும். நம்மை பிடிக்காதவர்களைக் கூட நாம் மனதில் வைத்திருந்தால் அதற்கு பெயர் தாராள மனதா ?

நமக்கு விருப்பமே இல்லாத ஒன்றை ஏசுநாதர் சுமந்தது போல் நாம் சுமக்க வேண்டுமா ? அகற்ற ஒரே வழிதான். ஒன்று பிரச்சனைகளை சுமூகமாக தீர்த்துக் கொள்வது, இல்லை என்றால் பெரும்தன்மையாக மறந்துவிடுவது.

உங்கள் இதயம் மென்மையனதாக நீங்கள் நினைத்தால் எதிரிகளுக்கு அதில் எந்த வகையிலும் இடமளிக்காதீர்கள்.

என்னைப் பொருத்தவரை என்மனதில் நான் விரும்பாதவர்கள் / என்னை விரும்பாதவர்கள் ஒரு சில நாட்கள் இருப்பார்கள், அதன் பிறகு தேவையற்ற சுமை அகற்ற வேண்டும் என்று நானே அவர்களிடம் பேசுவேன். என்மீது தவறு இல்லை என்றாலும், சிறியவர்கள் என்றாலும் காலில் கூட விழுவேன். சரிவரவில்லை என்றால் மற்றொருமுறை முயற்சி செய்வேன். அதற்கும் மேல் அவர்களை நான் என் இதயத்தில் தேடினாலும் கிடைக்க மாட்டார்கள்.

நாம் மனதில் யாருக்கு இடம் என்பதை நாம் தான் தீர்மாணிக்க முடியும், அங்கே முட்களாக அறுப்பவர்களுக்கும் இடமா ? மென்மை போய்விடுமே ! நாம் இல்லை என்றால் நட்டமில்லை என்பவர்களுக்கு நம் இதயத்தில் இடமில்லாவிட்டால் என்ன நட்டமாகிவிடப் போகிறது ?

முட்களை அகற்றுவதன் மூலம் புதிய பூக்களுக்கு இடம் கிடைக்குமே !
நம்மால் விரும்பப்படுபவர்களும், நம்மை விரும்புவர்கள் மட்டுமே நம் இதயத்தில் வாழட்டும். மறற இடங்கள் வெற்றிடமாகட்டும்.


பின்குறிப்பு : நல்லிதயம் கொண்ட நண்பர்கள் சொன்னார்கள் என்பதற்காகவும், மேலும் என் உளவியல் பதிவைத்தான் விரும்பி படிப்பதாகவும் இதுபோன்றே எழுதுங்கள் என தனிமடலிலும் பாராட்டுகிறார்கள். அவர்களுக்கு இந்த பதிவை கனிவுடன் சமர்பிக்கிறேன்

முல்லை பெரியார், ஒகனேகல் மெத்தனங்கள் !

கேரளா ஒருபக்கம் முல்லை பெரியார் அணையை உயர்த்துவதற்கு எதிராக போராடி வருகிறது கூடவே மாற்று அணை எழுப்பும் திட்டம் தீவிரமாக நடத்தி வருகிறது, மறுபக்கம் ஓக்கனேகல் எங்களுக்கே சொந்தம் என கர்நாடகமாநிலம் அவ்வப்போது தொல்லைபடுத்தி வருகிறது. கிருஷ்ணா கூட்டுக்குடி நீர்த்திட்டம் என்ற பெயரில் செயல்படும் என்று நினைத்ததிட்டம், வாய்க்கால் தோண்டியதில் மழைகாலத்து வெள்ள உபரி நீரை திருப்பிவிட ஏதுவாக ஆந்திர மாநிலத்திற்கு பயனாக இருக்கிறது என்பதைத் தவிர்த்து தமிழகத்து பைசா பயனில்லை.

கர்நாடக மாநிலத்தாருக்கு எப்போதுமே தமிழக இயற்கை வளங்கள் மீது ஒரு கண் தான், ஊட்டி, தொட்டபெட்டா அதனைச் சுற்றியுள்ள இடங்கள் ஆகியவை கர்நாடக மக்களுக்கு உரிமை உள்ளது போல் அம்மக்கள் நினைத்துவருகிறார்கள். முன்பு பெங்களூரில் வேலை பார்த்த போது அலுவலக சுற்றுலா ஏற்பாட்டில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றோம், உடன் வந்த கர்நாடகத்தைச் சேர்ந்த அலுவலக நண்பர்கள் ஊட்டியும் தொட்டபெட்டாவும் எங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவை என்று வெளிப்படையாக சொல்லி அந்த பெயர்கள் கன்னட பெயர்கள் என்று காரணமும் சொன்னார்கள், தொட்ட பெட்டா என்றால் பெரிய மலை என்று பொருள் அதைவைத்துச் சொன்னார்கள். எங்களிடம் ஊட்டி இருந்தால் நாங்கள் அதை பரமரிக்கும் முறையே வேறு, உங்கள் மாநிலத்தில் எங்கள் நிலம் சரிவர கவனிக்கப்படாமல் இருக்கிறது என்று மிகவும் உரிமையை விட்டுக் கொடுக்காமல் பேசினார்கள்.

ஒக்கனேகல் என்பதும் கன்னட பெயர்தான், புகைவரும் பாதை என்று பொருள் வரும் என்று நினைக்கிறேன், அதனால் தான் பொகையை போட்டு பார்க்கிறார்கள் போல். அந்த ஒரு காரணத்தினாலேயே கர்நாடக அரசு தமிழகத்திடமிருத்து எப்படியும் கவர்ந்துவிடலாம் என்று நினைக்கிறது. பிறமாநில எல்லைக்குள் சுற்றுலா தவிர்த்து அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் நுழைந்தால் அனுமதி பெற்றுக் கொண்டு சொல்லவேண்டும், ஆனால் தமிழக அரசிற்கு தலையில் அடித்தாலும் நீதிமன்றத்துக்குத்தானே செல்வார்கள், என்றைக்கு நாம் நீதியை மதித்து நடந்திருக்கிறோம் என்கிற முன் அனுபவத்திலும், வீரப்பன் தற்போது உயிருடன் இல்லை என்பதாலும் கர்நாடக மாநில தலைவர்கள், நினைக்கும் போதெல்லாம் தமிழக எல்லைக்குள் ஊடுறுவி அளவெடுப்பதும் போராட்டம் நடத்துவதுமாக ஒகனேக்கல்லை கவர்ந்து கையப்படுத்தும் திட்டத்தில் தீவிரமாக காய் நகர்த்தி வருகிறது.

கலைஞர் அனுபவம் மிக்கவர் தான் இருந்தாலும் இதுபோன்ற நேரங்களில் செயல்படுவது எப்படி என்பதை அவர் முன்னாள் முதல்வரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது, இதுவே ஜெயலலிதாவின் ஆட்சி என்றால் எல்லைக்குள் அனுமதி இன்றி வருவதற்கு துணிய மாட்டார்கள், அப்படி நுழைந்தால் அடுத்த மாநில முதல்வர் என்றும் பார்க்காமல் கைது ஆணையை பிரப்பித்து சிறையில் அடைத்துவிடுவார். இவ்வளவு தூரம் செய்யத் தேவை இல்லைதான். குறைந்த அளவாக பிறமாநிலத்தினர் முன்னனுமதி பெறாமல் அரசியல் ரீதியான காரணங்களுக்காக தமிழக எல்லைக்குள் நுழைவதை தமிழக அரசும், கலைஞரும் தடுத்து இருக்க வேண்டும். கலைஞரின் மகள் பெங்களூருவில் இருப்பதால் கர்நாடக மக்களையும் அரசையும், கலைஞர் உறவினர்களின் மானிலம் என்று நினைக்கிறார் போலும். இங்கிருக்கும் தமிழக அரசியல் தலைவர்களால் கர்நாடக மாநிலத்திற்குள் நுழைந்து போராட அந்த அரசு அனுமதிக்குமா ? ஒருமுறை மருத்துவர் இராமதாசு பெங்களூரில் போராட்டம் நடதத முயன்றார், ஓசூரை தாண்டி அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

காவேரி நடுவர் மன்ற தீர்ப்பை குப்பைத் தொட்டிக்குள் வீசி எறிந்த கர்நாடக மாநில அரசியல் தலைவர்கள் ஒக்கனேகல் விசயத்தில் உரிமை கோரும் போது அதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டாமா ? பெயர் கன்னட பெயராக இருந்தால் அந்த மாநிலத்திற்கு உரிமை உடையது என்று சொன்னால், திருவேங்கடம் திருப்பதி கூட தமிழ் பெயர்தான், தில்லை என்ற தமிழ்பெயரே பெயரே டெல்லி என்று திரிந்ததாகக் கூடச் சொல்கிறார்கள், திருவனந்தபுரம் இன்னும் பிறமாநிலத்தில் இருக்கும் பல பெயர்களில் தமிழ் இருக்கிறது என்பதற்காக அங்கெல்லாம் நாம் முக்கை நுழைக்க முடியுமா ?

காவேரிக்கு பிறகு ஒக்கனேக்கல் அரசியல் என இன்னொருமுறை தமிழகத்தின் தலையில் கர்நாடக மிளகாய் அரைக்க முயன்று அதில் வெற்றிபெற்றுவிட்டால் பிறகு ஊட்டியையும் இழந்து ஓட்டாண்டி ஆகி அண்டை மாநிலத்திற்கு பஞ்சம் பிழைக்கவும், தேயிலை தோட்டத்தொழிலாளியாகவும் தான் செல்வான் தமிழன்.

கர்நாடகமாநிலத்தாருக்கு இருக்கும் மாநில உணர்வில் 50 விழுக்காட்டு அளவிற்காவது தமிழக தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் இருக்க வேண்டும். நம்மவர்கள், வந்தாரை வாழவைப்போம் என்று வாய்(கள்) வெந்தபிறகும் சொல்லிக் கொண்டு இருப்பார்கள் போல. ஹூம்

23 மார்ச், 2008

"கடமையைச் செய் ! பலனை எதிர்பாராதே !!" - கீதாச்சாரம்

"கடமையைச் செய் ! பலனை எதிர்பாராதே !!" - ஸ்ரீமத் பகவத்கீதை

இதுபற்றி பலரும் பலவித விளக்கங்கள் கொடுத்து இருக்கிறார்கள். அதில் பல விளக்கங்கள் நேரடியான பொருள் கொள்ளத்தக்கவாறு இருக்கும். இதே சொற்றொடருக்கு நம் பெரியார் தோழர்களோ, ம.க.இ.க தோழர்களோ வேறு பொருள் கொடுப்பார்கள். அடிமைத்தனத்தின் கட்டுமானம் சரியாமல் இருக்க இந்த சொற்றொடரை பயன்படுத்தியதாக சொல்கிறார்கள். அதாவது ஆண்டைகளிடம் அடிமையாக இருப்பவர்கள் கடுமையாக உழைத்தும் அதற்கேற்ற சாதாரண ஊதியம் கொடுத்தால், அல்லது ஊதியமே கொடுக்காமல் விட்டால் கூட கடமையை செய் அதன் பலனான ஊதியத்தை எதிர்பார்க்காதே என்று மறுப்பதை இந்த சொற்றொடர் ஞாயப்படுத்தியதாக மாற்றுப் பார்வையில் குற்றம் சுமத்துகிறார்கள். தோழர்கள் சொல்வது சரியே என்றாலும், நான் கீதையின் இந்த சொற்றொடரை அதே பொருளில் கொள்வதில்லை. இது சமூகவியல் (அடிமைத்தன) கட்டுக் கோப்புக்கு எழுதப்பட்டது என்பதை விட (தனிமனித) உளவியலுக்கே இதன் பொருள் சரியாக இருக்கும் என்பது தான் என்னுடைய எண்ணம்.

ஒருவர் விரும்பிச் செய்யும் எந்த செயலிலும் அவரது நோக்கமே முதல் தூண்டுதல், அத்தகைய தூண்டுதல் வெற்றியடைந்த ஒருவரை அல்லது பலரைப் பார்த்து அவருக்கு வந்திருக்கலாம், அல்லது தன் முயற்சியாக இந்த செயலை செய்யவேண்டும் என்ற தூண்டுதல் அவருக்கு ஏற்பட்டு இருக்கலாம்.

எனக்கு தனியார் நிறுவனத்தில் வேலை செய்வது அலுப்பாக இருக்கிறது, என்ன தான் உழைத்தாலும் கிடைக்கும் ஊதியம் எனக்கு போதுமான அளவாக இருப்பதில்லை என்று நினைக்கிறேன். நிறுவனங்கள் ஒருவரின் கடுமையான உழைப்பை கவனித்து வந்தால் ஒருவேளை இரண்டு மாத ஊதியத்தை ஆண்டு இறுதியில் அவருக்கு கொடுப்பார்கள், அல்லது பதவி உயர்வு கொடுத்து சற்று ஊதியத்தை கூட்டுவார்கள். இதுதான் பொதுவாக நடப்பது, அது போதிய அளவாக இல்லை, நான் எனது தேவைகளையும், வருங்காலத்திற்கும் சில திட்டமிடல்களை செய்து ஒரு நிறுவனம் தொடங்க இருக்கிறேன், நான் சார்ந்துள்ள வேலையின் நிபுணத்துவம் பெற்றுருக்கிறேன், சிறிய அளவிற்கு நிறுவனம் தொடங்க பணமும் இருக்கிறது அப்படி இல்லை என்றால் வங்கிக் கடன் வாங்கி அடுத்த மாதம் நிறுவனம் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்வதற்கு, இன்றே முடிவு செய்து, ஒருமாதம் முன்கூட்டியே சொல்லிவிட வேண்டும், என்கிற தற்போது வேலை செய்யும் நிறுவன விதிகளின் காரணமாக, 30 நாட்களின் இறுதியில் விடுவிக்கச் சொல்லி தற்போது வேலை செய்யும் நிறுவனத்திற்கு கடிதம் கொடுத்துவிடுகிறேன்.

அடுத்து,
எனது எண்ணப்படி நிறுவனம் தொடங்கிவிட்டேன், இன்னும் ஓர் ஆண்டுக்குள் எனது நிறுவனத்தை பெரிய அளவில் கொண்டுவரவேண்டும் என்று அதற்கு என்ன செய்ய வேண்டுமோ செய்து கொண்டிருக்கிறேன். ஒரு 8 மாதம் நல்ல வளர்ச்சி, அதன் பிறகு எதிர்பாராதவிதமாக ஒரு பெரிய நிறுவனம் ஒன்று நான் தயாரிக்கும் பொருளையே பாதிக்கும் பாதிவிலையில் விற்கிறது, இன்னும் 6 மாதத்திற்கு விற்கலாம் என்று நான் தயாரித்த பொருள்கள் எல்லாம் உற்பத்தி விலைக்குக் கூட போகாத நிலையில் பழைய மாடல் என்று அப்படியே தேங்கிவிடுகிறது, நான் திட்டமிட்டபடி ஓர் ஆண்டுகுள் என் நிறுவனம் அடுத்து வளர்வதற்கான வாய்பே இல்லை, மேலும் நட்டமடையாமல் இருக்க தற்காலிகமாக மூடிவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டேன். வங்கிக்கடன் கழுத்தை நெறிக்கிறது. என்ன செய்யலாம் ? வாங்கிய கடனுக்காக தற்கொலை செய்து கொள்ள முடியுமா ?

இலக்கில் வெற்றி என்ற முடிவில் ஒருவித வெறியுடன் செயலாற்றுபவர்கள் எல்லோருமே இதுபோன்ற சூழல்களில் தற்கொலைதான் செய்து கொள்வார்கள். மிகச் சிலரே 'எல்லாம் சரியாகத்தான் செய்தோம், வேறு சிலகாரணங்களினால் எண்ணியபடி நடக்கவில்லை, இதிலிருந்துவிடுபட்டு அல்லது இதில் புதுமையை புகுத்தி எழுந்து நிற்போம் என்று தன்னம்பிக்கையை கொண்டிருப்பார்கள். அதாவது இதைச் செய்தால் இது நடக்கும் என்று பொதுவாக தெரிந்தாலும், இலக்கு இதுதான் இதற்கு என்ன செய்யவேண்டுமோ அதை சரியாக செய்வோம், இடையில் இடற்பாடுகள் வந்தால் மாற்று நடவடிக்கையான இவைகளைச் செய்ய வேண்டும் என்ற பொறுமை வெற்றியை வெறியுடன் அனுகுபவர்களுக்கு இருக்காது. அவர்கள் நோக்கம் முழுவதும் வெற்றி அடைவதைப் பற்றிய எண்ணமாக மட்டுமே இருக்கும், அவை கிடைக்கமல் போகும் போது தளர்ந்துவிடுவார்கள்.

கஜினி 16 முறை 'தோல்வி' அடைந்தான் என்று வரலாற்றில் சொல்லப்படுவதில்லை, அதற்கு மாற்றாக 16 முறை 'முயற்சித்து' 17 ஆவது முறை வெற்றிபெற்றான் என்று சொல்லப்படுகிறது. தோல்விகள் என்பது வெற்றிக்கான முயற்சிகள் என்ற அளவில் புரிந்து கொண்டால் தோல்விகள் எவரையும் பயமுறுத்தாது. அவை மேலும் ஊக்கம் கொடுக்கும். 10 பேர் ஓட்டத்தில் 3 வர் மட்டுமே வெற்றியடைவர், முயற்சி / தகுதி என ஒன்றுமே இல்லாமல் வேடிக்கைப்பார்க்கும் பார்வையாளர்களின் கவனத்தில் மீதம் 7 பேர் முயற்சி செய்தவர்களாகவே தெரிவர்.

ஒரு செயலில் வெற்றி என்பது நம் இலக்கு என்றாலும் சில எதிர்பாராத காரணிகளால் அந்த இலக்கு தடைபடும், நன்றாக தேர்வு எழுதிய மாணவனின் தேர்வுத்தாள், திருத்தப்படும் போது வீட்டில் சண்டையிட்டு வந்த ஆசிரியரின் கையில் கிடைத்து அவன் தோல்வி அடைந்தால் அதற்கு அவன் பொறுப்பு ஏற்று தோல்வி என்று துவண்டு போய் தற்கொலை செய்து கொண்டால் அவன் முட்டாள் தான். தன்னளவில் நான் நன்றாக செய்தேன், இடையில் எதோ தப்பு நடந்திருக்கிறது என்று உணரும் பொறுமை இருந்தால் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்து அவன் முதல் மதிப்பெண் பெற்றிருப்பதை அனைவருக்கும் உணர்த்த முடியும்.

நாம் விரும்பி செய்யும் எந்த செயலும் முனைப்புடன் செய்யப்பட வேண்டும், அவை இலக்கு மட்டுமே, அந்த இலக்கை அடைவது வெற்றி என்று நாம் கருதினால் இலக்கு நோக்கிய பயணத்தில் வெற்றி என்ற போதை செயல்பாடுகளை தீவிரப்படுத்த பயன்படும். ஆனால் அதே போதையுடன் இலக்கின் முடிவை நோக்கி சென்று அதை அடையவில்லை என்றால் எல்லாம் தலைகீழாக மாறிவிடும்.

வெற்றி(கள்) என்பது இலக்கு மட்டுமே, அதை அடைந்தால் மகிழ்ச்சி கிடைக்கும், ஆனால் எந்த ஒரு வெற்றியும் நிரந்தாமல்ல. நேற்று தனி ஒரு ஆளாக ஒரு ரவுடி இன்னொரு ரவுடியை பலர் அறிய நடுரோட்டில் வெட்டிக் கொன்று கொக்கறித்து சென்றவனை, 3 மாதம் கழித்து வெட்டிக் கொள்ளப்பட்டவனின் தம்பி, அண்ணனை வெட்டியவனை அதே இடத்தில் தீர்த்துக்கட்டுவான்.

இலக்கு நோக்கி பயணம் செய்யும் செயல் தான் நம்முடையது, அதை அடைகிறோமோ என்பது நம் செயல்களை மட்டுமே உள்ளடக்கிய காரணி அல்ல.

"எந்த ஒரு இலக்கு நோக்கிய பயணத்திலும் அதற்கான கடமையான செயலை செய். பலனை எதிர்பாராதே. எதிர்ப்பார்ப்பு ஏமாற்றம் தந்தால் அதை தாங்கிக் கொள்ளும் சக்தி இல்லாமல் போய்விட வாய்புகள் உண்டு பலனை எதிர்பாராமல் செய்யும் இலக்கு நோகிய பயணத்தில் இலக்கை அடைந்தால் மகிழ்ச்சி, இல்லை என்றாலும் முயற்சித்தோம் என்ற மன நிறைவு கிடைக்கும்" - என்பதை மேற்கண்ட கீதை வரிகளினால் புரிந்து கொண்டேன்.

" கடமையைச் செய் பலனை எதிர்பாராதே " - இது ஒரு உளவியல் அருமருந்து, எதிலும் முயற்சி செய்பவர்கள் முன்கூட்டியே இதை அருந்தலாம்.

பின்குறிப்பு : இந்த இடுகையை இந்தவார நட்சத்திர பதிவர் கண்ண(ன்)பிரான் ரவிசங்கருக்கு சமர்பிக்கிறேன். :)

22 மார்ச், 2008

இறைவன் இருக்கின்றானா ? எங்கே வாழ்கிறான் ?

அறிவு என்பதன் பொருள் ஒன்றைப்பற்றி நன்கு தெரிந்திருப்பது என்று சொல்ல முடியுமா ? அல்லது ஒன்றில் நிபுணத்துவம் பெற்ற அல்லது ஓரளவுக்கு அதைப்பற்றிய தெளிவு இருந்தால் அதை அறிவு திறன் என்று சொல்லலாம். அறிவு என்ற சொல் வினைத்தொகை என்றே நினைக்கிறேன் அறிந்து கொண்டது, அறிந்து கொண்டிருப்பது மற்றும் அறியப் போவது ஆகிய முக்காலங்கள் அடங்கிய சொல்.

உலகம் ஒன்றே எனினும் ஒவ்வொருவரின் உருவக அல்லது கற்பனை உலகம் என்பது தனித்தனி. 500 கோடி மக்கள் வாழும் இவ்வுலகம் மன அளவில் 500 கோடி உலகங்களாக இருக்கிறது என்றால் நம்புவதற்கு கடினம், ஆனால் அது கிட்டதட்ட உண்மைதான். என்னுடைய உலகம் என்பதன் மையம் எனது மனம் தான். நான் இதுவரை அறிந்து கொண்டுள்ளதை வைத்து உலகம் இப்படித்தான் இருக்கிறது என்று நினைக்கிறேன். அது முற்றிலும் உண்மையல்ல என்றாலும் எனது உலகம் பற்றிய சிந்தனை அதைத்தாண்டி இருக்கவே இருக்காது. எனது உலகம் என்பது நான் அறிந்து தெரிந்துள்ளவற்றை உள்ளடக்கியது மட்டுமே. இந்த நேரத்தில் எத்தியோப்பியா காடுகளில் ஒரு சிங்கம் மானை துறத்துகிறதா, எத்தனை யானைகள் அங்கு இருக்கின்றன என்பதெல்லாம் எனக்குத்தெரியாது, என் உலகம் நான் கண்டு கேட்டு நேரடியாக சந்தித்தவற்றின் தொகுப்பே, இது போன்றே 500 கோடி மக்களுக்கும் தனித்தனியாக உலகமும், பலரும் அறிந்த செய்தியுடன் கூடிய ஒன்றாக பஞ்சபூதங்களும் அடங்கிய பொது திட (மெட்டீரியல்) உலகமும் இருக்கின்றது. சரிதானே ?

நாம் அறிந்த கொண்டுள்ளதை மூலதனமாக வைத்துதான் அறியாததை அறிந்து கொள்ளவே முடியும். பிரபஞ்சம் இயக்கமும், பிரபஞ்சம் முழுவதும் பரந்து இருக்கும் ஒவ்வொன்றின் இயக்கத்தில் எதோ ஒரு விதியின் படி இயங்குகின்றன. மனிதனை எடுத்துக் கொண்டால் இனப்பெருக்கம் என்பதற்காக ஆண் பெண் என்ற இரு அமைப்புகளின் சேர்க்கை தேவையாகிறது. இனப்பெருக்கம் நடைபெறுவதற்கு உள்ள விதிகளை மனிதனால் அறியமுடியும். அதை இருவர் சேர்ந்துதான் செய்யமுடியும் என்ற நிலை ஏன் உருவாகியது ? ஏன் மனிதனால் வாழை மரம் போல் தன் (சுய) உற்பத்தியில் சந்ததிகளைப் பெருக்கமுடியவில்லை ? மேலும் சந்ததிகளை உருவாக்குவதின் நோக்கம் (வாழ்தல் தவிர்த்து) இதுதான் என்பதற்கான காரணங்களை நாம் அறிந்து கொள்ள முடியவில்லை.

மனிதமனிதங்களின் உள்நோக்கம் தவிர்த்து (அதுவும் கூட சுயநல நோக்கம் தான்) இயங்கு பொருள் / உயிர்கள் அனைத்திற்கும் நோக்கம் என்று ஒன்று பின்னப்பட்டு இருக்கலாம். நோக்கமில்லாமல் எதுவுமே நடைபெறுவதில்லை என்று நினைக்கிறேன். உயிரோட்டம் உள்ளதை மட்டும் அறிவு என்று நாம் ஒப்புக் கொள்கிறோம், சூரியன் வட்டப்பாதையில் சரியாக அதே 365 1/2 நாட்கள் எடுத்துக் கொண்டு சரியான வட்டப்பாதையில் இயங்கும் படி செய்திருக்கின்ற இயற்கை / விதி அமைப்பும் ஒரு அறிவு என்று சொல்ல முடியும்.

தானாகவே இயங்குபவை அனைத்தும் ஒரு குறிப்பிட்ட விதிகளின் கீழ் வரும் பொழுது அவை இயங்குகின்றன, இன்னின்ன சுழல் அமைப்பு இருந்தால் இவை இவை இயங்கும் அதைத்தான் வேதியல் / இயற்பியல் விதி என்கிறோம்.

இந்த விதியின் படி நடப்பது சரி, இதை நிர்ணயித்தது யார் என்ற கேள்வியில் தான் இறைவன் பின்னால் இருந்து இயக்குவதாகவும், இறைவனின் சித்தமாகவும் சொல்கிறார்கள்.

பிரபஞ்சத்தை பின்னியுள்ள இந்த விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டவையா ? கணக்கு அறிவே இல்லாத கற்காலத்திலும் 5 + 5 = 10 ஆகத்தான் இருந்திருக்கும், கண்டுபிடிக்கவில்லை என்பதால் கற்காலத்தில் 5 + 5 = 12 என்றிருந்திருக்கும் என்று சொல்ல முடியாது. அது போல் இயங்குவிசையின் விதிகள் இவை ஏற்படுத்தப்பட்டவை அல்ல என்றுமே இருப்பவை. எந்த ஒரு இயற்பியல் / வேதியல் விதியும் ஏற்படுத்தப்பட்டவை அல்ல. அதைப் பற்றி ஆராய்சி செய்யும் போதுதான் அதைப்பற்றி அறிந்து கொள்கிறோம். எனவே வேதியல் / இயற்பியல் வினைகள் இதற்கு முன்பு இவ்வாறு இல்லை என்று சொல்ல முடியாது, அறிந்தபிறகே இப்பொழுதுதான் கண்டுகொண்டோம் என்று சொல்லவதே சரி.

ஒரு பொருள் தெளிவாக தெரிவதற்கு போதிய வெளிச்சம் தேவை, வெளிச்சத்தின் உதவியுடன் தெரிந்து கொள்ளுதல். அதை அறிந்து கொள்ள போதிய அறிவு தேவை, அறிவை வெளிச்சம் அல்லது ஒளியுடன் உருவகப்படுத்தி அறிவொளி என்பார்கள். அறிவின்மையை இருட்டு என்பார்கள் அதாவது தெளிவற்றது. மனசுக்குள் மின்னல் அடிச்சது என்றால் சட்டென்று அதைப்பற்றி சிந்தனை கிடைத்தது என்ற பொருள்தானே. அறியும் திறனை ஒளியுடன் தொடர்பு படுத்தி, நம் அறிவுக்கு எட்டாத பிரபஞ்ச இயங்குவிசையின் / இயற்கையின் விதியின் காரணத்தை பேரறிவு என்ற உருவகம் செய்து அந்த பேரறிவே இறைவன் என்ற பொருளில் சொல்லப்படுகிறது. அனைத்து மதங்களிலும் இறைவனை ஒளிவடிவமாக நினைப்பதற்கான காரணம் ஒளியை அறிவுடன் ஒப்பிடுவதால் பிரபஞ்சம் பற்றிய பேரறிவே, பேரொளி இறைவன் எனச் சொல்லப்படுகிறது. பிரபஞ்சம் பற்றிய இயங்குதலின் நோக்கத்தை நாம் தெரிந்து கொள்ளும் போது எல்லோருமே இறைவன் தான். அந்த முயற்சிக்குள் நம் ஆயுள் முடிந்துவிடும்... உயிரினங்கள் அழிந்திருக்கும் ... அல்லது பிரபஞ்சம் மறுவெடிப்பிற்காக தயார் படுத்திக் கொள்ள ஒடுக்கத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும்.

நம் மூளைக்குள் சிக்காத அல்லது அறிந்து கொள்ளமுடியாதவற்றால் ஏற்படும் வியப்பை இறைவனின் செயலாகவே நினைப்பது இயற்கை. எனெனில் நம் புலன்களுக்கு எல்லை உண்டு, எல்லைக்கு அப்பாற்பட்டவற்றின் முழுக்காரணத்தையும் அறிந்து கொள்ளவே முடியாது. ஓரளவுதான் விஞ்ஞான உதவியுடன் புலன்களின் திறனில் கொஞ்சம் நீட்சி செய்திருக்கிறோம், பூமிக்கு அப்பால் உள்ளவற்றை சாட்டிலைட் போன்றவற்றின் உதவியுடன் பார்க்கிறோம், கேட்கிறோம்.

புலன்கள் (கண், காது, முக்கு, உணர்வு) எல்லையின் கட்டுப்பாட்டில் இருக்கும் மனிதனால் பிரபஞ்சம் இயங்கவதற்கான நோக்கம் அறிய முடியாத ஒன்றுதான். நோக்கத்திற்கான தேடல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். அதுவறையில் பிரபஞ்சத்தின் நோக்கத்தின் காரணம் அறிந்ததவனாக மனித மனங்களில் இறைவன் வாழ்ந்து கொண்டுதான் இருப்பான். இறைவன் இருபிற்கு இன்னொரு காரணம் மனிதனுக்கு இருக்கும் ஆறாவது அறிவே. அதாவது தன்னால் அறிய முடியாத ஒன்றை இறைவன் அறிந்திருப்பான் என்று நினைக்கும் / ஊகம் செய்யும் ஆறாவது அறிவும் காரணம். மனிதன் தவிர்த்த மற்ற உயிரினங்களுக்கு இறைவன் இருப்பின் தேவை இருப்பதில்லை.

மதக்கோட்பாடுகள் தவிர்த்து இறைவன் இருப்பை நம்புவதில் பாதகமும் இல்லை, நம்பாததால் யாரும் நாசமாவதுமில்லை.

பின்குறிப்பு : இந்த இடுகை நேற்றைய இடுகையின் நீட்சி. இதுவும் யாருடைய நம்பிக்கை / அவநம்பிக்கையை கெடுப்பதற்காக எழுதப்பட்டதல்ல. முழுக்க முழுக்க படித்தது கேட்டதில் நினைவில் கொண்டுள்ளவற்றின் கடன் சிந்தனையாக எழுதியது.

21 மார்ச், 2008

KRS ! ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது - நியூட்டன்

E = MC^2 என்ற சமன்பாட்டில் வழி இறைத்தன்மை இருப்பதாக நண்பர் அன்பர் கண்ணபிரான் ரவிசங்கர் இருபகுதிகளாக எழுதினார். நன்று. அதற்கு எடுத்துக்கொண்ட பொருள் 'இருப்பது' 'இல்லாதது' அதாவது வெளிச்சம் அற்ற நிலை இருட்டு என்கிறோம். இருட்டு என்று ஒன்று தனியாக கிடையாது என்றால் வெளிச்சத்தை இருப்பதாகத்தான் கொள்ள முடியும் என்றார். மேலும் பாலில் நெய் இருப்பது போல் என்ற அப்பர் சாமிகளில் பாட்டையும் ஆதாரமாகக் காட்டி மறுக்க முடியுமா ? என்று கேள்வி எழுப்பினார். பாலில் நெய்மட்டும் இருக்கிறதா ? இயற்ப்பியல் விதிபடி எந்த பொருளும் மாறுபடும் போது வெறொரு வடிவம் எடுக்கிறது. பால் தயிரானால் வெண்ணை அதன் பிறகு உருக்கினால் நெய். பாலே நெய்யாக மாறிவிடாது. நெய் இருக்கும் போது பாலின் உண்மையான தன்மை அங்கு இருப்பதில்லை. ஒன்று மன்றொன்றாக மாறி இருக்கிறது. இது எப்படி இருப்பதை மெய்பிக்கும் உவமையாகும் ? சுவிட்சை நிறுத்தியதும் இருந்த வெளிச்சம் என்ன ஆனது ? இருட்டில் வடிவம் எடுத்து இருந்தது ஒளி பின்பு அது இருட்டுடன் கலந்துவிட்டது அல்லது இல்லாது போய்விட்டது என்று சொல்லலாமா ? நன்பகல் சூரிய ஒளியில் தொலைவில் இருக்கும் சுடரை பார்க்கலாம், சுடர் ஏற்படுத்தும் வெளிச்சத்தை பார்க்க முடியுமா ? இருட்டு என்று இல்லை என்றால் வெளிச்சம் தன்னை வெளிச்சம் போட முடியாது.

பக்தியாளர்களுக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் கிரியேஷன் அதாவது படைப்பு என்பதை நம்புவார்கள். உலகம் 6 நாளில் இறைவனின் சித்தத்தில் தோன்றியதாக ஆப்ரகாமிய மதங்களின் கோட்பாடுகள் சொல்கின்றன. இந்துமதம் தவிர்த்து இந்திய தத்துவங்கள் இதை மறுக்கின்றன.

நியூட்டனின் விதிப்படி எந்த ஒரு விசையையும் ஆக்கவே அழிக்கவோ முடியாது. இது பொருள்களுக்கும் பொருந்தும். இல்லாத ஒரு பொருளை எவராலும் உருவாக்கித்தர முடியுமா ? அதாவது உலகில் உள்ள அனைத்தும் எவராலும் உருவாக்கப்படவில்லை. பின்பு ஏன் பொருள்களுக்கான வடிவம் கிடைக்கிறது ? பொருளின் வடிவம் அடிப்படை மூலப் பொருள் ஒன்றை மற்றொன்றுடன் கலக்கும் போது அவை பிரிதொரு பொருளாகவும் வடிவமாகவும் மாறிவிடுகிறது. வெளித்திறலின் (பிரபஞ்சம்) முழு அமைப்பிற்கும் இது பொருந்தும். இறைவன் உருவாக்கினான் என்றால் அவனை உருவாக்கியது யார் என்று கேள்வி பழைய கேள்வி அதற்குள் செல்ல வேண்டாம். ஆனால் ஏன் உருவாக்கினான் என்ற கேள்வி எழுப்பலாம் அல்லவா ?

உலகைப்படைத்தும் அதில் மனிதர்களைப் படைத்தும், என்னால் படைக்கப்பட்டவர்களான நீங்கள் என்னிடம் விசுவாசமாகவும் என்னை நம்புவராகவும் இருக்க வேண்டும், அப்படி செய்தால் உங்களுக்கு மறுமையில் அதற்கான பலன் கிடைக்கும் என்று சொல்வதன் மூலம் இறைவன் என்ன பலனை பெறுகிறான் ? அதாவது இறைசித்தம் என்பதன் நோக்கம் என்ன ? so called ஒரு புதிய கிராமத்தை உருவாக்கி... அதில் மக்களை பிறக்க வைத்து ... குடியமர்த்தி என் ஆட்சியில் கீழ் என் சொல்படி கேட்டுக் கொண்டு இருங்கள், இல்லை என்றால் இதனை மீறுபவர்களுக்காகவே பக்கத்தில் கொடிய விலங்குகள் உள்ள காடு இருக்கிறது, அதில் கொண்டு விட்டுவிடுவேன் இதுவே என் நோக்கம் என்று சிறிய அளவுக்கு இதனை கூறலாமா ?

இறை இருக்கிறது என்று நம்புவர்கள், இறைசித்தத்தின் நோக்கம் அதாவது படைப்பின் நோக்கம் இதுவென்று அறிய முடியாதபோது இருப்பதை நிருபிப்பது எங்கனம் ?

படைப்பு என்று ஒன்று கிடையவே கிடையாது, இல்லாத ஒன்றை படைத்தார் என்று சொன்னால் இறைவனும் இல்லாத ஒன்றாக இருந்து ஒரு நாள் தோன்றி இதையெல்லாம் படைத்தார் என்று சொல்ல முடியும். இல்லாததில் இருந்து இறைவன் உருவாகவில்லை என்றால் இல்லாத ஒன்றை மட்டும் எப்படி படைக்க முடியும் ?

பிரபஞ்சம் முழுவதுமே காந்த விசையின் பிணைப்பில் இயங்குகிறது, கூடவே வாயுக்கள் சேர்த்தலில் நடக்கும் வேதிவினைப்படி பிரபஞ்ச விரிவும் ஒடுக்கமும் நடைபெறுகின்றன. விரிந்து கொண்டே இருக்கும் பிரபஞ்சத்தில் வெற்றிடமாக இருப்பதெ ஆகாயம் என்கிறோம், விரிந்து கொண்டிருக்கும் பிரபஞ்சத்தின் காந்த புலன் விசை குறிப்பிட்ட எல்லையில் விசை தளரும் போது மீண்டும் உள்னோக்கிய அழுத்தம் கிடைத்து பிரபஞ்சம் சுருங்க ஆரம்பிக்கிறது.

விதையின் தன்மையில் முழுமரத்தின் அமைப்பும் இருக்கும், ஒரு விதை சரியான இடத்தில் சரியான சூழலில் விதைக்கட்டால், அதன் முழுப்பலனான மரமாக வளர்ந்து இறுதியில் அது விதைகளைத்தான் தோற்றுவிக்கும், விதையாக இருக்கும் பொழுது முழுமரமும் அதில் ஒடுங்கி இருக்கிறது, சுற்றுச்சூழலி தொடர்பு கொள்ளும் போது மரமாக பரிணமிக்கிறது. விதையாக இருக்கும் போது மரம் இல்லை. மரம் என்னும் விரிவுத்தன்மையில் விதையில் உள்ள அத்தனை ஒடுக்கமும் இருப்பதில்லை, மரமாக இருப்பது ஐம்பூதங்கள் கலந்த வேதிப்பொருளும் அதன் இலக்கான விதைக்கான மூலப் பொருள் மட்டும் தான் இருக்கும். ஆக மரம் என்பது விதையும் பஞ்சபூதமும் கலந்த விதையின் திரிந்த வடிவம்.

அடுத்து இந்த விதை முதன் முதலில் எங்கிருந்து வந்தது என்று கேட்கமுடியுமா ? வாயுக்கோளங்களும், திடப்பொருள்களும் பல்வேறு விகித பிரிவில் சேர்ந்து வினையாற்றும் போது கிடைக்கும் தனித்தனிவடிவம் தான் முழு பிரபஞ்சத்தில் உள்ள பொருள்கள் அனைத்தும். உயிரற்றவை அல்லது உயிருள்ளவை என்று சொல்லப்படுவது யாவும் அதில் உள்ள அனுத்துகளின் துகள்களின் சேர்கையின் அளவைப் பொருத்து அமைந்துவிடுகிறது, உயிருள்ளவற்றில் நடப்பது சுழற்சி, உயிரற்றவற்றில் நடப்பது சுழற்சியின்மை ஆனால் மாற்றத்திற்கு உட்பட்டது, திடமான கல் சிதைந்தால் மணலாகும், இன்று மணல் துகளாக இருப்பெதெல்லாம் மாமலையில் இருந்து காற்றினாலும், நீரினாலும் மற்ற வாயுக்களின் சேர்க்கையால் எற்பட்ட பிரித்தல் என்ற வேதிவினையால் ஏற்பட்ட வடிவம்.

உயிருள்ளவையின் நோக்கம் அதை பெருக்குதல் மட்டுமே, பஞ்சபூதங்களை தின்று வளர்ந்த அதன் உருவம் இறுதியில் பஞ்சபூதமாகவே மாறிவிடும், விதை வளர்ந்து மரமானால் மரம் காய்ந்து சிதைந்து துகள்களாக மாறி நிலத்தில் சேர்ந்து உரமாகிவிடுகிறது அத்துடன் அதன் வடிவம் முற்றிலும் மறைந்துவிடுகிறது.

ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது, பிரபஞ்ச வெடிப்பும் ஒடுக்கமும் அதைத்தான் சொல்கிறது. வெடிப்பும் ஒடுக்கமும் தொடர் நிகழ்வு. அந்த நிகழ்வு தூண்டலுக்கான சக்தி வெளியில் இருந்து வரவில்லை என்பதால் அதை அழிக்க முடியாது. மழையை அழித்தால் மேகமாக மாறி திரும்பவும் மழையாகத்தான் மாறும். மழை என்பது ஒடுக்கம், மேகம் என்பது விரிவு.

பிரபஞ்சம் என்ற ஒன்றை இறைவன் உருவாக்கவில்லை, அது என்றுமே இருப்பது. அதன் வெடிப்பு நடக்கும் போது கோள்கள் அதிலிருந்து வடிவம் பெறுகிறது. குறிப்பிட்ட காலத்திற்கு கோள்களில் உள்ள சக்தி குறைந்து ஒடுக்க மையத்தை நோக்கி நகர்ந்து ஒடுங்கிவிடுகிறது. இவ்வாறு அனைத்து கேலக்சிகளும் ஒடுங்கும் போது ஏற்படும் அளவிடமுடியாத அழுத்தம் மீண்டும் பிரபஞ்சவெடிப்பிற்கான காரணியாக மாறிவிடுகிறது.

ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்ற தத்துவம் உண்மை என்னும் போது படைப்பு என்று உண்டு என்பதே தவறு. படைப்பு என்று எதுவுமில்லை. எல்லாம் ஒன்று மற்றொன்றாக ஆகும் உருமாற்றம் தான். இதில் இறைவனின் செயல் என்று எதைச் சொல்ல முடியும் ? பக்தியாளர்களின் கூற்றுப்படி நன்மை தீமை என்ற பகுப்பில் நன்மைக்கு காரணம் இறைவனாகவும், சுனாமி போன்ற சோகங்களுக்கு இறைவன் காரணமல்ல என்று சொல்லும் போதே நடப்பது எல்லாம், எல்லாம் வல்ல இறைவனில் லீலை என்பது பொருள் அற்றது என மாற்றுகிறீர்கள் அல்லது அதை மறுக்கிறீர்கள்.
நான் ரவிசங்கரின் பின்னூட்டத்தில் குறிப்பிட்டுள்ளது போல், இறைவன் இருந்தால் அது/அவன்/அவள் செயலற்றதாகவே ஒரு சாட்சி நிலையில் இருக்கும், அதனால் எதையும் மாற்றி அமைக்கவோ, புதிதாக உருவாக்கவோ முடியாது. இறைவன் தோன்றியோ, தான்தோன்றியே இல்லை.

நான் எதையும் மெய்பிக்கவோ பொய்யாக்கவோ முயலவில்லை. படித்தவற்றில் இருந்து எனக்கு ஓரளவு புரிவதாகவும் ஏற்கமுடிவது போல் இருப்பதை இங்கே பகிர்ந்து கொண்டேன்.

இந்த இடுகை திரு ரத்னேஷ் அவர்களுக்கும், டிபிசிடி ஐயாவுக்கும் காணிக்கை.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்