பின்பற்றுபவர்கள்

21 மார்ச், 2007

விளக்குமா(ற்)று சிந்தனை !

பயனற்ற பொருள் என்று எதுவும் இருக்கிறதா ? மனித கழிவை பன்றி விரும்பி உண்ணுகிறது அதன் கழிவு எருவாக மறுசுழற்சியில் பயிருக்கு உரமாகிறது. புதிது என்று நமக்கு தெரிவதெல்லாம் தோற்றம் - மறைவு சுழற்சியில் கிடைக்கும் மறுபயனீடு அல்லது புதுப்பிக்கப்பட்டது என்ற இயற்கை நியதியில் தான் அடங்குகிறது. பஞ்ச பூதங்களை உண்டு அதற்குள்ளே அடக்கமாகும் மனித உடலும் கூட இதில் அடக்கம்.

வசைச் சொல்லாக 'வெளக்கமாறு பிஞ்சிடும்' என்று திட்டும் குழாயடி சண்டைகளைப் எங்கள் ஊரில் பார்த்து இருக்கிறேன். விளக்கமாற்றை ஏன் வசைச் சொல்லுக்கு பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியவில்லை. அது பயனுள்ள ஒரு பொருள்தானே, காலை விடியலின் முதலில், சாணம் கரைத்துத் தெளித்துவிட்டு தொடுவது விளக்கமாறுதானே. ஒருவேலை அதற்கு கொடுத்த இடம் கருதி அவ்வாறு சொல்கிறார்களா ? அல்லது அது செய்யும் வேலையினால் அதனை குறைத்து மதிப்பிடுகிறார்களா ?
விளக்கமாறு ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொரு பெயரில் வழங்கப்படுகிறது. எங்கள் ஊரில் விளக்கமாறு என்று சொல்லுவோம், சிலர் வாருகோல் என்பார்கள், சென்னையில் துடப்பம், துடைப்பம் என்று சொல்லுகிறார்கள். தென்னை ஓலை விளக்குமாறு தான் இன்னமும் கிராமங்களில் மிகுந்து புழக்கத்தில் இருக்கிறது. நகர வாசிகள் பூந்துடப்பத்துக்கு மாறிவிட்டார்கள். எந்த விளக்கமாறாக இருந்தாலும் தொட்ட பின்பு கை கழுவி கைசுத்தமாக இருப்பது சுகாதாரம். முன்பு மனிதர்களும் விளக்கமாறு செய்த வேலையைச் செய்கிறார்கள் என்று அவர்களையும் தொட்ட பின்பு குளிக்க வேண்டும் என்ற இழிவு நிலை இருந்தது. இன்று பரவாயில்லை விளக்கமாற்றிற்கு மட்டும் தான் அந்த மகத்துவம் என்று முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது, ஆனால் இன்னும் ஆலமரத்தடி பெருசுகள் கிராமத்தில் தீண்டாமை வன்கொடுமைகள் செய்துகொண்டிருக்கின்றன. பல்லாக்கில் போகிறவரை ஆடிவிட்டு போகட்டம் அவர்கள் காலமும் முடியப் போகிறது. அதைவைத்து ஏனையோர்கள் இன்னும் தீண்டாமையில் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது.

பணக்கார வீடுகளில் மின் சாதன விளக்குமாறு (வாக்குவம் கீளினர்) வந்துவிட்டது. இதுவும் அதே வேலையச் செய்தாலும் பெயர் சொல்லில் பெருத்த வேறுபாடு உள்ளதால் (சலூன் - ப்யூட்டி பார்லர் என்பது போல) அதை யாரும் மூலையில் போடுவதில்லை. அதற்கு உயரியமரியாதைக் கொடுத்து பாதுகாப்பாகத் தான் வைத்திருக்கிறார்கள்.

விளக்கமாறு பற்றி எதும் சுவையாக சொல்ல முடியுமா ? முடியுமே ! மசால் தோசை என்றதும் சுவை ஞாபகம் வருகிறதல்லவா ? ஓட்டலில் சூடான பெரிய கடப்பா கல்லில் தண்ணிரைத் தெளிப்பார்கள். 'சொய்ய்ய்ய்ங்' என்று இரைச்சலில் அடுத்து அதன் மேல் 'பரட் பரட்' என்று தனிப்பட்ட (ப்ரத்யோக) விளக்குமாற்றின் உரசல் ஒலி. அப்பறம் அந்த கல்லில் இடப்பட்ட தோசை மாவில் சூடான மசால் தோசை. சுவையான செய்தி.

விளக்குமாறு பற்றி கனமான எதும் சொல்ல முடியுமா ? ம். விளக்குமாறு மற்றும் உருவச்சிலை பற்றிச் சொல்லப் போகிறேன். ஆ ! 'பெரியாரிஸ்ட்' என்று வெளியில் சத்தமாக குரல். மனதுக்குள் 'சண்டாளன்' என்று நினைத்தால் அது ஒரு கனமான தகவல் தான் :). நான் +2 படிக்கும் போது தேர்வு கால விடுமுறைக்கு படிப்பதற்கு எங்கள் ஊரில் உள்ள நீலாயதாட்சி அம்மன் கோவிலுக்குச் செல்வேன். நல்ல குளுமையாக இருக்கும். படிப்பில் கவனம் செலுத்த சரியான இடம். ஒருமுறை அப்படி படித்துக் கொண்டிருக்கும் போது கோவில் சன்னதியில் சுற்றி சுவற்றில் பதித்து இருக்கும் துர்க்கை அம்மன், மற்றம் சில உருவச் சிலைகளை கழுவிக் கொண்டிருந்தார்கள். நெருங்கிப் போய் பார்த்தேன். கட்டை விளக்குமாற்றை திருப்பிப் பிடித்து எண்ணைப் பிசுக்கு போக பலமாக சிலையின் முகத்தில் தேய்து கழுவிக் கொண்டிருந்தார்கள். 'நாமெல்லாம் பயபக்தியுடன் வணக்கும் தெய்வச் சிலையை விளக்குமாறு கொண்டு முகத்தில் தேய்கிறார்களே' என்று மனதை அந்த நிகழ்ச்சி வெகுவாக பாதித்தது.

அப்பறம் தான் நினைத்தேன் 'விளக்குமாறு விளக்கமாறாக பிறந்தாலும்' அது இருக்கும் இடத்தைப் பொருத்து அதன் பிறவிப் பயன் இருக்கிறது போலும் என்று ஆறுதல் படுத்திக் கொண்டேன். நன்றாக துப்புறவு செய்வது என எல்லா விளக்கமாறும் ஒரே வேலையைத்தான் செய்கின்றன. தேய்ந்ததும் குப்பையில் வீசி எறிந்துவிட்டு திரும்பிப் பார்க்கமல் வந்துவிடுகிறோம். நம் உடலைவிட மனம் சுமக்கும் அழுக்குகள் அளவிட முடியாத ஒன்று. திரும்பாத இடத்திற்கு செல்லும் வரை சேர்த்துக் கொண்டிருக்கிறோம் குப்பைகளை.

25 கருத்துகள்:

ஆதி சொன்னது…

கடவுளை நிந்தித்தவர் ஒருபோதும் சொர்க்கத்துக்கு போகமாட்டார்!

Subbiah Veerappan சொன்னது…

///'விளக்குமாறு விளக்கமாறாக பிறந்தாலும்' அது இருக்கும் இடத்தைப் பொருத்து அதன் பிறவிப் பயன் இருக்கிறது போலும் என்று ஆறுதல் படுத்திக் கொண்டேன். ///

ஆகா, நெஞ்சை டச் பண்ணிவிட்டீர்கள்
கண்ணன்!

விளக்குமாற்றிற்கு பட்டுக்குஞ்சம்
வைத்ததுபோல என்பார்களே - அதைப் பற்றியும் ஒரு பதிவு எழுதுங்கள்!

நாமக்கல் சிபி சொன்னது…

//நம் உடலைவிட மனம் சுமக்கும் அழுக்குகள் அளவிட முடியாத ஒன்று. திரும்பாத இடத்திற்கு செல்லும் வரை சேர்த்துக் கொண்டிருக்கிறோம் குப்பைகளை//

நல்ல மாற்றுச் சிந்தனை!

கோவி.கண்ணன் சொன்னது…

//SP.VR. சுப்பையா said...

ஆகா, நெஞ்சை டச் பண்ணிவிட்டீர்கள்
கண்ணன்!

விளக்குமாற்றிற்கு பட்டுக்குஞ்சம்
வைத்ததுபோல என்பார்களே - அதைப் பற்றியும் ஒரு பதிவு எழுதுங்கள்!
//

ஐயா,
ஆகா அருமையான பழமொழி நீங்கள் சுட்டிக்காட்டிய என்பதிவில் இந்த பழமொழிதான் நன்றாக பொருந்துகிறது என நினைக்கிறேன். நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆதிசேஷன் said...
கடவுளை நிந்தித்தவர் ஒருபோதும் சொர்க்கத்துக்கு போகமாட்டார்!
//

வாங்க ஆதிசேஜன்,
அப்போ 'தெய்வீகப் பதவி' அடைந்தார் எனச் சொல்வது சும்மாவா ?

G.Ragavan சொன்னது…

கோவி, விளக்குமாறு என்பதால் அது இழிவு அல்ல. அதை இழிவாகச் சொல்வதும் தவறே. இத்தனைக்கும் அது தூய்மைப் படுத்தும் கருவி. அனாலும் ஏன் அது அப்படிப் பார்க்கப் படுகிறது என்றால் அதன் விலை. காசு எக்கச்சக்கமாகக் கொட்டி வாங்கிய வாக்குவம் கிளீனர் மதிப்பாக இருக்கக் காரணம் அதன் விலை. அவ்வளவே.

அத்தோடு...இறைவன் உருவச் சிலைகளை விளக்குமாறு கொண்டு துலக்குவது தவறல்ல. ஆனால் அந்த விளக்குமாற்றைக் கொண்டு வேறெதையும் துலக்காமல் இருந்தால் சரி. ஏனென்றால் அங்கிருக்கும் தூசியை இங்கு கொண்டு வந்து விடக்கூடாது அல்லவா!

Unknown சொன்னது…

என்னென்னமோ சொல்லிட்டு வாரார். அங்கே தோசை படம் போட்டிருக்கிறாரே என்று நினைத்தேன். படத்தை அது தொடர்பான எழுத்துக்கு பக்கத்தில் வைத்தால் நன்றாயிருக்கும்.

சென்னைக்கு பேருந்தில் செல்லும் வழியில் ஒரு கடையில் இதுமாதிரி விளக்குமாறு கொண்டு தோசைக்கல்லை அடித்து தோசை சுடுமிடத்தில் சாப்பிட நேர்ந்தது. ரோஸ்ட் கொண்டு வைத்து வைத்தார்கள். திறந்து பார்த்தால்... உள்ளே இரண்டு கரப்பான் மட்டும். (ஸ்பெஷல் ரோஸ்டோ! அல்லது விளக்குமாறு மாறிடுச்சோ என்னவோ!) அதன் பின் சில காலம் ரோஸ்ட் என்றாலே ஒவ்வாமைதான்.

//நம் உடலைவிட மனம் சுமக்கும் அழுக்குகள் அளவிட முடியாத ஒன்று. திரும்பாத இடத்திற்கு செல்லும் வரை சேர்த்துக் கொண்டிருக்கிறோம் குப்பைகளை//
விளக்குமாறு சிந்தனையில்லை. நல்ல சிந்தனை.

பொன்ஸ்~~Poorna சொன்னது…

//ஆதிசேஷன் said...
கடவுளை நிந்தித்தவர் ஒருபோதும் சொர்க்கத்துக்கு போகமாட்டார்!
//

வாங்க ஆதிசேஜன்,
அப்போ 'தெய்வீகப் பதவி' அடைந்தார் எனச் சொல்வது சும்மாவா ? //

கோவி அப்படி இல்லீங்க, கஷ்டப்பட்டு உயிரைக் கொடுத்து அந்தச் சிலையின் எண்ணைப் பசை போக தேய்த்துச் சுத்தம் செய்கிறவங்களை இப்படி நரகத்துக்கு அனுப்பவது ரொம்ம்ம்ம்ம்ப அதிகம்.. பாவம் அவங்க எல்லாம்... :(((

Hariharan # 03985177737685368452 சொன்னது…

//வசைச் சொல்லாக 'வெளக்கமாறு பிஞ்சிடும்' என்று எங்கள் ஊரில் குழாயடி சண்டைகளைப் பார்த்து இருக்கிறேன். விளக்கமாற்றை ஏன் வசைச் சொல்லுக்கு பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியவில்லை.//

எல்லாம் நன்றி கெட்டத்தனம்தான்:-))
தன்னைத் தாங்கி முள், கல், கண்ணாடித்துண்டுகள், அசிங்கத்திலிருந்து தினம் காக்கும் செருப்பையும் இப்படித்தான் செருப்பு பிஞ்சிடும், செருப்படி வேணுமா? என வசைக்குப் பயன்படுத்தி தனக்கு அன்றாடம் உதவும் செருப்பை அவமதிப்பது! :-))

பெரும்பாலும் தூய்மை அற்ற இடங்களில், வீதியில் புழங்கும் பொருட்களாக விளக்குமாறும், செருப்பும் இருப்பதால் அதுகொண்டு அடிப்பது என்பது அவமதிப்பு ஆகிறது

தூய்மை குறைந்த துப்புறவுத் தொழில்கள் செய்யும் சமூகத்தினர், செருப்புத்தைக்கும் சமூகத்தினர் பெயர் கொண்டு வசை மொழி அமைத்ததும் இதன் அடிப்படையிலேயே!

கோவி.கண்ணன் சொன்னது…

//எல்லாம் நன்றி கெட்டத்தனம்தான்:-))
தன்னைத் தாங்கி முள், கல், கண்ணாடித்துண்டுகள், அசிங்கத்திலிருந்து தினம் காக்கும் செருப்பையும் இப்படித்தான் செருப்பு பிஞ்சிடும், செருப்படி வேணுமா? என வசைக்குப் பயன்படுத்தி தனக்கு அன்றாடம் உதவும் செருப்பை அவமதிப்பது! :-))//

ஹரி,

என்ன இப்படி சொல்லிட்டிங்க செருப்பு பாதுகை என்று பெயரில் நாடாண்டதால் அவ்வாறு சொல்லமுடியாது. செருப்பை எவரும் அமதிப்பது போல் தெரியவில்லை. செருப்புக்கு மதிப்பு எப்போதும் இருக்கு கோவிலில் களவாண்டு சென்றுவிடுகிறார்கள். செருப்பு பிஞ்சிடும் என்று சொன்னாலும் செருப்புக்கும் சிறப்பும் சேர்த்து இருக்கிறோம் என்பதையும் நினைவில் கொள்க.

:))

கோவி.கண்ணன் சொன்னது…

// G.Ragavan said...
கோவி, விளக்குமாறு என்பதால் அது இழிவு அல்ல. அதை இழிவாகச் சொல்வதும் தவறே. இத்தனைக்கும் அது தூய்மைப் படுத்தும் கருவி. அனாலும் ஏன் அது அப்படிப் பார்க்கப் படுகிறது என்றால் அதன் விலை. காசு எக்கச்சக்கமாகக் கொட்டி வாங்கிய வாக்குவம் கிளீனர் மதிப்பாக இருக்கக் காரணம் அதன் விலை. அவ்வளவே.

அத்தோடு...இறைவன் உருவச் சிலைகளை விளக்குமாறு கொண்டு துலக்குவது தவறல்ல. ஆனால் அந்த விளக்குமாற்றைக் கொண்டு வேறெதையும் துலக்காமல் இருந்தால் சரி. ஏனென்றால் அங்கிருக்கும் தூசியை இங்கு கொண்டு வந்து விடக்கூடாது அல்லவா!
//

ஜிரா,

நான் விளக்குமாறு இழிவு என்று சொல்லவில்லை. கோவிலில் சிலையின் முகத்தில் அழுத்தமாக தேய்து என்னைப் பிசுக்கு எடுப்பதைப் பார்த்து மனசு எதோ செய்தது என்று தான் சொன்னேன். அது தவறு என்று சொல்லவில்லை.

கார்த்திக் பிரபு சொன்னது…

ஹாய் உங்க ப்ளாக் சிறந்த ப்ளாகாக தேர்வு பெற்றதை கேள்வி ப் பட்டேன் ..வாழ்த்துக்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//நாமக்கல் சிபி said...
நல்ல மாற்றுச் சிந்தனை! //

கருத்துக்கு நன்றி,

ஆவி அண்ணாசிக்கிட்ட கொஞ்சம் கேட்டு சொல்லுங்க ஆவிகள் உலகத்தில் செருப்பு கிடையாதுன்னு தெரியும். கால் இருந்தால் தானே அணிவதற்கு. :)

விளக்குமாறு உண்டா என்று கேட்டுச் சொல்லுங்கள்.
:))

கோவி.கண்ணன் சொன்னது…

//கோவி அப்படி இல்லீங்க, கஷ்டப்பட்டு உயிரைக் கொடுத்து அந்தச் சிலையின் எண்ணைப் பசை போக தேய்த்துச் சுத்தம் செய்கிறவங்களை இப்படி நரகத்துக்கு அனுப்பவது ரொம்ம்ம்ம்ம்ப அதிகம்.. பாவம் அவங்க எல்லாம்... :((( //

பொன்ஸ்,

நான் நரகத்துக்கு போகச் சொல்லவில்லை. என்னைப் பசையை தேய்து எடுக்கும் விதம் மனதை பாதித்தது. ஆனால் அது தவறு என்று சொல்லவில்லை.

Hariharan # 03985177737685368452 சொன்னது…

//என்ன இப்படி சொல்லிட்டிங்க செருப்பு பாதுகை என்று பெயரில் நாடாண்டதால் அவ்வாறு சொல்லமுடியாது. //

கோவி,

நீங்க சொல்கிற பாதுகைக்கு சுயத்தினை விட அதை அணிந்தவரால் கிடைத்த மதிப்பு அது.
பூவோடு சேர்ந்த நாராக மணத்தது!

வெளக்கமாறு V செருப்பு எனில் செருப்புக்கு மதிப்பு ஜாஸ்தி ஏனினில் சுயநலம்! செருப்பு தனிச்சுத்தம் பேணுவதால்!

வெளக்கமாறு எல்லோரும் பயன்பெற பொதுவான வீதி, வீட்டுசுத்தம், துப்புறவு செய்வதால் மதிப்புக் குறைவு!

பொதுநலம் பேண உழைத்தால் அதன் மதிப்பு எப்படி இருக்கும்னு நம்மாள் வெளக்கமா வெளக்கமாறு கொண்டு அறியத்தருகிறான்! :-))

In any case it is a clear expression of ungracefulness u see :-))

கோவி.கண்ணன் சொன்னது…

//
வெளக்கமாறு எல்லோரும் பயன்பெற பொதுவான வீதி, வீட்டுசுத்தம், துப்புறவு செய்வதால் மதிப்புக் குறைவு!
//
ஹரி,

வீட்டிற்குள் இருக்கும் விளக்கமாற்றை விட வெளியில் கழட்டிவிடும் செருப்புக்கு மரியாதை அதிகமாகத்தானே இருக்கிறது.
:)))

வடுவூர் குமார் சொன்னது…

நீலாயதாட்சி அம்மன் கோவில் படம் "பின்னூட்டத்திலாவது" இருக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்தேன்.

சிவபாலன் சொன்னது…

GK,

அந்த வயதில் அந்த அனுபவம் சற்று உங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருப்பது ஆச்சரியமில்லை..

பொன்ஸ்~~Poorna சொன்னது…

//நான் நரகத்துக்கு போகச் சொல்லவில்லை.//
கோவி, தல, நீங்களும் குழம்பி என்னையும் குழப்பிட்டீங்க :)

அது உங்களைச் சொல்லலைங்க.. அப்படித் துப்புரவு செய்த நல்ல மனசுக்காரர் சொர்க்கத்துக்குப் போகக் கூடாதென்று நினைத்தவருக்குச் சொன்னது.. பின்னூட்டத்தைச் சரியா படிங்க :)

VSK சொன்னது…

விளக்குமாறு பதிவில் பதிவரே அதன் படத்தைப் போடாமல் இழிவு படுத்தியது கண்டிக்கத்தக்கது!
ஒரு படம் கூடவா கிடைக்கவில்லை?
அதை விட்டு அந்நிய மோகத்தில் ஆழ்ந்திருக்கிறார் கோவியார்!

சிங்கைக்குச் சென்றதும் புது நாகரீகமா?
இதைஎதிர்த்து ஒரு போராட்டம் துவங்கப்படும் என எச்சரிக்கிறேன்!
இது என்ன நியாயம்?

ஒரு சோடா கொண்டாங்கப்பா?

:))

எ.பி.களைக் கவனிக்கவும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
நீலாயதாட்சி அம்மன் கோவில் படம் "பின்னூட்டத்திலாவது" இருக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்தேன்.
//

குமார்,

சிக்கல் சிங்கார வேலர் கோவில் கோபுர முகப்பு படம் இருக்கிறது அனுப்பி வைக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//சிவபாலன் said...
GK,

அந்த வயதில் அந்த அனுபவம் சற்று உங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருப்பது ஆச்சரியமில்லை..

9:59 PM, March 21, 2007
//

ஆம் சிபா,

புனிதம் என்பதன் பிம்பம் உடையும் போது அதிர்ச்சி அலையை ஏற்படுத்துகிறது

கோவி.கண்ணன் சொன்னது…

//கார்த்திக் பிரபு said...
ஹாய் உங்க ப்ளாக் சிறந்த ப்ளாகாக தேர்வு பெற்றதை கேள்வி ப் பட்டேன் ..வாழ்த்துக்கள்
//

கார்த்திக்,

என்ன சொல்றிங்க *நொண்டி* ப்ளாக் அவார்டுன்னு எதும் இருக்கிறதா ?
ஒண்ணும் பிரியல:)

கோவி.கண்ணன் சொன்னது…

//அது உங்களைச் சொல்லலைங்க.. அப்படித் துப்புரவு செய்த நல்ல மனசுக்காரர் சொர்க்கத்துக்குப் போகக் கூடாதென்று நினைத்தவருக்குச் சொன்னது.. பின்னூட்டத்தைச் சரியா படிங்க :) //


பொன்ஸ் எனக்கும் சேர்த்து *கட்டம்* கட்டியதால் அப்படி நினைத்துவிட்டேன். சாரிங்க, பொங்கலுக்கு 2 கரும்பு கட்டு பரிசாகக் கொடுக்கிறேன்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//SK said...
விளக்குமாறு பதிவில் பதிவரே அதன் படத்தைப் போடாமல் இழிவு படுத்தியது கண்டிக்கத்தக்கது!
ஒரு படம் கூடவா கிடைக்கவில்லை?
அதை விட்டு அந்நிய மோகத்தில் ஆழ்ந்திருக்கிறார் கோவியார்!
//
எஸ்கே ஐயா,
தேடிப்பார்த்து கிடைக்கவில்லை :(
எல்லோருக்கும் டீசண்ட் தான் பிடிக்கும் என்று மின்சாதான விளக்குமாறு படம் !
:)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்