பின்பற்றுபவர்கள்

19 மார்ச், 2007

மதமாற்றமா ? மனமற்றமா ?

'பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவே' எல்லோரையும் ரட்சிப்பது போல் மதம் மாறிய தலித்துகளையும் / ஆதிதிராவிடர்களையும் ரட்சிக்கிறாரா ? இல்லை. மதம் மாறிய பின்பு கிறித்துவ ஆதிதிராவிடர்கள் என்ற அடையாளத்துடனே இருக்கிறார்கள். கல்விக் கேள்விகளில் முன்னேறி இருக்கிறார்களா ? என்று கூர்ந்து பார்த்தால் இல்லை என்று தான் எனக்கு தெரிந்தவரையில் இருக்கிறது.

எங்கள் தெருவில் ஆதிதிராவிடக் குடும்பம் ஒன்று இருந்தது. அவர்களுக்கு சில சொந்தக்காரர்களும் இருந்தனர். அந்த குடும்பத்தில் இருந்த பையன் என்னுடன் 10ஆம் வகுப்பு வரை படித்த என் தோழன். அந்த பையன் பிறக்கும் முன்பு அவர்கள் குடும்பம் எப்படியோ கிறித்துவ பாதிரியார்களால் மதம் மாற்றப் பட்டுவிட்டனர். பின்னர் பிறந்த குழந்தைகள் கிறித்துவ பெயரைத் தாங்கி பெர்னார்ட், ஆரோக்கியநாதன் மரிய செல்வி எனவும் பெற்றோர்களின் பெயர் மணிநாதனிலிருந்து மரியநாதன் ஆகியது, இந்திராணி என்ற பெயர் அற்புத மேரி என்று ஆகியது. அவர்களுடைய பாட்டிக்கு வயதான காரணத்தால் மதம் மாற்றப்படவில்லை. இவர்கள் ஏசுவையும், கன்னி மேரியையும் ஏற்றுக் கொண்டதற்காக காணிக்கையாக 2 செண்ட் நிலம் (அளவீடு சரியாக தெரியவில்லை) கிறித்துவர்கள் நிறைந்த மற்றொரு பகுதியில் கொடுக்கப்பட்டது கிறித்துவ அமைப்புகள் மூலம் கொடுக்கப்பட்டது. எனது சிறுவயது தோழராக ஆரோக்கிய நாதன் என்ற நண்பர் பத்தாம் வகுப்பு வரை என்னுடன் படித்தார். ஆறாம் வகுப்பு படிக்கும் போது அவர்களுக்கு கிடைத்த 2 செண்ட் நிலத்தில் வீடுகட்டிக் கொண்டு சென்றுவிட்டார்கள். எங்கள் தெருவில் இருந்த வீட்டையும் விற்றுவிட்டார்கள்.

நண்பரின் தந்தை அரிசி மில்லில் கூலி வேலை பார்த்து வந்தார். மூன்று பிள்ளைகளையும் படிக்க வைத்தார் எனவே முன்பு வீடு விற்ற காசு முழுவதும் தீர்ந்து போனதும் கிடைத்த 2 செண்ட் நிலத்தில் 1 செண்டில் அவர்களின் வீடு இருந்தது போக மீதம் இருந்த 1 செண்ட் நிலத்தையும் விற்றுவிட்டனர். அவர்கள் கிறித்துவர்களாக மாறியதால் சோதனை வந்து விற்றார்கள் என்று சொல்லவில்லை. இது எல்லாம் ஏழ்மையில் எங்கும் நடப்பதுதான். என் நண்பர் சரியாக படிக்கவில்லை, பத்ததாம் வகுப்பில் தோல்வி என்பதால் பிரிண்டிங் வேலைக்குச் சென்று விட்டார். அடுத்து அவருடைய தம்பி ஓரளவுக்கு படித்து தேறி இருந்தான். ஐடிஐ என்னும் தொழில் கல்விக்கு விண்ணப்பிக்கும் போது அவனுடைய மதிப்பெண்படி அவனுக்கு இடம் கிடைக்கவில்லை. விண்ணப்ப படிவத்தில் 'கிறித்துவ ஆதிதிராவிடர்' என்று போட்டும் அரசாங்க விதிமுறையினால் அவனுக்கு இடம் கிடைக்கவில்லை. அண்ணனைப் போலவே தம்பியும் பிரிண்டிங் வேலைக்குச் செல்ல வேண்டியதாக ஆயிற்று.

இவர்கள் மதம் மாறியதால் ஆதிதிராவிடர்களுக்கு கிடைக்க வேண்டிய ஞாயமான உரிமையும், ஒதுக்கீடும் ஆதிதிராவிடர்களாக இருந்தும் இவர்களுக்கு கிடைக்காமல் போனது. தலித்துகள் மதம் மாறினாலும் தலித்தாகவே பார்க்கப்படுகின்றனர் என்ற உண்மை தெரியாது பல தலித்துகள் தங்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய சலுகைகளை இழந்து தவிக்கின்றனர். தேவாலய வட்டாரங்களிலும் தலித்துகள் தனித்தே பார்க்கப் படுகின்றனர் என்பதை அதில் உள்ளவர்களே ஒப்புக் கொள்ளும் சிலுவையில் அறையும் உண்மை.

சென்னையில் நான் பொறியியல் கல்லூரியில் படித்த போது அதே போல் வேறு கிறித்துவ நண்பர் எனக்கு கிடைத்தார். ஆனால் அவர் பெயரையோ, மதத்தையோ ஆவணங்களில் மாற்றிக் கொள்ளவில்லை, இந்து என்றே அறியப்பட்டார். எனவே அவருக்கு அரசாங்க சலுகை கிடைப்பதில் தடை இருக்கவில்லை. இந்து மதம் மற்றும் ஏனைய மதங்களைப் பற்றி இங்கு நான் சொல்லவில்லை. மதமாற்றம் குறித்து பலபதிவுகளில் மதமாற்றம் என்பது என்பது மனமாற்றம் என்ற சொல்லாடலில் சொல்கின்றனர். மதமாற்றம் என்பது மனமாற்றமாக அவர்களாகவே விரும்பி தேர்ந்தெடுக்க வேண்டிய ஒரு மாற்றுவழியாக இருந்தால் அவர்களுக்கு தனிப்பட்ட இழப்புகள் என்று எதுவும் இருக்காது. மதங்கள் வியாபாரமாகப் போகும் போது அதன் பயனீட்டாளர்கள் வாழ்நாள் முழுவதும் வருத்தப்பட்டு பாரம் சுமக்கின்றனர் அதன் வலியை சந்ததியனரும் அனுபவிக்கின்றனர்.

12 கருத்துகள்:

வெற்றி சொன்னது…

கோ.க,
நல்ல பதிவு.

/* மதம் மாறிய பின்பு கிறித்துவ ஆதிதிராவிடர்கள் என்ற அடையாளத்துடனே இருக்கிறார்கள். கல்விக் கேள்விகளில் முன்னேறி இருக்கிறார்களா ? என்று கூர்ந்து பார்த்தால் இல்லை என்று தான் எனக்கு தெரிந்தவரையில் இருக்கிறது. */

எனது அவதானிப்பும் இதேதான். மதம்மாறிய பெரும்பாலான மக்களின் பொருளாதாரமோ அன்றி வாழ்க்கைத் தரமோ முன்னேற்றம் கண்டதாகத் தெரியவில்லை. அதேநேரம் ஒரு விடயத்தையும் கவனிக்க வேண்டும். இந்த அப்பாவி மக்கள் இந்து மதத்தில் இருந்த போது அவர்கள் மனிதர்களாக மதிக்கப்படவில்லை. எடுத்துக்காட்டாக, ஆலயங்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியபின் அவர்கள் ஓரளவு மனிதர்களாகவாவது மதிக்கப்படுகிறார்கள். பாராட்டப்பட வேண்டிய விடயம். இயேசு பிரானின் தரிசனத்தைத் தேவாலயத்திற்கு வெளியில் நின்று தரிசிக்கும் அவலநிலை அவர்களுக்கு இல்லை என்பதே என் கணிப்பு. இந்துமதத்தில் இருந்த போது அவர்கள் கோயில் வளவுக்குள்ளேயே காலடி எடுத்து வைக்க முடியாத நிலையே இருந்தது.

கோவி.கண்ணன் சொன்னது…

வெற்றி,

நீங்கள் சொல்வது சரிதான். பொருளாதாரத்திலும் கல்வியிலும் பின் தங்கியுள்ள தலித் பெருமக்களுக்கு அரசாங்கம் மதத்தைக் காரணம் காட்டி அவர்களுக்கான சலுகைகளை மறுக்கக் கூடாது.

வெற்றி சொன்னது…

கோ.க,

/* பொருளாதாரத்திலும் கல்வியிலும் பின் தங்கியுள்ள தலித் பெருமக்களுக்கு அரசாங்கம் மதத்தைக் காரணம் காட்டி அவர்களுக்கான சலுகைகளை மறுக்கக் கூடாது. */


உங்களுடன் முழுமையாக உடன்படுகிறேன்.
ஒருவர் சார்ந்த மதத்தை வைத்தா அவர்களுக்கு அரசு உதவிகள் செய்கிறது? ம்ம்ம்ம்... வேதனையான விடயம். எனக்குத் தமிழக/இந்திய நிலைமைகள் சரியாகத் தெரியாது. ஆனால் மதத்தின் அடிப்படையில் பொருளாதரத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உதவி மறுப்பது வடிகட்டின முட்டாள்தனம் மட்டுமல்ல அநீதியான செயலும் கூட.

கோவி.கண்ணன் சொன்னது…

//இந்திய நிலைமைகள் சரியாகத் தெரியாது. ஆனால் மதத்தின் அடிப்படையில் பொருளாதரத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உதவி மறுப்பது வடிகட்டின முட்டாள்தனம் மட்டுமல்ல அநீதியான செயலும் கூட.
//

ஆமாம் வெற்றி,
இது தற்போதைய நடைமுறையில் உள்ளவை தான்.

Unknown சொன்னது…

Dalit christians, a very immoral word. If your friend is sufferring because he didnot study well, how Christianity is responsible for it?
If a person is converting becuse he will gain materially, then he should stop immediately. He should believe in the teachings of christ especially " LOVE THY NEIGHBOUR"; other wise they should recovert to hinduism. One has to suffer in chritianity.

ஜோ/Joe சொன்னது…

//மதமாற்றம் என்பது மனமாற்றமாக அவர்களாகவே விரும்பி தேர்ந்தெடுக்க வேண்டிய ஒரு மாற்றுவழியாக இருந்தால் அவர்களுக்கு தனிப்பட்ட இழப்புகள் என்று எதுவும் இருக்காது.//

என்ன சொல்ல வருகிறீர்கள் ? மனமாற்றத்தின் மூலம் மதம் மாறினார்கள் என்றால் சலுகைகள் பறிக்கப்படாது என்று உங்கள் சட்டம் சொல்கிறதா என்ன?

//மதங்கள் வியாபாரமாகப் போகும் போது அதன் பயனீட்டாளர்கள் வாழ்நாள் முழுவதும் வருத்தப்பட்டு பாரம் சுமக்கின்றனர் அதன் வலியை சந்ததியனரும் அனுபவிக்கின்றனர்.//
என்னுடைய மூதாதையர்கள் 450 வருடங்களுக்கு முன்னர் கட்டாயத்தின் பேரில் மதம் மாறினார்களா ,அல்லது ஆதாயம் தேடி மதம் மாறினார்களா என எனக்கு தெரியாது .ஆனால் ஒன்று மட்டும் உண்மை ,அவர்கள் மாறாதிருந்திருந்தால் நான் மீன் பிடித்துக்கொண்டிருந்திருப்பேன் .எங்கள் மீனவ கிராமத்தில் இப்போது 95 % கல்வியறிவு இருக்கிறதே ,அது இருந்திருக்காது .கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர்கள் ஒட்டுமொத்தமாக கிறிஸ்தவர்களாக மாறும் முன்னர் அவர்கள் எத்தகைய இழிநிலையில் இருந்தார்கள் ,எவ்வாறு அவமானப்படுத்தப்பட்டார்கள் என்று நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை .

கோவி.கண்ணன் சொன்னது…

ஜோ,

தவறாக புரிய வைத்துவிட்டேனோ என்று ஐயப்படுகிறேன். நான் கட்டாயப் படுத்தி மதம் மாற்றுகிறார்கள் என்று கூட சொல்லவில்லை. நான் இங்கு கிறித்துவம் குறித்து எதுவும் சொல்லவில்லை நண்பரே, அதற்கான தகுதி எனக்கு இல்லை.

எனக்கு தெரிந்து ஒரு நண்பர் குடும்பம் தலித்தாக பிறந்திருந்தும் அவர்களுக்கான சலுகை கிடைக்க மறைமுகமாக தடையாக அது எப்படி அமைந்தது என்று தான் சொன்னேன். அதுவும் அரசாங்க விதிமுறைகளினால் என்று தான் குறிப்பிட்டு இருக்கிறேன். இந்துத்துவாவாதிகள் எழுதும் அளவுகோள் எனது இந்த இடுகைக்கு முற்றிலும் பொருந்தாது.

இன்றைய முன்னேறிய கிறித்துவ மக்கள் முன்பு அடிமைப் பட்டுக் கிடந்தார்கள் என்ற உங்கள் கருத்தில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

//என்ன சொல்ல வருகிறீர்கள் ? மனமாற்றத்தின் மூலம் மதம் மாறினார்கள் என்றால் சலுகைகள் பறிக்கப்படாது என்று உங்கள் சட்டம் சொல்கிறதா என்ன?//

மனமளவில் மாறிய நண்பர் குறித்தும் கட்டுரையின் கடைசியில் எழுதி இருந்தேன் அதைப் படிக்கவில்லையா ?

நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களோ இல்லையோ மதம் மாற்றம் என்பது *பெயர்* அளவிலும் கட்டாயமாக்கப்படுவது உண்மைதானே.

மன அளவிலும் மதமாற்றம் என்பது தாமே தேர்ந்தெடுத்த வழியாக இருந்தால் அதற்கான பின்விளைவுகளையும் எதிர்நோக்குபவர்களாக அவர்கள் நிச்சயம் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//captainjohann said...
Dalit christians, a very immoral word. If your friend is sufferring because he didnot study well, how Christianity is responsible for it?
If a person is converting becuse he will gain materially, then he should stop immediately. He should believe in the teachings of christ especially " LOVE THY NEIGHBOUR"; other wise they should recovert to hinduism. One has to suffer in chritianity.
//

நண்பரே,

நான் கிறித்துவம் பொறுப்பு என்று எங்கும் சொல்லவில்லை. படிப்பறிவின் பயன் முற்றிலும் அறியாதவர்களாக, விழிப்புணர்வு ஊட்டப்பட வேண்டியவர்களாகவே இன்னும் பெரும்பாலான தலித்மக்களின் வாழ்வியல் இருக்கிறது. அவர்கள் பள்ளிக்கு வந்து படிப்பதே பாராட்டப்பட வேண்டிய விசயம்.

"அவர்கள் சரியாகப் படிக்கவில்லை, அதனால் வாழ்வில் முன்னேறவில்லை" என்று சொல்வதெல்லாம் வழக்கம் போல் இட ஒதுக்கீடுக்கு எதிராக முற்பட்ட சமூகத்தினர் சொல்லுவது போன்று சமூக நீதிக்கு எதிரான ஒன்று.

"தலித் கிறித்துவர்" என்ற சொல் இருக்கிறதா இல்லையா ? என்பதை கிறித்துவ நண்பர்களிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்!

ஜோ/Joe சொன்னது…

கோவி கண்ணன்,
இந்த விடயத்தில் மேலும் விவாதம் செய்ய விரும்பவில்லை .ஆனால் முடிந்தால் இத்தகைய விடயங்களில் பொதுமைப்படுத்தும் வாக்கியங்களை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளுகிறேன்.

TBR. JOSPEH சொன்னது…

கண்ணன்,

ஜோ உணர்ச்சிவசப்பட்டதில் தவறேதும் இல்லை...

கிறிஸ்த்துவ மதமாற்றங்களைப் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை..

நீங்கள் கூறுவதுபோல மனம் மாறி மதம் மாறினாலும்.. அல்லது வேறெந்த்த காரணத்திற்காக மதம் மாறினாலும் விளைவுகள் ஒன்றுதான்..

மதம் மாறுவதற்கு ஏழ்மை நிலை மட்டுமே காரணம் அல்ல. அதுவும் ஒரு காரணம் அவ்வளவுதான்..

மேலும் மதம் மாறிய ஒரே காரணத்திற்காக அளிக்கப்பட்டு வந்த சலுகைகள் மறுக்கப்படுவதுதான் தவறு...

நம் அரசியல் சட்டம் இந்தியர்களை மதத்தின் பெயரால் இனம் பிரித்து பார்க்க வேண்டும் என்று கூறவில்லை...

அப்படியிருக்க ஒரு இந்து தலித்துக்கு கிடைக்கும் சலுகைகள் ஒரு கிறிஸ்த்துவ தலித்துக்கு ஏன் மறுக்கப்பட வேண்டும் என்பதுதான் கேள்வி...

இந்துவாக இருந்த ஒருவர் கிறிஸ்த்துவனாகவோ அல்லது முஸ்லீமாகவோ மாறும்போது மட்டும் ஏன் இரக்கப்படுகிறீர்கள்? அதுவே ஒரு கிறீஸ்த்துவன் இந்துவாக மாறும்போது கிறிஸ்த்துவ பாதிரிமார்கள் வரையிலும் யாரும் துவேஷம் காட்டுவதில்லை...

இதுதான் உண்மை...

என்னைப் போன்ற கிறிஸ்த்துவ விசுவாசிகள் (போதகர்களை நான் இதில் சேர்க்கவில்லை) யாரும் எவரையும் அவர்களுடைய மதத்தை வைத்து பழகுவதில்லை...

ஆனால் அதே சமயம் கிறிஸ்த்துவ மதத்தில் சாதிகள் இல்லை என்றும் கூற வரவில்லை... மனிதர்கள் எங்கிருந்தாலும் மனிதர்கள்தானே...

காலங்காலமாய் இருந்து வரும் இந்த கொடுமை மதம் மாறினால் மட்டுமே மாறிவிடுமா என்ன?

TBR. JOSPEH சொன்னது…

நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களோ இல்லையோ மதம் மாற்றம் என்பது *பெயர்* அளவிலும் கட்டாயமாக்கப்படுவது உண்மைதானே.//

கட்டாயமாக்கப்படுவது என்பதற்கு பல வர்ணங்களைக் கொடுக்கலாம்..

கத்தோலிக்க கிறிஸ்த்தவர்களும் (நான் மற்றும் ஜோ போன்றவர்கள்) சி.எஸ்.ஐ. கிறிஸ்த்துவர்களும் யாரையும் கட்டாயப்படுத்தி மதம் மாற்றுவதில்லை... ஒரு சில அதிகப்பிரசங்கிகள் இருக்கலாம்.. ஆனால் பொதுவாக இத்தகைய மனமாற்றத்தில் ஈடுபடுவதில்லை..

ஆனால் சமீபகாலமாக கிறிஸ்த்துவன் என்று கூறிக்கொண்டு புற்றீசலாக ஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு சபைகளைத் துவங்கிவரும் போலி பாதிரிமார்களும்.. போலி ஆர்ச் பிஷப்புகளும் (இவர்கள் மோசடி பேர்வழிகளும் கூட) செய்யும் காரியம்தான இந்த கட்டாய மதமாற்றம்... நீங்கள் குறிப்பிட்ட குடும்பம் நிச்சயம் கட்டாய மதமாற்றத்திற்கு உட்பட்டிருக்காது... ஏனெனில் நீங்கள் குறிப்பிட்ட பெயர்களை வைத்துப் பார்த்தால் அவர்கள் கத்தோலிக்க கிறிஸ்த்துவர்கள்..

விளைவுகளைப் பொருட்படுத்தாமல் அவர்களாகவே மதம் மாறியிருக்கலாம்...

மதமாற்றம் என்பது மூளை சம்பந்தபட்ட விஷயம் அல்லவே...

கோவி.கண்ணன் சொன்னது…

ஜோசப் ஐயா,

இரண்டு வித நிகழ்ச்சிகளைக் சொல்லி இருக்கிறேன்.

ஒன்று மதமாற்றம், மற்றது மனமாற்றம்
மதம் மாறும் போது சலுகைகளோ, பெரிய அளவுக்கு அந்தஸ்தோ ( உதாரணத்து மாறிய பிறகும் தலித் கிறித்துவர்கள் என்று அழைக்கப்படுவது )கிடைப்பதில்லை என்பதால். மாற்றுமதக் கடவுளை மனம் நாடினால் மதம் மாறித்தான் நாடவேண்டும் என்பது சரியா ? என்று சொல்ல முயன்றேன்.

ஏனென்றால் என் நண்பர் கிறித்துவத்தை நாடியதும், இந்து கோவில்களுக்கு செல்லவதில்லை. ஆனாலும் ஆவணங்களை இந்து என்றே வைத்திருந்தார். அவருக்கு மத்திய அரசு வேலையும் கிடைத்தது. இது ஒரு நல்ல அனுகு முறையாக எனக்கு தெரிந்தது.

//காலங்காலமாய் இருந்து வரும் இந்த கொடுமை மதம் மாறினால் மட்டுமே மாறிவிடுமா என்ன? // - இதுதான் நான் சொல்ல முயன்றதும்...கோர்வையாக வரவில்லை!

கடவுள் நம்பிக்கை என்பது மதநம்பிக்கை ஆகிவிட்டது ஐயா. அதனால் வரும் குழப்பங்கள் தான் எல்லாம். நம்பும் கடவுளை நாடுவதற்கு மதம் மாறித்தான் ஆகவேண்டும் என்பது தான் நடைமுறையாக இருக்கிறது. குருவாயூர் சம்பவங்கள் கூட இதே போன்று கூத்துதான்.

உங்கள் சிறப்பான கருத்துக்களுக்கு நன்றி மற்றும்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்