பின்பற்றுபவர்கள்

14 ஜனவரி, 2011

பெரியார் ஏன் பெரியார் ?

வரலாற்றுவழியாகப் பார்த்தால் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்குமான சமூகத் தாழ்வு குறித்த ஒற்றுமைகள் ஏராளம். அதனால் ஏற்பட்ட வன்கொடுமை, சமூகத் தாழ்வு, சச்சரவுகள், கொடூரங்களும் மிக மிக அதிகம். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோயில்கள் செட்டியார், பிள்ளைமார் உள்ளிட்ட மேட்டுக்குடிகளின் பொறுப்பிலேயே இருக்கிறது. அங்கெல்லாம் தாழ்த்தப் பட்டவர்களுக்கு, நாடர்கள், வன்னியர்கள் உள்ளிட்ட மிகவும் பிற்பட்டவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த காலம் இருந்தது. இன்றும் கூட அந்நிலைமை இருக்கிறது. பள்ளிகளிலும் அதே நிலைமை இருந்தது. நாய்களும், பன்றிகளும், கழுதைகளும் நடமாடும் தெருக்களில் மனிதர்களாகிய தாழ்த்தப்பட்டவர்கள் நடக்க அனுமதி மறுக்கப் பட்டிருந்தது பெரும்பாலான பார்பனர் அக்ரஹாரம் உள்ளிட்ட மேட்டுக்குடி பண்ணையார்கள் வசிக்கும் தெருக்களில். இந்த கொடுமையான அடக்குமுறைகளை - அநீதிகளை களை வதற்காக பல பெரியார்கள் தோன்றினார்கள். அந்த கொடுமைகள் குறைந்தபாடில்லை.

தமிழ்நாட்டிலும் இக்கொடுமைகளை எதிர்த்துப்போராட தந்தைப் பெரியார் பிற்பட்ட வகுப்பில் இருந்து தோன்றியதாக திராவிட இயக்க ஆதரவு எழுத்தாளர்கள் இன்றும் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். உண்மையிலேயே தாழ்த்தப்பட்டவர்களுக்கு தந்தைப் பெரியார் பாடுபட்டாரா? பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பாடுபட்டாரா? இந்த இரு சமுதாயத்தினரையும் தன் சமுதாயமாகவே பார்த்தாரா? தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்திய பார்பனர்களை கடுமையாக எதிர்த்ததுபோல் - தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்திய மேட்டுக்குடி சமுதாயத்தினரை எதிர்த்தாரா ?

பிற்படுத்தப்பட்டோருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் இடையே தந்தை பெரியார் எடுத்த முடிவுகள் எது? என்பதை ஆராயும்போது அவருடைய செயல், எண்ணம், தொண்டு எல்லாமே தாழ்த்தப்பட்டவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் என இருவருக்கும் தான் என்பதை மறுக்க முடியாது. இதை அவரே பலதடவை சொல்லியும் இருக்கிறார்.

தந்தை பெரியார் கூறுகிறார் :-
‘‘என்போன்ற ‘சூத்திரன்’ என்று சொல்லப்படுபவன் ‘பறையன்’ என்று சொல்லப்படுவோருக்கு உழைப்பதாகச் சொல்லுவதெல்லாம், ‘சூத்திரர்கள்’ என்று தம்மை யாரும் கருதக்கூடாது என்பதற்காகத் தானேயல்லாமல் வேறில்லை. ஆகையால், எனக்காக நான் பாடுபடுவதென்பது உங்கள் கண்ணுக்கு உங்களுக்காகப் பாடுபடுவதாய்த் தோன்றுகிறது.

பார்ப்பனரல்லாதவர்களோ - முக்கால் வாசிப்பேர் - பார்ப்பனர்களைப் பின்பற்றுபவர்களாகவும், பார்ப்பானுக்குத் தாசிமகனாய் இருந்தாலும் சரி, நாம் பறையனுக்கு மேலே இருந்தால் போதும் - என்று முட்டாள்தனமாய்க் கருதிக் கொண்டிருக்கின்றவர்கள் என்றாலும், நம்மால் கூடியதைச் செய்துதான் வருகின்றோம். எதற்கும் உங்கள் முயற்சியும் சுயமரியாதை உணர்ச்சியும் இல்லாவிட்டால் ஒரு காரியமும் நடவாது. தவிரவும், தீண்டாமை ஒழிவதற்கு இது ஒரே ஒரு மார்க்கந்தான் என்று நான் சொல்ல வரவில்லை. தீண்டாமை ஒழிய வேண்டுமானால், மதத்தைவிட்டு விடுங்கள்; அல்லது ஏதாவது ஒரு மதம் வேண்டுமானால், தீண்டாமை இல்லாத மதத்தைத் தழுவலாம். ஆகவே நான் சொல்லுவதை பொறுமையுடனும் சுய புத்தியுடனும் ஆராய்ச்சி செய்து பார்த்து, உங்களுக்குச் சரி என்று தோன்றியபடி நடவுங்கள். - (குடியரசு 25.4.1926)

பிற்பட்ட வகுப்பினரான சூத்திரன் என்று சொல்லப்படும் உனக்கும் கீழே தாழ்த்தப்பட்ட ஒருவன் இருப்பதால் மகிழ்ச்சியடையும் நீயும் பார்பனர்களால் தாழ்த்தப்பட்டவன் தான், உனக்கும் கிழே உள்ளவனை முன்னேற்றாமல் சமூக சமத்துவம் ஏற்படாது, , இந்து மதத்தினால் தொடரும் தீண்டாமையை ஒழிக்க பிற்பட்டவர்களும் மதத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்பதாக பிற்பட்டவர்களுக்கு சுட்டிகாட்டிச் சொல்லுகிறார். தாழ்த்தப்பட்ட தலித்துகளே இந்துமதத்தில் இல்லை என்றால் சூத்திரனுக்குத்தான் அந்த இடத்தில் வைக்கப்படுவர் எனவே சூத்திரனாகச் சொல்லப்படும் பிற்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்களை சமமாக நடத்தாவிட்டால் பிற்பட்டவர்களுக்கும் ஆபத்தானது என்பதே தந்தை பெரியார் சொல்வது

************

அதையே வேறுரொரு கூட்டத்தில்,


தந்தை பெரியார் கூறுகிறார்,

“தீண்டாமை விலக்கு என்னும் விஷயத்தில் நான் ஏதாவது ஒரு சிறிதாகிலும் வேலை செய்திருப்பதாக ஏற்படுமானால், அது எங்கள் நலத்திற்கு செய்ததாகுமேயொழிய உங்கள் நலத்திற்கு என்று செய்ததாக மாட்டாது. ஏனெனில் உங்களுக்கும் எங்களுக்கும் சமூக வாழ்வின் பொதுத் தத்துவத்தில் சிறிதும் பேதமில்லை. அநுபோகத்தில் மாத்திரம் ஏதாவது அளவு வித்தியாசமிருக்கலாம். உதாரணமாக நீங்கள் எப்படி தீண்டப்படா தவர்களோ, அப்படியே தான் உங்களை விட சிறிது மேல் வகுப்பார் என்கின்ற நாங்களும் ஒரு வகுப்பாருக்கு - அதாவது கடவுள் முகத்திலிருந்து பிறந்ததாகவும் பூலோக தேவர்கள் என்றும் சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர் களுக்கு நாங்கள் தீண்டாதவர்களாகவே இருக்கின்றோம். கோயில் பிரவே ஷம் என்பதிலும் உங்களைவிட சற்று முன்னால் போக மாத்திரம் அனுமதிக் கப்படுகிறோமே தவிர மற்றபடி பார்ப்பனர் நிற்கும் இடத்திற்குப் பின்னால் தான் நிற்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். நீங்கள் கோயிலுக்குள் வந்தால் எப்படிக் கோயிலும் சாமியும் தீட்டுப்பட்டு விடுகின்றதோ, உங்கள் எதிரில் சாப்பிட்டால் உங்களுடன் சாப்பிட்டால் உங்கள் வீட்டில் சாப்பிட்டால் எப்படித் தோஷமும் பாவமுமான காரியமாகி விடுகின்றதோ அப்படியே எங்கள் வீட்டிலே எங்கள் முன்னாலே எங்கள் பக்கத்திலே சாப்பிட்டாலும் தோஷம், மோசம் பாவமென்று தான் சொல்லப்படுகின்றது”

நமது சமூகத்திற்கு பெயர் சொல்லி அழைப்பதிலும் உங்களைவிட மிக இழிவாகவேதான் அழைக்கப்படுகின்றோம். உங்களைப் பறையர் என்றும், பள்ளர் என்றும் சொல்லுகிறார்கள். ஆனாலும் பறையர், பள்ளர் என்கின்ற வார்த்தை தொழிலையும், வசிப்பு இடத்தையும் பொறுத்து ஏற்படுத்தப்பட்டது. பறையனும் பள்ளனும் அந்த பெயரால் சுதந்திரமான வராகவும் இழிவுபடுத்தத்தகாதவராகவும் இருக்கிறார்கள். ஆனால் எங்களை அழைக்கும் பெயராகிய சூத்திரன் என்று சொல்லப்படும் பேரானது பிறவி யிலேயே இழிவை உண்டாக்கத்தக்கதும், ஒருவனுக்குப் பிறவி அடிமை யாகவும், பிறவி தாசி மகனாகவும் மற்றும் மிக்க இழிவான கருத்துக் கொண்டதாகவுமே இருக்கின்றது. எங்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் நிர்ப்பந்தங்களும் சகிக்க முடியாத இழிவை கொடுக்கக்கூடியதாகவே இருக்கின்றது. பறையன் என்றால் சொந்தத்தாய் தந்தைக்கே பிறந்தவன் என்கின்ற கருத்து உண்டு. ஆனால் சூத்திரன் என்றால் - தாசிமகன், வேசிமகன், வைப்பாட்டி மகன், பிறவி அடிமை, விலைக்கு வாங்கப்பட்ட அடிமை என்பது போன்ற பல இழிவுப் பொருள்கள் நிறைந்திருக்கின்றத - (குடியரசு 16-6-1929)


அதாவது பிற்பட்ட சூத்திரர் நிலையும் தாழ்த்தப்பட்டவர் நிலையும் ஏறக்குறைய ஒன்று தான், தாழ்த்தப்பட்டவர்களுக்கு முன்னெடுத்துச் செல்லும் போராட்டங்கள் அனைத்திலும் பிற்பட்டவர்களை சூத்திரன் என்று சொல்லும் இழிவு நிலையை அகற்றுவதும் அடங்கி இருக்கிறது.

**********
dalit12
அதே தெளிவில் வேறொரு கூட்டத்தில், தந்தைப் பெரியார் அதையே,

"பறையன் பட்டம் போகாமல், உங்களுடைய சூத்திரப் பட்டம் போய்விடும் என்று கருதுகிறீர்-களேயானால், நீங்கள் வடிகட்டின முட்டாள்களேயாவீர்கள். மற்றும் பேசப் போனால் பறையன், சக்கிலி என்பதற்கு இன்னார்தான் உரிமை என்றும், அது கீழ்சாதி என்பதற்கு இன்னது ஆதாரமென்று சொல்-லுவதற்கு ஒன்றுமே இல்லை. கை பலமேயொழிய, தந்திரமேயொழிய வேறில்லை. ஆதலால் பறைபட்ட-மாவது சீக்கிரத்தில் மறைந்துவிடக் கூடும். உங்கள் சூத்திரப்பட்டத்-திற்குக் கடவுள், மதம், வேதம், சாஸ்திரம், புராணம், இதிகாசம் ஆகிய அநேக ஆதாரங்கள் உண்டு.... ஆதிதிராவிடர் நன்மையைக் கோரிப் பேசப்படும் பேச்சுகளும், செய்யப்படும் முயற்சி-களும், ஆதிதிராவிடர் அல்லாத மக்களில் பார்ப்பனரல்லாத எல்-லோருடைய நன்மைக்கும் என்பதாக உணருங்கள் என்று பெரியார் குறிப்-பிட்டுள்ளார். (குடிஅரசு 11.10.1931)

தாழ்தப்பட்டவர்களுக்கு பிற்பட்டவர்கள் ஏன் போராடவேண்டும் என்று சொன்ன பெரியார், தாம் உருவாக்கிய திராவிட இயக்கம் என்றால் என்ன என்பதை மிக அழகாக,

‘திராவிடர் கழகம்’என்பது, 4-வது வருணத்தாராக ஆக்கப்பட்டு, சமுதாயத்தில் இழிவுபடுத்தப்பட்டு, சரீரப் பாடுபட வேண்டியதாகக் கட்டாயப்படுத்தித் தாழ்த்தப்பட்டு வைத்திருக்கும் ஒரு 4 கோடி மக்கள் கொண்ட சமுதாயத்தின் விடுதலைக் கழகம் என்றுதான் சொல்லவேண்டும்.


திராவிட இயக்கம் என்பது சூத்திரனாக இழிவுபடுத்தப்பட்ட பிற்பட்டவர்களுக்கும், சமூதாயத்தால் இழிவு படுத்தப்பட்ட மிகவும் பிற்பட்டவர்களுக்கும், உடல் உழைப்பாளிகளாக ஒதுக்கிவைப்பட்டு தீண்டதகாதவர்கள் ஆக்காபட்ட மொத்தம் 4 கோடி பேர்களின் சமூக விடுதலைக்கானது. பெரியார் காலத்தில் பிற்பட்டவர், மிகவும் பிற்பட்டவர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற அரசு பிரிவுகள் இல்லை, பிற்பட்டவர்களையும், மிகவும் பிற்பட்டவர்களை தாழ்த்தப்பட்ட சூத்திரர்களும், பஞ்சமர் (ஐந்தாம் பிரிவினர்) அல்லது சண்டாளர்கள் என்று பார்பனர்களால் அழைக்கப்பட்டவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்றும் இருந்தது.

*****

இவ்வாறு தான் தந்தை பெரியார் சூத்திரன் என்று சொல்லப்பட்டவர்களுக்கும் பஞ்சமர் என்று சொல்லப்பட்டவர்களுக்கும் தான் பாடுபடுகிறேன் என்று தெள்ளத்தெளிவாக கூறியதால் தான் திராவிட இயக்க எழுத்தாளர்கள் முதல், திருமா உள்ளிட்ட பல தலித் தலைவர்களும், எழுத்தாளர்களும் கூட தந்தை பெரியார் தலித்துகளுக்காக பாடுபட்டார் என்பதை எழுதி மெய்பித்து வருகின்றனர்.

பார்பனர்கள் பிற்பட்டோர்களுடன் சேர்த்து மிகவும் பிற்படுத்தப்பட்டடோர், தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்டோரை தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளாக்கினர். அதை பிற்பட்ட சமூகத்துக்கு புரிய வைத்து ஒட்டுமொத்த தீண்டாமைக் கொடுமை விலங்குகளை தகற்தெறிய பாடுபட்டார். அவருடைய நோக்கமே ஒட்டுமொத்த தீண்டாமை குறித்தே இருந்தது. தானும் தாழ்த்தப்பட்டவன் தான் என்று பிற்பட்டவர்களுக்கு புரியவைக்காமல் தலித்துகளுக்கு மட்டுமே பாடுபட்டாலே சமூக ஏற்றத்தாழ்வு மற்றும் தீண்டாமை விலங்கை அறுத்தெறிய முடியும் என்கிற நம்பிக்கைகள் அவருக்குக் கிடையாது. தனக்கும் கீழானவன் என்பதாக பிற்படுத்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு செய்த கொடுமைகளை தந்தை பெரியார் ஏற்றதே இல்லை. தீண்டாமையை கடைபிடிக்கின்ற பிற்படுத்தப்பட்டவர்களை எதிர்த்து எந்த ஒரு போராட்டத்தையும் அவர் ஆரம்பிக்கவில்லை மாறாக இந்த நிலை தொடர்வது கூடாது 'பார்பனர் உன்னையும் சூத்திரனாகத்தான் வைத்திருக்கிறார்கள்' என்று ஒட்டுமொத்தமாக அவர்களைவைத்தே சுட்டிக்காடி திருத்தினார்.

தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்தினால் தாழ்த்தப்பட்டவர்கள் என்ன செய்யவேண்டும் ? பெரியார் சொல்லுகிறார்

"இந்த ஜில்லா ஆதிதிராவிடர்கள் மகாநாட்டுக்கு நான் இதற்கு முன் நான்கைந்து தடவை அழைக்கப்பட்டிருந்தாலும், அப்போது பல காரணங்களால் எனக்கு வர முடியாமல் போய் விட்டதால், இந்தத் தடவை கட்டாயமாய் எப்படியாவது வரவேண்டுமென்று கருதியே வந்து சேர்ந்தேன். வரவேற்பு கழகத் தலைவர் என்னைப் பற்றிப் பிரமாதமாகப் புகழ்ந்து கூறினார். அவ்வளவு புகழ்ச்சி எனக்கு வெட்கத்தை கொடுத்ததேயல்லாமல் மற்றபடி அதில் உண்மை இல்லை என்று சொல்லுவேன்,

உங்களை யாராவது கிராமவாசிகள் துன்புறுத்தினால் இழிவாய் நடத்தினால் எதிர்த்து நிற்கவேண்டும். முடியாவிட்டால் வேறு பட்டணங்க ளுக்குக் குடியேறிவிட வேண்டும். அங்கும் ஜீவனத்திற்கு மார்க்கமில்லா விட்டால் இம்மாதிரியான கொடுமையான மதத்தை உதறித் தள்ளிவிட்டு சமத்துவமுள்ள மதத்திற்கு போய்விட வேண்டும். அதுவும் முடியாவிட்டால் வெளிநாடுகளுக்காவது கூலிகளாய்ப் போய் உயிரையாவது விட வேண்டும். இம்மாதிரியான உறுதியான முறைகளைக் கையாளத் துணியவில்லையானால். உங்கள் மீது சுமத்தப்பட்ட இழிவு சுலபத்தில் ஒழியாது என்றே சொல்லுவேன்."

****

பாப்பாபட்டி, கீரிபட்டி, நாட்டார்மங்கலம் ஆகிய கிராமங்களில் இன்றும் தீண்டாமைக் கொடுமைகள் தொடரும் போது, அன்றைக்கு எத்தனை கிராமங்கள் இதே போன்று இருந்திருக்கும் ? வாழும் இடத்தில் அடையாளப்படுத்தப்பட்டால் அடையாளம் காண முடியாத இடத்துக்கு இடம் பெயர்வதன் மூலம் இழிவுகளை அகற்றிக் கொள்ளமுடியும், மதம் மாறுவதால் இழிவை அகற்றிக் கொள்ளமுடியும் என்று பெரியா வலியுறுத்தினார். ஆம் இன்றைக்கு வெளிநாடுகளில் வாழும் தலித்துகள் எவருக்குமே வன்கொடுமைகள் தொடர்வது இல்லை.

முதாய்பாக, தந்தை பெரியார்,

‘‘ஆதித்திராவிட சமுகத்தாருக்கு, மற்ற சமூகத்தார் செய்யும் கொடுமைகளைப் பற்றிக் கேட்க எனக்கு ஆத்திரமாய் இருக்கின்றது. ஆனால் இதற்கு யார் ஜவாப்தாரி என்பதைப் பற்றி யோசித்துப் பார்க்கையில், உங்களைக் கொடுமை செய்பவர்கள் ஜவாப்தாரியல்லர்; ஏனெனில் அவர்கள் தங்களது நம்பிக்கையின்பேரில், தங்களது மத உணர்ச்சி, மத ஆதாரம் ஆகியவைகளில் உள்ள பற்றுதலின் பேரில் தங்கள் முன் ஜென்மத்தின் கர்மம் - பூர்வபுண்ணியம்-தலைவிதி என்கின்ற சுதந்திரத்தின் பேரில், ஒரு உரிமை பாராட்டி அம்மாதிரி செய்கிறார்களேயொழிய வேறில்லை....

மத சம்பிரதாயப்படி நீங்கள் சக்கிலியரை பறையர்களை விட உயர்ந்த ஜாதியாராகவும் கடவுள் அந்தப்படி உங்களைப் படைப்பித்ததாகவும் அதற்குக் காரணம் உங்களு டைய பூர்வஜன்ம கர்மத்தின் விதி யென்றும் கருதுகிறீர்கள். உங்களைத் தாழ்ந்த ஜாதியாய் கருதியிருப்பவர் களும் அப்படியேதான் மத ஆதாரத் தாலும் கடவுள் செயலாலும் பூர்வ ஜன்மாந்தர கர்ம விதியாலும் அப்படிப் பிறந்ததாகக் கருதியிருக்கின்றார்கள். இந்த மாதிரியான மதம் கடவுள் ஜென் மாந்திர விதி ஆகிய மூன்றையும் நம்பியிருக்கின்றவன் இம்மூன்றையும் பாதுகாக்க விரும்புகின்றவன் எப்படி மற்ற மக்களை சமமாகக் கருதக்கூடும்? பணக்காரனும் தான் பணக்காரனா யிருப்பதற்கு இதே காரணம்தான் கருதிக் கொண்டிருக்கிறான். திருடனும் தான் திருடனாய் இருப்பதற்கும், அயோக்கி யனும் தான் அயோக்கியனாய் இருப்பதற்கும், அரசனும் தான் அரசனா யிருப்பதற்கும், கூலியும் தான் கூலியாயிருப்பதற்கும், ஏழையும் தான் ஏழை யாயிருப்பதற்கும், கொடுங்கோல் ஆட்சியில் கஷ்டப்படும் குடிகளும் (பிரஜையும்)தாங்கள் கஷ்டப்படுவதற்கும் மத சம்பிரதாயத்தையும் கடவுள் சித்தத்தையும் பூர்வ ஜன்ம கர்மவிதியையும் காரணமாய் கருதி தங்கள் நிலையில் திருப்தி கொண்டு இருக்கின்றார்கள். இந்த மாதிரி மக்களை உடைய தேசத்தில் எந்த மாதிரியான முன்னேற்றத்தைக் காணக்கூடும்? இந்த தேசத்தை மனிதத் தன்மையுடைய தேசமாகவும், மானமுள்ள தேசமாகவும், சுவாதீனமும் சமத்துவமுமுள்ள தேசமாகவும், ஆகச் செய்யவேண்டுமானால் மேல்கண்ட மூன்றும் அதாவது மதம், கடவுள், விதி ஆகிய மூன்றும் அடியோடு ஒழிக்கப் பட்டாக வேண்டும். அந்தப்படி யில்லாதபட்சம் வெறும் பேச்சுதான் நடை பெறுமே யொழிய காரியத்தில் ஒரு சிறிதும் பயனடைய முடியாது என்று நான் உறுதியாய்ச் சொல்லுவேன்


************

பெரியார் ஏன் பெரியார் ? வெறுமனே 'உபதேசம், பிரசங்கம்' செய்யாமல் தாழ்த்தப்பட்டவன், சூத்திரன் எல்லாம் ஒண்ணு தான், இந்துமதத்தில் இருக்கும் இந்த பிரிவு கொடுமைகளை அழிக்காமல் தமிழனின் இழிநிலைமாறாது என்று மேடை தோறும் முழங்கினார். பெரியாரின் விழிப்புணர்வால் திராவிட இயக்கங்கள் மலர்ந்தது, பின்னர் தலித் இயங்கள் வளர்ந்துள்ளன. ஆட்சி அதிகாரத்தில் நடுத்தர மற்றும் பிற்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பங்களிக்க வாய்ப்பு அமைந்தது. மகாத்மா காந்தியை அவர் வாழும் காலத்திலேயே மகாத்மா என்று அழைக்கப்பட்டது போல் பெரியார் வாழ்ந்த காலத்திலேயே பெரியார் என்று போற்றப்பட்டார் பெரியார். பெரியார் தம் பிற்பட்ட நாயக்கர் சமூகத்திற்காக மட்டுமே போராடி இருந்தால் ஆட்சி அதிகார பீடத்தில் அவர்கள் மட்டும் அல்லவா அமர்ந்திருப்பார்கள் ?

படம்: நன்றி தமிழ்ஹிந்து.

பின்குறிப்பு : இந்தக்கட்டுரை தமிழ் ஹிந்துவில் பெரியார் பேச்சின் குறிப்பிட்ட ('Context') பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டுபெரியார் மீது அவதூறாக எழுதப்பட்ட கட்டுரைக்கு மறுப்பாக எழுதப்பட்டது. முழுவதையும் மறுத்து எழுத போதிய ஆதரங்கள் உண்டு, இருந்தும் வளவள என்று ஏழுதும் அயற்சியைத் தவிர்க, அந்தக் குறிப்பிட்ட கட்டுரையின் அவதூற்றை உங்கள் எண்ணத்திற்கே விட்டு வைத்திருக்கிறேன்

9 கருத்துகள்:

அ.வெற்றிவேல் சொன்னது…

தமிழர் திருநாள் அன்று மிகவும் அற்புதமான கட்டுரை தந்த தங்களுக்கு நன்றியைத் தவிர சொல்வத்ற்கு வேறு ஒன்றும் இல்லை

priyamudanprabu சொன்னது…

நல்லது , அந்த லிங்க் எதுக்கு ? அதெல்லாம் படிச்சு நேரத்த விணடிக்க முடியாது..

தமிழ்மலர் சொன்னது…

நன்று...

RaaKu saamy சொன்னது…

Nanbarae,

Miha nalla pathivu,,,

tamilhindu kku meendum saattaiyadi,,,,


Nallathambi

RaaKu saamy சொன்னது…

Nanbarae,

Arumaiyaana pathivu.

tamil hindu-valalaari thirithu eluthuvathu eppadi ene katruth tharum thalam.

nalla ethirvinai,,

thangal saevai thodara vaazhthukkal..

Pongal vaazgthukkal.

Nallathambi

சிநேகிதன் அக்பர் சொன்னது…

மிகச் சிறப்பான கருத்துக்களை தக்க சமயத்தில் வெளியிட்டதற்கு நன்றி.

பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

ஜோதிஜி சொன்னது…

கண்ணன் என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

14.1.2010

பெயரில்லா சொன்னது…

அய்யா கண்ணன்! உங்களுக்கு எனது தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள் .அருமையான விளக்கம் .நல்ல பதிவரிடமிருந்து .நல்ல நாளில் .நல்ல விளக்கம் .வாழ்த்துகள் .

பெயரில்லா சொன்னது…

சாதியும் மதமும் சமயுமும் காணா
ஆதிய ஆநாதியாம் அருட்பெருஞ்ஜோதி

சாதியும் மதமும் சமயமும் பொய்யென
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி

நால்வருணம் ஆச்சிரமம் ஆச்சார முதலா
நவின்ற கலைச சரிதமெல்லாம் பிள்ளை விளையாட்டே

அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் அருளைப் பெற்று, மரணத்தை
வென்று மரணமில்லா பெருவாழ்வில் வாழ்வதற்கு வாருங்கள்
வள்ளலார் ஒரு புதிய சுத்த சன்மார்க்கத்தை கண்டுள்ளார் அவை
யாதெனில் ..
சுத்த சன்மார்க்கம் ;---சமயம் கடந்த மார்க்கம் .
சுத்த சன்மார்க்கம் ;---ஞான மார்க்கம் .
சுத்த சன்மார்க்கம் ;---ஒப்பற்ற உயர்ந்த மார்க்கம் .
சுத்த சன்மார்க்கம் ;---சத்திய மார்க்கம் .
சுத்த சன்மார்க்கம் ;---சாகாக்கலையை போதிக்கும் மார்க்கம் .

உங்கள் கருத்துக்கு ஏற்ற இன்னும் வள்ளலார் பாடல்
கொள்ளை வினைக் கூட்டுறவால் கூட்டிய பல் சமயக்
கூட்டமும் அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்
கள்ளமுறும் அக்கலைகள் காட்டிய பல் கதியுங்
காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்
பிள்ளை விளையாட்டு ....

குற்றத்தை சுட்டி காட்டுவதை நிறுத்துவோம் பகுத்து
அறிந்து இராமலிங்க வள்ளலார் வழி நடப்போம்.

See this site :
http://www.vallalyaar.com/

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்