பின்பற்றுபவர்கள்

23 நவம்பர், 2009

புனித குற்றங்கள் (Sacred Crime) !

"தவறிழைத்தாலும் அரசன் மன்னிப்பு கேட்பது என்பது அரசனுக்கே இழுக்கு" - இது வெள்ளைக்காரர்களின் பண்பாட்டுக் கூறு. Man in the iron mask என்கிற படம் பார்த்தேன், அதில் இளவரசன் தவறுதலாக ஒரு கண்ணாடி கோப்பையை உடைத்துவிட்டு 'Sorry' சொல்ல, 'A king cannot ask sorry' என்று அவனுக்கு பயிற்சி கொடுப்பவர் அறிவுரை சொல்லுவார். முதலாளிகள், பணக்காரவர்கம், செல்வாக்குப் படைத்தவர்கள் தவறு செய்வது இயல்பு என்பதே அதன் பொருள். அடிமைசாசனத்தின், ஆளுமைகளின் அனைத்து கயவாளித்தனங்களும் அதில் இருந்தே வளர்ச்சி பெருகின்றன. தவறு செய்தவன் தன் னளவில் மன்னனே, மன்னனின் மகனே ஆனாலும் அவனுக்கும் தண்டனை உண்டு என்பதே நமது கோட்பாடு. 'நானே கள்வன்' கண்ணகிக் கதையின் முடிவு கூட இப்படியாகத்தான் அமைந்திருந்தது. நீதி என்ற சொல்லை இந்தியர்கள் பயன்படுத்துவதற்கும், பிறர் பயன்படுத்துவதற்கும் பெரிய வேறுபாடு உண்டு. இருந்தாலும் பெரிதாக பீற்றிக் கொள்ள ஒன்றும் இல்லை என்பது போலவே பார்பனுக்கு ஒரு நீதி.....பறையனுக்கு மறு(!) நீதி என்பதாக சாதிய வருணாசிரம் கோட்பாடுகள் நாக்கை நீட்டி பழிப்பு காட்டுவதையும் நாம் மறந்துவிடலாகாது.

அரசனோ, தலைவனோ குற்றம் செய்வது பற்றிய பெரிய கருத்துகள் விவாதம் சுயநலம், பொதுநலம் என்ற நோக்கில் சொல்லப்படுவது அவரவர் இன வாழ்வியல் முறை என்றாலும், அனைத்தையும் அறிந்தவர்கள், அனைவருக்கும் பொதுவானவர்கள் என்று சொல்லும் இறை பணியாளர்கள், சாமியார்கள் செய்யும் குற்றங்களுக்கும் அவ்வித அளவீடுகள் பொருந்துமா ? காமம் அல்லது பாலியல் மற்றும் உடல்உறவு குறித்து அனைத்து மதங்களுமே கட்டுபாடுகள் கொண்டிருப்பதாகத்தான் அறிகிறோம். விலை மாந்தர்கள் பற்றிய கருத்துகள் மதவாதிகளினால் மிகவும் தூற்றப்பட்ட நிலையில் தான் இருக்கிறது. ஒருவரை புனிதராகக் காட்ட அவர் காமத்தை துறந்தவர் அல்லது காமத்தில் கட்டுபாடு மிக்கவர் என்பதாகச் காட்டுகிறார்கள்.

பொதுவாக மதத்தின் பெயரால் செய்யப்படும் குற்றங்கள் வெளியே தெரியாமல் அமுக்கப்படும் அல்லது பிற மதத்தினரால் மிகுதியாகப் பேசப்படும், அம்மதத்தைச் சேர்ந்தவர்கள் அதைப் பற்றி விவாதிப்பது குறைவு அல்லது கிடையாது, அவ்வாறு விவாதம் செய்வதும் கூட பிற மதத்தினரால் தூற்றப்படுவோம் என்கிற ஐயம் காரணாமாக விவாதிப்பது இல்லை என்பதைவிட மதப்புனிதம் கெட்டுவிடும் என்பதாகவே அதை மறைத்தே பழகுகிறார்கள். வேதங்களில் பெருமையாகப் பேசப்பட்ட இந்திரன் தற்பொழுது எங்கு சென்றான் என்றே தெரிய்வில்லை, தமிழகத்து முருகனின் மாமனார் என்கிற ஒரு பதவிதவிர்த்து இந்திரன் குறித்து தற்காலத்து இந்து சமயவாதிகளால் பேசப்படுவதில்லை, ஏனெனில் இந்திரன் குறித்துக் கூறப்பட்ட கதைகளில் ஒன்று இந்திரன் காமவயப்பட்டு முனிவர் வேடம் கொண்டு முனிவரின் மனைவியை அடைய முயற்சித்தான், அவளும் அறியாமையால் அதற்கு ஒத்துழைத்ததால் கல்லாக மாறும் படி சாபம் பெற்றாள், இந்திரனும் உடெலெங்கும் பெண் குறிகள் தோன்றக்கடவது என்று சாபம் பெற்றான் என்பதே அந்தக் கதை அந்தக் கதையின் தொடர்ச்சியாக இராமயணத்தில் இராமன் கால்கள் பட்டதும் உயிர்பெற்றாள் என்றும் அவளை இராமன் அன்னையே என்று அழைத்து மகிழ்ந்தான் என்றும் இராமயணக் கதையில் கூறப்பட்டுள்ளது.

அகலிகை (மறு அல்லது மீண்டும்) புனிதம் அடைந்தாளா இல்லையா என்பதைவிட இராமனின் கால் அடிக்கு இருக்கும் புனிதத்துவம் உணர்த்துவதாக அந்தக் கதையின் கட்டமைப்பு இருக்கிறது. பெண்ணாசை மிக்கவன் என்பதாக கதையில் கூறப்பட்டு கதை பரவலாகப் வழங்கிவருவதால் இந்திரன் வணக்கம் வழிபாடுகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டன என்பதாகத்தான் நினைக்கிறேன். மற்றபடி இந்திரன் வணங்கத்தக்கவனா இல்லையா என்கிற புரிதல்களை நான் எழுப்பவில்லை. பக்திமார்க்கத்தில், சமயத்தில் முறையற்ற காமம் என்பதற்கு கொடுக்கப்படும் தண்டனைகள் கடுமையானவை என்பதாகவும் அந்தக் கதைகள் புரிய வைக்கப்படுகின்றன.

இறை தொண்டாற்றுபவர்கள் காம வயப்பட்டார்கள் என்று கூறுவது கூட மதத்திற்கு இழுக்கு என்பதாகவே அனைத்து கதைகளும் கட்டமைக்கப்படுகின்றன. பண்டைய இதிகாச உதாரனங்களைவிட அண்மைய ஆறாம் நூற்றாண்டு கதைகளை குறிப்பாக திருவிளையாடல் புராணம் பெருமையாக பேசும், திருமுறைப் பாடல்கள் பாடியவருமான ஞான சம்பந்தன் திருமணம் முடித்தவுடனேயே அங்கு கலந்துகொண்டவர்களுடன் இறை சோதியில் ஐக்கியம் ஆனதாக கதை சொல்கிறார்கள். ஞானசம்பந்தரை இல்லறவாசியாகக் காட்டவேண்டியதற்கு தேவை அவர் வாழ்வில் முழுமை பெற்றார் என்பதற்கும், அவர் அன்றே சோதியில் ஐக்கியமானார் என்பதை தெய்வீகம் புறக்கணிக்கும் காமத்தை தொடாத, துய்காத புனிதர் அவர் என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் போல:) இவ்வாறெல்லாம் மறைத்து மறைத்து காமம் என்பது ஆன்மிகத்திற்கு மிகத் தொலைவு என்றெல்லாம் கட்டமைத்துவிட்டு ஒரு சாமியார் காம லீலைகள் புரிகிறார் என்று சொன்னால் நடக்கக் கூடாத இழுக்கு நடந்ததாக கூனிக்குறுகிக் கொள்கிறார்கள், அல்லது அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை என்று நம்புகிறார்கள். ஸ்வாமிகள் மலம் கழிப்பார்களா ? என்று நினைப்பது கூட அப்படிப் புனிதப்படுத்தப் படுவதால் ஏற்படும் ஒரு ஐயம் தான், சாமியார்கள் மலம் கழிப்பதுடன் அவர்களே தனக்குத்தானே கழுவியும், மலம் கழிப்பவர் கிறித்துவ வெள்ளைக்கார பாதிரிமார்கள் என்றால் அவர்களே அதைத் தாளால் துடைத்தும் கொள்ள வேண்டும், ஏனென்றால் பக்தர்கள் கொடுக்கும் பிரசாதங்கள் வயிற்றுக்குள்ளேயே சமாதி ஆகிவிடாது :)

சாமியார்களின் புனிதம் குறித்து மிகுந்த கட்டுமானம் செய்திருப்பதால் தான் என்னவோ, அவர்கள் தவறு இழைக்கும் போது ஒன்று அதை ஏற்க அடியார்களுக்கு மனம் வருவதில்லை, அல்லது அவர்கள் தவறுகள் மன்னிக்கப்படலாம் என்கிற கருத்தும் வருகிறது. அவன் அங்கு அந்த பதவிக்கு தகுதியற்றவனாகிறான் என்பதை அவனுடைய பதவியில் புனிதம் இருப்பதாக நம்புவர்கள் நினைப்பது குறைவு. ஒரு சாமியார் எவ்வளவுதான் தவறு செய்தாலும் அவை மறைக்கப்படுகிறது அல்லது மறைமுகமாக ஏற்கப்படுகிறது கையும் களவுமாக மாட்டுபவர்கள் மிக எளிமையாக தப்பித்துவிடுகிறார்கள் சிங்கையில் மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒரு கிறித்துவ பாதிரி பணமோசடி செய்தாதாக கைது செய்யப்பட்டு நூடுல்ஸ் சாப்பிட்டுக் கொண்டு கம்பி எண்ணுகிறார், நேற்று ஒரு புத்தமத சாமியார் பணமோசடியில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். நம் நாட்டு மதத்தலைவர்களுக்கு அரசியல் செல்வாக்கு மிகுதி.

கருவறையில் பல்வேறு பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாக பிடிபட்ட கோவில் குருக்கள் தேவநா(த்)தன் 'பகவான் என்னை ஏற்கனவே தண்டிச்சிட்டான்' என்று வாக்கு மூலம் கொடுத்திருக்கிறான். இவ்வளவு நாட்கள் தான் பகவானுக்கு அர்சனை செய்வதாகச் சொல்லி பெண்களை ஏமாற்றி வந்தவன், இன்று பகவான் தண்டித்துவிட்டதாகச் சொல்கிறான், இவனை பகவான் தண்டிச்சாரா இல்லையா ? இவனுக்கு எப்படி தெரியும் ? இவனுடன் இரவோடு இரவு பேசி நான் உன்னை தண்டித்துவிட்டேன் என்று சொன்னாரா ? அவன் செய்தது சராசரி மனிதத் தவறே என்றாலும் கூட பல்வேறு தரப்பினரின் நம்பிக்கைக்கு உலை வைத்தவன், இன்னும் 'பகவான்' பெயரைச் சொல்ல எதுவும் இருக்கிறதா ? இருந்தாலும் தொடர்ந்து சொல்லுவான் ஏனென்றால் அவன் செய்தது புனித அர்சனைத் தொழிலாம், அவனுடைய முறையற்ற பாலியல் நடவெடிக்கை மட்டும் 'தெரியாமல் நடந்த தவறுகலாம், அதை கடவுள் மன்னிப்பாராம்'. இவன் சிக்கியது, இவனைப் பற்றிய செய்திகள் இவற்றிற்கு கொடுக்கப்படும் முதன்மைத்துவம் மற்றவையாவும் இவன் ஒரு பெரிய மடத்தின் தலைவராக இருந்தால் வெளியே தெரிந்திருக்கவே தெரிந்திருக்காது, அப்படியே தெரிந்தாலும் அவை நம்பட மாட்டாது.

சாதரண மக்கள் தவறிழைத்துவிட்டால் அது அவர்கள் இழிபிறப்பு, அவர்கள் தவறு செய்யவே பிறந்தவர்கள், மோசமானவர்கள் என்பதும், அதுவே சாமியார்கள், புனிதர்கள் தவறு செய்துவிட்டால் மழுப்பலாக 'நேரம் சரி இல்லை தப்பு நடந்துவிட்டது, கிரக நிலை சரி இல்லை, சேருவார் தோசம்' என்றெல்லாம் பழியை பிறர் மீது சொல்வதும் வாடிக்கை தான்.

புனித குற்றங்களுக்கு மன்னிப்பே கிடையாது என்பதைவிட அவற்றிக்கு தண்டனையே கிடையாது எனெனில் அவைகள் வெளியே தெரியவும் தெரியாது, தெரிந்தாலும், அவை நம்பப்படவே படாது. மனு நீதியாக மறு(த்துவிடும்) நீதியாக இன்னும் புனித குற்றங்கள் தொடரத்தான் செய்கிறது.

32 கருத்துகள்:

தருமி சொன்னது…

குற்றங்கள் யார் செய்தால் என்ன? இதில் எதற்கு சன்னியாசியையும் சம்சாரியையும் வித்தியாசப்படுத்தணும்? இல்லியா?

கோவி.கண்ணன் சொன்னது…

//தருமி said...
குற்றங்கள் யார் செய்தால் என்ன? இதில் எதற்கு சன்னியாசியையும் சம்சாரியையும் வித்தியாசப்படுத்தணும்? இல்லியா?
//

குற்றங்கள் யார் செய்தால் என்ன என்பதைவிட... இவர்களெல்லாம் குற்றமே செய்யமாட்டார்கள் என்று சொல்வது நடந்துவருது

:)

பித்தனின் வாக்கு சொன்னது…

நல்ல கட்டுரை, கோயில்களுக்குள் கர்மம் நடப்பது உண்மை. அதில் மாட்டியவர் தேவனாதன். மாட்டாதவர் ஏராளம். இப்ப எல்லாம் ஆள் நடமாட்டமில்லாத எல்லா இடங்களிலும் நடக்கின்றன. ஆனால் பலரும் புனிதம் என்று மதிக்கும் கோவிலும், வழிபாட்டு இடம் என்று பாராமல் தவறு செய்வது குற்றம். மற்றும் சாமியாரானலும், பாதிரியானாலும் அவர் அந்த பதவியில் இருந்து தவறு செய்வது தவறு. ஆசையை அடக்க முடியாவிட்டால் அதில் இருந்து துறந்து வெளி வந்து செய்யட்டும். யார் மறுப்பு சொல்லப் போகின்றார்கள்.
ஆண்டவன் தண்டித்து விட்டார் உண்மைதான், அந்த குடும்பம் எப்டிப்பட்ட நிலைமையில் இருக்கும் பாருங்கள். இந்த அயேக்கியன் செய்த தவறுக்கு அந்த குடும்பம் எல்லாம் அனுவிக்கும். வெளியில் தலை காட்ட முடியுமா? . யார் பெண் எடுப்பார்கள். எப்படி உறவாடுவார்கள். கண் நேர சுகம் காரணம், வக்கிரம் மீதி என்ற காரணத்தினால் என்ன நடந்தது பாருங்கள். இங்க கூட பாருங்க மனு நீதி எப்படி வேலை செய்யுதுன்னு? இந்த பாவம் செய்த பார்ப்பானுக்கு நிறைய மடங்காய் ஜென்மத்திற்க்கும் அவமானமும் வெளியில் தலைகாட்ட முடியா தண்டனை. ஆனால் ஒரு பெண்ணை அனுபவித்து அவளுக்கு சிலை வைத்தவனுக்கு என்ன தண்டனை? புரியும்ன்னு நினைக்கின்றேன். புரியல்லைனா நான் பொறுப்பு அல்ல. தனிப்பட்ட முறையில் கேக்கவும்.

பித்தனின் வாக்கு சொன்னது…

// குற்றங்கள் யார் செய்தால் என்ன என்பதைவிட... இவர்களெல்லாம் குற்றமே செய்யமாட்டார்கள் என்று சொல்வது நடந்துவருது //
அப்படி யார் சொன்னா. இன்னிக்கு சங்கராச்சாரி தண்டனையில் இருந்து தப்பலாம், ஆனா மக்களின் கூசும் பார்வையில் தப்ப முடியுமா?
ஓடிப் போய் வாழ்த்தியவர்களில் இன்று ஒதுங்கிப் போவேரும் உண்டு அல்லவா?
அவர் விட்டாலும் அவர் மனசாட்சி உறங்க விடுமா? தண்டனை என்பது இறைவனின் சன்னிதானத்தில் ஒன்னுதான் தோழரே.

கோவி.கண்ணன் சொன்னது…

//அந்த குடும்பம் எப்டிப்பட்ட நிலைமையில் இருக்கும் பாருங்கள். இந்த அயேக்கியன் செய்த தவறுக்கு அந்த குடும்பம் எல்லாம் அனுவிக்கும். //

அவன் செயலைவிட அவன் குடும்பம் பச் பச் காட்டுவது கூட ஒருவகையில் அவன் செயலை மன்னிக்கச் சொல்வதன் வெளிப்பாடு, அவன் குடும்பத்தைவிட அவன் செல்போனில் சிக்கிய பெண்களின் நிலை மிக மோசம், அவர்களை விசாரணைக்குக்கு என்று 'அழைப்பவர்களும்' அவர்களை கேள்விகள் மட்டும் கேட்டுவிட்டு விட்டுவிடுவார்கள் என்று நினைக்க முடியாது.

ஒருவனின் ஊதியத்தில் வயிறு வளர்க்கும் குடும்பம் அவனுடைய பாவத்தில் பங்கு கொள்ளக் கூடாது என்றால் அவனைக் கண்டுக் கொள்ளளமல் விட்டதும், என் கணவர் தவறு செய்பவரே அல்ல ஜோடிப்பு வழக்கு என்று கூறுவதும் யாருடைய தவறுகள்.

Unknown சொன்னது…

ஸ்வாமிகள் மலம் கழிப்பார்களா ? என்று நினைப்பது கூட அப்படிப் புனிதப்படுத்தப் படுவதால் ஏற்படும் // ஒரு ஐயம் தான், சாமியார்கள் மலம் கழிப்பதுடன் அவர்களே தனக்குத்தானே கழுவியும், மலம் கழிப்பவர் கிறித்துவ வெள்ளைக்கார பாதிரிமார்கள் என்றால் அவர்களே அதைத் தாளால் துடைத்தும் கொள்ள வேண்டும், ஏனென்றால் பக்தர்கள் கொடுக்கும் பிரசாதங்கள் வயிற்றுக்குள்ளேயே சமாதி ஆகிவிடாது :) //

இயல்பான வார்த்தைகளால் ஆழமான கருத்தை பதிவு செய்து விட்டிர்கள்...

துளசி கோபால் சொன்னது…

அதெப்படி அவனுக்கு தண்டனை கொடுத்துட்டார்?

இப்ப அவனுக்கு ஒரு கையும் ஒரு காலும் இல்லைன்னாத்தான் நம்புவேன்!

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
அதெப்படி அவனுக்கு தண்டனை கொடுத்துட்டார்?

இப்ப அவனுக்கு ஒரு கையும் ஒரு காலும் இல்லைன்னாத்தான் நம்புவேன்!
//

அவனுக்கு எதிரான பெண்களின் குரலாகத்தான் உங்கள் பின்னூட்டத்தை எடுத்துக் கொள்கிறேன்.

பெண்கள் பேச தொடங்கினால் அநீதிகள் குறையும், பெண்களின் அறியாமையைப் பயன்படுத்தி அவர்களை அவமதிக்கும் கதை தொடகிறது. ஒரு சில ஞாயவாதிகள் 'அந்த பெண்களுக்கு என்ன தண்டனை?' என்றெல்லாம் கேட்டு கடுப்பு ஏற்றுகிறார்கள். அவன் கொடுத்து இருக்கும் வாக்கு மூலப்படி பெண்களின் அறியாமையை, அவர்களின் கடவுள் நம்பிக்கையை எப்படியெல்லாம் தனது ஏமாற்றுக்கு பயன்படுத்தி இருக்கிறான் என்று தெரிந்தும் பெண்களின் மீதும் தான் குற்றம் என்று கூசாமல் கூறுகிறார்கள்
:(

பித்தனின் வாக்கு சொன்னது…

நான் அனுதாபம் காட்டவில்லை, ஒருவன் செய்த தவறுக்கு ஒரு குடும்பம் படும் கஷ்டம் என்ன என்றும், தவறு செய்யக் கூடாது என்றும் கூறுகின்றேன். கறுப்பு துணிக்கரை தெரியாது, ஆனா வெள்ளைத் துணிக்கரை ஊர் பூராவும் தெரிகின்றது அல்லவா. ஆதலால் தப்பு செய்யாமல் ஒழுக்கமாக கவனமா இருக்கனும். முடியாவிட்டால் அதை விட்டு வெளியே வந்துவிட வேண்டும். என்பதுதான் என் கருத்து.

yrskbalu சொன்னது…

i expected strong words from you.

but this time you softly handled?

fed up by repeatdly happening?

கோவி.கண்ணன் சொன்னது…

//yrskbalu said...
i expected strong words from you.

but this time you softly handled?

fed up by repeatdly happening?
//

தலைப்பை விட கடுமையான சொல்லா ? ம்கூம் ! தலைப்பே எல்லாம் சொல்லுமே !

கோவி.கண்ணன் சொன்னது…

//பித்தனின் வாக்கு said...
நான் அனுதாபம் காட்டவில்லை, ஒருவன் செய்த தவறுக்கு ஒரு குடும்பம் படும் கஷ்டம் என்ன என்றும், தவறு செய்யக் கூடாது என்றும் கூறுகின்றேன். //

வால்மிக் கதை தெரியுமா ? அவர் ஒரு திருடன், பாவம் தண்டனை என்றதும் குடும்பம் எஸ்கேப் ஆகிவிட்டது, அவரு இராமயணம் எழுத உட்கார்ந்தார்.

//கறுப்பு துணிக்கரை தெரியாது, ஆனா வெள்ளைத் துணிக்கரை ஊர் பூராவும் தெரிகின்றது அல்லவா. ஆதலால் தப்பு செய்யாமல் ஒழுக்கமாக கவனமா இருக்கனும். முடியாவிட்டால் அதை விட்டு வெளியே வந்துவிட வேண்டும். என்பதுதான் என் கருத்து.
//

கருப்பு துணி தன்னை புனிதம் கூறிக் கொள்வதில்லை, கூறவும் மாட்டிங்க, ஆனால் வெள்ளள அப்படியா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//இயல்பான வார்த்தைகளால் ஆழமான கருத்தை பதிவு செய்து விட்டிர்கள்...

3:29 PM, November 23, 2009
//

நன்றி பேநா மூடி சார்.

கோவி.கண்ணன் சொன்னது…

//பித்தனின் வாக்கு said...
தண்டனை என்பது இறைவனின் சன்னிதானத்தில் ஒன்னுதான் தோழரே.
//

அவன் செல்போன் தீர்தக் குடத்தில் விழுந்ததைச் சொல்றிங்களா ? கோவிலில் மட்டும் இல்லை.

எப்பவுமே தீவிரமாக புலனாய்ந்தால் குற்றவாளிகள் சிக்கிடுவாங்க என்பது குற்றவியல் சித்தாந்தம்

சிநேகிதன் அக்பர் சொன்னது…

அண்ணா,

மதத்தலைவர்கள் மட்டுமல்ல வசதிபடைத்தவர்கள் அனைவருமே செக்ஸ் சம்பந்தப்பட்ட குற்றங்களில் இருந்து எளிதாக தப்பித்து விடுகின்றனர்.

ஒரே வார்த்தையில் சொல்வதானால் ஆண்கள் இதிலிருந்து வெகு எளிதாக தப்பித்துவிடுகின்றனர், பின்பு சமுதாயத்தில் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை அல்லது அதையே பெருமையாக மற்றவர்களிடம் (எததனை பேரை மடக்குனேன் பார்த்தியா என்று) சொல்கின்றனர். பாதிக்கப்படுவது பெண்கள்தான்.

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

ம்ம்ம்ம்ம்ம்ம்...புனித குற்றங்கள்!

தலைப்பு சரியில்லையே! இங்கே தமிழ் நாட்டில் நிலவரமே வேறு!

குற்றங்கள் செய்கிறவர்கள் தான் புனிதர் ஆக முடியும் என்று அல்லவா இருக்கிற மாதிரித் தெரிகிறது!

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் தேவநாதன் வெறும் சில்லறை. ஒரு பெரிய மடமே, குருவும் சீடனுமாக பெரிய வில்லங்கத்தில் சிக்கிக் கொண்டு சந்தி சிரித்தது, புனிதக் குற்றமாகவோ, குற்றமே புனிதமாகிப் போனதாலோ அல்ல.

ஓட்டை வாய்! பெரிய தம்பட்டம்! குற்றத்தை விட இது தான் பெருத்த வில்லங்கமாகிப் போனது என்பது இங்கே நிறையப் பேருக்குத் தெரியாது.

ஆளுவோருடன் அண்டர்ஸ்டாண்டிங் இருந்தால் சாட்சிகள் வரிசையாக தடம் மாறுவார்கள்! நீதி மன்றமும் விரைவில் குற்றம் நிரூபிக்கப்படவில்லை அல்லது குற்றமற்றவர் என்று அறிவித்து விடும். வேறு வழி? அப்படித் தான் நடக்கப் போகிறது! அரசியல்வாதிகளும், சாமியார்களும் தண்டிக்கப்பட்டதாக சமீபகால வரலாறு சொல்ல மாட்டேன் என்கிறதே என்ன செய்ய:-((

போன ஆட்சிக்காலத்தில் ஊழல் பெருச்சாளிகளாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள், கட்சி மாறியவுடனேயே வழக்கு ரத்து என்றோ, விடுவிக்கப் படுவதோ தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறதே!

இங்கே புனிதம் குற்றமோ, தனிநபரோ, சாமியார்களோ செய்வதில் இல்லை.

அண்டர்ஸ்டாண்டிங் இருக்கிறதா இல்லையா?

ரெண்டுக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு என்று பாடிக் கொண்டே போக வேண்டியது தான்!

ராஜரத்தினம் சொன்னது…

//எப்பவுமே தீவிரமாக புலனாய்ந்தால் குற்றவாளிகள் சிக்கிடுவாங்க என்பது குற்றவியல் சித்தாந்தம்//
இது எப்படி இர்குதுன்னா? வாரம் இரண்டு முறை உறவு கொண்டால் எல்லா தம்பதிகளுக்கும் குழந்தை பாக்கியம் வரும் என்பது மாதிரி. கடவுள் விரும்பவில்லை என்றால் ஒன்றும் நடக்காது. இப்போது நீங்கள் இதை படிப்பது உட்பட.

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

அண்ணே , நீங்களே தலைப்பிலேயே சொல்லிட்டிங்க ; புனித குற்றம் என்று ...

தப்பு பண்ணுறவன் மனிதனா மட்டும் பாருங்க ; அதுல ஏன் மத அடையாளத்தை வைத்து சொரண்டுறீங்க .

தப்பு தப்பு தான் ; வீட்டுல மனைவி இருப்பா , கோவில்ல யாருமே கிடையாது . அதான் மீட்டரைப் போட்டு மேட்டருல்ல சிக்கிட்டாரு .

என்ன ஒண்ணு , அந்தாளுக்கு தெரியலியே ! இப்படி இந்துக்கள் புனிதமா நினைக்கிற கோவிலிலே இப்படி அசிங்கத்தை பண்ணுறோமேன்னு ;


இதை ரெண்டு நாளைக்கு பேசுவாங்களா , அப்புறம் எல்லாம் தூசிதான் .

ராஜவம்சம் சொன்னது…

பக்தி என்று அளைக்கின்ற பெண்களும் குற்றத்திற்கு காரணம் தானே !எந்த மதமானாலும்.

ராவணன் சொன்னது…

//பக்திமார்க்கத்தில், சமயத்தில் முறையற்ற காமம் என்பதற்கு கொடுக்கப்படும் தண்டனைகள் கடுமையானவை என்பதாகவும் அந்தக் கதைகள் புரிய வைக்கப்படுகின்றன//

அப்ப ஐயப்பன் பிறந்தது முறையான காமத்தில்தானா?
பாப்பானின் நீதி தெரியாமல் ஏதாவது எழுதுவதா?
பாப்பான் எது செய்தாலும் அது சரி,மற்றவர்கள் செய்தால் அது பெரிய குற்றம்,அதையும் பாப்பான்களே கூறவேண்டும். இதுதான் பாப்பான் நீதி.

இதை எழுதுவதற்கு ஏன் பாப்பானைப் போன்று சுற்றிவளைக்க வேண்டும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//அப்ப ஐயப்பன் பிறந்தது முறையான காமத்தில்தானா?
பாப்பானின் நீதி தெரியாமல் ஏதாவது எழுதுவதா?
பாப்பான் எது செய்தாலும் அது சரி,மற்றவர்கள் செய்தால் அது பெரிய குற்றம்,அதையும் பாப்பான்களே கூறவேண்டும். இதுதான் பாப்பான் நீதி.//

அது தான் புனிதப்படுத்தப்படும் குற்றம் ! பணிரெண்டு வயது சிறுவன் ஐயப்பனுக்கு கன்னிப் பெண்கள் என்றால் ஆகாதுன்னு வேறச் சொல்கிறார்கள்
:)

கோவி.கண்ணன் சொன்னது…

// Raja said...
//எப்பவுமே தீவிரமாக புலனாய்ந்தால் குற்றவாளிகள் சிக்கிடுவாங்க என்பது குற்றவியல் சித்தாந்தம்//
இது எப்படி இர்குதுன்னா? வாரம் இரண்டு முறை உறவு கொண்டால் எல்லா தம்பதிகளுக்கும் குழந்தை பாக்கியம் வரும் என்பது மாதிரி. கடவுள் விரும்பவில்லை என்றால் ஒன்றும் நடக்காது. இப்போது நீங்கள் இதை படிப்பது உட்பட.

8:15 PM, November 23, 2009
//

ஒருவேளை கள்ள சோடிகளுக்கு அப்படி நடந்தாலும் நடந்துவிடுமே, நாம சொல்வது குற்றவாளிகள் சிக்குவது பற்றி !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//பித்தனின் வாக்கு
அப்படி யார் சொன்னா. இன்னிக்கு சங்கராச்சாரி தண்டனையில் இருந்து தப்பலாம், ஆனா மக்களின் கூசும் பார்வையில் தப்ப முடியுமா?
ஓடிப் போய் வாழ்த்தியவர்களில் இன்று ஒதுங்கிப் போவேரும் உண்டு அல்லவா?
அவர் விட்டாலும் அவர் மனசாட்சி உறங்க விடுமா? தண்டனை என்பது இறைவனின் சன்னிதானத்தில் ஒன்னுதான் தோழரே.
//

பித்தன்ஜி,

அந்த காலத்திலேயே அப்படி ஒரு நம்பிக்கை பாரதியாருக்கே இல்லை, அதனால் தான் மனம் நொந்து 'சூத்திரனுக்கு ஒரு நீதி தண்டச் சோறு....' அதுக்குமேல நீங்களே முடித்துக் கொள்ளுங்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//ராஜவம்சம் said...
பக்தி என்று அளைக்கின்ற பெண்களும் குற்றத்திற்கு காரணம் தானே !எந்த மதமானாலும்.

9:47 PM, November 23, 2009
//

பெண்கள் மட்டும் இல்லிங்க பக்தியின் வழியாகச் சொன்னால் ஆண்களும் ஏமாறுபவர்கள் தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அண்ணே , நீங்களே தலைப்பிலேயே சொல்லிட்டிங்க ; புனித குற்றம் என்று ...

தப்பு பண்ணுறவன் மனிதனா மட்டும் பாருங்க ; அதுல ஏன் மத அடையாளத்தை வைத்து சொரண்டுறீங்க .

தப்பு தப்பு தான் ; வீட்டுல மனைவி இருப்பா , கோவில்ல யாருமே கிடையாது . அதான் மீட்டரைப் போட்டு மேட்டருல்ல சிக்கிட்டாரு .
//

அவன் தப்பு செய்ததைவிட அதை வக்கிரமாக படம் பிடித்து வேறு பார்த்து பார்த்து ரசித்து இருக்கிறான்

கோவி.கண்ணன் சொன்னது…

//கிருஷ்ணமூர்த்தி said...
ம்ம்ம்ம்ம்ம்ம்...புனித குற்றங்கள்!

தலைப்பு சரியில்லையே! இங்கே தமிழ் நாட்டில் நிலவரமே வேறு!

குற்றங்கள் செய்கிறவர்கள் தான் புனிதர் ஆக முடியும் என்று அல்லவா இருக்கிற மாதிரித் தெரிகிறது!
//

அதுவும் சரிதான், நாலு பேருக்கு தெரியாமல் செய்தால் எதுவுமே குற்றம் இல்லை :)

கோவி.கண்ணன் சொன்னது…

//அக்பர் said...
அண்ணா,

மதத்தலைவர்கள் மட்டுமல்ல வசதிபடைத்தவர்கள் அனைவருமே செக்ஸ் சம்பந்தப்பட்ட குற்றங்களில் இருந்து எளிதாக தப்பித்து விடுகின்றனர்.

ஒரே வார்த்தையில் சொல்வதானால் ஆண்கள் இதிலிருந்து வெகு எளிதாக தப்பித்துவிடுகின்றனர், பின்பு சமுதாயத்தில் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை அல்லது அதையே பெருமையாக மற்றவர்களிடம் (எததனை பேரை மடக்குனேன் பார்த்தியா என்று) சொல்கின்றனர். பாதிக்கப்படுவது பெண்கள்தான்.
//

கொடுமை தான்

சிநேகிதன் அக்பர் சொன்னது…

1000 வது இடுகைக்கு முன் வாழ்த்துகள்.

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

1000 ஆயிர‌ம் ந‌ட்ச‌த்திர‌ம் இருந்தாலும் அண்ண‌ணோட‌ 1000 வ‌து ப‌திவுக்கு ஈடாகுமா ..

1000 பதிவுக்கு முன் அனுப‌வ‌ வாழ்த்துக்க‌ள்

WARNING!!! சொன்னது…

காமம் தவறானதல்லவே, அதுவும் மற்ற உண்ர்வுகளை போல சாதரணமானதுதான்.
ஆனால் நமது மக்கள் அதை வெளிப்படுத்தும் விதம் தான் தவறாக உள்ளது. அதற்கு காரணமும் நமது சமுக அமைப்பே எனலாம். காமம் தவறானது எனவும் புனிதர்கள் காம உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் எனவும் நமது சமூக அமைப்புகளும், மதங்களும் ஒரு மாயையை ஏற்படுத்துவதால் இது போன்ற உண்மைகள் வெளிச்சதிற்கு வரும் போது அதிர்ச்சி ஏற்படுவது இயல்பே....

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்