மொழி என்பது பண்பாட்டுக் கூறுகளை உள்ளடக்கியது, இதில் எந்த ஒரு மொழியும் விதி விலக்கு இல்லை, மொழிகளின் அழிவுக்கு அதனை பேசுபவர்களின் பொறுப்பின்மையும், அதன் மீது பூசப்படும் அளவுக்கு மிகுதியான புனிதமும் தான் காரணமாக இருக்க முடியும், ஒரு மொழியின் வளர்ச்சி பற்றி அதனை தாய்மொழியாக பேசுபவர்கள் தவிர்த்து யாரும் அக்கறை கொள்வதில்லை/தேவையுமில்லை, இருந்த போதிலும் தமிழகத்தில் பிறந்தவர்கள், வாழ்ந்தவர்கள் பல்வேறு மாநிலத்தை சார்ந்தவர்கள் நாடுகளைச் சார்ந்தவர்களும் தமிழ் மொழி வளர்ச்சிக்கு பாடுபட்டுள்ளனர்.
இன்றைய நாள்களில் ஆங்கிலம் தவிர்த்து பட்டப்படிப்பின் வழியாக படித்து சோறுபோடும் மொழிகள் அரிது. எனவே தான் ஆங்கிலத்திணிப்பையும் பிறமொழித் திணிப்பையும் ஒப்பிட முடியாது. ஆங்கிலம் தவிர்த்து மூன்றாம் மொழியை கற்றுக் கொள்ளும் பொழுது பேசுபவர் தவிர்த்து கேட்பவருக்கும் பயன் தான். அது ஒரு தகவல் தொடர்பு என்ற அளவில் மட்டுமே பயன் தரும், நமக்கு அன்றாட வாழ்க்கைக்கு பயனாக இருக்கும் ஆங்கிலத்தை எளிமையாகவும் புரியும்படியும் பேச வேண்டும், எழுத வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் ஆங்கிலம் பற்றிய பொதுவான புரிதல் அதனை பேசுபவர்களிடையே இலக்கணம் குன்றாமல் பேசவேண்டும் என்றெல்லாம் அறிவுறுத்துகிறார்கள்.
எந்த ஒரு மொழியும் கால போக்கில் சிதையும் என்பதற்கு ஆங்கிலம் விதிவிலக்கு இல்லை, அதனால் தான் அமெரிக்க ஆங்கிலம், ஆப்ரிக்க ஆங்கிலம், ஆஸ்திரேலிய ஆங்கிலம், இங்கிலாந்து ஆங்கிலம் என்ற வேறுபாடுகள் விளைந்துள்ளது, உலகத்திலேயே ஆங்கிலத்தை மிக எளிமையாக மாற்றி பேசும் வழக்கம் சிங்கப்பூரிலும் அருகே மலேசியாவிலும் உண்டு, சிங்கை ஆங்கிலத்தை சிங்க்லிஸ் என்பார்கள், நாமெல்லாம் சரியாக முறைபடியான ஆங்கிலம் பேசுவதில்லை என்று 'ஸ்பீக் குட் இங்கிலிஸ்' என்ற அரசால் கூட அறிவுறுத்தப்பட்டது, ஆனாலும் நான் அறிந்தவரையில் சிங்கையில் ஆங்கிலத்தில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை என்பது தான்.
பேசும் மொழி எளிதாக இருந்தால் தான் அவை சில ஆண்டுகளில் எல்லோரையும் சென்று அடையும் என்பதற்கு சிங்கையில் பேசப்படும் ஆங்கிலமே நல்ல எடுத்துக்காட்டு. 90 விழுக்காடு சிங்கை ஆங்கிலம் இங்குள்ளவர்களால் பேசப்படுகிறது, வேலை நடைபெறுகிறது, தகவல் பரிமாற்றம் நடைபெறுகிறது, இதற்கு மேல் ஆங்கிலம் பேசுவதால் வெளிநாட்டிலிருந்து வரும் வெள்ளைகாரர்கள் தவிர்த்தும், இங்குள்ளவர்கள் வெளிநாட்டிற்கு சென்றாலும் பயன் என்பதும் தவிர்த்து வேறொன்றும் இல்லை.
'அவன் பேசுற இங்கிலேசைப் பாரு, இதுக்கு பேசமாலே இருக்கலாம்' என்று நக்கல் அடிப்பவர்கள், ஒரு முறை சிங்கப்பூர் வந்தால் ஆங்கிலம் குறித்த அவர்களது மாயையும், எண்ணிய புனிதமும் அடிப்பட்டு போகும். தாய் மொழியில் வினைச்சொற்களையெல்லாம் ஆங்கிலத்தில் சொல்லி 'பண்ணி' த்தமிழ் பேசுபவர்களும் கூட ஆங்கிலத்தில் எவரேனும் ஈஸுக்கு வாஸ் போட்டுவிட்டால் அதற்காக வெள்ளைக்காரனுக்கு அவமானம், மரியாதை இழப்பு ஏற்பட்டுவிட்டது போல் பேசுபவரை எள்ளி நகையாடுகிறார்கள்,
ஆங்கிலமும் பல குறைகளை உள்ள மொழி தான், 26 எழுத்தில் எல்லாவற்றையும் எழுதுகிறேன் என்று பல்வேறு ஊர்பெயர்களை, பெயர் சொற்களை சிதைத்தே எழுதுகிறார்கள். வெள்ளைக்காரனுக்கு மாற்றாக ப்ரெஞ்சுகாரனோ, டச்சுக்காரனோ உலகை ஆளுமைக்குள் கொண்டுவந்திருந்தால் இன்றைக்கு ஆங்கிலத்திற்கு இருக்கும் இடம் ப்ரெஞ்சு அல்லது டச்சுக்கு கிடைத்திருக்கும், மற்றபடி ஆங்கிலம் வானத்தில் இருந்தெல்லாம் குதித்துவிடவில்லை, செம்மை ஆக்குதல் என்கிற பெயரில் ஆங்கில அகராதியில் அன்றாடம் பல மொழிகளைச் சேர்ந்த சொற்கள் சேர்க்கப்பட்டுவருகின்றன, மற்ற மொழி இலக்கணங்களை விட ஆங்கில இலக்கணம் கடினமானது மட்டுமின்றி பல குறைகள் உள்ளதும் கூட. தமிழில் ஆங்கிலத்தைப் போல பல்வேறு மொழிகளில் இருந்து கடன் வாங்கி சேர்த்தால் தமிழ் வளரும் என்று சிலர் உளறுவதும் உண்டு, அதுக்கு தான் ஏற்கனவே ஆங்கிலம் இருக்கிறதே தமிழை ஏன் கெடுக்க வேண்டும் ? பிற மொழி பேசுபவர்களுக்கு பொருளீட்டல் பயனில்லாத எந்த ஒரு மொழியும் அவர்களிடமும் வளர வாய்பே இல்லை. ஒரு தமிழன் இந்தி படித்தாலோ, இந்திகாரன் தமிழ் படித்தாலோ புதிதாக நாம் சேர்த்துக் கொள்ளும் ஒரு சொல்லால் எந்த பயனும் இல்லை, பேச்சுவழக்கிற்கு, மொழி சார்ந்த, மண் சார்ந்த கலைகளுக்கு தேவையான சொற்கள் ஒரு மொழியில் இருந்தாலே அதுவே நிறைவானது.
தமிழைத் தப்பும் தவறுமாக பேசுனாலும் எழுதினாலும், பண்ணித் தமிழ் பேசினாலும் தமிழிக்கு இழுக்கு இல்லை என்பது போன்று தான் ஆங்கிலத்திற்கும், ஆங்கிலம் தப்பும் தவறுமாக பேசுவது ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கும் ஆசானாக இருந்தால் தவிர்த்து மற்றவர்களுக்கு அது குறையோ இழுக்கோ இல்லை.
ஒருகாலத்தில் வடமொழி என்னும் சமசுகிரதம் இந்தியாவெங்கும் வட்டார மொழிகளில் உள்ள சொற்களை உள்வாங்கியும், கலந்தும் மொழிச் சிதைவுக்கும் வழிவகுத்து தமிழில் மணிப்ப்ரவளம் உட்பட கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் ஏற்பட காரணமாக அமைந்தது ஆனால் வரலாற்றையே புரிந்து கொள்ளாதவர்கள் இந்தியா மட்டுமின்றி அனைத்து மொழிகளிலும் வடமொழியில் இருந்து பிறந்தது என்று கதைக்கிறார்கள். இன்றைய ஆங்கிலப் பரவலில் உலகில் பல்வேறு மொழிகள் அழிந்துவருகின்றன, தமிழ் உள்பட பல்வேறு மொழிகள் சிதைந்தும் வருகின்றன, ஆனால் பண்டைய நாட்களைப் போல் இல்லாமல் தற்பொழுது வரலாறுகள் தொகுப்படுவதால் ஒருவேளை ஆங்கிலத்தின் வழியாக பல்வேறு வட்டார / நாடுகள் சார்ந்த ஆங்கில மொழிகள் ஏற்பட்டாலும் ஆங்கிலம் தான் அனைத்து மொழிகளுக்கும் மூலம் என்று சொல்ல முடியாமல் போகும்.
ஆங்கிலம் தவிர்த்து ஏனைய மொழிகள் அழியும் பொழுது வழிபாட்டு மொழி என்னும் சிறப்பை ஆங்கிலம் கைப்பற்றும், பின்னர் ஆங்கிலத்தின் வழியாக ஏற்படும் மொழிகளுக்கு ஆங்கிலம் தான் தேவ மொழி.
ஆங்கிலத்திற்கு தேவையற்ற முதன்மைத்துவம் கொடுத்து அதனை புனிதப்படுத்தாதீர்கள், ஆங்கிலம் தப்பும் தவறுமாக பேசுபவர்களிடம் சரியான சொல்லைச் சொல்லிக் கொடுங்கள், ஒருவர் தப்பும் தவறுமாக ஆங்கிலம் பேசுவது அவரின் தகுதி இழப்பு ஆகிவிடாது, தாய்மொழி சரியாக பிறமொழி கலப்பின்றி பேசப்படுகிறதா என்பது பற்றி பெரிய அக்கறை இல்லாத போது ஆங்கிலம் குறித்த அக்கறையெல்லாம் நமக்கு எதற்கு ? அவையெல்லாம் வெள்ளைக்காரன் கவலை !
12 கருத்துகள்:
அன்பான கோவி,
அருமையான பதிவு. சிறப்பான சிந்தனைக்கு பாராட்டுகள். தமிழர் அனைவரும் இதைப்படித்து, எண்ணிப்பார்த்து, செயல் திறம் பெறவேண்டும் என மிக விரும்புகிறேன்.
அன்புடன்
ராதாகிருஷ்ணன்
//தாய்மொழி சரியாக பிறமொழி கலப்பின்றி பேசப்படுகிறதா என்பது பற்றி பெரிய அக்கறை இல்லாத போது ஆங்கிலம் குறித்த அக்கறையெல்லாம் நமக்கு எதற்கு ? //
சரியா சென்னீர்கள்.
அருமையான பகிர்வு.
வாழ்த்துக்கள்.
//தமிழைத் தப்பும் தவறுமாக பேசுனாலும் எழுதினாலும், பண்ணித் தமிழ் பேசினாலும் தமிழிக்கு இழுக்கு இல்லை என்பது போன்று தான் ஆங்கிலத்திற்கும், ஆங்கிலம் தப்பும் தவறுமாக பேசுவது ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கும் ஆசானாக இருந்தால் தவிர்த்து மற்றவர்களுக்கு அது குறையோ இழுக்கோ இல்லை. //
என்ன தமிழ் இது? என்ன சொல்லவருகிறீர்கள்? தமிழையே குழப்பமாகத்தான் எழதுகிறீர்கள். இல்லையா?
//ஆங்கிலம் தவிர்த்து ஏனைய மொழிகள் அழியும் பொழுது வழிபாட்டு மொழி என்னும் சிறப்பை ஆங்கிலம் கைப்பற்றும், பின்னர் ஆங்கிலத்தின் வழியாக ஏற்படும் மொழிகளுக்கு ஆங்கிலம் தான் தேவ மொழி.
//
இதுவும் எனக்குப்புரியவில்லை. அனைத்து மொழிகளையும் ஆங்கிலம் அழித்தபின்னர் அஃதொன்றுதான் மொழி. அதை தேவமொழி என்பார்களோ?. எப்படி அழிக்கும்? எப்படி தேவமொழியாகும்? சமசுகிருதத்தைத் தேவமொழி என்று சொன்னது பிராமணர்கள்; ஏனெனில் அம்மொழிக்கு இறைவனே தெயவத்தன்மையளித்து, அம்மொழியிலே இறைவனைப்பற்றிச் சொல்லவேண்டுமென்றார்கள். ஆங்கிலத்தைத் தேவமொழியென அஃது ஏதாவது ஒரு மதத்தில் இணைக்கப்பட்டிருக்கவேண்டும். எந்த மதமது?
//ஆங்கிலம் தப்பும் தவறுமாக பேசுபவர்களிடம் சரியான சொல்லைச் சொல்லிக் கொடுங்கள், ஒருவர் தப்பும் தவறுமாக ஆங்கிலம் பேசுவது அவரின் தகுதி இழப்பு ஆகிவிடாது, தாய்மொழி சரியாக பிறமொழி கலப்பின்றி பேசப்படுகிறதா என்பது பற்றி பெரிய அக்கறை இல்லாத போது ஆங்கிலம் குறித்த அக்கறையெல்லாம் நமக்கு எதற்கு ? அவையெல்லாம் வெள்ளைக்காரன் கவலை !//
வெள்ளைக்காரன் கவலையே படமாட்டான். எனவே அவனைப்பற்றி நீங்களேன் கவலைப்படுகிறீர்கள்? ஆங்கிலம் தப்பும் தவறுமாகப்பேசினால் கண்டுகொள்ளாதீர்கள் என்று சொன்னபின், இங்கு
சரியான சொல்லைச் சொல்லிக்கொடுங்கள்" என அறிவுரையேன்? அப்படியே விட்டுவிட வேண்டியதுதானே?
கோவிக்கண்ணனுக்கு ஆங்கிலத்தில் பிரச்சினையுண்டு என்பது எனக்குத்தெரியும். எளிமையான ஆங்கிலத்தை நான் பலமுறை எழுத ஆங்கிலப்புலமையென கிண்டலடித்தை நான் பார்த்ததுண்டு.
கோவி கண்ணன், எளிமையான ஆங்கிலத்தை எழுதத் தெரிந்துகொள்ளுங்கள் என்பது ஆங்கிலத்தைப் புனிதப்படுத்துதலன்று. ஆங்கிலத்தைப் பழகுமொழியாக தம் தாய்மொழியோடு சேர்த்துக்கொண்டு பயன்படுத்தும் சமூகம் அம்மொழியை எளிமையாக எளிதினால் அனைவருக்குமே நன்று என்பதற்காகத்தான் அவ்விண்ணப்பம்.
ஆங்கிலம் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் பிரச்சினை தீர்ந்துவிடும். அஃதோடு தமிழையும் தெளிவாக எளிமையாக எழுதக்கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் பதிவுகளைப்படிப்போருக்கு உதவும்.
//தாய்மொழி சரியாக பிறமொழி கலப்பின்றி பேசப்படுகிறதா என்பது பற்றி பெரிய அக்கறை இல்லாத போது ஆங்கிலம் குறித்த அக்கறையெல்லாம் நமக்கு எதற்கு ? //
இதை எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற தோரணையில் எழுதமுடியாது. தமிழைப் பிழையாக எழதினாலோ பேசினாலோ கேள்வி கேட்பவரே தமிழகத்தில் இல்லை. ஊடகங்கள் - பெரிய நாளிதழ்கள் கூட - கொட்டை எழுத்துக்களில் பிழைகள் போட்டுத்தான் அவை தலையங்கள் எழுதுகின்றன. ஒருமை பன்மை விகுதிகள்; சந்திகள், வல்லெழுத்து மிகும், மிகா இடங்களைப்பற்றி அவை கருத்தில் கொள்ளா. எப்படியும் எழுதுவார்கள். கேட்பாரில்லை.
அதே வேளையில் தி ஹிந்துவிலோ இந்தியன் எக்ஸ்பிரசிலோ இஸ் இடத்தில் வாஸ் போட்டு எழுதவே மாட்டார்கள். ஏனென்றால் அஃது ஆங்கிலமன்று. நாங்கள் பட்லர் இங்கிலீசில் பத்திரிக்கை நடாத்தவில்லையென்பார்கள். எடிட்டருக்கு நீங்கள் ஒரு கடிதம் தப்பும் தவறுமாக மொழிப்பிழை போட்டு அனுப்பினால், கருத்துச் சுவையாக இருந்தால், உங்கள் பிழைகளைத்தையும் திருத்தித்தான் போடுவார்கள்.
இப்படி ஆங்கில ஊடகங்களும் ஆங்கிலப்பாடங்களும் இருப்பதற்கு காரணமே செய்வனத் திருந்தச்செய் என ஆங்கிலேயன் பண்பாடுதான் அவன் மொழியைப்பயன்படுத்தும்போது மற்றவரிடமும் அது தாவி உட்கார்ந்து விடுகிறது.
எனவேதான் ஆங்கிலத்தைப்பிழை போட்டு எழுதுவதை ஒரு கல்லாதவன் செயலாகப்பார்க்கிறார்கள். தமிழில் பிழைபோட்டு எழுதினால் அது பிழையா எனத்தெரிந்தோர் ஒரு சிலரே. எனவே ஆங்கிலம் வேறு தளம்; தமிழ் வேறு தளமாக தங்களைச் செலுத்துகின்றன. மனிதர்களைக்குறை சொல்லாதீர். அவர்கள் தமக்கு எந்த நாகரிகம் கற்றுக்கொடுக்கப்பட்டதோ அதன்படிதான் செல்வர்.
Good grammar is good manners என்பது ஆங்கிலப்பண்பாடு. ஒரு பண்புள்ள சமூகத்தில் செல்லும்போது எப்படி உன் உடை சரியாக இருக்கவேண்டுமென்று நினைக்கிறாயோ அப்படியே நீ பேசும் எழுதும் மொழியும் இருக்கவேண்டுமெனப்துதான் இப்பழமொழியின் கருத்து. இப்படி நடையுடை பாவனையோடு தமிழ் இணைக்கப்படவில்லை. ஆக, இருமொழிப்பண்பாடுகளின்படிதான் மக்களும் இருப்பார்கள்.
ஆங்கில இலக்கணம் கடினம்; பிழையில்லாமல் எழுத முடியாதென்றால், ஆங்கிலமே இருக்க வேண்டாமென முடிவெடுப்பதுதான் சரி. அதைத்தான் தமிழக வக்கீல்கள், தமிழே நீதிமன்ற மொழியாக வேண்டும்' என போராட்டம் நடாத்திவருகிறார்கள். ஆங்கிலத்தை விரட்டப்பாருங்கள். இருக்கும்வரை அதைப்பிழையில்லாமல் எழுதக்கற்றுக்கொள்ளுங்கள்.
நல்ல தமிழ் அழகு; நல்ல ஆங்கிலமும் அழகு - அனுபவித்துப்பாருங்கள் தெரியும்.
ஆங்கிலத்தை பிழையின்றி பேச எடுத்துக் கொள்ளும் அக்கறையை தமிழுக்கும் எடுத்துக் கொண்டால் நல்லது .
//இதுவும் எனக்குப்புரியவில்லை. அனைத்து மொழிகளையும் ஆங்கிலம் அழித்தபின்னர் அஃதொன்றுதான் மொழி. அதை தேவமொழி என்பார்களோ?. எப்படி அழிக்கும்? எப்படி தேவமொழியாகும்? சமசுகிருதத்தைத் தேவமொழி என்று சொன்னது பிராமணர்கள்; ஏனெனில் அம்மொழிக்கு இறைவனே தெயவத்தன்மையளித்து, அம்மொழியிலே இறைவனைப்பற்றிச் சொல்லவேண்டுமென்றார்கள். ஆங்கிலத்தைத் தேவமொழியென அஃது ஏதாவது ஒரு மதத்தில் இணைக்கப்பட்டிருக்கவேண்டும். எந்த மதமது?//
ஆங்கிலம் பேசுவது உயர்ந்தோர் அடையாளம் என்று ஆகிவிட்டது இல்லையா ? இரண்டு தமிழர்கள் படித்தவர் என்கிற பெயரில் தமிழைத் தவிர்த்து ஆங்கிலத்தில் உரையாடுவதை எங்கும் பார்க்க முடிகிறது. வீட்டில் பிள்ளைகளிடம் கூட ஆங்கிலத்தில் தான் பேசுகிறார்கள். ஆங்கிலம் ஏற்கனவே கிறித்துவர்களின் தேவ மொழியாகத்தான் தேவலயங்களில் பயன்படுத்தப்படுகிறது, கத்தோலிக்கர்கள் தவிர்த்து தமிழில் வழிபடும் கிறித்துவர்கள் குறைவு.
ஏற்கனவே புராண இதிகாச பாத்திரங்கள் ஆங்கிலம் பேசி கார்டூனாக வந்து கொண்டு தான் இருக்கின்றனர், நாம் மெல்ல மெல்ல ஆங்கிலத்தை தாய்மொழியாக்கிக் கொள்ளும் நிலைக்கு மாறிக் கொண்டுவருகிறோம், இதற்கு ஊடகங்களும், பெற்றோர்களும் காரணமாக அமைந்த்துவிடுகிறார்கள்
//வெள்ளைக்காரன் கவலையே படமாட்டான். எனவே அவனைப்பற்றி நீங்களேன் கவலைப்படுகிறீர்கள்? ஆங்கிலம் தப்பும் தவறுமாகப்பேசினால் கண்டுகொள்ளாதீர்கள் என்று சொன்னபின், இங்கு
சரியான சொல்லைச் சொல்லிக்கொடுங்கள்" என அறிவுரையேன்? அப்படியே விட்டுவிட வேண்டியதுதானே?//
ஆங்கிலத்தில் ஓரளவு திறன்பெற்றவர்கள் பலர் எவரேனும் தப்பும் தவறுமாக பேசும் பொழுது அதை சரி செய்ய எந்த ஊக்கமும் கொடுக்காமல் இவன் ஆங்கிலத்தை கொலை செய்கிறான், தெரியாத எதுக்கு பேச 'ட்ரை' பண்ணனும், இதுக்கு பேசாமல் இருக்கலாமே என்று ஏளனம் செய்வதை நீங்கள் பார்த்ததே இல்லையா ?
//கோவிக்கண்ணனுக்கு ஆங்கிலத்தில் பிரச்சினையுண்டு என்பது எனக்குத்தெரியும். //
எனக்கு தெரிந்த ஆங்கிலத்தை வைத்து சிங்கையில் 16 ஆண்டுகள் ஓட்டிவிட்டேன், பல நாடுகளுக்கும் சென்று வந்துவிட்டேன், எனக்கு ஆங்கிலத்தில் புலமை இல்லை என்று எந்த இடறும் இடறவில்லை.
//Good grammar is good manners என்பது ஆங்கிலப்பண்பாடு. ஒரு பண்புள்ள சமூகத்தில் செல்லும்போது எப்படி உன் உடை சரியாக இருக்கவேண்டுமென்று நினைக்கிறாயோ அப்படியே நீ பேசும் எழுதும் மொழியும் இருக்கவேண்டுமெனப்துதான் இப்பழமொழியின் கருத்து.//
இருக்கட்டும் இங்கிலாந்தில் பிச்சைக்காரனும் இலக்கணத்துடன் தான் பேசுவான் ஏனென்றால் அது அவனது தாய்மொழி, மாற்று மொழியைப் இலக்கணத்துடன் பேசுவது ஒருவரின் மொழி ஆற்றல் என்பது மட்டுமே அதனைத் தவிர்த்து அவ்வாறு பேசாமல் சற்று பிழையோடு பேசுபவர்களின் செயலை ஏன் அறுவெறுப்பாக பார்க்க வேண்டும் ?
//ஆங்கில இலக்கணம் கடினம்; பிழையில்லாமல் எழுத முடியாதென்றால், ஆங்கிலமே இருக்க வேண்டாமென முடிவெடுப்பதுதான் சரி.//
ஆங்கிலமோ, பிறமொழிகளோ கூடாது என்று நான் என்றுமே வழியுறுத்தியதில்லை, எந்த ஒரு மொழியைக் கற்றுக் கொள்வதிலும் சிறுபயனேனும் உண்டு, ஆங்கிலம் வேலை வாய்ப்பைக் கொடுக்கும் மொழி அதனை கற்றுக் கொள்ளக் கூடாது என்பவன் மடையனாக மட்டுமே இருக்க முடியும், ஆனால் அதே வேளையில் வட இந்தியாவில் பெருவாரியான மக்கள் இந்தி பேசுகிறார்கள், என்றோ ஒரு நாள் டெல்லிக்கு வேலைக்கு சென்றால் பயன்படலாம் என்று கூறி எல்லோருக்குமே அவை கற்றுக் கொடுக்க வேண்டும் என்கிற இந்தி திணித்தலை நான் பலமாகவே எதிர்த்து வருகிறேன், இங்கு சிங்கையில் 70 விழுக்காடு மாண்டரின் மொழி பேசுவர்கள் இருந்தும் அதனை பிற இனத்தவர் மீது திணித்து கட்டாய பாடமாக்கவில்லை.
//நாம் மெல்ல மெல்ல ஆங்கிலத்தை தாய்மொழியாக்கிக் கொள்ளும் நிலைக்கு மாறிக் கொண்டுவருகிறோம், இதற்கு ஊடகங்களும், பெற்றோர்களும் காரணமாக அமைந்த்துவிடுகிறார்கள்//
மிக சரியாக சொன்னீர்கள்.முதல் காரணம் பெற்றோர்கள்.பையனுக்கு தமிழ் வராது என்றாலே பெருமை.ஊடகங்கலென்றால் தமிழக டிவி சானல்கள் தான்.
Off the topic, By any chance, do you work near Mapletree Business District?
எந்த மொழியானாலும் அதை பிழையில்லாமல் எழுத பேச பழகிக்கொள்வது நல்லது. நானும் மலேசியத் தமிழர்களின் ஆங்கிலத்தை கேட்டிருக்கிறேன். அவர்கள் சில சொற்களை மாற்றி பேசுகிறார்களே தவிர நீங்கள் சொல்வதுபோல் wasசை isஐ தவறாக பேசி கேட்டதில்லை. பேச்சு ஆங்கிலம் என்பது பேச பேசத்தான் வரும். ஆரம்ப காலத்தில் - அதாவது என் பேத்தியைப் போல் - தப்பும் தவறுமாக பேசுவது சகஜம்தான். கல்லூரி மாணவ/மாணவிகள் தவறாக பேசுவதில்லை. அவர்கள் தங்களுடைய தேவைக்கேற்ப மாற்றி அமைத்துக்கொள்கிறார்கள். மற்றவர்கள் அதாவது அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் ஆங்கிலத்தை தவறாக எழுதுவதும் பேசுவதும் சரியில்லைதான். இங்கு தம்ழை தாய் மொழியக கொள்ளாதவர்கள், குறிப்பாக மலையாளிகள், எத்தனை ஆண்டுகள் இங்கு வசித்தாலும் தமிழை கொலை செய்வார்கள். வட இந்தியர்களும் அப்படித்தான். இவர்களை பொறுத்துக்கொண்டு செல்வதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் இதில் தவறேதும் இல்லை என்று நியாயப்படுத்திவிட முடியாதல்லவா? அதுபோலத்தான் ஆங்கிலத்தை தவறாக பயன்படுத்துவதும்.
கருத்துரையிடுக