பின்பற்றுபவர்கள்

28 ஆகஸ்ட், 2009

ஜெய்'ஹிந்தி'புரம் !

நண்பர் பீர்/Peer, இந்தி கற்பது பாவச் செயலா ? என்று கேட்டு இருக்கிறார். இந்தி மட்டுமல்ல எந்த ஒரு மொழியையும் கற்பது பாவச் செயலே அல்ல.

//பணிநிமிர்த்தமாகவோ அல்லது சுற்றுலா போன்ற இதர காரணங்களுக்காகவோ தன் தாய் மாநிலத்திற்கு வெளியே செல்லும், எல்லையில் வரையப்பட்டிருக்கும் ஒரு கோட்டைத்தாண்டி செல்லும் ஒருவர் தாய் மொழி தவிர வேறு மொழி தெரியாத போது தான் அனுபவிக்கும் சிரமங்களை சொல்லித்தெரிய வேண்டியதில்லை. 1997ல் மும்பை சென்றபோது நான் அனுபவித்திருக்கிறேன். நம் அண்டை மாநிலமான கேரளா செல்லும் போது மலையாளமும், அதேபோல ஆந்திரா, கர்நாடகா செல்லும் போது தெலுகும், கனடமும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது சற்று சிரமமே. ஆந்திராவை தாண்டி சென்று விட்டால், ஹிந்தி பொதுமொழியாக இருக்கிறது. ஹிந்தி என்ற ஒரு மொழி பேச தெரிந்தால் பெரும்பாலான வட மாநிலங்களில் சிரமமின்றி தம் தேவையை நிறைவேற்றிக்கொள்ளலாம். ஹிந்தி என்ற, இந்தியாவில் பெரும்பாலானோர் பேச்சு மொழியாக கொண்டிருக்கும் மொழியை வெளி மாநிலங்களோடு தொடர்பு இருக்கும் அனைவரும் பேச கற்றுகொள்ளுதல், அவரவர் வாழ்வில் நன்மைபயக்கும். நம் அண்டை மாநிலத்தவர் எப்போதோ இதை ஏற்றுக்கொண்டு விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.//

இவர் குறிப்பிடும் பணி நிமித்தமாக அண்டை நாடுகளுக்கு செல்பவர்கள் 5 விழுக்காடு இருக்கலாம், இதில் படித்தவன் முதல் பாமரன் அனைவரும் அடங்கும். பாமரன் எவனும் நான் இந்திப் படிக்காததால் பிற மாநிலங்களில் கூலி வேலை செய்யமுடிவதில்லை என்று புலம்புவது கிடையாது, தட்டு தடுமாறி மூன்றே மாதங்களில் எந்த மாநிலத்திற்கு செல்கிறார்களோ அந்த மாநில மொழியைக் கற்றுக் கொண்டு சரளமாக பேசுகிறார்கள். படித்தவர்களுக்கு ஆங்கிலம் தெரிவதால் யாரும் இடற்படுவது போல் தெரியவில்லை. இந்திப்படங்கள் புரியவில்லை, இந்தி பெண்களுடன் பேச முடியவில்லை, போன்ற அற்ப காரணங்களுக்காக பிற மாநிலங்களுக்கு செல்லும் 5 விழுக்காட்டினரிலும் ஒரு சிலருக்காக ஏற்கனவே இருக்கும் கல்வி பாடச் சுமையில் மேலும் ஒன்றாக இந்தியையும் 95 விழுக்காட்டினர் படிக்கலாம், படிக்க வேண்டும் என்று சொல்வதில் ஏதேனும் ஞாயம் உண்டா ? அப்படியும் விரும்பிப் படிபவர்களை யாரேனும் கையை பிடித்து தடுக்கிறார்களா ?

இந்தி பிராச்சார சபாவில் 3 வயது முதல் 100 வயது வரை உடையவர்களுக்கு மாதம் 50 ரூபாயில் இந்தி சொல்லிக் கொடுக்கிறார்கள், நான் கூட ஒரு 3 மாதம் சென்று இருக்கிறேன். அதைப் படிக்கலாமே. அதைத் தடுப்பவர்கள் ஏவரேனும் இருக்கிறார்களா ? பெருவாரியான மக்கள் பேசும் மொழியை ஒருவர் தெரிந்து கொண்டால் அம்மக்களோடு கலந்து உறவாட, உரையாட ஏதுவாக இருக்குமாம். இலங்கையில் சிங்களம் தெரியாத தமிழர்கள், தெரிந்த தமிழர்கள் அனைவரும் ஒன்றாகத்தான் நடத்தப்படுகிறார்கள். இந்தியில் சிறப்பாக பாடிய வாணி ஜெயராமுக்கு வாய்ப்புக் கொடுத்தால் நான் பாடமாட்டேன் என்று மிரட்டி வாணி ஜெயராமை சென்னைக்கே திருப்பிய அனுப்ப செய்தவர்தான் இந்தி குயில் (பேரை வேறு சொல்லனுமா ?) இந்தியில் நன்றாக பேசி நடிக்க முடியும் என்று நிரூபணம் செய்த கமலஹாசன் முதல் அனைத்து தென்மாநில நடிகர் அனைவ்ருமே பிடறி தெறிக்க ஓடும்படி துறத்தப்பட்டனர். சாருக்கான் முதல் இந்தி வாலாக்களின் படங்கள் அனைத்து மாநிலங்களிலும் நன்றாக ஒடும் என்பதைத் தவிர்த்து அனைத்து மாநிலங்களுக்கும் ஏதேனும் பொதுப் பயன் இருக்கிறதா ?

கேரளாவில் 50 விழுக்காட்டினர் வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் செல்கிறார்கள், அப்படிச் செல்லும் போது அவர்கள் இடற்படக் கூடாது எனவே கேரள மாநிலத்தினர் அனைவருக்கும் அரபி கட்டாயப் பாடம் ஆக்கவேண்டும் என்று கேரளா முடிவு செய்தால் அதற்கு இந்தி இடிதாங்கி மைய அரசு அதனை போற்றி பாராட்டி, உதவியும் செய்யுமா ? மொழி அரசியல் தெரியாதவர்கள் தாம் ஒரு சூழலில் இடற்பட்டோம் என்பதை பொதுப் பிரச்சனையாக்குவதில் ஏதேனும் பொது நலம் இருக்கிறதா ? மொழி வலியுறுத்தல் என்பது ஆளுமையின் அடையாளம். மொழியை வைத்து பெரும்பாண்மை சிறுபாண்மை அரசியல் மிகக் கேவலமான பிற்போக்குத் தனம். பெரும்பாண்மையினர் பேசும் மொழி என்று ஒரு மொழியை பொதுப்படுத்தி பிறமொழிகள் பயனற்றவையாக ஒதுக்கும் நிலையும், அழிக்கும் நிலையும் வந்தால் மொழிப் பெரும்பாண்மை ஞாயம் என்றும் அதைப் பொதுப்படுத்த வேண்டும் என்போர் பெரும்பாண்மை புயலால் அழியும் மொழிகளை சீர்படுத்த என்ன நடவடிக்கை எடுப்பார்கள் ? ஒதுங்கிக் கொண்டு... அது சிறுபான்மை மொழிப் பேசுபவர்களின் தலையெழுத்து, அவர்கள் மொழியை பாதுகாப்பது அவர்களின் செயல், அதை செய்யத் தவறிவிட்டார்கள் என்று சொல்லுவார்கள் தானே!

அண்டை மாநிலங்கள் ஏற்றுக் கொண்டுவிட்டதாகச் சொல்கிறார். மும்பையில் மஹாராஷ்டிர மொழியை இந்தி அழித்துவிட்டது என்று அண்மையில் கலவரங்கள் வெடித்தது நண்பருக்கு தெரியாதா ? அல்லது பிற மாநிலக்காரர்கள் சுரணை குறைவாக இருந்து விழித்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள் என்பதற்காக இப்படி குறிப்பிடுகிறாரா என்று தெரியவில்லை. கர்நாடகாவில் இந்திக்கு எதிராக கலகக் குரல்கள் எப்போது தொடங்கிவிட்டன.

//தமிழ்நாட்டிற்கு வரும் வெளி மாநிலத்தவரும் தமிழ் பேசுவது மகிழ்ச்சியளிப்பது போலவே, சிங்கப்பூர், மலேசியா பொன்ற நாடுகளில் தமிழ் இரண்டாம் மொழியாக இருப்பதால், அங்குவரும் மற்ற இந்திய மாநிலத்தவர் / நாட்டவர் தமிழ் கற்றுக்கொண்டு பேச முயற்சிப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது.//

இது இவருடைய கற்பனை மட்டுமே, ஆனால் இப்படி பிற மாநிலத்தினர் தமிழை பேச முற்பட முயற்சிப்பது ஒரு சிலர் மட்டுமே. அண்மையில் வட இந்தியர் ஒருவருக்கு செல்பேசியில் தமிழ் ரிங்க் டோனை செல்பேசி நிறுவனம் இணைத்ததற்காக அவர் வானத்துக்கும் பூமிக்கும் குதித்ததை ஜெய் ஹிந்திபுரம் தம்பி அறிந்ததில்லை என்று நினைக்கிறேன். அதன் சுட்டி இங்கே இருக்கிறது, அதில் இருக்கும் பின்னூட்டங்களை கவனமாகப் படிக்கவும்.

பிறமாநிலங்களுக்கு வேலைக்குச் செல்லும் 5 விழுக்காட்டினர் நன்மை பெருபவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக மீதம் 95 விழுக்காட்டினருக்கு அது கட்டாயப்பாடமாக்குவதால் 95 விழுக்காட்டினர் பெரும் நன்மைகள் என்ன என்பதை ஜெய்ஹிந்திபுரம் தம்பி பட்டியல் இட்டால் எனது விவாதங்களை தொடருவேன். ஏற்கனவே பொது மொழி தகுதி, இந்தி கட்டாயம் என்று அறியாமையால் பிதற்றுபவர்களுக்காக நான் பல்வேறு பதிவுகளை எழுதி இருக்கிறேன்.

இந்தி, தேசியமொழி வாதம் ஆகியவை குறித்து நான் எழுதிய பிற பதிவுகள்:

அரசியல்வாதிகள் இந்தி படிக்கவிடாமல் செய்துவிட்டனர் !

மொழிவாரி மாநிலங்களும், இந்தி(ய) தேசியவாத பம்மாத்தும் !

இந்தி யா ?

நா.கண்ணன் ஐயாவின் - "நாங்கள் ஒரு தலைமுறை பாழாய்ப்போனோம்."

இந்தியாவின் பொது மொழித் தகுதி ! ஆங்கிலம் ? இந்தி ?

23 கருத்துகள்:

அப்பாவி முரு சொன்னது…

அண்ணன் அமைச்சர் ஹிந்தி தெரியாததால வடமாநில பத்ரிகைகள் கிண்டல் பண்ணுதுன்னு அழுதுகிட்டே அப்பாட்ட வந்து கம்ப்ளைண்ட் பண்ணுராறாமே

:((

கோவி.கண்ணன் சொன்னது…

// அப்பாவி முரு said...

அண்ணன் அமைச்சர் ஹிந்தி தெரியாததால வடமாநில பத்ரிகைகள் கிண்டல் பண்ணுதுன்னு அழுதுகிட்டே அப்பாட்ட வந்து கம்ப்ளைண்ட் பண்ணுராறாமே

:((//

ஆகா, அவருதான் உங்களுக்கு ஆஸ்தான அரசியல்வாதியா தெரியாமல் போச்சே.

:)

புருனோ Bruno சொன்னது…

பாஸ்

http://jaihindpuram.blogspot.com/2009/08/blog-post_28.html மறுமொழி எழுதியுள்ளேன் !!

கோவி.கண்ணன் சொன்னது…

//புருனோ Bruno said...

பாஸ்

http://jaihindpuram.blogspot.com/2009/08/blog-post_28.html மறுமொழி எழுதியுள்ளேன் !!//

புருனோ மிக்க நன்றி,

அங்கே நீங்கள் புகுந்து விளையாடுவது ரசித்தேன்.

அவருக்கு வரிக்கு வரி பதில் எழுத அலுப்பாக இருக்கிறது, அவர் புரிந்து கொண்டுள்ள அனைத்தும் பிறரும் புரிந்து கொண்டுள்ளவையே, அவற்றிற்கான மாற்றுக்கருத்துகளை நான் பல்வேறு பதிவுகளில் எழுதி இருக்கிறேன்.

கிடுகுவேலி சொன்னது…

மொழி...மொழி....மொழி...மிகக் கொடுமையான ஆயுதம். இதை கையில் எடுப்பவர்கள் கவனமாக கையாள வேண்டும். தவறினால் ஈழமக்கள் சந்தித்த துன்ப துயரங்களை சந்திக்க வேண்டும். 1956 இல் சிறிலங்காவில் கொண்டு வரப்பட்ட தனிச்சிங்கள சட்டம் முதலாவது அடியாக தமிழர் மீது விழுந்தது. ஒரு மொழி இரு நாடு. அல்லது இரு மொழி ஒரு நாடு. இதுதான் பிரச்சினை. ஆட்சியாளர்கள் சாதிக்க வேண்டும் என்று சகட்டு மேனிக்கு ஏதாவது செய்ய நினைத்தால் அது அவர்களுக்கு மட்டுமல்ல முழுநாட்டுக்கும் அழிவைத் தேடித்தரும்.

பீர் | Peer சொன்னது…

//புருனோ Bruno said...

பாஸ்

http://jaihindpuram.blogspot.com/2009/08/blog-post_28.html மறுமொழி எழுதியுள்ளேன் !!//

டாக்டர் ஒரு சின்ன திருத்தம், மறுமொழிகள் ன்னு சொல்லுங்க :)

இன்னிக்கி நானா... அவ்வ்வ்வ்...

பித்தனின் வாக்கு சொன்னது…

nalla katturai, anal oruvar viruppattu kathukollam but thinippu enbathu oru sumaiyaka amaiyum, but namma pira manilankalai pol hindhi accept panni irunthal, matha manilankalai vida innamum munari iruppom enbathu enn apiprayam.

appuram thanks (ethukkuna ithum parpana sathinu solli rajajiyum mathavangalaiyum thitta maranthutinga)

கோவி.கண்ணன் சொன்னது…

//PITTHAN said...

nalla katturai, anal oruvar viruppattu kathukollam but thinippu enbathu oru sumaiyaka amaiyum, but namma pira manilankalai pol hindhi accept panni irunthal, matha manilankalai vida innamum munari iruppom enbathu enn apiprayam.

appuram thanks (ethukkuna ithum parpana sathinu solli rajajiyum mathavangalaiyum thitta maranthutinga)/

பித்தன்ஜி,

இந்தியை வைத்து/சேர்த்துக் கொண்ட பிற மாநிலங்களுக்கு என்ன கிடைத்தது என்று தெரிவித்தால் நல்ல இருக்கும். நரசிம்மராவ் தவிர்த்து யாருக்கும் பிரதமர் வாய்ப்பு கூட கிடைக்கல, அதையும் காத்துக்கொள்ள அவர் என்ன போராடினார் என்பது அனைவருக்குமே தெரியும்.கவுடாவை யாரும் விரும்பி பிரதமராக தேர்ந்தெடுக்கவில்லை. இந்தி தெரிந்தால் தான் தென்னிந்தியர்கள் பிரதமர் ஆக முடியும் என்றால் கேரள, ஆந்திர, கருநாடக மாநிலத்தில் இருந்து எவரேனும் ஆகி இருக்க முடியும், அதுக்கும் எந்த வாய்ப்பும் கிடையாது.

அடகு கடை சேட்டு தமிழில் பேசி சிரமப்படக்கூடாதுன்னு நாமெல்லாம் இந்தி கத்துக்கனுமா ? என்ன நன்மைன்னு சொல்லுங்க, பிறகு பிற மாநிலம் இந்தி கற்றுக் கொண்டதால் தனிப்பட்டு என்ன வளர்ச்சி பெற்றிருக்கிறது என்று சொல்லுங்க.

நீங்கள் ஏன் பார்பனர்கள் பற்றிய சிந்தனைகளிலேயே இருக்கிறீர்கள் ? பார்பனருக்கு கொம்பு முளைத்திருக்கிறது என்று நீங்கள் சொன்னால் நான் எதாவது மறுமொழி சொல்ல முயற்சிப்பேன். :) எனக்கு எப்போதும் பார்பனர்கள் பற்றி நினைப்பு கிடையாது. நீங்களும் (சுயம்) மறக்க முயற்சி செய்யுங்க.

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

முனைவர் நா. கண்ணனின் ஒரு பதிவைச் சுட்டி நீங்கள் இட்ட இடுகையை இப்போது படித்தேன்.
அன்றைக்கே நா. கண்ணன் அவர்கள் தெளிவான பதில் சொல்லியிருக்கிறாரே?!

நினைவு படுத்திக் கொள்வதற்காக:
/கோவி.கண்ணன்:

எனக்கு இந்தி தெரியாது. அதனால் பாழாய்ப்போனோம் என்று சொல்லவில்லை. எனக்குத் தெலுங்கு கூடத்தான் தெரியாது :-) ஆனால், கற்றுக் கொடுக்கப்பட்ட ஒரு மொழி தடை பட்டுப் போனது. இதன் அரசியலை விட்டு ஒரு மொழி அறிவின் பயன்கள் என்ற காரணத்தால் இதை நோக்கவும். வெளி நாட்டில் வதிக்கும் 90% இந்தியர்களுக்கு இந்தி புரிகிறது. இவர்கள் அனைவரும் உத்திரப்பிரதேசம் அல்ல. ஆனால், நம்மால் மட்டும் இக்கூட்டங்களில் சங்கோஜமின்றிக் கலக்க முடியவில்லை. அவர்களுடன் சேர்ந்து நிகழ்ச்சி நடத்த முடியவில்லை. தமிழ் நாடு மட்டும் தனித்தீவாக நிற்கிறது. எனவே, நான் இந்தியத் தமிழ்நாட்டிற்கு இந்தி மீண்டும் சொல்லிக் கொடுக்க வேண்டுமென்ற பெரிய அளவில் பேசவில்லை. வெளிநாடு வருபவர்கள் தங்கள் ஆங்கிலப் புலமையை கூர் தீட்டிக் கொள்ளும் போது கொஞ்சம் இந்தியும் கற்றுக் கொண்டால் நலம் என்று சொல்ல வருகிறேன்.

மற்றபடி, இந்தித் திணிப்பு என்பதில் எக்காலத்திலும் உடன்பட்டவனில்லை. தண்டி யாத்திரை சரித்திரம் ஆனது போல் இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொண்ட தியாகி :-) என்று சொல்லிக் கொள்ளலாம்தான்!/

முனைவர் நா கண்ணன் போல 1965 ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் நானுமே கூட நேரடியாகப் பங்கு கொண்டவன், அதற்கு முன்னாலும் பின்னாலும் என்ன நடந்தது என்பதையும் அறிந்தவன்!

அனுபவித்து அறிந்ததைச் சொல்கிறோம்!

கோவி.கண்ணன் சொன்னது…

//முனைவர் நா கண்ணன் போல 1965 ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் நானுமே கூட நேரடியாகப் பங்கு கொண்டவன், அதற்கு முன்னாலும் பின்னாலும் என்ன நடந்தது என்பதையும் அறிந்தவன்!

அனுபவித்து அறிந்ததைச் சொல்கிறோம்!//

இந்தி தெரியாததால் தமிழகம் எந்த அளவில் பின் தங்கி உள்ளது என்பதையும், ஏற்றுக் கொண்ட மாநிலங்கள் பெற்ற வளர்சியையும் பட்டியல் இட்டு பேசினால் நன்றாக இருக்கும்.

திரும்பவும் சொல்கிறேன். ஒரு 5 விழுக்காட்டினருக்கு பயனாக இருக்கிறது என்பதற்காக 95 விழுக்காட்டினருக்கு மேலும் ஒரு பாட சுமையாக்குவதில் உடன்பாடு இல்லை. இருக்கிறது புத்தக மூட்டை போதாது என்று எதற்கு இந்தியையும் சுமக்க வேண்டும் ? இரண்டாம் மொழியாக இந்திக்காரர்களுக்கு ஆங்கிலம் கற்பதில் என்ன தவறு ?

ஆங்கிலம் இரண்டாம் மொழியாக படிக்கும் ஒரே காரணத்தினால் சிங்கப்பூருக்கும், மலேசியாவிற்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் கிடைத்து அந்நாடுகள் வளர்ந்த நாடுகள் ஆனதை வீட ஆங்கிலக் கல்வியின் தேவை காட்ட உதாரணம் தேவை இல்லை. இந்தியை பொது மொழியாக்குவதால் என்ன பயன் ? வேலை வாய்புகள் இந்தியை பொது மொழியாக்குவதால் யாருக்கு கிடைக்கும் ?

இந்தியை யாரும் படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை, எல்லோருக்கும் கட்டாயம் என்கிற பொதுப்படுத்துதல் தவறு என்று தான் நானும் பிறரும் சொல்கிறோம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//கற்றுக் கொடுக்கப்பட்ட ஒரு மொழி தடை பட்டுப் போனது. இதன் அரசியலை விட்டு ஒரு மொழி அறிவின் பயன்கள் என்ற காரணத்தால் இதை நோக்கவும். //

கற்றுக் கொடுக்கப்பட்ட - என்றால் என்ன பொருள் ?, அதை ஏன் திணிக்கப்பட்ட ஒரு மொழி என்று புரிந்து கொள்ள முடியவில்லை, எந்த நோக்கிற்காக கற்றுக் கொடுக்கப்பட்டது ?

இந்தியால் மூடப்பட்ட பிற மாநில மொழிகளின் பள்ளிகள் திறந்து மீண்டும் செயல்பட இந்தி அபிமானிகள் என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள் ?

கிருஷ்ணமூர்த்தி சார்,

மருத்துவம் படிக்க சம்ஸ்கிரதத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் கூட 1945க்கு முன்பு இருந்ததாம். அப்படிப் பட்ட விதிமுறைகளால் பலன் அடைபவர்கள் யார் ? பிறரும் பலனடைய வேண்டும் என்றால் சமஸ்கிரதம் அவர்களும் படிக்க வேண்டும் என்கிற உள்நோக்கமும், சமஸ்கிரதமயமாக்கள் என்கிற நோக்கமும் அந்த விதி முறைகளில் இருந்தது இல்லையா ?

வெளி நாட்டில் நான் ஏன் இந்திக்காரனிடம் இந்தியில் பேச வேண்டும் ? அவன் குப்பை கொட்ட பயன்படுத்தும் அதே ஆங்கிலத்தில் நான் பேசுவதால் என்ன குறை ? அவனுக்கு தமிழ் தெரியாது, எனக்கு இந்தி தெரியாது, ஏற்கனவே இருவருக்கும் பொது மொழியாக ஆங்கிலம் இருக்கு மற்ற நாட்டுகாரர்களிடமும் அவன் ஆங்கிலத்தில் தான் பேசுகிறான்.

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

கோவிக்கண்ணன் பிடிவாதத்த விடாமச் சொன்னது:

/வெளி நாட்டில் நான் ஏன் இந்திக்காரனிடம் இந்தியில் பேச வேண்டும் ? அவன் குப்பை கொட்ட பயன்படுத்தும் அதே ஆங்கிலத்தில் நான் பேசுவதால் என்ன குறை ? அவனுக்கு தமிழ் தெரியாது, எனக்கு இந்தி தெரியாது/

இந்த விஷயத்தை, மணியன் தன்னுடைய இதயம் பேசுகிறது முதல்பாகத்தை ஆனந்தவிகடனில் எழுதிக் கொண்டிருந்த போது, டோக்கியோ நகரில் உணவு விடுதி நடத்தி வந்த ஒரு தமிழரின்[நாராயணன் என்று நினைவு] உணவு விடுதியில் தன கண் முன்னாலேயே நடந்த சம்பவம் ஒன்றைச் சொன்னது நினைவுக்கு வருகிறது.

ஒரு சர்தார்ஜி, நாராயணனுடன் இந்தியில் மாட்லாட ஆரம்பிக்க, நாராயணன் நீங்கள் பேசுவது எனக்குப் புரியவில்லை, ஆங்கிலத்தில் பேசுங்கள் என்பார். உடனே சர்தார்ஜி, இந்தி தெரியாத நீயெல்லாம் இந்தியனா என்று ஆங்கிலத்தில் கேட்பார்.

அடுத்து ஒரு தமிழர், ஐயா நீங்கள் தமிழ்நாடா, உங்களது காதல் கல்யாணமா இப்படி விசாரணை நடத்துவது!

இந்தியை வலியுறுத்தச் சில முட்டாள்கள் இருக்கிறார்கள், உண்மை!

அதே முட்டாள்தனத்தைத் தமிழனும் செய்யும் போது?

மறுபடியும் சொல்கிறேன். மொழி தகவல், உணர்வுகளைப் பரிமாறிக் கொள்ளும் சாதனமாக இருக்கும்போது அங்கே சச்சரவு, பட்டிமன்றம், கிளர்ந்தெழுதல் இப்படி அபத்தமெல்லாம் நிகழ்வதில்லை.

புரிந்துகொள்ளும், பகிர்ந்துகொள்ளும் அற்புதம் விளைகிறது!

boopathy perumal சொன்னது…

''இந்தி தெரியாததால் தமிழகம் எந்த அளவில் பின் தங்கி உள்ளது என்பதையும், ஏற்றுக் கொண்ட மாநிலங்கள் பெற்ற வளர்சியையும் பட்டியல் இட்டு பேசினால் நன்றாக இருக்கும்''

http://cdjm.blogspot.com/2008/09/blog-post.html

பதி சொன்னது…

நல்ல விவாதங்கள்...

நண்பர்களிடமும் பகிர்ந்து கொண்டுள்ளேன்....

பாலகுமாரன், வத்திராயிருப்பு. சொன்னது…

மொழிய, மொழியா பார்த்தல் பிரச்சனையே இல்ல. எதையும் திணிக்கும் போது அதை எதிர்ப்பது தானே நம்மளோட இயல்பு. நான் ஏழாம் வகுப்புவரை ஹிந்தி படிச்சேன். எழுத, படிக்க முடியும், அனால் பேச தெரியாது. தலைமை ஆசிரியர் மாறியதால, (அவருக்கு ஹிந்தி பிடிக்குமா இல்ல பிடிக்காதோ) ஹிந்தி ஆசிரியர் (எதோ காரணத்தால்) பணி நீக்கம் செய்யப்பட்டார். அத்துடன் ஹிந்தியுடன் எனது தொடர்பு முடிந்தது. அனால் இப்போ ஹிந்தி பேச தெரியாததால நான் பட்ட கஷ்டம், என் எதிரிக்கு கூட வரக்கூடாது. இதை நான் உங்களுடைய முந்தைய பதிவான "கலவை 26/ஆக/2009!" க்கு பின்னுட்டம் இட வேண்டியது. அனால் வேலை காரணமாக இட முடியவில்லை.
மற்றபடி உங்களுடைய கருத்துடன் நான் ஒத்து போகிறேன்.
//இந்திப்படங்கள் புரியவில்லை, இந்தி பெண்களுடன் பேச முடியவில்லை, போன்ற அற்ப காரணங்களுக்காக// இந்த அற்ப காரணங்களுக்காக யாரும் ஹிந்தி கற்பதில்லை என்பது உங்களுக்கே தெரியும். அலுவலக மொழியாக பாருங்கள் உங்களுக்கும் ஹிந்தி பிடிக்கும். //இந்தியாவில் 200 ஆண்டுகளுக்கு முன்பு நுழைந்த ஆங்கிலம் அந்நிய மொழி என்றால் அதற்கு முன்பு 300 ஆண்டுகளில் இஸ்லாமிய அரசர்களால் கொண்டுவரப்பட்ட உருது மொழியுடன் சமஸ்கிரதம் சம அளவில் கலந்து ஏற்பட்ட இந்தியும் கூட அந்நிய மொழிதான்.// இருந்தால் என்ன?
ஹிந்திய எதிர்தவர்களோட குழந்தைங்கள பாருங்க, அவங்க ஹிந்தி பேசலையா.

பாலகுமாரன், வத்திராயிருப்பு. சொன்னது…

my comment is based on this post & last but 2. finially i want to say " Opinion Differs ".

Venkatesh Kumaravel சொன்னது…

வாதத்திற்கு நல்லாயிருந்தாலும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆங்கிலத்தையே நம்மாளு எவ்வளவு லட்சணமா பேசுறார்ங்கறதும், 2000க்கு பிந்தைய பள்ளி மாணவர்களில் பாதிக்கு பாதி பேர் தமிழை எவ்வளவு அழகாகக் கற்கிறார்கள் என்பதிலுமே குழப்படிகளும், குளறுபடிகளும் நிறைய.

*கட்டாயத்திணிப்பு எப்படி தவறோ, அப்படித்தானே கட்டாயமாக ஹிந்தியை விலக்குவதும்?
*ஹிந்தியை வாசிக்கவோ அல்லது பேசவோ மட்டும் கூட கற்றுக்கொள்ளுதல் தவறா? சுமையா? யாரும் கவிதை எழுதும் அளவிற்கு வேண்டாம், அது சொந்த ஆர்வத்தில் செய்யட்டும். அணில்-ஆடு-இலை-ஈசல் கூட சொல்லித்தர மறுப்பதா?
*ஹிந்தி என்றில்லாமல், தேசிய மொழி என்ற எண்ணம் மேலோங்குவது தேவலை.
*இதைக்கற்றுக்கொள்ளாமல் நாங்கள் என்ன கெட்டுப்போய்விட்டோம் என்கிறீர்கள்... சிறுபிள்ளைத்தனமான வாதமாக இருக்கிறது. ஆங்கிலத்தையே பெருவாரியாக சுதந்திரம் வந்த பின் என்று வைத்துக்கொள்ளலாமா (அல்லது அதிகபட்சம் 300 ஆண்டுகளாக) கற்றுக்கொண்டிருக்கிறோம்? அதை நிச்சயமாக வேண்டாம் என்று சொல்ல இயலுமா? ஆங்கிலத்திணிப்பு?
*மற்ற மாநிலங்களில் எதிர்க்கிறார்கள் என்பதால் மட்டுமே அந்த எதிர்ப்புகளை நியாயப்படுத்துகிறீர்களா? அல்லது எதிர்ப்பதாலேயே அந்த மக்கள் முன்னேறப்போகிறார்களா?

Venkatesh Kumaravel சொன்னது…

இது கமெண்ட் சப்ஸ்க்ரிப்ஷன் வேண்டி.

பதி சொன்னது…

//*ஹிந்தி என்றில்லாமல், தேசிய மொழி என்ற எண்ணம் மேலோங்குவது தேவலை. //

தேசிய மொழி??? யாருக்கு?? இந்தியாவிற்கா???

இன்றைய இந்தியாவிற்கு தேசிய மொழி என்று ஒன்றில்லை என்றாவது தெரியுமா???

ஆங்கிலம், இந்தி இரண்டும்
அலுவலக மொழிகள்..

http://vetri-vel.blogspot.com/2006/12/india-does-not-have-national-language.html


India does NOT have a National Language

Part XVII of the constitution:
This part 17, defines an OFFICIAL language, NOT a national language.
http://www.astro.virginia.edu/~sk4zw/india-const/p17.html

Article 345: This gives the State govt., power to decide its own "OFFICIAL LANGUAGE"
http://www.astro.virginia.edu/~sk4zw/india-const/p17345.html

Article 343: This defines Hindi in devangari script and English to be the "OFFICIAL LANGUAGES" of union govt.
http://www.astro.virginia.edu/~sk4zw/india-const/p17343.html


DIFFERENCE between National and Official Language:

NATIONAL LANGUAGE: Defines the people of the nation, culture, history.

OFFICIAL LANGUAGE: A language that is used for official communication

While a National language by default can become the Official language, an Official language has to be APPROVED legally to become the National language.

All languages spoken in India, starting from the most populous to the least are our national languages, because all of them define the people of this nation, culture and their history collectively.

India has NO LEGALLY DEFINED NATIONAL LANGUAGES ONLY 23 OFFICIAL languages as per the constitution.

Radhakrishnan சொன்னது…

உலகத்தில் இருக்கும் எல்லா மொழிகளையும் கற்றுக்கொள்ள வாய்ப்பு அமைந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் ஆங்கிலமும் பேசப்படுவதால் இந்தி கற்றுக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் இல்லை.

இலக்கணம் எல்லாம் கற்றறிந்த இந்தி மொழியை மறந்த எனக்கு டில்லி சென்றபோது கஷ்டமாகத்தான் இருந்தது. இப்பொழுதும் இந்தி மொழியை கற்றுக்கொள்ளாமல் இருப்பதற்கு வருத்தம் இருக்கத்தான் செய்கிறது.

இதை ஒருப் பாடமாக வைக்க வேண்டிய அவசியமில்லைதான், அவரவருக்கு அவசியம் இருப்பின் அவரவராகப் படித்துக் கொள்ளலாம். நல்லதொரு கட்டுரை கோவியாரே.

பள்ளிகளில் மொழியினை விருப்பப்பாடமாக வைத்துவிட்டால் தமிழ் படிக்ககக் கூட ஆள் இருக்காது.
;)

பீர் | Peer சொன்னது…

எனது இடுகையிலும் பின்னூட்டத்திலும் தேவையான அளவு விளக்கங்கள் கொடுத்து விட்டதால், இது இங்கு நடக்கும் விவாதங்களை சேகரிக்க.

Sanjai Gandhi சொன்னது…

நான் பள்ளிக்கூடம் படிக்கும் போது இந்த சட்டமெல்லாம் கொண்டுவராம விட்டுட்டாங்க பாவிகள். :(

இப்போ டெல்லிக்குப் போனா டீ கூட கேட்டுக் குடிக்க முடியலை.. :(

ஊரான் புள்ளைங்க எல்லாம் கஷ்டப் படனும்.. பேரப் புள்ளைங்க எல்லாம் இந்தி படிக்கனும்.. என்னா ஒரு கொள்ளுகை.. கூடுதலா ஒரு மொழிக் கத்துக்கிறதுல எந்த குத்தமும் இல்லை. எல்லாரும் கத்துக்கோங்க. :)

Unknown சொன்னது…

என்னமோ ஹிந்திகாரனெல்லாம் ஹிந்தி தெரிந்ததினால் கோடீஸ்வரன் போலவும் மற்றவனெல்லாம் பிச்சைகாரன் போலவும் ஒரு போலி உருவகம் ஏற்படுடத்தியுள்ளிர்கலள்.இன்று எத்தனை ஹிந்திக்காரன் வேலை தேடி இங்கே அலைகிறான் தெரியுமா?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்