பின்பற்றுபவர்கள்

3 ஆகஸ்ட், 2009

மண்ட்டோ !

நான் ஒரு இலக்கிய ஆர்வலன் என்று (அவராக :)) நினைத்த தம்பி புதுகை எம் எம் அப்துல்லா, ஆறு மாதங்களுக்கு முன்பு சிங்கை வந்திருந்த போது கொஞ்சம் கனமான 600 + பக்கங்கள் கொண்ட சிறுகதைத் தொகுப்பு ஒன்றைக் கொடுத்தார். நூல்களை எப்போதும் பயண நேரத்தில் படிப்பது வழக்கம் என்றாலும், படித்துப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் நூலின் எடை அந்த ஆவலை அடக்கி இருந்தது. இரண்டு மூன்று நாளாக வாசிப்பதற்கு நிறைய நேரம் கிடைத்ததால் எடுத்து வாசித்தேன். முன்னுரைகளையும், முதல் சில அத்யாயங்களைப் படித்ததும், 'தங்கச் சுரங்கம் ஒன்று தலையணைக்கு அடியில் இருந்தது தெரியாமல் நாள் தோறும் படுத்து எழுந்தது ஒரு நாள் தெரிந்தால் உணர்வு எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் வெளியீடாக மண்டோவின் படைப்புகள் அடங்கிய நூலின் இரண்டாம் பதிப்பு. குறுகிய காலத்திலேயே இரண்டாம் பதிப்பு பதிப்பிக்கத் தேவையான காரணங்களாக நூல் அமைந்திருந்தது என்று சொன்னால் மிகையல்ல.

முற்போக்கு சிந்தனை, தலித்தியம், பெண்ணியம், விளிம்பு நிலை மாந்தர்கள் பற்றிய படைப்புகள் பரவலாக வாசிக்கப்படும் இந்தக் காலத்தில் விளிம்பு நிலை மாந்தர்களின் கதைகளை இந்திய சுதந்திரத்திற்கு முன்பே மிகுதியாக பதிவு செய்தவர் மண்ட்டோவாகத்தான் இருக்கும். இலக்கியங்கள் அனைத்துமே 'ரிடையர்மெண்ட்' வாழ்க்கை விரும்பும் நடுத்தரவர்க்கம் சார்ந்த மக்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டே மிகுதியாக வருகின்றன. உயர்வர்கம் நாகரீகம் என்ற பெயரில் அவிழ்த்துப் போட்டு ஆடுவதாகவும், விபச்சாரம் போன்ற தொழில்களில் ஈடுபடுபவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே அல்லது வறுமையின் காரணமாக அந்த தொழிலை செய்து அநாகரீகமாக நடந்து கொள்வதாகவும் நடுத்தரவர்க்கம் தன் கருத்துகளை இலக்கியம் என்ற பெயரில் பதிவு செய்துவருகிறது. இலக்கியம், திரை, செய்தி ஊடகம் இவையாவும் நடுத்தர மக்களை மையமாக வைத்து இயங்கி வருபவை. உண்மையில் சமூகம் என்பது அனைத்து தரப்புகளையும் உள்ளடக்கியதே. விளிம்பு நிலை மாந்தர்களின் வாழ்வியலை, கதைகளை பதியவைக்காமல் முழுமையடைந்த ஒரு இலக்கிய சமூகம் இருந்துவிட முடியாது.

மண்டோவின் படைப்புகள் புனைவாக எதுவுமில்லாது, அவர் சென்ற இடங்களின் பழகிய மாந்தர்களையும், கண்ணுற்ற மாந்தர்களின் வாழ்க்கையில் நடந்தவற்றை சூழல், உணர்வு, எண்ணம், கலந்து ஒரு சில படைப்புகளில் பாத்திரங்களில் அவரும் ஒருவராக, மற்ற சில படைப்புகளில் ஒரு படக்கருவி சுழல்வது போல் காட்சிகளையும் உரையாடல்கள் ஒரு சேர இருக்கும் படி சிறப்பாக படைத்திருக்கிறார். கொஞ்சமும் கற்பனையற்ற இயல்பான உரையாடல்கள், படிக்கும் போது காட்சியை கொண்டுவருவதாக அமைந்திருக்கிறது.

நவீன இலக்கியம் படைக்க நினைப்பவர்கள்,நிகழ்வுகளை வைத்து (முடிவெதும் சொல்லாத) சிறுகதைகளை எழுத விரும்புவோர் மண்டோவின் படைப்புகள் நல்ல பயிற்சிகளைக் கொடுக்கும் என்பது திண்ணம். அப்படி எந்த ஒரு எண்ணமும் இல்லாமல் வாசித்தாலும், எழுத்தார்வம் மிக்கவர், பிறகு எழுதப் போகும் படைப்புகளில் மண்ட்டோவின் தாக்கம் இல்லாமல் எழுத முடியுமா என்பதை அறுதி இட்டுச் சொல்லிவிட முடியாது ஏனெனில் எழுத்தென்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை படிப்பவர் எவரும் உணருவார்கள். வாசகர்கள் வாசிப்பு அனுபவங்களைவிட எழுத்தாளர்கள் அறிந்து கொள்ள வேண்டியவை அனைத்துமே மண்டோவின் சிந்தனைகளில் நிறையவே உண்டு. உருது மொழியில் மண்டோ எழுதியதை மிகச் சிறப்பாக இராமனுசம் மொழிப் பெயர்த்து இருக்கிறார். மொழிப் பெயர்ப்புகள் அம்மொழிக்கேற்றவாரு சொற்களுடன் இணைத்து இரத்தமும் சதையும் போல் எழுதுவதென்பது கடினம் என்றே நினைக்கிறேன். மண்ட்டோவின் மூல எழுத்தில் இருந்து மொழிப்பெயர்க்கப்பட்ட நூல் நிகழ்வுகள் நடந்த இடங்களைக் குறிப்பிடாவிட்டால் மொழிப்பெயர்ப்பு நூல் என்று கண்டு பிடிப்பது கடினம் தான்.

மண்ட்டோ சுதந்திர போராட்டக் காலத்திற்கு முன்பும், அதற்கு பின்பு வாழ்ந்தவர், முற்போக்கு எழுத்தாளர் ஒருவருக்கு எதிராக கருத்தும், எதிர்வினையும் பலமுனை தாக்குதலாக நடந்திருக்கிறதென்றால் அது மண்டோ ஒருவருக்குத்தான் என்பதாக முன்னுரையில் சுட்டி இருப்பதை மண்ட்டோவின் படைப்பை வாசிக்கும் போது உணரலாம். ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அவைகளின் மூலம் அன்றும் திரையுலகம் (நடிகைகளை) பெண்களைப் போகப் பொருளாகவும், ஆண் ஆதிக்கத்திலும் இருந்திருந்ததை தெரிந்து கொள்ள முடிகிறது. மண்டோ குறிப்பிடும் மாந்தர்கள் பெயர்களும் இடங்களும் மாறி இருக்கலாம் ஆனால் இன்றும் கூட அப்படியே தான் இருக்கிறார்கள், அது விலைமகளிர் என்றாலும் சரி, மதவெறியர்களாக இருந்தாலும் சரி. 80 விழுக்காடு இந்தியப் பகுதியில் நடக்கும் கதைகளுக்குச் சொந்தகாரரான 'மண்டோ, பாகிஸ்தானில் ஏன் இறுதி நாட்களைக் கழித்தார் ?' என்ற கேள்வி தம்பி புதுகை அப்துல்லா முன்னுரையில் குறிப்பிட்டுருந்ததை நினைத்தால் எனக்கும் வியப்பாகவே இருக்கிறது, இப்படி ஒரு சிறந்த எழுத்தாளர் ஒரு பாகிஸ்தானியாக மாறியதன் நிர்பந்தங்களில் இருக்கும் ஞாயங்கள் நாம் அறிவதற்கு அப்பாற்பட்டவையாகவோ, அதற்கு தேவையான காரணங்கள் இருக்கலாம் என்பதைத் தவிர வேறொன்றும் தேற்றிக் கொள்ள கிடைக்கவில்லை.

அன்பிற்குறிய அண்ணன் ஜமாலன், அசோகமித்ரன். அ.மார்க்ஸ் போன்றவர்களின் ஆழமான வாசிப்பு அனுபவங்களையெல்லாம் ஒப்பிட்டு நான் சாதக் ஹுசைன் மண்டோவின் எழுத்துக்களைப் பற்றி எழுதுவதை ஒப்பிட்டால் மலையைப் பார்த்து வியக்கும் கவிஞர்களின் வியப்பும், அதே மலையைப் பார்க்கும் ஒரு சிறுவனின் வியப்பிற்கும் உள்ள வேறுபாடுகள் போன்றவை என்றே நினைக்கிறேன். நூலை முழுவதுமாக வாசிக்கவில்லை என்றாலும் முதல் அத்யாயங்கள் படித்ததும் மண்டோவை வாசித்தேன் என்று எழுதுவது சாண்டியல்யன், கல்கியை வாசித்தவர்களுக்கு ஏற்படும் குதூகலத்திற்கு
ஒப்பான ஒன்றாக நினைக்கிறேன்.

நூல் முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் இலவச வெளி ஈடு, பெற விரும்புபவர்கள் தம்பி புதுகை எம் எம் அப்துல்லாவின் அன்பைப் பெற்றால் கிடைக்கும். இந்த நூலுக்கு அவர் முன்னுரை எழுதியதைப் படித்த போது அவரின் வாசிப்பு அனுபவம், இலக்கிய ஆர்வம் விழிகளை விரிய வைத்து வியப்பு ஏற்படுத்தியதை மகிழ்வுடன் குறிப்பிடுகிறேன். அன்பளிப்புகளுக்கான மதிப்புகளில் ஒருவரின் அன்பைப் பெறும் / நமது அன்பை உணர்த்தியதின் தகுதிகளும் அடங்கி இருக்கிறது என்பது அவரவர் பெருமைப் படவேண்டிய சிறப்பு குணம், அப்துல்லாவின் நட்பு வழியாக எனக்கு அந்த மன மகிழ்ச்சி கிடைத்தது.

படைப்பாளிகள் என்றுமே மறைவதில்லை அப்படி வாழ்பவர்களில் மண்ட்டோ, நாகரீக வேடமிடும் பொதுச் சமூகத்தைக் காரித்துப்பும் பிச்சைக்காரனாகவும், இலக்கியம் என்ற பெயரில் நடுத்தரச் சமூகம் கட்டமைத்தவைகளை கிழித்துப் போடும் பைத்தியக்காரனாகவும், சிறந்த ஒரு முற்போக்காளனாகவும் பன்முகங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

21 கருத்துகள்:

iniyavan சொன்னது…

பாஸ்,

எனக்கு அந்த புத்தகம் வேண்டும். கிடைக்க என்ன செய்ய வேண்டும்??

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

சிறப்பான நூல் அறிமுகம்... படிக்க தூண்டும் வகையில் உள்ளது... நன்றி...

இராம்/Raam சொன்னது…

ஓசி’க்கு இப்பவே துண்டு போட்டுக்குறேன்.. :)

கோவி.கண்ணன் சொன்னது…

//என். உலகநாதன் said...
பாஸ்,

எனக்கு அந்த புத்தகம் வேண்டும். கிடைக்க என்ன செய்ய வேண்டும்??
//

என்னிடம் ஒன்று இருக்கிறது, சிங்கை வரும் போது சொல்லுங்கள், தருகிறேன். படித்து முடித்ததும் பிறகு திரும்பும் போது அல்லது விக்னேஷ்வரனிடம் கொடுத்துவிடுங்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//இராம்/Raam said...
ஓசி’க்கு இப்பவே துண்டு போட்டுக்குறேன்.. :)

11:29 AM, August 03, 2009
//

:)

உனக்கு கைக்கு எட்டும் தொலைவுதான் இராம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//VIKNESHWARAN said...
சிறப்பான நூல் அறிமுகம்... படிக்க தூண்டும் வகையில் உள்ளது... நன்றி...
//

அப்துல்லாவிற்கு ஓலை அனுப்புங்கள் மலேசியா வருபவர்களிடம் கொடுத்து அனுப்புவார்

iniyavan சொன்னது…

நான் சிங்கை வருவதற்கு நாள் ஆகும். எங்களுக்கு சிங்கையில் ஒரு கம்பனி உள்ளது. படித்து முடித்ததும் சொல்லுங்கள். எங்கள் அலுவலக நண்பரை உங்களை பார்க்க சொல்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//என். உலகநாதன் said...
நான் சிங்கை வருவதற்கு நாள் ஆகும். எங்களுக்கு சிங்கையில் ஒரு கம்பனி உள்ளது. படித்து முடித்ததும் சொல்லுங்கள். எங்கள் அலுவலக நண்பரை உங்களை பார்க்க சொல்கிறேன்.

11:43 AM, August 03, 2009
//

ஆவண செய்கிறேன்

நட்புடன் ஜமால் சொன்னது…

இந்த நூலுக்கு அவர் முன்னுரை எழுதியதைப் படித்த போது அவரின் வாசிப்பு அனுபவம், இலக்கிய ஆர்வம் விழிகளை விரிய வைத்து வியப்பு ஏற்படுத்தியதை மகிழ்வுடன் குறிப்பிடுகிறேன்.]]

நானும் இவ்வாறே உணர்கிறேன்

[[இன்னும் படிக்கவில்லை - உங்களின் எழுத்தி வழி ...]]

Venkatesh Kumaravel சொன்னது…

அறிமுகத்திற்கு நன்றி சார். ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தாலும் விவரங்களோடு எழுதியமைக்கு நன்றி!

சிநேகிதன் அக்பர் சொன்னது…

விமர்ச்சனம் அருமை. படிக்க தூண்டுகிறது.

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

நல்ல புத்தகங்கள்

படிக்கத் தூண்டும் புத்தகங்கள்

அப்பாவி முரு சொன்னது…

வுட்லண்ட்சைத் தாண்டித்தான் மலேசியா போகணும் ஆமாம்!!!

நிகழ்காலத்தில்... சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
கோவி.கண்ணன் சொன்னது…

//இப்படி இருந்தால் புத்தகம் எழுதியவரும், புத்தகம் வெளியிட்டவரும் வருமானத்திற்கு என்ன செய்ய????

புத்தகம் வாங்குவதை ஊக்குவிப்பீர்கள் என நம்புகிறேன்:))//

நிகழ்காலத்தில் சிவா,

அது இலவச வெளி ஈடுதான், அந்த புத்தகத்தை கடன்வாங்கியாவது படிக்க ஊக்குவிக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//நட்புடன் ஜமால் said...

இந்த நூலுக்கு அவர் முன்னுரை எழுதியதைப் படித்த போது அவரின் வாசிப்பு அனுபவம், இலக்கிய ஆர்வம் விழிகளை விரிய வைத்து வியப்பு ஏற்படுத்தியதை மகிழ்வுடன் குறிப்பிடுகிறேன்.]]

நானும் இவ்வாறே உணர்கிறேன்

[[இன்னும் படிக்கவில்லை - உங்களின் எழுத்தி வழி ...]]//

தம்பி, வெகுவிரைவில் படித்துவிட்டு விமர்சனம் எழுதுங்க

கோவி.கண்ணன் சொன்னது…

//வெங்கிராஜா said...

அறிமுகத்திற்கு நன்றி சார். ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தாலும் விவரங்களோடு எழுதியமைக்கு நன்றி!//

பாராட்டுக்கும் நன்றி சார்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நல்ல புத்தகங்கள்

படிக்கத் தூண்டும் புத்தகங்கள்//

நூல் விரைவில் உங்களுக்கு கிடைக்க வாழ்த்துகள் !

கோவி.கண்ணன் சொன்னது…

//அக்பர் said...

விமர்ச்சனம் அருமை. படிக்க தூண்டுகிறது.//

சென்னை சென்றால் வாங்குவதற்கு முயற்சி செய்யுங்கள், நண்பர் அப்துல்லாவை சந்தியுங்கள். அன்பு ஐஸ்கிரிம் அவர், அப்படியே உருகிடுவார்

கோவி.கண்ணன் சொன்னது…

//அப்பாவி முரு said...

வுட்லண்ட்சைத் தாண்டித்தான் மலேசியா போகணும் ஆமாம்!!!//

அதுல என்ன RFID இருக்கா, தாண்டும் போது மணி அடிக்க. சட்டுபுட்டுன்னு வந்து வாங்கிடுங்க. ஏற்கனவே 2 பேர் புக்கிங்க்.

காலப் பறவை சொன்னது…

நல்ல விமர்சனம்....

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்