பின்பற்றுபவர்கள்

1 மே, 2023

நித்தி என்பது வெறும் சாமியார் அல்ல

சாமியார் என்றால் ஏதோ காவியோ கோமணமோ கட்டிய பஞ்ச பரதேசி என்று மக்களுக்கு காலம் காலமாக திணித்திருந்த எண்ணத்தை உடைத்தவர் யார் ?

பட்டும் பீதாம்பரமும் தங்க மகுடமும் அரசர்க்கும் பெரும் செல்வந்தர்களுக்கே உடையது என்ற மாயையை உடைத்தது யார் ?

சாமியார் என்றாலே சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு ஆன்மீக உபதேசம் செய்பவர் என்ற பிற்போக்கு எண்ணத்தை உடைத்து பெண்கள் புடை சூழ ‘கல கல’ சிரிப்பில் கூத்தும் கும்பாளமாகவும் சத்சங்கம் நடத்த முடியும் என்று செய்து காட்டியது யார் ?

யார் ? யார் ? யார் ? சாமியார்களின் சாமியார் ராஜ ரிஷி நம்ம நித்யானந்த பரமஹம்சர் தான் அந்த பெருமைக்குறிய மஹான்

நேத்திக்கு சொல்வதெல்லாம் உண்மையில் குந்தி இருந்து இன்னிக்கு சொல்வதெல்லாம் அருள் வாக்கு என்று உருமாறி இருக்கும் அன்ன பூரணி அரசு அம்மா தங்க மகுடம் சூட்டி ஆத்தாவாக அவதரித்துள்ளது என்றால், ‘வெத போட்டது யாரு ?’

நம்ம பரமஹம்சர் தான். 

ஓம் நித்யானந்த பரமசிவம். A trendsetter, ஒரு புரட்சியாளர்


- கோவி 

23 ஏப்ரல், 2023

Legend - யாரை வைத்து செய்துள்ளது ?

சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் நடித்த அந்த படத்தை ஓடிடியில் வெளியான நிலையிலும் பார்க்க விரும்பியதில்லை.

நம்மைப் போல் எளிய மனிதனாக வயதானவன் நடித்த ஒரு படத்தை பார்க்க நமக்கு என்ன மனத்தடை ? மனதளவில் ஏன் ஏற்க முடியவில்லை, அது வெறும் ‘இவனெல்லாம் நடிக்க வந்துட்டான்’ என்ற பொறாமை உணர்வு தானா ? என்று யோசித்துப் பார்த்தேன்.

சிவகார்த்திகேயன் நடிக்க வந்த பிறகு கூட பலர் ‘இவனெல்லாம் பெரிய திரைக்கு வந்துட்டான், இவனெல்லாம் ஹீரோவாக ஆகனும்னு தமிழ் சினிமா தலையெழத்து இருக்கு’ என்று பலர் குமைந்தனர்

சிவகார்த்திகேயன் நடிக்க வந்து அவர் தன்னை வளர்த்துக் கொண்டு நிற்கும் இன்றைய நிலைக்கும் சரவணா ஸ்டோர் அதிபர் நடிக்க வந்ததும் ஒன்றா ? கண்டிப்பாக இல்லை.

ஒரு நடிகனாக அந்த துறையில் நுழைவது வாரிசு நடிகர்கள் தவிர்த்து மற்றவர்களுக்கு எளிதன்று, சிறு சிறு வேடங்கள் நடித்து பல இயக்குனர்கள் அறிமுகம் கிடைத்து, தனக்கு கிடைத்த சிறு வேடங்களிலும் தனித்துவம் காட்டி, பின்னர் நாயகனாக நடிக்கும் தகுதி வாய்ந்தவன் என்ற நம்பிக்கையை இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் ஏற்படுத்தி வாய்ப்புக் கிடைத்த முதல் படத்தில் முத்திரை படைத்து அடுத்த அடுத்த படங்களில் வெற்றியை தக்க வைக்க தேர்ந்தெடுத்த படங்களை நடித்து மக்கள் மத்தியில் மற்றொரு கதை நாயகனாக மனதில் நிற்க வைக்க ஒரு நடிகனுக்கு அந்த துறையில் குறைந்த பட்சமாக பத்தாண்டு உழைப்புத் தேவைப்படுகிறது, சிவ கார்த்திகேயன் மற்றும் விஜய சேதுபதி இவ்வாறு தான் வளர்ந்து தனக்கான இடத்தை பிடித்தனர், அதன் பின்னரே 50 கோடிகளுக்கு மேல் செலவு பிடிக்கும் பெரிய பட்ஜட் படங்களில் அவர்களால் நடிக்கவே முடிந்தது.

ஒரு மனிதன் கடுமையாக உழைத்து ஒரு துறையில் தனக்கான இடத்தை அடையும் பத்தாண்டு கால உழைப்பையும் அலட்சியப்படுத்தி அந்த இடத்தை பணம் படைத்தவன் அடைய முடியும் என்று நினைப்பதே பணத் திமிர் என்று மட்டுமே சொல்ல முடியும், பெரும்பாலும் பணத்தில் உச்சமடைந்த என்ன செலவு செய்யலாம் என்ற நிலையில் பெரும்பாலான இந்திய பணக்கார ஆசை நடிகைகளுடன் ஒருமுறை படுக்க அவர்களை சம்மதிக்க வைக்க பெரிய விலை கொடுப்பது, அதைத் தாண்டி யோசித்துள்ளார் அண்ணாச்சி. நாமே பெரிய பட்ஜெட் படம் எடுத்து நாயகனாக நடித்தால் என்ன ? இந்த பணக் கொழுப்பு தனக்குத் தானே படம் எடுத்து எளிய மக்கள் வைத்துக் கொள்ளும் ஒருநாள் திருமண கட்அவுட் போல அவரும் அவரைச் சார்ந்தோரும் பார்க்க எடுத்துக் கொண்டால் நமக்கு அதில் எந்த விமர்சனமும் இல்லை, திரை சார்ந்த திரைப்பட சந்தையில் எந்த நம்பிக்கையில் தரமற்ற ஒரு பொருளை தயாரித்து நடித்து அதை ஐந்து மொழிகளில் வெளியிட்டது ஏற்கனவே அந்த துறையில் உள்ளவர்களின் உழைப்பை கொச்சைப்படுத்தும் செயலாகத் தான் நான் பார்த்தேன்

எப்படி நினைத்துப் பார்த்தாலும் இதை பணத்திமிர் என்பது தாண்டி ஞாயப்படுத்த எந்த சிறு துரும்பு கூட படத்திலோ செயலிலோ உள்ளது என்று யாராலும் கூற இயலுமா ?

ஒரு பணக்காரன் தன் பணத்தினால் ஒரு கலைஞன் அடையும் உயரத்திற்கு விலைவைத்திருப்பது ஒட்டுமொத்த கலைத்துறையையும் கேவலப்படுத்தும் செயல்

பணத்தினால் எல்லாம் செய்ய முடியும் என்றால் இது போன்ற அசிங்கத்தையும் தான் செய்ய முடியும் என்றே இதைப் பார்க்கிறேன்

போட்டி நிறைந்த கல்லூரிகளில் பணத்தை கொடுத்து சீட் வாங்ஙி அதை வீணடித்துவிட்டு “படிப்பெல்லாம் என் பணத்துக்கு முன் மயிர்” என்று மார்த்தட்டுவது போன்ற பணத்திமிராகத் தான் இதைப் பார்க்கிறேன். பணத்தினால் கல்வித் தகுதியையும் கலையையும் கேவலப்படுத்துவதை பணத்திமிர் என்று தான் சொல்ல முடியும்



பணத்தின் பக்க விளைவுகள் பெருங்கொடுமை

17 ஆகஸ்ட், 2022

FeTNA வாங்கிய குட்டு

FeTNA எனப்படும் வட அமெரிக்க தமிழ் சங்கம் பல ஆண்டுகளாக செயல்படுகிறது, இந்த அமைப்பு அங்குள்ள தமிழர்களுடன் இணக்கமாக இருக்கவும் தாய் தமிழ்நாட்டுடன் தொடர்பை காக்கவும் உருவாக்கப்பட்டது, தொண்டு நிறுவனமாகவும் செயல்படுகிறது, அங்கு நடைபெறும் ஆண்டுவிழாக்களில் தமிழ்நாட்டிலிருந்து பல்வேறு தமிழறிஞர்களை, திறனாளர்களை அவர்களுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் பயணத்திற்கான அவர்களது முழுச் செலவையும் ஏற்று, அழைத்து பேச வைப்பது, நிகழ்ச்சி படைப்பது வழக்கம். இது அங்கு பதிவு செய்யப்பட்ட அமைப்பாகும், இணைய தளமும் செயல்படுகிறது.

அங்கு புலம் பெயர்ந்து வாழ்ந்துவரும் கல்வெட்டு என்கிற பலூன் மாமா என்ற நண்பர் அண்மையில் அந்த இணைய தளத்தை பார்வையிட்ட போது அதிர்ச்சி அடைந்தார். நண்பர் முற்போக்கானவர், தமிழ் அறிவியல் என்ற பெயரில் அந்த அமைப்பு வெளியிட்ட நூல் இணைய பக்கத்தில் இருக்க, அதைப் படித்தும் மிகுந்த கவலைக்குள்ளானார். 

வாட்சப் பார்வேர்டுகளாக வரும் இந்து புராணக் கதைகளை அறிவியலுடன் தொடர்புபடுத்தும் கற்பனையாக எழுத்தப்பட்டவை தமிழ் அறிவியல் என்ற பெயரில் புத்தகமாக்கி வெளியிட்டுள்ளனர். இதனை படிக்கும் அங்குள்ள இளையர்களுக்கு எந்த ஒரு ஆய்வும், அறிவியில் அமைப்புகளில் சான்றிதழோ பெற்றிருக்காத வெறும் கற்பனையாக எழுதப்பட்ட இந்த சோடிப்புகள் இளையோர் மூளையை மழுங்கடிக்கவோ செய்யும். அதை விரும்பியவர்கள் படிக்கட்டுமே உங்களுக்கென்ன ? என்று கேட்டால், ‘இந்து அறிவியல்’ என்ற பெயரில் எதையாவது கடை விரித்தால் யாரும் கேட்கப் போவதில்லை, ஆனால் ‘தமிழ் அறிவியல்’ என்ற பெயரில் இந்து புராணக் கதைகளுக்கு அறிவியல் முலாம் பூசி கடைவிரிப்பது கண்டனத்துக்கு உரியதே. இதே போல நாங்களும் தமிழர்கள் தமிழில் மொழியில் எழுதப்பட்ட சீறாப் புராணத்திலும் (இஸ்லாமிய நூல்), தேம்பாவனியிலும்  (கிறித்துவ நூல்) அறிவியல் உள்ளது, அதையும் ‘தமிழ் அறிவியல்’ என்றே கருத வேண்டும் என்று கூறினால், அந்த நூலை எழுதியவர்கள் ஏற்பார்களா ? தமிழமைப்புகள் மதச் சார்பு அற்ற அமைப்புகள் அதில் கள்ளத் தனமாக ஒரு மதம் சார்நத நம்பிக்கையை நுழைப்பது ஏற்கத் தக்கதல்ல.

நண்பர் கல்வெட்டு அதை கவனத்திற்கு கொண்டுவர, நண்பர் கண்ணபிரான் இரவிசங்கர் அந்த அமைப்புத் தலைமைகளில் ஒருவரான பாலா சுவாமிநாதனைத் தொடர்பு கொண்டு தெரிவிக்க, அந்த நூலை இணையத் தளத்தில் இருந்து உடனடியாக நீக்க நடவெடிக்கை எடுக்கப் போவதாக குறிப்பிட்டுள்ளார். 


தாய்த் தமிழ் ஒன்று, தமிழர்கள் பின்பற்றும் மதங்கள் வேறு வேறு. இந்த புரிதல் இல்லாமல் தமிழுடன் மதம் சார்ந்த (சொந்த) வாட்சப் குப்பையை தமிழ் மீது கொட்டுவது கண்டிக்கத் தக்கதே. விரைந்து செயல்பட்டோருக்கு பாராட்டுகள்



7 ஜூலை, 2017

பதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்

நமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள் உயிரோடு இல்லை என்ற தகவல் சில நாள் கழித்து கிடைக்கும் போது நெருக்கத்தப் பொருத்து அவர்களைப் பற்றிய சிந்தனை ஓடும், மரணம் எப்போதும் நம்மை துறத்திக் கொண்டு தான் இருக்கிறது. ஒரு சிலரை விரைவாக பிடித்துவிடுகிறது, ஒரு சிலருடன் பல ஆண்டுகள் பின் தொடர்கிறது, பலருடன் நடந்தே சென்று ஒரு நாள் கை கொடுத்து அணைத்துக் கொள்கிறது. மரணத்திற்கு பிடிக்காதவர்கள் எவரும் இல்லை, அதற்கு எவ்வளவு நம்மை பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்பதைப் பொருத்து நம் வாழ்நாள், இந்த ஓட்டத்தினூடாகத் தான் நாம் பல்வேறு உணர்ச்சிகள், குற்ற உணர்ச்சிகளோடு, ஆணவம், எல்லாவற்றையும் சுமந்து கொண்டு ஓடுகிறோம், நம்மோடு சேர்ந்து அவைகளும் மறைந்து போகின்றன, பின்னர் வேறு பலரின் நினைவுக்குள் மட்டும் அவர்கள் இருக்கும் வரை வாழ்வோம், அதுவும் நமக்கு தெரியாத ஒரு வாழ்க்கை, நம்மால் உணரமுடியாத வாழ்க்கை.

*****

பித்தனின் வாக்கு என்ற பெயரில் பதிவு எழுதும் சுதாகர் சிங்கையில் இருந்து அவற்றை எழுதினார், பதிவர் சந்திகளில் நேரடி அறிமுகம் கிடைத்தது, அவரது சமூகம் சார்ந்த கருத்துகளில் எனக்கு ஏற்பு இல்லை என்றாலும், நகைச்சுவை பதிவுகள், துணுக்குகள், சமையல் பற்றி அவர் எழுதியவை சுவையானவை. நேரில் பழகுவதற்கும் இனியவர், சிங்கையில் ஈராண்டுகள் (2008-2010) பணிபுரிந்தார், பின்னர் சென்னைக்கு திரும்பி கல்பாக்கத்தில் தங்கி, நாள் தோறும் பைக் பயணமாக சென்னையில் வேலை பார்த்து வந்தார், நான் சென்னை வரும் போது அழைத்துப் பேசுவார், எப்போதும் முக நூலில் தொடர்பில் இருப்பார்,  உடன் பிறந்த உறவுகள் தவிர்த்து அவருக்கு தனிக்குடும்பம் இல்லை. ஒண்டிக்கட்டைத்தான் 

3 மாதம் முன்பு பணித் தொடர்பில் சிங்கை வந்திருந்தார், தங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுத்தேன், இரண்டு நாட்கள் இருந்தார், முதல் நாள் மாலையும் அடுத்த நாள் மாலையும் சந்தித்துப் பேசினேன், ஒத்தையாளாக இருக்கிங்க சேமிப்பு கையிருப்பு வைத்துக் கொள்ளுங்கள், முடிந்தால் சொந்தமாக சிறிய வீடு ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள் என்றேன், கொஞ்சம் சேமிப்பு இருக்கு ஆனா வீடு வாங்கும் அளவுக்கு இல்லை, முயற்சிக்கிறேன் என்றார்.

நாள் தோறும் கல்பாக்கத்தில் இருந்து 40 நிமிட பைக் பயணம் செய்து வேலை செய்கிறேன் என்றார், இந்த வயதில் 40 நிமிட பயணம் நல்லது அல்ல, முடிஞ்ச அளவு சென்னையில் தங்கி வேலை பார்க்கலாமே என்றேன், தனிமையில் இருப்பதைவிட அண்ணன் வீட்டில் வசிப்பது மன நிறைவாக உள்ளது, அண்ணன் மகளுடன் பொழுது போகிறது என்றார்

புறப்பட்ட நாளில் விமான நிலையத்திற்கு டாக்சி பிடித்து அனுப்பினேன் போகும் போது மொபைலை தவறவிட்டுச் சென்றார், ஒருவழியாக டாக்சி ஓட்டுனரை தொடர்ப்பு கொண்டு திரும்ப போனைப் பெற்று அடுத்து சிங்கை வந்த வேறு நண்பர் மூலமாக சென்னைக்கு அனுப்பி வைத்தேன், பெற்று கொண்டு நன்றி தெரிவித்தார் 

அவர் சிங்கையில் இருந்து போன பிறகு ஒருமுறையாவது திரும்ப வரவேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருந்ததை நிறைவேற்றிக் கொண்டது போல் தெரிகிறது கடந்த அந்த இருநாள் பயணம், சிங்கையில் முன்பு பார்த்து, பார்க்க விரும்பிய கோயில்களை பார்த்து , சாப்பிட விரும்பிய உணவு கடைகளில் சாப்பிட்டு வந்ததாக சொன்னார் வேறு/மாறுபட்ட கருத்துகள் எனக்கும் அவருக்கும் இருந்தாலும் ஒரு வயது தான் வேறுபாடு என்றாலும் என்னை மரியாதையுடன் அழைத்து பேசுவார் 

நேற்று (06/ஜூலை/2017)அவரது உறவினர் அவர் மறைவு குறித்து முகநூலில் பகிர்ந்தது என் பார்வைக்கு டைம்லைனில் வந்தது, மாரடைப்பில் உயிர் பிரிந்ததாக குறிப்பிட்டு இருந்தனர், மேற்கொண்டு தகவல்கள் எதுவும் இல்லை

அவர் தற்போது இல்லை என்பது நம்புவதற்கு கடினமாக உள்ளது. பதிவுலகம் மூலமாக அவரை அறிந்தவர்கள் தொடர்பு கொண்டவர்களுக்கு தகவலாக இதனை இங்கு பதித்துள்ளேன்

நண்பரின் ஆன்மா அமைதியடையட்டும்
மார்ச் 2017ல் சிங்கை வந்திருந்த போது எடுத்தப்படம்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்