பின்பற்றுபவர்கள்

14 ஜனவரி, 2009

பொங்கல் புராணம் (ஆன்மீக பதிவு அல்ல) !

சிங்கையில் இந்திய, தமிழ் பண்டிகைகள் கொண்டாடுவதில் எந்த குறையில்லாமல் கொண்டாடலாம். பொங்கலுக்கு தேவையான மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து, மண் பானை, அகப்பை, கரும்பு அனைத்தும் கிடைக்கும். எங்கள் வீட்டில் மண் பானையில் செய்வது இல்லை, வாங்கினால் பொங்கல் முடிந்ததும் அதை தூக்கிப் போடனும், இல்லை என்றால் கவனமாக உடையாமல் வைத்து பாதுகாத்து அடுத்த ஆண்டுக்கு பயன்படுத்தனும், இரண்டுமே கடினம் தான். அதனால் இரு சிறிய எவர்சில்வர் பானைகளில் தான் கடந்த 9 ஆண்டுகளாக பொங்கல் வைக்கிறோம். மூவருக்கு அதில் வைப்பதே மீந்து போகும்.

தீபாவளிக்கு கிடைப்பது போல் பொங்கலுக்கு பொதுவிடுமுறை கிடையாது, எப்போதாவது சனி / ஞாயிற்றில் பொங்கல் வந்தால் பொறுமையாக செய்ய முடியும், இந்த ஆண்டு புதன் கிழமை வந்ததால் எல்லாம் விரைவாகவே செய்து முடிக்கவேண்டிய கட்டாயம். மஞ்சள் / இஞ்சி கொத்து போகி அன்று வாங்கினால் கழிபட்டதே கிடைக்கும் என்பதால் இரண்டு நாட்களுக்கு முன்பே பச்சரிசியுடன் சேர்த்து வாங்கிவிட்டோம். நேற்று புத்தம் புதிய பொங்கல் காய்கறிகளை வாங்கினேன். பொங்கல் கறியில் மொச்சை, மற்றும் அனைத்து கிழங்குவகைகளையும் போட்டு செய்வது வழக்கம், சக்கரை வள்ளிக் கிழங்கு வாங்குவதற்காக மூன்று கடை ஏறி இறங்கி ஒருவழியாக அரைநெல்லிக்காய், சர்கரைவள்ளிக்கிழங்கு, தலைவாழை மற்றொரு கடையில் கிடைத்தது. மற்ற நாட்களை விட பொங்கலுக்கு முதல் நாள் சற்று விலை கூடுதலாக இருக்கும், பண்டிகையில் தானே விற்பனையாளர்களும் கொஞ்சம் காசு பார்க்க முடியும் என்பதை நினைத்துக் கொண்டு வாங்குவேண்டியதுதான். சிங்கை தவிர மற்ற வெளிநாடுகளில் செங்கரும்பு, மஞ்சள், இஞ்சி கொத்து, தலை வாழை இலை நினைத்துப் பார்க்க முடியுமா ? அதைக் கொண்டு வந்து விற்பதற்காக சற்று கூடுதலாகக் கொடுத்தால் ஒன்றும் குறைவில்லை என்றே நினைக்கத் தோன்றும்.

பொங்கலுக்கு தேவையான சாமான்கள் ஆயத்தம் ஆச்சு. பொங்கல் எத்தனை மணிக்கு வைப்பது? சிங்கையில் ஞாயிற்றெழுச்சி காலை 7 மணிக்கு மேல் தான். விடுமுறை நாள் இல்லையே, நான் நாள் தோறும் காலை 6.15 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பினால் தான் வேலை செய்யும் இடத்தை அடைய 8.15 ஆகும், அதனால் பொங்கல் வைப்பதை அதிகாலை (பிரம்ம நல்வேளை - பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லுவார்கள்) சான்றோரை (மனைவிதான்) கலந்து ஆலோசித்து, 4.30 மணிக்கு தொடங்க,

10 நிமிடத்தில் பொங்கியது. அந்நேரத்துக்கு மகளை எழுப்பி 'பொங்கலோ...பொங்கல்' சொல்லும்மா....என்றால், 'இன்னிக்கு நம்ம வீட்டில் என்ன ?' என்று எழுந்திருந்தாலும் தூக்க கலக்கத்தில் கேட்டாள், இத்தனைக்கும் நேற்று இரவே 'நாளை பொங்கல்' என்று சொல்லி வைத்தோம். பொங்கல்களை நான் பார்த்துக் கொள்ள, பொங்கல் காய்கறி சமையலை மனைவி முடித்தார்.(எங்கள் வீட்டில் எப்போதும் பூசைப் போடும் பணி என்னுடையதாம்)

எல்லாவற்றையும் எடுத்து வைத்து, பூசையெல்லாம் போட்டு, ஆதவன் இருக்கும் இடத்தை நோக்கி கற்பூரம் காட்டிவிட்டு, சாப்பிட்டுவிட்டு மணியைப் பார்த்தால் 6.45 ஆகிவிட்டது. பொங்கலை சிறிது உண்டுவிட்டு (சர்கரை பொங்கலில் முந்திரி மிகுதியாக போட்டுவிட்டிங்க, திகட்டுது என்று அம்மணியின் புலம்பல்), நண்பகல் உணவிற்காக பொட்டலம் கட்டிவிட்டு, 7 மணிக்கு மகளை பள்ளியில் விட்டுவிட்டு, அலுவலகம் வந்து சேர காலை 9.00 மணி ஆகிவிட்டது. இன்று 45 நிமிடம் அலுவலகம் நேரத்தை பொங்கலுடன் சேர்த்து விழுங்கியாச்சு.

பொதுவிடுமுறை நாளாக இல்லாததால், சன் தொலைக்காட்சியிலும், விஜய் தொலைகாட்சியிலும் நடிகர்/நடிகைகளின் பொங்கல் வாழ்த்துகளை கேட்கபெறமுடியாத துர்பாக்கிய சாலி ஆகிவிட்டதில் பெரிய வருத்தம் தான்
(ஹைய்யா......புது சட்டை ! )

அனைவருக்கும் தைப்பொங்கல், மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

24 கருத்துகள்:

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

அன்பின் கோவியாரே!
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
அன்புடன்,
ஜோதிபாரதி.

சின்னப் பையன் சொன்னது…

அண்ணே.. இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...

சின்னப் பையன் சொன்னது…

//சிங்கை தவிர மற்ற வெளிநாடுகளில் செங்கரும்பு, மஞ்சள், இஞ்சி கொத்து, தலை வாழை இலை நினைத்துப் பார்க்க முடியுமா ? //

ஹிஹி.. என்னாலே நினைத்து மட்டும்தாங்க பாக்க(!!) முடியும்...

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

பொங்கல் நல்வாழ்த்துகள்...

நட்புடன் ஜமால் சொன்னது…

புது சட்டை ஜூப்பர் அண்ணே ...

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

புதுச் சட்டை, திருநீரு பட்டை!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

கண்கள் பனிக்கின்றன, இதயம் இனிக்கிறது!!

நையாண்டி நைனா சொன்னது…

தங்களுக்கு எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

நையாண்டி நைனா சொன்னது…

தங்களுக்கு எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

பெயரில்லா சொன்னது…

பொங்கல் வாழ்த்துகள் :)

பாண்டித்துரை சொன்னது…

வாழ்த்துகள்

அடுத்த சந்திப்பில் பொங்கல் கிடைக்குமா! (குளிர்பதன பெட்டியில் பதப்படுத்திவையுங்கள்)

வால்பையன் சொன்னது…

அந்த கடைசி போட்டோவில இருக்குற கரடி பொம்மை என்ன விலை?


ஜஸ்ட் கலாய்த்தல்
நோ சீரியஸ் ப்ளீஸ்

மணிகண்டன் சொன்னது…

பொங்கல் நல்வாழ்த்துக்கள் கோவி.

பெயரில்லா சொன்னது…

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

வடுவூர் குமார் சொன்னது…

பொங்கல் வாழ்த்துகள்,உங்களுக்கும்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

//சிங்கையில் இந்திய, தமிழ் பண்டிகைகள் கொண்டாடுவதில் எந்த குறையில்லாமல் கொண்டாடலாம். பொங்கலுக்கு தேவையான மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து, மண் பானை, அகப்பை, கரும்பு அனைத்தும் கிடைக்கும்//
கோவியாரே!
முதல் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.
மிகச் சிறப்பாக பொங்கல் கொண்டாடியுள்ளீர்கள். இம்முறை எங்கள் மனநிலை சஞ்சலப்படுவதால்
யாவும் மந்தமே!!
சிங்கையில் இவை கிடைப்பதில் ஆச்சரியமில்லை. அது தமிழ்க் கலாச்சார விழுமியத்துக்கு நூற்றாண்டுகளாக உட்பட்ட ஒரு நாடு.
ஆனால் ஐரோப்பிய, அமெரிக்க;அவுஸ்ரேலிய நகரங்களில் கூட இவை தடையின்றி கிடைக்கிறதென்பது
வியப்பே!!
நீங்கள் வாங்கத் தயாராயின் நாங்கள் எதையும் விற்கத் தயார் என்பதே இங்குள்ள தமிழ் வியாபாரிகளின் தாரக மந்திரம்.
நாம் பகிடியாக கூறுவோம்; பாரிசில் அப்பா அம்மா தவிர எல்லாம் காசுக்கு வாங்கலாம்.
நீங்கள் சக்கரை வள்ளிக் கிழங்கு; அரை நெல்லிக்காய் எனக் குறிப்பிடுவது எவை என எனக்குப் புரியவில்லை.

Poornima Saravana kumar சொன்னது…

பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

சி தயாளன் சொன்னது…

பொங்கலோ பொங்கல்..

சிங்கையில் அதுவும் விடுமுறை எடுக்காமல்..அதிகாலை எழும்பி..சூரியன் எழும்ப முன்னமே பொங்கி..அதை பதிவா வேற போட்ட உங்களை வாழ்த்த வயதில்லை..வணங்குகிறேன்...:-)

அதுக்குள்ள பொங்கலில் முந்தி வறுவல் கூட என்ற குறையுமா..:-)

தமிழ் சொன்னது…

இனிய பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்

மு.வேலன் சொன்னது…

பொங்கல் வாழ்த்துக்கள்!

நசரேயன் சொன்னது…

அண்ணே தைப்பொங்கல், மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

tamilraja சொன்னது…

விநோதமானவ்ர்தான் நீங்கள்!!

இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் நல் வாழ்த்துக்கள்!

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி 9:36 AM, January 14, 2009
அன்பின் கோவியாரே!
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
அன்புடன்,
ஜோதிபாரதி.//

ஜோதிபாரதி, அவ்வண்ணமே தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கள் வாழ்த்துகள்

//ச்சின்னப் பையன் 9:58 AM, January 14, 2009
அண்ணே.. இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...//

ச்சின்னப் பையன்
மிக்க நன்றி மக்கா, தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

//ச்சின்னப் பையன் 9:59 AM, January 14, 2009

ஹிஹி.. என்னாலே நினைத்து மட்டும்தாங்க பாக்க(!!) முடியும்...//

கிடைக்குமான்னு தான் நினைச்சு பார்க்க முடியும், கிடைக்கும்னு நினைச்சு பார்க்க முடியாது

//T.V.Radhakrishnan 11:04 AM, January 14, 2009
பொங்கல் நல்வாழ்த்துகள்...//

தங்களுக்கும் நல்வாழ்த்துகள் ஐயா.

//நட்புடன் ஜமால் 11:31 AM, January 14, 2009
புது சட்டை ஜூப்பர் அண்ணே ...//

தெம்பனீசில் எடுத்தது தான். சல்லீச கிடைச்சுது !

//ஜோதிபாரதி 12:01 PM, January 14, 2009
புதுச் சட்டை, திருநீரு பட்டை!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

கண்கள் பனிக்கின்றன, இதயம் இனிக்கிறது!!//

கழுத்துல கொட்டை இருந்தால் இன்னும் கனக்கும் என்று தான் அணியவில்லை :)

//நையாண்டி நைனா 1:12 PM, January 14, 2009
தங்களுக்கு எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

நையாண்டி நைனா 1:12 PM, January 14, 2009
தங்களுக்கு எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.//

உங்களுக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள் நைனா

//Thooya 1:49 PM, January 14, 2009
பொங்கல் வாழ்த்துகள் :)//

தூயா மிக்க நன்றி, ஈழத்தமிழர்கள் வீட்டில் அடுத்த பொங்கலில் மகிழ்ச்சி பொங்கும் என்று நம்பிக்கையோடு இருப்போம்

//பாண்டித்துரை 2:08 PM, January 14, 2009
வாழ்த்துகள்

அடுத்த சந்திப்பில் பொங்கல் கிடைக்குமா! (குளிர்பதன பெட்டியில் பதப்படுத்திவையுங்கள்)
//
பாண்டித்துரை, மிக்க நன்றி, உங்களுக்கும் வாழ்த்துகள், சந்திப்பு நடப்பதில் உங்களுக்கு ஏன் கொலைவெறி ! :)

//வால்பையன் 2:15 PM, January 14, 2009
அந்த கடைசி போட்டோவில இருக்குற கரடி பொம்மை என்ன விலை?

ஜஸ்ட் கலாய்த்தல்
நோ சீரியஸ் ப்ளீஸ்
//

கேட்டு சொல்றேன், கேட்டு சொல்றேன். அன்பு வெல அத ஆண்டவனாலும் வைக்க முடியாது....இது எப்பெடி இருக்கு (ரஜினி ஸ்டையிலில் படிக்கவும்)

//மணிகண்டன் 4:21 PM, January 14, 2009
பொங்கல் நல்வாழ்த்துக்கள் கோவி.//

மணி, அப்பாடா... உங்கள் ஆசைப்படி பொங்கல் பதிவு போட்டாச்சு, இப்ப மகிழ்ச்சியா ?

//வடகரை வேலன் 4:24 PM, January 14, 2009
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் நல் வாழ்த்துக்கள்!//

அண்ணாச்சி அவ்வண்ணமே தங்களுக்கும் !

//வடுவூர் குமார் 5:25 PM, January 14, 2009
பொங்கல் வாழ்த்துகள்,உங்களுக்கும்.//

குமார் அண்ணா, உங்களுக்கும் வாழ்த்துகள்.

//யோகன் பாரிஸ்(Johan-Paris) 7:13 PM, January 14, 2009
கோவியாரே!
முதல் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.
மிகச் சிறப்பாக பொங்கல் கொண்டாடியுள்ளீர்கள். இம்முறை எங்கள் மனநிலை சஞ்சலப்படுவதால்
யாவும் மந்தமே!!//
யோகன் ஐயா,
நம்ம வருதத்தில் பங்கெடுத்துக் கொள்பவர்களின் மகிழ்ச்சியை வாழ்த்தலாம் என்ற உங்கள் மன நிலை போற்றதக்கது.

//சிங்கையில் இவை கிடைப்பதில் ஆச்சரியமில்லை. அது தமிழ்க் கலாச்சார விழுமியத்துக்கு நூற்றாண்டுகளாக உட்பட்ட ஒரு நாடு.
ஆனால் ஐரோப்பிய, அமெரிக்க;அவுஸ்ரேலிய நகரங்களில் கூட இவை தடையின்றி கிடைக்கிறதென்பது
வியப்பே!!//
அத வரவழைத்து விற்பதற்குத்தான் விலை, அவ்வளவு செலவு செய்து வரவழைக்கவும் மாட்டார்கள், அப்படியே வந்தாலும், அம்மாடியோவ் இவ்வளவு காசா, அது இல்லாவிட்டாலும் குடிமுழுகிடாது என்கிற மன நிலைக்கு அங்குள்ள மக்கள் சென்றுவிடுவார்கள்.

//நீங்கள் சக்கரை வள்ளிக் கிழங்கு; அரை நெல்லிக்காய் எனக் குறிப்பிடுவது எவை என எனக்குப் புரியவில்லை.//

வள்ளிக்கிழங்கை சிலர் சர்கரைவள்ளிக்கிழங்கு என்பார்கள், சற்று இனிப்பு சுவையுடன், மேல்தோல் ஊதா மற்றும் சற்று மஞ்சளாக இருக்கும், எங்க ஊர் பக்கம் மண்மேடு அமைத்து (பார் என்று சொல்லுவாங்க) அதில் விலைய வைப்பாங்க, கொடி வகையைச் சேர்ந்த கிழங்கு.
அரை நெல்லி ? பெரிய நெல்லிக்காய் சிறிது பச்சையாக தின்றுவிட்டு தண்ணீர் குடித்தால் தண்ணீர் சுவை இனிப்பாக இருக்கும்

//PoornimaSaran 8:21 PM, January 14, 2009
பொங்கல் நல் வாழ்த்துக்கள்!//

PoornimaSaran, தங்களுக்கும் வாழ்த்துகள் !

//’டொன்’ லீ 8:39 PM, January 14, 2009
பொங்கலோ பொங்கல்..

சிங்கையில் அதுவும் விடுமுறை எடுக்காமல்..அதிகாலை எழும்பி..சூரியன் எழும்ப முன்னமே பொங்கி..அதை பதிவா வேற போட்ட உங்களை வாழ்த்த வயதில்லை..வணங்குகிறேன்...:-)
//

டொன்லீ, இங்கே பொங்கல் பண்டிகையை விட்டுவிடக் கூடாது என்று கொண்டாடுகிறோம், ஊரில் கொண்டாடும் போது அதன் உற்சாகமே வேறு.

//திகழ்மிளிர் 9:38 PM, January 14, 2009
இனிய பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்////

திகழ்மிளிர், தங்களுக்கும் இனிய பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்

//மு.வேலன் 10:58 PM, January 14, 2009
பொங்கல் வாழ்த்துக்கள்!//
மு.வேலன் சார், தங்களுக்கும் வாழ்த்துகள்

//நசரேயன் 11:31 PM, January 14, 2009
அண்ணே தைப்பொங்கல், மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.//
நசரேயன், தங்களுக்கும் இனிய நல்வாழ்த்துகள்

//tamilraja 2:03 AM, January 15, 2009
விநோதமானவ்ர்தான் நீங்கள்!!

இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் நல் வாழ்த்துக்கள்!//

tamilraja,
எல்லோருமே வினோதமானவர்களே, அவரவர்களை அறிந்து கொள்ள முற்படும் போது அவை விளங்கும் :)
தங்களுக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள் !

துளசி கோபால் சொன்னது…

இந்தப் பதிவை நேத்து எப்படித் தவறவிட்டேன்னு புரியலை.

ஒருவேளை திங்கள் அன்று பொங்கல் செஞ்ச களைப்பில் இருந்துருப்பேனோ என்னவோ!!!

//சிங்கை தவிர மற்ற வெளிநாடுகளில் செங்கரும்பு, மஞ்சள், இஞ்சி கொத்து, தலை வாழை இலை நினைத்துப் பார்க்க முடியுமா?//

உண்மைதான். வாழை இலை தவிர வேறொன்னும் கிடைக்கச் சான்ஸே இல்லை. வாழை இலை மட்டும் நம்ம வீட்டில் சின்ன மரமா இருக்கு.

எதுவும்தான் இல்லையே இந்த இலை மட்டும் என்னத்துக்குன்னு அதையும் பயன்படுத்தறதில்லை. பாவம் மரத்துலேயே இருந்துட்டுப் போகட்டுமுன்னு.

அழகா அருமையாப் பொங்கவச்சுருக்கீங்க. அதுக்கே இனிய பாராட்டுகள்.

ஆர்கிட் பூக்கள் நல்லா இருக்கு.

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

தம்பி கோவி!
படம் பார்த்ததிலிருந்து; தங்களை கோவியாரே என விழித்து வயதாளியாக்க மனம் வரவில்லை.
இந்த சக்கரை வள்ளிக் கிழங்கை நாம் ராஜவள்ளிக் கிழங்கு என்போம். கறி சமைப்பதென்பது புதிய செய்தி. ஈழத்தில் இதை தேங்காய்ப்பால், சீனி போட்டு கஞ்சியாக காச்சி குடிப்போம். அப்படியே ஆற வைத்தால்
உறைந்து கட்டியாகும் துண்டாக வெட்டி சாப்பிடுவது முண்டு.
இங்கே தாராளமாக வருடம் பூராகக் கிடைக்கிறது. கிலோ 4 யூரோ. தற்போது செயற்கை உரம் போடுவதால்; அந்த நாட்களைப் போல் சுவை; நிறம் இல்லை; ஆனால் கிழங்கு மாத்திரம் பருத்து; நல்ல உருளையாக வருகிறது.
இங்கே என் பிரங்சு நண்பர்களுக்கு டெசேற் ஆக செய்து கொடுத்தேன். விரும்பியுண்டார்கள்; அதன் நிறம் அவர்களை ஆச்சரியப்படவைத்தது.

நெல்லிக்காய் நன்கு தெரியுமே!!இங்கும் வருசாவருடம் வாங்கிச் சாப்பிட்டு விடுவேன். இந்தியாவில் இருந்து வரும் சிலவகை ஊறுகாயுள் கடிபடும். இதையும் கறியுள் போடுவார்களா?? புளிக்குப் பதிலாக பாவிக்கலாம் போல் தான் உள்ளது. ஈழத்தில் கேள்விப்படவில்லை.
தமிழகத்தில் வீட்டுமனை விற்கும் முகவர்கள்; வாடிக்கையாளருக்கு நிலம் காட்டக் கூட்டிச் செல்லுமுன் நெல்லிக்காய் வாங்கிக் கொடுத்துக் கூட்டிச் சென்று, நீரைச் சுவைக்க வைப்பார்கள்; எனப் படித்துள்ளேன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்