அஜ்மல் தூக்குக்கு வாய் திறக்காதவர்கள் கூட அப்சல்குருவிற்கு நிறைவேற்றப்பட்ட தூக்கு தண்டனைக்கு எதிராக வாய்த்திறக்க துவங்கி இருக்கிறார்கள், இது மரண தண்டனைக்கு எதிராக திறந்த வாய்கள் இல்லை, மாறாக அப்சல்குருவிற்கு கொடுக்கப்பட்ட தண்டனை நியாமற்றது என்று வழக்கு ரீதியில், வழக்கு தவறாக நடந்ததாகவும், குற்றவாளியின் மரண தண்டனை நிறைவேற்றம் குறித்து பின்னர் தான் அவரது குடும்பத்திற்கே தெரிவிக்கப்பட்டதாகவும் கூறுகிறார்கள், அரசு இதில் அவசரம் காட்டியதன் மர்மம் பிஜேபிக்கு எதிரான காய் நகர்த்தல், இந்து வாக்குகள் அறுவடை குறித்த காங்கி-கின் எதிர்ப்பார்ப்புகள் என்று நாம் சந்தேகிக்க இடம் உள்ளது. பாபர் மசூதி இடிப்பிற்கு பிறகு பெரும்பாலும் காங்கிரசு தான் பல ஆண்டுகளாக ஆட்சி செய்துவருகின்றன, பாபர் மசூதி வ்ழக்குகள் முடிந்தபாடில்லை, காங்கிரசு ஆட்சியின் போது தான் பாபர் மசூதியும் இடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது, ஆனால் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு என்ற பெயரில் காங்கிரசு வாக்குகள் அறுவடை செய்வதும் ஆட்சியில் தொடர்வதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது, இந்த சூழலில் பாஜகவை நாம் இந்துத்துவ கட்சி என்றோ சிறுபான்மை எதிரி என்றோ பார்க்கத் தேவை இல்லாத அளவுக்கு காங்கிரசின் முகத்திற்கும் பாஜகவிற்கும் பெரிய வேறுபாடு இல்லை என்றே சொல்லலாம். இந்தியாவில் பெரும்பான்மை இந்து சமயத்தினர் எனும் பொழுது பாஜக நேரடியாக மதவாதமாக வாக்குக் கேட்பதை காங்கிரசு மறைமுகமாக செய்துவருகிறது.
நான் அதுபற்றி மிகுதியாக சொல்ல விரும்பவில்லை, இந்த அரசியல் ஏமாற்றுகளிலும் கட்சிகளிலும் எனக்கு பெரிய நம்பிக்கைகள், ஈர்ப்புகள் கிடையாது, நான் எந்த ஒரு கட்சியையும் தொடர்ந்து ஆதரிப்பதாக எழுதுவதும் இல்லை, நான் இங்கு சொல்ல வந்தது மரண தண்டனைகள் குறித்து தான், அப்சல் குருவிற்கு கொடுக்கப்பட்டது தண்டனை என்றாலும் அரசு அவரது குடும்பத்திற்கு செய்தது அநீதி, அப்சல் உடலை உறவினர்கள் வாங்க மறுத்ததாகவும் சிறை வளாகத்திலேயே அடக்கம் செய்யப்படுவதாகவும் ஒரு ஊடகம் எழுதி இருந்தது, மற்றொரு ஊடகத்தில் அப்சலுக்கு தண்டனை நிறைவேற்றிய இரண்டு நாள் குறித்து தான் தண்டனை நிறைவேறப் போவது குறித்த கடிதம் உறவினர்களுக்கு சென்று சேர்ந்ததாம், இரண்டு நாள் சென்று கடிதம் கிடைத்தவர்கள் உடல் அடக்கம் பற்றிய கருத்துகளை எப்படி கூறி இருப்பார்கள் ? ஆக உடல் அடக்கம் குறித்த உரிமை கூட உறவினர்களுக்கு வழங்கப்படவில்லை என்றே சந்தேகம் கொள்ள நேரிடுகிறது.
மரண தண்டனை ஆதரவாளர்கள் எல்லோரும் ஒன்று போலவே, 'உங்கள் குடும்பத்தில் இப்படி நடந்திருந்தால் குற்றவாளியை தண்டிக்கச் சொல்லமாட்டீர்களா ?' என்றே கேட்கிறார்கள், பழிக்கு பழி , இரத்தத்திற்கு இரத்தம் என்பவை காட்டுமிராண்டி கலாச்சாரம் என்றே நாமும் எழுத வந்த காலத்தில் இருந்தே எழுதிவருகிறோம், தனக்கு இழைக்கப்பட்டது அநீதி என்று நினைப்பவர்கள் அதையே தண்டனையாக அநீதி இழைத்தவர்களுக்கும் செய்யச் சொல்வார்களா ? உதாணத்திற்கு பக்கத்து வீட்டுக்காரன் ஆத்திரப்பட்டு பலிவாங்கும் நோக்குடன் அடுத்தவீட்டுக் குழந்தையை கொன்றுவிடுகிறான், அதே வேதனையை அவனும் அனுபவிக்க வேண்டும் என்று விரும்புவர்கள் அவனுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று விரும்புவார்களா ? அல்லது ஒருபாவமும் அறியாத அவனது குழந்தையைக் கொல்வது தான் சரி, 'இழப்பு' என்றால் அவன் அறியச் செய்ய தரும் சரியான தண்டனை என்று சொல்லுவார்களா ? உண்மையில் அவனை மட்டும் தண்டித்தால் அவனுக்கு 'இழப்பு' என்றால் என்ன வென்று தெரியாமல் அது செய்த குற்றத்திற்கான தண்டனை என்ற அளவில் மட்டுமே அவனால் உணர முடியும், அது தான் அவனுக்கான சரியான தண்டனை என்று இங்கு குறிப்பிட முடியுமா ? இல்லை இல்லை அவனுடைய குழந்தையையும் கொல்லுவது தான் அவனுக்கான தண்டனை என்று மரண தண்டனை நியாவான்கள் தீர்ப்பு எழுதிவிட்டால், அதை 'சரியான தீர்ப்பு' என்று அறிவுடையோர், சமூக அக்கரை உள்ளோர் அதை ஆமோதிக்க முடியுமா ?
மரண தண்டனைகள் மூலம் இழப்பு என்பது கொலைகாரனுக்கு அல்ல, அவனது குடும்பத்தினருக்கு மட்டுமே, கொலை வழக்கிற்கான மரண தண்டனைகள் எல்லாமும் ஒரு குடும்பம் மற்ற குடும்பத்தை பழிக்கு பழி வாங்குதல் என்ற பக்க விளைவுகளை மட்டுமே ஏற்படுத்துகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. கொலைகாரனை பெற்றவர்கள், கொலைகாரனின் மனைவி, கொலைகாரனின் வாரிசுகள் என்கிற தூற்றலை சுமந்து கொண்டு ஏற்கனவே அந்த குடும்பம் பல தண்டனைகளை நாள் தோறும் அனுபவத்து வருகின்றன, இதில் கொலை செய்தவனுக்கு கொடுக்கப்பட்ட மரண தண்டனை எந்த ஒரு விளைவை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை ? அவசரத்தில், கோபத்தில் அல்லது தூண்டுதலில் செய்த கொலைக்கு அரசு ஆதரவுடன் தீர்ப்பு என்ற பெயரில் கொடுக்கப்படும் மரண தண்டனை மற்றொரு கொலை தான், ஒன்று கேட்காமல் செய்யப்படுகிறது மற்றொன்றோர் ஆன்றோர் சான்றோர் ஆமாம் போட நடைபெறுகிறது. உயிரெடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை என்ற பெயரில் கொடுக்கப்படும் தண்டனை உயிரெடுப்பது தான் என்றால் அதை நீதி நேர்மை நியாயம் என்ற வகைப்படுத்தல் இன்றி வெறும் தண்டனை என்ற சொல்லாடலில் இட்டு நிரப்புங்கள்.
சந்தர்ப்ப சாட்சியம், சாட்சியம் என்ற பெயரில் தான் தீர்ப்புகள் எழுதப்படுகின்றன மற்றபடி ஒருவர் குற்றவாளியா இல்லையா என்பதை நீதிபதிகள் முற்றிலும் அறிந்து தான் எழுதுகிறார்கள் என்று சொல்ல அவர்கள் முக்காலத்தை உணர்ந்தவர்களும் இல்லை, மரண தண்டனைகள் மூலம் ஆயிரக் கணக்கானோர் தண்டிக்கப்பட்டாலும் ஒரே ஒருவர் குற்றமற்றவராக இருந்து அவருக்கும் சந்தர்ப சாட்சியங்கள் வழியாக மரண தண்டனை தீர்ப்பு எழுதிவிட்டால் தவறாக நிறைவேற்றப் பட்ட தண்டனைக்கு மரண தண்டனை ஆதரவாளர்கள் பொறுப்பேற்பார்களா ?
நேற்று கூகுள் ப்ளஸில் நண்பர் ஒருவர் 'அப்சலுக்கு இழைத்தது அநீதி என்றால் ஆண்டவன் அநியாயமாக தீர்ப்பு எழுதியவர்களை தண்டிப்பார்' என்று வருத்தப்பட்டு இருந்தார், அவரும் மரண தண்டனைக்கு ஆதரவானவர் என்பது குறிப்பிடத் தக்கது. ஒருவேளை அப்சல் அப்பாவியாக இருந்து தண்டிக்கப்பட்டிருந்தால் அநியாயமாக தீர்ப்பு எழுதியவர்களுக்கு எங்கோ கிடைக்கும் தண்டனையைப் பற்றி எந்த கருத்தும் இல்லை, அது நாம் அறியாத ஒன்று, ஆனால் அப்சல் குடும்பத்திற்கு ஏற்பட்ட இழப்பு யார் இட்டு நிரப்புவது ஆண்டவனா ?
பலிக்கு பலி, பழிக்கு பழி, இரத்திற்கு இரத்தம் சரி என்றால் சமாதானம், சமரசம் என்பதன் பொருள் என்ன ? வெறும் சொத்து தகராறுக்கு மட்டும் தான் அவையெல்லாம் ? கொலைக்கு 'கொலை நீதி' தான் பெரிது என்று நம்பும் நாம் ஏன் சமதானப் புறக்களையெல்லாம் பறக்க விடாது, அவற்றின் கறியை சூப்பு வைத்துக் குடிக்கக் கூடாது ?
இங்கு சென்றவாரம் சிங்கப்பூரில் சிமெண்ட் லாரி ஓட்டுனரின் கவனக் குறைவால் 7, 10 வயது இரண்டு ஆண் குழந்தைகளை பறிகொடுத்தப் பெற்றோர் சொன்னது 'ஓட்டுனரை மன்னிக்கிறோம், ஓட்டுனருக்கு கொடுக்கும் தண்டனை என் குழந்தைகளை மீட்டுத் தந்துவிடாது'
34 கருத்துகள்:
சகோ கோவி,
நல்ல பதிவு.
அஃப்சல் குருவின் விடயத்தில் மரண தண்டனை ஒரு தவறு.
அதனை இரகசியமாக நிறைவேற்றியது இன்னொரு தவறு.
குடும்பம் அவனுக்கான கட்மைகளைக் கூட செய்ய விடாதது இன்னொரு தவறு!!
இது முழுக்க முழுக்க அரசியல் சார்பு நடவடிக்கை!!
**
போட்டி பாஜகவை விட நானும் தண்டனை கொடுக்கும் பிஸ்தா என காட்டும் காங்கிரசின் முயற்சி!!
இது தொடர்கதையாக பல வழக்குகளுக்கும் வரும் வாய்ப்பு உண்டு!!
நன்றி!!
நன்றி சார்வாகன்,
கடவுள் தான் அல்லாத்தையும் படைத்தார், மனிதனால் மயிரைக் கூடப் படைக்க முடியாது என்று நம்புவர்கள் தான் உயிரெடுக்கும் மரண தண்டனை ஆதரவாளர்களாகவும் உள்ளனர் என்பது நகைமுரண்
//
நேற்று கூகுள் ப்ளஸில் நண்பர் ஒருவர் 'அப்சலுக்கு இழைத்தது அநீதி என்றால் ஆண்டவன் அநியாயமாக தீர்ப்பு எழுதியவர்களை தண்டிப்பார்'
//
லாஜிக் இடிக்கிறதே????
அஃப்சலின் மரணத்துக்கு முழு முதல் காரணம் பார்லிமென்டில் தாக்குதல் நடத்தியவர்கள், அவர்களுக்கு உதவியவர்கள் தானே? அஃப்சலுக்கு தவறாக தண்டனை வழங்கி இருந்தால் அதன் தண்டனையை கடவுள் அவர்களுக்கு தானே கொடுக்க வேண்டும்?
அவர்கள் தாக்குதல் நடத்தி ஏழு பேரை கொல்லவில்லை என்றால் அஃப்சலுக்கு ஏன் தண்டனை கொடுத்திருக்க போகிறார்கள்?
மரணதண்டனை மட்டுமல்ல சிறை தண்டனை கூட குற்றவாளியின் குடும்பத்திற்கு தரப்படும் தண்டனைதான். குடும்பத்தில் உழைக்கும் நபர் சிறைக்கு போய்விட்டால் குடும்பம் என்ன செய்யும்?
தவறாக குற்றவாளிக்கு மரணதண்டனை வழங்கப்பட்டால் உயிரை திருப்பி தரமுடியாது. அதே மாதிரி தவறாக நீண்டகாலம் சிறையிடப்பட்ட ஒருவர் இழந்த ஆண்டுகளைக்கூடத்தான் திருப்பி தர இயலாது.
சிங்கப்பூர் மாதிரி நாடுகள் இன்னும் காட்டுமிராண்டிதனமாக சவுக்கடி தண்டனை வழங்குகின்றன. தவறாக தண்டிக்கப்பட்டவன் பெற்ற வேதனைக்கு என்ன பதில்?
தண்டனை வழங்கும் போது தவறாக அப்பாவிகள் தண்டிக்கப்பட்டுவிடும் வாய்ப்புக்கள் எப்போதும் உண்டு. இப்படி யோசித்தால் யாருக்குமே தண்டனை வழங்க முடியாது. உலகம் ஒரு ஜடியல் நிலையில் இயங்க இயலுமா?
ஏன் அப்சல் குடும்ப இழப்பினை மட்டும் யோசிக்கவேண்டும்? தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் இழப்பினை யோசிப்பது யார்? குற்றவாளி பாதிக்கபட்டவர்களின் குடும்பங்களை பற்ற யோசித்திருந்தால் மக்கள் அவரது குடும்பத்தை பற்றி கவலைபட்டிருப்பார்கள்.
இந்தியாவில் ஏற்கனவே rarest of rare எனும் குற்றங்களுக்கு மட்டுமே மரணதண்டனை வழங்கப்படுகிறது. சவுதி அரேபியா மாதிரி கொலைக்கு கொலை என்றோ அல்லது சிங்கப்பூர் மாதிரி போதைப் பொருட்கடத்தல் போன்ற குற்றங்களுக்கெல்லாம் மரணதண்டனை இல்லை. திட்டமிட்டு கொலை செய்து அடுத்தவரின் வாழும் உரிமை பறிக்கும் எவருக்கும் வாழ உரிமை இல்லை என்பதே எனது நிலை. கவனக்குறைவால் விபத்து ஏற்படுத்திய ஒட்டுனரை நிச்சயம் மன்னிக்கலாம். உணர்ச்சிவயப்பட்டு தவறாக கொலை செய்தவரை மன்னிக்கலாம். ஆனால் திட்டமிட்டு மாஸ் மர்டர் செய்யும் அல்லது திட்டமிடும் கொலைகாரனை அல்ல.
ரிசைனா கொல்லப்பட்டபோது ஒரு முஸ்லீம் இவ்வாறு எழுதியிருந்தார். 'ரிஸைனா செய்தது தவறு என்றால் அவர் அதற்கான தண்டனை பெற்றுவிட்டார். ஒருவேளை, அவர் தவறு செய்யவில்லை என்றால் அதுவும் நல்லதுக்கு தான். ஏனென்றால், அவர் நேரே சொர்க்கத்துக்கு செல்வார்'.
அவரோட கருத்தை அறிய ஆவல்.
கோவி,
இப்போ நீங்க என்ன தான் சொல்லவறிங்க, என்னக்குற்றம் செய்தாலும், கூப்பிட்டு வச்சு கொஞ்சம் நீதிக்கதைகள் சொல்லி மாலைப்போட்டு வாழ்த்தி அனுப்பிடலாமா? இல்லை சிலை வைக்கணுமா?
குற்றவாளியின் குடும்பம் பற்றிக்கவலைப்படும் நீங்கள் அக்குற்றவாளியால் பாதிக்கப்பட்டவரின் குடும்பம் பற்றி யோசிக்க வேண்டாமா?
குற்றம் செய்யும் முன் நமக்கு ஒரு குடும்பம் இருக்கு,நாம் மாட்டிக்கொண்டால் குடும்பம் பாதிக்கும்னு நினைக்க வேண்டும்,அப்படி நினைக்காமல் குற்றம் செய்துவிட்டால்,அப்புறம் என்ன குடும்பம்?
எனக்கு தேவையானது உங்கக்கிட்டே இருக்கு,நான் அதை அடைவது மிக அவசியம்,உங்களை கொன்றாவது அடைந்தாலும் எனக்கு தணடனை கிடைக்காது என்றால் நான் என்ன செய்வேன்?
அப்சல் குரு தணடனைப்பற்றி முன்னரே குடும்பத்துக்கு தெரிவிக்கவில்லை என்பது வேண்டுமானால் நியாயமானக்குற்றச்சாட்டு எனலாம்.
மற்றப்படி விசாரணை செய்து ,தண்டனை வழங்கப்பட்டு, கருணை மனு நிராகரிக்கப்பட்டு,தூக்கு தண்டனை உறுதிசெய்யப்பட்டே இருக்கிறது. சும்மா புடிச்ச உடனே தொங்கவிடலை.
ஆதாரம் இல்லைனு சொல்பவர்கள் கோர்ட்டில் சொல்லி இருக்கலாமே,அங்கே ஏன் சொல்ல முடியவில்லை,வக்கீல் கூடவா வாய்தொறந்து பேசவில்லை?
I never thought I would say this, I am actually ashamed……………
I agree with Mr. Vovval for the first and probably the last time……………
Cheez… I hate to say this…
//இந்தியாவில் ஏற்கனவே rarest of rare எனும் குற்றங்களுக்கு மட்டுமே மரணதண்டனை வழங்கப்படுகிறது. //
அரசியல் ரீதியாக கல்லாக் கட்ட வாய்ப்புள்ள கொலைகளும், ஜாமினில் வெளியே வர வாய்ப்பில்லாதவர்களும், பலரும் உற்று நோக்கும் கொலைகளில் மட்டுமே தண்டனைகள், மற்றபடி அரசியல்வாதிகள் தூண்டிவிடும் கலவரங்கள், கொலைகள் இவற்றிற்கான தண்டனைகள் வழங்கப்படுவதில்லை.
"பெரிய ஆலமரம் சாயும் பொழுது அக்கம் பக்கம் பாதிப்புகள் ஏற்படும்" என்று வியாக்கியானம் பேசுபவர்கள் நாம்
//குற்றவாளியின் குடும்பம் பற்றிக்கவலைப்படும் நீங்கள் அக்குற்றவாளியால் பாதிக்கப்பட்டவரின் குடும்பம் பற்றி யோசிக்க வேண்டாமா?//
மேலே கேட்டுள்ளேன், ஒருவன் ஒரு குழந்தையைக் கொன்றால் அவனுடைய குழந்தையைக் கொன்று இழப்பு வேதனை பற்றி அவனுக்கு உணர்த்தனும் என்பது போன்றவைகள் தான் தண்டனையா ? இதற்கு மாற்றான அவனுக்கு மட்டும் மரண தண்டனை என்பது என்னவிதமான நீதி ?
நாலு குற்றவாளிகள் மரண தண்டனையால் சாகும் பொழுது ஒரு அப்பாவி மரண தண்டனையால் செத்தால் வருந்திவிட்டு நம் சட்டத்தை காப்போற்றுவோம் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை
சகோ நந்தவனத்தானும், வவ்வாலும் சொன்னது மிகவும் சீரியஸான விடயம்.ஒரு பயங்கரவாதியால் கொல்லபடுபவர்கள் பலர். அந்த பலர் கொல்லபடுவதால் பாதிக்கபடும் அவர்களின் குடும்பத்தார் ஏராளம். ஆனால் சிலர் தண்டிக்கபட வேண்டிய பயங்கரவாதிக்காகவும் அவன் குடும்பத்திற்காகவும் கவலைபடுவது வேடிக்கையாக இருக்கிறது. தமிழகத்தில் சிலரிடம் அப்பாவி என்று பெயர் எடுக்க வேண்டுமானால் பயங்கரவாதம் செய்ய வேண்டும்.
//
நாலு குற்றவாளிகள் மரண தண்டனையால் சாகும் பொழுது ஒரு அப்பாவி மரண தண்டனையால் செத்தால் வருந்திவிட்டு நம் சட்டத்தை காப்போற்றுவோம் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை
//
ஆனால் அந்த ஒரு அப்பாவி சாகிறானே என்று நினைத்து மரண தண்டனை கொடுக்காமல் இருந்தால் அந்த நாலு குற்றவாளிகள் மேலும் நாற்பது அப்பாவிகளை கொல்வார்கள் என்பது ஏன் உங்களை போன்றவர்களுக்கு புரிய மாட்டேன் என்கிறது?
//மற்றபடி அரசியல்வாதிகள் தூண்டிவிடும் கலவரங்கள், கொலைகள் இவற்றிற்கான தண்டனைகள் வழங்கப்படுவதில்லை.
"பெரிய ஆலமரம் சாயும் பொழுது அக்கம் பக்கம் பாதிப்புகள் ஏற்படும்" என்று வியாக்கியானம் பேசுபவர்கள் நாம்//
இது ஒரளவுக்கு உண்மைதான். அபசல் குரு பலகாலம் முன்னாடியே தண்டனைக்கு உள்ளாகி இருக்கவேணும். அரசியல் காரணத்துக்காக தள்ளிப்போட்டது தவறு. குற்றவாளிக்கும் மனஉளைச்சல். மேலும் கலவரங்களில் கொலை புரிவோரையும் தூக்கிலிட வேண்டும் என்பது சரி. இது அரசியல் தலையீடு காரணமாக அதிகம் நடைபெறாவிடினும், தர்மபுரியில் மாணவிகளை உயிரோடு எரித்த ஆளும்கட்சி அரசியல்வாதிகளுக்கு அளிக்கப்பட்ட தூக்கு சரியான முன்னுதாரனம்!
கோவி,
// இதற்கு மாற்றான அவனுக்கு மட்டும் மரண தண்டனை என்பது என்னவிதமான நீதி ? //
இது என்ன மாதிரியான புரிதல்?
கால்ப்பந்த்து விளையாடும் போது கையால் பந்த்தினை தொடக்கூடாது என்பது ஆட்டவிதி,கால்ப்பந்து விளையாட அவ்விதிக்கு உட்ப்பட்டுத்தான் ஒருவர் களத்தில் இறங்குகிறார், ஆடும் போது ,கையால் பந்த்தினை தொட்டு விட்டு, என் உடம்பில் கையும் இருக்கு,காலும் இருக்கு நான் எதால் வேன்டுமானலும் பந்தை அடிப்பேனை,ஏன்னா நான் தான் ஆடுறேன் ,என் கால்மட்டுமா ஆடுது, ஆட்டவிதி தப்பா இருக்குன்னு சொன்னா என்ன சொல்லுவீங்க?
அதே போல நமது சமுதாயத்தில் குற்றங்களை கட்டுப்படுத்த என குற்றவியல் தண்டனை சட்டங்கள் முன்னரே வகுக்கப்பட்டு ,நமக்கு அறிவுறுத்துவது என்னவென்றால் ,கொலைக்குற்றம் செய்தால் மரணத்தண்டனை கிடைக்கும் என, இது நமக்கான சுய ஒழுக்கத்தினை கடைப்பிடிக்க சொல்லும் முன்னெச்சறிக்கை.
இது அனைவருக்கும் தெரிந்த சட்டவிதி,அது தெரிந்தே இச்சமூகத்தில் வாழ்கிறோம், அதாவது நம் சமுதாயத்தின்"ஆட்டவிதி" அதில் கலந்துக்கொண்ட பின் அவ்விதியை ஏற்று தான் ஆடவேண்டும்.
அப்போ விதிக்கப்பட்ட விதி தவறாக இருக்கு,அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமா? என்றால் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் மாற்றம் வேண்டும் என சொல்ல வேண்டுமானால் ,ஆட்டம் துவங்கும் முன்னேரே பேச வேண்டும், அதாவது குற்றம் செய்யாமல்,தண்டனை கொடுக்காமல் இருக்கும் போதே அதனைப்பற்றி பேச வேண்டும்,ஆனால் என்ன செய்கிறோம், ஒவ்வொரு முறையும் ,குற்றம் செய்து தண்டனைக்கொடுக்கும் போது மட்டும், விதி தப்பா இருக்கே, எப்படி சரினு கேள்விக்கேட்டால், செய்த குற்றத்துக்கு இருக்கும் சட்டத்தின் படி தண்டனைக்கொடுக்காமல் இருக்க முடியுமா?
முன்னரே சட்டம் இது தான் தண்டனைனு சொல்லும் போது அத்தண்டனையில் சிக்காமல் இருக்க வேண்டுமானால் ,அக்குற்றத்தினை செய்யாமல் இருக்க வேண்டும், ஒரு சட்டம் இருப்பதே குற்றவாளியை தண்டிக்க என்பதை விட அக்குற்றம் செய்யாமல் தடுக்க,செய்தால் கடும் தன்டனை என அச்சத்தினை உருவாக்கி குற்றம் செய்யாமல் இருக்க மக்களுக்கு சட்டம் மீதான பயத்தினை உருவாக்க செய்யவே ,செய்தால் என்ன தண்டனை என சொல்லி சமூக ஒழுங்கினைக்காக்கவே. மீறும் போதே தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
அனைவருக்கும் உயிர் வாழ ஆசை இருக்கும் ,எனவே அந்த ஆசைக்காகவாவது கடுங்குற்றம் செய்யாமல் இருக்க செய்யும் முந்தடுப்பு சட்டமே மரணத்தண்டனை சட்டம்.
திட்டமிட்ட குற்றம்,தற்செயல் குற்றம் என அலசியே மரணத்தண்டனை கொடுக்கப்படுகிறது, ஆத்திர அவசரத்தில் செய்த குற்றத்துக்கு ஆயுள் தண்டனையே கொடுக்கப்படுகிறது.
வாகன ஓட்டுனர் விபத்தினை உதாரணமாக சொல்லி சிங்கையில் உயர்வாக சட்டம் இருக்கு மரணத்தண்டனை இல்லையே என சொல்லி இருப்பது ,எதற்கு என்றே தெரியவில்லை, இந்தியாவில் வாகன விபத்தில் உயிர் போனால் ஓட்டுனருக்கு மரணத்தண்டனையா விதிக்கிறார்கள்?
ஆனால் நீங்களே இந்தியாவில் பயங்கரமான சாலை விபத்து நடந்துவிட்டால் ஓட்டுனரை கடுமையாக தண்டிக்க வேண்டும் என சொல்லக்கூடும் :-))
இந்தியாவில் பணஅபராதம் விதிக்கக்கூடிய தண்டனைக்கு சிங்கப்பூரில் ,பண அபராதம் + பின்ப்புறத்தில் பிறம்ப்படியும் உண்டு, நீங்கள் பிரம்ப்படி தண்டனை தவறு என நினைக்கிறீர்களா?
திட்டமிட்ட, கொடூர,இயல்புக்கு மாறான, குற்றங்களுக்கு மிகவும் தேவையான நிலையில் மட்டுமே மரணத்தண்டனை இந்தியாவில் விதிக்கப்படுகிறது.
ஒரு "அச்சடித்த புத்தகத்தினை" எரித்தால் எல்லாம் மரணத்தண்டை விதிக்கப்படுவது இல்லை!!!
தொடரும்....
தொடர்ச்சி...
//நாலு குற்றவாளிகள் மரண தண்டனையால் சாகும் பொழுது ஒரு அப்பாவி மரண தண்டனையால் செத்தால் வருந்திவிட்டு நம் சட்டத்தை காப்போற்றுவோம் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை//
நூறு குற்றவாளி தப்பித்தாலும் ஒரு நிராபராதி தண்டிக்கப்படக்கூடாது என்று இந்திய குற்றவியல் சட்டம் ரொம்ப மென்மையாக ,பல வழிகளுடன் இருக்கு என்பதை இன்னும் நீங்கள் புரிந்துக்கொள்ளவில்லை என்றே தெரிகிறது.
செஷன்ஸ் கோர்ட், ஹைக்கோர்ட், அதுல அப்பீல், பெஞ்ச், பின்னர் உச்ச நீதிமன்றம், அதுல பல அப்பீல், மறு சீராய்வு, பின்னர் கருணை மனு என ஏகப்பட இடங்களில் வழக்கு ,ஆண்டுக்கணக்கில் இழுக்கப்படும் நிலையில்,ஒரு இடத்தில் கூட நிரபராதி என நிறுப்பிக்க முடியாமல் போகும் பட்சத்தில் தான் தண்டனை, ஏன் ஒரு இடத்திலும் தனது "இன்னொசன்ஸ்"ஐ நிருபிக்க முடியாமல் ஒருவருக்கு போகிறது?
போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட்டு,அதில் அப்பாவி நிருப்பிக்க முடியாத சூழலில் வெகு சில வழக்குகளில் தான் தூக்கு தன்டனை விதிக்கப்படுகிறது.
குற்றங்களை தடுக்க சட்டம் இன்னும் கடுமையாக்கப்படணும் எனவும் சொல்கிறார்கள்,அப்புறம் கடும் தண்டனையே இருக்கக்கூடாதும்னும் சொல்லுறாங்க,என்னதான் செய்ய?
கொலைக்குற்றம் செய்தவனை எல்லாம் இனிமே அவங்க அவங்க மதச்சாமியாரை கூப்பிட்டு நீ செத்தவுடன் நரகத்துக்கு செல்வாய் என சாபம் கொடுக்க சொல்லிட்டு ,வெளியிட விட்டுறலாம் :-))
அவனும் நரகத்துக்கு போகப்போறோமேனு மனம் வருந்தி ,திருந்திடுவான்(ஒரு கொலைக்கும் நரகம் தான் இன்னொரு கொலை செய்தாலும் நரகம் தான்னு கிளம்பிட்டா என்ன செய்வதாம்?)
அவசரத்தில்/கோபத்தில் செய்யப்படும் கொலைகளுக்கும், ஏதோ ஒன்று செய்யப்போக அது கொலையாக மாறும் பட்சத்திலும், குற்றவாளி மைனராக இருக்கும் பட்சத்திலும் குற்றவாளிக்கு மரண தண்டனை கொடுப்பதில்லை.
அரிதிலும் அரிதாக, திட்டமிட்டு, தான் செய்யும் செயலால் விளையும் பாதகத்தை உணர்ந்தும் குற்றத்தை செய்பவர்கள் தான் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அதுவும், கடைசியில் ஜனாதிபதியின் கருணைக்கு அனுப்பப்படுகிறது. இதையெல்லாம் தாண்டி தான் மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
அப்சல் விஷயத்தில் சில கேள்விகள் வீசப்பட்டு அதற்கு பதில் கிடைக்கவில்லை என்பதற்காக (பதில்கள் இல்லை என்பதற்காக இல்லை) நீதிமன்றங்களையும்/இந்திய தேசத்தையும் குறை சொல்லும் அருந்ததி சூஸனா ராய் போன்றவர்கள் வழக்கு நடக்கும் போது ஏன் நீதிமன்றத்தில் இந்த கேள்விகளை கேட்கவில்லை?
இப்பொழுது அப்சல் தியாகியாக்கப்படுவான், வீரப்பன்/பேரரிவாளன் போல. இந்த கருமங்கள் தான் ஜனநாயகத்தின் மைனஸ்கள்.
நந்த வனத்தான்,
//தர்மபுரியில் மாணவிகளை உயிரோடு எரித்த ஆளும்கட்சி அரசியல்வாதிகளுக்கு அளிக்கப்பட்ட தூக்கு சரியான முன்னுதாரனம்! //
இன்னும் அந்தப் பசங்க உயிரோடுதான இருக்காங்க ...? கூட்டணியை வைத்து அவர்களுக்கு மன்னிப்பா, தூக்கா என்பது முடிவு செய்யப்படுமோ?!
இதுபோலவே அரசியல்வாதிகளுக்கும் செய்வார்களா?
இது தவறானது
மரணதண்டனையால் குற்றங்கள் குறைந்து விடுமென்றால் இது வரையிலும் தொடரும் மரணதண்டனைகள் எப்படி திரும்ப திரும்ப உருவாகின்றன.
குற்றங்களை இரு வகைப்படுத்தலாம்.முதலாமவது பின்விளைவுகள் பற்றி யோசிக்காத கண நேர தவறுகள்.இரண்டாம் வகை திட்டமிடல் வகையில் மரணமும் சம்மதமே வகை.கஸாப்பும்,அப்சல் குருவும் இரண்டாம் வரிசையில் நிற்கிறார்கள்.
கஸாப் உயிரோடு இருக்கிற ஒற்றைக் காரணத்தினால் மட்டுமே மரணதண்டனை.ஒருவேளை ஏனையவர்களுடன் போயிருந்தால் மரணதண்டனைக்கான அவசியமிருந்திருக்காது.அப்சல் குருவின் செயல் இந்திய ஜனநாயகத்திற்கு விட்ட சவால் என்ற போதிலும் இரண்டு நிகழ்வுகளுக்கும் முக்கிய காரணம் India is a soft state என்பதே.
இந்தியா தலைவெட்டி காட்டுமிராண்டிகளாக இல்லாவிட்டாலும் கூட கஸாப்,அப்சல் குருவுக்கான தண்டனையாக நிரந்தர வாழ்நாள் தனிமை சிறை என்பதே சரியான தண்டனையாக இருக்க முடியும்.மரணம் நிரந்தர தீர்வல்ல.காரணம் மரணத்தை தாண்டியும் குற்றங்கள் நிகழும் சமூகமாகவே உலகம் இருக்கிறது.
தலைவெட்டி காட்டுமிராண்டிகளிலிருந்து இந்தியா வித்தியாசப்படுவது மட்டுமே இந்திய ஜனநாயகத்தை இன்னும் வாழவைக்கும்.
கஸாப்பின் திருட்டு மரணதண்டனைக்கும் கூட காரணங்கள் இருக்கின்றன.அப்சல் குருவையும் அதே வழியில் மரணிக்க வைத்தது இந்தியாவின் இன்னுமொரு கோழைத்தன முகத்தையே காட்டுகிறது.
//இன்னும் அந்தப் பசங்க உயிரோடுதான இருக்காங்க ...? கூட்டணியை வைத்து அவர்களுக்கு மன்னிப்பா, தூக்கா என்பது முடிவு செய்யப்படுமோ?//
சுப்ரீம் கோர்ட்டில் தண்டனை உறுதி செய்யபட்ட போதிலும், தண்டனையை மறுபரிசீலனை செய்ய கோரும் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டு விசாரணையில் உள்ளது. ஆதலால் சுப்ரீம் கோர்ட் இடைக்காலத்தடை விதித்துள்ளது. மரணதண்டனை என்பது அரிதிலும் அரிதான குற்றங்களுக்கே விதிக்கப்படுவதால் தண்டனையை நீதிபதிகள் உறுதி செய்ய மிகுந்த கால தாமதம் ஆகும். இனி இவர்கள் சனாதிபதியிடம் கருணை மனு போட்டு... ஒருவேளை அந்த நிலையில் கூட்டணி அடிப்படையில் முடிவு செய்யப்படலாம். மறுப்பதற்கில்லை.ஏற்கனவே நான் சொன்னது போல நாம் வாழ்வது ஐடியல் உலகம் அல்ல. எல்லா விடயங்களும் பலவித காரணிகள் மூலமே நிர்ணயிக்கபடுகின்றன.
அப்சல் குரு, கசாப் போன்றவர்கள் பாகிஸ்தானிய ஆதரவு தீவிரவாதிகள் என்பதால் ஸ்பெஷல் கவனிப்பு தரப்பட்டிருக்கிறது.
//கவியாழி கண்ணதாசன் சொன்னது…
இதுபோலவே அரசியல்வாதிகளுக்கும் செய்வார்களா?
இது தவறானது//
அரசியல்வாதிகள் எவரும் இதுவரை பயங்கரவாத இயக்கம் ஒன்றின் உறுப்பினராக இருந்து பாராளுமன்றத்தை தாக்கவில்லை.அரசியல்வாதி அப்படி நடத்தால் அவருக்கும் அதே தண்டனை கிடைக்கும்.கிடைக்க வேண்டும்.
அரசியல்வாதிகள் எவரும் இதுவரை பயங்கரவாத இயக்கம் ஒன்றின் உறுப்பினராக இருந்து பாராளுமன்றத்தை தாக்கவில்லை.அரசியல்வாதி அப்படி நடத்தால் அவருக்கும் அதே தண்டனை கிடைக்கும்.கிடைக்க வேண்டும்.//
நாளிதழ் அலுவலகம் எரிப்பில் மூன்று பேர் இறந்தது உண்மை, இதற்கெல்லாம் யாருக்கும் தூக்கு தண்டனைக் கிடைத்தது போல் தெரியவில்லை, இவை நமக்கு தெரிந்தது, இது போல் எண்ணற்றவை. கும்பகோணம் மகா மகத்தில் பலர் இறந்தது விபத்து என்று சென்றுவிடுவோம், ஆனால் சரியான பாதுகாப்பு / ஒழுங்கு குறைபாடுகளால் நடந்தது அது ஒரு கொலை என்று தானே பார்க்க முடியும் ?
பெரிய ஆலமரம் சாய்ந்த பொழுது ஏற்பட்ட அதிர்வுகளில் ஜஸ்ட் 1000 பேர்கள் வரை கொல்லப்பட்டதாக சொல்கிறார்கள், இதுக்கெல்லாம் யார் தண்டனை அடைந்துள்ளனர் ?
//ராஜ நடராஜன் கூறியது...
மரணதண்டனையால் குற்றங்கள் குறைந்து விடுமென்றால் இது வரையிலும் தொடரும் மரணதண்டனைகள் எப்படி திரும்ப திரும்ப உருவாகின்றன.//
இதற்கெல்லாம் யாரும் பதில் சொல்ல மாட்டார்கள்.
1. உணர்ச்சி வசப்பட்டு கொலை செய்பவர்கள் சட்டம் என்ன தண்டனை தரும் என்றெல்லாம் யோசிக்க வாய்ப்பில்லை
2. திட்டமிட்டு படுகொலை செய்பவர்களுக்கு சட்டம் என்ன தண்டனை கொடுத்தாலும் கவலை இல்லை.
//நாளிதழ் அலுவலகம் எரிப்பில் மூன்று பேர் இறந்தது உண்மை இதற்கெல்லாம் யாருக்கும் தூக்கு தண்டனைக் கிடைத்தது போல் தெரியவில்லை//
நாளிதழ் அலுவலகம் எரிப்பையும் உலகம் முழுவதும் காட்டபட்ட இந்திய பாராளுமன்றத்தின் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதலையும் ஒப்பிடுவது முறையல்ல. பயங்கரவாதிகளிலேயே நீதி விசாரணைகளின் பின் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று விடுதலை செய்யபட்டவர்கள் இருக்கிறார்கள். அதே மாதிரி நாளிதழ் அலுவலகம் எரிப்பில் சம்பந்தபட்டவர்கள் விடுதலை செய்யபட்டிருக்கலாம்.
நீதி விசாரணையின் பின் அப்சல் குரு என்ற பயங்கரவாதி தண்டிக்கபட்டிருக்கிறான்.
கோவி,
//நாளிதழ் அலுவலகம் எரிப்பில் மூன்று பேர் இறந்தது உண்மை, இதற்கெல்லாம் யாருக்கும் தூக்கு தண்டனைக் கிடைத்தது போல் தெரியவில்லை, //
தெளிவா சொல்லுங்க,
நம்ம அரசியலமைப்பு சட்டம் தப்பா? இல்லை அதனை செயல்ப்படுத்தும் அதிகாரத்தில் உள்ளவர்கள் தவறா?
அரசியலமைப்பு சட்ட புத்தகமே பறந்து வந்து எல்லாருக்கும் தண்டனைக்கொடுக்கும்னு நினைக்கிறிங்களா?
நீங்க சொன்னதன் அடிப்படையில் பார்த்தாலும் ,வழக்கில் சிக்கினால் மரண தண்டனைனு எடுத்தேன் கவிழ்த்தேன் இல்லைனு தானே அர்த்தம் , அவர்களுக்கு தண்டனை கிடைக்க வைக்க சட்டத்துறை செயல்ப்பட்டால் கிடைக்கும்.
நீங்க ஒன்னு முறையா விசாரணை நடக்கலைனு சொல்லுறிங்க,அப்புறம் விசாரணை செய்து தன்டனைக்கொடுத்தால் தண்டனைக்கொடுக்கவே கூடாதுனும் சொல்லுறிங்க?
பத்திரிக்கை அலுவலகம் எரித்த வழக்கில் வருங்காலத்தில் தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டால் ,அப்போ மரண தண்டனை சரினு சொல்ல ஆரம்பிச்சுடுவீங்களா என்பதை தெளிவுப்படுத்தவும் :-))
வவ்வால்,
உண்மையிலேயே இது ரொம்ப கவலையான போக்காக உள்ளது. தனது குடும்பத்தின் ஏழ்மையை போக்க சவூதி சென்ற பெண்ணை சரியான நீதி விசாரணையில்லாம கழுத்தறுத்து சவூதி படு கொலை செய்ததை தங்க மத கடமையா நியாயபடுத்தும் மத வெறி கூட்டம் தான் தமிழகத்தில் இருக்குது என்றல் இப்போ இந்திய பாராளுமன்றத்தை தாக்கியவருக்கு விசாரணை செய்து தன்டனைக்கொடுத்தால் எப்படி அந்த உத்தமருக்கு தண்டனைகொடுப்பீங்க? என்று புறப்பட்டிருக்கிறார்கள் மதவெறி கூட்டத்தைசேராத மதகடமை எதுவும் இல்லாத சிலர். ஜனநாயக சுதந்திரத்தை தவறாக புரித்து கொள்ளல் மட்டுமல்லாம,ஜனநாயக சுதந்திரங்களை தவறாகபயன்படுத்தி அஜராகத்தை ஆதரிக்கும் போக்குமாகும் இது.
வவ்வால் உங்க தெளிவான கருத்துக்கள் குழப்பமடைந்தவர்களுக்கு தெளிவை தரும். சீனுவும் நல்லா சொன்னார்.
வவ்வால் மரண தண்டனைக்கு பயந்தால் குற்றங்கள் குறையும் என்கிற கருத்தை ஒட்டி மரண தண்டனைக்கு ஆதரவான கருத்துகளை நான் நிராகரிக்கிறேன்.
திருட்டுக்கு தண்டனை என்பதால் தான் நானோ, நீங்களோ திருடாமல் இருக்கிறோம் என்பது போன்றது அந்த கூற்று.
இது மட்டுமல்ல, மறைவாக பாலியல் தொழிலாளியிடம் சென்று வருவதற்குக் கூட சமூகத்தில் மிகப் பெரிய சாகசம் இல்லை, ஆனாலும் எத்தனைபேர் அந்த கருமாந்திரத்தில் சென்று திளைத்திருக்கிறார்கள் ?
திட்டமிட்ட கொலைகள் தண்டனைக்கு பயப்படுவது கிடையாது. உங்கள் மரண தண்டனை ஞாயங்களைப் பார்த்தால் 'தற்கொலை படையில் இறப்பவர்களுக்கு என்ன தண்டனை ?'
பலகொலைகளை செய்துக் கொள்பவன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும், அல்லது தற்கொலைக்கு துணிவு உள்ளவன் தான் கொலை செய்யவும் துணிய வேண்டும், இல்லை என்றால் நாங்களே தூக்கில் போடுவோம் என்பது தானே மரண தண்டனை ?
இதில் என்ன நீதி நிலைநாட்டப்படுகிறது ? யாருக்கு பயம் ஏற்படும் ? எனக்கு சத்தியமாக புரியவில்லை
ராஜ நடராஜன் தெளிவாகவே சொன்னார் அப்சல் குருவுக்கு தண்டணை சரியானது ஆனா மரணதண்டனை கூடாது என்பதை . மரணதண்டனை கூடாது என்பதை மேற்குலகு நாகரிக உலகத்துடன் இணைந்து நானும் நிராகிக்கிறேன். ஆனால் அரபு சார்பு காட்டுமிராண்டி சிந்தனை கொண்ட எமது தமிழர்கள் சிலரிடம் இவை எடுபடுமா? இந்தியாவில் அரபு சார்பு அடிமைகளை சிறு பகுதி கொண்ட நாட்டில் இது சாத்தியமா என்றே சிந்திக்கிறேன்.
சிங்கப்பூரில் போதை விற்பவர் நிச்சயமாக மரண தண்டனை பெறுவார்.. அதனால் பெருமளவு குற்றங்கள் குறைந்துள்ளன.. பள்ளி செல்லும் நம் வீடு சிறுவர் இந்த கொடுமையில் மாட்ட கூடாது என்பதால் இதை பலரும் ஆதரிப்பார். அது போலத்தான் நாடும். இந்தியா என்ற சுதந்திர நாட்டின் அடி கட்டமைப்பின் மீது திட்டம் போட்டு தாக்குவார்கள் அவர்களுக்கு மரண தண்டனை கூடாது என்றால் எப்படி. சில வகை குற்றங்களுக்கு மரண தண்டனை மட்டுமே பயம் தரும். தவறு செய்பவன் பல முறை குற்றம் செய்ய சிந்திப்பான்.
கோர்ட்டு என்பது நீதி தரும் அமைப்பு. அங்கு சரி தவறு என்பது அந்நாட்டு மக்கள் அரசியல் அமைப்பில் எழுதி வைத்துள்ளது. சரி தவறு என்பது நாடு நாடு மாறும். இதுவே சரி என்று பூமியில் யாரும் நிர்ணயம் செய்ய முடியாது. தர்மபடி, நியாயப்படி என்றாலும் அது யார் தர்ம படி என்று கேள்வி கேட்க படும்.
ஜன நாயக நாடுகளில் (இஸ்லாமிய நாடுகளை கணக்கில் கொள்ள வேண்டாம்) மரண தண்டனை அவ்வளவு எளிதாக தரபடுவதில்லை.. அதுவும் இந்திய போன்ற நாட்டில் கோடி கணக்கில் மக்கள் பணம் செலவு செய்த பின் தர படுகிறது எதற்காக, ஒரு குற்றவாளி சந்தேகம் இல்லாமல் நிருபிக்க பட வேண்டும் என்பதற்காக. எதிர் கேட்டு கொண்டே போகலாம்.. அதனால் சட்டத்தில் (Res Judicata) பிரிவு உண்டு. ஒரு அளவிற்கு பிறகு நீதி மன்றம் மீண்டும் மீண்டும் அதையே விசாரணைக்கு எடுக்காது.(இதை மரண தண்டனை குற்றங்களுக்கு அதிகம் பயன் படுத்துவதில்லை)
ஆக எந்த குற்றத்திற்கு மரணதண்டனை என்பதில் வேண்டுமானால் கருத்து வேறுபடலாம். நம் வாழ்வும் , சுற்றியுள்ளோர் வாழ்வும் குலைக்க பட்டு , குற்றம் செய்தவர், அதை செய்ய சொன்னவர். அதற்கு ஆதரவு அளித்தோர் நல வாழ்வு பெற்று இருப்பது சரியே என்று பெரும்பான்மையோர் முடிவு செய்தால் இங்கு என்ன நடக்கும் என்பது பலருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்.
கோவி,
சரி நீங்கள் சொல்லுவதே சரியானதாக இருக்கட்டும்,
ஒரு சேவையை பெற பலர் வரிசையில் நிற்கிறார்கள், ஆனால் ஒருவர் வரிசையில் நிற்காமல் நேரே சென்று கவுண்டரில் வாங்கிக்கொள்கிறார்.
இப்பொழுது ஏன் வரிசையில் நிற்கவில்லை, அனைவரும் நிற்கிறோமே எனக்கேட்டால் குறுக்கே போனவன் ,நான் போய்க்கேட்டேன் கொடுத்தார்கள் வேணும்னா நீங்களும் போய் வாங்கிக்கலாம் என்கிறான், நீங்கள் கவுண்டர் ஸ்டாபிடம் எப்படி வரிசையில் வராதவர்களுக்கு சேவை செய்யலாம் எனக்கேட்டால், யார் முன்னர் வந்து கேட்கிறார்களோ அவர்களுக்கு கொடுப்பேன் , வரிசைப்பற்றி எனக்கு கவலை இல்லை என்கிறார், மேலதிகாரியிடம் சொன்னால், வரிசைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை, முதலில் வருபவர்க்கே முன்னுரிமை என்றால், நீங்கள் மீண்டும் அதே இடத்தில் வரிசையில் நிற்பீர்களா?
இல்லை யாராவது வரிசையில் நிற்பார்களா?
வரிசையில் நிற்பவருக்கும்,குறுக்கே செல்பவருக்கும் ஒரு வித்தியாசம் இருக்க வேண்டுமல்லவா?
அதே போல கொலை செய்தவர்களுக்கும்,கொலை செய்யாதவர்களுக்கும் தண்டனையில் வித்தியாசம் இருக்க வேண்டுமல்லவா?
கடுங்குற்றம் -கடும் தண்டனை என வரையறுத்துள்ளார்கள்.
நீங்கள் சொன்னது போல உயிர் வெறுத்து தற்கொலைப்படையாக மாற நினைப்பவர்கள் சதவீதம் 0.01 கூட இருக்காது, வர்கள் தண்டனை என தெரிந்தே குற்றம் செய்யலாம், ஆனால் வழக்கமாக குற்றம் செய்ய தயங்கும் மக்கள் மிக அதிகம், சட்டம்,தண்டனை எனக்கடுமையாக இருந்தால் மற்றவர்கள் எல்லாம் தவறு செய்ய தயங்குவார்கள்.
சட்டம்,தண்டனைப்பற்றி கவலைப்படாமல் குற்றம் செய்பவர்கள் ஒருபக்கம்,இவர்கள் எப்பொழுதும் குற்றம் செய்யக்கூடியவர்கள் எனலாம்.
ஆனால் வாய்ப்போ, ஒரு அழுத்தமோ இல்லாமல் குற்றம் செய்ய தயங்கும் பொது ஜனமே மிக அதிகம், அவர்கள் அப்படி செய்யாமல் இருக்க காரனம் மாட்டிக்கொண்டால் தண்டனை,அசிங்கம் என்பதே, எனவே தண்டனையே இல்லை என்றால் சும்மா இருக்காமல் தப்பு செய்வோமே என அனைவருமே குற்றம் செய்யக்கூடும்.
சட்டம்,தண்டனை என்பது குற்றசிந்தனையாளர்களை கட்டுப்படுத்த என்று இல்லை என்றாலும், அனைவரையும் குற்றம் செய்யலாம் என துணிச்சல் அளிக்காமல் தடுக்கவே என புரிந்துக்கொண்டால் சரி.
குற்றம் புரிவதில் நாட்டம் கொண்டவர்கள் எப்படி இருந்தாலும் செய்யத்தான் போகிறார்கள்,ஆனால் சட்டம் ,தண்டனை என ஒன்று இல்லை எனில் அனைவருமே குற்றம் செய்ய தயங்கமாட்டார்கள்.குற்றத்தின் அளவு அதிகரிக்கும்.
சட்டம் என்பது கிரைம் கண்ட்ரோலிங் மெத்தட், எராடிகேஷன் அல்ல. ஏன் எனில் குற்றங்களை முழுவதும் நிறுத்தவே முடியாது, நிறுத்த முடியாது எனில் ஏன் சட்டம்,தண்டனை என்பது விதண்டாவாதமே :-))
அக்காலத்தில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கு தடையே இல்லை எனவே ஜமீந்தார்கள், வெள்ளைக்கார துரை என எல்லாம் வேட்டையாடி போட்டொ எடுத்துக்கொண்டார்கள், ஏன் பொது மக்களும் வேட்டையாடி தீர்த்தார்கள், இதனால் புலி போன்ற விலங்குகள் அருகியது, இப்பொழுதும் தடை இல்லை என்றால் என்னாகும்,எஞ்சிய புலிகளும் வேட்டையாடப்படுமா இல்லையா?
ஒரு சட்டம்,தண்டனை என இருப்பதால் தான் கொஞ்சம் வனவிலங்குகள் இருக்கு, அதை மீறக்கூடிய்வர்களும் இப்பவும் இருக்காங்க,ஆனால் எல்லாருமே வேட்டையாடாமல் தடுக்க சட்டம்,தண்டனை உதவ செய்கிறதா இல்லையா?
//சிங்கப்பூரில் போதை விற்பவர் நிச்சயமாக மரண தண்டனை பெறுவார்.. அதனால் பெருமளவு குற்றங்கள் குறைந்துள்ளன.. பள்ளி செல்லும் நம் வீடு சிறுவர் இந்த கொடுமையில் மாட்ட கூடாது என்பதால் இதை பலரும் ஆதரிப்பார். அது போலத்தான் நாடும். இந்தியா என்ற சுதந்திர நாட்டின் அடி கட்டமைப்பின் மீது திட்டம் போட்டு தாக்குவார்கள் அவர்களுக்கு மரண தண்டனை கூடாது என்றால் எப்படி. சில வகை குற்றங்களுக்கு மரண தண்டனை மட்டுமே பயம் தரும். தவறு செய்பவன் பல முறை குற்றம் செய்ய சிந்திப்பான்.
இந்தியாவில் பணஅபராதம் விதிக்கக்கூடிய தண்டனைக்கு சிங்கப்பூரில் ,பண அபராதம் + பின்ப்புறத்தில் பிறம்ப்படியும் உண்டு, நீங்கள் பிரம்ப்படி தண்டனை தவறு என நினைக்கிறீர்களா?
//
சிங்கப்பூரில் போதைப் பொருள் 100 கிராம் அளவில் எடுத்து வந்தாலே முன்பு தூக்கு தான், தற்பொழுது விவரம் தெரியாமல் முதல் முறை கொண்டுவருபவர்கள் (கூரியராக செயல்படுவர்களுக்கு) சிறைதண்டனை கொடுக்கிறார்கள், சிங்கப்பூர் கிரிமினல் சட்டம் என்று தனியாக ஒன்றும் இல்லை. இங்கே தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பொதுவாக நடைமுறையில் உள்ள குற்றவியல் சட்டம் தான் இங்கும் உள்ளது.
மரண தண்டனைகளுக்கு பயந்து குற்றங்கள் குறைவதில்லை, ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு போதைப் பொருள் கடத்தும் கும்பல் சிக்கிக் கொண்டு தான் இருக்கின்றனர்.
என்னைப் பொருத்த அளவில் குற்றத்திற்கான தண்டனைகள் திருந்துவதற்கான வாய்ப்பு என்ற அளவில் இருப்பது மனித நேயம், இல்லை கொல்லுவேன் என்றால் குற்றவாளிக்கும் தண்டனை தருபவர்களுக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை
//ஒரு சட்டம்,தண்டனை என இருப்பதால் தான் கொஞ்சம் வனவிலங்குகள் இருக்கு, அதை மீறக்கூடிய்வர்களும் இப்பவும் இருக்காங்க,ஆனால் எல்லாருமே வேட்டையாடாமல் தடுக்க சட்டம்,தண்டனை உதவ செய்கிறதா இல்லையா?//
மரண தண்டனை ஒழித்து கட்டிய நாடுகளில் குற்றங்கள் பெருகி இருப்பதாக புள்ளி விவரங்கள் எதுவும் இல்லை. எனவே மரண தண்டனை குற்றங்களைக் குறைக்கும் என்கிற வாதம் பொருளற்றது
மரண தண்டனை ஒழித்துக்கட்டிய நாடுகளில் பிரம்படி தண்டனையும் இல்லை, எனவே பிரம்படி குற்றங்களை ஒழிக்கும் என்பதும் பொருளற்றது.
வரிசையில் நிற்காமல் செல்வதால் ,குற்றங்கள் நடைப்பெறுவதில்லை,எனவே வரிசையில் நின்று சேவை பெற வேண்டும் என சொல்வதும் சரியல்ல,
பொது இடத்தில் குப்பை போட்டால் அபராதம் இல்லை என சொன்னாலும் ,அனைவரும் பொறுப்பாக குப்பை தொட்டியில் தான் போடுவார்கள்,எனவே குப்பைக்கொட்டுவதற்காக அபராதம் விதிப்பதும் தேவை இல்லாதது :-))
இதே போல பொக்குவரத்து விதிகள்,லஞ்சம்,ஊழல் ஆகியவற்றிற்கு தண்டானை தேவையில்லை,அனைவரும் தானே சுயக்கட்டுப்பாட்டில் ஒழுக்கமாக இருப்பார்கள்,
இப்படி பலவற்றையும் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என நினைக்கிறேன் :-))
// வவ்வால் கூறியது...
மரண தண்டனை ஒழித்துக்கட்டிய நாடுகளில் பிரம்படி தண்டனையும் இல்லை, எனவே பிரம்படி குற்றங்களை ஒழிக்கும் என்பதும் பொருளற்றது.//
பிரம்பால் அடிப்பது, கைவெட்டுவது, தலைவெட்டுவது உள்ளிட்டவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை, உடல் உறுப்புகளை தண்டனை என்கிற பெயரில் காயப்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை.
மரண தண்டனை குறித்து ஞாயம் சொல்லும் உங்களால் பொது இடத்தில் கல்லால் அடித்து கொல்வதையும், தலைவெட்டுவதையும் ஞாயம் என்று கருத முடியுமா ? தூக்கில் போடுவதை விட விஷ ஊசி அல்லது துப்பாக்கியில் சுடுவது இன்னும் எளிதான மரண தண்டனையாம். மரண தண்டனைக்கு ஆதரவளிப்பவர்களில் பலர் கல்லால் அடித்துக் கொல்வதையும், கழுத்தை அறுத்து கொல்வதையும் தவறு என்கிறார்கள். நீங்கள் எப்படி ?
//வரிசையில் நிற்காமல் செல்வதால் ,குற்றங்கள் நடைப்பெறுவதில்லை,எனவே வரிசையில் நின்று சேவை பெற வேண்டும் என சொல்வதும் சரியல்ல,
பொது இடத்தில் குப்பை போட்டால் அபராதம் இல்லை என சொன்னாலும் ,அனைவரும் பொறுப்பாக குப்பை தொட்டியில் தான் போடுவார்கள்,எனவே குப்பைக்கொட்டுவதற்காக அபராதம் விதிப்பதும் தேவை இல்லாதது :-))
இதே போல பொக்குவரத்து விதிகள்,லஞ்சம்,ஊழல் ஆகியவற்றிற்கு தண்டானை தேவையில்லை,அனைவரும் தானே சுயக்கட்டுப்பாட்டில் ஒழுக்கமாக இருப்பார்கள்,
இப்படி பலவற்றையும் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என நினைக்கிறேன் :-))//
பொறுப்பின்மைக்கு தனிமைச் சிறை அல்லது அபராதம் விதித்தல் தேவை தான் அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனாலும் தண்டனைக்கு அல்லது அவமானத்திற்கு பயந்து தான் பொது இடத்தில் மலம் கழிக்கத் தயங்குகிறார்கள் என்கிற கருத்து தவறு தான், :)
கருத்துரையிடுக