தடி எடுத்தவனெல்லாம் தண்டால் காரணும் இல்லை, தாடி வைத்தவனெல்லாம் தீவிரவாதி இல்லை, தீவிரவாதம் பற்றி விமர்சனம் செய்தாலே எங்களை ஒட்டுமொத்தமாக அவமதிக்கிறார்கள் என்பது போல் வஹாபியர்கள் கட்டமைக்கிறார்கள், பார்பனியத்தை சாடுபவர்களுக்கு பார்பனர் நண்பராக இருக்க முடியாது என்று சிலர் நம்புவது போல் தீவிரவாதிகளை கண்டிப்பவர்கள் இஸ்லாமியர்களுக்கு நண்பனாக இருக்க முடியாது என்பது போல் கட்டுமானங்கள் முன்வைக்கப்படுகிறது.
அமெரிக்க அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கிறோம், அரசுகளை மிரட்டுகிறோம் என்ற பெயரில் எவனோ ஒரு அப்பாவி மனிதனை கழுத்தறுத்துக் கொல்வதாக இருந்தாலும் 'அல்லாவின் திருப்பெயராலே' என்கிற குரான் ஓதிதான் கொல்லப்படுவது குறித்து யுடியுபில் ஏராளமான வீடியோக்கள் இருக்கிறது, அதற்கு அவர்கள் ஜிகாத் என்றும் புனிதப் போர் என்று பெயர் கொடுக்கிறார்கள், மதத்தின் பெயராலும் மதத்தின் பின்னனியிலும் நடைபெறும் தீவிரவாத செயல்களை மதம் பெயரில் குறிப்பிட்டால் மட்டும் ஏன் இவர்களுக்கு அவமானம் ஆகிறது என்று தெரியவில்லை, உண்மையில் இவர்கள் அவமானம் அடைவதாக இருந்தால் அவப்பெயரை ஏற்படுத்தி இறைவன் திருப்பெயர் சொல்லிக் கொலை செய்து மதத்திற்கு கெட்டப் பெயர் வாங்கித் தருபவர்கள் மீது தானே ஞாயமாக கோபம், வெறுப்பு எல்லாம் வந்து, அவர்களை மதத்திலிருந்து விலக்கி வைக்க வேண்டும், மாறாக அந்தத் தீவிரவாதிகள் / சமூக விரோதிகள் கொல்லப்பட்டால் அவர்களுக்கு தூவா செய்கிறோம் என்று சிறப்புத் தொழுகை எல்லாம் நடத்துகிறார்கள்.
மதத் தீவிரவாதம் என்கிற விமர்சனம் வரும் பொழுது ஒட்டுமொத்தமாக அவமானப்படுத்துகிறார்கள், புறக்கணிக்கிறார்கள் என்று புலம்புவது எந்தவியத்தில் ஞாயம் என்று தெரியவில்லை, உண்மையில் எல்லா மதத்திலும் எல்லோருக்கும் நெருங்கிய நண்பர்கள் உண்டு, எங்கோ அல்லது அருகிலேயே நடக்கும் மதச் சார்ப்பு தீவிரவாதச் செயல்களால் தத்தம் மாற்று மத நண்பர்களை விலக்கிக் கொள்பவர்கள் எத்தனைபேர் இருக்கிறார்கள் ? அவையெல்லாம் உண்மையான நட்பா ?
பின்னே ஏன் மதம் சார்ந்து அவமானப்படுத்துகிறார்கள் என்கிற கூப்பாடு ? காரணம் உண்டு, 'நம்மை அவமானப்படுத்துகிறார்கள் என்று கூப்பாடு போடும் பொழுது தத்தம் மதத்தை சார்ந்தவர்களை ஒன்று திரட்டமுடியும் என்கிற நம்பிக்கை தான், ஒன்று திரட்டுவது ஒன்றும் தவறான செயல் இல்லை, பல்வேறு சமயத்தினர் மதத்தினர், சாதியினர் கூட எதோ ஒரு பொதுத்தன்மையை வைத்து ஒன்று திரள வேண்டும் என்றே நினைப்பர், ஆனால் பொய்யாக ஒரு பீதியை கிளப்பி ஒன்று திரட்டும் பொழுது வெறுப்புணர்வையும் சேர்த்தே ஒன்று திரட்டுகிறோம் என்பதை இவர்கள் அறிகிறார்களா ? இதே நபர்கள் சிங்களுனுக்கு எதிராக ஒன்றும் திரளும் தமிழ் அமைப்புகள் பெரும்பான்மை சிங்கள அரசுக்கு அடங்கிப் போவது தான் நாட்டு நலனுக்கு ஒட்டுமொத்த நன்மை விளைவிக்கும் என்கிற கருத்தும் கொண்டு இருக்கிறார்கள், எனெனில் இராஜபக்சே தமிழ் பேசும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறாராம், இன்னும் எத்தனை காலத்திற்கு அளிப்பார் ?
தீவிரவாதத்திற்கு மதம், நிறமில்லை என்று குண்டுவெடிப்பு நடக்கும் பொழுதெல்லாம் எழுதும் இவர்கள் அடுத்த வரியிலேயே இது 'காவி' தீவிரவாதமாக, இந்துத்துவ தீவிரவாதமாக இருக்கும் என்று நிறம், மதம் காட்டுவார்கள், 'நம்மை அவமானப்படுத்துகிறார்கள், நம் மதத்தை இழிவுபடுத்துகிறார்கள்' என்கிற கூப்பாடு உண்மையிலேயே அப்பாவிகளை அச்சம் கொள்ள வைப்பது, நம்ம சாதிக்காரன் மேல கைவைச்சுட்டாண்டா ஓடிவா அவன் ஊரையே துவம்சம் செய்துவிடுவோம் என்பது போன்ற மதவெறிவை மென்மையாக ஊட்டும் முயற்சியே இத்தகை கூப்பாடுகள்.
இவர்களே எழுதுகிறார்கள், ஐரோப்பாவில் வேகமாக வளரும் மதம் எங்கள் மதமே, அது எந்தளவு உண்மை என்று யாருக்கும் தெரியாது. அதாவது இஸ்லாமியர் பெரும்பான்மையாக இல்லாத நாடுகளில் வேகமாக வளர இவர்கள் வாழ்கை அங்கு பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே வாய்ப்பு, பாதுகாப்பற்ற நாடுகளில் வேகமாக வளர எந்தவகையான வாய்ப்பிருக்கிறது ? அரபு நாடுகளைவிட கவுரவமாகவும் பாதுகாப்பாகவும் இஸ்லாமியர்களை நடத்தும் நாடுகள் எவ்வளவோ இருக்கின்றன. 9/11 க்கு பிறகு எந்த நாடு இஸ்லாமியர்களை வெளியேற்றியுள்ளது ? ஈரான், ஈராக் அல்லாத எண்ணைவளஅரபு நாட்டு எத்தனை இஸ்லாமியருக்கு அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விசாவை மறுத்திருக்கின்றனர் ? பாகிஸ்தான்,இந்தியா, பங்களாதேஷ் முஸ்லிம்களை சந்தேகக் கண் கொண்டு விசா மறுப்பர், அல்லது கடுமையான சோதனைக்கு பிறகு அனுமதிப்பர், அது இஸ்லாமியர் என்கிற காரணத்திற்காக மட்டும் அல்ல, தலிபான், அல்கொய்தா தொடர்பிருக்கும் வாய்ப்பு என்பதாலும் ஏழை நாட்டினர் என்பதாலும் அவ்வாறு செய்கின்றனர், முஸ்லிம்களுக்கு விசா மறுப்பு என்றால் ஷேக்குகளெல்லாம் அமெரிக்க விரும்பிய போதெல்லாம் சென்றுவருவது எவ்வாறு ? அமெரிக்காவைப் பொருத்த அளவில் காசு இல்லாதவர்கள் அவர்கள் நாட்டினுள் நுழைந்து ஏதும் பிரச்சனை ஆகிவிடக் கூடாது என்பது தான், அதை தீவிரவாத சாக்கிட்டு நடத்துகிறார்கள்.
அமெரிக்கா இஸ்லாமியர்களை அவமானப்படுத்துகிறது என்று சவுதியில், ஐக்கிய அரபு எமிரேட்டில் எவரும் பொங்குவது போல் தெரியவில்லை. குஜராத் தவிர்த்து வேறு மாநில அரசுகள் இஸ்லாமியர்கள் மீது எந்த காழ்புணர்வையும் காட்டுவதில்லை. இவர்கள் ஏன் இந்தியாவில் இஸ்லாமியருக்கு பாதுகாப்பு இல்லை, உரிமைகள் இல்லை என்று கூவுகிறார்கள் என்று தெளிவாகத் தெரியவில்லை, இந்தியாவின் நிலைமை இந்துக்கள் நிறைந்த பகுதியில் இஸ்லாமியர்களால் கடை நடத்த முடியும், ஆனால் இஸ்லாமியர் நிறைந்த பகுதியில் இந்துக்கள் நடத்தும் கடைகளுக்கு எந்த அளவு ஆதரவு இருக்கிறது ? இஸ்லாமியர்களுக்கு நகரங்களில் வாடகைக்கு வீடு கிடைப்பதில்லை என்று சொல்லப்படுவது போல் இஸ்லாமியர் பெரும்பான்மையாக வசிக்கும் இடங்களில் எத்தனை இந்துக்களுக்கு வாடகைக்கு வீடு கிடைக்கிறது ? நாகூரிலோ, கீழக்கரையிலோ இஸ்லாமியர்கள் எத்தனை இந்துக்களுக்கு வாடகைக்கு வீட்டு விட்டிருக்கிறார்கள் ? அவர்கள் அங்கு குடியிருக்க விரும்புவாரக்ளா என்பது வேற விசயம். பர்மா பஜாரில் ஒரு கடை வாடகைக்கு வந்தால் ஒரு இந்துவுக்கு கிடைக்குமா ?
இஸ்லாமியர் நிறைத்திருக்கும் இடங்களில் மாற்று மதத்தினர் வீடுவாங்க விரும்ப மாட்டார்கள், அல்லது இஸ்லாமியர் நிறைந்திருக்கும் இடத்தில் தான் மற்ற இஸ்லாமியர்களுக்கு வீடுவாங்க ஆசைப்படுபவர்கள்,. சென்னை போன்ற நகரங்களில் இஸ்லாமியர் பெரும்பான்மையாக வசிக்கும் ஐஸ் ஹவுஸ் போன்ற பகுதி இருக்கிறது, அங்கெல்லாம் வீடு வைத்திருப்பவர்கள் இந்துக்களுக்கு வாடகைக்கு விடுகிறார்களா ? எனவே வாடகைக்கு வீடு கிடைப்பதில்லை என்பதும் குறிப்பிட்டவர்களுக்கு மறுக்க வேண்டும் என்பது எழுதா விதியாகத்தான் இருக்கிறது, இதற்கு யார் மீதும் பழி போட முடியாது. வீடே கிடைக்கவில்லை என்கிற குற்றச் சாட்டுகள் ஓரளவு மறுக்கக் கூடியதும் ஆகும். சென்னையில் வாடகைக்கு குடியிருக்காத இஸ்லாமியர்களே இல்லை என்றால் அவ்வாறு கூறலாம், ஒரு சிலர் இஸ்லாமியருக்கு வீடில்லை என்று சொல்லுவார்கள், பிராமின்ஸ் ஒன்லி என்றெல்லாம் வீடுவாடகைக்கு விடப்படுகிறது. ஒரு சிலருக்கு அவ்வாறு நேர்ந்திருக்கலாம், எல்லோருக்கும் அவ்வாறு என்றால் ? யாருக்குமே உதவும் மனநிலை வாய்த்த மாற்று மத நண்பர்களே இல்லையா ? அல்லது இவர்கள் ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கவில்லையா என்கிற கேள்வியும் வருகிறது.
தமிழகத்தில் கமல் படத்திற்கு தடைவிலக்கப்பட்ட பிறகு ஏறக்குறைய 20 நாட்கள் சென்றுவிட்ட நிலையில் விஷ்வரூபம் படத்திற்கு மலேசியாவில் தொடர் தடைதான், இத்தனைக்கும் மலாய்காரர்கள் யாரும் கமல் படம் பார்க்கப் போவதில்லை. இவர்களுக்கு அதிகாரம் உள்ள இடங்களில் இவர்களின் நல்லிணக்கம் / நல்லெண்ணம் இவ்வளவு தான். கமல் நட்டம் அடைந்தார், ஐங்கரன் நட்டம் அடைந்துவிட்டது என்று வருந்தியெல்லாம் இதை எழுதவில்லை, இவர்கள் அதிகாரம் பெறும் பொழுது, அதிக்காரம் செலுத்தும் இடங்களில் இவர்கள் தாரள மனப்பான்மையுடன் மற்றும், பெருந்தன்மையாக நடந்து கொள்வார்கள் என்று நம்ப ஒன்றுமில்லை என்பதற்காகவே குறிப்பிடுகிறேன், இங்கே வெளிப்படையாக அமீரகத்தில்,சவுதியில் தமிழ் இணைய தளங்களை முடக்கிவிடுவோம் என்று முழங்குபவர்களும் செய்து காட்டுபவர்களும் உண்டு. மலேசியாவில் அரபு நாடுகளில் கமல் படத்திற்கும் ஏற்பட்டது அதே நிலைதான். ஐயோ எங்க மதத்தை தாக்கினால் நாங்கள் பார்த்துக் கொண்டு இருக்க முட்டாளா ? மதம் அவமானப்படுத்துவதை இழிவு படுத்துவதைத்தானே நாங்கள் தடுக்க முயற்சிக்கிறோம் என்று கேட்டால் வருண பேதம், இரட்டை டம்பளர் உள்ளிட்டவை இந்து மதம் சார்ந்த உள் விவாகரம், அதை எதிர்க்க அதிலேயே ஆட்கள் உண்டு, இவர்கள் ஏன் மதம் பரப்ப அதனைப் பற்றிப் பேசவேண்டும் ? இவர்களின் இந்துமத விமரசனம், சிலைவணக்க எதிர்ப்பு உள்ளிட்டவை ஒட்டுமொத்த இந்துகளை அவமானப்படுத்துகிறது என்கிற ஆதங்கம், ஒரு இந்துமதப் பற்றாளருக்கு ஏற்படாதா ?
பொதுப்புத்தி, ஊடக கட்டுமானங்கள் தாண்டி எல்லோரும் எல்லாவற்றையும் பார்த்தே வருகிறார்கள். எனக்கும் 20க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நண்பர்கள் உண்டு, குண்டுவெடிக்கும் பொழுதெல்லாம் இவர்கள் குண்டு வைப்பவர்களுக்கு ஆதரவாளர்கள், அதனை ஆமோதிப்பவர்கள் என்றெல்லாம் நினைப்பது இல்லை.
தாடிவைத்தவனெல்லாம் தீவரவாதி இல்லை, ஆனால் (சாமியார்கள் உள்ளிட்ட ) எல்லா தீவிரவாதிகளும் தாடி வைத்திருக்கிறார்கள்
இஸ்லாமியருக்கு இந்தியாவில் அவமானம் என்னும் வஹாபிய கூப்பாடுகளை ஏனைய இஸ்லாமியர்கள் புறக்கணித்தால் மாற்றுமத நண்பர்களுக்கிடையே நல்லுறவை பேண முடியும், இல்லை என்றால் நட்பிற்கு மதம் உண்டு என்கிற நிலைக்கு இட்டுச் செல்லும்.