சிங்கப்பூரில் சீனர்களிடமும் அவர்கள் மூலமாக பிறரிடமும் வழங்கும் சொல்வழக்கு 'Kiasu' இதன் பொருளும், இதன் விளக்கமும் விக்கிப்பீடியாவில் தனிப்பக்கமாக இடம் பெரும் அளவுக்கு இந்த சொல் புகழ்பெற்றது. 'fear of losing' என்பதே அதன் பொருளாகும். அதாவது தனக்கு உடைமை உடைய ஒன்றை இழந்துவிடுவோமே என்ற அச்சம் எப்போதும் உடையவர்களை இந்த க்யாசூ என்ற சொல்பதத்தில் அழைப்பார்கள்.
போற்றிப் பயன்படுத்தும் அவரவர் உடலே மண்ணுக்குள்ளோ, நெருப்பிலோ போகக் கூடியது தான் என்கிற ஆள்மன உணர்வுகள் இருந்தும் ஒப்புக் கொள்ள மனதின்றி தனக்கு உடைமையான பொருள் மீது தீவிர காதல் கொண்டர்வளே இந்த க்யாசு வகையினர். எங்க வீட்டில் வீட்டை ஒழுங்கு செய்வது என்கிற எண்ணத்தில் தேவையற்ற பொருள்கள் என்று என் மனைவி அள்ளிப் போட்டு குவித்து வைத்திருப்பதை கிளறிப் பார்த்துவிட்டு தூக்கிப் போடுவோம் என்கிற எண்ணம் ஏற்படும் போது 'மிகவும் தேவையானது என்றால் அலட்சியமாக வைத்திருக்க மாட்டோம்' என்கிற நினைப்பில் கிளறிப் பார்க்காமல் விட்டுவிடுவேன், அப்போது எனக்கு தோன்றும் எண்ணம் 'அப்படியே ஒருவேளை இருந்தால் போனால் போகட்டுமே... மனுச உடம்பே மண்ணுக்குள் போகக் கூடியது தானே' வாங்க முடியாத பொருள்கள் எதுவும் இருக்காது என்று தேற்றிக் கொண்டுவிடுவேன், கொஞ்சம் பதைப்பாகத்தான் இருக்கும், காரணம் சில தடவைகள் கவனக் குறைவினால் வங்கி அட்டைகள் கூட குப்பைக்குள் சென்றிருக்கிறது.
நம் வீட்டுக்குள் வந்த சாக்கில் அங்கேயே தங்கிவிடும் பயனற்ற பொருள்கள் நிறைய உண்டு, இருந்தாலும் எதற்காவது பயன்படும் என்றே அதனை தூக்கிப் போட மனதின்றி ஆண்டுக் கணக்காக அதற்கு ஒரு இடம் கொடுத்து வைத்திருப்பார்கள், எப்போதோ பயன்படுத்திய பழைய 14" கருப்பு வெள்ளை தொலைக்காட்சிப் பெட்டி பழுதாகி பயன்படாமல் இருந்தாலும் எங்கம்மா அதை இன்னும் பத்திரமாக பிரோவில் பூட்டி வைத்திருக்கிறார்கள், 'இந்த கருமத்தை தூக்கிப் போட்டால் தான் என்ன ?' என்று எத்தனையோ முறை கேட்டு இருக்கிறேன், அப்போதெல்லாம் வரும் ஒரே பதில், 'உனக்கு தேவை இல்லாமல் இருக்கலாம், யாராவது வந்து ஆராய்ச்சிக்கு என்று கேட்டாலும் கேட்பார்கள்' என்பது அம்மா சொல்லும் பதில், 14" பழைய டிவியில் ஆராய்ச்சி நடத்தப் போகிறவர் எப்பொழுது வருவார் எம்ஜிஆரின் 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு' எப்போதும் வரும் என்கிற எதிர்ப்பார்ப்பு போல் நானும் காத்திருக்கிறேன். அம்மா மட்டுமல்ல அண்ணன் வீட்டில் கூட அப்படித்தான், எதையும் தூக்கிப் போட மனமின்றி காலியான சின்ன சின்ன மருந்து பாட்டிலைக் கூட தூக்கிப் போடாமல் வைத்திருப்பார்கள். சிறுவர்களாக இருந்த போது தீபாவளிக்கு வாங்கிய மத்தாப்பு, வெடிகளை நாங்களெல்லாம் வெடித்து முடித்துவிடுவோம், அண்ணன் மட்டும் கார்த்திகைக்கு வெடிக்கலாம் என்று எடுத்து தனியாக வைத்திருப்பார், கார்திகைக்கும் வெடிக்கப்பட்டு இருக்காது.
திருமணம் ஆன புதிதில் பெங்களூரில் வசிக்கும் நண்பர் வீட்டுக்கு மனைவியுடன் சென்றேன், நண்பர் ஆறுமாதம் முன்பே எனக்கு முன் திருமணம் முடித்தவர், ஓரளவு வசதியான வாடகை வீட்டில் மனைவியுடன் (தனிக்குடித்தனமாக) வசித்தார், இருவரும் வேலைக்குச் செல்பவர்கள், பெங்களூரில் ஓட்டல் எடுத்து தங்கி இருந்த நிலையில் நான் அங்கு சென்ற போது, எங்கள் வீடு இருக்கும் போது எதற்கு ஓட்டலில் தங்கவேண்டும் என்று செல்லமாக கோவித்துக் கொண்டு, அன்று காலையில் நான் தங்கி இருந்த ஓட்டலுக்கு வந்து அறையைக் காலி செய்யச் சொல்லிவிட்டு அவரது வீட்டில் விட்டுவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டனர் இருவரும். நாங்களும் பகல் பொழுதில் வீட்டில் இருந்து கிளம்பி ஊர் சுற்றிவிட்டு, மாலை வீட்டுக்கு வந்ததும், அவர்கள் சிறப்பாக சமைத்திருந்த இரவு உணவை முடித்துவிட்டு பேசிக் கொண்டு இருந்து படுக்கச் செல்லும் நேரம் ஆக, எங்கள் படுக்கை அறையில் படுத்துக் கொள்ளுங்கள், அட்டாச்ட் பாத்ரூம் இருக்கு வசதியாக இருக்கும், நாங்கள் அடுத்த அறையில் படுத்துக் கொள்கிறோம் என்று நாங்கள் புதிதாக திருமணம் ஆனவர்கள் என்பதால் எங்களுக்கு அவர்களது படுக்கை அறையை விட்டுக் கொடுத்தனர்.
ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது, படுக்கை அறைக்கு சென்று படுக்கையில் உட்கார 'மொட மொட' என்ற சத்தம், மாமனார் சீராகக் கொடுத்த படுக்கையின் பாலித்தீன் கவர்கள் பிரிக்கப்படாமல் அதன் மீது மெல்லிய படுக்கை விரிப்பு போடப்பட்டு இருந்தது, அதில் படுக்கலாம், ஆனால் உருண்டு பிரளவோ, வேறெதுவும் செய்ய முடியாது, பிரண்டாலே அடுத்த அறைக்கு 'மொட மொட' சத்தம் கேட்கும் நிலையில் நானும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்த நிலையில் தூங்கி எழ விடிந்திருந்தது. காலையில் நண்பர் 'வீடு வசதியாக இருந்ததா ?' நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டோம், 'இருந்தது.....ஆனா பெட்டில் சத்தம் தான்...ஏன்பா மாமனார் வாங்கிக் கொடுத்தார் என்பதற்காக பாலித்தீன் கவரைக் கூட கழட்டாமல் வைத்திருக்கிறாயே ? என்று கிண்டல் அடிக்க நினைத்து அவர் மனைவியும் உடன் இருப்பதால் நிறுத்திக் கொண்டேன், ஏழ்மை நிலையில் இருந்து மேலே வந்தவர்கள் வசதி வாய்ப்புகள் பெற்றதும் அதில் இருந்து இறங்கிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பர். நண்பர் மிகவும் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர், 20 ஆயிரம் பொறுமானமான படுக்கை எப்போதும் புதிதாகவே இருக்க வேண்டும், படுக்கையில் தண்ணீர் பட்டால் உள்ளே இறங்கிவிடக் கூடாது என்பதற்காக பாலித்தின் கவரை எடுக்காமலேயே வைத்திருந்தார், ஆனாலும் படுக்கையின் மென்மையை அவர்கள் அனுபவித்தார்களா ? இல்லை என்று தான் சொல்ல வேண்டும், பல ஆண்டுகள் கடந்த நிலையில் இன்னும் அந்த படுக்கை அறை பாலித்தீன் கவர் பற்றி அவரை கிண்டல் அடிப்பது உண்டு.
அவர் மட்டுமல்ல பெரும்பாலான நடுத்தர குடும்பங்களின் படுக்கைகள் இன்னும் கூட பாலித்தின் கவரால் தான் சுற்றப்பட்டு இருக்கும், புதிதாக வெளிநாடு சென்று வந்தவர்கள் மட்டுமின்றி பல முறை சென்றுவந்தவர்கள் கூட ஏர்போர்ட் பட்டி(டேக்) சுழற்றாமல் பெட்டியை வைத்திருப்பார்கள், தனது கவுரவே அதில் தான் அடங்கி இருக்கிறது என்பதால் அதனை இழக்க அவர்கள் விரும்ப மாட்டார்கள்.
இப்போதெல்லாம் எல்சிடி டிவிகள் வாங்கிப் பலர் வைத்திருக்கிறார்கள், அதில் மூளையில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிகர் (ஒட்டி) அப்படியே தான் இருக்கும், திரையில் படம் கொஞ்சம் மறைக்கப்பட்டால் கூட கவலைப்படமாட்டார்கள், காரணம் வீட்டுக்கு வருபவர்கள் பார்க்கும் போது அது 'புதிய டிவி' என்று தெரியனுமாம். அந்த மாதிரியான க்யாசுகளிடம் நான் சொல்வது, 'இப்ப அந்த ஸ்டிக்கரை பிய்த்துப் போடாமல் விட்டால் தொலைகாட்சியின் வெப்பத்தில் அப்படியே ஒட்டிக் கொள்ளும், நாள் ஆக ஆக வெளுத்துவிடும், எடுக்கவும் வராது, பார்த்து செய்ங்க' என்பது தான்.
எங்க அண்ணன் வீட்டில் கூட கணிணி திரையும், கீ போர்டும் மேலே மெல்லிய ஊடுறவக் கூடிய ஸ்கிரீன் போட்டு தான் பயன்படுத்தப்பட்டுவருகிறது. அது இல்லாவிட்டால் 'ஸ்க்ராட்ச்' விழுந்துடும் என்று அண்ணன் சொல்லுவார்.
ஒவ்வொரு வீட்டிலும் ஐந்து வகையான பொருள்கள் உண்டு
1. மிகவும் பாதுகாக்க வேண்டியவை
2. அடிக்கடி பயன்படுத்த வேண்டியவை
3. எப்போதாவது பயன்படத்தக் கூடியவை
4. என்றுமே பயன்பாட்டுக்கு வராதவை
5. யாருக்குமே பயனற்றவை
இந்த நான்காவது, ஐந்தாவது வகைப் பொருள்கள் எவை எவை என்று பார்த்து தனக்கு பயன்படாதவை என்றால் பயன்படுத்தக் கூடியது என்ற நிலையில் அவற்றை பயன்படுத்துபவர்களுக்கு அவர்கள் விரும்பினால் கொடுக்கலாம், உதாரணத்திற்கு காபி மேக்கர் யாரோ எப்போதோ பரிசு பொருளாகக் கொடுத்தது, நமக்கு அதைப் பயன்படுத்துவது கூடுதல் நேரம் பிடிக்கும் என்பது மட்டுமின்றி அதனை கழுவி வைப்பது அறைகூவல் என்ற நிலையில் அவற்றை விரும்புவர்களுக்கு அதனை கொடுத்துவிடலாம், ஆனால் நல்ல பொருள் என்று பாதுகாப்பாக வைத்திருப்பதால் வீட்டில் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும் என்பது தவிர்த்து வேற என்ன பயன் ? ஐந்தாவது சொல்லி இருப்பதில் உதாரணத்திற்கு பழைய பாய் அல்லது நசுங்கிய சொம்பு, ஒரு கால் உடைந்த ஒரு இருக்கை, அதனை சரி செய்து வைத்திருந்தாலும் கவுரவக் குறைச்சல் என்ற நிலையில் அதைத் தூக்கிப் போட்டால் என்ன ? அதனை பயன்படுத்திய பொருள் என்பதற்காக இடத்தை அடைத்துக் கொண்டிருக்க விடலாமா ?
நல்ல தரமான ஓட்டலில் மூக்குப் பிடிக்க நாலு பேர் 500 ரூபாய்க்கு சாப்பிடும் குடும்பங்களிலும் கூட பாக்கெட்டுக்கு 10 காசு கிடைக்கும் என்ற அடிப்படையில் மூக்கைப் பிடித்துக் கொண்டு காலி பால் பாக்கெட்டுகளை சேர்த்து வைப்பவர்களும் உண்டு, நான் இங்கே சிக்கனத்தைக் குறைச் சொல்லவில்லை, ஆனால் நாம் எல்லா விதத்திலும் சிக்கனமாக இருக்கிறோமோ, அல்லது உப்புக்கு பெறாத பொருள்களில் மட்டும் சிக்கனத்தை பார்க்கிறோமோ என்பது தான் பிரச்சனை, தவிர அம்மா தாயே, ஐயா கொஞ்சம் இரக்கம் காட்டுங்கள் என்பவர்களை திரும்பிக் கூடப் பார்காமல் அர்சனைத் தட்டில் ஒற்றை ரூபாயாக 500 ரூபாய் போட்டுவருபவர்களை சிக்கனவாதிகள் என்றும் 'பிச்சைக்காரர்களை ஊக்கப்படுத்த விரும்பாதவர்கள்' என்றும் சொல்ல முடியுமா ?
ஒரு பொருளை பாதுகாப்பாக வைத்திருந்தாலும் அதன் முழுப் பயன்பாட்டை அனுபவிக்காமல் இருப்பதனால் என்ன பயன் ? கஷ்டப்பட்டு சேமித்து ஈட்டும் பணம் செலவழிக்கப்படாமல் இருந்தால் சேமிப்பின் பயன் தான் என்ன ?
கியாசுவாக இருப்பதால் எந்த ஒரு பொருளின் முழுப் பலனையும் அவர்கள் என்றுமே அனுபவிப்பது இல்லை, மற்றவர்களையும் அதை அனுபவிக்க அனுமதிப்பது இல்லை.
20 கருத்துகள்:
பொருளை மட்டுமல்லாது
மனிதர்களையும் பொருள் போலவே ஐந்து வகையாகப்
பிரித்துப்பார்த்தேன்.சரியாகத்தான் இருந்தது
பயனுள்ள பதிவு.வாழ்த்துக்கள்
வீட்டுக்கு வீடு வாசப்படி! நான் சரியான கியாசுவாக இருந்ததால் 200 கிலோ அளவிற்கு குப்பையை ஊருக்கு அனுப்பினேன் ;-)
வடை எனக்குத் தானா;-)
ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு க்யாசு கண்டிப்பா இருக்கும்:-)))))
கார் வாங்கி 6 மாதம் ஆனாலும் இருக்கைகளின் மேலுள்ள பாலிதின் கவர்களை களையாமல் இருப்பவர்கள் பலர் உண்டு.
ஸூட்கேஸ் வாங்கும்போது, எனக்கு இந்த கலர் பிடிக்கவில்லை, வேறு கடைக்கு போகலாம் என்று பல கடைகளுக்கு ஏறி இறங்கி, ஒரு ஸூட்கேஸ் வாங்கி உடனே ஒரு பச்சை கலர் துணி கவரை வாங்கி போட்டு, கடைசி வரை, அந்த் 'கலரை' பார்க்கமுடியாத குடும்ப உறுப்பினர்களும் உண்டு. இவர்களை சீனர்கள் எப்படி அழைக்கிறார்கள்? - இரவிச்சந்திரன், பெங்களூர்
கோவி!
சிலசமயம் இது இனித் தேவையில்லையே என எறிந்து விட்டு அது தேவை வந்து வருந்தியுள்ளேன்.
நம்பமாட்டீர்கள். நான் இப்போவாழும் வீடு, மூன்றாவது வீடு, 18 வருடங்களுக்கு முன் ஒரு உலோகப் பிணைச்சல் மரத்துண்டுகளைப் பொருத்த உதவும். அதைக் களட்டியபோது எறியமனம் வரவில்லை.
ஆயுதப் பெட்டியுள் வைத்திருந்தேன்.
அதை , ஞாபகமாக சென்றமாதம் என் மாடத்தில் உள்ள பூந்தொட்டிக்கு ஒரு தட்டு அமைக்க பயன்படுத்தி விட்டேன்.அது கனகச்சிதமாகப் பொருந்தியது. எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
இப்படி சில பழையவை , இடமிருந்தால் ஒழுங்காக வைத்திருந்து, ஞாபகமாகப் பயன்படுத்துவதில் தவறில்லை.
ஆனால் மெத்தையின் உறைபிரிக்காமல், தொலைக்காட்சியின் லேபிள் உரிக்காமல் என்பது அதிகமே!
அருமையாக அலசியுள்ளீர்கள்.
I AM HAVING ONLY THE OBJECTS WHICH SOME NEEDED TO LIVE!!
MY HOUSE IS NOT HOUSE, ITS MUSEUM - BY FRIENDS OF MINE
ஆசை பட்டு புத்தகம் வாங்கி படிக்காமல் வைத்திருக்கும் நாங்களும் kiasu வா ?
கோவி,
மடிக்கணினிக்கு ஸ்கிராட்ச் கார்டு தேவை என நினைக்கிறேன், நான் அது எதுக்கு என சும்மா இருக்கப்போய் , நிறைய ஸ்கிராட்ச், மேலும் கீ போர்ட்டில் எழுத்துக்களும் மறைந்துவிட்டது.
பெட்டில் கவர், கார் சீட்டில் கவர் என இருப்பது எல்லாம் ரொம்ப விவரம் தெரியாதவர்களாக இருக்கும்.
நீங்க சொன்னது போல பழைய சாமன்களை எங்க வீட்டில் தூக்கிப்போடுவதில்லை, எந்தகாலத்திலோ வாங்கிய இரும்பு டிரங் பெட்டியெல்லாம் இன்னும் இருக்கு, ஒரு செயல்படாத பிரிட்ஜ் அலமாரி போல இருக்கு :-))
ஒரு 15 ஆண்டுகளுக்கு முன்னர் முதன் முதலில் வாங்கிய கணினி இன்னும் இருக்கு, சமீபத்தில் இயக்கிப்பார்த்தேன் வேலையும் செய்தது ,ஆனால் ஹார்ட் டிஸ்க்கில் இருந்து கிரீச் ..கிரீச் என சத்தம் வருது,வருங்காலத்தில் "அரிய கலைப்பொருள்" ஆக பயன்ப்படும் என வைத்திருக்கிறேன் :-))
நண்பரே மிகவும் அருமையான பதிவு !!! நானும் இந்த கியாசு வகையாகத் தான் இருந்தேன் .. எண்ணற்ற புத்தகங்கள், உடைகள், இன்ன பிற சாமான்கள் என பலவற்றையும் பிரிய மனமில்லாமல் இருப்பவன் !!!
ஆனால் எதற்கும் ஒரு எல்லை உண்டு .. இருந்து விட்டு போகட்டுமே என்பதை விட, அதை தானம் செய்து விட்டால் யாருக்காவது பயன்பட்டு விடும் என்பதை மறந்துவிடுகின்றோம் ..
கனடா வரும் போது இரண்டு பெட்டிகள் நிறைய புத்தகங்கள் கொண்டு வந்தேன்.. ஆனால் அவற்றில் தேவையானவை மட்டும் விட்டு விட்டு, பிறவற்றை நூலகத்துக்கு அன்பளித்துவிட்டேன்.
பழைய துணிமணிகள் சிலவற்றில் செண்டிமண்டானவைகளை மட்டும் வைத்துக் கொண்டு பிறவற்றை தானம் செய்து விட்டேன் ( இங்கு க்ளோத் பாங்குகள் உண்டு ) அப்படி தேவை இல்லாதவைகளை ஒவ்வொன்றாக குறைத்துக் கொண்டேன்
அடைசலாக வீட்டில் வாழ்வதை விட declutter செய்துக் கொள்வது மனதை லேசாக்கும் என சில ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள் ..
ஐந்து வகைப் பிரிவாக்கம் அருமை சகோ.
//கனடா வரும் போது இரண்டு பெட்டிகள் நிறைய புத்தகங்கள் கொண்டு வந்தேன்.. ஆனால் அவற்றில் தேவையானவை மட்டும் விட்டு விட்டு, பிறவற்றை நூலகத்துக்கு அன்பளித்துவிட்டேன்.//
:) தனியாளாகப் வேலைக்கு போகும் போது இரண்டு பெட்டியுடன் தான் செல்வார்கள், அப்பறம் மனைவி மக்கள் என்று ஆனதும் இரண்டு லாரி தேவைப்படும் வீடுமாற்ற.
// வவ்வால் கூறியது...
கோவி,
மடிக்கணினிக்கு ஸ்கிராட்ச் கார்டு தேவை என நினைக்கிறேன், நான் அது எதுக்கு என சும்மா இருக்கப்போய் , நிறைய ஸ்கிராட்ச், மேலும் கீ போர்ட்டில் எழுத்துக்களும் மறைந்துவிட்டது.//
கைக் குழந்தைகள் இருக்கும் வீட்டில் தேவை தான், தண்ணீரைக் கொட்டிவிடுவார்கள், எழுத்துகள் கீ போர்டில் மறைந்தாலும் தட்டச்சு செய்ய முடியாதவர்களா நாம் ?
//நீங்க சொன்னது போல பழைய சாமன்களை எங்க வீட்டில் தூக்கிப்போடுவதில்லை, எந்தகாலத்திலோ வாங்கிய இரும்பு டிரங் பெட்டியெல்லாம் இன்னும் இருக்கு, ஒரு செயல்படாத பிரிட்ஜ் அலமாரி போல இருக்கு :-))//
இதையெல்லாம் நாமே தூக்கிப் போடுவது நல்லது, வேற யாரும் அலட்சியமாக தூக்கிப் போடும் போது ரொம்பவே மனசு வலிக்கும் :)
// "அரிய கலைப்பொருள்" ஆக பயன்ப்படும் என வைத்திருக்கிறேன் :-))//
எலிகள் பயன்படுத்திக் கொள்ள ஒரு பொந்து வைத்துவிடுங்கள் :)
//kamalakkannan கூறியது...
ஆசை பட்டு புத்தகம் வாங்கி படிக்காமல் வைத்திருக்கும் நாங்களும் kiasu வா ?//
என்கிட்ட அதுபோல் நிறைய இருக்கு, லைப்ரரி சிறப்பு தள்ளுபடியில் வாங்கியவை, ஆனால் யாராவது கேட்டால் கொடுத்துவிட்டு மறந்துவிடுவதும் உண்டு
// ஷர்புதீன் கூறியது...
I AM HAVING ONLY THE OBJECTS WHICH SOME NEEDED TO LIVE!!
MY HOUSE IS NOT HOUSE, ITS MUSEUM - BY FRIENDS OF MINE//
அதே போல் வீடு காயிலான் கடையும் அல்ல. :)
//ஆனால் மெத்தையின் உறைபிரிக்காமல், தொலைக்காட்சியின் லேபிள் உரிக்காமல் என்பது அதிகமே!
அருமையாக அலசியுள்ளீர்கள்.//
லேபிளைப் பிரிக்காமல் பட்டுவேட்டிக் கொள்பவர்களும் உண்டு.
:)
//பெங்களூர் இரவிச்சந்திரன் கூறியது...
கார் வாங்கி 6 மாதம் ஆனாலும் இருக்கைகளின் மேலுள்ள பாலிதின் கவர்களை களையாமல் இருப்பவர்கள் பலர் உண்டு.
ஸூட்கேஸ் வாங்கும்போது, எனக்கு இந்த கலர் பிடிக்கவில்லை, வேறு கடைக்கு போகலாம் என்று பல கடைகளுக்கு ஏறி இறங்கி, ஒரு ஸூட்கேஸ் வாங்கி உடனே ஒரு பச்சை கலர் துணி கவரை வாங்கி போட்டு, கடைசி வரை, அந்த் 'கலரை' பார்க்கமுடியாத குடும்ப உறுப்பினர்களும் உண்டு. இவர்களை சீனர்கள் எப்படி அழைக்கிறார்கள்? - //
:)
//துளசி கோபால் கூறியது...
ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு க்யாசு கண்டிப்பா இருக்கும்:-)))))//
வீட்டுக்கு வீடு கேரண்டியாக உண்டு, என் பொண்ணு கூட அப்படித்தான் வளருவாள் என்றே நினைக்கிறேன், எதையும் அவளுக்கு தெரியாமல் தூக்கி எறிந்தால் தான் உண்டு.
//வடை எனக்குத் தானா;-)//
கொஞ்சம் சட்டினியும் சேர்த்துக் கொள்ளுங்கள், அவற்றை நானும் வைத்திருந்தேனே
//Ramani கூறியது...
பொருளை மட்டுமல்லாது
மனிதர்களையும் பொருள் போலவே ஐந்து வகையாகப்
பிரித்துப்பார்த்தேன்.சரியாகத்தான் இருந்தது
பயனுள்ள பதிவு.வாழ்த்துக்கள்
வியாழன், 12 ஜூலை, 2012 10:51:0//
உங்கள் மாற்றுப்பார்வையும் அருமை, நன்றி
// 'மிகவும் தேவையானது என்றால் அலட்சியமாக வைத்திருக்க மாட்டோம்' என்கிற நினைப்பில் கிளறிப் பார்க்காமல் விட்டுவிடுவேன்,//
இது ரொம்ப தவறு. என்ன இருந்தாலும் ஒரு முறையாவது அதை சரி பார்த்து போடுவது தான் நல்லது. என்னோட அம்மா நாங்க மலேசியா சென்ற பொது Bird park ல எடுத்த படத்தை இங்கே ஒரு கவரில் வைத்து விட்டு ஊர்ல போய் காணோம் காணோம் என்று புலம்பிக்கொண்டு இருந்தார்கள். நானும் எங்கடா போய் இருக்கும்.. என்று அனைத்து இடமும் தேடி பார்த்து சரி எப்பவாவது கிடைக்கும் என்று விட்டு விட்டேன். இன்று வீடு சரி செய்யும் போது கவர் எல்லாமே எடுத்துப்போடும் போது தான் இதை அதனுள் கவனித்தேன். நல்லவேளை பார்க்காமல் போட்டு இருந்தால் பாவம்.. காணோம் என்று அதையே நினைத்து வருந்தி இருப்பார்கள்.
//எம்ஜிஆரின் 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு' எப்போதும் வரும் என்கிற எதிர்ப்பார்ப்பு போல் நானும் காத்திருக்கிறேன்.//
:-)) இது உண்மை. நிறைய பேர் வெளியே தூக்கி போட மாட்டார்கள். என் மனவிற்கும் எனக்கும் இதில் சண்டை வரும். எனக்கு வீட்டை அடைத்து வைத்து இருந்தால் பிடிக்காது.. தேவையில்லாத பொருட்கள் இருந்தால் தூக்கி போட்டு விடுவேன். அது வேண்டும் இது வேண்டும் என்று எடுத்து வைத்து அது குப்பை அடித்து கிடக்கும்.
என்னோட அம்மா இங்க வந்த போது ஏகப்பட்ட பிளாஸ்டிக் டப்பாக்களை எடுத்து வைத்து ஊருக்கு வரும் போது கண்டிப்பாக கொண்டு வரக்கூறி இருக்கிறார்கள். அதை கொண்டு வந்தால் எடை இல்லை ஆனால் என் பெட்டியின் இடத்தை முழுவதும் அடைக்கிறது. இதைக் கொண்டு வரும் நேரம் நான் வேறு பல பொருட்களை எடுத்து செல்லலாம். கொண்டு செல்ல வேண்டியது ஏகப்பட்டது இருக்கிறது. நம்ம ஊரில் வாங்கினால் அது மொத்தமாக 100 ருபாய் கூட வராது. சரி பொறுமையாக கொண்டு வருகிறேன் என்று கூறி இருக்கிறேன். எனக்கு அதை தூக்கிப் போட மனமில்லை.
//அதில் படுக்கலாம், ஆனால் உருண்டு பிரளவோ, வேறெதுவும் செய்ய முடியாது, பிரண்டாலே அடுத்த அறைக்கு 'மொட மொட' சத்தம் கேட்கும் நிலையில் நானும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்த நிலையில் தூங்கி எழ விடிந்திருந்தது. காலையில் நண்பர் 'வீடு வசதியாக இருந்ததா ?' //
ஹா ஹா ஹா சூப்பர். நல்ல கொடுதீங்கய்யா படுக்கையை.. அப்ப இவங்க சத்தத்தொடவே இந்த சத்தமும் எப்போதும் தொடரும் போல :-))
//புதிதாக வெளிநாடு சென்று வந்தவர்கள் மட்டுமின்றி பல முறை சென்றுவந்தவர்கள் கூட ஏர்போர்ட் பட்டி(டேக்) சுழற்றாமல் பெட்டியை வைத்திருப்பார்கள்//
இது ஆன்சைட் போய் வரும் பசங்க செய்வாங்க.. தமாசா இருக்கும். நிறையப் பேர் இருக்கிரார்கள. LED டிவி ஸ்டிக்கர் நானும் வைத்து இருக்கிறேன்.. அதை எடுத்தால் ஒழுங்கா வராமல் வெள்ளையாக அசிங்கமாகி விடும் என்பதால் அதை எடுக்கவில்லை, மற்றபடி கவுரவத்திற்காக அல்ல :-) அந்த பாலிதீன் பேப்பர் கூட பிரிக்காமல் வைத்து இருப்பார்கள் அது தான் கொடுமையா இருக்கும்.
//முகவை மைந்தன் சொன்னது…
வீட்டுக்கு வீடு வாசப்படி! நான் சரியான கியாசுவாக இருந்ததால் 200 கிலோ அளவிற்கு குப்பையை ஊருக்கு அனுப்பினேன் ;-)//
இதுக்கு 40 கே செலவு செய்து இருக்கிறாரே! :-))
நான் சமீபத்தில் படித்த மிகச்சிறந்த கட்டுரையிது. இதன் பாதிப்பில் என் அலமாரியில் சேமித்து வைத்திருந்த என் பழைய 4 கம்பெனிகளின் விஸிட்டிங் கார்டுகளைத் தூக்கி எறிந்தேன். கடைசியில் மனம் பொறுக்காமல் எனக்கே ரகசியமாய் என்ற பாவனையில் ஒவ்வொன்றிலும் 5 கார்டுகளை எடுத்து வைத்துக் கொண்டேன். இன்னும் இப்படி என்னென்ன இருக்கின்றன என்று தேடியெறிய வேண்டும். - செல்வா, குடியாத்தம்
கருத்துரையிடுக