பின்பற்றுபவர்கள்

21 ஜூலை, 2012

கால ஓட்டத்தில் காணமல் போனவை - அச்சுத் தொழில் !


நான் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிந்து 11 ஆம் வகுப்புக்கு காத்திருக்கும் நிலையில் என்ன செய்வது, வெட்டியாகப் பொழுதை ஓட்டினாலோ, சேர்க்கை சேர்ந்தாலோ கெட்டுவிடுவேன் என்பதற்காக என்னைக் கொண்டு சென்று ஒரு ஆட்டோமொபைல் கடையில் வேலைக்கு சேர்த்தார்கள், 15 வயது பையனுக்கு அனுபவம் இல்லாத வேலைக்குப் போகும் போது என்ன வேலை கொடுப்பாங்க ? அங்கே பழுது பார்க்க வந்து நிற்கும் கார்களை துடைப்பது தான், அந்த ஆட்டோமொபைல் முதன்மைச் சாலையில் இருந்ததால், நான் கார் துடைத்துக் கொண்டு இருப்பதை கூட படித்த மாணவர்கள் பார்த்தால் அவமானம் என்று நினைத்து ஒரே நாளில் எனக்கு இந்த வேலை பிடிக்கவில்லை கையெல்லாம் பிசு பிசுப்பாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு மறுநாள் முதல் அந்த வேலைக்குச் செல்லவில்லை, பிறகு ஒரு சில நாள் சித்தாள் வேலைக்குப் போனதுடன் சரி. அதன் பிறகு தேர்வு முடிவுகள் வரவே வாங்கிய மதிப்பெண்களுக்கு பாலிடெக்னிக் கிடைக்காத நிலையில் அடுத்து மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்து தொழில் படிப்புத் துறையில், இது தான் நல்லது என்கிற பிறர் பரிந்துரையில்  'ஜெனரல் மெசினிஸ்ட்' என்ற சிறப்புப் பாடத்திட்டத்தில் சேர்த்துவிட்டனர். அந்த ஆண்டு முதல் தான் +2 பாடத்த்திட்டத்தில் அந்தப் பிரிவு புதிதாக இடம் பெற்றது, பாடத்திட்டம் எல்லாம் புதிது என்ற நிலையில் அதை நடத்திய ஆசிரியர் தவறி பின் தேறிய பலிடெக்னிக்கில் மெக்கானிக் படித்த ஆசிரியர், இருந்தும் நன்றாகவே பாடம் நடத்தினார், லேத் (கடைசல் பொறி) ஓட்டுவது, ட்ரில்லிங் (துளையிடும் பொறி), மில்லிங்க்(இழைக்கும் பொறி), ஷேப்பிங் மிசின் (வடிவமைக்கும் பொறி)ஆகிய இயந்திரங்களைப் பயன்படுத்துவது உள்ளிட்டப் பாடங்களை செயல்முறைகளுடன் படித்தேன். பாடத்திட்டமும் முழுக்க முழுக்க தமிழில் தான், செயல் முறை விளக்கத்துடன் ஆன பாடம் என்பதால் எனக்கும் கூடுதல் ஆர்வமாக திறம்படவே செய்தேன், இன்னிக்கும் எங்கேயாவது லேத் , ட்ரில்லிங் மெசினைப் பார்த்தால் எனக்கு +2 படித்த நினைவைக் கொண்டு வந்துவிட்டுவிடும். +2 படிப்பில் முதலாண்டு தேர்வு முடிந்த இடைவெளியில் என்ன செய்வது என்கிற கேள்விக்கு விடையாக என்னுடன் பத்தாம் வகுப்பில் படித்து தேறாத வகுப்புத் தோழன் அச்சு அலுவலகம் ஒன்றில் வேலை செய்வது தெரியவர, அவனுடைய பரிந்துரையிலும் ஒரு மாதம் மட்டுமே வேலை பார்ப்பேன் என்கிற வேண்டுகோளுடன் அச்சு அலுவலகம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தேன். சித்தாள் வேலைக்குச் செல்வது கவுரமற்றது என்று கருதிய பெற்றோர்கள், அச்சு 'ஆபிஸ்' வேலை என்றதும் அதை ஒரு கவுரவ வேலையாகக் கருதி தடை எதுவும் போடவில்லை, ஆனால் அச்சாபிசில் நாள் கூலி வெறும் 5 ரூபாய் தான், என்றாலும் அப்போதைய ஐந்து ரூபாயில் மூன்று வேளை சாப்பிட்டது போக திரைப்படம் பார்க்கவும் முடியும்.

*****

மிழ் எழுத்துகள் அச்சுவடிவத்திற்கு வந்து 3 நூற்றாண்டுகள் ஆகிறது, தமிழை முதன் முதலில் அச்சு ஏற்றியவர் என்ற பெருமைக்குரியவர் வீரமாமுனிவர், அவர் தான் 'ஏ' எழுத்து வடிவத்தையும் கொண்டுவந்தார், அதற்கு முன் 'ஏ' எழுத 'எ' மட்டுமே எழுதப்பட்டு சொற்கள் அடிப்படையில் அவை 'ஏ' என்று படிக்கப்படும், அச்சு எழுத்து வடித்திற்கு  'எ' வின் முடிவில் கீழே இழுத்துவிட்டு 'ஏ' வை உருவாக்கினார் அவர், கிறிஸ்துவ மிசனரிகள் மதமாற்றம் செய்ய வந்தார்கள் என்கிற பரப்புரைகளின் நடுவே அவர்களின் தமிழ் தொண்டுகள் மறைக்கப்பட்ட வரலாறாகத்தான் உள்ளது, என்றாலும் தேவநேயப் பாவணர் போன்றோர் கிறிஸ்துவ மிசனரிகளின் தொண்டுகளை பின்னர் போற்றி ஆவணங்களாக ஆக்கியுள்ளனர்.

அச்சு அலவலகங்களின் வேலைகள் திருமண அழைப்பிதழ் அடிப்பது, நூல்களை உருவாக்குவது, பைண்டிங், மற்றும் துண்டு விளம்பரம் அடித்தல், அரசாங்க கோப்புகளை அச்சடித்து தருதல் உள்ளிட்ட பல தரப்பட்ட அச்சுடன் தொடர்ப்புடைய வேலைகளைச் செய்வார்கள், அச்சு எந்திரங்கள் காலால் மிதித்தும் மின்சாரம் மூலமாக செயல்படுவதாக இருவகையும் சேர்ந்தே உருவாக்கப்பட்டு இருக்கும், மின்சாரம் இல்லாத வேளைகளில் காலால் மிதித்து இயக்குவார்கள், தவிர புதிதாக கற்றுக் கொள்பவர்களையும் காலால் மிதித்து இயக்கவே பயிற்சிக் கொடுப்பார்கள், அதுவும் அச்சு அலுவலகத்தில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் வரையில் பணி புரிந்தால் பதவி உயர்வு என்கிற அடிப்படையில் அச்சு இயந்திரத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்கும், அதற்கு அடிப்படைக்காரணம், கவனம் இல்லாமல் செயல்பட்டால் கை முழுவதுமாக நசுங்கிவிடும், தவிர்த்து அச்சு எழுத்துகள் நசுங்கிவிடும், அல்லது எந்திரத்தில் ரோலர்கள், மை வட்டு ஆகியவை பழுதாகிவிடும் என்பதால் அச்சு இயந்திரம் இயக்க போதிய அனுபவம் வர காத்திருக்க வேண்டும், ஒருமாதம் தான் வேலை செய்வேன் என்கிற வேண்டுகோளுடன் வேலைக்கு சென்ற எனக்கு அச்சு எந்திரம் துடைக்கக் கூட வாய்ப்புக் கிடைக்கவில்லை, ஆனால் அச்சுக் கோர்ப்பது, பையிண்டிங்க் செய்வது, அச்சுக் கோர்த்த உடன், முதல் அச்சு எடுக்கப்பட்டு அதில் எழுத்துப் பிழை பார்ப்பது (ப்ரூப் ரீடிங்), பைண்டிங்க் செய்ய தேவையான பசை காய்ச்சுவது உள்ளிட்ட பணிகள் கிடைத்தன.

அச்சு கோர்ப்பது ஒன்றும் எளிதாகக் கற்றுக் கொள்ளும் தொழில் அல்ல, குறைந்தது ஒருவாரம் பழகிய பின்னரே கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொள்ள முடியும், தட்டச்சு எந்திரத்தில் போன்று எழுத்துகளில் ஒற்றைக் கொம்பு, இரட்டைக் கொம்பு, கால்,  உள்ளிட்ட எழுத்துகள் ஒரு மீட்டருக்கும் சற்று குறைவான அகலத்தில் உள்ள மர சட்டத்தில் செவ்வக அறைகள் ஏற்படுத்தி அடிக்கடிப் பயன்படுத்தும் எழுத்துகளை கீழ் சட்டத்திலும் அதன் மீது சாற்றிய நிலையில் இன்னொரு சட்டத்தில் குறைந்த பயன்பாட்டில் வரும் எழுத்துகளை கைக்கு எட்டும் தொலைவிலும் வைத்திருப்பார்கள், அதாவது தமிழ் எழுத்துகளைப் பொருத்த அளவில் இரண்டு பகுதியாக உள்ள மரச் சட்டத்தில் கிட்டத்தட்ட 150 செவ்வக அறைகள் இருக்கும், எழுத்துகளின் பயன்பாட்டிற்கேற்ப அறைகளின் அளவும் இருக்கும், உயிர் மெய் எழுத்துகள் கீழ் சட்டத்திலும், உயிரெழுத்து மற்றும் மெய்யெழுத்துகள், இ(கி),ஈ(கீ),உ(கு),ஊ(கூ), உள்ளிட்ட உயிர்மைய் எழுத்துகள் மேல் சட்ட அறைகளிலும் இருக்கும், ஆ(கா), எ(கெ), ஏ(கே), ஐ(கை), ஒ(கொ), ஓ(கோ) உள்ளிட்ட எழுத்துகள் இயல்பிலேயே தனித்தனி குறியிடுகள் கொண்டுள்ளதால் அவை குறியிடுகள் மற்றும் மெய் எழுத்து என்ற வகையில் கீழ் சட்டத்தின் அறைகளிலேயே இருக்கும். அச்சு எழுத்துகள் காரீயம் சேர்த்து அச்சுகளாக உருவாக்கப்பட்டவை தான், எழுத்துகளின் அளவுக்கேற்ற அகலத்தில் 2 செமீ உயர செவ்வக வடிவ காரீயத் துண்டுகளின் மேல் எழுத்துகள் பொறிக்கப்பட்டு, கண்ணாடியில் பார்த்தால் தான் படிக்க முடியும்  என்பதாக ரப்பர் ஸ்டாம்பில் இருப்பது போன்று வலம் இடமாகப் படிப்பதாகத்தான் இருக்கும். ஸ்பேஸ் தவிர்த்த மற்ற எழுத்துகளின் முன்பக்க அடையாளக் குறியீடடிற்காக பிறைவடிவத்தில் எழுத்து நிற்கும் உயரத்தின் நடுப்பகுதின் அமைப்பு இருப்பதால், விரலில் எடுக்கும் பொழுதே சரியான பகுதிக்கு திருப்பி எழுத்தைப் பார்க்காமலேயே நேராகப் பொருத்த முடியும்.,  அவற்றில் இடைவெளி குறியீடு (ஸ்பேஸ்) சற்று உயரம் குறைவாக இருக்கும், அச்சாக அடிக்கும் பொழுது ஸ்பேஸ் அச்சில் விழக் கூடாது என்பதற்காக ஸ்பேஸ் சற்று உயரம் குறைவாக உருவாக்கப்பட்டு இருக்கும். குறிப்பிட்ட எழுத்து அறைக்குழிக்குள் வேறு எழுத்துகள் கலக்காவிடில் கம்போஸ் செய்யும் பொழுது தவறு ஏற்படாது, தொடர் பயிற்சினால் எந்த அறையிலும் உள்ள எழுத்துகள் மனப்பாடம் ஆக, பழகிய தட்டச்சு விரல் போன்று எழுத்துகளை எடுத்து படித்துப் பார்க்காமல் கோர்பில் சேர்க்க முடியும். கம்போஸ் ஸ்டிக்கை பிடித்தி இருக்கும் இடது கை கடைசியாக வைக்கும் எழுத்தை சேர்த்துப் பிடிக்க வரிகள் சரியாமல் இருக்கும், மேலும் கையை திருப்பாமல் இருக்க வேண்டும், கவனக் குறைவாக திருப்பினஅல் மொத்த எழுத்துகளும் அப்படியே தரையில் கொட்டிவிடும்,

அச்சு கோர்க்கப் பயன்படுத்தும் கைப்பிடியுடன் படத்தில் உள்ளபடி மரம் அல்லது உலோகத்தில் செய்யப்பட்ட அமைப்பு, நான் பார்த்தவை 'A4' பக்கம் உருவாக்கக் கூடிய அகலத்தில் உள்ள மரத்தில் செய்யப்பட்ட பொருத்தி தான், அதை கம்பாஸிங்க் ஸ்டிக் என்று சொல்லுவார்கள், எதை அச்சுக் கோர்க்க வேண்டுமோ அது பற்றிய தகவல் அடங்கிய தாள்களை மேல் சட்டத்திலோ, அல்லது பக்கத்திலோ வைத்துக்கொண்டு ஒவ்வொரு எழுத்தாக எடுத்து அடுக்க வேண்டும், வலது கையில் காம்பாஸிங்க் ஸ்டிக் இருக்கும், இடத்து கை விரலால் எழுத்துகளை எடுத்து அதில் வரிசையாகப் பொருத்த வேண்டும், சொற்களின் இடைவெளிக்கு ஸ்பேஸ் எழுத்தைப் பயன்படுத்த வேண்டும், பத்திகளின் இடைவெளிக்கு உயரம் குறைவான நீள ஸ்டீல் அல்லது மர அட்டைகள் வைத்திருப்பார்கள், அதைப் பொருத்த வேண்டும், அடிக்கோட்டிற்கு எழுத்து அளவு உயரமுள்ள மெல்லிய பட்டைகளை அடுத்த வரியில் அதற்கு நேராகப் பொருத்துவோம். முதல் வரி முடிந்து அடுத்த வரிக்கு செல்லும் முன் கடைசி சொற்களுக்கு போதிய இடம் இல்லை என்றால் பொருள் தரும் வகையில் சொற்களைப் பிரித்துக் கொள்ளலாம், அல்லது மீதம் இருக்கும் இடைவெளியை நிறப்ப ஒவ்வொரு சொற்களுக்கு இடையேயும் கூடுதலாக ஸ்பேஸ் வைத்து திணிக்க அந்த வரி அலைன் செய்யப்பட்டுவிடும், அடுத்த அடுத்த வரிகளும் அப்படியே, பத்தி முடியும் பொழுது பத்திகான அட்டை, ஒரு கம்பாஸிங்க் ஸ்டிக் முழுவதும் எழுத்துகளை அடுக்கிவிட்டால் பின்னர் அதிலிருந்து மொத்தமாக அப்படியே லாவகமாக எடுத்து பக்கங்களை சேர்க்கும் மறறொரு தட்டையான சட்டத்திற்கு மாற்றுவோம், கடைசி வரியை முட்டுக்கொடுத்து தடுப்புகளை வைக்கலாம், அல்லது சாய்வானப் செவ்வக பலகைப் பரப்பில் வைக்க அப்படியே நிற்கும், அடுத்த கோர்ப்பு முடிந்ததும் அதை தொடர்ச்சியாக ஏற்கனவே வைக்கப்பட்டதன் மீது பொறுத்துவார்கள், இப்படியாக ஒரு 'A4' பக்கமோ அல்லது அச்சடிப்பின் அளவுகளுக்கு ஏற்ப பக்கங்கள் உருவாக்கப்படும், எழுத்துகளை கம்பாஸிங் ஸ்டிக்கில் சேர்க்கும் பொழுதோ, சேர்த்ததை மொத்தமாக எடுத்து வைக்கும் பொழுதோ கவனக் குறைவானால் மொத்தமாக தரையில் கொட்டிவிடும். வெறும் கம்பாஸிங்க் ஸ்டிக் ஒரு 50 கிராம் எடை என்றால் அவற்றில் எழுத்துகளை சேர்க்க சேர்க்க இரண்டு கிலோ அளவுக்கு எடை கூட இடது கை வலிக்கும், அது மட்டுமல்ல, செவ்வகக் குழிகளில் விரல்களை விட்டு எழுத்தை எடுக்கும் பொழுது, எழுத்து செய்யப்பட்ட உலோகம் கடினமானது கூடவே சற்று கூரான முனைகளைக் கொண்டது என்பதால் விரல் நகக் கண்களை கிழித்துவிடும்.

எழுத்துகளைச் சேர்த்து பக்கமாக உருவாக்கிய பிறகு அவற்றை வைத்திருக்கும் செவ்வகப் பலகையில் இருந்து ப்ரூப் பிரிண்டிங்க் மேடைக்கு எடுத்துச் சென்று  எழுத்துப் பகுதி சற்று உயரமாக இடுப்பதால் அப்படியே உறுதியான நூலில் கட்டி மேடையில் மெதுவாகத் தள்ளி வைத்துவிட்டு சுற்றிலும் அணைப்பு கொடுத்துவிட்டு, மையை நன்றாக உருட்டி பின் மை உருளையை பக்கத்தின் மீது இரண்டு மூன்று முறை ரொம்பவும் அழுத்தம் கொடுக்காமல் உருட்டுவார்கள், ரொம்பவும் அழுத்தம் கொடுத்தால் எழுத்தின் மூடிய பகுதிகளில் மை இறங்கிவிடும், அச்செடுத்தால் எழுத்து தெளிவாக இருந்தாலும் பார்க்க நன்றாக இருக்காது, அதாவது கண்ணன் என்ற சொல்லில் உள்ள எழுத்தில் இருக்கும் வட்டங்கள் எல்லாம் கருப்பு மையால் நிரம்பி இருந்தால் பார்க்க நன்றாக இருக்குமா ? அதன் பிறகு அதன் மீது தாளை வைத்து மையற்ற இன்னொரு உருளையால் அல்லது மேலிருந்து அமுக்கும் தட்டையான கை எந்திரம் வழியாகவோ அமுக்குவார்கள், எடுத்துப் பார்த்தால் அச்சுகள் படிக்கும் படி தெளிவாக தாளில் பதிந்து இருக்கும், ப்ரூப் பார்த்து எதேனும் மாற்றம் தேவைப்பட்டால் பக்கத்தின் குறிப்பிட்டப் பகுதியை மட்டும் எடுத்து சரி செய்துவிட்டு திரும்பவும் பொருத்த வேண்டும். பின்னர் முறையாக அச்செடிக்கும் செட்டிங் அமைப்பில் வைத்து முடுக்கி அச்சு எந்திரத்தில் ஏற்றி எத்தனை படிகள் (காப்பிகள்) வேண்டுமோ அத்தனைக்கும் சற்று கூடுதலாக அடிப்பார்கள். பக்கங்களில் பயன்படுத்தும் புகைப்படங்கள் ஆகியவை 'போட்டோ ப்ளாக்' என்ற அச்சு அமைப்புகளாக  உருவாக்கவேறு நிறுவனங்களில் கொடுத்து செய்துவந்து அதை கம்போஸிங்க் செய்யும் போது இடையே பொருத்திக் கொள்வார்கள்.

ஒரே பக்கத்தை வண்ணப்பக்கங்களாக உருவாக்க எத்தனை வண்ணம் பயன்படுத்துகிறோமோ, அத்தனை வண்ணத்திற்கான தனித் தனி பக்கங்களை உருவாக்க வேண்டும், அதாவது தலைப்பில் பச்சை நிறமும், கீழே வேறு நிறமும் பயன்படுத்த வேண்டும் என்றால், தலைப்பு மட்டுமே தனிப்பக்கமாக உருவாக்கப்பட்டு அச்சடிக்கப்பட்டு, பின்னர் அடுத்த நிறத்திற்கான பக்கமும் உருவாக்கப்பட்டு, அச்சு எந்திரத்தில் வண்ணம் மாற்றப்பட்டு பின்னர் அச்சடிக்கப்படும், 'காம்பினேசன் கலர்' என்ற வகையில் கலர் புகைப்படங்களை அச்சடிக்க மூன்று போட்டோ ப்ளாக் மற்றும் நீளம், மஞ்சள், ஊதா நிறங்கள் மாறி மாறி பயன்படுத்தி வண்ணப் புகைப்படங்களை அச்சடிப்பார்கள்.

இந்தத் தொழிலில் கவனக் குறைவாக இருந்தால் நிறைய ஆபத்துகள், விபத்துகள் ஏற்படும், புத்தகங்களை அளவாக வெட்டும் பொழுதும், தாள்களை அளவாக வெட்டும் பொழுதும் எந்திர வெட்டிகள் தான் பயன்படுத்தப்படும், 500 தாள்களை ஒன்றாக வைத்து வெட்டும் பொழுது ப்ளேடின் கூர்மை, வேகம் உள்ளிட்டவை கருத்தில் கொண்டு கைகளை இடையே விடாமல் கவனத்துடன் செயல்பட வேண்டி இருக்கும்.

இந்த வேலையில் நூல் பைண்டிங்க் தவிர்த்து பிற வேலைகளை பெண்கள் செய்வது அரிது, காரணம் முழுப்பக்கத்தை கோர்த்து கட்டித் தூக்க காரீய எழுத்துகளின் எடை சேர ஐந்து  கிலோ அளவுக்கு எடை இருக்கும், தவிர எந்திரங்களை இயக்குவதும் கடினமானது,  அச்சுக் கோர்ப்புக்கு வேலைக்கு வருபவர்கள் பெரும்பாலும் பள்ளிப்படிப்பை பாதியில் விட்டு விட்டு கவுரமான வேலை என்று வருபவர்கள் தான், 25 வயது வரை வேலை பார்த்துவிட்டு சம்பளம் கட்டுப்படி ஆகவில்லை என்று பெயிண்டராகவே அல்லது வேறு வேலைக்கோ சென்றுவிடுவார்கள், கொஞ்சம் பேர் தான் தொடர்ந்து வேலை செய்வார்கள்,  அவ்வாறு நீண்ட நாள் வேலை செய்பவர்கள் தொழில் தெரிந்தவர் என்ற அடிப்படையில் நான்கைந்து அச்சு நிறுவனங்களில் ஒரே நேரத்தில் தேவையின் அடிப்படையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருமானத்தை சரி செய்து கொள்வார்கள், அச்சுக் கோர்ப்பில் வேலை செய்பவர்கள் எல்லாம் இளம் வயதினர் என்பதால் முதலாளி இல்லாத வேளைகளில் கலகலப்புக்கும் சினிமா நடிகர் நடிகைகள் பற்றிய கதைகளுக்கும் குறைவிருக்காது, நான் தொடர்ந்து படிப்பவன் என்பதால் முதலாளி என்னிடம் அதட்டி, திட்டி வேலை வாங்கியது இல்லை, கொஞ்சம் பாசமாகவே நடந்து கொண்டார். இப்பவும் பார்த்தால் கூட தன்னிடம் வேலை பார்த்தவன் என்கிற நினைப்புகளை குறைத்து எனது கல்வித் தகுதிக்காக என்னிடம் அன்பாகத்தான் பேசுவார், அந்த அச்சு நிறுவனத்தில் சுஜாதாவின் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு 'இமைய பதிப்பக வெளியிடுகள்' என்பதாக வெளி வந்தன, சுஜாதாவும் எப்போதாவது வந்து போவார், நான் பார்த்திருக்கிறேன், சுஜாதாவின் நாவல்களை அச்சுக் கோர்க்கும் வாய்ப்புகள் கூடக் கிடைத்தன.

அச்சு அலுவலங்களில் அன்றாட வேலைகள் அழைப்பிதழ்கள் அடிப்பது தவிர்த்து பிற அச்சு வேலைகளும் இருக்கும், தேர்தலுக்கு முன் அச்சு அலுவலகங்கள் படு பிசி ஆகிவிடும், காரணம் வாக்களர் பட்டியலை உருவாக்கியப் பின் அச்சாக்கும் பொறுப்பு அச்சு நிறுவனங்களுக்கு வழங்கப்படுவதால் இரவு பகலாக வேலை பார்ப்பார்கள்,வாக்களர் பட்டியல் மாவட்டம், வட்டம், தாலுகா, கோட்டம் உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் ஆண் / பெண் வாக்களர் பெயர்கள் வரிசை அவர்களின் வயது விவரங்களுடன் பட்டியலாக உருவாக்க வேண்டும், ஒவ்வொன்றிலும் 50 காப்பிகள் வரையில் அச்சடிப்பார்கள், அச்சுக் கோர்ப்பு தான் கடினமானது, மொத்தப் பட்டியலை உருவாக்கி அடிக்கப் போதிய எழுத்துகள் இல்லாத நிலையில் ஒரு பகுதியை அடித்த பின் எழுத்துகளை பிரித்துப் போட்டுவிட்டு அடுத்தப் பகுதியை உருவாக்க வேண்டும், கோர்பதைவிட அச்சுப் பிரிப்பது எளிது தான், அச்சடித்த பின் எழுத்தின் மீதான மையை நீக்க மண் எண்ணையை தூரிகையில் எடுத்து அழுந்த துடைத்துவிட்டு, கொஞ்சம் காய்ந்ததும், இடது கையில் ஆள்காட்டி விரலுக்கும், பெருவிரலுக்கும் இடையே கொள்ளும் அளவுக்கு பத்தியின் கடைசியில் இருந்து வரிகளை எடுத்துப் பொருத்திக் கொண்டு, அதில் வரியாக எடுத்து படித்துப் பார்த்துவிட்டு செவ்வக அறைகளில் அதனதன் இடத்தில் ஒவ்வொன்றாக போட வேண்டும், திறனுக்கு ஏற்ப வேக மாகபோட முடியும், விரல் லாகவமாகப் பயன்படுத்துவதாலும் எழுத்துக்குழிகள் ஏற்கனவே மனப்பாடம் ஆன நிலையில் அச்சுப் பிரிப்பில் பொழுது படபட வென்ற வேகமாகவே எழுத்துகளை எடுத்து பிரித்துப் போடுவார்கள், ஒரு கம்பாஸிங்க் ஸ்டிக் அளவுக்கு அச்சுக் கோர்க்க 30 நிமிடம் எடுத்தால் அதைப் பிரித்துப் போட 3 நிமிடம் தான் ஆகும்.

எழுத்துகளின் தன்மைக்கெற்ப தனித் தனி செவ்வகப் பலகை சட்டங்கள் இருக்கும், உதாரணத்திற்கு இட்டாலிக், மற்றும் போல்ட் எழுத்துகள் இவை தனித் தனியான சட்டங்களில் இருக்கும், வரிகளுக்கு இடையே தேவையான இடங்களில் பொருத்த அந்த சட்டப் பகுதிக்குச் சென்று எடுத்துப் பொருத்த வேண்டும் பிரிக்கும் பொழுதும் அப்படியே. ஆங்கில எழுத்துக் கோர்ப்பு எளிது, காரணம் எண்ணிக்கை அடிப்படையில் சட்டங்களில் குழிகளும் குறைவாகவே இருக்கும், சிறிய மற்றும் தலைப்பு (Small & Capital)  எழுத்துகளில் சிறிய எழுத்துகளை கீழ் பகுதியிலும் தலைப்பு எழுத்துகளை மேல் பகுதியிலும் வைத்திருப்பார்கள், ஆங்கில எழுத்தில் 'e' க்கு மட்டும் பெரிய செவ்வக குழி இருக்கும்,'e' எழுத்துகளும் எண்ணிக்கை அடிப்படையில் கூடுதலாகவே இருக்கும். ஆங்கிலத்தில் பயன்படுத்தும் எழுத்துகளில் 'e' தான் பயன்பாட்டு அளவில் முதன்மையாக இருக்கிறது.

தேர்தல் வாக்காளர் பட்டியல் அச்சுக் கோர்ப்பில் கோர்பாளர்கள் திணறுவது இஸ்லாமிய பெயர்களை கோர்க்கும் பொழுது தான், காரணம் பொரும்பாலும் இஸ்லாமியப் பெயர்கள் வடமொழி எழுத்துகளைக் கொண்டு இருப்பதால் அவ்வெழுத்துகள் உயரமான மற்றும் குறுகலான குழிகளில் இருக்கும், பொதுப் பயன்பாடு என்ற அளவில் அவ்வெழுத்துக்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கும், போதிய எழுத்துகளே கிடைகாத நிலையில் நாங்களே பெயர்களை தமிழ்படுத்தி அச்சில் ஏற்றுவோம், இப்ப இருக்கும் பெரும்பாலான தமிழ் பெயர்களும் அப்படியே தான் இருக்கின்றது என்பது வேற. உதாரணத்திற்கு அஹமது என்று எழுத்துக் கோர்க்க, 'ஹ' இல்லாவிடில் 'அகமது' என்று மாற்றிவிடுவோம், இல்லை என்றால் தவிர்க்க முடியாத இடங்களில் அஉறமுது (உ வையும், ற வையும் சேர்த்துப் போடுவது) ஹரிஹரன் என்பதை உறரிஉறரன் என்று எழுதினால் எப்படி இருக்கும் அது போலவே,  ஜான்சி என்கிற பெயரை சான்சி, ஜமீலா - சமீலா என்று அமைப்போம், வேற வழி இல்லை,  மொத்தமாக ஐந்தாயிரம் பக்கம் அடிக்க எழுத்துகள் 20 பக்கத்திற்கு தான் வரும் என்ற நிலையில், உருவாக்கிய பக்கங்களை அடித்துக் கொண்டிருக்கும் பொழுது பிற பக்கங்களை உருவாக்கும் சூழலில் எழுத்துப் பற்றாக் குறைகள் இவ்வாறு தான் சரி செய்யப்படும், இந்த எழுத்துப் பற்றாக் குறை விவரம் வாக்காளர் பட்டியல் கொடுத்த அரசு நிறுவனங்களும் தெரியும் என்பதால் விவகாரம் எதுவும் கிளம்பாது. 

நான் வேலை பார்த்த அச்சு அலுவலகத்து ஜாப் ஆர்டர் என்ற வகையில் நீதிமன்றங்களின் தீர்ப்பு ஆணைகளின் தட்டச்சு நகல்வடிவம் வரும், அதை அச்சாக்கி 10 காப்பிகள் வரையில் கொடுக்க வேண்டும், அதை தான் வழக்கின் தீர்ப்பு நகலாக கையெழுத்து இட்டு வாதி மற்றும் எதிர்வாதியிடமும் கொடுப்பார்கள், உள்ளூர் வெளியூர் வழக்கு விவரங்கள் அனைத்தையும், தீர்ப்பையும் அச்சு கோர்க்கும் போதே படித்துவிடலாம், கள்ளத் தொடர்ப்பு, கொலை, சொத்து தகராறு உள்ளிட்ட நீதிமன்ற நடவடிக்கை தீர்ப்பு விவரங்கள் மற்றும் அதனுடன் இணைந்த பிற சான்றிதழ்கள் பற்றிய தகவல் அனைத்தும் தெரியவரும், சில படிக்க சுவாரிசியமாக இருக்கும். சில 50 பக்கங்கள் வரை நீண்டு கொண்டே இருக்கும். 

எப்பொழுதெல்லாம் நீண்ட பள்ளி விடுமுறை கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அச்சு அலுவலகத்திற்கு வேலைக்குச் சென்றுவிடுவேன், கிடைக்கும் பணத்தின் எனக்கு தேவையான புத்தகங்களை வாங்குவது உள்ளிட்ட செலவுகளைப் பார்த்துக் கொள்வேன், +2 படித்து முடித்த நிலையில் பகல் நேர பட்டப்படிப்பிற்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில், பகல் நேர பாலிடெக்னிக்கிற்கும் போதிய மதிப்பெண்கள் இல்லாத நிலையில் பகுதி நேரமாக பாலிடெக்னிக் படிக்கும் சூழல் ஏற்பட்டது, பி.இ படிக்க வைக்கவோ, பணம் கொடுத்து இடம் வாங்கவோ முடியாத நிலையில் உள்ளூரிலேயே படிக்க பகுதி நேர பாலிடெக்னிக் வாய்பாக இருந்து தகுதி அடிப்படை இடம் கிடைக்கவும், தொடர்ந்தேன், பகல் நேரத்தில் அச்சு அலுவலகம் தான், வேலைக்குச் சென்றாலும் படிப்பில் கவனம், தேர்வு காலங்களில் வேலையை தவிர்ப்பது உள்ளிட்ட திட்டமிட்ட நேரங்களினால் பாலிடெக்னிக் படிப்பில் வகுப்பில் முதல் மாணவனாக வர முடிந்தது, என்னுடல் +2 படித்தவர்கள் பலரும் என்னுடைய மதிப்பெண் அளவே பெற்றிருந்ததால் அவர்களுடனேயே படித்து முடித்தேன், படிப்பில் தொடர்வின்மையும் ஏற்படவில்லை. படித்து முடித்ததும், இனிமேல் இந்த வேலைக்கு வந்தால் உன் எதிர்காலம் வீணாகிவிடும் என்று அச்சு அலுவலக உரிமையாளர் அன்புடன் கடிந்து கொண்ட பிறகே அந்த வேலையை விட்டேன்.

அச்சு அலுவலக பயிற்சி எனக்கு பிற்காலத்திலும் பல வகையில் பயன்பட்டது, கணிணிகளில் வேர்ட் அல்லது அதற்கு முந்தைய வேர்ட் ஸ்டார் ஆகியவற்றில் பக்கங்களை  தட்டச்சும் பொழுது காற்புள்ளி, அரைப்புள்ளி மற்றும் புள்ளி வைப்பது அதன் பிறகு இடைவெளி விடுவது, இடைவெளிகள், தலைப்பு, வலது, இடது, கீழ் ஆகிய பகுதிகளின் அளவு உள்ளிட்டவற்றை எப்படி அமைக்கலாம் என்பதற்கு உதவியது, பக்க வடிவமைப்பு நன்கு தெரிவதால் பவர் பாயின்ட் ஸ்லைடுகள் ஆகியவற்றை சிறப்பாக வடிவமைக்கும் ஆற்றலைக் கொடுத்தது. 

(அச்சு அலுவலக்கத்தில் என்னுடன் வேலை பார்த்தவர்கள்)

அச்சுத் தொழில் நசிந்தது ஏன் ?


எல்லாம் கணிணி மயம் ஆகும் பொழுது பாரம்பரிய அச்சுக் கோர்ப்பு முற்றிலும் நசிந்தது, காரணம் அச்சுக் கோர்பில் செய்து வந்த அனைத்து வேலைகளும் கணிணிகளால் எளிதானது, கூடவே ஸ்க்ரீன் பிரிண்டிங்க் உள்ளிட்ட புதிய அச்சு முறைகள், பழைய அச்சுக் கோர்ப்பு முறைகளை ஒழித்து கட்டியது, 90 களின் இறுதி வரை இயங்கி வந்த சிறிய அளவிலான அச்சு அலுவலகங்கள், கட்டாயமாக மூடப்படும் நிலைக்குச் சென்றுவிட்டது, அதில் வேலைப் பார்த்தவர்கள் ஆப்செட் பிரிண்டிங்க் உள்ளிட்ட போஸ்டர் அடிக்கும் தொழிலுக்குச் சென்றுவிட்டார்கள், புத்தகங்கள் மற்றும் துண்டு விளம்பரங்கள் அடிப்பது அனைத்தும் கணிணீ மயமாகிவிட 300 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டுவந்த பாரம்பரிய அச்சுத் தொழில் மூடுவிழா கண்டது, கம்யூட்டர் பிரிண்டர்களால் அச்சுத் தொழில்  முற்றிலும் புதிய வடிவம் பெற்றது.

*****

நான் அச்சுத் தொழிலை கைவிட்ட பிறகு, பாலிடெக்னிக் படித்து முடித்த பிறகு வேறு இரண்டு படிப்பு சார்ந்த தொழில்களையும் (Technical Job) சில ஆண்டுகள் வேலையாகவே செய்து பார்த்துவிட்டு அதில் நிபுணத்துவம் பெற்ற நிலையில் பின்னர் முற்றிலும்  கைவிட்டேன், அதற்கான காரணங்கள் பல, அவைபற்றி பின்னர் எழுதுகிறேன்.


13 கருத்துகள்:

நம்பள்கி சொன்னது…

படம் 1980-ஆ. பெல் பாட்டம் பேண்ட்; ஐவரில் உயர்ந்த மனிதன்; நீங்க அந்தப் படத்தில்?

கோவி.கண்ணன் சொன்னது…

//படம் 1980-ஆ. பெல் பாட்டம் பேண்ட்; ஐவரில் உயர்ந்த மனிதன்; நீங்க அந்தப் படத்தில்?//

அந்தப் படம் 80 இல்லை, 88

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உங்கள் பதிவை படித்த பின், ஞாபகம் வந்தது என் நண்பனைப் பற்றி... சிவகாசியில் அவரது குடும்பம் மிகவும் சிரமப்பட்டு இன்று எதோ கொஞ்சம் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள்...
பகிர்வுக்கு நன்றி...(த.ம. 1)

கோவி.கண்ணன் சொன்னது…

//திண்டுக்கல் தனபாலன் கூறியது...
உங்கள் பதிவை படித்த பின், ஞாபகம் வந்தது என் நண்பனைப் பற்றி... சிவகாசியில் அவரது குடும்பம் மிகவும் சிரமப்பட்டு இன்று எதோ கொஞ்சம் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள்...
பகிர்வுக்கு நன்றி...(த.ம. 1)//

எழுதும் பொழுது தான் பல தகவல்கள் என் நினைவுக்கு வந்தன, இவற்றையெல்லாம் நான் மறந்து பல ஆண்டுகள் கடந்துவிட்டன, உங்கள் நண்பர் குறித்த தகவலுக்கும் மிக்க நன்றி.

ப.கந்தசாமி சொன்னது…

படித்து ரசித்தேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

சகலகலாவல்லவன்!
கோவியை எனக்குத் தெரியும் என்பதில் பெருமையாக உள்ளது.

விழித்துக்கொள் சொன்னது…

vanakkam thiru kovi kannan avargale ennudaiya thuvakka kaala thuraiyum achchththuraiye indru ennudaiya paniyum kanini saardhadhagivittadhu padhivittamaikku nandri
surendran

பெயரில்லா சொன்னது…

அருமையான பதிவு சகோ. அச்சுத் தொழில் எத்தனை பேருக்கு சோறுப் போட்டுள்ளது .. எத்தனை எத்தனை சாதனைகள் செய்துள்ளது .. ஆனால் இன்று எல்லாம் கணனியால் ஆட்கொள்ளப்பட்டு விட்டது ... !!! தவமாய் தவமிருந்து படத்தில் கூட அச்சுத்தொழில் பற்றி வரும் என நினைக்கின்றேன் ...

பல அறியாத தகவல்களை அறிந்துக் கொண்டேன் .. !!!

பழையப் படங்களைப் பார்க்கும் போது சுப்பிரமணியப்புரம் சினிமா நியாபகம் வருகின்றது .. படங்களும் தகவல்களும் அருமை ..

கிருத்தவ மிசனரிகள் எதற்காக வந்தார்களோ.. ஆனால் தமிழுக்கு நிறையவே செய்துள்ளார்கள் .. வீரமாமுனிவர் ஈ என்ற எழுத்தையும் திருத்தினார் என்றுப் படித்த நியாபகம் .. அத்தோடு இந்திய மொழிகள், இந்திய கலைகளை மேற்குலகுக்கு கொண்டு சேர்த்ததிலும், அழியக் கிடந்த ஓலைச் சுவடிகளை அச்சில் ஏற்று முனைந்ததும் அவர்களின் சாதனையே ..

முதன் முதலில் தமிழில் அச்சில் ஏற்றியது வீரமாமுனிவரா ? இல்லை டானிஸ் காரர்களாலா தராங்காம்பாடியில் .. எனக்கு டவுட் இருக்கின்றது ... !!!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

அச்சும் கோர்க்கும் வேலையைச் செய்த பலர் எழுத்தாளர்களாக மிளிர்ந்திருக்கிரார்கள் என்று படித்திருக்கிறேன். நல்ல பதிவு பல செய்திகள் அறிந்து கொண்டேன்.
த.ம 4

priyamudanprabu சொன்னது…

Nice Anna

எனது கவிதைகள்... சொன்னது…

பதிவிட்டமை மிகவும் அருமை வாழ்த்துக்கள்! நண்பா!



உண்மைவிரும்பி.
மும்பை.

வடுவூர் குமார் சொன்னது…

தெரியாத பல விபரங்கள் தெரிந்துகொண்டேன் கோவியாரே.

Test சொன்னது…

அச்சு தொழில் பற்றியும், தங்கள் படித்து வளர்ந்த சூலையும் மிக அழகாக விவரித்துளீர்கள்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்