பின்பற்றுபவர்கள்

19 ஜூலை, 2012

கட்டிடத் தொழிலாளர்கள் பற்றி அறியாதவை !

சாதி, மதம், குலம் பார்க்காமல் நடைபெறும் தொழில்களில் எனக்கு தெரிந்து இரண்டே இரண்டு தான், ஏனைய தொழில்கள் பெரும்பாலும் சாதி / மதம் / பெற்றோர் வழி அல்லது பெருமைக் குரிய என்ற அளவில் தேர்ந்தெடுக்கப்படுவது தான், அப்பன் மருத்துவர் என்றால் வாரிசுகளை எப்படியாவது மருத்துவர் ஆக்கிவிட வேண்டும் என்பது போல் அப்பன் விவசாயி என்றால் மகனும் விவசாயி என்கிற நிலைமை மாறிவிட்டது, காரணம் அதில் செலவிடும், உழைப்பும் பணமும் சரியான லாபத்தை ஈட்டாமல் விவாசயத்தை தலைமுழுக வைத்தது, அது விவசாயத் தொழிலின் குறை இல்லை, அரசின் பொருளாதாரக் கொள்கையினால் உள்ளூர் விவாசாயம் நட்டத்தில் தான் நடக்கிறது. சாதி மதம் குலம் சாராத இரண்டு தொழில் என்று சொன்னேனே... ஒன்று பள்ளிக் கல்வியை முடித்தோ அல்லது முடிக்காமலோ செய்யும் கட்டிடத் தொழில் சித்தாள், கொத்தனார் மற்றும் மேஸ்திரி ஆகியவர்கள் பள்ளிக் கல்வியை பாதியிலேயே நிறுத்தியவர்கள் மற்றும் முற்றிலும் பள்ளிக் கூடம் பக்கமே எட்டிப் பார்க்காதவர்கள், ஒரு ஆண் சித்தாளாக சேர்ந்து மேஸ்திரி நிலைக்கு உயர பத்தாண்டுகள் ஆண்டுகள் பிடிக்கும், அடிப்படைத் தகுதி மண், செங்கல்,செமெண்ட் கலவை சட்டியைத் தூக்கத் தெரிந்தால் போதும், பின்னர் சில நாட்களில் கலவைப் போடக் கற்றுக் கொண்டு, பின்னர் செங்கல்லை சுவர் கட்டப் பொருத்தவும், பொருந்தாத இடத்தில் அளவாக உடைத்து பொருத்தவும் அதன் மீது சரியான அளவு சிமெண்ட் கலவையும் பூசத் தெரிந்து, கடைசியாக சுவரும் தரையும் பூசக் கற்றுக் கொள்வதுடன் முழுக் கொத்தனார் ஆகிவிடுவார் ஒரு (ஆண்)சித்தாள், இதற்கு ஒரு ஐந்து ஆண்டுகள் பிடிக்கும், இடையே கரணை(சட்டியில் இருந்து சிமெண்ட் அள்ளப் பயன்படுத்தும் கைக்கருவி) , மட்டப் பலகை மற்றும் ரசமட்டம் ஆகியவற்றைப் பயன்படுத்தும் திறனும் வளர்ந்திருக்கும், கொத்தனார் வேலையில் ஒரு ஐந்து ஆண்டுகாலம் நீட்டித்தப் பிறகு தானாகவே மேஸ்திரி என்று அறிவித்துக் கொள்வார்.


இத்தகைய பதவி உயர்வுகளை அவர்களாகவே கொடுத்துக் கொள்வர். 'நல்ல சுத்தமான வேலைக்காரன்' என்று நாலு பேர் பாராட்டுவது தான் அவர்களுக்கான சான்றிதழ். மேஸ்திரியாக உயர்ந்தவர்களுக்கு சிமெண்ட் மற்றும் செங்கல் வாங்கும் இடங்களில் போதிய அளவு கமிசன் கிடைக்கும், மேஸ்திரிகளில் சிலர் வீடுகளை வடிவமைப்பதிலும் கைதேர்ந்தவர்களாக இருப்பர், சிலர் சொதப்பலாகவும் வடிவமைப்பர். கட்டிடவேலைகளில் ஆபத்துகள் நிறையவே உண்டு, அஸ்திவாரம் துவங்கி மேல் தளம் போடும் வரை பெரும்பாலும் வெயிலில் தான் வேலை, மேல் தளம் போட்ட பிறகு தான் பிற வேலைகளை செய்ய அவர்களுக்கு நிழல் கிடைக்கும், அதன் பிறகானவேலை 25 விழுக்காடு தான் என்பதால் கட்டிடத் தொழில் சார்ந்தவர்கள் பெரும்பாலும் வெயிலில் தான் வேலை செய்ய வேண்டி இருக்கும்.

கூலித் தொழில்களில் கட்டிடத் தொழிலில் ஒரளவும் ஊதியம் கட்டுப்படி ஆகும் படி தான் இருக்கும்,  தற்போதைய நிலவரத்தில் மேஸ்திரிக்கு 500, கொத்தனாருக்கு 350, ஆண் சித்தாளுக்கு 200, பெண் சித்தாளுக்கு 150 வரைக் கொடுக்கிறார்கள், மேஸ்திரி இல்லை என்றால் வேலை நடக்காது என்பதால் மேஸ்திரி வேலை செய்யாவிட்டாலும் அவருக்கு ஊதியம் அதிகம் தான், காரணம் எல்லோரையும் வேலை வாங்குவதுடன் ஆட்களை கொண்டுவரும் பொறுப்பும், குறிப்பிட்ட காலத்தில் முடிக்க வேண்டிய பொறுப்பும் கொடுக்கப்பட்டு இருக்கும், கட்டிடத் தொழில் கடுமையான வேலை தான் என்றாலும் கலகலப்பான வேலை என்றே சொல்லலாம், காரணம் கொத்தனார்கள் - சித்தாள்கள் பழகும் முறைகள், பழகும் விதம், அவர்களின் நெருக்கம், நேரம் போகமல் இருக்க சித்தாள்களை கிண்டல் செய்து கொண்டே வேலை செய்வார்கள், பெரும்பாலும் இரட்டை பொருள் உள்ள சொல்லாடல்களைப் பேசுவார்கள், ஆனால் சித்தாள்கள் கோவித்துக் கொள்ளமாட்டார்கள், அடிப்படையில் பொழுது போக்குக்காக கிண்டல் செய்வதை சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்கிற புரிந்துணர்வு அவர்களிடம் இருக்கும், அவர்களிடையே அந்தரங்க உறவுகள் சாத்தியம் என்றாலும் பெரும்பாலும் அவ்வாறு நடைபெறாது, காரணம் சித்தாள்கள் மற்றும் கொத்தனார்கள் குழுமமாகத் தான் வேலைக்குச் செல்வார்கள், அவர்களிடையே பலக் குழுக்கள் இருந்தாலும் ஒருவருக்கு ஒருவர் தெரிந்தவர் என்ற நிலையில்  அவர்கள் வேலைக்குச் செல்வதால் எல்லைகளை மீறமாட்டார்கள், ஏணியில் ஏறச் சொல்லி கீழே நின்று பார்ப்பவன் இவன் என்று ஒரு கொத்தனார் பற்றி ஒரு சித்தாளுக்கு தெரிந்தோ, அனுபவப்பட்டோ இருந்தால் அவரிடம் சேர்ந்து அடுத்த நாள் வேலைக்குச் செல்லமாட்டார்கள், கள்ள உறவுகளும்  ஆபாசப் பேச்சுகளும் அவர்களிடையே மிகுந்து இருக்கும் என்பது சமூகத்தால் மிகைப்படுத்தப்பட்டுப் பார்க்கப்படுவது தான், ஆண் - பெண் வேலை செய்யும் இடங்களில் நடப்பவைகளே அவர்களிடமும் நடக்கும்.

வேலை நேரங்களில் நகைச்சுவைக் கலந்த இருபொருளில் பேசுவார்கள், தமிழ் சினிமாவை ஒப்பிட அவர்கள் பேசும் இரு பொருள்கள் மிகக் குறைவு தான். அவர்களிடையே நன்றாக குரல் எடுத்துப் பாடுபவர்களும் உண்டு, வேலை செய்யும் போது நேரம் போவதே தெரியாது, 9 மணிக்கு வேலை துவங்குவார்கள், 11 மணிக்கு தேனீரும், வடை/ போண்டா வரும், பின்னர் 1 மணிக்கு மதிய சாப்பாடு, கொஞ்சம் தூக்கம், பின்னர் 3.30 மணிக்கு தேனீர் மற்றும் பகோடா, 5.30 மணிக்குள் பயன்படுத்திய சிமெண்ட் படிந்த பொருள்களைக் கழுவி மூட்டைக் கட்டிவிடுவார்கள், மேல் தளம் போடும் நாள்களில் தான் இரவு 10 மணி வரையிலும் ஆகிவிடும், மேல் தளவேலையைத்(சீலிங்) துவங்கிவிட்டால் கலவை காய்வதற்குள் மேல் தளம் முழுவதையும், அதனை முடித்துவிட வேண்டும் என்பதால் விடிய விடிய வரை கூட வேலை நடக்கும், அன்னிக்கு அவர்களுக்கு கிடைக்கும் ஊதியம், கவனிப்புகள் அதிகமாகவே இருக்கும். அவர்களிடையே கலைத் திறன் மிக்கவர்களும் இருப்பார்கள், மிக அழகாக காகிதங்களை வெட்டி அதை வைத்து சிமெண்ட் தரைகளில் பூ வடிவங்கள் உருவாக்குதல், வீட்டு முகப்புச்சுவர்களை கலையாக இருக்கும் படி அமைப்பது உள்ளிட்டவற்றை தெரிந்து வைத்திருப்பார்கள், தற்பொழுது டயில்ஸ் மற்றும் க்ராணைட் கல்களிலேயே அவ்வாறான வடிவங்கள் கிடைப்பதால் மெனக்கட்டு எதையும் செய்வதோ, கற்று வைத்திருப்பதோ இல்லை.

நான் முன்பு குறிப்பிட்டது போல் கட்டிடத் தொழிலாளர்கள் குறிப்பிட் டசாதி/மதத்தையையும் சார்ந்தவர்களாக  இருக்கமாட்டார்கள், அவர்களிடையே சாதிப் பார்த்துப் பழகுவதையும் நான் அறிந்தது இல்லை. அவர்களின் வேலை இடத்து பாதுகாப்பு குறித்து எந்த ஒரு உத்திரவாதமும் இல்லை, மேலிருந்து தவறி விழுந்தாலோ, கீழே நிற்கும் போது தலையில் கல் விழுந்து இறந்தாலோ, காயம் பட்டாலோ எந்த ஒரு இழப்பீடும் கிடைக்காது, பெரிய நிறுவனங்கள் வேலைக்கு எடுக்கும் போது பாதுகாப்பு தலை கவசங்கள் உள்ளிட்டவை தந்தாலும் அவர்களுக்கு நடக்கும் விபத்துகளுக்கு போதிய இழப்பீடும் வழங்கப்படுவதில்லை, அவர்களுக்கு சங்கங்கள் அமைப்புகள் இருக்கிறது என்றாலும் அதை அரசியல் ரீதியாகவும், வாக்கு வங்கியாகவும் பயன்படுத்திக் கொள்ளத்தான் முயல்கின்றனர், ஒரு கட்டிடத் தொழிலாளி விபத்தில் இறந்தால் இந்தியாவில், தமிழ் நாட்டில் இழப்பீடுகள் எதுவும் கிடைக்காத நிலையில் தான் அவர்கள் தொடர்ந்து வேலை பார்க்கிறார்கள், நேற்று வரை உடன் வேலை செய்தவர் விபத்தில் இறந்தாலும் மறு நாள் அதே இடத்தில் இழப்பை நினைத்து அச்சப்படாமல் வேலை செய்யும் நிலை தான் அவர்களுடையது. மற்றக் கூலித் தொழில்களை விட இவர்களுக்கு சற்று கூடுதலான ஊதியம் என்றாலும் கட்டிடத் தொழிலாளர்களில் 90 விழுக்காட்டினர் வேலை முடிந்ததும் மது அருந்தும் பழக்கத்தைக் கொண்டிருப்பார்கள், காரணம் உடல் வலி என்றும் சொல்லுவார்கள். இந்தப் பழக்கம் அவர்களுக்கு சேர்க்கை என்ற அளவில் ஏற்பட்டுவிடும். தவிர திரைப்படங்கள் பார்ப்பது, சீட்டாடுவது உள்ளிட்ட வகையில் பணத்தை செலவு செய்வதால் அவர்களிடம் சேமிப்புகள் பெரும்பாலும் இருக்காது, அன்றாடம் வேலை செய்தால் தான் வாழ்க்கையை ஓட்ட முடியும் என்ற நிலையை அவர்களே ஏற்படுத்திக் கொள்வார்கள், மழை பெய்தால் வீட்டினுள் செய்யக் கூடிய பூச்சு வேலை அல்லது கழிவறை கட்டுவது உள்ளிட்ட சில வேலைகள் தவிர்த்து வேறெதும் கிடைக்காது என்பதால் மழைகாலங்களில் பாதிக்குமேற்பட்டவர்கள் வேலை இல்லாமல் இருப்பார்கள், கந்துவட்டிக்கு பணம் வாங்கி அதை பின்னர் அடைத்துக் கொண்டு இருப்பார்கள். அவர்களால் அந்தச் சூழலில் இருந்து மீளவும் முடியாது. அவர்களுக்கும் ஏன் மற்ற கூலி வேலை செய்பவர்களைவிட ஊதியம் அதிகம் ? ஒரு (ஆண்) சித்தாள் கொத்தனாராக உருவாக சுமார் 5 ஆண்டுகள் வரையிலும் பிடிக்கும், வீடு தொடர்பான வண்ணம் பூசுவது உள்ளிட்ட மற்ற வேலைகளை எவரும் செய்ய முடியும் என்கிற நிலையில் கட்டிடத் தொழிலாளர் தவிர்த்து வீடு கட்டுவது இயலாது என்பதால் அவர்களின் ஊதியங்களை குறிப்பிட்ட ஆண்டு இடைவெளியில் அவர்கள் கூட்டிக் கொள்வார்கள். இந்தத் தொழிலில் பெண் தொழிலாளிகள் கொத்தனாராக, மேஸ்திரியாக உருவாகிவிட முடியாது, அதற்கு பெரிய காரணம் எதுவும் இல்லை என்றாலும் அவர்களும் அதை ஆர்வமாகக் கற்றுக் கொள்வதில்லை, கல் மண் கலவை சுமப்பதுடன் நிறுத்திக் கொள்கிறார்கள்.

எங்கள் ஊரில் (நாகை) கட்டிடத் தொழிலாளர்களின் கோவில் திருப்பணியாக மாரியம்மன் கோவில் திருவிழாவின் பொழுது திருவிழாவின் முதல் நாள் இரவில் கைலாச வாகன திருப்பணி கட்டிடத் தொழிலாளர்களின் ஆதரவு மற்றும் பொருள் உதவியால் நடக்கும், அவர்களின் தலைவருக்கு கோவிலில் மரியாதை செய்வார்கள்.

கட்டிடத் தொழிலாளிகள் பற்றி எனக்கு தெரிந்திருக்கக் காரணம் எங்கள் குடும்பங்களில் கொத்தனார்கள், மேஸ்திரிகள் உண்டு, நானும்  பள்ளி விடுமுறைகளில் வீட்டுக்கு தெரியாமல் கைச் செலவுக்கு ஆகும் என்பதால் சிறுவயதில்  (15 -16 வயதில்) சித்தாள் வேலைக்குச் சென்றிருக்கிறேன், அப்போதெல்லாம் நாள் கூலி 15 ரூபாய் கிடைக்கும். படிப்பு முக்கியம் என்பதால் அங்கெல்லாம் போகக்  கூடாது என்று வீட்டில் சொல்லிவிட்டார்கள். இப்பவும் ஊருக்குச் சென்றால் உரிமையுடன் வந்து தோளில் கைபோட்டுப் பேசும் கட்டிடத் தொழிலாளர்கள் உண்டு.

படங்கள் : தமிழ் வலைப்பதிவுகளில் இருந்து சுட்டவை
******

சாதி மதம் பார்க்காத தொழிலில் இன்னொன்று தகவல் தொழில் நுட்பத்தில் பொட்டி தட்டுவது, அது பற்றிப் பிறகு பார்ப்போம்.


14 கருத்துகள்:

priyamudanprabu சொன்னது…

நல்ல அலசல்...நானும் எழுத நினைத்தேன்... எங்கள் ஊரில் வீட்டுக்கு ஒருத்தர் கட்டிட பணியாளராக இருப்பார் என்றே சொல்லலாம்..(என் வீட்டில் என் தம்பி ) . நிறைய இrukku எழுத..அடுத்தவாரம் முயற்ச்சிக்கிறேன்...

கோவி.கண்ணன் சொன்னது…

//நல்ல அலசல்..//

மீன் பிடிக்கத் தெரிந்தவன் அதுபற்றி எழுதுவது எளிதே.
:)

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

வழமைபோல் அரிய அலசல், இதில் அனுபவமும் உண்டென்பதால் சுவை, விபரம் அதிகம்.
ஈழத்தில் யாழ்ப்பாணப்பக்கம் இந்த வேலை செய்வோரைக் கொத்தனார், மேஸ்திரி, சித்தாள் எனக் குறிப்பிடுவதில்லை. மேசன் எனும் ஆங்கிலவார்த்தையாலே குறிப்பிடுவார்கள். நீங்கள் சித்தாள் எனும் உதவியாளர்களை (ஆச்சரியப்படவேண்டாம்)"முட்டாள்" என்பார்கள். எங்கள் வீடுகட்டிய போது 60ல் அப்பா கொடுப்பனவுக் கணக்குக் கொப்பியில் 5 மேசன்; 8 முட்டாள் எனக் குறிப்பிட்டிருந்தது. அவர்களில் தலைவர் ஒருவர் அவரை "மேசன் பொன்னுத்துரை" எனக் குறிப்பிட்டது ஞாபகம் உள்ளது.
மேஸ்திரி எனும் சொல் தச்சுவேலை செய்வோரையே குறிப்பிடுவதாக இருந்தது.அவர்கள் எல்லோருமே சுத்தியல், வாளுடன் புழங்குவதால் சகலரும் மேஸ்திரி.
80 வரை நான் இலங்கையில் பெண் சித்தாள்(முட்டாள்) கண்டதேயில்லை. இது முழுக்க முழுக்க ஆண்கள் வேலையாகவே இருந்தது. அதனால் கிசு கிசு வுக்குச் சந்தர்ப்பமேயில்லை.
ஆனால் உங்கள் பதிவில் ஆண், பெண் ஒன்றாக வேலை செய்து, கேலி கிண்டல் இருந்த போதும், தவறுகள் நடப்பது வெகு குறைவு என்பது மகிழ்வைத் தந்தது.
நமது திரைப்படங்கள் எல்லாவற்றையும் போல் இதை மிகைப்படுத்திவிட்டது.என்பதை அதனுள் இருந்த ஒருவர் என்ற வகையில், உங்கள் கூற்றுப் புரியவைக்கிறது.
ஆனால் இதைக் கட்டிடத் தொழிலாளர்கள் வாசித்தால் மிக மகிழ்வார்கள்.

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

காலையில் குழந்தைகளை விட்டுப் பிரிந்து, தொலை தூரம் கட்டட வேலைக்குச் சென்று இரவுதான் பலரும் திரும்புகிறனர். இப்போதாவது குடும்பத்தாரோடு செல் போனில் பேசுகின்றனர். முன்பெல்லாம் இந்த வசதி கிடையாது. அவர்களோடேயே இருந்து வாழ்ந்து அந்த தொழிலையும் கொஞச காலம் பார்த்ததால், உங்கள் பதிவு கட்டடத் தொழிலாளர்களின் சூழ்நிலைகளை நன்கு விளக்குகிறது.

ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே
……. …….. …………………………… ………………………………….
கல்லில் வீடு கட்டித் தந்த்தெங்கள் கைகளே
கருணை தீபம் ஏற்றி வைப்பதெங்கள் நெஞ்சமே
- பாடல்: கண்ணதாசன் படம்: பணக்கார குடும்பம்

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

|| மீன் பிடிக்கத் தெரிந்தவன் அதுபற்றி எழுதுவது எளிதே. ||

:))

அவர்களின் உழைப்பு அசாத்தியமானது..

அவர்கள் வேலை செய்யும் திறனைப் பார்த்துக் கொண்டே இருந்ததில்,ஒருநாள் மேஸ்திரிக் கொத்தனார் என்னால் சிமிண்டை எடுத்து சுவற்றில் அடித்துப் பூச மூடியுமா என்று சவாலை அளிக்க...
முதல் இரண்டு கரணை சிமிண்ட் சுவற்றில் அடிபடாமல் கீழே விழுந்தது..பின்னர் முயன்று மூன்றுக்கு மூன்று சதுரம் பூசி முடித்து விட்டேன் !

சிரித்துவிட்டுப் பாராட்டினார் மேஸ்திரி..எங்கள் வீடு கட்டிய பசுமையான நினைவுகளைக் கிளப்பி விட்டீர்கள்.

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

எனது இளமைக்காலத்தில்,ஒரு ஆண்டு விடுமுறையில் கட்டுமான கட்டிடத்தில் கம்பிகட்ட போகியிருக்கேன்.சும்மா, தெரிந்துகொள்ள.ஆனால்,இன்றும் கட்டுமானமாகும் கட்டிடத்தை பார்க்கும் பொழுது நினைவில் வந்துசெல்லும் என் இளமையும்,நான் செய்த வேலையும்.இப்ப உங்க கட்டுரை கண்டும்
.

Yaathoramani.blogspot.com சொன்னது…

நல்ல அலசல்
முன்பெல்லாம் ஊரை விட்டு ஓடுபவர்கள்
ஹோட்டல் வேலையைத்தான் முதலில் விரும்புவார்கள்
காரணம் சாப்பாட்டுப் பிரச்சனையும் தங்குமிடப் பிரச்சனையும்
உடனடியாகத் தீர்ந்துவிடும் என்பதுதான்
அதைபோல படிப்பு வரவில்லையென்றால்
உள்ளூரில் உடனடியாகக் கிடைக்கக் கூடிய வேலை
சித்தாள் வேலைதான்.காரணம் அதற்கு எதுவும் முதலில்
தெரியவேண்டியதில்லை.கொத்தனார் சொல்வதை மட்டும்
செய்தால் போதும்.பின் படிப்படியாக நீங்கள் சொல்லியிருப்பதுபொல்
மேலே வந்து விடலாம்
விரிவான அலசலுடன் கூடிய பதிவைத்
தந்தமைக்கு மனமார்ந்த நன்றி

ஜோதிஜி சொன்னது…

ஊரில் நாங்கள் தனிக்குடித்தனம் வந்த போது ஒரு பழைய வீட்டை எங்கள் விருப்பப்படி மாற்றி அமைத்தோம். அப்போது ஒரே ஒரு வயதான கொத்தனார் மட்டுமே. பள்ளி விடுமுறை என்பதால் அக்கா தம்பி நான் போன்றோர்கள் தான் சித்தாள் வேலை செய்தோம். ஆனால் அவர் பட்ட கஷ்டங்களையும் அவரின் ஊதியத்தையும் பின்னால் பலமுறை யோசித்துஇருக்கின்றேன்.

ஆனால் தற்போது இந்த கொத்தனார் சித்தாள் பற்றி நல்ல அபிப்ராயம் எனக்கு இல்லை. உலக மகா சோம்பேறித்தனத்தின வெளிப்படாக உள்ளது. பத்து மணிக்கு உள்ளே வருபவர்கள் 4 மணிக்கு வேலையை முடிக்கின்றனர். கடினமான சில வேலைகள் என்றாலும் கூட மூன்று மணி நேரம் தொடர்ச்சியாக பணி புரிவார்களா என்பதே சந்தேகம். ஆனால் திருப்பூரில் ரூபாய் 600 வாங்குகின்றனர்.

விளிம்பு நிலை மனிதர்கள் என்று பார்ப்பது குப்பை அள்ளுபவர்கள், சாக்கடை சுத்தம் செய்பவர்கள் போன்றோர்களைத்தான்.

நாலைந்து நாட்களாக அவர்களின் வாழ்க்கை பார்த்து எழுத வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது உங்கள் கட்டுரையை வாசிக்க நேர்ந்தது.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆனால் தற்போது இந்த கொத்தனார் சித்தாள் பற்றி நல்ல அபிப்ராயம் எனக்கு இல்லை. உலக மகா சோம்பேறித்தனத்தின வெளிப்படாக உள்ளது. பத்து மணிக்கு உள்ளே வருபவர்கள் 4 மணிக்கு வேலையை முடிக்கின்றனர். கடினமான சில வேலைகள் என்றாலும் கூட மூன்று மணி நேரம் தொடர்ச்சியாக பணி புரிவார்களா என்பதே சந்தேகம். ஆனால் திருப்பூரில் ரூபாய் 600 வாங்குகின்றனர். //

நீங்கள் சொல்வதும் சரிதான், நான் அவர்களை விளிம்புநிலை மனிதர்களாகப் பார்க்கச் சொல்லவில்லை, திரைப்படங்களில் காட்டப்படுவது போல் 'சித்தாள்' என்றால் கூப்பிட்டவுடன் வரக் கூடியவள் என்றும் கொத்தனார் - சித்தாள் உறவு முறைகள் கொச்சையானது என்றும் சமூகத்தால் பார்க்கப்படுவது மிகைப்படுத்துதலானது என்றே குறிப்பிட்டுள்ளேன்.

டிமாண்ட் இருக்கும் இடங்களில் முறுக்குவதும் இயல்பே, கொத்தனார் வேலைக்கு முறையான பயிற்சியோ, கல்வியோ இல்லாத நிலையில் அந்தத் தொழிலை செய்பவர்கள் குறித்து சமூகத்தில் உயர்ந்த எண்ணம் இல்லாத நிலையில், அந்தத் தொழிலைக் கற்று வேலை செய்பவர்கள் கிடைப்பது அரிது என்ற நிலையில் அவர்கள் வைப்பது தான் சட்டம் என்ற நிலை ஆகிவிட்டது.

மரவேலைகளை ஐடிஐயில் சொல்லிக் கொடுப்பதால் அது படித்தவர்களின் வேலை என்ற நிலையில் ஒரளவு கவுரமானத் தொழிலாகப் பார்க்கப்படுகிறது, கொத்தனார்கள் கல்வித் தகுதி என்று எதுவும் உறுதி செய்யப்படாத வேலை என்பதால் அந்தத் தொழில் பற்றி பொது மக்களிடமும் நல்ல எண்ணம் உருவாகவில்லை.

பெயரில்லா சொன்னது…

உண்மையில் நல்ல அலசல் !!! ஏனோ கனடாவில் கட்ட வேலை செய்வதில் பெரும்பான்மை ஆண்களாகவே இருக்கின்றனர் ... !!!

இந்தியாவில் எனக்கும் பல மேஸ்திரிகள் பழக்கப்பட்டு இருந்தனர் .. சித்தாள்களில் நிறைய அக்காமார்களும் தெரிந்து இருந்தனர். உண்மையில் அவர்கள் உணவு உண்ணும் போதுக் கூட சாதி பேதமற்று இருக்கும் ... உண்மை தான் சில தொழில்கள் இழிவாக பார்க்காமல் அவற்றில் இருக்கும் நன்மை தீமைகளை ஆராயும் போது, அதே நுட்பங்களை பெரும் தொழிலகங்களிலும் பயன்படுத்தலாம். குறிப்பாக கார்ப்பேர்ட் பணியிடங்களில் எழும் பாலியல் குற்றச்சாட்டுக்கள், இவற்றை தவிர்க்க என்ன செய்யலாம் என்பதை இங்கும் ஆராயலாம் !!!

சார்வாகன் சொன்னது…

வணக்கம் சகோ
அருமையான பதிவு.உழைக்கும் வர்க்கத்தினரின் இயல்பான வாழ்வினை ஆவணப்படுத்டும் முயற்சி பாராட்டுக்கு உரியது.

தொடருங்கள்
நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

// நீங்கள் சித்தாள் எனும் உதவியாளர்களை (ஆச்சரியப்படவேண்டாம்)"முட்டாள்" என்பார்கள். எங்கள் வீடுகட்டிய போது 60ல் அப்பா கொடுப்பனவுக் கணக்குக் கொப்பியில் 5 மேசன்; 8 முட்டாள் எனக் குறிப்பிட்டிருந்தது. //

மண் மற்றும் சிமெண்ட் கலவை முட்டாகக் கட்டப்பட்டு பின்பு கொஞ்சம் கொஞ்சமாக கலைத்து தண்ணீர் ஊற்றி குழைத்து அள்ளி பூசுவார்கள், முட்டு கட்டும் ஆள் என்பதால் முட்டு ஆள் > முட்டாள் என்று சொல்லப்பட்டு இருக்க வேண்டும், மற்றபடி முட்டாள் என்று அறிவிலிகளைக் குறிக்கும் பொருளில் சொல்லிருக்க மாட்டார்கள்,

கோவி.கண்ணன் சொன்னது…

//தி.தமிழ் இளங்கோ கூறியது...
காலையில் குழந்தைகளை விட்டுப் பிரிந்து, தொலை தூரம் கட்டட வேலைக்குச் சென்று இரவுதான் பலரும் திரும்புகிறனர். இப்போதாவது குடும்பத்தாரோடு செல் போனில் பேசுகின்றனர். முன்பெல்லாம் இந்த வசதி கிடையாது. அவர்களோடேயே இருந்து வாழ்ந்து அந்த தொழிலையும் கொஞச காலம் பார்த்ததால், உங்கள் பதிவு கட்டடத் தொழிலாளர்களின் சூழ்நிலைகளை நன்கு விளக்குகிறது.
//

மிக்க நன்றி ஐயா, நீங்கள் சொல்வது சரிதான், செல்பேசி இல்லாத காலங்களில் தொடர்புகளுக்கு நேரில் பார்த்து பேசினால் தான் உண்டு

Information சொன்னது…

உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்