பின்பற்றுபவர்கள்

18 ஜனவரி, 2012

மீண்டும் வந்துவிட்டது டிராகன் !

இந்த ஆண்டு சீனப் புத்தாண்டின் ராசி விலங்கு (Shēngxiào (Chinese: 生肖)) டிராகனாம், நான் சிங்கையில் பார்ப்பது இரண்டாவது டிராகன், 12 ஆண்டுக்கு ஒரு முறை 12 விலங்குகளின் சின்னம் மாறி மாறி வரும். எலி, எருது, புலி, முயல், டிராகன்(யாளி), பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, சேவல், நாய் மற்றும் பன்றி ஆகியன பணிரெண்டு விலங்குகள்.

சீனர்கள் பிறரின் வயதை அறிந்து கொள்ள நீங்கள் எந்த விலங்கில் பிறந்தீர்கள் என்று கேட்பார்கள், அதை வைத்து அகவை (வயதை) கணக்கிடுவார்கள், உடல் தோற்றம், தலை மயிர் அடர்த்தி, நிறம், தோல் அமைப்பு வைத்து நாம் பார்க்கும் எவரையும் கிட்டதட்ட வயது முடிவு செய்யமுடியும், ஒருவர் குதிரை ஆண்டு பிறந்திருந்தால் அவரது தோற்றத்தை வைத்து அந்த சுழற்சில் 12, 24, 36, 48 என்ற அளவில் கிட்டதட்ட அவரது வயது தெரிந்துவிடும், கூடவே இந்த ஆண்டு என்ன விலங்கு என்ன ? என்று தெரிந்து வைத்திருப்பதால் சரியான வயதை கண்டுபிடிக்க முடியும். இந்த ஆண்டு டிராகன் என்றால் 40+ வயது மதிக்கத் தக்கவர் தாம் குதிரை ஆண்டு பிறந்தவர் என்று சொன்னால் அவரது சரியான வயது 46 என்று அறிய முடியும், டிராகனில் இருந்து குதிரை ஆண்டு வர இரு ஆண்டுகள் ஆகும் அப்போது தான் அவருக்கு 48 ஆக இருக்கும். வயதை மறைப்பதையே அவர்களும் விரும்புகிறார்கள் என்பதால் எதாவது பேச்சு வாக்கில் 'நீங்கள் எந்த விலங்கு ?' என்று போட்டு வாங்கித் தான் கண்டுபிடிப்பார்கள். சீனர்கள் இந்த பனிரெண்டு விலங்கு பெயர்களையும் அவை வந்து சென்ற ஆண்டையும் விரல் நுனியில் வைத்திருக்கிறார்கள், 1970 ஆ ஆண்டு என்ன விலங்கு ? என்று கேட்டால் 12 வாய்ப்பாட்டில் கூட்டிக் கழித்து அந்த ஆண்டு என்ன விலங்கு (சேவல்) என்று உடனேயே சொல்லிவிடுவார்கள்.

சீனர்களின் சோதிடம் இந்த 12 விலங்குகளையே சார்ந்தது, அதாவது குறிப்பிட்ட ஆண்டில் பிறந்த அனைவருக்கும் ஒன்று போல பலன் தான், மொத்தம் 12 வகையான பலன்களில் ஒவ்வொருவருக்கும் மான பலன் பார்க்கப்படுகிறது, அதாவது 12 பேரில் ஒருவருக்கு ஒருவர் பலன் மாறுபடும், இந்த ஆண்டில் (டிராகனில்) பிறந்தவர்களுக்கும் 2024 ஆம் ஆண்டு பிறப்பவர்களுக்கும், 2000 ஆம் ஆண்டு பிறந்தவர்களுக்கும் ஒரே பலன் தான், பிற ஆண்டுகளில் பிறந்தவர்களின் பலன் ஆண்டில் விலங்கு ஏற்றவாறு மாறி இருக்கும்.

ஆண் குழந்தை மோகம் என்பது இந்தியர்களுக்கு மட்டுமே இல்லை, பொதுவாக ஆசிய இனத்தின் பண்பாகத்தான் இருக்கிறது, சீனர்களும் குடும்பத்தின் அடுத்தகட்ட தொடர்சிக்கும், கடைசி கால பாதுக்காப்பிற்கும் ஆண் குழந்தை கட்டாயம் தேவை என்பதை விரும்புவர்களாக இருக்கிறார்கள், சீனாவின் மக்கள் தொகை கட்டுப்பாட்டினால் வேறு வழியின்றி அரசை பின்பற்றுகின்றனர். என்னுடன் பணி புரியும் சீனப் பெண் இரண்டு பெண் குழந்தைக்கு பிறகு மூன்றாவதாக ஆண் குழந்தைப் பெற்றதும் மிக மகிழ்ச்சியாக இப்போது என்னால் குழந்தை உற்பத்தியை நிறுத்திக் கொள்ள முடியும் என்று கூறினாள்.

மேற்சொன்ன விலங்கு ஆண்டுகளில் டிராகன் மற்றும் புலிக்கு மிகுந்த வரவேற்பு இருக்கிறது, பல சீனர்கள் இந்த ஆண்டுகளில் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புகிறார்கள், மற்ற விலங்குகளை விட இந்த இரு விலங்குகள் மிகவும் அதிர்ஷடம் வாய்ந்ததாம். திருமணம் ஆனவர்கள் ஒரு சில ஆண்டுகள் காத்திருந்து இந்த ஆண்டுகளில் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பவர்களாகவும் பலர் இருக்கின்றனர், மற்ற ஆண்டுகளைவிட சீன மக்கள் தொகையில் பிறப்பு விகிதம் இந்த இரு ஆண்டுகளில் ஓரளவு கூடுதலாகவே இருக்கும்.

******

சீனப் புத்தாண்டின் போது சீனா முழுவதும் ஒருவார அரசு விடுமுறை, அரசு அலுவலங்கங்கள், பொது நிறுவனங்கள் இயங்காது, அவரவர் அவரவரது பிறப்பிடங்களில் தொடர்பு இருந்தால் சென்றுவிடுவார்கள், வனிக வளாகங்கள் வெறிச்சோடி கிடக்கும், சிங்கப்பூரில் சீனர்கள் பெரும்பான்மை என்பதால் அவர்கள் நடத்தும் உற்பத்தி சார்ந்த நிறுவங்கள் பெரும்பாலானவை ஒருவார விடுமுறையை கடைபிடிக்கின்றனர். எங்கள் அலுவலகமும் ஒருவாரம் விடுப்பு தான், சீனப் புத்தாண்டு இரண்டு நாளாகக் கொண்டாடப்படுகிறது, பழைய பொருளில் பயன்படுத்த முடியாதவற்றை வெளியே தூக்கி வைத்துவிடுவார்கள், பழைய கணிணி, தொலைகாட்சி பெட்டிகள் கூட வெளியே வைக்கப்பட்டு பார்த்திருக்கிறேன்,

சீனப் புத்தாண்டுக்கு சீனர்கள் பெரும் செலவு செய்வார்கள், ஏராளமான இனிப்பு பண்டங்கள், ரொட்டிகளை வாங்குவார்கள், குழந்தைகளுக்கு ஹங்பாவ் (ரெட் பாக்கெட்) எனப்படும் பணப்பரிசு கொடுப்பார்கள், அதற்கே அவர்களுக்கு ஆயிரம் வெள்ளிகள் வரை தேவைப்படுமாம், சீனப் புத்தாண்டின் இரண்டாம் நாளில் உறவினர்கள் வீட்டுக்குச் சென்று அல்லது பொது இடங்களில் குடும்பங்களாகக் கூடி உண்டு மகிழ்வர். சீனப்புத்தாண்டின் இருநாட்களும் சிங்கையில் பொதுப் போக்குவரத்தில் சீனர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும், பெரும்பாலும் அன்றைக்கு உறவினர்கள் வீடு அல்லது பிற இடங்களுக்குச் செல்ல வாகன வசதி இல்லாதவர்கள் வாடகைக்காரில் தான் செல்வார்கள். இந்த இரு நாட்களில் சுற்றுலா தளங்களில் சீனர்களைப் பார்ப்பதே அரிது. பேருந்துகள், தொடர்வண்டிகள் கூட்டம் குறைவாகவே இருக்கும். சிங்கையில் வசிக்கும் சீனர்களில் ஏரத்தாள முப்பது விழுக்காட்டு சீனர்கள் அண்டை நாடு மலேசியாவில் இருந்து வந்து தங்கியவர்கள், சீனப் புத்தாண்டு விடுமுறையின் போது மலேசியாவிற்கு திரும்பிவிடுவர். அது போலவே பிற நாட்டு சீனர்களும் தாயகம் திரும்பி இருப்பார்கள்.

சீனரின் பாரம்பரிய நம்பிக்கைகள் எதுவாக இருந்தாலும் அவற்றை இன்றும் தொடர்கின்றனர், குறிப்பாக இறந்த உறவினர்களுக்கு தாள்களை எரிப்பது, தாள்களினால் செய்யப்பட்ட இறந்தவர்களுக்கு விருப்பமான பொருள்களை செய்து எரிப்பது, சுற்றுச் சூழல் கெடுதல் என்ற வகையில் சிங்கப்பூர் அரசு அவற்றை தடுக்காவிட்டாலும் எரிக்கும் இடங்கள், அவற்றின் புகை, கரி பரவல் குறித்த கட்டுபாடுகளை விதித்திருக்கிறது. சீனர் நம்பிக்கை பழங்காலத் தொடர்பில் இருந்தாலும் எங்களுடைய நம்பிக்கையே உயர்ந்தது என்று அவர்கள் பிறரை வலியுறுத்துவதோ, தாழ்த்துவதோ கிடையாது. என்னைப் பொருத்த அளவில் எந்த ஒரு குழுவும், அமைப்பும் மூட நம்பிக்கையைக் கடைபிடித்தாலும் அவற்றினால் பிறருக்கு தீங்கு இல்லாவிட்டால் அவற்றை விமர்சனம் செய்ய ஒன்றுமே இல்லை.

சீனப் புத்தாண்டுகள் அடிப்படையில் சீனர்கள் விரும்பும் சிவப்பு வண்ணம் மயமானது, பாரம்பரிய சோதிட நம்பிக்கையின் தொடர்சி, ஆண்டு முறையின் தொடர்சி என்றாலும் அவற்றை பல்வேறு மதத்தைச் சார்ந்த சீனர்கள் யாவரும் சேர்ந்தே கொண்டாடுகின்றனர். சீனர்களைப் பொருத்த அளவில் முதலில் சீன இனம், பிறகு பேசும் மொழி, பிறகு பழக்கவழக்கம் பண்பாடு, அதன் பிறகு இறுதியில் தான் மதம் சார்ந்தவற்றிற்கு இடம் ஒதுக்கியுள்ளார்கள்.

மனித இனம் நிறங்களினாலும், தோற்றங்களினாலும் பல்வேறு இனகளாக அடையாளம் கொண்டுள்ளது என்னும் போது அவ்வினங்களுக்குள்ளான பொது அடையாளத்தை தொடர்ந்து பேணுவதால் மட்டுமே அவர்களுக்குள் ஒற்றுமையை நிலைத்திருக்க முடியும் என்று சீனர்கள் நம்புவதால் சீனப்புத்தாண்டு சீனர்களுக்கு பொதுவானதாகும்.

*****

மனிதர்கள் தங்களுக்குள் பல்வேறு இனங்களுடன் பழகிவருவதால் வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கான முயற்சி எடுத்துவருகின்றனர். வேற்றுமையில் ஒற்றுமை என்பது சமூக நல்லிணக்கத்தின் நோக்கங்களுள் ஒன்று தான், ஆனால் அந்த எண்ணம் மட்டுமே அவற்றை ஏற்படுத்திவிடாது, காரணம் மனிதன் பல்வேறு இனங்களுடன் இணக்கம் கொண்டிருக்க விரும்பினாலும் தத்தமது இன அடையாளங்கள் காக்கப்படவேண்டும் மற்றும் தாமே ஆளுமை மையமாக இருக்க வேண்டும் என்பதை விரும்புகிறான். பல்வேறு இனங்கள் வசிக்கும் ஒரு நாட்டில் புதிதாக ஒருவரைப் பார்க்கும் போது அவர் ஆணா பெண்ணா என்பதைவிட நம் மனம் கணக்கிடுவது இவர் இந்த இனம் சார்ந்தவர் என்பதைத் தான். பல்வேறு தோற்றங்களுடன் மனித இனம் பரிணாமம் பெற்றிருப்பது இயற்கையின் சதியா ? இயற்கையின் ரசிப்பா ? ஒரே வகைப் பூக்களை, நாய்களை பல்வேறு நிறத்தில் பரிணமிக்கப்பட்டு அழகு காட்டுவதைப் போல் மனிதனின் நிறத்தை/ தோற்றத்தை ஒருவித ரசனைக்காக இயற்கை ஏற்படுத்திவிட்டு இருக்கலாம். ஆனால் இனத்தோற்றங்களை வைத்து மனிதர்கள் தான் உயர்வு, தாழ்வு மற்றும் ஆளுமை எண்ணங்களை ஆறாம் அறிவின் தொடர்பில் வளர்த்துக் கொண்டுள்ளனர்.

பிற இனங்கள் சீனர்களைப் பழிக்க அவர்கள் பாம்புகறி உண்ணுபவர்கள், பன்றி இறைச்சி உண்ணுபவர்கள், பூரான் பல்லி வகைகளைக் கூட விட்டுவைக்காதவர்கள் என்று அவர்களில் சிலரின் உணவு முறையே சுட்டிக் காட்டப்படுகிறது. சீனர்கள் இடம் பெயரும் போது அங்கு ஒரு நாட்டை அமைத்துவிடுகிறார்கள், தங்களது பண்பாடுகளை அங்கு கொண்டு வந்துவிடுகிறார்கள், குறிப்பாக இடம் பெயர்ந்தால் பிறகு அங்கு திரும்பிச் செல்வதே இல்லை, அதனால் தான் சீன இனம் பல்வேறு நாடுகளில் நீண்டுள்ளது மேலும் சிங்கப்பூர் போன்ற நாட்டில் ஆளுமை சக்தியாக வளர்ந்துள்ளது. இடம் பெயரும் ஊரை சொந்த நாடாகவே மாற்றி அங்கேயே உழைத்து வாழ்பவர்கள் ஆசியாவில் சீனர்கள் தான். சிங்கப்பூரில் இந்தியர்களின் பெருமூச்சுகளில் ஒன்று 'நம்மால் பெரிய அளவில் சீனர்களுக்கு போட்டியாக வரமுடியவில்லை' என்பது தான், காரணம் கால் காசு சேர்த்தாலும் அதை இந்தியாவில் முதலீடு செய்துவிட்டு ரிடையர்மெண்ட் காலத்தில் அங்கு சென்று அமைதியாக வாழலாம் என்ற எண்ணத்தில் பெரும்பாலோர் செயல்படுவது தான், ஒரு நிலையான அடித்தளத்தை சிங்கையிலோ பிற நாடுகளிலோ தமிழர்களாலும் ஏற்படுத்த முடியாமல் போய்விட்டது, இந்தியர்கள் சீனர்களை ஒப்பிட மிகச் சிலரே சென்ற நாட்டையும் முன்னேற்றி தானும் முன்னேறி இருக்கிறார்கள், சீனர்களில் பெரும்பான்மையினர் அவ்வாறு இல்லை, சென்று வசிக்கும் இடமே அவர்களது எதிர்கால தாய்நாடு.

5 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

அருமையான அலசல் பதிவு. இனிய பாராட்டுகள்.

இங்கே எங்கூரில் ஒரு சைனா டவுன் கூடிய சீக்கிரம் வரப்போகும் 'அடையாளம்' தெரிய ஆரம்பித்துள்ளது!!!!!

சார்வாகன் சொன்னது…

நல்ல பதிவு நண்பரே,
நம் அண்டை நாடு என்றால் சீனா பற்றி அதிக விவரம் தெரிவது இல்லை.

//பிற இனங்கள் சீனர்களைப் பழிக்க அவர்கள் பாம்புகறி உண்ணுபவர்கள், பன்றி இறைச்சி உண்ணுபவர்கள், பூரான் பல்லி வகைகளைக் கூட விட்டுவைக்காதவர்கள் என்று அவர்களில் சிலரின் உணவு முறையே சுட்டிக் காட்டப்படுகிறது./
நீங்கள் கூறிய விவகாரமான விவரங்கள் மட்டுமே தெரியும்.சீனர்கள் பற்றி இன்னும் சில பதிவுகள் எழுதுவீர்கள் என எதிர்பார்க்க்லாமா!!!!!!!!!!
சீனர்களிடம் மொழி,மதம்,இன(சாதி?) பிரிவுகள் உண்டா?
ந‌ன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
அருமையான அலசல் பதிவு. இனிய பாராட்டுகள்.

இங்கே எங்கூரில் ஒரு சைனா டவுன் கூடிய சீக்கிரம் வரப்போகும் 'அடையாளம்' தெரிய ஆரம்பித்துள்ளது!!!!!//

அங்க இன்னுமா சைனா டவுன் வரவில்லை ? வியப்பு தான்.

திரைகடல் ஓடி திரவியம் தேடு என்பதுடன் நம்ம இந்தியர்கள் திரும்பி வந்துடு என்றும் சேர்த்துக் கொண்டார்கள் போல.

எனக்கு இந்தியா திரும்ப பெரிய விரும்பம் எதுவும் கிடையாது.

துளசி கோபால் சொன்னது…

அந்தப் பழமொழி வந்த காலத்தில் திரைகடலோடும்போது குடும்பத்தை ஊரில் விட்டுவிட்டு தனி மரமாத்தான் ஆண்கள் திரவியம் தேடப் புறப்பட்டார்கள்.

அதனால் திரவியம் தேடி கிடைச்சதும் திரும்ப ஊருக்குப்போய்விட்டார்கள்.

இப்பெல்லாம் குடும்பத்தோடு திரைகடல் ஓடறோம்.

எனக்கும் திரும்பிப்போக அப்படி விருப்பம் எல்லாம் இல்லை. கொஞ்சநஞ்சம் இருந்த ஆசையைக்கூட சமீபத்திய 26 மாத இந்தியவாழ்க்கை விரட்டிவிட்டுருச்சு:(


ஆக்லாந்தில் சீன்ப்புத்தாண்டுக்கு மார்கெட் டே கொண்டாட்டம்கூட இருக்கு. நம்ம கிறைஸ்ட்சர்ச்சில் பொதுவாவே கூட்டம் குறைவு. அதான் ஒரு ஏரியாவில் இருந்த எல்லாக் கடைகளும் கொஞ்சம் கொஞ்சமா சீனர்கள் வசம் போய்க்கிட்டே இருக்கு. இன்னும் ஒரு பத்துக் கடைகள் பாக்கி. அதுவும் கைமாறுனதும் சைனா டவுன் உறுதி:-))))

பித்தனின் வாக்கு சொன்னது…

ennaikki chenna new year varuthu

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்