பின்பற்றுபவர்கள்

4 ஜூன், 2008

சென்னை ஷேவிங் ரூ 1000/-

ஜெயிலுக்கு போய்விட்டு வந்தவர்களுக்கும், வெளிநாடுகளில் பல ஆண்டுகள் தங்கி பின்பு தாயகம் திரும்புபவர்களுக்கும் நாட்டில் ஏறி இருக்கும் விலைவாசி அதிர்ச்சி அளிக்கும். அவர்கள் புலம்பும் புலம்பலில் 'எங்க காலத்தில்...' என்று ஆரம்பிக்கும் பெருசுகளையே வீழ்த்திவிடுவார்கள். தொடர்ந்து இணையம் வழி தமிழக, இந்திய நடப்புகளை படித்துவருவதால் இந்திய விலைவாசி உயர்வு அதிர்ச்சி அளிக்கவில்லை. இந்தியாவில் ஒரு சிறப்பு பொருள்களின் மீது MRP என்னும் விற்பனை விலை குறித்து இருப்பதுதான். மற்ற நாடுகளில் பொருள்களின் விலை இடம், கடைகளுக்கு ஏற்றவாறு இருக்கும், குறிப்பாக சுற்றுலா இடங்களில் விலை இருமடங்காக இருக்கும், இந்தியாவில் ஹோட்டல்கள், மோட்டல்கள், திரையரங்குகள் தவிர்த்து மற்ற இடங்களில் விலைவாசியை உயர்த்தி விற்க முடியாது.

முஸ்தீபு முடிந்தது அடுத்து...

சிங்கையில் இருந்து சென்னைக்கு கொஞ்சம் வேலை பளுவில் கிளம்பியதால் முகச்சவரம் பண்ணுவதற்குக் கூட நேரம் கிடைக்கவில்லை. எளிய முறை சேவிங் ப்ளேடுகள் கைவசம் இருந்தாலும் கொஞ்சம் அலுப்பு... பதிவர் சந்திப்பு அன்று நண்பரிடம் 'இங்கு எதாவது சலூன் கடைக்குச் சென்று வரலாம்...கடும் வெயிலாக இருப்பதால் குளிர்சாதனம் பொருத்தப்பட்ட கடையாக இருந்தால் நல்லது' என்றேன். 'சரி வா' என்று அண்ணா நகரில் ஒரு கடைக்கு அழைத்துச் சென்றார். அங்கு உள் நுழைந்ததும் ஒருவரின் தலையை நன்றாக தட்டிக் கொண்டு இருந்தார்கள்.

"சார்...வாங்க...கட்டிங் ? ஷேவிங் ?"

என்று கேட்டார்கள், நான் "ஷேவிங் மட்டும் தான்" என்று சொன்னேன். இருக்கையில் அமர வைத்தார்கள்.

"சார்...லைட்டாக கொஞ்சம் தலை முடி வெட்டுகிறேன்...வெயிலுக்கு நல்லது"

"சரி" என்றேன்

தலையில் தண்ணீரை பீய்ச்சு அடித்துவிட்டு....கையால் தலை முடியில் ஈரத்தை பரப்பிப் கொண்டே...அதிர்ச்சி அடைந்தவர் போல

"என்ன சார்...தலை இப்படி கொதிக்குது ?"

எனக்கும் வியப்பாகவே இருந்தது. 'ஒருவேலை வெயிலில் பைக்கில் வந்ததால் தலைச்சூடு இன்னும் அடங்கவில்லை போலும்' என்று நினைத்துக் கொண்டேன்.

அவரே, பக்கத்தில் முடிவெட்டி விட்டுக் கொண்டு இருக்கும் மற்றவரிடம்....

"அண்ணே....இவருக்கு சூடு அதிகமாக இருக்கு கையை வைக்கவே முடியல இந்த கொதி கொதிக்குது ....என்ன செய்யலாம்... சூட்டை குறைக்கனும் கொஞ்சம் சொல்லுங்கண்ணே?"

அருகில் இருந்தவர்

"முடியை வெட்டிவிட்டு...நவரத்னா ஆயில் போட்டு...தலை மசாஜ் செய்து...வாஷ் பண்ணிவிடு" என்றார்

சட்டைப் பாக்கெட்டில் கையை வைத்து போதிய பணம் இருக்கிறதா என்று உறுதி படுத்திக் கொண்டேன்

'ஷேவிங் மட்டுமே செய்ப்பா போதும்' என்று சொல்ல மனது வந்தாலும்....'சரி என்ன தான் செய்கிறார்கள் பார்ப்போம்' என்றவாறு அமைதியாக இருந்தேன்

ஷேவிங் செய்து முடித்ததும் கொஞ்சம் தலை முடியை வெட்டிவிட்டு,

புதிய நவரத்னா ஆயில் பாட்டிலை எடுத்துவந்து திறந்து தலையில் தேய்த்து தேய்த்து....5 நிமிடம் ஊறவைத்தார், அதன் பிறகு

"வெயிலில் முகமெல்லாம் கருத்து போச்சு....லைட்டாக பேஷியல் பண்ணிக் கொள்ளுங்க.....சரி பண்ணிடலாம்"

நான் நண்பரை திரும்பி பார்த்து ... 'ஷேவிங் பண்ண வந்த எனக்கு இதெல்லாம் ?' வெளியில் சொல்லாமல் முறைத்தேன்.

அவன் புரிந்து கொள்ளாமல்

'பண்ணிக்கடா ...நான் வெளியில் போய்டு வருகிறேன்' என்று கிளம்பிவிட்டான்

முடிவெட்டுபவர்

'சார்...முகத்துக்கு கெமிக்கல் க்ரீம் போடலாமா....இல்லாட்டி ஆயுர்வேதிக் க்ரீம் போடவா ?" என்று கேட்டார்

நான் பதில் சொல்லும் முன், அவரது சகா

'சார் என்னாத்துக்கு கெமிக்கல் க்ரீம்... முகத்துக்கு நல்லது இல்லை...ஆயுர்வேதிக் க்ரீம் போட்டுக் கொள்ளுங்க' என்றார்

'அப்ப ஏண்டா கெமிக்கல் க்ரீமும் வச்சிருக்கிங்க ? ஏன் பயமுறுத்தனும் ?'' என்று கேட்க நினைத்து கேட்காமல், நான் மெதுவாக....

'எவ்வளவு ஆகும் ?'

'750 ரூபாய் ஆகும்...சாப்ட்வேர்லே வேலையா சார்' என்றார்

'சரி என்ன தான் செய்வாங்க' என்று தெரிந்து கொள்ள, பதில் எதும் சொல்லாமல் இருக்க, அங்கிருக்கும் கையாள் சிறுவனை அழைத்து, எதோ பெயரைச் சொல்லி 'டேய்... அந்த கிரீமை எடுத்துவா' என்றார்

வந்ததும், சுண்ணாம்பு குழைப்பதுபோல் குழைத்து முகத்தில் பூசிவிட்டு

'சார்..20 நிமிசம் அப்படியே சாஞ்சி அமர்ந்து கொள்ளுங்கள் க்ரீம் காயனும்' என்று சொல்லிவிட்டு ஐந்து நிமிடம் சென்று திரும்ப வந்து, அந்த சின்னப்பையனிடம்

'டேய் உனக்கு எல்லாம் சொல்லனுமா ?...சாருக்கு காலில் புது சாக்ஸை போட்டுவிட்டு...லெக் மசாஜ் செய்துவிடேன்' என்றார்.

'என் காலை சின்னப்பையனை பிடித்துவிடப் போகிறேன் போல...வேண்டாம்.... வேண்டாம்' ' என்று அச்சப்பட்டு சொல்வதற்குள், அந்த பையன் நல்ல வேலை OSIM லெக் மசாஜ் மெசினை தள்ளிக் கொண்டு வந்து கால் அருகில் வைத்துவிட்டு ஒரு செட் புதிய காலுறைகளைக் கொடுத்தான்.

'20 நிமிடம் மசாஜுக்கு மெசினை செட் பண்ணு' என்று முடிவெட்டுபவர் அவனுக்கு கட்டளை இட்டார்

நானும் கால்களை அதில் வைத்துக் கொண்டேன்... மெசின் கால் பாதங்களை அழுத்திவிடுவது இதமாகத்தான் இருந்தது

அதன் பிறகு முகத்தில் இருந்த க்ரீம் காய்ந்துவிட, அதை எடுத்துவிட்டு வேறொரு க்ரீம் பூசினார்
அது ஒரு 10 நிமிடம் காய்ந்தது... அதனை நீக்கிவிட்டு, தலையை கழுவி, முகத்தை துடைத்து.... விட்டு எதோ பவுடரெல்லாம் போட்டுவிட்டார்... கழுத்தைச் சுற்றி, தோள் பகுதியில் பிடித்துவிட்டார்.

அதற்குள் நண்பர் திரும்பிவந்துவிட்டார்.... நானும் போதும் என்று சொல்லிவிட்டேன்

நண்பர் முடிவெட்டுபவரிடம் கேட்டார்...

"எவ்வளவு ஆச்சு சொல்லுப்பா.."

என்னமோ நெற்றியை சுருக்கி..கையின் ஒற்றை விரலை ஆட்டி ஆட்டி... மனக்கணக்கு எல்லாம் போட்டு

'ரூ 1350/- ஆச்சு..... டிஸ்கவுண்ட் 200 போக 1150 '

அதிர்ச்சி அடைந்த நண்பர் என் முகத்தைப் பார்த்து அவரிடம் பேரம் பேசி

'சரி...1000 வாங்கிக்கிங்க.......'

'சரி சார்....அந்த 150ம் தள்ளுபடி பண்ணிடுறோம்.....ஆயுர்வேதிக் க்ரீம் போட்டோம் அதுதான் .... அடுத்த முறை வரனும்லே...நாங்க தள்ளுபடி செய்றோம் சார்'

என்று ரூ 1000/- பெற்றுக் கொண்டார்.

அந்த சிறுவனுக்கு (18 வயதுன்னு சொன்னான்) 50 ரூபாய் கொடுத்துவிட்டு

வெளியில் வந்து நண்பரிடம்

'ஷேவிங் கடைக்கு கூட்டிட்டு போகச் சொன்னால் இப்படி மொட்டை அடிக்கும் இடத்துக் கூட்டிட்டு வந்துட்டியே' என்றேன்

***********

நான் அதிகம் கொடுத்ததாக... ஏமாந்ததாக நினைக்கவில்லை.... சாப்ட்வேர் தொழில் நுட்ப ஊதியம் மற்ற இடங்களில் எல்லாம் எந்த அளவுக்கு மாறுதலை ஏற்படுத்தி இருக்கிறது என்று நினைக்க வைத்தது.

42 கருத்துகள்:

ஜெகதீசன் சொன்னது…

:)
ஆனாலும் இதெல்லாம் ரெம்ப ஓவர்...
நீங்கதான் போனாப் போகுதுன்னு "MLM" கள்ளயே பணம் போடுறவராச்சே, நண்பர்களுக்காக....

SP.VR. SUBBIAH சொன்னது…

:-))))

துளசி கோபால் சொன்னது…

'சட்'னு இதெல்லாம் வேணாமுன்னு சொல்ல முடியாம ஒரு தயக்கம் வந்துருதுல்லே?

தில்லியில் தலைமுடி மட்டும் (ஷாம்பூ போட்டுக் கழுவிட்டு வெட்டிவிடும் முறை) வெட்டிக்கிட்டு 250 ரூபாய் கொடுத்துட்டு வந்தார் கோபால். எல்லாம் போன வாரம்தான்.

இப்ப இங்கே எங்கூர்லே விலைவாசி ஏறிப்போச்சு. 12 டாலர் ஆக்கிட்டாங்க.

இதுலே மட்டும் இக்கரைக்கு அக்கரை பச்சைமட்டுமல்ல. மலிவும்கூட:-))))

முரளிகண்ணன் சொன்னது…

\\சாப்ட்வேர் தொழில் நுட்ப ஊதியம் மற்ற இடங்களில் எல்லாம் எந்த அளவுக்கு மாறுதலை ஏற்படுத்தி இருக்கிறது என்று நினைக்க வைத்தது\\
இதை நாங்க சொன்னா அடிக்க வர்றாங்க

cheena (சீனா) சொன்னது…

கோவி

தவிர்க்க இயலாமல் தாராளமாக செலவு செய்து விட்டு தங்க்ஸ் கிட்டே வாங்கிக் கட்டிக் கிட்டது உண்டு.

சாதாரணமாக சேவிங் செய்யும் கடைக்குச் சென்று ( 10 ரூபாய்) - சேவ் செய்த பிறகு - கடையில் சேர்ந்த புதிய இளம் பையன் சார் கிர்ரிம் போட்டு மசாஜ் செய்யறேன் சார் - நல்லா இருக்கும் எனச் சொல்லி பதிலை எதிர் பாராமல் ஏதேதோ அப்பி முகம் தோள் தலை என ( குற்றாலத்தில் தலையில் மத்தளம் வாசிப்பார்களாம் - சென்னையில் சேவிங் செய்யப் போய் மத்தளமாக என் தலையைக் கொடுத்தேன்) மச்சஜ் செய்து விட்ட்டு - பாண்ட்ஸ் பவௌடரை வஞ்சகம் இல்லாமல் அப்பி விட்டு என் நிறத்தையே மாற்றி விட்ட பெருமைய்யில் ஐம்பது ரூபாயும் ஐந்து ரூபா டிப்ஸ் வேற - வாங்கிக் கொண்ட கதை எல்லாம் பதிவுலே போடறேன்.

ச்ச்ச்ச்சூப்பரா எழுதுறீங்க - 1000 ரூப்பா மொய் எழுதிட்டி இவ்ளோ சிரிப்பா எழுதுறீங்க - பரவா இல்ல

dondu(#11168674346665545885) சொன்னது…

மன்னிக்கவும் கோவி கண்ணன் அவர்களே. ஷேவிங்கிற்காக போனவருக்கு அது மட்டும் போதும் என்று சொல்லும் மன உறுதி வேண்டும். வியாபாரி அப்படித்தான் பேசுவான். நாம்தான் அதெல்லாம் வேண்டாம், ஷேவிங்கிற்கு எத்தனை ரூபாய் எனக் கேட்டு, அத்தனை பணம்தான் கையில் வைத்துள்ளேன் என்று வேண்டுமானால் கூறிக் கொள்ளுங்கள்.

இந்த கேடு கெட்ட கொள்ளைக்கு 50 ரூபாய் டிப்ஸ் வேறு. சரியான ஏமாளி என்று நெற்றியில் எழுதி வைத்து கொண்டீர்களா?

ஷேவிங்கிற்கு 15 ரூபாயே அதிகம். ஒரு ஷேவிங் ஃபோம், ரேசர் மற்றும் கண்ணாடி இருந்தால் ஃப்ரீ. கடுமையான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
:)
ஆனாலும் இதெல்லாம் ரெம்ப ஓவர்...
நீங்கதான் போனாப் போகுதுன்னு "MLM" கள்ளயே பணம் போடுறவராச்சே, நண்பர்களுக்காக....
//

ஜெகதீசன்,
முகராசின்னு ஒண்ணு சொல்லுவாங்க கேள்வி பட்டு இருக்கிங்களா ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//SP.VR. SUBBIAH said...
:-))))
//

வாத்தியார் ஐயா,
உங்க நாவிதர் இடுகைக்குப் போட்டியாக எழுதவில்லை. இதை எழுதிவிட்டுதான் அதைப் படித்தேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
'சட்'னு இதெல்லாம் வேணாமுன்னு சொல்ல முடியாம ஒரு தயக்கம் வந்துருதுல்லே?//

துளசி அம்மா,
சரிதான். பலநேரங்களில் அவர்கள் வழிக்கே செல்வதுண்டு

//தில்லியில் தலைமுடி மட்டும் (ஷாம்பூ போட்டுக் கழுவிட்டு வெட்டிவிடும் முறை) வெட்டிக்கிட்டு 250 ரூபாய் கொடுத்துட்டு வந்தார் கோபால். எல்லாம் போன வாரம்தான்.//

என்னைவிட 4 மடங்கு குறைவு. அப்ப சேமித்தது 750 ரூபாய். லாபம் தான். :)

//இப்ப இங்கே எங்கூர்லே விலைவாசி ஏறிப்போச்சு. 12 டாலர் ஆக்கிட்டாங்க.

இதுலே மட்டும் இக்கரைக்கு அக்கரை பச்சைமட்டுமல்ல. மலிவும்கூட:-))))

10:28 AM, June 04, 2008//

நமக்கு மலிவாக தெரியும்...அக்கரையில் இருப்பவர்களுக்கு அதிகம் தான்

கோவி.கண்ணன் சொன்னது…

//முரளிகண்ணன் said...
\\சாப்ட்வேர் தொழில் நுட்ப ஊதியம் மற்ற இடங்களில் எல்லாம் எந்த அளவுக்கு மாறுதலை ஏற்படுத்தி இருக்கிறது என்று நினைக்க வைத்தது\\
இதை நாங்க சொன்னா அடிக்க வர்றாங்க//

முரளிகண்ணன்,

நல்லா படிச்சுப் பாருங்கள், 'மாறுதல்' என்று எழுதி இருக்கிறேன். 'பாதிப்பு' என்று எழுதவில்லை. :)))))))))

அப்ப அடிதான் வாங்குவிங்க.

கோவி.கண்ணன் சொன்னது…

//cheena (சீனா) said...
கோவி

தவிர்க்க இயலாமல் தாராளமாக செலவு செய்து விட்டு தங்க்ஸ் கிட்டே வாங்கிக் கட்டிக் கிட்டது உண்டு.

சாதாரணமாக சேவிங் செய்யும் கடைக்குச் சென்று ( 10 ரூபாய்) - சேவ் செய்த பிறகு - கடையில் சேர்ந்த புதிய இளம் பையன் சார் கிர்ரிம் போட்டு மசாஜ் செய்யறேன் சார் - நல்லா இருக்கும் எனச் சொல்லி பதிலை எதிர் பாராமல் ஏதேதோ அப்பி முகம் தோள் தலை என ( குற்றாலத்தில் தலையில் மத்தளம் வாசிப்பார்களாம் - சென்னையில் சேவிங் செய்யப் போய் மத்தளமாக என் தலையைக் கொடுத்தேன்) மச்சஜ் செய்து விட்ட்டு - பாண்ட்ஸ் பவௌடரை வஞ்சகம் இல்லாமல் அப்பி விட்டு என் நிறத்தையே மாற்றி விட்ட பெருமைய்யில் ஐம்பது ரூபாயும் ஐந்து ரூபா டிப்ஸ் வேற - வாங்கிக் கொண்ட கதை எல்லாம் பதிவுலே போடறேன்.

ச்ச்ச்ச்சூப்பரா எழுதுறீங்க - 1000 ரூப்பா மொய் எழுதிட்டி இவ்ளோ சிரிப்பா எழுதுறீங்க - பரவா இல்ல
//

cheena சார்,

உங்கள் அனுபவம் நகைச்சுவையாக இருக்கும் போல இருக்கே. எழுதுங்க படிக்க ஆவலாக இருக்கிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//dondu(#11168674346665545885) said...
மன்னிக்கவும் கோவி கண்ணன் அவர்களே. ஷேவிங்கிற்காக போனவருக்கு அது மட்டும் போதும் என்று சொல்லும் மன உறுதி வேண்டும். வியாபாரி அப்படித்தான் பேசுவான். நாம்தான் அதெல்லாம் வேண்டாம், ஷேவிங்கிற்கு எத்தனை ரூபாய் எனக் கேட்டு, அத்தனை பணம்தான் கையில் வைத்துள்ளேன் என்று வேண்டுமானால் கூறிக் கொள்ளுங்கள்.

இந்த கேடு கெட்ட கொள்ளைக்கு 50 ரூபாய் டிப்ஸ் வேறு. சரியான ஏமாளி என்று நெற்றியில் எழுதி வைத்து கொண்டீர்களா?

ஷேவிங்கிற்கு 15 ரூபாயே அதிகம். ஒரு ஷேவிங் ஃபோம், ரேசர் மற்றும் கண்ணாடி இருந்தால் ஃப்ரீ. கடுமையான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
//

டோண்டு சார்,

நான் அவர்கள் கொள்ளை அடித்தார்கள் என்று சொல்லவில்லை. அவர்களது வியாபாரம் அத்தகைய நுணுக்கமாக இருக்கிறது என்றும், நான் அங்கு சென்றிருப்பதை தவிர்த்திருக்கலாம் என்ற கருத்தில் தான் எழுதி இருக்கிறேன்.

இங்கே சிங்கையில் கட்டிங், சேவிங் சேர்த்து 15 வெள்ளி வாங்குவாங்க (ரூ 450), அந்த கட்டணத்துக்கு மசாஜ், பேஷியல் எல்லாம் செய்ய மாட்டாங்க. சென்னையில் 1000 ரூபாய் அதிகம் தான் என்றாலும் சிங்கையில் செலவிடும் போது இந்தியாவில் மட்டும் ஏன் தயங்குவானேன் என்றே நினைத்தும் வேண்டாம் என்று சொல்லத் தயக்கமாக அமைந்தது.

ILA (a) இளா சொன்னது…

செரைக்க ஆயிரம் ரூபா கொண்டு போனீங்களா? அப்போ குடுத்ததும் சரிதான்..

VSK சொன்னது…

ஏமாந்ததுக்கு இத்தனை சப்பைக்கட்டா!

தொடர் எழுதணுன்றதுக்காகவே பயணம் போன மனணியன் தான் நினைவுக்கு வந்து தொலைக்கறாரு!

எனக்கு ஷேவிங் மட்டும் தான் வேணும்ன ஏன் உங்களால சொல்ல முடியலை?

கோவி.கண்ணன் சொன்னது…

//VSK said...
ஏமாந்ததுக்கு இத்தனை சப்பைக்கட்டா!

தொடர் எழுதணுன்றதுக்காகவே பயணம் போன மனணியன் தான் நினைவுக்கு வந்து தொலைக்கறாரு!//

பயணம் சென்று வந்து அனுபவபட்டதை எழுதுவது கொலைக் குற்றமா ? :)

//எனக்கு ஷேவிங் மட்டும் தான் வேணும்ன ஏன் உங்களால சொல்ல முடியலை?
//

VSK ஐயா,

மேலே டீச்சரின் பின்னூட்டத்தையும், டோண்டுவிற்கான எனது மறுமொழியையும் படிங்க...வேண்டாம்னு சொல்லாதக் காரணம் தெரியும்.

வெங்க்கி சொன்னது…

நூதனமா ஆட்டையை போடுறதுல.. நம்ம ஆளுகளுக்கு நிகர் யாருமில்லை... உலகத்திலேயே..முக சவரம் செய்ய 1000 ரூ + டிப்ஸ் குடுத்த முதல் பிரகஸ்பதி நீங்கள் தான்.. அது என்ன பார்பர் ஷாப் ? நீங்க போனது.. விலாசம் குடுங்க... ஆட்டோ அனுப்பறேன்... :))

Please visit my bolg too
http://keysven.blogspot.com/

SurveySan சொன்னது…

1/2 மணி நேர, மசாஜ், முடி வெட்டல், ஷேவிங், ஏ.சி, எல்லாத்துக்கும் சேத்து 1000 ரூ, கொடுக்கலாம்னே தோணுது.

ஆமா ஃபேஷியல் எல்லாம் பண்ணிட்டு போட்டோ எடுத்து போடலியே?

கோவி.கண்ணன் சொன்னது…

//கீ - வென் said...
நூதனமா ஆட்டையை போடுறதுல.. நம்ம ஆளுகளுக்கு நிகர் யாருமில்லை... உலகத்திலேயே..முக சவரம் செய்ய 1000 ரூ + டிப்ஸ் குடுத்த முதல் பிரகஸ்பதி நீங்கள் தான்.. அது என்ன பார்பர் ஷாப் ? நீங்க போனது.. விலாசம் குடுங்க... ஆட்டோ அனுப்பறேன்... :))

Please visit my bolg too
http://keysven.blogspot.com/
//

கீ - வென் சார்,

சென்னை ஆட்டோக்களின் கட்டணத்தைவிட சலூன் கடைகளின் கட்டணம் பரவாயில்லை.

உங்க இடுகையை படிக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ILA said...
செரைக்க ஆயிரம் ரூபா கொண்டு போனீங்களா? அப்போ குடுத்ததும் சரிதான்..
//

இளா,

காசு இல்லை என்று சொல்லி இருந்தால் என்ன சொல்லி இருப்பாங்க ?

ஒரு பக்கத்து மீசையை எடுத்துவிட்டு அனுப்பி இருப்பாங்களா ? கட்டி வச்சிருப்பாங்களா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//SurveySan said...
1/2 மணி நேர, மசாஜ், முடி வெட்டல், ஷேவிங், ஏ.சி, எல்லாத்துக்கும் சேத்து 1000 ரூ, கொடுக்கலாம்னே தோணுது.

ஆமா ஃபேஷியல் எல்லாம் பண்ணிட்டு போட்டோ எடுத்து போடலியே?
//

நீங்க பணக்காரர் தான்... நமக்கு கட்டுபடி ஆகாது...முதல் தடவை என்பதால் சரி சொல்லிவிட்டேன்.

போட்டோ ? அதெல்லாம் பதிவில் போட்டாச்சே...முந்தைய பதிவை பாருங்க.

அருப்புக்கோட்டை பாஸ்கர் சொன்னது…

நார்த் இந்தியாவில் (வாரணாசியில் ) ஏமாந்த ஆள் கிடைத்தால் ஐம்பது ரூபாய் கட்டின்கிற்கு ஏமாத்தி ஐந்நூறு ரூபாய் வரை வாங்குவதாக கேள்வி !

கோவி.கண்ணன் சொன்னது…

//ARUVAI BASKAR said...
நார்த் இந்தியாவில் (வாரணாசியில் ) ஏமாந்த ஆள் கிடைத்தால் ஐம்பது ரூபாய் கட்டின்கிற்கு ஏமாத்தி ஐந்நூறு ரூபாய் வரை வாங்குவதாக கேள்வி !
//

ARUVAI BASKAR,
வாரணாசி தலை மசாஜ் பற்றி கேள்விபட்டு இருக்கிறேன். 1 மணி நேரத்திற்கு 50 ரூபாய் என்பது மிக மிக குறைவுதான். கொஞ்சம் கூடுதலாக கொடுத்தால் அவர்கள் ஏன் ஏமாற்றப் போகிறார்கள்.

தருமி சொன்னது…

சே! தலையில் முடி இருந்தால் எம்புட்டு கஷ்டம் .. பாவம்தான் உங்கள மாதிரி ஆளுங்கள் :)

வடுவூர் குமார் சொன்னது…

ஏற்கனவே தலையில் முடி கம்மியாக்கிக்கொண்டு வருகிறது,அடுத்த முறை வரும் போது இப்படி இருக்குமா என்று சொல்ல முடியுமா? முடியாதா என்று யோசித்தே "கத்தியை" போட்டுட்டான்.
:-=))

கிரி சொன்னது…

கடைசில மொட்டை அடிக்காம மொட்டை அடிச்சுடாங்கன்னு சொல்லுறீங்க :-))

புருனோ Bruno சொன்னது…

ஒரு விஷயம் மட்டும் சொல்லலாம் என்று நினைக்கிறேன்

இந்த ஆயுர்வேத க்ரீமும், கெமிக்கல் க்ரீமும் ஒன்று தான்

புருனோ Bruno சொன்னது…

//சே! தலையில் முடி இருந்தால் எம்புட்டு கஷ்டம் .. பாவம்தான் உங்கள மாதிரி ஆளுங்கள் :)//

சரியா சொன்னீங்க

எங்களுக்கெல்லாம் பிரச்சனையை கிடையாது

இக்பால் சொன்னது…

சென்னையில மாதிரி கட்டிங், ஷேவிங், பேசியல், கால் மஸாஜ் எல்லாம் சிங்கப்பூர்ல பண்ணா $100 வெள்ளிக்கு மேலே வரும் அண்ணே!

மங்களூர் சிவா சொன்னது…

சென்னையில் எங்க என்று சொன்னால் முடிந்தவரை அந்த ஏரியா பக்கமே போகாமல் தவிர்க்கிறேன்!

:(((

கோவி.கண்ணன் சொன்னது…

//கிரி said...
கடைசில மொட்டை அடிக்காம மொட்டை அடிச்சுடாங்கன்னு சொல்லுறீங்க :-))

10:38 PM, June 04, 2008
//

கிரி,
பாக்கெட்டில் வெட்டு விழுந்தது. சிங்கையில் சிகை அலங்காரத்திற்கு கொடுக்கும் காசை நினைத்து ஆறுதல் பட்டுக் கொள்ள முடியும். சென்னைக்குப் போனால் என்னிடம் அந்த கடையின் முகவரி வாங்கிச் செல்லுங்க.

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//புருனோ Bruno said...
ஒரு விஷயம் மட்டும் சொல்லலாம் என்று நினைக்கிறேன்

இந்த ஆயுர்வேத க்ரீமும், கெமிக்கல் க்ரீமும் ஒன்று தான்

4:00 AM, June 05, 2008
//

டாக்டர் புரூனோ,

ஆமாம் நாட்டுக் கோழிக்கும், ஒயிட் லகானுக்கும் உள்ள வேறுபாடுதான். கொழுப்பு ஒன்றுதானே.

கோவி.கண்ணன் சொன்னது…

//புருனோ Bruno said...
சரியா சொன்னீங்க

எங்களுக்கெல்லாம் பிரச்சனையை கிடையாது

4:03 AM, June 05, 2008
//

டாக்டர் புருனோ,

கண்டிப்பாக தாடி வளரும், மீசை வெட்டனும். அவர்களிடம் மாட்டாமல் போவீர்களா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
ஏற்கனவே தலையில் முடி கம்மியாக்கிக்கொண்டு வருகிறது,அடுத்த முறை வரும் போது இப்படி இருக்குமா என்று சொல்ல முடியுமா? முடியாதா என்று யோசித்தே "கத்தியை" போட்டுட்டான்.
:-=))
//

குமார்,

அதெல்லாம் ஒன்னும் இல்லை, மாதம் ஒருமுறை முடிவெட்டிவருகிறேன். தலை நல்லாதான் இருக்கு. :) நீங்களே போட்டுக் கொடுத்துடுவிங்க போல இருக்கே.

கோவி.கண்ணன் சொன்னது…

//இக்பால் said...
சென்னையில மாதிரி கட்டிங், ஷேவிங், பேசியல், கால் மஸாஜ் எல்லாம் சிங்கப்பூர்ல பண்ணா $100 வெள்ளிக்கு மேலே வரும் அண்ணே!

8:10 AM, June 05, 2008
//

இக்பால்,

சரிதான். இங்கு கட்டிங் மட்டும் தான் !

கோவி.கண்ணன் சொன்னது…

//மங்களூர் சிவா said...
சென்னையில் எங்க என்று சொன்னால் முடிந்தவரை அந்த ஏரியா பக்கமே போகாமல் தவிர்க்கிறேன்!

:(((
//

மங்களூர் சிவா,

அப்படி தப்பித்தவறி போனாலும் தலையைக் காட்டமாட்டேன் என்று சொல்லுங்க.

ஜமாலன் சொன்னது…

நினச்சேன் கேரளா எல்லாம் போறீங்களேன்னு.. அதான் இந்த 1000ரூ. கவர்ச்சியா (கிளாமரா) பேகானும் என்கிற உங்கள் ஆசைக்கான தண்டனைதான் சார். :)

இரண்டாவது ஏசி.. நவீன தொழில்நுட்பம் எல்லாம் ஆள குழப்பிடுச்சோ? சென்னையே நம்பள மாதிரி கிராமங்களில் வளர்ந்தவர்களுக்கு ஒரு அந்நிய நகர்தானே. பரவாயில்லை 1000 ரூபாவும் பலனில்லாமல் போனதுதான் இதில் கொஞ்சம் வருத்தம்... :)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜமாலன் said...
நினச்சேன் கேரளா எல்லாம் போறீங்களேன்னு.. அதான் இந்த 1000ரூ. கவர்ச்சியா (கிளாமரா) பேகானும் என்கிற உங்கள் ஆசைக்கான தண்டனைதான் சார். :)

இரண்டாவது ஏசி.. நவீன தொழில்நுட்பம் எல்லாம் ஆள குழப்பிடுச்சோ? சென்னையே நம்பள மாதிரி கிராமங்களில் வளர்ந்தவர்களுக்கு ஒரு அந்நிய நகர்தானே. பரவாயில்லை 1000 ரூபாவும் பலனில்லாமல் போனதுதான் இதில் கொஞ்சம் வருத்தம்... :)
//

ஜமாலன்,
யார் சொன்னது பலன் இல்லை என்று...பளபளன்னு ஹீரோ மாதிரி இருப்பதாக பதிவர் சந்திப்பில் சொன்னாங்களே.
:)

ஜமாலன் சொன்னது…

சார்..
ஆண்கள் கருத்தை யார் சார் கேட்டார். கவுண்டமணி சொல்வதுபோல் அவங்கள பத்திஜ என்கிட்ட சொல்லாதீங்க..:)

Sanjai Gandhi சொன்னது…

//நான் அதிகம் கொடுத்ததாக... ஏமாந்ததாக நினைக்கவில்லை//

தோ பாருங்கய்யா.. கண்ணன் அண்ணன் மீசைல மண் ஒட்டவே இல்ல. :D...

அண்ணே.. புது சட்டைல இருந்த சிங்கப்பூர் லேபிளை எடுத்துட்டு போய் இருக்கலாம்ல.. :)

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

அங்கதான் எவ்வளவு கேட்டாலும் டிஸ்கவுன் கிடைக்கும் போல... 1000 ரூபாய்க்கு டிஸ்கவுன் கேட்க வேண்டிதானே.. ஏன்னா நீங்கதான் அடுத்த முறை போவிங்களே :-))))

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

எவ்வளவு காசு கேட்டாலும் கொடுக்கிறாரே இவரு ரொம்ப நல்லவரு.... அவ்வ்வ்வ்வ்...

Sivaram சொன்னது…

சென்னையில் தான் இந்தக் கூத்தெல்லாம். எங்க ஊரில் , இருபது ரூபாய்க்கு , முடி வெட்டிக் கொண்டு, ஷேவிங் செய்து கொண்டு , தெரிந்தவர் என்றால் கொஞ்சம் ஓசியில் மசாஜ் கூட பண்ணிக் கொள்ளலாம்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை

"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"

இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்