பின்பற்றுபவர்கள்

1 ஆகஸ்ட், 2006

பொன்னியின் செல்லம்மா : சிறுகதை (தேன்கூடு போட்டி)

என்னோட பெயர் பொன்நிலவன். எனக்கு எட்டு வயசு ஆகுது. என்னோட அப்பா, அம்மா என்னை பொன்னி பொன்னி-னு கூப்பிடுவாங்க. ஆனா சொல்லம்மா மட்டும் தம்பி தம்பி-ன்னு தான் கூப்பிடும். செல்லம்மா யாருன்னு நா செல்லலேல்ல ? எங்க அம்மா அப்பா வேலைக்கு போறதால, அது எங்க வீட்டல என்னெ பாத்துக்க வந்த பணிப்பெண்ணு-ன்னு அம்மா சொல்லுவாங்க. செல்லம்மாவுக்கு முன்னாடி செல்லம்மாவோட அம்மாதான் என்னெ பொறந்ததுலேர்ந்து பாத்துக்கிட்டாங்களாம். அப்புறம் தான் செல்லம்மா சிலோன்லேர்ந்து நாலு வருசத்துக்கு முன்னால வந்து என்னை பாத்துக்குச்சி.

ஆமாம் நான் ஏன் செல்லம்மாவ பத்தி சொல்றேன் தெரியுமா ? இன்னைக்கு ராத்திரி எட்டு மணிக்கு... செல்லம்மா ஏர்லெங்கன்ல சிலோனுக்கு போவுது. ஏர்போர்டல அழுதுகிட்டே இருந்திச்சி.

"தம்பி, நீ நல்லா படிக்கனும், சமத்தா இருக்கணும், அடம்பிடிக்க கூடாது" திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டே இருந்துச்சி.

எனக்கு கூட அழுகை வர்றமாதிரி இருந்துச்சி, அதுக்குள்ள அப்பா,

"வாடா பொன்னி, மேல போயி, நெறையா பிளைட் நிக்கும் பாத்துட்டு வரலாம்" னு வியூவிங் கேலரிக்கு அழைச்சிட்டு போய்ட்டாரு

அம்மா, செல்லம்மாவோட கைய புடிச்சிக்கிட்டு பேசிக்கிட்டு இருந்தாங்க,

பிளைட்டு பாத்துட்டு திரும்பி வர்றத்துக்குள்ள, செல்லம்மாவ காணும், அம்மா தான் சொன்னாங்க, சீக்கரமா ஏர்லங்கா கெளம்ப போறதா ஸ்பீக்ரல சொன்னாங்களாம், அதுனால செல்லம்மா ஏர்போர்டுக்குள்ள போயிடுச்சாம். எங்கிட்டெ செல்லம்மா டாடா சொல்லாம போயிடுச்சே நினைச்சிக்கிட்டு இருந்தேன், அப்பா என்னெ தூக்கி வச்சிட்டு, சரி வீட்டுக்கு போலாம்-னு சொன்னார். நான் எப்ப தூங்கினேன்னு தெரியல.

காலையில அம்மா எழுப்பினாங்க,

"பொன்னி, ஒன்னெ ஸ்கூல்ல விட்டுட்டு நான் ஆபிசுக்கு போகணும், சீக்கரம் எழுந்து குளிச்சிட்டு கெளம்பு"

சோம்பலாக இருந்தது, ஸ்கூலுக்கு டயம் ஆகல, ஆனா அம்மா எப்பவும் ஏழுமணிக்கு ஆபிசுக்கு கெளம்பிடுவாங்க,

செல்லம்மா இருந்தப்ப...

"தம்பி, அம்மா அப்பா ஆபிசுக்கு போய்டாங்க, நீ குளிச்சிட்டு, சாப்பிடணும் எழுந்திருன்னு" என்னை மெதுவாதான் எழுப்பிவிடும்.

அம்மா சொன்னதும் எழுந்து பாத்ரூமுக்கு போனேன்.

முன்னெல்லாம், செல்லம்மாதான் என்னை குளிச்சி விடும், ஒரு நாள் சன்டே அன்னிக்கு நானே குளிச்சிகிட்டேன்.

அப்பா செல்லம்மக்கிட்ட கேட்டாரு, 'என்ன பொன்னி ... அவனே குளிச்சிக்கிட்டு இருக்கான், நீ குளுப்பாட்டலயா ?" என்றார்

அதுக்கு செல்லம்மா

"ஐயா, தம்பிய பாத்துரூம்ல நிக்க சொல்லிட்டு துணிகாயவைக்க போனேன், அதுக்குள்ள தம்பி அதுவா குளிச்சிக்கிச்சி, பரவாயில்லைங்கைய்யா, நா இன்னொரு தடவை குளிப்பாட்டி விடுரேன்" னு சொல்லிச்சு.

அதுக்குள்ள அம்மா வந்து, என்னை கட்டிக்கிட்டு

"வெரிகுட், நீயே குளிக்க ஆரம்பிச்சிட்டியே" ன்னு என்னை கொஞ்சினாங்க.

எனக்கு யாராவது என்னை பாரட்டினால் ரொம்ப புடிக்கும்.

அம்மா மறுபடியும் சொன்னாங்க "என் செல்லம், பொன்னி நீ பெரியபுள்ளயா ஆயிட்டா, அதான் நீயே எல்லாத்தையும் செஞ்சிகிற" ன்னு சொல்லி முத்தம் கொடுத்தாங்க.

"பொன்னி, அங்க ஒக்கார்ந்து என்ன யோசிச்சிக்கிட்டே இருக்க, நான் ஆபிஸ் போவனும், சீக்கரம் குளிச்சிட்டு வா"

செல்லம்மாவ பத்தி நினைச்சிக்கிட்டு இருந்தேனா ? நேரமாச்சுன்னு நினைக்கிறேன் அதான் அம்மா, சீக்கரமா குளிக்க சொல்லுறாங்க

தண்ணீரை மேலுக்கு சாய்ததும், காலுக்கு சோப்பு போட்டுக்கொண்டேன். "தம்பி, காலு கையெல்லாம் சுத்தமா வெச்சிருக்கனும், அதான் உனக்கு எப்பவும் ரண்டு தடவை காலுக்கு சோப்பு போடுறேன்" னு முன்னெல்லாம் செல்லம்மா சொல்லும்.

குளிச்சிட்டு வெளியே வந்தேன், டவலை எடுத்து தலையை துடைத்தேன்

"தம்பி, தலையில ஈரம் இருக்க கூடாது, சளி பிடிக்கும்" னு செல்லம்மா சொன்னது ஞாபகம் வந்தது, செல்லம்மா தலையை நல்லா அழுத்தமா தொடைக்கும், கொஞ்சம் வலிக்கும். நான் தலையை ஆட்டி ஆட்டி அடம் புடிப்பேன்

"இன்னும் தலையில டவல வெச்சு தொடச்சிக்கிட்டு ... என்ன யோசனை பண்ணிக்கிட்டு இருக்க" அம்மா வந்து டவலை வாங்கி வைத்துவிட்டு, எனக்கு தலைவாரி விட்டார்கள்.

"என்னங்க, பொன்னிக்கு யூனிபார்ம மாட்டிவிடுங்க" ன்னு அப்பாவை கூப்பிட்டு விட்டு அம்மா எனக்கு காலை சாப்பாடு எடுத்து வைக்க சமையல் அறைக்கு சென்றுவிட்டார்கள்

அப்பா தான் யூனிபார்ம மாட்டிவிட்டார், செல்லம்மா எனக்கு யூனிபார்ம் மாட்டிவிட்டு தினமும் என் கன்னத்துல செல்லமாக கிள்ளி முத்தம் கொடுக்கும், ஆனா அப்பா முத்தம் எதுவும் கொடுக்கல.

"பொன்னி, ஸ்கூல் பேக்க எடுத்து வெச்சிட்டு சாப்பிட போ" ன்னு சொல்லிட்டு அப்பா கெளம்பி ஆபிசுக்கு போய்டாரு

நான் சாப்பிட போனேன்.

முன்னெல்லாம் செல்லம்மா தான் ஊட்டி விடும், ஒரு நாள் அது சாப்பாட்ட எடுத்துவச்சிட்டு என்னெ டீவி பாக்க சொல்லிட்டு குளிக்க போயிடுச்சி, அது வர்றத்துக்குள்ள நானே சமர்த்தா சாப்பிட்டுட்டேன். சாயந்தரம் அம்மா வந்தோன்ன சொன்னேன். அம்மா, "வெரிகுட் பொன்னி, கீப் இட் அப்" அன்னைக்கும் என்னெ ரொம்ப பாராட்டினாங்க. அதுக்கப்பறம் அம்மாவே செல்லம்மாகிட்ட சொல்லிட்டாங்க, 'இனிமே பொன்னிக்கு ஊட்டி விடாதே, அவனே சாப்பிட பழகட்டும்' என்றார்கள்

"சாப்பாட்ட வெச்சிக்கிட்டு என்ன யோசிக்கிட்டு இருக்க, சீக்கரம் சாப்பிடு, எனக்கு ஆபிசுக்கு டயம் ஆச்சு" அம்மா சொல்ல வேகம் வேகமாக சாப்பிட்டு ஸ்கூலுக்கு ரெடியானேன்

"பொன்னி, சாவிய பத்தரமா வெச்சுக்க"

"சரிம்...மா"

"ஸ்கூல் முடிஞ்சதும் நேர வீட்டுக்கு வந்துடு"

"சரிம்...மா"

"யாரு கதவ தட்டினாலும் திறக்காதே"

"சரிம்...மா"

"எதாவது சொல்லனும்னா எனக்கு இல்லாட்டி அப்பாவுக்கு ஒடனே போன் போடு"

"சரிம்...மா"

ஸ்கூலுக்கு போக அம்மாவுடன் கெளம்பினேன்.

செல்லம்மா இருந்தப்ப, ஸ்கூலுக்கு கெளம்பி ரெடியானதும் "எனக்கு திருஷ்டி சுத்தி, தம்பி ரொம்ப சுமார்டா இருக்க நீ, என் கண்ணே பட்டும்" னு சொல்லும்

அம்மா அதெல்லாம் செய்யவில்லை. என்னை ஸ்கூல்ல விட்டுவிட்டு அம்மா சொன்னாங்க

"பொன்னி, இன்னும் ஒருவாரத்துக்கு தான் அம்மா ஸ்கூல்ல கொண்டுவந்து விடுவேன், அப்பறம் நீ எங்கூடவே கெளம்பி, ஸ்கூலுக்கு தனியா வந்திடனும் சரியா ?" ன்னு கேட்டாங்க

"சரிம்...மா, பை... பை"

அவுங்களும் "பை.. பை பொன்னி, சீ யூ ஈவினிங்" னு சொல்லிட்டு ஆபிசுக்கு போய்டாங்க

எனக்கு தனியா வீட்டுக்கு போகத்தெரியும்! ஒரு நாள் செல்லம்மாவுக்கு ஒடம்பு சரியில்ல. அன்னைக்கு என்னெ ஸ்கூல்ல கொண்டு வந்து உட்டுட்டு க்ளினிக்குக்கு போச்சு, ஆனா ஸ்கூல் விட்டப்ப செல்லம்மாவ காணும், நானே தனியா வந்துட்டேன். ஆனால் செல்லம்மா வந்து தான் வீட்டு கதவ திறந்து விட்டுச்சி.

அன்னைக்கு சாயங்காலம் அம்மாகிட்ட சொன்னேனா, அம்மா நீ ஒரு வீட்டு சாவிய வெச்சுக்கன்னு சொல்லி என் ஸ்கூல் பேக்கல போட்டுடாங்க. அன்னையிலேர்ந்து செல்லம்மாவுக்கு வீட்ல வேலை அதிகமா இருந்துச்சின்னா நானே வீட்டுக்கு வந்துடுவேன்.

இன்னைக்கு ஸ்கூல் ரொம்ப போரடிக்குது, பிரண்ட்ங்கெல்லாம் வந்து 'என்னடா பொன்னி, வெளயாட மாட்டேங்கறான்'னு கேட்டாங்க. நான் ஸ்கூல் முடியர வரைக்கும், செல்லம்மா எனக்கு டாடா சொல்லாம போனத பத்தி நெனெச்சிக்கிட்டு இருந்தேன்.

மதிய சாப்பாட்டை நானே சாப்பிட்டேன். ஆறிப்போயிருந்தது.

போன வெள்ளிக்கிழமை வரைக்கும் செல்லம்மா, சரியா ஸ்கூல் ப்ரேக்கப்ப வீட்லேர்ந்து சூடாக மதிய சாப்பட்டை எடுத்துவந்து, அதுவே ஊட்டிவிடும், ப்ரன்ட்ஸ் செல்லாம் கிண்டல் பண்ணுவாங்க, சில சமயம் எனக்கு வெக்கமாக இருக்கும்.

"தம்பிக்கு வெக்கத்தப்பாரு" செல்லம்மாவும் கூடவே கிண்டல் பண்ணும்

ஸ்கூல் முடிச்சிருச்சி, அம்மா சொல்லி இருக்காங்க, நேரா வீட்டுக்கு போகனும், வர்ற வழியில ப்ளே கிரவுன்ட பாத்துக்கிட்டே போனேன்.

செல்லாம்மா என்னை ஸ்கூல்லேர்ந்து கூட்டிட்டு வர்றப்ப, இந்த ப்ளே கிரவுண்டுக்கு அழைச்சிட்டு போகும், என் கூட அதுவும் வெளயாடும்.

செல்லம்மா கூட வெளயாடுனதை நெனெச்சிக்கிட்டு வந்தேனா, வீடு வந்திடுச்சி.

வீட்டுக்கு வந்து கதவை திறந்து உள்ளே வந்தேனா, வீட்டுல யாரும் இல்லாததால் கொஞ்சம் பயமா இருந்திச்சு. கதவை சாத்திவிட்டு உள்ளேர்ந்து பூட்டிட்டேன். "அப்பறம் உள் தாப்பாவும் கண்டிப்பா போடனும்" அம்மா சொன்னது ஞாபகம் வந்துச்சி.

வெளியில போய்ட்டு வந்தால் மூஞ்சில தூசி படிஞ்சிருக்குமாம் ... செல்லம்மா சொல்லும். எப்பவும் ஸ்கூல்லேர்ந்து வந்ததும் செல்லம்மா என் முகத்தை கழுவிவிடும். அதுதான் என்னோட சாக்ஸ், ஷூவெல்லாம் கழட்டி விடும். ஷூவையும், சாக்சையும் கழட்டி ஓரமாக வைத்துவிட்டு, பாத்ரூம் சென்று முகத்தை கழுவிக்கொண்டேன். ஒரு மாதிரியாக இருந்துச்சி. செல்லம்மாவ பார்க்கணும்னு-னு தோனிச்சி

ஆல்பம் எங்கே இருக்கும்னு எனக்கு தெரியும், எடுத்து வைத்தேன்.

போன் அடித்தது

"ஹலோ"

"நான் அம்மா பேசுறேன்"

எனக்கு கொஞ்சம் சந்தோசமாக இருந்தது

"ஹலோ அம்மா"

"பொன்னி நீ பத்தரமா வீட்டுக்கு வந்திட்டியான்னு பாக்கத்தான் போன் பன்னினேன்"

"சரிம்...மா"

"நல்லா தூங்கு, தூங்கி எழுந்ததும். ரொம்ப நேரம் டீவி பாக்கக்கூட்டாது சரியா ?

"சரிம்...மா"

"கிச்சன்னல ஸ்னாக் வெச்சிருக்கேன், எடுத்து நாலு மணிக்கு சாப்பிடு"

"சரிம்...மா"

"சரி, மதியம் நல்லா சாப்பிட்டியா ? "

"சாப்பிடேன்ம்மா"

"என் சமத்து, அப்புறம் பொன்னி, அம்மா வேளை நேரத்தில மறந்துடுவேன், நாளையிலேர்ந்து வீட்டுக்கு வந்தோன எனக்கு போன் பண்ணிடு சரியா ?"

"சரிம்...மா"

"சீ யூ " சொல்லி வைத்துவிட்டார்கள்

நான் போட்டோ ஆல்பங்களை கொஞ்ச நேரம் புரட்டி பார்த்துக்கொண்டுருந்தேன். செல்லம்மா இருந்த எல்லா போட்டோவிலும் நானும் கூடவே இருந்தேன். ஆல்பத்தை மூடி ... அது இருந்த இடத்தில் வைத்துவிட்டு படுக்கைக்கு சென்று படுத்தேன். தூக்கம் வரவில்லை. கொஞ்சம் பசி எடுத்து.

முன்னெல்லாம் நாலு மணிக்கு பிஸ்கட் அல்லது பழம் எதாவது ஒன்றை செல்லம்மா சாப்பிடச் சொல்லும். அதான் அம்மா என்னை நாலு மணிக்கு சாப்பிடச் சொன்னாங்க. கிச்சனுக்கு சென்று டப்பாவை திறந்து பிஸ்கட்டை எடுத்து தின்றேன். . 'தம்பி பிஸ்கட் சாப்பிடும் போது கூடவே தண்ணி குடிக்கனும் இல்லேன்னா தொண்டையில் அடச்சிக்கும்' தண்ணீரை எடுத்து குடித்தேன் ... செல்லம்மா சொல்லிகுடுத்திருக்கு. செல்லம்மா இருந்த அறையை பார்த்தேன், நன்றாக சுத்தம் செய்யப்பட்டு பொருள்கள் எல்லாம் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. துணி துவைக்கப் போடும் கூடையில் செல்லம்மாவின் புடவை ஒன்று கிடந்தது. எடுத்துட்டுப்போக மறந்துடிச்சி போல, அம்மா கிட்ட சொல்லனும். கொஞ்ச நேரம் அதைப்பார்த்துக் கொண்டிருந்தேன்

அப்பறம் திரும்பவும் வந்து படுத்து கொண்டேன். செல்லம்மா கூட நான் பீச்சுக்கு போனது, கோவிலுக்கு போனது எல்லாம் மாறி மாறி நினைவுக்கு வந்தது. கடிகாரத்தைப் பார்த்தேன் மாலை ஐந்து மணியாகி இருந்தது. எழுந்து போய் டீவியை போட்டு கார்ட்டூன் பார்த்தேன். தூக்கம் வருவது போல் இருந்தது.

செல்லம்மா சொல்லும் 'தம்பி, ரொம்ப நேரம் டீவி பாக்காதே கண்ணு கெட்டு போயிடும், அப்புறம் அம்மா கிட்ட சொல்லிடுவேன்' நினைவுவர டீவியை அணைத்துவிட்டு படுக்கைக்கு சென்று ரொம்ப நேரம் விழித்துக் கொண்டே இருந்தேன்.

காலிங் பெல் கிர்ர்ர்ர்னு அடித்தும் எழுந்து திறந்தேன்.

அம்மா வந்து விட்டார்கள்

"பொன்னி நல்லா தூங்கினியா ?"

"இல்லம்மா, எனக்கு தூக்கம் வரல"

"சரி, ஸ்னாக் சாப்பிட்டியா ?"

"சாப்பிட்டேன்மா"

"போயி முகம் கழுவிட்டு வா, சாமி கும்பிடணும்"

"சரிம்...மா"

பேஸ் வாஷ் பண்ணிவிட்டு திரும்பவும் கார்டுன் பார்த்தேன். அம்மா சாமி கும்பிட கூப்பிட்டாங்க. நானும் அம்மாவும் சாமி கும்பிட்டோம், அப்பாவும் வந்துவிட்டார்.

"என்னங்க அங்க டீ இருக்கு, பொன்னிக்கு ஊத்தி கொடுத்துட்டு நீங்களும் சாப்பிடுங்க, அப்படியே அவனை படிக்க சொல்லி பாத்துக்குங்க"

"சரி நான் செய்றேன், அதான் செல்லம்மா இப்ப இல்லயே, நாம தான் எல்லாத்தையும் பாத்துக்கணும், உனக்கு எதாவுது ஹெல்ப் பண்ணனும்னா சொல்லு" என்றார் அப்பா

அப்பா கூட கொஞ்ச நேரம் கேரம் விளையாடிவிட்டு, படிக்க ஆரம்பித்தேன். செல்லம்மாவுக்கு படிப்பு சொல்லிக்கொடுக்க தெரியாது. எங்கிட்டேர்ந்து தான் கொஞ்ச கொஞ்சமாக இங்லீஸ் கத்துகிச்சு

அம்மா, அப்பா, நான் மூவரும் சாப்பிட்டு முடித்தோம்

"அம்மா, சாப்பிட்டு பல்லு விளக்கணுமாம், செல்லம்மா சொல்லியிருக்கு" என்றேன்

"வெரிகுட் பாய், போய் வெளக்கிட்டு வந்துரு, சீக்கரம் படுத்தாதான் காலையில சீக்கரம் எழுந்திருக்க முடியும்" என்றார்கள் அம்மா

அப்பா, அம்மா நான் நடுவில் படுத்துகொண்டோம். அம்மாவும் அப்பாவும் செல்லம்மாவை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்புறம் தூங்கிவிட்டார்கள்.

எனக்கு தூக்கம் வரவில்லை. அம்மாவும் அப்பாவும் நன்றாக தூங்கி கொண்டிருந்தார்கள்.

நான் மெதுவாக எழுந்து கதவை திறந்து கொண்டு ஹாலுக்கு வந்தேன். கொஞ்சம் இருட்டாக இருந்தது. அப்படியே செல்லம்மாவும் நானும் தூங்கும் அறைக்கு வந்தேன், அங்கும் கொஞ்சம் இருட்டாக இருந்தது.

நேராக சென்று செல்லாம்மாவின் புடவை எடுத்து கொண்டு வந்து, அருகில் இருந்த கட்டிலில் ஏறி படுத்துக்கொண்டேன்.

ஹாலில் லைட் போட்டது மாதிரி தெரிந்தது. அம்மாவும் அப்பாவும் வந்துவிட்டார்கள் என நினைக்கிறேன். அம்மா 'பொன்னி ஏன் இங்க வந்து படுத்தேன்னு கேப்பாங்களே' கண்ணை மூடிக்கொண்டேன், அருகில் வருவது மாதிரி தெரிந்தது

"என்னங்க, இங்க வந்து தூங்கிறான், எழுப்பாம அப்படியே தூக்கிட்டு வந்து நம்ம பெட்ரூம்ல படுக்கவைங்க"

"அதுக்கு தான் நான் அப்பவே, சொன்னேன் செல்லம்மாவை இன்னும் இரண்டு வருசம் கழிச்சி அனுப்பலாம்னு"

"என்னங்க பண்றது, அவனே அவனுக்கு வேண்டியதை எல்லாத்தையும் செஞ்சு பழகிக் கொண்டான், அதுதான் செல்லம்மாவை அனுப்பலாம்னு முடிவுபண்ணினேன்"

"எனக்கு என்னவோ, இவன் ஏங்கிடுவானோன்-னு பயமா இருக்கு"

"அதுக்காக தாங்க ... செல்லம்மாவை ப்ளைட்டுக்கு அனுப்பும் முன்பு இவனைக் தூர கூட்டிக்கிட்டு போய் வேடிக்கை காட்டுங்க என்று ஜாடை காட்டினேன் ...எல்லாம் ஒருவாரத்துல சரியாயிடுங்க, செல்லாம்மாவும் அதோட பையனை நாலுவருசமா பாக்காம தானே இருந்திச்சு?"

"நீங்க ஒண்ணும் பயப்படாதிங்க, ஒருவாரத்தில எல்லாத்தையும் மறந்திடுவான், நான் நாளைக்கு அவனுக்கு வெளக்கமா சொல்லுகிறேன்"

"என்னமோ நீ தான் சொல்ற..."

"செல்லம்மா நாளைக்கு சிலோன்லேர்ந்து போன் பண்றேன்னு சொல்லியிருக்கு... பொன்னிய பேசச் சொல்லுவோம், பயப்படாதிங்க"

"சரி, பொறுத்துதான் பார்ப்போம்" என்றார் அப்பா

நான் கேட்டுக்கொண்டிருந்தேன் ஆனால் கண்ணை திறக்கவில்லை. திரும்பவும் நான் அப்பா அம்மாவுக்கு இடையில் படுக்க வைக்கப்பட்டேன்.

'ஆமாம்ல... செல்லம்மா சொல்லியிருக்கு, அதுக்கும் ஒரு பையன் இருக்கானாம் அவனுக்கு ஆறு வயசாகுதாம், அவன் பேரு முத்தழகனாம், போட்டோ கூட காட்டியிருக்கு. அவனும் என்னெ மாதிரிதானே செல்லம்மா இல்லாம கஷ்டப்பட்டிருப்பான், இனிமே முத்தழக்குக்கு ஜாலி ! செல்லம்மா கூடவே அவன் இருக்க போறான், நாளைக்கு செல்லம்மா பேசும்போது மறக்காம முத்தழகு நல்லா இருக்கானான்னு கேட்கணும், அம்மாவுக்கு சிரமம் கொடுக்காமல் சீக்கிரமே காலைல எழுந்திடணும் ....' என நினைத்துக் கொண்டிருக்கும் போது... இப்ப நல்லாத் தூக்கம் வருது.

குட் நைட்.

பின்குறிப்பு : இரத்த சம்பந்தபட்ட உறவுகள், நட்பு உறவுகள் இவற்றைத் தாண்டி செவிலியர் (பணிப்பெண்) என்ற ஒரு உறவும் உள்ளது. கடமையென்று செய்யாமால், அம்மா, பெரியம்மா, சித்தி, பாட்டி, அத்தை போன்று எந்த உறவுக்குள்ளும் இல்லாமல் ... ஆனால் அதற்குண்டான உணர்வுகளுடன் எல்லாவற்றையும் செய்து ... உணர்வுகள் கண்டுகொண்ட அந்த உறவு நிரந்தரமாகப் பிரியும் போது அது ஏற்படுத்தும் உணர்வுகளை சொல்ல முயன்ற ஒரு சிறுகதை இது. நீங்களோ அல்லது உங்கள் குழந்தைகளோ செவிலியர்களிடம் வளர்ந்து... அவர்களை பிரிய நேரிட்டபோது ... நீங்கள் அவர்களிடம் கண்டது ... உறவா ? உணர்வா ? இங்கே பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.


உங்கள் பாராட்டுக்கள் வாக்குகளாக மாறும் என்ற நம்பிக்கை இருக்கிறது :)

படம் : நன்றி http://in.rediff.com/

49 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

kalakkal ..veRRi peRa vaazththukkaL

It isbettert keep it short since lots of peple read it last minute before voting. then they skip lengthy posts.

பெயரில்லா சொன்னது…

எங்களுக்கும் ஒருவ இருந்தா. ஆனால் செல்லம்மாவைப் போல கடல்கடந்து பிரிந்து போகவில்லை. எங்களோடவே இருந்து நிரந்தரமாய்ப் பிரிந்து போனா. அவவைப் பற்றிய பதிவு

பி.கு: செல்லம்மாவை "அது" என்று பொன்னி விளிப்பது கொஞ்சம் இடறுகிறது. பொதுவான பழக்கமா?

பெயரில்லா சொன்னது…

நேரில் படம் பிடித்த மாதிரி சொல்லியிருக்கிறீர்கள்!

சொல்ல நிறைய நிகழ்வுகளை வைத்திருக்கிறீர்கள்1
அனுபவித்தவர்களுக்குப் புரியும்.

வெற்றி பெற வாழ்த்துகள்!

கோவி.கண்ணன் சொன்னது…

//சிறில் Alex said...
kalakkal ..veRRi peRa vaazththukkaL

It isbettert keep it short since lots of peple read it last minute before voting. then they skip lengthy posts.
//

சிறில், பாராட்டுக்கு முதலில் நன்றி.... போட்டிக்கு கதை எழுதியது உண்மைதான் ... ஆனால் கதையின் நீளத்தை குறைத்தால் ... உணர்வலைகள் குலைந்துவிடும் :(... அவசரமாக படிப்பவர்களுக்கு 'பின்குறிப்பு' போட்டு இருக்கிறேன். :))
தலைப்புக் கொடுத்த முழு நிலா அக்கா படித்துவிட்டு குறைக்க சொல்கிறார்களா என்று பார்க்கிறேன் :)

கோவி.கண்ணன் சொன்னது…

//SK said...
நேரில் படம் பிடித்த மாதிரி சொல்லியிருக்கிறீர்கள்!

சொல்ல நிறைய நிகழ்வுகளை வைத்திருக்கிறீர்கள்1
அனுபவித்தவர்களுக்குப் புரியும்.

வெற்றி பெற வாழ்த்துகள்!
//

உறவு கேமரா மூலம் ... உணர்வு பிலிம் போட்டு பிடித்ததை படம் பிடித்திருக்கிறேன் :)

பிழைகளை மேலும் சுட்டிக்காட்டினால் மேன்மேலும் பல கதைகளும் வளரும் :)

வாழ்த்துக்கள் வெற்றிக் கனியை வீழ்த்தும் என்று நம்புகிறேன் ... நன்றி :)

கோவி.கண்ணன் சொன்னது…

//'மழை' ஷ்ரேயா(Shreya) said...
எங்களுக்கும் ஒருவ இருந்தா. ஆனால் செல்லம்மாவைப் போல கடல்கடந்து பிரிந்து போகவில்லை. எங்களோடவே இருந்து நிரந்தரமாய்ப் பிரிந்து போனா. அவவைப் பற்றிய பதிவு

பி.கு: செல்லம்மாவை "அது" என்று பொன்னி விளிப்பது கொஞ்சம் இடறுகிறது. பொதுவான பழக்கமா?
//
உங்கள் 'எம்மி' அம்மாவைப் படித்தேன் நன்றாக இருந்தது ... உங்கள் பதிவில் பிறகு வந்து அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்

சின்னப் புள்ளைங்க 'அது' என்று அழைப்பது அன்பால் வந்த நெருக்கம் என்று எடுத்துக் கொள்ளலாம். பெத்தவங்க எப்படி கூப்பிட்டு பழ(க்)குகிறார்களோ அப்படித்தான் பிள்ளைகள் கூப்பிடும் என்று நினைக்கிறேன்

பொறுமையாக படித்து 'கருத்து மழை தூவி'யதற்கு நன்றி

பெயரில்லா சொன்னது…

GK,

உணர்வுபூர்மான கதை..

வெற்றி பெற வாழ்த்துக்கள்...

கோவி.கண்ணன் சொன்னது…

//Sivabalan said...
GK,

உணர்வுபூர்மான கதை..

வெற்றி பெற வாழ்த்துக்கள்...
//
சிபா ... வாழ்த்துக்களுக்கு நன்றி ...

உணர்வு இருக்கிறது ஆனால் 'அருமையாக' இல்லை என்று எடுத்துக் கொள்கிறேன்.

பெயரில்லா சொன்னது…

எனக்கு என்னோட 'காமா' ஞாபகம் வந்துருச்சு.

'காந்திமதியம்மா'தான் என்னோட காமா.

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
எனக்கு என்னோட 'காமா' ஞாபகம் வந்துருச்சு.
//
துளசி அக்கா ... 'காமா'வைப் பத்தி பதிவு போட்டு இருக்கிங்காள் ... இருந்தால் சுட்டி கொடுங்கள் ... இல்லை யென்றால் ஒடனே போடுங்க !

பெயரில்லா சொன்னது…

கோவி,
கதை எழுதியதற்க்கு வாழ்த்துக்கள்,
நான் இப்போ தான் அலுவலகம் வந்தேன், எனவே கொஞ்ச நேரம் வேலை பார்க்கிற மாதிரி நடிச்சுட்டு, அப்புறம் உங்களேட கதைய படிச்சுட்டு, திரும்ப வருவேன்,அன்புடன்...
சரவணன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//உங்கள் நண்பன் said...
கோவி,
கதை எழுதியதற்க்கு வாழ்த்துக்கள்,
நான் இப்போ தான் அலுவலகம் வந்தேன், எனவே கொஞ்ச நேரம் வேலை பார்க்கிற மாதிரி நடிச்சுட்டு, அப்புறம் உங்களேட கதைய படிச்சுட்டு, திரும்ப வருவேன்,
அன்புடன்...
சரவணன். //

மற்றொரு பின்னூட்ட முன்னோட்டத்துக்கு நன்றி சரவணன் ...

'என்ன கொடுமை சரவணன் சார்' என்று நான் 'உங்கள் நண்பனை' கேட்காம இருக்கனும் என்றால் ... அதற்கு தமிழ்மணம் மறுமொழி இடுகையில் இந்த பதிவு தொடர்ந்து இருக்கனும். இது அடிக்'கடி' பின்னூட்டமிடும் உங்கள் கைகளில் தான் இருக்கிறது :)

பெயரில்லா சொன்னது…

பின்னூட்டம் பற்றி கவலை வேண்டாம்,
அதெல்லாம் பின்னிப்புடலாம் பின்னி....அன்புடன்...
சரவணன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//உங்கள் நண்பன் said...
பின்னூட்டம் பற்றி கவலை வேண்டாம்,
அதெல்லாம் பின்னிப்புடலாம் பின்னி....
//
நீங்கள் முதலில் கதையை படிச்சுட்டு வாங்க :)

பெயரில்லா சொன்னது…

indha kalattula husband and wife 2 perum velaikku pogumbodhu
idhu romba sagajamayidudu...
sila samayam kuzhandainga..thangaloda appa ammava vida ippadi velaiku irukkaravangaloda paasama irukkunga..
idhe joint familya irundha patti thatha ellam iruppanga
indha prachanaiye varadu

கோவி.கண்ணன் சொன்னது…

// அனிதா பவன்குமார் said...
indha kalattula husband and wife 2 perum velaikku pogumbodhu
idhu romba sagajamayidudu...
sila samayam kuzhandainga..thangaloda appa ammava vida ippadi velaiku irukkaravangaloda paasama irukkunga..
idhe joint familya irundha patti thatha ellam iruppanga
indha prachanaiye varadu
//

அனிதா பவன்குமார் அவர்களே !
உங்கள் கருத்து நல்ல கருத்துள்ள கருத்து ... ஆனால் ஜாயின்ட் பேமிலியா இருந்தாலே பிரச்சனையும் கூடவே ஜாயின்ட் பண்ணிக்க வந்துடுதே !

பெயரில்லா சொன்னது…

உணர்வுபூர்மான கதை..

வெற்றி பெற வாழ்த்துக்கள்...

பெயரில்லா சொன்னது…

கோவியின்"செல்லம்மாவை"ப் படித்தேன்,
நல்ல உணர்வுபூர்மான கதை..

வெற்றிபெற வாழ்த்துக்கள்..


அன்புடன்...
சரவணன்.

பெயரில்லா சொன்னது…

கண்ணன் அவர்களே
கதை எழுதின முறை அருமை.. narration நல்லா இருக்கு.. பொருமையா யோசிச்சு எழுதி இருக்கீங்க..
இதுல எனக்கு முக்கியமா பிடிச்சது.. கடைசியில்..பொன்னி matured ஆ செல்லம்மாவோட பிரிவையும் தாய் தந்தையரின் அன்பையும் முழுசா புரின்சிட்டதுதான்.. குடும்பத்தில ஒருத்தருகொருத்தர் எப்படி உதவியா இருக்கனும்னு அழகா சொல்லி இருக்கீங்க.. வாழ்த்துக்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//shanmuhi said...
உணர்வுபூர்மான கதை..

வெற்றி பெற வாழ்த்துக்கள்...
//
சன்முகி அவர்களே உணர்ந்து பாராட்டியதற்கு நன்றி...
எனக்கு உங்கள் பேரைப் பார்த்ததும் அவ்வை சண்முகி தன்னோட குழந்தைக்காக பணிப்பெண் வேடம் போட்டது நினைவுக்கு வருகிறது :)

கோவி.கண்ணன் சொன்னது…

//உங்கள் நண்பன் said...
கோவியின்"செல்லம்மாவை"ப் படித்தேன்,
நல்ல உணர்வுபூர்மான கதை..

வெற்றிபெற வாழ்த்துக்கள்..

அன்புடன்...
சரவணன்.
//
வாழ்த்தினதுக்கு வணக்கம்.. தினம் வந்து வாழ்த்தி போட்டி முடியகிறவரைக்கும் பொன்னியையும் - செல்லம்மாவையும் கையை பிடிச்சு கூட்டிச் செல்லுங்கள் :)

கோவி.கண்ணன் சொன்னது…

//மங்கை said... கண்ணன் அவர்களே
கதை எழுதின முறை அருமை.. narration நல்லா இருக்கு.. பொருமையா யோசிச்சு எழுதி இருக்கீங்க..
இதுல எனக்கு முக்கியமா பிடிச்சது.. கடைசியில்..பொன்னி matured ஆ செல்லம்மாவோட பிரிவையும் தாய் தந்தையரின் அன்பையும் முழுசா புரின்சிட்டதுதான்.. குடும்பத்தில ஒருத்தருகொருத்தர் எப்படி உதவியா இருக்கனும்னு அழகா சொல்லி இருக்கீங்க.. வாழ்த்துக்கள் //

மங்கை அவர்களே ... நிதானமாக படித்து உணர்ந்து... உளமாற பாராட்டியும் ... வாழ்த்தியும் இருக்கிறீர்கள்... கதையில் பாத்திரங்களை அன்பினால் மட்டுமே கட்ட வேண்டும்... காயப்படுத்தக் கூடாது என்று உறுதி எடுத்துக் கொண்டு எழுதியது... கடைசியில் பொன்னி மெச்சூர் ஆகி சூழ்நிலையை உணர்ந்து தூங்கிய பிறகு தான் ... எனக்கு தூக்கம் வந்தது.

பெயரில்லா சொன்னது…

வித்தியாசமானக் களம். அருமையானப் பதிவு. வெற்றி கனி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//Dev said...
வித்தியாசமானக் களம். அருமையானப் பதிவு. வெற்றி கனி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்
//
தேவ் ... மனம் திறந்த பாராட்டுக்கள் நெகிழ்ச்சியாக இருக்கிறது ... மேலும் வாழ்த்துக்களுக்கு நன்றி :)

பெயரில்லா சொன்னது…

கோவியாரே உங்களுக்கும் பொன்னி மற்றும் செல்லம்மாவுக்கும் இரவு வணக்கம்,
மீண்டும் காலையில் சந்திக்கலாம்,

அன்புடன்...
சரவணன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//உங்கள் நண்பன் said...
கோவியாரே உங்களுக்கும் பொன்னி மற்றும் செல்லம்மாவுக்கும் இரவு வணக்கம்,
மீண்டும் காலையில் சந்திக்கலாம்,

அன்புடன்...
சரவணன்.
//
சரவணன் ... பொன்னி தூங்கிவிட்டான் ... காலையில் எழுந்ததும் உங்கள் சார்பில் சொல்லிவிடுகிறேன் :))

பெயரில்லா சொன்னது…

நன்றாக இருந்தது. குழந்தைகளுக்கான
குறும்படமாக எடுத்தால் நன்றாக வரும்

பெயரில்லா சொன்னது…

ரொம்ப டச்சிங்கா இருந்தது கோவியாரே!

வாழ்த்துக்கள்!

//செல்லம்மாவை "அது" என்று பொன்னி விளிப்பது கொஞ்சம் இடறுகிறது. பொதுவான பழக்கமா?
//

வட்டார வழக்கம்தான்!

பெயரில்லா சொன்னது…

அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்..

'பொன்னியின் செல்லம்மா' கண்டிப்பாக வெல்லும்மா... :)

கோவி.கண்ணன் சொன்னது…

//ennamenathu said...
நன்றாக இருந்தது. குழந்தைகளுக்கான
குறும்படமாக எடுத்தால் நன்றாக வரும்
//

ennamenathu...
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ... நான் பரம ஏழை ... என்னால் படம் காட்டத்தான் முடியும் :))

பெயரில்லா சொன்னது…

//நான் பரம ஏழை ... என்னால் படம் காட்டத்தான் முடியும் :)) //


என்னங்க கோவி...
இதுக்கெல்லம் போயி வருத்தப் படலாமா,
நம்ம "பேங்க்" ஜோசப் சார் விடுமுறைக்கு போயிருக்கின்றார் அவர் கண்டிப்பாக "திரும்பிப் பார்க்க" வருவார் , அப்போ அவருகிட்ட லோன் கேட்டுக்கலாம்,

அன்புடன்...
சரவணன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//நாமக்கல் சிபி @15516963 said...
ரொம்ப டச்சிங்கா இருந்தது கோவியாரே!
வாழ்த்துக்கள்!

//செல்லம்மாவை "அது" என்று பொன்னி விளிப்பது கொஞ்சம் இடறுகிறது. பொதுவான பழக்கமா?
//

வட்டார வழக்கம்தான்!
//

நாமக்கல்லாரே .. கோவையாரே ! ... பாராட்டியதும் டச்சிங்கா இருக்கு :) ஆமாம் உங்கள் உறவுகள் எப்போ ?

பெயரில்லா சொன்னது…

நல்ல கதை கரு.
பொன்னியின் நிலையைக் கண்ட அந்த தாயின் தவிப்பை விவரித்திருந்தால் இன்னும் நல்லா வந்திருக்கும். தாய்மார்கள் மனதை தொட்ட உங்களுக்கு மொத்த ஓட்டும் விழுந்திருக்கும். வாழ்த்துக்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

// ஜெஸிலா said...
நல்ல கதை கரு.
பொன்னியின் நிலையைக் கண்ட அந்த தாயின் தவிப்பை விவரித்திருந்தால் இன்னும் நல்லா வந்திருக்கும். தாய்மார்கள் மனதை தொட்ட உங்களுக்கு மொத்த ஓட்டும் விழுந்திருக்கும். வாழ்த்துக்கள்.
//
ஜெஸிலா ... ஓரளவுக்கு தவிப்பை சொல்லியிருக்கிறேன் ... //**அதுக்காகதாங்க ... செல்லம்மாவை ப்ளைட்டுக்கு அனுப்பும் முன்பு இவனைக் தூர கூட்டிக்கிட்டு போய் வேடிக்கை காட்டுங்க என்று ஜாடை காட்டினேன் ...எல்லாம் ஒருவாரத்துல சரியாயிடுங்க** // என்று ...ஆனால் கதை முழுவதும் சிறுவன் பேசுவது போல் எழுத முயன்றதால் தாயின் தவிப்பு அங்கே மறைமுகமாக தான் சொல்லவேண்டும்... அதாவது அவனுடைய தாய்/தந்தை தவித்தார்களா என்று அவனுக்குத் தெரியாது !

கதையை பாராட்டியதற்கும் கருத்துக் கூறியதற்கும் மிகவும் நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//நண்பன் said… நம்ம "பேங்க்" ஜோசப் சார் விடுமுறைக்கு போயிருக்கின்றார் அவர் கண்டிப்பாக "திரும்பிப் பார்க்க" வருவார் , அப்போ அவருகிட்ட லோன் கேட்டுக்கலாம்,

அன்புடன்...
சரவணன்.
//

அவர் கைப்புள்ள குறும்புப் படத்துக்குத்தான் லோன் கொடுப்பார் ... சின்னப்பசங்க படத்துக்கு கொடுக்க மாட்டார் ... எதுக்கும் கேட்டுப் பார்க்கிறேன் ...
வந்து வழிகாட்டினத்துக்கு நன்றி சரவணன் :))

கோவி.கண்ணன் சொன்னது…

//கப்பி பய said...
அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்..

'பொன்னியின் செல்லம்மா' கண்டிப்பாக வெல்லும்மா... :)

August 03, 2006 7:59 AM
//
கப்பி அவர்களே நீங்கள் செப்பியது பலித்தால் மகிழ்ச்சிதான் :))

பாராட்டுக்கு நன்றி கப்பி பய அவர்களே !

பெயரில்லா சொன்னது…

இன்றைய அவசர உலகில் பெற்ற தாயை அளவுக்கு இது போன்ற செவிலித் தாய்களும் முக்கியமானவர்களாகி விட்டார்கள். அது போன்ற ஒரு உறவை படம் பிடித்துக் காட்டியிருக்கிறீர்கள் நன்றாக இருக்கிறது. போட்டிக்கு வாழ்த்துக்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//குமரன் எண்ணம் said...
இன்றைய அவசர உலகில் பெற்ற தாயை அளவுக்கு இது போன்ற செவிலித் தாய்களும் முக்கியமானவர்களாகி விட்டார்கள். அது போன்ற ஒரு உறவை படம் பிடித்துக் காட்டியிருக்கிறீர்கள் நன்றாக இருக்கிறது. போட்டிக்கு வாழ்த்துக்கள்.//

கதைபற்றிய கருத்துக்களுக்கு நன்றி குமரன் அவர்களே ! உறவுகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் :)

பெயரில்லா சொன்னது…

எனக்கு சின்ன வயது ஞியாபகம் வரவைச்சிட்டீங்க...

எதித்த வீட்டு செவிலித்தாய் கூட்டிக்கிட்டு வரும் பாப்பாவை ரெம்ப பிடிக்கும்...


:))

பெயரில்லா சொன்னது…

கண்ணன்,

பொறுமையாகப் படித்து விட்டு வந்தேன்,.
பொன்னியின் அறிதலும், செல்லம்மாவின் அருமையும்
நல்லபடியாக,அழகாகப் பதித்து இருக்கிறீர்கள்.
ஒரு உண்மை தெரியுமா, எங்க வீட்டிலே பெரிய தாத்தாவிலிருந்து,பிறந்த குழந்தை வரை எல்லோருமே அது தான்.வந்துதோ? போச்சோ என்றுதான் சொல்லுவோம்.அஃறிணை குடும்பம் என்றும் தெரியாதவர்கள் சொல்வார்கள்.
அருமையானவர்கள் எல்லோரும் அது ஆகிவிடுவோம்.
வெற்றிக்கு வாழ்த்துகள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//செந்தழல் ரவி said...
எனக்கு சின்ன வயது ஞியாபகம் வரவைச்சிட்டீங்க...

எதித்த வீட்டு செவிலித்தாய் கூட்டிக்கிட்டு வரும் பாப்பாவை ரெம்ப பிடிக்கும்...:)) //
ரவி ... கதைபிடித்திருக்கிறது என்று சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள் நன்றி ...!

கோவி.கண்ணன் சொன்னது…

//valli said...
கண்ணன்,

பொறுமையாகப் படித்து விட்டு வந்தேன்,.
பொன்னியின் அறிதலும், செல்லம்மாவின் அருமையும்
நல்லபடியாக,அழகாகப் பதித்து இருக்கிறீர்கள்.
ஒரு உண்மை தெரியுமா, எங்க வீட்டிலே பெரிய தாத்தாவிலிருந்து,பிறந்த குழந்தை வரை எல்லோருமே அது தான்.வந்துதோ? போச்சோ என்றுதான் சொல்லுவோம்.அஃறிணை குடும்பம் என்றும் தெரியாதவர்கள் சொல்வார்கள்.
அருமையானவர்கள் எல்லோரும் அது ஆகிவிடுவோம்.
வெற்றிக்கு வாழ்த்துகள்.
//

வள்ளி ...நன்றாக சொல்லியிருக்கிறீர்கள் ... அது இது என்று சொன்னாலும் அன்பு குறைவதில்லைத் தான் ... வெற்றிவாழ்த்துக்கு நன்றி ... ஓட்டு மறக்காம போட்டுவிடுங்கள் :)

பெயரில்லா சொன்னது…

டச் பண்ணிட்டீங்க போங்க...

நீளம் தான் கொஞ்சம் அதிகமோன்னுத் தோணுது!

சரி விடுங்க சற்றே பெரிய சிறுகதைனு போட்டுடுவோம் ;)

கோவி.கண்ணன் சொன்னது…

//அருட்பெருங்கோ said...
டச் பண்ணிட்டீங்க போங்க...

நீளம் தான் கொஞ்சம் அதிகமோன்னுத் தோணுது!

சரி விடுங்க சற்றே பெரிய சிறுகதைனு போட்டுடுவோம் ;)
//
கொஞ்சம் உளவியல் ரீதியான கதை அதனால் நிகழ்வுகளைக் கோர்க்க வேண்டியதாகி ... நீளம் அதிகமானது.. அருட்பொருங்கோ பாராட்டுக்கள் நெகிழ்ச்சியாக இருக்கிறது ... அப்படியே ஓட்டும் போட்டுவிடுங்கள் :)

பெயரில்லா சொன்னது…

கோவி.கண்ணன்,

மனதை தொடும்படி அமைந்திருந்தது உங்கள் கதை. வழக்கமாக
கதையில் அம்மாவை கோபக்காரமாக காட்டியிருக்காமல், மனைவியின் பேச்சை மட்டும் கேட்கும் அப்பாவாக இல்லாமல், அழுது புரளும் சிறுவனாக இல்லாமல் அனைவரின் பாத்திரங்களும் அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளன, முக்கியமாக செல்லம்மா, பொன்னிக்கு ஒரு அம்மாவா சொல்லி இருந்தது மிக இனிமை.

அன்புடன்
தம்பி

VSK சொன்னது…

பொன்னம்மா எப்படி இருக்காங்க?

இலங்கையில் போராமே!

திரும்பி வரச் சொல்லுங்க!

பொன் நிலவன் தேடறான்!

கோவி.கண்ணன் சொன்னது…

//SK said...
பொன்னம்மா எப்படி இருக்காங்க?
இலங்கையில் போராமே!
திரும்பி வரச் சொல்லுங்க!
பொன் நிலவன் தேடறான்!
//

எஸ்கே,

பொன்னம்மா நல்லா இருக்காங்க...!
போரெல்லாம் அவர்களை ஒன்றும் செய்யாது என்று பொன்னியிடம் தொலைபேசியில் சொன்னார்களாம் !

நன்றி ஐயா !

உங்கள் நண்பன்(சரா) சொன்னது…

பொன்னனுக்கு நேற்றே வாக்களித்துவிட்டேன்! வெற்றிபெற வாழ்த்துக்கள்!


அன்புடன்...
சரவணன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//உங்கள் நண்பன் said...
பொன்னனுக்கு நேற்றே வாக்களித்துவிட்டேன்! வெற்றிபெற வாழ்த்துக்கள்!
அன்புடன்...
//
சரா... !
வாக்களித்ததற்கு உள்ளம் களிக்கிறது... நன்றி !
:))

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்