பின்பற்றுபவர்கள்

14 அக்டோபர், 2012

வேலை மா(ற்)றும் நாள் !


பள்ளியின் கடைசி நாட்கள், கல்லூரியின் கடைசி நாள் போன்று அலுவலகங்களின் கடைசி நாள் அனுபவம், தனியார் நிறுவனங்களில் பணி புரிபவர்களுக்கு கிடைக்கும் நல்வாய்ப்பு. நான் பதவி ஓய்வு நாள் பற்றி இங்கு குறிப்பிடவில்லை, ஒரு வேலையில் இருந்து அடுத்த வேலைக்கு மாறும் நாள் அதாவது அடுத்த நிறுவனத்திற்கு மாறும் முன் பழைய நிறுவனத்தின் கடைசி நாள் பற்றிக் குறிப்பிடுகிறேன்,  ஒரு ஆண்டுக்குள் பணிபுரிந்து விலகுபவர்களுக்கு அலுவலக கடைசி நாள் பற்றிய மிகப் பெரிய அனுபவம் இருக்காது, ஆனால் ஒன்றோ அல்லது அதற்கு மேல் பணி புரிந்து விலகுபவர்களுக்கு பழகிய அலுவலக நண்பர்களைப் பிரிகிறோம் என்கிற வருத்தம் இருக்கும்,  நான் இதுவரை பணிபுரிந்த அலுவலகம் அனைத்திலும் கடைசி நாள் எனக்கு  உணர்ச்சி மிக்கதாகவே அமைந்திருந்தது. பதவி விலகல் கடிதம் கொடுத்த அன்று முதல் உடன்புரியும் யாராவது ஒருவர் 'ஹவ்மெனி டேஸ் மோர் ?' அதைக் குறிப்பிட்டுக் கொண்டே இருப்பார். வழக்கமாக சண்டை போடுபவர்கள் கூட நட்பு பாராட்டும் விதமாக பேசுவார்கள். வேற நல்ல வேலைக்கு நல்ல ஊதியத்திற்கு வேலைக்குப் போகிறோம் என்று தெரிந்தால் வெளியே காட்டிக் கொள்ளாமல் பொறாமை அடைபவர்களும் இருப்பார்கள், ஆனாலும் இவன் போனால் நல்லது என்று நினைக்கும் நிலையை நான் இது வரை ஏற்படுத்தியதே இல்லை.

என்னைப் பொறுத்த அளவில் அலுவலகம் என்பது பகல் பொழுதுகளை இல்லத்தினரிடம் செலவழிப்பதைக் காட்டிலும் கூடுதலாக செலவழிக்கும் இடம். அவர்களில் சிலரை பிடிக்கிறதோ இல்லையோ அவர்களை நாள் தோறும் சந்திக்க வேண்டிய வாய்ப்புள்ள இடம், முடிந்த அளவுக்கு என் மீது தவறே இல்லாவிட்டாலும் என்னைக் குற்றம் சொல்பவர்களைப் பார்த்து முகம் திருப்பிச் செல்லும் வழக்கமும் எனக்கு கிடையாது, எதுவுமே நடக்காதது போல் அவர்களிடம் மிகச் சாதாரணமாகப் பேசுவேன், காரணம் இந்த அலுவலத்திற்கு நான் வரவில்லை என்றால் அவர்களுக்கும் எனக்குமான தொடர்புகள் வாய்பற்றது என்ற நிலையில் நபர் எப்படி பட்ட தன்னலம் கொண்டவராக இருந்தாலும் என் மீதான அவரின் குற்றச் சாட்டுகளை நிருபனம் செய்ய இயலாத நிலையில் அவமானப்படுபவர் அவரே என்று நன்கு தெரிந்த நிலையில் நான் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்வது கிடையாது, தவிர உடன்பணிபுரிபவர்களிடம் 'இது கூடத் தெரியாதா ?' என்று நக்கல் அடிக்காமல் கேட்கும் உதவிகளை செய்து தருவதுடன் அதில் நேரம் தாழ்வு ஏற்பட்டால் அவர்களிடம் விளக்கி மன்னிப்பு கேட்பதுடன், எப்படியாவது செய்து தரவேண்டும் என்று செய்து முடித்துவிடுவேன், முடிந்த அளவு அலுவலகத்தின் கடைநிலை ஊழியர்கள் வரையிலும் எல்லோரிடமும் அன்பாக பழகுவது தான் எனக்கான நல்ல சூழலை நான் வடிவமைத்துக் கொண்டு பணிபுரிய ஏற்ற இடமாகவும் அமையும் என்ற நம்பிக்கையுடன் அவ்வாறே நடந்து கொள்வதால் அலுவலகத்தில் எனது கடைசி வேலை நாள் எப்போதும் உணர்ச்சிகரமாகவே அமைந்துவிடும்.

ஒரு அலுவலகத்தில் நாம் எப்படி பணி புரிகிறோம் என்பதை நம்மிடம் உதவி கேட்பவர்களின் தயக்கத்தில் இருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம், எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் எல்லோரும் அலுவலக உதவி கேட்கிறார்கள் என்றால் நாம் செய்து தருவோம் என்று நம்மீது நம்பிக்கை வைத்திருப்பதுடன், நாம் முடியாது என்று சொல்ல மாட்டோம் என்று நம்புகிறார்கள், அப்படியான நம்பிக்கையை நாம் ஏற்படுத்தி இருக்கிறோமா ? என்று  நாம் நம்மை எடை போட்டுக் கொள்ளலாம். பணி புரிய ஊதியம்கொடுக்கிறார்கள், செய்ய வேண்டியது நம் கடமை என்றாலும் கடமை என்கிற பெயரில் நான் பிசி... பிசி அப்பறம் செய்கிறேன் என்று சால்சாப்பு சொல்பவர்களும் எங்கும் உண்டு, சரியான காரணங்களைச் சொல்லி முடிந்த அளவுக்கு தவிர்ப்பது என்பது அலுவலக அரசியல்களின் ஒன்று என்பதை அலுவல் செய்யும் அனைவருமே உணர்ந்துள்ளனர், இந்த நிலையில் கேட்கும் உதவி கிடைக்காவிட்டால் நாமும் எதையும் குறிப்பிட்ட நேரத்திற்கு செய்ய முடியாது என்றே உணர்ந்திருப்பார்கள், அதனால் தான் 'கடமையைத் தானே செய்கிறோம்' என்றாலும் கேட்டவுடன் உதவி செய்பவர்களை அவர்களுக்கு மிகவும் பிடித்து போகும். இங்கு முதலாளியாக இருந்தாலும் பணிபுரிபவர் கேட்டவுடன் செய்து கொடுக்கும் வேலைக்கு 'நன்றி'யை உடனடியாகச் சொல்லிவிடுவார்.  இங்கு கடமை என்பது வேலை செய்வது மட்டுமல்ல ஒப்புக் கொண்டு உடனே செய்து தருவது என்றெல்லாம் பார்க்கும் பொழுது கடமையை தாண்டிய உதவி என்ற வகையில் வகைப்படுத்துவர். 

நான் இதுவரை ஒரு 10 நிறுவனங்களிலாவது பணி புரிந்து இருக்கிறேன், ஒவ்வொன்றின் கடைசி நாள்களும் மிகவும் உணர்ச்சிகரமானது. கண்ணீர், அழுகாச்சி என்றெல்லாம் இல்லாவிட்டாலும் விடைகொடுப்பவர்களிடம் ஒரு சோகமும், அதைத் தாண்டி அடுத்து நீ மேலும் மேலும் உயரவேண்டும் என்கிற வாழ்த்தும், அதுவரை ரொம்ப சாதாரணமாகப் பழகியவர்கள் கூட அவர்களை நான் மறக்கக் கூடாது என்பதை புரிய வைக்க அவர்களின் நம்மீதான கடைசி செயல்பாடுகளும் நம்மால் கவனிக்கத் தக்கதாகவே இருக்கும்,  நாம் அலுவலகத்தில் ஒழுங்காக வேலை செய்திருக்கிறோமா. எல்லோரும் பாராட்டும் வண்ணம் நடந்திருக்கிறோமா  இல்லையா ? என்பதை அலுவலகத்தின் கடைசி நாள் நமக்கு தெளிவாக சொல்லிவிடும்.

பள்ளி மற்றூம் கல்லூடியை போல் தோழமைகளை உருவாக்கித்  தரும் இடம் அலுவலகம். ஈராண்டுக்கும் மேல் பணிபுரிந்த நிறுவனங்களில் நான் பெற்ற கடைசி நாள் துய்ப்புகளை முடிந்த அளவுக்கு நினைவில் இருந்து மீட்டும் ஒவ்வொன்றாக பிறகு எழுதுகிறேன்.

8 அக்டோபர், 2012

கேபிள் சங்கருடன் பொன் மாலைப் பொழுது !


கேபிள் சங்கர் தற்பொழுது சிங்கையில் இருக்கிறார், தனது சினிமா துறை தொடர்பில் ஒரு தயாரிப்பாளரை சந்தித்து உரையாட சிங்கை வந்துள்ளார்,  நேற்று காலையில் விமான நிலையம் செல்ல இயலாத நிலையில் மாலையில் சந்திக்கலாம் என்று பிரியமுடன் பிரபு அழைக்க கேபிளை சந்திக்க மாலை 6 மணி வாக்கில் குட்டி இந்தியா சென்றேன், அங்கே ஏற்கனவே தமிழ்வெளி நிறுவனர் குழலியுடன் உரையாடிக் கொண்டிருந்தார், கட்டித் தழுவலுடன் ஒரு வரவேற்பைக் கொடுத்துவிட்டு கொஞ்சம் அளவளாவிட்டு, திரைப்படம் குறித்து பேச்சு வந்தவுடன் 'இங்கிலிஸ் விங்கிலிஸ்' பார்க்க விரும்புவதாக கேபிள் சொன்னார். அதுக்கென்ன கிளம்பிடுவோம் என்று திரையரங்கையும் காட்சி விபரங்களையும் தெரிந்து கொள்ளும் பொழுது அடுத்த 30 நிமிடத்தில் தெம்பனீஸ் ஜீவி திரையரங்கிற்குச் சென்றால் பார்க்க முடியும், கிளம்புங்க கிளம்புங்க என்று நால்வரும் கிளம்பி வாடகை வாகனம் எடுத்து கிளம்பினோம், 6:40க்கு திரையரங்கிற்குள் நுழைந்து 5 நிமிடம் வரிசையில் நின்று நுழைவுச் சீட்டு வாங்கி உள்ளே செல்லும் முன்பே முன் இருக்கை தான் என்று உறுதியாக தெரிந்த நிலையில் 45 டிகிரி கோணத்தில் திரை தெரிய படம் பார்த்தோம், திரைக்கு மிக அருகில் இருந்து பார்க்க கொஞ்சம் கழுத்து வலிக்கத் தான் செய்தது.

அடுத்த வாரிசு படத்தின் பிறகு தமிழில் ஶ்ரீதேவியின் (அரவிந்தசாமியுடன் நடித்தது அல்ல)  ரஜினியுடன் நான் அடிமை அல்ல, அதன் பிறகு தமிழ் பக்கம் ஒதுங்கவும் இல்லை, ஶ்ரீதேவியை திரையில் பார்க்க ஆவலுடன் இருந்தேன், குரல் முன்பு போல் (சற்று மூக்கால் பேசுவது போன்ற கொஞ்சும் குரலாக )இல்லாமல் கொஞ்சம் கரகரப்பு கூடி இருந்தது, பார்த்தது இந்திப் படம் என்பதால் ஶ்ரீதேவி குரல் பழக்கப்பட்ட குரல் போலும் தெரியவில்லை, எனக்கு சற்று ஏமாற்றமே, மற்றபடி ஶ்ரீதேவியின் தோற்றம் நடிப்பு சூப்பரோ சூப்பர், திரைப்படம் பற்றி விமர்சனங்களை கேபிள் எழுதிவிட்டார், அவரைவிட சிறப்பாக எழுத என்னால் முடியாது, எனவே விமர்சனங்களைத் தவிர்க்கிறேன். ரஜினி, சில்க், ஶ்ரீதேவி, அஜித் ஆகியோரைத் தான் பிரேமுக்கு பிரேம் ரசிப்பேன் என்பதால் ஶ்ரீதேவி வரும் காட்சிகள் அனைத்தையும் விழிக் கொட்டாமல் பார்த்தேன். 

கொஞ்சம் கூட சொதப்பல் இல்லாமல் ஒவ்வொரு காட்சியிலும் ஶ்ரீதேவியின் உணர்வு பூர்வமான நடிப்பு பாராட்டச் சொற்கள் இல்லை, நடிகர்கள் தவிர்த்து சென்ற தலைமுறை நடிகை ஒருவர் படம் முழுவதும் ஆக்கிரமித்து நடித்திருப்பது எனக்கு தெரிந்து ஶ்ரீதேவி ஒருவர் தான். முகத்தின் சுருக்கங்களை மேக்கப் சரிசெய்ததைவிட அவரது கண்கள் மிகுதியாகவே சரி செய்ததிருந்ததால் அதிர்ச்சி அளிக்கும் அளவுக்கு ஶ்ரீதேவியின் தோற்றம் மாறாமல் இருப்பதும் இந்தப் படத்தில் சிறப்பு, ஹார்லிக்ஸ், காம்ப்ளான் அம்மாக்களைப் போன்று படத்திற்கு மிகப் பொருத்தமாக இருக்கிறார்.

ரொம்பவும் முடிச்சுகள் இல்லாமல் கான்வெண்ட் செல்லும் பிள்ளைகள் இருக்கும் இல்லத்தில் நடக்கும் இயல்பான கதை. ஶ்ரீதேவி ரசிகர்களுக்கு மிகவும் அருமையான திரைவிருந்து.

*****

படம் முடிந்து வெளியே வந்து ஸ்டார்பக்ஸில் ஆளுக்கு ஒரு காபி குடித்துக் கொண்டே படத்தைப் பற்றிப் பேசிவிட்டு இரவு 10 மணி வாக்கில் அவரவர் கிளம்பினோம்,  வலைப்பதிவர் நண்பராக மிகவும் இயல்பாக, அன்பாகப் பேசக் கூடியவர்கள் மிகச் சிலரே, கேபிள் சங்கர் பிரபலபதிவர் என்றாலும் பெரிய இயக்குனர் ஆக ஆனாலும் இப்படித்தான் இருப்பார் என்றே நினைக்கிறேன். இது போன்ற நண்பர்கள் நம் இருக்கும் இடத்திற்கு வருகிறார்கள் என்றால் நாம பார்க்காமல் விட்டால் நமக்கும் நட்டமே. 

எழுத்து, தனிமனித பழக்க வழக்கம் இவற்றில் குழப்பிக் கொள்ள ஒன்றும் இல்லை என்று மிகத் தெளிவான புரிந்துணர்வுகள் கொண்டவர்கள் மிகச் சிலரே, அதில் கேபிள் சங்கரும் ஒருவர்.  மிகவும் வெளிப்படையாக பகட்டில்லாமல் பேசும் கேபிள்ஜி த கிரேட். அவருடன் சேர்ந்து ஶ்ரீதேவி நடித்த திரைப்படம் பார்த்த அனுபவமும் மறக்க இயலாத ஒன்று.

கேபிள் சங்கர் வரும் வியாழன் 11 அக்டோபர் வரை சிங்கையில் இருப்பார், தொடர்பு கொள்ள +65 82037082

6 அக்டோபர், 2012

பெண்களின் ஆடை ஆண்மை லேகியமா ? 18+


பெண் உடலை முழுவதும் போர்த்தி நடமாடுவது தான் ஆண்களின் ஆண்மையை பாதுகாக்கும் என்று எவனோ வேலை வெட்டி இல்லாதவன் ஒரு 30 ஆண்டுகள் செலவளித்து ஆராய்ச்சி நடத்தி தொடை தெரிய ஆடை உடுத்தும் பெண்கள் இருக்கும் நாட்டில் ஆண்களுக்கு ஆண்மை குறை ஏற்படுத்துவதுடன் விந்தக புற்றுநோயும் தாக்குவதாகவும்  இதற்கு முன்பே அந்த ஆண்களுக்கு விந்து முந்துவதாகவும், விரைப்புத் தன்மை குறைபாடு ஏற்படுவதாகவும் பயமுறுத்தும் ஆராய்சியின் முடிவாக அபாய சங்காக ஆண்கள் அனைவரும் விரைவில் அழிந்து போக வாய்ப்புள்ளதாக கூறியுள்ளனாம்.  முழுக்க ஆடை உடுத்தி எதிரே வருபவர் பெண்ணா ஆணா என்று தெரிந்து கொள்ள முடியாத நிலையில் உடை உடுத்தி இருக்கும் பெண்கள் உள்ள நாட்டில் ஆண்கள் வீரியமிக்கவர்களாகவும் எழுச்சி மிக்கவர்களாகவும் இருப்பதுடன் தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும் உள்ளனராம். ஆக பெண்கள் அணிந்திருக்கும் ஆடை தான் ஆண்களின் ஆண்மையை முடிவு செய்கிறது என்று ஆதாரபூர்வமாக எழுதப்பட்டுள்ள ஒரு கட்டுரையைப் பார்க்க நேர்ந்து மயக்கம் அடைந்தேன்.

சிட்டு குருவி லேகியம் விற்பவர்கள் வயிற்றில் கந்தகம் கலக்கும் இத்தகைய ஆராய்ச்சிகளால் மேலும் அறிவது சொறிவது என்ன வென்றால்

பெண்களே இல்லாத நாட்டில் பெண் உடை என்ற ஒன்றே இல்லாத நாட்டில் ஆண்கள் 100 விழுக்காடு வீரியமிக்கவர்களாக இருப்பார்கள்

முழுக்க போர்த்திய பெண்கள் நடமாடும் நாடுகளில் உள்ள ஆண்கள் பிற நாடுகளுக்குச் செல்லும் போது தமது வெட்க்கத் தலங்களைக் கட்டுப்படுத்த மிகுந்த சிரமப்படுவார்கள், ஏனெனில் அவர்களின் ஆண்மை அரைகுறை ஆடைப் பெண்களைப் பார்க்கும் பொழுது வீறு கொண்டுவிடும்.
ஆண்மை குறைவுள்ளவர்களை விரைவில் குணப்படுத்த அவர்களை பெண்கள் இல்லாத இடத்திற்கு கடத்த வேண்டும்.
காமவெறியர்களை கட்டுப்படுத்த அவர்களை முழுக்க உடை அணிந்த பெண்கள் வசிக்கும் இடத்திற்கு அனுப்ப வேண்டும்
அரபு நாடுகளுக்கு ஒற்றை ஆளாக வேலைக்குச் சென்று திரும்புவர்கள் ஆண்மை மிக்கவர்களாக திரும்புவர்.

பெண்ணின் உடல் மற்றும் ஆடையை வைத்து, பெண்களின் ஆடை சமூகத்தில் குறைய குறைய ஆண்மையும் குறையும் ! - என்பதுபோல் கன்றாவி  கருத்துகளைப் பரப்புவர்கள் தான் பெண்களை போகப் பொருளாகப் பயன்படுத்தப்படுவதாக குறை சொல்லி கண்ணீர் வடிக்கிறார்கள்.

இம்சைகள் தாங்க

முடியல.





5 அக்டோபர், 2012

ஆர்காடு நவாபுகளால் உருவான இந்தியா !


ஆர்காடு நவாப்புகள் யார் ? தமிழகத்தில் இவர்கள் எப்படி கால் ஊன்றினார்கள் என்று தகவல்களைத் தேடிப் பார்க்கும் பொழுது, வரலாற்றில் கொடுங்கோலன் மற்றும் கடைசி காலத்தில் கையால் குரான் எழுதி தன்னை திருந்தியவன் என்று காட்டிக் கொள்ள முயன்றவன் என்றெல்லாம் வருணீக்கப்படும் பேரரசர் ஒவுரங்க சீப் தென்னிந்தியாவில் தனது ஆட்சி அதிகாரத்தை விரிவு படுத்த முயற்சித்தன் விளைவாக கிபி 1692ல் வரிவசூல் செய்ய தென்னிந்தியாவிற்கு அனுப்பட்டவர்களே நவாப்புகள்.  அவ்வாறு முதலாவதாக  தென்னிந்தியாவிற்கு வந்த நவாப் சுல்பிகர் அலி  என்பவர், இவர் விஜய்நகர மற்றும் மராட்டிய அரசுகளை முறியடித்து கிபி 1736ல் மதுரைவரை முகலாய அரசை விரிவுபடுத்தினார் என்கிறது வரலாற்று குறிப்புகள். சுல்பிகர் அலிக்கு  பிறகு பொறுப்பேற்றவர் அலி வாலாஜா, சுல்பிகரின் ஆட்சி காலம் 1732 - 1740 வரையில் 8 ஆண்டுகள் நீடித்து பின்னர் 1749 ஆம் ஆண்டு அலி வாலாஜா பொறுப்பெற்க இடைபட்ட 9 ஆண்டுகள் என்ன நடந்தது என்று தெரியவில்லை

அலி வாலாஜா ஓரளவு நேர்மையான ஆட்சி நடத்தினார் என்றும் அனைத்து மதத்தினரையும் மதித்தார், கிடைத்த வரி வருமானங்களில் இருந்து இந்து கோவில்களுக்கும் மானியம் வழங்கினர் என்றும் சொல்லப்படுகிறது. இவர் 1765ல் மொகலாய பேரரசிற்கு கப்பம் கட்ட மறுத்து தென்னிந்திய பகுதிகளை தனியாக ஆளுவதற்காக இவரது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை நவாப்பு அரசாகவும், சுதந்திரம் பெற்றதாகவும் அறிவித்தார், இவரது ஆட்சி ஆர்காட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டதால் பின்னர் வந்த நவாப்புகள் ஆர்காடு நவாப்புகள் என்று பெயர் பெற்றனர், இவர்களது ஆட்சி கர்நாடகம் கிருஷ்ணா ஆறுவரை உட்பட்ட பகுதிகளாக இருந்தது.  இடையே பிரஞ்சுகாரர்களும் ஆங்கிலேயர்களும் உள்ளே நுழைய இருவருக்கும் மைசூரில் போர் மூண்ட சூழலில் மைசூர் மற்றும் திண்டுகல் பகுதியை விஜய நகர அரசுகளுடன் இணைந்து ஆண்டு வந்த ஹைதர் அலி பிரஞ்சுகாரர்களுக்கு போரில் உதவ, நவாப்புகள் ஆங்கிலேயர்களுக்கு ஆதாரவுடன் செயல்பட்டனர். பின்னர் தமது ஆளுமைகளுக்கு உட்பட்ட சமஸ்தானங்களை கட்டுப்படுத்த ஆங்கிலேய படைகளை நவாப்புகள் பயன்படுத்த அதுவே அவர்களுக்கு ஆப்பாக அமைந்ததாம். இதன் காரணமாக ஆங்கிலேயர்களிடம் தனது ஆளுமைகளை கொஞ்சம் கொஞமாக இழந்ததுடன் வெள்ளைக்காரர்கள் இந்தியாவில் ஆழமாக கால் ஊன்ற காரணமாக இருந்தவர்கள் என்பதுடன் தேச நலனுக்கு எதிராக செயல்பட்டவர்கள் என்ற பெயரை நவாபுகள் பெற்றனராம்.

"இதன் பிறகு பதிமூன்றாவது நவாபாக ஆட்சிக்கு வந்த குலாம் முகம்மது கவுஸ் காண் ( 1825 - 1855 ) தனக்கு பிறகு வாரிசு இல்லாமல் இறந்தார். இதனால் அவரது ஆட்சி ஆங்கிலேய அரசின் கீழ் சென்றது. இதன் பிறகு 1867-ல் குலாம் முகம்மது கவுஸ் கானின் சிறிய தந்தை ஆஸிம் ஜா, பிரித்தானிய மகாராணி விக்டோரியாவிடம் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டார். அதன்படி நவாப் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரி வசூல் செய்யும் உரிமையை ஆங்கிலேயர் பெற்றனர். அதற்கு பகரமாக வரிவசூலில் ஒரு பகுதியை ஓய்வுதியமாக ஆஸிம் ஜா பெற்றார். மேலும் ஆர்காடு இளவரசர் என்றும் அங்கிகரிக்கப்பட்டார். 
இவரது பரம்பரையில் வந்தவர்கள் இன்றும் சென்னை நகரில் ஆர்காடு இளவரசர் என்ற பட்டத்துடன் வாழ்ந்து வருகின்றனர். சுதந்திர இந்தியாவும் இவர்களது பட்டத்தை அங்கீகரித்து, அரச குடும்பத்தினருக்கான ஓய்வுதியத்தை அளித்து வருகின்றது. இவர்களில் நடப்பு கடைசி ஆர்காடு இளவரசரான முகம்மது அப்துல் அலி ஆஸிம் ஜா ஜுலை 1994-ல் பட்டத்துக்கு வந்தார்".

- விக்கிப் பீடியா


******

இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி ஏற்பட்டு இருக்காவிட்டாலும், பல்வேறு நாடுகளில் நடந்தது போல் காலத்தின் கட்டாயம் என்ற அளவில் மன்னர் ஆட்சிகள் ஒழிந்திருக்கும், ஆனால் இந்தியா என்கிற ஒரே நாடாக இருந்திருக்குமா ? காங்கிரசு அரசு போன்ற ஒற்றைத் தலைமைக்கு மொத்த மாநிலங்களும் கட்டுப்பட்டு இருக்குமா என்பது ஐயமே.

இந்தியா என்கிற நாடு உருவாக ஆங்கிலேயர்களும் அவர்களுடன் கைகோர்த்த  நவாப்புகளுமே காரணம், மொகலாய அரசர்கள் இந்தியாவெங்கும் ஆட்சியை விரிவுபடுத்தினார்கள் என்பதைவிட இந்தியாவின் பகுதிகளில் வரி வசூல் செய்யும் பொறுப்புகளை ஒப்படைத்திருந்தனர் என்பதும் பிறகு அதுவே அவர்களது ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்ககாரணமாக அமைந்ததும் வரலாறாக ஆகி இருக்கிறது.

வியாபாரம், வேட்டை என்ற அடிப்படையில் வெள்ளைக்காரர்கள் கிடைத்த வரை சுருட்டிக் கொண்டு திரும்பச் சென்றிருந்தாலும் மொகலாய மன்னர்கள் அவ்வாறு திரும்பிச் செல்லவில்லை, முகலாயர்கள் இடம் பெயர்ந்து வந்தவர்கள் என்ற அடைப்படையில் அவர்களுக்கு திரும்பிச் செல்ல வாய்ப்பும் இருக்கவில்லை என்பது உண்மை, 

ஹைதர் அலியும் திப்பு சுல்தானும் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்தவர்கள் என்று போற்றபடுகிறார்கள், மைசூரில் இன்றும் கொண்டாடப்படுகிறார்கள், நாவாப்புகளின் வாரிசுகளை  இளவரசர்கள் என்ற அங்கீகாரம் மட்டுமே அளித்து அவர்களுக்கு மானியம் வழங்குகிறது இந்திய அரசு, சொல்லப் போனால் மொகலாய ஆட்சியை துடைத்தொழித்த வெள்ளைக்காரர்கள் காலூன்ற காரணமாக இருந்து, இந்தியா என்ற நாடு உருவாக காரணமாக இருந்தவர்கள் நவாப்புகள், இதன்காரணமாக தமது ஆட்சியையும் இழந்து இவர்கள் இந்துக்களால் போற்றப்பட வேண்டியவர்கள், தமிழகத்தின் அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்தியவர்கள் என்ற முறையில் நவாப்புகள் தமிழக மக்களால் நன்றியுடன் நினைத்துப் பார்க்கத் தக்கவர்கள்.

அமீர் மஹால், சென்னை

இணைப்புகள் : (விக்கி)

2 அக்டோபர், 2012

கண்டன கடமையும் பொறுப்பேற்கும் சடங்குகளும் !

ஐயா நல்லா பார்த்துக் கொளுங்கள் நாங்கள் எங்கள் மதத்தினர் செய்த பாதக செயல்களைக் கண்டிக்கிறோம், எங்க மத்தில் இல்லாததைத் தான் இவர்கள் செய்துள்ளனர், எங்க மதம் தூய்மையானது அப்பழுக்கற்றது. ஐயா நாங்க சிறுபான்மையினர் எங்களுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பில்லை, இந்த நாட்டில் எங்களுக்கு எந்த உரிமையும் கிடைக்கவில்லை, இந்த நாட்டில் நல்லவர்களே இல்லை என்று சொல்லவில்லை இது மோசமான நாடாகத்தான் இருக்கிறது கொலை கொள்ளை தலித்துகளை வண்புணர்கிறார்கள், இதற்காக நாங்கள் வருந்துகிறோம்.

தனிமனித தவறை ஏன் நாட்டின் பிரச்சனை என்று தண்டோராப் போடுகிறீர்கள் இதையெல்லாம் உங்க மதத்தவர் பெரும்பான்மையினராக இருக்கும் நாட்டிலும் தானே செய்கிறார்கள், 

தப்பு தப்பு தப்பு இதெல்லாம் எங்கள் மத மார்க்கத்தில் இல்லை அதை நீங்கள் தனிமனித செயலாகத் தான் பார்கனும், நாங்க அப்படித்தான் பார்த்து கண்டனக் கடமையைப் பதிய வைக்கிறோம். இதப் பாருங்க எங்க மதப் புத்தகத்தின் எட்டாவது பகுதி 84 ஆவது வசனம் "அப்பாவிகள் மீது (அ)நியாயம் செய்யாதீர்கள்" 8:84 மேலும்

எங்க மதத்தில் அடக்க தலங்களை வழிபடத் தடையுள்ளது, அவ்வாறு வழிபடுபவர்களை நாங்கள் தூற்றுவோம், முடிந்தால் அந்த அடக்கத் தளங்களை அகற்றவும் நாங்கள் ஆதரவு அளிப்போம், ஆனால் அதை மாற்று மதத்தினர் செய்துவிட்டால் எங்களை அவமதித்துவிட்டார்கள் என்று ஓலமிடுவோம். உங்க மதத்தில் தானே பெண்குழந்தையைக் கொல்கிறார்கள், 

உங்க ஆளுங்களும் தான் அதைச் செய்கிறார்களே, 

இல்லை இல்லை அது தனிமனித தவறு அவ்வாறு செய்பவர்களை எங்கள் மதம் வன்மையாக கண்டிக்கிறது, 

அட முட்டாப் பயலே எந்த மதம் தான் பெண் குழந்தையைக் கொல்லலாம் என்று அனுமதிக்கிறது ? இதுவும் தனிமனித செயல் தானே இதை மட்டும் ஏன் மதவாதம், நாட்டு நடப்பு என்றெல்லாம் வகைப்படுத்துகிறாய் ? 

உங்க மத ஸ்லோகத்தில் தான் இதை அனுமதித்துள்ளது, தாத்தாச்சாரியார் எழுதியுள்ளார் இதோ பார் "தலைச்சன் பெண் குழந்தையைக் கொன்றால் தந்தை தனவான் ஆவான்" 

அட கருமாந்திரம் புடிச்சவனே இந்த எழவெல்லாம் எங்கே இருக்கிறது என்று யாருக்குமே தெரியாது, இதையெல்லாம் எங்கிருந்து எடுத்துவந்து காட்டுகிறாய், இதையெல்லாம் சொல்லி இருக்கிறதே என்று யாரும் பின்பற்றுவதாகவும் தெரியவில்லை, எவனோ பேராசைக் கொண்டவன் அல்லது பெண் குழந்தையை வெறுப்பவன் செய்திருந்தால் அதையெல்லாம் மதச் செயலாகவும் நாடு அனுமதிப்பதாகவும் சொல்லும் நாசமாப் போனவனே, நாங்களெல்லாம் பழமை வாதத்தைப் புறக்கணிக்கக் கூடாது, எங்களுக்கு எங்கோ என்றோ ஒரு அரைக்கிறுக்கன் எழுதிவைத்ததை அடிபிறழாமல் பின்பற்றுவது தான் எங்களுக்கான வழிமுறை என்று சொல்ல வருகிறாயா ?

ஆமாம் ஆமாம், நாங்கள் எங்க மதத்தைப் அடிபிறழாமல் பின்பற்றுகிறோம் நீங்களும் அவ்வாறு பின்பற்றவேண்டும், அது தான் உங்க மதம், அதனால் தான் நீங்கள் தவறு செய்கிறீர்கள்,  எங்கள் மதத்தில் இவ்வாறான செயல்கள் அனுமதிக்கப்படவும் இல்லை, தவிர தவறு செய்தவர்களை நாங்கள் வன்மையாகவும் கண்டிக்கிறோம், திருந்த வாய்ப்புக் கொடுக்க வேண்டுமென்றும் மத எண்ணிக்கைக்காகவும் அவர்களை மதத்தில் இருந்து விலக்காமல் வைத்திருக்கிறோம்

அதுக்குள்ள ஒருவர் ஓடிவந்து கண்டனம் தெரிவிப்பவரின் கருத்தை ஆராய்ந்ந்து நீங்களும் கண்டனம் தெரியுங்கள் கயவர்களே, கண்டனம் தெரிவித்தவரின் மதத்தைப் பார்க்காதீர்கள் என்று முட்டுக் கொடுப்பார்.

தான் சார்ந்த மதத்தை சேர்ந்தவர்கள் செய்யும் வன்முறைகள் தனிமனிதத் தொடர்பானது என்றும் மாற்று மதத்தினர் செய்யும் தவறுகள் அந்த மதத்தின் தவறு நாட்டின் தவறு என்றும் பிரகடனப்படுத்தப்படுகிறது.

ஆனால் இவர்களைப் போல் அந்தந்த மதத்தினர் மதவாதிகளாகவே நடந்து கொண்டால் இவர்களின் மதப் பிரச்சாரம் எடுபடாது அங்காங்கே வன்முறைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்பதை இவர்கள் அறியாதவர்களா ?

"இந்த இடத்தில் குண்டு வைத்தவர் எங்கள் அமைப்பினர்"  என்று காவலர்களுக்கு துப்பு துலக்க வேலையே வைக்காமல் பொறுப்பேற்றுக் கொள்ளும் முஜாஹுதின் அமைப்பினர் எவ்வளவோ பரவாயில்லை, அவர்கள் சப்பைக் கட்டுவதில்லை.

எந்த மதவெறிகளும் அடங்கும் முன்பு ஓலம் பெரிதாக இருக்கும், ஒருவேளை மதவெறிகள் அடங்கப் போவதன் அறிகுறியோ இவை.

உலகில் உள்ள மதப் புத்தகங்களை அனைத்தையும் எரித்துவிட்டால், மதப் புத்தகத்தை வைத்து கலவரங்களும் நடக்காது, அதை வைத்து பிறரைக் கொல்லுவதும், குறை சொல்வதும் நடைபெறாது

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்