80 வயது வரையிலும் வாழ்க்கை என்ற கணக்கில் 40 வயது என்பது நடுத்தர வயது என்கிறார்கள், கிட்டதட்ட பாதி கிணறு தாண்டிய நிலை, உடல் உழைப்பின்றிய இன்றைய கால கட்டத்தில் இந்த வயதில் நோய்கள் எட்டிப் பிடிப்பது இயல்பு. நாம் சாப்பிடும் உணவு வகைகளும், அதன் முறைகளும், மன அழுத்தங்களும் சேர நாற்பது வயதில் நோய் தாக்கம் என்பவை வெகு இயல்பாகவே நடைபெறுகிறது. நமக்கு என்ன தேவை என்பதை விட மற்றவர்களைப் பார்த்து நாமும் அது போல் நிறைய வீடு வாசல் நிலம் என்ற வசதியான வாழ்க்கையை வாழவேண்டும் என்கிற அழுத்தம் நமக்கு நாமே கொடுத்துக் கொள்பவை, அதில் எதுவும் இயலாமல் போனால் சோர்வும் சேர இரத்த அழுத்தம், நரம்பு தளர்ச்சி என்று நம்மை நாற்பது வயதில் இறுக்கிப் பிடிப்பவை ஏராளம்.
பொதுவாகவே இந்தியர்களுக்கு நீரிழிவு குறைபாடு உலகிலேயே மிகுதி, 35 வயதாகிவிட்டாலே ஆண்டுக்கு ஒருமுறையேனும் யாரும் சொல்லாமல் நாமே நம் உடலின் சர்கரை அளவை, கொழுப்பு அளவுகளை சரி பார்த்துக் கொள்ள வேண்டும், நல்லா தானே இருக்கிறோம், என்று நினைப்பதைவிட 'எனக்கு எந்த நோயும் அண்டாது' என்று நம்புவோர் நம்மில் பலர். உடலை உயரத்திற்கேற்ற சரியான எடையுடன் (BMI) வைத்திருப்பவர்களைவிட முகம் உருண்டையாகவும், சற்று பூசின மாதிரி இருப்பவர்களே ஆரோக்கியமானவர்கள் என்றும் பலர் நம்புகிறார்கள், அதனால் தான் நம்மவர்கள் உடல் இளைத்தால் சொத்தே பரிபோனது போல உணருகிறார்கள். எலும்பு துருத்தாத அளவுக்கு உடலில் சதைகள் இருந்தால் போதும் அவை தான் நல்ல ஆரோக்கியமான உடலின் அடையாளம் என்று நம்மால் நினைக்கவே முடியவில்லை. குண்டாக இருப்பவர்களைப் பார்த்து கிண்டல் அடித்து தம்மால் அவ்வாறு ஆக முடியவில்லை என்று ஏங்குபவர்கள் பலர், குண்டான உடலே ஆரோக்கியமானது, சூதுவாதற்றது என்று அப்பாவியாக பலர் நம்புகிறார்கள். உடல் நலம் என்பது உடல் கூடுதல் எடையுடன் இருப்பது தான் என்பதாக நம்மவர்களின் எண்ணங்களில் ஆழமாக பதிந்துள்ளது. ஒருவர் 120 கிலோ எடை இருந்தாலும் கொஞ்ச நாளில் 100 கிலோக்கு குறைந்திருந்தால் என்ன துரும்பா இளைத்துவிட்டீர்கள் என்று ஒரு அம்மாவைப் போல் கவலையாக கேட்பவர்கள் உண்டு.
குண்டான உடல் ஒல்லியான உடல் இவையெல்லாம் உணவு முறைகள் மற்றும் பரம்பரைத் தன்மையால் கிடைப்பவை. பரம்பரைத் தன்மையால் பலருக்கு விரும்பாமலேயே அவர்களது உடல் அமைப்பு மாறிவிடுகிறது. நொறுக்கு தீணி, கொழுப்புகள் மிகுதியான அசைவ உணவு, ஐஸ்க்ரீம். நெய் மற்றும் தேவைக்கு அதிகமான தூக்கம் இவை அனைத்தையும் முயற்சித்தால் யார் வேண்டுமானாலும் சதை பற்றுடன் உடலை மாற்றிக் கொள்ள முடியும். எனவே ஒருவர் சூதுவாது உள்ளவரா இல்லையா என்பதையெல்லாம் உடலின் எடையை வைத்து எடை போட முடியாது.
***********
தேன்கூடு சாகரன், சிந்தாநதி, ஈழநாதன் மற்றும் பட்டாபட்டி ஆகியவர்களின் மரணம் என்னை வெகுவாகவே பாதித்தது, இவர்கள் அனைவரும் 35 - 45 வயதிற்குள் உள்ளவர்கள், குடும்பம் குழந்தைகள் உள்ளவர்கள், ஈழநாதனின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்ற விவரம் தெரியவில்லை, ஆனால் மற்ற மூவரும் மாரடைப்பால் மரணித்திருக்கிறார்கள், ஆண்டுக் கொருமுறையேனும் இவர்கள் தங்களது இரத்தத்தின் கொழுப்பு அளவுகளை சரிபார்த்து முறையாக சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தால் மரணம் இவர்களை நெருங்கி இருக்காது என்றே நினைக்கிறேன். உடல் நிலையில் அக்கறை கொள்ளாது அலட்சியாமாக இருந்தார்களோ, அல்லது அதற்கெல்லாம் நேரம் இல்லாது தள்ளிப் போட்டுக் கொண்டு வந்தார்களோ, அல்லது நமக்கெல்லாம் நோய் அண்டாது என்று நம்பினார்களோ தெரியவில்லை, இவர்களின் எழுத்துகளைவிட அவர்கள் விட்டுச் சென்ற பாடம் நாம் நம் உடலில் அக்கறை கொள்ளவது மிக அவசியம் என்பதே.
************
மனைவியர் வேலைக்கு செல்பவர்கள் என்றால் கணவனின் திடீர் மறைவிக்கு பின் ஓரளவு சமாளித்து குழந்தைகள் வளர்த்தெடுக்க முடியும், சற்று முற்போக்கானவர்கள் என்றால் உறவினர் நண்பர்கள் ஒத்துழைப்புடன் மறுமணம் கூட செய்து கொள்ள முடியும், வீட்டு வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு, குழந்தைகளை கவனித்துக் கொள்ளவர்களாகவும், வெளி உலகமே தெரியாதவர்களாகவும் இருந்துவிட்டால் அவர்களுக்கு ஏற்படும் துன்பங்கள் இறப்பை விட கொடுமையானது. மனைவியை வேலைக்கு அனுப்ப விரும்பமில்லாதவர்கள், திடிரென்று ஒரு நாளுக்கு பிறகு தான் இல்லை என்றால் தன் குடும்பம் கரையேறுமா ? என்பதை நினைத்துப் பார்த்து பின்னர் சூழல்களை சமாளிக்கும் பக்குவத்தையாவது மனைவியருக்கு பழக்கிவிடுங்கள், வீட்டுக்குள்ளேயே இருப்பதும் வெளியுலகம் தெரியாமல் இருப்பது பெண்களுக்கு பெரும் ஆபத்து தான்.
ஆணுக்கு 50 வயதுவரையிலும் கூட மனைவி மறைந்தால் மறுமண வாய்ப்பு அவனது பொருளாதார வசதியைப் பொருத்தது. ஆனால் 35 வயது கைம் பெண்ணுக்கு திருமணம் செய்ய யாராவது முயற்சிப்பதே புரட்சி என்று சொல்லும் நிலை தான் உள்ளது. நான் ஒருவேளை மறைந்துவிட்டால் நீ மறுமணம் செய்து கொள் என்று பேச்சோடு பேச்சாக தனது ஒப்புதலை முன்பே சொல்லி வைக்கும் ஆண்கள் அரிது.
*********
நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு ஆகும் செலவுகளை விட நோய் இருக்கிறதா என்று முன்பே சோதனை செய்து கொண்டு தடுப்பதற்கான செலவுகள் குறைவே.
12 கருத்துகள்:
மன ஆரோக்கியம் முதலில் வேண்டும்... தனக்கென வாழ்வது சில வருடங்கள் இருக்கலாம்... பிறர்க்கென வாழ்வது - முயற்சிக்க வேண்டும்... இல்லையெனில்_____
/// இவர்களின் எழுத்துகளைவிட அவர்கள் விட்டுச் சென்ற பாடம் நாம் நம் உடலில் அக்கறை கொள்வது மிக அவசியம் என்பதே. ///
உணர வேண்டிய வரிகள்...
மதத்தால் மதம் பிடிக்காமல் இருந்தாலே நல்லது
யோசித்துக் கொண்டிருக்கும் விசயங்களை உங்கள் எழுத்தில் பார்த்த போது ஆச்சரியம்.
எழுத வேண்டியதை
சரியான நேரத்தில் எழுதுவது கூட
மிகச் சரியாக உணர்ந்து செயல்பட உதவும்
பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
அத்தனையும் உண்மை. நம்ம சமுதாயம் இதையெல்லாம் இனியாவது யோசிக்குமான்னு பார்க்கணும்.
நல்ல விழிப்புணர்வு பதிவு.
நன்றி.
இப்போ மாரடைப்பு காரனமேயில்லாம வருது........ ஏன் என்று தெரியலை..........
வயதில் இளையவராக இருந்து, ஒல்லியாகவும் இருப்பவர்களுக்கும்கூட மாரடைப்பு வருவதற்கு ‘மன அழுத்தம்’தான் காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
நான் நடுத்தர உடம்புக்காரன்; இளமையிலிருந்தே ஓரளவு உடற்பயிற்சியும் செய்பவன்.
அதீத கெட்ட கொழுப்பு, சர்க்கரை நோய் என்று எந்தவொரு பாதிப்பும் இருந்ததில்லை. [இப்போதுகூட இல்லை]. ஆனாலும், 56 வயதில், லேசான மாரடைப்பு [miled attack] வந்தது.
’ஆஞ்சியோகிராம்’ பரிசோதனை மூலம், இதய ரத்த நாளங்களில் மூன்று அடைப்புகள் இருப்பது தெரிந்தது.
’பை பாஸ்’ அறுவை செய்து கொண்டேன்.
என் இதயம் பாதிக்கப்பட்டது, முழுக்க முழுக்க மன அழுத்தத்தால்தான்.
கிராமத்தில் பங்காளிகளுடனான தொடர் போராட்டங்கள். சொந்தபந்தங்களுக்குள் எழும் பிரச்சினைகளைத் தீர்க்க, வரையறையின்றி என்னை ஈடுபடுத்திக் கொள்வது. இப்படி.....பல காரணங்கள்.
இப்போது, 80% [அவ்வளவுதான் முடிஞ்சிது!] விழுக்காடு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி, ஓரளவு அமைதியாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன். ஆண்டு தவறாமல் உடம்பைப் பரிசோதிக்கிறேன்.
அளவான உடற்பயிற்சியுடன், மூச்சுப் பயிற்சியும் மேற்கொள்கிறேன்.
என் இதயம் முழுமையாகக் குணமடைந்துவிட்டதாக மருத்துவர் சொல்கிறார்.
பிறருக்குப் பயன்பட வேண்டும் என்பதற்காகவே இப்பின்னூட்டத்தை எழுதினேன்.
இதை எழுதத் தூண்டும் வகையில் பதிவெழுதிய கோவி. கண்ணனுக்கு என் நன்றிகள்.
கவனிக்க வேண்டிய விடயங்களைக் கூறியுள்ளீர்கள்.
சமீபத்திய சம்பவங்கள் யாவும் அத்துடன் பாரிசில் தமிழர் மத்தியில் இளம் வயது மரணத்தில் மிகுதியானது மார்படைப்பே!.பட்டாபட்டி ஒரு அதீத புகைப்பிடிப்பவராகவும் இருந்துள்ளார்.
இளம் சமுதாயம் மது, புகை போன்றவற்றில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.
மருத்துவப் பரிசோதனைகளை கட்டாயம் செய்வதில் கவனம் செலுத்துவது உத்தமம்.
இங்கு வேலைத் தலத்தால் ஆண்டுதோறும் பரிசோதனைக்கு அனுப்புகிறார்கள். குருதிப்பரிசோதனை
எப்போதும் செய்யலாம். அதைக் கூட பல தமிழ் இளைஞர்கள் அக்கறைப்படுத்துவதில்லை.
இளம் வயதில் ஏதும் ஆகாதெனும் அசட்டை.
நண்பர்களே...
நாளை ‘பதிவர் பட்டாபட்டி’ மறைந்து ஏழாம் நாள்.
அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,
நாளை சனிக்கிழமை 18-05-2013 அன்று,
பதிவுலகம், பேஸ்புக் ஆகிய இணைய தளங்களில், பதிவுகள்,ஸ்டேட்டஸ்,கருத்துக்கள்
எதுவும் வெளியிடாமல்...
அன்னாருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என
இணைய நண்பர்கள் தீர்மானித்து உள்ளார்கள்.
அனைவரும் இச்செய்தியை தங்கள் தளங்களில் பகிருமாறு,
இணைய நண்பர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
நல்ல பதிவு.
//தேன்கூடு சாகரன் சிந்தாநதி ஈழநாதன் மற்றும் பட்டாபட்டி ஆகியவர்களின் மரணம் என்னை வெகுவாகவே பாதித்தது//
இவர்களபற்றி தெரியாவிட்டாலும் பட்டாபட்டிக்கு அஞ்சலி என்ற போதும், Jayadev Das ன் ஆரோக்கிய பதிவுகளை படிக்கும் போதும் எச்சரிகை தந்தன. பிரச்சனை என்னென்னா எதுவெல்லாம் சுவையான விருப்பமான உணவோ அவையெல்லாம் ஆரோக்கியத்துக்கு கெடுதல் என்கிற போது தான் ரொம்ப சிரமமானது. அப்பளம் கூட தீமையாமே!!!
@பசிபரமசிவம்,
பயனுள்ள தகவல். 46 வயதிலேயே இதயத்தில்பாதிக்கபட்டவரை எனது நிறுவனத்தில் வேலை பார்பவரை தெரியும். அவருக்கும் சர்க்கரை நோய் இல்லை. ஆனா தொடர் சங்கிலி சிகெரட் பிடிப்பவர்.
திடீர் மரணங்கள் அச்சத்தை உண்டாக்குவது இயல்புதான். என்றாலும் நீங்கள் சொல்வது போல அவ்வப்போது மருத்துவப் பரிசோதனைகள் செய்து கொள்ள இதைக் கண்டாவது நடுத்தர வயதினர் முன் வர வேண்டும்.
கருத்துரையிடுக