பின்பற்றுபவர்கள்

6 ஜனவரி, 2013

ஆண்கள் குற்றவாளிகளா ? சந்தர்பவாதிகளா ?


இந்தியாவில் இதுவரை பாலியல் வன்கொடுமைகள் எதுவும் நடக்காதது போலவும் இதுவே முதன் முறையாக நடந்தது போலவும் இவை இனி கிள்ளி எரியப்பட வேண்டும் என்று ஒட்டு மொத்த இந்தியர்களும் அதே பேச்சாக போராட்டமாக தலைநகர் டெல்லியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை குறித்துப் பேசுகிறார்கள், கொதிக்கிறார்கள், ஓடும் ரயில்களில் பெண்களை மானபங்கம் செய்வது தொடர்ந்து நடைபெற்றே வருகிறது, அவைகளை அன்றாடச் செய்திகள் ஆகிவிடுவதைத் தவிர அவைகளை தடுத்து நிறுத்த அரசுகள் எந்த முயற்சி எடுத்தன ? டெல்லி நிகழ்வுக்கு மட்டும் ஏன் இவ்வளவு பரபரப்பு ? காரணம் தலைநகரில் நடந்தது என்பது தவிர்த்து வேறு என்ன ? ஆளும் கட்சிக்கு இது மானப் பிரச்சனை தலைநகரிலேயே இவ்வாறு நடந்துவிட்டதே ? தலைகுனிவு என்று தூற்றக் கூடும் என்ற அச்சம, எதிர்கட்சிகளுக்கு தலைநகரில் இவ்வாறு நடந்ததால் ஆளும் கட்சி சட்டம் ஒழுங்கை காக்கவில்லை என்கிற குற்றச் சாட்டைப் பெரிதாக்க முடியும், என்பது தவிர்த்து பாதிக்கப்பட்டவர் குறித்த உண்மையான அக்கரையில் அவர்கள் செயல்படுகிறார்களா ? என்பது அவர்களுக்கே வெளிச்சம் என்று நாம் கூற முடியும் காரணம், பாஜாக உள்ளிட்டவர்களின் கருத்து பாலியல் வன்கொடுமைகளுக்கு காரணமாக பெண்களின் உடை குறித்த கருத்து விமர்சனங்கள் வெளி இடப்படுகின்றன, கொடுஞ்செயல் புரிந்த குற்றவாளிகள் தண்டனைக்குறியவர்கள், என்ன விதமான தண்டனை என்பதை பாதிக்கப்பட்டரின் குடும்பத்தாரும் குற்றவியல் சட்ட சாசனங்களும் முடிவு செய்யட்டும் என்பது தவிர்த்து எனக்கு மாற்றுக் கருத்து இல்லை, குற்றவாளிகளில் ஒருவர் 18 வயதிற்கும் குறைந்தவன் என்பதால் அவனை முழுமையாக தண்டிக்கும் விதத்தில் சட்ட வரையறைகளில் சிறுவர் குற்ற வயதைக் 16 ஆகக் குறைக்க சட்டவல்லுனர்கள் மற்றும் ஆலோசனைக் குழு ஒட்டுமொத்தமாக முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

பருவ வயது என்பது பருவமடைந்த வயதல்ல, மனப் பக்குவம் அடையும் வயது என்ற அடிப்படையில் தான் 18 வயதுக்கு குறைந்தவர்களை சிறுவர் சிறுமியர் என்ற வரையறையில் வைத்து அவர்களில் குற்றவாளிகளை சிறுவர் தண்டனைச் சட்டங்களில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளில் அடைக்கிறார்கள், இந்த வரையறையை 16 ஆகக் குறைப்பதன் மூலம் முன்தேதியிட்ட சட்டத்திருத்தம் என்று அடிப்படையில் அந்த குற்றவாளியை தண்டிக்க சட்டத்தில் இடமிருக்கிறதா என்று தெரியவில்லை, ஆனால் 16 வயது என்கிற வரையறையைக் கொண்டு வருவதன் மூலம் திருமணச் சட்டத்தில் பெண்ணுக்கு 18 என்றும் ஆணுக்கு 21 என்றும் இருப்பதை இவர்கள் குறைப்பார்களா என்று தெரியவில்லை, ஏற்கனவே சிறுமிகளையும் இளம் வயது திருமணங்களையும் ஆதரிக்கக் துடிக்கும் மதவாத அமைப்புகளுக்கு இத்தகைய சட்டங்கள் ஆதரவாகிவிடும் நிலை ஏற்பட்டுவிடலாம், இன்றைய திருமணங்கள் பொருளாதார தன்னிறைவு என்கிற அடிப்படையில் தான் ஆண் பெண் இருவரும் திருமணத்திற்கு தயாராகும் நிலை, ஆனால் இத்தகைய சட்ட வகைகள் திருமணம் என்பது பருவயதினால் முடிவு செய்யக் கூடியவை என்ற நிலைக்கு வரும் பொழுது, இளம் வயது திருமணங்கள் இன்றைய பொருளாதார போராட்டத்தில் தாக்குப் பிடிக்க முடியாமல் சிதைவுறும் வாய்ப்பு அதிகமாகும், போதிய பொருளாதாரமின்றிய திருமணங்கள் நிலைக்கமல் போகவும் கள்ள உறவுகள், மனமுறிவுகள் பெருகவும் வாய்பளிக்குமே அன்றி பெரிதாக சமூகத்திற்கு பலன் அளிக்காது. தவிர 18 வயதிற்கு குறைந்தோர் தற்பொழுது வேலை செய்யத் தடையும் உள்ளது, ஏற்கனவே 18 வயதிற்குட்பட்டோரை 19 வயதானவர் என்று வேலைக்கு வைத்துக் கொள்ளும் 5 மாடி ஜவுளி ஸ்டோர்கள் இனி 12 வயதான சிறுவனைக் கூட 16 வயது நிரம்பியவன் என்று சொல்லி வேலை வாங்கக் கூடும்.

நொண்டிக் குதிரைக்கு சறுக்கியது சாக்கு என்பது போல் மதவாதங்களில் காலம் காலமாக பெண் உடையை சமூகத்தை பாதுகாக்கும் போர்வையாக அறிவிக்கும் மதவாதிகள் கருத்து கூறுகிறார்கள், பெண் என்பவளுக்கும் போஸ்ட் மார்டம் செய்யப் பட்ட பிணத்திற்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை என்றால் ஆண்கள் தவறு செய்ய மாட்டார்கள் என்பது போல் பெண் உடல் வெள்ளை அல்லது வேறு நிறத்  துணியால் முழுக்கப்  போர்த்தப்பட்டு முகம் மட்டும் திறந்திருந்தால் போதும் என்கிறார்கள், 21 ஆம் நூற்றாண்டில் தான் நாம் வாழ்கிறோமா ? என்பதை நாமே கேட்டுக் கொள்ள வைக்கும் இது போன்றக் கருத்துகளால் ஆணுக்கும் பெண்ணுக்குமான இடைவெளிகள் அதிகமாகி பெண் என்பவள் போகப் பெருள் என்பதை அழுதமாக பதியவைக்குமேயன்றி, ஆணும் பெண்ணும் மனிதப் பிறவிகளே என்பதை புரிந்து கொண்டு எதிர்பாலினரை மதிக்கும் போக்கு இல்லாமல் உருவாகாமல் போகும். மாற்றுப் பாலினம் என்பது தவிர்த்து ஆண் பெண்ணிற்கு பெரிய வேறுபாடுகள் இல்லை என்பதாக வளர்க்கப்படும் நாடுகளில் பெண்களின் உடையைக் குறித்து ஆண்கள் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை, உடை என்பது அவரவர் சுதந்திரம் என்பதாகத்தான் நினைக்கிறார்கள், இங்கு சிங்கப்பூரில் பிறந்தது முதல் அரைகால் சட்டையும் ஒரு பணியனும் அணிந்து வேலைக்குப் போகும் தன் அம்மாவைப் பார்த்து வளரும் ஒரு சீன ஆண் பருவ வயதில் அதே போன்ற உடை அணியும் இளம் பெண்களைப் பார்த்து உணர்ச்சி வசப்படுவதில்லை. 

ஒருவரை கைக்குலுக்கவோ, தொட்டுப் பேசவோ குறைந்தப் பட்சம் ஒருமுறையாவது அவரிடம் பழகி இருக்க வேண்டும், இல்லை என்றால் ஒருவர் உடல் மற்றவர் மீது படுவது கூட அருவெறுப்பானது தான், கைகுலுக்குவதற்கே தெரிந்தவராக அல்லது தொடர்பில் வருபவராக இருக்க வேண்டும்  என்ற நிலையில் எந்த ஒரு சம்பந்தமும் இல்லாதவரை உரசுவதும் உடலைத் தீண்டுவதும் பாலியல் ரீதியான வன்முறைகள் தான், பாலியல் தொழிலாளியாக இருந்தாலும் அவளே விரும்பி அனுமதித்தால் அவளைத் தொட முடியும் அதையும் மீறி தொட்டால் அது பாலியல் வன்முறைதான், இதில் உடைகளை எங்கு கொண்டு வந்து இந்த மதவாதிகள் நுழைக்கிறார்கள் என்றே தெரியவில்லை,  மதவாதிகளும் சமூகவாதிகளும் ஆணுக்கும் பெண்ணுக்கும் உடல் தவிர்த்து பெரிய வேறுபாடுகள் இல்லை என்பதையும் ஆணும் பெண்ணும் சமாமானவர்களே என்பதையும் புரிய வைத்தாலே எந்த ஒருவரையும் யாரும் தொடுவது கூட தவறு என்று நினைப்பார்கள், அது தவிர்த்து இந்த மதவாதிகளில் கருத்து அரைகுறையாக ஆடை அணிபவர்களை ஒருவன் தாம் தண்டனைக்குப் பயப்படாமல் இருந்தால் தொடலாம் வன்முறை செய்யலாம் என்று சொல்லும் அனுமதியாக இருக்கிறது அவர்களது கருத்துகள்.

சமூக ஒழுக்க்கத்தில் பெண் உடையே முக்கிய அங்கம் என்று சொல்ல முயலும் மதவாதிகள் அனைவரும் ஆண்கள் அனைவரும் சந்தர்ப்பவாதிகள் தான் பெண்கள் தான் தம்மை காத்துக் கொள்ள வேண்டும் என்கிற கருத்தை முன்வைக்கிறார்கள், உணர்ச்சி வசப்படும் சமூகம் ஒருவர் அல்லது ஒரு குழு தவறாக நடந்து கொண்டால் ஒட்டு மொத்த ஆண்களும் குற்றவாளிகள் என்பது போல் நினைக்கிறார்கள். "Teach your son not to rape Women" இந்த வாசகத்தை தந்தை தாய் இருவரும் படித்திருக்கக் கூடும், இந்த வாசகம் தந்தையை நோக்கி சொல்லப்பட்டதா ? தாயை நோக்கிச் சொல்லப்பட்டதா ? தந்தைகளை நோக்கிச் சொன்னால் ஒட்டு மொத்த ஆண் சமூகத்தையும் குற்றவாளி ஆக்கிப் பார்ப்பதாகவும், தாயை நோக்கிச் சொல்லி இருந்தால் ? எந்த ஒரு தாயும் தன் மகனிடம்  உன் விருப்படி நீ ஒரு பெண்ணைக் கெடுக்கலாம் என்று பாடம் நடத்துவதும் இல்லை. என்னைக் கேட்டால் "Dear Religious Leaders Teach your followers not to rape women" என்று சொல்லி இருந்தால்  பெண் உடைபற்றி பேசும் முன் மதவாதி யோசிப்பான்.

இஸ்லாமியவாதிகளா இருந்தாலும் இந்துமதவாதிகளா இருந்தாலும் பெண் உடை என்ற ஒற்றைப் புள்ளியில் இணைந்து கொள்கிறார்கள். மதுரை ஆதீனம் சொன்னதில் தவறென்ன ? என்கிற பதிவை நீங்கள் படித்திருக்கக் கூடும். 21  ஆம் நூற்றாண்டில் தான் பெண் தெய்வ சிலைகள் ஜாக்கெட் அணிந்து காணப்படுகின்றன, அதற்கும் முன் கோவில் சிலைகள் பெண் உருவங்கள் திறந்த மார்பில் தான் இருக்கும் இந்த பாரம்பரியத்தில் வந்த இந்து மதவாதிகளும் பெண் உடைதான் ஆண் சமூகத்தின் தவறுக்கு ஊற்றுக் கண் என்று பேச முன்வருவதில் இருந்தே அவர்கள் பெண்களை அடங்கிப் போக வேண்டியவர்கள் என்கிற பிற்போக்கு மற்றும் அடைப்படை மதவாதக் கருத்துகளைக் கொண்டு இருக்கிறார்கள் என்பது வெள்ளிடை மலை.

********

பாதிப்பட்ட பெண் குறித்து பெண் பிள்ளையைப் பெற்றவன் என்ற முறையில் மிகவும் வருந்துகிறேன், குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன், 

"ஓடும் ரயில் பெண்" என்று கூகுளிட்டு தேடிப்பாருங்கள்... இவ்வளவு நாட்கள் அரசியல்வாதிகள், பத்திரிக்கைகாரர்கள் தூங்கிக் கொண்டு இருந்தார்களா ? என்று கேட்டுக் கொள்வீர்கள். ஏதோ தனியார் பேருந்து போட்டுனர்களும், ரவுடிகளும் தான் அவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பது இல்லை.


12 கருத்துகள்:

ஜோ/Joe சொன்னது…

+1

சார்வாகன் சொன்னது…

வணக்கம் நண்பரே,
நல்ல பதிவு.

குற்றவாளி 18 வயதுக்கு குறைந்தவன் என்றால் குழந்தையாக கருதப் படுவது குறித்து மாற்றுக் கருத்து உண்டு.இப்போதைய குழந்தைகள் உடல்,மனம் சீக்கிரம் முதிர்ச்சி அடைகிறார்கள் என்வே கருதலாம்.
ஆசிரியைக் கொன்ற சென்னை மாணவன் ஜாமீனில் ஜாலியாக பிரியாணி சாப்பிட்டு மகிழ்கிறான்.
http://narenpaarvai.blogspot.com/2012/06/blog-post.html
ஆகவே இப்படி குற்றவாளிகள் மீது சில சட்டரீதியாக திருத்தம் தேவை!.
**டெல்லி பாலியல் குற்றவாளிகளுக்கு கொலையின் அடிப்படையில் தூக்கு தண்டனை விதிக்கப்படும் சத்தியம் அதிகம்.
18வயதுக்கு அருகே உள்ளவனை என்ன செய்வார்கள் என்பதே எதிர்நோக்க வேண்டி உள்ளது.

**
மதவாதிகள் பெண்களின் ஆடை பற்றி கூச்சல் போடுவது வழக்கம்தானே!!.
காமெடிப் பீசுகள்!!
நன்றி!

கவியாழி சொன்னது…

இது மனிதனின் மனம் சார்த்து .அரசாங்கம்தான் இதுபோன்ற தவறுகள் இனி நிகழா வண்ணம் சரியான தண்டனையும் சட்ட திருத்தமும் செய்ய வேண்டும் .

நிகழ்காலத்தில்... சொன்னது…


சமூக ஒழுக்க்கத்தில் பெண் உடையே முக்கிய அங்கம் என்று சொல்ல முயலும் மதவாதிகள் அனைவரும் ஆண்கள் அனைவரும் சந்தர்ப்பவாதிகள் தான் பெண்கள் தான் தம்மை காத்துக் கொள்ள வேண்டும் என்கிற கருத்தை முன்வைக்கிறார்கள்,//

இதில் ஒன்றும் தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இந்திய சமூக அமைப்பு அப்படி..

பாலியல் வன்முறைக்கு ஆளானால் அதை ஒரு விபத்தாக நம் சமூகம் ஏற்றுக்கொண்டு கடந்து போகாது. அத்தகைய சூழ்நிலையில் உடை ஓரளவிற்கேனும் பாதுகாக்கும்.

அஞ்சா சிங்கம் சொன்னது…

நிகழ்காலத்தில் சிவா சொன்னது…
//இதில் ஒன்றும் தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இந்திய சமூக அமைப்பு அப்படி..

பாலியல் வன்முறைக்கு ஆளானால் அதை ஒரு விபத்தாக நம் சமூகம் ஏற்றுக்கொண்டு கடந்து போகாது. அத்தகைய சூழ்நிலையில் உடை ஓரளவிற்கேனும் பாதுகாக்கும்.///


ஹி ஹி நீங்கள் பெயரை மாற்றி கொள்ளலாம் பழையகாலத்தில் சிவா என்று ..............

கோவி.கண்ணன் சொன்னது…

//இதில் ஒன்றும் தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இந்திய சமூக அமைப்பு அப்படி..//

அதுசரி, இந்தியப் பெண்கள் உடுத்தும் புடவைக் கூட கவர்சியானதே, எப்ப விலகும் என்றே தெரியாது, நாங்க பார்த்து உணர்ச்சிவசப்படுவோம் என்று ஒரு மதவாத கும்பல் சொல்லித்தான் வருகிறது, அதற்காக பெண்களை புடவைக்கட்டக் கூடாது என்று சொல்ல வருவீர்களா ?

iTTiAM சொன்னது…

திருமிகு. அஞ்சா சிங்கம்,

உலகம் வெறும் கருப்பு வெள்ளை அல்ல, 0,1 அல்ல. இந்த அடிப்படையில் பார்த்து நடைமுறைக்கு ஒத்து வரக்கூடிய ஒரு சாத்தியத்தினை யோசியுங்கள்.
உடோபிய (utopia) உலகம் இலட்சியமாக இருக்கலாம்.
சரி, இப்படி பாருங்களேன் தங்களுடைய வீட்டினை திறந்து போட்டு விட்டு வெளியூர் பயணம் செல்வேன் ஆனால் பொருள் திருடு போகக்கூடாது என்பது ஒரு சிறந்த சமூக அமைப்பின் மாதிரி, நல்ல நோக்கம். ஆனால் நடைமுறை??

இது 100% மன நிலை எனவோ / உணர்ச்சிவசம் எனவோ எடுத்துக்கொள்ள முடியாத ஒரு சிக்கலான பிரச்சினை.

பச்சையாக சொன்னால், உடன் பிறந்தவர்களையே ஒரு எல்லை வகுத்து கட்டுப்பாட்டுடன் இருக்க வைக்க வேண்டும் என பெற்றோர் கவனம் கொள்ள அறிவுறுத்தும் நிலை தான்.
இல்லை என மறுத்தால் ஒன்றும் சொல்வதற்கில்லை.
இல்லை அதுவும் கூட தவறு இல்லை மனமொப்பினால் என கூறி அதற்கு பக்க பலமாக இருக்கக்கூடிய சரித்திர நிகழ்வுகள், பண்பாடுகளை சுட்டலாம்.

புரிதல் எதிரெதிர் நிலைகளில் / எல்லைகளில் இல்லை.

பெயரில்லா சொன்னது…

//சரி, இப்படி பாருங்களேன் தங்களுடைய வீட்டினை திறந்து போட்டு விட்டு வெளியூர் பயணம் செல்வேன் ஆனால் பொருள் திருடு போகக்கூடாது என்பது ஒரு சிறந்த சமூக அமைப்பின் மாதிரி, நல்ல நோக்கம். ஆனால் நடைமுறை??//

நாம் வீட்டை ஒரு சிறிய பூட்டை வைத்துதான் பூட்டுகிறோம். அதாவது கதவு ஜன்னலைதான் பூட்டுகிறோம்.

ஒருவரும் வீடு முழுவதையும் தெரியாதவாறு மூடுவதில்லை(பூட்டுவதில்லை), நீங்கள் சொன்ன நடைமுறையில்.

வேகநரி சொன்னது…

21 ஆம் நூற்றாண்டில் தான் நாம் வாழ்கிறோமா எனறு சந்தேகம் இந்தியாவில் மதவாதிகளும் பிற்போக்குவாதிகளும் பெண்களை எப்படியாவது அடக்கி ஒடுக்குவது என்று வெறிபிடித்து திரிவதை பார்த்தால் தோன்றுகிறது. பாலியல் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க சட்ட திருத்தம் செய்ய வேண்டும் . அதோடு பாலியல் குற்றங்களில் சம்பந்தபட்டவர்கள்,பெண்களை துணியால் மூடிவைக்க வேண்டும் என்று கருத்து தெரிவிப்பவர்கள் பாராளுமன்றமே, சட்டமன்றமோ செல்ல முடியாதபடி சட்டம் கொண்டுவரபட வேண்டும்.

சகோ Alien A,
//ஒருவரும் வீடு முழுவதையும் தெரியாதவாறு மூடுவதில்லை//
சரியா சென்னிங்க. இப்போ பெண்களை கறுப்பு துணியால முழுக்க மூடி வைக்கபடவேண்டிய ஒரு நுகர்வு பொருளாகவே பார்க்கிறார்கள்.

மதுரை ஆதீனம் மதவாதி பெண்களை பர்தா அணியும்படி அயோக்கியதனமான கருத்தை வெளியிட்டார். அதற்கெதிராக பெண்கள் போராடினார்கள். அந்த செய்தியை வெளிநாட்டில் இருந்து தமிழர்களால் நடத்தபடும் இணைய தளம் "ஆபாச உடை அணிந்து திரியும் பெண்கள் மதுரை ஆதீனத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்" என்று செய்தி வெளியிட்டு தனது வெறியை தீர்த்து கொண்டது. ஆணாதிக்க வெறி தமிழர்களிடையே எவ்வளவு துரம் ஊடுருவியுள்ளதை அறிந்து கொள்ளலாம்.
http://www.thinakkathir.com/?p=46223

அஞ்சா சிங்கம் சொன்னது…

திருமிகு.iTTiAM.
நீங்கள் திருடனுக்கு வக்காலத்து வாங்குவது போல் தெரிகிறதே .
கழுத்தில் நகை தொங்கினால் அறுப்பேன் என்று திருடன் எதிர்வாதம் புரிந்தால் அதில் நியாயம் இருப்பதாக நீங்கள் கருதுவீர்களா?
மக்கள் பொருள் சேர்ப்பதால் தான் கொள்ளை நடக்கிறது . அதனால் மக்கள் பொருள் நகைகளை சேமித்து வைத்திருக்க கூடாது என்று ஒரு அரசாங்கம் சொன்னால்
ஆஹா பேஷ் என்று வரவேற்ப்பீர்களா .?
மீண்டும் மீண்டும் பெண்களை ஒரு உயிரற்ற பொருள் அல்லது சொத்துடமை போல் கருதுவது கயமை தனமாக உங்களுக்கு பட வில்லையா.?

iTTiAM சொன்னது…

திருமிகு. அஞ்சா சிங்கம்,

முதலில் ஒன்றை தெளிவாக கூறி விடுகிறேன் : பெண்களை ஒரு உயிரற்ற பொருள் அல்லது சொத்துடமை போல் கருதவில்லை. யாரும் அவ்வாறு கருத வேண்டும் என்றும் எண்ணவில்லை. இரண்டு : திருடனுக்கு வக்காலத்து வாங்கவில்லை!

கவனித்தீர்களேயானால் எனது முந்தைய கருத்துரையில் ஒரு எளிதாக தொடர்பு படுத்தி புரிந்துகொள்ளும் முயற்சியாக மட்டுமே அந்த உதாரணம்.
தவறாக எண்ணவேண்டாம் : தங்கள் பெயர் அஞ்சா சிங்கம் என வைத்துள்ளீர்கள் இதனில் சிங்கம் என்பது உணர்த்தும் கருத்து எப்படி புரிந்துகொள்ளப்படுமோ, அவ்வாறே அந்த உதாரணத்தை பாருங்கள்.

ஆணின் மனநிலை என ஒன்று உள்ளது என்பதும், இயல்பாக அது பெண்ணருகாமையில் கிளர்ச்சி அடைகிறது என்றும். இதனில் எல்லைமீறும், தன் நிலை வசமில்லா/ வசமிழக்கும் ஆணின் "பலவீனம்" என்றே நான் கூறுகிறேன். இதனில் ஆண் எல்லை மீறும், (இயல்பாக உள்ள உடல் வலிவால்) சாத்தியக்கூறுகள் அதிகமிருப்பது என்று கூறுகிறேன். அந்த எல்லை மீறல் ஒரு நிலை எனில் அதன் அடுத்த அதற்கு தூண்டுதல் முதல் படி நிலையில் ஒரு காரணி.
இந்த உண்மை ஆணின் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு விஷயம் என்பது ஒரு நடைமுறை யதார்த்தம் என்கிறேன். இன்னமும் இந்த விஷயங்கள் முழுமையாக மனிதனில் விலங்கு உணர்ச்சி தூண்டல் நிலைகளிலிருந்து / அனிச்சை செயல் நிலைகளிலிருந்து சம நிலை மூளையின் கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை என்கிறேன். மேலும் பல வகை மனிதர்கள், வெவ்வேறு நிலை மன முதிர்ச்சியுடன் நம்மிடையே புழங்குகிறார்கள். நாம் அவர்களிடையே உலவுகிறோம்.

தண்டனைகள் (ஒருவேளை) திருத்த பயன்படலாம், குற்றம் நிகழ்ந்தபின்.
இதனை பெண்களும் சற்றே புரிந்து கொள்வது / புரிந்து கொள்ள முயல்வது நன்று.
நக்கும் நாய்க்கு செக்குக்கும் சிவலிங்கத்திற்கும் வித்தியாசம் தெரியாது / தெரியப்போவதில்லை.

அஞ்சா சிங்கம் சொன்னது…

திருமிகு. iTTiAM

நண்பரே இந்தியா மட்டுமே உலகம் அல்ல . இந்திய ஆண்கள் மன நிலைதான் உலகின் மத்த ஆண்களுக்கும் இருக்கும் என்று நினைப்பது ஏற்புடையது அன்று .
இங்கு ஆண்டாண்டுகாலம் ஆணாதிக்க மனோபாவம் ரத்தத்தில் ஊறி இருக்கிறது . ஒரு பெண் குழந்தையையும் ஆண்குழந்தையையும் வளர்க்கும் முறையில் இருந்து ஆரம்பமாகிறது .
ஒவ்வொரு ஆணும் தன் சகோதிரியை விட தான் மேலானவன் என்று நினைக்கிறான் .ஒவ்வொரு பெண்ணும் தன் சகோதரனை விட தான் கீழானவள் என்று நம்ப வைக்க படுகிறாள்.
ஐரோப்பாவில் பிறந்த சிறுவன் தான் பிறந்தது முதல் குட்டை பாவாடை மற்றும் பிகினி உடையில் தன் தாயை பார்த்து வளர்ந்தவன் . அது போன்று ஒரு உடையில் எதிரில் வரும் ஒரு பெண்ணை பார்த்தால் வன்புணர்வு செய்ய பாய்ந்து விடுவானா என்ன ....?
கோளாறு எங்கு இருக்கிறது என்று உண்மையில் யோசியுங்கள்.. நீங்கள் தயவு செய்து பெண்களை தெய்வமாகும் பார்க்க வேண்டாம் .
சதை பிண்டமாகவும் பார்க்க வேண்டாம் .
குழந்தை முதல் இரு பாலினருக்கும் சமஉரிமை குடுத்து வளர்த்து பாருங்கள் பெண்ணுக்கு ஆன் பாதுகாவலன் என்று சொல்லாமல் இருந்தாலே போதும் .
தவறு நம் சமூகத்திலும் வளர்ப்பு முறையிலும் , கலாசாரத்திலும் மறைந்து இருக்கிறது . பெண்களின் மார்பு கச்சைக்குள் அல்ல .
கலாச்சார புரட்சி செய்யாமல் எந்த நாடும் முன்னேறியதாக சரித்திரம் இல்லை. இங்கும் நிச்சியம் ஒரு மிக பெரிய கலாசார புரட்சி அவசியம்.
பழமைவாதிகள் ஒடுக்கபட்டால் தான் இதற்க்கு விடிவு .

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்