நாள், கிழமை, ஆண்டு இவைகளில் நல்லது கெட்டது பற்றிய நம்பிக்கை எனக்கு கிடையாது, என்றாவது அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் எதாவது கெடுதல் நடந்தால் நடக்க இருந்தவைகளில் ஒன்று இந்த நாளில் / இந்த காலகட்டத்தில் நடந்துவிட்டது என்பது தவிர்த்து குறிப்பிட்ட நாளை / நேரங்களை வெறுக்கும் அளவுக்கு நான் நினைத்துப் பார்ப்பது இல்லை.
சென்ற ஆண்டைப் பொறுத்த அளவில் நான்கு வெவ்வேறு இடங்களுக்கு நாடுகடந்து சுற்றுலா சென்று வந்தேன், ஓரளவு மகிழ்ச்சியைக் கொடுத்த ஆண்டு என்று சொல்ல முடியும், அதே வேளையில் உடன் பிறந்த தம்பியையும் இழந்திருக்கிறேன், இடையில் வேலை மாற்றம், அதற்கான சூழலும் உருவானது, வேலை மாற்றத்தை தொடர்ந்து பார்த்த வேலைப் போனது என்று நினைத்துப் பார்பதைவிட வேலை மாறுவதற்கான வாய்ப்பாக அமைந்தது என்றே கருதினேன், எந்த ஒரு நிகழ்வும், மகிழ்சியைத் தந்தாலும் துக்கத்தைத் தந்தாலும், நிம்மதியை கெடுத்தாலும் இவை நடக்க இருந்த நிகழ்வாக வந்து சென்றது என்பது தவிர்த்து குறிப்பிட்ட கால கட்டத்தை வெறுக்க ஒன்றும் இல்லை என்பது எனது தாழ்மையான தனிப்பட்ட கருத்து.
தம்பியின் மறைவிற்கு முந்தைய வாரத்தில் இருநாள்கள் நண்பர் ஒருவருடன் கோவா சென்று வந்தேன், ஸ்பைஸ் ஜெட் சன் நிதி குடும்பத்தினரின் விமானத்தில் தான் சென்றேன், கட்டணம் ஒன்றும் அவ்வளவு மிகுதி இல்லை, போக வர சென்னை - மும்பை - கோவா - கோவா - மும்பை - சென்னை நான்கு விமான சேவைகளுக்கு மொத்தம் 12 ஆயிரம் ஆகியது, தங்கும் செலவு இருவருக்கும் இரண்டு நாளைக்கு 5 ஆயிரம், பயணச்சீட்டை (eTicket) எடுத்துச் செல்லவில்லை என்றால் பிச்சைக்காரர்களைப் போல் 100 ரூபாய் பிடுங்கிக் கொண்டு, அவர்களே ஒரு பேப்பரில் பிரிண்ட் எடுத்து தருகிறார்கள், செல்போன் வழியாக உறுதி செய்யப்பட்ட மின்னஞ்சலைக் காட்டி eTicket இன்றி Boarding Pass கொடுக்கும் இடம் வரை சமாளித்து வந்தவரிடம் கூட 100 ரூபாய் பிடிங்கிக் கொண்டு தான் Pass கொடுக்கிறார்கள், அது எதற்கு என்று தெரியவில்லை, கோவா பற்றிய தகவல்களை பிறகு நேரம் கிடைத்தால் தனிப்பதிவாக இடுகிறேன். வெட்டியாகப் பொழுது போக்கும் பொழுது மற்றவர்கள் எப்படி நேரம் இல்லை என்று சொல்லுகிறார்கள் என்பதே எனது ஆராய்ச்சிக்குறிய கேள்விகளுள் ஒன்றாக இருக்கும், திட்டமிட்ட வேலைகளில் ஈடுபடும் பொழுது "நேரமின்மை" குறித்த தெளிவு கிடைத்தது, வலைப்பதிவால் சீரழிஞ்சேன் என்று நான் புலம்புவதோ, புலம்பப் போவதோ இல்லை, ஏனெனில் என்னுடைய எழுத்தின் வழியாக எனது எண்ணங்களைப் புரிந்தோர் அவர்களாகவே விரும்பி நண்பர்களாக அறிமுகம் செய்து, நட்பைத் தொடரும் வாய்ப்புகள் வலைப்பதிவு வழியாகத் தான் கிடைத்தது.
கோவாவில் இருந்து சென்னையில் இறங்கி பின் ஒரு மணி நேர இடைவெளிக்கு பிறகு மதுரைக்கு ரயிலில் இரவுப் பயணமாகப் புறப்பட்டு முன்னாள் நண்பர் ஒருவரை சந்திக்கச் சென்றேன், மிகவும் நெருக்கமானவராக இருந்து பின்னர் தொடர்பு வசதி இன்மையால் 16 ஆண்டுகள் தொடர்பில்லாமல் சென்றவர்களில் அவரும் ஒருவர், எதற்கும் அவர் வேலை செய்த அலுவலத்தில் தான் தொடர்ந்து பணியில் இருப்பாரோ என்று மின் அஞ்சல் செய்து பார்க்க, மதுரைக் கிளையில் விற்பனை மேலாளராக பணிபுரிந்து வருவதாக தெரிவித்தனர், பின்னர் தொடர்பு கொண்டு அலைபேசி எண் பெற்று, சென்னை வரும் பொழுது சந்திப்பாகதாகக் கூறி, பின்னர் மதுரையிலேயே சந்திக்க முடிவு செய்து அவரை சந்தித்தேன்.
மனிதர்களுக்கு 20 - 25 வயதில் என்னமாதிரியான மனநிலை வாய்க்கிறதோ, அதுவே தான் காலம் முழுவதும் இருக்கும் என்றே நினைக்கிறேன், ஆண்டுக் கணக்கை தாண்டிய பழக்க வழக்கங்கள் இதை மெய்பிக்கின்றன, வயதின் வழியாகக் கிடைக்கும் எந்த ஒரு அனுபவம் ஓரளவு முடிவுகளை எடுப்பதற்கும், முன்கூட்டிய திட்டமிடலுக்கும் பயன்படுமேயன்றி, 20 வயதில் உருவான உலகம், நட்பு, சமூக எண்ணங்கள், தன்னைப் பற்றிய மதிப்பீடு ஆகியவற்றைக் குறித்த எண்ணங்களை வயதின் ஏற்றம் மாற்றிவிடாது, நண்பரைப் பார்த்த பொழுது கடந்து போன 16 ஆண்டுகள் சுருங்கி இருந்தது, எனக்கும் அவனுக்கும் முந்தைய பழக்க வழக்கங்களின் தொடர்ச்சியை காண முடிந்தது, தோற்றங்கள் கொஞ்சம் மாறி இருந்ததால் ஏற்பட்ட மனத் தடுமாற்றத்தில் "நீ" என்பதை "நீங்கள்" என்று பேசத் துவங்கும் பொழுதே தடுத்தேன் "என்னடா ஆச்சு உனக்கு ?" "வா போ என்றே பேசுடா" என்று சொன்னதைக் கேட்டு சிரித்து உடனே மாறிக் கொண்டான்'
மதுரையில் ஒரு பகல் பொழுது தங்கி இருந்தேன், மூன்று வலைப்பதிவு நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது, ஒருவர் பேராசியர் தருமி, மற்றவர் உங்கள் சிலருக்கு அறிமுகமானவர் Consent to be......nothing! என்ற வலைப்பதிவில் எழுதும் திரு கிருஷ்ண மூர்த்தி, மற்றொரு வலைப்பதிவர் (தற்பொழுது பெயர் நினைவில்லை). தருமியை பலமுறை சந்தித்திருந்தாலும் கிருஷ்ண மூர்த்தியை சந்தித்தது முதல் முறை, சென்ற முறை மதுரை சென்ற பொழுது பார்க்க வாப்பில்லாமல் திரும்பிவிட்டேன் என்று வருத்தம் அடைந்திருந்தார், அதனால் இந்த முறை மதுரைக்கு சென்ற பொழுது அவரையும் பார்த்து வந்தேன்,
பிறகு மதுரையில் இருந்து இரவு புறப்பட்டு கோவை சென்று அங்கொரு நாள் பகல் பொழுது, நான் புறப்பட்ட ஒரு மணி நேரம் கழித்து கிளம்பிய எனது மதுரை நண்பரும், சென்னை நண்பரும் கோவையில் சந்திப்பது என்பது ஏற்பாடு, என்னுடைய சென்னை நண்பரும் மதுரை நண்பரைப் பார்த்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டது, மூவரும் பல ஆண்டுகள் கழித்து ஒன்றாக சந்தித்தது மற்றற்ற மகிழ்ச்சியை வாரி வழங்கியது, இடையில் பகல் பொழுதில் நம்ம ஜோதியர் இல்லம் ஜோதிஜி மற்றும் என்னுடன் நான்கு ஆண்டுகளாக மின்னஞ்சல் தொடர்பில் இருக்கும் அறிவே தெய்வம் சிவா ஆகிய இருவரையும் பார்க்க திருப்பூர் வருவதாகக் கூறி இருந்தேன், அவர்களும் காத்திருந்தனர், இடையில் திட்டமிட்ட நேரம் தவற, திருப்பூருக்கும், கோவைக்கும் இடைப்பட்ட இடமான அவிஞாசிக்கு வரச் சொன்னார்கள், சாலை புதுப்பித்தல் மற்றும் செப்பனிடுதல் தொடர்பில் பேருந்து ஊர்த்து செல்ல மதியம் மூன்று மணிக்குத் தான் அவினாசிக்குச் சென்றேன்.
அதுவரை சாப்பிடாமல் இருவரும் காத்திருந்தனர், பார்த்ததும் தழுவல்களுடன் பலநாள் பழகியவர்களைப் போல் எந்த வித மனத்தடங்களும் இன்றி பேசிக் கொண்டே ஒரு மூன்று நட்சத்திர உணவகத்திற்குச் சென்று தாமே எடுத்து உண்ணும் (பபே) உணவுக்கு அழைத்துச் சென்றனர், ஏற்கனவே பகல் 12 மணிக்கு ஸ்வாமி ஓம்காருடன் கொஞ்சம் வயிற்றை நிரப்பி இருந்ததால், அந்த உணவை சற்று திணறியே உண்டேன், அவர்களும் அப்படியே, நேரம் தப்பிய சாப்பாடு விரும்பிச் சாப்பிட முடியாது அல்லவா ? நட்பையும் நெருக்கத்தையும் வெளிப்படுத்த உணவுக்கு செலவளிக்கும் பணம் பயன்படும் என்பதை நான் நம்புவதில்லை, இருந்தாலும் நெடும் தொலைவில் இருந்து அவர்களைப் பார்க்க வந்தேன், எனக்கு என்ன சிறப்பாக செய்துவிடமுடியும் ? என்ற அவர்களின் கேள்விக்கு அதிக நேரம் செலவழித்து பதில் தேடாத விடையாக பபே உணவு, மற்றபடி ஏன் பணத்தை இப்படி விடுதிக்காரனிடம் வீணடிக்கிறீர்கள் ? என்று நாகரீகமும் புரிந்துணர்வும் இல்லாமல் கேட்கக் கூடாது என்பதால் அதை நண்பர்களின் உபசரிப்பு என்றே கொண்டேன்.
ஜோதிஜி நினைத்த அளவுக்கெல்லாம் ஒல்லிக் குச்சியாக இல்லை, ஓரளவு பணக்கார களையோடு தான் இருந்தார், மாறாக சிவா நினைத்த அளவுக்கே புகைப்படத்தில் பார்த்தது போல் இருந்தார், நிறைய பேசினோம்,
கோவையில் இருந்து நாகை திரும்பும் போது கோவை தனியார் பேருந்துகள் நிற்கும் இடத்தில் இரவில் மின்சாரம் இல்லாததால் ஒரு பயணி நகரும் பேருந்தின் முன் சக்கரத்தில் காலைவிட்டு பாதத்தை இழந்தார், அவருடைய கதறல், சுற்றி இருந்தவர்களின் உடனடியான செயல்பாடுகள், அடுத்த ஐந்து நிமிடத்து 108 ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்தது, மின்சாரம் இன்மையின் கொடுமைகளில் ஒன்றாக இதுவும் நடந்தது, கருணாநிதியின் ஒரு சில திட்டங்களில் 108 ஆம்புலன்ஸ் பொதுமக்களுக்கு நன்றாகவே பயன்படுகிறது, ஜெ - தன் ஈகோவை மீறி விட்டு வைத்திருப்பதும் அதை தொடர்ந்து நடத்துவதும் பாராட்டுக்குரியது,
சென்னையில் அகநாழிகை பொன் வாசுதேவன் மற்றும் மூனா செந்தில், மோகன் குமார் உள்ளிட்ட வலைப்பதிவு நண்பர்களையும் முதன் முறையாகப் பார்த்தேன், அதில் பொன். வாசு நான் தங்கி இருந்த இடத்திற்கே தன் மகனுடன் வந்து பார்த்துச் என்றார்,
****
ஒரு சிலர் தாம் விரும்பி குறிப்பிட்ட நாள்களில் தம்மை மாற்றிக் கொள்கிறோம் என்று முடிவு செய்து, அதன்படி செயல்படுவதைத் தவிர்த்து எந்த ஒரு நாளுக்கும் தனிச் சிறப்பு தனியாக வந்துவிடாது, கடந்தவைகளில் மறக்கக் கூடியவையும் உண்டு, நினைக்கக் கூடியவையும் உண்டு, நடக்க இருந்த நிகழ்வுகள் கடந்து போனது என்பது தவிர்த்து சென்ற ஆண்டு ஒரு மோசமான ஆண்டு என்று நினைக்கவில்லை, படிப்பினைகளும், அனுபவங்களும் மோசம் என்றால் அவற்றை கடந்தும் நாம் இருந்து கொண்டு இருக்கிறோம், கடந்த ஆண்டு பலவற்றைச் சுமத்திக் கொண்டு, தனிப்பட்ட அளவில் நாம் தொடர்ந்து இயங்க வழங்கிய வாய்ப்பு என்று பார்த்தால் எந்த நாளும் மோசமான நாள் இல்லை, எந்த ஆண்டும் மோசமான ஆண்டு கிடையாது என்பதை என்னளவில் நம்புகிறேன்.
அனைவருக்கும் அன்பான ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
22 கருத்துகள்:
மதுரையில் சந்திக்க வந்திருந்த அந்த மூன்றாமவர் திரு ஸ்ரீதர் ரெங்கராஜ்! கார்த்திகைப் பாண்டியன் போல இவரும் தருமி ஐயாவின் பிரிக்க முடியாத ஒரு நெருங்கிய வட்டம். மதுரைப்பதிவர்கள் என்றாலேயே இந்தமூவரோடு சீனா ஐயாவையும் பிரித்துப் பார்க்க முடியாதது போல!! ஆசிரியராகப் பணியாற்றி வந்தார் நறுக்குத் தெறித்த மாதிரி எழுதக் கூடியவர். இப்போது வலைப்பதிவுகளில் அதிகம் எழுதுவதில்லை
கோவி,
மகிழ்வான ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!!!
சைலண்டா ஒரு அகில பாரத உலா போய் வந்துட்டிங்களே :-))
//வவ்வால் கூறியது...
கோவி,
மகிழ்வான ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!!!
சைலண்டா ஒரு அகில பாரத உலா போய் வந்துட்டிங்களே :-))//
நான் மும்பையில் டிரான்சிட்டில் இருந்த அன்று தான் பால்தாக்ரே மர்கயா. நவ 17 என்று நினைக்கிறேன்
வணக்கம் நண்பர்களே
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
நன்றி!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் கோவி.
கோவா பற்றிய தகவல்களை முடிந்தால் வெளியிடுங்கள். Goa - க்கு சுற்றுலா சென்று வர ஒரு திட்டமிட்டுள்ளேன்.
நன்றி கண்ணன்.
திட்டமிடுதல் குறித்த சிறப்பான பார்வை. என் எண்ணமும் அஃதே
விருந்து எங்களின் மனநிறைவுக்காகவே :))
கொஞ்சம் வெட்கமாகக்கூட இருந்தது அம்புட்டு தூரத்துல இருந்து இங்க வர்றாரே கோவியார்..இதுக்கு என்ன செய்யப்போறோமோ..
வந்தது மட்டுமில்லாமல் இனிப்புகள் அன்பளிப்பாக :).. அன்புடன் தந்ததாலோ என்னவோ அருமையான சுவை.. என மகள்கள் விரும்பிச் சாப்பிட்டார்கள்..
2013 புத்தாண்டு வாழ்த்துகள்..
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் .
//Krishna Moorthy S கூறியது...
மதுரையில் சந்திக்க வந்திருந்த அந்த மூன்றாமவர் திரு ஸ்ரீதர் ரெங்கராஜ்!//
ஞாபக மறதிகளின் அறிகுறிகளை துய்க்கத் துவங்கி இருக்கிறேன், 40க்கு மேல் ஆகிறது இல்லையா.
மிக்க நன்றி ஐயா
// சார்வாகன் கூறியது...
வணக்கம் நண்பர்களே
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
நன்றி!//
மிக்க நன்றி சார்வாகன்
// Alien A கூறியது...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் கோவி.
கோவா பற்றிய தகவல்களை முடிந்தால் வெளியிடுங்கள். Goa - க்கு சுற்றுலா சென்று வர ஒரு திட்டமிட்டுள்ளேன்.//
எதையுமே சூட்டோடு சூடாக எழுதினால் சுவையாக எழுத முடியும், போய் வந்து 50 நாட்கள் ஆகிறது, எழுத முயற்சிக்கிறேன்
//நிகழ்காலத்தில் சிவா கூறியது...
விருந்து எங்களின் மனநிறைவுக்காகவே :))
கொஞ்சம் வெட்கமாகக்கூட இருந்தது அம்புட்டு தூரத்துல இருந்து இங்க வர்றாரே கோவியார்..இதுக்கு என்ன செய்யப்போறோமோ..
வந்தது மட்டுமில்லாமல் இனிப்புகள் அன்பளிப்பாக :).. அன்புடன் தந்ததாலோ என்னவோ அருமையான சுவை.. என மகள்கள் விரும்பிச் சாப்பிட்டார்கள்..
2013 புத்தாண்டு வாழ்த்துகள்..//
சிவா உங்களையும், ஜோதிஜியையும் சந்தித்தது இனிப்புகளைவிட, உணவுகளை விட இனிமையானது, இன்னும் கொஞ்சம் நேரம் இருந்திருக்கலாமோ என்று வழிநெடுக நினைத்துக் கொண்டு திரும்பினேன்
//ஜோதிஜி திருப்பூர் கூறியது...
நன்றி கண்ணன்.
திட்டமிடுதல் குறித்த சிறப்பான பார்வை. என் எண்ணமும் அஃதே//
எதையும் சரிவர புரிந்து கொள்ள அந்தச் சூழலில் இருந்தால் தான் தெரியவரும் என்று ஒப்புக் கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது
//நண்டு @நொரண்டு -ஈரோடு கூறியது...
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் .//
மிக்க நன்றி சார்
இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
பதிவு,பின்னூட்டத்துக்குள்ளேயே போகவில்லை.
கண்ணன்!நீங்க வேலையில் அமர்ந்து விட்டீர்களா?
// ராஜ நடராஜன் கூறியது...
பதிவு,பின்னூட்டத்துக்குள்ளேயே போகவில்லை.
கண்ணன்!நீங்க வேலையில் அமர்ந்து விட்டீர்களா?//
எழுதவே நேரம் வாய்ப்பதில்லை. புதிய பணியில் சமூக வலைத்தளம் பக்கம் செல்வதில்லை என்றும் முடிவு செய்து செயல்படுகிறேன், வீட்டில் இருந்தால் தான் பதிவோ பின்னூட்டமோ. ஏழு ஆண்டு தொடர்ந்து ஆடிய ஆட்டத்தில் தொய்வு.
:)
சிறப்பான பார்வை
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் கோவிகண்ணன்.
அண்ணா
என்னாச்சி நடுவுல பலநாளா பதிவுகளா காணோம் .
கருத்துரையிடுக