பின்பற்றுபவர்கள்

13 ஏப்ரல், 2012

* தமிழ் புத்தாண்டு மீசை மயிரா ?


சில இஸ்லாமிய தளங்களில் மாற்று மத அன்பர்களுக்கு வாழ்த்து சொல்லலாமா ? கூடாதென்றெல்லாம் கேள்வி கேட்டு பதில் சொல்லி, சொல்லக் கூடாது மீறிச் சொன்னால் மத நம்பிக்கைக்கு எதிரானது என்றெல்லாம் சொல்கிறார்கள், என்று முன்பு சுட்டிகளோடு எழுதி இருக்கிறேன். இப்ப அதே நிலைமை தமிழ் புத்தாண்டிற்கும் ஏற்பட்டிருப்பதை இங்குச் சொல்கிறேன்.

ஆன்றோர் சான்றோர் எது தமிழ் புத்தாண்டு என்று சொன்னார்கள், கொண்டாடினார்கள் என்கிற ஆராய்ச்சிக்குப் போகவிரும்பவில்லை, அது பற்றி ஏற்கனவே திரு இராமகி ஐயா மற்றும் கண்ணபிரான் ரவிசங்கர் (கே ஆர் எஸ்) எழுதியுள்ளனர், நான் எனது தமிழ் புத்தாண்டை திருவள்ளுர் ஆண்டின் தைத் திங்களில் மாற்றிக் கொண்டு நான்கு ஆண்டுகள் ஆயிற்று, அதன் பிறகு சித்திரை திங்கள் ஒன்றாம் தேதியை எப்போதும் வந்து போகும் ஒரு நாளாகத்தான் பார்க்கிறேன், இதற்குக் காரணம் கருணாநிதி தை 1 ஐ தமிழ் புத்தாண்டாக அறிவித்தார் என்பதற்கு அல்ல, இந்த தமிழ் புத்தாண்டு நாள் மாற்றம் ஏற்கனவே 71 ஆண்டுகளுக்கு முன்பே தனித் தமிழ் ஆர்வலர்களால் பரிந்துரைக்கப்பட்டவையே, கருணாநிதி ஆட்சி ஆளுமைகளில் இருந்ததால் நாளைய வரலாறு என் பேர் சொல்லும் என்பதாக சென்ற ஆட்சியில் மாற்றினார், ஆனால் இதை அவர் முன்பு எப்போதோ செய்திருக்க வேண்டியது. தனித்தமிழ் ஆர்வலர்கள் என்றால் யாரு ? அவர்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்போர் கே.ஆர்.எஸ் இடுகையைப் படிக்கவும்.
(இதில் யாரும் இறை மறுப்பாளர்கள் இல்லை)

என்னைப் பொருத்த அளவில் 100 ஆண்டு காலக் கோரிக்கைகளுக்குப் பிறகு சென்ற சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் செம்மொழி என்பதை மைய அரசு அறிவித்தது, அவ்வாறு அறிவிக்காத முன்பு தமிழ் சொம்மொழி வரையறைக்குள் வரவில்லை அல்லது தகுதி இல்லாமல் இருந்தது என்கிற கூற்று இருந்தால் அதில் எள்முனை அளவும் அறிவார்ந்த சிந்தனைகள் இல்லை என்பது போல் தான். கருணாநிதி அறிவிக்காத முன்பு சித்திரை 1ல் தான் புத்தாண்டு இருந்தது தைக்கு பொங்கல் வைப்பதைத் தவிர்த்து வேறெந்த சிறப்பும் இல்லை என்பது போன்ற கூற்றும். தமிழுக்கு செம்மொழிக்கான அனைத்து தகுதி இருந்தும் செம்மொழியாக அறிவிக்க மைய அரசைக் கெஞ்சியது போன்று தை 1 க்கு தமிழ் புத்தாண்டை மாற்றக் காரணங்கள் ஏற்கனவே இருந்தது, அதற்காகவே தமிழார்வளர்கள் காத்திருந்ததும் உண்மையே. தை 1 ஐ தமிழ் புத்தாண்டாக மாற்றிக் கொண்டால் தமிழ் புத்தாண்டை தமிழர்கள் மதச் சார்பற்று கொண்டாடலாம் என்கிற பரிந்துரைகளும் இருந்தது,  சித்திரை 1ஐ புத்தாண்டாகக் கொண்டாடும் வழக்கம் தமிழ் இந்து பண்டிகையைப் போன்று வடை பாயசத்தோடு படையல் மற்றும் அன்று மாலை கோவிலுக்குச் செல்வது என்பதுடன் முடிந்துவிடுகிறது. பிற மொழிப் பேசுபவர்கள் தங்கள் புத்தாண்டுகளை பெரிய அளவாக மதச் சார்பற்று கொண்டாடுவதைப் ஒப்பிட்டுப் பார்க்கையில் நாம் தமிழ் புத்தாண்டு என்று சித்திரை 1ல் கொண்டாடுவதில் எந்த ஒரு தனிச் சிறப்பும் கிடையாது. சித்திரை 1 என்பது ஆடி அமாவாசை, ஆவணி அவிட்டம், வைகாசி விசு, ஆடிப் பூரம், மாசி மகம், தைப் பூசம் போல் வந்து போகும் வெகு சாதாரண ஒரு இந்துப் பண்டிகை என்ற அளவிலேயே மொழிச் சார்ந்த தனி அடையாளத்தைச் சிதைத்து சுருக்கி இருக்கிறார்கள்.

நாம விருப்பப்படி வைத்துக் கொள்ள தமிழ் புத்தாண்டின் தேதி என்ன மீசையா ? என்ற கேள்வியை சித்திரை 1 ஆம் தேதியை புத்தாண்டாகக் கொண்டாடுபவர்கள் கேட்கிறார்கள், காலத்திற்கும் எவனோ இழித்துச் சொன்ன தீண்டத்தகாதவன் என்கிற இழிச் சொல்லை சுமக்க மறுப்பது இந்த மீசை வரையறைக்குள் வருமா என்று தெரியவில்லை, இன்றைக்கு அட்சய திருதியை ஒன்றை நுழைத்திருப்பதைப் போன்று என்றோ ஒரு நாள் நுழைக்கப்பட்டதே தமிழ் திங்களின் பெயர்களும் அதன் துவக்கமும், மாற்றிக் கொள்வதால் தமிழ் தனித் தன்மையை மேலும் கூட்டிக் கொள்கிறதே அன்றி அதனால் தமிழுக்கு கெடுதலோ, சிறுமையோ கிடையாது

********

நான் முன்பு பொங்கல் அன்று தை 1 ஐ தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடுகிறேன் என்று கூகுள் + ல் அறிவித்திருந்தேன், நியமாகப் பார்த்தால் நாம கொண்டாடாத ரம்ஜானுக்கும், கிறிஸ்மஸ் நாளுக்கும் அந்த நண்பர்களுக்கு வாழ்த்துச் சொல்கிறோம், ஆனால் நான் தை 1 ஐ தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடுகிறேன் என்றதும் சபிக்காத குறையாக சிலர் விவாதம் என்றப் பெயரில் கருத்துக்களைக் கூறி இருந்தனர், நான் தெளிவாகச் சொன்னேன், 'நீங்கள் தான் கொண்டாடவில்லை, அதை நான் ஏன் என்றும் கேட்கப் போவதில்லை, உங்களுக்கு விளக்கினாலும் வெளங்காது, ஆனால் கொண்டாடும் என்னை நீங்கள் வாழ்துவதற்கு உங்களுக்கு என்ன தடையோ ?'  இதில் புரியாதது என்றும் ஏதும் உண்டா ? 'வீம்புக்கு கொண்டாடுவதற்கெல்லாம் நாங்கள் வாழ்த்து சொல்ல மாட்டோம்' என்றனர். அப்படிப் பார்த்தால் என்னைப் பொருத்த அளவில் சித்திரை 1 யே அவர்கள் பிடித்துத் தொங்குவதும் எனக்கும் வீம்பாகத்தானே படும். வழக்கத்தை மாற்றுவது தர்மம் இல்லை, ஞாயம் இல்லை என்றெல்லாம் புலம்புகிறார்கள், தமிழ் நாட்டில் ராம நவமி என்று ஒன்று கொண்டாடப்படுகிறது, திருவரங்கம் தவிர்த்து ஏனையை பெருமாள் கோவிலும் ஒரு திங்களுக்கு முன்பு கொண்டாடப்படும் இராம நவமியின் அதே நட்சத்திரத்தில் திருவரங்கத்தில் கொண்டாடப்படுவதில்லை, அதற்குக் காரணம் சொல்கின்றனர், மற்ற கோவில்களில் கொண்டாடுவது 'சந்தர மாஸத்தை அடிப்படையாக கொண்டது, ஶ்ரீரங்கத்தில் ஸூர்ய மாஸத்தை அடிப்படையாகக் கொண்டது' இவற்றையெல்லாம் மாற்றி மாற்றிக் கொண்டாட ஏதோ ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து வைத்திருப்பதிலும் அதன் நடை முறைகளிலும் முரணே இல்லையாம், தமிழ் புத்தாண்டின் திங்களை மாற்றுவது தான் முரணானதாம்.

ஈழப்போரில் வென்றதன் நினைவாக இராஜபக்சே ஒரு வெற்றி நாள் அறிவித்து அதை அனைத்துக் குடிமக்களும் கொண்டாடச் சொல்லி ஒரு வழக்கத்தை ஏற்படுத்தி வைத்திருந்தால் நூற்றாண்டுகளுக்குப் பின் தம் முன்னோர்களை அழித்து வெற்றி கொண்டதன் அடையாளம் தான் அந்த நாள் என்று தெரியாமலேயே இலங்கைத் தமிழர்களும் அதைக் கொண்டாட நேரிடும். நாம தமிழ் புத்தாண்டு என்ற பெயரில் கொண்டாடும் சித்திரைப் புத்தாண்டும் தமிழ் அடையாளங்களை அழிக்க முயன்றதின் அடையாளங்களில் ஒன்று.

என்னதான் சங்கு ஊதினாலும் கேட்காத காதில் கேட்காது.

ஆனாலும் நான் கொண்டாடாவிட்டாலும் கொண்டாடுபவர்களை வாழ்தத் தயங்கும் அளவுக்கு எனக்கு சிறுமதி இல்லை. 

சித்திரையை தமிழ் புத்தாண்டாகவே கொண்டாடும் அனைத்து தமிழ் 'இந்து'க்களுக்கும் நல்வாழ்த்துகள். 

ஹேப்பி டமில் நியூ இயர் டூ யூ !40 கருத்துகள்:

ப.கந்தசாமி சொன்னது…

உலகத்தோடொட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலாதார் - குறள்.

மன்னிக்கவும். உங்கள் கருத்துகளுடன்தான் நான் மாறுபடுகிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//உலகத்தோடொட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலாதார் - குறள்.

மன்னிக்கவும். உங்கள் கருத்துகளுடன்தான் நான் மாறுபடுகிறேன்.//

மாறுபடுங்கள், அதில் தவறு ஒன்றும் இல்லை.

100 ஆண்டுகளுக்கு தெருவுக்கு தெரு சலூன் கடை இல்லை என்பதால் ஆண்கள் நீள முடிவைத்து கொண்டை போட்டு இருந்தார்களா அல்லது விரும்பிக் கொண்டை போட்டிருந்தார்களா அதை எல்லாம் நாம் பின்பற்றவில்லை, நாம் அந்த பழைய வழக்கத்தை மாற்றி கிராப் வெட்டிய பிறகும் மாற்றும் போது நீங்கள் சொல்லும் அந்தக் குறளை படித்தோமா தெரியவில்லை.

விழித்துக்கொள் சொன்னது…

வணக்கம் திரு கோவி கண்ணன் அவர்களே,
நானும் உங்கள் பக்கம், இனத்தை மொழ்யை நாம் தான் காப்பாட்ர வேண்டும்
வேரு வழ இல்லை நன்ட்ரி

பனிமலர் சொன்னது…

இவ்வளவு விளக்கமாகவும், தெளிவாகவும் இரமகி ஐயா எழுதி இருந்தும் அதை ஏற்க மனம் மறுக்கும் மக்களிடம் பேசி பயன் இல்லை.

மத நம்பிக்கையாளர்கள் நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்கள் எங்களுடைய நம்பிக்கையை கேளி/ஏளனம் செய்கிறார்கள் என்று. அதற்கு நீதிமன்றமும் அவ்வாறு செய்வது தவறு என்று. அதே நீதிமன்றத்தில் எங்களுக்கு எல்லாம் மதம் மீதும் அதன் முறைகளின் மீதும் நம்பிக்கை இல்லை. அந்த மத காரியங்களை செய்து எங்களது நம்பிக்கையை கேளி/ஏளனம் செய்கிறார்கள் என்றால் நீதிமன்றம் என்ன சொல்லும், சரியான தீர்ப்பு கிடைக்குமா...........

தைத்திங்களை கொண்டாடுவதை கேளி செய்தால், என்ன என்ன அதற்கு சான்றாக சொல்கிறார்களோ அவ்வளவும் அவர்களையே சாரும் மேலே சொன்ன வாதத்தின்படி........

நாங்கள் எல்லாம் தமிழ்புத்தாண்டு கொண்டாடி 2 மாதம் ஆகுது, இவர்களுக்கு இப்போது தான் விழிப்பு வந்து இருக்கு போலும், காலம் கடந்த வாழ்த்துக்கள் என்று சொல்வோம் அவர்களுக்கு.

பனிமலர்.

நம்பள்கி சொன்னது…

தமிழ் புத்தாண்டு மீசை மயிரா? இல்லை நைனா; எவன் சொன்னான் தமிழ் புத்தாண்டு மீசை மயிறு என்று. அதுக்கும் கீழே! கீழே!! கீழே அம்பி!!!

தப்பா எடுத்காதே கோவி நைனா! நீ பஞ்சாங்கம் படிக்க ஒத்துக்க, அப்ப தமிழ் புத்தாண்டை நீ ஆசைப்படும் எந்த நாளிலும் வைத்துக் கொள்ளலாம்; தை ஒன்னு அல்ல எந்த "ஒண்ணுக்கும்" தமிழ் புத்தாண்டை வைத்துக் கொள்ளலாம்;

ஆனால், காட்டாயம் பஞ்சாங்கம், படிக்கணும்...படிப்பீகள???

நான் ரெடி! நீங்க ரெடியா?

Unknown சொன்னது…

//ஈழப்போரில் வென்றதன் நினைவாக இராஜபக்சே ஒரு வெற்றி நாள் அறிவித்து அதை அனைத்துக் குடிமக்களும் கொண்டாடச் சொல்லி ஒரு வழக்கத்தை ஏற்படுத்தி வைத்திருந்தால் நூற்றாண்டுகளுக்குப் பின் தம் முன்னோர்களை அழித்து வெற்றி கொண்டதன் அடையாளம் தான் அந்த நாள் என்று தெரியாமலேயே இலங்கைத் தமிழர்களும் அதைக் கொண்டாட நேரிடும். நாம தமிழ் புத்தாண்டு என்ற பெயரில் கொண்டாடும் சித்திரைப் புத்தாண்டும் தமிழ் அடையாளங்களை அழிக்க முயன்றதின் அடையாளங்களில் ஒன்று.//

அருமையாகச் சொன்னீர்கள்! நிறைய விஷயங்கள் இதே மாதிரிதான் கண்மூடித்தனமாக பின்பற்றிக்கொண்டிருக்கிறோம்.

Unknown சொன்னது…

என் மூதாதையர் புத்தாண்டு கொண்டாடிய நாள் சித்திரை முதல் நாள்! அதுவே என் விருப்பம்!

தைமுதலை புத்தாண்டாகக் கொண்டாட வேண்டும் என்பதும், 70 ஆண்டுக்காலம் காத்திருந்த திணிப்பு எனலாமோ?

சித்திரைநாள் தமிழ் இந்துக்களின் புத்தாண்டு எனில் அதில் ஆட்சேபிக்க ஏதுமில்லை!

வட இந்தியத் திணிப்பை எதிர்க்கும் தமிழ்குடிகள், கடல் கடந்து வரும் திணிப்பை தித்திப்பாக எண்ணுவது பேதமை!

கோவி.கண்ணன் சொன்னது…

// ரமேஷ் வெங்கடபதி கூறியது...
என் மூதாதையர் புத்தாண்டு கொண்டாடிய நாள் சித்திரை முதல் நாள்! அதுவே என் விருப்பம்!//

உஙக விருப்பம் உங்களுக்கு.

இடுகையின் மையப் பொருள் தைத் திங்களில் புத்தாண்டு கொண்டாடுபவர்களுக்கு வாழ்த்துச் சொன்னா நரகம் கிடைக்குமா ? என்பதே

நெல்லை கபே சொன்னது…

என்ன கதறினாலும் கத்தினாலும் செவிமெடுக்கப் போவதில்லை.

//நாம தமிழ் புத்தாண்டு என்ற பெயரில் கொண்டாடும் சித்திரைப் புத்தாண்டும் தமிழ் அடையாளங்களை அழிக்க முயன்றதின் அடையாளங்களில் ஒன்று.// இது பொதுவாக நாத்திகர்கள் ஆத்திகர்களை ஜெயிக்க தெரியுமா நான் தமிழன் நீ தமிழன் இல்லை என்று வெறுப்பேற்ற பயன்படுத்துகிற உத்தியே!நாத்திகர்கள் எல்லாம் தமிழருமல்ல. நாத்திகர் எல்லாம் பகுத்தறிவுவாதிகளும் அல்ல. நான் முரண்படுகிறேன். தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!

வவ்வால் சொன்னது…

கோவி,

நல்ல கருத்தாக்கம்,சித்திரை ஒன்றில் புத்தாண்டு கொண்டாடும் இந்தியர்களுக்கு வாழ்த்து சொல்லவும் கடமைப்பட்டுள்ளோம், எனவே அவர்களை வாழ்த்துவோம்.

"சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள்"

புத்தாண்டு குறித்த எனது பதிவுகள் இரண்டு:
சித்திரை-1 புத்தாண்டு யாருக்கு?
தை ஒன்றில் புத்தாண்டு ஏன் என விளக்கும் எனது பதிவு,(2007 இல் போட்டதன் மீள்பதிவு)
தை-1 தமிழ் புத்தாண்டு

கல்வெட்டு சொன்னது…

அன்புள்ள கோவி,
உங்கள் கருத்தில் இருந்து நான் முற்றிலும் மாறுபடுகிறேன்.

மேலும் ஆண்டாண்டுகாலமாக இருந்த நடைமுறையை மாத்துவதை வன்மையாக கண்டிக்கிறேன்.


1. என் மூதாதையர் பேண்ட் போடாததால் நான் போடமாட்டேன்.

2. என் மூதாதையார் கட்டைவண்டியில் மட்டும் போனதால் நான் எந்த வாகனமும் பயன்படுத்த மாட்டேன்.

3. எனது மூதாதையார் கீழ்ச்சாதி என்று சிலரை அசிங்கப்படுத்தியதால் நானும் செய்வேன்.

4. எனது மூதாதையார் டிவி பார்க்காததால் நானும் பார்க்க மாட்டேன்.

5.எனக்கு என்று இருக்கும் மூளையை நான் பயன்படுத்த மாட்டேன். எல்லாமே மூதாதையார் செய்ததை மட்டுமே இன்றும் செய்வேன்.
.

கல்வெட்டு சொன்னது…

இதே நாள் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த உரையாடல்கள். April 13, 2008

பொங்கல்தான் புத்தாண்டா?
http://penathal.blogspot.com/2008/01/blog-post_24.html

புத்தாண்டு வாழ்த்துக்கள் - கலைஞரின் ராஜதந்திரம்!

http://penathal.blogspot.com/2008/04/blog-post_13.html

அது இன்றும் தொடர்கிறது. மிகவும் விரிவாக அறிந்து கொள்ள நேரமெடுத்து மேலே உள்ள சுட்டிகளைப் பார்க்கலாம்.

..

'பசி'பரமசிவம் சொன்னது…

சித்திரையா தையா? எது தமிழ்ப் புத்தாண்டு?
விவாதிக்கலாம். ஒரு முடிவு கிட்டாமல் போனாலும் பரவாயில்லை.
புத்தாண்டு கொண்டாடாவிட்டாலும் ஒன்றும் குறைவில்லை.
அனைத்துத் தமிழர்களும் [மதம் சார்ந்தவர்கள் உட்பட] ‘நான் தமிழன்’என்ற உணர்வோடு வாழ்ந்தாலே போதும்.
இது நடக்குமா?
கோவியின் பதிவு உண்மை பேசுகிறது என்பது என் கருத்து.
கோவிக்கு நன்றி.

'பசி'பரமசிவம் சொன்னது…

சித்திரையா தையா? எது தமிழ்ப் புத்தாண்டு?
விவாதிக்கலாம். ஒரு முடிவு கிட்டாமல் போனாலும் பரவாயில்லை.
புத்தாண்டு கொண்டாடாவிட்டாலும் ஒன்றும் குறைவில்லை.
அனைத்துத் தமிழர்களும் [மதம் சார்ந்தவர்கள் உட்பட] ‘நான் தமிழன்’என்ற உணர்வோடு வாழ்ந்தாலே போதும்.
இது நடக்குமா?
கோவியின் பதிவு உண்மை பேசுகிறது என்பது என் கருத்து.
கோவிக்கு நன்றி.

அப்பாதுரை சொன்னது…

நட்சத்திர வாழ்த்துக்கள் கோவி.கண்ணன்.

தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடினாலும் தவிர்த்தாலும் மீசை மயிர் தான். :) ஒன்றுக்கு இரண்டாகக் கொண்டாடினாலும் சரிதான்.

Subramanian சொன்னது…

எனது பாட்டனுக்கும் பாட்டன், அவனுக்கும் பாட்டன், அவனுக்கும் பாட்டன் அவனது வருடம் பிறக்கும் திருநாளை எப்படி கொண்டாடியிருப்பான் என்பதை நினைக்கும் போது, அதுபோல் வாழ்ந்துவிட முடியாதா.. என நெஞ்சம் ஏங்குகிறது. இடையில் வந்தவர்கள் எனது அறிவை மங்க வைக்க முயற்சி செய்தார்கள் என்றால்.. அதற்க்கு பலியாக நான் எப்போதும் ஒத்துக்கொள்ள முடியாது! எனது உரிமையும் விழிப்புணர்வும் தை முதல் நாளில் உள்ளது. மேலும் எனது கருத்துக்களை இங்கு பதிந்து வைத்திருக்கிறேன். நன்றி!
http://vstamilan.blogspot.in/2012/01/blog-post.html

நெல்லை கபே சொன்னது…

நான் வேறோரு பதிவில் இட்ட பின்னூட்டத்தை இங்கே பதிவிட விரும்புகிறேன்.
---------------------------
//மறைமலை அடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி. க,
நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோம. சுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் மற்றும் பலர்!
இவர்கள் எல்லாரும் ஆத்திகர்கள், இவர்களே சொல்லிவிட்டார்கள் தை தான் என்று !பாருங்கள் என்றொரு வாதம் வருகிறது. இதில் ஒரு உள்குத்து இருக்கிறது. இதை தெரிந்த திராவிட நாத்திகர்களும் மறைத்தே பேசுகிறார்கள்.இன்றைய தலைமுறையில் நிறைய பேருக்கு இது தெரியாது.

இவர்கள் எல்லோருமே சைவ சமயத்தினர். அப்போது சைவமும் வைணவமும் முட்டிக் கொண்டு இருந்த காலம்.இந்த அறுபது வருஷ பேரு விஷ்ணு கதையை ஒட்டி வருவதால் அதை மாற்றிவிடணும் என்று கிளம்பிய சைவர்கள் இவர்கள். நாத்திகர்களுக்கு இந்த பேச்சு வசதியாய் இருப்பதால் பாருங்க ஆத்திகர்களே சொல்லிவிட்டார்கள் என்று பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

எல்லா வரலாற்றையும் மாற்றணும் என்றால் அநேகமாக எவ்வளவு காலம் பின்னோக்கி போகணும் என்பதை தனிமனிதர்கள் தனித் தனியாக முடிவு செய்து கொண்டே இருப்பார்கள். அதற்கு முடிவே கிடையாது.

Anonymous சொன்னது…

//100 ஆண்டுகளுக்கு தெருவுக்கு தெரு சலூன் கடை இல்லை என்பதால் ஆண்கள் நீள முடிவைத்து கொண்டை போட்டு இருந்தார்களா அல்லது விரும்பிக் கொண்டை போட்டிருந்தார்களா அதை எல்லாம் நாம் பின்பற்றவில்லை, நாம் அந்த பழைய வழக்கத்தை மாற்றி கிராப் வெட்டிய பிறகும் மாற்றும் போது நீங்கள் சொல்லும் அந்தக் குறளை படித்தோமா தெரியவில்லை.// பாஸ், நீங்கதான் 'உதாரண' புருஷர். நூறென்ன 1000 ஆண்டுகளுக்கு முன்னர் கூட பெற்றவளை அம்மாவென்றுதான் அழைத்தோம் இப்போதும் அவ்வாறு தான் அழைக்கிறோம் (என்ன இப்போ சிலர் 'decent'ஆ mummy-ங்கறாங்க). இந்த உதாரணம் எப்படி இருக்கு?

முதல்ல இந்த மாற்றம் இப்போ ரொம்ப அவசியமா? நமக்கு(அல்லது எனக்கு மட்டுமாவது) நன்றாகவே தெரிந்த கோவைபுத்தூர் இன்றும் கோயம்புத்தூர்தான். சிலர் தமிழ் எண்ணிக்கை முறையில் கூட தவறு இருப்பதாகச் சொல்கிறார்கள் - அதாவது இன்று நாம் ஒன்பது என்று சொல்வது 'ஒன்பு' என்றும், தொண்ணூறு என்பதுதான் ஒன்பது என்றும், தொள்ளாயிரம்தான் தொண்ணூறு என்றும். Logic சரியாத்தான் கூட இருக்கு.

சரி உங்கள் நம்பிக்கை உங்களுக்கு (மேலும் நட்சத்திர பதிவரென்றால் தினமும் எதையாவது எழுதத்தானே வேண்டியிருக்கிறது - முற்போக்குதான் ரொம்ப ஈஸி). உங்களுக்கு எனது (3 மாத)காலங்கடந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் (எனக்கு நரகமே கெடைச்சாக் கூட பரவாயில்லை); சித்திரை ஆதரவாளர்களுக்கு நந்தன புத்தாண்டு வாழ்த்துக்கள். எல்லாரும் மகிழ்ச்சியா இருங்கப்பா.

எப்படிப் பாத்தாலும், சர்ச்சையே இல்லாமல், புத்தாண்டென்று, அனைத்து 'இன'மான தமிழர்களும் கொண்டாடுவது ஜனவரி ஒன்றைத்தான்.

நம்பள்கி சொன்னது…

எப்படி காதலர்களுக்கு தினமும் காதலர் தினமோ, அதுமாதிரி, இனி தமிழர்களுக்கு தினமும் "தமிழ் புத்தாண்டு" என்று வைத்துக் கொள்ளலாம்.

இந்த தமாஷைப் பார்க்கும் கடவுள் மருப்பாளர்கள், நூற்றுக் கணக்கில் மதங்கள் மற்றும் ஆயிரக் கணக்கில் சாமிகள் இருக்கும் போது இரண்டு தமிழ் புத்தாண்டுகள் இருந்தால் என்ன குடியா முழுகிப் போய்விடும் என்று கேட்கலாம். இருந்துட்டுதான் போகட்டுமே...

நாமளும் தான் இரண்டு லட்டு சாப்பிடுவோமே! ஹி! ஹி!!இரண்டு நாள் விடுமுறை)

ஒரு கேள்வி? இது மாதிரி தினங்களால், எதாவது பயன் இருக்கிறதா?

தமிழ் ஓவியா சொன்னது…

தமிழா, தமிழனாக இரு!
கிருஷ்ண ஜெயந்திக்கும், ஆயுத பூஜைக்கும் வாழ்த்துச் சொல்லும் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு என்று சட்டம் செய்வதோ, அதற்கு வாழ்த்துச் சொல்லுவதோ ஆச்சரியமான ஒன்றல்ல!

சித்ரா பவுர்ணமிக்கு தீபம் ஏற்றச் சொல்லி கட்சிக்காரர்களுக்கு அறிக்கை கொடுத்தவராயிற்றே! பக்தர்கள் மண் சோறு சாப்பிடுவது கண்டு புளகாங்கிதம் அடையக் கூடியவராயிற்றே!

அதனால்தான் துக்ளக் சோ ராமசாமி போன்றவர்கள் ஜெயலலிதாவுக்கும் திராவிட இயக்கத்துக்கும் எவ்வித ஒட்டும் உறவும் இல்லை; பெரியார், அண்ணா கொள்கைகளை ஏற்றுக் கொண்டவரல்லர் என்று வெளிப் படையாகக் கருத்துத் தெரிவித்தும்கூட, அதனை இதுவரை மறுக்கவில்லை என்பதிலிருந்தே செல்வி ஜெயலலிதா சோ கூட்டத்தின் கருத்தை ஏற்றுக் கொண்டு விட்டார் என்ற முடிவுக்கு எளிதாகவே வந்துவிடலாம்.


தமிழ்க்கடல் மறைமலையடிகள் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட புலவர் பெருமக்கள் 1921இல் கூடி எடுத்த முடிவல்லவா தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பது!

அதில் கலந்து கொண்ட தமிழறிஞர்களும் சாதாரணமானவர்களா? தமிழ்த் தென்றல் திரு.வி.க., தமிழ்க் காவலர் கா. சுப்பிரமணியம் பிள்ளை, சைவப்பாதிரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் நா.மு. வேங்கடசாமி நாட்டார், பசுமலை நாவலர் சோமசுந்தர பாரதியார் இவர்களைவிட முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா தமிழ்ப் புலமையும் - ஆய்வும் கொண்டவரா?

இந்தப் பெரும் புலவர்களின் முடிவைக் கீழே தள்ளி மிதித்துவிட்டு, சித்திரை முதல் நாளில் தமிழ்ப் புலவர்களுக்குச் சிறப்பு செய்யப்படும் என்றால், இதைவிடக் கேலிக் கூத்து வேறு எதுவாக இருக்க முடியும்?

நாவலர் சோமசுந்தரபாரதியார் தலைமையில் திருச்சியில் கூட்டப்பட்ட மாநாட்டில் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று கூறப்பட்டு, தந்தை பெரியார் அவர்கள் அதனை ஏற்று மகிழ்ந்தார் என்பதைவிட வேறு என்ன வேண்டும்?

உண்மையான திராவிடர் இயக்கத்தைச் சேர்ந்தவராக இருந்து அதன் கொள்கைகளை ஏற்று மதிக்கும் மனப்பான்மை இருந்தால், தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத்தை (23.1.2008) ரத்து செய்யும் (23.8.2011) எண்ணம் வருமா?

2001இல் (சனவரி 6) மலேசியாவின் தலைநகரமான கோலாலம்பூரில் உலகத் தமிழர்கள் ஒன்றுகூடி தை முதல் நாளே தமிழாண்டுத் தொடக்கம் என்று பிரகடனப் படுத்தினார்களே - அந்தத் தமிழ் உணர்வை மதித்திருக்க வேண்டாமா?

சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அம்மையாருக்குத் தாளம் போடுவோரைக் கேட்கிறோம்; நாரதனுக்கும் - கிருஷ்ணனுக்கும் பிறந்த 60 பிள்ளைகள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்ற ஆபாசத்தை ஏற்றுக் கொள்கிறீர்களா? இதுகுறித்து கழகம் எழுப்பிய கேள்வியின் பக்கம் எந்தக் கொம்பரும் தலை வைத்து படுக்கவில்லையே ஏன்? ஏன்?

ஆண்களின் சராசரி வயது 68 ஆகவும் பெண்களின் சராசரி வயது 71 ஆகவும் வளர்ந்து விட்ட ஒரு கால கட்டத்தில், 60 ஆண்டுகளுக்குள் முடங்கி விட்ட ஒரு சுழற்சியை ஏற்றுக் கொள் வதைவிட அறிவின்மையும், அறிவியல் மனப் பான்மையற்ற தன்மையும் வேறு உண்டா?


21ஆம் நூற்றாண்டிலும் இந்த அவலமா? இதில் குறிப்பிடத்தக்க வெட்கக் கேடு என்னவென்றால் தமிழ்த் தேசியவாதிகள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் சூராதி சூரர்கள் (?) வாயே திறக்காத அவலம்தான்! திண்டுக்கல் பூட்டுப் போட்டு கெட்டியாகப் பூட்டி விட்டார்கள் போலும்!

தமிழா, இனவுணர்வு கொள்!
தமிழா, தமிழனாக இரு!!

--------------- "விடுதலை” தலையங்கம் 13-4-2012

தமிழ் ஓவியா சொன்னது…

தமிழ்வருஷப் பிறப்பு - பெரியார்

60 வருடங்களுக்கு மானங்கெட்ட கதை

ஆரிய சம்பந்தமான கதைகள், சேதிகள் ஆகியவைகளில் எதை எடுத்துக் கொண்டாலும் அதில் ஆபாசம், அசிங்கம், விபசாரம், இயற்கைக்கு மாறுபட்ட வண்டத்தனமான சங்கதிகள் முதலிய வை இல்லாமலிருப்பது மிக மிக அதிசயமாகும்.

சில வாரங்களுக்கு முன்னால் மாரியம்மன் என்னும் ஒரு பெண் தெய்வத்தைப் பற்றி வெளியான வியாசம் வாசகர்களால் படிக்கப்பட்டிருக்கலாம். அதற்கும் சில வாரங்களுக்குமுன் பண்டரிபுரத்தைப் பற்றி எழுதப்பட்டிருந்த வியாசம் படிக்கப்பட்டிருக்கலாம்.

இப்போது இன்னும் சிறிது நாட் களுக்குள் வருஷப்பிறப்பு வரப் போகிறது. இந்த வருஷப் பிறப்புக்குச் சம்பந்தப்பட்ட தமிழ் வருஷங்களின் யோக்கியதையை மானமுள்ள தமிழ்மக்கள் படித்துப் பார்க்க வேண்டும் என்கின்ற ஆசையாலேயே இதை நான் எழுதுகிறேன்.

இந்த வருஷப் பிறப்புக் கதை நாகரிகம் உள்ள மக்களால் எழுதப்பட்டிருக்க முடியுமா? இதைப் படித்துப் பார்க்கும் அந்நியன் இந்தக் கதை சம்பந்தப்பட்ட மக்களை என்ன என்று நினைப்பான்? என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் ஒரு முக்கிய சம்பவத்தை ஞாபகப் படுத்தக் கூடியதாகவும், சரித்திரத்திற்கு பயன்படத்தக்கதாகவும், நாகரிகமுள்ள தாகவும் உள்ள வருஷக் கணக்குகள் இருக்கின்றன. உதாரணமாக அவர்களது வருஷங்களுக்கு கி. மு., கி. பி., ஹிஜரி என்கின்ற பெயர்களும் அதற்கு நல்ல கருத்துகளும் இருக்கின்றன.

ஆனால் தமிழனுக்கும், நாதியற்ற தமிழனுக்கு என்ன வருஷம் இருக்கிறது? அதற்கு என்ன கருத்து என்று பார்ப்போமானால் தமிழன் என்கின்ற பெயர் வைத்துக்கொண்டு இந்த நாட்டில் வாழ்வதற்கு வெட்கமில்லையா? என்று தான் தோன்றும். தமிழனின் நிலையை ஆரியர்கள் தங்கள் சாமர்த்தியத்தால் மானங்கெட்ட காட்டுமிராண்டி, லம்பாடி சமூகமாக ஆக்கிவிட்டதால் இவ்வளவு இழிவு ஏற்பட்ட இந்தக் காலத்திலும் தமிழனுக்கு சூடு, சொரணை ஏற்படுவ தில்லை.

கோவிலுக்கு தேவதாசிகளை விட்டவன் தமிழனே என்றால் மற்றபடி தமிழனால் ஆக்கப்படவேண்டிய இழி செயல் வேறு என்ன இருக்கிறது?
இது மாத்திரமா? மோட்சம் என்றால் தமிழன் எதையும் செய்ய முன் வருகிறான்.

ஆ பயன் அய்ந்து என்று சொல்லிக் கொண்டு மாட்டு மூத்திரம், சாணி எல்லாவற்றையும் காசு கொடுத்து வாங்கிக் குடிக்கிறான் மற்றும் கேரள நாட்டில் நடப்பதை எழுதவே கை நடுங்குகிறது. ஏன் என்றால், ஒரு தடவை விடுதலை எழுதிவிட்டு ரூ.1500 செலவு செய்தும் ஆசிரியருக்கும், சொந்தக்காரருக்கும் 9, 9 மாத தண்டனை கிடைத்தது. அக்கிரமம் செய்கிறவர்களுக்குப் பெரிய வேட்டையும், பதவியும் கிடைக்கிறது; எடுத்துக் காட்டுபவருக்கு செலவும், ஜெயில் வாசமும் கிடைக்கிறது.

மனுதர்மத்தைவிட ஒருபடி முன்னால் போய்விட்டது நமது தேசிய ஆட்சி. ஆதலால் அதைச் சொல்லப் பயந்துகொண்டு நிறுத்திக் கொள்ளுகிறேன்.

ஆரியர்களால் எழுதப்பட்டு இன்று நம் இலக்கண, இலக்கியங்களில் முன்னிடம் பெற்று நம் பண்டிதர்களுக்குப் புலவர் (வித்வான்) பட்டம் பெற ஆதார மாயிருக்கும் நூல்களில் இருப்பதையே சொல்லுகிறேன். படித்துப் பாருங்கள். இந்த ஆபாசமுறை மாற்றப்பட வேண் டாமா? நம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்றதை மறந்து இனிமேலாவது ஒரு நாகரிகமான முறையில் நமது வருஷ முறையை அமைத்துக்கொள்ள வேண் டாமா என்பதை வலியுறுத்தவே மேலும் கீழும் குறிப்பிடப்படுவனவாகும்.
----தொடரும்

தமிழ் ஓவியா சொன்னது…

நம் வருஷப் பிறப்புக்குத் தமிழ் வருஷப் பிறப்பு என்று சொல்லிக் கொள்ளுகிறோம். இது நியாயமா? தமிழ் வருஷப் பிறப்பு கதையைப் பாருங்கள்.

வருடப் பிறப்புக் கதை

நாரதப் பிரம்ம ரிஷி அவர்களுக்கு ஒரு நாள் காமஇச்சை ஏற்பட்டதாம். எங்கு போனால் இது தீரும்? என்று ஞான திருட்டியினால் பார்த்து சாட்சாத் கிருஷ்ண பகவானிடம் போனால் தமது காம இச்சை தீரும் என்று கருதி கிருஷ்ணனிடம் ஓடோடி ஓடினாராம். கிருஷ்ண பகவான் நாரத முனி சிரேஷ்டரே எங்கு வந்தீர்? என்றாராம். அதற்கு நாரதர் ஒன்றும் இல்லை என்று தலையைச் சொரிந்து கொண்டு பல்லைக் காட்டினாராம். கிருஷ்ண பகவான் சும்மா சொல்லும் என்றாராம். நாரதர், எனக்கு எப்படியோ இருக்கிறது. உமக்கு அறுபது ஆயிரம் கோபிகள் (வைப்பாட்டிகள்) இருக்கிறார்களே, அதில் ஒன்று கொடுங்களேன் என்று கேட்டாராம். உடனே கிருஷ்ண பகவான் இது தானா பிரமாதம் இன்று இரவு எனது அறுபது ஆயிரம் கோபிகளில் நான் இல்லாத வீட்டிற்கு போய் அங்கு உள்ள கோபியை அனுபவித்துக் கொள்ளுங்கள் என்றாராம். உடனே நாரத பிரம்மம் கிருஷ்ண பகவானுக்கு ஒன்று போக 59999 கிடைத்ததாகக் கருதிக் கொண்டு மகிழ்ச்சிப் பெருக்குடன் கோபிகள் வீட்டுக்கு சென்றாராம். அங்கு சென்று எந்த வீட்டைப் பார்த்தாலும் அங்கெல்லாம் கிருஷ்ண பகவான் கோபியுடன் படுத்துக்கொண்டிருப்பதைக் கண்டு வெட்கப்பட்டு வெகு கோபத்துடன் கிருஷ்ண பகவான் வீட்டுக்கு வந்தார். வழியில் என்ன நினைத்துக்கொண்டு வருகிறார் என்று யோசித்தால் அது மிகவும் வேடிக்கையானது. அதாவது இப்படி நம்மை மோசம் பண்ணின கிருஷ்ணனையே இன்று அனுபவிப்பது என்று தான் கருதிக்கொண்டு வருகிறார் என்று தெரியவருகிறது.

அதாவது, பகவானே நான் சென்ற கோபி வீட்டில் எல்லாம் நீர் இருந்தீர். ஆதலால் சும்மா வந்துவிட்டேன். அதன் நிமித்தம் நான் தேவரீரையே அனுபவிக்க ஆசைப்படுகிறேன் என்று சொன்னதோடு பகவானைப் பெண்ணாகக் கொண்டு அனுபவிக்க அழைத்தால் ஒரு சமயம் வரமாட்டாரோ என்று கருதிப் போலும், பகவானே, என்னைப் பெண்ணாய்க் கொண்டு தாங்கள் அனுபவிக்க வேண் டும் என்கின்ற எண்ணம் கொண்டேன் என்று கெஞ்சினார். பகவான் உடனே கருணை கொண்டு ஸ்ரீமதி நாரத அம்மாளை அனுபவித்தார். எத்தனை காலம் அனுபவித்தார் என்று தெரிய யாராவது வாசகர் ஆசைப்படலாம். இந்த நாரத அம்மையுடன் கண்ணன் 60 வருஷம் லீலை செய்தார். அப்புறம் என்ன ஆயிற்று என்றால் ஆணாயிருந்தால் என்ன, பெண்ணாயிருந்தால் என்ன, பகவான் கிரீடை செய்தால் அது வீணாகப் போகுமோ? போகவே போகாது. எனவே அந்த 60 வருஷ லீலைக்கும் வருஷத்திற்கு ஒரு பிள்ளை வீதம் நாரத அம்மாளுக்கு 60 பிள்ளைகள் பிறந்தன. இந்த 60 பிள்ளைகளும் தகப்பனைப் பிடித்துக் கொண்டு எங்களுக்கு என்ன கதி? என்று கேட்டன. பகவான் அருள் சுரந்து நீங்கள் 60 பேரும் 60 வருஷங் களாக ஆகி ஒவ்வொருவர் ஒவ்வொரு வருஷத்திற்கு உலகாளுங்கள் என்று கருணை சாதித்தார். அதிலிருந்து 60 வருஷங்கள் ஏற்பட்டு அவைகளுக்கு இந்த 60 பிள்ளைகள் பெயர் வைக்கப்பட்டு வருஷம்தோறும் அப்பெயர்கள் மாறி மாறி வருகின்றன.

ஆகவே, இந்த 60 வருஷங்கள் பகவானும் ரிஷியும் ஆன ஆணும் ஆணும், ஆண் பெண்ணாகச் சேர்ந்து பிறந்த குழந்தைகள். இதற்காகத்தான் நாம் வருஷப்பிறப்பு கொண்டாடுகிறோம்.

இப்படி ஆணும் ஆணும் சேர்ந்ததால் பிறந்த அதிசயமான பிள்ளைகளானாலும் இந்த வருஷப் பெயரையோ, எண்ணிக் கையையோ கொண்டு 60 வருஷத்திற்கு மேற்பட்ட காலத்தைக் கண்டு பிடிக்க முடிவதில்லை. அதனால்தான் தமிழ னுக்கு சரித்திரம் இல்லை என்பதோடு தமிழர் சரித்திர காலத்திற்கு விவகாரம் இல்லாமலும் இல்லை.

ஆகையால் இனியாவது தமிழர்கள் இந்த 60 வருஷ முறையைக் காரித் துப்பிவிட்டு கி.பி.யையோ, ஹிஜரி யையோ, கொல்லத்தையோ, விக்கிர மாதித்தனையோ, சாலிவாகனனையோ அல்லது வேறு ஏதாவது ஒரு சனி யனையோ குறிப்பு வைத்துக் கொள் ளுவார்களா? என்றும் அவ்வளவு சூடு சொரணை தமிழனுக்கு உண்டா என்றும் கெஞ்சிக் கேட்கிறோம்.

--------------- தந்தை பெரியார் -" குடிஅரசு" - கட்டுரை - 08.04.1944

தமிழ் ஓவியா சொன்னது…

திருவள்ளுவர் ஆண்டு எங்கே வந்தது?


தை முதல் நாள் - தமிழ்ப் புத்தாண்டு என்று அடிப்படையில்தான் திருவள்ளுவர் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஆங்கில ஆண்டில் 31அய் கூட்டி அறிஞர் பெரு மக்களால் அறிவிக்கப்பட்டது.

தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக ஏற்காத நிலையில் அதிமுக அரசு திருவள்ளுவர் ஆண்டினை எப்படி ஏற்றுக் கொண்டு (2043) விளம்பரங்களைச் செய்கிறது? திருவள்ளுவர்மீதும் கை வைத்தால் தமிழர்களின் கடுமையான விமர்சனத்துக்கும், எதிர்ப்புக்கும் ஆளாக நேரிடுமே என்ற அச்சத்தாலா? ஆத்திரப்பட்டு ஒன்றைச் செய்தால் இப்படித்தான் அவதிப்பட நேரும்!
---”விடுதலை” 13-4-2012

தமிழ் ஓவியா சொன்னது…

சித்திரையில் எங்கிருந்து குதித்தது உழவர் பெருவிழா?

சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்த கூத்து போதாதென்று இந்நாள் 16,564 கிராமங்களில் உழவர் பெருவிழாவாம்.

சித்திரையில் எங்கிருந்து வந்தது உழவர் பெரு விழா? காய்ந்து கருவாடாகிக் கிடக்கும் வயல் வெளிகளில் உழவர்கள் திருவிழா கொண் டாடுவார்களா?

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்து அனைத்துக் கிராமங்களிலும் சமத் துவப் பொங்கலை நடத்திட முதல் அமைச்சராக விருந்த மானமிகு கலைஞர் அவர்கள் ஆணை பிறப்பித்தார்கள் அல்லவா - அதற்கு ஏட்டிக்குப் போட்டியாக எதையாவது நடத்த வேண்டுமே - அதற்காகத்தான் இந்த மாய்மாலம்! தி.மு.க. ஆட்சியில் எதைச் செய்திருந்தாலும், அதற்கு எதிராகச் செய்ய வேண்டும் என்ற குரூர மனப்பான்மைதான் இதிலும் குடிகொண்டு இருக்கிறது. ராஜாஜி முதல் அமைச்சராக இருந்தபோது அவர் செருப்புக் காலோடு ஏர் உழுத காட்சியை அரசு செய்திப் படத்தில் காட்டியபோது ஊரே சிரித்தது.

சித்திரையில் உழவர் பெருவிழா என்கிறபோது இதுதான் நினைவிற்கு வந்து தொலைகிறது.
----”விடுதலை” 13-4-2012

கல்வெட்டு சொன்னது…

//ராஜாஜி முதல் அமைச்சராக இருந்தபோது அவர் செருப்புக் காலோடு ஏர் உழுத காட்சியை அரசு செய்திப் படத்தில் காட்டியபோது ஊரே சிரித்தது.
//

ஆமா ஆமா

சமூக நீதி காத்த வீராங்கனைன்னு பட்டம் கொடுத்தப்ப சிரித்த மாதிரி.

கோவி.கண்ணன் சொன்னது…

//என்ன கதறினாலும் கத்தினாலும் செவிமெடுக்கப் போவதில்லை.//

நீங்கள் வேண்டுமானால் சூத்திரன் என்று பார்பனர் பழித்த அழுக்கையும் சேர்த்தே சுமந்து கொள்ளுங்கள் யார் வேண்டாம் என்றது. அது தான் கேட்காத காது கேட்காது என்று எழுதியுள்ளேனே :)

மணிப்ரவளத்தை அகற்றும் போதும் இவ்வாறு தான் செவிமடுக்கப் போவதில்லை என்று கதறினார்கள், 50 ஆண்டுகளில் பெரிய மாற்றம் தமிழில் கலந்திருந்த 90 விழுக்காட்டு
வடமொழி சொற்களுக்கு ஈமச் சடங்கே செய்தாகிவிட்டது. நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மாற்றம் நடக்கும், ஜெ-வின் இந்துத்துவ ரீதியான இன்றைய தடுப்பணை நீண்டகாலத்திற்கு நிலைக்காது என்றும் நம்புங்கள், தமிழகத்தின் நீண்டகால வரலாற்றில் ஒவ்வொரு முறையும் தமிழுக்கு தீங்கு என்ற விழிப்புணர்வினாலேயே ஆட்சி மாற்றங்கள் அரசர்காலம் தொட்டு நடந்தேறி இருக்கிறது,

//இது பொதுவாக நாத்திகர்கள் ஆத்திகர்களை ஜெயிக்க தெரியுமா நான் தமிழன் நீ தமிழன் இல்லை என்று வெறுப்பேற்ற பயன்படுத்துகிற உத்தியே!நாத்திகர்கள் எல்லாம் தமிழருமல்ல. நாத்திகர் எல்லாம் பகுத்தறிவுவாதிகளும் அல்ல. நான் முரண்படுகிறேன். தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!//

இந்தப் பதிவில் ஆத்திகம் / நாத்திகம் எங்கி இருந்து வந்தது ? திராவிடன் என்கிற சொல்லைக் கூட நான் இங்கு குறிப்பிடவில்லை, உங்கள் ஆத்திக வரையறைக்குள் கிறித்துவ / இஸ்லாமிய மத நம்பிக்கைகளுக்கு இடமிருக்கா என்று முதலில் சொல்லிவிட்டீர்கள் என்றால் பிறகு யார் நாத்திகன் என்கிற விவாததிற்குள் நாம் செல்வோம். நாத்திகர் மீதான உங்கள் வெறுப்பிற்கு ஆயிரம் காரணங்கள் உங்களுக்கு இருப்பதைக் காட்டிலும் எனக்கு தை 1 ஐ புத்தாண்டாகக் கொண்டாட அதற்கு மேல் காரணங்கள் உண்டு, நான் கொண்டாத ஒரு நாளுக்கு எனக்கு வாழ்த்து சொல்வது எனக்கு பயன் தராது

smart சொன்னது…

மொழியும் சமயமும் ஒரு சமுகத்தின் ஒரு கூறாக இருக்கும் போது அவற்றை எப்படி பிரிக்கமுடியும்? மொழி என்பது வெறும் சமயசார்பற்றவர்களைக் கொண்டு உருவாக வில்லை என்ற உண்மையை அறிந்துகொள்ளுங்கள். அதனால் சமயத்திடமிருந்து பிரிப்பதற்குப் பதில் அவரவர் நம்பிக்கையை மொழியினுள் புகுத்த வேண்டும். சித்திரையை இந்து முறைப்படியல்லாமல் அவரவர் முறைப்படி கொண்டாட வேண்டியதுதானே. தையில் வைத்தால் மட்டும் கிருத்தவர்களும் இசுலாமியரும் கொண்டாடுவார்களா யோசிக்க வேண்டும்? தமிழர் திருநாள் பொங்கல் கொண்டாடும் இம்மதத்தினரை பட்டியலிடமுடியுமா?

smart சொன்னது…

ஆங்கில மொழிக்கு செல்லும் போது ரோமகத்தோலிக்கர்கள் புகுத்திய ஜனவரி மாதம் தவறு சமய சார்பில்லாமல் மார்ச் மாதம் தான் முதல் மாதம் என்று வாதம் புரிகிறோமா? அல்லது ஆங்கிலப் புத்தாண்டை அவரவர் வழக்கப்படி கொண்டாடுகிறோமா?

நம்பள்கி சொன்னது…

மாயன்:அகமும் புறமும் கூறியது...
///இவர்கள் எல்லோருமே சைவ சமயத்தினர். அப்போது சைவமும் வைணவமும் முட்டிக் கொண்டு இருந்த காலம்.இந்த அறுபது வருஷ பேரு விஷ்ணு கதையை ஒட்டி வருவதால் அதை மாற்றிவிடணும் என்று கிளம்பிய சைவர்கள் இவர்கள். நாத்திகர்களுக்கு இந்த பேச்சு வசதியாய் இருப்பதால் பாருங்க ஆத்திகர்களே சொல்லிவிட்டார்கள் என்று பயன்படுத்திக் கொள்கிறார்கள்.///

இது எனது நண்பனுக்காக எழுதியது. அடிக்கடி என்னிடம் கேட்பான்; விவாதத்தை திசை திருப்புவது என்றால் என்ன என்று?

அதற்கு சரியான உதாரணம் இப்போ கிடைத்திருக்கிறது! அவனுக்காக, இந்த பதில். இது மாதிரி, சம்பந்தம் இல்லாமல், நீயாக ஒன்றை நினைத்துக்கொண்டு, ஒன்றை எழுதி அதைப் பிடித்து தொங்குவது.

அப்படின்னா? இது ஆராச்சியினால் வந்த முடிவில்லை. சுருங்கச் சொன்னால், மாயன்: அகமும் புறமும் அடிச்சு விடறார், அவருக்கு தோன்றியதை! காரணம் என்ன? விவாதத்தை திசை திருப்பத்தான் .

இந்த இடத்தை இதற்கு உபயோகப் படுத்தியதயறக்காக, கோவி தம்பி மன்னிக்கணும்...

வவ்வால் சொன்னது…

//smart சொன்னது…
ஆங்கில மொழிக்கு செல்லும் போது ரோமகத்தோலிக்கர்கள் புகுத்திய ஜனவரி மாதம் தவறு சமய சார்பில்லாமல் மார்ச் மாதம் தான் முதல் மாதம் என்று வாதம் புரிகிறோமா? அல்லது ஆங்கிலப் புத்தாண்டை அவரவர் வழக்கப்படி கொண்டாடுகிறோமா?//

பெயர் மட்டும் ஸ்மார்ட்டுனு இருந்தா போதுமா ஓய், ஆங்கிலப்புத்தாண்டைப்பற்றி கவலைப்பட வேண்டியது ஆங்கிலேயர்கள், நமக்கு எதுக்கு அந்தக்கவலை :-))

இப்பவும் பெரும்பாலோனோர் ஆங்கிலப்புத்தாண்டு அன்று நடு இரவில் கோயிலுக்கு போறாங்க ,திருப்பதியில் கூட கூட்டம் அலை மோதுகிறது எல்லாம் பக்த கோடிகள் தான் :-)) வெள்ளைக்காரன் சொன்னா அதை ஏன் என கேட்காமல் நம்ம மக்கள் அவங்க சமய சடங்கு ,சம்பிரதாயப்படி பூஜை செய்து கொண்டாடுறாங்களே அதை கேட்க மாட்டீரா ஓய்!

தை ஒன்றில் தமிழ் புத்தாண்டுனா மட்டும் பஞ்சாங்கத்த தூக்கிண்டு ஓடி வரேள் என்னமோ போங்கோண்ணா நேக்கு ஒன்னுமே விளங்கலை :-))

kamalakkannan சொன்னது…

இந்து ,முஸ்லிம்,கிருத்துவ மற்றும் புனையார் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் .

பெயரில்லா சொன்னது…

மாயன்:அகமும் புறமும் கூறியது...
///இவர்கள் எல்லோருமே சைவ சமயத்தினர். அப்போது சைவமும் வைணவமும் முட்டிக் கொண்டு இருந்த காலம்.இந்த அறுபது வருஷ பேரு விஷ்ணு கதையை ஒட்டி வருவதால் அதை மாற்றிவிடணும் என்று கிளம்பிய சைவர்கள் இவர்கள். நாத்திகர்களுக்கு இந்த பேச்சு வசதியாய் இருப்பதால் பாருங்க ஆத்திகர்களே சொல்லிவிட்டார்கள் என்று பயன்படுத்திக் கொள்கிறார்கள்.///

//இது எனது நண்பனுக்காக எழுதியது. அடிக்கடி என்னிடம் கேட்பான்; விவாதத்தை திசை திருப்புவது என்றால் என்ன என்று?///

மாயன் சொல்வதில் முழு உண்மை இல்லை ஆனாலும் அதை ஒதுக்கிவிடக் கூடியதே இல்லை.அன்றைய காலகட்டத்தில் பெரும்பான்மையான தமிழறிஞர்கள் சைவசமயத்தினராகவே இருந்தார்கள்.தூயசைவம் என்று சொல்பவர்கள் வைணவத்தை ஒதுக்கி இன்னும் சொல்லப்போனால் இந்து மதத்தில் சேர்க்காதீர்கள் என்றும் சொல்வர் சிலர்.
சைவம் வைணவம் சண்டை சாதாரணமானது அல்ல. இன்றைய தலைமுறை அதை தெரியாமல் இருக்கலாம். கொஞ்சம் அந்தக் கால புத்தகங்களை,குறிப்பேடுகளை பார்த்தால் கண்டுபிடித்துவிடலாம்.சைவம் உயரத்தில் இருந்த காலம்தான் அது.

அவர்களில் கணிசமானவர்கள் வைணவத்தை ஒதுக்குவதில் மட்டுமல்ல வெறுத்து ஒதுக்குவதிலும் துடியாய் இருந்திருக்கிறார்கள்.நாம் அவர்களை பள்ளிப் பாடத்தில் படித்த பிம்பங்களை வைத்தே எடை போடுகிறோம்.

பெயரில்லா சொன்னது…

இப்ப என்ன தை முதல் நாள்தான் புத்தாண்ணா அதுவும் சரிதான். அன்றைக்கும் கோயிலுக்குப் போகப் போகிறார்கள்.அவ்வளவுதானே!சித்திரைத் திருநாளயும் கொண்டாடிட்டாப் போச்சு!

பெயரில்லா சொன்னது…

இன்றைக்கு இருக்கிற வயதான திராவிட (60-70 வயதில்)இயக்கத்தினர் இந்த சைவ வைணவ சண்டையையும் அன்று ஒருத்தரை வெல்ல நாத்திக தலைமையுடம்(திராவிட)சேர்ந்துகொளவதும் உண்டு என்பதை நிச்சயம் அறிவார்கள்.அதையே மாயன் சொல்கிறார் என்று நினைக்கிறேன்

நம்பள்கி சொன்னது…

பாதி உண்மை ஒரு பொய்யை விட மோசம; பாதி கிணறு தாண்டுவது மாதிரி!

ஏதோ பெரியார் கடவுள் மறுப்பை ஆரம்பித்த பிறகும், இந்த தமிழ் அறிஞர்கள் முடிவு எடுத்த போதும் தான் சைவர்களுக்கும், வைஷ்ணவர்களுக்கும் சண்டை இருந்தா மாதிரி சொல்வது தவறு....அதை, அதைத்தான் நான் குறிப்பிட்டேன்; விவாதம் திசை திருப்பப் படுகிறது என்று.

1300 ஆண்டுகளுக்கு முன்பே சைவ மதத்தை சேர்ந்தவர்கள் எல்லா மதத்தவரையும் அழித்தனர். எந்த மதத்தினரை சைவர்கள் அழிக்கவில்லை??? குறிப்பாக சமண மதத்தை எடுத்துக் கொண்டால். இன்று காஞ்சியில் உள்ள கோவில்கள் சமண மதத்தினருடையது தான். 6000 சமணர்களை கழு ஏற்றியது சைவர்கள் தான். அது காங்கேயம் அருகில் உள்ள சிவன் மலையா? சரியாக தெரியவில்லை. கொங்கு நாட்டு தங்கங்கள் அதை தெளிவு படுத்தினால் நன்றாக இருக்கும்.

இந்த 60 வருடங்கள் பெயர்களை கொண்டு வந்தது சம்ஸ்க்ரித்த மோகத்தில்...தமிழை அழிக்க. கடவுள் மூலம் மதத்தின் மூலம் மக்களை அடிமைப் படுத்த. மதத்தை எதிர்க்க மனிதன் பயப்படுவான்.

இதில் சைவ-வைஷ்ணவ சண்டை என்பது நூற்றுக்கு நூறு தவறு; திசை திருப்பும் வேலை.

இந்தியாவில் இருந்த மதங்கள் ஏராளம்; அதை சமீபத்தில் ஒரு கூட்டாஞ்சோறாக்கினர்கள்--அதன் பெயர் இந்து மதம்!

அவ்வளவு ஏன். என் பெயர் என் சொந்தங்கள், மூதாதையர்கள் பெயர்களை வைத்தே நான் சைவ மதம் என்று எவனாலேயும் சொல்ல முடியும். எங்கள் மூதாதையர் சைவ மதம் தான். அவர்கள் செய்த தவறுக்கு நான் இன்று மன்னிப்பு கேட்கிறேன். தவறை தவறு என்று தெரியும் போது அதை ஒத்துக் கொள்ளவேண்டும்.

நானும் என் மனைவி, குழந்தைகள் மதத்தி தூக்கிப் போட்டு பல வருடங்கள் ஆகிறது.

எனக்கு எம்மதமும் சம்மதம் என்று சொல்வதை விட, எந்த மதமும் சம்மதமில்லை என்றே சொல்ல விரும்புகிறேன்.

Gaana Kabali சொன்னது…

தமிழ் புத்தாண்டு என்று சொல்லிக்கொண்டு வரும் அறுபது ஆண்டு பெயர்களில் ஒன்று கூட தமிழ் பெயர் இல்லை.

அன்று , வடமொழி ஆண்டுகளின் பெயர்களை தமிழ் புத்தாண்டு என்று இடைப்பட்ட காலத்தில் திணிப்பதற்கு ஒருசிலருக்கு உரிமை இருந்திருக்கிறது என்றால் , இப்பொழுது அதை மாற்றி அமைக்க தமிழனுக்கு உரிமை இல்லையா?

திங்களின் வளர்பிறை தேய்பிறை கொண்டே தமிழர்கள்; ஆண்டைக் கணித்தனர். அதனால்தான் மாதத்தை திங்கள் என்று அழைத்தனர்.
சங்க காலத் தமிழ் இலக்கண, இலக்கியங்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, திங்கள், ஆண்டு, ஊழி என்று வானியல் அடிப்படையில் வரையறை செய்துள்ளன. முழுமதி நாளில் ஞாயிறும் திங்களும் எதிர் எதிராக நிற்கும் என்ற வானவியல் உண்மையைப் புறநானூற்றுப் பாடல் (65) ஒன்று தெரிவிக்கிறது.
சங்க இலக்கியங்களில் தமிழ் மாதப்பெயர்கள் காணக்கிடைக்கின்றன. தை, மாசி (பதிற்றுப்பத்து) பங்குனி (புறநானூறு) சொல்லப்பட்டுள்ளது.
1. "தைஇத் திங்கள் தண்கயம் படியும்" – நற்றிணை

2. "தைஇத் திங்கள் தண்ணிய தரினும்" – குறுந்தொகை

3. "தைஇத் திங்கள் தண்கயம் போல்" – புறநாநூறு

4. "தைஇத் திங்கள் தண்கயம் போல" – ஐங்குறுநூறு

5. "தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ" – கலித்தொகை

தைப் பிறந்தால் வழி பிறக்கும், தை மழை நெய் மழை முதலான பழமொழிகள் இன்றும் தமிழ் மக்கள் நாவில் இன்றும் பயின்று வருகின்றன. இவை வாழையடி வாழையாக வாய்மொழிச் சான்றாக அமைந்துள்ளன.

இனி, தை முதல் நாளே புத்தாண்டு என்பதற்குரிய வானவியல் அடிப்படையிலான காரணத்தை காண்போம். பூமி ஒரு முறை கதிரவனைச் சுற்றிவரும் காலமே ஓர் ஆண்டாகும். இச்சுழற்சியில் ஒருபாதிக் காலம் கதிரவன் வடதிசை நோக்கியும் மறுபகுதிக் காலம் தென்திசை நோக்கியும் செல்வதாகக் காணப்படுகிறது. இதனால் ஓராண்டில் சூரியனின் பயணம், வடசெலவு (உத்ராயணம்) என்றும் தென்செலவு (தட்சனாயணம்) என்றும் சொல்லப்படும். தை முதல் ஆனி வரை ஆறு மாதம் வடசெலவும் ஆடி முதல் மார்கழி வரை தென்செலவுமாகும். அந்தவககயில், கதிரவன் வடசெலவைத் தையில்தான் தொடங்குகிறது. இந்த வானியல் உண்மையை அறிந்த பழந்தமிழர் தைத்திங்களைப் புத்தாண்டாக வைத்தது மிகவும் பொருத்தமானதே.

அன்று , வடமொழி ஆண்டுகளின் பெயர்களை தமிழ் புத்தாண்டு என்று இடைப்பட்ட காலத்தில் திணிப்பதற்கு ஒருசிலருக்கு உரிமை இருந்திருக்கிறது என்றால் , இப்பொழுது அதை மாற்றி அமைக்க தமிழனுக்கு உரிமை இல்லையா?

தருமி சொன்னது…

//பழனி.கந்தசாமி சொன்னது…

உலகத்தோடொட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலாதார் - குறள்.

மன்னிக்கவும். உங்கள் கருத்துகளுடன்தான் நான் மாறுபடுகிறேன்.//

மன்னிக்கவும். உங்கள் கருத்துகளுடன் நான் முற்றிலும் மாறுபடுகிறேன். - <a href="http://dharumi.blogspot.in/2005/10/87.html”>3-ம் கட்டளை பார்க்க </a>

Gaana Kabali சொன்னது…

எல்லாம் சம்ஸ்கிருத பெயர்களை வைத்துக்கொண்டு ஏனையா தமிழ் புத்தாண்டு என்று சொல்லிக்கொள்கிறீர்?

ஜனவரி முதல் நாளை ஆங்கில புத்தாண்டாக கொண்டாடுவது போல், சித்திரை முதல் நாளை சம்ஸ்கிருத புத்தாண்டு என்று கொண்டாடிவிட்டு போங்களேன் . உங்களை யார் வேண்டாம் என்று சொன்னது?

பண்டையத் தமிழரின் வழக்கத்தை மாற்றி தமிழ் பண்பாட்டோடு ஏன் விளையாடுகிறீர்?

Kesavan சொன்னது…

// நான் எனது தமிழ் புத்தாண்டை திருவள்ளுர் ஆண்டின் தைத் திங்களில் மாற்றிக் கொண்டு நான்கு ஆண்டுகள் ஆயிற்று, //
// ஏற்கனவே 71 ஆண்டுகளுக்கு முன்பே தனித் தமிழ் ஆர்வலர்களால் பரிந்துரைக்கப்பட்டவையே,//
71 ஆண்டுகளுக்கு முன்னாடியே சொல்லிட்டாங்க என்று சொல்கிறீர்கள் . அதை ஏன் கலைஞர் சொன்னவுடன் மாற்றி கொண்டீர்கள் . கலைஞர் சட்டம் போடுகிறார் போடவில்லை அது வேறு விஷயம் . உங்களுக்கு இந்த விஷயம் தெரிந்த நாள் முதலே நீங்க மாற்றி கொண்டிருக்கலாமே

கோவி.கண்ணன் சொன்னது…

//71 ஆண்டுகளுக்கு முன்னாடியே சொல்லிட்டாங்க என்று சொல்கிறீர்கள் . அதை ஏன் கலைஞர் சொன்னவுடன் மாற்றி கொண்டீர்கள் . கலைஞர் சட்டம் போடுகிறார் போடவில்லை அது வேறு விஷயம் . உங்களுக்கு இந்த விஷயம் தெரிந்த நாள் முதலே நீங்க மாற்றி கொண்டிருக்கலாமே//

எல்லாம் ஒரு கணக்கு தான் தம்பி. பிராமணாஸ் என்பதில் ஐயர் ஐயங்கார் யாரைக் கேட்டு இணைந்தாங்க, எதாவது விழா எடுத்தாங்களா ?

அவாளுக்கும் இவாளுக்கும் கொடுக்கல் வாங்கல் முன்ன இருந்ததா ? இப்பவும் இருக்கிறதா ? நீங்களெல்லாம் சிவன் கோவிலுக்கு போக ஆரம்பிச்சிட்டேளா ?

மாற்றம் என்பது நேரம் அமையும் போது தன்னால் நடக்கும், அது கருணாநிதி அறிவித்த நேரமாக இருந்தாலும்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்