திட்டமிடுவதைவிட தற்செயலாக நடப்பது பல வேளைகளில் நன்றாகவே இருக்கும், நட்சத்திரப் பதிவு எழுத இரண்டு வார முன்கூட்டியே தகவல் கிடைத்து, நேரம் கிடைத்திருந்தை வைத்து, நூலகத்தில் இருந்து சில நூல்களை எடுத்து வந்து அதில் இருப்பவற்றில் சிலவற்றை எழுதலாம் என்றிருந்தேன், ஆனால் இடைப்பட்ட காலத்தில் காதில் விழுந்தவைகளை வைத்து எழுதுவதே சிறப்பு என்று எடுத்துக் கொடுப்பதாக சில நடந்தேறியது. இந்த இடுகையையும் தற்பொழுது (இன்று) எழுதுகிறேன்.
********
நானும் அலுவலக தோழர் / தோழிகளும் அலுவலகம் முடிந்ததும் ஒன்றாக செல்வது வழக்கம், அதில் வாகனம் வைத்திருப்பவர் அழைத்துச் சென்று அருகில் உள்ள தொடர்வண்டி நிலையத்தில் அல்லது பேருந்து நிறுத்ததிற்கிடையே விடுவார். அப்படிச் செல்லும் போது எதையாவது பேசிக் கொண்டு செல்வோம், சென்றவாரம் உடன் பணிபுரியும் பெண் தோழர் மலேசியாவில் இருந்து சிங்கப்பூரில் குடியேறி குடியுரிமை பெற்றவர், பேச்சின் தொடர்பில் சொன்னார், 'சிங்கப்பூரில் இருந்து மலேசியா பிரியும் முன் சிங்கப்பூர் மலேசியாவிற்கு சொந்தமான நாடு'. அதற்கு மற்றொரு நண்பர், அவரும் மலேசியவாசிதான் ஆனால் சிங்கப்பூரில் தொடர்ந்து தங்கும் உரிமை பெற்றவர், 'அப்படியெல்லாம் இல்லை, நீ போய் வரலாற்றைப் படி, நீ வரலாறு பாடத்தை பள்ளியில் சரியாகப் படிக்கவில்லை" என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். எனக்கும் ஓரளவு சிங்கப்பூர் வரலாறு தெரியும் ஆதலால் அவர் சொன்னதை ஆமோதித்தேன்.
சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவர்கள் தவிர்த்து குடியேறிய பிறரும், மலேசியர்களும் சிங்கப்பூர் மலேசியாவிற்கு சொந்தமான மாநிலமாக முன்பு எப்போதும் இருந்தது என்றே நம்புகிறார்கள், ஆனால் வரலாறு வேறுவிதமாகத்தான் இருக்கிறது, சிங்கப்பூர் தனி நிலமாகத்தான் வெள்ளைக்காரர்கள் மற்றும் ஜப்பானியர்களின் ஆளுமைக்குள் விழுந்திருந்தது, வெள்ளையர்களின் ஆதிக்கத்தில் இருந்த மலேசியா, சாபா, சரோவாக் ஆகிய பகுதிகள் விடுதலை அடைந்த போது சிங்கப்பூரும் விடுதலை அடைந்தது, அப்போதே தொழில் துறை மற்றும் கப்பல் கட்டுமானங்களில் சிங்கப்பூர் தனித்து இயங்கியது. வெள்ளையர்களிடம் இருந்து விடுதலைக் கிடைத்த பிறகு சிங்கப்பூர் தனிநாடாக இயங்கப் போதிய இயற்கை வளங்கள் இல்லை என்பதால் அப்போதைய சிங்கப்பூர் அரசியல் தலைவர்கள் மலேசியாவின் மாநிலப் பகுதியாக இணைந்து கொண்டனர், இது நடந்தது 31 ஆகஸ்ட் 1963, இதன் பிறகு சிங்கப்பூர் அரசியல்வாதிகள் சிங்கப்பூருக்கு சிறப்பு உரிமைகள் கோரவே, ஏற்றுக் கொள்ளாத மலேசிய தலைமை சிங்கப்பூர் தனித்து இயங்கலாமே என்று கூறி 9 ஆகஸ்ட் 1965ல் சிங்கப்பூர் தனித்து விடப்பட்டது, இருந்தாலும் நீர் மற்றும் போக்குவரத்திற்கான ஒப்பந்தங்களுடன் சிங்கப்பூர் தனித்தே இயங்கலாம் என்ற துணிவுடன் தனிநாடு என்று அறிவித்துக் கொண்டதுடன், சிங்கப்பூரை உலக வர்தக மையமாக மாற்றி, சில ஆண்டுகளிலேயே சிங்கப்பூர் வெள்ளியை மதிப்பு மிக்கதாக மாற்றி ஆசியாவின் முதலில் முன்னேறிய நாடு என்ற பெருமையைப் பெற்றுத்தந்தார் சிங்கபூர் முன்னாள் பிரதமரும் இன்றைய மதியுரை அமைச்சருமான திரு லீ க்வான் யூ. இது கடந்த 50 ஆண்டுகளில் சிங்கப்பூர் பற்றிய சுருக்கமான வரலாறு.
சிங்கப்பூர் மலேசியாவின் மாநிலமாக இயங்கிவந்தது வெறும் இரண்டே ஆண்டுகள் தான். மற்றபடி சிங்கப்பூர் வரலாற்றில் மலேசியாவின் பகுதியாக சொந்தமாக இருந்த வரலாறே கிடையாது, தவிர மலேசியாவும் பல்வேறு குறுநில மன்னர் ஆட்சிகளால் ஒரே மொழிப் பேசுபவர்களின் தனித்தனி மாநிலமாகவே இருந்தது, மலேசியாவின் பழங்குடிகள் மலைவாசிகள் தான், இன்னும் அவர்கள் மலைவாசிகளாகவே சொல்லப்பட்டு அவர்களை பூமி புத்ரா என்று கூறித் தனிச்சலுகையும் பெறுகிறார்கள், பின்னர் இந்த பூமி புத்ரா சலுகைக்குள் மலாய்காரர்களும் பெரும்பான்மை என்னும் அரசியல் காரணங்களுக்காக இடம் பெற்றுவருகின்றனர், அங்கேயே பிறந்து வளர்ந்த சீனர்களுக்கு அந்த உரிமை கிடையாது.
இதே போன்று தான் இந்தியச் சொல்லாடல்களில் பாகிஸ்தான் இந்தியாவின் பகுதியாக இருந்து பிரிந்து சென்றது அல்லது பாகிஸ்தான் என்பது இந்தியாவிலிருந்து பிடுங்கிக் கொள்ளப்பட்ட பகுதி என்கிற கருத்தியல் இந்திய மக்களிடம் வரலாறாகச் சொல்லப்படுகிறது, பரதன் ஆண்டான் என்கிற எழுதப்படாத நம்பிக்கைத் தவிர்த்து மொத்த இந்தியாவையும் ஒரே குடையின் கீழ் ஆண்ட மன்னர்கள் இந்தியாவில் இல்லை, பல குறுநில மன்னர்கள் மொழி வாரி அடிப்படையில் ஆட்சி செலுத்தி வந்தனர், அவர்களுக்குள் ஒற்றுமைகள் என்பதே இல்லாமல் இருந்தது, தமிழகத்தைப் பொருத்த அளவில் சேர, சோழ, பாண்டிய பரம்பரைகளும் அவர்கள் ஆளுமைக்குட்பட்டவைகள் மூன்று நாடுகளாக அறியப்பட்ட வரலாற்றை ஒப்பிட்டு மொத்த இந்தியாவையும் பார்க்க நூற்றுக் கணக்கான மன்னர்கள் இந்தியாவெங்கும் பல்வேறு நாடுகளாகப் பிரித்து ஆட்சி செய்திருக்க வேண்டும், ஒரே மன்னரின் ஆளுகைக்குள் இருந்திருந்தால் மொகலாயர்களோ அதற்கு முன் லோடிகளோ, கில்ஜிகளோ இந்தியாவிற்குள் நுழைந்து கைப்பற்றி இருக்க முடியாது, தவிர இஸ்லாமிய மொகலாய ஆட்சியாளர்களின் ஆட்சிக்காலம் வெறும் 200 ஆண்டுகள் தான் அவர்களாலும் மொத்த இந்தியாவையும் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை, அல்லது அந்த முயற்சிக்கு முன்பே வெள்ளையர்கள் வசம் இந்தியா வீழ்ந்ததால் ஒட்டுமொத்த இந்தியாவை ஆண்ட பெருமையை வெள்ளையர்களே பெற்றார்கள்.
மதவாத இஸ்லாமியர் மற்றும் பெரும்பான்மை இந்துக்கள் என்ற அடிப்படையில் வெள்ளையர்கள் விட்டுச் சென்ற பாரதம், பாகிஸ்தான் என்றும் இந்தியா என்றும் தனித்தனி பகுதிகளாக தற்பொழுது அறியப்படுகிறது, பாகிஸ்தானில் அங்குள்ளப் பாடத்திட்டத்தில் பாகிஸ்தானில் இருந்து பிரிக்கப்பட்ட / பிடுங்கப்பட்ட பெரும்பகுதி நிலப்பகுதியே இந்தியா என்று சொல்லப்படுகிறது என்கிற பாடம் இருந்தால் நமக்கு ஏற்பாக இருக்குமா ? ஆனாலும் இந்தியப் பாடங்களாக தேசப்பற்று என்ற ஊசியாக போடப்படுவது பாகிஸ்தான் இந்தியாவின் பகுதியாக இருந்தது என்பதே, கிழக்கு பாகிஸ்தான், மேற்கு பாகிஸ்தான் அரசியல் ரீதியாக பிரிந்த பிறகும் பங்களாதேஸ் பாகிஸ்தானின் பகுதியாக இருந்தது என்று எப்படிச் சொல்ல முடியாதோ அப்படித்தான், அப்படி இருந்திருந்தால் பாகிஸ்தானின் பெயர் இன்றும் மேற்கு பாகிஸ்தான் என்றே சொல்லப்பட்டு வந்திருக்கும், அரசியல் காரணங்களுக்காக நிலப் பரப்புகளின் பெயர்களை வைத்துக் கொள்கிறார்களே தவிர ஒன்றில் இருந்து மற்றொன்று பிரிந்தது என்பதெல்லாம் வெறும் அரசியல் பேச்சுகள் தான், வடகொரியா தென்கொரியா இவைகளில் உண்மையான கொரியா எது என்பதற்கு விடைகள் கிடையாது, கொள்கை ரீதியாக அவர்களின் அரசியல் சார்ந்த நிலம் பிரிந்து பெயர் வழங்கப்படுகிறது.
ஒரு பேச்சுக்கு அல்லது வெற்றிகரமாக இந்தியாவை வளர்ப்பதற்கு இந்தியா வட இந்தியா தென் இந்தியா என்று பிரிவதாக வைத்துக் கொள்வோம், அப்போது எது இந்தியாவில் இருந்து பிரிந்தது என்று எப்படிச் சொல்வது எதை உண்மையான இந்தியப் பகுதி என்று எப்படிச் சொல்வது ?
- சிங்கப்பூர் மலேசியாவிற்கு சொந்தமான நாடு இல்லை
- பாகிஸ்தான் இந்தியாவிற்கு சொந்தமான நாடு இல்லை (வேண்டுமானால் பிரிட்டிஸ் இந்தியாவின் பகுதிக்குள் பாகிஸ்தான் இருந்தது என்று சொல்லலாம், அதே பிரிட்டிஸ் இந்தியாவின் பகுதிக்குள் இலங்கையும் உண்டு)
- பங்களாதேஸ் பாகிஸ்தானுக்கு சொந்தமான நாடு இல்லை
- இலங்கை எந்த ஒரு காலத்திலும் இந்தியவிற்கு சொந்தமான நாடாக இருந்ததே இல்லை.
- அந்தமான் நிக்கோபார் நில அமைப்பின் படி இந்தோனேசியாவின் சுமத்திரா தீவின் தொடர்ச்சியாக இருக்கிறது, ஞாயமாகப் பார்த்தால் அது இந்தோனேசியாவின் பகுதியாக அல்லது தாய்லாந்தின் பகுதியாக தொடர்ந்திருக்கும், இந்திய கைதிகளை அடைக்கப் பயன்படுத்தியதால் வெள்ளைக்காரர்கள் அதை கொடையாக இந்தியாவிற்குக் கொடுத்து இந்தியப் பகுதியாக மாற்றிச் சென்றனர்.
22 கருத்துகள்:
Follow ...
நட்சத்திர வாழ்த்துக்கள்
முதற்கண்,
நட்சத்திர வாழ்த்துக்கள்!
பதிவில் சொல்லப் பட்ட அனைத்
தும் நன்று!
ஆய்ந்து எழுதப் பட்டுள்து!
புலவர் சா இராமாநுசம்
இலங்கை எந்த ஒரு காலத்திலும் இந்தியவிற்கு சொந்தமான நாடாக இருந்ததே இல்லை.//
ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தில் இலங்கை தமிழகத்துக்கு சொந்த மான நாடு
Right
Sir if Korea split into north and south Korea ur statements are right. But India separated as India and Pakistan then... What u will say?
கோவி,
//அப்படியெல்லாம் இல்லை, நீ போய் வரலாற்றைப் படி, நீ வரலாறு பாடத்தை பள்ளியில் சரியாகப் படிக்கவில்லை" என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். எனக்கும் ஓரளவு சிங்கப்பூர் வரலாறு தெரியும் ஆதலால் அவர் சொன்னதை ஆமோதித்தேன்.//
ஹி..ஹி நானும் அதே தான் சொல்கிறேன் நீங்க இந்திய வரலாற்றை சரியா படிக்கணும்னு.
சிங்கை-மலேசியா எப்படியோ, ஆனால் இந்தியா-பாக்கிஸ்தான் அப்படியல்ல, நீங்களூம் சில மேப்கள் போட்டு இருக்கிங்க ,இணையத்தில் இருந்து தான் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்,அப்படியானால் நீங்கள் சிலவற்றை பார்க்காமலோ,படிக்கமாலோ இருந்து இருக்க முடியாது,பின் எப்படி இப்படி எழுதினீர்கள்,ஏதாவது நுண்ணரசியல்?
குஷாணர்கள் வம்ச ஆட்சிக்காலத்தில் அதாவது 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இப்போதைய பாகிஸ்தான் எல்லாம் இந்திய நிலப்பகுதி தான் . கனிஷ்கர் குஷாணர்களின் குறிப்பிட தகுந்த மன்னர். இப்போது ஆப்கானில் உள்ள காந்தகார் எல்லாம் கனிஷ்கர் ஆட்சிக்குட்பட்டப்பகுதியே ,காந்தார கலை சிற்பங்கள் படித்து இருப்பீர்களே,
மஹாபாரதத்தில் வரும் காந்தாரி ,காந்தகார் இளவரசி என்பதாலே காந்தாரி என அழைக்கப்பட்டார்.
அது எல்லாம் ரொம்ப பழசு, பிரிட்டிஷ் காலத்துக்கு வருவோம்(ஈஸ்ட் இன்டியா கம்பெனி) ,பஞ்சாப் மஹாராஜா ரஞ்சித் சிங்கின் தலை நகரம் லாகூர் தான்.பிரிட்டிஷ் காலத்தில் இப்போதைய பாகிஸ்தானின் பலப்பகுதிகளும் பஞ்சாப் மன்னர் ஆட்சியில் தான்.
மஹாராஜா ரஞ்சித்சிங்க்
அந்த மான் பகுதிக்கு வருவோம், ஜாவா சுமத்திரா ,கடராம் எல்லாம் சோழர்கள் ஆண்டார்கள்னு படிச்சோமே அது எல்லாம் எவை என நினைக்கிறிங்க,
ஜாவா என்பதே சாவகம் ,அதுவே அந்தமான் தீவுகள், கடாரம் என்பது பர்மா, சுமத்திரா என்பது இந்தோனேசியா, நீங்களே பாலித்தீவு இந்து தீவுனு பயணக்கட்டுரை எழுதியதை மறந்துவிட்டீர்களா?
சிங்கப்பூர் கூட சிங்கப்புரம் என சோழர்கள் வசம் இருந்த பகுதினு ஒரு வரலாறு இருக்கு :-))
பின்னாளில் அந்தமான் மட்டுமே நம்மோடு வந்துவிட்டது.
இலங்கையும் அப்படித்தான் மணிபல்லவ தீவு என்பது இலங்கையே, கரிகாலன் காலத்திலும் தொடர்பு உண்டு ,பின்னர் ராஜ ராஜன்,ராஜேந்திரன் எல்லாம் ஆண்டார்கள்.தமிழர்கள் வரலாறு சரியாக பராமரிக்கப்படவில்லை, ஆவணப்படுத்தப்படவும் இல்லை ,அதனால் எல்லாமே கட்டுக்கதைப்போல நினைத்துக்கொள்கிறார்கள் மேற்கத்திய ஆய்வாளர்கள். அதையே அவர்கள் எழுதவும் செய்வதால் இப்படி ஒரு நிலை.
இன்னும் தேடினால் விரிவாக சொல்ல முடியும், எனவே வரலாற்றினை தெரியாமல் யூகத்தின் அடிப்படையில் பேசுவது சரியல்ல.
வவ்வால்,
இந்தியா என்பது ஒரே நாடாக முன்பு எப்போதாவது யாரோ ஒருவரால் ஆளப்பட்டு இருந்தால் பின்னர் அது பிரிந்தது என்று சொல்ல முடியும், குறுநில மன்னர் ஆட்சியில் எப்படி இருந்ததோ அப்படியே மக்கள் ஆட்சியில் மதவாரியாக பாகிஸ்தான் என்றும், இந்தியா என்றும் பெயர் பெற்றது மற்றபடி விசா நடைமுறைகள் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்தால் எதை இந்தியா என்று சொல்லுவீர்கள். ஆதாரம் கொடுங்க :)
//jaisankar jaganathan கூறியது...
இலங்கை எந்த ஒரு காலத்திலும் இந்தியவிற்கு சொந்தமான நாடாக இருந்ததே இல்லை.//
ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தில் இலங்கை தமிழகத்துக்கு சொந்த மான நாடு//
ராஜேந்திர சோழன் முழு இந்தியாவை ஆண்டாரா ? நீங்கள் சொல்வதைப் பார்த்தால் சோழர்கள் ஆட்சிகாலத்தில் இலங்கை சோழர்களின் கட்டுபாட்டிற்குள் வந்தது என்று தான் சொல்ல முடியுமே அன்றி அது இந்தியாவின் ஆளுமைக்குள் இருந்தது என்று சொல்ல முடியாது.
//But India separated as India and Pakistan then... What u will say?//
மாங்பழத்தை இரண்டு துண்டாக அறிந்து ஒரு துண்டை சாப்பிடுவரிடம் நீ கன்னத்தை சாப்பிட்டாய் நான் மாம்பழம் சாப்பிட்டேன் என்று சொல்வது போன்றது, வெள்ளையருக்கும் பிறகும் இந்தியா என்ற பெயரை தக்க வைத்துக் கொண்டுள்ளதால் இந்திய நிலப்பரப்பில் இருந்து பாகிஸ்தான் பிடுங்கப்பட்டது என்றாகிவிடுமா ? தவிர பாகிஸ்தானியர்களில் பெரும்பான்மையினர் இஸ்லாம் சார்ந்த இந்திய வம்சாவளியினர் தானே
அறியாத தகவல்கள்
வாழ்த்துக்கள் ஓய்... ஸ்டார் ஆயிட்டீரே! நாகப்பட்டினம்காரன் என்கிற முறையில் ரொம்பப் பெருமிதமா இருக்கு.....
வாழ்த்துக்கள் ஓய்... ஸ்டார் ஆயிட்டீரு! நாகப்பட்டினம்காரன் என்கிற வகையில் பெருமையா இருக்கு!!!
http://kgjawarlal.wordpress.com
கோவி,
உங்க கிட்டே பாகிஸ்தான் என்றழைக்கப்படும் பகுதி முன்னர் இந்தியா அல்லனு சொல்ல ஆதாரம் இருக்கா?
நான் தான் மஹாராஜா ரஞ்சித் சிங்க் பற்றி சுட்டிக்கொடுத்து இருக்கேனே. பார்க்காமல் மீண்டும் ஆதாரம் கொடுங்க என்றால்?
உங்களுக்கு இன்னமும் புரியவில்லை எனில் கொஞ்சம் விளக்கமாகவே சொல்கிறேன்
#இந்தியா என்றப்பெயரே இந்துஸ்தான் என்பதில் இருந்து வந்தது , இந்துஸ்தான் என்பது சிந்து நதி பாயும் பகுதி என்பதில் இருந்து வந்தது. சிந்து நதி பாயும் இடம் எங்கே இருக்கிறது என தேடிப்பார்க்கவும்.
#ரஞ்சித் சிங்க் மறைவுக்கு பின் அவரது பகுதியும் ஈஸ்ட் இன்டியா கம்பெனி ஆளுகையில் சேர்க்கப்பட்டது, அதாவாது லாகூர், பெஷாவர் ஆகியப்பகுதி அப்படி எனில் இந்தியா என்றப்பெயரில் அவ்விடங்கள் வெள்ளையர்களால் ஆளப்பட்டு வந்துள்ளது. பின்னர் 1857 இல் விக்டோரியா மஹாராணி அறிக்கையின் படி பிரிட்டிஷ் இந்தியா ஆனது.எனவே இந்தியா என்ற பெயரில் தான் இப்போதைய பாகிஸ்தானின் பகுதிகள் அறியப்பட்டு வந்துள்ளது தெளிவாகும்.
நீங்க சுதந்திரத்துக்கு அப்புறமா தான் இந்தியா என்ற பெயர் புழக்கத்துக்கு வந்தது என நினைத்துக்கொண்டு இருப்பதால் எங்கே இந்தியானு ஒரே நாடாக ஆளப்பட்டது என்று கேட்கிறீர்கள்.
பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்து பிரிக்கப்பட்டால் அது இந்தியாவில் இருந்து பிரிக்கப்பட்டதே.
இந்த விளக்கம் போதுமா :-))
நட்சத்திர வாழ்த்துக்கள்.
நல்ல பகிர்வு.
//ஜாவா என்பதே சாவகம் ,அதுவே அந்தமான் தீவுகள், கடாரம் என்பது பர்மா, சுமத்திரா என்பது இந்தோனேசியா, நீங்களே பாலித்தீவு இந்து தீவுனு பயணக்கட்டுரை எழுதியதை மறந்துவிட்டீர்களா?//
எனக்கு தெரிந்தவரை கடாரம் என்பது மலேசியாவில் உள்ள கெடா மாநிலத்தை குறிப்பதாகும்.
http://en.wikipedia.org/wiki/Early_History_of_Kedah
http://en.wikipedia.org/wiki/Bujang_Valley
கடாரம் என்பது தற்போதைய மலேசியாவின் கெடா மாநிலம் ஆகும்.
இந்து / இந்தியா / சிந்து - மத்திய ஆசியாவிலிருந்து ஹிந்துகுஷ் மலையைத் தாண்டியவர்கள் வைத்த பெயர் இல்லையா?
---------------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - ஏப்'2012)
வண்க்கம் நண்பரே,
நல்ல பதிவு.
நாடுகள் என்பது ஆட்சி செலுத்தும் வசதிக்காக் உருவாக்கப் பட்டவை.இதில் புனிதம்,கடவுளால் அளிக்கப்பட்டது,ஆ(மா)ண்டவன் கட்டளை என்பதெல்லாம் பயனற்ற விடயங்கள்.
வரலாற்றில் நாடுகள் தோன்றுவதும், பிரிவது மிக சாதாரணமான் விடயம்.நாடு என்பதில் பல் தேசிய இனங்கள்,மொழி பேசுவோர் இருக்க்லாம்.எனினும் எந்த நாடாயினும் மத்சார்பின்மையும் ஜனநாயகமும் இல்லா விட்டால் அவை நாடு என கருதப்பட தகுதியற்றவை.
இந்தியாவில் ஊழல்,உள்ளிட்ட பல் பிரச்சினைகள் உண்டு என்றாலும் ஜனநாயக முறையில் ஒரு ஆட்சி மாற்றம் எளிதில் நடக்கிறது.ஆனால் உலகின் பல் நாடுகளில் ஆட்சி மாற்றம் என்றால் அங்கு ஆள்பவர்களை குடும்பத்தோடு இவ்வுலக்ம் விட்டே அனுப்புதல் என்றே பொருள்.
சிறு நாடுகள் பெரும்பாலும் பொருளாதார ரீதியாக் வெற்றி பெறுவது இல்லை என்ற கருத்தை பொய்யாக்கியது சிங்கப்பூர்.
ஜாய்ஃபுல் சிங்கப்பூர்,கல்ர்ஃபுல் மலேசியா என ப்ரியா திரைப்படத்தில் பார்த்த போதே பிரமிப்பு!!!!
நன்றி
renga,
நீங்க சொன்னது போல அது மலேஷியாவில் தான் இருக்கு, நான் பர்மாவை குறிக்கும் என முன்னர் படித்தது நினைவில் இருந்தே குறிப்பிட்டேன் மேலும் பர்மாவுடன் இணைந்த நிலப்பரப்பு பகுதியில் வருகிறது, என்பதால் சரியா இருக்கும் என்று நினைத்துவிட்டேன்.
அப்போது கெடாரம் என்பது ஒரு நாடு, எனவே அதனை சோழர்கள் வென்றார்கள் என்று இங்கே கோவிக்கு நினைவூட்டவே அதாவது அந்தமானுக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு வெள்ளைக்காரன் பார்த்துக்கொடுத்தது என்று சொன்னதால் பழைய வரலாற்றை குறிப்பிட சொன்னேன்.கடாரம் மலேசியாவில் இருக்கிறதா எங்கு இருக்கிறது என்பது பிரச்சினை இல்லை.
மலேஷியா சோழர்களின் ஆட்சிக்கு கீழ் இருந்தது என்று முழுதாக சொல்லவும் முடியாது ஏன் எனில் அது பல தீவுகள் கொண்டதாக இருந்தது. எது வரைக்கும் பிடித்து இருந்தார்கல் என்பதும் தெரியவில்லை.இந்தோனேசியாவும் அப்படியே என்பதால் சொல்ல முடியாது ஆனால் அப்பகுதிகளில் தமிழ் மன்னர்கள் ஆதிக்கம் இருந்தது என்பதை குறிப்பிடவே.
எப்படியே நீங்களே சொல்லிடுங்க அந்தமான் எல்லாம் வெள்ளைக்காரனுக்கு முன்னரே தமிழ்நாட்டுக்கு சொந்தம்னு. ஏன் எனில் கோவி வரலாற்றை கொத்துக்கறி போட்டு விட்டார். :-))
இந்தோனேசியாவில் ஜாவா இருக்குனு சொன்னாலும் அந்தமானும் ஜாவா என்று தான் படித்த நினைவு, ஜாவா என்பது அந்தமானையே குறிக்கும் என்று விளக்கம் எல்லாம் போட்டு இருந்தது.அந்த மானில் வசிக்கும் பூர்வகுடிகளில் ஒன்று ஜாவர் இந்தியன் என்று இப்போதும் உள்ளார்கள்.
கோவி,
100 சதுர கிலோமீட்டர் உள்ள ஒரு பகுதி 0000 ஆண்டில் ஒரு அரசனால் ஆளப்பட்டு இருந்து 2012 ஆம் ஆண்டில் அது 10 சதுர கிலோமீட்டர் கொண்ட 10 தனி அரசாக இருந்தால், அந்தப் பத்தும் 0000 ல் ஒரே நாடாக இருந்தது என்று சொல்வது தவறு இல்லை.
இது வெறுமனே வரலாற்றுக் குறிப்புக்காகவே. அதாவது "சொ.க" வின் பேரன் "ம.க" என்று சொல்லி ஒரு வரலாற்றுத் தொடர்பை ஏற்படுத்துவதே வரலாற்று ஆசிரியர்களின் நோக்கம்.
ஆனால் அப்படிச் சொல்வதால் ஏற்றமோ தாழ்வோ உள்ளது என்று ஒருவன் நினைத்தால் அவர்களை என்ன செய்ய? :-((((
***
உடுப்பி ஒரு காலத்தில் ஒன்றுபட்ட சென்னை மாகாணத்தில் இருந்தது என்றால் அது வரலாறு.
// Madras State was a state in the Republic of India. At the time of its formation in 1950, it included the whole of present-day Tamil Nadu, Coastal Andhra and Rayalaseema, the Malabar region of North Kerala, and the Bellary, Dakshin Kannada and Udupi districts of Karnataka. Coastal Andhra and Rayalaseema were separated to form Andhra State in 1953 with its capital at Kurnool while South Canara and Bellary districts were merged with Mysore and Malabar district with Travancore-Cochin in 1956. //
ஆனால் அப்படி இருந்ததைச் சொன்னால் கவுரவக் குறைச்சல் என்று நினைப்பது (இன்றைய உடுப்பி வாசிகள்) அல்லது அப்படி இருந்ததாகச் சொல்வது பெருமையாக இருப்பதாக நினைப்பது (இன்றைய தமிழ்நட்டவர்கள்) என்றால் , அவர்களை வரலாற்று மூடர்கள் என்று சொல்லலாம்.
***
முன்னதை தொடர்பில் வைத்து பின்னதைச் சுட்டுவது என்பது ஒரு வரலாற்று தொடர்ச்சிக்காகவே மட்டுமேயன்றி ஏற்றம்/இறக்கம் காட்ட அல்ல.
***
ஆம் இன்றய பங்களாதேஷ் ஒரு காலத்தில் பாகிஸ்தான் அரசில் ஒரு அங்கமாக இருந்தது என்றால் அதில் வரலாற்றைத் தவிர ஒன்றும் இல்லை.
****
இந்தியா/பாகிஸ்தான்
நீங்கள் வரலாற்றை எங்கிருந்து தொடங்குகிறீர்கள் என்பதில் இருக்கிறது.
பிரிட்டிஷின் ஆட்சியில் அறியப்பட்ட இந்தியாவாவில் இருந்தா ?
அப்படிப் பார்த்தாலும் இன்றைய பாகிஸ்தான் அன்றைய பிரிடிஷ் இந்திய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியே.
http://en.wikipedia.org/wiki/File:British_Indian_Empire_1909_Imperial_Gazetteer_of_India.jpg
நீங்கள் எந்த இடத்தில் இருந்து உங்கள் பார்வையை ஆரம்பிக்கிறீர்கள் என்பது முக்கியம்.
மொகலாயர்களின் காலம் என்றால் அது வேறு வடிவம்
http://en.wikipedia.org/wiki/File:Mughal_Ages.jpeg
எனவே, சிங்கப்பூர் ஒரு காலத்தில் மலேசியாவுடன் இருந்தது (அது இரண்டு ஆண்டுகள் என்றாலும்) என்பதில் எந்த கவுரவக் குறைச்சலும் இல்லை. அதுதான் இங்கே புரிந்து கொள்ளப்படவேண்டியது. :-)))
**
இந்தியாவை வெள்ளைக்காரர் ஆண்டார்கள் எனது வரலாறு. இதைச் சொல்வதில் கவுரவக் குறைச்சல் ஒன்றும் இல்லை. ஆனால் நம் கண்முன்னே ஈழத்தைவிட்டு மக்களை பக்சே விரட்டினான் என்பதுதான் நமக்கு கவுரவக் குறைச்சல். நாளை இது வரலாறு ஆகும்போது அந்த தலைமுறை ஒன்றும் செய்ய இயலாது. :-(((
.
//கிழக்கு பாகிஸ்தான், மேற்கு பாகிஸ்தான் அரசியல் ரீதியாக பிரிந்த பிறகும் பங்களாதேஸ் பாகிஸ்தானின் பகுதியாக இருந்தது என்று எப்படிச் சொல்ல முடியாதோ அப்படித்தான், அப்படி இருந்திருந்தால் பாகிஸ்தானின் பெயர் இன்றும் மேற்கு பாகிஸ்தான் என்றே சொல்லப்பட்டு வந்திருக்கும், //
கோவி!இங்கெயே தடுமாறுகிறீர்களோ என்று நினைத்தேன்.ஆனால் வவ்வால்,கல்வெட்டின் அழகான பின்னூட்டங்களே பதிவுக்கான பதில்கள்.
படித்தேன்...சில கேள்விகள். வெள்ளைக் காரண வருவதற்கு முன் இந்தியா இருந்ததா? இல்லை. பல மன்னர்கள் ஆண்ட ஒரு sub-Continent தான். இந்தியா என்று ஒரு நாடு இல்ல. இருந்தால் பட்டேல் என்ன செய்தார்.
இந்தியா ஒரு நாடு இல்லை. அது ஆப்ரிக்ககா மாதிரி ஒரு கண்டம் தான். ஆனால் துணைக் கண்டம்.
தமிழ் நாட்ட்டின் கலாச்சாரத்திற்கும் ஏனைய வடக்திகாரன் கலாச்சாரத்திற்கும் ஒரு தொடர்பும் கிடையாது. பெவிகால் போட்டு ஒட்டின மாதிரி.
//மஹாபாரதத்தில் வரும் காந்தாரி ,காந்தகார் இளவரசி என்பதாலே காந்தாரி என அழைக்கப்பட்டார்///
மஹாபாரதம் ஒரு கதை. அதை எதற்கும் மேற்கோள் காட்ட உபகொயகிக்க கூடாது. அப்ப மகாபாரதம் கனிஷ்கர் ஆட்சிக்கு அப்புறம் எழுதப் பட்டதா?
///குஷாணர்கள் வம்ச ஆட்சிக்காலத்தில் அதாவது 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இப்போதைய பாகிஸ்தான் எல்லாம் இந்திய நிலப்பகுதி தான் . கனிஷ்கர் குஷாணர்களின் குறிப்பிட தகுந்த மன்னர்///
இருக்கலாம். ஆனால், இந்தியா என்று ஒன்று அப்போது இல்லை. இந்தியா என்று பெயர் வந்து சமீப மாகத்தான்.
கருத்துரையிடுக