இந்தப் பயணத் தொடரை எத்தனைப் பகுதிகளாக எழுத வேண்டும் என்று முன்கூட்டி எதுவும் திட்டமிருக்கவில்லை, எழுதத் துவங்கிய போது சென்றுவந்த இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேல் செலவிட்ட இடங்களாக எழுத, போதிய அளவிற்கு தகவல்களும் படங்களும் பதிவின் நீளத்தைக் கூட்ட 10 பகுதிகளாக வளர்ந்துள்ளது. பயணக் கட்டுரை எழுத தேவையான படங்களை முன்கூட்டியே எடுத்துக் கொள்ள வேண்டும், அப்படி எடுத்து வைத்துக் கொண்டால் எழுதும் போது படங்களே பலவற்றை நமக்கு நினைவு படுத்தும்.
*******
டனலாட் கோவிலைப் பார்த்துவிட்டு டென்பசார் வானூர்தி நிலையம் அருகே இருக்கும் இந்தோனேசிய உணவகத்திற்கு அழைத்துச் சென்றார்கள், இரவு உணவில் வகைகள் கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும் சாப்பிடப் போவது பாலி வகை உணவு என்றிருந்தார்கள், உணவகத்தில் உயரம் குறைவான மேசை போடப்பட்டு, அதன் அருகில் அமர்ந்து சாப்பிடுவது போல் ஏற்பாடு செய்திருந்தனர், தரையில் உட்கார்த்து சாப்பிடப் பழகாதவர்கள் நெளிந்தனர், எங்களுடன் வந்திருந்த ஒரு குண்டர் சம்மணமிட்டு உட்கார பட்டப்பாடு பரிதாபம் கலந்த சிரிப்பை வரவழைத்தது. முதலில் பாலற்ற தேனீர் மற்றும் சில்லென்ற குளிர் (சோயா) பாலில் கறுப்பு நிறத்தில் Grass Jelly சேர்த்து மற்றொரு திட பானமாக வழங்கினார்கள். அசைவம் சாப்பிடுகிறவர்களுக்கு பொறித்த மீன், பார்க்க ஒரு பறவையை இறகுகள் அற்ற சிறகுகளுடன் பறக்கும் நிலையில் பொறித்து தனித் தனித் தட்டில் வைத்து ஒவ்வொருவருக்கும் வழங்கினார்கள், பின்னர் வாழையிலையில் வைத்து சுருட்டிய சோறு, காய்கறி சாறு (வெஜிடெபல் சூப்), பொறித்த கோழித் தொடை, வெள்ளெரிக் காய் துண்டு, பச்சை காராமணி துண்டுகள், நறுக்கி ஊறவைத்த சிவப்பு (பச்சை) மிளகாய் மற்றும் புளி உப்பு சேர்த்து அரைத்த மிளகாய் (நீர்விட்ட துவையல் போன்று அரைக்கப்பட்டது) இவற்றை மற்றொரு தட்டில் கொண்டு வந்து வைத்தனர்.
எனக்கு அதில் சைவம் என்ன இருக்கும் என்று தேடினேன், சோறு மற்றும் வெள்ளெரிக் காய்த் துண்டு தவிர்த்து வேறெதுவும் இல்லை, எனக்கு தனியாக வருவதாகச் சொன்னார்கள். பொறித்த மீன் மற்றும் கோழி இல்லாமல் மற்ற அனைத்தையும் ஒரு தட்டில் வைத்து கொண்டுவந்து கொடுத்தார்கள், சோற்றை வாழை இலைச் சுருளில் இருந்து பிரித்து வைத்துவிட்டு மிளகாய் துவையலை கொஞ்சம் எடுத்து நாவில் வைக்க, கவுச்சி வாடை, இதில் பெரும்பாலும் காய்ந்த இறால் பொடி அல்லது கருவாட்டுப் பொடியை சேர்த்திருப்பார்கள் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும், ஆனால் முன்பே சைவம் மட்டும் தான் சாப்பிடுவேன் என்று கூறியதால் அசைவம் எதுவும் இல்லாத மிளகாய் துவையல் எடுத்து வந்திருப்பார்கள் என்ற நம்பிக்கையில் வாயில் வைத்தேன். அசைவம் சாப்பிடாத ஆசாரமானவார்கள் என்று கூறிக் கொள்பவர்கள் சொல்வது போல் உயிரெல்லாம் போகவில்லை ஆனால் குமட்டல் வந்துவிட்டது. அதற்கு மேல் அங்கிருக்கும் உணவுகளை பார்க்கவே பிடிக்கவில்லை, உமட்டல் உமட்டல்....உணவு ஏற்பாட்டாளரைக் கூப்பிட்டேன், என்ன இது ?, நான் தான் ஏற்கனவே தெளிவாக சைவ உணவு தான் வேண்டும் என்று கூறினேன், நீங்களும் ஏற்பாடு செய்திருப்பதாகக் கூறிவிட்டு இறா போட்ட சில்லி பேஸ்ட் கொண்டு வைத்திருக்கிறீர்கள் வாயில் வைத்ததும் எனக்கு வாந்தி வருகிறது, என்றேன், 'சாரி சாரி.....உங்களுக்கு என்ன வேண்டும் என்று சொல்லுங்கள், செய்து தருகிறோம்' என்றனர். எனக்கு கீரை மற்றும் கேரட் போட்ட ப்ரைட் நூடுல்ஸ் இல்லாவிட்டால் ப்ரைட் ரைஸ் போதும்' என்றேன், சரி செய்து தருகிறோம் ஐந்து நிமிடம் ஆகும் என்றனர், சரி என்று சாப்பிடும் இடத்தில் இருந்து கொஞ்சம் தள்ளியே நின்று கொண்டு மற்றவர்களை கவனித்துக் கொண்டிருந்தேன், சளைக்காமல் தின்று பொறித்த மீனை முள் கூடு ஆக்கிக் கொண்டு இருந்தனர்.
சற்று நேரம் கழித்து, உணவகத்தின் மேலாளர் 'உங்களுக்கு இந்தியன் ரெஸ்டாரண்ட் உணவு ஓகே வா ?' என்று கேட்டார். மூன்று நாளாக சீன வகை உணவுகளையே உண்டுவந்திருந்ததால் நானும் சரி, காத்திருக்கிறேன், வாங்கிவரச் சொல்லுங்கள் என்றேன், 'இல்லை இல்லை, உங்களைத்தான் நாங்கள் அங்கு அழைத்துச் செல்கிறோம், நீங்கள் அங்கு உணவிற்கு பணம் கொடுக்க வேண்டாம் நாங்களே கொடுத்துவிடுகிறோம்' என்று கூறி ஒரு சிற்றுந்து மற்றும் ஓட்டுனரை ஏற்பாடு செய்தனர், நான் என் அலுவலக நண்பர்களிடம் உணவு முடித்துவிட்டு தங்கும் விடுதிக்கு நேரடியாக வந்துவிடுவதாகக் கூறிச் சென்றேன். சிற்றுந்து ஓட்டுனர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். பாலி இந்துவாம், பெயர் கிருஷ்ணாவாம், என் பெயரும் அதே பொருளில் தான் வரும் என்றேன் அவருக்கு மெத்த மகிழ்ச்சி, மேலும் பாலிப் பற்றி எனக்கு என்ன என்ன பிடித்திருகிறது ? என்று கேட்டார், நான் பத்து நாடுகளில் பயணம் செய்திருக்கிறேன், மற்ற நாட்டினரைவிட இங்கு இருக்கும் நட்பான மக்கள் எனக்கு மிகவும் பிடித்திருப்பதாகக் குறிப்பிட்டேன்.
நாங்கள் தங்கி இருக்கும் விடுதியில் இருந்து இரண்டு கிமீ தொலைவில் அதே சாலையில் இருந்தது அந்த இந்திய உணவகம், பெயர் 'குயின்ஸ் தந்தூரி' வடநாட்டு உணவகம், 1986 ல் இருந்து அங்கு இருக்கிறார்களாம். உணவு பட்டியலைத் தருவது மற்றும் உணவு கொண்டு வந்து தருவது எல்லாம் பாலி இனத்தினர் தான், 100 பேர் அமர்ந்து சாப்பிடக் கூடிய அளவில் உள்ளும் வெளியிலும் மேசைகள் போடப்பட்டு இருந்தது, இரண்டு நான்கள் மற்றும் காலிப்பூ மற்றும் உருளை சேர்க்கப்பட்ட கறி (ஆலு கோபி கிரேவி மசலா) ஒரு பால் சேர்க்கப்பட்ட மசாலா தேனீர் சொல்லி இருந்தேன், கூடுதலாக மிளகு சேர்க்கப்பட்டு பொறித்த பெரிய அப்பளம் ஆகியவை வந்தது,
இரண்டு நான்கள் நான்கு துண்டுகளாக வரும், சாப்பிட வயிறு நிறையும் அளவுக்கு இருந்தது, அதற்கு 150K ருபியாவாம் (சிங்கை வெள்ளியில் 20 டாலர்) அந்த விலை சிங்கையில் அதே உணவுக்கு சிங்கையில் விற்கப்படுவதைக் காட்டிலும் கூடுதல் தான். அங்கு கிடைப்பதால் கொடுக்கலாம். ஆனால் உணவுக்கட்டணத் தொகையை ஓட்டுனரே அவரின் இந்தோனேசிய உணவகம் சார்ப்பில் கொடுத்துவிட்டார், பிறகு என்னை அழைத்துக் கொண்டு நாங்கள் தங்கி இருக்கும் ஹாரிஸ் ரெசார்ட் விடுதிக்கு அழைத்துச் சென்றார்.
வேறொரு நாட்டில் 'எனக்கு சாப்பிட ஏதுவான உணவு தான் வேண்டும்' என்று கேட்டிருந்தால் 'சாரி எங்களிடம் இல்லை' என்று கூறி கைவிரித்து இருப்பார்கள்,
மட்டஹரிப் பகுதியில் செல்லும் போது சிற்றுந்து ஓட்டுனர் 'இங்கே தான் குண்டு வெச்சாங்க, வெச்சவங்க ஜாவா தீவின் அடிப்படைவாத (ஜாமயா இஸ்லாமியா டெரரிஸ்ட்) தீவிரவாதிகள் தான் வைத்தனர், இங்கு குண்டு வைக்க காரணம் வெளி நாட்டினரை குறிவைத்து மட்டுமல்ல, பாலித் தீவில் இந்துப் பெரும்பான்மை அவர்களுக்கு எரிச்சலை ஊட்டி இருந்தது அது தான் காரணம், வெளிநாட்டுக்காரர்களை குறிவைக்க இந்தோனேசியாவில் பல தீவுகள், நகரங்கள் உள்ளன, இதே போன்று இரவு கேளிக்கை நடக்கும் இடம் இந்தேனேசியாவில் பாதாம் ஜகார்த்தா உள்ளிட்ட பல இடங்களில் உள்ளது அங்கும் குறிப்பிட்ட அளவு வெளிநாட்டினர் வருகின்றனர், அங்கு குண்டு வைத்தால் அங்கு பெரும்பான்மையாக வசிக்கும் இஸ்லாமியர்கள் பாதிக்கப்படுவார்கள், என்பதற்காக எங்கள் தீவினர் மீது ஏற்கனவே இருந்த வெறுப்பினால் இங்கு குண்டு வைத்துவிட்டார்கள்' என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார்.
மதவெறி சொந்த இனம் வேறொரு மதத்தை சார்ந்து இருந்தால் கொல்லவும் துணியாது என்பது தான் அவர் குறிப்பிட்டதிலிருந்து, பாலி குண்டு வெடிப்பில் இருந்து உலகத்தினர் படிக்கும் பாடம், 'உலகம் முழுவதும் ஒரே மதமானால் அமைதி நிலவிவிடும்' என்று பலர் மதக்கருத்துகளின் மீதான பிடிப்பில் வாந்தி எடுக்கின்றனர். சொந்த இனம் பிற மதம் சார்ந்திருந்தாலே பொறுக்கமாட்டாத சமூகம் வேற இனம் குறிப்பிட்ட மதத்திற்குள் வந்துவிட்டால் அமைதி நிலவி விடுமாம், இதற்கான உத்திரவாதம் தருவது யார் ? உலகில் பல நாடுகள் குறிப்பாக வளைகுடா நாடுகள் ஒரே மதத்தைச் சார்ந்தவை தான், அவைகள் தங்களுக்குள் காட்டிக் கொடுக்காமல் சண்டையிட்டுக் கொள்ளாமல் இருக்கின்றனவா ? உலக அமைதி என்பது எதோ ஒரு மதத்தை அனைவரும் தழுவுவதனால் ஏற்பட்டுவிடாது, மனிதன் மனிதனை மதிப்பதற்கு மத உபதேசங்கள் என்றுமே பயன் தந்ததில்லை, அது மதம் பரப்பிகளின் குறிக்கோளும் இல்லை, அவர்களுக்குத் தேவை எண்ணிக்கை, எங்கள் மதத்தின் மக்கள் தொகையைப் பார் என்கிற தற்பெருமைக்கான கூப்பாடு மட்டுமே, இன பழக்கவழக்கங்கள் அவற்றின் முரண்பாடுகள் அவற்றை சட்டை செய்யாது போட்டுத் தள்ளிக் கொண்டு தான் இருக்கும் என்பதை ஈராக் மீது பாராமுகமும் எதிரிகளுக்கு ஆதரவு கொடுத்த நாடுகள் சான்றாக உள்ளன.
2002 ஆம் ஆண்டு பாலி குண்டுவெடிப்பிற்கு பின்பு பாலித் தீவின் பெரும்பான்மை இந்துக்கள் இந்தோனேசியாவில் தாம் தனித்தவர்களாக உணரத் துவங்கியுள்ளனர். அவர்களுக்கு பிற இந்தோனேசிய இஸ்லாமியர்களுக்குமான இணக்கம் என்பது ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற கட்டுப்பாட்டு நூலில் மட்டுமே உள்ளது, பாலி இந்துக்கள் தங்களுடைய தனி அடையாளம் பேணப்படும் வரை தாங்கள் எதையும் எதிர்கொள்ள முடியும் என்ற நிலைக்கு ஒன்று சேர்ந்துள்ளனர், பாலித் தீவின் பெரும்பான்மை இந்துக்கள் என்ற நிலையை தக்க வைத்துக் கொள்வதில் முனைந்துள்ளனர், குறிப்பாக வெளிநாட்டில் இருந்து சுற்றுலாவிற்கு வருகை தருபவர்களுக்கு அவர்களது பண்பாடுகளை, பழக்க வழக்கங்களை எடுத்துச் சொல்கின்றனர், பாலி இந்துத் தீவு என்று மறக்காமல் குறிப்பிடுகின்றனர்.
பாலி குண்டுவெடிப்பு பற்றி இணையத்தில் தேடிய போது குண்டு வைத்த கும்பலில் ஒருவன் அளித்திருக்கும் வாக்குமூலம் மிகவும் அதிர்ச்சிகரமாக இருந்தது, குண்டுவைக்க பாலியைத் தேர்ந்தெடுக்க மற்றொரு காரணம், குஜராத்தில் நரேந்திர மோடி ஆட்சியின் போது நடந்த இஸ்லாமிய படுகொலைக்கு பழிவாங்குவதற்குத் தானாம். தேதிகளைப் பார்க்க குஜராத் படுகொலைகள் பாலி குண்டு வெடிப்பிற்கு முன்பு நடந்தவை என்று அறியும் போது அவனுடைய வாக்குமூலம் உண்மை தான் என்றும் தோன்றுகிறது, ஆனால் குஜராதிற்கும் பாலி இந்துக்களுக்குமான தொடர்பு என்ன ? இவர்களை ஏன் பழிவாங்க வேண்டும் ? இவர்கள் பின்பற்றுவது இந்துமதம் என்றாலும் இவர்களின் வழிபாடு உள்ளிட்டவற்றில் இந்திய சாயல் இல்லை, மேலும் இவர்கள் இந்தோனேசிய பழங்குடிகளாக இருந்து இந்துக்களாக மாறியவர்கள், பின்னர், இஸ்லாம் பரவலின் போது தங்களது வழிபாட்டு முறைகளை மாற்றிக் கொள்ள விருப்பமில்லாதவர்களாக, அச்சுறுத்தலினால் அங்கேயே தங்க முடியாத நிலையில், பாலியில் அகதிகளாக தஞ்சம் அடைந்தவர்கள் தாம். மோடி ஆட்சியின் போதான படுகொலைகள் எங்கோ வாழ்பவர்களையும் நிகழ்வுக்கு தொடர்பே இல்லாதவர்களையும் காவு வாங்க ஒரு காரணமாக அமைந்திருக்கிறது என்பதை இந்துத்துவ வாதிகள் அறிவார்களா ? பாலி இந்தோனேசியாவின் பகுதியாக தொடருமா என்பதெல்லாம் இந்தோனேசிய இஸ்லாமியர்களின் எண்ணங்களின் செயல்பாடுகளில் தான் உள்ளது, பாலியைப் பொருத்த அளவில் பாலித் இந்துக்களுக்கான மதச் சுதந்திரம் முழுவதுமாக இருக்கிறது என்பதை அவர்களின் அமைதி நாளின் போது வானூர்தி நிலையத்தை மூட இந்தோனேசிய அரசு அனுமதி கொடுத்திருப்பதிலிருந்து தெரியவருகிறது.
*****
இரவு 10:30 ஆகி இருந்தது, விடுதியை அடைந்ததும் நன்றாக குளித்துவிட்டு, இரண்டு மணி நேரம் இரவில் அந்த குட்ட-பாலி பகுதியில் தனித்தே நடந்தேன், சில சந்துகளில் காளான் படம் போட்டு பலகையில் 'மேஜிக் மஸ்ரூம்' என்று விளம்பரம் வைத்து எதையோ விற்கிறார்கள், இணையத்தில் தேடிப்பார்க்க அது ஒருவகை போதை கலந்த பானம் என்றே தெரிந்தது, இந்தோனேசியாவில் போதைப் பொருள் பழக்கத்திற்கும் கடத்தி வருவதற்கும் கடுமையான தண்டனை, வெளிப்படையாக இல்லாமல் வேறு பெயரில் விற்கிறார்கள், ,மேஜிக் மஸ்ரூம் வாங்கிக் குடித்தால் ஒரு நாள் முழுவதும் மிதப்பது போன்ற உணர்வு இருக்குமாம், ஒருவேளை அங்கு இன்னும் புழக்கத்தில் இருக்கும் 'சோமபானமோ' தெரியவில்லை.
இரவில் தனித்து நடப்பவர்களிடம் வாடகை உந்தி ஒட்டிகள் 'அந்த இடத்திற்கு போக விருப்பமா ? மசாஜுக்கு செல்ல வேண்டுமா ?' என்று கேட்கிறார்கள், குட்டா - பாலிப் பகுதியில் சுற்றுலா பயணிகளின் இரவு வாழ்க்கை என்பது குடியும் கும்மாளமும் மற்றும் மறைவான பாலியல் சார்ந்த செயல்பாடுகளாக இருக்கிறது. இரவு 12:30 வரை சுற்றிவிட்டு, விடுதிக்கு வந்து தூங்கினேன்,
மறுநாள் காலை 8 மணிக்கு எழுந்து குளித்துவிட்டு காலை விடுதி உணவை முடித்துக் கொண்டு கடற்கரையில் சிறுது உலாத்திவிட்டு, அங்கிருந்து வாடகை உந்து ஒன்றை எடுத்து வணிக வளாகம் ஒன்றிற்குச் சென்று நினைவுப் பொருள்கள் வாங்கித் திரும்ப பகல் 12, பெட்டிகளை எடுத்து வைத்து அனைவரும் தயராக இருந்தனர், நானும் உடைமைகளை அங்கு சேர்த்துவிட்டு, விடுதியை விட்டு வானூர்தி நிலையத்திற்கு இரண்டு மணி முன்னதாக புறப்பட்டோம்,
எதிர்பார்த்த போக்குவரத்து நெருக்கம், 6 கிமீ தொலைவை ஒரு மணி நேரம் ஊர்ந்து சென்று நிலையத்தை அடைந்தது, வானூர்தி நிலைய சாலையில் அந்த ஊர் சுபாஸ் சந்திர போஸ் போன்ற
I Gusti Ngurah Rai என்பவரை சிலையாக வைத்திருக்கிறார்கள், ஆனால் இவர் ஜப்பானை எதிர்த்து கலகம் செய்தவராம். எங்களுடன் மூன்று நாட்கள் இருந்த வழிகாட்டி வானூர்தி நிலையம் வரை வந்து விடைபெற்றார் .
பாலி டென்பசார் வானூர்தி நிலையம் மிகுந்த போக்குவரத்துடன் ஒரே ஒரு ஓடுபாதை கொண்ட சிறிய அனைத்துலக வானூர்தி நிலையம், தற்போழுது விரிவாக்கப்பணிகள் நடந்து கொண்டிருக்கிறது, முகத்தில் கடுமைகாட்டாத நிலைய அலுவலர்கள் ஊழியர்கள், சுற்றுலா பயணிகளுக்கான நினைவு பொருள்கள் விற்கும் கடைகள் அங்கு நிறைய இருந்தன. பெருமூச்சுடன் கடந்து சென்று வானூர்திக்குள் ஏறி அமர்ந்தோம், இந்த முறை ஜெட் ஸ்டார் பட்ஜெட் வானூர்தி. பாலி நினைவுகளை அசைப் போட்டுக் கொண்டு இருக்கும் போது சிங்கப்பூருக்கு செல்ல நகர்ந்தது.
ரயில் சினேகத்தில் இறங்கும் இடம் வந்ததும் விடைபெற்றுக் செல்லும் அரை நாள் நண்பரின் மீது இருக்கும் அந்த பரிவும் அன்பும் சிறிது நாள் இருப்பது போல் பாலித் தீவிலிருந்து திரும்பிய சில நாட்கள் பாலியைப் பற்றிய எண்ணங்களாக இருந்தது.
அடுத்த முறை இல்லத்தினருடன் செல்ல வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்.
*********
பயணச் செலவு : இருவருக்கு இரு இரவு மூன்று பகல் தங்குவதற்கு : 530 சிங்கப்பூர் வெள்ளிகள் (20 ஆயிரம் இந்திய ரூபாய் ஆகும்), அது தவிர்த்து ஒரு நாளைக்கு 50 வெள்ளிகள் (2000 ரூபாய்) பிற செலவுகள். பாலித் தீவிற்கு கோலாலம்பூர், சிங்கப்பூர் மற்றும் பேங்காகில் இருந்து நேரடி வானூர்தி சேவைகள் நிறைய உண்டு. சுற்றிப் பார்க்க அழகான அமைதியான, பாரம்பரியம் மிக்கத் தீவு பாலி.
பின்குறிப்பு : தொடர்ந்து படித்துவந்த அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி, எனக்கு தெரிந்த அளவில் போதிய தகவல்களை கொடுத்துள்ளேன்
என்று நம்புகிறேன்.