பின்பற்றுபவர்கள்

29 ஜூலை, 2010

தேர்தல் வருது தேர்தல் வருது !

தமிழ்நாட்டில் தேர்தலுக்கான முன்னூட்டங்கள் துவங்கிவிட்டன, கொடை நாடு தோட்டத்தில் ஓய்வெடுத்த ஜெ, போயாஸ் தோட்டத்திற்கு இடம் பெயர்ந்து நாளொரு அறிக்கையும் பொழுதொரு போராட்ட அறிவிப்புக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார். கூடவே காங் உட்பட பல்வேறு கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

சாதனை செய்தோம் என்று சொல்லிக் கொள்ளும் கருணாநிதியின் திமுக அரசு ஜெவின் அறிக்கைகளுக்கு பதில் சொல்வதாக நாகரீகம் தாழ்ந்து பேசி அறிக்கை கொடுக்கிறார்கள். இவ்வளவு நாள் தூங்கிக் கொண்டிருந்த ஜெ வழக்குகளுக்கு புத்துயிர் கொடுத்து முடுக்கி விடப்படும் வேலையும் நடக்கிறது. தீர்ப்பு வெளிவர ஸ்டாலின் தலைமையில் ஆர்பாட்டம் நடத்தப்படுமாம். என்ன கேலிக் கூத்து ? அதை ஏன் இவ்வளவு நாள் காத்திருந்து செய்யனும் ? அதே போன்ற ஆர்பாட்டங்களை சங்கர இராமன் படுகொலைக்காக நடக்கும் வழக்குகளுக்கும் ஸ்டாலின் செய்ய வேண்டியது தானே ? கருணாநிதி ஆட்சியில் தான் பெரியவா நிம்மதியாக இருக்கிறாராம். :) வரும் தேர்தலை கருத்தில் கொண்டே மதுவிலக்கு கொண்டுவர திமுக அரசு திட்டமிட்டு இருப்பதாகத் தெரிகிறது, சமூக விரோத குற்றச் செயல்கள் குக் கிராமங்களில் நடந்தாலும் அவையெல்லாம் தடுக்கப்படுவதாக (தமிழகம் அமைதி பூங்காவாக மாறுதாம்) திமுக சார்பு செய்தி ஊடகங்களில் செய்தியாகக் காட்டப்படுகிறது.

60 கோடி சொத்துக் குவிப்பு வழக்கு, ஜெ நேர்மையாளர் என்று சொல்லவரவில்லை, அரசியல்வாதிகள் தான் எதையுமே சட்டப்படி சந்திப்பதாகச் சொல்லிக் கொள்பவர்கள் ஆகிற்றே, ஸ்பெக்டரம் ஊழல் 1000ம் கோடிகளில் சொல்லப்படுகிறது, அதை ஒப்பிடும் போது 60 கோடி ஒரு தொகுதிக்கு அரசியல் கட்சிகள் செலவு செய்யும் பணத்தைவிட குறைவு. திமுகவிற்கு வாழ்வா சாவா என்கிற நிலை தற்போது காங்கிரசின் கைகளில் இருப்பதாக காங்கும், திமுகவும் நினைக்கிறது.

திமுகவை விட்டால் காங்கிரசுக்கு மாற்று வழி இருந்தாலும் திமுகவிற்கு காங்கிரசை விட்டால் மாற்று வழி இல்லை. இதைத் தெரிந்து கொண்டே காங்கிரசு இளங்கோவன் உள்ளிட்டோர் ஒரு ரூபாய் அரிசி மற்றும் மருத்துவக் காப்பீடுகள் மத்திய அரசின் நிதி உதவியால் நடைபெறுவதாகச் சொல்லி பதில் அறிக்கை வரவழைக்கச் செக் வைக்கிறார்கள், அதற்கு நேரடியாக பதில் சொல்லாத கருணாநிதி அமைச்சர்களை விட்டு மென்மையான மறுப்பு கொடுக்கச் சொல்லுகிறார், அதாவது இந்தத் திட்டங்கள் தமிழக அரசின் நிதியில் தான் நடைபெறுகிறதாம்.

நிலமை இப்படியே போனால், காங்கிரசின் நாற்பது ஆண்டு கனவாக, திமுகவிடம் (மிரட்டியே) பேசி சட்டமன்ற தொகுதிகளில் 60 விழுக்காடு இடங்களைக் கூடப் பெற்று காங்கிரசு தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கும் திட்டம் கூட இருக்கலாம்,

எதிர்தரப்பில் கம்யூனிஸ்டுகள், தேமுதிக மற்றும் உதிரி கட்சிகளுடன் அதிமுக கூட்டணி இடம் பெற்றால் வெற்றிபெறாவிட்டாலும் மாற்றுத்தரப்பு சிறுபான்மை அரசாகவே அமையும்.

கடந்த 20 ஆண்டுகளில் தமிழக அரசியலில் மிகுதியாக ஊழல் செய்த கட்சிகள் ஆட்சியில் தொடர்ந்தது இல்லை.

28 ஜூலை, 2010

அரசு ஊழியன்களின் கய(ட)மை உணர்ச்சியால் தற்கொலை செய்து கொண்ட மாணவி !

இலவச பேருந்து அட்டை எடுத்துவராத மாணவி அரசு பேருந்து ஊழியர்களால் அவமானப்படுத்தப்பட அந்த மாணவி அவமான உணர்ச்சியால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள்.

ஒருவேளை நுழைவு அனுமதி அட்டை வழியில் தொலைந்தாலோ, யாரோ திருடிக் கொண்டாலோ, பள்ளி மாணவி என்பதை நிருபனம் செய்யும் சீருடைத் தவிர்த்து அவளை பேருந்தில் அனுமதிக்க வேறு என்ன ஆவணம் இலவச பேருந்துகளுக்கு தேவைப்படும் என்பது தெரியவில்லை.

அரசு ஊழியர்களில் 75 விழுக்காடு வரை இரக்கமட்டவர்களாகவே நடந்து கொள்கிறார்கள், 'ரூல்ஸ்' பேசுவது என்பது இயலாதவர்களிடம் மிகவும் கடுமையான நடைமுறையாகவே பின்பற்றுகிறார்கள். ஒரு அரசு ஊழியன் வேலை நிறுத்தம் செய்வது கூட சட்டபடி குற்றம் தான் என்றாலும் தொழிற்சங்கம் என்ற பெயரில் அத்தகைய சட்ட மீறல்களை செய்யும் போது இவர்களது மனசாட்சியும் ரூல்ஸும் என்ன ஆனது என்று தெரியவில்லை. பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனர்களின் (குடும்பம் தவிர்த்த) நெருங்கிய உறவினர்கள் யாரும் அந்த ஓட்டுனர் பணி செய்யும் பேருந்தில் இலவச பயணம் தான், அப்போதெல்லாம் ரூல்ஸ் பேசுவது கிடையாது. பேருந்தில் அனுமதிக்கப்படும் அளவை விட கூடுதலாக லக்கேஜ் ஏற்றி கையூட்டுப் பெரும் போதும் இவர்களுக்கு ரூல்ஸ் கிடையாது.

அரசியல்வாதிகளாலும், அவர்களின் அரசு விழாக்கள், பாராட்டு திருவிழாக்கள் என்ற பெயரில் பொதுமக்களின் வரிப்பணம் கோடிக்கணக்காக இறைக்கப்படும் நாட்டில் சீருடைகளுடன் வரும், பள்ளி மாணவிகளை, குழந்தைகளை எந்த ஒரு அடையாள அட்டையும் இல்லாமல் இலவசமாகக் கூட்டிச் சென்றால் என்ன இழவு நிகழ்ந்துவிடப் போகிறது ?

முந்தைய பதிவு :

அரசு ஊழியன் என்னும் கிங்கரகர்கள் !

படம் / செய்தி : நன்றி தினமலர்

27 ஜூலை, 2010

பூவரசி பெண்ணியம் ஆணியம் சாணியம் !

என்னக் கொடுமைங்க, ஒரு பெண் உணர்ச்சி வசப்பட்டு கொலை செய்ததை ஆணிய / பெண்ணிய வாதிகள், ஆணியம் பெண்ணியம் என்றெல்லாம் வகைப்படுத்தி கச்சைக்கட்டுகிறார்கள். பிரச்சனை சம்பந்தப்பட்ட பெண் ஒரு ஆணின் மீது இருக்கும் ஈர்ப்பு அல்லது வெறுப்பினால் அவனை/ அவனது மனைவியைக் கொல்லாமல் ஒரு குழந்தையை கொடுறுமாகக் கொன்றுவிட்டாளே என்பது தான். குழந்தையைக் கொல்லும் மனநிலை மிகவும் மோசமானது சாதிவெறியர்கள், மதவெறியர்கள், இனவெறியர்கள் தான் குழந்தைகளைக் கூட விட்டு வைக்காமல் கொல்லுவார்கள் என்பதை நாம் அறிந்திருக்கிறோம், தனிமனிதன் வெறுப்பினால் பிறர் அல்லது தன் குழந்தையைக் கொல்வார்களா என்பது நம்மால் நினைத்துப் பார்க்க இயலாத ஒன்று. குழந்தைகளைக் கொல்லும் மன நிலை சமூகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தே வருகின்றன. கணவன் அல்லது மனைவியின் நடத்தை சரி இல்லை என்னும் போது குழந்தைகளும் கொல்லப்பட்டு பின் கணவன் அல்லது மனைவியின் தற்கொலைகள் நடப்பதை நாம் காலம் தோறும் செய்திகள் வழியாகப் படித்தே வருகிறோம், அப்போதெல்லாம் கொல்லப்பட்ட அந்தக் குழந்தைகளுக்கு இது போன்று ஒரு அனுதாபங்கள் கிடைப்பதில்லை, பெற்றக் குழந்தையையே கொல்லவதற்கு எப்படித்தான் மனது வருகிறதோ என்கிற ஆதங்கத்துடன் முடித்துக் கொள்கின்றனர். மற்றவர் குழந்தையைக் கொல்வதைவிட தன் குழந்தையைக் கொல்வது இன்னும் கூட கொடுரமனது வேண்டும் என்பதை 'தன் இறப்புக்கு பின்னால் குழந்தையின் எதிர்காலம் கெட்டுவிடும் என்பதாக அந்தப் பெற்றோர்கள் நினைத்துக் குழந்தைகளையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டுவிட்டார்கள்' என்பதாக அதை ஒரு பெற்றோரின் இயலாமையினால் செய்யப்படும் உயிர்/கொலைத் தியாகமாகத் தான் சமூகம் பார்க்கிறது.

குழந்தைகளுக்கு எந்த ஒரு சூதுவாதும் தெரியாது, தன்னுடன் அன்பாகப் பழகுபவர்களிடம் பழகும். அதுவும் அன்பாகப் பழகிய பூவரசியிடம் குழந்தையும் இப்படித்தான் பழகி வந்திருக்கிறது, கோபம் எப்போதும் இயலாதவர்களிடம் மட்டுமே எடுபடும் என்பதாக தன்னை ஏமாற்றியவனை விட்டுவிட்டு தன்னை நம்பிய அவனுடைய குழந்தையிடம் காட்டிவிட்டாள் அவள், இது திட்டுமிட்டு நடந்திருக்கவும் வாய்ப்பில்லை, காதல் முற்றினால் காதலனது உடமைகள் அனைத்தும் தன்னுடையதாக நினைக்கும் ஒருவித மனநிலையில் அந்தக் குழந்தையுடன் நெருக்கமாகப் பழகிய அவள், காதலுடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தை முற்றலில் தனக்கு எதிர்காலப் பாதுகாப்பு எதுவும் இல்லை என்கிற அவநம்பிக்கையில், அவனை முழுவதும் நம்பி இருந்து அவன் ஏமாற்றியதாக நினைத்த ஒரு நொடியில் தன்னை நம்பிய அவன் குழந்தையிடம் தனது முழு ஆத்திரத்தையும் காட்டி கொலை செய்து, அதை மறைக்க முயன்று, மனநிலை தடுமாற்றத்தில் பாவமன்னிப்பு வரையிலும் கூடச் சென்றிருக்கிறாள் என்பதாக செய்திகள் வழியாகத் தெரிகிறது. குழந்தைக்கு பதிலாக அவன் எதிரில் இருந்திருந்தாலும் கூட அவனை கொலை செய்திருப்பாள், அப்பாவியாக சிக்கிக் கொண்டிருக்கிறது குழந்தை.

இது எல்லையற்ற கோபத்தினால் நிகழ்ந்த ஒரு நிகழ்வு என்று நினைக்க முடிகிறது. கொலையை மறைக்க நடந்த முயற்சிகள் எதுவும் நடைபெறவில்லை என்றால் ஊடகம் இதைப் பெரிதாக ஊதி இருக்காது, 'கள்ளக் காதலனை பலிதீர்க்க அவனது குழந்தையைக் கொன்ற காதலி' என்பதாக ஒரு நாள் ஓரச் செய்தியாக இவை முடிந்திருக்கும். கொலையின் பிறகு நடந்த நிகழ்வு, கொலை கண்டுபிடிக்கப்பட்டது, அதில் துப்பு துலங்கியது என்பதாக ஒரு துப்பறியும் கதைப் போல நிகழ்ந்துவிட்டதால் ஊடகங்கள் இதற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து ஆணியம் பெண்ணியம் சார்ந்த நிகழ்வாகவும் உளவியலாகவும் ஊதுகின்றன.

என்னைப் பொருத்த அளவில் இதில் ஆணியம் பெண்ணியம் என்று எதுவுமே இல்லை, காலம் தோறும் எங்கும் இருக்கும் முறையற்ற உறவுகள் அதன் சிக்கலினால் ஏற்படும் விளைவுகள் அவற்றில் இதுவும் ஒன்று. இதிலும் அந்தக் குழந்தையின் தாய் 'தன் கணவன் அப்பாவி என்றும், தன் கணவனை இன்றும் முழுதும் நம்புவதாக சொல்வதை' பேட்டி எடுத்து எழுதி இருக்கின்றன ஜூவி போன்ற செய்தி இதழ்கள். ஒரு பெண் குழந்தையைக் கொல்லலாமா ? அவள் பெண்ணா ? பேயா ? காமவெறி பிடித்தவளா ? அவளுக்கு மட்டும் ஏன் தண்டனை ? அவனும் தானே இவளை இந்த அளவு வெறி எடுக்கும் நிலைமைக்குத் தூண்டியது ? என்றெல்லாம் விவாதிக்கப்படுகின்றன. இன்னும் 30 ஆண்டுகளுக்கு முன்பு என்றால் இந்தச் சமூகம் 'பொண்டாட்டி ஒழுங்க இருந்தா புருசன் ஏன் இன்னொருத்தியை நாடப் போகிறான் ? அவளால் தானே இவ்வளவும் நடந்தது ?' என்றெல்லாம் கூட கணவனுக்கு காமக் குறை வைத்த பெண் என்பதாக ஆண்சார்பில் கூடக் கேட்டு இருக்கும். நல்லவேளை இப்போது யாரும் அவ்வளவு அபத்தமாக கேட்பது இல்லை.

குழந்தைகளை குறிவைத்து குழந்தைகளுக்கு எதிரான பாலியல், நரபலி உள்ளிட்ட வன்முறைகள் காலம் தோறும் வரைமுறை இன்றி நடந்துவருகிறது, மேற்சொன்னது போல் பெற்றோர்களின் சண்டைகளின் பிரிவின் போது சில வேளைகள் குழந்தைகள் கூடக் கொல்லப்படுகின்றன, எவனாவது / எவளாவது வெட்டிக் கொண்டு, அடித்துக் கொண்டு சாகுங்கள் குழந்தைகளையாவது விட்டு வையுங்கள் என்று விழிப்புணர்வு ஊட்டலாம். அதைவிட்டு பூவரசியின் குழந்தைக் கொலைச் செயலை ஆணியம் பெண்ணியம் என்று விவாதிப்பது, பேசுவது வீண்.

தொடர்புடைய செய்திகள் : பூவரசி ; அப்துல்கபூர்

இவனையெல்லாம் பிடிச்சு முட்டிக்கு முட்டி...

23 ஜூலை, 2010

கலவை 23 ஜூலை 2010 !

மூன்றரை வயது சிறுவனைக் கொலை செய்து பெட்டியில் அடைத்து நாகைக்கு பேருந்து வழியாக அனுப்பப்பட்டதை சன் டிவியில் காட்டிய போது அதிர்ந்தேன். தொலைக்காட்சிகளுக்கு சென்சார் மிக மிகத் தேவை. வீட்டின் கூடத்தில் தொலைக்காட்சி இருப்பதால் குழந்தைகள் பார்வையில் இது போன்ற காட்சிகள் அவர்களது மனதை பெரிதும் பாதிக்கும், செய்தியைச் சொல்வதில் தவறு இல்லை, ஒரு குழந்தை கொலை செய்யப்பட்டு கிடப்பதை பெரியோர்களாலும் பார்க்க இயலாது என்பதை செய்தி விபச்சாரம் செய்யும் தொலைகாட்சிகள் எப்போது தான் புரிந்து கொள்ளப் போகிறார்களோ. கொலைகாரி, அவளது கள்ளக் காதலன் ஆகியோர் இருவருக்குமே கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும். குழந்தையின் அம்மா மீது எரிச்சலும் வந்தது. கணவன் என்ன தொழில் செய்கிறான், யாரோடு பழகுகிறான் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாது தனக்கு தேவையானதை வாங்கிக் கொடுத்தால் போதும் என்கிற மனநிலையில் இருக்கும் பெண்கள் இதுபோன்ற சூழலை சந்தித்தே விடுகிறார்கள். :(

ஜெவின் இறுதி கால ஆட்சியில் பலிவாங்கும் நடவடிக்கை துவங்கியது போலவே தற்போது திமுக ஆட்சியில் துவங்கி நடைபெறுகிறது. 'வினாச கால விபரீத புத்தி' என்கிற வடமொழிப் பழமொழிக்கு ஏற்ப, காட்சிகள் அரங்கேறிவருகின்றன. கருணாநிதி இதுவரை பெற்ற புகழ் அனைத்தையும் கடைசி காலத்தில் இழக்கும் நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது அவர்களது ஆட்சி, தோழர் வலைப்பதிவர் சவுக்கு மற்றும் சீமான் கைதுகள் இதைத்தான் காட்டுகின்றன. மனித உரிமைக்கு போராடியவர்களை தீவிரவாதியாக சித்தரித்து வைகோ, நக்கீரன் கோபால் உள்ளிட்டோரை பொடோ சட்டத்தில் உள்ளே தள்ளி பலி தீர்த்துக் கொண்டார் ஜெ. தற்போது கருணாநிதியும் அதே வழியில் தொடர்கிறார். ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை என்பதை தமிழக மக்கள் எப்போது புரிந்து கொள்கிறார்களோ அப்போது தான் இவைகள் மாறும். ஆள் பலம், அதிகார பலம், பண பலம் இவையெல்லாம் நிலைப்பதில்லை என்பதை 'அய்யோ கொல்றாங்களே...' என்று அலறி தெரிந்து கொண்ட பின்பும் திமுக ஆட்சியாளர்கள் அதையே பிறருக்கும் செய்வது வியப்பு, பணமும் பதவியும் கண்களை மறைக்கும் என்பது இது தானோ.

சீமான் கைதுக்கு மீனவர்கள் கொந்தளிக்கவில்லை என்று கொக்கறித்தார் ஒரு காங்கிரசு வலைப்பதிவாளர் (சஞ்ஜெய்யா ன்னு கேட்கப்படாது). மீனவர்கள் அந்த அளவுக்கு உணர்ச்சி உடையவர்கள் என்றால் அவர்கள் ஏன் குண்டடிப்பட்டு சாகவேண்டும் ? தமிழகத்தில் நக்சல்களை, தமிழ் தேசிய (தீவிர)வாதிகளை ஏற்படுத்தாமல் காங்கிரஸ் / இந்திய அரசு ஓயாது போலும், தீவிரவாதிகள் தோன்றுவது இல்லை, உருவாக்கப்படுகிறார்கள். தமிழக மீனவன் இந்தியன் இல்லை, அவர்கள் சாவுக்கு இந்திய அரசு பொறுப்பு கிடையாது என்று வட நாட்டு அரசியல்வாதிகள் மறைமுகமாகாச் சொல்லி வருவதை நாம் தான் புரிந்து கொள்வதில்லை ? மீனவர்கள் விழிப்படையாமல் இருப்பது தான் நாட்டுக்கு நல்லதோ.

தமிழகம் தொழில் நகரமாகிவருகிறதாம், மகிழ்ச்சியான தகவல் தானே. இதற்குகாரணமாக காங், திமுக அரசு மார்தட்டிக் கொள்கிறார்கள், உலக பொருளியல் சூழல் மாற்றத்தால் மனித வளம், இயற்கை வளம் மிக்க சீனாவிலும், இந்தியாவிலும் உலகின் கண் திரும்பியது, ஏற்கனவே நலிந்த பொருளியலை மீட்க சீனா அவற்றை மிகவும் வேகமாகப் பயன்படுத்திக் கொண்டது, சீனாவை ஒப்பிடுகையில் இந்தியாவின் வேகம் மிக மிகக் குறைவு. இவர்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருந்தால் சீனாவை இந்தியா மிஞ்சி இருக்கும், மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தின் நில அமைப்பு (ஏற்றுமதிக்கு ஏற்ப துறைமுகம், விமான நிலையம்), மனித வளம் இருப்பதால் வெளிநாட்டு நிறுவனங்களில் பல தமிழகத்திற்கு இடம் பெயர்ந்ததில் வியப்பு எதுவும் இல்லை. இதையெல்லாம் அரசின் தனிப்பட்ட சாதனை என்று சொல்லிக் கொள்ள எதுவுமில்லை. இந்தியாவில் காங் மற்றும் தமிழகத்தில் திமுக ஆட்சி ஆகிய இவை இல்லாவிட்டாலும் தற்போதைய சூழல் அல்லது இதற்கு மேற்பட்டு கூட பொருளியல் வளர்ச்சி அடைந்திருக்கலாம். பண்ணாட்டு நிருவனங்களுக்கு கதவை திறந்துவிட தாராளம் காட்டினார்கள் என்பது தான் சாதனையா ? அது உண்மை என்றாலும் கூட நசிந்து போன இந்தியம் சார்ந்த பிற தொழில்களுக்கு இவர்கள் பொறுப்பு ஏற்பார்களா ?

22 ஜூலை, 2010

படைப்புக் கொள்கை ...3

கடவுள் அனைத்தையும் படைத்ததாக மதங்கள் நம்பிக் கொண்டு இருக்கின்றன, கடவுள் 7 நாளில் உலகைப் படைத்ததாக ஆப்ரகாமிய மதங்களின் அடிப்படை நம்பிக்கை, அதன் பிறகு ஓய்வெடுக்கச் சென்றவர் தூதர்களை அடையாளம் காட்டுவதுடன் நிறுத்திக் கொண்டார் என்பதுடன், இவர் தான் இறுதித் தூதர் என்பது முறையே ஏசு மற்றும் முகமது ஆகியோர் பற்றி ஆப்ரகாமிய மதங்களின் கோட்பாடு, இறுதித் தூதர் யார் என்பதன் நம்பிக்கை தான் அம்மதங்களின் பெயர்களாக முறையே யூத மதம் (மோஸஸ்) கிறித்துவ மதம்(ஏசு), இஸ்லாம் (அ) முகமதிய மதம் (முகமது) என்று வழங்கப்படுகிறது, இஸ்லாம் மற்றும் கிறித்துவ நம்பிக்கைகளையும் அந்த இறைத்தூதர்களை ஏற்றுக் கொண்ட பார்சி மற்றும் அகமதியா மதங்களும் உள்ளன ஆனால் இவற்றின் அடிப்படை கடவுள் கொள்ளை மற்றும் படைப்பு சார்ந்த நம்பிக்கைகள் அனைத்தும் ஒன்று தான், அதாவது கடவுள் ஏழு நாளில் உலகைப் படைத்தார். இந்து மதம் சார்ந்த நம்பிக்கைகளும் இவை போன்று தான் என்றாலும் கூட ஏழு என்றநாள் எண்ணிக்கைக்கு பதில் ஆண்டுக்கணக்கில் சொல்லபடுகிறது மற்றபடி அவை உயர்ந்ததொரு நம்பிக்கை என்று கொள்ள முடியாது. மதங்கள் அனைத்தின் அடிப்படை நம்பிக்கைகளும் கடவுள் உலகை படைத்தார் அல்லது சிருஷ்டித்தார் என்பதான நம்பிக்கை. படைத்தல் அல்லது சிருஷ்டித்தல் என்பது இல்லாத ஒன்றை உருவாக்குவது என்பதாம். இவற்றை ஏன் படைக்க வேண்டும் என்பதற்கு எந்த ஒரு மதமும் தெளிவான ஒரு விடையைத் தந்ததுவிடவில்லை, அது கடவுளின் விருப்பம் என்கிற எளிய விடையைக் கூறி கேள்விகள் எழாது என்று நினைத்துக் கொள்வர்.

மனித அறிவின் படி கடந்த கால வரலாற்றில் புதிதாக எந்த ஒரு உலோகமும் தோன்றி இருக்கவில்லை, இவை அனைத்தும் அறியும் போது இவை இருக்கிறது என்பதாக தெரிந்து கொண்டனர். சிந்துவெளியில் இரும்பைப்பற்றிய அறிவில்லை என்பதால் சிந்துவெளிக்கு பிறகே இரும்பு தோன்றியது என்பது பொருளல்ல, இரும்பு கண்டுபிடிக்கப்படாமல் அல்லது பயன்படுத்தப்படாமல் இருந்திருக்கிறது என்பது தான் பொருள். இன்று நாம் பயன்படுத்தும் அனைத்துவிதாமான பொருள்களும் நாம் அறிவியல் வளர்ச்சி பெறாத காலத்திலும் இருந்தவையே, அவற்றில்கலவை செய்து பெயரிட்டு புதிய பெருள்கள் என்கிறோம், மற்றபடி முற்றிலும் முன்பு மூலங்கள் எதுவுமே இல்லாத பொருள் என்று எதுவுமே கிடையாது. இவைகள் நோய்கிருமிகளுக்கும் பொருந்தும், உயிர்கொள்ளி நோய் கிருமிகள் கூட இருந்திருக்கலாம், அல்லது புதிய பரிணாமாக அவை பிரிதொரு கிரிமியின் வளர்ச்சியாக மாறி இருக்கலாமே அன்றி அவை மூலங்கள் எதுவும் இல்லாமல் தான் தோன்றியாக தோன்றி இருக்க வாய்புகள் இல்லை, மேலும் அவை பரவும் சூழல் போதிய தட்பவெட்பம் ஆகியவை அவை எளிதில் பரவுவதற்கு வழி செய்திருக்கின்றன. அதாவது நாம் பெயர் வைத்திருக்கும் புதிய நோய்கள் கிருமிகள் அனைத்துமே முன்பு பெயரில்லாமல் இருந்தவை அல்லது பரவாமல் இருந்தவை. அறிவியலாளர்கள் புதிதாக ஒரு கோள் அல்லது நட்சத்திரம் பற்றிய அறிமுகம் கொடுக்கிறார்கள் என்றால் அவை முன்பு இல்லாமல் இருந்தது கிடையாது, அவை அறிவியல் புலனுக்குள் அறியப்பெற்றிருக்கிறது என்பதே பொருள், கருங்குழிகள், பெருவெளிகள் அனைத்துமே இல்லாத எந்த ஒரு பொருளையும் உருவாக்கிவிடாது அவற்றில் இருக்கும் வாயு மண்டல மூலக் கூறுகள் ஒன்றிணைந்து அல்லது சிதைந்து திடப் பொருள் உருவாக்கத்தை நடத்துகின்றன என்பது தான் அறிவியல் உண்மை.

அடிப்படையில் உயிரினங்கள் அனைத்தும் உற்பத்தி (இனப்பெருக்கம்) வளர்ச்சி, முதிர்ச்சி எனபதனுள்ளும், ஒன்றை ஒன்றும் உண்ணும் சுழற்சியில் இருக்கின்றன. இவற்றில் நீண்ட வாழ்நாள் கொண்டவற்றின் உற்பத்தி குறைவாகவும், குறுகிய வாழ்நாள் கொண்டவை மிகுதியான உற்பத்தித் திறனையும் பெற்றிருக்கின்றன. வேட்டையாடி அழிக்கப்பட்ட உயிரனங்களைக் கருத்தில் கொள்ளாவிட்டாலும், இயற்கைச் சீற்றங்களினால் முற்றிலும் அழிந்த உயிரினங்களின் மறு உற்பத்திக்கு கடவுள் என்ன செய்திருக்கிறார் என்கிற கேள்விக்கு மதங்கள் விடை சொல்லுவது இல்லை. படைப்பிற்கான காரணம் இறை விருப்பம் என்றாலும் அவை முற்றிலும் அழிந்து போனதற்கு என்ன காரணமாக இருக்கும் ? அவற்றை படைத்ததின் நோக்கத்தை அப்படைப்புகளும் தோன்றியதன் நோக்கத்தை நிறைவு செய்துவிட்டனவா என்பதற்கு தெளிவான எந்த ஒரு பதிலையும் இறைவனின் படைப்பு என்கிற நம்பிக்கையாளர்கள் விடை தேடியதில்லை. இத்தகைய கேள்வியில் படைப்பு என்று எதுவும் கிடையாது, உயிரினத் தோற்றம் சூழலால் அமையப் பெற்றது என்பதையும் பரிணாமம் அல்லது ஏதோ ஒன்றினால் நம்ப வேண்டி இருக்கிறது. நன்னீரில் உற்பத்தியாகாத புழுக்கள், பூச்சிகள், கொசுக்கள் தேங்கிய குட்டையில் (தோன்றி) வளர்வதற்கு சுற்றுச் சூழல் என்பது தானே வேறுபாடு.

தாவிர வகைகள் உட்பட, உயிர்களின் நோக்கம் உணவு தேடுதல் (தன்னைப் பாதுகாத்தல்), இனப்பெருக்கம் இவை தவிர்த்து எதுவும் கிடையாது. வாழுதல் அதில் கிடைக்கும் இன்பம் எனப்படுபவை தாவிர வகைக்கள் தவிர்த்து உயிரினங்களுக்கு இருந்தாலும், தாவிர வகைக்களுக்கு வாழும் இன்பம் என்னும் மனம் சார்ந்த உணர்வுகள் கூட கிடையாது, வாழும் இன்பம் தவிர்த்து எந்த ஒரு உயிரனத்திற்கும் வாழுதலுக்கான வேறு எந்த தனிப்பட்ட பலனும் கிடையாது, நாம் ஏன் வாழனும் என்கிற கேள்வியே எழாமல் உடல் சார்ந்த, இச்சை, பாசம் என்பதை வளர்த்துக் கொண்டு மனித இனம் வாழுதலை நேசித்தாலும், பிற உயிரனங்களுக்கு தாம் ஏன் வாழனும் என்கிற எண்ணம் எதுவுமே இல்லாமல் தன்னிச்சை எனப்படும் தூண்டலில் தோன்றி, வளர்ந்து, இனப்பெருக்கம் செய்து மறைகின்றன. உயிரினம் வாழுதலுக்கான நோக்கம் என்னவாக இருக்கும் என்கிற தேடலில் மறைந்த (இறந்த) பிறகான நிரந்தர மற்றும் தற்காலிக சுவர்கங்களையும் மதங்கள் காட்டுகின்றன. ஆனாலும் இவை பற்றிய கற்பனையில் சிக்காத மனித இனம் மதங்கள் தோன்றுவதற்கு முன் வாழ்ந்து மறைந்தும் இருக்கின்றன. படைப்பு அதற்கான நோக்கம் இவற்றின் தெளிவுகள் எதுவுமே வரையறுக்கப்படாத சூழலிலும் கூட மனிதன் உட்பட உயிரினங்கள் தோன்றி மறைந்திருக்கின்றன எனும் போது அதற்கு காரண கருத்தா என நம்பப்படும் கடவுள் அவர்களுக்கு மட்டும் ஏன் எதையும் (தெளிவாக, மறைமுகமாகக் கூடச்) சொல்லி வைக்க வில்லை என்ற கேள்வியில் அனைத்தும் இறைவனின் படைப்பு என்கிற கொள்கைகள் என்னால் எப்போதும் நிராகரிக்கப்படுகிறது.

எந்த ஒரு தானியங்கி (சுழற்) விசையும் தொடந்து செயல்பட புற விசையின் எப்போதுமான தூண்டல் என்பது தேவை. எடுத்துக்காட்டிற்கு பூமியின் பருவகாலம் மாறி மாறி ஆண்டுக்கு ஒரு முறை வருவதற்கு (அதன் வழி தொடர்சியான தானிய பொருள் உற்பத்திக்கு, உயிர் தோற்றங்களுக்கு) பூமி சுற்றுவதும் சூரியனும் புறக்காரணிகள், இந்த வெளிப்புற தூண்டல் இல்லை என்றால் பூமியில் பருவகாலம் என்பதே ஏற்படாது. பரவெளியெங்கும் இது போல் கோள்கள் அனைத்துமே ஒன்றை ஒன்று சார்ந்து இயங்குகின்றன, இதைத் தவிர்த்து புறத்தூண்டல்கள் எதுவுமே இல்லாத சூழலில் படைப்புகள் என்று நம்புவை அனைத்தும் வெறும் நம்பிக்கை மட்டுமே என்று நான் கருதுகிறேன். இவை அனைத்தையும் இறைவனின் சித்தம்/விருப்பம் செயல்படவைக்கிறது என்று பூசி மொழிகினாலும், இவை எல்லாம் செயல்பட வைப்பதில் இருக்கும் இறைவனின் விருப்பம் என்ன ? என்று கேட்டால் விடை கிடைப்பது இல்லை. இறைவனுக்கு விருப்பம் நோக்கம் எதுவுமே கிடையாது என்று வைத்துக் கொண்டாலும், மனிதன் நல்லவனாக வாழனும் அதன் பிறகு சொர்கம் கிடைக்கும் என்பதும் மதங்கள் காட்டும் இறைவனின் விருப்பம் என்று எடுத்துக் கொள்ள முடியுமா ?

விருப்பம் எதுவும் இல்லாத கடவுள் விரும்பிய படி உலகையும் ஏனையவற்றையும் படைத்தார் என்பது முரணனான கூற்றுகள். அப்படியே கடவுளுக்கு விருப்பம் இருந்து படைத்திருந்தாலும் படைப்பின் பிழைகளுக்கு இறைவன் தான் பொறுப்பு என்று குற்றம் சொல்லுபவர்களை நாம் புறந்தள்ளவும் முடியாது. படைப்பில் பிழையே இல்லை என்பவர்களும் எல்லாவற்றையும் சரியாக படைத்த கடவுள், மனிதனுக்குள் இத்தனை பிரிவினைகளை ஏற்படுத்தாத சூழலை மட்டும் படைக்கவில்லை என்று சொன்னாலும் அது முரண் தானே. இறைவன் நாடினால் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்பதும் கெட்டவை நடந்ததில் இறைவனின் பங்கு இல்லை என்பது போன்ற முரணான கூற்றுகளை எப்போதும் நிராகரிக்கிறேன், அந்தக் கூற்று உண்மை என்றால் படைப்பில் பாராபட்சம் என்பதும் உண்மையாகத்தானே இருக்க முடியும் ?

நான் இறைவன் இருக்கிறானா இல்லையா என்று எங்கும் விவாதிப்பது இல்லை, ஆனால் இறைவனின் செயல்கள் இவை இவை என்று சொல்லப்படுவற்றை என்னால் கேள்வி எழுப்பாமல் இருக்கவே முடியாது, அந்த வகையில் அனைத்தும் இறைவனின் படைப்பு என்று சொல்லப்படும் கூற்றை எப்போதும் நான் நிராகரித்தே வருகிறேன்.

முந்தைய பகுதிகள் 1, 2 மற்றும் இறைவன் படைக்கிறானா ?

(என்றாவது) மீண்டும் தொடரும்......

21 ஜூலை, 2010

நீங்களும் செய்யலாம் !

எல்லோரும் ஏழை எளியோருக்கு உதவம் மனப்பான்மை நிறையவே உள்ளது, கேட்டால் செய்யலாம் என்ற மனநிலையில் இருப்பது வழக்கம், நமக்கும் செலவினங்கள் வாழ்நாள் முழுவதும் இருக்கும் என்பதும் உண்மையே. நம் பொருளீட்டலின் சிறு அளவிலான தொகையையேனும் வறியோர்களுக்கு அளிப்பது நம் வாழும் சமூகத்திற்கு செய்வது நம் நல்வாழ்க்கையின் ஒர் பகுதியாகும். மதங்களின் வழியாக பின்பற்றோர்வோர் அனைவருக்கும் இத்தகைய அறிவுறுத்தல்கள் இருந்தாலும் அவ்வமைப்புகள் மூலம் செய்வது தற்கால சூழலில் ஏழை எளியோரை முழுமையாக சென்று அடைவதில்லை மாறாக மதம் சார்ந்த நிறுவனங்கள் அவற்றைப் பெற்றுக் கொண்டு மனிதர்களுக்கிடையே பிரிவினையைத்தான் வளர்க்க அவ்வுதவியை முறைகேடாக பயன்படுத்துகின்றன, ஏழை எளியோர் பயன் அடைவதில்லை. இதற்கு மாற்றாக நேரிடையாகவே செயல்பட்டு தேவைப்படுவர்களுக்கு உதவுவது நல்ல பயனை அளிக்கும்

*****

நேற்று பதிவர் நண்பர் திரு குமரன் அவர்களின் இடுகையைப் பார்த்தேன், அவர் தமிழகம் செல்லும் முன் வலைச்சரம் சீனா ஐயாவைத் தொடர்பு கொண்டு 100க்கும் மேற்பட்ட ஏழை எளியோருக்கு சீருடை வழங்க ஏற்பாடு செய்து செய்தும் முடித்துள்ளார். அதையும் மிகவும் சீனா ஐயா மற்றும் சீனா ஐயாவின் துணைவியார் திருமதி செல்விஷங்கர் அவர்களும் குறிப்பிட்ட பள்ளிக்கே சென்று உதவி தேவைப்படும் மாணவ மாணவியரின் உடை அளவுகளை எடுத்து அளவுக்கேற்ற உடைகளை தைத்து வைத்திருக்க, நண்பர் குமரன் இல்லத்தினருடன் சென்று மாணவ மாணவியருக்கு உடைகளை வழங்கி மாணவர்களுக்கு எதிர்கால நம்பிக்கை ஊட்டும் வண்ணம் ஒரு சில நற்சொற்களைக் கூறி வந்திருக்கிறார்கள். குமரன் இதுபற்றி பதிவில் எழுதாவிட்டால் இப்படியெல்லாம் கூட நம்மால் உதவ முடியுமா என்று தெரிந்திருக்காது. சிங்கையில் வசிக்கும் நண்பர் திரு பாரி.அரசுவும் கூட தனது திருமணத்தின் போது இவ்வாறான உதவிகள் செய்திருக்கிறார், தொடர்ந்தும் செய்துவருகிறார். ஆனால் நெருங்கியவர்கள் தவிர்த்து யாருக்கும் தெரியாது. வெளியில் சொல்லாமல் உதவிகள் செய்வது மன நிலையைப் பொருத்தது என்றாலும் வெளியில் சொல்லுவது பலரையும் அவ்வாற உதவிகளைச் செய்யத் தூண்டும் என்பது தவிர்த்து வேறொன்றும் இல்லை.

வெளிநாடுகளில் பிறந்த இந்திய குழந்தைகளுக்கு ஏழ்மையின் தாக்கம் தெரியாது, அதனால் உதவி செய்யும் மனப்பான்மை இயற்கையாக ஏற்படாது, ஏழைக்குழந்தைகளுக்கு உதவி செய்யும் போது அந்தக் குழந்தைகளை அழைத்துச் சென்று அவர்கள் கைகளினால் அந்த உதவிகளை வழங்கும் போது, அவர்கள் ஓரளவு நல்ல ப்ழக்க வழக்கம், உதவும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வர். என் மகளுக்கு அடிக்கடிச் சொல்லுவேன், எத்தனையோ குழந்தைகள் ஒருவேளை உணவுக்கு தவிக்கிறார்கள், நீ சோற்றை வீணடிக்காதே, சாப்பிடும் போது சுற்றிலும் சிந்தாதே அன்று அடிக்கடிச் சொல்வது உண்டு. இருந்தாலும் அத்தகைய குழந்தைகளைப் பார்க்காத வரையில் அப்பா சொல்வது உண்மை என்று உணரவே மாட்டாள்.

நண்பர் குமரன் சீருடைகளை தன்னுடைய மகன் கையினால் வழங்கச் செய்ய வைத்ததன் மூலம், அவனுக்கு நாம ஏன் அவர்களுக்கு உடை வழங்க வேண்டும் என்று கேள்வி எழுப்பி காரணங்களைத் தெரிந்து கொண்டிருப்பான். கேட்டதும் கிடைக்க வேண்டும் என்கிற மன நிலை, பிடிவாதம் குறையும், அதைவிட நாமும் பெரியவனாக வளர்ந்து இது போல் பலருக்கும் உதவி செய்ய வேண்டும் என்கிற மன நிலை துளிர்த்திருக்கும்.

அதுபோலவே உதவி பெற்ற மாணவர்களில் 100க்கு 5 பேருக்காவது நாமும் நன்றாக படித்து இது போல் வாங்கிக் கொடுக்க வேண்டும், பெற்றோர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும், அதற்கு நன்றாக படிக்க வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டிருக்கும். நாம் வெளிப்படையாக செய்யும் உதவியின் மற்றொரு பலன் பிறரை அவ்வாறு செய்யத் தூண்டுவது, மற்றபடி அதில் கிடைக்கும் புகழ், மெய் சிலிர்ப்பு தற்காலிகமானது என்றாலும், உதவும் நல்லதொரு பொருளியல் நிலையும், அதற்கு ஏற்ற மனமும் நமக்கு அமையப் பெற்றிருக்கிறதே, அதற்கு நம் இல்லத்தினரும் உறுதுணையாக இருக்கிறார்கள் என்பதாக கிடைக்கும் மன நிறைவு என்ன விலை கொடுத்தாலும் பெற முடியாத ஒன்று.

இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டுக்காரன் ஏழ்மையை படம் எடுத்துப் போகிறார்கள் என்பதாக எத்தனையோ முறை வருத்தப்படுகிறோம் ஏழ்மையைப் போக்க நாம் என்ன செய்தோம் என்கிற கேள்வியை என்றாவது நாம் கேட்டிருந்தால் நமக்கும் உதவும் மன நிலை வாய்க்கப் பெரும். நம்மால் முடிந்த அளவுக்கு உதவு முடியும், அதற்கு தேவை பொருள் மட்டுமே இல்லை மனமும் தான். நமக்கு தெரியாதவர்கள் எவ்வளோ பேர் இருந்தாலும் நமக்கு தெரிந்து உதவி தேவைப்படுபவர்களுக்கு நம்மால் ஆனதை செய்ய முடியும்.

108 மாணவ மாணவியருக்கு சீருடைகள் வழங்கிய நண்பர் குமரன் மற்றும் அவர் இல்லத்தினர், அவர்களுக்கு முன்னேற்பாடுகள் செய்து கொடுத்த திரு சீனா ஐயா மற்றும் அவரது துணைவியார் ஆகியோருக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

19 ஜூலை, 2010

கோமணமின்றி புழங்குதல் பற்றி பயமோகன் !

“கோமணம் பற்றிஅக்கறையே இல்லாமல் வாழக்கூடிய வாழ்க்கை என்பது நல்லதுதான். அது ஓர் இலட்சிய வாழ்க்கையும்கூட. சன்யாசிகளைத் தவிர்த்து அது எந்த அளவுக்கு நடைமுறைச் சாத்தியம் என்றுதான் நான் பேசிக்கொண்டிருக்கிறேன். ‘நான் யாருடைய கோமணத்தைப் பற்றியும் தெரிந்துகொள்ள முயல்வதே இல்லை’ என்று அப்பாவித்தனமாக அல்லது சுய ஏமாற்றாகச் சொல்லிக்கொள்ளலாம். ஆனால் அது நம்முடைய ஊரில் சாத்தியமே அல்ல.

அப்பட்டமாக்ச் சொல்கிறேனே, குறைந்தபட்சம் நம் சூழலில் ஒருவர் கோமணமின்றி இருக்கிறாரா என்று தெரிந்துகொள்ளாமல் பழகுவது என்பது சாத்தியமேயல்ல. சாத்தியமல்ல என்பதுடன் அது அபாயமும்கூட. கோமணமின்றி இருப்பவர்கள் தாம் கோமணம் இன்றி இருக்கிறோம் என்ற சுய உணர்ச்சி இல்லாதவர்கள் அனேகமாக இல்லை. அந்த சுய உணர்ச்சி நம் மரபின் சென்றகால இழிமுறைகளில் இருந்து அவர்களிடம் ஏற்றப்பட்ட ஆழமான தாழ்வுணர்ச்சியால் ஆனது. இன்றைய பொதுச்சூழலில் சாதாரணமாகச் சொல்லப்படும் சொற்கள்கூட அவர்களின் (கோ) மன உணர்ச்சிகளை தீவிரமாகப் புண்படுத்திவிடும். ஒருவர் கோமணம் அல்லது ஜட்டி அணிந்திருக்கிறாரா என்று தெரியாமல் நட்பின் அடிப்படையில் அவரது கிழிந்த பாக்கெட்டுகளில் கைவிட்டுப் பார்ப்பது, அப்படி அவர்களைப் புண்படுத்துவதென்பது அநீதியானது, நட்புகளை உடைக்கக்கூடியது, பொது அமைப்புகளில் பல சங்கடமான நிலைமைகளை உருவாக்கக்கூடியது. ஆகவே நம்சூழலில் அத்தனை பேரும் இந்தக் கவனத்துடன் தான் இருந்துகொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

என்னுடைய அனுபவம் ஒன்று. பலவருடங்களுக்கு முன் எனக்கு நெருக்கமான இலக்கிய நண்பர் ஒருவர் இருந்தார். மாற்றுத் துணி கூட இல்லாதவர் அவர் எங்கே கோமணம் அணிந்திருக்கப் போகிறார் என்பது என்னுடைய பிரக்ஞையில் இருந்தது இல்லை. திடீரென என்னிடமிருந்து முற்றாக விலகிச் செல்ல ஆரம்பித்தார். நட்பை நீட்டிக்க நான் பலவேறு வழிகளில் முயன்றேன். அவரது மனக்குறை என்ன என்று விசாரித்தேன். நான் செய்த தவறு என்ன என்று அறிய முயன்றேன்.பலனில்லை. ஆழமான மனச்சோர்வுடன் நானும் விலகிக்கொண்டேன். தீவிர இலக்கியமறிந்த இரண்டே நண்பர்களில் ஒருவரை இழப்பது அந்தவயதில் பெரிய சோகம்.

நான் அந்த ஊரில் இருந்து மாற்றலாக வந்து சிலவருடங்களுக்கு முன் பழைய சங்கத்தோழர் ஒருவர் பேசும்போது நான் அந்த இலக்கிய நண்பரின் மனச்சிக்கலுக்குக் காரணத்தைச் சொன்னார். நான் அவரை வைத்துக்கொண்டே வேறு ஒருவரிடம் அவரது கோமணம் கூட இல்லாதவர் என்றுச் சொல்லி இழிவாகப்பேசினேன் என்றும் அது அவரது மனதை புண்படுத்திவிட்டது என்றும் அநத இலக்கிய நண்பர் தோழரிடம் ஒரு கோவணத்திற்கான துணியை கிழித்துக் கொண்டு பேசிக்கொண்டிருக்கும்போது சொல்லியிருக்கிறார்

நான் அந்த கடைசி உரையாடலை சொல்சொல்லாக நினைவுகூர்ந்தேன். ஏனென்றால் அத்தனைநாளும் அதை அத்தனை முறை மனதில் ஓட்டிக்கொண்டிருருந்தேன். என்ன பிழை நிகழ்ந்தது என்று துருவித்துருவி ஆராய்ந்துகொண்டிருந்தேன். நடந்தது இதுதான். நான் அன்றிரவு அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது என் அப்பாவின் குணநலன்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். அப்பா நிலப்பிரபுத்துவகால முரட்டுத்தனமும் நிலப்பிரபுத்துவகால அறமும் ஒருங்கே அமைந்த ஆத்மா. ஒருவன் வீட்டுக்குள் புகுந்து திருடிவிட்டான். அவனை கையும் களவுமாக பிடித்து தென்னையில் கட்டி வைத்திருந்தார்கள். ‘இவன் கோவணத்தை அறுங்கடா’ என்று அப்பா சொன்னதாக நான் சொன்னேன். அவன் ‘பசிக்காக’ என்றதும் சோறுபோட்டு துரத்திவிட ஆணையிட்டார்.

நண்பரை புண்படுத்திய சொல் என்ன என்று சட்டென்று கண்டுகொண்டேன். அப்பா சொன்னதை நான் அப்படியே அவரது உச்சரிப்பு மற்றும் முகபாவனையுடன் சொன்னேன். கோவணமே கட்டாதவரை அறுங்கடா என்று சொன்னால் வேறு எதையோ அறுக்கச் சொல்கிறார் என்பதாக புரிந்து கொண்டு, அதுவரை அவரது எட்டாம் தலைமுறை வரை கோவணமே கட்டாதவர்கள் என்பதால் அவருக்கு அந்தக் கடுங்கோபம் வந்திருக்கக் கூடும்.

நான் சொன்னவற்றை விளக்கியதும் தோழர் ‘அடாடா,நான் அவனிடம் சொல்கிறேன்’ என்றார். அதன்பின் சிலநாட்கள் கழித்து அந்த இலக்கியநண்பர் என்னைக்கூப்பிட்டு மன்னிப்பு கோரினார். மீண்டும் உற்சாகமாக பேச முயன்றார். சில நாட்கள் பேசினோம். ஆனால் நட்புகளைப்பொறுத்தவரை ஒன்றுண்டு, ஒரு நட்பு உடைந்து கொஞ்ச காலம் ஆனால் இரு சாராருமே வாழ்க்கை போக்கில் வெகுதூரம் விலகிச் சென்றிருப்போம். மீண்டும் விரும்பினாலும் கூட எனக்காக அவர் கோவணம் கட்ட முடியாது”.
--------------------------------------------------------------------------------------------

“ஆச்சரியம் என்னவென்றால் தமிழ்நாட்டில் தற்போது பூம்புகார் ஜட்டிக்கும், கோடு போட்ட அண்டர்வேருக்கு மாறினாலும் அன்று கோவணம் கட்டாதவர்களே இல்லை என்பதுதான். ஒரு சிலர் கோவணமே இல்லை என உணர்வதற்கு ஒரு வரலாற்றுப்பின்புலம் உள்ளது. தமிழ்நாட்டின் மொத்த இலக்கிய-சமூக-பொருளியல் ஆதிக்கத்தை கையில் வைத்திருப்பவர்கள் பிறரிடம் 'மடியில் கணமில்லை' என்பார்கள், இதைக் வேறுமாதிரியாக புரிந்து கொண்ட சமூகம் ஒருசிலரை கோவணம் கட்டாதவர்கள் என்று அவமதிக்கிறது

பிராமணர்கள் கிட்டத்தட்ட அதே அளவுக்கே புண்பட்ட மனநிலையில் இருக்கிறார்கள் என்பது இன்னொரு ஆச்சரியம். மொத்த தமிழகமும் தங்களின் பஞ்சகச்சத்தை கோவணமாக ஏற்கத்தயங்குவதாக அவர்கள் நினைக்கிறார்கள். தாங்கள் அனைத்து ஊடகங்களிலும் வரலாறுகளிலும் பஞ்சகச்சம் குறித்து அவமதிக்கப்படுவதாகவும் அதை தமிழகமே வேடிக்கைபார்ப்பதாகவும் சொல்கிறார்கள். கோமணம் கட்டாதவர்களை வாட்டும் சிறு சொல்கூட பிராமணர்களையும் ஆழமாக புண்படுத்திவிடும்.

என் அனுபவத்தில் நான் இந்த புண்படுத்தல் சிக்கலுக்கு உள்ளானவர்களில் அனேகமாக பெரும்பான்மையினர் பிராமணர்களே. நம்ப மாட்டீர்கள் திருக்குறளில் 'உடுக்கை இழந்தவன் கைபோல' என்ற குறள் குறித்துசொன்ன ஒரு கருத்துக்காக என் நட்பையே முறித்துக் கொண்ட நெடுநாள் நண்பர் ஒருவர் உண்டு. எங்கோ மனம் பறக்கிறது என்பதை கோவணமே பறப்பதாக தவறாக புரிந்து கொண்டோர்களும் உண்டு,
--------------------------------------------------------------------------------------------

“ஒருமுறை ஒரு நண்பர்வட்டத்தில் பேசும்போது நான் சொன்னேன் ”தமிழ்நாட்டில் கோவணம் கட்டாத ஒரே சாதிதான் இருக்கிறது போல் தோன்றுகிறது — சாயர் சாதி !” சாயாக்கடை வைத்து சந்தோஷமாக இருக்கிறார்கள்.

ஆகவே கோவணம் கட்டாமல் இருப்பது என்பது துணி கிடைக்கிறதா இல்லையா, அல்லது விருப்பமா என்பது பற்றி மட்டுமே, எல்லாருக்கும் அது சாத்தியமில்லை. காரணம் இப்போது எல்லோரும் ஜட்டிக்கும் மாறிவிட்டார்கள், ஆனால் தமிழகத்து மனச்சிக்கல் என்னவென்றால் கோவணம் சார்ந்த இத்தனை உளச்சிக்கல் இருந்தாலும் பொதுவெளியில் கோவணம் என்பது முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது அல்லது எல்லோருமே ஜட்டிக்கு மாறிவிட்டார்கள் என்ற பாவனையை அவர்கள் விரும்புகிறார்கள் என்பதுதான். ஆகவே கோவணம் கட்டுவது குறித்து பேசுவது பெரும்பாலானவர்களுக்கு பிடிப்பதில்லை. அது ஒரு பெரும்பான்மை நடைமுறை என்பதனால் ஜட்டியைக் கூட கோவணம் என்றே சொல்லி அதைத்தான் கடைப்பிடித்தாகவேண்டும்.

ஆனால் உள்ளாடை எது அணியப்பட வேண்டும் என்பது குறித்த அடையாளத்தை தொடர்ந்து அந்தரங்கமாகவேனும் பரிசீலனைசெய்துகொண்டிருப்போம், பரிகாசம் செய்துகொண்டிருப்போம். நெருக்கமான நண்பர்களிடமாவது அந்த பாவனைகளையும் இடக்கரடக்கல்களையும் கைவிட்டு பழக முடியுமா என்று முயல்வோம். நான் சொல்வது அவ்வளவே”.

*****

தமிழ் சமூகத்தில் பெயருக்குப் பின்பான சாதிய அடைமொழிகளை நீக்கிக் கொண்டாலும், சாதி ஒழிப்புக்கு எதிரான கருத்துகள் அவ்வபோது ஏற்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன, அதனை பிற்போட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவான ஊதுகுழல் போன்ற பாவனையுடன் பலர் ஒலித்துவருகின்றனர். பொதுவெளியில் சாதியின் பயன் உறமுறைத் திருமணம் என்பதன் நீட்சியாகத் தொடர்கிறது என்பது தவிர்த்து வேறெதுவும் இல்லாத சூழலில் சாதிய ஆதரவுக்குரல்கள் நசுக்கப்பட வேண்டும் என்பதை நான் பதியவைக்கிறேன்.

கலவை 19/ஜூலை/2010 !

நாட்டு நடப்பு : கடலுக்கு விலை பேசி வித்துருக்கானாம் ஒரு ரெட்டி, இந்தியன் ஆயில் கார்ப்ரேஷனும் அவனிடம் ஏக்கர் கணக்கில் இடம் வாங்கிவிட்டு இப்போது பேந்த பேந்த விழிப்பதாக செய்திகளில் காட்டுகிறார்கள். நிலம் வாங்குவதில் பத்திரப்பதிவு, பட்டா என எத்தனையோ அரசு சார்ந்த செயல்முறைகளுக்கு பிறகே நிலங்கள் கைமாறுகிறது, ரெட்டியைச் சொல்லிக் குற்றமில்லை, உடந்தையாக இருக்க்கும் அரசு அலுவலர்கள், அரசியல்வாதிகள் இவர்களையெல்லாம் என்ன செய்வது ? ஒரு தெலுங்குகாரன் சென்னாப் பட்டினத்திலேயே (தெலுங்கர்கள் சென்னையை அவங்க ஊரும்பாங்க) அமர்ந்து தமிழர்களுக்கு பட்டை நாமம் போட்டிருப்பதை என்னச் சொல்வது ? ஊருக்கு இளிச்சவாயன் பிள்ளையார் கோவில் ஆண்டி, உலகத்தாருக்கு இளிச்சவாயன் தமிழன் போல. தமிழனை எவன் எவனோ கொள்ளையடிக்கையில் மஞ்சள் தமிழர் & பேமிலி அடித்தால் மட்டும் தப்பா ? போலிக் காவல்நிலையம் ஒன்று செயல்பட்டு வந்ததாக நேற்றைய சன் செய்தியில் பார்த்த போது, திமுக அரசின் சட்டம் ஒழுங்கு பற்றி சன் செய்திகள் தமுக்கு அடிப்பதையும், அம்மாவை ஆசைத்தீர செய்திகளில் காட்டுவதைப் பார்க்கும் போதும், மாறன் சன்ஸ் குறித்து 'என்னவோ திட்டம் இருக்கு........' முத்துப்படப் பாடல் நினைவு வந்தது.

மதிப்பெண் பட்டியல் முறைகேடுகள் : படிப்பை விலைப் பேசலாம் (paid seat), மதிப்பெண் பட்டியலையே விலை பேசிப் பெற்றிருக்கிறது ஒரு கூட்டம், இதற்கும் அரசு அலுவலர்களில் மாவட்ட ஆட்சியர் உட்பட உடந்தையாம். நல்லா படிச்சா நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும்னு சொல்லி சொல்லி படிக்க வைத்தப் பெற்றோர்களின் நிலையும் மதிபெண் பெற்ற மாணவர் நிலையும் கவலைக்கிடமாகுது. இவர்களைப் போல் ஒரு சிலர் குறுக்கு வழியில் மதிப்பெண் பட்டியலை திருத்திப் பெறுவதால் நல்ல மதிப் பெண் பெற்ற மாணவர் நிலை ? 40ற்கும் மேற்பட்டவர் பிடிபட்டு இருக்கிறார்கள், சாதிவேறுபாடு இல்லாமல் அந்த 40ல் அனைத்து சாதியினருமே அடக்கம் ஆகி இருப்பார்கள் என்றே நினைக்கிறேன். இதில் முறைகேடுகளில் ஈடுபட்டார்கள் என்ற பெயரில் மாணவர்களை தண்டிப்பதைக் காட்டிலும் அவர்களின் பெற்றோர்களையும், உடந்தையான அரசு அலுவர்களையும் தண்டிப்பதே முறையாகும், மாணவர்களுக்கு முறைகேடுகளுக்கு எதிரான தண்டனை விபரங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, மேலும் அரசு அலுவலர்களின் முகவர்கள் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களின் பெற்றோர்களை அணுகி தூண்டில் போட்டு இருக்க வேண்டும், அதில் பேராசைக் கொண்ட பெற்றோர்கள் தங்கள் வாரிசுகளை சிக்க வைத்து இருக்கிறார்கள். பெற்றோரும் அரசு அலுவர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் செய்த குற்றத்திற்கு மாணவர்கள் பலியாகுவது அவர்களின் எதிர்காலத்தை கேள்வியாக்குவதுடன் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட வழி அமைத்துவிடும், மாணவர்களை மன்னித்து மற்றவர்களை தண்டிப்பது தான் ஞாயமானது.

ஊழல் :
ஸ்பெக்டரம் ராசாவைக் குறிவைத்து சு.சாமி காய் நகர்த்திவரும் வேளையில் இந்திய அளவில் மற்றொரு அரசியல்வாதி மீது ஊழல் குற்றச் சாட்டுகள் துவங்கி இருக்கின்றன. 11 ஆயிரத்து 412 கோடி ரூபாய் மதிப்பிலான ஊழல் புகார், நிதிஷ்குமார் மீது விழுந்திருக்கிறது. எப்போதும் அழுக்காகவே தெரியும் அவரது ஜிப்பாவில் இப்படி ஒரு கறை - என்பதாக ஜூவி செய்தி வெளி இட்டு இருக்கிறது. 2020ல் இந்தியா வல்லரசு ஆகிறதோ இல்லையோ, உலகப் பணக்காரர்களில் வரிசையில் பில்கேட்ஸ், புருனே சுல்தான் போன்றோர்களை இந்திய அரசியல்வாதிகள் பின்னூக்கு தள்ளிவிடுவார்கள் போலும். ஒருபக்கம் ஏழைகள் பரம ஏழைகளாக மாறி ஆப்ரிக்க நாடுகளைப் பின்னுக்குத்தள்ள ஊழல்வாதிகள் உலக பணக்காரர்களாகிவருகின்றனர்.

அரசியல் : ஜெ முன்னதாக தேர்தல் பரப்புரையைத் துவங்கிவிட்டார், கூட்டணிகான தூதுகள் நடைபெறுவதாக செய்திகள் வருகின்றன, இதற்கிடையே தமிழக காங்கிரஸ் ஆட்கள் (ஈவிகேஸ் இளங்கோவன்) கூட்டணிக்கட்சிகளிடம் 110 சட்டமன்ற தொகுதிகள் கேட்பதாகவும், கார்த்திக் சிதம்பரம் போன்றோர் இளைஞர் காங்கிரசு தொண்டர்கள் 11 லட்சம் வரையில் இருப்பதால் பாராளுமன்ற தொகுதிக்கு இரண்டு வீதம் 80 தொகுதிகள் வரையில் கேட்கலாம் என்றும் பரிந்துரைக்கப்படுகிறதாம். 111 கூடக் கொடுக்கலாம். தமிழக காங்கிரசு இலங்கையில் கட்சி துவங்கினால் இராஜபக்சேவை ஓரங்கட்டி ஆட்சி அமைக்கும் அளவுக்கு சிங்களர்களிடம் செல்வாக்கு பெற்றிருக்கிறது, அங்கு தனியாகவே ஆட்சி அமைக்கலாம், இவர்கள் தமிழகத்தில் கூட்டணிக்கு 78, 110 என பேரம் பேசுவது வியப்பு தான். காத்திருக்கும் ஜெ, ஒருவேளை காங்கிரசுடன் கூட்டு சேரும் போது ஈழத்தாய் இலங்கையா அது எங்கே இருக்கிறது என்பார். அண்ணாவின் ஆட்சி காமராசர் ஆட்சின்னு பேசிவரும் அரசியல்வாதிகள் தன்னோட ஆட்சி அமைய ஓட்டுப் போடுங்கள் என்று சொன்னால் என்ன ஆகும் என்று தெரிந்தே வைத்திருக்கிறார்கள்.

*****

இந்த செய்தியைப் படித்த போது கொஞ்சம் எரிச்சலும் சிரிப்பும் வந்தது,1.5 லிட்டர் தண்ணீரில் குளித்துக்காட்டி தண்ணீர் சிக்கனம் குறித்த விழிப்புணர்வை ஊட்டினாராம் ஒரு இளைஞர். நல்ல வேளை குளிப்பதற்கான தண்ணீர் பயன்பாட்டுடன் விட்டுவிட்டார்கள், 100 மிலியில் முகம் கழுவலாம், 50 மிலியில் கால் கழுவலாம் என்பதாக செய்துகாட்டாமல்.....என்ன எரிச்சல் என்றால், நாட்டில் சாயப்பட்டரைகளின் கழிவு கலப்பினால் வீணாகும் குடிநீர் மற்றும் ஆலைக் கழிவுகளினால் வீணாகும் குடிநீர் மற்றும் மினரல் வாட்டர் நிறுவனங்களால் அபகரிக்கப்படும் குடிநீர் இவற்றையெல்லாம் எதிர்காமல் 1.5 லிட்டரில் குளிக்க கற்றுக் கொள்ளுங்கள் என்பது என்ன மாதிரியான விழிப்புணர்வு என்று தெரியவில்லை. இதற்கு பதிலாக வெளிநாடுகளைப் போல் திஸ்யூ பேப்பர் எனப்படும் (மை) உரிஞ்சு தாள்களைப் பயன்படுத்த இவர்கள் பரிந்துரைக்கலாம், குளிப்பதற்கு பதிலாக ஈரத் தூண்டால் துடைத்துக் கொள்ளலாம், கால் கழுவ (குழூக்குறி) பேப்பர்களைப் பயன்படுத்தலாம்னு அரசே விளம்பரங்கள் மூலம் தண்ணீர் சிக்கனம் குறித்து அறிவிக்கலாமே.

16 ஜூலை, 2010

ஆண்டி மடமும் தமிழக காங்கிரசும் !

ஆண்டுக்கு ஒரு முறை காமராசர் பிறந்த நாளின் போதும், தமிழக, பாராளுமன்ற தேர்தலின் போதும் தமிழகத்தில் காங்கிரசு என்கிற ஒரு பழம்பெருமை பண்ணையார் கட்சி ஒன்று இருப்பது அறிய வரும், ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் குழும அளவுப்படி குறிப்பிட்ட நாளில் பல்வேறு வேளைகளில் காமராசர் கழுத்தில் மாலைகள் விழும், எல்லோரும் சேர்ந்து வந்து மாலை அணிவித்திருந்தால் காமராசருக்கு ஒரே ஒரு மாலை தான் கிடைத்திருக்கும், ஆக காமாராசர் கழுத்தில் விழுந்த மலைபோல் மாலைகள் விழுந்திருந்தால் அவ்வளவு குழுமங்கள் காங்கிரசில் இருக்கிறது என்பது பொருள். வழக்கமாக காமராசருக்கும் கிடைக்கும் மாலைகளின் எண்ணிக்கைகள் வெகுவாக குறைந்திருக்கிறது இந்த ஆண்டு, காரணம் வாசன், இளங்கோவன், தங்கபாலு ஒன்றாக இணைந்து காமராசருக்கு மாலை அணிவித்தார்களாம், அப்போ காமராசருக்கு ஒரு மாலை தானோ என்னவோ ?

தமிழத்தில் தோன்றிய கட்சிகள் என்று எதுவும் இல்லாத நிலையில் பெரியார் போன்றோர் தேசிய கட்சியான காங்கிரசை சுதந்திரப் போராட்டத்திற்கு முன்பும், சூழல்களால் பின்பும் ஆதரித்த நிலையில் காமராசர் காலத்தில் தமிழகத்தில் காங்கிரசு இருந்தது. தமிழக காங்கிரசின் தலைவராக தந்தைப் பெரியாரும் இருந்திருக்கிறார் என்பதை காங்கிரசின் இணையத்தளத்தில் இருக்கும் பட்டியல் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. தமிழகத்தில் இருந்த ஒரே கட்சி என்பதாக திராவிடக் கழகங்களுக்கு முன்பு வேறு வழியில்லாமல் காங்கிரசின் வசம் தமிழ்நாட்டைக் கொடுத்து இருந்தனர் தமிழக மக்கள், காமராசர் போன்ற தலைவர்கள் இருந்தும் தமிழர்கள் நலனை முற்றிலுமாக புறக்கணித்து தமிழர் மொழி அடையாளங்களை முற்றிலுமாக புறக்கணித்த சூழலில் இந்தி எதிர்ப்பு என்னும் போராட்டத்திற்கு பிறகு தமிழகத்திற்கு பண்ணையார் முறை ஆட்சியாளர்கள் தேவை இல்லை என்பதாக தமிழக மக்களால் காங்கிரஸ் புறக்கணிக்கப்பட்டது, தமிழர் நலனை முன்னிறுத்தியும், இந்தி எதிர்ப்பு போராட்டங்களின் மூலமாக மக்கள் செல்வாக்கு பெற்ற அண்ணாவும் அவருக்கு பிறகு திராவிடக் கட்சிகளின் தலைவர்களும் தமிழகத்தில் தேசியவாத சக்திகளை முற்றிலுமாக துடைத்த நிலையில், இடையில் திமுக - அதிமுக பிளவிற்கு பிறகு தற்போது பாமக எடுக்கும் தேர்தல்காலக் கூட்டணிகளாக இந்தக் கட்சிகளின் முதுகில் மாறி மாறி சவாரி செய்தது காங்கிரஸ். இன்று வரை அதே நிலைதான். காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்ட பிறகு இன்று வரை தமிழக காங்கிரசில் மக்கள் செல்வாக்கு எந்த விதத்திலும் கூடவில்லை, ஒரே ஒரு முறை திமுக தனியாக நிற்க, ஜெ, ஜா அணிகள் தனித்தனியாக நிற்க, மூப்பனாரின் தலைமையில் காங்கிரசும் தனித்தனியாக நிற்க, 30, 25,20, 25 என்ற வாக்காள விழுக்காடுகளில் காங்கிரஸ் 25 இடங்களை பெற்றது, காங்கிரசின் குறைந்த பட்ச அதிகப்பட்ச அளவுகள் தமிழகத்தைப் பொறுத்த அளவில் 25 இடங்களே, அது கூடி இருக்கிறதா என்று பார்க்க அதன் பிறகு எந்த வித தற்கொலை முடிவுகளும் எடுக்கப்பட்டவில்லை, குதிரை சவாரி மட்டுமே.

தற்போதைய தமிழகத்தில் கொள்கையளவிலும், செயல்பாட்டு அளவிலும் திராவிடக்கட்சிகள் நீர்த்துப் போனப்படியால் திராவிடக் கட்சிகள் தனித்தனியாக நின்றால் வெற்றிபெறமுடியாது, கூட்டணியாக நின்றாலும் கூட பலமான கூட்டணி என்கிற நிலையில் தான் வெற்றி பெற முடியும் என்பதே கடந்த 15 ஆண்டுகளாக தமிழக தேர்தல் நிலை, இதற்கிடையே தமிழக வாக்களர்கள் பல்வேறு கட்சிகளில் இருந்து பாமக, தேமுதிக என பிரிந்துவிட்டப்படியால் கூட்டணி என்பதில் இவர்களுடன் ஆன பலமான கூட்டணி வெற்றிபெரும் என்ற நிலையில் தான் தேர்தல்கள் நடந்துவருகிறது, இது தமிழக வாக்களர் சூழல், பாமக மற்றும் தேமுதிக ஆகியக் கட்சிகளின் ஆதரவாளர்கள் அனைவருமே திமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்று மட்டுமே சொல்லிவிட முடியாது, அதில் குறிப்பிட்ட அளவு காங்கிரசு ஆதரவாளர்களும் உண்டு, அதிலும் சாதிக்கட்சியான பாமகவிலும், சாதிகட்சி என்று மறைமுகமாகச் சொல்லப்படுகின்ற தேமுதிகவிலும் அதை ஆதரிக்கும் குறிப்பிட்ட அளவு சாதிய வாக்களர்கள் அவர்கள் முன்பு காங்கிரசை ஆதரத்தவர்களாக இருக்கக் கூடும், அதாவது காங்கிரசில் மட்டுமே சாதி உணர்வாளர்கள் அற்ற கட்சி என்று சொல்லிவிடமுடியாது. இந்த நிலையில் காங்கின் தனிச் செல்வாக்கு 15 ஆண்டுகளுக்கு பிறகு கனிசமாக குறைந்திருக்கக் கூடும் என்றே நினைக்கிறேன். காங் தனித்து தேர்தலில் நின்றால் இவை வெட்ட வெளிச்சமாகிவிடும். அவர்களுக்குத் தேவை மத்திய அரசு ஆதரவு என்பதால் அத்தகைய தற்கொலை முயற்சியில் அவ்ர்கள் ஈடுபடவும் மாட்டார்கள்.

இவையெல்லாம் வாசனுக்கோ, தங்கபாலுவுக்கோ, இளங்கோவனுக்கோ தெரியாதா என்ன ? பிரிந்தவர் கூடினால் பேசவும் வருமோ என்பதைப் போல இவர்கள் ஒன்றாக சேரும் போது பொதுவாகப் பேசிக் கொள்ள மூன்றே பெயர்கள் தான் உள்ளன, அன்னை சோனியா, இராகுல் காந்தி, காமராசர். ஆண்டிகள் ஊரெல்லாம் சுற்றிவிட்டு இரவில் சத்திரத்தில் கூடும் போது
நாம இப்படியே கண்ட இடத்திலும் படுப்பது சரி இல்லை, நமக்கென்று ஒரு இடம் வேண்டும், நாம எல்லோரும் சேர்ந்து தனி இடம் கட்டிக் கொள்வோம் என்று உறுதி எடுப்பார்களாம், மறுநாள் வழக்கம் போல் திருவோட்டைத் தூக்கிக் கொண்டு ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பிவிடுவார்களாம்.

15 ஜூலை, 2010

புதிய இந்திய ரூபாய் சின்னம் கம்யூனிச சின்னமா !?







இனி இந்திய ரூபாய் மற்றும் காய்ன்களில் இந்த முத்திரை பதிக்கப்பட்டு வெளி வரும். உலக அளவில் இந்த முத்திரையே பயன்படுத்தப்படும். இனி ஆர். எஸ், ஆர்.இ., என்று போட வேண்டியிருக்காது. இந்த குறியீட்டை போட்டாலே போதுமானது. ஆங்கிலத்தில் ஆர் என்ற எழுத்தின் பாதியில் அதன் மீது இரண்டு கோடுகள் போட்டது போன்று இருக்கிறது. இந்தியில் “ ர “ என்பது போலவும் இருக்கிறது.

மேலும் படிக்க...

நன்றி : தினமலர்

மதப் பித்து !

பொதுவாக சாதி மதம் பிடிக்காதவங்க தான் அது பற்றி மிகுதியாகப் பேசுவதாகக் குற்றச் சாட்டுகள் உண்டு, அது 100 விழுக்காடு உண்மையே. சட்டையில் தெறித்த சந்தனம் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை, சாக்கடை தெறித்தால் அதுபற்றிக் கவலைப்படக் கூடாது என்பதாகத்தான் அக்கருத்தைக் கொள்ள வேண்டி இருக்கிறது. அதாவது சாதி மதத்தை சமூக ஜவ்வாதாக நினைப்பவர்கள் அது பற்றி அலட்டிக் கொள்ளாமல் இருக்கலாம். சாக்கடையாக நினைப்பவர்கள் தூப்புரவு செய்ய வேண்டும் என்று அடிக்கடி நினைத்துக் கொண்டே தான் இருப்பார்கள்.

*****

சிங்கத்தின் சொர்கம் என்னவாக இருக்கும் ? கொளுத்த மான்கள் நிறைந்திருக்கும் இருக்கும் ஒரு காடு, பன்றிக்கு ? சொல்லத் தேவை இல்லை. கொசுக்களின் சொர்கம் கூவம் ஆறு. மனிதர்களின் சுவர்க்கக் கனவுகள் கூட இப்படித்தான், நாம் எதை மகிழ்வாக நினைக்கிறோமோ அதைத்தாண்டி நம் சிந்தனைகள் செல்லாது, மதங்கள் காட்டும் சுவர்கங்கள் அனைத்துமே மனித மன சிந்தனை அடிப்படையில் எழுந்தவையே. அவதார் படம் படைப்புத் திறனின் உச்சம், அங்கு புற உலகில் வாழும் மனிதர்கள் துன்பமற்றவர்களாக இருக்கிறார்கள், அங்கும் கொடிய விலங்குகள் உண்டு என்றாலும் ஒன்றை ஒன்று வேட்டையாடுதல் என்பது கிடையாது, ஒன்றை ஒன்று சார்ந்து உதவி வாழ்ந்துவந்ததாகக் காட்டப்பட்டது, மனித சிந்தனைக்கு முரணற்றக் காட்சிகள் அவை, விதவிதமான விலங்குகள் இருந்தாலும் அங்கு மகிழ்ச்சி என்ற சூழல் இருப்பதாக நேரடியாகச் சொல்ல முடியாமல் அவை ஒன்றை ஒன்று தாக்கிக் கொள்வதில்லை, அதாவது அமைதியான சூழலே மகிழ்ச்சியானவை என்பதாக அந்த இயக்குனர் காட்சிகளை அமைத்திருந்தார், அந்த சூழல் நரகம் ஆகுவது மனிதப் படையெடுப்புகளால் என்பதாகக் காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும், மற்றபடி அந்த நிலத்தில் நரகம் என்று ஒன்று இருப்பதாகவும், மகிழ்ச்சி நிறைந்த உலகமாகவோ காட்டப்படவில்லை, மாறாக அமைதி நிறைந்த உலகமாகக் காட்டப்பட்டது, அந்தப் படத்தின் கற்பனையில் எனக்கு பிடித்திருந்த காட்சிகளே அங்கிருந்த சூழலை மிக அழகாக கவித்துவமாக காட்சி படுத்தி இருந்தவை.

மனித கற்பனையின் சுவர்கங்கள் இப்படிப்பட்டதாக இருந்தால் கூட என்னால் ஏற்க முடியும். ஆனால் மதங்கள் காட்டும் சுவர்கங்கள் இப்படியா ? இந்திரபுரியாகட்டும், ஆப்ரகாமிய மதங்கள் காட்டும் சுவர்கங்கள் ஆகட்டும் அவை அனைத்தும் பெண்களை மையப்படுத்திய மகிழ்ச்சி அங்கு நிலைத்திருப்பதாகவே சொல்லுகின்றன. துவக்கம் முதலே ஆணுக்கு இருக்கும் பெண்களின் மீதான அளவிட முடியாத ஆசை ஆண்கள் படைத்த மதங்களின் சுவர்க்க கனவுகளிலும் பதிக்கப்பட்டு இருக்கின்றன. எந்த ஒரு மதத்தையும் பெண்கள் உருவாக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, ஒருவேளை பெண்கள் அமைக்கும் மதமாக இருந்திருந்தால் நல்லக் கணவன் அங்கு கிடைப்பன் என்பாதாக சொல்லப்பட்டு இருக்குமோ, ஆசை அல்லது ஏக்கம் ஆகியவை உளவியல் வழியான விருப்பங்கள் ஆண்கள் படைத்த சுவர்கங்களின் பலன்களாகக் காட்டப்படுவது என்பதைத் தவிர்த்து மதக் கற்பனைச் சுவர்கங்களில் வேறொன்றும் இல்லை. அல்லது மதங்களின் சுவர்கம் என்பது அம்மதங்களை ஏற்றுக் கொண்டவர்களின் மாபெரும் கனவுலகம் எனலாம்.

எனக்கு எதாவது ஒரு மதத்தில் நல்ல பிடிப்பு இருந்தால் எனக்கு நெருங்கிய நண்பர்கள் வேற்று மதத்தினராக இருக்கும் சூழலில் என் நண்பன் குறித்து நான் நினைப்பது 'இறைவன் நாடினால் (விரும்பினால்) இவனும் ஒரு நாளைக்கு நம் மதத்தை ஏற்றுக் கொள்வான், இவனும் என்னுடன் சுவர்கத்தில் இருப்பான்' இணை பிரியாத நண்பர்கள் எனும் போது இப்படி நினைப்பது வியப்பொன்றும் இல்லை. பிற மதத்தைச் சேர்ந்த நெருக்கமான நண்பர்களை உடைய மதப்பாற்றாளர்கள் எவரேனும் இப்படி நினைக்காமல் இருப்பது உண்டா ? இல்லை என்றே நான் நினைக்கிறேன். அப்படி இருப்பவர் எவரும் உண்மையான நெருக்கம் கொண்ட நண்பராக இருக்கவும் முடியாது. இவற்றை எதற்குச் சொல்கிறேன் என்றால் நம்முடைய நம்பிக்கையும் நம்முடைய சூழலும் சேர்ந்தே பயன்(ண)ப்பட வேண்டும் என்று நாம் நினைப்போம், அந்த அளவுக்கு மனித மன மத நம்பிக்கை மனிதனை மாற்றிவிடும். ஆனாலும் இப்படியான மன உணர்வுகள் ஒவ்வொரு மதத்தினருக்கும் தனித்தனியானவை அல்லது இது போன்ற மத நம்பிக்கைகள் ஒரு வேளை பொய்யானதாகக் கூட இருக்கலாம் என்பதை மட்டும் ஏற்க மறுப்பர்.

13 ஜூலை, 2010

ஏவிஎம் இராஜன், ஜூனியர் பாலைய்யா, விசாலி கண்ணதாசன் !

70 களின் சிறந்த பக்திப்படங்களாக ஏவிஎம் இராஜன் நடித்த திருவருள், தெய்வம் ஆகியவற்றை தமிழ் இந்துக்கள் மறக்க முடியாது, பக்தி ரசம் சொட்டச் சொட்ட டிஎம் எஸ் பாடல்களும், உணர்ச்சி வடிவமான வசனங்களும், கவியரசர் கண்ணதாசனின் பாடல்வரிகளும், துள்ள வைக்கம் காவடி ஆட்டங்களுமாக படங்கள் பக்தி பரவசம் என்றால் அது மிகை அல்ல, எனக்கு தெரிந்து முதன் முதலில் பார்த்தப் படம் என்பதாக திருவருள் படம் தான் நினைவில் இருக்கிறது. அதில் வரும் ஆரத்திக் காட்சியைப் பார்க்கும் கையை நீட்டி தீபத்தை தொட்டுக் கும்பிட முயன்றதாக இன்றும் கூட என்னைப் பற்றி பெற்றோர்கள் நினைவு வைத்து ஓட்டுவது வழக்கம்.

முழுக்க முழுக்க முருக பக்தராக நடித்து வந்த ஏவிஎம் இராஜன் பக்திப் படங்களின் நாயகன் என்பதாக வலம் வந்தார். இடையில் என்ன ஆனதோ, திடிரென்று ஏவிஎம் இராஜன் அண்ணார் சகோ.D.G.S.தினகரன் & கோவினரின் ஆவிக் கூட்டங்களில் ஆவேசமாக பேசி அங்கு ஒருவராக ஐய்க்கியமானார். பக்தி என்பது பகல்வேசம் என்பது மட்டுமல்ல அது ஒரு மதம் சார்ந்த விடயம் என்பதாக புரிந்து போனது, அந்நாள் வரையில் முருகனருள் பரப்பிய இவரே இப்படி மாறிப் போனாரே என்கிற ஆதங்கம் கிட்டதட்ட நினைக்க மனதில் சோக உணர்வை ஏற்படுத்தியது. சக்தி உள்ள சாமி சக்தி யற்ற சாமி என்பதாக கிராமத்தினர் சிலவற்றைப் பேசிக் கொள்வார்கள், அது போல் இவ்வளவு பக்தி உணர்வை காட்டியவர் திடிரென்று மாற்று மதத்தில் ஐக்கியமானார் எனும் போது தாம் ஏற்படுத்திய பக்தி உணர்வுகள் அனைத்தையும் சுட்டுப் பொசுக்கிவிட்டு அல்லது நம்பிக்கையை பிரிதொரு நம்பிக்கையின் மீது வைத்த அடகு என்பாத நினைக்கும் படி ஆகிவிட்டது. 'கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே' என்று கூத்தாடியவர், அவரது கடவுளர்கள் பட்டியலில் ஏசுவை சேர்க்கவில்லையோ ? என்று நினைக்க வைத்தது.

இவ்வளவும் நாளும் புகழ்ந்த வாய் இப்பொழுது முற்றிலுமாக மூடிக் கொண்டது அல்லது வேறு ஒன்றை புகழ்ந்து பேசுகிறது என்று நினைக்க வெறும் மதப் பற்று என்கிற காரணியைச் சொல்ல முடியவில்லை. இவ்வளவு நாத்திகம் பேசியவன் இன்னிக்கு இப்படி மாறிவிட்டான் பாரேன் என்று ஒரு சிலரைச் சுட்டிக்காட்டுவது போன்றது தான் பிரபலங்கள் ஒரு மதத்தில் இருந்து இன்னொரு மதத்திற்கு மாறும் நிகழ்வும். முருகன் அருளை போற்றி இருக்காவிட்டால் ஏவி ஏம் இராஜன் என்கிற நபரே மக்கள் மனதில் இல்லை, அப்படியாக பெற்ற புகழை ஒரிரு நாளில் மாற்றிக் கொள்வது தனிப்பட்ட உரிமை என்றாலும் கூட இதுவரை கிடைத்தப் பெருமை என்பது தனிப்பட்டது அல்ல, அது ஒன்றின் மீது சார்ந்து இயங்கியதால் கிடைத்த பெருமை, அதை அடகு வைப்பது அல்லது அற்பமாக நினைப்பது இதுவரை செயத்தை ஒட்டுமொத்தமாக அவமானப்படுத்தும் நிகழ்வாகும். இங்கு பெரியார் தாசன் கூட எனக்கு நினைவுக்கு வருகிறார். இவர் பெரியார் தாசன் என்கிற புனைப் பெயரை வைத்திருக்காவிட்டால், பெரியார் பின்னனியில் இயங்காவிட்டால் இவரை தெரிந்திருந்திருப்போரை விரல் விட்டே எண்ணி விடலாம். இவர் ஏற்கனவே புத்த மதத்திற்கு மாறி பின் இஸ்லாமுக்கு மாறி இருந்தாலும் இஸ்லாமிய அன்பர்கள் பரப்பி வருவது, நாத்திகனான பெரியார் தாசன் இஸ்லாத்துக்கு மாறிவிட்டார். இதில் இஸ்லாம் அன்பர்களை நான் குறைச் சொல்லவில்லை. அப்துல்லாவாக மாறிய பெரியார்தாசன் தன்னை இன்னும் கூட பல நிகழ்வுகளில் பெரியார் தாசனாகவே முன்னிறுத்திக் கொள்கிறார் என்பதே.

கவிஞர் கண்ணசாதன் அர்தமுள்ள இந்து மதம் என்கிற பெயரில் 10 தொகுதிகள் வரையில் எழுதியுள்ளார், அதில் இருப்பதில் 80 விழுக்காடு அபத்தங்களே என்றாலும் கூட அவரின் இந்து மதக் கொள்கையின் மீதான ஈடுபாடு என்பதாக நான் எடுத்துக் கொள்கிறேன். அர்தமுள்ள இந்துமதம் என்பதை கணக்கில் கொள்ளாவிட்டாலும் கூட கண்ணதாசனின் பக்திப்பாடல்கள் கேட்போரை உருக வைக்கும், 'நீருண்ட மேகங்கள் நின்றாடும் கையிலையில் நீ வாழ இடமும் உண்டு' திருவிளையாடல் படத்தில் சிறப்பான எதுகை மோனையுடன் கோவித்துச் செல்லும் முருகனை அமைதி படுத்த ஒவ்வையார் பாடுவதாக பாடல், பழம் நீயப்பா என்று துவங்கும், கண்ணதாசனின் பக்திப்பாடல்கள் தொகுப்பில் சோடை போன பாடல் என்று எதுவுமே கிடையாது, அத்தனையும் தமிழ் நிலம் சார்ந்த, இந்து சமய பக்திப்பாடல்கள், கேட்போரை உருக்கும் பாடல்களில் ஒன்றேனும் கண்ணதாசனின் அன்பு மகள் விசாலியை உருக்காததும், அவர் நம்பிய இந்து மதம் சார்ந்த நம்பிக்கைகள் கண்ணதாசன் மகளை ஈர்க்காததும் வியப்பாக இருக்கிறது, விசாலி கண்ணதாசன் அப்பம் சாப்பிட்டு கிறித்துவத்தில் ஐய்க்கியமானார் என்று செய்திகளில் படித்தேன். மதம் மாறுவது அனைவரின் விருப்பம் என்றாலும் கூட மத வளர்ச்சியில் பங்கு பெற்றோர் மற்றும் அவர்களின் அருகாமையில் இருந்தோர் அவ்வாறு செய்வது இதுநாள் வரை ஊட்டிய நம்பிக்கையில் வெந்நீர் ஊற்றும் நிகழ்வாகும், நான் மதம் சார்ந்தவன் இல்லை என்றாலும் கூட நாகூர் ஹனிபா தன் பெயரை முருகன் அடியான் என்று மாற்றி திடிரென்று 'மருதமலை மாமனியே முருகைய்யா' என்று பாடினாலும் என்னால் நினைத்துப் பார்த்து ஏற்பது கடினம்.

*****

ஒரு வித நம்பிக்கையை ஏற்படுத்த பாடுபடுபவர்கள் பின்னாளில் அதில் வெந்நீர் ஊற்றுவது தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு இழப்பு இல்லை, ஆனால் அவர்களைப் பின்பற்றோவோருக்கு மாபெரும் இழப்பு தான். ஒரு செட்டியார் இந்தியாவின் உள் துறை அமைச்சராக இருக்கும் வேளையிலும் மற்றொரு புகழ் பெற்ற செட்டியாரின் மகள் மதம் மாறுவது வெறும் மனம் சார்ந்த விடயமா ? ஒட்டு மொத்த செட்டியார்களும் கண்ணதாசன் புகழை பாடினாலும் கண்ணதாசன் குடும்பத்தின் குறிப்பாக விசாலியின் துயரை அறிந்திருந்திருந்தால் அவரது துயரம் களையப்பட்டு இருக்கும், எவருமே கண்டுகொள்ளாத சூழலில் மதம் மாறி மனம் துயரை போக்கிக் கொள்ளும் ஒரு நிலைக்குச் சென்றதை வெறும் மனம் மாற்றம், மதமாற்றம் என்ற சொல்லாடில் நினைத்துப் பார்க்கவும் என்னால் முடியவில்லை. இந்து மதம் தமிழகத்தைப் பொருத்த அளவில் பார்பனர்கள், வெள்ளாளர்கள், செட்டியார்கள் பிடியில் தான் இருக்கிறது, இவர்களைச் சேர்ந்த ஒருவருக்கே இந்து மத நம்பிக்கைகளை தொடர்ந்து காப்பாற்றி வைக்கவோ, நம்பிக்கை அளிக்க வைக்க முடியவில்லை என்பது இந்து மத நம்பிக்கையின் வீழ்ச்சி என்பதாக நினைக்கிறேன். விசாலியின் முடிவு பாராட்டத்தக்கது பறக்கணிக்கும் மதத்தை புறக்கணிப்பது தவறு அல்ல. ஜூனியர் பாலையா ஏன் மாறினார் என்று தெரியவில்லை அதனால் அது பற்றி எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.

12 ஜூலை, 2010

தமிழ் ஓவியா, மாதவராஜ், வினவு மற்றும் சிலர் !

நாம எழுதுற எழுத்தை வாசிப்பதே பதிவர் / வாசகர் அளிக்கும் மிகப் பெரிய அங்கீகாரம் என்று நினைக்கிறோம், அதிலும் சிலர் எழுதும் அத்தனை இடுகைகளும் எல்லோரும் படிக்கக் கூடிய பதிவு என்பதாக பரிந்துரைப்பது மிகப் பெரிய அங்கீகாரம், நான் அறிந்த வரையில் பதிவர்கள் தமிழ் ஓவியா, திரு மாதவராஜ் மற்றும் வினவுக் குழு ஆகியோர் எழுதும் அத்தனை இடுகைகளும் வெளியிட்ட அடுத்த ஒரு மணி நேரத்திற்கும் எப்படியாவது வாசகர்களால் பரிந்துரைக்கப்படுகிறது என்பதை தொடர்ந்து பார்க்கும் போது ஏற்படும் வியப்பைத் தாண்டி இவர்களை என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

ரஜினி தும்மினாலே பத்திரிக்கை செய்தியாகிடும் என்பார்கள் அது போல் இவர்கள் எதை எழுதினாலும் படித்துவிட்டு பரிந்துரைக்க இவர்களுக்கு மிகப் பெரிய ரசிகர் கூட்டமே காத்திருப்பதைப் பார்க்கும் போது இது இவர்களின் பதிவுலக வெற்றி என்றே நினைக்கிறேன். இவர்கள் வெறும் தலைப்பிட்டு வெளி இட்டாலே வாசகர்களால் பரிந்துரைக்கப்படும் என்பது எனது அவதனிப்பு, மேற்கண்ட அன்பர்கள் வாசகர்களைக் கவரும் ரகசியத்தை வெளி இட்டால் பிறரும் பயன்பெறுவர்.

மேலும் தமிழ்மணத்திற்கு நான் வைக்கும் வேண்டுகோள், வாசகர் பரிந்துரைப் பகுதியை எடுக்காமல் தலைப்பை மற்றும் 'தமிழ் ஓவியா, மாதவராஜ், வினவு மற்றும் சிலர்' என்று வைத்துவிட்டால் தமிழ்மணத்தை திறந்தாலே பளிச்சென்று வாசகர்களை அடைந்து தமிழ்மணம் திரட்டிக்கு மேலும் பல பதிவர்கள் வந்து இணைத்துக் கொள்ளும் ஈர்ப்பாக இருக்கும் என்று கருதுகிறேன், செய்வதும் செய்யாமல் இருப்பதும் தமிழ்மணத்தின் விருப்பம்.

பதிவர்களாகிய நாம் தமிழ் ஓவியா, மாதவராஜ், வினவு ஆகியோர்களின் ஆக்கங்கள் இவ்வளவு சிறப்புற்றிருப்பதற்கு வட்டார அளவில் தனித்தனியாகவோ மொத்தமாகவோ பாராட்டு விழா நடத்தினால் இவர்களை கவுரவப்படுத்தி அங்கீகரிப்பது போல் இருக்கும், தொடர்ந்து சமூகத்திற்காக எழுதித் தள்ளும் இவர்களை நாம் அங்கீகரிக்காவிட்டால் யார் தான் அங்கீகரிப்பது.

என்னோடு சேர்த்து வாசகர்களும் பின்னூட்டத்தில் இம்மூவருக்கும் பாராட்டு தெரிவித்துக் கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். அடுத்து அவர்களைப் போல்வாசகர் பரிந்துரையில் தொடர்ந்து இடம் பிடிப்போர் பட்டியலும் இருந்தால் தெரிவிக்கவும், அவர்களுக்கும் பாராட்டுகள் அளித்து ஊக்கப்படுத்துவோம்.

தமிழ் ஓவியா, மாதவராஜ், வினவு ஆகியோரின் எழுத்துப்பணி என்றென்றும் வாழ்க, மூவருக்கும் பாராட்டுகள்.

இவர்களைப் போன்று உணர்வு பூர்வமான, சுண்டி இழுக்கும் எழுத்து நடை மற்றும் சமூக எழுத்துகளைப் பெற்றிருக்காத அப்பாவி பதிவர்கள் வாசகர் பரிந்துரையில் துண்டு போடுவது இடம் பிடிப்பது எப்படி என்பது குறித்து எனக்கு தெரிந்த புள்ளி விவரங்களை நாளைப் பார்க்கலாம்.

பின்குறிப்பு : தலைப்பில் போதிய இடம் இல்லாததாலும், இது போன்ற தொடர் சாதனையை தொடர்ந்து செய்யாததாலும் சிலரின் பெயர்கள் தலைப்பில் விடுபட்டுவிட்டது, இந்தப் பதிவை படிக்கும் பதிவர்கள் இதை வாசகர்களுக்கு தமிழ் மணத்தில் பரிந்துரைத்தால், மின் அஞ்சல் வழியாக இணைப்பாக அனுப்பினால் மூவரின் பெருமை மேலும் (கீழும் கூட) பரவும் என்பது எனது அவா.

இந்த இடுகையை இதுவரை பரிந்துரைத்தவர்கள் விவரம் இங்கே

9 ஜூலை, 2010

மூன்று நிமிட சாதனை - கருணாநிதிக்கு பாராட்டுவிழா !

சென்னை ஜூலை 22, தீவுத்திடல் அருகே 10 கோடி செலவில் அமைக்கப்பட்ட மேடையில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு பாராட்டுவிழா நடத்தப்பட்டது, விழாவில் மத்திய அரசு சார்பில் உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு தொல் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கவுரவித்தனர்.

முன்னதாக இந்தப் பாராட்டுவிழா ஏன் என்பதை தொடங்கி வைத்த பேசிய கவிஞர் வைரமுத்து,

கட்டுமரம் தராத மீனை, இவர்
காட்டும் வீரம் தருகிறது,
நாங்கள் வலைபோட்டு மீன் பிடிக்கிறோம், இவர்
மத்திய அரசிற்கு தூண்டில் போட்டே அதை பிடித்து தருகிறார் - என்பதாக பல மொக்கைகளைப் பேசி அப்ளாஸ் வாங்கினார்.

இந்த உலகத்திலேயே பாராட்டுவிழாக்கள் கண்டதில் வரலாறு படைத்த சாதனையாளர்களைத் தேடினால், அதில் கலைஞர்.மு.கருணாநிதி என்கிற பெயர் தவிர்த்து வெறெதுவும் இடம் பெறாது, கின்னஸும் கின்னஸ் அடித்தது போல் மயங்கும் செய்திக்குச் சொந்தக்காரர் எங்கள் கலைஞர், என்றார்.

மூன்றே நிமிடத்தில் மைய அரசுடன் தொலைபேசி மீனவ பிரச்சனையை முடித்ததைப் பார்த்து ஐஸ்லாந்து எரிமலையும் மூச்சை அடக்கிக் கொள்கிறது, இமயமலையும் உயரத்தைக் குறைத்துக் கூனிக் குறுக் கொள்கிறது. அன்று மூன்றெழுத்தை பேசினாய், இன்று மூன்றே நிமிடத்தில் அனைத்தையும் பேசி முடித்தாய். இந்த ஒரு வீரம் உள்ளவர் நாட்டின் தலைவனாக இருப்பது தெரிந்ததால் நானுறு ஜென்மங்களாகக் கூட நான் இலங்கை இராணவத்திடம் சுடப்பட்டு சாக தாயார் என்கிறாரானே இராம்ஸ்வர மீனவன், அங்கே இருக்கிறதையா உங்கள் வெற்றி. (பலத்தை கைதட்டல்)

****

பின்னர் பேசவந்த தொல்.திருமாவளவன் (மீசையை முறுக்கியபடி)

இராஜபக்சேவையும், ஜெயலலிதாவையும் ஒரு பிடி பிடித்தார், கருணாநிதிக்கு அவப் பெயர் ஏற்படுத்த ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்ந்து மீனவர்கள் கொலை செய்யப்படுவதாகவும், அதைத் சாதுர்யமாக தெரிந்து கொண்ட கருணாநிதி மத்திய அரசிடம் மூன்றே நிமிடத்தில் பிரச்சனைகளை எடுத்துக் கூறி முறியடித்ததாகவும், இந்த அரசும், கலைஞர் அவர்களும் தான், தலித்துகள் மற்றும் மீனவர்களின் நம்பிக்கை நட்சத்திரம், இந்த ஆட்சி தொடரவேண்டும் என்று கூறிஅமர்ந்தார்

வாழ்த்திப் பேசவந்த திரு பா.சிதம்பரம், அன்னை சோனியா ஆட்சியில் அன்னியர்கள் எவரும் இந்த நாட்டிற்கு எந்த சோதமும் ஏற்படுத்திவிட முடியாது (அதையெல்லாம் நாங்களே செய்துவிடுவோம்). எல்லைப் பிரச்சனைகள் குறித்து மத்திய அரசு அனுக்கமாக கவனித்து வருகிறது, இவை மேலும் விரைவாக செயல்பட திரு கலைஞர் அவர்களின் தொலைபேசி எங்களுக்கு உற்சாகம் அளித்தது இதோ ஓரிரு ஆண்டுகளில் இராமேஸ்வரம் பகுதியில் கடற்படை தளம் அமைத்து கண்காணிக்க உள்ளோம். மத்தியில் நல்ல அரசும் மாநிலத்தில் பொறுப்பான அரசும் வீற்றிருப்பது தமிழகத்தின் பொற்காலம், மான்புமிகு முதல்வர் அவர்களை நான் மனதாரப்பாராட்டுகிறேன். நான் டெல்லி சென்றதும் அன்னை சோனியாவிடம் ஆலோசித்து டெல்லியிலும் முதல்வர் கருணாநிதிக்கு பாராட்டுவிழா ஏற்பாடு செய்து தமிழர்களை டெல்லியில் தலை நிமிரச் செய்கிறேன்., தமிழனாகப் பிறந்ததற்கு இதைக் கூட கலைஞருக்குச் செய்யாவிட்டால் நாமெல்லாம் பதவியில் இருப்பது வீன். என்ற போது வின்னதிர கைத்தட்டினர் உடன்பிறப்புகள்.

ஏற்புரையாற்றிய முதல்வர் கருணாநிதி,

உடன்பிறப்புகளே, பெரியோர்களே, நாளைக்கு நான்கு மணி நேரமே தூங்கும் எனது 20 மணி நேர உழைப்பு உங்களுக்குத்தான், கடலில் மீனவன் உழைப்பின் உப்பு வியர்வை நீர் சேரலாம், உவர்ப்புக் குறுதி சேரக்கூடாது என்பதில் உறுதி கொண்டவன் நான். எதிரிகளும் விசமிகளும் இந்த ஆட்சிக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்த தொடர்ந்து முயற்சிக்கும் போது இது போன்ற அசம்பாவிதங்கள் நடந்துவிடுகிறது, அன்புள்ளம் கொண்ட மத்திய அரசை நான் அழைத்துப் பேசிய அடுத்த நிமிடமே உறுதியான நடவடிக்கை எடுக்க இருப்பதாக கடிதம் அனுப்பினார்கள், (அனைவரிடமும் கடிதத்தைக் மேலே தூக்கிப் பிடித்துக் காட்டுகிறார்). கழக ஆட்சி இருக்கும் வரை கண்கள் கூட பாலைவனம் தான் (ஒரு நிமிடம் கூட்டத்தில் அமைதி), கண்ணீரே வராது என்பதைத்தான் அப்படிக் குறிப்பிடேன் (என்றதும் தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்டு தலைவர் வாழ்க, கலைஞர் வாழ்க என்றனர்)

மீனவர்கள் தாக்கப்படுவது கண்டிக்கத்தக்கது : முதல்வர் கருணாநிதி ஆவேசம் - தினமலர்

சிங்கள கடற்படை அட்டூழியம் : ப.சிதம்பரம், எஸ்.எம். கிருஷ்ணா,
ஏ.கே.அந்தோணிக்கும் கலைஞர் கடி
தம் - நக்கீரன்

7 ஜூலை, 2010

தமிழ்மணம் வாசகர் பரிந்துரை !

முன்பு தமிழ்மணத்தின் வழியாக வெளியாகும் இடுகைகள் வாசிப்பு எண்ணிக்கையிலான தொகுப்புகள் சூடான இடுகைகள் என்பதாக வாசகர் பரிந்துரை பகுதியில் இடம் பெற்றன. அதில் இருந்த குறைபாடு (சூடான) தலைப்புகளில் வெளியாகும் குப்பையை உள்ளடக்கிய இடுகைகள் கூட இடம் பிடித்தது. அந்த பகுதியில் இடம் பிடிக்கவே சூடான தலைப்புகளில் பதிவர்கள் இடுகையை வெளி இடுவது வாடிக்கையானது. அந்த தவறுகளை ஒரு சில இடுகைகள் வழியாக நானும் செய்து இருக்கிறேன். மட்டின்றி நல்ல எழுத்து நடையில் எழுதுபவர்கள் என்பதாக நம்பட்ட பதிவர்களின் இடுகைகளும் அப்பகுதியில் துண்டு போட்டிருந்தன. சூடான இடுகைகளில் வரவேண்டும் என்பதற்காகவே சர்சைகளை கச்சைக் கட்டி எழுதுகிறார்கள் என்ற குற்றச் சாட்டில் ஒரு ஆண் மற்றும் பெண் பதிவர்கள் தமிழ்மணம் திரட்டியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டவனர். பிறகு இதற்கு தீர்வே இல்லை என்பதாக முடிவு செய்த தமிழ்மணம் திரட்டி 'வாசகர் பரிந்துரை' என்னும் பகுதியையும் வாக்களிக்க பதிவர்களுக்கு நுழைவு பெயர் மற்றும் கடவுச் சொல்லுடன் புதிய பகுதியை அறிமுகப்படுத்தியது, அது இன்று வரை செயல்பட்டு வருகிறது.

இதில் இருக்கும் குறைபாடு ஒரு சில பதிவர்கள் பத்துக்கும் மேற்பட்ட வெவ்வேறு பெயர்களில் நுழைவு பெயர்களை பதிவு செய்து தங்களுக்கு தாங்களே வாக்களித்து வாசகர் பரிந்துரையில் பட்டா போட்டுக் கொள்கிறார்கள். இன்னார் என்று பெயரை நான் குறிப்பிடாவிட்டாலும் தொடர்ந்து தமிழ் மணம் திரட்டி வழியாக படிக்கும் பதிவர்கள் மற்றும் வாசகர்களுக்கு இவ்விவரம் தெரிந்தவையே. தாங்கள் எழுதுவது அனைவரையும் அடையக் கூடிய எழுத்தின் தன்மை கொண்டதொரு ஆக்கம் என்பதாக இவர்களே முடிவு செய்து வாசகர்களை இம்சிப்பது தொடர்கதையாகவே நடக்கிறது. இத்தகைய சூழலில் வாசகர் பரிந்துரை என்னும் பகுதியின் நோக்கமான நல்ல பதிவுகள் பல்வேறு பதிவர்களால், வாசகர்களால் படிக்கப்பட வேண்டும் என்கிற அடிப்படை நோக்கம் முற்றிலுமாக தகர்பட்டுள்ளது. குழுவாக மாறினால் அல்லது குழுவுக்குள் அடக்கிக் கொண்டால் தான் எழுத்தைச் சந்தைப்படுத்த / சர்சைப் முடியும் என்பதாக பல்வேறு பதிவர்கள் அவர்கள் சார்புடைய இடுகைகளுக்கும் பதிவர்களுக்கும் வாக்களித்துட்டு வாசகர் பரிந்துரை பகுதியை முற்றிலுமாக தங்கள் விருப்பம் போல் வளைத்துவிட்டனர்.

இந்த ஒரு சீர்கெட்ட சூழலால் புதிதாக திரட்டியில் நுழையும் ஒருவர் இத்தகைய குப்பைக் கூழங்களை பரிந்துரை என்ற பெயரில் தொடர்ந்து படிக்கும் நிலை ஏற்பட்டால் பதிவுலக எழுத்துகளின் தன்மை பக்கச் சார்ப்பு உள்ளவையே என்கிற எண்ணத்தை ஏற்படுத்தி வாசிக்கும் வழக்கத்தை தடை செய்யும் வாய்ப்பு இருக்கிறது. உலமகா பிரச்சனைகளை தாங்கள் கையாளுவதாக எண்ணிக் கொள்ளும் (நான் பெயர் குறிப்பிடாத) பதிவர்கள் எவரும் ஏன் இப்படி கோவிலுக்கு முன் துண்டு போட்டு இடம் பிடிப்பது போல் பிடிக்கிறோம் ? என்பதாக எண்ணிப் பார்ப்பது போல் தெரியவில்லை என்பதற்கு அவர்கள் பதிவு எழுதிய 10 ஆம் நிமிடமே வாசகர் பரிந்துரையை அடைவதில் இருந்து அறியலாம். நோக்கம் பரப்பரப்பை உண்டாக்குவது தவிர்த்து எதுவுமே இல்லை என்ற சூழலில் இவர்கள் தானாக திருத்திக் கொள்வார்கள் என்பது வீனான எண்ணம்.

இச்சூழலில் வாக்களிப்பு வழியாக தேர்வு செய்யப்படும் வாசகர் பரிந்துரைகளை முற்றிலுமாக நீக்கிவிட்டு அல்லது முகப்பு அல்லாத வேறொரு பக்கத்திற்கு மாற்றிவிட்டு பழைய படி முகப்பில் ஹிட் எண்ணிக்கையிலான பரிந்துரைகளைக் கொண்டுவருவது தற்போதைய நிலைமை அளவுக்கு சீர் கெட்டது அல்ல என்று தனிப்பட்ட முறையில் கருதுகிறேன். இந்த முறையில் 500 ஹிட்டுகளுக்கும் மிகுதியாக பெரும் இடுகைகள் 'மிகுதியாக வாசிக்கப்பட்ட இடுகை' பகுதியில் வரும். மற்றபடி மேற்சொன்ன பரபரப்புத் தலைப்புகள் இதில் இடம் பெறுவது தவிர்க்க முடியாதது என்றாலும் நாளடைவில் பரப்பரப்புக்காக தலைப்பு வைத்து எழுதப்படும் இடுகைகள் குறிப்பிட்ட பதிவர்களது என்பதாக புறந்தள்ளுவதை பதிவு வாசகர்களே செய்துவிடுவார்கள்.

இடுகைகளை படிக்காமலேயே இவன் எதிரி நண்பன் என்பதாக வாக்குகளை +/- குத்தி வாசகர் பரிந்துரையில் ஏற்றிவிடுகிறார்கள். வாகர் பரிந்துரை அல்லது சூடான இடுகைகள் என்பது மிக முதன்மையாக அனைவரும் அறிந்து கொள்ள பரிந்துரைக்கப்பட்ட எழுத்துகள் அடங்கிய இடுகை என்பது புரிந்து கொள்ளாது அதில் இடம் பிடிக்க மட்டுமே நினைப்பது எழுதி இடம் பிடிக்கும் அன்றைக்கு வேண்டுமானால் மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும் ஆனால் அதே இடுகையை இரண்டு நாள் சென்று பார்த்தால் எழுதியவருக்கு இதையெல்லாம் வாசகரை படிக்க வைத்து தமிழ் கூறும் நல் பதிவுலகை கெடுத்த உறுத்தல் கொஞ்சமாவது இருக்கனும், இல்லை என்றால் நானும் எழுதுகிறேன், எழுத்தின் வழியான சமூகச் சேவை என்கிற நினைபெல்லாம் வெறும் சுயசொரிதலே.

5 ஜூலை, 2010

செந்தமிழும் நா(ள்) பழக்கம் !

செந்தமிழ் என்ற சொல்லில் எனக்கு உடன்பாடு இல்லை, பின்பு தமிழ் என்பது என்ன என்ற கேள்வி என்னுள் எழுகிறது. தூய தமிழ் என்றெல்லாம் கூடச் சொல்கிறார்கள், சிலர் தூய தமிழை சுத்தத் தமிழ் என்பார்கள், இவை பழக்கக் கேடு (தோஷம்) தான். சுத்தமென்பது தமிழ் கிடையாது என்பது பலருக்குத் தெரிவதில்லை, சுத்தம் என்பது ஸுத்த என்கிற வடசொல்லின் தமிழ்வடிவம், ம் என்ற விகுதியில் முடிகிறது, அதற்கு நேரடி தமிழ் சொல் தூய என்பதே. சுத்த தமிழ் என்பது அரைவிழுக்காடு பிறமொழி கலப்பிலான தூய்மையற்ற (அசுத்த)ச் சொல், சுத்தத் தமிழ் என்பதற்குப் மாற்றாக (பதிலாக) தூயத் தமிழ் என்று சொல்லி/எழுதிப் பழகுவோம். பச்சை தமிழன் என்பது கூட உடன்பாடற்ற பண்பு பகுதி, அப்போது சிவப்புத் தமிழன், கருப்புத்தமிழன் என்று யாரேனும் இருக்கிறார்களா என்ன ? தமிழன் தமிழன் தான், ஈழம் மற்றும் தமிழ்நாடு என தமிழர் நிலத்தை வாழ்விடமாகக் கொண்டவர்களும், தமிழை தாய்மொழியாகக் கொண்டவர்கள் அனைவருமே தமிழர்களே, இதில் குறிப்பிட்டு சிலருக்கு வண்ணம் பூசி பச்சை தமிழன் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.

பெயர் பலகைகளில் தமிழில் எழுதுவதால் தமிழ் வாழ்ந்துவிடுமா, வளர்ந்துவிடுமா ? செந்தமிழ் என்பது அருங்காட்சியகத்தில் இருக்க வேண்டிய ஒன்று என்பதாக தினமணி உள்ளிட்ட நாளிதழ்கள் எழுதிவருகின்றன. இன்றைக்கு இவர்கள் எழுதும் தமிழ் சொல்வடிவம் ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு முன்பு 75 விழுக்காட்டிற்கும் மேல் பிறமொழி கலப்புடன் குறிப்பாக ஆங்கிலம் வடமொழி கலப்பில் இருந்தவையே, தமிழ் எழுத்தில் எழுதினார்கள் என்பதைத் தவிர்த்து இன்றைய நாளில் அதைப் படிக்கும் நமக்கு அது தமிழா என்கிற எண்ணம் ஏற்படுகிறது.

கீழே இருக்கும் படத்தை அழுத்திப் படித்துப் பாருங்கள்,


இதை மணிபவள (வட்மொழி கலந்த) நடை என்று கூடச் சொல்ல முடியாது ஏனெனில் ஆங்கிலமும் வடமொழியும் கலந்து கிட்டதட்ட கொச்சை வடிவத்திலேயே தமிழ் எழுத்துகள் அச்சு ஊடகங்களில் விளம்பரங்களுக்காக எழுதப்பட்டு வந்தன. இது போன்ற எழுத்து நடைகள் கிட்டதட்ட 1960 வரையிலும் கூட புழக்கத்தில் இருந்தன, பெரியாரின் பேச்சுகள் அடங்கிய கோப்புகளிலும் கூட 50 விழுக்காடு வடசொல் கலவை உண்டு, அது பெரியாரின் தவறும் அன்று, ஏனெனில் பெரியார் படித்த காலங்களில் தமிழ் நடை என்பதாக இப்படிப்பட்ட எழுத்து நடைகள் தான் இருந்து வந்தன, அதையே அவரும் பயன்படுத்தினார், பெரியார் சமூகப் போராளி என்பது தவிர்த்து அவரை தமிழ் அறிஞர் என்று கூறிவிட முடியாது. 1930 களில் மறைமலை அடிகளார், பரிதிமாற் கலைஞர் மற்றும் பாரதி தாசன் ஆகியோரால் தனித்தமிழ் எழுச்சி ஏற்படுத்தப்பட்டு அவை திராவிட சார்புடைய செய்தி இதழ்களால் பயன்படுத்தப்பட்டு, பின்னர் 60 களில் அண்ணா போன்றவர்களின் மேடை பேச்சுகளால் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு இன்றைய நிலையில் அச்சு ஊடகங்களில் பயன்படும் தமிழுக்கு வந்திருக்கிறோம். இன்றைய தமிழ் என்பது சங்கத்தமிழும் அன்று, சங்கச் சொற்கள் அடைப்படையிலான வேர் சொற்களில் பல்வேறு புதிய சொற்களை நாம் பயன்படுத்திவருகிறோம், இவற்றை செந்தமிழ் என்று சொல்ல முடியாவிட்டாலும், முழுக்க முழுக்க தமிழ்ச் சொற்களே எனலாம்.

ஆங்கிலம் பல மொழிச் சொற்களை ஏற்கிறது தமிழும் அவ்வாறு செய்யலாம் என்பதாக பலர் அறிந்தோ அறியாமலோ பரிந்துரை செய்கிறார்கள். ஆங்கிலம் என்பது பொது மொழி என்கிற தகுதியை அடைந்ததிருக்கிறது, அது தமிழுடன் ஒப்பிடத் தக்க மொழியும் அல்ல, தமிழ் கலை இலக்கியம் பண்பாடு அறிவியல் சார்ந்து இன அடிப்படையில் பேசப்படும் மொழி, இதற்கு ஆங்கிலத்தை ஒப்பிடத்தக்க அளவிற்கான ஏறக்குறைய 2 மில்லியன் சொற்கள் தேவை இல்லை என்றாலும் அந்த சொற்களை தமிழின் வேர்ச் சொற்களைக் கொண்டு தேவைப்படும் போது அமைக்க முடியும், இங்கு தேவை என்பது பொதுப் புழக்கத்தில் வருவதைப் பற்றிக் கூறுவதாக எடுத்துக் கொள்க. எடுத்துக்காட்டிற்கு கணிணியின் உருவாக்கக் காலத்தில் அவை பொதுப் பயன்பாட்டில் இல்லை, தற்பொழுது அவை பரவலாகப் பயன்படுகிறது, நாள் தோறும் அவைப் பற்றி பேசுகிறோம் எனவே கணிணி குறித்தச் சொல் என்பது பொதுப்பயன்பாட்டிற்கு மிகத் தேவை என்பதாகிறது, இப்படியாகத்தான் பேருந்து, சிற்றுந்து போன்ற சொற்கள் புழக்கத்திற்கு தேவையாகி பயன்பாட்டிற்கு வந்தன, ஆங்கிலத்தில் இருக்கிறதே என்பதற்காக இரண்டு மில்லியன் சொற்களை தமிழ்படுத்த வேண்டுமென்போதோ அல்லது ஆங்கிலத்தைப் போன்று அப்படியே உள்வாங்கிப் பயன்படுத்தலாம் என்பதோ மொழி பற்றிய அறியாமையால் பிதற்றுவது என்பது தவிர்த்து வேறொன்றுமில்லை.

ஆங்கில எழுத்தில் W என்பது பலுக்குதலில் V என்ற ஒலியைத்தான் தரும் ஆனால் அதன் பெயரோ, டபுள்யூ, இதை 'டபுள் வி' என்று சொல்வது தான் சரி என்றோ, Y என்ற எழுத்து U ஒலியை தருகிறது மற்றும் கையெழுத்தில் எழுதும் போது மேலும் கீழுமான இரண்டு U க்களை ஒத்திருக்கிறது என்பதற்காக "டபுள் U" என்று சொல்லலாம் என்றால் ஆங்கிலப் புலமையாளர்கள் ஏற்கமாட்டார்கள், என்றாலும் நான் சொல்லும் இந்தக் கருத்து தவறே இல்லை. ஆங்கிலத்திற்கு இது போன்ற பரிந்துரைகளைச் செய்யலாம் என்றால் எத்தனை பேர் W மற்றும் U ஆகிய இரு ஆங்கில எழுத்தின் பெயர் ஒலித்தன்மையை மாற்றுவது சரி என்பார்கள் ? ஆனால் தடி எடுத்தவனெல்லாம் தண்டால்காரன் என்பது போல் தமிழ் சீர்திருத்தம் என்பதாக சொல்லப்படும் பிதற்றல்கள் உண்மையிலேயே எரிச்சல் ஏற்படுகிறது என்றாலும் கூட அவை மொழி குறித்த அரைகுறை புரிந்துணர்வின் வெளிப்பாடு என்பதாகத்தான் எடுத்துக் கொள்ள முடிகிறது.

1960களில் திராவிட நாளிதழ்களில் தமிழை பண்படுத்தவேண்டும் என்கிற முனைப்பில் தமிழ் சொற்களையே பயன்படுத்தி வந்திருக்காவிடில் இன்றைய தமிழ் வடிவம் நமக்கு ஏற்பட்டிருக்காது, எனவே தமிழ் குறித்தச் சொற் பரிந்துரை ஐஸ்கிரீமை, பனிக்குழைவு என்று சொல்லப்பட்டாலும் நாம் அதை பயன்பாட்டில் கொண்டு வரும் போது தமிழ் எழுத்து மற்றும் பேச்சு வடிவம் மேன்மை பெரும். ஆனால் இதையெல்லாம் கிண்டல் கேலி செய்தே வந்தால் தமிழ் எப்படி சீரழியும் என்பதற்கு மேற்கண்ட படத்தைவிட வேறு எடுத்துக் காட்டுகள் சொல்ல முடியுமா ? தமிழ் வலைப்பதிவுகள் தமிழ் வளர்ச்சிக்கு சிறந்ததொரு மாற்றூடகம், முடிந்த அளவுக்கு ஆங்கிலம் உட்பட பிறமொழி கலப்பின்றி எழுதமுடிகிறோ இல்லையோ, அதற்கான முயற்சியை எடுப்பது தான் தமிழில் நாம் எழுதும் சமூக எழுத்தின் ஊடாக மொழிக்கு ஆற்றும் பிரிதொரு மறைமுக பலன் மற்றும் பயன்.

2 ஜூலை, 2010

வால்பையன் மற்றும் இராஜனுக்கு வேண்டுகோள் !

வலைப்பதிவுகளில் சர்சைக்குரியவற்றை யாராவது எழுதமாட்டார்களா ? என்பது போன்ற எதிர்பார்ப்புகள் எப்போதும் இருக்கும், அதற்கு நீங்கள் இருவரும் தீணி போடுகிறீர்கள். சர்சையில் தாம் பாதிக்கப்படுவதாக எண்ணுபவர்கள் தவிர்த்து பெருவாரியானவர்கள் சர்சைகளை வரவேற்கவே செய்கிறார்கள், பெரியாரை தாக்கி எழுதினால் இந்துத்துவாக்கள் மகிழ்வார்கள், இந்துக்களை தாக்கி எழுதினால் பிற மதத்தின் தீவிர பற்றாளர்கள் மகிழ்வார்கள், பிற மதத்தினரை தாக்கி எழுதினால் தீவிர இந்துக்கள் மகிழ்வார்கள், ஜெமோவை தாக்கி எழுதினால் சாரு ஆதரவாளர்களும், சாருவை தாக்கி எழுதினால் ஜெமோ ஆதரவாளர்களும், குட்டி சாமியாரை தாக்கி எழுதினால் ஜட்டிசாமியார் ஆதரவாளர்கள் மகிழ்வார்கள். உங்கள் பதிவுகளின் மையக்கருத்து தவிர்த்து எழுத்து நடை மொழிகளில் எனக்கு உடன்பாடு இல்லை.

நீங்கள் எழுதிய

காளஹஸ்தியும், சிவபெருமான் விட்ட குசுவும்........ மற்றும்

சிலுவைக் கதையின் சில்மிஷங்கள்! - 1

போன்ற பதிவுகளின் போது இந்து மற்றும் கிறித்துவர்கள் கொதித்தது போல் தெரியவில்லை, அவர்களுக்கு ஒரு வேளை சுரணை குறைவாக இருக்கலாம், ஆனால் இஸ்லாம் குறித்த உங்கள் விமர்சனம் அமீரகத்தில் உங்கள் பதிவுகளை தடை செய்யும் அளவுக்கு சென்றிருப்பதாக நண்பர் சென்ஷி வருத்தப்பட்டு பதிவு எழுதி உங்களை மன்னிப்பும் கேட்கச் சொல்கிறார்.
தன் மதம் மீது எந்த ஒரு பிடிப்பையும் இதுவரை காட்டியிறாத சென்ஷியே கொதிக்கிறார் என்றால் வெளிப்படையாக பற்று வைத்திருக்கும் பிற இஸ்லாமியர்கள் தங்கள் மதத்தை எந்த அளவுக்கு நேசிக்கிறார்கள் என்று சொல்லத் தேவை இல்லை. பிற(ர்) மதங்களை புண்படுத்தும் பதிவுகள் மீது அதே அளவுக்கு எரிச்சல் இவர்களுக்கு ஏற்படுகிறதா என்று கேட்கத் தேவை இல்லை, ஏனெனில் பிற மதத்தினர் தங்கள் மதம் பழிக்கப்படும் போது உணர்ச்சி இல்லாத இருக்கும் போது இவர்களே அதற்கும் சேர்த்து உணர்ச்சி பட்டு இருக்க வேண்டும் என்பது தேவையற்ற எதிர்பார்ப்பு.

தயவு செய்து பிறர் மனம் புண்படும் பதிவுகளை எழுதாதீர்கள் அதுவும் சொந்தப் பெயரில்..... தமிழ் பதிவுகளாக எத்தனையோ மதவாத எதிர்வினை பதிவுகள் வருகிறது அதற்கெல்லாம் இல்லாத எதிர்ப்பு உங்களுக்கு கிடைப்பது உங்களுக்கு பெருமையான ஒன்றே அல்ல அது நீங்கள் சொந்தப் பெயரில் எழுதுவதால் கிடைக்கும் எதிர்வினை மட்டும் தான். முகமூடி போட்டு எழுதுபவர்களை நான் ஆதரிப்பதில்லை, ஆனாலும் அவர்களின் நிலை புரிந்து கொள்ளக் கூடியதாகத்தான் இருக்கிறது. வால் மற்றும் இராஜன் என்ற பெயர்கள் வெளியே தெரியாவிட்டால் உங்கள் பதிவுகள் கூட பத்தோடு பதினொன்றாகத்தான் இருக்கும், எச்சரிக்கைகளை, அன்பு வேண்டுகோள்களை நீங்கள் சந்திக்கத் தேவை இருக்காது.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்