பின்பற்றுபவர்கள்

31 மே, 2010

வீரமணி ஐயா... நாத்திகம் என்பது மதமா ?

மக்கள் தொகை கணக்கெடுப்பில் இனம் என்ற இடத்தில் திராவிடன் என்றும், மதம் என்ற இடத்தில் நாத்திகன் என்றும் தவறாமல் குறிப்பிட்டு பதிவு செய்ய வேண்டும் என பகுத்தறிவாளர்கள், இன உணர்வாளர்களை கேட்டுக் கொள்கிறோம் - கி.வீரமணி

ஐயா வீரமணி அவர்களே, திராவிடம் என்ற சொல்லை தமிழன் தவிர்த்து வேறு யாரும் சொல்லிக் கொள்ளாத போது 'திராவிடத்தை' முற்றிலுமாக ஒழித்துவிட்டு தமிழன் என்றே போடலாமே. பழந்தமிழகத்தில் ஞானசம்பந்தரை 'திராவிட சிசு' என்பதாக ஏசும் சொல்லாக புழங்கப்பட்ட தமிழர் நிலம் சார்ந்த சொல்லாக, மறைமுகமாக புழங்கிய சொல், தென்னிந்திய அரசியல் முன்னெடுப்பு மற்றும் பார்பனிய சித்தாந்தங்களின் எதிர்ப்பு என்பதாக அயோத்திதாசப் பண்டிதரால் 'திராவிட' என்னும் சொல் அரசியல் களத்தில் தென்னிந்திய நிலம் சார்ந்த அரசியல் சொல்லாக பரிந்துரைக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து பெரியார் அந்த சொல்லை அரசியலில் பொதுப்படுத்தி திராவிட இயக்கம் கண்டார். இயக்கங்கள் கொள்கைகளை காற்றில் (விற்று) விட்டு பரிணாமம் கண்டு, மன்னர் ஆட்சி அடிப்படையில் வாரிசு அரசியல் நடத்துகின்றன என்பதற்கு உங்கள் தலைமையிலான திக உட்பட தங்களுக்கு பின்னால் தங்கள் மகன் என்பதாக வாரிசு உடைமை ஆக்கிவிட்டன. இதில் எங்கே இருக்கிறது திராவிடம் ?

மேலும் மதம் என்பதில் நாத்திகன் என்று போடச் சொல்லுகிறீர்கள். நாத்திகம் என்பது மதமா ? அப்படி என்றால் அதனை உருவாக்கிய இறைத் தூதர் யார் ? நாத்திகத்தை மதம் என்று ஏற்க ஆக்கிய ஆசான் வேண்டும் என்பது பொதுவாதம்.
ஏற்கனவே ஏகப்பட்ட மதங்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் சூழலில் புதிய மதமாக நாத்திகத்தை நுழைக்கும் நீங்கள் தான் நாத்திக மத நிறுவனரா ?

பெரியார் கொள்கையில் சுயமரியாதை, பெண்ணுரிமை, வாரிசு அரசியல், ஊழல் எதிர்ப்பு, தமிழர் நலன் இதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டுவிட்டு ஒப்புக்காக பார்பன எதிர்ப்பையும் நாத்திகவாதத்தையும் பிடித்துக் கொண்டிருக்கும் தாங்கள், திராவிட அரசியல் என்றும் நாத்திகம் என்று எதைச் சொல்லுகிறீர்கள் என்பது விளங்கவில்லை. உங்களாவது விளங்கியதா ?

பெரியார் நாத்திகத்தை முன்னிருத்தி இருந்தால் அவர் பக்கத்தில் குன்றக்குடி அடிகளார் இருந்திருக்கமாட்டார். பெரியார் நாத்திகம் என்ற பெயரில் செய்தது மூட நம்பிக்கை மறுப்பு. பார்பன எதிர்ப்பு என்ற பெயரில் பழமை வாத எதிர்ப்பு. வருண வாதிகளின் ஆதரவுகளுடன் இருந்த மன்னர் ஆட்சிகளின் பரிணாமம் போல் இன்றைய வாரிசு அரசியலுக்கு சாமரம் வீசுபவரான தாங்கள் திராவிடம், நாத்திகம் என்றெல்லாம் பிதற்றுவது நகைப்புகிடமாக இருக்கிறது. பெரியாரை சாமியாக்கவும் பெரியாரின் கொள்கைகளை நாத்திக மதம் என்பதாக்கவும் பார்பனர்கள் தேவை இல்லை, அந்தப் பணியை தாங்களே சிறப்பாக செய்கிறீர்கள்.

தமிழன் திராவிடன் என்று சொல்ல தாங்கள் முன்வைக்கும் நிலம் சார்ந்த அரசியல் என்ன ? மதம் என்ற இடத்தில் நாத்திகம் என்று குறிக்க.... நாத்திகம் என்பது ஒரு மதமா ? இன உணர்வாளர்களைக் கேட்டுக் கொள்கிறோம் என்கிறீர்கள். இன உணர்வாளர்கள் யார் ? முள்ளிவாய்க்காலில் வாய்கரிசி போட்டவர்களா ?

இனம் என்ற இடத்தில் 'தமிழன்' என்று சொல்லோ, மதமற்றவன் என்ற சொல் நாத்திகன் என்ற பொருளில் வராது. மதம் என்ற இடத்தில் 'மதம் சாராதவன்/மதமற்றவன்' என்ற சொல்லோ போடலாம் என்று சொல்லமுடியாமல் உங்களை தடுப்பது எது ?

30 மே, 2010

என் பெயரில் வெளியாகும் போலி பின்னூட்டங்கள் !

அனானிக்கு பின்னூட்டப் பெட்டி பூட்டிவைக்கப்பட்ட ப்ளாக்கர் வலைப்பதிவுகளில் வலைப்பதிவு நுழைவுச் சொல் மற்றும் கடவுச் சொல் மூலம் பின்னூட்டம் போடுவதால் யார் பின்னூட்டம் இட்டது என்பதை புகைப்படம் மற்றும் வலைப்பதிவு அடையாள எண் வழியாக தெரிந்துவிடும். ஆனால் வேர்ட் ப்ரஸ் தளங்களில் அப்படி இல்லை, ஒருவர் யார் பெயரில் வேண்டுமானாலும் பின்னூட்டம் இட முடியும். வேர்பிரஸ் தளங்களில். பெயர், மின் அஞ்சல், வலைத்தளம் ஆகியவற்றை பின்னூட்டம் இடும் முன் தெரிவிக்க வேண்டும். ஒருவர் அதில் எவருடைய வலைப்பதிவு தகவலை தெரிவித்தாலும் பின்னூட்டம் வெளியாகும் போது அந்த வலைப்பக்கத்தின் ப்ரொபைல் புகைப்படம் வெளியாகும். அதாவது யாரோ ஒருவர் மருத்துவர் ருத்ரனின் வலைப்பதிவு தகவலை கொடுத்து வேர்ட் ப்ரஸில் பின்னூட்டம் இட்டால் மருத்துவர் ருத்தனின் புகைப்படத்துடன் பின்னூட்டம் வெளியாகி, அவர் பின்னூட்டம் இட்டது போலவே காட்டும்.

இது போன்ற குறுக்கு புத்தியில் எனது வளைத்தள முகவரியை உள் நுழைத்து ஒரு பதிவில் பின்னுட்டமிட்டு இருக்கிறான் ஒரு கோழை.

குறிப்பிட்ட பின்னூட்டத்தை நான் இடவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் நான் எனது பின்னூட்டங்களில் தொடர்புடையவர்கள் தவிர்த்து அவர்களுடைய குடும்பத்தினரை குறித்து கேள்வி எழுப்புவதில்லை. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் ஒருவர் மீது சொல்லவெண்ணா எரிச்சல் என்றாலும் 'தேவடியா மகன்' என்று திட்டுவதில்லை. காரணம் அவன் செய்யும் தப்புக்கு அவன் அம்மாவை குடும்பத்தை இழுப்பது பெண்ணை இழிவு படுத்துவதாகும் என்பது எனது நிலைபாடு. எனது தரந்தாழ்ந்த வசை மொழி என்றால் வெறும். முட்டாள், கயவாளி, அறிவற்றவன், சாதி வெறியன் என்று முன்னிலையை மட்டுமே சாடும் சொற்களாக அதுவும் எல்லை மீறும் போது பயன்படுத்துவது மட்டுமே. மேற்கண்ட "உன் வீட்டு பொம்மனாட்டியையும் கூட்டி வந்தால் இன்னும் நன்றாய் பேசுவோம்." என்பது போல் பின்னூட்டமிட எனக்கு கை வராது (இந்த குறிப்பிட்ட வரி கூட அங்கிருந்து காபி பேஸ்ட் தான்).

எனது பெயரில் வேர்ட் ப்ரஸ் தளங்களில் ஆபாச அல்லது ஒவ்வாத பின்னூட்டங்கள் தொடர்ந்தால் அதற்கும் எனக்கும் தொடர்பு இல்லை. என்பதை இறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

வேர்ட்பிரஸ் தளங்கள் சிங்கிள் சைன் ஆன் முறையில் இயங்காததால் நான் பின்னூட்டம் இடுவது மிக மிக குறைவு. இனி வேர்ட் ப்ரஸ் தளங்களில் எனது பின்னூட்டங்கள் எதுவும் இடம் பெறாது. வேர்ட் ப்ரஸ் தளங்களில் எனது பெயரில் பின்னூட்டம் வெளியானால் அதற்கு நான் பொறுப்பும் இல்லை.

மேற்கண்ட பின்னூட்டம் நான் போட்டதாக எண்ணி நல்ல தந்தி என்கிற தினத்தந்தி கேள்வி எழுதி போடும் பெருசு என்னிடம் குறிப்பிட்டு கேட்ட போது தான் அந்த தளத்தை திறந்து பார்த்தேன்.


(இது இதயம் பேத்துகிறது என்கிற ஜவஹர் அண்ணன் பதிவில் எவனோ ஒரு அனானி நாய் என் பெயரில் போட்ட பின்னூட்டம்)

தமிழ்மணம் பின்னூட்டத் திரட்டியில் நான் ப்ளாக்கர் வழியாக லாகின் செய்த பின்னூட்டங்கள் அனைத்தும் திரட்டப்படுவதால், அதில் இல்லாத என் பெயரில் வெளியாகும் பின்னூட்டங்கள்
அனைத்தும் என்னுடையது அல்ல என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
வேர்ட்ப்ரஸின் வழியாக வலைப்பதிவு எழுதும் நண்பர்கள் பின்னூட்டங்களின் தன்மையை ஆராய்ந்துவிட்டு வெளி இடவும்.

எனது சமூக அரசியல் நிலைப்பாடுகளில் வெறுப்புற்ற எவனோ ஒரு மன நோயாளி அந்த பின்னூட்டங்களைப் போட்டு இருக்க வேண்டும் என்று சந்தேகிக்கிறேன்.

சோதிடர்களுக்கு சுண்ணாம்பு தடவினால் என்ன ?

உலகில் இருவகைப் பொருள்கள் தான் உண்டு, ஒன்று உயிருள்ளவை மற்றது உயிரற்றவை. உயிருள்ளவற்றில் தானியங்கி இயக்கம் இருக்கும், மிகப் பெரிய திடப் பொருள்களான பூமி உள்ளிட்ட கோள்களான உயிரற்றவற்றில் இருக்கும் இயக்கம் புறத்தூண்டல்களினால் ஏற்படுவது. இந்த புறத்தூண்டல் பால்வெளி, பரவெளி ஆகியவற்றில் பிணைந்(த்)திருக்கும் காந்தவிசை.

அசைவு என்பது தவிர்த்து உயிருள்ளவை, உயிரற்றவை இவற்றின் வேறுபாடுகள் அவை மாற்றத்திற்கு உட்படப் போகும் காலம் மட்டும் தான். இரண்டிற்குமே சிதைவு என்பது என்றோ ஒரு நாள் ஏற்படும் உறுதியான ஒன்று. உயிருள்ளவை குறுகிய காலத்திற்குள் முழுவளர்ச்சி அடைந்த பிறகோ, விபத்துகளாலோ சிதைவைடையும், உயிரற்றவை சுற்றுச் சூழல் (குறிப்பாக நீர் மற்றும் காற்றின் இரசாயன சேர்க்கை) இவற்றினால் என்றோ ஒரு நாள் மூலக் கூறுகளில் மாற்றம் ஏற்பட்டு சிதைவடையும், அல்லது அதை மனிதர்களே சிதைப்பதன் மூலம் அவற்றின் தன்மை மற்றும் அமைப்பு மூலக் கூறு ஆகிய அனைத்தும் சிதைந்து பிற வடிவம் எடுக்கும். ஆனால் எந்த ஒரு பொருளையும் ஆக்கவோ அழிக்கவோ முடியாது அதன் வடிவங்களை மூலக்கூறுகளை மாற்றி அமைக்கலாம் இது தான் இயற்பியல் தத்துவத்தின் பேருண்மை. மனிதன் வரலாறுகளின் வரையரை காலம் முதல் இன்று வரை (நிலவின் மண் என்பதைத் தவிர்த்து) புதிய பொருள்கள் என்று எதுவுமே 'தோன்றியது' இல்லை. இருப்பவற்றைத் தான் பயன்படுத்துகிறோம். வெறும் கடற்கரை மணல் அதில் கடல் நீரைச் சேர்த்து பிசைந்து அவற்றை உருவங்கள் ஆக்குவது போன்றது தான் நமது கண்டுபிடிப்புகள் அனைத்துமே. குறிப்பாக சொல்லப் போனால் ஆற்றல்களின் தன்மைகளை மாற்றி பயன்படுத்திக் கொள்வது (நீரின் விசையில் இருந்து மின்சாரம், சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் என்பது போல்) இவற்றைத்தான் மனித அறிவின் வழி செய்திருக்கிறோம்.

மனிதன் எத்தனை ஆண்டுகள் பின்னோக்கி பயணித்தாலும் அழியாத பொருள், மாற்றத்திற்கு உட்படாத பொருள் என்று எந்த ஒன்றையும் அடையாளப்படுத்துவிட முடியாது. அதற்கு சாட்சியாக சிதைந்த வடிவத்தில் இருக்கும் எகிப்து பிரமீடுகளைப் பார்க்கிறோம். அவை 5 ஆயிரம் ஆண்டுகள் கடந்து நின்றாலும் அவற்றின் சிதைந்த வடிவத்தைக் காண்கிறோம், இன்னும் ஓர் 5 ஆயிரம் ஆண்டோ அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளிலோ அங்கு பிரமீடுகள் இருந்தன என்கிற தடயமே இல்லாமல் போய்விடும்.

பிரமீடுகள் மட்டும் அல்ல அனைத்துவகையான மத வழிபாட்டுத்தளங்களும், கோவில் சிலைகளும் கூட சிதைவுக்கு உட்பட்டவையே. ஒரு காலத்தில் மிகப் பெரிய அளவில் வணங்கப்பட்ட புத்தர் சிலைகள் ஆசிய நாடுகளில் சிதைந்த வடிவில் பல்வேறு இடங்களில் காணப்படுகின்றன. கவனிப்பார் இன்றிய கோவில்கள் பல சிதலமடைந்து கிடக்கின்றன. கவனிப்பு கவனிப்பு இன்மை இவை இரண்டு காரணிகள் தவிர்த்து எந்த ஒரு பொருளும் சிதைவை நோக்கிய பயணத்தில் தான் இருக்கின்றன, கவனிப்பினால் அந்த சிதைவின் காலம் சற்று தள்ளப்படும் மற்றபடி எந்த ஒரு பொருளின் சிதைவையும் முற்றிலும் தடுத்து நிறுத்திவிட முடியாது. பொருள்கள் அனைத்துமே சிதைவுக்கு உட்பட்டவை. பொருள்கள் அனைத்தும் சிதைவுக்கு உட்பட்டவை என்பது தத்துவமோ, புதிய சிந்தனையோ, கண்டுபிடிப்போ இல்லை, காலம் காலமாக நாம் கண்ணுறும் உண்மை.

இந்த அடிப்படை கூடத் தெரியாதவர்கள் என்று நாம் நமது சோதிடக்காரர்களை சொல்லிவிட முடியாது, இது முற்றிலும் படிக்காத பாமரனுக்குக் கூடத் தெரிந்த உண்மையே. ஆனாலும் சோதிடக்காரர்கள் ஏன் 'காளகஸ்தி கோவில் கோபுரம் இரண்டாக பிளந்ததை வைத்து பல்வேறு தரப்புகளை பயமுறுத்துகிறார்கள் என்றால் வெறும் பிழைப்பு வாதம் தான். மனிதனுக்கு இருக்கும் அடிப்படை பயம் அதைப் பயன்படுத்திக் கொண்டு இன்னின்ன ராசிக்காரர்களுக்கு கோபுரம் சிதைந்தால் பாதிப்பு என்று கிளப்பிவிட்டால் கல்லா நிறையாதா என்கிற பேராசையே. நாட்டில் நாடுகடுத்தப் படவேண்டியவர்களில் போலி சாமியார்களுக்கு அடுத்தபடியாக போலி சோதிடர்களைச் சேர்க்கலாம். மதப் பழமைவாதிகள் எப்படி மக்களை கற்காலத்துக்கு கட்டி இழுத்துச் செல்கிறார்கள் என்றால் அவர்களுக்கு தட்டிக் கொடுத்து கூடவே சேர்ந்து கயிறு இழுப்பவர்கள் இந்த சோதிடர்கள் தான்.

கோபுரம் இடிந்ததால் நாட்டுக்கு ஆபத்தாம், அரசாள்பவர்களுக்கும், அரசியல் வாதிகளுக்கு ஆபத்தாம், ஆறு ராசிக்காரர்களுக்கு ஆபத்தாம். பாபர் மசூதியை இடித்த பிறகு ஏற்பட்ட ஆபத்துகளைவிடவா ஏற்பட்டுவிடப் போகிறது ?

போலி சாமியார்களை விரட்டுவது போலவே போலி சோதிடர்களையும் விரட்டினால் தான் பில்லி சூனியம் போன்ற ஒரு மாய நம்பிக்கையின் வழியில் வழிபாட்டு நம்பிக்கைகள் செல்லாது.

தொடர்புடைய செய்தி : காளஹஸ்தி ராஜகோபுரம் இடிந்ததால் அரசியல் தலைவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?

28 மே, 2010

நினைவில் நிற்கும் வலைப்பதிவர்களின்.....

பதிவர் கல்வெட்டு அவர்கள் 'தேனீ உமர் தம்பிக்கு அங்கீகாரம் வேண்டுகோள்' குறித்த பதிவில் பின்வருமாறு பின்னூட்டமிட்டு இருந்தார்.

"உமர் போன்ற பலரை இணையத்தில் பதியும் நாமாவது அங்கீகரிக்க வேண்டும். பரிசுகள் போட்டிகள் நடத்துபவர்கள் உமர் நினைவுப் பரிசு, தேன்கூடு சாகரன் நினைவுப் பரிசு, சிந்தாநதி நினைவுப் பரிசு என்று மறைந்தவர்களுக்கு மரியாதை செய்யலாம். அது போல நம்முடன் இன்று இருப்பவர்களை அடையாளம் கண்டும் அவர்கள் பெயரிலும் பரிசுகள் வழங்கலாம். அவர்களையேகூட புரவலர்களாக இருக்கச் சொல்லலாம். உதாரணம் தமிழ்மண காசி பாரட்டுப் பதக்கம் என்று வழங்கி காசியிடம் இருந்தே வழங்கச் சொல்லலாம். யாரும் யாருக்காகவும் செய்யலாம்."

*****

அடுத்த ஆண்டு இதை நாம் செயல்படுத்துவோமா ? என இதைப் பற்றி சிங்கை வலைப்பதிவு நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது,

இதற்கு செயல்வடிவம் இந்த ஆண்டே நாமே கொடுத்து நல்ல துவக்கமாக இருக்கலாம்
என பதிவர் நண்பர் குழலி முன்மொழிந்தார், அதன் படி,


சிங்கப்பூர் வலைப்பதிவு நண்பர்கள் சார்பில் நடத்தப்பட்ட மணற்கேணி - 2009 ன் நிறைவு நிகழ்வாக வெற்றியாளர்களுக்கு விருது நிகழ்ச்சி இன்று மாலை 7 மணிக்கு லிட்டில் இந்தியா ஆர்கெட் பானா லீப் அப்பல்லோவில் கவிஞர் / எழுத்தாளர் புதுமைத் தேனீ மா.அன்பழகன் தலைமையில் நடைபெறுகிறது. அந்நிகழ்ச்சியில் மணற்கேணி 2009 வெற்றியாளர்களுக்கு மறைந்த நினைவில் நிற்கும் பதிவர்கள், தமிழ் இணையத்தில் பங்களித்தவர்கள் பெயர்களில் விருது வழக்கம்படுகிறது, இதன் படி,

தேனீ உமர் தம்பி
விருது தமிழ் மொழி / இலக்கியம் பிரிவின் வெற்றியாளர் திரு பிரபாகர் அவர்களுக்கும்,

'கேன்சருடன் ஓர் யுத்தம்' என்ற வலைப்பதிவின் பதிவர் மறைந்த அனுராதா சுப்ரமணியன் விருது தமிழ் அறிவியல் பிரிவின் வெற்றியாளர் திரு தேவன் மாயம் அவர்களுக்கும்,

தேன் கூடு சாகரன் விருது அரசியல் சமூகம் பிரிவின் வெற்றியாளர் திரு தருமி ஐயா அவர்களுக்கும்,

சிந்தாநதி
விருது திரு கையேடு அவர்களுக்கும் வழங்கப்படுகிறது.

சிங்கைப் பதிவர்கள் வாசகர்கள் நிக்ழ்ச்சியில் நேரடியாக பங்கு கொள்ளலாம்.

மணற்கேணி 2009 போட்டியின் நோக்கம் வெற்றிபெற்றதா இல்லையா என்பதைப் பற்றி எந்த எண்ணமும் இல்லை, ஆனால் இந்த போட்டியின் வழியாக சிங்கப்பூர் வலைப்பதிவர்கள் ஒன்றிணையவும், இணைந்து செயல்படவும், துவங்கிய செயலை பல்வேறு தொய்வுகள் ஏற்பட்டாலும் முடித்துவிட முடியும் என்கிற மன உறுதியையும் இதில் ஈடுபட்டவர்கள் அனைவரும் உணர்ந்துள்ளார்கள். இந்த போட்டியின் வழியாக நினைவில் நிற்கும் பதிவர்களை பெருமை படுத்தும் நிறைவு நிகழ்ச்சி எங்கள் அனைவருக்கும் மனநிறைவை தந்துள்ளது.

மணற்கேணி தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளையும் ஊக்கப்படுத்திய பங்கெடுத்தவர்கள் அனைவருக்கும், சிங்கைப் பதிவர்கள் சார்பாக நன்றி.

"பதிவர் பெயரில் விருதுகள்" - பரிந்துரை செய்த பதிவர் கல்வெட்டு அண்ணனுக்கு மிக்க நன்றி.

27 மே, 2010

இஸ்லாமிய மாணவி பத்தாம் வகுப்பில் சாதனை !

மாணவியின் தனித் திறமையை மதம் சார்ந்து பாராட்டலாமா ? என்பது போல் இதே தலைப்பை கூகுள் பஸ்ஸில் இட்ட போது நிறைய விவாதங்கள் வந்தன.

Swami omkar - தீவிரவாதி என குறிப்பிடும் பொழுது இந்து தீவிரவாதி, முஸ்லீம் தீவிரவாதி என குறிப்பிடுவது முட்டாள் தனம் என கூறும் நீங்கள், மாணவி இஸ்லாமியர் என கூறுவது தகுமா? மதம் மார்க் போடுமா? :) என்ன கொடும கண்ணன் இது :)May 26
Sanjai Gandhi - //இஸ்லாமிய மாணவி//
அந்த மாணவியின் சாதனையை இதைவிட மோசமாக கொச்சைப் படுத்த முடியாது. பூனைக் குட்டியை உள்ள மறைச்சி வைங்க ஆபிசர்..
May 26
Kesava Bashyam VN - கோவி கண்ணனுக்கு சிறந்த மதவாதி என்ற பட்டம் கொடுக்கலாமா !!!!! கோவி கண்ணன் நீங்கள் ஊருக்கு உபதேசம் செய்பவர் என்று தெள்ள தெளிவாக இதிலிருந்து தெரிகிறது .

அரசியல் வேறு படிப்பு வேறு. அந்த சிறுமி தன் சொந்த முயற்சியால் படித்து முதல் இடத்தை பிடித்தாள். அவளை இஸ்லாமியர் என்று சொல்வது அந்த சிறுமியை கொச்சை படுத்துவதே ஆகும் . திரு.ஓம்கார் மற்றும் திரு.சஞ்சய் சொல்வதை வழி மொழிகிறேன்
May 26

*******

இன்றைய தேதிக்கு தனிமனித சாதனைகள் அமைப்பின் சாதனைகளாக விளம்பரப்படுத்தப்படுவது ஒரு நாகரீகமற்ற நடைமுறையாகவே தொடர்ந்து வருகிறது. குறிப்பாக இஸ்லாம் சமூகத்தின் மீது 'தீவிரவாத முத்திரையை' குத்தி அடையாளப்படுத்தும் வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் வேலையில் ஒரு மாணவியின் சாதனையை மதம் சார்ந்து பார்த்து பாராட்டுவதில் தவறு ஏதும் இல்லை. பொதுச் சமூகம் அடையாளப்படுத்தும் 'இஸ்லாமியர் என்றால் தீவிரவாதிகள்' என்கிற சிறுமையைத்தான் இஸ்லாமியர்கள் அடையாளாக்கிக் கொள்ளவேண்டும் மாறாக தங்கள் பெருமைகளால், சாதனைகளால் அச்சமூகம் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள முனையும் போது அதற்கு எதிர்ப்பு காட்டுவது நடுநிலையும் இல்லை என்பது எனது புரிதல்.

இஸ்லாமிய சமூகம் மாறிவருகிறது, பிற மதத்தினரைவிடவும் கடவுள், வேதபுத்தகம் போன்ற மதம் சார்ந்தவைகளைஅவர்களின் மீதான மத அழுத்தத்தின் காரணமாக பலமாக கட்டிக் கொண்டு அழுகிறார்கள் என்கிற பொதுவான எண்ணம் இருந்தாலும், பெண்கல்வி போன்றவற்றில் நல்ல மாறுதல் அடைந்துவருவதை நாம் அடையாளம் கண்டு பாராட்டவே செய்ய வேண்டி இருக்கிறது. படிப்பறிவு ஒரு சமூகத்தின் மீதான பொதுக் கருத்தை மாற்றும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை காரணம் பார்பனர் உள்ளிட்ட மேல்சாதியினர் நாசாவில் பணிபுரிந்தாலும் தத்தம் சமூகம் சார்ந்தே சிந்திக்கின்றனர் என்பது வெள்ளிடைமலை. இருந்தாலும் படிப்பறிவு பெண்கல்வி என்பவை சமூக பொருளாதாரத்தை முன்னேற்றி ஒட்டுமொத்த சமூக வளர்ச்சியின் பங்களிப்புக்கு பயனாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

படிப்பறிவிலும் உயர்கல்வியிலும் தமிழககத்து இஸ்லாமிய சமூகம் பிற மத சமூகங்களைவிட பின் தங்கியே இருக்கின்றன. காரணம் கட்டற்ற பிள்ளை பேறு, அவர்கள் அனைவருக்குமே கல்வி கொடுக்க முடியாத பொருளாதார சூழல் குறைவால் மகன்களை எப்படியேனும் எதோ ஒரு வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பிவிட்டால் போதும் அதன் பிறகு மற்ற குழந்தைகளை கரை சேர்த்துவிடலாம் என்பது போன்ற சூழல் பிணைப்பு 80 களின் இறுதிவரையிலும் கூட இருந்தது. தற்பொழுது இஸ்லாமிய சமூகம் ஓரளவுக்கு குடும்பக்கட்டுப்பாடு முறைகளை பயன்படுத்தி பேறுகளைக் குறைத்துக் கொண்டு கல்வியில் முன்னேறினாலும் உயர்கல்வி என்ற அளவுக்கு செல்பவர்களும் எண்ணிக்கையில் குறைவே. இஸ்லாம் சமூகத்தில் பெண்களுக்கு குறைந்த வயதில் (15க்கு மேற்பட்ட வயதில்) திருமணம் செய்வது இன்றைக்கும் கூட நடைமுறையாக இருக்கிறது. அந்த ஒரே காரணத்தினால் தான் கட்டாய திருமணப் பதிவு சட்டத்தைக் கூட அவர்கள் மதக்காரணங்களைச் சுட்டி எதிர்க்கிறார்கள், திருமணம் பதிவு செய்யப்படுவது கட்டாயம் என்றால் பெண்ணுக்கு 18க்கும் குறைவான வயது என்னும் போது சட்ட சிக்கலை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்பதே எதிர்ப்புகான முதன்மை காரணம்.

17 வயதில் திருமணம் என்றால் பெரும்பாலும் +2 படிப்பை தாண்டுவதே இஸ்லாமிய மாணவிகளுக்கு பெரும் அறைகூவல். இந்த சூழல் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது. இஸ்லாமிய சமூகத்தில் கல்லூரியை தொடும் ஆண்கள் மிகுதியாக மிகுதியாக அவர்கள் சமூகத்து பெண்களும் கல்வியில் முன்னேறுவதற்கு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. 10 ஆம் வகுப்பில் முதல் மாணவியாக வந்த ஜாஸ்மின் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவளாம், வாடகை வீட்டில் குடியிருக்கிறார்கள். அவளது தந்தை அரசு ஊழியரும் அல்ல. இப்படியான சூழலில் இருக்கும் பெண்ணும் பெற்றோரும், ஆசிரியரும் ஊக்கமளித்தால் பள்ளியின் தரம் எதுவாக இருந்தாலும் முதல் மதிப்பெண் பெறமுடியும் என்பதை நிருபனம் செய்திருக்கிறாள்.

ஜாஸ்மின் போன்ற ஏராளமான மாணவிகளின் உருவாக்கத்தை இளம் வயது திருமணம் என்கிற முட்டுக்கட்டையில் போட்டு அமுக்கிய தமிழக இஸ்லாமிய சமூகம் மெல்ல மெல்ல இறுக்கத்தை தளர்த்திவருவது வரவேற்கத்தக்கது. படிப்புக்கு சூழல் அமைவது தான் முக்கியம் அதற்கு மதம், சமூகம் தடையாக இருந்தால் எந்த ஒரு சாதனையையும் ஏற்படுத்திவிட முடியாது என்பதை ஜாஸ்மின் தெளிவு படுத்தி இருக்கிறாள். இஸ்லாமியர்கள், அரசு பள்ளி மாணவிகள் படிப்பில் சாதனை செய்யக் கூடியவர்கள் என்று வெளிச்சமிட்டு காட்டிய ஜாஸ்மினையும் அவர்களது பெற்றோர்களையும், சிறந்த முறையில் பயிற்சி கொடுத்த ஆசிரியர்களையும் (அரசு பணியில் தன்னளவில், தன்னார்வு பொறுப்பான ஒருசிலர் இருக்கிறார்கள்) பாராட்டுகிறேன்.


********

கூகுளின் கயமைத் தனம் என்பதாக இணையத் தேடலில் ஒரு தகவல் ஓடிக் கொண்டு இருக்கிறது,



இந்த தகவலை பலரும் உண்மையா என்று தேடுவதில், இப்பொழுதெல்லாம் அதே தேடல் முடிவை கூகுள் தருவதில்லை, மாறாக இவை தேடப்படும் பக்கமாக காட்டுகிறது. அந்த கூகுள் தேடல் இமேஜ் உண்மையோ பொய்யோ... ஆனால் வெள்ளைக்காரன் திருட மாட்டான் கருப்பன் தான் திருடுவான் என்பதை கூகுள் போன்ற நிறுவனங்களே நம்பவில்லை என்கிற கட்டமைப்புகளைவிட பொதுப்புத்திகள் இப்படியானவை என்பதைக் காட்டும் இதைவிட சிறந்த காட்டுகள் எதுவும் இல்லை.


இடுகை பிடித்து இருந்தால் தமிழ்மணக் கருவி பட்டையில் குத்துங்கள்

24 மே, 2010

பொட்டிக்கடைகாரர்கள் மூலம் செம்மொழி வளர்க்கும் அரசு !

எல்லா மாநிலங்களிலும் அந்தந்த மொழிகளில் பெயர்பலகைகள் இடம் பெற்றிருக்கிறது, ஒருங்கிணைந்த இந்தியா என்று காட்டுவதற்கு நடுவன் அரசின் அனைத்து அலுவலங்களிலும் இந்தி பெயர் பலகைகள் வைக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் மட்டும் என்றுமே தொடரும் பிறமொழிவிருப்பத்தால் ஆங்கிலப் பெயர் பலகைகளும், பிறமாநில பெயர் பலகைகளும் இடம் பெற்றிருக்கிறது, தமிழக சுற்றுலா தளங்களுக்கு செல்லும் போது அங்குள்ள கழிவரைகளில் கூட மலையாள எழுத்துக்களைப் பார்க்கலாம், ஆனால் கேரளா உள்ளிட்ட பிறமாநிலங்களில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கூட தமிழில் பெயர் பலகைகள் பார்பது அரிது. தமிழர்களிடம் இருக்கும் பெரிய குறைபாடே தமிழை முன்னிறுத்த வேண்டுமென்பதில் காட்டும் மந்த போக்கு (அலட்சியம்). இவை சரி செய்யப்பட வேண்டும், தமிழர்களுக்கு தம் மொழியும் பெருமைக்குரியதே என்று காட்ட சிறுகடைகள், பெரும் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து விற்பனை நிறுவனங்களிலும் தமிழில் பெயர் பலகை வைப்பது வரவேற்கத்தக்கது.

சென்றவாரம் ஒரு நாள் தமிழ் உணவகம் ஒன்றில் 'தென்னிந்திய சாப்பாடு ஒண்ணு கொடுங்க' என்று நான் தூய தமிழில் கேட்டு கல்லாவில் இருந்தவரை விழிக்க வைத்தேன். அதன் பிறகு 'சவுத் இந்தியன் மீல்ஸ்' என்றதும் அவருக்கு புரிந்தது. 'ச்சே என்னது தமிழனுக்கு தமிழ் புரியவில்லையே....என்று ஒரு நொடி மனம் வருந்தினாலும்....... நாம தமிழை எதிர்பார்க்கும் இடம்... குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்யும் ஒரு பணியாளர் ...அவருக்கு தூய தமிழ் தெரிந்திருக்க வேண்டுமென்பது என்னுடைய எதிர்பார்ப்பே அன்றி அவருடைய குறையோ, குற்றமோ இல்லை என்று தேற்றிக் கொண்டேன். மற்றபடி தூய தமிழ் தெரிந்தவர்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாக குறைவான ஊதியத்தில் பணி செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை கண்ணுற்று இருக்கிறேன். நன்கு தமிழ் தெரிந்தவன், படித்தவனே ஆங்கிலத்தில் பேசுவதை வழக்கமாகிக் கொண்டிருக்கும் போது நாள் தோறும் பலவகையான வாடிக்கையாளர்களை எதிர்நோக்கும் ஒரு பணியாளருக்கு நடைமுறை பேச்சு தவிர்த்து தூய தமிழ் தெரிந்திருக்கும் என்று நினைப்பது என்னுடைய அறிவு குறைபாடு (அறிவீனம்) என்பதாக நினைத்துக் கொண்டேன். .

மலேசியாவில் எந்த ஒரு வெளிநாட்டு நிறுவனம் துவங்கினாலும் தனியார் நிறுவனம், பொது நிறுவனம் என்று காட்டக் கூடிய 'Sendirian Berhad' என்ற மலாய் சொல்லுடன் எழுதும் படி மலேசிய அரசால் பணிக்கப்பட்டுள்ளது. அதன் படி மைக்ரோ சாப்ட் நிறுவனம், Microsoft Malaysia Sdn Bhd என்றே பெயர் எழுதப்பட்டு வருகிறது, இதன் பொருள் ஆங்கிலத்தில் Microsoft Malaysia pte ltd. ஆனால் அதே மைக்ரோ சாப்ட் மற்ற நாடுகளில் மொழிகளில் எதிர்ப்பு இல்லை என்றால் Microsoft pte ltd அல்லது Microsoft pvt ltd அல்லது Microsoft ltd என்றே எழுதும். அதாவது அரசு ஆணையில் கண்டிப்புடன் இப்படியாகத்தான் பெயர் பலகை எழுத வேண்டும் என்று சொல்லிவிட்டால் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட எந்த ஒரு பெரிய நிறுவனமும் மீறுவதில்லை. மற்றபடி பன்னாட்டு நிறுவனங்கள் வட்டார மொழியை மதிக்கிறார்கள் என்று சொல்வதற்கு இல்லை.

தமது மொழியின் தனித்தன்மை காக்கப்பட வேண்டும் என்பதில் மலேசிய அரசு உறுதியாக உள்ளது, அதே போன்று இந்திய நடுவன் அரசும் (ஆளுகைக்கு உட்பட்ட) அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழியிலும் பெயர் பலகை வைப்பதைவிட இந்தியில் வைப்பதை விரும்புகிறது. பெங்களூருவில் இந்திய நிறுவனங்களான வங்கிகளின் பெயர் பலகை மருந்துக்கு கூட கன்னடத்தில் வைக்கவில்லை என்பதற்கு வாட்டாள் கும்பல் ஆ(ர்பா)ட்டம் காட்டிய பிறகு மாற்றிக் கொண்டார்கள்.

பொட்டிக்கடைக்கரார்களும், அரசு உதவியில் செருப்புக் கடை வைத்திருக்கிறவர்களும் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்பதில் செம்மொழி மாநாட்டை ஒட்டி தமிழக அரசு முனைப்பு காட்டுவது வரவேற்கத்தக்கது என்றாலும், திடிரென்று கால கெடு (அவகாசம்) கொடுத்து பெயர் பலகை வைக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பது (நிர்பந்தம்) சரி அல்ல. ஒரு நாளைக்கு 200 ரூபாய் மட்டுமே விற்பனையில் பெறும் சிறுகடைகாரர்கள் உடனடியாக பெயர் பலகை வைக்க 1000 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டி இருக்கும். இந்த திடீர் செலவை அவர்கள் எவ்வாறு ஈடுகட்டுவார்கள் ? இவர்களுக்கு அரசே இலவசமாக பெயர் பலகை செய்து கொடுக்கலாமே.

ஊருக்கெல்லாம் தமிழில் பெயர் பலகை வைக்கச் சொல்லவும், தமிழ் பெயர்களை பரிந்துரை செய்யும் திமுக தலைவர் கருணாநிதியின் பேரன் தம் "தமிழ்" திரைப்பட நிறுவனத்திற்கு வைத்திருக்கும் பெயர் 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்'. எண்ணிக்கை அளவில் 18 ஆண்டுகளாக தமிழக முதல்வராக இருந்துவரும் கருணாநிதிக்கு மேற்சொன்னது போல் செருப்பு தைக்கும் சிறு கடை வைத்திருப்பவர்களும், பொட்டிக்கடைகாரர்களும் தான் தமிழை வளர்ப்பார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது போலும்.

21 மே, 2010

மணற்கேணி - 2009 நிறைவு நிகழ்ச்சிகள் !


மணற்கேணி - 2009 நிறைவு நிகழ்வுகளாக, வெற்றியாளர்களை சிறப்பிக்கும் வண்ணம், வெற்றியாளர்கள் கலந்து கொள்ளும், சிங்கைப்பதிவர்கள் சார்பாக கீழ்கண்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பதைத் சிங்கைப் பதிவர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.

(நூல் அட்டைப்படம் மருத்துவர் ருத்ரன் ஐயா)

வெற்றியாளர்கள்:
திரு தருமி (அரசியல் சமூகம்)
திரு தேவன் மாயம் (தமிழ் அறிவியல்)
திரு பிராபகர் (தமிழ் இலக்கியம்)

மணற்கேணி போட்டியில் கலந்து கொண்ட பதிவுகளின் இணைப்பு இங்கே (தமிழ்வெளி)

நிகழ்ச்சியில் சிங்கைப் பதிவர்கள், வலைப்பதிவு வாசிப்பவர்கள் அனைவரும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

நிகழ்ச்சி பற்றி மேலும் அறிய அழையுங்கள்:
கோவி.கண்ணன் 9876 7586
குழலி 8116 5721
ஜோசப் பால்ராஜ் 9337 2775

கூலிக்குக் கூட மாரடிக்காத ஆசிரியர்கள் - மறுகூட்டல் !

இந்த ஆண்டு ஒன்றரை லட்சம் மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து இருக்கிறார்களாம். அரசு ஊழியர்கள் மீது எனக்கு எந்த ஒரு நம்பிக்கையும், உயர்ந்த எண்ணங்களோ ஏன் ஏற்படுவதில்லை என்பதற்கு இதுவும் ஒரு சான்று. பொதுமக்கள் யாரேனும் அரசு ஊழியர்களை கேள்வி எழுப்பி கொஞ்சம் கடுமையாக கைநீட்டும் அளவுக்குச் சென்றுவிட்டாலோ, கடமையைச் செய்யவிடாமல் தடுக்கிறார்கள் என்று கூப்பாடு போட்டு அவர்களை சிறையில் தள்ளும் சட்டப் பாதுகாப்புடன் கடமை தவறும் அரசு ஊழியர்கள் கடமைகளைச் சரியாகச் செய்வதில்லை என்பதற்கு மற்றொரு சான்றாக இந்த மறுகூட்டல் என்னும் நடைமுறையை நான் பார்க்கிறேன்.

ஒரு மாணவனுக்கு கல்வி தான் எல்லாவித வாய்ப்புகளையும் எதிர்காலத்தில் பெற்றுத்தருகிறது என்பதும் அதில் பெறும் மதிப்பெண்கள் மிக மிக இன்றியமையாத ஒன்று என்பது நாம் அனைவரும் அறிந்தவை. இதுமிகவும் சாதாரண புரிதல் கூட, ஒரு மாணவன் தவறிழைத்தவனாக இருந்தால் சில பள்ளிகளில் அவனுக்கு எதிராக பள்ளியை விட்டு வெளியேற்றுவது அல்லது கடுமையான குற்றம் செய்த மாணவனை காவலர்களிடம் ஒப்படைக்கும் முடிவு என்னும் போது மாணவனின் எதிர்காலம் முற்றிலுமாக நலிவடையுமோ என்பதை நினைத்துப் பார்த்து எச்சரிக்கை செய்து அனுப்புவார்கள், நல்லதொரு சமூகம் அமையவேண்டும் என்பதன் பொறுப்புணர்வு என்பதாக நாம் அந்த செயலை எடுத்துக்கொண்டு தொடர்புடைய பள்ளிகளையும் ஆசிரியர்களையும் பாராட்டலாம்.

எவ்வளவோ (மோசமான, பொருளியல்) இல்லச்சூழலில் படிப்பைத் தொடரும் மாணவர்களின் தேர்வு முடிவுகள் ஆசிரியர்களின் கவனக்குறைவால் திசைமாறும் அல்லதும் முற்றிலுமாக நலிவடையும் சூழல்களை ஏற்படுத்துகிறது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. முன்பெல்லாம் ஒரு மாணவன் மிகச் சரியாக எழுதி இருந்து மதிப்பெண் குறைவாகப் பெற்றால், அந்த மாணவன் விண்ணப்பித்தால் தேர்வுத்தாளை மற்றொருமுறை வேறொரு ஆசிரியரால் திருத்தப்பட்டு சரிபார்க்கப்படும், இப்போது அத்தகைய நடைமுறைக்கு வாய்ப்பே இன்றி, நன்றாக தேர்வு எழுதிய மாணவன் குறைவாக மதிப்பெண் பெற்றிருப்பதற்குக் காரணம் ஒருவேளை தேர்வுத்தாளை திருத்திய ஆசிரியரின் கவனக்குறைவாக இருக்கலாம் என்பதைக் கருத்தில் கொண்டு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு அனுமதி கொடுத்து இருக்கிறார்கள். தாம் நன்றாக எழுதியும் மதிப்பெண் குறைவாக வந்திருப்பதாக 1 1/2 லட்சம் மாணவர்கள் விண்ணப்பிக்கும் நிலையில் அதில் ஐம்பது விழுக்காடு மாணவர்களாவது தாம் குறைவாக மதிப்பெண் பெற்றதை மறைக்கும் விதமாக பெற்றோர்களை ஏமாற்றவே மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கிறார்கள் என்றாலும் மீதம் 50 விழுக்காடு அதாவது 75,000 மாணவர்கள் நன்றாக எழுதியும் மதிப்பெண் சரிவர கிடைக்காத மாணவர்கள் என்று கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

75 ஆயிரம் மாணவர்கள் எதிர்கால வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கிய ஆசிரியர்களின் கவனக்குறைவை கண்டிப்பது யார் ? இந்த நிலை தொடர்ந்தால் பொதுத்தேர்வு முறைகள் என்பதே கேலிக்கும் கேள்விக்கும் சென்று கொண்டிருக்கிறது என்பதின் பதிவாகத்தான் இந்த மறுகூட்டல் என்னும் ஒரு வழக்கத்தை நான் பார்க்கிறேன்.

அவர்களில் 75 ஆயிரம் மாணவர்கள் மறுகூட்டலில் எதிர்பார்த்த மதிப்பெண் பெறுகிறார்கள் என்றாலும் கூட அது விண்ணப்பிக்கும் அவர்களின் மறுமுயறிசியினால் கிடைத்த பலன்மட்டுமே, நன்றாக எழுதியும் குறைந்த மதிப்பெண் பெற்று விண்ணப்பிக்காத மாணவர்கள் பெறும் பாதிப்பை யார் சரி செய்வது ? ஏறக்குறை 75 ஆயிரம் மாணவர்கள் பாதிப்பு அடையும் அளவுக்கு கவனக்குறைவாக இருக்கும் ஆசிரியர்கள் என்ன விதமான கடமையை ஆற்றினார்கள் ? அவர்களுக்கு ஏன் மாணவர்களின் எதிர்காலம் குறித்த அக்கரையே இல்லாமல் போயிற்று ?

ஒருகாலத்தில் ஆசிரியர் மருத்துவர்கள் தெய்வம் என்பதாக் போற்றப்பட்டனர், காரணம் அவை தொழில் என்பது தவிர்த்து தனிப்பட்ட மனிதர்களின் எதிர்காலத்தை முடிவு செய்யும் அக்கரை கொண்டவர்கள் என்கிற புரிதலை அவர்கள் ஏற்படுத்தி இருந்தனர். இப்போது இருப்பவர்கள் பெரும்பாலும் கூலிக்கு மாரடிக்கிறவர்களாக மாறிவிட்டார்கள் என்கிற புரிதல் இருந்தாலும் அதையும் சரியாக செய்வதில்லை என்னும் போது இவர்களையெல்லாம் எப்படித்தான் திருத்துவது ?

இப்போதெல்லாம் அரசு ஊழியர்களின் போராட்டங்களெல்லாம் சுயநல பிசாசுகளின் போராட்டமாகவே எனக்கு தெரிகிறது, அரசு அலுவலகங்கள் பொதுமக்களால் சூறை என்று படிக்கும் போது எந்த ஒரு உணர்ச்சியும் ஏற்படுவது இல்லை, அரசு ஊழியர்கள் தாக்கப்பட்டால் அவன் எந்த அளவுக்கு மோசமாக செயல்பட்டு இருப்பான் என்று எதிர்மறையாகவே நினைக்கத் தோன்றுகிறது.

ஆசிரியர் பணி என்பது புனிதப்பணி என்பதை ஆசிரியர்கள் மட்டுமே இன்று சொல்லிக் கொள்ளும் படி அவர்கள் நடந்து கொள்ளும் சூழலில் மறுகூட்டலுக்கு ஒன்றரை லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து இருக்கிறார்கள் என்று செய்தி ஆசிரியர்கள் முகத்தில் மாணவர்கள் உமிழ்வதாக உணர்த்துகிறது.

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட அரசு ஊழியர்களை நினைத்தாலே. கூலிக்கு மாரட்டிக்கும் ஆசிரியர்களிலும் சரியாக அடிக்காதவர்கள் 'ஆசிறியர்களா ?'

20 மே, 2010

கலவை 20/மே/2010 !

திரைக்கு வரும் அம்பேத்கார் : மலையாள நடிகர் மம்மூட்டி நடித்த அம்பேத்கார் திரைப்படம் விரைவில் வெளி இட நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளதாம். அம்பேத்கார் படம் தமிழகத்தில் வெளியாகமல் இருக்க முட்டுக்கட்டைப் போட்டே (படத்தை வெளி இடுவதாக வாங்கி)முடக்கி வைக்கப்பட்டுள்ளது என்று பேசிக் கொள்ளப் பட்டது (எங்கே ? இணையத்தில் தேடினால் தகவல் கிடைக்கும்), இன்னிக்கு தேதியை வைத்து நாடு எப்போதும் சுப்க்ஷ்மாக இருந்ததாக கதை கட்டுவோர், பழைய நிலையை அல்லது இன்றும் சில இடங்களில் வெளிப்படையாக தொடரும் தீண்டாமையை தெரிந்து கொண்டால் கசப்பு உணர்வு ஏற்படும் என்று தேவையற்ற அச்சத்தினால் வரலாறுகள் மறைக்கப்பட வேண்டியவை என்பதாக சிலர் நினைக்கிறார்கள். பெரியார் படமோ, அம்பேத்கார் படமோ அவை பொழுது போக்குப் படங்கள் இல்லை, எனவே வணிக நோக்கம் என்பதைத் தவிர்த்து அவை ஆவணங்களாக இருப்பது வரலாற்றை தெரிந்து கொள்ள முனைவோருக்கு பயனாக அமையும். வள்ளலார் பற்றிய திரைபடம் எடுத்தாலும் வரவேற்பேன், இங்கு வாழ்ந்தவரை விட்டுவிட்டு எங்கோ வாழ்ந்த மகா அவ்தார் பாபாஜி, இராகவேந்திரர் என்று படம் எடுத்த திரு ரஜினி (இளைய ராஜாவின் இசையுடன்) வள்ளலாராக நடித்தால் கண்டிப்பாக வரவேற்பேன். வள்ளலாரை வைத்து பிழைப்பு நடத்தும் சைவ அமைப்புகளும், வள்ளாரை பிள்ளைமார் வகுப்பைச் சேர்ந்தவர் என்று சாதிப் பெருமைக்காக அவரைச் சுறுக்கும் சாதி அமைப்புகள் இது குறித்துச் செயல்படுமா ?

அலங்கல் : மே மாதம் - நாசம் - இலங்கை அரசு - நாசமாகப் போச்சு - முள்ளி வாய்க்கால் - காணாமல் போன தமிழர் தலைவன் - கருணாநிதி - ஈனத்தலைவன் - பார்வதி - துறத்தல் - வரவேற்பு - குஷ்பு - திருமா - ஒரே மேடை - ஜெயலலிதா - சோதிடர் - கோபாலபுரம் - அணுராத ரமணன் - மகாபெரியவா - சூர்யா - சுருதிஹாசன் - முருகதாஸ் - இராவணன் - ஐஸ்வர்யா பச்சன் - இலங்கை படவிழா - ரஜினி காந்த் - நன்றி - அமிதாப் - எந்திரன் - எஸ்கேப்பு - ஏஆர் ரஹ்மான் - டி எம் எஸ் - பாட்டு - புதிய தமிழ் தாய் வாழ்த்து - - வரலாறு - செம்மொழி
...ஸ்ப்பா மூச்சு முட்டுது ஒருவாரத்துல இம்புட்டு செய்திகளா ?

மெடிக்கல் மிராக்கல் : நம்ம தமிழ்படத்துல மட்டும் ஏற்படும் மெடிக்கல் மிராக்கல் உண்மையிலேயே ஏற்பட்டு இருக்கிறது. பிறவியிலேயே சிறுநீரகம் கோளாறுடன் பிறந்த சிறுமிக்கு 8 வயதில் சிறுநீரகம் முற்றிலும் பழுதடைந்த நிலையில் புதிதாக சிறுநீரகம் உடலில் வளர்ந்து செயல்படத் துவங்கியதாம். 10 லட்சத்தில் ஒருவருக்கு இப்படியாக உறுப்புகள் புதிதாக தோன்றினாலும் முற்றிலும் வளர்வது கடினமாம். சிறுமி கொடுத்து வைத்தவள்.


முயற்சிக்கு வயது தடை இல்லை : 77 வயது தாத்தா ஒருவர் இளமையில் கைவிட நேர்ந்த படிப்பை 77 வயதில் தொடர்ந்ததில் +2 தேர்வு எழுதி இருக்கிறார். அவருக்கு கிடைத்தது 742 மதிப்பெண்கள். 'கல்வி கற்றேன்' என்பதைச் சொல்ல கல்வி நிறுவனம் தரும் சான்றிதழ் தேவை என்பதை என்னால் ஏற்க முடியவில்லை. தபால்காரராக இருந்த ஒருவர் இன்று சென்னையில் ரியல் எஸ்டேட் தொழிலில் பெரிய அளவில் கொடிகட்டிப் பறக்கிறாராம். அனுபவங்கள் தரும் பாடமும் பள்ளிக் கல்வியும் ஒன்றல்ல. ஆனாலும் சரியான வயதில் மட்டுமே கற்க முடியும் என்பதை உடைத்துக் காட்டிய முதியவருக்கு நல்வாழ்த்துகள்.

**********

எங்க ஊர் தகவல் : மணற்கேணி - 2009 கருத்தாய்வு போட்டியின் வெற்றியாளர்களான திருவாளர்கள் தருமி, தேவன்மாயம் மற்றும் பிரபாகர் ஆகியோர் போட்டியின் நிறைவாக வரும் சனிக்கிழமை முதல் அடுத்த ஞாயிறு வரை சிங்கையில் இருப்பார்கள். அவர்களின் வருகையை ஒட்டி பதிவர் சந்திப்பு, கலந்துரையாடல் மற்றும் நூல் வெளியீடு ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

*****

மனநிலையைப் பொருத்து எரிச்சலோ, சிரிப்போ எது ஏற்பட்டாலும் இது ஒரு ஜோக்...

உடன்பிறப்பு 1 : எந்த திராவிடக் கட்சிக்கும் இல்லாத கவுரவம் நம்ம கட்சிக்கு கிடைச்சிருக்கு
உடன்பிறப்பு 2 : ??
உடன்பிறப்பு 1 : கடவுளே.....கடவுளே.... ! எந்த திராவிடக் ஒரு கட்சியிலும் ஒரு 'கடவுள்' சேர்ந்து நீ பாத்திருக்கியா ?
உடன்பிறப்பு 2 : ??
உடன்பிறப்பு 1 : திருச்சியில் கோவில் கண்ட தெய்வம் நம்ம கட்சியில் சேர்ந்திருக்கு.

19 மே, 2010

தொடர்ந்து அவமானப்படுத்தப்படும் ஹிந்து மதம் !

பழமை வாதம் என்பது எந்த ஒரு தனிப்பட்ட மதத்திற்கும் மட்டுமே உரிமையுடைய சொத்தோ சொந்தமோ இல்லை, அனைத்து மத்திலும் விழுக்காடு அடிப்படையில் பழமைவாதங்கள் இருந்து கொண்டிருக்கின்றன. வேண்டுமானால் ஒரு மதத்தின் பழமைவாதம் அல்லது மூடத்தன விழுக்காடு என்பவை அந்த மதம் கண்டறியப்பட்ட காலங்களைப் பொருத்தது, இப்படியாக பார்க்கும் போது எந்த ஒரு மதம் மிகப் பழமையானதோ அவற்றில் மூட நம்பிக்கை மற்றும் பழமைவாதம் மிகுதியாக இருக்கும், பிறவற்றில் அவை குறைந்து காணப்படும். கடந்த 1000 ஆண்டுகளாக உலகலவில் பின்பற்றுவதாக மிகப் பெரியதாக புதிய மதங்கள் எதுவும் ஏற்படாததால் நமது மதச் சிந்தனைகள் அனைத்துமே 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. 1000 ஆண்டுகளுக்கு முன்பான மதச் சிந்தனைகளின் இன்றைய 'எச்சத்தில்' எது சிறந்தது என்பதில் தான் மதவாதிகள் வேறுபடுகிறார்கள்.

எங்கள் மதத்தில் அற்புதங்கள் நிறைந்தது என்று சொல்வதில் எந்த ஒரு மதமும் விதிவிலக்கு இல்லை. இத்தகைய அற்புதம் குறித்த நம்பிக்கை மதங்களின் கூறுகள் என்றாலும் அதையும் தாண்டி தெய்வீகத் தன்மை என்பதை நிருபனம் செய்ய 'இயற்கையை வென்று அல்லது கட்டுப்படுத்திக் காட்டுவதால்' முடியும் என்று மதவாதிகள் நம்புகிறார்கள், இவர்களின் நம்பிக்கைக்கு அறியாமலேயே செயலாக இருப்பவர்கள் மதம் குறித்த எந்த ஒரு அறிவும் இல்லாமல் விருப்ப தெய்வத்த்தை விரும்பிய படி வழிபடும் படித்த மற்றும் பாமரமக்கள்.
அலகு குத்துதல், தீ மிதித்தல், தலையில் தேங்காய் உடைத்தல், மண்ணுக்குள் புதைத்து எழுப்பது, நடை பயணம் என உடலை வருத்திக் கொள்ளும் வேண்டுதல்களை மதம் சார்ந்த நம்பிக்கையாகப் பார்ப்பதும் பரப்புவதும் மதவாதிகளின் வேலை.

வாயில் இருந்து லிங்கம் (ஏற்கனவே விழுங்கியதை வாந்தியாக எடுக்கும் போது தொண்டையில் சிக்காத அளவுக்கு மிகவும் வளவளப்பாகச் செய்யப்பட்டது, கீழ் பீடம் இல்லாதது) எடுக்கும் சாமியார்களை இவர்கள் வெவ்வேறு சீரியல் எண்களின் 1000 ரூபாய் தாள்களை எடுத்துத் தரச்சொல்வது இல்லை. இந்த மேஜிக் ஏமாற்று மோசடிகளைப் பற்றி வெளிப்படையாக எவனும் பேசினால் அவனை மூளையை அடகு வைத்த பகுத்தறிவாதி என்றும் மத எதிரி என்றும் காட்டுவது இந்துமதவாதிகளின் வழக்கம். தங்க மோதிரம் வரவழைத்து தரும் சாமியார்களிடம் தேவைப்படுவோருக்கு கிட்னி, கண்கள் போன்ற உடல் உறுப்புகளை வரவழைத்து தரச் சொல்ல இவர்களால் முடியவில்லை.



பிர்லா கோளரங்கத்தில் அறிவியல் முறையில் தீயை எப்படி கையாளுவது என்கிற செய்முறை விளக்கம் தீ மிதி போன்ற 'ஹிந்து' நம்பிக்கைகளை கேலி செய்கிறதாம், இந்து மதம் அவமானப்படுத்தப்படுகிறதாம், ஐயகோ.....சாமியார்களின் படுக்கை அறை காட்சிகளாலும், அப்பு உள்ளிட்ட ரவுடிகளின், கூலிப் படைகளின் தொடர்பில் ஒரு சாமியார் கைது செய்யப்படும் போது ஏற்படாத 'இந்து மத' அவமானம் அறிவியலை தெரிந்து கொள்வதில் ஏற்பட்டுவிடுமா ?

இந்த நாட்டில் மண்ணின் மைந்தர்களை பிறப்பு வழியாக அடையாளம் காண்வது தொடர்வதும், அவர்களை குறிப்பிடும் விதமாக 'தலித்' என்கிற சொல் வழங்கப்படுவதுடன், அவர்களை பல்வேறு வகைகளில் புறக்கணிப்பதிலும், அவமானப்படுத்துவதையும் கண்டு கொள்ளாது (அவரவர் பிறப்பு என்பது ஆண்டவன் கொடுத்தது என )ஆசிர்வதிக்கும் இந்து மதம் தீ மிதி குறித்த செய்முறை விளக்கத்தால் அவமானம் அடைகிறது என்று கவலை கொள்ளும் உணர்ச்சித் தூண்டல் ஏமாற்றுப் பேர்வழிகளை எதால் அடிக்கலாம் ?



14 மே, 2010

இரட்டை தம்ளர் மற்றும் பிராமின்ஸ் ஒன்லி !

பொதுப்புத்திக்காரர்கள் அனைவருமே சொல்லுவது,

* சாதிக் கொடுமையை பார்பனர்கள் செய்கிறார்களா ?

* சாதிக்கலவரங்களில் பார்பனர்கள் ஈடுபடுகிறார்களா ?

* இரட்டை தம்ளருக்கும் 'பிராமணர்களுக்கும்' ஏதாவது தொடர்பு இருக்கிறதா ?

பிறகு ஏன் சாதிக் கொடுமைகள் குறித்து சாடுதலில் பார்பனர்களை இழுக்கிறீர்கள் என்று.

பொதுச் சமூகத்தில் சாதிக் கொடுமை என்பது சிறுபான்மை பெரும்பான்மை என்ற அளவில் நடக்கிறது. பிற்பட்ட சாதியினர்கள் நிறைந்துள்ள கிராமங்களில் தலித்துகளைத் தள்ளி வைப்பது பெரும்பான்மை எனும் பெயரில் பிற்பட்ட சாதியினர் செய்யும் வன்கொடுமை. சிறு நகரங்களில் தீண்டாமைச் சுவர், இரட்டை தம்ளர் முறைகளை வைத்திருக்கிறார்கள். கிராமங்களில் நடக்கும் வன்கொடுமை பெரும்பாலும் அந்த கிராமத்தினரின் பெரும்பான்மையினர் சாதியினரால் நடத்தப்படுகிறது. இதில் அனைத்து சாதிக்காரர்களுமே அடக்கம். இதையெல்லாம் பாப்பான் செய்கிறானா ? அவனை ஏன் இதில் தேவை இன்றி இழுக்கிறீர்கள் என்பதாக பொதுப் புத்திக் குற்றச் சாட்டு எழு(து)வது வாடிக்கை தான். நினைத்துப் பார்த்தால் சொல்வது ஞாயம் தானே... !. பார்பனர்கள் எல்லோருமே படித்துவிட்டு நகரங்களுக்கு குடி பெயர்ந்துவிட்டார்கள், 'அவாள் உண்டு, அவா வேலை உண்டுன்னு இருக்கா' அவாளை ஏன் இழுக்கிறேள்...?', என்று நினைக்கத் தோன்றும்.

கிராமங்களில் நடக்கும் வன்கொடுமைகளுக்கு பார்பனர்கள் காரணமில்லை, அவர்கள் என்றோ அங்கிருந்து இடம் பெயர்ந்துவிட்டார்கள். 'பெருங்காயம் இருந்த டப்பா வாசனைப் போகாது' என்பது போல், பார்பனர்கள் உயரடுக்கில் அமர்ந்து கொண்ட வருண அடுக்கு முற்றிலும் சரிய இன்னும் கூட ஒரு நூற்றாண்டு பிடிக்கும், ஆனால் சாதி எதிர்ப்புக்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றால் இன்னும் 50 ஆண்டுகளிலும் கூட சாதிப் பகைமைகள் ஒழியலாம். பிறப்பு வழியாகப் புகுத்தப்பட்ட ஒன்றை மனிதர்கள் அனைவருக்குமே ஞாபகமறதி என்ற நோய் தாக்கி தாம் எந்த சாதி என்பது கூட மறந்துவிட்டது என்பது ஏற்பட்டால் சாதி உணர்வு முற்றிலும் மறையலாம்.

இன்றைய தேதிக்கு மது, மாமிசம், மீன், முட்டை தொடாத பார்பனர்கள் மிக மிகக் குறைவு, உணவு வாழ்க்கை முறை அனைத்திலும் பார்பனர்களுக்கும் பிற சாதிமதத்தினருக்கும் பெரிய வேறுபாடுகள் கிடையாது, கிராமங்களில் இரட்டை தம்ளர் முறை வெளிப்படையானது, ஆனால் பெருநகரங்களில் வீடுகளை வாடகைக்கு விடும் பார்பனர்களில் பலர் 'பிராமணர்களுக்கு மட்டும்' என்று விளம்பரம் செய்வது நன்கொடுமையா ? வீடு வாடகைக்கு எடுக்கிறவன் வாடகைக் கொடுககப் போகிறான். அது எவனாக இருந்தால் என்ன ? முன்பாவது 'நாங்களெல்லாம் அசைவம் சாப்பிடாதவா....ஆச்சாரமானவா' என்று பீலா விடுவார்கள், இப்பொழுது பார்பனர்களில் விரல் விட்டு எண்ணும் அளவிற்கே அசைவம் சாப்பிடாதவர்கள் உண்டு. அவன் வீடு அவன் வாடகைக்கு விடுகிறான் என்றாலும் கூட இதுவும் மறைமுகமாக பிற சாதியினரிடம் எந்த விதத்திலும் கலந்துவிடக் கூடாது என்பதான நவீனத் தீண்டாமை தான், இரட்டை தம்ளர் வன்கொடுமைகளுக்கு முற்றிலும் மாற்றான நகரத் தீண்டாமை இது. இரட்டை டம்ளர் கடை நடத்துபவனும் யாரும் என் கடைக்கு வா... என்று அழைக்காமல் தான் அந்த இழிவை வருகிறர்களுக்கு நடத்துகிறார்கள். பார்பனர்கள் முடிந்த அளவு தீண்டாமை கடைபிடித்து தான் வருகிறார்கள். எக்சப்சன் உண்டு, அது அந்த ஒரு சிலரின் தனிப்பட்ட சிறப்பு குணம். அதை சாதியின் பெருந்தன்மை என்று கொள்ள முடியாது.

பார்பனர்கள் மிகப் பெரிய அளவிலான தீண்டாமைகளில் தொடர்பில்லாமல் இருக்க அவர்களின் அங்குள்ள எண்ணிக்கை தான் அடிப்படையே அன்றி பிற சாதியினரைப் போல் குழுவாக வாழும் இடத்தில் எல்லாக் கொடுமையையையும் பிறரைப் போல் செய்தே வருகிறார்கள் என்பது பிராமணாள் ஒன்லி டூ லெட் போர்டுகளே சாட்சி. எனக்கு தெரிந்து சென்னை வாடகை வீடு விளம்பரங்களில் செட்டியார் ஒன்லி, நாடார் ஒன்லி, முதலியார் ஒன்லி என்று நான் பார்த்தது கிடையாது.

பாப்பான் தீண்டாமையை விட்டுவிட்டான், பார்பனர்கள் செய்வது இல்லை, பிராமணர் தீண்டாமையோ, வன்கொடுமையோ செய்வதில்லை போன்றவை பொது புத்தி சார்ந்த புரிதல்கள் மற்றும் பரப்புதல்களே. தாழ்த்தப்பட்டவர்கள் என்பதாக ஒரு சாரரை ஒதுக்குவதைப் போலவே, ஒட்டுமொத்தமாக பார்பனர் அல்லாத அனைத்து சாதியினரையும் புறக்கணிப்பதன் பெயர் என்ன ?


தாயாரின் சாதிய மனநிலையால் பார்பனர்களுக்கு மட்டுமே வீட்டை வாடகைக்கு விட்ட பார்பனரின் மோசமான அனுபவம் ஆங்கிலத்தில் To-Let:Brahmins Only « Maami's Weblog

13 மே, 2010

கலவை 13 மே 2010 !

முன்குறிப்பு : இங்கே எழுதி இருப்பதில் 50 விழுக்காடு ஏற்கனவே கூகுள் Buzz ல் போட்டுவிட்டிருக்கிறேன்

கெளரவம் : வரும் 16 ஆம் தேதி அட்சய திருதியையாம், சிங்கையிலும் கவர்சிகரமான விளம்பரங்களுடன் களை கட்டி இருக்கிறது விற்பனை. அட்சய திருதியைக்கு நகை வாங்குவது அதிர்ஷ்டம் என்கிற நம்பிக்கைப் போய் கவுரவம் என்ற நிலைக்கு பெண்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். அன்னிக்கு நகைவாங்கினோம் என்று வெளியே சொல்வதே பெருமை அதாவது 'நாங்க ஒன்றும் அன்றாடம் காய்சி இல்லை' என்று (உறவுக்காரர்கள் தவிர்த்து) அறிந்தவர்கள் தெரிந்தவர்களிடம் மறைமுகமாக தெரிவிக்கும் ஒரு நிகழ்வாக இந்த அட்சய திரிதியை வந்து செல்கிறது. பணம் கையிருப்பில் இல்லாதவர்கள் கூட கடனட்டை வழியாக வாங்குவது என்ற முடிவில் இருக்கிறார்கள் என்பதை அன்று ஏதேனும் ஒரு நகைக்கடைக்குச் சென்றால் தெரிந்து கொள்ளலாம்.

வளைகுடாவை கைகழுவுமா (வட) அமெரிக்கா ? : தென் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டில் மிகுதியான அளவில் (எரி) எண்ணை வளம் (4.5 billion barrels of oil) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம். எதிர்காலத்தில் பிரேசில் நாடு உலகில் முன்னனி எண்ணை ஏற்றுமதி நாடாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது தாக ஒரு தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. வளைகுடாவின் எண்ணை வளத்திற்காக அந்தப் பகுதிகளில் பார்வை பதித்து வைத்திருக்கும் அமெரிக்கா இனி தனக்கு பக்கத்திலேயே உள்ள நாட்டிற்கு பார்வையை திருப்பிவிடும். பிரேசில் எண்ணை ஏற்றுமதி செய்தால் போட்டித்தன்மை காரணமாக எண்ணை விலைகள் குறைய வாய்ப்புள்ளது, அதன் தொடர்பில் இன்றியமையாத பொருள்களின் விலை ஏற்றங்கள் குறைந்து, உலக அளவில் ஏழைகள் பயன்பெறுவார்கள் என்று நினைக்கிறேன்.

திருமணக் கூத்து : 'பைத்தியம் முற்றினால் பாயை பிரண்டுவார்கள்' என்பது சொல்வழக்கு, கொரியர் ஒருவர் தன்னுடைய தலையணையை நேசித்து தலையணையையே திருமணம் செய்து கொண்டிருக்கிறாராம். திருமணம் என்னும் சடங்கை கேலிக் கூத்து ஆக்கும் நிகழ்வுகள் உலகம் எங்கும் நடந்து வருவது தான். நம்ம ஊரில் நாயை திருமணம் செய்த நபர் உண்டு, சாதக தோசம், இரண்டாம் தாரம் வரும் என்கிற பயத்தில் வாழைமரத்திற்கு தாலிக் கட்டச் சொல்லும் மூட நம்பிக்கை வழக்கம், இவை எல்லாம் வெவ்வேறு தளத்தில் திருமணங்களை கேலி செய்து தான் வருகின்றன.

தனலட்சுமியா ? --- தைரியலட்சுமியா :
சிங்கையில் தமிழ் அமைப்பு ஒன்று மனிதனுக்கு தேவை தனலட்சுமியா ? --- தைரியலட்சுமியா ? என்ற தலைப்பில் (கோவில் ஒன்றில்) பட்டிமன்றம் நடத்துகிறார்கள். வர்றலட்சுமி எந்த லட்சுமியாக இருந்தால் என்ன சிவகாசி ஜெயலட்சுமியாக இல்லாமல் இருந்தால் போதாதா ? இது போன்ற அபத்தமான தலைப்புகளில் பட்டிமன்றங்கள் நடத்துவதால் இலக்கியம் வளருமா ? பட்டிமன்றம் என்பதன் தனித்தன்மை போய்விடும் என்று நினைக்கிறேன். கோவிலில் நடத்த பட்டிமன்றத்திற்கான அருமையான தலைப்புகள், 'முதலில் ஒழிக்கப் பட வேண்டியது போலி ஆன்மிகமா ? போலி சாமியார்களா ? கடவுளின் போலி முகவர்களா ?' இப்படி ஏதேனும் நடத்தினாலும் ஆன்மிகம் என்கிற ஒன்று விற்பனைப் பொருளாக மாறிக் கொண்டிருப்பதைக் தடுக்கலாம். எப்படியும் பட்டிமன்ற தீர்ப்பாயர் மனிதனுக்கு தேவை தனலட்சுமி மற்றும் தைரியலட்சுமி இரண்டுமே தேவை என்று சொல்லிவிடப் போகிறார்.

********
மாவட்டம் : நம்ம கட்சியில் நிதிப் பறறாக் குறைன்னு நினைக்கிறேன்

வட்டம் : ஏன் ?

மாவட்டம் : நம்ம கட்சியின் தலைமைகள் கூடி, வழக்கமாக பெரிய சோதிடர்களை வைத்து எந்தந்தக் கட்சிகளைக் கூட்டணிக்கு அழைக்கலாம் என்று ஆலோசனை நடத்தும், இந்த முறை கூட்டணிக்கு சின்ன சின்ன கட்சிகளே இணங்குவதால் கிளிசோசியம் பார்த்தாலே போதும் என்று முடிவு செய்துவிட்டார்களாம்.

12 மே, 2010

நீதிபதிகள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல.

ஆங்கிலத்தில் ஜட்ஜ்மெண்ட், ஜட்ஜ் என்பதற்கான நேரடி பொருள் 'தீர்வு', 'தீர்வு சொல்லுபவர்' என்பதே. ஒரு வழக்கு என்றாலே ஒருவர் (வாதியோ, எதிர்வாதியோ) மனசாட்சியை அடகு வைத்தவர், மற்றவர் நேர்மையானவர் என்பது பரவலான புரிதல், அதுமட்டுமின்றி சில சமயம் இருவருமே விட்டுக் கொடுக்காதவர்கள் என்னும் போது, இருவருக்கும் இடையேயான உடன்பாடின்மை ஆகியவை தீர்வுக்களைத் தேடி நீதிமன்றம் வருகின்றன. என்னைப் பொருத்த அளவில் 'நீதி' என்ற சொல்லை வழக்கு தீர்வுகளுக்கும், அதனை வழி நடத்துபவர்களுக்கும் கொடுப்பது அநீதியானது. ஏனெனில் வழக்கு மன்றங்கள் கொடுப்பது நீதி அல்ல தீர்வு மட்டுமே. ஒரு பிரச்சனையின் தீர்வு நீதியா அநீதியா என்பதை அவரவர் மனசாட்சி தவிர்த்து யாருமே சரியாக மதிப்பிட முடியாது என்பதால் நீதிபதிகளின் தீர்ப்பை நீதி என்று நான் நினைப்பது இல்லை. நீதிபதிகள் அளிப்பது நீதியல்ல சாட்சிகள் அடிப்படையில் ஆன தீர்வுகள் மட்டுமே. இது போன்ற புரிதல்களால் தான் எந்த ஒரு பதவிக்கும் புனிதம் கொடுக்கக் கூடாது என்பதால் தீர்வை நீதி என்றோ, தீர்ப்பு சொல்லுபவர்களை நீதிபதி என்றோ சொல்லாமல் 'தீர்வு அளிப்பவர்' என்னும் பொருளில் 'ஜட்ஜ்' என்று சொல்லுகிறார்கள், தீர்வுகள் மன்னர்களிடமிருந்து அதற்கான படிப்பு படித்தவர்களுக்கு சென்ற பிறகு வெள்ளைக்காரர்கள். 'மை லாட்' என்ற பதத்தை நீதிபதியை நோக்கி பயன்படுத்த்தினார்கள் அல்லது தீர்பளிப்பவர்கள் வழக்கிற்கு பொதுவானவர்கள் என்பதாலும் முறையான தீர்வு அளிப்பவர் என்கிற நம்பிக்கையாலும் தீர்ப்பு அளிப்பவர்களை கடவுளுக்கு நிகராக 'மை லாட்' என்று சொல்லி வந்தனர். இருந்தாலும் நடைமுறையில் அந்த பதவிக்கு 'தீர்வு அளிப்பவர்' என்ற பொருளில் தான் 'ஜட்ஜ்' என்று சொல்லப்பட்டு வருகிறது.

சாட்சிகள் அடிப்படையிலான தீர்வுகள் என்பதையும் மீறி, சாட்சிகளை கவனத்தில் கொள்ளாது நீதிபதி தன் விருப்பம் போல் (அநீதியாக) தீர்ப்பு வழங்கிவிட்டால் நீதிபதிகளின் தீர்ப்புகளை விமர்சனம் செய்யக் கூடாது என்பது தான் மக்களாட்சி தத்துவங்களில் எழுத்தப்பட்ட மற்றொரு அநீதியாயன நடைமுறைகள். நீதிபதிகள் என்பவர்கள் கடவுள்கள் அல்ல, சாமியார்களும் சாதாரண மக்களே என்பது போல நீதிபதிகளும் அதற்கான படிப்பு படித்த மனிதர்கள் மட்டும் தான், அவர்களை கடவுளுக்கு இணையாக வைத்துப் பார்ப்பதும், 'நீதி அரசர்' என்கிற பட்டம் கொடுப்பதும் எனக்கு ஏற்புடையது அல்ல.
நீதிபதிகளில் தவறு செய்யக் கூடியவர்களும் இருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை, காசு வாங்கிக் கொண்டு ஆளுனராக இருந்த அப்துல்கலாமும் கைது வாரண்ட் பிரப்பித்தவனும் கூட 'நீதிபதி' என்ற பதவியில் இருந்து தான் அதனை வழங்கினான். ஒரு சிலர் தவறு செய்வதற்காக ஒட்டு மொத்த நீதிபதிகளை குறைச் சொல்ல முடியுமா ? அந்த ஒரு சிலரின் தவறுகளை கடுமையாக தண்டித்திருக்க வேண்டிய பிற நீதிபதிகள் அதுபற்றி அலட்டிக் கொள்ளாமல் இருப்பதை என்னவென்று சொல்வது.

ஒரு நீதிபதி லஞ்சம் வாங்கியாதகச் சிக்கினால் அதற்கு முன் அவர் வழங்கிய தீர்ப்புகளின் நம்பகத்தன்மை கேள்விக்கு ஆளாகிறது, அவ்வாறு அதற்கு முன் வழங்கிய தீர்வுகள் எதுவும் நீக்கம் (ரத்து) செய்யபடுவதில்லை. ஒருவர் அரசாங்கத்திற்கு கணக்கு காட்டாத சொத்துக்களை அரசாங்கம் எடுத்துக் கொள்ள உரிமை இருக்கிறது என்னும் போது தவறான நீதிபதிகள் வழங்கிய தீர்வுகள் மட்டும் செல்லுபடியானவை என்பது நீதியில் வருமா ?

எதற்கு ஏன் இவ்வளவு புலம்புகிறேன் என்றால் படித்த ஒரு செய்தி எரிச்சலை ஏற்படுத்தியது.

********

ஊழலில் ஈடுபட்ட நீதிபதிகள் இட மாற்றத்தை அரசு நிராகரித்தது
மே 11,2010,00:00 IST

புதுடில்லி : பல கோடி ரூபாய் வருங்கால வைப்பு நிதி மோசடியில் சிக்கிய மூன்று நீதிபதிகளின் இட மாற்றம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் குழு அளித்த பரிந்துரையை, மத்திய அரசு ஏற்காமல் கிடப்பில் போட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் உள்ள காசியாபாத்தில் நடந்த வருங்கால வைப்பு நிதி பல கோடி ரூபாய் மோசடி சம்பவம், நாட்டையே உலுக்கியது.

இந்த மோசடியில் அலகாபாத், நைனிடால் ஐகோர்ட் நீதிபதிகள் மூன்று பேருக்கு தொடர்பு இருந்தது சி.பி.ஐ., விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, ஊழல் புகாரில் சிக்கிய அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி சுசில் ஹர்கவுலி ஜார்க் கண்ட் ஐகோர்ட்டிற்கும், ஜே.சி.எஸ்.ரவாத் நைனிடால் நீதிமன்றத் திற்கும், நைனிடால் ஐகோர்ட் நீதிபதி தருண் அகர்வால் ஜார்க்கண்ட் ஐகோர்ட்டிற்கும் அதிரடியாக இடமாற்றம் செய்யப் பட்டனர்.

ஊழல் நீதிபதிகளின் இடமாற்ற விவகாரம் குறித்து விசாரணை நடத்த, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. தவிரவும், ஊழலில் சிக்கிய மூன்று நீதிபதிகள் மோசடிகள் குறித்து சி.பி.ஐ., அதிகாரிகள் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. எனவே, புகாரில் சிக்கிய நீதிபதிகளை மீண்டும் பழைய இடத்திற்கே பணி இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற சிபாரிசு, மத்திய அரசுக்கு திருப்தி தரவில்லை.

நீதிபதிகள் குழு அளித்த இந்த பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஊழல் நீதிபதிகள் இடமாற்றம் தொடர்பாக நீதிபதிகள் குழு பழைய உத்தரவையே மீண்டும் அரசுக்கு பரிந் துரை செய்தால், அவர்கள் மாறுதல் உத்தரவை விதிமுறைகளின்படி மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று கூறப்பட்டது.

*******

குற்றத்தின் முகாந்திரம் இருக்கிறது என்பாதக்தான் விடுமுறை நாட்களிலும் காவலர்களால் வீட்டிற்கே அழைத்துவந்து முன் நிறுத்தப்படுவர்கள் (நக்கீரன் கோபால், வைகோ, சு.வீ, நெடுமாறன்) குற்றவாளிகள் என்பதாகப் புரிந்து கொண்டு உடனடியாக ஒரு நீதிபதி போலிஸ் காவல் விசாரணைக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்து இடுகிறார்கள். இது குற்றம் செய்யும் நீதிபதிகளுக்கு பொருந்ததா ? என்ன கொடுமை பாருங்கள், சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என்பதற்காக ஊழல் முகாந்திரம் உள்ள ஒருவரை மீண்டும் பணி இடத்திற்கே திருப்பி அனுப்ப வேண்டுமாம்.

அரசுகளை அரசியல்வாதிகள் ஆட்டிப்படைப்பது போலவே நீதிபதிகள் தங்கள் நலன் சார்ந்து நீதிமன்ற ஆணைகளை தங்களுக்கு சாதகமாக வளைத்துக் கொள்கிறார்கள்.

நீதிபதிகளின் தீர்ப்புகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை என்பது லஞ்சம் பெற்று குற்றவாளியாக நிற்கும் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்புகளுக்கும் பொருந்துமா ? அல்லது நீதிபதிகளே விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களா ?

நீதிபதிகள் வழங்குவது நீதி அல்ல வழக்கின் சாட்சிகள் அடிப்படையிலான தீர்வுகள் மட்டுமே, அதையும் மனசாட்சிக்கு விரோதமாக அறிவிக்கும் நீதிபதிகளும் உண்டு, அப்படியான வழக்குள் சில சமயம் வழக்கு நடத்த பண பலம் இருந்தால் மேல் நீதிமன்றத்தில் வெற்றி அடைகின்றன, சில தண்டனை அடைகின்றன, அதற்காக உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்வுகள் நீதியானவை என்று நான் சொல்லவரவில்லை.

தீர்ப்புகள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை அல்லது விமர்சனம் செய்வது இந்திய சட்டவியல் படி குற்றம் என்றாலும் கூட நீதிபதிகளின் தவறான செயல்களை, பணியைப் பயன்படுத்தி செய்த குற்ற நடவடிக்கைகளை விமர்சனம் செய்யக் கூடாது என்று எந்த ஒரு சட்டத்திலும் இல்லை.

"நீதி" என்ற சொல் "தீர்ப்புகளுக்கு" தொடர்பில்லாதது, தீர்வுகள் அனைத்தும் "நீதிகளும்" அல்ல. தீர்ப்பு வழங்குபவரை "நீதிபதி", "நீதி அரசர்" என்று சொல்வது பொருத்தமில்லாத ஒன்று, அதற்கு பதிலாக 'ஜட்ஜ்' என்ற சொல்லின் நேரடி பெயர்பான, 'தீர்வு ஆணையர்' அல்லது 'தீர்வாளர்' என்று குறிப்பிடுவதே சரி.

நீதிபதிகளை விமர்சனம் செய்து முன்பு எழுதிய இடுகை.

10 மே, 2010

வராகம் சுவைக்கலாம் வாருங்கள் !

வழக்கமாக விவகாரமாக மதவாதக் கருத்துகளை எழுதி வெளியிடும் ஹிந்து இணையத்தளத்தில் சமயல் குறிப்புகளுடன் பன்றி மாமிசம் குறித்தான 'சுவையான' விரிவான கட்டுரை வெளி வந்திருக்கிறது. பன்றி இறைச்சி உண்போருக்கு நாவில் எச்சில் ஊரவைக்கும் வருணனைகளுடன் எழுதி இருக்கிறார்கள்.

ஒருபக்கம் ஹிந்து தருமம் சனாதனம், சாத்வீகம், சைவம், ஹிந்து மதம் மட்டும் தான் விலங்குகளிடத்தும் அன்பு செலுத்துகிறது என்று கட்டுரைகள் வரும் அந்தத்தளத்தில் பன்றி மாமிசம் குறித்தான சிறப்புக் கட்டுரை ஏன் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.

பவுத்த, சமண சமயங்களால் முன்னெடுக்கப்பட்ட புலால் மறுத்தல், பிறகு திருவள்ளுவர், வள்ளலாரும் மற்றும் ஏனைய சைவ, வைணவ சமயங்களால் பரிந்துரைக்கப்பட்டு ஓரளவுக்கு மரக்கறி உணவை (விரத நாட்களிலாவது) கடைபிடிக்க வேண்டும் என்று நினைக்கும் நிலைக்கு இந்துக்கள் மாறி இருக்கின்றனர். மதங்களின் வழியான உணவு பழக்கம் என்பது நல்லதோ கெட்டதோ அவற்றில் ஓரளவேனும் உண்மை உண்டு என்ற அடிப்படையில் தான் அந்தந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் கடைபிடிக்கின்றனர். மேலும் உணவு பழக்கமும், உணவும் அந்தந்த நாடுகளின் தட்பவெட்ப, விவசாய சூழல்களைப் பொருத்ததே. சைவம், அசைவம் புனிதம், புனிதமற்றது, புண்ணியம் , பாவம் என்பதைவிட அவற்றின் மறு உற்பத்திகள் பாதிக்காத அளவுக்கு அவற்றை மனிதன் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை மட்டும் கருத்தில் கொள்கிறேன், அந்த விதத்தில் உணவுக்காக விலங்குகள் படைக்கப்பட்டதாகக் கூறி அவற்றை முற்றிலும் அழித்து திண்பதை நான் ஏற்பது இல்லை. உயிரினங்கள் பல முற்றிலும் அழிந்ததன் காரணமே அவற்றின் மறு உற்பத்தியை கணக்கில் கொள்ளாது அவற்றை மனிதர்கள் தின்று தீர்ததே. உணவு சுழற்சி அடிப்படையில் இயற்கையிலேயே ஒன்றை ஒன்று அடித்து திண்ண வேண்டும் என்பது விதி என்றாலும் கூட பயிரிட தெரிந்த மனிதன் விலங்கு உணவை மட்டும் சார்ந்திருக்கத் தேவை இல்லை என்பதுடன் விலங்களைப் பாதுக்காக்கும் பொறுப்பும் உள்ளது என்றே நான் கருதுகிறேன். மற்றபடி விலங்குகளை உண்ணுவது பாவம் என்று யாரேனும் போதித்தால் 'இயற்கை மற்றும் உணவு சுழற்சி பற்றிய எந்த ஒரு அறிவும் இல்லாதவர்' என்று கருதுவேன். இயற்கை தாவர உணவு வகைகளை பெருக்க வைக்கிறோம் என்று கூறி அறிவியல் முறையில் இரசாயணம் கலந்த வீரிய வகைகளை அறிமுகப்படுத்தி வழமையான இயற்கை உணவுகளை அழிப்பதும் கூட மனிதன் தனக்கு தானே வைத்துக் கொள்ளும் தீ தான் என்பதாக பலரும் பேசுகிறார்கள்.

கதைப்படி கண்ணப்பனுக்கு என்ன கிடைத்ததோ அதைத்தான் படைத்தான், கண்ணப்பனுக்கு கிடைத்தது பன்றி மாமிசம் மட்டும் தான். காட்டுவாசியான கண்ணப்பன் பன்றிக்கறிக்கு பதிலாக பாம்புக்கறி / நரிக்கறி / பூனைக்கறி படைத்திருந்தால் பாம்பு மாமிசம் பற்றி விரிவான பதிவை ஹிந்து இணையத்தளம் எழுதி இருக்குமா ? பன்றி கிருஷ்ண அவதாரத்தில் ஒரு (வராக) அவதாரம் தானே, நாயை பைரவனாகவும், யானையை பிள்ளையாராகவும் பார்க்கின்றனர் ஹிந்துக்கள். அப்படி என்றால் பன்றி இறைச்சி ? பன்றியை இறைச்சிக்காகக் கொன்றால் பாவம் இல்லையா ?

பசுமாடுகளிடம் இருந்து பாலை ஒட்ட ஒட்ட கறந்து பசு கிழடு ஆனதும் அதையும் அடிமாட்டுக்காரனிடம் விற்றுவிட, வாங்கியவன் அந்த பசுமாட்டைக் கொன்றால் கொல்லுபவன் பாபம் செய்கிறானாம். குலதெய்வத்திற்கு ஆடுகோழி பலி இட தடைவிதிக்க தூண்டுதலாக இருந்தவர்கள் தான் இன்று பன்றி இறைச்சியை பதமாக சமைப்பது பற்றி எழுதுகிறார்கள்.

எலி ஏரோப்ளேன் ஓட்டிய கதையாகத்தான் இருக்கு. பன்றி மாமிசம் குறித்து எழுதியுள்ள இணைய தளம் அதைப் அவர்கள் 'பிராமணர்கள்' என்று அழைத்துக் குறிப்பிடும் பார்பனர்களுக்கும் பரிந்துரைத்தால் நான் இதை இங்கே எழுதி இருக்கவே மாட்டேன்.

பார்பனர்களைப் தொடர்ந்து பாராட்டும் முதல்வர் !

ஒருகாலத்தில் பார்பனர்களின் 'தீண்டத்தகாத கட்சி' என்று அவர்களுக்குள் விமர்சனம் செய்யப்பட்ட திமுகவிற்கு எஸ்வீசேகர் உட்பட பல பார்பனர்களின் நேரடி ஆதரவும், 'ஷோ' இராமசாமி போன்ற பார்பனர்களின் மறைமுக ஆதரவும் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்கிறது. காரணம் எம்ஜிஆருக்கு பிறகான ஜெ தலைமை அதிமுகவில் தலைமைத் தவிர்த்து தேவர் சாதியின் பிடி அதிமுகவில் இறுகி உள்ளதாலும், பார்பனர்களின் இராஜ குருவான ஜெயேந்திர சரஸ்வதியை கைது செய்ததாலும் பார்பனர்கள் அதிமுக ஆதரவை விலக்கிக் கொண்டனர், தமிழகத்தைப் பொறுத்த அளவில் அதிமுக திமுக தவிர்த்து பிறக்கட்சிகளுக்கு பெரிய செல்வாக்கு கிடையாது என்பதால் பார்பனர்களின் இருக்கும் இரு வாய்ப்புகளுக்குள் கடந்த பத்தாண்டுகளில் திமுக ஆதரவு என்பதாக தொடர்கிறது. கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட தேசிய கட்சிகள் அனைத்தும் பார்பனர்களின் வழிகாட்டுதலில் அல்லது தலைமையில் இயங்குகின்றன என்பது அனைவரும் அறிந்தவை தான். தமிழகத்தில் பார்பனர்கள் நுழைய முடியாத ஒரே கட்சி திக மட்டுமே, பெரியாருக்கு பிறகான திகவின் ஒரே கொள்கையும் பார்பன எதிர்ப்பு என்பதால் அந்த நிலை நீடிக்கிறது என்றாலும் கூட தேர்தலில் நிற்காத ஒரே கட்சி என்பதால் திகவின் பார்பன எதிர்ப்பு அல்லது பார்பனர்களின் திக எதிர்ப்பு நிலையில் மாற்றங்கள் ஏற்படவில்லை. கட்சியில் இருக்கும் மந்திரிகளின் ஊழல் மற்றும் தவறுகளை சுட்டிக்காட்டும் போது மட்டும் தமது கட்சி திராவிடக் கட்சி என்பதை அவ்வப்போது நினைவு படுத்திக் கொள்ளும் கருணாநிதி 'பார்பன சதி', 'தாழ்த்தப்பட்டவர்கள் மீதான வெறுப்பு' துவேசம்', 'காழ்புணர்வு' என்பதாக கிளப்பிவிட்டுவிட்டு மறந்துவிடுவார்.

*****

அண்மையில் ஒய்ஜிமகேந்திரனுக்கு பாராட்டுவிழா நடந்தது, 50 ஆண்டுகளாக நாடகத் துரையில் கலைப்பணிகளுக்காக எடுக்கப்பட்ட விழாவாம், கருணாநிதி கலந்து கொண்டு வாழ்த்தினார், கருணாநிதி கலந்து கொண்டதால் அரசு சார்பு விழா போன்ற தோற்றம் ஏற்பட்டது, மற்றபடி அது அரசு சார்பு விழா அல்ல. நாடகத்துறையில் கிரேசிமோகன், மெளலி மற்றும் விசு போன்ற பார்பனர்கள் இருக்க, அவர்களை விட மகேந்திரன் என்ன சாதனை செய்தார் என்றே தெரியவில்லை.

அடுத்து 5600 முறை நாடகம் போட்ட எஸ்வீசேகரைப் பாராட்டுகிறாராம் கருணாநிதி, எஸ்வீசேகருக்கு வயது 60 என்று வைத்துக் கொண்டாலும், 20 வயதில் இருந்து 40 ஆண்டுகளாக (14600 நாட்கள்) நாடகம் போடுகிறார் என்று வைத்துக் கொண்டாலும் கூட இரண்டரை நாள்களுக்கு ஒரு நாடகம் என்ற கணக்கில் வருகிறது. எஸ்வீசேகர் நாடகம் இரண்டரை நாட்களுக்கு ஒரு முறை கடந்த 10 ஆண்டுகளில் எங்கும் நடந்தது போல் தெரியவில்லை. ஆண்டுக்கு 50 தடவை என்றாலும் பத்தாண்டுகளில் 500 முறையும் அதற்கு முன்பு அடிக்கடி அதாவது ஆண்டுக்கு 100 முறை என்றாலும் கூட 1000 முறைகள் ஆக மொத்தம் 1500 முறை, ஒரு நாள் நாடக நிகழ்வு என்பது இரு காட்சிகள் என்று வைத்துக் கொண்டாலும் கூட 3000 நாடக காட்சிகள் தான் வரும். அதற்கு கிட்டதட்ட இருமடங்கு அதாவது 5600 முறை என்ற எண்ணிக்கையில் நடத்தியதாக விக்கிப்பீடியா உட்பட செய்திகளில் கொடுத்திருக்கிறார்கள், இவர்களின் எண்ணிக்கை தகவல் எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. எண்ணிக்கையை விட்டுப் பார்த்தாலும் எஸ்வீசேகர் நாடகங்கள் நகைச்சுவை என்ற பெயரில் கிராமத்தினரின் பெயர்களையும் அவர்களின் வாழ்க்கைமுறையையும் கிண்டல் செய்தே பெயர்வாங்கியவை தான். இது பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன். நகைச்சுவை என்ற பெயரில் பலவீனமானவர்களை விமர்செய்யும் பாணியிலான பணியைத்தான் 5600 முறை செய்திருக்கிறார். 5600 முறைகளிலான எண்ணிக்கை என்பது தாழ்த்தப்பட்டவர்களை விளிம்பு நிலை மனிதர்களை கிண்டல் செய்த எண்ணிக்கை. இதற்கு பாராட்டுவிழாவாம், இதில் கலந்து கொண்டு 'தமிழர்களின் ஒரே தலைவரான' கருணாநிதி வாழ்த்துகிறாராம்.

வலையுலகில் 'மாட்டிக் கொள்ளாமல் உடலுறவு கொள்வது எப்படி ?' மற்றும் '80 வயது கிழவி கூட விடுதலைப் புலிதலைவரின் தாய் என்பதால் திருப்பி அனுப்பவது ஞாயம் தான்' என்பதாகவும், 'ஷோ' இராமசாமியின் தேடலான 'எங்கே பிராமணன் ?' குறித்தெல்லாம் 1000 பதிவுகளுக்கு மேலாக எழுதிவரும் வலைப்பதிவின் டெண்டுல்கர் என்று லக்கிலுக் யுவகிருஷ்ணாவால் சிறப்பிக்கப்பெற்ற நம்ம டோண்டு இராகவன் சாருக்கு திமுக அனுதாபியான லக்கிலுக் '1000 பதிவுகள் கண்ட டோண்டு இராகவன் வடகலை ஐயங்கார் அவர்களுக்கு பாராட்டு' என பாராட்டு விழா ஏற்பாடு செய்தாலும் கருணாநிதி கலந்து கொள்வார். வலையுலகிற்கும் பெருமை :)

(டோண்டு சார், மன்னிக்கவும், 'நீங்கள் என்ன எழுதினீர்கள்?' என்று நினைத்தால் உடனடியாக பலருக்கும் நினைவுக்கு வருபவை அவைகள் தான் என்பதால் அவற்றைக் குறிப்பிட்டேன்)

7 மே, 2010

சேவல்காரன் கதை வெளியாகியது !

படத்தின் கதை(?) முன்னமே வெளியாகுவது பிரபல இயக்குனர்களுக்கு நடிகர்களுக்கு பிடிக்காது, இருந்தாலும் கஜய் படத்தின் கதைகள்(?) பெரும்பாலும் மாறுவதில்லை என்பதால் நடிகர் கஜய் கதைவெளியாகுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

கஜயின் தந்தை கஜயை எப்படியும் தமிழக முதல்வர் ஆக்குவது அதன் பிறகு இந்திய பிரதமர் ஆக்கி இந்திய இளைஞர்களுக்கு நல்வாழ்வு அமைத்து தரவேண்டும் என்று சபதம் எடுத்து கஜயை பின்னால் இருந்து இயக்கிவருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

கஜய் நகரத்து இளைஞனாக வேசம் கட்டினால் தமிழக கிராமங்கள் வரையிலும் கஜயின் புகழ்பரவாது என்று உணர்ந்து எம்சிஆர் மற்றும் கஜினி பானியில் மீனவ கூட்டாளி, திரட்டு காளை என்பது போன்ற கிராமத்து பாத்திரங்களாக கஜய்க்கு தேர்வு செய்கிறார். சேவல்காரன் படத்தில் கஜய்க்கு ஆட்டோ ஓட்டுனர் ரோலாம். சேவலுக்கும் ஆட்டோவுக்கும் என்ன தொடர்போ என்று நினைப்பவர்கள் திரையிடும் நாள் வரை காத்திருக்கத் தேவையில்லை.

படத்தின் ஓப்பனிங்க் காட்சியில் தனது கிராமத்து நண்பர்களுடன் கஜய் விசிலடித்தபடி பெரும் கூட்டத்தில் நின்று கொண்டு இருக்க அங்கே ... கஜய் வளர்க்கும் சண்டை சேவலுக்கும் வில்லன் குரூப் சண்டை சேவலுக்கும் கடுமையான சேவல் சண்டை போட்டி நடக்கிறது. அந்த சமயத்தில் வில்லன் குரூப் ஆளுங்க ஒரு பெட்டைக் கோழியை தூக்கி சண்டை நடக்கும் இடத்தில் வீச, அதைப் பார்த்த கஜயின் சேவல் தடுமாற வில்லனின் சண்டைக் கோழியின் கால்களில் கட்டியிருந்த கத்தி கஜயின் சேவலை பதம் பார்த்துவிடுகிறது, இதைக் கண்ட கஜய் சுட்டெரிக்கும் விழிகளுடன் ஆவேசம் அடைகிறார். சுதாரித்து கொண்ட கஜய்சேவல் மீண்டும் பாய்ந்து சண்டையிடும் முன் பாய்ந்து அதனை பிடித்து கக்கத்தில் வைத்துக் கொண்டே வில்லன் கும்பலை பிரட்டி எடுக்கிறார். சண்டையெல்லாம் முடிந்த ஒரு குத்துப்பாட்டு, அது முடிந்த பிறகு கஜய் சேவலைத் தேட அந்த சேவல் இன்னொரு பெட்டைக் கோழியை துறத்திக் கொண்டு இருந்தது, பெட்டைக் கோழி ஒரு வீட்டுக்குள் நுழைய அங்கே அழகான பெண் (காமன்னாவோ, கனுஷாவோ) துறத்தி வரும் சேவலை துறத்துகிறார். அங்கே சொக்கிப் போய் நின்றிருந்த கஜய் சுதாரித்துக் கொண்டு வம்பிலுக்க முயன்று கொண்டிருக்க, அங்கே சேவலும் கோழியும் ராசி ஆகிவிடுகின்றன, அதைப் பார்த்த கஜயும் நாயகியும் ஒருவருக்கொருவர் வெட்கப்பட பத்திக் கொள்கிறது காதல், இந்த காட்சிக்கு பிறகு நீயுசியில் கிராமத்து செட்டுப் போட்ட பாடலில் கஜயும் நாயகியும் இருபது துணை நடிகர், நடிகைகள் ஆடுகிறார்கள்.

காட்சி முடிந்து சேவல் சூதாட்டக்காரனுக்கு எங்கப்பா பொண்ணு கொடுக்கமாட்டார் என்று நாயகி சொல்ல, அது சைடு எனக்கு மெயின் பிஸ்னஸ் ஆட்டோ ஓட்டுவது தான் நான் ஒரு ஆட்டோகாரன் என்கிறார் கஜய். இதற்கிடையே ஆட்டோக்களை வாடகைக்கு விட்டு பிழைப்பு நடத்தி வரும் வில்லன் ஆட்டோ ஓட்டுனர்களை மிரட்டி அவர்கள் மூலமாக போதைப் பொருள் கடத்துகிறான். இதில் ஒரு ஆட்டோ ஒட்டுனர் சிக்கி 10 ஆண்டு கடும் காவல் தண்டனை பெறவே, அவனுடைய குடும்பம் மொத்தமாக தற்கொலைக்கு தயாராகும் அந்த நிமிடத்தில் கஜய் அங்குவர, ஆட்டோ ஓட்டுனரின் மொத்த குடும்பமும் ஆட்டோ ஓட்டுனர்கள் எவ்வாறு மிரட்டப்படுகிறார்கள், சூடுவச்ச மீட்டரோடு ஓட்டச் சொல்கிறார்கள், வசூல் எல்லாத்தையும் ரவுடிகளை வச்சு மிரட்டி வாங்கிக் கொள்கிறார்கள் அவர்களுக்கான நாள் கூலி கூட சரியாகக் கிடைக்கவில்லை, போதை பொருள் கடத்த வைக்கிறார்கள், கஞ்சா விற்கச் சொல்கிறார்கள், எல்லாவற்றிற்கும் மேலாக பெண்களையும் கடத்தி வந்து வில்லன் கும்பலுக்கு கொடுக்கச் சொல்கிறார்கள், இதைச் செய்யாத ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஆட்டோ கிடைக்காது, குடும்பம் பட்டினியாக இருக்கவேண்டும். இப்படியான சிக்கலில் மாட்டிக் கொண்ட ஒருவர் தான் பத்தாண்டு கடும்காவல் பெற்றிருக்கிறார். வில்லன் குருப் ஆட்டோ திருடு போய்விட்டது என்று கூறி ஆட்டோவை மீட்டுவிட்டு இப்பொழுது வேறொரு ஓட்டுனர் கொடுத்துவிடுகிறது, அவர் என்னிக்கு மாட்டுவாரோ, எங்க குடும்பம் போல் அவங்க குடும்பமும் என்னிக்கு நடுத்தெருவுக்கு வருதோ, இதையெல்லாம் ஆண்டவன் தடுக்கல, ஆண்டவனுக்கு நாங்க சாகுறதிலேயும் விருப்பம் என்று விசம் கலந்த கோகோ கோலாவை பருக துவங்க, நரம்பு முறுக்கேறிய கஜய் அதனை தட்டிவிட்டு 'உங்களை மட்டும் இல்லை, இங்க உள்ள எல்லா ஆட்டோகாரர்களையும் நானே காப்பாற்றுகிறேன் என்று கிளம்புகிறார். அப்போது 'சிறுத்தை வரான் சிறுத்தைவாரன் உன் சிரத்தை அறுக்க சிறுத்தைவரான்...' என்ற பாடல் தூள்கிளப்புகிறது.

'நான் கையை ஓங்க மாட்டேன்.....அப்படி ஓங்கிட்டா நீ தாங்கமாட்டே' ஒவ்வொரு முறை சண்டைக்காட்சிக்கும முன் பேசும் இந்த பஞ்ச் வசனம் திரையரங்குகளில் விசில் பறக்க வைக்கும் என்று இப்பொழுதே பேசிக் கொள்ளப்படுகிறது

ஆட்டோவை வாடகைக்கு விட்டு சமூகத்தை சீரழிக்கும் வில்லனை கஜய் எப்படி வென்றார் என்பதுடன் நாயகியுடன் ஆடும் இன்னும் இரு பாடல்களையும் சேர்த்து வெள்ளி திரையில் பார்க்கவும். கேவிஎம் புரடெக்சன் என்று பெயர் போட்டு தயாரிக்கப்பட்ட இந்தப் படம் ஒவ்வொரு நாள் படப்பிடிப்புக்கும் சேவல் கறி பிரியாணி போட்டு போண்டியானதால், பன் டிவி நிர்வாகம் மொத்தமாக வாங்கிக் கொள்ள பன் லேபிளில் இந்தப்படம் வெளியிடப்படுகிறது.

5 மே, 2010

கலவை 05/மே/2010 !

போலி(ஸ்) தகவல்: இன்னிக்கு இணைய செய்தியில் தமிழ் நாட்டில் இருவேறு இடங்களில் போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டதான தகவலைப் படித்தேன். போலி மருந்து தொடர்பான நடவடிக்கைகளின் போது உபரியாக இவர்களும் சிக்கி இருக்க வேண்டும், மக்கள் வசிக்கும் இடத்தில் எவர் வேண்டுமானாலும் சிகிச்சை மையம் தொடங்கலாம் என்னும் நிலை இருப்பதைத்தான் இவை உணர்த்துகின்றன. பொது இடத்தில் வெளிப்படையாக கஞ்சாவிற்பதை அரசு காவலர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பார்களா ? மக்கள் உயிருடன் தொடர்புடைய சிகிச்சை மையங்கள் புதிதாகத் தொடங்கப்படும் போது காவலர்கள் கண்டும் காணாமல் இருந்துவிட்டு திடிரென்று ஒரு நாள் கைது செய்வதாக அறிவிப்பதெல்லாம் நாங்களும் செயல்படுகிறோம் என்பதைக் காட்டும் வித்தையே. மாவட்ட மருத்துவ கவுன்சில் அனுமதி இல்லாமல் எந்த ஒரு கிளினிக்கும் புதிதாக துவங்க முடியாது என்ற நிலை இருந்து, அவ்வாறு அனுமதி அளிக்கப்பட்ட மருத்துவ மையங்களின் பட்டியல் உள்ளூர் காவல் நிலையங்களில் கொடுக்கப்பட்டு தொடர்ச்சியாக அவர்களால் கண்காணிக்கப்பட்டால் போலி மருத்துவர்களோ, மருத்துவ மனைகளோ உருவாகாது. விபத்துகளைவிட புற்று நோய் மோசமானது, வெளிப்படையான தீவிரவாதங்களை விட போலி அமைப்புகள் மோசமானவை. போலி துணை கண்காணிப்பாளர்கள் (எஸ்ஐ) என காவல்துறையின் கண்ணில் மண்ணை ஏற்கனவே அள்ளிப் போட்டுவிட்டதால் இவர்களின் பார்வைகள் சரிவர இயங்கவில்லை என்று தான் நினைக்க வேண்டி இருக்கிறது.

தேனீ உமர் : உலக தமிழ் மாநாட்டில் தேனீ உமருக்கான அங்கீகாரம் வேண்டும் என்ற தலைப்பில் வரும் பதிவுகளைப் பார்த்தால் அவற்றில் பெரும்பாலும் இஸ்லாமிய பதிவர்களின் பெயர்களின் தான் வருகின்றன. தமிழ் மணமும் உமரை நினைவு கூர்ந்து முகப்பில் அவரது படத்தை வைத்து, இணைப்புக் கொடுத்துள்ளது பாராட்டத்தக்கது. தமிழுக்காக பாடுபட்டு மறைந்த ஒருவரை அந்தந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் தான் நினைவு கூற முடியும் என்கிற ஒரு மத அடிப்படையிலான நிலைக்கு நாம் சென்று கொண்டிருக்கிறோம் என்று நினைக்க தமிழன் என்ற அடையாளம் போலியானதா என்று நினைக்கத் தோன்றுகிறது. தேனீ 'உமர்' என்கிற பெயரில் 'உமர்' - க்கு பதிலாக ஒரு இந்து பெயர் இருந்திருந்தால் அவருக்கான அங்கீகாரம் ஏற்கனவே கிடைத்திருக்கும் அளவுக்கு எடுத்துச் சென்றிருப்போமோ ? மத அடிப்படையில் பிரிந்து கிடக்கும் நம்மால் ஒன்றுபட்டு ஒருவரின் சாதனைகளைக் கூட எடுத்துச் சொல்ல முடியவில்லை என்று நினைக்கும் போது நாமெல்லாம் தமிழன் என்று எதை வைத்து பெருமைப்படுகிறோம் என்றே தெரியவில்லை. தேனீ உமர் பற்றி அறிந்து கொள்ள
சுட்டி 1, சுட்டி 2

கசாப் கசாப் : குற்றம் செய்தது உறுதி என்று நிரூபனம் செய்யப்பட்டதாம், தண்டனை ஒரு சில நாளில் அறிவிப்பார்கள் என்று படித்தேன். கசாப்பை பாதுக்காத்து விசாரணை செய்ய 10 கோடிக்கு மேல் பொது மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு இருக்கிறது. அந்த பணத்தை அந்த குறிப்பிட சம்பவத்தில் இறந்த பாதுகாப்பு வீரர்கள் உட்பட பொது மக்களுக்கு வழங்கி இருந்தால் 100 பேருக்கு தலா 10 லட்சம் ரூபாய் கொடுத்து இருக்க முடியும். நான் மரண தண்டனை கூடாது என்கிற கருத்து உடையவன். இறந்த ஒருவரை எழுப்ப முடியாத நமக்கு ஒரு உயிரை நசுக்கும் உரிமை அரசாங்கம் உட்பட யாருக்குமே கிடையாது என்று நம்புகிறேன். இப்போதைய மும்பை மக்களின் மனநிலையைப் பொருத்த அளவில் கசாப்பைப் அனைத்துலக இஸ்லாமிய சட்டப்படி பொது இடத்தில் நிறுத்தி கல்லால் அடித்து கொல்லுதல் என்ற அறிவிப்பு இட்டால் பெரிய அளவில் கூட்டம் கூடும். இருந்தாலும் காசப்புக்கான தண்டனை அம்புக்கு கிடைக்கும் தண்டனைதான் எய்தவர்கள் தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகள் உட்பட பாகிஸ்தானில் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.

இலவச அல்வா : இலவசமாக நாங்க எல்லாத்தையும் தருகிறோம், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறோம் என்று கூறித்தான் திமுக ஆட்சிக்கட்டிலில் ஏறியது, அதன் படி கோடிக்கணக்கில் 14" வண்ணத் தொலைக்காட்சிகள் வழங்கப்பட்டன, இலவச தொலைகாட்சி சரி, அதற்கு இணைப்பு ? அரசே கேபிள் நிறுவனம் நடத்துவதாகக் கூறியது, அதன் படி துவங்கப்பட்டது. இப்போது நட்டத்தில் ஓடுகிறதாம்.

வாங்கிய தொலைகாட்சிப் பெட்டிகளின் அரிசி கொட்டிவைக்கவும் முடியாது, பார்த்து பழக்கப்பட்டவர்கள் எப்படியேனும் கேபிள் இணைப்பு பெற்றால் தான் பார்க்க முடியும் என்கிற நிலை. அதற்கான தனியார் மாதக்கட்டணம் 75லிருந்து 100 வரை. பெரும்பாலும் கேபிள் நிறுவனங்களை நடத்துவது யார் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஒரு தொலைகாட்சி இணைப்புக்கு மாதம் 75 ரூ என்றாலும் ஒரு கோடி இணைப்புக்கு மாதம் கிடைப்பது 75 கோடி ரூபாய், ஆண்டுக்கு 75 x 12 = 900 கோடி. இந்த வருமானத்தை அரசு சார்பில் கேபிள் நடத்தினால் தனியாருக்கு கிடைக்குமா ? அரசு கேபிள் திட்டம் மூடப்படுவதற்கு நட்டம் ஒன்றே காரணம் என்றால் மக்கள் இலவசமாக வாங்கிய தொலைகாட்சிகளை தெருவில் தூக்கிப் போட்டு எதிர்ப்பு காட்டினால் தான், அடுத்த முறை இலவசம் என்கிற பெயரில் அரசியல்வாதிகள் பகல் இரவு கொள்ளையை தொடரமாட்டார்கள்.

அரசு சார்பில் என ஒரு இலவசத்திட்டதை துவங்கி தனது குடும்பத்தின் வருமானத்திற்கான முதலீடுகளாக மாற்றும் திறமை எந்த ஒரு மாநில முதல்வருக்கும் இல்லை. நாம் பெருமைப்படலாம்.

இலவசம் என்று எதையும் பெறாத நடுத்தர மக்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் வரி கட்ட, அந்த பணம் அரசின் இலவச திட்டம் என்ற பெயரில் சொந்த நலனுக்கான மறு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. தட்டிக் கேட்கவேண்டிய எதிர்கட்சிகளுக்கும் இதில் பங்கு இருக்கிறதோ.......நாம யோசிக்கும் அளவுக்கு அவங்க யோசிக்கமாட்டார்களா ?

விஞ்ஞான முறை ஊழலாமே - அப்படி என்றால் என்ன ?

3 மே, 2010

*வைரஸ்* - தமிழ் ஓவியா வலைத் தளத்திற்கு யாரும் செல்ல வேண்டாம் !

திக தலைவர் கி.வீரமணி அவர்களின் புகழ்பாடும் பதிவர் திரு தமிழ் ஓவியாவின் வலைதளத்தில் வைரஸ் புகுந்துள்ளது. அந்த வலைதளத்திற்கு செல்லுவோர்களை வைரஸ் தாக்கக் கூடும், ஜெயமோகன் வலைத்தளத்தில் இருந்தது போன்ற அதே வைரஸ்.

* தமிழ் ஓவியாவின் வலைதளம் கூகுள் ப்ளாக் ஸ்பாட் என்றாலும் இணைத்திருக்கும் ஏதேனும் ஒரு பாடாவதி விட்ஜெட் வைரஸ் வழங்கும் சேவையையும் சேர்த்தே வழங்குகிறது என்று நினைக்கிறேன்.

* தமிழ் ஓவியா தேவையில்லாத விட்ஜெட்டுகளை நீக்கினால் வைரஸ் சரியாகிவிடும்

* தமிழ் ஓவியாவின் தளத்தை ஆண்டவனே (சிவனோ, விஷ்னுவோ, அல்லாவோ, ஜீஸஸோ அல்லது சோ இராமசாமியோ, நித்யானந்தமோ) தண்டித்துவிட்டார்கள் என்போர்களின் வலைதளம் கூட ஒருநாள் தேவையற்ற விட்ஜட்டுகளினால் பாதிக்கப்படலாம்.

* வைரஸ் பிரச்சனை சரியாகிவிட்டது என்று தமிழ் ஓவியா அறிவிப்பு வெளியிடும் வரை யாரும் செல்லாதீர்கள், அதையும் மீறி படிக்க ஆவல் கொண்டால் நேரடியாக விடுதலை இணையத்தளத்திற்கு சென்று படிக்கலாம். அண்ணன் தமிழ் ஓவியா விடுதலையில் இருந்து எடுத்து தான் 90 விழுக்காடு இடுகைகள் போடுகிறார்

1 மே, 2010

சுறா - வுல எல்லாமே இருக்கு !

கடந்த 10 ஆண்டுகளில் வந்த விஜய் படங்களில் 80 விழுக்காடு படங்களைப் பார்த்திருப்பேன். விஜய்படங்களுக்கு திரையரங்கில் கூட்டம் அள்ளுது, குருவி படத்தை பினாங்கில் பார்த்த போதும் அங்கு அலைமோதிய கூட்டம் (லோக்கல் மலேசிய மக்கள்) விஜய் தனக்கான ரசிகர் பட்டாளத்தை கட்டியமைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் என்று தான் தெரிந்தது, குருவிக்கு பிறகு வந்த நான்கு திரைப்படங்களுக்கும் முதல் நாள், முதல் வார இறுதிகளில் திரையரங்கில் கூட்டம் அலைமோதியது. விஜய் படங்கள் வெற்றியா தோல்வியா என்பதைவிட எப்போதும் விஜய் படங்களை எதிர்பார்த்து பெரிய கூட்டம் திரையரங்கிற்கு வருகிறது என்பது உண்மை. அவர்களில் யாரும் விஜய் படங்கள் மாபெரும் வெற்றிபெரும் என்று எதிர்பார்ப்பதில்லை என்பதை அவர்களின் தொடர்சியான வருகை சொல்லிவிடுகிறது.

இதனால் தான் என்னவோ விஜய் பாணி படங்களை மட்டுமே விஜய் செய்ய முடிவு செய்து இருக்கிறார், என்று தெரிகிறது. நான்கு சண்டைகள், நான்கு பாடல்கள், அதில் இரண்டு குத்து பாட்டு, அரசியல் தனமான வில்லன், அவனை எதிர்க்கும் விஜய் இவைதான் விஜய்படங்களின் கதையாக இருக்கிறது. சுறா படத்தில் மீனவ இளைஞன் சுறாவாக வருகிறார், வழக்கம் போல் மீனவர்கள் குடியிருக்கும் புறம்போக்கு நிலத்தை தீம் பார்க் கட்ட குறிவைக்கும் வில்லனுடன் மோதி தன்னைச் சார்ந்த மீனவர்களுக்கு காங்கிரீட் வீடு கட்டித்தருகிறார். சைட் டிஸ் போல கவர்ச்சிக்கு அப்போதைக்கு சரியான மார்கெட் உள்ள ஒரு நடிகை, இதில் தங்கத்தாரகை என்று ரசிகர்களால் விசில் அடிக்கப்படும் தமன்னா. படத்தின் நகைச்சுவைக்காக வடிவேலு. வெண்ணிறாடை மூர்த்தியை ரசிக்க பெரும் கூட்டம் இருக்கிறது என்பதை அவர் வரும் ஒரு காட்சியில் விசிலடித்து மகிழ்ச்சியை தெரிவித்தனர் பலர். பழம்பெரும் நடிகர்களில் எஞ்சி இருப்பவர் வெண்ணிறாடை மூர்த்தி, அவரின் வசனங்கள் இருபொருள் கொண்டது என்ற விமர்சனம் இருந்தாலும், தெருக் கூத்துகளில் அதுபோலவே கேட்டுப் பழக்கப்பட்டதால் வெண்ணிறாடை மூர்த்தி வசனங்களை பலரும் உள்ளுக்குளாவது ரசிக்கவே செய்கின்றனர். இந்த வயசிலேயும் பிட்டு ரோலாக இருந்தாலும் பட்டுன்னு நடிச்சு கொடுத்து சும்மா மனுசன் அசத்தி இருக்கிறார்.

விஜய்படம் கலைப்படம் என்று விளம்பரப்படுத்தப்படுவதில்லை. பொழுது போக்குபடம் தான். சினிமாவுக்கு போவது பொழுது போக்குக்குத்தான் என நினைக்கும் ரசிக மனநிலையை விஜய் படங்கள் பூர்த்தி செய்கின்றன. அதுக்கு மேல எதுவும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. எனக்கு படத்தில் இடைவேளை எப்போ வரும் என்ற அயற்சி மிஞ்சியது, அதன் பிறகு விறுவிறுப்பாக படம் சென்றது. மீனவர்கள், (ரிக்ஷா காரர்கள்) ஆட்டோகாரர்கள் என்று அடையாளப்படுத்தும் அளவுக்கு உள்ள பெரும் திரளான கடைநிலை வாழ்க்கை வாழும் திரைப்பட ரசிகர்களை குறி(த்து)வைத்து படம் செய்த எம்ஜிஆர், ரஜினி இவர்களின் வரிசையில் விஜய் பயணிக்கிறார். எம்ஜிஆர், ரஜினி அப்படியான படம் செய்யும் போது இவர் செய்யக் கூடாதா ?

படத்தைப் பார்த்துவிட்டு விஜயை திட்டுகிறவர்கள் எம்ஜிஆர், ரஜினியை கூட திட்டலாம், ஏனெனில் அவர்களும் அவர்களின் ரசிகர்களுக்காக அவர்கள் பாணி படங்களைத்தான் எடுத்தார்கள். விஜய்படத்திற்கு என்ன எதிர்ப்பார்ப்பு வைத்துச் செல்கிறோமோ அது இந்த படத்தில் இருக்கிறது. விஜய் ரசிகர்களுக்கான மற்றொரு படம் சுறா.... நன்றாக கவனித்தேன் படம் பார்த்து விட்டு வெளியே வந்தவர்கள் வரும் போது எதிர்மறையாக விமர்சனம் செய்து முனுகியது போல் தெரியவில்லை. வெளியீடு ஆகி இரண்டாம் நாள் என்பதால் படத்தின் பார்வையாளர்கள் 90 விழுக்காடு விஜய்ரசிகர்கள் தான். நான் விஜய் ரசிகன் இல்லை, இருந்தாலும் விஜய் படம் இப்படித்தான் இருக்கும் என்று நினைத்தே சென்றேன். படம் ஏமாற்றவில்லை.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்