பின்பற்றுபவர்கள்

17 ஆகஸ்ட், 2006

அறிவுரையும் அக்கரையும் !

இரண்டும் ஒன்றுபோல் பொருள் தந்தாலும். புரிந்துகொள்ளுதல் என்ற நிலையில் பொருள் மாறுபடுகிறது. அறிவுரை சொல்வது அல்வா சாப்பிடுவது போல் எல்லோருக்கும் எளிது. தம் மேதாவித்தனத்தை காட்டுவதற்கே அறிவுரையை பெரும்பாலோர் கையில் எடுக்கின்றனர். இரு காதுடன் யாராவது வாய் பேசாதவர்கள் எக்கு தப்பாக மாட்டிவிட்டால் போதும், 'இந்த பிடி அட்வைஸ்' என்று நம் முழுத்திறமையையும் கேட்பவர் காது இரத்தம் வழியும் வரை நாம் விடுவதில்லை.

சரி அறிவுரை எங்கு செல்லுபடியாகிறது. நம்மை யாராவது மதித்தால், அப்படி நம்மை மதிப்பவர் விரும்பிக் கேட்டுக் கொண்டால் மட்டுமே அறிவுரை அறிவுரையாக கேட்கப்படும். அப்படி இல்லாமல் வழியே சென்று அறிவுரை சொல்கிற பேர்வழியாக நம்மை நினைத்துக் கொண்டு 'இதை நீ செய்வதைக் காட்டிலும் உருப்படியாக வேறு ஏதாவது செய்' என்று சொன்னால் அது அறிவுரையாகப் பார்க்கப்படுமா ? இல்லவே இல்லை அது அகம்பாவ உரை என்று புறந்தள்ளிவிடுவர். நாம் பிறருக்கு அறிவுரை சொல்லும் முன் நாம்மை முதலில் பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது மற்றவர்கள் அறிவுறுத்தலை நாம் ஏற்றுக் கொள்கிறோமா, அறிவுரை சொல்வதற்கான சூழல் இருக்கிறதா, எல்லாவற்றையும் விட நமக்கு அந்த தகுதி இருக்கிறதா என்று. அப்படி சீர்தூக்கிப் பார்க்காதவர் ஏதோ பொது நல விரும்பி போல் அவதாரம் எடுக்க முயன்றால் அவருக்கு ஏச்சுக்களும் பேச்சுக்களும் மட்டுமே மிஞ்சும்.

அறிவுரை சொல்பவர் ஆசானாக இருக்கவேண்டும், இல்லை என்றால் அனுபவப் பாடம் படித்தவரோ, உணர்ந்தவராக இருக்கவேண்டும், அத்தகையவரை யாராவது இனம் கண்டு 'இந்த பிரச்சனைக்கு என்ன தீர்வு ?' என்று கேட்டால் மட்டுமே அறிவுரை சொல்லலாம். இல்லை என்றால் ஆபத்தில் இவர் சிக்கப் போகிறார், இதனால் இவருக்கு பெரும் துன்பமோ கேடோ நிகழப் போகிறது என்று முன் கூட்டியோ நாம் உணர்ந்திருந்தால் அந்த நபருக்கு அறிவுரை சொல்லலாம். அல்லது இதைச் செய்வதால் நீங்கள் போற்றப்படுவீர்கள் என்று அவரே உணராததை ஒரு வேளை நாம் நன்கு உணர்ந்திருந்தால் அறிவுறுத்தலாம். செல்லுபடியாகாது என்று தெரிந்தே அறிவுரை சொல்லப் போனால் பெரும்பாலும் அவமானமே மிஞ்சும்.

அக்கரைக்கும் அறிவுரைக்கும் நூலிழைதான் வேறுபாடு, இதைச் சரியாகப் புரிந்து கொள்ளாததால் தான் உறவுகளுக்குள் விரிசல் ஏற்படுகிறது. நமக்கு வேண்டியவர்கள் நமக்கு அறிவுரை சொன்னால், உடனே என்ன சொல்லுகிறார் எனக் கவனியாமல், உடனே சொல்பவர் தகுதியை எடை போடக் கூடாது. மாறாக எதற்காக இவர் நமக்கு அறிவுரை சொல்கிறார் என்று பார்க்க வேண்டும். அவ்வாறு பார்க்கும் போது நம்மால் ஒரு விசயத்தை நன்கு புரிந்து கொள்ள முடியும். அதாவது நம் மீது இவர் வைத்துள்ள அன்பின் காரணத்தால் நமக்கு அறிவுரை சொல்கிறார் அது அறிவுரையின் பெயரில் செலுத்தும் அக்கரை. அங்கே அறிவுரை அக்கரையாக பார்க்கப் படாவிட்டால் ஈகோ (ஆணவம்,ஆகம்பாவம்
) தலை தூக்க ஆரம்பித்து யார் அறிவாளி என்ற எதிர்க்கேள்வி ஏற்பட்டு உறவுகள் சீர்கெட ஆரம்பிக்கும்.

ஆகவே நண்பர்களோ, சொந்தங்களோ எதையாவது அறிவுறுத்தினால் நாம் அங்கு பார்க்க வேண்டியது அன்பின் வெளிப்பாட்டில் மறைமுகமாக சொல்லப்படுவது அறிவுரை மட்டின்றி அதையும் தாண்டிய நம் மீதான அக்கரை!

17/ஆகஸ்ட்/2006

16 ஆகஸ்ட், 2006

சர்சைக்குறிய பதிவுகளுக்கு பின்னூட்டம் !

வலைப்பதிவுகளில் குழுக்கள் அதிகமாகிவிட்டதால் புழுக்கம் அதிகமாகிவிட்டது. யாரை எவ்வாறு கவிழ்ப்பது என்ற போட்டியில், எழுத்துச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் மற்றும் இன்னபிற என்ற பெயரில் கல்லரையான அரசியல் தலைவர்கள் பெயர்கள் கூட தோண்டி எடுக்கப்பட்டு சூடான விவாதங்கள் நடைபெறுகின்றன. இதில் தமிழை தமிழிலேயே எழுதி வசைபாடுபவர்கள், சாதி சார்ந்த குழுக்கள், நமீத ரசிகர்மன்றம் இன்னும் எத்தனையோ அடக்கம்.

விவாதங்கள் ஆரோக்கியமானதாக செல்வதும், அறிவுப் பூர்வமாக இருப்பது அவசியம். சில வலைப்பதிவாளர்கள் எழுத்தில் எதிராளிகளே வியக்கும் வண்ணம் அழகாக சுவைபட எழுதுகிறார்கள். எதிராளிகளை தங்களின் நிலைப்பாடுகளினால் உள்ளுக்குள் பாராட்டினாலும் வெளிப்படைய பாராட்டமுடியாமல் பலர் தவிர்கின்றனர். எதிராளிகளின் கட்டுரைகளில் வைக்கப்படும் சில 'பஞ்ச்' நகைச்சுவையாகவோ அல்லது நச் என்றோ இருக்கும். கட்டுரை முழுவதிற்கும் நாம் எதிர்நிலையில் இருந்தாலும் சில 'பஞ்ச்' ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவோ, ரசிக்கக் கூடியதாகவோ இருக்கும்.

எதிர்நிலையில் எழுதுவர் என்பதால் நாம் அவர்களை பாராட்டாமல் இருந்துவிடுவதும் உண்டு. எதிராளி என்பதால் நாம் பாராட்டமுடியாமல் போவதற்குக் காரணம் நாம் ஒரு குழுவை சார்ந்து இருப்பதுதான். 'நம்ம ஆளுங்க இதுக்கு பின்னூட்டம் போட்ட என்ன நெனச்சிக்குவாங்களோ' என்ற ஒரு தவறான நினைப்புதான் தயக்கத்திற்குக் காரணம். குழுக்களில் உறுப்பினர்களுக்குள் அவ்வாறு நினைப்பதும் இயற்க்கை தான். இதையெல்லாம் மீறி நாம் எதிராளிகளை எவ்வாறு பாராட்டுவது ?

கவலையை விடுங்கள். உங்கள் எதிராளி எழுதும் கட்டுரையில் உங்களுக்கு பிடித்த சர்சையில் சிக்காத வரிகளை தனியே எடுத்துப் போடுங்கள். உதாரணத்திற்கு

இதே கட்டுரையில் மேலே கண்டதை எடுத்து இங்கே போட்டுக்காட்டுகிறேன், அதற்கான பின்னூட்டத்தை எப்படி எழுதுவது (ஒரு சாம்பிள்) என்று காட்டுகிறேன்

******************************************
//எழுத்துச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் மற்றும் இன்னபிற என்ற பெயரில் கல்லரையான அரசியல் தலைவர்கள் பெயர்கள் கூட தோண்டி எடுக்கப்பட்டு சூடான விவாதங்கள் நடைபெறுகின்றன //

கோவி.கண்ணன் அவர்களே ! எழுத்து சுதந்திரம் என்ற பெயரில் அமரரான தலைவர்களை இழிவு படுத்துவதை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறீர்கள். ரசித்தேன் ! பாராட்டுக்கள் !!

பின்குறிப்பு : எனது இந்த பின்னூட்டம் மேற்கண்ட வரிகளுக்குதான் ... முழுக்கட்டுரைக்கான கருத்து அல்ல!

******************************************

இப்படி ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டால் எதிராளி முதலில் உங்கள் பாராட்டும் குணத்திற்காக சந்தோசப்பட்டு இணக்கம் ஏற்படும். அதன்மூலம் நல்லதொரு புரிந்துணர்வு வளர வழிசெய்யும். அதே சமயத்தில் உங்கள் குழுவில் இருக்கும் மற்ற உறுப்பினர்களும் நீங்கள் தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதாகக் கூறி உங்களுக்கு அவசர தனிமடலும் அனுப்பமாட்டார்கள். இதை சரியாக நாம் செய்யும் போது போலிப் பதிவர்கள் பக்கத்திற்குக் கூட சென்று நம்மால் பின்னூட்டம் இடமுடியும்

பின்குறிப்பு : வலைப்பதிவாளர்கள் நினைவு கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்று, உங்கள் கட்டுரைக்கு யாராவது பின்னூட்டம் போட்டார்கள் என்றால் அவர்கள் உங்கள் முழுக்கட்டுரையையும் ஆதரிக்கிறார்கள் என்று தவறாக எண்ணி விடாதிர்கள். அது ஒரு தவறான புரிதல்.


எதிராளிகளாக இருந்தால் என்ன ? எதோ ஒரு நல்ல செயலுக்காக நிச்சயம் பாராட்டலாம் !

14 ஆகஸ்ட், 2006

புதிய "தமிழ்மணம்" நிர்வாகத்தினருக்கு வாழ்த்துக்கள்

தமிழ்மண நிர்வாகக் குழுவில் மாற்றம் நடைபெற்று அதன் மூலம்,
ஆகஸ்ட் 13ம் தேதி முதல் "தமிழ்மணம்" தமிழ் மீடியா இண்டர்நேஷனல் நிறுவனத்தால் ஏற்று நடத்தப்படுகிறது என்று தெரியவருகிறது.

தமிழ் மீடியா இண்டர்நேஷனல் - புதிய பொறுப்பாளர்களுக்கு வலை அன்பர்கள் சார்பாக (?) வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதே சமயத்தில் முன்னாள் தமிழ்மணம் நிர்வாகத்திற்கும் பாகுபாடின்றி சிறந்த சேவை வழங்கயதற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் !

12 ஆகஸ்ட், 2006

இஸ்லாம் என்றால் தீவிரவாத மதமா ?

தனிமனிதர்கள், குழுக்கள் ஒரு இழி செயலை செய்தால் பெரும்பாலும் அந்த குழுக்களைச் சார்ந்த மதம் வெளியில் தெரியாது. அந்த குழுக்களின் அல்லது அந்த தனிமனிதனின் செயல் மட்டுமே விமர்சிக்கப்படும் கண்டிக்கப்படும்.


நியூயார்க செப் 11 இரட்டைக் கோபுர தாக்குதல் வரை அப்படித்தான் இருநதது. அதன் பிறகு தீவிரவாதிகள் மீதான பார்வை பெயரை வைத்து மதம் சார்ந்ததாக போதிக்கப்பட்டு, இஸ்லாம் என்ற மதத்தையே இழிவு படுத்தும் செயல் நடந்து வருகிறது. இஸ்லாமைப் பின்பற்றுபவர் அந்த மதத்தில் உள்ள பெயரைத் தானே வைத்திருபார்கள். தீவிரவாதியின் பெயரை மட்டும் பார்த்துவிட்டு அவன் எந்த (கேடுகெட்ட) காரணத்திற்கு செய்கிறான் என்று பார்க்காமல் உடனடியாக இஸ்லாம் மீது புழுதிவாரி தூற்ற ஒரு நல்ல சந்தர்பமாக எதிரிகள் வதந்திகளை கிளப்பிவிட்டு இஸ்லாம் பற்றிய ஒரு தவறான கருத்தை விதைத்து வருகிறார்கள்.

உண்மையான (ஈமான் கொண்ட) முஸ்லிம்களோ ... இறைவேதமாக சொல்லபடுகின்ற திருக்குரானோ தீவிரவாதம் பேசுகிறதா என்று பார்த்தால் அவ்வாறு இல்லை. கீதையைப் போலவே போர்களத்தில் நிற்கும் போது என்ன சிந்திக்க வேண்டுமோ அதை மட்டும் போதிக்கிறது. அவற்றை கவணத்தில் கொள்ளாமல் இஸ்லாம் போரைத் தூண்டுவதாக இஸ்லாம் மார்க்கத்தை தூற்றுபவர்களும், அப்பாவி மக்களின் ஆதரவு கிடைக்கும் என்ற நப்பாசையில் தீவிரவாதிகளும் திருக்குரானை தவறாக புரிந்துகொண்டுள்ளனர்.

கொடுங்கோல் ஆட்சி நடத்திய ஒளரங்கசீப்பை கடைசியில் மனிதன் ஆக்கியது திருக்குரான். வரலாறுகளில் தங்களுக்கு சாதகாமான தனிமனித தவறுகளை மாட்டும் படித்துவிட்டு ஒட்டு மொத்தமாக இஸ்லாம் மார்க்கத்துக்கு எதிராக தங்கள் விசவிதைகளை தொடர்ந்து பலர் விதைத்து வருகின்றனர். இவற்றை பல இஸ்லாமிய சகோதரர்கள் ஞாயமான முறையில் தான் பதிலளித்தும் வருகின்றனர்.

இஸ்லாமிய சகோதரர்கள் யாரும் ஒட்டு மொத்த மாற்று மதத்தினரை மதத்தை குறிப்பிட்டு குறை சொல்வதில்லை. ஆனால் இஸ்லாமிய சகோதரர்களையும், இஸ்லாமையும் ஒட்டுமொத்தமாக தீவிரவாதிகளாக காட்டும் முயற்சி ஒரு சிலரால் தொடர்ந்து நடந்துவருவதும் பலருக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது.

இஸ்லாமியர்கள் தன் மதத்தைச் சேர்ந்தவன் தீவிரவாதி என்றாலும் தயங்காமல் பிடித்துக் கொடுத்துவிடுவார்கள் என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டாக தற்போதைய மாபெரும் தீவிரவாத செயலை காட்டிக் கொடுத்து முறியடிக்கப்பட்டது தெரியவந்திருக்கிறது. அந்த செயல் முறியடிக்கப் பட்டிருக்காவிட்டால், இன்னும் ஒரு செப். 11 நிகழ்வை உலகம் சந்தித்திருக்கும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். பாகிஸ்தான் அரசின் இந்த செயல் மாற்று மதத்தினர் இஸ்லாம் மீது மேலும் நம்பிக்கை கொள்ளச் செய்கிறது. நம் இருநாடுகளுக்கிடையே காஷ்மிர் பிரச்சனை இருந்தாலும் அதிபர் முஷ்ரப்பையும், பாகிஸ்தான் அரசையும் மனம் திறந்து பாராட்டலாம்.

இஸ்லாமில் தீவிரவாதம் இல்லை என்பதை எல்லோரும் உணரும் சம்பவமாகவும்அ, மெய்ப்பிக்கும் விதமாக இது நடந்துள்ளது.

ஒப்புக்கொள்ள பெரும்தன்மை இல்லாதவர்கள் முஷ்ரப் அமெரிகாவின் பாராட்டும் பரிவையும் எதிர்பார்த்துத் தான் இதைச்செய்தார் என்றும் கூட சொல்வார்கள் !

இந்த ஆக்கத்திற்கு
ஊக்கமளித்த தொடர்புடைய சுட்டிகள் :
உறவுக்குக் கைகொடுப்போம்! - என்று கையை முதலில் கொடுத்த திரு எஸ்கே
பாகிஸ்தானுக்கு நன்றி - சொன்ன திரு சிவபாலன்

8 ஆகஸ்ட், 2006

பல்வேறு தமிழ் இணைய தளங்களுக்கு வேண்டும் பொதுக் கட்டணம் !

பாலச்சந்தர் கனேசன் ... குமுதம் கட்டணத் தளமாகிறது என்று குறிப்பிட்டிருந்தார் ... ஏறக்குறைய அனைத்து இணைய செய்த்தித்தாள்கள் மற்றும் வார இதழ்கள் கட்டண தளமாகிவிட்டது... ஓசி பேப்பர் படிக்கும் என்போன்றவர்களுக்கு தலையில் பலத்த இடி ...! குமுதம் அரசு பதில்கள் படிக்கவில்லையென்றால் தூக்கம் வராதவர்களில் நானும் ஒருவன் :)

நம் தமிழ் செய்தி நிறுவணங்கள் சில வழிமுறைகளை கையாளலாம்... இதன் மூலம் கட்டணத்தளமாக இருந்தாலும் பலர் சென்று படிப்பதற்கு பயனுறும். அதாவது எதாவது பொது நிறுவணங்கள் மூலம் (like paypal) கட்டணம் வசூலித்து அதன் உறுப்பினர்களாக இருக்கும் பத்திரைக்களுக்கும், அதன் சந்தா தாரர்களுக்கும் எல்லா பத்திரிக்கைகளும் படிப்பதற்கு ஏதுவாக மாற்றப்பட முடியும்.

இதன் மூலம் பல்வேறு இணைய தளங்களுக்கு தனித்தனியே கட்டணம் செலுத்த வேண்டியுதில்லை. எல்லா பத்திரிக்கைளுக்கும் வாடிக்கையாளர்கள் கிடைப்பதற்கும் வாய்ப்பாக இருக்கும். கட்டணம் என்றால் வாடிக்கையாளர்களை இழக்கும் பத்திரிகைகளும் பயன்பெறுவர். போட்டியும் நல்ல ஆக்கங்களும் இதன் மூலம் வருவதற்கு வாய்ப்பாக இருக்கும்.

ஹிட்டு கணக்கை வைத்து அந்த பொது நிறுவணம் கட்டணங்களை சம்பந்தப்பட்ட பத்திரிக்கைகளுக்கு பணம் கொடுக்கலாம். இதன் மூலம் சிறந்த பத்திரைக்கைக்கு அதன் பலன் நிச்சயம் போய் சேரும். வாசகர்களும் ஒரே பத்திரிக்கையை விதியே என்று படித்துக் கொண்டிருக்காமல் பல் சுவை செய்திக்களையும் படிக்கும் வாய்ப்பாக இருக்கும்.

இதற்கு பத்திரிக்கைகள் இணைந்து ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும். இல்லையென்றால் கட்டண இணைய தளங்கள் கட்டண கழிவறை போன்று தேவையானவர்கள் மட்டும் பயன்படுத்தப்பட்டு மற்றவர்கள் அங்கு செல்வதற்கான சூழலே இல்லாமல் போய்விடும். செய்வார்களா நம் பத்திரிக்கையாளர்கள் ?

6 ஆகஸ்ட், 2006

ஒரு வார்த்தைப் போதுமே !

முன்குறிப்பு: நட்பின் சுவையறிந்திருந்தால் அதன் மூலம் வாழ்க்கையையும் சுவையாக மாற்றமுடியும். நண்பர்கள் தின நன்நாளில் ஒரு சிறுகதை மூலம் நட்பென்ற உறவை உயர்த்துவதற்காக எழுதப்பட்ட சின்ன சிறுகதை. அன்பு நண்பர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கிறேன்.

அன்று மதியம், உணவு நேரத்தின் போது, வழக்கமான உற்சாகத்துடன் வந்து... பார்த்தவுடன்,

"என்ன குமார், இன்னிக்கு நீ ரொம்ப டல்லா தெரியுது ...உங்க டிபார்ட்மென்டல எதாவது பிரச்சனையா ?" ராமு உரிமையுடன் கேட்டான்.

'இவங்கிட்ட சொல்லலாமா ? வேண்டாமா ?' சில வினாடிகள் நெற்றியை சுருக்கி யோசனை செய்துவிட்டு குமார்,

"அதெல்லாம் ஒன்னுமில்ல ராமு... ஆபிஸ் பிராப்ளம் எதுன்னாலும் சாமளிச்சிடுவேன்... இது வேற... லேச தலைவலி" என்றான்

"ஏய், எங்கிட்ட பொய் சொல்லாதே, வழக்கமா உங்கிட்ட இருக்கிற உற்சாகம், லஞ்ச் டயத்தில காணப்போயிடறது... இன்னைக்கு ரொம்பவும் டல்லா இருக்கியே... எங்கிட்ட சொல்றதா இருந்த சொல்லு ... வேண்டான்னா விட்டுடு" விடுவது இல்லாதது மாதிரிதான் கேட்டு வைத்தான் ராமு.

குமார் சிறிது நேர அமைதிக்கு பிறகு,

"அது ஒன்னுமில்லடா, எனக்கும் என் ஒய்ப்புக்கும் சின்னச் சின்ன பிரச்சனை ..."

ராமு ரொம்ம தமாசாக,

"அதானப் பாத்தேன், எவன் ஆபிஸ் பிரச்சனைக்கு தலையில கைவைச்சிக்க போறான் ?"

குமார் கொஞ்சம் கண்ணை மூடி அவனை முறைத்துப் பார்த்துட்டு,

"உனக்கென்னப்பா, உன் ஒய்ப் அறுசுவையோட சமைச்சித்தர்றா, ஒன்னும் பிரச்சனையில்லாம, உன் வண்டி ஓடுது" என்று சொல்லிவிட்டு தொடர்ந்து,

"என் சாப்பட்டையும், எத்தனை தடவை ஷேர் பண்ணி சாப்பிட்டிருக்க ... கொஞ்சமாவது உப்போ, ஒரப்போ இருந்திருக்கா, எங்கிட்ட பெயருக்கு சூப்பர்டான்னு சொல்லிட்டு போயிடுவே ..."

ராமு கொஞ்சம் சீரியஸாகவும், சங்கடமாகவும்

"சாரிடா, உன் சாப்பாடு நல்லாதாண்டா இருந்துச்சி... அதான் அப்படி சொல்லி இருக்கேன்" என்றவன்,

"சரி, சரி என்ன உன் பிராப்ளம் ?"

குமார் மறுபடியும் தயங்கியபடி,

"ராமு, நம்ப நட்புக்காக, என்னோட சாப்பாடு நல்ல இருக்குன்னு சொல்ற, ஆனால் தினம் சாப்பிடுற எனக்குத் தாண்ட அதோட கஷ்டம் என்னான்னு தெரியும்..."

"சரி... என்னான்னு சொல்லு கேட்போம்" என்றான் மறுபடியும் உற்சாகமாக ராமு.

"அதுதான, அடுத்தவன் குடும்ப கதையின்ன உடனே, காதை தொடச்சிட்டு வந்திடுவியே" என்று குமார் ராமுவை கிண்டல் செய்தான்

ராமு பெரிதாக எடுத்துக்கொள்ளவிட்டாலும், கொஞ்சம் சுதி குறைந்து

"என்னமோ போப்பா... எதோ உனக்கு என்னால ... ஏதாவது உதவ முடியுமான்னு கேட்டேன்"

"மண்ணிச்சிக்க ராமு, உன் கிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்லப்போறேன்...?" என்று ஆரம்பித்தான் குமார்

"ராமு, எனக்கு கல்யாணம் ஆகி ஒருவருசம் ஆயிடுச்சி உனக்கு தெரியுமில்ல..."

"அது தான் தெரியுமே, கல்யாணம் ஆகி ஒருவருசம் ஆனாதுதான் ப்ராபளமா ?, குழந்தைக் குட்டிக்கெல்லாம் ஒரு வருசத்துக்குள்ள தவிக்கிறது ரொம்ப தப்பு ...!"

"தாமாஸ் பண்ணாதடா... சீரியஸ்சா கேளு... ஒரு வருசம் ஆகியும் என் ஒய்புக்கு சமையல்-ன்னா என்னானே தெரியல ..."

"எங்க பேரன்ட்ஸ விட்டு தனியாதான் இருக்கோம் ஆனாலும், சாப்பாட்டால அடிக்கடி சண்டை வருது, அடிக்கடி மூஞ்சிய தூக்கிவைச்சிட்டு இருக்கிறா ..."

"எதையாவது கிண்டி வச்சிட்டு, எனக்கு இதுதான் தெரியும், வேணும்னா சாப்பிடுங்க, பிடிக்கலைன்ன, ஓட்டலில் சாப்பிடுங்கன்னு சொல்றாடா ..."

"ஓட்டல்ல சாப்பிடறத்துக்காகவா கல்யாணம் பண்ணிக்கிறோம், எனக்கு ரொம்ப சங்கடமாயிருக்கு ராமு ..."

"சரிடா குமார், அவளுக்கு சமைக்க தெரியாதுங்கறது, உனக்கு திருமணத்திற்கு முன்பே தெரியாதா ?"

"போடா, அவளை முதலில் பாத்தவுடன் எங்கே அதையெல்லாம் கேட்கனும் நினைச்சேன், இப்பதான் மாட்டிக்கிட்டேன்"

"கல்யாணம் ஆன புதுசுல எங்க அம்மாவும் அவளை சமைக்கவிடலை, நாங்களும் ஊர் ஊரா ஹனிமூன்னு சுத்தினோம்..."

"இந்த ஆபிஸல சேர்ந்த பிறகுதான், குமார் ஆபிசுக்கு நேரத்தோட போறமாதிரி வீடாப் பாத்துக்கோன்னு எங்க அப்பா சொல்லிட்டாரு... தனிக்குடித்தனம் ஜாலின்னு ... இங்க பக்கத்துல வீடெடுத்து வந்து ஆறுமாசம் ஆகுது ... இப்பதான் தெரியுது அவ சமைக்கிற அழகு" சொல்லிவிட்டு குமார் பெருமூச்சிவிட்டான்.

"சரிடா, நீ இத உங்க அம்மாகிட்ட சொன்னியா ?"

"அதெல்லாம் இல்லடா, இதபோயி சொன்னா, அப்பறம் மாமியார்-மருமகள்னு பாலிடிக்ஸ் கிளம்பிடும், இதக்காட்டிலும் அது பெரிய மண்டையிடிடா... அதனால நானே சமாளிக்கலாம்-னு பார்த்தால் ... தினமும் முடியலைடா..." சொல்லி முடித்ததும் சோர்வானான் குமார்.

"நல்ல காரியம் செஞ்சிருக்க, இத பெரியவங்கட்ட போய் சொல்லி... அது தலைமுறை இடைவெளியினால், உறவுகளிலையும் இடைவெளியை ஏற்படுத்திடும் ..." என்ற ராமு தொடர்ந்து, குமாரைப் பார்த்து கேட்டான்

"சரி, உங்கிட்ட ஒன்னு கேக்கிறேன், சரியா பதில் சொல்லு"

"சொல்லுடா... ராமு "

"என்னைக்காவது ஒரு நாள், உன் ஒய்ப் நல்லா சமைச்சிருக்காளா ?" ராமு முடிப்பதற்குள்

"எனக்கு தெரிஞ்சு அப்படி நடக்கவே இல்லை, அதாண்டா, எரிச்சல் எரிச்சலா வருது..." என்றான் குமார்

"குமார், தப்பு உன் பேரிலும் இருக்கு !"

"என்னடா, உளரறே ?"

"உளரலடா, நான் சொல்றத யோசிச்சு பாரு..." என்று தொடர்ந்தவன்

"நீ இந்த ஆபிஸல சேர்ந்தப்ப, இந்த அலுவலக சூழ்நிலைய புரிய ஒனக்கு எப்படியும் ஒருவாரம் ஆகியிருக்கும் தானே ?"

"ஆமாம், ஆரம்பத்துல, கொஞ்சம் கஷ்டமாக இருந்திச்சு, எல்லாம் கொஞ்சம் ஹெல்ப் பண்ணினாங்க"

"எல்லோரும் ஹெல்ப் பண்ணிங்க இல்லையா ?"

"ஆமாண்டா, அதை நினைச்சா எனக்கு நெகிழ்ச்சியா தான் இருக்கு, அது மட்டுமில்லடா, எல்லோரும் சின்ன சின்ன செயல்களுக்கெல்லாம் அடிக்கடி பாராட்டி உற்சாகப் படுத்தியதால்... நான் சுறுசுறுப்பா வேலை செய்தேன், நல்ல புரோமோசனும் கெடச்சிச்சி..." என்றவன்

"ஏன்டா அலுவலகத்தை பற்றி பேசி, டாபிக்க மாத்திற உனக்கு என்ன, என்னுடைய புரோமோசன் பொறாமையா இருக்கா ?"

அவர்கள் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் தாக்கிக்கொண்டாலும் கோபித்துக்கொள்வதில்லை.

"ஏன்டா, அதுகுள்ள அவசரகுடுக்கை மாதிரி பேசுற ..." என்ற ராமு

"விசயம் இருக்குடா, சொல்றேன் கேட்டுக்க"

"நாம ஆபிசல வாங்குற சம்பளத்துக்கு மட்டுமா வேலை செய்றோம் ? இல்லையே! அதற்கும் மேல, ஏன்னா ?" என்று நிறுத்தியவன்

தொடர்ந்தான்

"நம்ப உயர் அதிகாரிகள், நம்மளை பாராட்டனும், ப்ரோமசன் தரணும்-னு எதிர்பார்த்து தான் எல்லாத்தையும் இழுத்துப்போட்டு செய்கிறோம்"

"நம்ம உழைப்புக்கு பாராட்டும் கிடைக்குது..."

"அப்படி பாராட்டு கிடைக்கிலைன்ன, நம்பளால உற்சாகமாக எதையும் செய்ய முடியாது, கடமைக்கு அழுதுட்டு சாயங்காலம் வீட்டுக்கு கிளம்பி போய்டுவோம் ..."

"சரியா ?" என்று நிறுத்தினான் ராமு.

"நீ சொல்றது நூத்துக்கு நூறு சரிடா ..."

"பலன் இல்லைன்னா யாரு பாடுபடறது ? அட்லீஸ்ட் ஒரு பாராட்டாவது கிடைக்னும் இல்லையா அதுதானே நியாயம் ?" என்றான் குமார்

மெதுவாக கண்ணை மூடிய ராமு, கண்ணை திறந்து,

"அப்பாடா, எனக்கு இது போதும் உனக்கு புரியவைச்சிடுவேன் ..." என்று ராமு தொடர்ந்து, குமாரை பேச விடாமல்

"குமார், என்னைக்காவது உன் ஒய்ப்பை சமையலுக்காக பாராட்டியிருப்பியா ?"

"அப்படி ஒருநாள் பாராட்டியிருந்தால் கூட, அவ உற்சாகமாய் உனக்காக, விதவிதமாக சமைக்க கத்துக்கிட்டு இருந்திருப்பா ..."

"நீ என்ன செஞ்சிருப்ப ? அவ மொதல்ல சமைத்தன்னைக்கு சுளித்த முகத்தை, இன்னும் அப்படியே வச்சிருக்க ..."

"என்னாச்சு ? 'என்ன சமைச்சு என்ன ஆகப்போகுது, நாம என்ன சமைச்சாலும் அவருக்கு பிடிக்கவா போவுதுன்னு' அவ நினைக்கிறமாதிரி இது ஆகிப்போச்சு..."

"முதல் முதலா சமைக்கிறாளேன்னு சின்னதா பாராட்டியிருக்கனும், அத நீ செய்யலை !"

"குமார்... நாம சின்ன சின்ன விசயங்களை அலட்சியப்படுத்தி கண்டுக்காம விட்டுடுறோம் ..."

"சின்ன சின்ன விசயம்னாலும், 'பாராட்டு' என்ற ஒரு வார்த்தை போதும். அது தருகிற மறைமுக அங்கிகாரத்தினால், சின்ன விசயமெல்லாம் சிறப்பான விசயம் ஆகிவிடுகிறது ..."

"எல்லோரோட மனசிலையும் எதிர்பார்புகள் இருந்துகிட்டுதான் இருக்கும் குமார், அது கணவன் - மனைவியாக இருந்தாலும் சரி, பெற்றோர் - பிள்ளையாகளாக இருந்தாலும் சரி ..."

"அதை நேரடியாக சொல்லவோ, கேட்கவோ தெரியாதபடி உளவியல் ரீதியான காரணங்களினால், ப்ராபளம் பெரிசாக ஆயிடுது ..."

"நம்ப அம்மா தானே, சமைச்சிப்போடறது... அவுங்க கடமைதானேன்னு நினைச்சிடுறோம்..."

"மனைவி-ன்ன நம்பள கவனிக்கிறது அவ கடமை-ன்னு நினைச்சிடுறோம் ..."

"என்ன தான் கடமையாக இருந்தாலும், அதுக்கு ஒரு அங்கிகாரம் வேணும்ங்கிற ஏக்கம் இருந்துகிட்டு தான் இருக்கும் ..."

"அவுங்க, அவுங்க கடமைன்னு நினைச்சிடுறதால சில விசயங்கள், நமக்கு தெரியமலேயே ஒதுக்கப்பட்டு நின்று விடுகிறது..."

"சுமார படிக்கிற பையனையும் தட்டிக்கொடுத்தால், அவனால முதன் மாணவனாக வரமுடியும் ..."

"அதவிட்டுவிட்டு மட்டம் தட்ட ஆரம்பிச்சிட்டோம் என்றால், அவுங்களுக்கு இயல்பிலேயே இருக்கிற உற்சாகமும் குறைந்து ... நம்பளால இதுதான் முடியும்னு நினைச்சி... அதிகம் செயல் படவிடாமா அது முடக்கி போட்டுடுது..."

"நீ, உங்க அம்மா சாப்பாட்டை சின்ன வயசிலேர்ந்து பழகினதால, உன் ஒய்ப் சமைத்தது உனக்கு சுவையாய் படவில்லை..."

"இதான் உன் விசயத்தில நடந்திருக்கு... ஒரு தடவை உன் ஒய்பை பாராட்டிப் பாரு... நான் சொல்றது சரி-ன்னு ஒனக்கு புரியும் ..."

குமாரின் மூளை கொஞ்சம் கொஞ்சமாக பிரகாசமாக, ராமுவின் கைகளை பிடித்துகொண்டான்

"ரொம்ப, தாங்க்ஸ் டா... இந்த லாஜிக் தெரியாம இருந்திட்டேன் ..."

"புரிஞ்சிகிட்டா, சரிடா, என் அப்பா-அம்மாதான் என்னை அடிக்கடி பாராட்டி, எனக்கு இந்த பழக்கத்தை ஏற்படுத்தினாங்க ..."

"ஆரம்பத்துல என் ஒய்ப்பும் சுமாரா சமைப்பாள் ..."

"சந்தோசம் என்கிற தீபம் வாழ்கையில் என்றைக்கும் எரியனும் என்றால், பாராட்டுதல் என்ற எண்ணையை அவ்வப்போது நாம நிரப்பிக்கிட்டு இருக்கனும் ..."

"இன்னும் ஒரு விசயம்... சாப்பட்ட மட்டுமல்ல, எந்த விசயமானாலும் மனசுக்கு பிடித்தால் யாராயிருந்தாலும் உடனே பாராட்டிட வேண்டும் ... அதே சமயத்தில் மாற்று கருத்து இருந்தால் அதையும் நிதானத்தோட புரிய வைக்கனும் ... அப்பொழுதுதான் அவர்களின் செயல் பற்றி சரியா தப்பான்னு நாம் சொல்வதும், நாம் நேர்மையாய் செயல் படுகிறோம் என்பதும் அவர்களுக்கு விளங்கும் ..."

"சரிடா, குமார் நான் ஒருவாரம் லீவுல போகிறேன் அடுத்தவாரம் பேசலாம் ..." என்றவன்

"என்னையும் மதிச்சி, உன் குடும்ப பிரச்சனையை சொல்லியிருக்கிற, என் மூலமா ஒரு நல்ல தீர்வு உனக்கு கிடைச்சா எனக்கு மகிழ்ச்சி தான். தாங்ஸ்டா "

என்று எழுந்து சொன்றான்.

குமார் நட்பின் ஆழத்தையும் அன்று நன்றாகவே உணர்ந்தான்.

ஒருவாரம் கழித்து அன்று மதியம், அதே இடத்தில் குமார் தன்னுடைய சாப்பாட்டு கேரியரை திறக்க, அங்கு வந்த ராமு,

"குமார், என்ன கல்யாண வீட்டு சமயக்கட்டுல நுழைஞ்ச மாதிரி, வாசனை ஒரே தூக்கா தூக்குது ?"

"வாடா, ராமு எல்லாம் உன் புண்ணியம் தான், நீ சொன்ன டானிக் நல்ல வேலை செய்யுது"

"கொஞ்சம் விபரமாக சொல்லேண்டா "

"நீ சொன்னபடி, அன்றைக்கு சாயந்தரமே, என் ஒய்ப் செஞ்ச கோழி கொழம்பை இதமாக பாராட்டினேன் ..."

"அப்பறம் ... என்னாச்சு ?"

"ரொம்ப உற்சாகமாயிட்டா, அப்புறமா அவ சாப்பிடுறப்ப ..மெதுவா சங்கடபட்டுகிட்டே சொன்னாள் 'என்னங்க இன்னைக்கு கொஞ்சம் தீஞ்ச வாடை அடிக்கிறமாதிரி இருக்கு, இன்னைக்கு போயி நல்ல இருக்குன்னு சொல்றிங்களே, நாளைக்கு பாருங்க, மீன் கொழம்பு செஞ்சு அசத்திடுறேன்' என்றாள் ..."

"ராமு ... ஒரு வாரமா ... எங்க வீட்டுல சமையல் வாரமா போயிட்டுருக்குடா ... அதோட அவள் விடல..."

"எங்க அம்மாகிட்ட அடிக்கடி போன் பண்ணி, எனக்கு என்னென்ன புடிக்கும்னு கேட்டு கேட்டு, பெரிய லிஸ்டும் கையுமா இருக்காள் ..."

"நல்ல செய்திதான், கொஞ்சம் பாத்துடா, ஒரு மாசம் கழிச்சு ஆபிஸல ரெண்டு கதவையும் தெறந்து வச்சாதான் உன்னால உள்ள வரமுடியும்கிற மாதிரி உன் ஒடம்பு ஆகிடப்போவுது"

"தாங்ஸ்டா, ராமு உன்னோட அறிவுறுத்தலால் உணவு மட்டுமல்ல, உறவும் சுவை கூடியிருக்கு என்பது நிஜம்"

"இனிமே உன் பொண்டாட்டி பாகற்காய் செஞ்சா கூட ஒனக்கு இனிப்பாதாண்டா தெரியும்"

குமார் கையில் எடுத்த தண்ணீரை ராமுவின் மீது தெறிக்க, ராமு சரியாக விலகிக் கொண்டு சிரித்தான்.

4 ஆகஸ்ட், 2006

கோவி.கண்ணனின் திரு(ட்டு)விளையாடல்கள் :)

அன்றாடம் வரும் செய்திகளில் நாம் சம்பந்தப் படாவிட்டாலும், அது நம் பெயரைத் தாங்கி வந்தால் ... அச்செய்தி ஒரு வேளை அது நல்ல செய்தியாக இருந்தால் கொஞ்சம் மகிழ்ச்சி வருவது இயல்பு. அதுவே பெயரைக் கெடுக்கும் விதாமான கெட்ட செய்தியாக இருக்கும் பட்சத்தில் சிறு வருத்தம் வருவதும் இயல்பு. மேலும் அத்தகைய செய்தி இனிசியலோடு வரும் போது ... கொஞ்சம் உணர்வுகள் தூக்கலாகவே இருக்கும். அப்படி ஒரு செய்தி என் பெயருக்கும், என் உணர்வுக்கும் கிட்டியது.

நண்பர் சிறில் அலெக்ஸ் இதைப் பற்றி பதிலிளிப்பாரா கோவி. கண்ணன்? என்று ஒரு தமாஸ் பதிவு போட்டிருந்தார். அதைப் படிக்கும் முன்பே ...அதே நாள் (ஜுலை 3) சன் செய்திகளில் அந்த செய்தியும், 'கோவி.கண்ணன்' பெயரும் நன்றாக அடிபட்டதை பார்க்க நேர்ந்தது. கொஞ்ச நாளைக்கு தமிழ்நாட்டிற்கு சென்று என் பெயர் கோவி.கண்ணன் நான் ஒரு வலைப்பதிவாளர் என்று சொன்னால் அதுக்கு தனி 'மறியாதை' கிடைக்கும் என்று நினைக்கிறேன்... காரணம் அந்த கோவி.கண்ணன் 'சன்னதி' என்ற மாத இதழ் நடத்தி வருகிறானாம். அந்த அளவுக்கு செய்தித்தாள்களில் என் பெயர் அடிப்பட்டுவிட்டது. கோவி.கண்ணன் லீலைகள் பற்றி லத்திகா சரண் கூட பேட்டி அளித்துள்ளார்.

என் பெயரில் ஏற்பட்ட ஒரு களங்கம், அதாவது கோவி.கண்ணனின் திருட்டு விளையாடல்கள் பற்றிய படமும் செய்தியும் இங்கே :


படமும் செய்தியும் : தினமலர் (நன்றி)

நான் அவனில்லை, ஆனால் இந்த செய்தியில் இருப்பது நான் என்று நினைத்து தமிழ்மணம் திரட்டியிலிருந்து உடனடியாக என்னை நீக்கக் பலர் கோரியதாகவும் தெரிகிறது - இது என்னோட ரீலு :)

2 ஆகஸ்ட், 2006

புரட்சித் தலைவர், சூப்பர் ஸ்டார் எங்கள் ஜாதி ...!

நடிகர் திரு ரஜினிகாந்த் அவர்களை எல்லோரும் விரும்புவது ஏன் ? எனக்கு அவரை மிகவும் பிடிக்கும், முதல் நாளே அவருடைய படம் பார்க்கவில்லை என்றால் தூக்கம் வராது, அதிகபட்சமாக சில படங்களை இருமுறை பார்த்ததுண்டு, அதில் சமீபத்தில் வெளிவந்து வேட்டையன் ராஜாவாக கலக்கிய சந்திரமுகியும் அடக்கம். சிவாஜி எப்பொழுது வரும் ? எதிர்பார்பவர்களில் நானும் ஒருவன். அவரிடம் எல்லோருக்கும் பிடித்தது அவரது ஸ்டைலா ? நடிப்பா ? முடியைக் கோதிவிட்டு 'கண்ணா ... ஆறுலையும் சாவு, நூறுலையும் சாவு' சொல்லும் போது விசில் தூள்பறக்கும்.

நடிப்பு ?
எனக்கு தெரிந்து கருப்பு வெள்ளைப் படங்களுக்குப் பிறகு ரஜினி நடிக்கவில்லை. அதன் பிறகு ஓரிரு படங்கள் 'ராகவேந்திரா, தளபதி, சந்திரமுகி, எஜமான்' போன்ற படங்களில் ஓரளவு நடித்துள்ளார். மற்றப் படங்களெல்லாம் அக்மார்க் ரஜினி மசாலா படங்கள் தான் . கொஞ்சம் பைட்டு , நிறைய ஸ்டைலு, அம்மா, தங்கை சென்டிமென்ட் ... இதில் எம்ஜிஆர் செய்யாதது ஸ்டைலு மட்டும்தான். மற்றபடி ரஜினி பார்முலா படங்களும், எம்ஜிஆர் பார்முலாபடங்களும் ஒரே மாதிரி ரீல்களில் ஒடிய ரீலுகள்தான்.

எம்ஜிஆர் அம்மா சென்டிமென்ட் வெச்சிக்கிட்டு 200 நாள் ஓட்டியிருந்தால், ரஜினி அதுகூட கொஞ்சம் ஸ்டைலையும் நுழைத்து 250 நாள் முன்னூறு நாட்கள் தன் படத்தை ஓட்டிக்காட்டினார்.அம்மாவுக்கு பூஜைப் போட்டுட்டு காதலியுடன் மாந்தோப்பில் ஒரு மாங்காய் பாடலை பாடி பெண்ணியத்தின் கண்ணியம் காப்பார்கள். பெரும்பாலன படங்கள் ஏழை பொதுமக்களின் கூலித் தொழில் (ரிக்சா காரன், ஆட்டோ காரன்) ஏதோ ஒன்றில் இருவரது பாத்திரமும் பின்னப்பட்டிருக்கும். இருவரும் திரையில் பணக்காரர்களை வெளுத்து வாங்கிவிட்டு அவர்களது மக(ள்க)ளை முடிவில் திருமணம் செய்து பணக்காரத் திமிரை திருத்துவார்கள்.

ஏன் இப்படி ? திரையரங்குக்கு சென்று படம் பார்க்க வருகிறவர்களெல்லாம் பெரும்பாலும் ஏழைகள் எனவே கதைகள் அதை ஒட்டி இருக்கவேண்டிய கட்டாயம். அதுமட்டுமா ஏழையின் கோபம், ஏக்கம், வஞ்சமான பணக்காரத் தனத்தை உண்டு இல்லை என்று சாடினால் தான் திரையரங்கில் சூடுபறக்கும். பெரும்பாலும் ஏழைகளுக்காகவே குரல் கொடுப்பது போன்றே இவர்கள் படம் இருக்கும். 5 / 10 ரூபாய் டிக்கட்டில் பணக்காரர்களை திருந்தியதைப் பார்த்து நிம்மதியுடன் அடுத்த நாளும் அதே மக்கள் அதே படத்துக்கு திரையரங்கில் வரிசையில் நிற்பார்கள்.

ஏழைகளைத் தாண்டி இந்த இருவரும் எப்படி பொதுமக்களுக்கும் பிடித்தவர்கள் ஆனார்கள் ? தமிழகத்தில் நல்ல நடிகர்களே இல்லையா ? அவர்கள் ஏன் எல்லா தரப்பு மக்களையும் கவரவில்லை ? நல்லா யோசிச்சா ஒன்னே ஒன்னு தான் காரணம் என்று தெரிகிறது. அது தமிழகத்தில் புறையோடி போயுள்ள சாதிவெறி. எல்லா நடிகருகும் சாதியால் அடையாளப்படுத்தப் பட்டுவிட்டார்கள். இந்த நடிகர் இந்த சாதி ஆள் என்று தெரிந்துவிட்டது. எல்லா பெரிய நடிகர்களின் ரசிகர் மன்றங்களும் பின்னால் இருப்பது அவர்கள் சாதியை சேர்ந்த இளைஞர்கள் தான். சரத்குமார் நாடார் என்றும் , விஜயகாந்த் தெலுங்கர் நாயுடு என்றும், கார்த்திக் தேவர் என்றும் ... இன்னும் பலர் சாதிச் சாயம் பூசிக் கொண்டனர்.

கமல் நன்றாக நடித்தும் பலருக்கு ஏன் பிடிக்கவில்லை, அவர் ஏன் ரஜினிகாந்த் அளவுக்கு வரமுடியவில்லை? அது அவரே விரும்பாவிட்டாலும் அவர் மேல் விழுந்த ஒரு சாதி முத்திரையைத் தான் காரணம். அதுமட்டுமல்ல அவரின் விரும்பம் இல்லாவிட்டாலும் ... தாங்கள் அவரை தூக்கி நிறுத்துவது கடமை போல் வெளிப்படையாக ஆதரிக்கும் ஒரு சமூகத்தினால் ... அந்த சமூகத்தை விரும்பாதவர்களின் வெறுப்பும், பெரும்தன்மையின்மையும் கமல் போற்றப் படாததற்குக் காரணம். இது விஜயகாந்த், கார்த்திக் போன்றவர்களுக்கும் பொருந்தும். தற்போது நடிகர் விஜய்க்கு கிறித்துவர் என்ற முத்திரையும் குத்தப்பட்டுவிட்டது. செவாலியர் சிவாஜி மாபெரும் நடிகராக வளர்ந்தும் (அவரே தேடிக்கொண்ட) தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற முத்திரையும் அவரால் அரசியலில் வளர்ச்சி பெற முடியாமல் செய்துவிட்டது.

இது போன்ற தமிழகத்தில் உள்ள சாதிகளுக்குள் சிக்கிக் கொள்ளாதவர்கள் என்பதால் எம்ஜிஆர் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய "இருவர்" க்கு சாதீய அடையாளம் இல்லாது போனது. இது பொதுமக்கள் மத்தியில் இருவருக்கும் அமோக வரவேற்ப்பு கிடைப்பதற்கு மறைமுக காரணமாக அமைந்தது. மேலும் அவர்கள் ஏழை மக்களை கவரும் வண்ணம் திரைக் கதைகளை அமைத்துக் கொண்டதன் மூலம், ஏழைமக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் விரும்பும் மாபெரும் நடிகர்களாக வளர்ந்தனர். ஜெயலலிதாவிற்கு பிறகு அதிமுக போன்ற இயக்கங்களுக்கு சாதி அடையாளம் இல்லாத தலைவர்கள் கிடைப்பது அரிது. திமுகவிற்கு இந்த அடிப்படையில் ஸ்டாலினைத் தவிர்த்து மாற்றும் இல்லை.

தமிழகத்தில் எல்லோரும் விரும்பும் தமிழ் நடிகர் வருவதற்கான வாய்ப்பு தமிழகத்தில் இல்லை. சாதி வெறுப்பு, சாதி பாசம் போன்ற நோய் பீடித்துள்ளதால் தமிழனே விரும்பி தமிழ்நாட்டை சாதிய அடையாளம் இல்லாத அண்டை மாநில நடிகர்கள் கையில் கொடுக்க துணிவதும் தமிழனே தேடிக்கொண்ட விதிதான்.

ரஜினிக்குப் பின் நிற்பது அன்பினால் வந்த கூட்டமா ? ஓரளவுக்கு உண்மையென்றாலும் அதிகம் இருப்பது ...சாதி நடிகர்களையும், சாதி அரசியல் வாதிகளையும் வெறுத்து நொந்தக் கூட்டம். அந்த கூட்டத்தில் நானும் ஒருவன்... ரஜினி தேர்தலில் நின்றால் அவருக்குத் தான் என் ஓட்டும் !

பின்குறிப்பு : தமிழ்நாட்டு எந்த நடிகர்களின் நடிப்புத் திறமையையும் நான் குறைத்து மதிப்பிடவில்லை. சிவாஜி அவர்களின் பெயருக்கும் முன் செவாலியர் என்று பட்டத்துடன் எழுதியிருப்பதும் அந்த நினைவில் தான். தமிழக நடிகர்கள் எப்படி அடையாளப் படுத்தப்படுகிறார்கள் என்ற வேதனையில் எழுதியது தான் இது. எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் தலைவன் ஆகும் தகுதியை தடுப்பது எது என்று சொல்ல முயன்றிருக்கிறேன். கட்டுரையை திசைத் திருப்புவதற்காக நடிகர்களின் பெயரைக் குறிப்பிட்டு நடிப்புத் திறமையை கேவலப் படுத்துவதாக சொல்வது ஏற்றுகொள்வதற்கு இல்லை. நீங்கள் கேள்வி கேட்கவேண்டுமென்றால் ரசிகர்கள் பலத்துடன் தமிழகத்தை ஆளத் துடிக்கும் நடிகர்களிடம் தான் கேட்கவேண்டும். அதற்காக நடிகர்களுக்கு நாடாளும் திறமை இல்லையென்று சொல்லவில்லை. நம்மைப் போன்று அவர்களும் தமிழர்களே அந்த உரிமை எல்லோருக்கும் உண்டு. தமிழகத்தில் மாபெரும் தலைவராக இவர் வருவார் என்று ஸ்டாலினைத் (அதுவும் திமுக என்ற தனிக்கட்சிக்கு மட்டும் பொருந்தும்) தவிர்த்து, சாதிய அடையாளமே இல்லாமல் அடுத்து யாரையாவது ஒருவரை உங்களால் காட்டமுடியும் என்றால் இந்த கட்டுரையை எடுத்துவிடுகிறேன்.

1 ஆகஸ்ட், 2006

பொன்னியின் செல்லம்மா : சிறுகதை (தேன்கூடு போட்டி)

என்னோட பெயர் பொன்நிலவன். எனக்கு எட்டு வயசு ஆகுது. என்னோட அப்பா, அம்மா என்னை பொன்னி பொன்னி-னு கூப்பிடுவாங்க. ஆனா சொல்லம்மா மட்டும் தம்பி தம்பி-ன்னு தான் கூப்பிடும். செல்லம்மா யாருன்னு நா செல்லலேல்ல ? எங்க அம்மா அப்பா வேலைக்கு போறதால, அது எங்க வீட்டல என்னெ பாத்துக்க வந்த பணிப்பெண்ணு-ன்னு அம்மா சொல்லுவாங்க. செல்லம்மாவுக்கு முன்னாடி செல்லம்மாவோட அம்மாதான் என்னெ பொறந்ததுலேர்ந்து பாத்துக்கிட்டாங்களாம். அப்புறம் தான் செல்லம்மா சிலோன்லேர்ந்து நாலு வருசத்துக்கு முன்னால வந்து என்னை பாத்துக்குச்சி.

ஆமாம் நான் ஏன் செல்லம்மாவ பத்தி சொல்றேன் தெரியுமா ? இன்னைக்கு ராத்திரி எட்டு மணிக்கு... செல்லம்மா ஏர்லெங்கன்ல சிலோனுக்கு போவுது. ஏர்போர்டல அழுதுகிட்டே இருந்திச்சி.

"தம்பி, நீ நல்லா படிக்கனும், சமத்தா இருக்கணும், அடம்பிடிக்க கூடாது" திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டே இருந்துச்சி.

எனக்கு கூட அழுகை வர்றமாதிரி இருந்துச்சி, அதுக்குள்ள அப்பா,

"வாடா பொன்னி, மேல போயி, நெறையா பிளைட் நிக்கும் பாத்துட்டு வரலாம்" னு வியூவிங் கேலரிக்கு அழைச்சிட்டு போய்ட்டாரு

அம்மா, செல்லம்மாவோட கைய புடிச்சிக்கிட்டு பேசிக்கிட்டு இருந்தாங்க,

பிளைட்டு பாத்துட்டு திரும்பி வர்றத்துக்குள்ள, செல்லம்மாவ காணும், அம்மா தான் சொன்னாங்க, சீக்கரமா ஏர்லங்கா கெளம்ப போறதா ஸ்பீக்ரல சொன்னாங்களாம், அதுனால செல்லம்மா ஏர்போர்டுக்குள்ள போயிடுச்சாம். எங்கிட்டெ செல்லம்மா டாடா சொல்லாம போயிடுச்சே நினைச்சிக்கிட்டு இருந்தேன், அப்பா என்னெ தூக்கி வச்சிட்டு, சரி வீட்டுக்கு போலாம்-னு சொன்னார். நான் எப்ப தூங்கினேன்னு தெரியல.

காலையில அம்மா எழுப்பினாங்க,

"பொன்னி, ஒன்னெ ஸ்கூல்ல விட்டுட்டு நான் ஆபிசுக்கு போகணும், சீக்கரம் எழுந்து குளிச்சிட்டு கெளம்பு"

சோம்பலாக இருந்தது, ஸ்கூலுக்கு டயம் ஆகல, ஆனா அம்மா எப்பவும் ஏழுமணிக்கு ஆபிசுக்கு கெளம்பிடுவாங்க,

செல்லம்மா இருந்தப்ப...

"தம்பி, அம்மா அப்பா ஆபிசுக்கு போய்டாங்க, நீ குளிச்சிட்டு, சாப்பிடணும் எழுந்திருன்னு" என்னை மெதுவாதான் எழுப்பிவிடும்.

அம்மா சொன்னதும் எழுந்து பாத்ரூமுக்கு போனேன்.

முன்னெல்லாம், செல்லம்மாதான் என்னை குளிச்சி விடும், ஒரு நாள் சன்டே அன்னிக்கு நானே குளிச்சிகிட்டேன்.

அப்பா செல்லம்மக்கிட்ட கேட்டாரு, 'என்ன பொன்னி ... அவனே குளிச்சிக்கிட்டு இருக்கான், நீ குளுப்பாட்டலயா ?" என்றார்

அதுக்கு செல்லம்மா

"ஐயா, தம்பிய பாத்துரூம்ல நிக்க சொல்லிட்டு துணிகாயவைக்க போனேன், அதுக்குள்ள தம்பி அதுவா குளிச்சிக்கிச்சி, பரவாயில்லைங்கைய்யா, நா இன்னொரு தடவை குளிப்பாட்டி விடுரேன்" னு சொல்லிச்சு.

அதுக்குள்ள அம்மா வந்து, என்னை கட்டிக்கிட்டு

"வெரிகுட், நீயே குளிக்க ஆரம்பிச்சிட்டியே" ன்னு என்னை கொஞ்சினாங்க.

எனக்கு யாராவது என்னை பாரட்டினால் ரொம்ப புடிக்கும்.

அம்மா மறுபடியும் சொன்னாங்க "என் செல்லம், பொன்னி நீ பெரியபுள்ளயா ஆயிட்டா, அதான் நீயே எல்லாத்தையும் செஞ்சிகிற" ன்னு சொல்லி முத்தம் கொடுத்தாங்க.

"பொன்னி, அங்க ஒக்கார்ந்து என்ன யோசிச்சிக்கிட்டே இருக்க, நான் ஆபிஸ் போவனும், சீக்கரம் குளிச்சிட்டு வா"

செல்லம்மாவ பத்தி நினைச்சிக்கிட்டு இருந்தேனா ? நேரமாச்சுன்னு நினைக்கிறேன் அதான் அம்மா, சீக்கரமா குளிக்க சொல்லுறாங்க

தண்ணீரை மேலுக்கு சாய்ததும், காலுக்கு சோப்பு போட்டுக்கொண்டேன். "தம்பி, காலு கையெல்லாம் சுத்தமா வெச்சிருக்கனும், அதான் உனக்கு எப்பவும் ரண்டு தடவை காலுக்கு சோப்பு போடுறேன்" னு முன்னெல்லாம் செல்லம்மா சொல்லும்.

குளிச்சிட்டு வெளியே வந்தேன், டவலை எடுத்து தலையை துடைத்தேன்

"தம்பி, தலையில ஈரம் இருக்க கூடாது, சளி பிடிக்கும்" னு செல்லம்மா சொன்னது ஞாபகம் வந்தது, செல்லம்மா தலையை நல்லா அழுத்தமா தொடைக்கும், கொஞ்சம் வலிக்கும். நான் தலையை ஆட்டி ஆட்டி அடம் புடிப்பேன்

"இன்னும் தலையில டவல வெச்சு தொடச்சிக்கிட்டு ... என்ன யோசனை பண்ணிக்கிட்டு இருக்க" அம்மா வந்து டவலை வாங்கி வைத்துவிட்டு, எனக்கு தலைவாரி விட்டார்கள்.

"என்னங்க, பொன்னிக்கு யூனிபார்ம மாட்டிவிடுங்க" ன்னு அப்பாவை கூப்பிட்டு விட்டு அம்மா எனக்கு காலை சாப்பாடு எடுத்து வைக்க சமையல் அறைக்கு சென்றுவிட்டார்கள்

அப்பா தான் யூனிபார்ம மாட்டிவிட்டார், செல்லம்மா எனக்கு யூனிபார்ம் மாட்டிவிட்டு தினமும் என் கன்னத்துல செல்லமாக கிள்ளி முத்தம் கொடுக்கும், ஆனா அப்பா முத்தம் எதுவும் கொடுக்கல.

"பொன்னி, ஸ்கூல் பேக்க எடுத்து வெச்சிட்டு சாப்பிட போ" ன்னு சொல்லிட்டு அப்பா கெளம்பி ஆபிசுக்கு போய்டாரு

நான் சாப்பிட போனேன்.

முன்னெல்லாம் செல்லம்மா தான் ஊட்டி விடும், ஒரு நாள் அது சாப்பாட்ட எடுத்துவச்சிட்டு என்னெ டீவி பாக்க சொல்லிட்டு குளிக்க போயிடுச்சி, அது வர்றத்துக்குள்ள நானே சமர்த்தா சாப்பிட்டுட்டேன். சாயந்தரம் அம்மா வந்தோன்ன சொன்னேன். அம்மா, "வெரிகுட் பொன்னி, கீப் இட் அப்" அன்னைக்கும் என்னெ ரொம்ப பாராட்டினாங்க. அதுக்கப்பறம் அம்மாவே செல்லம்மாகிட்ட சொல்லிட்டாங்க, 'இனிமே பொன்னிக்கு ஊட்டி விடாதே, அவனே சாப்பிட பழகட்டும்' என்றார்கள்

"சாப்பாட்ட வெச்சிக்கிட்டு என்ன யோசிக்கிட்டு இருக்க, சீக்கரம் சாப்பிடு, எனக்கு ஆபிசுக்கு டயம் ஆச்சு" அம்மா சொல்ல வேகம் வேகமாக சாப்பிட்டு ஸ்கூலுக்கு ரெடியானேன்

"பொன்னி, சாவிய பத்தரமா வெச்சுக்க"

"சரிம்...மா"

"ஸ்கூல் முடிஞ்சதும் நேர வீட்டுக்கு வந்துடு"

"சரிம்...மா"

"யாரு கதவ தட்டினாலும் திறக்காதே"

"சரிம்...மா"

"எதாவது சொல்லனும்னா எனக்கு இல்லாட்டி அப்பாவுக்கு ஒடனே போன் போடு"

"சரிம்...மா"

ஸ்கூலுக்கு போக அம்மாவுடன் கெளம்பினேன்.

செல்லம்மா இருந்தப்ப, ஸ்கூலுக்கு கெளம்பி ரெடியானதும் "எனக்கு திருஷ்டி சுத்தி, தம்பி ரொம்ப சுமார்டா இருக்க நீ, என் கண்ணே பட்டும்" னு சொல்லும்

அம்மா அதெல்லாம் செய்யவில்லை. என்னை ஸ்கூல்ல விட்டுவிட்டு அம்மா சொன்னாங்க

"பொன்னி, இன்னும் ஒருவாரத்துக்கு தான் அம்மா ஸ்கூல்ல கொண்டுவந்து விடுவேன், அப்பறம் நீ எங்கூடவே கெளம்பி, ஸ்கூலுக்கு தனியா வந்திடனும் சரியா ?" ன்னு கேட்டாங்க

"சரிம்...மா, பை... பை"

அவுங்களும் "பை.. பை பொன்னி, சீ யூ ஈவினிங்" னு சொல்லிட்டு ஆபிசுக்கு போய்டாங்க

எனக்கு தனியா வீட்டுக்கு போகத்தெரியும்! ஒரு நாள் செல்லம்மாவுக்கு ஒடம்பு சரியில்ல. அன்னைக்கு என்னெ ஸ்கூல்ல கொண்டு வந்து உட்டுட்டு க்ளினிக்குக்கு போச்சு, ஆனா ஸ்கூல் விட்டப்ப செல்லம்மாவ காணும், நானே தனியா வந்துட்டேன். ஆனால் செல்லம்மா வந்து தான் வீட்டு கதவ திறந்து விட்டுச்சி.

அன்னைக்கு சாயங்காலம் அம்மாகிட்ட சொன்னேனா, அம்மா நீ ஒரு வீட்டு சாவிய வெச்சுக்கன்னு சொல்லி என் ஸ்கூல் பேக்கல போட்டுடாங்க. அன்னையிலேர்ந்து செல்லம்மாவுக்கு வீட்ல வேலை அதிகமா இருந்துச்சின்னா நானே வீட்டுக்கு வந்துடுவேன்.

இன்னைக்கு ஸ்கூல் ரொம்ப போரடிக்குது, பிரண்ட்ங்கெல்லாம் வந்து 'என்னடா பொன்னி, வெளயாட மாட்டேங்கறான்'னு கேட்டாங்க. நான் ஸ்கூல் முடியர வரைக்கும், செல்லம்மா எனக்கு டாடா சொல்லாம போனத பத்தி நெனெச்சிக்கிட்டு இருந்தேன்.

மதிய சாப்பாட்டை நானே சாப்பிட்டேன். ஆறிப்போயிருந்தது.

போன வெள்ளிக்கிழமை வரைக்கும் செல்லம்மா, சரியா ஸ்கூல் ப்ரேக்கப்ப வீட்லேர்ந்து சூடாக மதிய சாப்பட்டை எடுத்துவந்து, அதுவே ஊட்டிவிடும், ப்ரன்ட்ஸ் செல்லாம் கிண்டல் பண்ணுவாங்க, சில சமயம் எனக்கு வெக்கமாக இருக்கும்.

"தம்பிக்கு வெக்கத்தப்பாரு" செல்லம்மாவும் கூடவே கிண்டல் பண்ணும்

ஸ்கூல் முடிச்சிருச்சி, அம்மா சொல்லி இருக்காங்க, நேரா வீட்டுக்கு போகனும், வர்ற வழியில ப்ளே கிரவுன்ட பாத்துக்கிட்டே போனேன்.

செல்லாம்மா என்னை ஸ்கூல்லேர்ந்து கூட்டிட்டு வர்றப்ப, இந்த ப்ளே கிரவுண்டுக்கு அழைச்சிட்டு போகும், என் கூட அதுவும் வெளயாடும்.

செல்லம்மா கூட வெளயாடுனதை நெனெச்சிக்கிட்டு வந்தேனா, வீடு வந்திடுச்சி.

வீட்டுக்கு வந்து கதவை திறந்து உள்ளே வந்தேனா, வீட்டுல யாரும் இல்லாததால் கொஞ்சம் பயமா இருந்திச்சு. கதவை சாத்திவிட்டு உள்ளேர்ந்து பூட்டிட்டேன். "அப்பறம் உள் தாப்பாவும் கண்டிப்பா போடனும்" அம்மா சொன்னது ஞாபகம் வந்துச்சி.

வெளியில போய்ட்டு வந்தால் மூஞ்சில தூசி படிஞ்சிருக்குமாம் ... செல்லம்மா சொல்லும். எப்பவும் ஸ்கூல்லேர்ந்து வந்ததும் செல்லம்மா என் முகத்தை கழுவிவிடும். அதுதான் என்னோட சாக்ஸ், ஷூவெல்லாம் கழட்டி விடும். ஷூவையும், சாக்சையும் கழட்டி ஓரமாக வைத்துவிட்டு, பாத்ரூம் சென்று முகத்தை கழுவிக்கொண்டேன். ஒரு மாதிரியாக இருந்துச்சி. செல்லம்மாவ பார்க்கணும்னு-னு தோனிச்சி

ஆல்பம் எங்கே இருக்கும்னு எனக்கு தெரியும், எடுத்து வைத்தேன்.

போன் அடித்தது

"ஹலோ"

"நான் அம்மா பேசுறேன்"

எனக்கு கொஞ்சம் சந்தோசமாக இருந்தது

"ஹலோ அம்மா"

"பொன்னி நீ பத்தரமா வீட்டுக்கு வந்திட்டியான்னு பாக்கத்தான் போன் பன்னினேன்"

"சரிம்...மா"

"நல்லா தூங்கு, தூங்கி எழுந்ததும். ரொம்ப நேரம் டீவி பாக்கக்கூட்டாது சரியா ?

"சரிம்...மா"

"கிச்சன்னல ஸ்னாக் வெச்சிருக்கேன், எடுத்து நாலு மணிக்கு சாப்பிடு"

"சரிம்...மா"

"சரி, மதியம் நல்லா சாப்பிட்டியா ? "

"சாப்பிடேன்ம்மா"

"என் சமத்து, அப்புறம் பொன்னி, அம்மா வேளை நேரத்தில மறந்துடுவேன், நாளையிலேர்ந்து வீட்டுக்கு வந்தோன எனக்கு போன் பண்ணிடு சரியா ?"

"சரிம்...மா"

"சீ யூ " சொல்லி வைத்துவிட்டார்கள்

நான் போட்டோ ஆல்பங்களை கொஞ்ச நேரம் புரட்டி பார்த்துக்கொண்டுருந்தேன். செல்லம்மா இருந்த எல்லா போட்டோவிலும் நானும் கூடவே இருந்தேன். ஆல்பத்தை மூடி ... அது இருந்த இடத்தில் வைத்துவிட்டு படுக்கைக்கு சென்று படுத்தேன். தூக்கம் வரவில்லை. கொஞ்சம் பசி எடுத்து.

முன்னெல்லாம் நாலு மணிக்கு பிஸ்கட் அல்லது பழம் எதாவது ஒன்றை செல்லம்மா சாப்பிடச் சொல்லும். அதான் அம்மா என்னை நாலு மணிக்கு சாப்பிடச் சொன்னாங்க. கிச்சனுக்கு சென்று டப்பாவை திறந்து பிஸ்கட்டை எடுத்து தின்றேன். . 'தம்பி பிஸ்கட் சாப்பிடும் போது கூடவே தண்ணி குடிக்கனும் இல்லேன்னா தொண்டையில் அடச்சிக்கும்' தண்ணீரை எடுத்து குடித்தேன் ... செல்லம்மா சொல்லிகுடுத்திருக்கு. செல்லம்மா இருந்த அறையை பார்த்தேன், நன்றாக சுத்தம் செய்யப்பட்டு பொருள்கள் எல்லாம் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. துணி துவைக்கப் போடும் கூடையில் செல்லம்மாவின் புடவை ஒன்று கிடந்தது. எடுத்துட்டுப்போக மறந்துடிச்சி போல, அம்மா கிட்ட சொல்லனும். கொஞ்ச நேரம் அதைப்பார்த்துக் கொண்டிருந்தேன்

அப்பறம் திரும்பவும் வந்து படுத்து கொண்டேன். செல்லம்மா கூட நான் பீச்சுக்கு போனது, கோவிலுக்கு போனது எல்லாம் மாறி மாறி நினைவுக்கு வந்தது. கடிகாரத்தைப் பார்த்தேன் மாலை ஐந்து மணியாகி இருந்தது. எழுந்து போய் டீவியை போட்டு கார்ட்டூன் பார்த்தேன். தூக்கம் வருவது போல் இருந்தது.

செல்லம்மா சொல்லும் 'தம்பி, ரொம்ப நேரம் டீவி பாக்காதே கண்ணு கெட்டு போயிடும், அப்புறம் அம்மா கிட்ட சொல்லிடுவேன்' நினைவுவர டீவியை அணைத்துவிட்டு படுக்கைக்கு சென்று ரொம்ப நேரம் விழித்துக் கொண்டே இருந்தேன்.

காலிங் பெல் கிர்ர்ர்ர்னு அடித்தும் எழுந்து திறந்தேன்.

அம்மா வந்து விட்டார்கள்

"பொன்னி நல்லா தூங்கினியா ?"

"இல்லம்மா, எனக்கு தூக்கம் வரல"

"சரி, ஸ்னாக் சாப்பிட்டியா ?"

"சாப்பிட்டேன்மா"

"போயி முகம் கழுவிட்டு வா, சாமி கும்பிடணும்"

"சரிம்...மா"

பேஸ் வாஷ் பண்ணிவிட்டு திரும்பவும் கார்டுன் பார்த்தேன். அம்மா சாமி கும்பிட கூப்பிட்டாங்க. நானும் அம்மாவும் சாமி கும்பிட்டோம், அப்பாவும் வந்துவிட்டார்.

"என்னங்க அங்க டீ இருக்கு, பொன்னிக்கு ஊத்தி கொடுத்துட்டு நீங்களும் சாப்பிடுங்க, அப்படியே அவனை படிக்க சொல்லி பாத்துக்குங்க"

"சரி நான் செய்றேன், அதான் செல்லம்மா இப்ப இல்லயே, நாம தான் எல்லாத்தையும் பாத்துக்கணும், உனக்கு எதாவுது ஹெல்ப் பண்ணனும்னா சொல்லு" என்றார் அப்பா

அப்பா கூட கொஞ்ச நேரம் கேரம் விளையாடிவிட்டு, படிக்க ஆரம்பித்தேன். செல்லம்மாவுக்கு படிப்பு சொல்லிக்கொடுக்க தெரியாது. எங்கிட்டேர்ந்து தான் கொஞ்ச கொஞ்சமாக இங்லீஸ் கத்துகிச்சு

அம்மா, அப்பா, நான் மூவரும் சாப்பிட்டு முடித்தோம்

"அம்மா, சாப்பிட்டு பல்லு விளக்கணுமாம், செல்லம்மா சொல்லியிருக்கு" என்றேன்

"வெரிகுட் பாய், போய் வெளக்கிட்டு வந்துரு, சீக்கரம் படுத்தாதான் காலையில சீக்கரம் எழுந்திருக்க முடியும்" என்றார்கள் அம்மா

அப்பா, அம்மா நான் நடுவில் படுத்துகொண்டோம். அம்மாவும் அப்பாவும் செல்லம்மாவை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்புறம் தூங்கிவிட்டார்கள்.

எனக்கு தூக்கம் வரவில்லை. அம்மாவும் அப்பாவும் நன்றாக தூங்கி கொண்டிருந்தார்கள்.

நான் மெதுவாக எழுந்து கதவை திறந்து கொண்டு ஹாலுக்கு வந்தேன். கொஞ்சம் இருட்டாக இருந்தது. அப்படியே செல்லம்மாவும் நானும் தூங்கும் அறைக்கு வந்தேன், அங்கும் கொஞ்சம் இருட்டாக இருந்தது.

நேராக சென்று செல்லாம்மாவின் புடவை எடுத்து கொண்டு வந்து, அருகில் இருந்த கட்டிலில் ஏறி படுத்துக்கொண்டேன்.

ஹாலில் லைட் போட்டது மாதிரி தெரிந்தது. அம்மாவும் அப்பாவும் வந்துவிட்டார்கள் என நினைக்கிறேன். அம்மா 'பொன்னி ஏன் இங்க வந்து படுத்தேன்னு கேப்பாங்களே' கண்ணை மூடிக்கொண்டேன், அருகில் வருவது மாதிரி தெரிந்தது

"என்னங்க, இங்க வந்து தூங்கிறான், எழுப்பாம அப்படியே தூக்கிட்டு வந்து நம்ம பெட்ரூம்ல படுக்கவைங்க"

"அதுக்கு தான் நான் அப்பவே, சொன்னேன் செல்லம்மாவை இன்னும் இரண்டு வருசம் கழிச்சி அனுப்பலாம்னு"

"என்னங்க பண்றது, அவனே அவனுக்கு வேண்டியதை எல்லாத்தையும் செஞ்சு பழகிக் கொண்டான், அதுதான் செல்லம்மாவை அனுப்பலாம்னு முடிவுபண்ணினேன்"

"எனக்கு என்னவோ, இவன் ஏங்கிடுவானோன்-னு பயமா இருக்கு"

"அதுக்காக தாங்க ... செல்லம்மாவை ப்ளைட்டுக்கு அனுப்பும் முன்பு இவனைக் தூர கூட்டிக்கிட்டு போய் வேடிக்கை காட்டுங்க என்று ஜாடை காட்டினேன் ...எல்லாம் ஒருவாரத்துல சரியாயிடுங்க, செல்லாம்மாவும் அதோட பையனை நாலுவருசமா பாக்காம தானே இருந்திச்சு?"

"நீங்க ஒண்ணும் பயப்படாதிங்க, ஒருவாரத்தில எல்லாத்தையும் மறந்திடுவான், நான் நாளைக்கு அவனுக்கு வெளக்கமா சொல்லுகிறேன்"

"என்னமோ நீ தான் சொல்ற..."

"செல்லம்மா நாளைக்கு சிலோன்லேர்ந்து போன் பண்றேன்னு சொல்லியிருக்கு... பொன்னிய பேசச் சொல்லுவோம், பயப்படாதிங்க"

"சரி, பொறுத்துதான் பார்ப்போம்" என்றார் அப்பா

நான் கேட்டுக்கொண்டிருந்தேன் ஆனால் கண்ணை திறக்கவில்லை. திரும்பவும் நான் அப்பா அம்மாவுக்கு இடையில் படுக்க வைக்கப்பட்டேன்.

'ஆமாம்ல... செல்லம்மா சொல்லியிருக்கு, அதுக்கும் ஒரு பையன் இருக்கானாம் அவனுக்கு ஆறு வயசாகுதாம், அவன் பேரு முத்தழகனாம், போட்டோ கூட காட்டியிருக்கு. அவனும் என்னெ மாதிரிதானே செல்லம்மா இல்லாம கஷ்டப்பட்டிருப்பான், இனிமே முத்தழக்குக்கு ஜாலி ! செல்லம்மா கூடவே அவன் இருக்க போறான், நாளைக்கு செல்லம்மா பேசும்போது மறக்காம முத்தழகு நல்லா இருக்கானான்னு கேட்கணும், அம்மாவுக்கு சிரமம் கொடுக்காமல் சீக்கிரமே காலைல எழுந்திடணும் ....' என நினைத்துக் கொண்டிருக்கும் போது... இப்ப நல்லாத் தூக்கம் வருது.

குட் நைட்.

பின்குறிப்பு : இரத்த சம்பந்தபட்ட உறவுகள், நட்பு உறவுகள் இவற்றைத் தாண்டி செவிலியர் (பணிப்பெண்) என்ற ஒரு உறவும் உள்ளது. கடமையென்று செய்யாமால், அம்மா, பெரியம்மா, சித்தி, பாட்டி, அத்தை போன்று எந்த உறவுக்குள்ளும் இல்லாமல் ... ஆனால் அதற்குண்டான உணர்வுகளுடன் எல்லாவற்றையும் செய்து ... உணர்வுகள் கண்டுகொண்ட அந்த உறவு நிரந்தரமாகப் பிரியும் போது அது ஏற்படுத்தும் உணர்வுகளை சொல்ல முயன்ற ஒரு சிறுகதை இது. நீங்களோ அல்லது உங்கள் குழந்தைகளோ செவிலியர்களிடம் வளர்ந்து... அவர்களை பிரிய நேரிட்டபோது ... நீங்கள் அவர்களிடம் கண்டது ... உறவா ? உணர்வா ? இங்கே பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.


உங்கள் பாராட்டுக்கள் வாக்குகளாக மாறும் என்ற நம்பிக்கை இருக்கிறது :)

படம் : நன்றி http://in.rediff.com/

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்