பின்பற்றுபவர்கள்

29 ஜூன், 2006

குறை ஒன்றும் இல்லை ...

சில மனிதர்களைப் பார்க்கும் போது ஏதோ ஒரு சலனம் ஏற்படுகிறது ? இவர்களால் எப்படி வாழ முடிகிறது என்ற கேள்வி இதயத்தை பிழிவது எல்லோருக்குமே ஏற்படும் உணர்வு. சில கேள்விகள் ஏற்படும் பொழுது பதில் அதிலேயே இருக்கும். நாம் தான் புரிந்து கொள்வதில்லை.

குறை ஒன்றும் இல்லை ...



விண் மீன்கள் அருகருகே இருந்தாலும்
கண் மீன்கள் இல்லாததால்,
வண்ணங்களைக் கண்டிடாத
இருண்ட வானம் எனது.

ஐம்புலனில் ஒரு புலன்
பலன் இன்றி புண்ணாகிப் போனாலும்,
தலைகோதும் தாய்விரல் அன்பையும்,
பூக்களின் பரிசம் மென்மையையும்,
வீசும் தென்றல் நறுமண வாசத்தையும்,
வாதியங்கள் இசை அமுதையும்,
கைப் பிடிக்கும் கரங்கள் மூலம்
மனிதநேயத்தையும் அறிந்து கொண்டேன் !

வெற்றி நடைபோட்ட என்னிடம்
கண் இல்லை யென்பதால்
காய்க்காமல் இருந்ததில்லை என
உரசிச் சொன்னது ஒரு மரம்.
விழியில்லை என்று வண்ணமாக
பூக்காமல் இருந்ததில்லை என்று
முட்களால் தைத்துச் சொன்னது
ரோஜாச் செடி !
அகக்கண் திறந்து நாற்புலன்களில்
நானிலம் அறிந்தேன் !

அழகு இலக்கணம் தெரியாத குறை
சிலக்கனங்களாவது உனக்கில்லையா ?
அன்பாக கேட்ட அன்பரிடம்
அன்பாக நான் சொன்னேன்,
விழியில்லை என்பதால்
தொலைந்து போனது
பார்க்கக் கூடாத அவலங்களும் தானே !

என்னிடம்,
குறையொன்றும் இல்லை !
குறையொன்றும் இல்லை !

தட்டுக்கள்


அன்று ஒருநாள்
ஆலயம் நோக்கிச் சென்ற
என்னிடம் 'அய்யா போடுங்கள்' என்ற
தட்டேந்திய பிச்சைக்காரனுக்கு
தடவிய பாக்கெட்டில்
நூறன்றி வேறில்லை என்பதால்
சில்லரை தட்டுப்பாடு !
பிச்சைக்காரன் என்றாலே
எரிச்சல் வரும் என்னில்
மேலும் எரிச்சல் வர,
இல்லையென்று
செய்கை செய்து, கை
விரித்துக் காட்டிவிட்டு
ஆலயம் உள்ளே வந்துவிட்டேன்

அமைதியான தரிசனம்,
ஆராதனை முடிந்ததும்,
கரிசனமாய் நீட்டிய
காணிக்கைத் தட்டிற்காக
தடவிய அதே பாக்கெட்டில்
புடைப்புடன் இருப்பைச்
சொல்லியது அதே நூறு ரூபாய் !
வேறென்ன செய்ய ?
போட்டுவிட்டு வந்துவிட்டேன் !
இடையிடையே
சாமி தரிசனத்திலும், அந்த
தரித்திர முகமே நினைவுக்குவர
மீண்டும் சொல்லிக் கொண்டேன்
பிச்சைக்காரன் என்றால்
எனக்கு எரிச்சல் தான் !

28 ஜூன், 2006

கடன் (ஹைக்கூ கவிதை) :

க்கூ ... க்கூ ஹைக்கூ என கூவும் ஹைக்கூ ரசிகர்களுக்காக. மூன்று வரியில் கவிதை இல்லை ... கதை சொல்வது தான் ஹைக்கூ. கவிதைகளை விட ஹைக்கூ எனக்கு மிகவும் பிடித்தது. சுருக்கமாகவும், சுருக்கென்றும் இருப்பதால் ஹைக்கூ கவிதைகள் பலருக்கும் பிடிக்கும்.இன்றைய ஹைக்கூ இதோ ...


பெற்ற கடன்


மணக்கோலத்தில் மகள்
பெற்ற 'கடன்'
கண்ணீருடன் தந்தை !

27 ஜூன், 2006

அந்நியன் பகுதி 2 :

அந்நியன் என்றதும் தமிழ்மணத்தில் உலாவரும் அந்நியன் (வெங்கடரமணி) பற்றியதல்ல இந்த பதிவு. சாச்சாத் விக்ரம் நடித்த அந்நியன் பற்றியது தான். அது என்ன இரண்டாம் பாகம் என்று முதல் பாகத்தை தேடாதீர்கள். முதல் பாகம் ஒரிஜினல் அந்நியன் படம்தான், இந்த இரண்டாம் பாகம் சின்ன ட்ரெயலர் ... மூச் ... சிவாஜி முடிச்சிட்டு அடுத்தது இந்தபடம் என்று இயக்குனர் சங்கர் யாரிடமும் சொல்லக் கூடாது என்று ரகசியமாக என்னிடம் மட்டும் கதை சொன்னார்.

இடம் எமலோகம், எமதர்மனின் அவை:



அந்நியன் கைகள் கட்டப்பட்டு எமலோகத்தில் நிற்கிறார், அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.





எமன் : யோவ் சித்ரகுப்தா, இவனுக்குத் தான் ஆயுள் முடியலயே, அதற்குள் ஏன் இவனைப் பிடித்து வந்தாய் ?

சித்ர குப்தன் : மண்ணிக்கனும் யஜமான், இந்த அந்நியன் என் வேலையில தலையிட்டு எனக்கு வேட்டு வெச்சுடுவான் போல இருக்கிறது. இந்த புகார்களை படித்துப் பாருங்கள் உங்களுக்கே புரியும்.

என்று புகார்கள் அடங்கிய ஓலையை கொடுக்கிறார்.

எமன் : உன் மீது உள்ள குற்றச்சாட்டுகளுக்கு என்ன பதில் சொல்கிறாய் ?

அந்நியன் கரகரத்த குரலில்,

அந்நியன் : என்ன குற்றச்சாட்டு ?

எமன் : குற்றச்சாட்டு ஒன்று, எருமை மாடுகளைவிட்டு ஒருவனை கொலை செய்திருக்கிறாய்.

அந்நியன் : ஆமாம் அவனை கொஞ்சி கேட்டும் காரை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான் அதனால் அநியாயமாக ஒரு உயிர்போய்விட்டது.

எமன் : அந்த உயிருக்கு நாங்கள் தேதி குறித்தும், காப்பாற்ற முயன்றது நீ செய்த குற்றம், அதுமட்டுமல்ல, நீ காரை நிறுத்தி சொன்ன இடத்தில் பெரும் டிராபிக் ஜாம் ஆகி, அந்த ட்ரைவர் போலிஸ்காரர்களால் எச்சரித்து அனுப்பப்பட்டிருக்கிறார், அவர் கோர்டில் பைன் கட்டிய ரசீதும் வைத்து இருக்கிறார், நீ இது எதும் தெரியாமல் அந்த அப்பாவியை எருமைகளை விட்டு கொலை செய்திருக்கிறாய்.

அந்நியன் : வேறென்ன குற்றச்சாட்டு சொல்கிறீர்கள்?

எமன் : குற்றச்சாட்டு இரண்டு, எண்ணைக் கொப்பறையில் ஒரு அப்பாவி கேன்டின் ஓனரை பொறித்தது.

அந்நியன் : அப்பாவியா அவனா ? பல்லி விழுந்த சாப்பட்டை சப்ளை பண்ணிவிட்டு, தின்னா செத்தா போய்டுவாங்க?ன்னு தெனாவெட்டா கேள்வி கேட்குறான் அதான் அவனை பொறிச்சேன்

கேன்டின் ஓனர் கனல் கண்ணன் அவசரமாக : எமராஜா, சமையக்காரன் தலையில பல்லி விழுந்திடுச்சிங்க, அவன் எங்கிட்ட வந்து 'பல்லி தலையில விழுந்த செத்துடு வாங்களான்'னு கேட்டான், நான் சொன்னேன், 'ஒருவாரமா குளிக்காத உன் தலையில பல்லி விழுந்தா அதுதாண்டா செத்துடும்' னேன், அறைகுறையா காதில வாங்கின இந்த படுபாவி அந்நியன் என்னை ஒன்னுக்கு போக கூட விடாம அநியாமா மசாலா தடவி பொறிச்சிட்டான்.

எமன் : என்ன மிஸ்டர் அந்நியன் இதுக்கு என்ன சொல்லப்போற ?

உடனே அந்நியன் தலைகுனிகிறார்

எமன் : குற்றச்சாட்டு மூன்று, ஒரு ஆட்டோ மொபைல் ஓனரை அட்டை பூச்சியை விட்டு கொன்றது

அந்நியன் : மஹா ராஜா, நீங்க மேல சொன்ன குற்றச்சாட்டுகளை ஒத்துக்கொண்டாலும், இதை நான் ஒத்துக்கவே மாட்டேன், ஏன்னா ? இவன் கம்பெனி செஞ்ச ப்ரேக் ஒயர் ரொம்ப மோசம், அதனால் நிறையபேர் அல்ப ஆயுளில் சாகுராங்க, இதை நான் கண்ணால பார்த்தேன், இதை கேட்டா எனக்கு லஞ்சம் கொடுக்கிறேன்னு சொல்றான்.

ஆட்டோ மொபைல் ஓனர் : எம ராஜா, எந்த மோட்டார் பைக் ப்ரேக் ஒயரும் மூன்று வருசத்துக்கு மேல் தாங்காதுங்க, இவன் அறுந்ததா சொன்னது ஐந்து வருசத்துக்கு முன் வாங்கினதுங்க, ஐந்து வருசமா ஓவராலிங் செய்யாத மோட்டர் பைக்கிலேர்ந்து தான் அது அறுந்துதுங்க, லஞ்சம் வாங்க வந்தியானு நான் கேட்டதை, லஞ்சம் வாங்கிக்கிறாயான்னு கேட்டேன்-னு நினைச்சு என்னை அனாவசியமா கொன்னுட்டான் பாவி, எனக்கு 2 பொண்டாட்டியும் ஒரு சின்ன வீடும் இருக்குங்க, அவுங்கல்லாம் இப்ப கஷ்டப்படுராங்க எஜமான்

எமன் : யோவ், அந்நியன், என்னய்யா இதல்லாம் ? உன்ன தலைகீழாக கட்டி தொங்கவிட்டு தீ வைக்க சொல்கிறேன்

உடனே அந்நியன் மயங்கி சரிந்து விழுந்து, அம்பியாக எழுகிறார்,

அம்பி : என்னை சுத்தி நிக்கிறாளே, இவாள்லாம் யாரு, எதாவது ட்ராமவுக்கு வேசம் போட்டுட்டு வந்திருக்கேளா, என் பாட்டி சொல்ற கருட புராண கதையில வர்ரவா மாதிரியே இருக்கேளே. என்று குடுமையை முடிந்துகொண்டே பயந்து கேட்கிறார்





எமன் : சித்ர குப்தா என்ன இது, இவன் ஏன் திடீர் என்று இப்படி பேசுகிறான் ?

சித்ர குப்தன் : நான் செல்கிறேன் எஜமான், இந்த அம்பி தான் நெஜம், ஆனா அடிக்கடி இவன் அந்நியனா மாறி நம்ம வேலையில தலையிடுறான், அடிக்கடி டீவியில் வருகிற, 'கிரைம் வாட்ச்' பார்த்து அந்நியனா மாறுகிறான், அப்பப்ப திருட்டுத்தனமா எம்.டிவி பார்த்து ரெமோ வாகவும் மாறுகிறான்.

அம்பி : என்னென்னுமோ பேசிறேள், நேக்கு ஒன்னும் புரியமாட்டேங்குறது, எனக்கு பயமா இருக்கு, நீங்கெல்லாம் என்னை விட்டுங்கோ ஆத்துல அம்மா என்னை தேடுவாள்.

அந்த சமயத்தில், இந்திரலோகத்து மேனகா அங்குவர, அதைப்பார்த அம்பி, துள்ளிக்குத்து ரெமோவாக மாறுகிறார்

ரெமோ : அல்லோ, மோனிகா, ஹவ் வார் யூ ?



மேனகா : ஐயோ ராமா, சாரி ரெமோ, நான் அந்த மாதிரி பொண்ணு இல்ல.. மோனிகா இல்லை நான் மேனகா

ரெமோ : ஐ நோ, மேனகா இட் ஈஸ் ஓல்டு நேம், மோனிகான்னு மாத்திக்க, அதுதான் நல்லாயிருக்கு, நீ மொதல்ல, உடம்பு புல்லா கவர் பன்ற ஓல்ட் காஸ்டியூம சேஞ்ச் பண்ணி, டூ பீஸ் அது இல்லாட்டி மிடி போட்டுக்க அதுதான் இப்ப பேஷன்.

எமன் தலையில் அடித்துக்கொண்டு,

எமன் : சித்ர குப்தா, எனக்கு கோபம் வர்ரத்துக்குள்ள இவனுக்கு தண்டனை கொடுக்க தூக்கிட்டுபோகச் சொல்லு,

சித்ர குப்தன் : எஜமான் இவனுக்கு ஆயுள் முடியவில்லை... இவனை மாற்றுவதற்கு ஒரே ஒரு வழி தான் இருக்கு

எமன் : உடனே சொல்லு, என்ன செய்ய வேண்டும் ?

சித்ர குப்தன் : எஜமான் ... கருட புராணத்தில் உள்ள 'ரோம சம்ஹாரம்' செய்யனும், இவன் தலையில உள்ள முடிக்கு தீ வைச்சிட்டா, இவன் இனி தலைய சிலுப்பி ... மாறி மாறி அவதாரம் எடுக்கமாட்டான்.

எமன் : உடனிடியாக தலைக்கு தீவைத்து, பின் மொட்டையடித்து பூலோகத்தில் இவனை தூக்கிப் போடு, அப்படியே இவன் வீட்டில் உள்ள டிவியையும் உடைத்து நொறுக்கு.

அடுத்தகாட்சி அம்பியின் வீட்டில் ...

தீ காயங்களுடன், மயக்கம் தெளிந்து அம்பி எழுந்து, தலையை தடவிபார்த்து,


அம்பி : என்னது டீவியெல்லாம் உடைஞ்சு கிடக்கிறது, யாரு என்ன பண்ணினா? ஐயோ, நான் ஆசை ஆசையாய் வெச்ச குடுமி எங்க போச்சு, பெருமாளே, என்ன சோதனையிது, சாதுவா இருந்த என்னை இப்படி சேதுவா மாத்திட்டாளே, அவாள்லாம் நன்னாயிருப்ளா, பகவானே எல்லாத்தையும் பாத்துண்டு இருக்கியே.

என்று அழுதபடி வெளியே வருகிறார்

காதலை முதலில் யார் சொல்வது ?

யதார்த்தங்களை அனைவரும் விரும்புகிறோம், யதார்த்தம் பேசுவரை பாராட்டுகிறோம், யதார்த்தங்களை ஏற்றுக்கொள்வதில் மட்டும் தயங்குகிறோம். இது ஆண், பெண் அனைவருக்கும் பொருந்தும். பெண்கள் யதார்தம் பேசினால் ஆண்களால் பொருத்துக் கொள்ள முடியுமா ?

காதலை முதலில் யார் சொல்வது ?




எந்த சந்தர்பத்தில் சொல்வது
என்று எண்ணியே,
ஆண்டுகள் ஐந்தாகி விட்டன,
மனதில் உள்ள மழைத்துளிகளின்
குளிர் காற்றை இன்றாவது
இறக்கி சொல்லிவிட வேண்டும் !
இதே உணர்வுகள்,

அவளுக்கு இருக்குமோ ?
யார் முதலில் சொல்வது ?
நாணம் பெண்களை தடுப்பதால்,
பெண்ணிய வாதியான நான்
எதிலும் பெண் முதல் என்றதிலிருந்து
சற்றே பின்வாங்கினேன் !

இதைச் முதலில் சொல்வது
நானாகவே இருக்கட்டும் என்ற,
பெரும் தன்மையுடன்,
'என்று முதலில் அவளை சந்தித்தேன் ?,
என்று அவள் என் மனதில் இடம்பிடித்தாள் ?,
என்றெல்லாம் சொல்லிவிட்டு
அவள் முகம்பார்த்தேன் !

இருக்காது என்று நான்
நினைத்ததற்கு மாறாக,
அவளும் 'அவன் போட்டு'
அதே கதையை சொல்லிய பின்,
'தூக்கம் வருகிறது', என
சீக்கரம் படுத்துவிட்ட
என் மனைவியை நினைத்து,
படுக்கை அறை
இருளில் இருண்ட என் முகம்
எனக்கு மட்டுமே வெளிச்சம் !

26 ஜூன், 2006

கைப்பு போட்ட ஆறு !

கைப்புவை கலாய்த்தால் தான் சங்கத்துல சேர்த்துக்குவோம், கைப்பு எப்படி ஆறு போடுவார் என்று எழுதும்படி சங்கத்தினர் என்னை கலாய்த்ததை தொடர்ந்து, கைப்பு மறுபடியும் கையில் சிக்கிக் கொண்டார்.

கைப்புவும், பார்த்தியும் விளம்ப்ர பலகை எழுதும் வேலை பார்த்துக்
கொண்டிருக்கிறார்கள். பார்த்தி சற்று மேலே சாளரத்தில் நின்று கொண்டிருக்கிறார்.
கைப்பு கீழே நின்று சுவற்றில் ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறார்


பார்த்தி : மிஸ்டர் வேலு உன்னை பழைய பெயின்ட மட்டும் சுரண்டுன்னு சொன்ன, என்ன பண்ணுகிட்டு இருக்க ?
கைப்பு: கொஞ்சம் பொறுப்பா, விவராமா சொல்றேன், நம்ப புள்ளெங்கலெள்ளாம் சேந்து, அண்ணே நீங்க ஆறு போடம்னுனே, அதப் பாத்து எங்க கண்ணுல ஆறாப் பெருகனும்ணே கண்ணீரு ... உனக்கு படிக்கத் தெரியதுன்னு சென்னவங்க கண்ணுல மண்ணப் போடனும்ணே மண்ண-ன்னு' பய புள்ளைங்க அழுதுச்சு. அத பாத்து பொங்கிப் போயி ஆறு போடுறேன்பா ஆறு...

பார்த்தி : என்னது நீ படிச்சிருக்கியா ?
கைப்பு: இப்பிடியெல்லாம் கேக்கக் படாது, நான் ஆறாம்பு ... என்று நிறுத்துவதற்குள்
பார்த்தி : நீ ஆறாவது படிச்சிருக்கியா ?
கைப்பு: ஆமப்பு ஆறாம்பு ஆறுதடவை படிச்சிருக்கேன்
பார்த்தி : அடச்சீ ... ஆறுவருசம் படிச்சிருக்கேன்னு சொல்கிறியே உனக்கு வெட்கமாயில்ல ?
கைப்பு: எதுக்கு வெட்கப்படறது... சின்னப்புள்ளத் தனமால்ல இருக்கு... அம்புட்டு படிச்சத சொல்றதுல என்ன ... வெட்கம் ?
பார்த்தி : சரி சொல்ல வந்தத சொல்லு ... அப்பயும் ஆறுமட்டும் தான் போடத் தெரியுமா ?
கைப்பு: போடுவன் அப்பு, இதோ பாரு அண்ணெ எப்படி ஆறு போட்டிருக்கேன்னு
பார்த்தி : என்னது நீ அண்ணனா ? வெண்ணை ! ஆறு போட்டேன்னு சொல்லிட்டு ஒன்பது போட்டுவெச்சுருக்கே
கைப்பு: சத்தியமா, இது ஆறுதான் அப்பு, சொன்னா நம்பனும்
பார்த்தி : அப்ப நான் பொய் சொல்றேன்னு சொல்றியா
கைப்பு: அப்படி சொல்லப்பு
பார்த்தி : ஓ அப்ப நான் படிக்கதவன்னு சொல்லவர்ற
கைப்பு: அட எதசொன்னாலும் மடக்குறியேப்பு
பார்த்தி : வெண்ண மறுபடியும் சொல்றேன் ... இப்ப நீ போட்டது ஒன்பது ஒன்பது ...
கைப்பு: யப்பா... எனக்கு கோவம் வரவெக்காதப்பு ... அப்புறம் ?
பார்த்தி : என்ன வெட்டிப்பயல்னு இப்ப நீ சொன்ன
கைப்பு: நான்... எப்ப சொன்னே ...?
பார்த்தி : இப்பதானே சொன்ன, எனக்கு கோவம் வரவெக்காதேன்னு, அப்படின்னா நான் வெட்டிப்பயலா ?
கைப்பு: சரி விடு ... நீயே சொல்லு இது ஆறா, ஒம்போதா
பார்த்தி : அப்படி வழிக்குவா எ வென்று
கைப்பு: எங்கோயே கேட்ட மாதிரி இருக்கே ... எ எ .. ஒன்னுமில்லப்பா
பார்த்தி : அப்படியே மேல ஏறி வா
கைப்பு: வந்துட்டன்... ப்பா ... வந்துட்டேன்
பார்த்தி : நல்லா கண்ண அகலமா ஒப்பன் பண்ணி பாரு... நீ போட்டது ஆறா, ஒன்பதா ?
மேலிருந்து பார்கும் போது ஆறு ஒன்பதாக தெரிகிறது
...வடிவேலு குழம்பி போகிறார் ... 'பய சரியாத்தான் சொல்றான்'

கைப்பு: தப்பு பண்ணிட்டம்பா ... தப்பு... நீ சரியாத்தான் சொல்ற ... அதுக்குதாம்பா படிக்கனும் ... அதுக்குதாம்பா..... படிக்கனும்
என்று புலம்புகிறார்
பார்த்தி : இப்ப புரியுதா, உன்னை பெயின்ட் சுரண்டுற மட்டும் சொல்லியிருக்காங்னு ...
கைப்பு: புரிஞ்சி போச்சுப்பா, நல்ல புரிஞ்சு போச்சுப்பா
பார்த்தி : புரிஞ்சிடுச்சில்ல ... அப்ப போயி நீ போட்ட ஒன்பதை நல்ல சுரண்டி எடுக்கனும்
கைப்பு: செஞ்சிடுறேம்ப்பா
என்று கீழே இறங்குகிறார். அந்த சமயத்தில் வடிவேலு மனைவி சோறு கொண்டுவருகிறார்
கைப்பு: அப்பு என் ஆளு சோறு கொண்டுவந்திடுச்சி ...
கிழே இறங்கிவந்த பார்திபன்
பார்த்தி :இந்த நாட்டுக்கட்டைத் தான் பொண்டாட்டியா ?
கைப்பு: ஆமாப்பு, பேரு ஆறாயி ... பாவம் புள்ளதாச்சி பொம்பள... ஆறுமாசம் முழுகாம இருக்கா
பார்த்தி : இங்க மட்டும் ஆற கரக்டா போ .... சாரி... ஆறுமாசம் ஆக்கியிருக்க... என்று நாக்கைக் கடித்துக் கொண்டு நிறுத்துகிறார்.
கைப்பு: அப்பு, மனுசன்னா எதாவது ஒரு விசயத்துல தெரமை இல்லாம இருக்காது
பார்த்தி : தத்துவம் ... இப்ப ...
கைப்பு: போதும்பா போதும் விட்டுடு ... நான் நிம்மதியா சாப்புடுனும் ... பருக்கையில் மண்ணப் போட்டுடாத என்று கையெடுத்து கும்பிடுகிறார்

நாம் ஒருவர் ?

ஏதோ ஒரு நாள் மின்னல் வெளிச்சத்தில்
இதயம் இடம் மாறியதாக உணர்ந்து கொண்டோம் !
உனக்கு என்னைப் பிடிப்பதால்,
எனக்கு பிடித்தது, உனக்கு பிடித்தது,
என தனியாக எதுவும் இல்லை
என்று சொல்லிக் கொண்டோம் !

அன்று முதல் எனக்கு பிடித்தது உனக்கும்,
உனக்கு பிடித்ததுதான் எனக்கும் பிடிக்கும்
என்றெல்லாம் பேசிவந்தோம் !

காலவேகத்தில் கைபிடித்ததும்,
எனக்கு பிடித்தது, ஏன் உனக்கு பிடிக்கவில்லை ?
உனக்கு பிடித்தது, ஏன் எனக்கு பிடிக்கவில்லை ?
என்ற கேள்வியில், பதில் பிடிபடாமல் போனதால்,
உனக்கு பிடித்தது, எனக்கு ஏன் பிடிக்க வேண்டும் ?
என்று நினைக்கிறாய், கட்டாயப் படுத்துகிறாய் ?
என்ற கேள்வி ஒன்றுபோல் கேட்டு கொண்டோம்.

உனக்கு பிடித்தது உனக்கு பிடித்ததாகவே இருக்கட்டும் !
எனக்கு பிடித்தது எனக்கு பிடித்ததாகவே இருக்கட்டும் !
என்ற சமாதான ஒப்பந்தத்தில்,
நாம் என்பது ஒருவரல்ல இருவர் என்ற
நிதர்சனம் உணர்ந்து கொண்டோம்.

25 ஜூன், 2006

இலங்கைத் தமிழர் நிலை குறித்து ...

இலங்கையின் உள்நாட்டில் நடக்கும் தற்போதைய போர் சூழல் நிலை பெரும் கவலை அளிக்கிறது. இலங்கைத் தமிழ் மக்கள் முகவரி மறுக்கப்பட்டவர்களாக, அகதிகள் என்று இலக்குத் தெரியாத படகுகளாய் இந்திய ஆதாரவைத் தேடி தமிழக கரைகளில் ஒதுங்குகின்றனர். அவர்கள் இடம் பெயர்வது வெளினாட்டு வேலைக்குச் செல்வதுபோல் பொருளீட்டவோ, இனப்பெருக்கம் செய்வதற்கோ அல்ல. தங்கள் உடமைகளை இழந்தாலும், உயிரைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்ற சிறு நம்பிக்கையினால் மட்டுமே.

நமது இந்திய பத்திரிக்கைகளும், அரசியல் கட்சிகளும் குறிப்பாக தமிழ் பத்திரிக்கைகளும், மற்றும் ஏனைய ஊடகங்களும் இலங்கைத் தமிழர் என்றாலே வேண்டாத விருந்தாளிகள் போல் எண்ணி, அவர்களின் துயர்பற்றி எழுதுவதில்லை. மேலும் இவர்கள் இலங்கை அப்பாவித் தமிழர்களையும், இனப் போராளிகளையும் ஒரே தட்டில் வைத்துப் பார்த்து எதிர்கருத்துக்களையே வெளியிடுகின்றனர்.

எங்கோ பாலஸ்தீனத்திலும், இஸ்ரேலிலும் நடக்கும் வன்முறைகளுக்கு குரல் கொடுத்து, கண்ணீர் சிந்தி, அது பற்றி பேசும் கட்சிகளும், சமூக அமைப்புகளும் சக தமிழன் செத்துமடிவதைப் பற்றி கண்களைக் கூடத் திறந்து பார்பதில்லை.


இந்திய மண்ணில், அதுவும் தமிழ் மண்ணில் நடந்த படுகொலை ஒவ்வொரு தமிழனுக்கும் இழுக்கும், மண்ணிக்க முடியாததும் தான். ஆனால் படுகொலையில் கணவனை பறிகொடுத்தும், தூக்கு தண்டனைக் கைதிகளுக்காக பாராளு மன்றத்தில் பேசிய காங்கிரஸ் கட்சித் தலைவியைவிட நமது இந்திய பத்திரிக்கைகளும், அரசியல் கட்சிகளும் என்ன துன்பம் அனுபவித்தார்கள் ? காங்கிரஸ் கட்சித் தலைவியே மன்னித்துவிட்டு மனிதனேயம் பார்க்கும் போது, அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக இவர்கள் தொடர்ந்து எதிர்நிலையிலேயே இருப்பது எதை சாதிப்பதற்காக வென்றே தெரியவில்லை.

இலங்கை தமிழர்கள் உள்ள தற்போதைய நிலையில், சக தமிழர்களான நாம் அனுதாபம் கொள்ளாவிட்டாலும், அவர்களின் மனம் புண்படும் படி அவமறியாதை செய்யாமல் இருப்பது நன்று.


இதை எழுதியபின்,
இன்று கடைசியாக கிடைத்த நற்செய்தி : போராளிகளை நேரிடையாக பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அதிபர் அழைப்பு.
போர் மேகம் கலையும் என்று நம்புவோம் !

சில நேரத்தில் சில கவிதை ...

கவிதை ரஜினி மாதிரி எப்போவரும், எப்டி வரும்னு எழுதறவருக்கே தெரியாது. அப்படி எழுதியது இது ...

இந்த பூக்கள் விற்பனைக்கு !

ஆயிரம் பூக்கள் மலர்ந்தது ! தோட்டத்துடன்
அத்தனையும் மொத்த விற்பனைக்கு !
ஒருவரிச் செய்தியில்
ஓடிய செய்தி தெரிவித்தது !

24 ஜூன், 2006

கடிகள்

எச்சரிக்கை இரத்த சோகை உள்ளவர்கள் இந்த கடிகளில் சிக்கி உங்களிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச இரத்தத்தையும் இழந்துவிட வேண்டாம்.
இது கடியா ? என்று கேட்பவர்கள் தங்களின் கழுத்தை தடவிப்பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.



கண்ணுசாமி : எம் பொன்டாட்டி நான் கிளிச்ச கோட்ட தாண்டமாட்டா ?
பொன்னு சாமி : அவ்வளவு நல்லவங்களா ?
கண்ணுசாமி : கரித்துணி பிடிக்க வச்சுக்குவா, எங்க வீட்டு சமயல்கட்டுல என்னோட கோட்டு தான் கரித்துணி

ரமா : கவிஞனை காதலிச்சது பெரிய மடத்தனாம போயிடுச்சுடி !
உமா : ஏன்டி என்ன ஆச்சு ?
ரமா : உண்மைக் காதல் என்றால் அது தோல்வியில் முடியனும்னு சொல்லி வசனம் பேசி கைகழுவிட்டு போய், இப்ப தாடியோட அலையுரான்டி

ராமு : எங்கப்பா என்னை சகிலா படம் பாக்கிறப்ப பாத்துட்டார்
சோமு : ஐயையோ, அப்புறம் வகையா மாட்டிக்கிட்டியா ?
ராமு : அம்மாக்கிட்ட மூச்சு விட்டு என்னை மாட்டிவிட்டுடாதேன்னு கெஞ்சி கேட்டுக்கிட்டார்

பெண்ணின் அப்பா : நீங்க பெருந்தன்மையா 'பெண்ணை புடவையோடு அனுப்புங்க அதுபோதும்னு' சொல்றதுல எங்களுக்கு உடன்பாடு இல்லை.
சம்பந்தி : பராவாயில்லை, உங்களுக்கு விருப்பம் எதுவோ அதை செய்யுங்க அது போதும்.
பெண்ணின் அப்பா : சம்பந்தி தப்பா நெனெச்சிக்காதிங்க, என் பெண்ணுக்கு புடவை கட்டத் தெரியாது, வேண்டுமானால் சுடிதார்போட்டு அனுப்புகிறோம், அதுதான் சொன்னேன்.

கலா : இப்பெல்லாம் நான் சந்தோசமாக இருக்கிறேன், எங்க வீட்டுக்காரர் வீட்டுக்கு லேட்டா வருகிறார் !
மாலா : தினமும் அர்சனா ஸ்வீட்டு தானா ? கொடுத்துவச்சவடி நீ !, அதுதான் இப்பல்லாம் எனக்கு போன் பன்றதே இல்லையா ?
கலா : விசயம் அது அல்ல, இப்பத்தான் நிம்மதியாக மெகா சீரியல்களை முழுசா பார்க்கமுடியுது, இல்லாட்டி என்ன ஆச்சுன்னு உனக்கு போன் பண்ணி பண்ணி கேட்க வேண்டியது இருக்கும்.

சுப்பு : என் மனைவி காலையில் சீக்கரமே எழுந்துடுவா
குப்பு : அப்போ எல்ல வேலைகளையும் அவுங்கதான் பார்பாங்க, நீங்க கொடுத்து வச்சவங்க !
சுப்பு : நீ வேறப்பா, அவ காலையில் சீக்கிரம் எழுவதே, என்னை எழுப்பி வேலைசெய்ய சொல்வதற்குத்தான்

23 ஜூன், 2006

வடிவேலு விற்ற முறுக்கு ... (காமடி கலாட்டா)

வடிவேலு முறுக்கு டின்னை சைக்கிளில் கட்டிக்கொண்டு ஓட்டியபடி, ஒரு குறுக்கு சந்தில் கூவிக் கொண்டே வருகிறார்...

வடிவேலு : முறுக்கு முறுக்கு ... அம்மா முறுக்கு முறுக்கு ... தம்பி முறுக்கு முறுக்கு ... அரிசி முறுக்கு ... நெய் முறுக்கு ... ஐயா வாங்குங்க அம்மா வாங்குங்க ... ஆத்தா பாத்து பாத்து செஞ்ச கைமுறுக்கு...

திடிரென்று சைக்கிள் பஞ்சராக, சைக்கிளை ஸ்டான்டு போட்டு நிறுத்துகிறார்.

அந்த நேரம் பார்த்து விசிலடித்துக் கொண்டே சைக்கிளில் வரும் பார்த்திபன் வடிவேலுவை பார்த்துவிடுகிறார். அதை வடிவேலு கவனித்துவிட்டு, பார்க்காதது போல் குனிந்து சைக்கிள் டயரை சீரியசாக பார்கிறார்.

நிதானமாக சைக்கிளில் இருந்து இறங்கிய பார்த்திபன், கிடை ஆடு தனியாக மாட்டிய சந்தோசத்தில் வடிவோலுவிடம் பேச்சு கொடுக்கிறார்.

பார்திபன் : வடிவேலு ?
வடிவேலு : ய்ய...யாருப்பா நீ .... என்று பார்க்காத்தது போல் இழுத்துவிட்டு .... நீ.....யா ?
பார்திபன் : சரி நான் தான் இருக்கட்டும் ... நீ எப்படி இங்க ...
வடிவேலு : ம் ... சைக்கிளுக்கு டயரு இருக்கான்னு பாக்கிறேன் ... நீ கொஞ்சம் பாத்துதான் சொல்றது
பார்திபன் : மிஸ்டர் வடிவேல் நீங்க என்னை தப்பா நெனெச்சுக்கிட்டு இருக்கிங்க ...

கெஞ்சியபடி ...
வடிவேலு : யப்பா யப்பா நான் ஒன்னும் தப்பா நினைக்கிலப்பா, என்ன உடு ... நீ எதுக்கு இங்க வந்தே ?
பார்திபன் : எனக்கு மாடுவாங்க பணம் கொடுத்தெ இல்லெ ... அத ...
வடிவேலு : குடு .. குடு ... சீக்கிரமா குடுத்துட்டு போப்பா ... யப்பா.... யப்பா ஒன்ன தப்பு தப்பா நினெச்சிட்டேம்பா.
வடிவேலு : தப்பு ... பண்ணிட்டம்பா தப்பு .... (உருகுகிறார்)

நக்கலாக,
பார்திபன் : இப்பவும் தப்பு தப்பாதான் புரிஞ்சிக்கிட்டே, நான் உன் கிட்ட பணம் கொடுக்கப் போறேன்னு சொல்லவேயில்ல அதுக்குள்ள அவசரகுடுக்கையாட்டம்...

பணம் வராது என்று மிரண்டபடி..
வடிவேலு : சரி நான் தான் தப்பு பண்ணிடேன்னு வெச்சுக்க ...
பார்திபன் : அட நானும் அத தாம்பா தான் சொல்றேன் ...
வடிவேலு : எந்த எழவோ இருக்கட்டும் ... சரி பணம் கொடுக்க வரலை பின்ன எதுக்கு வந்தே ?

பார்திபன் : அப்படி விவரமா கேளு... பணம் அடுத்த மாசம் தரலாம்னு யோசனைப் பண்ணி ... அதை உன்கிங்ட்ட சொல்லத் தான் தேடிக்கிட்டு இருந்தேன்.

வடிவேலு : அப்ப நீ பணம் குடுக்க வரலையா ...
வடிவேலு : நாமம் போட்டுடான்யா போட்டுடான் ...
என்று புலம்புகிறார்

பார்திபன் : மிஸ்டர் வடிவேலு ரொம்ப புலம்பாதிங்க ... உன் பணத்தை எண்ணி உன்கிட்ட கொடுத்திடுறேன்... ஆனா ஒரு விசயம் எனக்கு தெரிஞ்சாவனும்
வடிவேலு : என்னப்பா தெரியனும் ?
பார்திபன் : நீ இப்ப ... இங்க... என்ன பண்ணிக்கிட்டு இருக்க ?
வடிவேலு : ம்... பாத்த தெரியல... முறுக்கு விக்கிறேன் முறுக்கு
பார்திபன் : எங்க இன்னொரு தரம் சொல்லு பார்க்கலாம் என்ன விக்கிற ?
வடிவேலு : கேட்டுத்தான் பாரேன் ... முறுக்கு முறுக்கு
என்று கூவிகாட்டுகிறார்

பார்திபன் : ரெண்டு முறுக்கு விக்கிறியா ?
வடிவேலு : ரெண்டு முறுக்கு இல்லப்ப, மூனு முறுக்கு ரூவாய்கு மூனு முறுக்கு
பார்திபன் : முறுக்கு தானே விக்கிறே, அப்பறம் ஏன் முறுக்கு முறுக்குன்னு ரெண்டு தரம் சொல்ற, முறுக்குன்னு சொல்லி வித்தா விக்காதா ? முறுக்கு முறுக்குன்னு அடுக்கி சொன்னா தான் விக்குமா ?
வடிவேலு : யப்பா யப்பா... ஊரு உலகத்துல உள்ளவங்க எல்லாமே முறுக்கு முறுக்குன்னு தானே விப்பாங்க .. இது என்ன வில்லங்கமா இருக்கு ?
பார்திபன் : சரி சரி இன்னொருதரம் சொல்லு போய்டுறேன்
'விடமாட்டான் போல ... எப்படியோ போய் தொலையிறேன் சொல்கிறானே' என்று நினைத்த வடிவேலு. கூவி காட்டுகிறார்
வடிவேலு : முறுக்கு... முறுக்கு... நெய்முறுக்கு... முறுக்கு வாங்கலையோ முறுக்கு ... போதுமாப்பா ?... நீ கெளம்பு..
பார்திபன் : என்னது கிளம்பனுமா ... என்ன சொன்ன நெய்முறுக்கா ? எங்க ஒன்னு குடு தின்னு பார்கிறேன்

மனதில் அழுதபடி வடிவேலு எடுத்து கொடுக்கிறார். பார்திபன் வாங்கி கடித்துவிட்டு வேகமாக துப்புகிறார்.
பார்திபன் : தூ .. இது நெய்முறுக்கா ?
வடிவேலு : என்ன அப்படி கேட்டுப்புட்ட .... நெய் முறுக்கு இல்லாட்டி வேற என்ன முறுக்காம் ?
பார்திபன் : இது நெய் முறுக்கு இல்ல ... பொய் முறுக்கு
வடிவேலு : என்னப்பு சொல்லுறிய ...?
பார்திபன் : அதான் பாத்தேனே ... கலையில நீ செட்டியார் கடையில ... 'யோவ் செட்டி ..பாமாயில் அஞ்சு லிட்டுருரு.. பாத்து ஊத்து ... ஒரு சொட்டு குறைஞ்சாலும் ஒனக்கு உடம்புல உயிரு தங்காது' ன்னு சவுன்டு உட்டத
வடிவேலு : பாத்துட்டான்யா பாத்துட்டான் ...ஆமாப்பா ... இந்த முறுக்கெல்லாம் பாமாயில்ல செஞ்சது தான் ... ஒரே ஒரு கரண்டி மட்டும் தான் நெய் உத்தினேன். இப்ப என்ன செய்யனும்கிற...
பார்திபன் : அப்ப எதுக்கு பாமாயில் முறுக்க .. நெய்முறுக்குன்னு பொய் சொல்லி விக்கிறே ?
வடிவேலு : ஊரு ஒலகத்துல எல்லாரும் செய்யறத தாம்ப்பா நானும் செய்றேன் ... உட்டுடுபா
பார்திபன் : உடுறதா ... நீ பாமாயில் முறுக்குன்னு கூவி விக்கிறத பாக்காம நான் எடத்த காலிபண்ண மாட்டேன்.
வடிவேலு : நின்னுட்டான்யா .... நின்னுட்டான் ... அப்படியெல்லாம் சொன்ன ஒருத்தனும் வாங்க மாட்டான்யா
பார்திபன் : அப்ப பொய் சொல்லி பொழப்பு நடத்துற ... இல்லே ?

வடிவேலு பற்களை நரநர வென்று கடித்த படி.. முறுக்கு டின்னை எடுத்து தலைகீழாக ரோட்டில் முறுக்குகள் எல்லாவற்றையும் கொட்டி கோபமாக,
வடிவேலு : கெடுத்துட்டான்யா ... கெடுத்துட்டான் ... எம் பொழப்ப கெடுத்துட்டான்
என்று சட்டைய கிழித்துக் கொள்கிறார்

அந்த நேரம் பார்த்து ஒரு மனநல மருத்துவமனை வேன்வர ... பார்திபன் கையை நீட்டி நிறுத்தி வடிவேலுவை காட்டுகிறார்

பார்திபன் : சார் பாருங்க ... யாரோ முறுக்கு காரனை அடித்து துரத்திவிட்டு ... எல்லாத்தையும் கொட்டிட்டு நிக்கிறான் ... அவன் தான் புடிச்சிட்டு போங்க ...

வடிவேலு துள்ள துள்ள அள்ளிச் செல்கிறார்கள்

வடிவேலு : நீ நல்ல இருப்பியா ? ... பாவி பாவி
என்று கத்தியபடி இருக்க வேனில் திணிக்கபடுகிறார்

கீழே கிடந்த முறுக்கு ஒன்றை எடுத்து கடித்த பார்த்திபன்.

பார்திபன் : நல்லா இருக்கே ... நெசமாவே நெய் முருக்குதான் ... வடிவேல் மிஸ்டர் வடிவேல் ...

வேன் பார்வையிலிருந்து மறைந்துவிட்டிருந்தது

திமுகவில் செந்தில் ?

டி.பி.ஆர் ஜோசப் அவர்கள் பதிவுகளில் எழுதும் நகைச்சுவை கலாட்டாக்களை படித்து வயிறுவலிக்காதவர்கள் இல்லை. அடியேனும் அவர் எழுத்துக்களை படித்து வயிறு குலுங்குபவன். எனக்கும் கொஞ்சம் நகைச்சுவை வரும். இந்த பதிவு ஓட்டுப்பதிவுக்கு பிறகு எழுதியது. நேரமின்மையால் மறந்தே போனேன்.

திமுகவில் செந்தில் ?

கவுண்டமணி : ஏன்டா திருவோடு தலையா, பெருசா சவுண்டு உட்ட, இப்ப இருக்கிற எடம் தெரியலையே ?

செந்தில் : போங்கண்ணே, சினிமாவுல கைகழுவிட்டாங்கன்னு இங்க வந்தா, சரி அத விடுங்கண்ணே !

கவுண்டமணி : நீ ஒரு காமடியன், நீ பைட் பண்ணினா ஜெனங்க ஏத்துப்பாங்களா ?

செந்தில் : அண்ணே, அண்ணே, அது இல்லண்ணே, நான் சொல்லவந்ததே வேற

கவுண்டமணி : இப்ப என்ன ஆயிடுச்சின்னு, முடியில்லதா தலைய போட்டு முட்டிக்கிற ?

செந்தில் : அண்ணே நம்ப காமடியெல்லாம் எடுபடாது போலருக்கண்ணே !

கவுண்டமணி : ஒன்டிக்கு ஒந்தி மல்யுத்தம்னு போட்டு தாக்கிட்டு, இப்ப எதுக்குடா பம்முற

செந்தில் : அண்ணே, அம்மா பக்கம் வைகோ வந்ததால, நாம என்ன காமெடி பன்னிலாலும் ஜெனங்க சிரிக்க மாட்கிறாங்கண்ணே

கவுண்டமணி : வடிவேலு வெச்ச வெடியில நம்ம பொழப்பு நாறிபோச்சுன்னு ஒதுங்குனா, அப்பப்பா இந்த அரசியல் வாதிங்க இருக்கானுங்களே ...

செந்தில் : அதாண்ணே எனக்கும் புரியல ?

கவுண்டமணி : பேசாம ஒன்னு பண்ணு

செந்தில் : என்னண்ணே ?

கவுண்டமணி : திமுக பக்கம் போயிடு !

செந்தில் : அது எப்படிண்ணே, இவ்வளவு கருணானிதிய திட்டிட்டு ?

கவுண்டமணி : அடப் போட, தேங்காத்தலையா ஓடிப் போன கரடிய, அவுங்க திரும்ப புடிச்சி கட்டிக்கலையா ?

செந்தில் : என்னாண்னே புதுச கரடி வுடுறிங்க ?

கவுண்டமணி : நான் கரடின்னு சொன்னது, நம்ப சின்ன பையன் சிம்புவோட அப்பனை தான்டா ஊத்தவாயா !

செந்தில் : இப்ப புரியுதுண்ணே

கவுண்டமணி : நாமல்லாம் காமடி நடிகர்கள், நாம பேசுனதெல்லாம் ஜெனங்க கேட்டு சிரிப்பாங்க கண்டிப்பா சிந்திக்க மாட்டாங்கடா

செந்தில் : அப்ப, கருணாநிதிய திட்டுனத மறந்துடுவாங்கன்னு சொல்லிறிங்களா ?

கவுண்டமணி : ஆமன்டா ஆப்ப வாயா !

செந்தில் : அண்ணே, நீங்க அறிவு ஜீவிண்ணே, நீங்க ஏன்ணே ஒரு கட்சியல சேரக்கூடாது ?

கவுண்டமணி : டேய் உனக்காவது அப்பப்ப அட்வைஸ் அள்ளிவிட நான் இருக்கேன், எனக்கு எவன்டா இருக்கான் ?

செந்தில் : நீங்க சொல்றதும் சரிதான்னே

கவுண்டமணி : அப்படியா ? அப்படியே திரும்பி பார்காம அறிவாலயம் பக்கமா ஓடிபோயிடு, அரசியல் அது இதுன்னு என்ன அடிவாங்க வெச்சுடாதா, வயசாச்சுடா, இந்த எழவெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது

செந்தில் : அண்ணே, அண்ணே !

கவுண்டமணி : மவனே, நீ இன்னும் போவல ?
என்று கோபமாக திரும்ப, செந்தில் ஓட்டமெடுக்கிறார்.

22 ஜூன், 2006

வெள்ளையர் ஆதிக்கம் !

ஒரு ஹைக்கூ... ஹைக்கூ இத்தனை வரிகளில் எழுதவேணடும் என்று என்னென்னுமோ விதிகள் இருப்பதாக சொல்கிறார்கள். நான் புரிந்து கொள்வது என்னவென்றால் ஏதோ சொல்லும் போது, வேறு எதையாவது மறைமுகமாக காட்டுவது என்பதைத் தான். அந்த அடிப்படையில் சில எண்ணங்களை ஹைக்கூ எனப்படும் துளிப்பாவாக எழுதுகிறேன்.




வெள்ளையர் ஆதிக்கம் !

ஊன்று கோலுடன், ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தி,
பங்குசந்தையில் வெள்ளையன் டாலரை வீழ்த்த,
இன்றும் தொடருகிறது போராட்டம் !

வேற்றுமைகள்

வேறுபாடற்ற உலகம் சாத்தியமா ? எல்லோரும் ஒற்றுமையாக இருக்க முடியாதா ? என்ற கேள்வி காலம் காலமாக கேட்கப்பட்டே வருகிறது. வேறுபாடுகளை வைத்துக் கொண்டுதான் பிரபஞ்சம் இயங்கிவருகிறது. வேறுபாடுகள் இல்லையென்றால் இயக்கம் நின்றுவிடும். இந்த வேறுபாடுகளின் கோட்பாடுகளில் காலமும் நேரமும் முக்கிய பங்கு வகுக்கிறது.



மாற்றம் என்ற பெயரில் வேறுபாடுகளில் பின்னால்தான் அனைவரும் செல்கிறேம். வணிகம் செழிக்க வேண்டுமென்றால் உற்பத்தி செய்யும் பொருள்களில் வேறுபாடுகளை உட்புகுத்துகிறோம். மற்றவற்றலிருந்து எந்த அளவுக்கு விலகி செல்கிறதோ அந்த பொருள் சிறப்புடையதாகவே அறியப்பட்டும், போற்றப்பட்டும் வருகிறது. இத்தகைய மாற்றம் நிறைந்த வேறுபாடுகள், நாளொரு பொழுதும் பொழுதொரு மேனியாகவும் நடந்தே வருகிறது.

அசைவு என்ற உயிர்னிலையில் ஒற்றுமை இருந்தாலும் தோற்றம், மற்றும் குணம் என்ற வகையில் உயிரினங்கள் ஒவ்வொன்றும் வேறுபடுகின்றன. ஒவ்வொரு இனத்திலும் பல்வேறு உட்பிரிவுகள் இருந்து ஒன்றைவிட மற்றொன்றை வேறுபடுத்திக் காட்டுகின்றன. இந்த வேறுபாடுகள் உயிரினத்தின் சிறப்பு என்று சொல்லலாம்.

இந்த வேறுபாடுகள் மனித இனத்தின் குணங்களில் அமைந்திருப்பது சிறப்பானது தான். சீனர்களும் ஜப்பானியர்களும் சுறுசுறுப்பில் சிறந்தவர்களாகவும், ஐரோப்பியர்கள் கண்டுபிடிப்பில் முன்னோடியாக இருப்பதிலும் வேறுபாடுகள் இன அடிப்படையில் மதிக்கப்பட்டே வருகிறது.

வேற்றுமைகள் நம் இந்தியர்களிடையே மலிந்து காணப்படுகிறது. மொழியால் வேற்றுமை, இனத்தால் வேற்றுமை. இந்த வேற்றுமைகளின் சிறப்பை வைத்துக் கொண்டு நாம் வளர்கிறோமா ? வேற்றுமைகளை வைத்துக் கொண்டு அடுத்த இனத்தை அல்லது மொழி பேசுகிறவனை இகழவே இத்தகைய வேற்றுமைகள் இடம் தருகின்றன. இந்த வேற்றுமைகள் வேண்டாத வேற்றுமைகளாவே மாற்றோரால் அறியப்பட்டு ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்தவே பயன்படுத்துகிறோம்.

ஒரு வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்குமே இரத்தவகை மாறுபடும் பொழுது, எந்தவிதத்தில் தங்களை உயர்வாகவும், மற்றோரை தாழ்வாகவும் எண்ணத் தோன்றுகிறதோ ! விந்தையாக இருக்கிறது. ஐந்து விரல்களும் ஒன்றுபோல் இல்லை, ஆனால் எந்த விரல் குறைந்தாலும் கைகள் நம்பிக்கை இழந்துவிடும் அல்லவா ?

வலதுகையை விட இடதுகை எந்தவிதத்தில் சிறந்தது ? இடதுகை இல்லாவிட்டால் 'அந்த' வேலையை வலதுகை தானே பார்த்தாகவேண்டும்.

வேற்றுமைகள் என்பது சிறப்புகள், ஆனால் அந்த வேற்றுமையை வைத்துக் கொண்டு தூற்றுதல் செய்தால், வேற்றுமைகள் ஆகிவிடும் வெறும் தோற்றப் பிழைகள்.

21 ஜூன், 2006

சிவப்பு ஆறு !

ஆறு போடுங்கள் என்று நண்பர் பச்சோந்தி (திரு.ராம்பிரசாத்) அழைத்ததன் பேரில், அளந்து போடுகிறேன்.

ஆறுபேரில் ஒருவராக பிறந்ததால் ஆறின் மீது ஆறாத மோகம் உண்டு. அம்மாவும் அவருடன் கூடப்பிறந்தவர்களும் அறுவர். என் பெற்றோருக்கு பேரக் குழந்தைகளும் அறுவர்.

மாத,பிதா,குரு ... என்ற அடிப்படையில் ஆசிரியர்கள்.

மறக்கமுடியாத ஆறு ஆசிரியர்கள் :
1. இரண்டாம் வகுப்பு நேசம்மா டீச்சர்
2. நான்காம் வகுப்பு ஹரிதாஸ் வாத்தியார்
3. ஏழாம் வகுப்பு ஆசிரியர் ராஜகோபல் அய்யங்கார்
4. பத்தாம் வகுப்பு தமிழாசிரியர் அரங்க.சுப்பையா
5. பனிரெண்டாம் வகுப்பு ஆங்கில ஆசிரியர் ஆரோக்கியசாமி
6. கின்டிபொறியியல் கல்லூரி விரிவுரையாளர் சண்முகவேலு

இந்த ஆசிரியர்களிடம் படித்த பாடம் என் நினைவை விட்டு நீங்காதவை.


பிடித்த தமிழர்கள்:
1. திரு சுகி.சிவம்
2. திரு டி.எம்.சவுந்தர்ராஜன்
3. திரு. வலம்புரிஜான்
4. கலைஞர்
5. கவிக்கோ.அப்துல்ரகுமான்
6. தென்கச்சி சாமிநாதன்

பிடித்த கவிஞர்கள்:
1. கவியரசு. கண்ணதாசன்
2. கவிஞர்.வாலி
3. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
4. கவிஞர்.நா.காமராசன்
5. கவிதாயினி.தாமரை
6. கவிஞர் வைரமுத்து
(ஆறுக்குமேல் எழுதக்கூடாதா ?)


தமிழ் அறிஞர்கள் அறுவர்:

1. மொழிஞாயிறு.தேவனேய பாவாணர்
2. பரிதிமார் கலைஞர் சூரிய நாராயண சாஸ்திரிகள்
3. தமிழ் தாத்தா உ.வே.சாமினாத அய்யர்
4. வள்ளலார் இராமலிங்க அடிகளார்
5. திருமுருக கிருபாணந்த வாரியார்
6. மறைமலை அடிகளார்

எழுத்தாளர் அறுவர் :

1. புதுமைபித்தன்
2. சிவசங்கரி
3. ராஜேந்திரகுமார்
4. சு.சமுத்திரம்
5. ஜெயகாந்தன்
6. சுஜாதா

பிடித்த ஆறு பாடல்கள்:
1. உள்ளத்தில் நல்ல உள்ளம் - கர்ணன்
2. பாட்டும் நானே பாவமும் நானே - திருவிளையாடல்
3. துள்ளி துள்ளி நீ பாடம்மா - சிப்பிக்குள் முத்து
4. வெள்ளி பனிமலையில் மீது - கட்ட பொம்மன்
5. காதலின் தீபம் ஒன்று - உன் கண்ணில் நீர்வழிந்தால்
6. ருக்கு ருக்கு ருக்கு - அவ்வை சண்முகி


பிடித்த உணவு :
1. உருளைகிழங்கில் செய்த சைவ உணவு அனைத்தும்
2. தோசையும் வடைகறியும்
3. சரவணபவன் சாப்பாடு
4. தந்தூரி நாண்
5. சைனீஸ் வெஜிடேரியன்
6. மசாலா சுண்டல்

வலைப்பக்கம் தலைவைத்து படுப்பது :
1. தமிழ்மணம்
2. தேன்கூடு
3. தமிழ் ஓவியம்
4. திண்ணை
5. பதிவுகள்
6. புதுமை.காம்

அதிகம் திரும்பி பார்க்கவைக்கும் வலைப்பதிவாளர்கள் :

1.ஞான வெட்டியான்
2.குமரன்
3.பச்சோந்தி
4.முத்து தமிழினி
5.செந்தழல் ரவி
6.மாயவரத்தான்

பொழுது போக்கு :
1. நண்பர்களுடன் நகர்வலம்
2. கவிதை எழுதி இம்சிப்பது
3. கதை எழுத முயற்சிப்பது
4. வலை மேய்வது
5. பாதியின் பதியானதால் பாதிவேலையை பகிர்ந்துகொள்வது
6. ஆறுவயது மகளுடன் விளையாடுவது



சரி தலைப்புக்கு வருவோம்,
எல்லோரையும் போல எனக்கும் பிடிக்காத ஒரு ஆறு உண்டு என்றால் அது இரத்த ஆறுதான்.

சிலருக்கு சில விசயங்கள் மட்டுமே பிடிக்கும் என்று, ஒரு சிலரின் சார்பு நிலைமூலம் நாம் தெரிந்து வைத்திருக்கிறோம். அதையும் தாண்டி பிடித்தவிசயங்கள் நிறைய இருக்கலாம், என்னவென்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது, எனவே தங்களுக்கு பிடித்த ஆறுகளைப் பற்றி 'கவுச்சி' இல்லாமல் எழுதவேண்டும் என்று நான் விருப்புடன் அழைக்கும் வலைப்பதிவாளர்கள் இவர்கள். அவர்களுக்கு தொடர்ந்து பின்னூட்டமிடுபவர்கள் அவர்களிடம் இந்த அழைப்பை சுட்டினால் நன்று.

1. நல்லடியார் - நல்லடியார் ஆறு போட்டுவிட்டார் ... இங்கே ... 'ஆறு'தல்
2. நேச குமார்
3. விடாது கறுப்பு - கறுப்பு ஆறு போட்டுவிட்டார் ... இங்கே ... பகுத்தாறு
4. விட்டது சிகப்பு
5. மியூஸ்
6. சுவனப்பிரியன் - அவர்கள் காட்டிய எனக்கு பிடித்த ஆறு




19 ஜூன், 2006

உலகமயமாக்கல் ...

உலகமயமாக்கல், நன்மையா தீமையா, கம்யூனிஸ்டுகளும், காங்கிரஸ் காரர்களும் சிண்டை பிடித்து சண்டை செய்யும் வேளையில், நாமும் எதாவது எடுத்துவிடுவோம், என்று நினைத்தேன், யார் கண்டது? இந்த வருட மத்திய அரசு அவார்ட் கிடைச்சாலும் கிடைக்கும் என்று நினைத்துவிட்டு? ச்சே காங்கிரஸ் ஆட்சி அல்லவா நடக்கிறது, யாராவது வந்து லாடம் கட்டினாலும் கட்டிவிடுவார்கள் என்றெல்லாம் நினைத்து எழுதினேன்

சரி கருத்து சுதந்திரம் என்று சமாளித்து வைப்போம். ரொம்ப எதிர்பார்க்காதீர்கள், ஒரு மூன்று வரி புதுக் கவிதை.

உலகமயமாக்கல் :



ஏழைகளும் கூட பயனடைகிறார்கள் !
ஆம் ! மானத்தை மறைத்தது
சீனக் கோவணம் !

(கம்யூனிஸ்ட் பார்டிங்களெல்லாம் ஜோரா கைத்தட்டுங்க)

17 ஜூன், 2006

வலைப்பூ - ஒரு முழம் கொடுங்க !

வலைப்பூ நண்பர்களுக்காக சுவையாகவும், புதிய பதிவாளர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளை நகைச்சுவை உரையாடலாகவும் கொடுத்திருக்கிறேன். இந்த வரிசையில் இது மூன்றாவது பதிவு

முதலிரண்டு இங்கே,

வலைப்பூ - ஒரு கால் கிலோ குடுங்க ...
வலைப்பூ ? கிலோ என்ன விலை ?

கற்பனையான பெயர்களுக்கு பதில், கற்பனையான வலைப்பூக்களின் பெயர் இடம் பெருகிறது.




நேர் பார்வை : எனக்கு தெரிந்து நடுனிலை பதிவாளர் என்றால் 'வர்ண தாசனின் நினைவுகள்' என்று எழுதுபவர் தான்.
ஆதவன் நிழல் : எப்படி சொல்கிறீர்கள் ???
நேர் பார்வை : தன் பெயரில் எழுதும் போலி தன்னைவிட நன்றாகவே எழுதுவதாக போலியை வாழ்த்தி பதிவு ஒன்றை போட்டிருக்கிறார் பார்த்தீர்களா ?


ஓடக்காரன் : 'சிந்தனை சிகாமணி' பதிவாளரை நேரில் சந்தித்து வந்தீர்களே அவருடன் உறையாடிய அனுபவம் எப்படி இருந்தது ?
இரவின் ஒளி: நிஜமாகவே அவர் சிந்தனையாளர்தான், பார்த்ததுமே தெரிஞ்சுக்கிட்டேன்.
ஓடக்காரன் : அப்படியா ??? !
இரவின் ஒளி: அவருடைய தலையில் ஒரு முடிகூட இல்லையின்னா நீங்களே முடிவுபண்ணிக்குங்க


நாட்டு நடப்பு : வர வர நம்ப வலைப்பதிவாளர்கள் மத்தியில் கோஷ்டி தொல்லை அதிகமாக போய்விட்டது ?
நெஞ்சின் ஏக்கம்: ஏ.....ன் என்ன நடந்தது, கோஷ்டியா வந்து பின்னூட்டம் போட்டு கலங்கடிக்கிறாங்களா ?
நாட்டு நடப்பு : அப்படி இருந்தா தான் பரவாயில்லையே ?
நெஞ்சின் ஏக்கம்: பின்ன ?
நாட்டு நடப்பு : எதோ 'பின்னூட்ட மறுப்பாளார் குழுவாம்', யார் எழுதினாலும் மருந்துக்கு கூட அவுங்க குழுவில் இருக்கிறவர்கள் பின்னூட்டம் போடவே மாட்டார்களாம்.


புதிய பதிவாளர் : அண்ணே பின்னூட்டம்னா என்ன அண்ணே ?
பழம் தின்னவர் : இது கூடத் தெரியாதா ? ... வயைக் கொடுத்து எதையோ .... சாரி வாங்கிக் கட்டிக்கொள்வது தான்.
புதிய பதிவாளர் :இன்னொரு சந்தேகம் இந்த மீள்பதிவு ???
பழம் தின்னவர் : திடீர்னு யாரோ உங்க வீட்டுக்கு வந்துடுராங்க, அப்ப பழைய இட்லிதான் இருக்கு என்ன செய்விங்க ? உடனே உதிர்த்து உப்புமா செய்ய மாட்டீர்களா ? இல்லையா ? அதாவது எழுதுறத்துக்கு விசயமே இல்லேன்னு வையுங்க... இன்னைக்கு எப்படியாவது ஒரு பதிவு போடனும்னு நெனெச்சுடுறீங்கன்னு வையுங்க என்ன செய்விங்க ? பாத்து பாத்து எழுதினபதிவு, யாரும் கவனிக்காமல் போன பதிவு இது மாதிரி பழையபதிவு ஒன்றை எடுத்து இட்லி உப்புமா செஞ்சு மீள்பதிவுன்னு போடனும் புரியுதா ?
புதிய பதிவாளர் : இந்த மட்டுறுத்தல் ....?
பழம் தின்னவர் : உங்க வீடு திறந்திருந்தா என்ன நடக்கும் ? வேண்டாதவர் யாராவது நுழைஞ்சிடுவாங்கள் இல்லையா ? கதவை மூடிவெச்சுட்டு லென்சு வழியா வந்திருப்பவர் ஆபத்தானவரான்னு பார்த்தற்கு அப்பறம் அவரை அனுமதிப்போம் இல்லையா ? அதுதான் மட்டுறுத்தல்

அன்பு ஆதவன் : அந்த நட்சத்திர பதிவாளர் இவ்வளவு தூரம் போவருன்னு யாரும் எதிர்பார்க்கவில்லை
எண்ண வேள்வி : என்ன ஆச்சு ? பெரிய படைப்பாளராக ஆகிவிட்டாரா ?
அன்பு ஆதவன் : இல்ல ஓய், தனக்கு பின்னூட்டம் போடும் ஆதரவாளர்கள் தான் தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தின்னு சொல்லி, ஒரு பெரிய கட்சியிடம் எம்.எல்.ஏ சீட்டு கேட்டு இருக்காராம்.




16 ஜூன், 2006

வலைப்பூ - ஒரு கால் கிலோ குடுங்க ...

பதிவுகள் பற்றிய முதல் நகைச்சுவை உறையாடலுக்கு பெரும் வரவேற்பு இருந்ததால், இரண்டாவது பதிவு இது. ஏதாவது பதிவுகளைப் படித்து மனம் நொந்து போனால் அப்ப அப்ப வந்து இதை படித்துவிட்டுச் ஆற்றிக் கொள்ளுங்கள். எதோ நான் செய்த சுண்டல் காரமும் உண்டு மணமும் உண்டு என்று நினைக்கிறேன்.



வப 1 : இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை
வப 2 : எனுங்கனும் என்ன ஆச்சு ?
வப 1 : ரொம்ப அக்கரமாக இருக்கு, 'வெட்டறிவாள்' பதிவுக்காரன் அவனோட பதிவுக்கு பதிலுக்கு பின்னூட்டம் போடலைன்னு வக்கில் நோட்டிஸ் அனுப்பி விளக்கம் கேட்டு இருக்கிறான்
(வப - வலைப்பதிவாளர்)


வப 3 : 'கேனையன் பக்கம்' எழுதுகிறவன் ஆதாரம் இல்லாமல் எதையாவது எழுதுகிறான் ! என்று எப்படி சொல்கிறீர்கள் ?
வப 4 : அவன் எழுதுவது எல்லாம் நான் முன்னமே எழுதின பக்கத்தோட நகல் தான், வேண்டுமென்றால் சேமிக்கப்பட்ட எனது பதிவிலிருந்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்


பெரியவர் 1 : என்னங்க மாப்ள படிச்சவனா இருக்கான்னு சொல்கிறீர்கள், பின் ஏன் அந்த சம்பந்தம் வேண்டாம்னு சொல்லிட்டிங்க
பெரியவர் 2 : அந்த பையன் வலைப்பதிவு எழுதுபவனாம், எங்க என் பொண்ண கண்டுக்காம வலைப்பதிவே கதின்னு கிடக்க போறான்னு பயமா இருக்கறதால சரிப்பட்டு வராதுன்னு வேண்டாம்னு சொல்லிட்டேன்


அவர் : என்னங்க அங்க கூட்டமா இருக்கு
இவர் : ஒரு வலைப்பதிவுக்காரன் நாய்களைப் பற்றி கேவலமாக எழுதினான்னு ப்ளூகிராஸ் ஆளுங்க கம்ளயின்ட் கொடுத்தாங்க இல்லையா ? அதுக்குத்தான் போலிஸ்காரங்க வாரண்டோடு வந்திருக்காங்க

எண்ணச் சுமை : எப்படி ஓய் 'குட்டையில் ஊறிய மட்டை' ஒரே நாளில் பிரபளம் ஆனார்னு சொல்கிறீர்கள்
மதில்சுவர் : இது தெரியாதா உமக்கு, அவருடைய பதிவைப் பாரு, முதல் பின்னூட்டமே நமீதா இட்டது தான்.


கனவு தேசம் : இப்படி ஒரு சோகம் நடக்கும்னு நான் பதிவு எழுதின நாளிலேர்ந்து கொஞ்சமும் எதிர்ப்பார்க்கலே
காகிதப் பூக்கள் : என்ன நடந்துச்சின்னு மூஞ்சிய இப்படி வெச்சிருக்கிய ...?
கனவு தேசம் : சொல்கிறதுக்கே கஷ்டமாக இருக்கு, 'நம்பிக்கை துளிர்' னு பதிவு எழுதுபவர், தன்னோட பதிவுகளுக்கு பின்னூட்டம் வருவதில்லைன்னு கடைசியாக ஒரு பதிவு போட்டுவிட்டு தற்கொலைப் பண்ணிக்கிட்டாராம்.

பூட்டு - ஒரு அவமானச் சின்னம்

எவரோ செய்யும் தவறுக்கு, பாதுகாப்பு என்ற காரணங்களுக்காக எல்லோரும் துன்பங்களை அனுபவிக்கிறோம். ஒரு துரோக சின்னம் எல்லோரிடத்திலும் இருக்கிறது அதைப்பற்றிய ஒரு சிறு கவிதை.



பூட்டு - ஒரு அவமானச் சின்னம்

என்றோ ஒருநாள் நற்குணம் என்னும் மனித
சுவாசம் கெட்டு தன் இறுதிநாட்களை
எண்ணும் தருவாயில்,

அவநம்பிக்கை என்ற அப்பனுக்கும்,
துரோகம் என்ற தாய்க்கும் பிறந்த முதல்
குழந்தை நீ !

உன் பிறப்பே கோளாறு என்பதால்
கள்ள திறவுகோலுக்கும்
கதவை திறந்து விடுவாய் !

எந்த கைகள் பிடித்தாலும், உன் திறவுகோள்
திறக்கும், திறவுகோல் அந்த கைகளுக்கு
உறவா என்பது கூட உனக்கு தெரிவதில்லை !

நீ நம்பிக்கையின் சின்னமா ?
இல்லை இல்லை, எம்குலத்தின்
அவமானச் சின்னம் !

15 ஜூன், 2006

எழுத்தில்லாத கவிதை !

ஒருவரியில் கவிதை படித்திருக்கிறேன். ஓர் எழுத்தில் கவிதை படித்திருக்கிறேன். ஒரு சவாலாக நினைத்து எழுதியது இது.

எழுத்தில்லாத கவிதை !



எழுத்தில்லாமல் கவிதை எழுதமுடியுமா ?

கேட்டாள் அவள் !

முடியும் என்றேன் நான் !

எப்படி ? என்ற அவளிடம்
வெள்ளை காகிதத்தை நீட்டினேன்

என்ன இது ? என்றாள்

புரியவில்லையா ?

நீ இல்லாத என் இதயத்தை
தன் வெறுமையால்
வெளிச்சமிடும் கவிதை ஒன்று
இதன்
உள்ளே இருப்பது
உனக்கு
தெரியவில்லையா ?


-கோவி.கண்ணன்

நாம 'லா' காரணம் ?

சிங்கப்பூர் பற்றி தெரிந்தவர்களுக்கு உடனடியாக நினைவுக்கு வருவது law வும் 'லா' (la) வும் தான்.

மரியாதையாக எல்லோரையும் அழைப்பதற்கு ஏற்ற ஒரு சொல்லாகவே, 'லா' சிங்கப்பூர் வட்டாரத்தில் புழங்கி வருகிறது.

மூன்று வயது குழந்தைமுதல் முதியவர்வரை 'லா' போட்டு அழைக்க'லா'ம். தந்தை மகளையும், மகள் தந்தையையும் 'லா' போட்டு அழைப்பதை எங்கும் பார்க்கலாம். இதனால் மரியாதைக் குறைவாக அழைப்பதாக யாரும் எடுத்துக்கொள்வதில்லை. 'லா' என்று அழைப்பதன் 'லா'பம், தெரியாதவர்களையோ, தெரிந்தவர்களையோ ஒருமையில் அழைப்பதா ? பண்மையில் அழைப்பதா ? எந்தவிதத்தில் அழைத்தால் முதலாளிகள் திருப்தி படுவார்கள் என்று நினைக்கத் தேவையில்லை.

கணவனும் மனைவியுமே 'லா' போட்டுதான் பேசுவார்கள். இந்த பழக்கம் நம் தமிழ் வழி வந்திருக்க'லா'மோ என்று எண்ணத் தோன்றுகிறது.
நாம் தான் எல்லாவற்றிர்க்கும் நம்மை அறியாமல் 'லா' போட்டு பேசி வருகிறோம். இல்லிங்க'லா' ?

பாத்திங்க'லா' ?
கேட்டிங்க'லா' ?
சொல்லிறிங்க'லா' ?

'ளா' வுக்கும் 'லா' வுக்கும் வேறுபாடு இருந்தாலும். வட்டாரத்தைத் தாண்டி வழங்கப்படுவதால், எனக்கென்னுமோ இந்த 'ளா' தான் அந்த 'லா' வோன்னு சந்தேகமாக இருக்குது. யாராவது தெரிந்தவர்க'லா' இருந்து விளக்கினால். தெரிந்து கொள்வேன்.

வரட்டுங்க'லா' ?
:)

14 ஜூன், 2006

வலைப்பூ ? கிலோ என்ன விலை ?

பின்னூட்டம், வலைப்பூ என ஏகப்பட்ட பதிவுகளை படித்தாகிவிட்டது. ஒரு சிரிப்பு பக்கம் எழுதி ஒட்டவைக்கலாம் என்று ஒரு சிறு முயற்சி. சிரிப்பு வரவில்லை யென்றால் சொல்லுங்கள் அடுத்து ஒரு சீரியஸ் பதிவு போட்டுடுவோம்.

1. பதிவாளரும் சோசியரும் :
புதிதாக பதிவு தொடங்குபவர் : அய்யா சோசியரே, 'ஓட்டை சட்டி' னு பதிவு ஆரம்பிக்கலாம்னு இருக்கேன், பின்னூட்டம் கிடைக்குமான்னு கிளியை கேட்டு சொல்லுங்கள்.

சோசியர் : அம்மா நமிதா (கிளியைத் தான்) வெளியே வந்து 'ஓனா சான' ங்கிற பேருக்கு ஒரு சீட்டெடுத்து போடு.... தம்பி உங்களுக்கு 'டோண்டு ராகவனோட' படம் வந்திருக்கு, ப்ளாக் ஆரம்பிச்சிங்கன்னா, போலியா யாராவது வந்து உங்கள பிராண்டி எடுத்துடுவாங்க, வீண் முயற்சின்னு நினைக்கிறேன்
(டோண்டு மண்ணிப்பாராக)


2.
வலைப்பதிவாளர் 1 : ஆனாலும் அந்த 'எறும்பின் அறும்புகள்' பதிவு எழுதுபவருக்கு இப்படி ஒரு கர்வம் இருக்கக் கூடாது ?
வலைப்பதிவாளர் 2 : என்ன ஓய் சொல்கிறீர்?
வலைப்பதிவாளர் 1 : பின்ன என்ன ஓய், பின்னூட்டம் போட்டால் இலவசமாக பதிவு எழுதிதருவேன்னு இப்படி பகிரங்கமா எழுதிவிட்டுருக்கிறார்

3.
மாலா : வலைப்பதிவு எழுதுபவனுக்கு காதல் கடிதம் எழுதினது தப்பா போச்சிடி ?
கலா : ஏன்டி என்ன ஆச்சு ?
மாலா : நேரமின்மை காரணமாக படித்துவிட்டு பிறகு பின்னூட்டமிடுகிறேன் என்று எழுதி அனுப்பியிருக்கிறான் ஒன்னும் புரியலடி


4.
மனைவி : ஏங்க சீக்கிரம் தூங்க போறிங்களா இல்லையா, என்ன அர்த்தராத்திரியில லொட்டு லொட்டுனு
தட்டிக்கிட்டு ?
கணவன் : இருடி, ஒரே ஒரு பின்னூட்டம் மட்டும் போட்டுட்டு வந்துடுரேன்
மனைவி : இருங்க, காலையில அந்த கம்பியூட்டருக்கு பின்னூட்டம் போட்டு பரண்மேல தூக்கி வைக்கிறேன்.

5.
ஒருவர் : என்னங்க அங்கே போஸ்டர் ஒட்டுறாங்க ?
மற்றொருவர் : 1000 பதிவும் எழுதியும் தமிழ்மணம் நட்சத்திர பதிவாளாராக ஒருவாரத்திற்கு இருக்க அழைக்காததால ஒரு பதிவாளர் தமிழ்மணத்துக்கு எதிராக கண்டன போஸ்டர் ஓட்டியிருக்கிறார்
.

6.
சரக்குகாரன் : யோவ் பக்கிரி, உங்க ஏரியால அடியாள் கிடைக்குமா ? ஒரே அடியில எழுதுற கை போகனும் ?
பக்கிரி (பதட்டத்துடன்) : என்ன சார், எதாவது பத்திரிக்கைகாரன் உங்களை திட்டி எழுதிட்டானா ?
சரக்குகாரன் : பத்திரிக்ககாரனை நாங்க பாத்துக்குவோமில்ல, அந்த 'பொறுக்கி நண்பன்' என்ற பெயரில் எழுதுகிறவன், என்னுடைய பதிவில் ஆபசமாக திட்டி பின்னூட்டம் போட்டுடான்யா. அவன் கையை எடுக்கனும். ஏண்டா பின்னூட்டம் போட்டோம்னு வாழ்னாள் பூரவும் அத நெனெச்சு நெனெச்சு கதறி அழனும்.

வளர்சிதை மாற்றம் - உணர்ந்து கொண்டேன்

கால்வலிக்க மிதித்து வெறுத்துப் போகும்முன்பே,
கனிவுடன், கேட்கும்முன்பே சைக்கிளுக்கு மாற்றாக,
கண்முன் புதுபைக்கை நிறுத்திய தந்தையை,
கட்டிக்கொண்டு காலில்விழுந்து மகிழ்ந்த நாளா ?

கல்லூரியில் கால் பதித்ததும், புதுநட்புடன்
கனவுலகில் மிதந்தபடி, கனநேர இன்பமென
கான்டின் பக்கத்து மறைவில் காற்றுடன்
கலந்த புகையை கனைப்புடன் விட்டநாளோ ?

வீடன்றி வேறறியேனை, தூரத்து சொந்தம் தம்
வீட்டிற்கு அழைக்க, போவென்று சொல்லிவைக்க,
தயங்கியே முதன்முதலில், தந்தைக்கு சொல்லிவிட்டு
தனியாக பேருந்தில் பயணித்த நாளா ?

நட்ட நடுஇரவில் நண்பர் புடைசூழ
கொட்டம் அடித்து, முதன்முதாலாய் இரண்டாம்
ஆட்டம் பார்த்துவிட்டு, சுவரேறி குதித்து
மொட்டை மாடியில் படுத்துறங்கிய நாளா ?

புத்தகத்தில் மயிலிறகு ? இல்லை இல்லை !
புத்தகத்துள் புத்தகம் மறைத்து வைத்து
பக்கத்தில் எவரும் இல்லையென பார்த்துப்,
பார்த்து பாலியல் பாடம்படித்த நாளா ?

கிளர்ந்துவிட்ட என் குறும்பால், பொறுக்காமல்,
வளர்ந்துவிட்ட என்னை ஒருநாள் கைநீட்டியதற்கு,
தளர்ந்துவிட்ட என்தந்தை மனம்நொந்த வேளையில்
உளர்ந்துவிட்ட என்னுள் நிகழ்ந்தது மாற்றம்.

-கோவி.கண்ணன்

பி.கு: தேன் கூட்டின் "வலைப்பதிவர்களுக்கான" மாதாந்திரப் போட்டிக்காக எழுதப்பட்டது

13 ஜூன், 2006

பேய்களின் ஆற்றல் ...


அறியாமை என்பதை இருள் என்று சொல்வதுண்டு, இருள் சூழ்ந்தி ருந்தால் எந்தப் பொருளும் தெளிவாக தெரிவதில்லை. அது வெற்றிடமாக இருந்தாலும் ஏதோ ஒன்று மறைந்திருப்ப தாகவே இருள் சூழ்ந்த இடத்தில் தனித்து இருக்கும் ஒருவர் பயம் கொள்ளுகின்றனர்.

என்ன தான் நாத்திகம் பேசும் ஒருவராக இருந்தாலும் தன் ஊரை தள்ளி, ஒதுக்கு புறமாக இருக்கும் இடுகாட்டுக்கு நடு இரவில் செல்ல நடுக்கம் கொள்ளுவர் என்பது நிஜம் தான். ஏன் உங்களால் அங்கு தனியாக இரவில் செல்ல முடியுமா ? என்று கேட்டால், உடனடியாக எதிர் கேள்வி கேட்பர், 'நான் எதுக்கு நடுஇரவில் அங்கு செல்ல வேண்டும், அதனால் உனக்கு என்ன லாபம் ?' என்று.

இந்த உலகில் தோன்றிய அனைத்து உயிரினங்களும் தத்தம் எதிரிகளை அடையாளம் கண்டு, அவற்றிலிருந்து தம்மை காத்தோ, எதிர்த்தோ வாழ்ந்து வருகின்றன. முட்டையிலிருந்து வெளியில் வந்த உடன் கோழிகுஞ்சு பருந்துதான் நம் எதிரி தெரிந்து கொள்கிறது. பருந்தைக் கண்டவுடன் தம் தாயின் இறக்கைக்குள் ஒழிந்து கொண்டு தன்னைக் காத்துக் கொள்கிறது. ஒரு வேளை மாட்டிக் கொண்ட கோழிக் குஞ்சை அதன் தாய் கோழி முடிந்த மட்டும் பருந்தை எதிர்த்து காப்பாற்ற முயலுகிறது. இது அனைத்து உயிரினங்களுக்கும், மனிதனுக்கும் பொருந்தும்.

முன்பு காடுகளில் திரிந்தபோது விலங்குகளை எதிரிகளாக நினைத்து அழித்தும் ஒதுங்கியும் வாழ்ந்து வந்தான், பின்பு அவற்றை அடக்கியாள கற்றுக் கொண்டு நாகரீக மனிதனாக மாறியதும் விலங்குகளின் மீதுள்ள பயம் மனிதனுக்கு போயிற்று. இன்றைய மனிதர்கள் தன்னை நேருக்கு நேர் சந்திக்கும் கொடிய மிருகங்கள் எத்தகையாதாக இருந்தாலும் கையில் சரியான தளவாடங்கள் இருந்தால் மோதிப் பார்த்துவிடுகின்றனர். அத்தகைய ஒரு நிகழ்வு தற்செயல் என்று நினைக்க முடிகிறது. மாறக இந்த விலங்கு தன் பரம்பரை எதிரி என்று எல்லக் காலங்களிலும் நினைத்து பயந்தபடி வாழ்வதில்லை.


தனக்கு எதிரி யாரும் இல்லை என்பதால் மனிதன் நாகரீகம் பெற்றவுடன் தன் இனத்தையே எதிரியாக நினைக்க ஆரம்பித்தான். புராண இதிகாச சொர்க்க, நரக கதைகளைக் கேட்டு, இறந்த மனிதன் ஆவியாக அலைவதாக நம்ப ஆரம்பித்தான். அதுவும் ஆவிகள் மனிதனைவிட பலம் பொருந்தியதாக நம்ப ஆரம்பித்து நடுங்க ஆரம்பித்தான். ஆவிகளுக்கு பகலில் வடிவம் கொடுக்க முடியது என்று தெரிந்ததால் அவன் மூளை ஆவிகளை இரவில் நடமாடுவதாக கற்பனை செய்து இருட்டில் இடம் மாற்றியது. இத்தகைய ஆவிபயம் உலக மக்கள் அனைவரிலும் மதங்கள் மூலம் தாக்கப் பட்டிருப்பதால் நாடு, இனம் தாண்டி மனித இனமே தனிமை இருட்டுக்குள் ஆவி இருப்பதாகவும் அவை தம்மை தாக்கக் கூடும் என்றே பயம் கொள்ளுகிறது.


நிலவற்ற இருட்டில் சென்ற ஒருவரை ஏதோ ஒரு விலங்கோ, வவ்வாளோ தாக்க, பேய் தன்னை தாக்கியதாக தானும் நம்பி, தன்னைச் சார்ந்தவர்களுக்கு அத்தகைய பய உணர்வை தோற்றுவித்தான். இவை நம் ஜீன்களின் அடிப்படையில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கலந்துவிட்டதால் நாம் எத்தகைய பலசாலியாக இருந்தாலும், எந்த தத்துவம் பேசுவராக இருந்தாலும் ஆவிகளுக்காக பயப்படுகிறோம்.

ஆவிகள் ஆற்றல் மிக்கது என்றால், வீரப்பனின் ஆவி அவனைவிட ஆற்றல் மிக்கதாக கொடூரமானதாகவே இருந்து தமிழகம் முழுவது கட்டுபாடின்றி, குறிப்பாக எல்லைக் காவல் படையின் பயமின்றி, உயிருடன் இருந்த காலத்தில் அவன் செய்த கொலைகளை விட அதிகமாகவே நடத்திக் காட்டியிருக்கும். ஏன் முன்னாள் முதல்வரை கூட அடித்துப் போட்டிருக்கும். இதேபோல் அயோத்திக் குப்பம் வீரமணியின் ஆவி கடற்கரைக்கு வருவோரையெல்லாம் கடல் நீரில் அமிழ்த்தி கொலை செய்திருக்கும் இருக்கும். இதே போல் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆவி இருப்பது உண்மையா? பொய்யா ? என்ற சர்சைக்குள் செல்ல விரும்பவில்லை. ஆனால் அவைகளுக்கு ஆற்றல் இருப்பதாக சொல்வதை மட்டும்
மறுக்கிறேன்.

12 ஜூன், 2006

வண்ணக் குழப்பம் (ஹைக்கூ)



வண்ணக் குழப்பம் (ஹைக்கூ - குழம்பிய குட்டையில் பிடித்த மீன்)

குழம்பிய வண்ணக் குட்டையை தொட்ட

தூரிகையை பிடித்து கைகள் வரைய தெளிவாக

துள்ளிக் குதித்தபடி ஓவியத்தில் வண்ண வண்ண மீன்கள் !

11 ஜூன், 2006

பெரிய இடத்து வெவகாரம்...

அப்பன் செத்த முப்பதாவது நாள் நம்ப மாதிரி பொது செனம் யாராவது பார்டி கொடுத்து கூத்தடிப்போமா ?

பாஜாகவை கீழறுக்க காங்கிரஸ் ராகுல் மகாஜனை கிளறுவது அரசியல் அடிப்படையில் என்றாலும், முன்பு மத்திய அமைச்சரைவியில் ஆதிக்கம் பெற்றவரின் மகன் என்ற முறையில் நம்மை போன்ற படிப்பறிவு அற்றோருக்கு புலிக்கு பிறந்தது ஏன் புல்லை உண்டது என்ற கேள்வி எழமல் இல்லை.

இந்த லட்சனத்தில் தந்தையின் இடத்திற்கு தனயனை கொண்டுவருவதாக பாஜகவிடம் திட்டம் இருந்தாகவும் சொல்லப்படுகிறது. பிரமோத் மகாஜனுக்கு மகனைப்பற்றி நன்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. அதனால் தான் மகனை அரசியலில் ஈடுபடுத்தாமல் இருந்திருக்கிறார்.

ஒழுங்கீன வாதிகள் அரசியல் வாதிகளாக இருந்தால் அவர்கள் பற்றிய குற்றச் சாட்டு எவ்வாறெல்லாம் பூசி மொழுகப்படும் என்பதற்கு பாஜக நிலைப்பாடுகளே சாட்சி.

பிரமோத் மகாஜன் 50 ஆண்டுகளாக சேர்த்துவைத்த புகழை அவர் இறந்த ஒரே மாதத்தில் கெடுத்துவிட்டார்.

ராகுல் மகாஜன் தான் குற்றவாளியல்ல என்பதை எவ்வாறு நிறுபித்து அதிலிருந்து தப்பிக்கிறா ? என்று பார்ப்போம்.

எதற்கும் இருக்கட்டுமே என்று தற்காலிகமாக பாஜக, ராகுல் மகாஜன் விவகாரத்தால் பாஜகவின் வளர்ச்சி பாதிக்கப்படாது என்று சொல்லி வைத்திருக்கிறது.

8 ஜூன், 2006

படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் ?

இந்திய சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து, பத்திரிக்கைகளின் கருத்துக்களும், பொதுமக்களின் எதிர்பார்ப்புகளும் படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கைகளை வழியுறுத்தி வருகின்றன.

படித்தவர்கள் அரசியலுக்கு வந்தால் நாடு முன்னேறும் என்பது இவர்களின் நப்பாசையே. இன்றைய காலகட்டத்தில் 90% சதவிகிதம் அரசியல் வாதிகள் படித்தவர்களே. நாடு முன்னேறியதா ?

அரசியல் வாதிகளை விட்டுத்தள்ளுங்கள், அவர்கள் பின்னால் இயங்கும் அதிகாரிகளை எடுத்துக் கொள்ளுங்கள் அவர்கள் எல்லாம், ஐஏஎஸ், ஐபிஸ் படித்தவர்கள் தானே ? ஆட்சி மாறுவதும் முதல் வேலையாக இவர்களுக்கு இடமாற்றம், பணிமாற்றமும் செய்யப்படுவது எதற்காக ?

முந்தைய ஆட்சியில் கட்சி உறுப்பினர் போலவே, மாவட்ட செயலாளர்கள் போலவே இவர்கள் செயல்பட்டு அரசியல்வாதிகள் செய்யும் ஊழலுக்கு பாதை அமைத்துக் கொடுத்து, தானும் லாபம் அடைந்ததாலே அவர்களுக்கு அந்த நிலை ஏற்படுகிறது.

சாதரண திருட்டு வழக்கில் மாட்டிக்கொண்ட ஒருவனை உள் ஆடையுடன் நிற்கவைக்கும் காவல் துறையினர், இந்த மேதாவிகளுக்கு சகல சவுகர்யங்களையும் செய்து கொடுத்து சலூய்ட் அடிப்பதும் வேதனையான விசயம். இந்த அதிமேதவிகளை கடுமையான சட்டங்கள் மூலம் பொதுமக்கள் முன் அம்மனமாக நிற்க வைக்க வேண்டும்.

ஆட்சி மாற்றத்தை பொதுமக்களை விட அதிகம் எதிர்பார்பவர்கள் அதிகாரிகள்தான். இவர்கள் படித்தும் என்ன பயன்? நாலந்தர அரசியல் வாதியாக செயல்படுவதைப் பற்றி இவர்கள் கொஞ்சமும் தயங்காத்தற்கு காரணம் நீதிமன்றத்தில் வழக்குகள் நிற்காது என்று நினைப்பதும், அதற்குள் ஐந்தாண்டுகள் ஓடிவிடும், பின் தனக்கு வேண்டிய தலைவர் ஆட்சிக்கட்டில் அமர்ந்து விட்ட பணியை (?) மீண்டும் தொடரலாம் என்ற அபார நம்பிக்கை இருப்பதால் தான்.

இவர்களுக்கு வேண்டிய சகல வசதிகளும் பொதுமக்களின் வரிபணத்திலிருந்து செய்யப்பட்டும், இவர்கள் ஆட்சியாளர்களுக்கு ஆதரவான நிலை எடுப்பதும் எதற்காக ? அரசியல் வாதிகளை கெடுப்பதே இந்த படித்த பண்பில்லாத அதிகாரிகள் தான். தனக்கு ஆகாதவர் பெரும் கட்சித்தலைவர் அல்லது முன்னாள் முதல்வர் என்று தெரிந்தும் நடுஇரவில் புகுந்து கைது செய்து இவர்கள் விசுவாசத்தை வெளிப்படுத்துகிறார்கள். யோக்கியவான் என்று காட்டிக்கொண்டு, சட்டம் தன் கடமையை செய்வதாக கூறி, அப்படி செய்தவர்கள் பின்னாளில் சமுகவிரோதிகளிடம் தொடர்பு கொண்ட முத்திரைத்தாள் மோசடி போன்ற வழக்கிலும் சிக்கியிருக்கிறார்கள்.

படித்தவர்கள் அரசியலுக்கு வந்து ஆட்சிக்கு வந்தால் ஊழல் குறையாது மாறாக விஞ்ஞான அடிப்படையில் ஊழல் செய்து மாட்டிக் கொள்ளாமல் வேண்டுமானல் இருப்பார்கள் மாறாக பொதுமக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்