பின்பற்றுபவர்கள்

31 மார்ச், 2014

இந்துத்துவாவை மறைமுகமாக வளர்பவர் யார் ?

இன்னிக்கு செய்தி ஒன்றை படித்தேன், 'நாணயத்தில் ஸ்ரீவைஷ்ணவதேவி உருவப்படம்: - ' முஸ்லிம் அமைப்புகள் கண்டனம். இந்தியாவில் கண்டனம் செய்வதற்கு காரணங்களே தேவை இல்லை. ஏதாவது ஒன்றை தமக்கு எதிர்ப்பாக நினைத்துக் கொண்டாலே போராட்டம், சாலை மறியல், மனு கொடுப்பது உள்ளிட்டவற்றை செய்துவிடலாம்.

காலம் காலமாக பணத்தை லெட்சுமி, தெய்வம் என்ற பொருளில் தான் இந்தியர்கள் நம்பிவந்தார்கள், இன்றும் நம்பிக் கொண்டார்கள், ஒருசிலரின் மதமாற்றத்திற்கு பிறகு ஒட்டுமொத்தமாக அனைவருமே அந்த நம்பிக்கையை தூக்கி எரியவேண்டும் என்கிற எதிர்பார்ப்புடன் அனைவரும் 'மதச்சார்பின்மை' என்ற போர்வைக்குள் ஒளிந்து கொள்ளவேண்டும் என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

'ஹலல்' என்ற எழுதப்பட்ட கறிவிற்கும் கடையில் 'அல்லா சாமியை வேண்டி' வெட்டியதை நாங்கள் வாங்கமாட்டோம் என்று ஏனைய மதத்தினர் புறக்கணித்தால், கறிக்கடைக்காரர் வயிற்றில் ஈரத்துணியை நனைத்துப் போட்டுக் கொள்ள வேண்டியது தான், இதெல்லாம் விட நாத்திகரும் வாழும் நாட்டில் குழாய் ஒலிப்பெருக்கியில் 'அல்லாஹு அக்பர்' தொழுகை நேர அறிவிப்பு மற்றவர்களின் மதசார்பின்மையெல்லாம் கேட்டு தான் பின்னர் எழுப்பப்படுகிறதா ?

கிட்டதட்ட 95 விழுக்காடு நெல்வயல்களும் தாணியங்களும் பயிறிடும் முன் விருப்ப தெய்வத்திற்கு வேண்டிவிட்டு தான் விதைக்கப்படுகின்றன, அது போன்று அறுவடையில் முதலில் படையலுக்கு எடுத்துவைத்துவிட்டு தான் பிறகு விற்பதற்கான தாணியங்களை அறுத்து எடுக்கிறார்கள், ஏன் விளைச்சல் நன்றாக விளைந்தால் தான் நம்பிய கடவுள் கொடுத்தவையே அவை என்று நம்புகிறார்கள். மேற்கண்ட போராட்ட அமைப்புகள் இந்த தாணியங்களையெல்லாம் வாங்கி உண்ணாமல் எதை உண்ணுகிறார்கள் ? மதச்சார்பற்ற தாணியங்கள் என்று ஏதேனும் விளைகிறதா ?

உலகிலேயே இஸ்லாமியர்கள் மக்கள் தொகையில் முதலில் இருக்கும் இந்தோனிசியாவில் பிள்ளையார் படத்தை ரூபியாவில் அடித்து புழக்கத்தில் விட முடிகிறது, இராமயண நாயகர்களை, இந்து கோவில்களை பணத்தில் அச்சடித்து விட முடிகிறது, அங்கெல்லாம் அந்த நாட்டு இஸ்லாமிய அமைப்புகளிடம் எந்த எதிர்ப்பும் இல்லை.




தீவிரமாக இந்து நம்பிக்கைக் கொண்ட ஒருவன் மேற்கண்ட செய்தியைப் படித்தால் தனக்குள்ளே கேள்வி கேட்கவே மாட்டானா ? இந்து பெரும்பான்மை உள்ள ஒரு நாட்டில் தங்கள் நம்பிக்கை சார்ந்த ஒன்றை கவுரவப்படுத்தும் பொழுது அதனை எதிர்ப்பது தனது நம்பிக்கையை மதிப்பதையும் எதிர்பதாகும் என்று நினைக்கமாட்டானா ?

மதச்சார்பின்மை என்பது எனது எல்லைக் கோட்டிற்குள் நீ வராதே என்பதாகவே புரிந்து கொள்ளப்படுகிறது, அதனால் இந்தியாவிற்கு தேவை மதச்சார்பின்மை அல்ல மதச் சகிப்புத் தன்மையே. இவர்களின் எதிர்ப்பு தேவையற்ற காழ்புணர்வுகளையும் இந்துத்துவத்தை வளக்கவே உதவும். இவர்களது வைஷ்ணவி உருவம் பதிக்கப்பட்ட நாணய எதிர்ப்புணர்வும், இஸ்லாமியர் கடைகளில் பொருள் வாங்காதே என்கிற இந்துத்துவ கோஷமும் ஒன்றே.

இன்னும் இவர்கள் தமிழ்நாட்டு அரச முத்திரையில் இருக்கும் கோபுரத்தை தூக்கவேண்டும் என்று சொல்லாதது வியப்பளிக்கிறது, ஒருவேளை தமிழ்நாட்டின் அரசு சின்னத்தில் கோபுரம் இருப்பதை இவர்கள் கவனிக்கவில்லையோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.

மேற்கண்ட போராளிகள் ஏனைய இஸ்லாமிய நாடுகளில் ஏதேனும் ஒருவகையில் மதம் அல்லது வேலை ஆகிவற்றில் தொடர்பு வைத்திருப்பவர்கள் தான், இவர்கள் ஏன் அந்த நாடுகளில் இவர்கள் விரும்பும் மதசார்பின்மையை பரிந்துரைத்து ஏக உலகத்தில் மதசார்பு அற்ற அரசுகள் ஏற்படுவதை முன்னெடுக்கக் கூடாது ?

16 மார்ச், 2014

மோடி அலையா ? அலையின் நுரையா ?

தற்பொழுது இந்தியாவின் பொதுப் பிரச்சனை என்றால் ஊழல் தவிர்த்து பெரிதாக ஒன்றும் இல்லை, ஊழலே இமாலயமாக எழுந்து நிற்பதால் மற்ற பிரச்சனைகள் பெரிதாகப் பேசப்படுவதும் இல்லை. ஊழல் பிரச்சனைகள் அடிக்கடி மறக்கடிக்கும்படி ஆட்சியாளர்களுக்கு பாலியல் வண்புணர்வு நிகழ்வுகள், குண்டுவெடிப்புகள் அல்லது வழிபாட்டு தலங்களில் பெரும் விபத்து, இயற்கை சீற்றத்தில் பலர் கொல்லப்படுதல் போன்ற தகவல்கள் வரும் பொழுது ஊழல் பிரச்சனைகள் தற்காலிகமாக மறக்கப்படும், 

மொழிவாரி அடிப்படையில் மாநிலங்களைப் உள்ளடக்கிய இந்தியவில் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானவர், பொதுவான கட்சி என்று தம்மை முன்னிலைபடுத்தி வளர்ந்து செயல்படும் அளவுக்கு ஒரு தேசிய கட்சி வருங்காலத்தில் உருவாகுவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஏனெனில் ஒவ்வொரு மாநிலத்தவரும் தத்தம் மாநில வளர்ச்சி அதில் உள்ள பிரச்சனைகள் தாண்டி, தேச வளர்ச்சி என்ற அளவுகோலில் வாக்களிப்பதற்கான வாய்புகள் குறைவு, மாநில கட்சிகள் பலம் பொருந்த்திய எந்த ஒரு மாநிலத்திலும் (தற்பொழுது இருக்கும்) தேசிய கட்சிகள் பெரிதாக வென்றுவிட முடியாது. இது பிரதமரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் என்று உணர்ந்து வாக்களிப்பவர்கள் குறைவே.

உதாரணத்திற்கு ஆளும் தேசியகட்சி, (எதோ ஒரு மாநிலத்தில்) ஆளும் மாநில கட்சி ஆகிய இரண்டுமே ஊழல் கட்சி என்று பொதுமக்களுக்கு வெளிப்படையாக தெரிந்தால் வாக்குகள் அனைத்துமே மாநிலத்தில் அடுத்து பலம் பொருந்திய மற்ற கட்சிக்கு தான் வாக்குகள் சேரும், மற்றபடி அந்த கட்சி பிரதம வேட்பாளரை அறிவிக்காவிட்டாலும் மக்கள் வாக்களிப்பார்கள், அதைத்தான் எதிர்ப்பு வாக்குகள் என்கிறார்கள்.

மோடி அலை தமிழகத்தில் பலமாக வீசுவதாக தமிழக முதல்வர் நம்பி இருந்தால் பாஜகவுட கூட்டு சேர்ந்து  பாஜகவிற்கு 2 - 5  இடம் ஒதுக்கிவிட்டு 38 - 35 இடங்களிலும் அதிமுகவே நின்றிருக்கும்,  ஏனெனில் பாஜகவினர் தங்களுக்கு அதுவே மிகுதி என்றும் தேர்தலுக்கு பின்னர் ஆதரவும் தொடரலாம் என்று நம்பி சேருவார்கள். தமிழகத்தில் காங்கிரசுக்கு எதிர்ப்பே மிகுதியாக உள்ளது, அவை மோடிக்கு ஆதரவாகும் என்று நம்புவதற்கும் இல்லை, ஒருவேளை ஜெ மோசமாக ஆட்சி நடத்தி வந்திருந்தால் ஜெ விற்கு எதிரான மனநிலையில் பலம் பொருந்திய மாற்று கூட்டணிக்கு மக்கள் வாக்களிப்பார்கள். 

தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்களில் தேசிய கட்சிகள் காங் மற்றும் பாஜகவே பலம் பொருந்திய கட்சியாக உள்ளன, அங்கெல்லாம் காங்கிரசின் எதிர்ப்பு வாக்குகள் பாஜகவிற்கு ஆதரவாக அமையலாம்,  தமிழ்நாட்டில் அவ்வாறு நடப்பதற்கு வாய்புகள் குறைவு, அதனால் தான் பாஜக முடிந்தவரை கூட்டணி பலத்தைக் கூட்டி 5 - 10 தொகுதிகளை வெல்லும் வாய்ப்பைக் கூட்டிக் கொள்ளலாம் என்று கூட்டணி அமைக்க தமிழக உதிரிகட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. 

பாஜக கூட்டணியில் சேர்ந்துள்ள விஜய்காந்து தவிர்த்து மற்றவர்களுக்கு பெரிய ஆதயம் இருப்பது போல் தெரியவில்லை, என்ன தான் கூட்டணி உடன்படிக்கை என்றாலும் பாமக ஆதரவாளர்கள் யாரும் தேமுதிகவிற்கு வாக்களிக்கமாட்டார்கள், தேமுதிகவினரும் பாமகவிற்கு வாக்களிக்கமாட்டார்கள், தமிழகத்தில் வடமாநிலத்தில் மட்டுமே இந்த இரண்டு கட்சிகளுக்கும் கனிசமான வாக்களர்கள் உள்ளனர். தென் தமிழகத்தில் இவர்களுக்கு வாக்கு வங்கிகளே கிடையாது. 

இன்னும் திராவிடம் பேசும் வைகோவிற்கு தமிழக பாஜக தொண்டர்கள் வாக்களிப்பார்கள் என்பதும் ஐயமே. வாக்கு பதிவு முடிந்த பிறகு, மொத்த வாக்குகளில்  பாஜக கூட்டணி 15 விழுக்காடு பெற்றிருந்தால்  கூட, என்னுடன் சேர்ந்ததால் பாஜக கூட்டணிக்கு இவ்வளவு வாக்குகளாவது கிடைத்துள்ளது என்று அதனை தம் வாக்கு வங்கியாக விஜயகாந்து அறிவித்துக் கொள்வார். (ஒருவேளை) தோல்விக்கு காரணம் கூட்டணி சேர்ந்த கட்சிகள் எங்களுக்கு ஓட்டுப் போடாமல் ஏமாற்றிவிட்டனர் என்று சொல்லிவிடுவார், அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு கிடைத்த வாக்குகளின் விழுக்காட்டு அளவை சாதமாக்கிக் கொண்டு செயல்படுவார். பஜாக கூட்டணிக்கு தேமுதிக சேர்ந்துள்ளதால் பாஜகவிற்கோ, தேமுதிகவிற்கோ எந்த இழப்பும் இல்லை, பாஜவிற்கு பலனும் இருப்பது போல் தெரியவில்லை.

இந்த தேர்தல் தமிழகத்தைப் பொருத்த அளவில் மும்முனை போட்டி மட்டுமே, ஒன்று அதிமுக, அடுத்து திமுக மூன்றாவது பாஜக கூட்டணி. மீண்டும் திமுகவின் மீது நம்பிக்கை வைக்கும் படி தமிழகத்தில் திமுக எந்த அதியத்தையும் செய்து காட்டாததால் அதிமுகவிற்கே வெற்றி வாய்ப்புகள் மிகுதி. எப்போதும் பாஜக ஆதரவு மனப்பாண்மை உள்ள 'மேட்டுக்குடிகள்' பாஜக நேரடியாக நிற்கும் தொகுதிகளில் பாஜகவிற்கும் மற்ற தொகுதிகளில் அதிமுகவிற்கும் வாக்கு அளிப்பார்கள். அவர்களின் வாக்கு எண்ணிக்கை குறைவு என்றாலும் வெற்றி தோல்வி சில இடங்களில் சில ஆயிரம் வாக்குகள் வேறுபாட்டில் மாறிவிடுகிறது என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும், மோடி அலை என்று காட்டுவதால் அதிமுக வாக்குக்கள் குறையும் என்று நான் நம்பவில்லை.


ஊழல் தேசிய பிரச்சனை என்று உருவாகி தமிழக்த்திலும் நுழைந்துள்ள ஆம் ஆத்மிக்கு தமிழகத்தில் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நம்பமுடியவில்லை. தமிழகம் ஒருவேளை ஊழல் மலிந்த மாநிலமாக உருவானால் ஆம் ஆத்மி வளரலாம். அந்த ஊழல் மலிந்த நிலையை தமிழகம் தொட தமிழர்கள் அனுமதிக்கமாட்டார்கள். மோடி அலை என்று தமிழகத்திலும் கிளப்பிவிடப்படும் மாயை தமிழகத்தில் தேர்தல் முடிவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது .

பிகு : எழுத்து பிழைகளுக்கு மன்னிக்கவும் (எழுதியதை திரும்பவும் படித்துப் பார்க்கவில்லை)

17 பிப்ரவரி, 2014

பாலுமகேந்திரா விட்டுச் சென்ற பாடம் !

செத்த பிறகு ஒருவரை தூற்றக் கூடாதுன்னு சொல்லுவங்க. எனக்கு அதில் உடன்பாடு இல்லை, ஒருவரைப் பற்றிய பல்வேறு தகவல்கள் உரையாடல்கள் பேசப்படும் பொழுது தான் நாமும் அதுபற்றி பேசமுடியும். பாலு மகேந்திரா மறைவை ஒட்டி அவரது அருமை பெருமைகளை கூறி, கூடவே பாலா போன்ற சிறந்த இயக்குனர்களை உருவாக்கி இருக்கிறார் என்றெல்லாம் எழுதுகிறவர்கள் எவரும் பாலுமகேந்திராவின் பெண்கள் மீதான பித்தை இலைமறை காய்மறையாக மட்டுமே கூறிவிட்டு வானளவில் புகழ்கிறார்கள். 

சமுக இணைய தளங்கள் இல்லாத பொழுது பொது மக்களின் கருத்து இவை என்று அரசியல்வாதிகளையோ, திரைகலைஞர்களையோ, சாமியார்களையோ, மதவாதிகளையோ, சாதிவெறியர்களையோ போய் சேராது. ஊடகங்கள் பெரிதாக எதையும் கண்டிக்காது, தகவல் என்ற அடிப்படையில் தான் எதையும் அவர்களால் எழுத முடியும். ஆனால் தற்பொழுது நிலைமையே மாறிவிட்டது, இணையத்தை / சமூக இணைய தளங்களை பயன்படுத்துபவர்கள் சில விழுக்காட்டினர்கள் என்றாலும் அவர்களிடம் தொடர்பு வைத்திருப்பவர்களிடமும் அவர்களால் ஒன்றை விவாதம் செய்து பொதுவான பார்வையை மாற்றிவிட முடிகிறது. ஒரு எழுத்தாளரின் கருத்து கதைவழியாக பல வாசகர்களை அடைவதைப் போல் சமூக இணையத் தளங்களில் எழுதுபவர்கள் வெளியில் பலரிடமும் பேசிக் கொண்டு தான் இருக்கிறார்கள், எனவே சமூக இணையதளங்கள் என்பவை சக்திமிக்க ஊடகங்கள் ஆகிக் கொண்டு இருக்கின்றன என்பதை அறிந்து தான் அரசியல்வாதிகள் உள்ளிட்ட போலி சாமியார் உள்பட அனைவரும் அதன் வழியாகவும் கடைவிரித்திருக்கிறார்கள். 

பாலுமகேந்திரா என்கிற தனிப்பட்ட மனிதன் எப்படி திரைக்கு வெளியே நடந்து கொண்டார் என்பது எனக்கு முக்கியம் இல்லை, அவரது படைப்புகளை தான் நான் ரசிக்கிறேன், புகழ்கிறேன் என்று உங்களால் ஒதுங்க முடிந்தால் தனது படைப்புகளின் மூலம் கிடைத்த புகழ் செல்வாக்கு ஆகியவற்றை பெண்கள் மீது வீசும் வலையாகப் பயன்படுத்தி கொண்டதற்கு நீங்களும் தான் பொறுப்பாகிறீர்கள். நிறை குறை அற்றவர் யார் ? குறைகளைப் பேசவேண்டாமே ? என்று எல்லோரும் மவுனித்தால் பிறகு செத்தால் கூட நம்மை தூற்ற ஆட்கள் உண்டு என்று தவறு செய்யும் முன் எவரும் உணரவே மாட்டார்கள்,

ஒருவரின் மரணித்தின் பிறகு அவரின் இழிசெயல்களை தூற்றுவதன் மூலம் தான், அவரைப் போன்று தவறு செய்ய துணிபவர்களுக்கு நாம் அதை நினைத்துப் பார்த்து தவிர்க்கும் வாய்ப்பை ஏற்படுத்த முடியும்.

பாலுமகேந்திராவால் ஏமாற்றப்பட்டு தற்கொலை செய்து கொண்டாள்  'என்மகள் ஷோபா' என்று தொடராக ராணி வார இதழில் ஒரு கண்ணீர் காவியமாகவே அதனை எழுதி, சில ஆண்டுகளில் சோகம் தாங்காமல் தற்கொலையும் செய்து கொண்டார் ஷோபாவின் தாயார். ஷோபாவின் மறைவிற்கு பிறகும் பல நடிகைகளின் தொடர்புகள் இருப்பதையும் செய்தி இதழ்கள் எழுதிவந்தன. நடிக்க வரும் பெண்களின் இயலாமையை படுக்கைக்கு பகடையாக பயன்படுத்திக் கொண்டதை அவருடைய தொழில் திறமைகள் அனைத்திற்குமான சன்மானமாக எடுத்து கொண்டு போற்றப்படவேண்டும் ?

தன்னால் ஏமாற்றப்பட்ட பெண்கள் என்னை மன்னிக்கவேண்டும் என்று இவர் வெளிப்படையாக எதையும் கூறவில்லை. ஒருவர் பாலியல் தொழிலாளிகளிடம் செல்வதை கண்டிக்கும் உரிமை எவருக்கும் கிடையாது, ஆனால் ஏமாற்றி, இயலாமையைப் பயன்படுத்தி பெண்களை வேட்டையாடி அவர்களின் வாழ்க்கையையே கெடுத்தவர் என்ற முறையில் நம்மால் விமர்சனம் செய்யாமல் தூற்றாமல் இருக்க முடியவில்லை. இந்த துறையில் இவரைப் பொன்ற தவறான நபர்களிடம் திறமை இருக்கும் பொழுது பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் பெண்களே.  நாலு இயக்குனர்களை உருவாக்கியது சாதனை என்றால், நான்கு நடிகைகளிடம் நடந்து கொண்டவிததை தூற்றவும் தான் வேண்டும். இவரிடம் வாய்ப்பு கேட்க வந்து எத்தனை பெண்கள் நடிக்கவும் வாய்ப்பு இல்லாமல் பெண்மையையும் இழந்து சென்றார்களோ.

திறமையாளனின் பொறுக்கித்தனங்கள் சகித்துக் கொள்ளப்பட வேண்டும் என்கிற பொதுப் புத்தியில் எனக்கு உடன்பாடு இல்லை.

சிறுவயதில் 'என்மகள் ஷோபா' தொடரை படித்தவன் என்ற முறையில் பாலுமகேந்திராவின் மரணம் என்னைப் பொருத்த அளவில் இன்னும் சில மவுனிகாக்கள் வலையில் வீழும் முன் 'ஒழிஞ்சான்'

மேலும் துப்பியவர்களின் இணைப்பு :
சோபாவை கொன்றது ஏன்? ஒலகப் படைப்பாளி பாலு சேர். 

14 பிப்ரவரி, 2014

பாராளுமன்ற வேட்பாளராக பிரபல பதிவர் !

இந்த இதழ் ஜூவியில் திமுகவின் பாராளுமன்ற வேட்பாளர் பெயரில் பிரபல வலைப்பதிவரும், திமுக செயற்குழு உறுப்பினருமான புதுகை அப்துல்லாவின் பெயரும் படமும் இடம் பெற்றுள்ளது. ஜூவி ஓரளவு நம்பிக்கையான செய்திகளைத் தருவதால் கிட்டதட்ட தகவல் 90 விழுக்காடு திமுக தரப்பைப் விசாரித்துவிட்டு எழுதியதாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன், தம்பி புதுகை அப்துல்லாவும் 'தலைவர்' அத்தகைய வாய்பை தனக்கு அளித்தால் மகிழ்ச்சி என்று கூகுள் ப்ளஸிலும், முகநூலிலும் கூறியுள்ளார். 

எனக்கு தனிப்பட்ட முறையில் திமுக மீது எந்தவித ஆர்வமோ, அனுதாபமோ கிடையாது, இருந்தாலும் நடுநிலையாளர்கள் ஒரு கட்சியில் இருக்கும் பொழுது நல்லதை எடுத்துச் சொல்லி நடைமுறைப்படுத்த முயற்சி செய்வார்கள் என்ற வகையில் தம்பி அப்துல்லாவுக்கு எனதும் மற்றும் எண்ணற்ற கட்சி சாராத வலைப்பதிவர்களின் ஆதரவு எப்போதும் உண்டு.

நடைபெறுப் போகும் நாராளுமன்ற தேர்தலில் கட்சிகளின் கூட்டணிகள் குறித்து இறுதி விவரம் தெரியாத நிலையில், அப்துல்லாவிற்கு 'வெற்றிக்கான' வாழ்த்து என்று வெறும் வாயல் வாழ்த்துவதைவிட, இப்படியான 'வேட்பாளர்' அதுவும் திருச்சி போன்ற பெரிய தொகுதியில் நிற்கும் ஒரு வாய்ப்பு அவரை பலருக்கும் ஏன் தமிழ் நாட்டிற்கே பல்வேறு ஊடகங்களின் வழியாக அறிமுகம் செய்யக் கிடைக்கும் நல்வாய்பாக அமையும் என்பதாலும், எதிர்காலத்தில் நல்லதொரு அரசியல்வாதியாக உருவாகி தமிழ்நாட்டிற்கும், பிறந்த ஊருக்கும் நல்லது செய்து பெருமை சேர்பார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு, ஏனென்றால் பல தொகுதிகளில் எந்த கட்சி நிற்கிறது என்பதைவிட யார் வேட்பாளர் என்று பார்த்தும், தனியாக நிற்பவர்களையும் (சுயேட்சை) வெற்றிபெற வைக்கிறார்கள் மக்கள்.  நான் அறிந்தவரையில் தம்பி புதுகை அப்புதுல்லா நேர்மையான, அன்பானவர், பண்பாளர் குறிப்பாக மதச்சார்பற்றவர் என்ற முறையில் அவரைப் போன்றவர்கள் அரசியலுக்குள் வருவது மிகவும் தேவையான ஒன்றே.

தம்பி அப்துல்லா எல்லா தரப்பு மக்களின் ஆதரவைப் பெற்று, தமிழகம் தழுவிய செல்வாக்கு பெற்று மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.  

19 ஜனவரி, 2014

தேவ மொழி ஆகிவரும் ஆங்கிலம் !

மொழி என்பது பண்பாட்டுக் கூறுகளை உள்ளடக்கியது, இதில் எந்த ஒரு மொழியும் விதி விலக்கு இல்லை, மொழிகளின் அழிவுக்கு அதனை பேசுபவர்களின் பொறுப்பின்மையும், அதன் மீது பூசப்படும் அளவுக்கு மிகுதியான புனிதமும் தான் காரணமாக இருக்க முடியும், ஒரு மொழியின் வளர்ச்சி பற்றி அதனை தாய்மொழியாக பேசுபவர்கள் தவிர்த்து யாரும் அக்கறை கொள்வதில்லை/தேவையுமில்லை, இருந்த போதிலும் தமிழகத்தில் பிறந்தவர்கள், வாழ்ந்தவர்கள் பல்வேறு மாநிலத்தை சார்ந்தவர்கள் நாடுகளைச் சார்ந்தவர்களும் தமிழ் மொழி வளர்ச்சிக்கு பாடுபட்டுள்ளனர்.

இன்றைய நாள்களில் ஆங்கிலம் தவிர்த்து பட்டப்படிப்பின் வழியாக படித்து சோறுபோடும் மொழிகள் அரிது. எனவே தான் ஆங்கிலத்திணிப்பையும் பிறமொழித் திணிப்பையும் ஒப்பிட முடியாது. ஆங்கிலம் தவிர்த்து மூன்றாம் மொழியை கற்றுக் கொள்ளும் பொழுது பேசுபவர் தவிர்த்து கேட்பவருக்கும் பயன் தான். அது ஒரு தகவல் தொடர்பு என்ற அளவில் மட்டுமே பயன் தரும், நமக்கு அன்றாட வாழ்க்கைக்கு பயனாக இருக்கும் ஆங்கிலத்தை எளிமையாகவும் புரியும்படியும் பேச வேண்டும், எழுத வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் ஆங்கிலம் பற்றிய பொதுவான புரிதல் அதனை பேசுபவர்களிடையே இலக்கணம் குன்றாமல் பேசவேண்டும் என்றெல்லாம் அறிவுறுத்துகிறார்கள்.

எந்த ஒரு மொழியும் கால போக்கில் சிதையும் என்பதற்கு ஆங்கிலம் விதிவிலக்கு இல்லை, அதனால் தான் அமெரிக்க ஆங்கிலம், ஆப்ரிக்க ஆங்கிலம், ஆஸ்திரேலிய ஆங்கிலம், இங்கிலாந்து ஆங்கிலம் என்ற வேறுபாடுகள் விளைந்துள்ளது, உலகத்திலேயே ஆங்கிலத்தை மிக எளிமையாக மாற்றி பேசும் வழக்கம் சிங்கப்பூரிலும் அருகே மலேசியாவிலும் உண்டு, சிங்கை ஆங்கிலத்தை சிங்க்லிஸ் என்பார்கள், நாமெல்லாம் சரியாக முறைபடியான ஆங்கிலம் பேசுவதில்லை என்று 'ஸ்பீக் குட் இங்கிலிஸ்' என்ற அரசால் கூட அறிவுறுத்தப்பட்டது, ஆனாலும் நான் அறிந்தவரையில் சிங்கையில் ஆங்கிலத்தில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை என்பது தான்.

பேசும் மொழி எளிதாக இருந்தால் தான் அவை சில ஆண்டுகளில் எல்லோரையும் சென்று அடையும் என்பதற்கு சிங்கையில் பேசப்படும் ஆங்கிலமே நல்ல எடுத்துக்காட்டு. 90 விழுக்காடு சிங்கை ஆங்கிலம் இங்குள்ளவர்களால் பேசப்படுகிறது, வேலை நடைபெறுகிறது, தகவல் பரிமாற்றம் நடைபெறுகிறது, இதற்கு மேல் ஆங்கிலம் பேசுவதால் வெளிநாட்டிலிருந்து வரும் வெள்ளைகாரர்கள் தவிர்த்தும், இங்குள்ளவர்கள் வெளிநாட்டிற்கு சென்றாலும் பயன் என்பதும் தவிர்த்து வேறொன்றும் இல்லை.

'அவன் பேசுற இங்கிலேசைப் பாரு, இதுக்கு பேசமாலே இருக்கலாம்' என்று நக்கல் அடிப்பவர்கள், ஒரு முறை சிங்கப்பூர் வந்தால் ஆங்கிலம் குறித்த அவர்களது மாயையும், எண்ணிய புனிதமும் அடிப்பட்டு போகும். தாய் மொழியில் வினைச்சொற்களையெல்லாம் ஆங்கிலத்தில் சொல்லி 'பண்ணி' த்தமிழ் பேசுபவர்களும் கூட ஆங்கிலத்தில் எவரேனும் ஈஸுக்கு வாஸ் போட்டுவிட்டால் அதற்காக வெள்ளைக்காரனுக்கு அவமானம், மரியாதை இழப்பு ஏற்பட்டுவிட்டது போல் பேசுபவரை எள்ளி நகையாடுகிறார்கள், 

ஆங்கிலமும் பல குறைகளை உள்ள மொழி தான், 26 எழுத்தில் எல்லாவற்றையும் எழுதுகிறேன் என்று பல்வேறு ஊர்பெயர்களை, பெயர் சொற்களை சிதைத்தே எழுதுகிறார்கள். வெள்ளைக்காரனுக்கு மாற்றாக ப்ரெஞ்சுகாரனோ, டச்சுக்காரனோ உலகை ஆளுமைக்குள் கொண்டுவந்திருந்தால் இன்றைக்கு ஆங்கிலத்திற்கு இருக்கும் இடம் ப்ரெஞ்சு அல்லது டச்சுக்கு கிடைத்திருக்கும், மற்றபடி ஆங்கிலம் வானத்தில் இருந்தெல்லாம் குதித்துவிடவில்லை, செம்மை ஆக்குதல் என்கிற பெயரில் ஆங்கில அகராதியில் அன்றாடம் பல மொழிகளைச் சேர்ந்த சொற்கள் சேர்க்கப்பட்டுவருகின்றன, மற்ற மொழி இலக்கணங்களை விட ஆங்கில இலக்கணம் கடினமானது மட்டுமின்றி பல குறைகள் உள்ளதும் கூட. தமிழில் ஆங்கிலத்தைப் போல பல்வேறு மொழிகளில் இருந்து கடன் வாங்கி சேர்த்தால் தமிழ் வளரும் என்று சிலர் உளறுவதும் உண்டு, அதுக்கு தான் ஏற்கனவே ஆங்கிலம் இருக்கிறதே தமிழை ஏன் கெடுக்க வேண்டும் ? பிற மொழி பேசுபவர்களுக்கு பொருளீட்டல் பயனில்லாத எந்த ஒரு மொழியும் அவர்களிடமும் வளர வாய்பே இல்லை. ஒரு தமிழன் இந்தி படித்தாலோ, இந்திகாரன் தமிழ் படித்தாலோ புதிதாக நாம் சேர்த்துக் கொள்ளும் ஒரு சொல்லால் எந்த பயனும் இல்லை, பேச்சுவழக்கிற்கு, மொழி சார்ந்த, மண் சார்ந்த கலைகளுக்கு தேவையான சொற்கள் ஒரு மொழியில் இருந்தாலே அதுவே நிறைவானது.

தமிழைத் தப்பும் தவறுமாக பேசுனாலும் எழுதினாலும், பண்ணித் தமிழ் பேசினாலும் தமிழிக்கு இழுக்கு இல்லை என்பது போன்று தான் ஆங்கிலத்திற்கும், ஆங்கிலம் தப்பும் தவறுமாக பேசுவது ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கும் ஆசானாக இருந்தால் தவிர்த்து மற்றவர்களுக்கு அது குறையோ இழுக்கோ இல்லை. 

ஒருகாலத்தில் வடமொழி என்னும் சமசுகிரதம் இந்தியாவெங்கும் வட்டார மொழிகளில் உள்ள சொற்களை உள்வாங்கியும், கலந்தும் மொழிச் சிதைவுக்கும் வழிவகுத்து தமிழில் மணிப்ப்ரவளம் உட்பட கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் ஏற்பட காரணமாக அமைந்தது ஆனால் வரலாற்றையே புரிந்து கொள்ளாதவர்கள் இந்தியா மட்டுமின்றி அனைத்து மொழிகளிலும் வடமொழியில் இருந்து பிறந்தது என்று கதைக்கிறார்கள். இன்றைய ஆங்கிலப் பரவலில் உலகில் பல்வேறு மொழிகள் அழிந்துவருகின்றன, தமிழ் உள்பட பல்வேறு மொழிகள் சிதைந்தும் வருகின்றன, ஆனால் பண்டைய நாட்களைப் போல் இல்லாமல் தற்பொழுது வரலாறுகள் தொகுப்படுவதால் ஒருவேளை ஆங்கிலத்தின் வழியாக பல்வேறு வட்டார / நாடுகள் சார்ந்த ஆங்கில மொழிகள் ஏற்பட்டாலும் ஆங்கிலம் தான் அனைத்து மொழிகளுக்கும் மூலம் என்று சொல்ல முடியாமல் போகும்.

ஆங்கிலம் தவிர்த்து ஏனைய மொழிகள் அழியும் பொழுது வழிபாட்டு மொழி என்னும் சிறப்பை ஆங்கிலம் கைப்பற்றும், பின்னர் ஆங்கிலத்தின் வழியாக ஏற்படும் மொழிகளுக்கு ஆங்கிலம் தான் தேவ மொழி.

ஆங்கிலத்திற்கு தேவையற்ற முதன்மைத்துவம் கொடுத்து அதனை புனிதப்படுத்தாதீர்கள், ஆங்கிலம் தப்பும் தவறுமாக பேசுபவர்களிடம் சரியான சொல்லைச் சொல்லிக் கொடுங்கள், ஒருவர் தப்பும் தவறுமாக ஆங்கிலம் பேசுவது அவரின் தகுதி இழப்பு ஆகிவிடாது, தாய்மொழி சரியாக பிறமொழி கலப்பின்றி பேசப்படுகிறதா என்பது பற்றி பெரிய அக்கறை இல்லாத போது ஆங்கிலம் குறித்த அக்கறையெல்லாம் நமக்கு எதற்கு ? அவையெல்லாம் வெள்ளைக்காரன் கவலை !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்